மலையக வாழ்வியலில் ஒப்பாரிப் பாடல்கள் 
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
14 நிமிட வாசிப்பு

மலையக வாழ்வியலில் ஒப்பாரிப் பாடல்கள் 

July 17, 2026 | Ezhuna

கப்டன் ஹென்றி பேர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிச் செய்கையோடு மலையக மக்களின் வாய்மொழிப் பாடல் வரலாறு ஆரம்பிக்கின்றது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரின் பூரண கட்டுப்பாட்டில், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட்டு இம்மக்கள் வாழ்ந்தமையால், உலகில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களில் இருந்து இவர்களின் பாடல்கள் தனித்துவம் பெறுகின்றன. இத்தகைய இருள் சூழ்ந்த வாழ்வியலுக்குள் சிக்கிய மக்களின் வரலாறு, துன்பம், துயரம் ஆகியவற்றை இவர்களின் வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. இன்று, மலையக மக்களின் 200 வருடகாலப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் முக்கிய கூறுகளாகவும் இவை திகழ்கின்றன. அந்தவகையில், மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் அவர்களது வாய்மொழிப்பாடல்கள் வழியாகப் புரிந்துகொள்ளும் நோக்குடன் எழுதப்படுவதாக, ‘மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்’ எனும் இத்தொடர் அமைகின்றது

கலை, இலக்கியங்கள் மக்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். மக்கள் உருவாக்கிய இக்கலைகளில் அவர்களின் வாழ்க்கைச் செய்திகள் வெளிப்படுவது இயல்பாகும். கலை, இலக்கியங்கள் மக்களின் பண்பாட்டு நிலைகளை உள்ளடக்கியவைகளாக உள்ளன. தமிழரின் இசை மரபு நீண்ட காலப் பாரம்பரியத்தைக் கொண்டது. தமிழரின் இசை அம்மானை, ஊஞ்சல் போன்ற தொழில்முறைப் பாடல்களாகவும், மங்கல வாழ்த்து போன்ற விழாப் பாடல்களாகவும், பல சடங்குப் பாடல்களாகவும் ஆரம்ப காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இவற்றில் தாலாட்டு, கும்மி, ஒப்பாரி என்பன நாட்டார் பாடல் வடிவங்களில் முதன்மை பெற்றவையாக இயங்குகின்றன. இதில் தனித்துவம் பெற்ற இசை வடிவமாக ஒப்பாரி திகழ்கிறது. இதை தொல்காப்பியம் ‘கையறுநிலை’ என்று குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் ஊர்சூழ் வரியும், கம்பரின் தாரை மற்றும் மண்டோதரி புலம்பலும் ஒப்பாரி வடிவங்கள் என்று தமிழ் இசை ஆய்வாளர் நா. மம்மது குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. 

நாட்டார் இலக்கிய வடிவங்களிலும் தமிழர்களின் வாழ்வியலிலும் ஒப்பாரிப் பாடல்கள் தவிர்க்க முடியாத ஒரு கூறாகத் திகழ்கின்றன. இசை என்பது அடிப்படையிலேயே துயரத்தின் ஒரு வடிவமான வெளிப்பாடே என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மகிழ்ச்சியான தருணங்களைக் கூட மெல்லிய சோகக் கலவையுடன் வெளிப்படுத்துவது இசையின் தனிச்சிறப்பாகும். தாலாட்டுப் பாடல் நமக்கு இன்பத்தைத் தருவதாக இருந்தாலும், அதனை உற்று ஆழமாகக் கேட்கும்போது தாயின் மனக்கவலை, அவலம், துயரம் போன்றவை அலை அலையாக எழுவதைக் காண முடியும். மனித வாழ்வில் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் உடன்பிறப்புகளின் மரணம், தற்கொலை போன்ற சோகங்கள் தினசரி நிகழ்வுகளாகவே இருக்கின்றன. இத்தகைய வாழ்வியல் துன்பங்களை நெஞ்சுக்குள் தேக்கி வைக்காமல், உள்ளத்தில் எழும் சோக உணர்வுகளை வெளிக்கொணர உதவும் வடிகாலாக அமைபவையே ஒப்பாரிப் பாடல்களாகும். இப்பாடல்கள் மூலம் இறந்தவரின் வாழ்வையும் அவரது சிறப்புகளையும் உறவினர்களும் ஊர்மக்களும் பாடிப் போற்றுகின்றனர். மேலும், ஒப்பாரிப் பாடல்களில் ‘மடக்குகள்’ என்று சொல்லப்படும் சொற்களே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. 

