1983 - 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் - பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
21 நிமிட வாசிப்பு

1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 3

April 7, 2026 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

சுதுமலை பிரகடனம் – 1987

விடுதலைப் புலிகளின் அரசியற் திட்டம் பற்றியும், இந்திய அரசுடனான உறவு பற்றியும், இலங்கை – இந்தியா ஒப்பந்தம் பற்றிய நிலைப்பாட்டையும் மக்களுக்கு விளக்க 1987 ஆகஸ்ட் 4 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோயில் மைதானத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட மக்களுக்கான தெளிவுபடுத்தலே சுதுமலை பிரகடனமாகும். இப்பிரகடனத்தில் அவர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எதையும் அடைய முடியாத வண்ணம் இலங்கை – இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அவசரம் அவசரமாக அமுலாக்கப்பட்டு வருகின்ற தன்மையையும், இதற்காக தமிழ்த் தரப்பிடம் இருந்து அனுமதி பெறப்படாது இந்தியா தமிழர் சார்பில் தன்னிச்சையாகச் செயற்படுவது தொடர்பிலும், இந்திய சமாதானப்படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தமை பற்றியும், தமிழின அழிப்பு நடவடிக்கையை சிங்கள இனவாதப் பூதம் மேற்கொள்ள இந்தியா இடமளிக்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது என்பதையும் தெளிவுபடுத்தினார். இப்பேச்சானது “நாம் இந்தியாவை நேசிக்கின்றோம்” என்ற தலைப்பில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இச்சுதுமலை பிரகடனத்தின் பின்னர் 1987 ஆகஸ்ட் 5ஆம் நாள் இந்திய அமைதி காக்கும் படையிடம் ஆயுதங்கள் கையளிக்கப்பட்டது. இந்த ஆயுதக் கையளிப்பு வைபவம் ஆடம்பரமான சடங்காக பலாலி விமானத்தளத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு புலிகளின் சார்பில் யோகரத்தினம் யோகி சென்றதுடன் ஆயுதக் கையளிப்பின் குறியீடாக ஒரு ஜெர்மனிய மௌசர் துப்பாக்கியை ஜெனரல் அட்டிகலையிடம் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யோகி நேரடியாக கையளிக்காமல் துப்பாக்கியை மேசையில் வைத்தார். புலிகள் இயக்கம் முழுமையான கையளிப்பினை மேற்கொள்ளவில்லை. ஒரு பகுதியை மட்டுமே கையளித்தது.

ஒப்பந்தத்தின் தோல்வி

ராஜீவ் காந்தியின் வேண்டுகோளின் பெயரில் ஆயுதங்களை கையளித்த பின்னரும் இடைக்கால நிர்வாக அரசை நிறுவ இந்திய அரசு எவ்வித முயற்சியும் எடுக்காமல் இருந்தது. இதேவேளை ஸ்ரீலங்கா அரசு தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. விடுதலைப் புலிகளின் நிர்வாகச் செலவீனங்களுக்காக இந்தியப் பிரதமர் உறுதி அளித்த நிதி உதவி ஒரு மாதக் கொடுப்பனவுடன் நின்றது. இவையாவுமே ஒப்பந்தத்தின் தோல்விக்கு ஆரம்பகட்டப் படிகளாகக் காணப்பட்டன.

திலீபனின் மரணம்

இந்திய அரசின் இத்தகைய விரோதச் செயலைக் கண்டித்து, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திலீபன் முடிவு செய்தார். இது தொடர்பில் அப்போதைய இந்திய தூதர் திரு. டிக்சிட்டிடம் உரையாடிய போதும் எதுவித முடிவுகளும் எடுக்காமையினால் திலீபன் வீரச்சாவடைந்தார். இவரின் பின்பு தான் அன்னை பூபதி யுத்தம் நிறுத்தக்கோரி 1988 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 19ஆம் திகதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி சித்திரை மாதம் 19ஆம் திகதி மரணமடைந்தார்.

