இலங்கையின் அரசியல் யாப்புத்திருத்தம் எனும் செயல்முறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 1931இன் டொனமூர் அரசியல் யாப்பு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
30 நிமிட வாசிப்பு

இலங்கையின் அரசியல் யாப்புத்திருத்தம் எனும் செயல்முறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 1931இன் டொனமூர் அரசியல் யாப்பு

July 13, 2026 | Ezhuna

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல

Power Sharing in Sri Lanka Constitutional and Political Documents 1926 – 2008 எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு நூலை மேற்குறித்த சட்டத்துறை அறிஞர்களான றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல ஆகியோர் இணைந்து பதிப்பித்து வெளியிட்டனர். இந்நூலில் அதிகாரப் பகிர்வு (Power Sharing) தொடர்பாக 1926 தொடக்கம் 2008 வரையான 82 ஆண்டுகாலத்தில் வெளியிடப்பட்ட முக்கியமான அரசியல் யாப்பு ஆவணங்கள் ஒரு சேரத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவ்வாறான முக்கிய ஆவணங்களில் ஒன்றான டொனமூர் அரசியல் யாப்பின் முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டும் வகையில் அந்த அரசியல் யாப்பின் தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதோடு (Chapter 2), டொனமூர் அரசியல் யாப்பைப் பற்றிய ஒரு சிறந்த ஆய்வுரையை ‘Introduction’ (அறிமுகம்) என்ற தலைப்பில் பதிப்பாசிரியர்கள் எழுதிச் சேர்த்துள்ளனர். இத்தமிழ்க் கட்டுரை மேற்படி அறிமுகத்தில் கூறப்பட்ட கருத்துகளை தமிழில் தொகுத்தும் சுருக்கியும் கூறும் முறையில் எழுதப்பட்டுள்ளது.

அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பாக இலங்கையில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு 1927 ஆம் ஆண்டு வருகை தந்தது. விசாரணையின் முடிவில் ஆணையாளர்கள் தமது அறிக்கையைப் பிரித்தானிய அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்தனர். ஆணைக்குழு சமர்ப்பித்த அரசியல் யாப்பு வரைவு பின்னர் சட்டமாக்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்பு இலங்கையில் இன்றுவரை பேசுபொருளாக இருந்து வரும் அரசியல் யாப்பு ஆகும். இதன் முக்கியத்துவத்திற்குப் பல காரணங்கள் உள்ளன எனப் பதிப்பாசிரியர்கள் கூறுகின்றனர். அக்காரணங்களில் நான்கு முக்கியமானவை:

1. சுதந்திரத்தை நோக்கிய நகர்வு

இந்த அரசியல் யாப்பின் அடுத்தக்கட்ட நகர்வாக இலங்கை சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்கவிருந்தது. அப்பயணத்தை நோக்கி இலங்கையை நகர்த்துவதற்கான தயாரிப்பு (Preparation) முயற்சியாக இந்த அரசியல் யாப்பு அமைந்தது.

2. புரட்சிகரமான சீர்திருத்தங்கள்

இந்த அரசியல் யாப்பு புரட்சிகரமான சீர்திருத்தங்களை (Radical Reforms) இலங்கைக்கு அறிமுகம் செய்தது.

3. நிர்வாகக் குழுமுறை

நிர்வாகக் குழுமுறை (Executive Committee System) போன்ற புதுமையான அரசியல் நிறுவன ஒழுங்குமுறைகளை (Political Institutional Arrangements) இந்த அரசியல் யாப்பு அறிமுகம் செய்தது.

4. சமஷ்டி முறையைப் பரிசீலனை செய்தமை

புதிய அரசியல் யாப்பை வரைந்த டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு சமஷ்டி முறை வேண்டும் என்று கண்டியர் அசெம்பிளி (Kandyan Assembly) என்னும் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலனை செய்தது. அவ்விடயம் பற்றி அறிக்கையில் ஆணைக்குழுவின் கருத்துகள் எடுத்துக்கூறப்பட்டன.

டொனமூர் அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பின்புலம்

இலங்கையின் அரசியல் தலைவர்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள் முதலாக அரசியல் யாப்புச் சீர்திருத்தம் (Constitutional Reform) அவசியம் எனக்கூறி அமைதி வழியில் பிரசாரம் செய்து வந்தனர். அத்தலைவர்கள் இலங்கையர்களுக்கு அரசியல் அதிகாரத்தைக் கூடிய அளவில் கொடுக்கும் வகையில் சீர்திருத்தம் வேண்டும் எனத் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டனர். இதன் பயனாக 1900 – 1925 காலத்தில் அடுத்தடுத்துப் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இச்சீர்திருத்தங்கள் காலனிய அரசாங்கம் 19 ஆம் நூற்றாண்டில் பின்பற்றிய ஆட்சி முறைப் பாணியைப் பின்பற்றிய சீர்திருத்தங்களாகவும், இலங்கை அரசியல் தலைவர்களின் கோரிக்கைகளின் எதிர்வினையாகவும் அமைந்தன.

பிரித்தானிய அரசாங்கம் 1927இல் இலங்கையின் நிலைமையைப் பற்றியும், இலங்கையின் அரசியல் யாப்பைத் திருத்தும் வகையிலும் புதியதொரு அரசியல் யாப்பை அறிமுகம் செய்வதைப் பரிசீலிக்கும் நோக்குடன் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. அந்த ஆணைக்குழுவிற்கு பின்வருவோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

பிரபுக்கள் சபையின் மூத்த உறுப்பினராக இருந்த டொனமூர் பிரபு இதன் தவிசாளராக நியமிக்கப்பட்டார். டொனமூர் பிரபு அரசியலில் மிகுந்த அனுபவம் பெற்ற ஒருவராவார்.

