தீர்க்கப்படாத கேள்வி - சிங்களம் மட்டும் சட்டமும் கோடீஸ்வரன் வழக்கும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
26 நிமிட வாசிப்பு

தீர்க்கப்படாத கேள்வி – சிங்களம் மட்டும் சட்டமும் கோடீஸ்வரன் வழக்கும்

November 27, 2026 | Ezhuna

ஈழத்தமிழர்களின் மொழியுரிமை, அடிப்படை உரிமைகள், அதிகாரப் பகிர்வு எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் நீதித்துறை பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆழமான தாக்கத்தைச் செலுத்தியுள்ளன. அரசியலமைப்பு ஏற்பாடு ஒன்றின் ஊடாக அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் சமகாலத்திலும் தொடரும் நிலையில், இவ்வழக்குகள் குறித்த வாசிப்பு இன்றியமையாததாகிறது.

இனத்துவப் பெரும்பான்மை ஆட்சியின் நிலைத்திருப்புக்கு, இலங்கைத் தீவில் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு அடிப்படையானதாக உள்ளது. இலங்கை நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அவை வழங்கிய பொருள்கோடல்களும், இந்த ஒற்றையாட்சி சட்டக் கட்டமைப்பை மேன்மேலும் வலுப்படுத்தியே வந்துள்ளன.

இறைமை, தன்னுரிமை/ தன்னாட்சியுரிமை, தன்னதிகாரம், கூட்டாட்சிக் கோரிக்கை உள்ளிட்ட ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பில், நீதிமன்றத் தீர்ப்புகளும் பொருள்கோடல்களும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை எவ்வாறு வலுப்படுத்தின என்பதையும், தமிழர்களுடன் உரிமைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்துகொள்வதில் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டகம் எவ்வாறு மேலும் இறுக்கமடைந்தது என்பதையும் புரிந்துகொள்ள, இத்தீர்ப்புகளை ஆராய்வது அவசியமாகும்.

‘நீதிமன்றக் கதவுகளை நோக்கிய ஈழத் தமிழர் போராட்டங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர், தீர்ப்புகளைச் சூழவுள்ள அரசியலையும் நோக்கங்களையும் வாசகர்கள் தமது கண்கொண்டு உணர்ந்தறியும் நோக்கில், ஒவ்வொரு வழக்கையும் அதன் தரவுகள், வழக்கு விடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதற்கே முயலுகின்றது.

1961ஆம் ஆண்டு டிசம்பர் மாதத் திறைசேரிச் சுற்றறிக்கைக்கு1 அமைய சித்தி பெறவேண்டிய சிங்களத் தேர்விற்குத் தோற்றாத காரணத்தினால், 1962, ஏப்ரல் மாதத்தில் 10 ரூபா மாதாந்த ஊதிய உயர்வு செல்லையா கோடீஸ்வரனுக்கு இடைநிறுத்தப்பட்டது. இவர் இலங்கை எழுதுவினைஞர் சேவையில் பணியாற்றிய தமிழ் அதிகாரி. வெளிப்பார்வைக்கு இது சாதாரண நிர்வாக ஒழுங்குமுறையாகத் தோன்றினாலும், சுற்றறிக்கையானது அரசகரும மொழிச் சட்டத்தை2 (சிங்களம் மட்டும் சட்டம்) நடைமுறைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டிருந்தது.

சோல்பரி அரசியலமைப்பின் 29ஆவது பிரிவின் கீழ் தனது உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி சி. கோடீஸ்வரனால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சிங்களம் மட்டும் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையைக் கேள்விக்குட்படுத்திய இந்த வழக்கானது கொழும்பிலிருந்து இலண்டன் கோமறைக்கழகம் (Privy Council) வரை சென்றடைந்த போதிலும் கேள்விக்குரிய பதில் கிடைக்கவில்லை.

சிங்களம் மட்டும் சட்டம்


சிங்களம் மட்டும் சட்டம் என்று பரவலாக அறியப்பட்ட 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரச கரும மொழிச் சட்டத்தை3 நிறைவேற்றியது இலங்கை நாடாளுமன்றம். இதன்மூலம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவு முழுவதும் சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

தமிழர்களுக்கு அரச சேவை முதன்மையான தொழில்முறையாகக் காணப்பட்ட நிலையில் இந்தச் சட்டம் அரசாங்க வேலைவாய்ப்பில் கடுமையான தாக்கத்தைச் செலுத்தியது. 1961 டிசம்பரில் 560ஆம் இலக்கச் சுற்றறிக்கையை இலங்கைத் திறைசேரி வெளியிட்டது.4 அதற்கமைய சிங்கள மொழித் தேர்வுகளில் குறிப்பிட்ட திகதிகளுக்குள் தேர்ச்சி பெறத் தவறினால் ஊதிய உயர்வுகளை இழக்க நேரிடும் என்று பணியாற்றிக் கொண்டிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

இலங்கைத் தீவு எந்த அரசியலமைப்பின் கீழ் சுதந்திரம் பெற்றதோ, அதில் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக ஒரேயொரு சிறுபான்மையினருக்கான பாதுகாப்புப் பிரிவு 29(2) மட்டுமே இடம்பெற்றிருந்தது. பிரிவு 29(2) இற்கு முரணாக ஏதேனும் சட்டம் காணப்படும் பட்சத்தில் அந்தச் சட்டம் வலிதற்றதாகும் என பிரிவு 29(3) வரையறுத்தது. அதுவே அரசகரும மொழிச் சட்டம் (சிங்களம் மட்டும் சட்டம்) மற்றும் குறித்த சுற்றுநிரூபத்திற்கு எதிரானதாக அமைந்திருந்தது.