இறந்தவருக்கும் ஒப்பாரி பாடுபவருக்கும் உள்ள உறவைக் காட்டும் சொற்களே மடக்குகள். கங்காணி, மகராசா, என்னைத் தேடிய சீமானே, என்னைப் பெற்ற அம்மா, என்னைப் பெற்ற ஆத்தா ஆகிய மேற்குறிப்பிட்ட விழிப்புகள் யார், யாருக்கு எவ்வாறு பாடப்பட வேண்டும் என்ற மரபு எழுதப்படாமலேயே உள்ளத்து உணர்வாகக் கொட்டித் தீர்க்கப்படுகின்றன.

இழப்பைக் கேட்டவுடன் பாடும் பாடல்கள், இறப்புக்குப் போய் பாடும் பாடல்கள், உறவுகளைக் கண்டவுடன் பாடும் பாடல்கள், நீர்மாலை எடுக்கப் போகும்போதும் வரும்போதும் பாடும் பாடல்கள், சீதேவி வாங்கும்போது பாடும் பாடல்கள், எண்ணரப்பு வைக்கும்போது பாடும் பாடல்கள், கொள்ளிக் குடம் உடைக்கும்போது பாடும் பாடல்கள் என ஒப்பாரி பாடப்படும் சந்தர்ப்பம் பல வகைப்படும். ஒரு காலத்தில் தப்பு இசையோடு ஒப்பாரி பாடுவர். இறந்த வீட்டுக்கு வருபவரைத் துக்க மனநிலையிலேயே வைத்திருக்கும் வகையில் தொடர்ச்சியாக ஒப்பாரிகளைப் பாடி முழங்குவர்.

ஒருவர் இறந்தவுடன் தோட்டத்தில் நிரந்தரமாக நியமிக்கப்பட்டிருக்கும் ‘ஓடும் பிள்ளைக்கு’ முதலில் தகவல் கொடுக்கப்படும். அவர் வந்தவுடன் யார், யாருக்கு எவ்வாறு தகவல் வழங்கப்பட வேண்டும் என்பது அங்கு முழுமையாகத் தீர்மானிக்கப்படும். அதில் முதலாவது தப்பு வாத்தியாருக்கு அல்லது குழுவுக்கு அறிவிப்பது மரபாக இருந்தது. 

ஆழ்மனதின் குமுறல்களாக வெளிப்படும் ஒப்பாரிப் பாடல்கள் பெண்களால் பாடப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ்நாட்டில் அதிகமாகப் பறை இசைக் குழுக்கள் ஒப்பாரிப் பாடல் குழுக்களாக இயங்கி, அதை ஒரு வாழ்வியல் கலையாக மாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. தம்மோடு இணைந்து வாழ்ந்து மறைந்த ஆன்மாவின் பிரிவும், அதனால் ஏற்பட்ட மனவலியும் தரும் துயரத்தைத் தணித்து ஆறுதலளிக்கும் சிறந்த வடிகால்களாகவே இப்பாடல்கள் பாடப்படும். அதேவேளை, கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ, பெற்றோரோ இறந்த பின் பேச முடியாத மன உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கும் ஓர் ஆறுதல் சக்தியாகவும் இந்த ஒப்பாரிப் பாடல்கள் திகழ்கின்றன.

அதோடு, சமூகத்தில் பெண்களின் பரஸ்பர ஒத்துழைப்பை வலியுறுத்தும் கூட்டு வாழ்வியல் முறையை உளவியல் ரீதியாக இப்பாடல்கள் பிரதிபலிப்பதால், ஒப்பாரி என்பது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாகவும் உருவெடுக்கிறது. இத்தகைய சமூகச் செயல்பாடுகள் அவற்றின் அசலான மண்மணம் குறையாமல் வெளிப்படுவதனால், ஒரு சமூகம் தன் பிரத்தியேகப் பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றுவதற்கு இந்த நாட்டார் வழக்காறுகளே மிக முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றன.

