வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் - பகுதி 6
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
22 நிமிட வாசிப்பு

வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 6

October 13, 2026 | Ezhuna

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பெரும்பாலும் வறண்ட மற்றும் அரை வறண்ட காலநிலைச் சூழலுக்குட்பட்ட பகுதிகளாகும். இப்பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகைகள் (River Basins) நீர் வளங்களின் முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன. இவை குடிநீர், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தொழில் மற்றும் சூழலியல் சமநிலைக்கான ஆதாரங்களாகவும் உள்ளன. முரண்பாடுகள், நிலவளப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், காடழிப்பு, கட்டுப்பாடற்ற மணல் அகழ்வு, நிலத்தடி நீரின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இவ்வாற்றுப் படுகைகளின் நீரியல் சமநிலையைப் பாதித்துள்ளன. எனவே, இவற்றின் தற்போதைய நிலையை அறிவியல் மற்றும் தரவுசார்ந்த முறையில் ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய திறம்பட்ட பயன்பாட்டிற்கான வழிமுறைகளை முன்வைப்பது கட்டாயமானதாகும். ‘வடக்கு – கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் நீர்வள இருப்பும் பயன்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மூலோபாயங்களும்’ எனும் இக்கட்டுரைத் தொடர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து ஆற்றுப்படுகைகளையும் ஒருங்கிணைந்த முறையில் ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நீர் வளத்தின் திறம்பட்ட பயன்பாட்டையும் சமநிலைப்படுத்தும் வழிமுறைகளை முன்வைக்கும். இது நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் கொள்கை அடிப்படையிலான வழிகாட்டி ஆவணமாகவும் அமையும்.

2.2.1.5 மலிகைக் குளம் (Malikai Kulam)

மலிகைக் குளம் (Malikai Kulam) கனகராயன் ஆற்றுப் படுகையின் கீழ் அமைந்துள்ள முக்கியமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இக்குளம் வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மலிகை கிராமத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி வடக்கு வறண்ட வலயத்தின் நீர்வள மேலாண்மை, வேளாண்மை மற்றும் கிராமிய வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையதாகும்.

மலிகைக் குளத்தை அடைவதற்கு A9 பிரதான வீதியில் ஓமந்தைச் சந்திப்பை நோக்கிச் சென்று, சுமார் 190.5 கி.மீ. மைல் கல்லுக்கு அருகில் வலதுபுறமாக நாவற்குளம் (Navatkulam) வீதியில் திரும்ப வேண்டும். அங்கிருந்து சுமார் 5 கி.மீ. பயணித்த பின்னர் இடதுபுறமாக மலிகை அணுகல் வீதியில் திரும்பி, மேலும் சுமார் 8 கி.மீ. பயணித்தால் மலிகைக் குளத்தை அடைய முடியும். இவ்வணுகல் பாதை, குளத்தைச் சுற்றியுள்ள விவசாயக் குடியிருப்புகளுக்கும் பயனாளிக் குடும்பங்களுக்கும் முக்கியமான போக்குவரத்து இணைப்பாகவும் விளங்குகிறது.

வரலாற்றுப் பின்னணியும் குளத்தின் வளர்ச்சியும்

தற்போது காணப்படும் மலிகைக் குளம் 1950களின் இறுதிப் பகுதியில் புனரமைக்கப்பட்டதாகும். குளத்தின் இடதுகரை, வலதுகரை பிரதான கால்வாய் அமைப்புகள் மூலம் பாசன நீர் விநியோகிக்கப்பட்டு, சுமார் 220 ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் பயன்பெறும் வகையில் இக்குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் நீர்ப்பிடிப்புப் பரப்பளவு சுமார் 2.45 சதுர மைல்கள் ஆகவும், மொத்த நீர்த்தேக்கக் கொள்ளளவு சுமார் 815 ஏக்கர் அடி (ac.ft.) ஆகவும் உள்ளது.

மலிகைக் குளத்தின் முக்கியத்துவம் அதன் நீர்த்தேக்கத் திறனில் மட்டுமன்றி, கனகராயன் ஆற்றுப் படுகையில் உள்ள சிறிய, நடுத்தர நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுடன் இணைந்து பிராந்திய நீர்வளத்தைச் சேமித்து, வேளாண்மை உற்பத்தியைத் தொடர்ச்சியாகப் பேணுவதிலும் அமைந்துள்ளது. குறிப்பாக வறண்ட வலயப் பகுதிகளில் பருவமழையை அடிப்படையாகக் கொண்ட நீர்வளத்தைச் சேமித்து, தேவைக்கேற்பப் பகிர்ந்தளிப்பது உணவுப் பாதுகாப்புக்கும் கிராமிய வாழ்வாதாரத்திற்கும் இன்றியமையாததாகும்.