வடக்கு – கிழக்கிற்கென ஓர் இடைக்கால நிர்வாகம்

நீண்ட இழுபறியின் பின்னர் சட்டம் ஒழுங்கைப் பேணும் விடயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை வழங்கி இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த ஜெயவர்த்தனா இணங்கினார். எனினும் நாட்டின் அரசு அதிபர் என்ற ரீதியில் இடைக்கால நிர்வாக சபையின் பிரதம நிர்வாக அதிகாரியைப் பரிந்துரையின் பெயரில் தானே நியமிக்க வேண்டும் என கூறினார். யாழ்ப்பாண நகர சபை ஆணையாளராக திரு. சி.வி.கே. சிவஞானத்தை தெரிவு செய்தார் ஜெயவர்த்தனா. புலிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பத்மநாதனையே சிபார்சு செய்தனர்.

அரசியல் யாப்பிற்கான 13ஆம் திருத்தம்

1987ஆம் ஆண்டு யூலை மாதம் 29ஆம் திகதி இலங்கை – இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி அரசியல் யாப்பிற்கான 13ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசியல் யாப்பின் 17ஆம் அத்தியாயத்தின் ‘அ’ பிரிவாகவும் உறுப்புரை 154இல் ‘அ’ பிரிவாகவும் இத்திருத்தம் சேர்க்கப்பட்டது. அதேவேளை மாகாண சபை முறை நடைமுறைச் செயற்பாடுகளுக்காக 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபை சட்டமும் இதே தினத்தில் நிறைவேற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

எனவே மாகாண சபை அரசாங்க முறையினை இலங்கை – இந்தியா ஒப்பந்தம், அரசியல் யாப்பிற்கான 13ஆம் திருத்தம், மாகாண சபைகள் சட்டம் ஆகிய மூன்றையும் இணைத்தே புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

அடிப்படைத் தவறுகள்

மாகாணசபை முறை அடிப்படையில் எட்டுத் தவறுகளைக் கொண்டிருந்தது. அதில் முதலாவது இம்முறை என்ன பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டதோ அந்தப் பிரச்சினைக்குரிய தரப்புடன் கலந்தாலோசிக்காமல், அத்தரப்பின் பங்குபற்றல்கள் எதுவும் இல்லாமல் கொண்டுவரப்பட்டது என்பதாகும்.

மாகாணசபை முறை நீண்ட காலமாக இலங்கைத் தீவில் நிலவிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இனப்பிரச்சினையின் ஒரு தரப்பாக இருக்கும் தமிழ் மக்கள் இம் மாகாணசபை உருவாக்கம் தொடர்பாகப் பங்குபற்றுவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. தமிழ் மக்களின் சார்பில் செயற்படத்தக்க உரிமையை இந்திய அரசு தானே பலவந்தமாக எடுத்திருந்தது. மாகாணசபையின் உருவாக்கச் செயற்பாட்டில் இலங்கை அரசுக்கு மறு தரப்பாக தானே கலந்துகொண்டது. ஒருவகையில் பலவந்த நம்பிக்கைப் பொறுப்பாளனாகச் செயற்பட்டது எனக் கூறலாம். இந்த உரிமையை பலவந்தமாக எடுத்துக்கொண்டாலும், நம்பிக்கைப் பொறுப்பாளன் என்ற தரப்பில் செயற்பட்டதா? என்பதுதான் தமிழ் மக்களிடம் எழும் கடுமையான விமர்சனமாகும்.

இந்தியா இனப்பிரச்சினையில் தலையிட்டதற்கான காரணம் தமிழ் மக்களின் நலன்கள் அல்ல; மாறாக இந்தியாவின் பிராந்திய ஆதிக்க நலன்களுக்கு மாறாக இலங்கை அரசு அமெரிக்காவுடனும் மேற்குலக நாடுகளுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தமையே அதன் தலையீட்டிற்கான காரணம் ஆகும். 

அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் முக்கிய பங்காளிகளாக இந்நாடுகளே விளங்கியிருந்தன. இப்போக்கிலிருந்து இலங்கையைத் தடுத்து தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டுவருவதற்காகவே இந்தியா இப்பிரச்சினைகளுக்குள் தலையிட்டது. தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுத உதவிகளையும் ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கியதோடு, இந்தியாவை பின்தளமாக பயன்படுத்துவதற்கும் வசதிகளைச் செய்து கொடுத்திருந்தது. மறுபக்கத்தில் தமிழ் விடுதலை இயக்கங்களின் ஆயுதப் போராட்டங்களைக் காரணமாகக் காட்டி இலங்கை அரசுடன் தனது நலன்கள் தொடர்பாக பேரம் பேசுவதிலும் ஈடுபட்டது. இப் பேரம் பேசுதல் வெற்றிபெற்று இலங்கை அரசினைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பெரிதளவில் இந்தியா அக்கறை காட்டவில்லை. தீர்வு என்ற பெயரில் ஏதாவது ஒன்றினைத் திணித்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா முயற்சித்தது.