தமிழர் பண்பாட்டில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் இந்த ஒப்பாரிப் பாடல்கள் மூலம் நாட்டுப்புறப் பெண்கள் தமது ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். தமிழில் மட்டுமல்ல, சீனா, தாய்லாந்து, அயர்லாந்து, கிரீன்லாந்து போன்ற நாடுகளின் கலாசாரங்களிலும் இந்த ஒப்பாரிப் பாடல்கள் இடம்பெறுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மலையக மக்கள் உலகில் எந்த ஓர் இனத்தினரும் அனுபவிக்காத மன உளைச்சலுக்கும், உளவியல் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட இனமாவர். பாரம்பரிய நிலத்திலேயே வாழ்ந்து, அந்த நிலத்திலேயே அந்நியப்படுத்தப்பட்டு, சாதி ரீதியாக அடக்கப்பட்டு, அந்த நிலத்தை விட்டு அடிமைகளைப் போல 1820களில் கொண்டுவரப்பட்ட இந்தியத் தமிழர்கள் தமது முன்னோர்களின் வாய்மொழிப் பாடல்கள் மூலம் தமது வரலாற்றை இக்காலத்தில் பதிவு செய்தனர். 1820ஆம் ஆண்டிலிருந்து தங்களது பயணத்தை ஆரம்பித்த இவர்களில் அநேகர், கடல்வழியாகப் பயணித்தபோதே நீரில் மூழ்கித் தமது உயிர்களை இழந்தனர். உயிர் தப்பிய பலர் மன்னார் முதல் கண்டி வரை நடைபாதைப் பயணத்தில் பல காடுகளைக் கடந்து வரும் வழிகளில் இறந்துபோக, இன்னும் சிலர் மலேரியா நோய்க்குப் பலியாகினர். இன்னும் சிலர் விலங்குகளுக்கு இரையாகி மாண்டனர். எஞ்சியவர்களே மலையகத்தை வந்தடைந்தனர். இவ்வாறு எஞ்சியவர்கள் தாம் அடைந்த துயரங்களை, இழப்புகளை, ஏமாற்றங்களை, மனச்சுமைகளைத் தமது ஒப்பாரிப் பாடல்கள் மூலம் எடுத்தியம்பினர். மலையக வாய்மொழிப் பாடல்களில் மிகவும் உயிரோட்டமும் உணர்ச்சியும் மிக்க பாடல்களாக இவை திகழ்கின்றன.

அந்த வகையில் மலையக ஒப்பாரிப் பாடல்களில் கணவருக்காகப் பாடப்படுகின்ற பாடல்கள் இவ்வாறு காணப்படுகின்றன.

“காசி விசிறி வரும் 

கைலாச தீர்த்தம் வரும்

காசி மகராசருடன் நான்

கலந்து இருந்து வாழலையே

செஞ்சி விசிறி வரும்

தெய்வலோக தீர்த்தம் வரும்

செஞ்சி மகராசருடன்

நான் சேர்ந்து இருந்து வாழலையே”

“பூசைக்குப் பண்ணிய

பொண்ணு ஜெபமாலை

பூசை முடியலையே நம்ம

பூ உதிர வாழலையே”

“காசுக்கரிசி வாங்கி

கண்ணான கவளை வாங்கி

கண்ணார் சொக்கருக்கு

கைப்பூசை செய்து வந்தோம்”

“நம்ம பணத்தரிசி வேகலையே – ஐயோ

நம்ம பாவம் தொலையிலேயே

நம்ம காசரிசி வேகலையே நம்ம

கருமம் தொலையிலேயே”

“சீவும் பலகையிலே

சிங்கப்பூர் மெத்தையிலே நம்ம

சீதையும் ராமருமா

சேர்ந்து வாழலையே

படிக்கும் பலகையிலே

பஞ்சு நல்ல மெத்தையிலே

பாண்டியரும் தேவியரா நம்ம

பக்கத்துல வாழலையே”

“வளர்ந்த கல் மேல் நின்று

பார்த்து இருக்கையிலே

வலிக்கார எமன் வந்து

பாத குரடுக்க

பாசக் கயிறு போட்டு

பதறி இழுத்தானே உங்களைத்தான்

பார்வதியால் பக்கம் இருந்து

பதறிவிட்டேனே கண்ணீர

பொட்டுல ஆறு வகை

நான் வைக்கும் பூத்தமல்லி ஆயிரம்

புண்ணியரு இல்லா  

பொட்டு வகை நான் இழந்தேன்

பூத்தமல்லி நான் இழந்தேன்”