மோதல் காலத்தின் தாக்கமும் மக்கள் இடப்பெயர்வும்

இப்பகுதியில் நீண்டகாலமாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக, மக்கள் தமது வழக்கமான விவசாய நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைத்தனர். பின்னர், பாதுகாப்பற்ற சூழ்நிலை, மக்கள் இடப்பெயர்வு காரணமாக, விவசாய நிலங்களும் பாசனக் கட்டமைப்புகளும் பெருமளவில் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டன. இதன் விளைவாக மலிகைக் குளத்தைச் சார்ந்திருந்த வேளாண்மை நடவடிக்கைகள் கணிசமாகப் பாதிக்கப்பட்டதுடன், குளத்தின் பாசனக் கட்டமைப்புகளின் பராமரிப்பும் நீண்டகாலமாகத் தடைப்பட்டது.

2010ஆம் ஆண்டின் தொடக்க காலப்பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, தமது சொந்தப் பகுதிகளுக்குத் திரும்பிய மக்கள் மிகவும் குறைந்த வளங்களுடனேயே வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விவசாயமே அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த போதிலும், பாசன வசதிகள் முறையாகச் செயல்படாத காரணத்தால் நிலங்களை மீண்டும் உற்பத்திக்குக் கொண்டுவருவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். எனவே, மீள்குடியேற்றத்துடன் இணைந்த வகையில் பாசனக் கட்டமைப்புகளை அவசரமாகப் புனரமைப்பது இப்பகுதியின் பொருளாதார மீட்சிக்கு அடிப்படைத் தேவையாக அமைந்தது.

பாசனக் கட்டமைப்பின் சீரழிவு

மோதல் காலத்திற்குப் பின்னர் மலிகைக் குளத்தின் அணைக்கட்டு, பெரும்பாலான பாசனக் கட்டமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. அணைக்கட்டின் சில பகுதிகள் பலவீனமடைந்திருந்ததுடன், நீர்வாய்கள், கால்வாய்கள், அவற்றுடன் தொடர்புடைய கட்டமைப்புகளும் முறையான பராமரிப்பின்மையால் சீரழிந்திருந்தன. கட்டுப்பாடற்ற நீர் இயக்கம், கால்வாய் அமைப்புகளின் சேதம் காரணமாக பாசன நீர் இழப்புகள் அதிகரித்தன. இதனால் குளத்தில் சேமிக்கப்பட்ட நீரை திறம்படப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதுடன், குறிப்பாக நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் கணிசமான விவசாய நிலப்பரப்புகள் பாசன வசதியின்றிப் பாதிக்கப்படும் அபாயமும் நிலவியது.

இந்நிலையில், குளத்தின் புனரமைப்பு என்பது வெறுமனே பழுதுபார்க்கும் பணியாக அல்லாமல், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் ஒரு முக்கியமான நீர்வள அபிவிருத்தி நடவடிக்கையாகவும் கருதப்பட்டது.

‘CAREP’ திட்டத்தின் கீழான அவசரப் புனரமைப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank – ADB) நிதியுதவி – தலையீட்டின் கீழ், ‘Conflict Affected Region Emergency Project’ (CAREP) திட்டத்தின் மூலம் மலிகைக் குளத்தின் அவசரப் புனரமைப்பு 2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இப்புனரமைப்பிற்காக சுமார் ரூ. 35 மில்லியன் செலவிடப்பட்டது. இந்நிதியீடு, நீண்டகாலமாகச் செயலிழந்திருந்த பாசன அமைப்பை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கும், மீள்குடியேற்றப்பட்ட விவசாயக் குடும்பங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கியது.

புனரமைப்பின் ஒரு பகுதியாக, அணைக்கட்டு அதன் நிர்ணயிக்கப்பட்ட வடிவமைப்பு மட்டத்திற்கு வலுப்படுத்தப்பட்டது. குளத்தின் இரு நீர்வாய்களும் (Sluices) பழுதுபார்க்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. மேலும், விவசாயிகளின் அன்றாடத் தேவைகளையும் சுகாதார வசதிகளையும் கருத்தில் கொண்டு இரண்டு குளியல் படித்துறைகளும் அமைக்கப்பட்டன. பிரதான, கிளைக் கால்வாய் அமைப்புகளும் புனரமைக்கப்பட்டதுடன், தேவையான இடங்களில் கால்வாய் உட்புறப் பூச்சு அல்லது ‘கொங்கிரீட் லைனிங்’, நீர்க்கட்டுப்பாட்டு, குறுக்குக் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பாசனக் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டன.

