2.2.1.2 கரிப்பட்டமுறிப்பு சமநிலை நீர்த்தேக்கத் திட்டம்
கருப்பட்ட முறிப்பு நீர்த்தேக்கத்தின் கட்டுமானத்தின் மூலம் இரணைமடு வெள்ளக் கட்டுப்பாடு, நீர்வளப் பாதுகாப்பு மற்றும் வடக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த தீர்வு பெற்றுக் கொள்ளப்படும்.
2.2.1.2.1. திட்டத்தின் அவசியமும் பின்னணியும்
வடக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் விவசாய வளர்ச்சியில் நீர்வளம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. வறண்ட வலயத்தில் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் மழைவீழ்ச்சி காலநிலை சார்ந்ததாகவும், ஆண்டின் சில மாதங்களில் மட்டுமே அதிக மழை கிடைப்பதாகவும் இருப்பதால், கிடைக்கும் நீரை முறையாகச் சேமித்து, தேவைக்கேற்ப பயன்படுத்துவது மிக அவசியமாகும்.
வவுனியா மாவட்டத்தில் தோன்றி முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் வழியாகப் பாயும் கனகராயன் ஆறு, வடக்கு மாகாணத்தின் முக்கியமான ஆற்றுப்படுகைகளில் ஒன்றாகும். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அபாயம் அதிகம் காணப்படும் ஆற்றுப்படுகையாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், கனகராயன் ஆற்றை மையமாகக் கொண்டு முன்மொழியப்பட்டுள்ள கரிப்பட்டமுறிப்பு சமநிலை நீர்த்தேக்கத் திட்டம், வெள்ளக் கட்டுப்பாடு, பாசன நீர் மேலாண்மை, குடிநீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தழுவிக் கொள்ளும் திறனை மேம்படுத்தும் ஒரு பன்முக அபிவிருத்தித் திட்டமாகக் கருதப்படுகிறது.
2.2.1.2.2. கனகராயன் ஆற்றுப்படுகையின் புவியியல் மற்றும் நீரியல் அமைப்பு
கனகராயன் ஆறு வட இலங்கையின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும். இது வவுனியா மாவட்டத்தில் தோன்றி முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் வழியாகச் சுமார் 86 கிலோமீற்றர் தூரம் பாய்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீர்ப்பிடிப்புப் பரப்பு சுமார் 906 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இந்த நீர்ப்பிடிப்புப் பகுதி மூன்று மாவட்டங்களிலும் பரவிக் காணப்படுவதால், இதன் நீர்வள முகாமைத்துவம் பிராந்திய ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

கனகராயன் ஆறு
கனகராயன் ஆற்றுப்படுகையிலிருந்து பல்வேறு பாசனத் திட்டங்கள் நீரைப் பெறுகின்றன. கனகராயன் ஆற்றின் நீர் பின்வரும் முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஆதாரமாக உள்ளது
- கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு என்ற ஒரு பெரிய நீர்த்தேக்கம், கனகாம்பிகைக்குளம் என்ற ஒரு நடுத்தர நீர்த்தேக்கம், 23 சிறிய குளங்கள்.
- வவுனியா மாவட்டத்தில் செம்மடு, கனகராயன்குளம் மற்றும் மாளிகைக்குளம் ஆகிய மூன்று நடுத்தர நீர்த்தேக்கங்கள், 69 சிறிய குளங்கள்.
- முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 சிறிய குளங்கள்.
இதன் மூலம், கனகராயன் ஆறு ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், பிரதேச மக்களின் குடிநீர் தேவைகளையும் மறைமுகமாக ஆதரித்து வருகின்றது.
கனகராயன் ஆற்றுப்படுகை வறண்ட வலயத்திற்குள் அமைந்துள்ளது. இப்பகுதியின் வருடாந்திர சராசரி மழைவீழ்ச்சி சுமார் 1,200 மில்லிமீற்றர்கள் ஆகும். மழைப்பொழிவு இரண்டு முக்கிய பருவங்களாகக் காணப்படுகிறது.