சேர் மத்தியுநாதன் – இவர் பிரித்தானியக் காலனிகளின் கவர்னராக முன்பு பணியாற்றிய அனுபவசாலி. அத்தோடு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற கல்வியாளர். League of Nations என்ற அமைப்பின் நடைமுறைகள் பற்றி நன்கு கற்றறிந்திருந்த நிபுணராகவும் விளங்கினார்.

சேர் ஜியோவ்ரி பட்லர் – இவர் உள்ளூராட்சி நிர்வாகம் (Local Government) என்னும் விடயம் குறித்த நிபுணத்துவம் மிக்கவர்.

கலாநிதி ட்றமன்ட் சீல்ஸ் (Dr. Drummond Shiels) – இவர் தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

டொனமூர் ஆணைக்குழு உறுப்பினர்கள் யாவரும் பல்துறை அறிவு மிக்கவர்களாயும் பல துறைகளில் அனுபவம் பெற்றவர்களாயும் இருந்தனர் என்பதைக் காணலாம். இத்தகையவர்களை உள்ளடக்கிய குழு அக்காலத்தின் பின்புலத்தில் வைத்து நோக்கும் போது புரட்சிகரமான அரசியல் சீர்திருத்தச் சிபார்சுகளை முன்மொழிந்தது என்பதில் ஆச்சரியம் இல்லை. ஆணைக்குழு 1927 நவம்பர் முதல் 1928 பெப்ரவரி வரை இலங்கையில் தங்கியிருந்து விசாரணை நடத்தித் தமது அறிக்கையை 1928 யூலை மாதம் காலனிகளுக்குப் பொறுப்பான பிரித்தானிய அமைச்சரிடம் (Secretary of State for the Colonies) சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் அமைச்சர் சில திருத்தங்களைச் செய்த பின்னர் சட்டவரைவாக வரைந்து டொனமூர் அரசியல் யாப்பு என்ற பெயரில் அறியப்படும் சட்டத்தை இயற்றினார். இந்த அரசியல் யாப்பு 1931 இல் நடைமுறைக்கு வந்தது.

டொனமூர் ஆணைக்குழுவின் இலங்கை வருகையும், இலங்கையின் அரசியல் தலைவர்கள் அக்குழுவிற்குச் சமர்ப்பித்த கோரிக்கைகளும், வேண்டுதல்களும் இலங்கையில் மிக முக்கியமான விவாதப் பொருளாக இருந்தன. சட்டசபையில் விவாதங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் மத்தியிலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. 1927 – 1931 காலத்தில் அரசியல் தலைவர்களிடையே காணப்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் பொதுவெளியில் விவாதிக்கப்படவும், அலசப்படவும் ஆணைக்குழு விசாரணைகள் ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்கின. அக்காலத்தின் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளாக பின்வரும் இரண்டு முக்கிய விடயங்கள் விளங்கின.

அ. சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள்

ஆ. அரசியல் அமைப்பு மாற்றம் படிப்படியாக ஏற்பட வேண்டும் என்று கருதிய அரசியல் தலைவர்களுக்கும் புரட்சிகர மாற்றத்தைக் (Radical Change) கோரிய அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள்.

முதலாவது விடயம் குறித்து சிங்களத் தலைவர்களின் கருத்து தமிழ்த் தலைவர்களின் கருத்திலிருந்து வேறுபட்டதாக இருந்தது. சிங்களத் தலைவர்கள் அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களில் சிங்களவர், தமிழர் என்ற பிரிவு தேவையில்லை என்றனர். அரசியல் யாப்பு இனங்களுக்குப் பொதுவான (Ethnic-Neutral) ஒன்றாக இருக்க வேண்டும்; சிங்களவர் – தமிழர் என்ற பிரச்சினைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கருதினர். ஆனால், தமிழ்த் தலைவர்கள் அரசியல் அமைப்பு மாற்றங்கள் தமது சமூகத்தின் அதிகாரங்களையும், நலன்களையும் (Powers and Interest) எவ்விதம் பாதிக்கப் போகின்றன என்பது பற்றிக் கவலையும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்தனர். இவ்விரு முரண்பாடுகளும் அன்றைய அரசியலின் சர்ச்சைக்குரிய விடயங்களாய் அமைந்தன.

டொனமூர் அரசியல் யாப்பின் முக்கிய கூறுகள்

அரசு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் அல்லது சமஷ்டி என்ற விடயத்துடன் டொனமூர் அரசியல் யாப்பு நேரடியாகத் தொடர்புடையது அல்ல. ஆகையால் டொனமூர் யாப்பினை வரைந்தோர் அந்த விடயங்கள் தொடர்பான கூறுகளை டொனமூர் அரசியல் யாப்பில் சேர்த்திருப்பார்கள் என்று கூறமுடியாது. ஆயினும், நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில் இலங்கையின் இரண்டு பெரும் தேசிய இனங்களான சிங்கள-தமிழ் இனங்களுக்கிடையிலான உறவுகளைத் தீர்மானிக்கும் கூறுகள் பல டொனமூர் அரசியல் யாப்பில் இருந்தன. இவை பின்னர் சிங்கள – தமிழ் இனத்துவ உறவுகளில் விரிசல் ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்தன. அத்தகைய கூறுகள் பற்றி அடுத்து நோக்குவோம்.

1. இனவாரிப் பிரதிநிதித்துவ முறையை ஒழித்தல் (The Abolition of Communal Representation)

சட்டசபைக்கு (Legislative Council) இனவாரியாகப் பிரதிநிதிகளை நியமிக்கும் முறை பிரித்தானிய காலனிய ஆட்சிக் காலத்தின் தொடக்கம் முதல் இருந்து வந்தது. இதனை இனவாரிப் பிரதிநிதித்துவ முறை (Communal Representation System) என அழைப்பர். டொனமூர் ஆணைக்குழு சட்டசபைக்கு ஆட்களை இனவாரி முறையில் நியமிக்கும் முறையை ஒழித்தது. அதற்குப் பதிலாக டொனமூர் அரசியல் யாப்பின்படி பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையை (Territorial Representation) நடைமுறைக்குக் கொண்டுவந்தது. முன்னைய முறை நீக்கப்பட்டு புதிய முறையை நடைமுறைப்படுத்திய போது அம்முறை தமது நலன்களுக்குப் பாதிப்பாக அமைந்ததையும், தமிழர் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டதால் தமிழர் சமூகம் அரசியல் அதிகாரப் பலத்தை இழந்ததையும் தமிழ்த் தலைவர்கள் உணர்ந்தனர்.

