இலங்கையில் கண்ணகி வழிபாட்டுத் தலங்களும் சடங்குகளும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
32 நிமிட வாசிப்பு

இலங்கையில் கண்ணகி வழிபாட்டுத் தலங்களும் சடங்குகளும்

March 30, 2026 | Ezhuna

ஈழநாடானது தமிழகத்திலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட நாடாக அமைகின்ற போதும், பண்டைக்காலந்தொட்டே தமிழர்களின் மரபுத் தொடர்ச்சியான பண்பாட்டுக் கூறுபாடுகளை உடைய மண்டலமாக காணப்பட்டு வருகிறது. தொல்காப்பியம் சுட்டும் பல இலக்கண விதிகள் இன்று தமிழகத்தில் வழக்கில் இல்லாத போதும் ஈழத்தில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பண்பாட்டு வாழ்வியல்களின் அடிப்படையிலும் பண்டைத் தமிழரின் மரபுகள் பலவற்றை ஈழத்தில் காணவியலும். இந்நிலையின் தொடர்ச்சியாகவே பண்டைத் தமிழரின் சமயப் பண்பாட்டு மரபுகளையும் கருதலாம். அந்த வகையில், வடக்கே பருத்தித்துறைமுதல் தெற்கே தேவேந்திரமுனைவரை உள்ள தமிழ் மக்களிடமும், சிங்கள மக்களிடமும் காணப்படும் வழிபாட்டு முறைகளில் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படும் வழிபாட்டு மரபுகளை ஆய்வுப் பரப்பாகக் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும் காணப்படும் வழிபாட்டு மரபுகளில் இலங்கையில் இன்றளவும் வழங்கி வருகின்ற மரபுத் தொடர்ச்சியினை ஆராய்வதே ‘இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள்‘ எனும் இத் தொடரின் நோக்கமாகும். இத் தொடர், இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன என்னும் கருதுகோளினை அடையும். 

ஈழ நாட்டில் காணப்படும் கண்ணகி வழிபாட்டுத் தலங்களை இரு பிரிவுகளாக வகைமை செய்து கொள்ளலாம். தமிழர்கள் வழிபடும், தமிழரின் தாயகப் பகுதியில் காணப்படும் கண்ணகை அம்மன் கோயில்கள், சிங்கள மக்களால் வழிபடப்படும் பத்தினி தெய்வக் கோயில்கள் என்பனவாம் அவை. கண்ணகி வழிபாட்டின் தொன்மையினை இலக்கியங்களின் வழியும் அவ்வழிபாட்டுச் சடங்குகளின் வழியும் அறியலாம். கண்ணகி வழக்குரை, சிலம்பு கூறல், கோவலன் கதை என்பன கண்ணகி வரலாறு தொடர்பான பக்தி நிலையில் எழுந்த இலக்கியங்களாகும். இவ்விலக்கியங்களின் அல்லாமல் உடுக்கையடிச் சிந்து, அம்மானை, குளுத்திப்பாடல்கள், ஊஞ்சல் பாடல்கள், கலியாணப் பாடல்கள் என்பனவாக கண்ணகியம்மன் குறித்த இலக்கியங்கள் நீளும்.

அத்துடன் பழஞ்சிறப்பு வாய்ந்த கண்ணகி கோவில்களுக்குக் காவியம் என்ற இலக்கிய வகையும் உண்டு. இக்காவியங்கள் அவ்வவ்வூரிலுள்ள கண்ணகி அம்மனின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றன. ஒருவகையில் இவற்றைத் தலபுராணங்களின் சுருக்க வடிவமாகவும் தொன்மை வடிவமாகவும் கருதலாம். இவ்விலக்கியங்கள் அத்தலத்திற்கு கண்ணகி வந்த செய்தியினையும், கோயிலின் வரலாற்றினையும், கண்ணகியின் அற்புதச் செயல்களையும் வெளிப்படுத்துவனவாக அமைந்தவை. ஆண்டுதோறும் நடைபெறும் கண்ணகை அம்மன் சடங்கு என்றழைக்கப்படும் கண்ணகி கோயிற் திருவிழாக்களில் படிக்கப்படுபவை. இவ்விலக்கியங்களே ஈழத்தில் கண்ணகியின் பழமையான வழிபாட்டுத் தலங்களை அறிதலுக்குப் பெருந்துணை புரிகின்றன. பாடல் பெற்ற இருநூற்றுப்பத்தேழு சிவத்தலங்களைத் திருமுறைகளின் வழியும், நூற்றெட்டு வைணவத் தலங்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களின் மூலமும் அறிதல் போல, கண்ணகையம்மன் தலங்களை அறிதலுக்குக் கோவலனார் கதை, சிலம்பு கூறல், வழக்குரைக்காவியம், வசந்தன் கவிகள், உடுக்கையடிச்சிந்து முதலான நூல்கள் துணை செய்கின்றன. எண்ணிக்கையளவில் ஒவ்வொரு நூலிலும் சில தலங்கள் விடுபட்டும் பெயர் மாறுதலடைந்தும் உள்ளமையினைக் காணலாம். பழமையான கண்ணகி கோயில்களைச் சுட்டும் நூல்களில் தலையான நூலாகக் கருதப்படுவது கண்ணகி ஊர்சுற்று காவியம் என்னும் உடுக்கையடிச்சிந்து என்ற எழுபது பாடல்களைக் கொண்ட குறுநூலாகும். இது பெரும்பாலான கண்ணகியம்மன் கோயிற் சடங்குகளில் படிக்கப் பெறும் சிறப்பிற்குரிய நூலாகும்.

இந்நூலிலுள்ள கண்ணகி தலங்களின் வைப்பு முறையினை அங்கணாமக்கடவை, களுவாஞ்சிக்குடி, காரேறுசோலை, காரைநகர், காரைதீவு, தம்பிலுவில், வீரமுனை, பட்டிமேடு, கல்முனை, பாண்டிருப்பு, கல்லாறு, மகிழூர், எருவில், களுதாவளை, பழுகாமம், தோற்றாதீவு, செட்டிபாளையம், புதுவை, மகிழடித்தீவு, மண்முனைவூர், வந்தாறு மூலை, நீலாப்பழை, குளக்கண்டி, கதிர்நகர், சாகாமம், மல்லிகைத்தீவு, புதுக்குடியிருப்பு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, சிற்றாண்டி, போரதீவு, கதிர்காமம், மண்டூர் என்றவாறு கொள்ளலாம்.