இரண்டாவது தவறு இலங்கை ஓர் ஒற்றை ஆட்சி அரசு மற்றும் பாராளுமன்றம் தனது சட்டவாக்க அதிகாரத்தினை துறத்தலோ, பராதீனப்படுத்தலோ ஆகாது ஆகிய அரசியல் யாப்பின் 2ஆம், 76ஆம் உறுப்புரைகளில் எந்தத் திருத்தங்களையும் கொண்டுவராமல் மாகாணசபை அறிமுகப்படுத்தப்பட்டமையாகும்.

அரசியல் யாப்பில் இரண்டாவது உறுப்புரை “இலங்கை குடியரசு ஒற்றையாட்சி உடைய அரசாகும் (The Republic of Sri Lanka is a Unitary State)” எனக் குறிப்பிடுகின்றது. அதேவேளை உறுப்புரை 83 (1), இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியுடைய அரசாகும் என்கின்ற ஏற்பாட்டை திருத்த வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையோடு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும் அதற்கு அவசியமாகும் எனக் குறிப்பிடுகின்றது.

அதேவேளை உறுப்புரை 76 (1), “பாராளுமன்றம் அதன் சட்டவாக்க அதிகாரத்தினை துறத்தலோ, எந்த விதத்திலும் பராதீனப்படுத்தலோ ஆகாது; மேலும், ஏதேனும் சட்டவாக்க அதிகாரம் கொண்ட எந்த அதிகாரத்தையும் நிறுவுவதும் ஆகாது” (Parliament shall not abdicate or in any manner alienate its legislative power and shall not set up any authority with any legislative power) எனக் குறிப்பிடுகின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு ஓர் அதிகாரப் பங்கீட்டுச் செயற்பாட்டினை வேண்டி நின்ற நிலையில், இவ்விரண்டு ஏற்பாடுகளிலும் திருத்தங்கள் எவையும் மேற்கொள்ளாமல் மாகாணசபை முறையினை அறிமுகப்படுத்தியமை தீர்வு முயற்சிகளையே கேலிக்குள்ளாக்கியிருந்தது.

ஒழுங்கான முறையில் மாகாணசபை சம்பந்தமான ஏற்பாடுகளை அரசியல் யாப்பில் இணைப்பதற்குப் பதிலாக, அவை பொருத்தமற்ற முறையில் செருகப்பட்டமையே நடைமுறையில் இடம்பெற்றது. இதனால் தீர்விற்கு தேவையான பகிர்வு அதிகாரமானது சிறிதளவு கூட மாகாண சபையில் காணப்படவில்லை. அரசியல் யாப்பின் இரண்டாம் உறுப்புரையைத் திருத்துவதற்கு மட்டும்தான் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும் தேவைப்பட்டது. அன்றைய சூழலில் மக்கள் தீர்ப்பிற்கான சர்வஜன வாக்கெடுப்பு அரசிற்கு சில சங்கடங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் 76ஆம் உறுப்புரையை திருத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவையாக இருக்கவில்லை. பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையே போதுமானதாக இருந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா நிர்வாகத்திற்கு பாராளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மை கிடைத்திருந்த நிலையில் இத்திருத்தத்தினை மேற்கொள்வதில் கடினம் எதுவும் இருந்திருக்காது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவும் இதற்குக் கிடைத்திருக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 8 ஆசனங்கள் மட்டுமே எதிராக விழுந்திருக்கும். 13ஆம் திருத்தத்தினைக் கொண்டு வந்தது போல இத்திருத்தத்தினையும் இலகுவாகக் கொண்டுவந்திருக்கலாம். ஆனால் அரசாங்கத்திற்கு இது தொடர்பான விருப்பு இருந்திருக்கவில்லை.

இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் இங்கிலாந்து தனது அரசாங்க முறையில் ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளேயே ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து என்பனவற்றிற்கு ஓரளவு அர்த்தமுடைய அதிகாரப் பங்கீட்டை வழங்கியது போல இங்கும் வழங்கியிருக்கலாம். ஆனால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

13ஆவது திருத்தம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதிகள் 9 பேரில் ஐவர் திருத்தத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பினை வழங்கியிருந்தனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் 13ஆவது திருத்தம் அரசியல் யாப்பின் 76ஆம் உறுப்புரையின்படி பாராளுமன்றத்திற்கு இருந்த அதிகாரங்களை எந்தவிதத்திலும் கேள்விக்குட்படுத்தவில்லை என்பதாகும். அதாவது பாராளுமன்றத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே மாகாணசபை இயங்கும் என்பதையே இத் தீர்ப்பு வெளிப்படுத்தியிருந்தது.

மேற்கூறிய இரு ஏற்பாடுகளிலும் திருத்தங்கள் இடம்பெறாததினால் அதிகாரப் பகிர்வு இடம்பெறுவதற்குப் பதிலாக நிர்வாகப் பரவலாக்கலே இடம்பெற்று இருந்தது. அரசியல் அதிகாரத்தினை வழங்காமல் நிர்வாக அதிகாரத்தினை மட்டுமே வழங்குதலே அதிகாரப் பரவலாக்கல் எனப்படும். இங்கு பரவலாக்கல் செயன்முறை பாராளுமன்றத்தினால் ஒரு சட்டத்தின் மூலமே இடம்பெறும்; மாறாக, ஓர் அதிகாரப் பகிர்வு என்பது ஓர் அரசின் இறைமை அதிகாரத்தினை மத்திய அரசும் பிராந்திய அரசும் பகிர்ந்து கொள்வதாகும். இவ் இறைமை அதிகாரமே அரசியல் அதிகாரம் ஆகும். அதிகார வழங்கல் செயன்முறை அரசியல் யாப்பின் மூலம் நடைபெறுகின்றதே ஒழிய பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் நடைபெறுவதில்லை.

மூன்றாவது தவறு அதிகார அலகுகளாக இனங்களைக் கவனத்தில் கொள்வதற்குப் பதிலாக பிரதேசங்களைக் கவனத்தில் கொண்டமையாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை முறையினை அறிமுகப்படுத்துவதாக இருந்தால் இனங்களும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட பிரதேசங்களுமே அதிகார அலகுகளாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கியிருந்தால் சிங்கள அலகு, தமிழ் அலகு, முஸ்லிம் அலகு, மலையக அலகு என நான்கு அலகுகளே உருவாகியிருக்கும். ஒன்பது அலகுகள் உருவாகியிருக்காது. சிங்கள அலகிற்குள் மலையக அலகையும் தமிழ் அலகிற்குள் முஸ்லிம் அலகையும் உப அலகுகளாகச் சேர்ப்பதன் மூலம் அலகுகளையும் இரண்டாகக் குறைத்திருக்கலாம்.

இவற்றிற்கு மாறாக சிங்கள மக்களிற்கு ஏழு அலகுகளும் தமிழ் மக்களுக்கு இரண்டு அலகுகளுமே உருவாக்கப்பட்டிருந்தன. இது இன விவகாரத்தினை மலினப்படுத்தியதுடன் மாகாண சபை முறையிலும் சிங்கள சமூகத்தினை வலுப்படுத்தியதோடு அரசிற்கு பெரும் நிர்வாகச் சுமை, செலவுச் சுமை என்பவற்றினையும் ஏற்படுத்தியிருந்தது.

நான்காவது தவறு கூட்டு அதிகாரத்திற்கான அரசியற் தளம் உருவாக்கப்படாமை ஆகும். பகிர்வு அதிகாரங்கள் இருக்கின்ற இடங்களில் கூட்டு அதிகாரங்களும் இருப்பது அவசியமாகும். பகிர்வு அதிகாரத்தில் தேசிய இனங்களின் தனியான நலன்களும், கூட்டு அதிகாரத்தில் தேசிய இனங்களின் கூட்டான நலன்களும் முக்கியத்துவப்படல் வேண்டும்.

கூட்டு அதிகாரத் தளம் என்று வருகின்றபோது அதன் அமைப்புகளும் அதிகாரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். இரண்டிலும் தேசிய இனங்களுக்கு சமத்துவம் வழங்கப்படல் வேண்டும். பொதுவாக மத்திய பாராளுமன்றத்தில் இரண்டாவது சபை ஒன்றினை உருவாக்கி தேசிய இனங்களுக்கு சமத்துவமான அந்தஸ்து வழங்குதல் மூலமே இது பேணப்படுகின்றது. 13ஆவது திருத்தம் இவ்விடயத்தில் குறைந்தளவாவது கவனம் செலுத்தவில்லை. இங்கும் கூட தமிழ் மக்களினுடைய விவகாரங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும்.