1931க்கு முற்பட்ட காலத்தில் இனவாரிப் பிரதிநிதித்துவ முறை எவ்வாறு செயற்படுத்தப்பட்டது என்பது பற்றி முக்கிய தகவல்களை இவ்விடத்தில் தெரிந்து கொள்வது பயனுடையது. சட்டசபைக்கு கரைநாட்டுச் சிங்களவர் பிரதிநிதிகள், கண்டிச் சிங்களவர் பிரதிநிதிகள், தமிழர் பிரதிநிதிகள், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்றவாறு சட்டசபை ஆசனங்களைத் தீர்மானிப்பதே இனவாரிப் பிரதிநிதித்துவ முறையாகும். 1911க்கும் 1931க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரதேசத்தின் அடிப்படையிலான அமைப்புகளும், வர்த்தகர்களின் அமைப்புகளும் பிரதிநிதித்துவம் பெற்றன. உதாரணமாக கரைநாட்டுப் பகுதிகளின் தென்னை, றப்பர் தோட்டங்களின் உடமையாளர்களின் அமைப்பான ‘Low Country Products Association’ என்ற அமைப்பும், ‘சேம்பர் ஒவ் கொமர்ஸ்’ (Chamber of Commerce) என்ற அமைப்பும் சட்டசபையில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றன. இவ்வாறான சில விதிவிலக்குகள் தவிர 1931க்கு முந்திய சட்டசபைகளில் பிரதிநிதிகளின் நியமனம் அல்லது தெரிவு (Nomination or Election) பிரதானமான முறையாக இருந்து வந்தது. இம்முறை இனவாரிப் பிரதிநிதித்துவம் (Communal Representation) என அழைக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இலங்கையில் ஜனநாயக முறையிலான அரசியல் சீர்திருத்தம் வேண்டும் எனக் கோரலாயினர். ஜனநாயக முறையின்படி இனவாரிப் பிரதிநிதித்துவ முறையில் இருந்து பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறுவது அவசியம் என்பதைச் சிங்கள அரசியல் தலைவர்கள் உணர்ந்தனர். ஜனநாயக நாடுகளில் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவமே ஏற்புடைய பிரதிநிதித்துவ முறையாக இருப்பதையும் அவர்கள் கண்டனர். ஆனால், அக்காலத் தமிழ் அரசியல் தலைவர்கள் வேறுவகையில் சிந்தித்தனர். பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் தமிழர்களின் அரசியல் பலத்தைக் (Political Influence) குறைக்கும் என்பதையும், சட்டசபையில் பெரும்பான்மையினரான சிங்களவரின் பலத்தை அதிகரித்து, பெரும்பான்மை ஜனநாயகம் (Majoritarian Democracy) நோக்கி இலங்கையின் அரசியல் முறையை மாற்றிவிடும் என்பதையும் உணர்ந்தனர். ஆதலால், தமிழ்த் தலைவர்கள் அத்தகைய மாற்றத்தை எதிர்த்தனர். அக்காலத்தில் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரித்தானிய அதிகாரிகள் கூட அம்மாற்றத்தை விரும்பவில்லை. ஆயினும் டொனமூர் ஆணைக்குழுவினர் இனவாரிப் பிரதிநிதித்துவ முறையை கடுமையான வார்த்தைகளில் கண்டித்து விமர்சனம் செய்தனர்.

இனவாரிப் பிரதிநிதித்துவ முறை ‘A Canker on the Body Politic’ எனவும் அது நாட்டில் அரசியல் உணர்வு வளர்ச்சியைக் கெடுத்து நஞ்சாக்கிவிடுவதோடு, தேசிய உணர்வும் ஐக்கியமும் வளர்வதைத் தடை செய்யும் என்றும் கடும் வார்த்தைகளால் டொனமூர் அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2. சர்வசன வாக்குரிமையை அறிமுகம் செய்தல்

இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் சர்வசன வாக்குரிமை நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்தனர். 1920இல் இலங்கையில் மட்டுப்படுத்த வாக்குரிமையே வழங்கப்பட்டிருந்தது. சொத்துடைமை, கல்வித்தகைமைகள் என்பனவற்றின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை நடைமுறையில் இருந்ததால் நாட்டின் சனத்தொகையில் 4%த்தினர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். இலங்கைத் தேசிய காங்கிரசின் பிரதிநிதிகள் குழுவொன்று 1927இல் டொனமூர் ஆணைக்குழுவுக்குச் சாட்சியம் வழங்கிய போது சர்வசன வாக்குரிமை வேண்டாம் எனக் குறிப்பிட்டது. இப்பிரதிநிதிகள் குழுவில் E.W. பெரேரா, R.S.S. குணவர்த்தன, S.W.R.D. பண்டாரநாயக்க ஆகிய மூவர் உள்ளடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணைக்குழுவினர், அப்போது சர்வசன வாக்குரிமையை எதிர்ப்பதற்கான காரணங்கள் யாவை என அப்பிரதிநிதிகளைக் கேட்டனர். எல்லோருக்கும் வாக்குரிமையைக் கொடுத்தால் வாக்கின் பெறுமதி தெரியாது; அதனை யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு மக்கள் விற்பனை செய்து விடுவார்கள்; பொறுப்புணர்வு இல்லாதவர்களுக்கு வாக்குரிமையைக் கொடுப்பது ஆபத்தானது என அத்தலைவர்கள் கூறினர். 