- பிரதான மழைக்காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழையினால் ஏற்படுகிறது.
- இரண்டாம் நிலை மழைக்காலம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தென்மேற்கு பருவமழையினால் ஏற்படுகிறது.
இதனால், ஆண்டின் பெரும்பாலான காலங்களில் வறட்சி நிலவும் அதேவேளை குறுகிய காலத்தில் அதிகளவு நீர் கிடைக்கும் என்ற முரண்பாடான நிலை காணப்படுகிறது.
2.2.1.2.3. தற்போதைய நீர்வள முரண்பாடு
வடக்கு மாகாணத்தின் நீர்வள மேலாண்மையில் மிகவும் கவனிக்கத்தக்க முரண்பாடு ஒன்று நிலவுகிறது. ஒருபுறம், இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து ஆண்டுதோறும் சராசரியாக 56.65 மில்லியன் கனமீற்றர் நீர் மேலதிக நீராக வெளியேறி கடலில் கலக்கிறது. மற்றொரு புறம், வறட்சிக் காலங்களில்,
- சிறு போக நெற்செய்கைக்குப் போதிய நீர் கிடைப்பதில்லை
- குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு மூலநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது
- நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது
- விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகிறது
அதாவது, வெள்ளக்காலங்களில் அதிகப்படியான நீரும், வறட்சிக் காலங்களில் நீர்ப் பற்றாக்குறையும் ஒரே நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்படுகின்றன.
2.2.1.2.4. இரணைமடு வெள்ளப் பிரச்சினை
இரணைமடு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் கீழ்ப்பகுதிகளில் அடிக்கடி வெள்ள நிலையை உருவாக்குகிறது. இதனால் முரசுமோட்டை, பன்னங்கண்டி, கண்டாவளை, உரியான், வட்டக்கச்சி போன்ற பிரதேசங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்த வெள்ளப்பெருக்கினால்,
- வீடுகள் சேதமடைகின்றன
- பயிர்கள் அழிகின்றன
- வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைகின்றன
- அரசாங்கத்திற்கு மீளமைப்புச் செலவுகள் அதிகரிக்கின்றன
- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்திற்குப் பின்னர் நிவாரணம் மற்றும் புனரமைப்புக்காகப் பெருமளவு நிதியைச் செலவிட வேண்டிய நிலை உருவாகிறது.
2.2.1.2.5. திட்டத்தின் நோக்கம்
மேற்கண்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரிப்பட்டமுறிப்பு பகுதியில் கனகராயன் ஆற்றின் குறுக்கே ஒரு சமநிலை நீர்த்தேக்கம் (Balancing Reservoir) அமைப்பது முன்மொழியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
- இரணைமடு நீர்த்தேக்கத்தின் மேலதிக நீரால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை குறைத்தல்.
- பருவ விவசாயத்திற்கான நீர்ப் பற்றாக்குறையைக் குறைத்தல்.
- யாழ், கிளிநொச்சி, மாங்குளம் மற்றும் வவுனியா வடக்குப் பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கல் திட்டத்திற்குத் தேவையான மூலநீரை உறுதிப்படுத்தல்.
- கடலுக்குள் வீணாகச் செல்லும் நீரைப் பயனுள்ள முறையில் சேமித்துப் பயன்படுத்துதல்.

கரிப்பட்டமுறிப்பு அணைக்கான களஆய்வின் போது
2.2.1.2.6. திட்டத்தின் தொழில்நுட்ப அடிப்படை
முன்னதாக வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, ஆண்டுதோறும் கணிசமான அளவு நீர் எந்தவொரு பயன்பாடும் இன்றிக் கடலுக்குள் கலக்கிறது. நீரியல் சமநிலை (Water Balance) ஆய்வின் படி,
- மொத்த ஓட்ட அளவு – 374.07 MCM
- கடலுக்குள் செல்லும் நீர் – 171.2 MCM
- இரணைமடுவிலிருந்து வெளியேறும் உபரி நீர் – 56.65 MCM
என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கரிப்பட்டமுறிப்பு பகுதியில் 30 முதல் 40 மில்லியன் கனமீற்றர் கொள்ளளவு கொண்ட சமநிலை நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. இந்நீர்த்தேக்கம் மேல்பகுதியில் அமைந்துள்ள செம்மடுக் குளம், கனகராயன்குளம் மற்றும் மாளிகைக்குளம் ஆகியவற்றிலிருந்து வரும் நீரைப் பெற்று, பின்னர் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள இரணைமடு மற்றும் சிறிய குளங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நீரை வழங்கும்.