கணவனோடு சேர்ந்து வாழும்போது தான் வாழ்ந்த வாழ்வின் சிறப்பு, கணவனுடைய தன்மை, அவன் குழந்தைகளையும் உறவினர்களையும் பொறுப்புடன் கவனித்துக்கொண்ட விதங்கள் என்பனவும் இந்த ஒப்பாரிப் பாடல்களில் இடம்பெறும். பொதுவாக கணவனை இழந்த பெண்கள் சமூகத்தில் எவ்வாறு வாழப் போகிறார்கள்? அவர்களுடைய வாழ்வு எவ்வாறு அமையும்? தனக்கு யார் யார் பாதுகாப்பாக இருப்பார்கள்? தன் பிள்ளைகளை எவ்வாறு வளர்த்துக் கரை சேர்ப்பார்கள்? போன்ற மனக் கசிவுகள் இந்த ஒப்பாரிப் பாடல்களின் ஊடாக வெளிப்பட்டு நிற்கும்.

தாய் இறந்தபின் பாடப்படும் ஒப்பாரிப் பாடல்கள் பின்வருமாறு பாடப்படுகின்றன.

“மட்டப்பனை ஓலை 

என்னை பெத்த அம்மா

மயில் அடையும் பூஞ்சோலை

மயிலை வெரட்டினமோ

மயில் கூட்டைப் பிச்சோமோ

மயில் விடும் கண்ணீரு நம்ம

மாளிகையில் சுத்துதம்மா”

“குட்டைப் பனை ஓலை

என்ன பெத்த அம்மாவே

குயில் அடையும் பூஞ்சோலை

குயிலை விரட்டினோமோ

குயில் கூட்டைப் பிச்சோமோ அந்த

குயிலுவிடும் கண்ணீரு நம்ம

கோட்டை எல்லாம் சுத்துதம்மா”

“கொல்லிமலை ஓரம்

கோவை படர்ந்திருக்கும்

என்னை பெத்த அம்மாவே

கோவை கொடியறுக்க

கொலைகாரன் எங்கிருந்தான்

கோவை தழைக்காதோ

நீ பெத்த குழந்தையும் வாழாதோ”

“தெற்குக் கனவு கண்டேன்

தென்னை மரம் சாயக் கண்டேன்

திட்டத் தெரிஞ்சவங்க எனக்கொரு

தெரிஞ்ச வார்த்தை சொல்லலையே!”

“வடக்குக் கனவு கண்டேன்

வாழைமரம் சாயக் கண்டேன்

வடக்கே தெரிஞ்சவங்க 

எனக்கு ஒரு வார்த்தை சொல்லலையே!”

“மருத சீமை விளக்கு

மயிலாட ஏத்தும் விளக்கு

எரிச்சி அரிச்சிட்டேனே

தங்கசர விளக்கு

தங்காள ஏத்தும் விளக்கு

எட்டி எரிச்சிட்டேனே”

“எனக்கு வந்த சாமிகளா

அந்தக் கனவுகளை நினைக்கையிலே

உங்களுக்கு வந்த மயிலாலா

என் மனத்துயர எண்ணலையே…..

ஈச்சம் குருத்திலயோ

என்ன பெத்த அம்மா நம்ம

இனமெல்லாம் காட்டிலேயோ

நீ பத்து ஈஸ்வரியை விட்டு

இனி பிரிந்து போகும் முன்னே நீ பெத்த

உன்னிலிருந்து புலம்புகிறாளே!”

“தண்ணி தவிக்குதுன்னு

என்ன பெத்த அம்மா நாங்க

தங்க மலை போயிருந்தோம் அங்கே

தண்ணீரு இல்லாம

தாழம்பூ மரம் ஆனோம்

தாசிக்கை பூவானோம்”

“வெந்து தவிக்குதுன்னு நாங்க

வெள்ளிமலை போயிருந்தோம் அங்கே

வெந்நீரு இல்லாமல் 

வேங்கை மரமானோம்

வேசிகைப் பூவானோம்” 

தாயைப் பிரிந்து வாழும் பிள்ளைகள், மிகப் பெரிய ஏக்கத்துக்கும் துயரத்துக்கும் உள்ளாவர். படிக்கச் செல்லவும், அவர்களுடைய வேலைகளைக் கவனிக்கவும் யாராலும் முடியாது. எல்லோரும் தொழிலுக்குச் செல்வதால், ஒருவரின் பிள்ளைகளை இன்னொருவர் பாதுகாத்து வளர்ப்பது என்பது கடினமாகும். அதேவேளை, வயது போன காலத்தில் குடும்பத்தைப் பாதுகாத்து, பேரப்பிள்ளைகளைக் கண்போல் காத்து, அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்து வைக்கின்ற பெரும் பொறுப்புகளைத் தாய்மார்கள் கொண்டிருப்பார்கள். எனவே, அவர்களுடைய இறப்பு ஒரு குடும்பத்தை அச்சாணி கழன்ற தேர்போல் ஆக்கிவிடும்.