அக்காலத்தின் பெரும்பாலான சிங்கள, தமிழ்த் தலைவர்கள் யாவரும் சர்வசன வாக்குரிமையை எதிர்த்தனர். ஆனால், A.E. குணசிங்க என்ற தொழிலாளர் தலைவர் மட்டும் சர்வசன வாக்குரிமைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அதன் விளைவு விரைவிலேயே அனைவருக்கும் தெரியவந்தது. 1924 ஆம் ஆண்டில் 205,000 ஆகவிருந்த வாக்காளர் எண்ணிக்கை 1931 இல் 1,500,000 ஆக உயர்ந்தது. தமிழ்த் தலைவர்கள் அஞ்சியது போல் பெரும்பான்மைச் சமூகமான சிங்களச் சமூகத்தின் அரசியல் அதிகாரம் அதிகரித்தது. சிறுபான்மை இனங்களின் அரசியல் அதிகாரம் குறைந்தது.

இவ்விடத்தில் நாம் இன்னொரு விடயத்தைக் குறிப்பிடுதல் அவசியம். இலங்கையில் 5 ஆண்டுகள் வதிவிடத்தகுதி (Residential Qualification) உள்ளவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும் என்பதை உறுதி செய்திருந்த காரணத்தால் இந்தியத் தமிழர் சமூகத்தினர் வாக்களார்களாக அதிக அளவில் பதிவு செய்து கொள்ளப்படுவர் என டொனமூர் ஆணைக்குழு நம்பிக்கை கொண்டிருந்தது. அதன் பயனாக இந்தியத் தமிழர் சமூகம் சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் முன்னேற்றம் அடைதல் சாத்தியமாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

3. நிர்வாகக் குழு முறை

இலங்கையின் அரசியல் தலைவர்கள் பலர் பிரித்தானியாவின் பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழகக் கல்வியைக் கற்றவர்களாக இருந்தனர். ஆங்கிலமயப்பட்ட உயர்குழுவான (Anglicised Elites) இந்தத் தலைவர்கள் இலங்கை அரசின் நிர்வாகத்துறை பிரித்தானியாவின் மந்திரிசபை அரசாங்க (Cabinet Government) மாதிரியில் அமைய வேண்டுமென சிபார்சு செய்தனர். ஆனால் டொனமூர் ஆணைக்குழு இலங்கையின் அரசியல் தலைமையை நாட்டின் பிராந்திய மட்டங்களில் இருந்து வரும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டதாக விரிவாக்கம் செய்ய விரும்பினர். சகல மட்டத்தினருக்கும் நிர்வாகத்துறை அனுபவத்தைக் கொடுக்கக்கூடியதாக சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட அனைவரையும் நிர்வாகத்தில் பங்கு கொள்ளவைக்கக் கூடிய நிர்வாகக் குழு முறையைச் (Executive Committee System) சிபார்சு செய்தனர்.

சட்டசபை உறுப்பினர்கள் அனைவரையும் உட்படுத்திய குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுக்கள் ஒவ்வொன்றினதும் உறுப்பினர்கள் ஒன்றுகூடித் தத்தம் குழுக்களுக்கு ஒரு தலைவரைத் தெரிவு செய்வர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட குழுத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து அமைச்சர் அவை (Board of Ministers) ஆகச் செயற்படுவர். உதாரணமாக சுகாதாரம் அல்லது போக்குவரத்து என்ற ஒரு துறையின் நிர்வாகக் குழுவில் ஏழு அல்லது எட்டு உறுப்பினர்கள் இடம்பெறுவர். அவர்கள் ஒரு குழுவாகக் கூடித் தம்முள் ஒருவரைத் தலைவராகத் தெரிவு செய்வர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர் குறித்த துறையின் அமைச்சராகவும், ‘Board of Ministers’ என்ற அமைச்சர் அவையின் உறுப்பினராகவும் பணியாற்றுவார்.

இந்த நிர்வாகக் குழு முறை ஒவ்வொரு அரசுச்சபை (State Council) உறுப்பினருக்கும் இரண்டு வகையான வகிபாகத்தை வழங்கியது.

அ. சட்டசபை உறுப்பினர் சட்டவாக்க அலுவல்களில் (Legislator என்ற முறையில்) பங்கேற்றார்.

ஆ. அவர் நிர்வாகக் குழு ஒன்றின் உறுப்பினர் என்ற முறையில் ஒரு துறையின் நிர்வாகத்திலும் பங்கேற்றார்.

டொனமூர் ஆணைக்குழுவினால் கருத்தில் கொள்ளப்பட்ட ஏனைய சில விடயங்கள்

டொனமூர் ஆணைக்குழு பெரும்பான்மைச் சிங்கள இனத்திற்கும், சிறுபான்மை இனங்களுக்கும் பொதுவான வேறு 6 முக்கிய விடயங்களிலும் கவனம் செலுத்தியது. அவை பற்றி அடுத்து நோக்குவோம்.