ஈழத்துக் கண்ணகி தலங்களுக்கெல்லாம் தாய்த்தலமாக அங்கணாமக்கடவை குறிப்பிடப்பட்டுள்ளது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்த காலம், கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் அவ்விழாவில் பங்குபற்றினான். விழா நிறைவில் கண்ணகி சிலையுடன் இலங்கை வந்த கயவாகு, இலங்கையில் முதன்முதலாக கண்ணகி சிலையை நட்டு வழிபட்ட தலமாக அங்கணாமக்கடவை குறிப்பிடப்படுகிறது. அங்கண்ணம்மைக் கடவை என்ற ஊர்ப்பெயர் அங்கணாமக்கடவையாயிற்றென்பர். அங்கண் அம்மை என்பது கண்ணகியைக் குறிக்கும் பெயராகும். அங்கணாமக்கடவையில் கண்ணகிக்குக் கோயிலும் குளமும் எடுப்பித்த கயவாகு மன்னன், குளக்கரையில் கண்ணகியைத் தாம் வழிபடுவது போன்ற சிலையையும் வடித்தான். அச்சிலை 1974 ஆம் ஆண்டு வரை அங்கு இருந்ததாகவும், பின்னர் அனுராதபுரத்திலுள்ள அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் செ. கிருஷ்ணராசா குறிப்பிடுவார். பழந்தமிழரின் தொல்லியல் இடமான கந்தரோடைக்கருகில் இன்றும் அங்கணாமக்கடவை கண்ணகியம்மன் கோயில் அமைந்திருக்கக் காணலாம்.

“பத்தியொடு வருவோர்கள் இடரகல அருள்கோண்டு

பண்டுசெறி தம்பிலுவில் பட்டிமாநகரம்

மொய்த்த புகழ் வீரமுனை கல்முனை கல்லாறு

மகிழூர் செட்டிபாளையம் எருவில் மண்முனையூரும்

வைத்த மகிழடிச்சோலை முதலைக்குடா

வளமை வரு புதுக்குடி நகரமொடு வந்தாறுமூலை

இத்தனை தலங்களிலும் அங்கணா மங்கடவை

என வந்து காரைநகர் இனிதிருந்தவளே”

இந்நூலிற் காணப்படும் எழுபது பாடல்களின் வரிசைமுறையில் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. மட்டக்களப்புத் தமிழகத்திலுள்ள தலங்களை வகைமைப்படுத்தும் இந்நூலின் பாடலில், அங்கணாமக்கடவையில் உள்ள கண்ணகியே மேற்கண்ட மட்டக்களப்புக் கோயில்களை அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளமை எண்ணத்தக்கதாகும். சைவத் திருக்கோயில் மரபில் கோயிலென்றால் தில்லைச் சிற்றம்பலத்தையே குறிக்கும். சிற்றம்பல இறைவனே மற்றைய அம்பலங்களிலெல்லாம் உறைகின்றான் என்னும் கருத்தமையப் பாடப்பெற்றதே சேத்திரக் கோவை, ஊர்த்தொகை என்பனவான பதிகங்களாகும். இப்பதிகங்களே ஒவ்வொரு நாள் இரவும் சிற்றம்பலத்தில் பாடப்படுவனவுமாகும்.

“காட்டூர்க்கடலே! கடம்பூர்மலையே! கானப்பேரூராய்!

கோட்டூர்க்கொழுந்தே! அழுந்தூர்அரசே! கொழுநல் கொல்ஏறே!

பாட்டுஊர் பலரும்பரவப்படுவாய்! பனங்காட்டூரானே!

மா(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே!

இப்பாடலை ஒத்ததாகவே ஊர்சுற்றுக் காவியப்பாடல்களும் உள்ளன. ஈழம் முழுவதும் உள்ள கண்ணகி கோயில்களை ஒருங்கிணைப்பதாக இப்பாடல்களின் பொருண்மை அமையக் காணலாம். இப்பாடலில் நாம் ஆராய வேண்டிய சிலவற்றினைக் காண்போம்.

காரைதீவு என்னும் ஊர் வடக்கிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சூழ்ந்துள்ள தீவுகளுள் ஒன்றினையும் கிழக்கின் மட்டக்களப்பின் ஓர் ஊரினையும் (விபுலானந்த அடிகள் பிறந்த ஊர்) குறிப்பதாகும். இரண்டு ஊர்களிலும் கண்ணகி கோயில் உண்டு. ஆதலால் இங்கு குறிப்பிடப்படும் காரைநகரினையும் காரைதீவினையும் தெளிவு செய்து கொள்ளல் வேண்டும்.

மண்முனையூர் என்னும் இப்பாடலில் குறிப்பிடப்படும் ஊரானது இன்று மட்டக்களப்பில் மண்முனை என்று வழங்கப்படுகின்றது. ஆனால் இன்று இவ்வூரிலே கண்ணகி கோயில் இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டளவில் மண்முனையூரில் ‘வைசூரி’ என்னும் கொள்ளைநோய் தாக்கி மக்கள் பலர் மடிந்தனர். இந்நிலையில் அவ்வூரினர் தங்களது கண்ணகி கோயிலின் திருச்சின்னங்களுடன் அவ்வூரை விட்டகன்று ஆரையம்பற்றையில் குடியேறி, தாங்கள் காவி வந்த கண்ணகியின் திருச்சின்னங்களை நிறுவிக் கோயில் செய்து வழிபட்டனர். ஆதலாலேயே பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கண்ணகி பாடல்களில் ஆரையம்பதி என்னும் ஆரையம்பற்றை இடம்பெறவில்லை எனலாம்.

ஆயிரத்து அறுநூறுகளில் இயற்றப்பட்ட தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்ச்சுற்றுக் காவியம் மட்டக்களப்பில் உள்ள முப்பது கோயில்களைக் குறிப்பிடுகின்றது. அந்நூலும் முதற்கோயிலாக அங்கணாமக்கடவையினையே குறிப்பிட்டுச் செல்கிறது. பட்டிமேடு கண்ணகை அம்மன் காவியமும் அத்தன்மையதே.

சேரவேந்தன் செங்குட்டுவன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையை சந்தனப் பேழையில் வைத்துக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனிடம் கொடுக்க, அவன் இலங்கைக்கு வந்து அச்சிலைக்கு வழிபாடு நடத்திய முதற்றலம் அங்கணாமக்கடவை என்றும், அச்சிலையே பல ஊர்களின் வழி கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது என்றும் பின்வரும் கதையாடல்களில் காணலாம்:

“சந்தன மரத்தால் செய்த கண்ணகி உருவத்தையும் ஒரு சிலம்பையும் சந்தன மரப்பலகையால் செய்த பேழையில் வைத்துக் கயவாகுக்குச் செங்குட்டுவன் கொடுத்தான். பாண்டிய அரசன் வெற்றிவேற்செழியன் யானைமேல் சந்தனப் பலகையால் செய்த பெட்டியையும் அரசனையும் ஏற்றி வேதாரணியத்தில் கொண்டு வந்து விட்டான். அங்கிருந்து கப்பலில் காரைதீவுக்கும் கீரிமலைக்கும் இடையிலுள்ள திருவடிநிலையில் இறங்கினார்கள். யானைப்பவனிக்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் அங்கே நின்றன. திருவடிநிலையிலிருந்து யானை ஊர்வலம் மாசியப்பிட்டி வழியாய் அங்கணாமைக்கடவைக்கு வந்தது. அங்கே முதலாவது ஆராதனை நடத்தப்பட்டது.