தந்தை இறந்த பின்னர் பாடப்படும் ஒப்பாரிப் பாடல்கள் இவ்வாறு அமையும்.

“கத்தரிக்காய் பச்சை நிறம்

என்ன பெத்த அப்பா

கருணர் கை பூமாலை

காத்தடிச்சி மங்காமே – நீ பெத்த 

மக்க கவலை வச்சி மங்குறோமே”

“வெள்ளரிக்காய் பச்சை நிறம்

என்ன பெத்த அப்பா

வீமர் கை பூமாலை

வெயில் அடிக்கு மங்காமே

நீ பெத்த மக்கள்

விசனம் வச்சி மங்குறமே”

“பொன்னும் விசுப் பலகே – நான்

போத்தும் தெய்வழகே – நீங்க 

போயிருந்து சேதி சொன்னா

பொழுதே விடிஞ்சி வரும்

பொன்னும் சர்வ கிண்ணம் நீ

போய்க் குளிக்கும் தெப்பக்குளம்

போய் குளிச்சு வீடு வந்த

புண்ணியரே எங்கே போனே”

தந்தையினுடைய இறப்பைத் தாங்க முடியாமல் கதறி அழும் பிள்ளைகளின் மனக்குமுறல்களாக இந்த ஒப்பாரிப் பாடல்கள் அமைகின்றன. தந்தை குடும்பத்தின் அச்சாணி. அந்தத் தந்தை இறந்த பிறகு பிள்ளைகள் எந்த அளவுக்குத் துயரத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை இப்பாடல்கள் பதிவு செய்கின்றன.

குடும்பத்தின் விலைமதிப்பற்ற செல்வமாகப் போற்றிக் கொண்டாடப்படும் ஒரு குழந்தை இறந்துபோகும் போது, அந்தப் பேரிழப்பானது அக்குடும்பத்தை மட்டுமன்றி, ஒட்டுமொத்த ஊரையே பெரும் சோகத்திலும் ஆறாத்துயரத்திலும் மூழ்கடித்துவிடுகிறது. அந்தக் குழந்தையை இழந்த பெற்றோர்களின் தவிப்பு மிகவும் வேதனை தரக்கூடிய நிகழ்வாகும். எனவே, குழந்தை இறப்பு என்பது மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படும் நிலையில் பாடப்படும் இப்பாடல்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.

“பூவாலை பாவை செய்து நம்ம

புள்ளை வச்சி கொஞ்சினாலும் இந்த

பூ பாவை பேசிடுமோ நம்ம

புள்ளை கலி தீந்திடுமோ”

“நடந்தேன் திருப்பதிக்கு

நாலு முகச் சந்நிதிக்கு

மண்ணாலே பாவை செய்தால்

மண்பாவை பேசிடுமோ”

“மரத்துக் கிளிகள் எல்லாம்

மைந்தர் வச்சி கொஞ்சுது ஐயா

மாதகைக்குப் பிஞ்சிறங்க நமக்கு

மாமாங்கம் சென்றிடுமோ…

மலராத பூவையின் கட்டிக் கரும்பே நான்

வடிவே மேலே வச்சிருந்தேன்

இன்னைக்கு 

மலர்ந்து வரும் நாளையிலே உன்னை

மண்ணுக்கோ ஒப்படைச்சேன்”

“பூக்காத பூவையின் பொன்னுமணியே

நான் 

பெட்டியிலே வச்சிருக்கேன்

இன்னைக்கு பூத்து வரும் நாளையிலே

ஒன்னை

பூமிக்கு ஒப்படைச்சேன்…”

பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு அந்திமக் கடன் செய்வதைப் போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை. அது எவருக்கும் தாங்க முடியாத வேதனையைக் கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகும்.

பிள்ளைகளைப் பெற்று, அவர்களை வளர்த்து ஆளாக்கி, வரும் காலத்தில் தம்மைப் பாதுகாப்பார்கள் என்று கனவு கண்டு, அதனையே தம் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு பிள்ளைகளை வளர்க்கின்றபோது, அவர்களை இழப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வலியிலிருந்து மீள்வது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல.