1. சமஷ்டி முறை

இளைஞரான எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க 1929ஆம் ஆண்டில் இலங்கைக்கு சமஷ்டி முறை (Federalism) அரசியல் அமைப்பு வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். டொனமூர் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளித்த கண்டிச் சிங்கள சமூகத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்குச் சமஷ்டி முறைமை வேண்டும், கண்டிய மாகாணங்கள் தனித்த சமஷ்டி அரசாக இருத்தல் வேண்டும், இலங்கையில் எல்லாமாக மூன்று சமஷ்டி அலகுகள் இருக்க வேண்டும், வடக்கு கிழக்கு இரண்டும் (North East) ஒரு மாகாண அரசாக இருக்க வேண்டும் என்று கோரினர். ஆகையால் இலங்கையில் சமஷ்டி முறை வேண்டும் என முதன்முதலில் கோரிக்கை வைத்தவர்கள் கண்டிச் சிங்களவர்களே அல்லாது இலங்கைத் தமிழர்கள் அல்லர் என்பதை நாம் கவனித்தல் வேண்டும். அத்தோடு வடக்குக் கிழக்கை ஒன்றிணைத்தல் (Merger of North East) என்ற கோரிக்கையை முன்வைத்தவர்களும் தமிழர்கள் அல்லர்; கண்டியச் சிங்களவரே இதனை முன்வைத்தனர். கண்டியச் சிங்களவர் தனித்துவமுடைய தேசிய இனம் (A Nation) என்றும் தம்மை அடையாளப்படுத்தினர். அவர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளையும் ஆவணங்களையும் (Documents) பரிசீலனை செய்யும்போது அவர்கள் கையாண்ட மொழியும், சொற்றொடர்களும் இன்று தமிழ்த் தேசியவாதிகளின் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படும் மொழியையும், சொற்றொடர்களையும் ஒத்தனவாய் இருப்பதைக் காண்கிறோம். கண்டிய அரசியல் தலைவர்கள் சிலர் அக்காலத்தில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress) என்ற அமைப்பில் இருந்து வெளியேறி கண்டியர் தேசிய அசெம்பிளி (Kandyan National Assembly) என்ற அமைப்பினை உருவாக்கியிருந்தனர்.

கண்டிய தேசிய அசெம்பிளியின் பிரதிநிதிகள் டொனமூர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது தெரிவித்த கருத்து வருமாறு:

“எமது கோரிக்கை இனவாதக் கோரிக்கை அன்று, அல்லது இதனை ஒருசில தனிநபர்களின் ஆதிக்க மனப்பாங்கை வெளிப்படுத்தும் கோரிக்கையாகவும் கருத முடியாது. இக்கோரிக்கை ஒரு தேசிய இனத்தின் கோரிக்கை (A Claim of a Nation). அத்தேசிய இனம் தனது வாழ்வைத் தானே அமைத்துக்கொள்ள விரும்புகிறது; தன் தலைவிதியைத் தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது போன்ற சமஷ்டி அரசை (Federal State) இலங்கையில் நிறுவ வேண்டும் என நாம் விரும்புகிறோம். நாம் ஒரு சமஷ்டி முறை இலங்கைக்குத் தேவை என்று கேட்கிறோம். அமெரிக்காவில் உள்ளது போன்ற சமஷ்டி முறையை இங்கு உருவாக்க வேண்டும் எனக் கோருகிறோம். அந்த சமஷ்டி முறையில் சேர்ந்து கொள்ளும் ஒவ்வொரு மாநில அரசும் தனது புவியியல் பரப்புக்குள் வெளியில் இருந்து வரும் ஊடுருவல்களைத் தடுத்து நிறுத்தி, தமது தேசிய இனத்தை (Nationality) வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல முடியும்.”

கண்டியர்களின் கோரிக்கைகளை டொனமூர் ஆணைக்குழுவினர் செவிமடுத்தனர் என்பதை, அவர்கள் ‘Kandyan Claim’ (கண்டியர் கோரிக்கை) என்ற தலைப்பில் தனியான ஓர் அத்தியாயத்தை தமது அறிக்கையில் ஒதுக்கியிருந்தமை மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். ஆயினும் டொனமூர் ஆணைக்குழு கண்டியர் கோரிக்கையை (Federalism) நிராகரித்தது. டொனமூர் ஆணைக்குழு கண்டியர் கோரிக்கையை நிராகரித்ததன் காரணம் என்ன? இது பற்றிக் கட்டுரையாசிரியர்கள் கூறியிருப்பது வருமாறு:

“The Donoughmore Commissioners responded to what they described as the ‘Kandyan Claim’ in a separate chapter. They expressed some sympathy for the concerns expressed by the Kandyan Sinhalese but rejected the claim for a federal Ceylon mainly on the basis that the country needed to be united, ethnic and regional identity needed to be transcended, and that what was paramount at this stage leading to independence, in what could be described as the Commission’s overriding philosophy, was the development of a corporate unity.”

டொனமூர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் சிந்தனையை நெறிப்படுத்திய முதன்மையான தத்துவம் (Overriding Philosophy) ஒன்று இருந்தது. அவர்கள் இலங்கையர் சமூகத்தில் ஒற்றுமையின் அடிப்படையிலான கூட்டுணர்வும் ஐக்கியமும் ஏற்பட வேண்டும், இனத்துவ அடையாள உணர்வு (Ethnic Identity), பிராந்திய அடையாள உணர்வு (Regional Identity) என்பனவற்றைக் கடந்த ஒற்றுமைப்பட்ட தேசம் என்ற இலக்கில் இலங்கை பயணிக்க வேண்டும் என விரும்பினர். சுதந்திரத்தினைப் பெறுவதற்குத் தகுதியுடைய இலங்கையர்களைத் தயாரிப்பதற்கு ஐக்கியமே பிரதானமானது என ஆணைக்குழுவினர் கருதினர்.

2. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை

டொனமூர் ஆணைக்குழுவினர், இலங்கையின் அரசுச்சபைக்கான பிரதிநிதிகள் தேர்வில் அக்காலத்தில் ஜேர்மனியில் பின்பற்றப்பட்ட விகிதாசார (Proportional Representation) முறையை சில திருத்தங்களுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தலாம் எனத் தீவிர கவனம் செலுத்தி ஆலோசித்தனர். ஆனால் பின்னர் அவர்கள் அந்த யோசனையை கைவிட்டனர். அந்த முறை பற்றி அண்மைக்காலத்தில் எத்தகைய விமர்சனங்கள் செய்யப்படுகிறதோ அத்தகைய வகையிலான விமர்சனங்களை எடுத்துக்காட்டி அந்த யோசனையை அவர்கள் கைவிட்டனர். குறிப்பாக விகிதாசார முறை சிக்கலானது (Complicate). அந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேர்தல் தொகுதிகளைப் பெரியதாக அமைக்க வேண்டும். அந்த முறையினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தம்மைத் தெரிவு செய்தவர்களிடமிருந்து அந்நியப்பட்டவர்களாகிவிடுவர் என்ற காரணங்களை அவர்கள் சுட்டிக்காட்டினர். இதனை விடச் சிறுபான்மை இனத்தவர்கள் இனவாரிப் பிரதிநிதித்துவ முறையை (Communal Representation) நீக்கக் கூடாது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நீக்குவதால் தமது அரசியல் அதிகாரம் (Political Power) பறிபோய்விடும்; தாம் பலம் குன்றியவர்களாகிவிடுவோம் என்று குறை கூறுகின்றனர். இப்பின்னணியில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை தமக்குப் பாதகமாக அமையப் போவதைக் கண்டு அதனை எதிர்ப்பார்கள். இறுதியில் அரசியல் யாப்புத் திருத்தத் திட்டம் (Constitutional Reform Project) தடைப்பட்டுவிடும் என்பன அவர்களது கருத்தாக இருந்தது.

3. உள்ளூராட்சி

ட்றமன்ட் சீல்ஸ் (Drummond Shiels) அவர்கள் உள்ளூராட்சி நிர்வாகம் குறித்த நிபுணத்துவம் உடையவர் என்பதை மேலே குறிப்பிட்டோம். அவர் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் பயனாக டொனமூர் அறிக்கையில் இலங்கையின் உள்ளூராட்சி முறையின் அன்றைய நிலை பற்றிய முழுமையான ஆய்வு சேர்க்கப்பட்டிருந்தது. இலங்கையில் உள்ளூராட்சி முறை வேர் கொண்டிருந்தது என்பதும், அது சிறப்பாக இயங்கி வந்தது என்பதும் அறிக்கையில் எடுத்துக் காட்டப்பட்டது. அம்முறைமைக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும், உள்ளூராட்சி நிறுவனங்களில் வினைத்திறன் மிக்க ஆளணியை உருவாக்க வேண்டும், மக்களுக்குத் தேவையான சேவைகளை அந்நிறுவனங்களூடாக வழங்க வேண்டும் எனவும், உள்ளூராட்சி நிறுவனங்கள் மக்களின் வலுவாக்கத்திற்கு (Empowerment) உதவ முடியும் எனவும் ஆணைக்குழு கருத்துத் தெரிவித்தது. உள்ளூராட்சிக்குப் புத்துயிர் அளிப்பதற்கு மத்திய அரசாங்கத்தில் இருந்து உந்துதல் கிடைக்க வேண்டும் எனவும், மாகாணம், மாவட்டம், ஊர் என்ற சுற்றுவட்டத்தில் இருந்து தேவைகள், கோரிக்கைகள் மத்தியை நோக்கி வர வேண்டும் எனவும், அப்போதுதான் உள்ளூராட்சி (Local Government) மூலமான கூடிய வளர்ச்சி சாத்தியமாகும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

4. மாகாண சபைகள்

இலங்கையின் ஒன்பது மாகாணங்கள் ஒவ்வொன்றிலும், மாகாண சபைகள் (Provincial Councils) அமைக்கப்பட வேண்டும் என்பதற்குச் சாதகமான கருத்துடையவர்களாக டொனமூர் ஆணைக்குழுவினர் இருந்துள்ளனர். மாகாண சபைகள் அரசாங்கத்தை மக்களுக்குக் கிட்டியதாகக் கொண்டு செல்லக் கூடியவை. அவை பிராந்திய நிலையில் வினைத்திறனை அதிகரிக்கச் செய்யும்; பொறுப்புணர்ச்சியை வளர்க்கும் என ஆணைக்குழு கருதியது. குறிப்பாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் இனத்துவக் குழுக்கள் (Ethnic Groups) தத்தம் பகுதிகளின் அபிவிருத்தி, நிர்வாக நடவடிக்கைகளில் தலைமைப் பாகத்தை ஏற்க முடியும் எனவும் ஆணைக்குழு கருதியது. ஆயினும், மாகாண சபைகளை அமைப்பதா இல்லையா என்பதை புதிதாக உருவாக்கப்படவுள்ள உள்ளூராட்சி திணைக்களம் (New Department of Local Government) முடிவு செய்யும் என ஆணைக்குழு முடிவு செய்தது. இப்புதிய திணைக்களம் அரசுச் சபையின் நிர்வாகக் குழுவின் கீழ் இயங்கும் திணைக்களமாக இருக்கும். உள்ளூர் நிர்வாகத்திற்கு (Local Administration) பொறுப்பான அத்திணைக்களமே மாகாண சபைகள் பற்றிய முடிவை எடுத்தல் பொருத்தமானது எனவும் ஆணைக்குழு கருதியது.

புதிய உள்ளூராட்சி திணைக்களம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் எவையெவை என்பதை ஆணைக்குழு தனது அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருந்தது. அவ்விடயங்கள் இன்றுவரை விவாதத்திற்குரியனவாய் இருந்து வருவதைக் காணலாம். ஆணைக்குழு சுட்டிக் காட்டியனவும், இன்றும் விவாதிக்கப்படுபவையுமான இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம்.

அ. தேசிய சட்டசபையில் (மத்திய பாராளுமன்றத்தில்) உறுப்பினர்களாக உள்ளவர்கள் மாகாண சபைகளில் உறுப்பினர்களாக இருக்க வேண்டுமா? என்பது அவ்வாறான விடயங்களில் ஒன்று. 1980களில் மாவட்ட அபிவிருத்தி சபைகள் (District Development Councils) அமைக்கப்பட்ட போது இந்தப் பிரச்சினை எழுந்ததை இங்கு ஞாபகப்படுத்தலாம்.