அங்கிருந்து நாவற்குழியை அடுத்துள்ள வேலம்பறை என்னுமிடத்திற்கு வைகாசிப் பூரணையன்று வந்து சேர்ந்தது. பூரணை விழா அங்கு நடந்தது. கரம்பகம், கோவிற்குளம், நாகர்கோவில், வன்னிப்புட்டுக்குளம், விழாங்குளம், முள்ளியவளை, வற்றாப்பளை, சாம்பல்தீவு, திருகோணமலை, தம்பலகாமம், பாலம்போட்டாறு, நீலாப்பளை வரையும் யானை ஊர்வலம் சென்றது.

நீலாப்பளையிலிருந்து தாவளமாட்டின் மூலமாகக் கோராவெளி கொக்கட்டி மூலைக்கு சந்தனப் பலகையால் செய்த அம்மன் பெட்டி கொண்டு செல்லப்பட்டது. கிளிவெட்டிக்கு நீலாப்பளையிலிருந்து தாவளமாட்டின் மூலமாக வந்தது.

தாண்டவன்வெளி, வந்தாறுமூலை, ஈச்சந்தீவு, கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, மகிழடித்தீவு, மண்முனை, தாழைநகர், காத்தநகர் (ஆரையம்பதி), புதுக்குடியிருப்பு, செட்டிபாளையம், எருவில், மகிழூர், கல்லாறு, கல்முனை, வீரமுனை, காரைதீவு, பட்டிமேடு, தம்பிலுவில், பாணமை, கதிர்காமம், கண்டிவரை கொண்டு செல்லப்பட்டது. கண்டியில் ஒரு கோவில் கட்டி சந்தனப் பலகையால் செய்த பெட்டி சேமிக்கப்பட்டது. தலதா மாளிகையிலுள்ள பத்தினி கோவிலில் சந்தனப் பலகையால் செய்த பெட்டி சேமிக்கப்பட்டுள்ளது.”

கண்ணகி சிலையைக் கொண்டு செல்லும் போது இடையில் தங்கி வழிபட்ட இடங்களிலெல்லாம் பிறகாலத்தில் கோயில்கள் கட்டப்பட்டன எனலாம். கோவலன் கதை முதலான சில நூல்களில் அங்கணாமைக்கடவை முதற்கோயிலாகக் குறிப்பிடப்படவில்லை. இதனை,

“சீருற்ற மதுரைநகர் மாறனுடை அகந்தையால்

செப்புக் குடத்தில் மாங்கனிய தாகி

செழியனுடன் வாதாடி சிலம்பினாற் றீப்பரப்பி

காருற்ற அனலை தீவுதனில் வந்து

பெண்பனையை ஆண்பனையாக்கி

ஆண்பனையை ஈஞ்சாக்கியே

பேருற்ற திப்படிக் குன்புதுமை

பின்பேசும் அன்னையே

பெருமை ஊரெழு உடுவில் மாவிட்டபுரம்

ஊர்பெருகும் அச்செழுப் பதிதன்னிலும்

ஊருற்ற மட்டுவில் நுணாவில் வேலம்பிராய்

உயர்வேலம் மண்டுவில் கச்சாய்

கரம்பகம் போக்கட்டி விழுபளை

அம்பாவளை அறத்தி திரியாய் ஓங்கு

வற்றாப்பளை தன்னில் வந்து

உப்புத் தண்ணீரை விளக்கெண்ணெயாக்கி

எங்கெங்கு மங்கங்கதாய் நின்றொளிர்கின்ற

கண்ணகைச் செல்வியாரே.”

என்ற கோவலன் கதைப்பாடலால் அறியலாம். இப்பாடலில் அனலைதீவு முதற்கோயில் கொண்ட இடமாக முன்வைக்கப்படுகின்றது. இதனைப் போலவே மாதனைக் கண்ணகை அம்மை பாடலும் தேவதுறை தம்பாலையை முதற்கோயிலாகக் குறிப்பிடுகின்றமையைக் காணலாம். அனலைதீவு, நயினாதீவு என்பனவற்றினூடாகக் கண்ணகி வழிபாடு யாழ்ப்பாணக் குடாநாட்டினுக்குள் நுழைந்திருப்பினும் அங்கணாமைக்கடவையே முதலும் மூலமுமான கோயிலாக அமைந்திருக்கும் என்பதற்குச் சில புறச்சான்றுகளையும் கொள்ளலாம். கடவை என்னும் சொல் வழிப்பாதையைக் குறிப்பதும், மாசியப்பிட்டி முதலான இடங்களின் வாணிபச் சார்பும், வழுக்கையாற்றுப் பகுதியில் கிடைத்த பாண்டியன் பெருவழுதி நாணயங்களும், கந்தரோடையின் அருகாமையும், அங்குள்ள கண்ணகி கோயிலின் சூழலும் இவ்விடத்தின் வரலாற்று முதன்மையை உறுதிசெய்யும்.

கண்ணகி கோயிற் தலங்களின் தொகையினைப் பாடல்களில் பாடும் மரபானது தங்களது சமய வழிபாட்டு மேலாண்மையினை வெளிப்படுத்துவதற்கும், அடியார்களை அத்தலங்கள் யாவற்றிற்கும் சென்று வழிபடச் செய்து ஒரு சங்கிலித் தொடர் இணைப்பை ஏற்படுத்துவதன் வழி தங்களது பண்பாட்டு மரபினைப் பாதுகாத்தலுக்கான தகவமைப்பினைப் பெறுதலுக்கும் வழியினைச் செய்கின்றதெனலாம். அதனாலேயே தலங்களை அடிப்படையாகக் கொண்டு ஊர்த்தொகை, திருநாட்டுத்தொகை, சேத்திரக்கோவை முதலான பதிகங்களைச் சைவக்குரவர்கள் செய்தார்கள் எனலாம். இதனை ஊர்சுற்றுக் காவியம் போன்றவற்றின் மரபிலும் காணலாம்.