2.2.1.2.7. கரிப்பட்டமுறிப்பு அமைவிடத்தின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பச் சிறப்பம்சங்கள்
கனகராயன் ஆற்றுப்படுகைக்குள் அமைந்துள்ள கரிப்பட்டமுறிப்பு பகுதியின் ஆரம்பகட்ட கள ஆய்வுகள், இப்பகுதி நீர்த்தேக்கத் திட்டத்தை அமைப்பதற்கு ஏற்ற நிலவியல் மற்றும் புவியியல் தன்மைகளைக் கொண்டுள்ளதாக வெளிப்படுத்துகின்றன. இப்பகுதியின் மிதமான சரிவுடைய நில அமைப்பு, இரணைமடு நீர்த்தேக்கத்தின் உபரி நீரை இயற்கை ஈர்ப்பு விசையின் மூலம் எளிதாக இப்பகுதிக்குக் கொண்டு செல்லும் வசதியை வழங்குகிறது. மேலும், இப்பகுதியில் காணப்படும் மண் வகைகள் மிதமான நீர் சுரக்கும் திறனைக் கொண்டிருப்பதால், நிலத்தடி நீர் மீள்நிரப்பத்திற்கும் (Groundwater Recharge) சாதகமான சூழலை உருவாக்குகின்றன. இயற்கையான நீர்ப்பிடிப்புப் பிரதேசத்திற்குள் அமைந்திருப்பதன் காரணமாக, வெள்ளநீரைச் சேகரித்து பருவகாலத் தேவைகளுக்காக சேமித்து வைக்கும் சிறந்த இடமாகவும் கரிப்பட்டமுறிப்பு விளங்குகிறது.
சுற்றுச்சூழல் நோக்கில், இப்பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படுவதன் மூலம் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல், மண்ணின் ஈரப்பதத்தை அதிகரித்தல், மற்றும் ஈரநிலச் சூழலமைப்புகளுக்குரிய உயிர்ப்பன்மைத்துவத்தை (Wetland Biodiversity) மேம்படுத்துதல் போன்ற பல நன்மைகள் ஏற்படக்கூடும். மேலும், இத்திட்டத்தின் திட்டமிடல் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளை, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை (Central Environmental Authority – CEA) 2022 ஆம் ஆண்டில் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environmental Impact Assessment – EIA) வழிகாட்டுதல்களுக்கு அமைவாக மேற்கொள்வதன் மூலம், தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த முடியும்.
2.2.1.2.8. அரசாங்கக் கொள்கைகளுடன் ஒத்திசைவு
ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தத் திட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் நேரடியாக தொடர்புடையதாகும். குறிப்பாக,
- SDG 2 – உணவுப் பாதுகாப்பு
- SDG 6 – தூய்மையான நீரும் சுகாதார வசதிகளும்
- SDG 13 – காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள்
- SDG 15 – நிலவள மற்றும் சூழலியல் பாதுகாப்பு
ஆகிய இலக்குகளை அடைவதில் இத்திட்டம் முக்கிய நேரடிப் பங்களிப்பை வழங்கும்.