ஐந்தாவது தவறு ஒத்தியங்கு நிரல் என்கின்ற ஒரு நிரலை அரசியல் யாப்பில் சேர்த்தமையாகும். இதிலுள்ள விடயங்கள் தொடர்பாக மாகாணசபைக்கா? மத்திய அரசிற்கா? அதிகாரமுள்ளது என்பதில் ஒரு தெளிவின்மை இருந்தது. மாகாணசபைகள் இந்நிரலிலுள்ள விடயங்களில் சட்டங்களை இயற்றும்போது மத்திய அரசின் அனுமதியையும், பாராளுமன்றம் சட்டங்களை இயற்றும்போது மாகாணசபைகளின் அனுமதியையும் பெறவேண்டும் என்று கூறப்பட்டது. இது ஒரு குழப்பநிலையை உருவாக்கியது.

ஆறாவது தவறு மாகாணசபை நிரலில் உள்ள விடயங்களில் கூட மாகாணசபைகளின் அதிகாரம் சரியாக வரையறுக்கப்படாமையாகும். பல விடங்களில் மாகாணசபைகள் எவ்வளவிற்குச் சட்டமியற்றலாம் என பாராளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றிக் கொடுக்க வேண்டியிருந்தது. இது நடைமுறையில் சாத்தியமாக இருக்கவில்லை. இதனால் மாகாண அரச நிர்வாகம் ஒன்றை சீராகக் கட்டியெழுப்ப முடியவில்லை. மாகாணசபைகளுக்கு வலுவான அதிகாரங்களும், சுயமான வருமான மார்க்கங்களும் அவசியமானதாகும். குறிப்பாக சக்தி மிக்க பொருளாதார அடிப்படை அவசியமானதாகும். 13ஆவது திருத்தம் இதனைக் கவனத்தில் எடுக்கவில்லை.

ஏழாவது தவறு, தமிழர் விடுதலைக் கூட்டணி 13ஆவது திருத்தம் தொடர்பாகவும், மாகாணசபைகள் சட்டம் தொடர்பாகவும் தனது அதிருப்தியை அறிக்கை ஒன்றின் மூலம் இந்திய அரசிடம் கையளித்திருந்தது. இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் உடன் இருந்தார். இந்தியா அறிக்கையைப் பெற்றுக்கொண்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எட்டாவது தவறு மாகாண சபைகளுக்கு சுயாதீனத் தன்மைகள் இருக்கவில்லை. மத்திய அரசில் தங்கிநிற்கும் நிலையே இருந்தது. மாகாண நிர்வாகம் கட்டியெழுப்பப்படாமைக்கு இதுவே காரணமாகும். மத்திய அரசிடமிருந்து வழுவிவந்த அதிகாரங்கள் கூட ஆளுநரிடம் இருந்ததே தவிர மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைச்சரவையிடமோ, மாகாண சபையிடமோ இருக்கவில்லை. இங்கு டொனமூர் யாப்பு போல பொறுப்பு இருந்த இடத்தில் அதிகாரம் இருக்கவில்லை; அதிகாரம் இருந்த இடத்தில் பொறுப்பு இருக்கவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்டதனால் மாகாண சபைகளிடமும் மாகாண அமைச்சரவையிடமும் பொறுப்பு இருந்தது, ஆனால் அதிகாரம் இருக்கவில்லை. ஆளுநர் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை; அதனால் அவருக்கு பொறுப்பு இருக்கவில்லை, அதிகாரம் இருந்தது.

இனப்பிரச்சினை தீர்விற்கான அடிப்படைகள்

இன அழிப்பு என்பது ‘தமிழ் மக்கள் ஒரு தேசமாக, தேசிய இனமாக இருக்கின்றனர்; அவ்வாறு இருப்பது அழிக்கப்பட வேண்டும்! அதாவது தேசத்தை, தேசிய இனத்தைத் தாங்குகின்ற தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பன அழிக்கப்பட வேண்டும்’ எனும் நிலைப்பாடாகும். இதன் உச்சநிலையாகத்தான் உயிரழிப்பு இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளே அந்த உயிரழிப்புகளாகும். எனவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இந்த இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.