இந்நூல்கள் அல்லாமல் கோவலன் கதைப்பாடல்கள் முதலியவற்றின் வழி அனலைதீவு, நயினாதீவு, கரம்பன், புங்குடுதீவு, வேலணை, கட்டுடை (சீரணி), மாசியப்பிட்டி (அங்கணாமைக்கடவை), கந்தரோடை, ஊரெழு, உடுவில், மாவிட்டபுரம், அம்பாவளை, துவளி, வாணாவெட்டி, வேம்பிராய், நுணாவிற்குளம், பன்றித்தலைச்சி, மட்டுவில், சுட்டிபுரம், போக்கட்டி, கச்சாய், செல்லியாதீவு, பொறிக்கடலை, மிருசுவில், கரம்பகம், விழுபளை, நாகர்கோயில், அறத்தி, திரியாய், கண்ணகை தோட்டம், கன்னார்வயல், கலவெட்டித்திடல், வன்னிப்புதுக்குளம், வன்னிவிளாங்குளம், கல்லிருப்பு, முள்ளிப்பளை, வற்றாப்பளை, சாம்பற்றீவு, திருகோணமலை, பாலம்பட்டாறு, தம்பலகாமம், ஆரையம்பதி, கோராவெளி, கொக்கட்டிச்சோலை, பட்டிமேடு, தம்பிலுவில், காரைதீவு, வீரமுனை, கல்முனை, கல்லாறு, மகிழூர், எருவில், செட்டிபாளையம், புதுக்குடியிருப்பு, முதலைக்குடா, சிற்றாண்டி, வந்தாறுமூலை என்பனவான நிலையில் ஈழத்துக் கண்ணகித் தலங்கள் ஓர் ஒருங்கிணைவில் உள்ளமையினைக் காணலாம்.

ஆசீவகம், பௌத்தம், கண்ணகி வழிபாடு, எழுமங்கை வழிபாடு முதலிய சமய மரபுகளைச் சோழ நாட்டிற்கும் ஈழ நாட்டிற்கும் இடையே பரிமாறிக் கொள்ளும் தலங்களாக அனலைதீவு, நயினாதீவு (மணிபல்லவம்), காரைதீவு முதலியன அமைந்தன எனலாம்.

ஈழத்தில் வழங்கும் கண்ணகி வழிபாட்டு நூல்களை உற்றுநோக்குகின்ற போது கண்ணகி வழிபாட்டு மரபானது வடஇலங்கையிலிருந்தே தென்கிழக்கு நோக்கி நகர்ந்தது எனலாம். கிழக்கிலும் மிகுதியான கண்ணகி கோயில்கள் இன்றளவும் வடக்கில் காணப்படுகின்றன எனலாம். ஆயினும் கண்ணகி வழிபாட்டு மரபின் சிறப்புகள் இன்றும் செறிவுடன் விளங்குவது கிழக்கிலங்கையிலேயே எனலாம்.

எவ்வகையிலாயினும் ஈழத்துக் கண்ணகி வழிபாட்டுத் தலங்களை வரைபடத்தில் புள்ளியிட்டுக் காணுகின்ற போது முத்துகளை வரிசைப்படுத்தியமை போன்ற பண்பாட்டு மரபின் இருவழிப்பாதையினைக் காணலாம். திருமுறைத் தலங்களை வரிசைப்படுத்துவது போலவே கண்ணகி வழிபாட்டுத் தலங்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது தலமாக அங்கணாமைக்கடவையும், பத்தாவது தலமாக வற்றாப்பளையும் வடஇலங்கையில் அமைகின்றன.

திருக்கோயிலும் திருமேனியும்

தொடக்ககால ஈழத்துக் கண்ணகி கோயில்கள் எளிமையான அமைப்பிலேயே காணப்பட்டன. கருவறையில் கண்ணகியார் திருவுருவமும், காவல் தெய்வங்களான வைரவ வடிவங்களும் இடம்பெற்றிருந்தன. கோயில்களின் கருவறையின் மேல் விமானங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இராசகோபுரங்கள் அமைக்கப்படவில்லை. கோயிலின் முன் தாமரைக் குளங்களே சுனையாகக் காணப்படும். பெரும்பாலான கண்ணகி கோயில்கள் நாக வழிபாட்டுடன் தொடர்புடையனவாகவே அமைந்துள்ளன. தமிழகத்திலும் கேரளத்திலும் உள்ள கண்ணகி கோயில்களிலும் இவ்வமைப்பினைக் காணலாம். கேரளத்துக் கொடுங்களூர் கோயில், ஆற்றுக்கால் பகவதி கோயில் முதலியவற்றிலும், கொங்கு நாட்டில் திருச்செங்கோட்டிலும் உள்ள தலத்திலும் நாக வழிபாடு சிறப்பு நிலையில் உள்ளமையினைக் காணலாம். திருச்செங்கோட்டு மலையில் அறுபதடி நீளமுடைய நாகர் சிற்பம் அமைந்துள்ளது. இம்மலையும் நாகமலை, நாகாச்சலம் என குறிப்பிடப்படுதலினைக் காணலாம். அதனையொப்பவே ஈழத்துக் கண்ணகி கோயில்களும் நாக வழிபாட்டுடன் தொடர்பு பெற்று உள்ளன.

பொதுவாகக் கண்ணகி கோயில்கள் மக்கள் வாழும் பகுதியைத் தவிர்த்து சற்று தொலைவிலேயே அமைக்கப்பட்டன. தூய நிலையைப் பேணுதலையும் இறையச்சத்தையும் இதற்கான காரணங்களாகக் கொள்ளலாம்.

கண்ணகையாரின் திருவுருவச் சிலையின் பழைய வடிவமாக இலண்டன் அருங்காட்சியகத்திலுள்ள சிலையினைக் கொள்ளலாம். இச்சிலையின் அமைப்பும் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு எடுத்த சிலையின் அமைப்பும் திருச்செங்கோட்டிலுள்ள சிலையின் அமைப்பும் பல ஒத்த தன்மைகளை உடையன. சடாமகுடம் போன்ற உயர்ந்த கொண்டை அமைப்பானது மேற்குறிப்பிட்ட மூன்று சிலைகளுக்கும் பொதுவாக அமையக் காணலாம். இச்சிலைகள் இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றன.

மட்டக்களப்புச் சிலையின் வலது கை கீழ்நோக்கிய அருள்பாலிக்கும் நிலையிலும் இடக்கை சின் முத்திரையுடனும் காணப்படுகின்றது. திருச்செங்கோட்டுத் திருமேனியின் வலது கையானது வலது இடையில் தண்டத்தை ஊன்றிப் பிடித்த நிலையிலும், இடது கை குடக்கையாக இடது இடையில் ஊன்றியவாறு ஆபங்கமாக நின்ற நிலையில் காணப்படுகின்றது.