2.2.1.2.9. சுற்றுச்சூழல் தாக்கங்கள்
கரிப்பட்டமுறிப்பு பகுதியில் நீர்த்தேக்கம் அமைப்பதற்காக சில வனப்பகுதிகள் அகற்றப்பட வேண்டிய நிலை உருவாகலாம். ஆனால், நீர்த்தேக்கத்தின் உருவாக்கத்தால்,
- நிலத்தடி நீர் நிரப்பம் அதிகரித்தல்
- உயிரியல் பல்வகைமையின் மேம்பாடு
- சுற்றுச்சூழல் சமநிலையின் முன்னேற்றம்
- வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரித்தல்
போன்ற பல சாதகமான விளைவுகள் ஏற்படும். வன அழிப்பால் ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்ய மாற்று இடங்களில் மீள்காடுபடுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
2.2.1.2.10. சமூக-அரசியல் இயக்கவியல் மற்றும் நிர்வாகக் கொள்கைகள்
வட மாகாணத்தில் நீர்வள முகாமைத்துவம் என்பது இன-அரசியல் உணர்வுகள், போருக்குப் பிந்தைய மீள்குடியேற்றச் சூழ்நிலைகள் மற்றும் வளங்களுக்கிடையேயான போட்டி போன்ற காரணிகளால் மிகவும் உணர்வுபூர்வமான விடயமாகக் காணப்படுகிறது. இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நீர் மாற்றுத் திட்டம் தொழில்நுட்ப ரீதியாக நியாயப்படுத்தப்பட்டிருந்தாலும், கிளிநொச்சி மாவட்ட விவசாய சமூகங்களிடையே பாசன நீர்ப் பாதுகாப்பு தொடர்பான அச்சங்களையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரிப்பட்டமுறிப்பு நீர்த்தேக்கத் திட்டம் மூலம் இரணைமடுவின் உபரி நீரை உள்ளூரிலேயே சேமிப்பது, பிராந்திய நீர்வளத் தன்னாட்சியை வலுப்படுத்துவதுடன், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு இடையில் மோதல் உணர்வுகளைக் குறைக்கும் சமநிலையான தீர்வாகவும் அமைகிறது. மேலும், உள்நாட்டு மீன்பிடி, தோட்டப் பயிர்ச்செய்கை மற்றும் நீர்த்தேக்கப் பராமரிப்புடன் தொடர்புடைய பருவகால வேலைவாய்ப்புகள் போன்ற பல்வேறு வாழ்வாதார வாய்ப்புகளையும் இது உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இத்திட்டம், பல்துறை ஒருங்கிணைப்பு, காலநிலை மாற்றத் தாங்குதிறன் மற்றும் சமூகப் பங்கேற்பை வலியுறுத்தும் இலங்கையின் தேசிய ஒருங்கிணைந்த நீர்வள முகாமைத்துவ (IWRM) மூலோபாயத்துடனும் வட மாகாண அபிவிருத்திச் சட்டகத்துடனும் நன்கு ஒத்திசைவுடையதாகும்.
2.2.1.2.11. ஒருங்கிணைந்த அபிவிருத்திக் கண்ணோட்டம்
முன்மொழியப்படும் கரிப்பட்டமுறிப்பு நீர்த்தேக்கம் ஒரு பொறியியல் கட்டமைப்பாக மட்டுமன்றி, பல்வேறு மட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த அபிவிருத்தித் தீர்வாகவும் கருதப்படுகிறது. பருவமழைக் காலங்களில் ஏற்படும் உபரி நீரை சேகரித்து மீளப் பகிர்ந்தளிப்பதன் மூலம் நீரியல் சமநிலையைப் பேணுவதற்கும், மேம்பட்ட பாசன வசதிகள், நீர்வளப் போட்டிகளின் குறைவு மற்றும் பல்வகை வாழ்வாதார வாய்ப்புகள் மூலம் சமூக-பொருளாதாரத் தாங்குதிறனை வலுப்படுத்துவதற்கும் இத்திட்டம் உதவும். அதேவேளை, நிலத்தடி நீர் மீள்நிரப்பம், உயிர்ப்பன்மைத்துவப் பாதுகாப்பு மற்றும் மண்-நீர் தாங்குதிறன் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மீளுருவாக்கத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இதன் அடிப்படைக் கருத்தியல், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB, 2021) முன்னிறுத்தும் தாங்குதிறன் சார்ந்த அபிவிருத்திச் சட்டகத்துடனும், வறண்ட வலய நீர்வள முகாமைத்துவத்தில் இயற்கை சார்ந்த மற்றும் அதிகாரப் பரவலாக்கப்பட்ட தீர்வுகளை வலியுறுத்தும் பல அறிஞர்களின் ஆய்வுக் கருத்துகளுடனும் இணக்கமானதாக அமைந்துள்ளது.