சோல்பரி அரசியலமைப்பின் பிரிவு 29(2) ஆனது, இலங்கை நாடாளுமன்றமானது பின்வருவனவற்றைப் புரியும் வகையில் சட்டமியற்றுதல் ஆகாது என்று வரையறுத்தது.5

  1. எந்தவொரு மதத்தையும் சுதந்திரமாகப் பின்பற்றுவதைத் தடைசெய்தல் அல்லது கட்டுப்படுத்துதல்.
  2. ஏனைய சமூகங்கள் அல்லது மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்படாத பொறுப்புக்களையோ கட்டுப்பாடுகளையோ எந்தவொரு சமூகம் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு விதித்தல்.
  3. ஏனைய சமூகங்கள் அல்லது மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படாத எந்தவொரு சலுகையையோ நன்மையையோ, வேறொரு சமூகம் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குதல்.
  4. தொடர்புடைய மத அமைப்பின் ஆளும் அதிகாரசபையின் ஒப்புதல் இன்றி எந்தவொரு மத அமைப்பின் அமைப்புக்களை மாற்றுதல்; சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்ட அமைப்பாக இருப்பின், அந்த அமைப்பின் ஆளும் அதிகார நிறுவனத்தின் கோரிக்கையின் பேரிலேயே மாற்ற முடியும்.

தமிழ் அதிகாரி ஒருவர் சிங்களம் பேசும் பகுதியில் பணியாற்றுவதற்குச் சிங்களம் பயில வேண்டும் என்று கூறினால் கூட, தமிழ் பேசும் மக்களைக் கொண்ட இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்கில் சிங்கள அதிகாரிகள் தமிழைப் பயில்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டனர். வடக்கு கிழக்கில் தமது சொந்த மொழியிலேயே பணியாற்றி வந்த தமிழ் அதிகாரிகள் சிங்களம் பயிலவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

பெரும்பான்மை நாடாளுமன்றத்தால் ஆளப்படும் பிரிக்கப்படாத அரசை இலங்கைத் தீவில் உள்ள எண்ணிக்கையில் குறைந்த மக்களும் சிறுபான்மையினரும் ஏற்க வைக்கப்பட்டதற்கான உத்தரவாதமாகப் பிரிவு 29(2) காணப்பட்டது. கோடீஸ்வரன் வழக்கு அந்தச் சமநிலையை மதிக்குமாறு நீதிமன்றங்களைக் கோரியது.

வழக்கு நீதிமன்றத்தை அடைந்த விதம்


லங்கா சமசமாசக் கட்சியின் ஆதரவு பெற்ற அரசாங்க எழுதுவினைஞர்கள் சங்கத்தில் (Government Clerical Service Union) கோடீஸ்வரன் உறுப்பினராகச் செயற்பட்டு வந்தார். பின்னர் அத்தொழிற்சங்கத்திலிருந்து வெளியேறித் தமிழ் எழுதுவினைஞர்களின் சங்கமான ‘அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தை (AES)’ நிறுவியவர்களுள் ஒருவராவார். அச்சங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்களம் மட்டும் சட்டத்திற்கெதிரான சட்டப் போராட்டத்திற்கு அரசாங்க எழுதுவினைஞர்கள் சங்கம் சார்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்வந்த சில உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் பின்வாங்கினர். அச்சூழலில் கேகாலைக் கச்சேரியில் பணியாற்றிக் கொண்டிருந்த கோடீஸ்வரன் முன்வந்தார். எவ்வித மறுப்புமின்றி கொழும்பு வந்து மனுவைத் தாக்கல் செய்வதற்குத் தேவையான சட்ட ஆவணங்களில் அவர் ஒப்பமிட்டதாக வி. தங்கவேலு அவர்கள் ம.க. ஈழ வேந்தன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் கருத்துக்கு வழங்கிய பதிலில் குறிப்பிட்டுள்ளார்.6

மேலும் அவர் குறிப்பிடுகையில், ‘அரசாங்க எழுதுவினைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த ஆர். பாலசுப்ரமணியம் வழக்குத் தொடர்பான ஆரம்பகட்டப் பணிகளை முன்னின்று செய்துள்ளார். குறித்த வழக்கில் கோடீஸ்வரன் சார்பில் முன்னிலையாகிய வழக்கறிஞர்கள் அனைவரும் எவ்வித கட்டணமுமின்றி முன்னிலையாகினர்.’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு


திறைசேரியினால் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை இல. 560ஆனது நியாயமற்றது, சட்டவிரோதமானது, எனவே அது தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும், 1962 ஏப்ரல் 1 அன்று வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வுக்குத் தாம் உரித்தானவர் என்றும் உத்தரவிடக் கோரி கோடீஸ்வரனால் முடியாட்சியின் பிரதிநிதியான சட்டமா அதிபரைப் பிரதிவாதியாகக் கொண்டு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டது.7

1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரச கரும மொழிச் சட்டம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கிலான அமைச்சரவை வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. சோல்பரி அரசியலமைப்பின் பிரிவு 29இல் விதிக்கப்பட்டிருந்த வரையறைகளை மீறியதால் சட்டமும், சட்டவலுவற்ற சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட சுற்றறிக்கையும் சட்டவலுவற்றது என்று கோடீஸ்வரன் தரப்பு வழக்கறிஞரினால் மன்றில் வாதிடப்பட்டது.

ஒரு பொது ஊழியர் ஊழியத்திற்காக முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது. எனவே இவ்வழக்கு தொடக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் தனது ஆட்சேபனையை எழுப்பினார். தொடக்க ஆட்சேபனையை நிராகரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி. கிரேட்ஸர் (O.L. de Kretser), அரசியலமைப்பின் பிரிவு 29இனை மீறியதால் அரச கரும மொழிகள் சட்டம் செல்லுபடியற்றது என்று கோடீஸ்வரனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துக் கோரப்பட்ட நிவாரணத்தை வழங்கினார். 