செங்குட்டுவன் எடுப்பித்த சிலை இமயத்துக் கல்லினாலானது; மிகுதியான அணிகலன்களையுடையது. மட்டக்களப்புச் சிலை உலோகத்தாலானது. திருச்செங்கோட்டுத் திருவுரு வெள்ளைப் பாசானத்தால் ஆனது. மூன்று சிலைகளும் இடை சிறுத்து நெளிவு (ஆபங்க) நிலையில் உள்ளன. பொதுவாக கண்ணகி சிலைகள் இடது முலையற்ற நிலையில் காணப்படும் என்ற கருத்துண்டு; இது பிழையானது. இறைத்திருமேனிகளை அங்கக்குறையுடன் அமைப்பது தமிழ்ச் சிற்ப மரபில்லை.

திருச்செங்கோட்டுத் திருவுரு ஈராயிரம் ஆண்டுக் காலப் பழமையானதாலும் வெள்ளைப் பாசானத்தால் ஆனபடியாலும் தொடர்முழுக்காலம் (அபிஷேகம்) காரணமாக உருவம் கரைந்த நிலையில் காணப்படுகின்றதெனலாம். இம்மூன்று பகுதிகளைச் சேர்ந்த வெவ்வேறு மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இம்மூன்று கண்ணகி சிலைகளும் வடிவ அமைப்பில் ஒப்புமை பல பெற்றுக் காணப்படுவது கண்ணகி வழிபாட்டில் இருந்த தனித்தன்மையினை உணர்த்துவதாக அமையக் காணலாம். இம்மூன்று திருமேனிகளும் ஒரு வகை கம்பீர மிடுக்குடனேயே காணப்படுகின்றன.

போர்த்துக்கீசியர் ஆட்சியில் ஈழத்திலுள்ள வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு சிதைக்கப்பட்டன. அவற்றில் கண்ணகி கோயில்களும் அடங்கும். சில இடங்களில் கண்ணகி கோயில்களுக்கு மாற்றாக மாதா கோயில்களும் அமைக்கப்பட்டதாகக் கூறுவர் (மடு). அவற்றை இங்கு விவரித்தால் விரியும்; பிறிதோரிடத்தில் காணலாம்.

பிற்காலத்தில் மூலத் திருவுருவற்ற நிலையில் பன்றித்தலை, வற்றாப்பளை முதலான கோயில்களில் வெள்ளியாலான முகப்படத்தைக் கும்பத் தேங்காயில் வைத்து வழிபடும் வழமையும் ஏற்பட்டதெனலாம். சான்றாக 1750 ஆம் ஆண்டு பன்றித்தலைச்சியில் சிதைந்த நிலையிலிருந்த கண்ணகி கோயிலை நாகர் கதிர்காமர் என்பவர் வெண்கற்களால் கட்டி எழுப்பி திருப்பணி செய்தார். அக்கோயிலில் தொடக்கத்தில் சிலை நிறுவாமல் ஒரு பீடம் அமைத்து, அப்பீடத்தின் மேல் தொங்கக்கூடிய தூண்டாமணி விளக்கினைக் கொழுவி ஏற்றி வழிபட்டனர். நாள்தோறும் பதினைந்து குடம் நீர் கொண்டு அப்பீடத்தினைக் குளிர்வித்தனர். அதற்கு அடுத்த நிலையில் தேங்காய்க் கும்பத்தில் வெள்ளியாலான முகப்படம் செய்வித்து கண்ணகியாக வழிபட்டனர். பின்னாளிலேயே அங்கு சிலை வழிபாடு தோன்றியது எனலாம். இது உருவமற்ற அருவ நிலையிலும் அதனிலிருந்து மாறுபட்டு ஒளிவடிவிலும் கண்ணகி வழிபாடு நடைபெற்றமைக்கான சான்றாகும். முன்னோர் வழிபாட்டு மரபிலும் இவ்வழமையினைக் காணலாம். இதனை ‘எழுந்தருளச் செய்தல்’ என்ற வழிபாட்டு முறையாகக் கொள்ளலாம்.

பெரும்பாலான ஊர்சுற்றுக் காவியங்களில் குறிப்பிடப்படுகின்ற கண்ணகி தலமாக அமைவது மண்முனை என்னும் தலமாகும். ஆனால் இக்காலத்தில் மண்முனையூரில் கண்ணகி கோயில் இல்லை. கண்ணகி கோயில் இருந்தமைக்கான அடையாளங்கள் சற்றும் இல்லை. இதுபோலவே இன்று கிழக்கில் புகழ்பெற்ற கோயிலாகப் போற்றப்படும் ஆரையம்பதி கண்ணகி கோயில் குறித்த செய்தி பழைய காவியங்கள் எதிலும் காணப்படவில்லை. அதனால் இத்தலமானது இந்நூல்கள் எழுதப்பட்ட காலத்திற்குப் பிறகு எழுந்திருக்க வேண்டும்.

கண்ணகி வழிபாட்டின் சிறப்பு நிகழ்வாக அமைவது கண்ணகிக்கான திருவிழாவாகும். பெரும்பாலான கோயில்களில் வைகாசி மாதம் நிறைமதியை அடிப்படையாகக் கொண்டே இந்நிகழ்வானது நடைபெறும். விசாக நட்சத்திரம் வைகாசி நிறைமதி நாளில் அமையும். சில கோயில்களில் வைகாசி முழுமதி நாளினை அடுத்துவரும் திங்கள் கிழமையினை அடிப்படையாகக் கொண்டு திருவிழாவினை நிகழ்த்துவர். “வைகாசித் திங்கள் வருவேனென்று உரைத்தலான்” எனச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் வைகாசித் திங்கள் என்பது வைகாசி மாத நிறைமதி நாளினையே குறிக்கும். அல்லாமல் பூரணையை அடுத்துவரும் திங்கற்கிழமை என்பது ஏற்புடையதாகாது. ஏனெனில் ஒரு மாதத்தில் ஒரு கிழமையானது நான்கு முறையோ ஐந்து முறையோ இடம்பெறும் (ஒரு மாதத்தில் திங்கள் கிழமை நான்கைந்து முறை வரும்). ஆதலால் குழப்பம் மிகும். திதியினை அடிப்படையாகக் கொண்ட திருவிழாக்களே குழப்பமற்ற நிலையில் தமிழ் மரபில் கொண்டாடப்பட்டு வருகின்றமையைக் காணலாம்.