எனவே அரசியல் தீர்வு என்பது கோட்பாட்டு அடிப்படையில் தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய அங்கீகாரம் என்பதுடன் சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்சிப் பொறிமுறையையும் கொண்டிருக்க வேண்டும். அந்த ஆட்சிப் பொறிமுறை என்பது சுயநிர்ணய சமஷ்டி ஆட்சியாகவே இருக்க முடியும்.

இந்த அரசியல் தீர்வுக்கு யாப்பு வடிவம் கொடுக்கின்ற போதும் நான்கு விடயங்கள் முக்கியமானவையாகும்: தாயக ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வகையில் வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேசமாகப் பங்குபற்றுவதற்கான பொறிமுறை, சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவையே அவையாகும்.

13 ஆவது திருத்தம் தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்கவில்லை, இறைமையையும் அங்கீகரிக்கவில்லை. சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்சிப் பொறிமுறையையும் உருவாக்கவில்லை. 13ஆவது திருத்தம், அரசியல் யாப்பு வடிவம் பற்றி இருப்பதால், அதில் தமிழ் மக்களினுடைய யாப்புச் சட்ட அபிலாசைகள் எவ்வாறு இருந்தன எனப் பார்ப்போம்.

அதிகார அலகு

அதிகார அலகினைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் கூட்டிருப்பையும் கூட்டுரிமையையும் பேணக்கூடிய வகையில் வடக்கு – கிழக்கு இணைந்த அலகு என்பதே தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்தது. இக் கூட்டிருப்பிற்கும் அதன் வழியான கூட்டுரிமைக்கும் அடையாளத்திற்கும் வரலாற்று ரீதியாக அச்சுறுத்தல் ஏற்பட்டமையினாலேயே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் எழுச்சி அடைந்தது. 1977ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அதற்கான ஆணையினை வழங்கியிருந்தார்கள். கிழக்கில் ஒரு தேர்தல் தொகுதியைத் தவிர அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. கல்குடா தேர்தல் தொகுதியில் மட்டும் 540 வாக்குகளினால் தோல்வி அடைந்திருந்தது.

ஆனால் மாகாணசபை முறையில் வடக்கு – கிழக்கு தற்காலிகமாகவே இணைந்து செயற்படுவதற்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது. தற்காலிக இணைப்புப் பற்றிக் கூட 13ஆவது திருத்தத்தில் தெளிவாக எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. இணைப்புப் பற்றி பாராளுமன்றம் ஏதேனும் ஒரு சட்டம் மூலம் தீர்மானிக்கலாம் என்று மட்டுமே கூறப்பட்டிருந்தது. மாகாணசபை சட்டத்திலும் இடைக்கால ஏற்பாடுகள் என்ற பகுதியில் ஜனாதிபதி ஒரு பிரகடனத்தின் மூலம் இணைப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

எனவே தற்காலிக இணைப்பிற்குக் கூட அரசியல் யாப்பு அந்தஸ்தையோ, பாராளுமன்ற சட்ட அந்தஸ்தையோ வழங்க அரசு விரும்பியிருக்கவில்லை. வெறுமனவே வர்த்தமானி அந்தஸ்து மட்டுமே வழங்கியிருந்தது. இது தற்காலிக இணைப்பைக் கூட நீதிமன்றம் பிரிப்பதனை இலகுவாக்கியிருந்தது.

இவ்வாறு தெளிவாகக் கூறப்படாததினால் ஓர் அரசியல் விவகாரம் நீதிமன்ற விவகாரமாக்கப்பட்ட அவலம் ஏற்பட்டது. இலங்கையின் நீதித் துறையிடமிருந்தும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இத்தீர்ப்பினை வழங்குவதில் முன்னின்ற பிரதம நீதியரசர் சரத்.என். சில்வா பின்னர் ஒரு தடவை பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது “கிழக்கு சிங்கள மரபுரிமையின்படிதான் தான் தீர்ப்பளித்ததாக” குறிப்பிட்டார். அந்த மரபுரிமை எதுவென்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