உயர் நீதிமன்றத்திற்கான மேன்முறையீடும் முடியாட்சியின் தற்காப்பும்


மாவட்ட நீதிமன்றத்தில் கோடீஸ்வரனுக்குச் சார்பாக வழங்கப்பட்ட தீர்ப்பையெதிர்த்துச் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.8 அந்த மேன்முறையீடு பிரதம நீதியரசர் எச்.என்.ஜி. பெர்னாண்டோ (H.N.G. Fernando, C.J) மற்றும் நீதியரசர் ஜி.பி.ஏ. சில்வா (G.P.A. Silva, J) ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

பதில் சட்டமா அதிபர் வால்டர் ஜெயவர்தன QC (Walter Jayawardena, Q.C) அவர்களுடன் எச். தேகொட (H. Deheragoda, Senior Crown Counsel) மற்றும் எச்.எல்.டி சில்வா (H.L. de, Silva, Crown Counsel) ஆகியோர் முடியாட்சிக்காக முன்னிலையாகியிருந்தனர். கோடீஸ்வரனுக்காக முன்னிலையாகியிருந்த வழக்கறிஞர் குழுவிற்கு சி. ரங்கநாதன் QC தலைமை தாங்கியிருந்தார். பிரதம நீதியரசர் எச்.என்.ஜி. பெர்னாண்டோ 1967 ஆகத்து 30 அன்று வழங்கிய தீர்ப்புடன் நீதியரசர் ஜி.பி.ஏ. சில்வாவும் உடன்பட்டிருந்தார்.

இலங்கையில் ஒரு பொது ஊழியர் ஊதியத்திற்காக முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாதென்ற தொடக்கநிலைத் தற்காப்பு வாதத்தை முடியாட்சியின் வழக்கறிஞர்கள் எழுப்பினர். இது மிகவும் முக்கியத்துவமும் சிக்கலும் வாய்ந்த கேள்விகளை எழுப்புவதாகப் பிரதம நீதியரசர் தெரிவித்தார். மாவட்ட நீதிபதி டி. கிரேட்ஸர் (O.L. de Kretser) நிராகரித்த தற்காப்பை உயர்நீதிமன்றம் முதலில் கையிலெடுத்தது. அதுவே மேன்முறையீட்டின் முடிவைத் தீர்மானித்தது.

இலங்கைத் தீவின் கடலோரப் பகுதிகளை டச்சுக்காரர்களிடமிருந்து பிரித்தானியர்கள் கைப்பற்றிய நான்கு ஆண்டுகளுக்குப் பின் 1799ஆம் ஆண்டு அரச பிரகடனம் செய்யப்பட்டது. இது இலங்கைத்தீவின் நீதி அமைப்பு ஐக்கிய மாகாணங்களின் (நெதர்லாந்து) அரசாங்கத்தின் கீழ் நிலவிய முறைக்கே மீண்டும் திரும்புமென்று பிரகடனம் செய்தது. இந்த ஏற்பாடு 1835இல் முழுத்தீவுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதன்பொருள் இலங்கையின் பொதுச் சட்டத்திற்கான (Common Law) அடித்தளமாக ரோம டச்சுச் சட்டம் (Roman Dutch Law) இருக்க வேண்டும் என்பதாகும். 

முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான பொது ஊழியர் ஒருவரின் உரிமையை எந்த விதிகள் தீர்மானிக்கின்றன என்னும் கட்டத்திற்கு உயர் நீதிமன்றம் சென்றது. அதன்படி மேற்குறிப்பிட்ட ரோம டச்சுச் சட்ட விதிகளா அல்லது ஆங்கிலச் சட்ட விதிகளா, குறித்த உரிமையைத் தீர்மானிக்கின்றன? எது இலங்கையின் பொதுச் சட்டம்? (Common Law) எனும் கேள்விகள் உயர்நீதிமன்றம் முன் எழுந்தன.

முடியாட்சிக்கும் ஊழியர்களுக்குமிடையிலான உறவு

இலங்கையின் பழைய வழக்குகளான Jansz v Tranchell (1865) மற்றும் Fraser’s case (1868) ஆகிய இரண்டையும் கோடீஸ்வரன் தரப்பு சார்ந்திருந்தது. இரு வழக்குகளும் ஒரு பொது ஊழியரின் ஈட்டப்பட்ட ஊதியத்தை முடியாட்சியிடமிருந்து மீட்கக்கூடிய கடனாகக் கருதின. 1799ஆம் ஆண்டின் பிரகடனத்தால் பாதுகாக்கப்பட்ட ரோம டச்சுச் சட்டத்திலிருந்தே இந்த உரிமை வந்தது என Fraser’s case (1868) வழக்கு கூறுகின்றது. 

அதனையேற்க மறுத்த பிரதம நீதியரசர் பெர்னாண்டோ, Siman Appu வழக்கில், முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான ரோம டச்சுச் சட்ட விதிகளைக் கோமறைக்கழகம் கண்டறியவில்லை என்றும், மாறாக இலங்கையில் முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடரும் நீண்டகால நடைமுறையிலேயே அது தனது முடிவை நிலைநிறுத்திய காரணத்தால், வழக்குத் தொடரும் உரிமை ரோம டச்சுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும், கோமறைக்கழகத்தின் 1884ஆம் ஆண்டுத் தீர்ப்பை வாசித்துப் பொருள் கொண்டார். 

Fraser’s Case வழக்கை அவர் மிகவும் விதிவிலக்கானது எனக் குறிப்பிட்டார். பொதுச் சட்டத்தை (Public Law) அப்பிரகடனம் உள்ளடக்கியதா என்பதை அவர் தீர்மானிக்கவில்லை. ஆனால் முடியாட்சியின் சொந்த ஊழியர்களுக்காக ஆங்கிலச் சட்டத்தைத் தவிர வேறொரு சட்டத்தை அது கருதியிருக்க முடியாது என்னும் கருத்தில் கணிசமான அடிப்படை இருப்பதாகக் கருதினார். இலங்கையில் மாற்றப்பட்ட ஆங்கிலச் சட்டமே இக்கேள்வியை ஆளுகின்றது என்பதே அவரது முடிவாக இருந்தது.