2.2.1.2.12. முடிவுரை
கரிப்பட்டமுறிப்பு சமநிலை நீர்த்தேக்கத் திட்டம் என்பது வெள்ளத்தைத் தடுக்கும் ஒரு பொறியியல் கட்டுமானத் திட்டம் மட்டுமல்ல. அது வடக்கு மாகாணத்தின் எதிர்கால நீர்வளப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், விவசாய உற்பத்தியை உயர்த்தும், குடிநீர் தேவையை நிலைநிறுத்தும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைக்கும் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு மூலோபாய தேசிய முதலீட்டுத் திட்டமாகும்.
கடலுக்குள் வீணாகச் செல்லும் உபரி நீரைப் பயனுள்ள முறையில் சேமித்து பயன்படுத்துவதன் மூலம், இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர் பயன்பாட்டுத் திறன் மேம்படுத்தப்படும். அத்துடன், காலநிலை மாற்றத்தால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நீடித்த மற்றும் நிலையான நீர்வள முகாமைத்துவத்திற்கான முக்கிய முதலீடாகவும் இத்திட்டம் அமையும்.
கரிப்பட்டமுறிப்பில் சமநிலை நீர்த்தேக்கமொன்றை அமைப்பதற்கான முன்மொழிவு, இலங்கையின் வட மாகாணத்தில் நீர்வள முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான அறிவியல் அடிப்படையிலான, சுற்றுச்சூழல் உணர்வுள்ள மற்றும் தேசிய கொள்கைகளால் ஆதரிக்கப்படும் ஒரு வலுவான தலையீடாகக் கருதப்படுகிறது. நீர்த்தேக்கத் தொடர் (Cascade) நீரியல் கோட்பாடுகளின் அடிப்படையிலும், கலாநிதி எஸ். சிவகுமார் முன்வைத்த நீர்வரத்து (Yield) அடிப்படையிலான திட்டமிடல் அணுகுமுறையின் வழிகாட்டுதலின்படியும், வட மாகாணத்தின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் யதார்த்தங்களுடன் ஒத்திசைவாகவும் இம்முன்மொழிவு வடிவமைக்கப்பட்டுள்ளது. பருவகால நீர்வள ஏற்றத்தாழ்வுகள், உபரி நீர் வீணாகக் கடலுக்குச் செல்லுதல் மற்றும் பிராந்தியங்களுக்கிடையிலான நீர்வள சமநிலையின்மை போன்ற சவால்களுக்குத் தீர்வு காணக்கூடிய, பிற பகுதிகளிலும் பின்பற்றத்தக்க மாதிரியாக இது விளங்குகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடைந்து, ஒற்றை மூலத்தை அடிப்படையாகக் கொண்ட நீர்வள அமைப்புகள் மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், பல்நோக்கங்களைக் கொண்ட, அதிகாரப் பரவலாக்கப்பட்ட மற்றும் பிராந்திய அடிப்படையிலான நீர் சேமிப்பு அமைப்புகள் இலங்கையின் எதிர்கால நீர்வளப் பாதுகாப்பிற்கும் நிலையான அபிவிருத்திக்கும் இன்றியமையாத கூறுகளாக உருவெடுக்கும் என்பது தெளிவாகிறது.
எனவே, இந்தத் திட்டம் தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சமூக ரீதியாக உயர் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஓர் ஒருங்கிணைந்த நீர்வள அபிவிருத்தித் திட்டமாகக் கருதப்பட வேண்டும்.
தொடரும்.