வடக்கு – கிழக்கு இலங்கை உயர் நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. இவ்விடயத்தில் எந்தவிதமான வலுவான அபிப்பிராயத்தையும் இலங்கை அரசிற்கு அது தெரிவிக்கவில்லை. சட்டத் தவறுகளைச் சுட்டிக்காட்டியே இத்தீர்ப்பு வழங்கப்பட்டமையினால், பாராளுமன்றம் மூலம் புதிய சட்டத்தினைக் கொண்டு வந்து மீளவும் இணைப்பினை ஏற்படுத்துங்கள் என இலங்கை அரசிற்கு ஆலோசனை கூறியிருக்கலாம். ஆனால் அதற்கான முயற்சிகள் எதனையும் இந்திய அரசாங்கம் எடுக்கவில்லை. பேரினவாத எழுச்சிக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்று இந்தியா கருதியிருக்கலாம்.

குறைந்தபட்சம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலும் மாகாணசபை சட்டத்திலும் உள்ளது போல கிழக்கிலும் சர்வஜன வாக்குரிமை நடத்தி முடிவுகளை எடுங்கள் என அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால் இந்தியா அதற்கு முயற்சிக்கவில்லை. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் முஸ்லிம் மக்களுடன் அவர்களுக்கான தனியான அலகு பற்றியும் தமிழ்த் தரப்பு பேசி அவர்களையும் ஆதரவாக வாக்களிக்கச் செய்திருக்கலாம். அதற்கான சந்தர்ப்பத்தினையும் கொடுக்கவில்லை.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மாகாண சபைகள் சட்டத்தின் 42ஆம் பிரிவின் 37 (1), (4) உப பிரிவுகளின் கீழ் ஜனாதிபதியினால் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டமை அப்போது அமுலில் இருந்த அவசரகால விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்ட படியால், சரியான நிரந்தர சட்டவலுவைக் கொண்டிருக்கவில்லை. இதனால் வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பு முறையானது அல்ல எனக் குறிப்பிடப்பட்டது. இங்கு உண்மையில் சட்டத் தவறே நடந்திருக்கின்றது. இந்தியா நினைத்திருந்தால் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து இத்தவறினைத் திருத்தி மீண்டும் வடக்கு – கிழக்கினை இணைத்திருக்கலாம்.

இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களின் கூட்டிருப்புத் துண்டாக்கப்பட்டுள்ளது. அதன் வழி கூட்டுரிமையும், கூட்டு அடையாளமும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கிழக்கில் சிங்கள அரசியலின் தயவில் தங்கி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் தேசியம் வடக்கு – கிழக்கில் மையம் கொண்டுள்ளதால் தமிழ்த் தேசியத்தினை சார்ந்தே செயற்பட வேண்டிய நிலையில் உள்ளது. தமிழ்த் தேசியம் பலவீனம் அடைந்தால் முஸ்லிம் தேசியமும் பலவீனமடையும் என்பதே வடக்கு – கிழக்கின் யதார்த்த நிலையாகும். தமிழ்த் தேசியம் பலமாக இருக்கின்றபோது அரசாங்கம் தீர்வினை நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகும். அந்நேரத்தில் முஸ்லிம் மக்களும் தமது அபிலாஷைகள் தொடர்பான அழுத்தங்களைக் கொடுக்கலாம். சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம் பிரச்சினைகளை பேசுபொருளாக்கலாம். அதற்கான வாய்ப்பும் தாராளமாகக் கிடைத்திருக்கும். ஏற்கெனவே தமிழ்த் தேசியம் பலமான நிலையில் இருந்தபோது முஸ்லிம் தேசியத்திற்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருந்தது; ஆனால் இன்று தமிழ்த் தேசியம் பலவீனம் அடைந்துள்ளதால் முஸ்லிம் தேசியமும் பலவீனமடைந்துள்ளது. முஸ்லிம்களுக்கென தனியான அரசியல் கட்சி அவசியமா? என்று கேட்கும் அளவிற்கு முஸ்லிம் தேசிய எதிர்ப்பாளர்கள் சென்றுள்ளனர். தமது குறைந்தபட்ச நலன்களைக் கூட பேண முடியாதவாறு முஸ்லிம் மக்கள் அல்லற்படுகின்றனர்.