Siman Appu v Queen’s Advocate (1884) வழக்கில் கோமறைக்கழகத்தின் இறுதி முடிவைப் பொருட்படுத்தாத உயர் நீதிமன்றம், ரோம டச்சுச் சட்டத்தில் உறுதியான முன்மாதிரிகளைக் கண்டறியாது, கோடீஸ்வரனின் முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமையானது ஆங்கிலப் பொதுச் சட்டத்தின் (English Common Law) கீழேயே தீர்மானிக்கப்பட வேண்டுமென்று தீர்மானித்தது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பும், தீர்மானிக்கப்படாத கேள்வியும்

“சட்டத்தாலாக்கப்பட்ட விதிகளைத் தவிர, சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகளை ஆளும் விதிகளை மீறியதற்காக நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதற்கு இலங்கையில் ஒரு பொது ஊழியருக்கு உரிமை இல்லை” என்ற தொடக்கநிலைப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தினால் ரத்துச் செய்யப்பட்டது.  

பொதுச் சட்டம் (Common Law) ஒன்றின் புள்ளியின் அடிப்படையில் வழக்குத் தீர்க்கப்பட்டதால், கோடீஸ்வரனால் எழுப்பப்பட்ட அரசகரும மொழிகள் சட்டத்தின் (சிங்களம் மட்டும் சட்டம்) மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் வலுவுடைய தன்மை ஆகியவை குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. பொதுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்க்கப்பட்டதனால் அரசகரும மொழிகள் சட்டம் குறித்து தனது வாதங்களை முன்வைக்க பதில் சட்டமா அதிபரைத் தான் அழைக்கவில்லை என்று பிரதம நீதியரசர் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

கோமறைக் கழகத்திற்குச் சென்ற கோடீஸ்வரன்


ஊழியர் ஒருவர் தமக்குச் சேர வேண்டிய ஊதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியாட்சிக்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாதென்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பொது ஊழியர் ஒருவர் தாம் ஈட்டிய சம்பளத்திற்காக இலங்கையில் உள்ள முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு நேர்மாறாகக் கோமறைக்கழகம் (Privy Council) 1969, டிசம்பர் 11 அன்று தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பு கோடீஸ்வரனுக்கு வெற்றியாக இருந்தாலும், அது வரையறுக்கப்பட்டதாகும். அரச கரும மொழிச் சட்டம் (சிங்களம் மட்டும் சட்டம்) சட்ட வலுவுடையதா என்ற கேள்விக்குக் கோமறைக்கழகம் பதில் கூறவில்லை. அக்கேள்வியை உச்ச நீதிமன்றத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தது.

மேன்முறையீட்டு அமர்வு

உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகக் கோடீஸ்வரனால் கோமறைக்கழகத்திற்கு மேன்முறையீடு9 செய்யப்பட்டது. லார்ட் ஹொட்சன் (Lord Hodson), விஸ்கவுண்ட் தில்ஹோர்ன் (Viscount Dilhorne), லார்ட் டொனோவன் (Lord Donovan), லார்ட் பியர்சன் (Lord Pearson) மற்றும் லார்ட் டிப்ளாக் (Lord Diplock) ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்ந்தனர். தீர்ப்பை லார்ட் டிப்ளாக் (Lord Diplock) எழுதினார்.

சி. ரங்கநாதன் QC,  எம்.பி. சாலமன் (P. Solomon), எஸ்.சி. கிராசெட் தம்பையா (S.C. Crossette-Thambiah), மற்றும் எம்.ஐ ஹத்னவி ஹனிபா (M.I. Hatnavi Haniffa) ஆகியோருடன் சேர். டிங்கிள் ஃபூல் QC (Sir Dingle Fool, Q.C) அவர்களும் கோடீஸ்வரனுக்காக முன்னிலையாகியிருந்தார். இலங்கைச் சட்டமா அதிபருக்காக இ.எப்.என். கிரேஷியன் QC (E. F. N. Gratiaen, Q.C) உடன் ஆர்.கே. ஹண்டு (R. K. Handoo) மற்றும் எச்.எல். டி சில்வா (H.L. de Silva) ஆகிய வழக்கறிஞர்கள் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த வழக்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியலமைப்புக் கேள்விகளை எழுப்புகிறது என்பதைக் குறிப்பிட்ட போதிலும், உயர் நீதிமன்றம் தீர்மானித்த அந்த ஒரேயொரு கேள்வியை மட்டுமே கோமறைக்கழகம் (Privy Council) கையாண்டது. 

1799ஆம் ஆண்டுப் பிரகடனம்


ஐக்கிய மாகாணங்களின் (நெதர்லாந்து) முந்தைய அரசாங்கத்தின் கீழ் நிலவிய சட்டங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இணங்கவே நீதியும் காவலும் தற்காலிகமாக நிர்வகிக்கப்பட வேண்டுமென்றும், அவசியமான அல்லது நன்மை பயக்கும் மாற்றங்களுக்கு இடமுண்டு என்றும் பிரித்தானியரின் 1799ஆம் ஆண்டுப் பிரகடனம் கூறியது. பிரித்தானியர் கைப்பற்றிய பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலப் பொதுச் சட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் இலங்கையில் அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனைக் கோமறைக்கழகம் சுட்டிக்காட்டியது.