இக்கண்ணகி விழாவினை வைகாசிப் பொங்கல், வைகாசிச் சடங்கு, வைகாசிக் குளுத்தி என அழைப்பர். கண்ணகி திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக நிகழ்வது பெரும் பொங்கல் நிகழ்வாகும். மக்களும் தங்களது நேர்த்தியைப் பொங்கலிடுதலின் வழி நிறைவேற்றுவர். கேரளத்திலுள்ள பழைய கண்ணகி கோயில்களிலும் பொங்கல் முதன்மை பெறக் காணலாம். மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் பொங்கல், ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிற் பொங்கல் என்பனவற்றைச் சான்றாகக் கொள்ளலாம். இலங்கையிலும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் திருவிழாவானது “பெரும் பொங்கல்” என்றே அழைக்கப்படுகின்றது.

சிங்கள மக்கள் கண்ணகிக்கான திருவிழாவினை ஆடி மாதமே கொண்டாடுகின்றனர். புகழ்பெற்ற கண்டிப் பொரஹரா திருவிழாவானது ஆடி மாதமே நடைபெறுகின்றது. இலங்கையிலும் தமிழகத்திலும் அம்மன் கோயில்களில் ஆடி மாதமே கூழ் ஊற்றுதல் நிகழ்வானது நடைபெறுகின்றது. இக்கூழ் ஊற்றுதல் நிகழ்வானது கண்ணகியை ஆற்றுவித்தல் நிகழ்வுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகின்றது. கண்ணகி மதுரையை எரித்தது ஆடி மாதத்திலேயே. அவ்வாறு மதுரையை எரித்த கண்ணகியின் சினத்தைக் குளிர்விப்பதாக இக்கூழ் ஊற்றுதல் நிகழ்வினைக் கருதலாம். இன்றும் அம்மனின் சினத்தைத் தணிப்பதற்காகவே கூழ் ஊற்றுவதாக அடியார்கள் குறிப்பிடக் காணலாம். கண்ணகியைக் குளிர்வித்தல் பொருட்டு எழுந்த கஞ்சி வார்ப்பு நிகழ்வுகள் இலங்கையில் நிகழ்தலுண்டு. இதனைப் பல கோயில்களிலும் பாடப்பெற்ற கஞ்சி வார்ப்புப் பாடல்களால் அறியலாம்.

“மங்கள நாயகியின் புன்னகை யிலே 

தங்குமருள் பொங்கியெழும் புண்ணியர்களே

கொதிக்கு முள்ளம் குளிந்துவிடும் குளிர்த்தியைச் செய்ய

கதித்தெழுந்து வாருங்களேன் கண்ணகியாள் வாசல்

பட்டினத்து மங்கையெல்லோ கண்ணகிப்பாவை 

தொட்டுப்பாதம் சூட்டவாரீர் தொண்டருள்ளீரே

சீறும் வினைத் தொடரைச் சாடிடுவாள் அம்மை

மாறும் பிறவியுமே கஞ்சிவார்ப்புச் செய்ய

கூறுபுகழ் மாவைநகர் வீணியவரைத் தாயாள்

வீறுபுகழ் பாடிப்பாடிச் சேர வாருமே.”

(மாவிட்டபுரம் விணியாவரை கண்ணகி அம்மை காஞ்சி வார்ப்புத் தண்டற் பாட்டு)

சடங்கின் முதல்நாளாக திருக்கதவு திறத்தல் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்விற்கு முன்பே ஊரிலுள்ள மக்கள் தங்களது வீடுகளையும் தெருக்களையும் துப்புரவு செய்து தயாராகுவர். திருவிழா முடியும் வரை அம்மிதட்டுதல், நெல்குத்துதல், மாவிடித்தல், புலாலுண்ணல் போன்ற செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன. மாரியம்மன் கோயில், திரௌபதியம்மன் கோயில், காளி கோயில் போன்றவற்றின் திருவிழா தொடக்கங்கள் பொதுவாக பூச்சாட்டுதல், பூப்போடுதல், காப்புக்கட்டுதல் போன்ற சடங்குகளால் குறிக்கப்படுகின்றன. ஆனால் கண்ணகி கோயில்களில் கதவு திறத்தல் என்பதே திருவிழாவின் முக்கிய தொடக்கச் சடங்காக அமைகிறது. அன்றாட கோயில் பூசைகளில் கதவு திறத்தல் நிகழ்வுகள் இடம்பெற்றாலும், பல கண்ணகி கோயில்களில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே கதவு திறந்து விழா நடத்தி, குளுத்திப் பாடலுக்குப் பிறகு கதவு மீண்டும் அடைக்கப்படும் பழைய முறை காணப்படுகிறது. அதன் பின்னர் அடுத்த ஆண்டிலேயே மீண்டும் கதவு திறக்கப்படும்.

பொற்கொல்லர் சமூகத்தைச் சேர்ந்தோர் கண்ணகி வழிபாட்டில் ஈடுபடமாட்டார்கள் என்ற கருத்தும் சில இடங்களில் நிலவுகிறது. இதனுடன் தொடர்புபடுத்தி “வருடத்துக்கொரு பூசையும் வௌவால் அடைந்த கோயிலும்” என்ற பழமொழியும் கூறப்படுகிறது. அதாவது கண்ணகி வழிபாடு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுவதால், மற்ற காலங்களில் கோயில் பூட்டப்பட்டு வௌவால்களின் குடியிருப்பாக இருக்கும் என்பதே அதன் பொருள். பொதுவாக இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சில இடங்களில் மாறுபாடுகளும் காணப்படுகின்றன. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் பன்றித்தலைச்சி என்ற இடத்திலுள்ள கண்ணகி கோயிலில் விஜயதசமி நாளன்று கண்ணகியார் அருகிலுள்ள மருதடி பிள்ளையார் கோயிலுக்கு எழுந்தருளுவார். அப்போது வாழை வெட்டி நிகழ்வு நடைபெறும்; பின்னர் அருகிலுள்ள சோடிக்கப்பட்ட பந்தலில் அம்மன் எழுந்தருளி பூசைகளும் இசைக்கச்சேரிகளும் நடைபெறும். இந்நிகழ்வு ‘மானம்பு விழா’ என அழைக்கப்படுகிறது. இவ்விழாவை பொற்கொல்லர்களே நடத்துவதாகவும், அதேபோல் சீர்வக்காவு கண்ணகி கோயிலையும் பொற்கொல்லர்கள் பராமரிப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