ஆ. இரண்டாவதாக, உள்ளூராட்சி அரசாங்கத்திற்கும் (Local Government) மாகாண நிறுவனங்களுக்கும் (Provincial Institutions) இடையிலான பிணைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விடயம் 1995 முதலாக அரசியல் யாப்புத் திருத்தங்கள் பற்றிய விவாதங்களில் பேசுபொருளாக இருந்ததைக் குறிப்பிடலாம்.

5. பொதுச்சேவை, மொழி, உயர்குழுக்களின் வகிபாகம் ஆகியன

ஆணைக்குழுவின் அறிக்கையில் குடியியல் சேவையும், பொதுச் சேவைகளும் (Civil and Public Services) என்னும் விடயத்திற்கு தனியான அத்தியாயம் ஒதுக்கப்பட்டது. அவ்வத்தியாயத்தில் இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டிருந்தது. 1910 முதல் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களின் மூலம், சட்டசபையின் உறுப்பினர்களுக்கு நிர்வாக விடயங்கள் தொடர்பான அதிகாரங்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன. இதனால், சட்டசபை உறுப்பினர்கள் பொதுச்சேவை உத்தியோகத்தர்களின் நிர்வாக அலுவல்களில் தலையிடும் நிலை தோன்றியது. இது பொறுப்பு இல்லாத அதிகாரமாகவும் (Power without Responsibility), விரும்பத்தகாத தலையீடாகவும் கருதப்பட்டது. டொனமூர் ஆணைக்குழு இந்தக் குறைபாடு பற்றிக் கவனம் செலுத்தியது. அப்போது ஆணைக்குழு நாட்டின் உயர்தரத்து உத்தியோகத்தர்களைக் கொண்ட சிவில் சேவை (Civil Service), அதன் கீழ் அமைந்த எழுதுவினைஞர் சேவை (Clerical Service) என்ற இரண்டினைப் பற்றியும் ஆராய்ந்து, இவ்விரு சேவைகளின் செயலூக்கத்தை உயர்த்துதல், வேலைப் பாதுகாப்பு, வேலைச் சூழல், சம்பளம் (Morale, Job Security, Work Conditions, and Salaries) என்பன பற்றிப் பல சிபார்சுகளைச் செய்தது. அத்தோடு இவ்விரு சேவைகளுக்குமுரிய ஆளணியின் நியமனம், ஆட்சேர்ப்புக் கொள்கை, பதவி உயர்வு, உதவிச் சேவைகள், ஒழுக்கக் கட்டுப்பாடு (Appointment, Recruitment Policy, Promotions, Support Services and Disciplinary Control) ஆகிய விடயங்களில் ஆளுநருக்கு ஆலோசனை கூறக் கூடிய பொதுச்சேவை ஆணைக்குழு (Public Service Commission) ஒன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு சிபார்சு செய்திருந்தது.

டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையில் கிராமத் தலைமைக்காரர் (Headman) பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தமை கவனிப்புக்குரியது (இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் மாவட்ட மட்டத்தில் நிர்வாக அதிகாரம் உடையவர்களாகச் செயற்பட்ட ரட்டே மஹாத்தயா, முதலியார், மணியகாரன், முகாந்திரம் ஆகிய பதவி நிலையினரையே கிராமத் தலைமைக்காரர் என்ற சொல் குறித்து நிற்கிறது). இப்பதவி நிலையினரின் செயலாற்றலையும் (Capacity), வினைத்திறனையும் உயர்த்துவதன் மூலம் கிராமத் தலைமைக்காரர் சேவையில் ‘Professionalism’ என்னும் தொழில்வாண்மைத் தகைமையை மேம்படுத்த வேண்டும் என ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. இச்சேவைக்கு சிவில் சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கலாம் அல்லது உயர்தரமான பாடசாலைகளில் கற்றவர்களை நியமிக்கலாம் என ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

ஆங்கில மொழி மூலக் கல்வியை வழங்கும் பாடசாலைகளின் கல்வித்தரம் பாராட்டுதலுக்கு உரியதாக இருந்ததை ஆணைக்குழு குறிப்பிட்டது.

அக்காலத்தின் உயர்தரமான பாடசாலைகளில் (Elite Schools) படித்தவர்கள் மாவட்டங்களின் அரச அலுவலகங்களில் பணியாற்றினார். இவ்வுத்தியோகத்தர்களின் ஆங்கில மொழி அறிவு உயர்தரமானதாக இருந்ததைக் கண்டு ஆணைக்குழுவினர் திருப்தி வெளியிட்டனர். ஆனால், மாவட்டங்களில் வேலைசெய்யும் உத்தியோகத்தர்களில் பெரும் தொகையினர் தமது தாய்மொழியான சிங்களத்திலும், தமிழிலும் பேசவும், எழுதவும் முடியாதவர்களாக இருப்பதை அவதானித்த ஆணைக்குழுவினர் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். இது பெரும் குறைபாடு. உத்தியோகத்தர்கள் மக்களோடு அவர்களின் மொழிகளான சிங்களத்திலும், தமிழிலும் தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும் என்பதை ஆணைக்குழுவினர் தமது அறிக்கையில் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

6. அரசியல் கட்சிகள்

இலங்கையில் அரசியல் கட்சி முறை வளர்ச்சியடைந்திருக்கவில்லை என்ற குறைபாட்டை ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது. விருத்தியடைந்த அரசியல் கட்சிமுறைக்கும் (Developed Political Party System), பிரதிநிதித்துவ ஜனநாயக முறைக்கும் (Representative Democracy) இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டிய ஆணைக்குழு, பலகட்சி அரசியல் முறைமையின் (Multi-Party Political System) அவசியத்தை வலியுறுத்திக் கூறியது. இலங்கையில் (சிங்களவர், தமிழர் முதலிய) இனத்துவ அடையாள (Ethnic Identity) உணர்வு மிகையாக மேலோங்கி இருப்பதை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இப்பின்னணியில் அரசியல் கட்சிமுறை இலங்கையில் வளர்ச்சியடைந்தால், அக்கட்சிகளால் குறுகிய இனத்துவ அடையாளங்களைக் கடந்து தேசிய நோக்கில் செயற்பட முடியுமா என்ற ஐயத்தையும், வருத்தத்தையும் ஆணைக்குழு வெளியிட்டது.