சமகாலத்திற் செய்யப்பட்ட தென்னாபிரிக்க கேப் காலனிப் பிரகடனத்தில் காவல்துறை (Police), நிறுவனங்கள் (Institutions), அமைச்சுசார்/ நிர்வாக அதிகாரிகள் (Ministerial Officers) என்ற சொற்கள் இல்லை என்பதையும் கோமறைக்கழகம் பதிவு செய்தது. எனினும் கைமாறும் நாட்டில் புதிய இறையாண்மைக்கு முரணான முன்னைய விதிகள் இல்லாதொழியும் என்ற லார்ட் ஸ்டோவெலின் கோட்பாடு இலங்கைக்கும் பொருந்தும் என்று தீர்மானித்தது.

பிரகடனம் முன்னைய உரிமையைப் பாதுகாத்தது என்பதனால் அந்த உரிமை பிரித்தானிய முடியாட்சிக்கு எதிராக உருவாகிவிடாது என்று கூறியது. அதனால் முடியாட்சியுடனான ஒப்பந்தம் முரணற்றதென்றும், உள்நாட்டில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் ஊதியம் குறித்து எப்போது வேண்டுமானாலும் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒப்பந்தம் செய்யும் அதிகாரத்தை ஆளுநர் பிரகடனத்தின் மூலம் பெற்றிருந்தார் என்றும் கூறியது.

ரோம டச்சுச் சட்டத்தின் கீழ் ஊதிய நிலுவைக்கான நிவாரணம் இருந்தால் அது பிரகடனத்தால் பாதுகாக்கப்பட்டதென்று கோமறைக்கழகம் தெரிவித்தது. எனவே வாதத்தின் தொடக்கமாகப் பிரகடனம் இருந்தாலும், இலங்கை நீதிமன்றங்களின் நீண்டகாலத் தீர்ப்புக்களே தீர்ப்பின் அடித்தளமாகக் காணப்பட்டன.

ஒப்பந்தத்தால் முடியாட்சி கட்டுப்பட முடியுமா?

தமது பணிக்காலத்தில் சேர வேண்டிய ஊதியத்திற்காக முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை இல்லையென்று சட்டமா அதிபர் தரப்பால் வாதிடப்பட்டது. கோமறைக்கழகம் இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டது. 1821ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் (Ruding v. Smith) ஒரு பிரதேசம் கைமாறும் போது புதிய இறையாண்மையின் நிலைக்கு முரணான சட்டங்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றன என்பதை லார்ட் ஸ்டோவெல் (Lord Stowell) கூறியிருந்ததை அது ஏற்றுக்கொண்டது. ஆகவே ஊழியருடனான ஊதிய ஒப்பந்தம் முடியாட்சியின் உரிமைகளில் தாக்கம் செலுத்துமா என்பதே கேள்வியாக இருந்தது.

இரண்டு காரணங்களுக்காக அது அவ்வாறு செய்யாது என கோமறைக்கழகம் கூறியது. ஒன்று, அப்பிரகடனம் உள்ளூர் எல்லைக்குட்பட்டதாக இருந்தது. இங்கிலாந்திலிருந்து நியமிக்கப்பட்ட மூத்த காலனித்துவ அதிகாரிகளுக்கு மட்டுமின்றி இலங்கையில் ஆளுநரால் உள்நாட்டில் நியமிக்கப்பட்ட கீழ்நிலை அதிகாரிகளுக்கும் அப்பிரகடனம் பொருந்தியது. இரண்டாவது, விருப்பப்படி பணிநீக்கம் செய்வது ஓர் ஒப்பந்தத்தை இல்லாததாக்காது. சட்டம் வேறுவிதமாகக் கூறாதவரை ஒரு முடியாட்சி ஊழியரை எந்த நேரத்திலும் பணி நீக்கம் செய்ய முடியும். ஆனால் எந்த நேரத்திலும் ஓர் ஒப்பந்தத்தை முடிக்கும் உரிமை என்பது, அங்கு ஒருபோதும் ஒப்பந்தம் இருக்கவில்லை என்று பொருளல்ல. அது நீடிக்கும் காலத்தில் ஊழியர் தமது ஊதியத்தை ஈட்டியுள்ளார்.

முடியாட்சி மீது அறவே வழக்குத் தொடர முடியாது என்ற விடயத்தையும் கோமறைக்கழகம் கையாண்டது. 18ஆம் நூற்றாண்டளவில் முடியாட்சியுடனான ஒப்பந்தத்தின் கீழ் பணம் தர வேண்டிய நிலையில் உள்ள ஒருவர் அதை உரிமை மனு (Petition of Right) மூலம் கோர முடிந்தது எனக் கூறியது. இலங்கையின் பொது ஊழியர் ஒருவருக்கு ஏற்கனவே இருந்த பரிகாரத்தைப் பறிக்க முடியாட்சிக்கு எந்தக் காரணமும் இல்லையென்று முடிவு செய்தது.

இலங்கைப் பொதுச்சட்டம் 

வழக்குத் தொடரும் உரிமைக்கான மூலத்தை உயர் நீதிமன்றம் டச்சுச் சட்டத்திலோ அல்லது ஆங்கிலச் சட்டத்திலோ தேடிச் சென்றிருந்தமை தவறான அணுகுமுறையென கோமறைக்கழகம் குறிப்பிட்டது. மேலும், ரோம டச்சுச் சட்டம் இலங்கைப் பொதுச்சட்டத்தின் (Common Law) தொடக்கப் புள்ளியேயன்றி, முடிவுப் புள்ளி அல்ல. ஆங்கிலப் பொதுச் சட்டத்தைப் போன்றே 1799இலிருந்து நாட்டின் சொந்த நீதிமன்றங்களின் முடிவுகள் வழியாக அது வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கை நீதிமன்றங்கள் ஒரு விதியை நீண்டகாலமாக ஏற்றுக் கொண்டிருந்தது; அது முடியாட்சியின் இறையாண்மைக்கு முரணாக இல்லாதுவிட்டால் அவ்விதியை டச்சு அல்லது ஆங்கிலச் சட்ட நூல்களில் தேட வேண்டிய அவசியமில்லை என்றுரைத்தது.