புனரமைப்பிற்குப் பின்னரான பாசனப் பயன்கள்

மலிகைக் குளத்தின் புனரமைப்பிற்குப் பின்னர், மகா பருவத்தில் 220 ஏக்கர் நெல் சாகுபடிக்கும், யாலா பருவத்தில் சுமார் 40 சதவீத உறுதியான பாசன வசதியுடன் 88 ஏக்கர் வரையிலான சாகுபடிக்கும் நீர் வழங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் முன்னர் கைவிடப்பட்டிருந்த விவசாய நடவடிக்கைகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய விவசாயக் குடும்பங்கள் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் வலுப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் நேரடிப் பயனாளிகளாக ஏற்கனவே தமது சொந்தப் பகுதிகளுக்குத் திரும்பி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 68 விவசாயக் குடும்பங்கள் காணப்படுகின்றன. பாசன நீர் கிடைப்பதன் மூலம் பயிரிடப்படும் நிலப்பரப்பு அதிகரிப்பதுடன், விவசாய உற்பத்தி, குடும்ப வருமானம், பிராந்தியப் பொருளாதார நடவடிக்கைகளும் மேம்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

வேளாண்மை அல்லாத நீர்ப்பயன்பாடும் நிலத்தடி நீர் வளமும்

மலிகைக் குளத்தின் நீர்வளத்தை முழுமையாக வேளாண்மைக்காக மட்டுமே பயன்படுத்தாமல், நீரியல் சமநிலையைப் பாதுகாத்துக்கொண்டு, வரையறுக்கப்பட்ட அளவில் வேளாண்மை அல்லாத பயன்பாடுகளுக்கும் ஒதுக்குவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது. மேற்கொள்ளப்பட்ட நீர்ச்சமநிலை ஆய்வின் அடிப்படையில், மாதத்திற்கு சுமார் 64 ஏக்கர் அடி (ac.ft.) நீரை வேளாண்மை அல்லாத தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. இத்தகைய பயன்பாடு, குளத்தின் பாதுகாப்பான இயக்க மட்டத்தையும் வேளாண்மைத் தேவைகளையும் பாதிக்காத வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், குளத்தில் நீர் சேமிப்பு, கட்டுப்படுத்தப்பட்ட பாசன விநியோகம் தொடர்ச்சியாக நடைபெறுவது, இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை ஒப்பீட்டளவில் உயர்ந்த நிலையில் பராமரிக்க உதவும். குறிப்பாக வறண்ட வலயங்களில் மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர் ஆகிய இரு வளங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதால், குள நீர் சேமிப்பு, பாசன நீர் ஊடுருவல், நிலத்தடி நீர் மீள்நிரப்பு ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் அணுகுவது நீண்டகால நீர்வளப் பாதுகாப்பிற்கு முக்கியமானதாகும்.

நீர்ச்சமநிலை ஆய்வும் பரிந்துரைக்கப்பட்ட இயக்கத் திட்டமும்

மலிகைக் குளத்தின் நீர்வளப் பயன்பாட்டுத் திறன், பாசன முகாமைத்துவச் செயற்பாடுகளை அறிவியல் அடிப்படையில் மதிப்பிடுவதற்காக, கட்டுரையாளரின் ‘Northern River Basins Yield Study for Operational Policy of Irrigation Schemes & Water Resources and Agriculture Development Strategy for North – 2020 – 2035’ என்னும் நூலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொள்கைகள், நீர்வரத்து (Yield) அடிப்படையிலான திட்டமிடல் மூலோபாயங்களுடன் ஒத்திசைவாக விரிவான நீர்ச் சமநிலை (Water Balance) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்விற்குத் தேவையான நீரியல் தரவுகள் (Hydrological Data), பரப்பு–கொள்ளளவு (Area-Capacity) தொடர்பான தகவல்கள் வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டன. இத்தரவுகள் தொகுக்கப்பட்டு, நீர்த்தேக்கத்தின் சேமிப்புத் திறன், நீர்வரத்து, பாசனத் தேவைகள், நீர்ப் பயன்பாட்டு முறை ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. அதன் விவரம் கீழே உள்ள உருவில் தரப்பட்டுள்ளது.

நீர்ச்சமநிலை ஆய்வு, குளத்தின் சேமிப்பு நீரைப் பாதுகாப்பான இயக்க மட்டத்தில் பராமரித்துக்கொண்டு, மகா மற்றும் யாலா ஆகிய இரு பருவங்களிலும் திட்டமிடப்பட்ட விவசாயப் பரப்புகளுக்கு பாசன வசதி வழங்குவதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்துகிறது. அதேவேளை, வேளாண்மை அல்லாத நீர்த் தேவைகளுக்கும் வரையறுக்கப்பட்ட அளவில் நீரை ஒதுக்குவதற்கான வாய்ப்பு இருப்பதை இவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது.