“It (Donoughmore report) stated we can detect few signs to make us confident that parties, if and when formed, would owe their origin to economic or political differences in national policy rather than to racial or caste divisions.”

டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் மேற்படி கூற்று, ஆணைக்குழு இலங்கையின் அரசியல் யதார்த்த நிலையை (Political Reality) நன்கு புரிந்து கொண்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஆணைக்குழு வடிவமைத்த அரசியல் யாப்பு நிறுவனங்கள் மேற்படி புரிதலின்படி அமைந்தனவே எனலாம்.

முடிவுரை

மார்டின் வைற் (Martin Wight) எனும் அரசியல் ஆய்வாளர் எழுதிய ‘The Development of the Legislative Council 1906–1945’ (London) என்னும் நூலில் (பக். 94) டொனமூர் அறிக்கையை “The most remarkable state paper on colonial affairs of the twentieth century” எனக் குறிப்பிட்டிருந்தார். பிரித்தானிய அரசாங்கமும் டொனமூர் அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்ட பெரும்பாலான விடயங்களை ஏற்றுக்கொண்டது. ஆணைக்குழுவின் அறிக்கையிலும், அக்குழு வரைந்தளித்த அரசியல் யாப்பிலும் ஊடுருவிப் பரவியிருந்த மெய்யியல் பார்வை (Overall Philosophy) நவீன அரசியல் சிந்தனைகள் பலவற்றின் சிறப்பான கலவையாக இருந்தது. அந்த மெய்யியல் பார்வைக்கு முற்போக்கு – லிபரல் – புரட்சிகரச் சீர்திருத்தம் (Progressive – Liberal Radical Reform) என்ற இலக்கு மூலமாக இருந்தது. டொனமூர் ஆணைக்குழு முற்போக்கான லிபரல் ஜனநாயக அரசியல் நிறுவனங்களையும் நடைமுறைகளையும் இலங்கை அரசியலமைப்பில் புகுத்தியது. இலங்கை மக்களை ஆணைக்குழு அரசியல் அதிகாரம் மிக்கவர்களாக்குவதை (Empowering the People) நோக்கமாகக் கொண்டிருந்தது. இலங்கை அரசியலில் வேரோடியிருந்த பழமைவாதத்திற்குச் (Orthodoxy) சவால்விடுவதாக டொனமூர் அரசியல் யாப்பு அமைந்தது. ஆயினும் டொனமூர் ஆணைக்குழுவினர் இலங்கையின் பொதுச்சேவை (Public Service) போன்ற சில விடயங்களில் மேட்டிமைப் போக்கினை (Elitism) வெளிப்படுத்தினர்.

“In terms of the overall philosophy, which pervaded both the report and the constitution, it seemed to be influenced by a mix of progressive – liberal radical reform aimed at empowering the people and challenging the existing orthodoxy, but at the same time elitist with respect to institutions like the public service.”

டொனமூர் ஆணைக்குழு அக்காலத்தின் தமிழ் அரசியல் தலைவர்களால் எடுத்துச் சொல்லப்பட்ட பிரச்சினைகள் பலவற்றைப் பற்றிப் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. மேற்கு மாகாணத்தில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம், இலங்கைத் தேசிய காங்கிரசில் சிங்களத் தலைவர்களுக்கும், தமிழ்த் தலைவர்களுக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், சர்வசன வாக்குரிமையையும், பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தையும் நடைமுறைப்படுத்துவதால் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் செல்வாக்குக் குறைவடையும் என்பன அக்காலத்தின் முக்கியமான தமிழர் பிரச்சினைகளாகக் கருதப்பட்டன. டொனமூர் ஆணைக்குழு ‘சிலோன் தமிழ் லீக்’ (Ceylon Tamil League), அகில இலங்கைத் தமிழ் கொன்பெரன்ஸ் (All Ceylon Tamil Conference), யாழ்ப்பாணச் சங்கம் (Jaffna Association) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து மேற்குறித்த விடயங்கள் பற்றிக் கருத்துகளைக் கேட்டறிந்தது. சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களைப் பல தடவைகள் சந்தித்து உரையாடியது. அதேபோல் K. பாலசிங்கம் அவர்களையும் சந்தித்து உரையாடியது. ஆணைக்குழுவினர் யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் பல நாட்கள் தங்கியிருந்து மக்களுடன் சந்திப்புகளை நடத்தினர். அப்பகுதிகளின் அமைப்புகளுடனும் சந்திப்புகளை நடத்தினர்.

டொனமூர் ஆணைக்குழு தமிழர்களைச் சலுகைகள் பெற்ற சிறுபான்மை (Privileged Minority) என்று கருதியது என்று கூறுவோர் உள்ளனர். ஆணைக்குழு இலங்கையில் இனவாதம் என்ற புற்றுநோயினை (Cancer of Communalism) ஒழிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்ததால் அடையாள அரசியல் (Identity Based Politics) பற்றி சாதகமான அல்லது அனுதாபம் உடைய முறையில் நோக்கவில்லை எனலாம். ஆயினும் இலங்கைத் தமிழர்களை பல சிறுபான்மை இனக்குழுக்களில் ஒன்றாக (One of Many Minority Groups) அடையாளம் காண ஆணைக்குழு தவறவில்லை.

இக்கட்டுரை ‘Power Sharing in Sri Lanka Constitutional and Political Documents 1926–2008’ என்னும் தொகுப்பு நூலில் டொனமூர் அரசியல் யாப்புக் குறித்து எழுதப்பட்ட முன்னுரையை (Introduction, Chapter 2) ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்டுள்ளது.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்