டச்சுச் சட்டங்களில் ஒரு விதி மிகவும் வெளிப்படையானதாக இருந்தால் எவரும் அதை எழுதி வைக்காமல் இருந்திருக்கலாம், அல்லது அது இலங்கையிலேயே வளர்ந்திருக்கலாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்ககாலங்களில் கிடைக்கும் பதிவுகள் மிகவும் முழுமையற்றவையாக உள்ளன என்பவற்றின் அடிப்படையில் டச்சுச் சட்டங்களில் ஒரு விதி ஏன் இல்லாமல் இருக்கலாம் என்பதனைக் கோமறைக்கழகம் விளக்கியது.

உண்மையான கேள்வியைப் பொறுத்தவரை, இலங்கை நீதிமன்றங்கள் நூறாண்டுகளுக்கு முன்பாகவே அதற்குப் பதிலளித்திருந்தன. குறிப்பாக Jansz v Tranchell (1865) வழக்கில் செலுத்தப்படாத ஊதியத்திற்காக ஓர் ஊழியர் வழக்குத் தொடர முடியும் என்பதை நிலைபெற்ற சட்டமாக உயர் நீதிமன்றம் கருதியது. முடியாட்சியின் வழக்கறிஞரும் அதை ஏற்றுக்கொண்டிருந்தமை நோக்கத்தக்கது. வாதிடப்பட்ட முக்கியப் புள்ளி, அந்த ஊதியம் கடன் வழங்குநரால் பறிமுதல் செய்யப்படக்கூடிய கடனா என்பதேயாகும். அதனைத் தொடர்ந்து 1868ஆம் ஆண்டின் Fraser’s Case வழக்கில், இலங்கை அரசின் கீழான பதவிக்கு பணி நீக்கத்திற்கு முன்பு ஈட்டப்பட்ட ஊதியம் முடியாட்சியிடமிருந்து மீட்கக்கூடிய கடன் என நீதிமன்றம் கருதியது. எனினும் உண்மைகளின் அடிப்படையில் அவருக்குச் செலுத்த வேண்டிய நிலுவை எதுவும் இல்லை என்ற காரணத்தாலேய Fraser தோல்வியடைந்தார்.

இலங்கைச் சட்டங்களின் வழியாக வளர்ந்த மற்றும் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்ட ஒரு விதியிலிருந்து விலகுவதற்கு எந்தக் காரணத்தையும் கோமறைக்கழகம் காணவில்லை. நூறு ஆண்டுகளாக நிலைத்திருந்த ஒரு விதியை இவ்வளவு காலத்திற்குப் பிறகு கைவிடுவது தவறாக இருக்குமென்றது.

சைமன் அப்பு மற்றும் குரோடியஸ்

1884ஆம் ஆண்டில் Siman Appu v Queen’s Advocate வழக்கில் கோமறைக்கழகத் தீர்ப்பு, Jansz v. Tranchell (1865), Fraser’s Case (1868) ஆகிய பழைய வழக்குகளை வலுவிழக்கச் செய்துவிட்டதாக (Overrule) உயர் நீதிமன்றம் கருதியிருந்தமையை, ஒரு தவறான வாசிப்பு என்றது கோமறைக்கழகம்.

ஒப்பந்த மீறலுக்காக இலங்கையில் ஒரு நபர் முடியாட்சிக்கு எதிராக அறவே வழக்குத் தொடர முடியுமா என்பதையே Siman Appu கையாண்டது. அத்தகைய வழக்குகளை டச்சுச் சட்டம் அனுமதித்ததா என்பதை 1884இல் கோமறைக்கழகத்தால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடரும் நடைமுறை அப்போது இலங்கைச் சட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டதென்று தீர்ப்பளித்தது. இது இலங்கை தனது சொந்தப் பொதுச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டது என்பதைக் காட்டுகிறது என்றும், பொது ஊழியர்களின் ஊதியம் குறித்த முந்தைய வழக்குகளின் மீது எவ்வித சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறியது.

1884இல் விவாதிக்கப்படாத ஒரு புள்ளியையும் கோமறைக்கழகம் சேர்த்துக் கொண்டது. 17ஆம் நூற்றாண்டில், டச்சுச் சட்ட வல்லுநரான ஹ்யூகோ குரோடியஸ் (Hugo Grotius) எழுதிய நூலின் ஒரு பகுதியை வழக்கறிஞர்கள் கண்டறிந்திருந்தனர். அதில், தமது குடிமக்களுக்கு முடியாட்சி அளிக்கும் வாக்குறுதி ஓர் உண்மையான கடமையை உருவாக்குகிறது; அது முடியாட்சியைப் பணம் செலுத்தக் கட்டாயப்படுத்த முடியாவிட்டாலும், குடிமகனின் உரிமையை ஒரு நீதிமன்றம் பிரகடனப்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது. 1881இல் இலங்கையின் பிரதம நீதியரசர் ஒருவர் விவரித்த நடைமுறையை இது பெரிதும் ஒத்திருந்தது என கோமறைக்கழகம் கூறியது. 1884இல் குழுவின் முன் இது வைக்கப்பட்டிருந்தால், அந்த நடைமுறையை ரோம டச்சுச் சட்டத்திற்குட்பட்டதாகக் கருதியிருக்கக்கூடும்.

கோமறைக்கழகம் தீர்மானித்ததும் தீர்மானிக்காததும்

மேற்சொன்ன வாதங்களை அடிப்படையாகக் கொண்டு, தமது பணிக்காலத்தில் சேர வேண்டிய ஊதியத்திற்காக சட்டமா அதிபருக்கு எதிராக வழக்குத் தொடர்வதன் மூலம் முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை இலங்கையில் உள்ள ஊழியருக்கு உண்டு என கோமறைக்கழகம் தீர்ப்பளித்தது. 