நீர்ச்சமநிலை ஆய்வின் முக்கிய அளவுருக்கள்

மலிகைக் குளத்தின் பரிந்துரைக்கப்பட்ட நீர்ப்பாசன இயக்க முறையின் முக்கிய அளவுருக்கள் பின்வருமாறு:

அளவுருபரிந்துரை
குறைந்தபட்ச இயக்க நீர்மட்ட ஆழம்5 அடி
மகா பருவ நெல் சாகுபடி பரப்பளவு220 ஏக்கர்
மகா பருவப் பயிர்க் காலம்135 நாட்கள் – நெல்
யாலா பருவ நெல் சாகுபடி பரப்பளவு88 ஏக்கர்
யாலா பருவப் பயிர்க் காலம்105 நாட்கள் – நெல்
பயிர்த் தீவிரம் (Cropping Intensity)1.4
வேளாண்மை அல்லாத நீர்த்தேவை64 ஏக்கர் அடி/மாதம்

பேண்தகு நீர்வள மேலாண்மைக்கான முக்கியத்துவம்

மலிகைக் குளத்தின் அனுபவம், மோதலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் புனரமைப்பது எவ்வாறு சமூக, பொருளாதார மீட்சிக்கான அடிப்படைக் கருவியாகச் செயல்பட முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரு குளத்தின் அணைக்கட்டு, கால்வாய்களைப் புனரமைப்பது மட்டுமல்லாமல், கிடைக்கக்கூடிய நீரின் அளவு, பயிர் நீர்த்தேவை, பருவகால மழைப்பொழிவு, நிலத்தடி நீர் மீள்நிரப்பு, வேளாண்மை அல்லாத நீர்த்தேவைகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து நிர்வகிப்பதே பேண்தகு நீர்வளப் பயன்பாட்டின் அடிப்படையாகும்.

மலிகைக் குளத்தில் 220 ஏக்கர் மகா சாகுபடியையும், சுமார் 88 ஏக்கர் யாலா சாகுபடியையும் ஆதரிக்கும் வகையில் நீரைத் திட்டமிடுவது, குறைந்த நீரில் அதிக உற்பத்தியைப் பெறுவதற்கான நீர்வளத் திறன் அணுகுமுறைக்கு ஏற்ப அமைந்துள்ளது. அதேவேளை, குளத்தின் பாதுகாப்பான இயக்க மட்டத்தைப் பேணிக்கொண்டு 64 ஏக்கர் அடி/மாதம் வரையிலான வேளாண்மை அல்லாத நீர்த்தேவையைப் பரிசீலிப்பது, நீர்வளத்தை பல்நோக்குப் பயன்பாட்டிற்கு மாற்றியமைக்கும் வாய்ப்பையும் வெளிப்படுத்துகிறது.

எனவே, மலிகைக் குளத்தின் எதிர்கால நீர்வள மேலாண்மையில் ‘முதலில் குடிநீரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், அடுத்ததாக உணவுப் பாதுகாப்பிற்கான பாசனம், பின்னர் பொருளாதாரமும் பிற பயன்பாடுகளும்’ என்ற முன்னுரிமை அணுகுமுறையுடன் நீர்ச்சமநிலையை அடிப்படையாகக் கொண்ட இயக்கத் திட்டம் பின்பற்றப்பட வேண்டும். குளத்தின் சேமிப்பு நீர், பாசன விநியோகம், நிலத்தடி நீர் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன், ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப பயிரிடும் பரப்பளவும் நீர் ஒதுக்கீடும் சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறான ஒருங்கிணைந்த அணுகுமுறை மலிகைக் குளத்தை ஒரு பாரம்பரிய பாசன நீர்த்தேக்கமாக மட்டுமன்றி, விவசாய உற்பத்தி, மீள்குடியேற்ற வாழ்வாதாரம், பிராந்திய பொருளாதார வளர்ச்சி, நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பேண்தகு நீர்வளக் கட்டமைப்பாக மாற்றுவதற்கு உதவும்.

மலிகைக் குளத்தின் நீர்ச்சமநிலை (Water Balance) ஆய்வு

2.2.1.6 செம்மாமடு குளம் (Chemamadhu Kulam)

அமைவிடமும் பெயரின் தோற்றமும்

செம்மாமடு குளம் (Chemamadhu Kulam) கனகராயன் ஆற்றின் மேற்பகுதியில் அமைந்துள்ள முக்கியமான பாசன நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இக்குளம் கனகராயன் ஆற்றின் மிக மேல்நிலைப் பகுதிகளில் உருவாகும் நீரோட்டத்தைத் தேக்கிப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் நீர்ப்பிடிப்புப் பரப்பளவு சுமார் 14.45 சதுர மைல்கள் ஆகும். கனகராயன் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள இக்குளம், கீழ்நிலைப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீரை வழங்குவதோடு, பிராந்தியத்தின் மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர் வளங்களின் சமநிலையைப் பேணுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

‘செம்மாமடு’ என்ற பெயர் தொடர்பாக உள்ளூர் இயற்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்துக் காணப்படுகிறது. இப்பகுதியைச் சூழ்ந்திருந்த காடுகளில் பொதுவாகக் காணப்பட்ட ‘செம்மா’ என அழைக்கப்படும் பூக்கும் தாவரங்கள் காரணமாக இக்குளத்திற்கு செம்மாமடு என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இத்தகைய இடப்பெயர்கள் அப்பகுதியின் இயற்கை வளங்கள், தாவரங்கள், பாரம்பரிய வாழ்வியலுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பையும் வெளிப்படுத்துகின்றன.