திருக்கதவு திறத்தல் நிகழ்வு மேளதாளங்களுடனும் மங்கள இசையுடனும் நடைபெறும். கட்டாடியாரைத் தொடர்ந்து மக்கள் கோயிலுக்குள் வருகை புரிந்து திருக்கதவு திறப்புச் சடங்கு நிறைவேற்றப்படும். இதனுடன் அம்மானைக் காயுருட்டி விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெறும். திருக்கதவு திறந்த பின்பு நடைபெறும் அடுத்த முக்கிய நிகழ்வு கலியாணச் சடங்காகும். இச்சடங்கின் ஆரம்ப நிகழ்வாக ‘கொம்பு முறித்தல்’ நடைபெறும். திருக்கதவு திறந்த நாளின் பிற்பகலில் கட்டாடியார், தெய்வக்காரர் மற்றும் ஊர்ப்பெரியோர் ஆகியோர் ஒன்றுகூடி, துப்புரவான இடத்தில் உள்ள பூவரசு அல்லது வேம்பு மரத்தின் கீழ் மடை வைத்து பூசை செய்து மரத்தின் கொப்பை மண்ணில் படாமல் வெட்டுவர். பின்னர் அதன் பட்டையை உரித்து மஞ்சள் பூசி வெள்ளைத் துணியில் சுற்றி கோயிலுக்குக் கொண்டுவந்து காலாக நட்டு மாலை அணிவித்து கலியாணச் சடங்கு நடத்துவர். அன்றிரவு கூறை, தாலி, அணிகலன்கள் போன்றவற்றை அதற்குரிய கட்டளைதாரர்கள் கொண்டு வருவர்; மக்கள் பலகாரப் பெட்டிகளையும் கொண்டுவருவர். தொடர்ந்து கலியாணச் சடங்கும் ‘பச்சை கட்டி’ சடங்கும் நடைபெறும். பச்சை கட்டி சடங்கு என்பது கண்ணகி வழக்குரைக் காதையில் குறிப்பிடப்படும் பச்சை மரக்கறிகளை கட்டாடியார் கண்ணகி அம்மன் முன் படைக்கும் சடங்காகும். இது சிலப்பதிகாரத்தின் அடைக்கலக் காதையில் கண்ணகி கோவலனுக்கு அளித்த இறுதி விருந்திற்கு மாதரி அளித்த பச்சை மரக்கறி வகைகளை நினைவூட்டுவதாகக் கருதப்படுகிறது.

இச்சடங்கு நடைபெறும் போது தெய்வக்காரர்கள் அருள் பெற்றுக்கொண்டு ஆடுவர்; விரும்பிய அடியார்களுக்கு கட்டு (அருள்வாக்கு) வழங்குவர். பின்னர் தங்களுக்குத் தேவையான பலியைப் பெற்று அமைதியடைவதை ‘மலையேறுதல்’ என்று கூறுவர். பலி என்பது தெய்வக்காரர்கள் விரும்பிய பொருளைப் பெறுதல் ஆகும். மடைப்பலி நிகழ்வில் வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் தாம்பூலத்தில் கற்பூரம் ஏற்றி வைக்கப்படும். இளம் கட்டாடியார் மந்திரம் சொல்லும் போது தெய்வக்காரர் ஓடிவந்து தாம்பூலத்தில் முகம் புதைத்து அமைதியடைவர்.

முக்கண்ணன் பலி:

நிலத்தில் எந்திரம் வரைந்து தேங்காயை அதன் மேல் வைத்து கற்பூரம் ஏற்றி மந்திரம் கூறி கட்டாடிமார் உடைப்பர். தெய்வக்காரர் அதன் மீது விழுந்து இயல்பாகுவர்.

அக்கினிப்பலி:

எரிகின்ற கற்பூரம், திரி முதலியவற்றை கட்டாடியர் தெய்வம் ஏறிய தெய்வக்காரரின் வாயிலிட அவர்கள் அமைதியடைவர்.

சாட்டைப் பலி:

பஞ்சால் செய்த சாட்டையால் தெய்வக்காரரின் மணிக்கட்டிலும், கெண்டைக்காலிலும் கட்டாடியார் அடிக்க இயல்பு நிலைக்குத் திரும்புவர்.

நரபலி:

கட்டாடியாரின் கையைக் கீறி வரும் இரத்தத்தைக் குடித்து தெய்வக்காரர் அமைதியடைவர். 

மேற்கண்டவாறு சடங்குகள் நடைபெறும் நாட்கள் ஒவ்வொரு கோயிலிலும் மாறுபடுகின்றன. பொதுவாக வைகாசி மாத நிறைமதி நாளை அடுத்த எட்டாம் நாளில் வழக்குரைக் காதை பாடப்படும். ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியான காவியங்களும் உள்ளன. உடுக்குச்சிந்து ஒவ்வொரு நாளும் இரவு பூசையின் போது பாடப்படும். இறுதி நாளில் திருக்குளிர்ச்சிப் பாடல்கள் பாடப்படுகின்றன. நிறைவு நாளின் பகலில் வழக்குரைக் காதையிலுள்ள கொலைக்களக் காதை பாடப்படுவதுடன், மாலையில் வழக்குரை பாடப்படும்; அதன் பின்னர் குளிர்ச்சிக் காதை பாடப்படும். வைகறைப் பொழுதில் திருக்குளிர்த்தி நிகழ்வு நடைபெறும்.

முன்னிரவு உரலில் நெல்லுக் குத்தி அரிசி எடுத்துப் பிள்ளையாருக்குப் பொங்கல் படைப்பர். அதன் பின்னர் இளநீர், கருப்பஞ்சாறு, சர்க்கரை, தேன் மற்றும் பழங்கள் சேர்த்து பானகம் தயாரித்து பெரிய முடாப்பானையில் ஊற்றி உரலின் மேல் வைத்து வெள்ளைத் துணியால் மூடுவர். அதன் மேல் வேப்பிலையை வைத்து முன்மண்டபத்தில் வைப்பர். கண்ணகி அம்மனுக்கான பூசைகள் முடிந்த பின்பு கட்டாடியார் பெண்களைப் போல சேலை அணிந்து முக்காடு இட்டு பானகப் பானையின் அருகில் வந்து நிற்பார். அப்போது இருவர் மாறிமாறிக் குளிர்ச்சிப் பாடல்களைப் பாடுவர். சேலை அணிந்த கட்டாடியார் வேப்பிலையை பானையில் உள்ள பானகத்தில் நனைத்து மக்களின் மேல் தெளித்துக் கொண்டிருப்பார். இப்பாடல்களைப் பாடுவோர் தங்களுக்கு ஏற்ற தாளத்திலும் பண்ணிலும் பாடுவர். இறுதியில் மங்களம் பாடி விழாவை நிறைவு செய்வர். குளிர்ச்சிப் பாடல்கள் அம்மானை, வருகை, ஆற்றுதல், குளிர்ச்சி என்ற படிநிலைகளில் பாடப்படுகின்றன. சான்றாக,