மறுபக்கத்தில் வடக்கு – கிழக்கு பிரிப்பும், புலிகளின் பின்னடைவும் தந்த அரசியல் தளத்தினை பயன்படுத்தி கிழக்கினை சிங்களமயமாக்கும் பணி துரிதமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மிகநுட்பமான வேலைத்திட்டங்கள் அங்கு நகர்த்தப்படுகின்றன. முன்னரை விடவும் மிகவும் துரிதமான வகையில் மிகச் சிறந்த நுட்பங்களோடு சிங்களக் குடியேற்றங்கள் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன. காணிப் பகிர்வு, மாவட்ட எல்லைகளை செயற்கையாக மாற்றுதல், பாரிய முதலீட்டு முயற்சிகளுக்காக நிலங்களை ஒதுக்குதல், பௌத்த விகாரைகளை ஆங்காங்கே கட்டுதல், சிங்கள மீனவர்களுக்காக வாடிகளை அமைத்தல், சிங்கள வர்த்தகர்களின் நடவடிக்கைகளை முடுக்கிவிடுதல் போன்ற நுட்பமான வேலைத்திட்டங்களினூடாக குடியேற்றச் செயற்பாடுகள் நகர்த்தப்படுகின்றன. கிழக்கு மாகாண சபையை வெறும் காட்சிப் பொம்மையாக்கிவிட்டு, ஆளுநர், படையினர், பேரினவாதிகள் இணைந்த கூட்டுத் திட்டங்களின் மூலம் இவை அரங்கேற்றப்படுகின்றன. 

மறுபக்கத்தில் கிழக்கு மாகாண தமிழ்த் தரப்பில் ஒரு பகுதியினர் முஸ்லிம் எதிர்ப்புக் காரணமாக சிங்களத் தரப்புடன் இணைந்தவாறு கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்ற முனைகின்றனர். அதற்காக வடக்கு – கிழக்கு இணைப்பையும் அடக்கி வாசிக்க முற்படுகின்றனர். தமிழ்த் தேசியம் நீக்கப்பட்ட அரசியலையும் முன்னெடுக்க முனைகின்றனர். இப்போக்கு பெரும் தேசியவாதத்திற்குள் தமிழ்த் தேசியத்தை கரைப்பதற்கே உதவும்.

முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பாக விழிப்புடன் இருந்தாலும், புலிகளின் தோல்வியும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் இவர்களையும் பலவீனமடையச் செய்துள்ளது. மறுபக்கத்தில் இராணுவ நிர்வாகமும் முஸ்லிம் காங்கிரசின் செயற்பாடுகளில் தடங்கலை உருவாக்கியுள்ளது.

சிவில் சமூகத்தினைப் பொறுத்தவரை கிழக்கில் தமிழ் சிவில் சமூகம் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. விடயங்களை நுணுக்கமாகப் பார்த்துச் செயற்படும் நிலையில் அது இல்லை; அவ்வாறு செயற்படுவதற்கான வலிமையான மூலங்களும் அவற்றிற்குக் கிடையாது. சிவில் சமூகம் பலவீனமான நிலையில் உள்ளதனால் சிவில் நிறுவனங்களும் பலவீனமான நிலையிலேயே உள்ளன. கிழக்கில் ஒப்பீட்டு ரீதியில் பலம் கொண்ட நிறுவனங்கள் கிழக்குப் பல்கலைக்கழகமும் கிறிஸ்தவ நிறுவனங்களும் தான்; அவையும் பலவீனமான நிலையிலேயே உள்ளன.

மொத்தத்தில் வடக்கு – கிழக்கு பிரிப்பு, கிழக்கின் பூர்விகமான முஸ்லிம்களையும் தமிழர்களையும் பேரினவாதத்தின் வாயில் கொண்டு போய் தள்ளிவிட்டுள்ளது. இவ்விரு சமூகங்களும் சிறிது சிறிதாக கிழக்கில் தங்கள் அடையாளம், இருப்பு, உரிமை என்பவற்றை இழக்கத் தொடங்கியுள்ளன.

வடக்கு – கிழக்குப் பிரிப்பு தமிழ் மக்களின் கூட்டுப் பலத்தைச் சிதறடித்ததினால் வடக்கு மாகாணமும் இன்று ஆக்கிரமிப்பு அபாயத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. நாள்தோறும் தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. போரில் வெற்றியடைந்த மன்னர்கள் எதிரியின் இடத்தைச் சூறையாடுவது போன்ற சூறையாடல் வடக்கில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரமும், குருந்தூர் மலை விவகாரமும் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

தொடரும். 



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்