குளத்தின் வரலாற்றுப் பின்னணி

செம்மாமடு குளம் 1958ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் அக்காலத்திலேயே இப்பகுதியில் காணப்பட்ட இயற்கையான நீரோட்டத்தைத் தேக்கி, பருவகால மழைநீரை வேளாண்மைத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கான திட்டமிட்ட நீர்ப்பாசன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதை அறிய முடிகிறது.

கனகராயன் ஆற்றின் மேற்பகுதியில் அமைந்துள்ளதால், மேல்நிலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கிடைக்கும் மழைநீரைச் சேகரித்து கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கான முக்கியமான கட்டமைப்பாக செம்மாமடு குளம் விளங்குகிறது. குறிப்பாக வடக்கு வறண்ட வலயத்தில் மழைப்பொழிவு பருவகால ரீதியாகவும், ஆண்டுக்கு ஆண்டு மாறுபாடுகளுடனும் காணப்படுவதால், குறுகிய காலத்தில் கிடைக்கும் அதிகப்படியான மழைநீரைச் சேமித்து, நீண்ட காலத்திற்கு விவசாயத் தேவைக்குப் பயன்படுத்துவது இத்தகைய குளங்களின் அடிப்படை நோக்கமாகும்.

மோதல் காலத்தின் தாக்கமும் புனரமைப்பின் அவசியமும்

இப்பகுதியில் நீண்டகாலமாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக செம்மாமடு குளத்தைச் சார்ந்த விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. விவசாயக் குடும்பங்களின் இடப்பெயர்வு, விவசாய நிலங்களின் பயன்பாடு குறைதல், பாசனக் கட்டமைப்புகளின் முறையான பராமரிப்பு இல்லாமை ஆகியவை குளத்தின் செயல்திறனையும் பாதித்தன.

மோதல் முடிவடைந்த பின்னர் மக்கள் மீள்குடியேறிய போது, தமது பாரம்பரிய வாழ்வாதாரமான விவசாயத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முறையான பாசன வசதிகள் அவசியமாகின. இந்நிலையில், செம்மாமடு குளத்தை மீளச் செயல்படுத்துவதும் அதன் அணைக்கட்டு, நீர்வாய்கள், கால்வாய் அமைப்புகளைப் புனரமைப்பதும் வெறுமனே ஒரு பொறியியல் நடவடிக்கையாக இல்லாமல், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்சியுடனும் பிராந்தியப் பொருளாதார மறுசீரமைப்புடனும் நேரடியாகத் தொடர்புடையதாக அமைந்தது.

‘ENReP’ திட்டத்தின் கீழான புனரமைப்பு

மோதல் முடிவடைந்த உடனடியான காலப்பகுதியில், உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட, கட்டுரையாளர் திட்டப்படிப்பாளராக இருந்த வடக்கு மாகாண அவசர மீட்புத் திட்டமான ‘Emergency Northern Recovery Project’ (ENReP) மூலம் செம்மாமடு குளத்தின் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இப்புனரமைப்பின் முக்கிய நோக்கம் நீண்டகாலமாகச் சீரழிந்திருந்த பாசன அமைப்பை மீண்டும் முழுமையான செயல்திறனுடன் கொண்டு வருவதும், மீள்குடியேற்றப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நம்பகமான நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்துவதுமாகும். குளத்தின் நீரைத் திறம்படச் சேமித்து விநியோகிப்பதன் மூலம் நீர் இழப்புகளை குறைத்தல், பாசனத் திறனை அதிகரித்தல், திட்டமிடப்பட்ட விவசாயப் பரப்புகளுக்கு உரிய காலத்தில் நீர் வழங்குதல் ஆகியவை இப்புனரமைப்பின் முக்கிய எதிர்பார்ப்புகளாக அமைந்தன.

பாசன வசதியும் விவசாயப் பயன்களும்

புனரமைப்பிற்குப் பின்னர் செம்மாமடு குளத்தின் மூலம் சுமார் 600 ஏக்கர் நெல் வயல்களுக்கு பாசன வசதி வழங்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் சுமார் 200 விவசாயக் குடும்பங்கள் நேரடியாகப் பயனடையக்கூடிய வாய்ப்பு உள்ளது. இப்பாசன வசதி, குறிப்பாக மகா பருவத்தில் உறுதியான நெல் சாகுபடியையும், நீர்வள இருப்புக்கு ஏற்ப யாலா பருவத்திலும் குறிப்பிடத்தக்க அளவு சாகுபடியையும் மேற்கொள்ள உதவுகிறது.

