எழுநா, ஈழம் தொடர்பாகவும் அது குறித்த அறிவார்ந்த கற்கைகள் தொடர்பாகவும் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை, 'ஈழக்கற்கைகள்' என வரையறுத்துக்கொண்டு செயற்பட்டுவரும் ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாகும். அந்தவகையில் ஈழம் சார்ந்து, அதன் வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், பொருண்மியம், சூழலியல், அபிவிருத்தி, சட்டம் போன்ற தளங்களில் ஆய்வுப்பணிகளை உருவாக்குவதிலும், மேற்கொள்வதிலும், அவற்றினூடான அறிவுத் திரட்சியைப் பரவலாக்குவதிலும், முதன்மை நாட்டம் கொண்டு இயங்கி வருகிறது. இவை தொடர்பாக பல்வேறு புலமையாளர்களால் மேற்குறிப்பிட்ட துறைகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள, தமிழிலும் பிற மொழிகளிலும் பதிவு செய்யப்பட்ட ஈழம் சார்ந்த ஆய்வுகள், கோட்பாட்டு உருவாக்கங்கள், வரலாறுகள், வழிகாட்டற் குறிப்புகள் என்பவற்றைத் தமிழ்மொழியில் ஒன்றாகத் தொகுப்பதையும், அவை தொடர்பான வெவ்வேறு வகையான கருத்து நிலைகள், மேலதிகமான புதிய சிந்தனைகள், பார்வைக் கோணங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்ற புதிய ஆய்வுகள், கருத்துரைப்புகள், சிந்தனை ஓட்டங்கள் என்பவற்றை உரையாடல் மூலமாகப் பரவலாக்குவதன் ஊடாக, ஒரு பலமான அறிவுத் திரட்சியை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இது செயற்பட்டு வருகிறது.