அரச கரும மொழிச்சட்டத்தின் (சிங்களம் மட்டும் சட்டம்) சட்டவலுவுள்ள தன்மை, அரசியலமைப்பின் பிரிவு 29இனை மீறியதா, அல்லது கோடீஸ்வரனின் சேவை நிபந்தனைகளில் திறைசேரிச் சுற்றறிக்கை இல. 560 எத்தகைய விளைவை ஏற்படுத்தியது என்பதனை கோமறைக்கழகம் தீர்மானிக்கவில்லை. இலங்கை உயர் நீதிமன்றத்தின் சொந்தப் பரிசீலிக்கப்பட்ட கருத்து இல்லாமல் அக்கேள்விகள் தொடர்பில் தீர்மானிக்கப்போவதில்லை எனக்கூறி வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பி வைத்தது.

சுருங்கச் சொன்னால், தனது கோரிக்கையை முன்வைக்கும் உரிமையைக் கோடீஸ்வரன் வென்ற போதிலும் தான் முன்வைத்த கோரிக்கையில் வெல்லவுமில்லை, தோற்கவுமில்லை. 

தீர்ப்பின் மீதான பகுப்பாய்வு


ஒரே கேள்விக்கு இலங்கை உயர் நீதிமன்றமும் கோமறைக்கழகமும் எதிர்மாறான தீர்ப்புக்களை அளித்தன. அந்தக் கேள்வி குறுகியதாக இருந்தது. “ஓர் ஊழியர் ஊதியத்திற்காக முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடர முடியுமா?” என்ற தொடக்கப் பிரச்சினைக்குக் கிடைக்கும் பதிலே, அரச கரும மொழிச் சட்டம் (சிங்களம் மட்டும் சட்டம்) அரசியலமைப்பின் பிரிவு 29இற்கு முரணானதா, இல்லையா என்ற அரசியலமைப்புக் கேள்வியை இந்த வழக்கில் அணுக முடியுமா என்பதனைத் தீர்மானித்தது.10 முதலாவது கேள்விக்குரிய பதில் கிடைத்த போதும், இரண்டாவது கேள்விக்குரிய பதில் இறுதி வரை தீர்மானிக்கப்படவில்லை.

கோமறைக்கழகம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறைகள்

இலங்கை உயர் நீதிமன்றம் ரோம டச்சு மற்றும் ஆங்கில மூலங்களுக்குள் தனது கவனத்தைச் செலுத்தியது. Fraser’s Case வழக்கை மிகவும் விதிவிலக்கானதாகக் கருதியது. முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமைக்கு ரோம டச்சுச் சட்டத்தில் உறுதியான அடிப்படை இல்லை என Siman Appu வழக்கின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவு செய்தது. அந்தப் பழைய உள்நாட்டு வழக்குகளை, Siman Appu தீர்ப்பால் ரத்து செய்யப்பட்டவையாக உயர் நீதிமன்றம் கருதியதாகத் தோன்றுகிறது எனக் கோமறைக் கழகம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. எனினும், Siman Appu வழக்கு அந்த முன்னைய வழக்குகளின் ஊதிய நிலுவைக் கோட்பாட்டைப் பலவீனப்படுத்தவில்லை என்றும், இலங்கையின் சொந்தப் பொதுச் சட்ட வளர்ச்சியையே அது காட்டுகிறது என்றும் கோமறைக் கழகம் விளக்கியது.

ஒரு நூற்றாண்டு கால இலங்கை விதிகளுக்குக் கோமறைக் கழகம் முன்னுரிமையளித்தது. ரோம டச்சுச் சட்டம் இலங்கையின் பொதுச் சட்டத்தின் புள்ளியேயன்றி, முடிவுப் புள்ளியல்ல எனக் கூறியது. கொழும்பில் இருந்த உயர் நீதிமன்றம் வழங்கியதை விட, இலண்டனில் இருந்த கோமறைக்கழகம் இலங்கையின் சொந்த வழக்குச் சட்டத்திற்கு முதன்மையளித்தது.

தீர்மானிக்கப்படாத அரசியலமைப்புக் கேள்வி

கோடீஸ்வரனுக்கு வழக்குத் தொடரும் உரிமையில்லை என்பதால் அரச கரும மொழிச் சட்டம் குறித்துத் தீர்ப்பளிக்கத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் கூறியது. பொதுச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கைத் தீர்க்கக் கூடிய சூழல் உள்ள போது, அரசியலமைப்பு சார் கேள்வியைத் தவிர்க்கும் அமெரிக்க, இந்திய உச்ச நீதிமன்றங்களின் நடைமுறைகளையும் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டினார். மாவட்ட நீதிபதியின் தீர்ப்பைக் கட்டுப்படுத்தும் தீர்ப்பாகக் கருதக்கூடாது என்றும், அக்கேள்வி உரிய முறையில் எழுமேயானால் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வே அதை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். குறித்த சட்டம் தொடர்பில் எந்த வாதமும் கேட்கப்படவில்லை என்றும், உயர் நீதிமன்றத்தின் கருத்து இல்லாமல் அக்கேள்வியில் தீர்ப்பளிப்பது சரியல்ல என்றும் கோமறைக்கழகம் தெரிவித்து வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கே அனுப்பி வைத்தது. 

தீர்ப்புக்களுக்குப் பின்னர்

1971ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றச் சட்டம் கோமறைக்கழகத்திற்கான மேன்முறையீடுகளை 1971 நவம்பர் 15 முதல் முடிவிற்குக் கொண்டு வந்தது11; சாதாரண சட்டமாக இருந்த சிங்களம் மட்டும் சட்டத்திற்கு அரசியலமைப்பு சார் அங்கீகாரத்தை 1972 அரசியலமைப்பின் உறுப்புரை 07 வழங்கியது12 உள்ளிட்டவைகள், குறித்த வழக்குத் தீர்ப்பின் பின்னரான குறிப்பிடத்தகு மாற்றங்களாகும்.