நீர்ச்சமநிலை ஆய்வின் அடிப்படையில், மகா பருவத்தில் 600 ஏக்கர் நெல் சாகுபடிக்கும், யாலா பருவத்தில் சுமார் 240 ஏக்கர் நெல் சாகுபடிக்கும் பாசன வசதி வழங்குவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. இதன் மூலம் மொத்த விவசாய நிலப் பயன்பாடு அதிகரித்து, நிலத்தின் உற்பத்தித்திறன் மேம்படுவதுடன், விவசாயக் குடும்பங்களின் வருமானத்தையும் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்த முடியும்.

இத்தகைய பாசன வசதி ஒரு பருவகால விவசாய நடவடிக்கையாக மட்டும் கருதப்படக்கூடாது. நீரின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகள் உயர்தர விதைகள், மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகள், உர மேலாண்மை, நீர் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்கான நம்பிக்கையும் அதிகரிக்கும். இதன் மூலம் குளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செயல்பாடுகளும் படிப்படியாக வளரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

யாலா பருவ சாகுபடியும் நீர்ப் பயன்பாட்டுத் திறனும்

வடக்கு வறண்ட வலயத்தில் யாலா பருவம் பொதுவாக நீர்வள அழுத்தம் அதிகமாகக் காணப்படும் காலமாகும். எனவே, மகா பருவத்திற்கான முழுமையான பாசனத் தேவையை நிறைவு செய்த பின்னரும் கிடைக்கக்கூடிய நீர் இருப்பை மதிப்பீடு செய்து, யாலா பருவத்திற்கான சாகுபடிப் பரப்பைத் தீர்மானிப்பது அவசியமாகும்.

செம்மாமடு குளத்திற்கான நீர்ச்சமநிலை ஆய்வு, 600 ஏக்கர் மகா சாகுபடியுடனும் 240 ஏக்கர் யாலா சாகுபடியுடனும் 1.4 என்ற பயிர் தீவிரத்தை (Cropping Intensity) அடையக்கூடிய சாத்தியம் இருப்பதைக் காட்டுகிறது. இதன் மூலம் குளத்தின் நீர்வளத்தை பருவங்களுக்கு இடையே சமநிலையாகப் பகிர்ந்து பயன்படுத்தும் திட்டமிடப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்ள முடியும்.

வேளாண்மை அல்லாத நீர்ப்பயன்பாடு

செம்மாமடு குளத்தின் நீர்வளத்தை வேளாண்மைக்காக மட்டுமே ஒதுக்காமல், குளத்தின் பாதுகாப்பான இயக்க மட்டத்தையும் விவசாயப் பாசனத் தேவைகளையும் பாதிக்காத வகையில் வேளாண்மை அல்லாத தேவைகளுக்கும் வரையறுக்கப்பட்ட அளவில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

நீர்ச்சமநிலை ஆய்வின் அடிப்படையில், மாதத்திற்கு சுமார் 181 ஏக்கர் அடி (ac.ft.) நீரை வேளாண்மை அல்லாத தேவைகளுக்காக ஒதுக்குவதற்கான சாத்தியம் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய நீர் ஒதுக்கீடு குடிநீர், கால்நடை வளர்ப்பு, சிறு அளவிலான தொழில்கள், நிறுவனப் பயன்பாடுகள், எதிர்காலக் கிராமியப் பொருளாதார நடவடிக்கைகள் போன்ற தேவைகளுக்கு திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படலாம்.

எனினும், இவ்வகையான வேளாண்மை அல்லாத நீர்ப் பயன்பாடு, குளத்தின் முதன்மை நோக்கமான உணவுப் பாதுகாப்புக்கான பாசன நீர் வழங்கலை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக வறட்சி ஆண்டுகளில் நீர் இருப்புக் குறையும் போது, வேளாண்மை, பிற பயன்பாடுகளுக்கிடையிலான நீர் ஒதுக்கீடு நீர்ச்சமநிலை அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

நிலத்தடி நீர் வளப் பாதுகாப்பு

செம்மாமடு குளத்தின் மற்றுமொரு முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் பயன், அதன் சேமிப்பு நீரின் மூலம் சுற்றியுள்ள நிலத்தடி நீர்மட்டத்தைப் பராமரிப்பதாகும். குளத்தில் நீர் நீண்டகாலம் தேங்கி நிற்பதன் மூலம், குளத்தடிப் பகுதிகள், சுற்றியுள்ள மண் அடுக்குகள் வழியாக நீர் ஊடுருவி நிலத்தடி நீர் மீள்நிரப்பத்திற்குப் பங்களிக்கக்கூடும்.

இதன் மூலம் குளத்தைச் சுற்றியுள்ள விவசாயக் கிணறுகள், பிற நிலத்தடி நீர் ஆதாரங்களின் நீர் இருப்பு மேம்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, செம்மாமடு குளத்தை ஒரு பாசன நீர்த்தேக்கமாக மட்டும் கருதாமல், மேற்பரப்பு நீர்–நிலத்தடி நீர் தொடர்பை வலுப்படுத்தும் இயற்கை அடிப்படையிலான நீர்வளக் கட்டமைப்பாகவும் அணுக வேண்டும்.