“வாழைப் பருவமல்லோ

உனக்கு வயது மிக சொற்பம் அல்லோ

தாலிக்கொரு நாள் பார்க்க

காவுக்கு ஒரு நாள் ஆச்சு

கூரைக்கோர் நாள் பார்க்க

கொள்ளிக்கோர் நாளாச்சு

மஞ்சளால கோலமிட்டு உன்னை

மண வறைக்கும் விடும் வேளையிலே

கரியாலை கோலமிட்டு உன்னை

கட்டைக்கு அனுப்புகிறேன்”

இத்தகைய ஒப்பாரிப் பாடல்கள் இழப்புகளைச் சந்தித்த குடும்பத்தின் மன அழுத்தங்களைக் குறைக்க உதவுகின்றன. குடும்பத்திலே உறவுகளுக்கு இடையிலே ஏற்படக்கூடிய இறுக்கங்கள், அழுத்தங்கள் அனைத்தும் கரைந்துபோக இந்த ஒப்பாரிப் பாடல்கள் சிறந்த வடிகால்களாக அமைகின்றன. தமது உள்ளத்தில் கிடக்கும் கவலைகளைப் பாடலினூடு கொட்டித் தீர்க்கின்றபோது, உள்ளம் ஓரளவு தெளிவு பெற்று, சமாதானம் அடையக்கூடிய மனநிலையைப் பெற்றுவிடும். ஒரு விதத்தில் இவை உளவியல் சார்ந்த மருத்துவமாகவும் அமையக்கூடியவையாகத் திகழ்கின்றன.

எமது முன்னோர்கள் இந்த ஒப்பாரிப் பாடல்கள் மூலமாக, மரணத்தின் ஆழமான துயரத்தை எதிர்கொள்வதற்கும் அதனை ஏற்கும் மனப்பக்குவத்துடனும் மன அமைதியுடனும் கடந்து செல்வதற்கும் தேவையான வழியினை இச்சமூகத்திற்கு வழங்கியுள்ளனர். நாட்டுப்புறப் பண்பாட்டின் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவுகளாகத் திகழும் இப்பாடல்கள், தவறவிடாமல் பதிவேடு செய்யப்பட வேண்டியவை ஆகும். ஒரு சமூகத்தின் இயக்கமும் அசைவும் அதன் வாழ்வியல் இருப்பை அடிப்படையாகக் கொண்டவை. அந்த இருப்பில் மரணம் என்பது பிரிக்க முடியாத, தவிர்க்க இயலாத ஓர் அங்கமாக மாறும் போது, மனிதர்களின் மனக் குமுறல்களும் ஆசைகளும் ஒரு வடிகால் மூலம் ஆறுதலடைய இத்தகைய நாட்டுப்புறப் பாடல்கள் பெருமளவில் துணைபுரிகின்றன. ஆகவே, இத்தகைய அரிய கலை வடிவங்களை முறையாகப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நமது மிக முக்கிய வரலாற்றுக் கடமையாகும்.

சான்றாதாரங்கள்

  1. வேலுப்பிள்ளை, சி.வி. மலைநாட்டு மக்கள் பாடல்கள். மகாவலி பிரசுரம், கொழும்பு.
  2. சிவலிங்கம், மு. (2007). மலையகத் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள். ரெக்னோ பிரிண்டர்ஸ்.
  3. சாரல் நாடன். (1993). மலையக வாய்மொழி இலக்கியம். சவுத் ஆசியன் புக்ஸ், சென்னை.
  4. கந்தையா, மு.சி. (2002). சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள். பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
  5. காதர், பி.ஏ. இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம். சமூக இயல் பதிப்பகம், லண்டன்.
  6. சிவலிங்க ராசா, எஸ். (2023). யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள். குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
  7. லூர்து, தே. (2008). நாட்டார் வழக்காற்றியல்.


About the Author

வேலாயுதம் இராமர்

வேலாயுதம் இராமர், கொ.புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கவிஞர், நாடகம், திரைப்பட நடிகர், மலையக நாட்டார் இலக்கிய செயற்பாட்டாளர் என பல்துறைசார்ந்து செயற்படுவதோடு மலையக கூத்து தொடர்பாகவும் செயற்பட்டு வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்