மேலும் சோல்பரி அரசியலமைப்பில் காணப்பட்ட பிரிவு 29 (2)இற்கு இணையான ஏற்பாடுகள் எவையும் 1972 அரசியலமைப்பில் இருக்கவில்லை. அதன் அடிப்படை உரிமைகள் பரந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருந்தன. ஆனால் பிரிவு 29 (2) முழுமையானதாகவும் சமூகங்களைக் குழுக்களாகப் பாதுகாப்பதாகவும் இருந்தது. 1972 அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுடன் முரண்பட்டாலும், முன்னரே நிலவிய சட்டங்கள் நடைமுறையில் நீடித்தன.13

இலங்கைச் சட்டமன்றத்தால் (தேசிய அரசுப் பேரவை) நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நீதிமன்றங்களால் கேள்விக்குட்படுத்த முடியாத நிலை 1972 அரசியலமைப்பில் தோற்றுவிக்கப்பட்டது. அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் மதிப்பாய்வு செய்யக்கூடிய நீதி முன்புனராய்வு அதிகாரங்கள் மட்டுமே நீதிமன்றங்களிற்கு வழங்கப்பட்டிருந்தன.

பரிசோதிக்கப்படாத பாதுகாப்பு விதிகள்


கோடீஸ்வரன் வழக்கு ஒரு சட்ட விதியையும் ஒரு கேள்வியையும் விட்டுச் சென்றது. அது பொது ஊழியர் தாம் ஈட்டிய ஊதியத்திற்காக முடியாட்சிக்கு எதிராக வழக்குத் தொடரலாம் என்னும் விதியும், ஒரு சமூகத்தின் மீது மட்டும் சுமையை விதிக்கும் மொழிச் சட்டம் அரசியலமைப்பின் பிரிவு 29இற்கு முரணானதா என்ற, வாதிட்டுத் தீர்மானிக்கப்படாத வழக்கு எழுப்பிய கேள்வியும் ஆகும்.

இவ்வழக்கு ஓர் அனுபவத்தை வழங்குகின்றது. பாதுகாப்பு விதிகள் எழுத்தில் வலுவாக இருப்பது மட்டுமே போதாது. அதனை நிலைநாட்டுவதற்கும் சவாலிற்குட்படுத்துவதற்குமான வாய்ப்புத் தடையின்றி வழங்கப்பட வேண்டும். கோடீஸ்வரன் வழக்கில் அந்த வாய்ப்பு செயன்முறைத் தடையால் தள்ளிப்போடப்பட்டது. தீர்க்கப்படாத அரசியலமைப்பு சார் கேள்வியைத் தீர்மானிப்பதற்காக கோமறைக்கழகத்தால் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட போதிலும் அந்தக் கேள்வி தீர்மானிக்கப்படவில்லை. பின்னர் 1971இல் கோமறைக்கழக மேன்முறையீட்டு வாய்ப்புக்களும் முடிவுக்கு வந்தன. 1972 அரசியலமைப்பிலும் பிரிவு 29 (2)இற்கு நிகராக ஏற்பாடுகள் இல்லை. இவை இந்த வழக்கின் விளைவுகள் என்பதற்குச் சான்றுகள் இல்லை என்ற போதிலும் வழக்கிற்குப் பிந்திய சூழலைக் காட்டி நிற்கின்றன.

அடிக்குறிப்புகள் 

1. Treasury Circular No. 560 of 4 December 1961.

2. Official Language Act, No. 33 of 1956.

3. Section 2, Official Language Act, No. 33 of 1956.

4. Treasury Circular No. 560 of 4 December 1961.

5. Section 29(2) of Ceylon’s 1947 Soulbury Constitution.

6. V. Thangavelu’s reply to M. K. Eelaventhan (former M.P.), cited in Tribute to Chelliah Kodeeswaran, available at: https://sangam.org/tribute-to-chelliah-kodeeswaran/

7. Kodeeswaran v. Attorney-General of Ceylon, D.C. Colombo Case No. 1026/Z. 

8. Attorney-General v. Kodeswaran (1967) 70 NLR 121 (S.C. 408/64).

9. Kodeeswaran v Attorney-General (1969) 72 NLR 337 (P.C.), Privy Council Appeal No. 38 of 1968, 11 December 1969, per Lord Diplock.

10. Kodeeswaran v Attorney-General (1969) 72 NLR 337 (P.C.) at 338.

11. Court of Appeal Act No. 44 of 1971.

12. Article 07 of the 1972 Constitution of Sri Lanka.

13. Article 12 of the 1972 Constitution of Sri Lanka.



About the Author

சிவகுமார் சிவகஜன்

சிவகுமார் சிவகஜன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டமானிப் பட்டப்படிப்பை (LL.B) நிறைவு செய்து, தற்போது இலங்கைச் சட்டக் கல்லூரியில் Attorney-at-Law தகைமைக்கான இறுதியாண்டுப் படிப்பை மேற்கொண்டு வருகின்றார்.

எழுநா அரசியலமைப்பு ஆய்வுகளுக்கான மையத்தில் (Centre for Constitutional Studies) ஆய்வாளராகச் செயற்பட்டு வரும் இவர், இதற்கு முன்னர் யாழ்ப்பாண சட்டம் மற்றும் கொள்கைக்கான நிறுவனத்தில் (Jaffna Institute for Law and Policy) ஆய்வாளராகப் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.

பல்கலைக்கழகக் காலத்தில் மாணவர் ஒன்றியங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், மாணவர் இயக்கச் செயற்பாடுகளின் ஊடாக ஈழத் தமிழர்களின் இறைமை, தன்னாட்சியுரிமை, பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் மாணவர் மட்டத்திலும் பொதுத் தளங்களிலும் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்