குறிப்பாக எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், மழைப்பொழிவு மாறுபாடு, நீண்டகால வறட்சி போன்றவை அதிகரிக்கக்கூடிய சூழலில், குளங்களின் நிலத்தடி நீர் மீள்நிரப்பு பங்களிப்பை கண்காணிப்பது மிகவும் அவசியமானதாகும். குளத்தின் நீர்மட்டம், குளத்திற்கு வரும் நீர்வரத்து, பாசன வெளியேற்றம், சுற்றுப்புற நிலத்தடி நீர்மட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் முறையை உருவாக்குவது நீண்டகால நீர்வளத் திட்டமிடலுக்கு உதவும்.

நீர்ச்சமநிலை ஆய்வு

இக்கட்டுரையின் முந்தைய பந்திகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நீர்வளக் கொள்கைகள், பேண்தகு நீர்வளப் பயன்பாட்டு உத்திகளுக்கு அமைவாக செம்மாமடு குளத்திற்கான விரிவான நீர்ச்சமநிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட நீரியல் தரவுகளும், உருவாக்கப்பட்ட பரப்பளவு–கொள்ளளவு (Area–Capacity) தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆய்வின் தொடர்புடைய தரவுகள் கீழ் உள்ள அட்டவணைகளில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தரவுகளின் அடிப்படையில் குளத்தின் குறைந்தபட்ச இயக்க ஆழம், மகா மற்றும் யாலா பருவங்களில் பயிரிடக்கூடிய நிலப்பரப்பு, பயிர்க் கால அளவு, பயிர்த் தீவிரம், வேளாண்மை அல்லாத நீர்த்தேவை ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நீர்ச்சமநிலை ஆய்வு, கிடைக்கக்கூடிய நீர்வளத்தை பாதுகாப்பாகவும் திறம்படவும் பயன்படுத்தினால், 600 ஏக்கர் மகா நெல் சாகுபடியையும் 240 ஏக்கர் யாலா நெல் சாகுபடியையும் ஆதரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதேவேளை, குளத்தின் பாதுகாப்பான இயக்க நிலை, விவசாய நீர்த்தேவைகளை கருத்தில் கொண்டு, வேளாண்மை அல்லாத நீர்ப் பயன்பாட்டிற்கும் வரையறுக்கப்பட்ட அளவில் நீரை ஒதுக்குவதற்கான சாத்தியம் இருப்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

நீர்ச்சமநிலை ஆய்வின் முக்கிய அளவுருக்கள்

செம்மாமடு குளத்திற்கான நீர்ச்சமநிலை ஆய்வின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் முக்கிய செயல்பாட்டு அளவுருக்கள் பின்வருமாறு:

அளவுருபரிந்துரை
குறைந்தபட்ச இயக்க நீர்மட்ட ஆழம்4 அடி
மகா பருவ நெல் சாகுபடி பரப்பளவு600 ஏக்கர்
மகா பருவப் பயிர்க் காலம்135 நாட்கள் – நெல்
யாலா பருவ நெல் சாகுபடி பரப்பளவு240 ஏக்கர்
யாலா பருவப் பயிர்க் காலம்105 நாட்கள் – நெல்
பயிர்த் தீவிரம் (Cropping Intensity)1.4
வேளாண்மை அல்லாத நீர்த்தேவை181 ஏக்கர் அடி/மாதம்

பிராந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு

செம்மாமடு குளத்தின் புனரமைப்பு, விவசாய உற்பத்தியை மீட்டெடுப்பதுடன் மட்டுப்படாமல், குளத்தைச் சார்ந்துள்ள கிராமங்களின் பரந்த பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையக்கூடியது. சுமார் 200 விவசாயக் குடும்பங்களுக்கு பாசன வசதி கிடைப்பதன் மூலம் விவசாய வருமானம் அதிகரிப்பதோடு, விதை, உரம், விவசாய இயந்திரங்கள், அறுவடை, சேமிப்பு, போக்குவரத்து, சந்தைப்படுத்தல் போன்ற துணைத் துறைகளிலும் பொருளாதார நடவடிக்கைகள் உருவாகும்.

மேலும், குளத்தின் நீர்வளத்தை திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி வேளாண்மை அல்லாத தேவைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நீரை ஒதுக்குவதன் மூலம், எதிர்காலத்தில் சிறு, நடுத்தர அளவிலான கிராமியத் தொழில்கள், சேவை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கான வாய்ப்பும் உருவாகலாம். ஆனால் இத்தகைய பொருளாதாரப் பயன்பாடுகள் குளத்தின் நீரியல் கொள்ளளவையும் விவசாயத் தேவைகளையும் கருத்தில் கொண்ட நீர்ச்சமநிலை அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறையின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

பேண்தகு நீர்வள மேலாண்மைக்கான அணுகுமுறை

செம்மாமடு குளத்தின் எதிர்கால மேலாண்மையில், குளத்தின் நீர்வளத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதைவிட, கிடைக்கக்கூடிய நீர்வளத்தை நீண்டகாலத்திற்குப் பாதுகாத்து, பல்வேறு தேவைகளுக்கிடையே நியாயமான, அறிவியல் அடிப்படையிலான பங்கீட்டை உறுதி செய்வதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

இதற்காக மகா பருவத்தில் 600 ஏக்கர், யாலா பருவத்தில் 240 ஏக்கர் என பரிந்துரைக்கப்பட்ட சாகுபடிப் பரப்புகள் ஆண்டுதோறும் கிடைக்கும் நீர்வரத்து, மழைப்பொழிவின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். வறட்சி ஆண்டுகளில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் போது, பயிரிடும் பரப்பைக் கட்டுப்படுத்துதல், குறுகிய காலப் பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்தல், திறமையான பாசன முறைகளைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோன்று, 181 ஏக்கர் அடி/மாதம் என மதிப்பிடப்பட்டுள்ள வேளாண்மை அல்லாத நீர்த்தேவையை நிரந்தரமான உரிமையாகக் கருதாமல், ஒவ்வொரு பருவத்திலும் குளத்தின் நீர் இருப்பு, எதிர்பார்க்கப்படும் பாசனத் தேவையின் அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை உருவாக்க முடியும்.

முடிவுரை

செம்மாமடு குளம், கனகராயன் ஆற்றின் மேல்நிலை நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பாசன வளமாகும். 1958ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட இக்குளம், நீண்டகால மோதல் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பின்னர், உலக வங்கியின் ‘ENReP’ திட்டத்தின் மூலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு விவசாயப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று இது சுமார் 600 ஏக்கர் மகா நெல் சாகுபடியையும் 240 ஏக்கர் யாலா சாகுபடியையும் ஆதரிக்கக்கூடியதாக இருப்பதுடன், சுமார் 200 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் முக்கிய ஆதாரமாக அமைகிறது.

மேலும், குளத்தின் நீர்வளத்தை அறிவியல் அடிப்படையிலான நீர்ச்சமநிலை அணுகுமுறையில் நிர்வகிப்பதன் மூலம், வேளாண்மை அல்லாத தேவைகளுக்கும் வரையறுக்கப்பட்ட அளவில் நீரைப் பயன்படுத்துவதோடு, சுற்றுப்புற நிலத்தடி நீர்மட்டத்தையும் பேணுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, செம்மாமடு குளத்தின் எதிர்கால வளர்ச்சி ‘நீர்த்தேக்கம் – பாசனம் – வாழ்வாதாரம் – நிலத்தடி நீர் – பிராந்தியப் பொருளாதாரம்’ ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முழுமையான நீர்வள மேலாண்மை அணுகுமுறையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இது வடக்கு வறண்ட வலயத்தில் பாரம்பரியக் குளங்களைப் பேண்தகு, பல்நோக்கு நீர்வளக் கட்டமைப்புகளாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான முன்மாதிரியாக அமையக்கூடும்.

செம்மாமடு குளத்தின் நீர்ச் சமநிலை (Water Balance) ஆய்வு



About the Author

சுப்ரமணியம் சிவகுமார்

கலாநிதி. சுப்ரமணியம் சிவகுமார் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலைப் (BSc Eng.) பட்டமும், இந்தியத் தொழில்நுட்பக்கழகம் ரூர்க்கியில் (IIT Roorkee) நீர்வள மேம்பாட்டுத்துறையில் முதுகலைப் (MSc) பட்டமும், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (PhD) பட்டமும் பெற்றவர். பின்னர் நோர்வேயின் உயிரியல் - அறிவியல் பல்கலைக்கழகத்திலும் (NMBU, Ås), வடகிழக்கு நோர்வே பல்கலைக்கழகத்திலும் (Bodø) பிந்தைய முனைவர் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராகவும், நீர்ப்பாசனப் பொறியாளராகவும் 28 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பல்கலைக்கழகங்களில் மூத்த விரிவுரையாளராகச் செயற்பட்டார். விவசாய அமைச்சகத்தில் திட்டமிடல் பணிப்பாளராகவும், வடமாகாண அவசர மீளமைப்புத் திட்டத்தின் திட்டப்பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

பல்வேறு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் விருந்தினர் விரிவுரைகளையும், முக்கிய உரைகளையும் (Keynote Speeches) நிகழ்த்தியுள்ள இவர், குறியீட்டு அறிவியல் இதழ்களில் 45க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளதோடு, இதுவரை 7 நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், 18 சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்