“ஆலிலை போலும் அணிவயிற்றான்

அங்கையற் கண்ணுடை ஆயிலையாள்

சாலிவிளைய மழைபொழியத்

தார்கோதை அம்மானை ஆடினாரே”

“ஆணிப்பென்னாலே அமைந்த சிலம்பை

அங்கம் வருத்தமுறித் தெறிந்து

மாணிக்கம் காட்டி வழக்கு வென்ற

மாது நல்லாளிவள் வந்தாள் வந்தாள்”

“பஞ்சவன் செல்வமழித்த கோலம்

பாலாருமென் மொழிமாதே ஆறாய்

மடைமதிற் கயல்பாயும் மதுரைமா நகரமதில்

இடையர் அகம்புகுந்த ஏந்தினை குளிர்ந்தருள்வாய்”

என்றவாறான பாடல்களைக் குறிப்பிடலாம். குளிர்ச்சிப்பாடலுடன் சடங்கு விழா நிறைவுபெறும். இவை பொதுவான சடங்குகள். இவை மாத்திரமல்லாமல் பல நிகழ்வுகள் திருவிழாக்காலங்களிலும் திருவிழா அல்லாத காலங்களிலும் நிகழும். சான்றாக தேங்காய் விளையாட்டினைக் குறிப்பிடலாம். கண்ணகியிடம் மழைவளம் வேண்டிய ஊர்மக்கள் இச்சடங்கினைச் செய்வர். மக்கள் தங்களை வடசேரி, தென்சேரி என இருபிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளுவர். இருபக்கமாக நின்று தேங்காய்களை உருட்டியடித்து விளையாடுவர். குடுக்கை கூறல், தீமிதித்தல் போன்ற சடங்குகள் இன்று பெரும்பாலான கோயில்களில் நிகழ்வதில்லை. ஈழம் முழுவதும் உள்ள கண்ணகி கோயில்களின் நிகழ்வுகள் யாவும் கண்ணகியைக் குளிர்வித்தலையே நோக்கமாகக் கொண்டவை. கண்ணகி வழக்குரையும் அதே நோக்கத்தையுடையதே. மதுரையை எரித்த கண்ணகியை இடைச்சேரியில் உள்ளோர் வெண்ணெய் சார்த்திக் குளிர்வித்த தன்மையை அந்நூல் விளக்குகின்றது. ஈழத்திலுள்ள கண்ணகி தொடர்பான நூல்கள் அனைத்தும் கண்ணகியைக் குளிர்வித்தலையே அடிப்படையாகக் கொண்டவை.

தமிழ் மரபு மனிதனையோ, இறையையோ இயல்புநிலையில் வைத்து வணங்குதலையே சிறப்பிற்குரியதாகக் கருதியது. கண்ணகியையும் சினம்மாறிய நிலையில் பொறையுடைமை கொண்ட தாய்த்தெய்வமாகப் போற்றி வழிபடுதலின் தனிச்சிறப்பை நோக்கியே இக்குளிர்ச்சிப் பகுதி சிறப்புப் பெறலாயிற்றெனலாம். மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் இத்திருவிழா கண்ணகி குளுத்திச்சடங்கு என்னும் பெயராலேயே இன்றும் அழைக்கப்படக் காணலாம். சிலப்பதிகாரத்தில் வரந்தரு காதை போல இந்நிகழ்வு மக்களுக்கு கண்ணகி வரம்தரு விழாவாக அமைகின்றதெனலாம். இந்நிகழ்வின் மற்றொரு சிறப்பாக இவ்விழாவின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனிச் சிறப்புப்பாடல்கள் பாடப்படுதலினைக் காணலாம். இவ்விழாவின் சிறப்புக் கூறுகளும் இவ்விழாவின் வழிநடத்துதலும் இப்பாடல்களே எனலாம். கொம்புமுறித்தல் பாடல்கள், கலியாணப்பாடல்கள், பச்சைகாட்டல் பாடல்கள், குளுத்திப்பாடல்கள், வசந்தனாடல் பாடல்கள் என்பனவாக இவை தொடரும். பண்டைத்தமிழரின் வழிபாட்டு மரபுகள் வாழ்வியல் பாடல்களுடன் ஒருங்கிணைந்தவை என்பதனை விளக்குபவையாக இப்பாடல் மரபு உள்ளமையினை அறியலாம்.

இறைவனின் இயல்பு ஐந்தொழில்களையும் செய்வது. இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்த உயிரானது தனது ஆற்றலாலும் அறப்பண்புகளாலும் இறைநிலையினை அடைந்து ஐந்தொழிலையும் செய்யும் இறைத்தெய்வமாகும் என்பது பண்டைத்தமிழரின் மெய்யியல் மரபு. அவ்வகையிலேயே கண்ணகியும் வானுறையும் தெய்வமாகப் போற்றப்பட்டாள். அதனையொட்டியே இறைநிலை பெற்ற கண்ணகியாலும் பல அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டன. ஈழத்தில் கண்ணகி கோயில்களில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க அதிசயங்கள் தொடர்பான கதைகள் சிலவற்றைக் காண்போம்.

முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை கண்ணகியம்மன் கோவிலில் நடைபெற்ற சில நிகழ்வுகளைக் காணலாம். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாவின்போது நந்திக்கடல் பகுதியிலுள்ள சித்தாவத்தை என்ற இடத்திலுள்ள கடலிலிருந்து நீரினை எடுத்துவந்து வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு விளக்கு ஏற்றுவார்கள். அவ்விளக்கானது கடல் நீரில் நன்கு எரியும். கடல்நீரில் விளக்கெரியும் இவ்விந்தை தொடர்பான கதை ஈழத்தில் வழங்கக் காணலாம்.

ஒரு காலத்தில் நந்திக்கடற்கரையில் இடையச் சிறார்கள் ஆடுமேய்க்கும் போது மூதாட்டி ஒருத்தி மரத்தின் கீழிருப்பதைக் கண்டனர். அம்மூதாட்டி தமக்கு தங்க இடமில்லை எனக் கூற, சிறார்கள் அம்மரத்தடியிலேயே அவருக்கு ஒரு கொட்டில் அமைத்துக் கொடுத்து உண்பதற்குப் பொங்கலும் பொங்கிக் கொடுத்தனர். மாலையில் விளக்கெரிக்க எண்ணெய் இல்லையென வருந்திய சிறாரை நோக்கி கடலிலிருந்து நீரினைக் கொணர்ந்து விளக்கெரிக்கும்படி அம்மூதாட்டி கூறினார். அதனால் இன்றும் கடல்நீரில் விளக்கெரிக்கும் வழமை இக்கோயிலில் காணப்படுகிறது.

அம்மூதாட்டி சிறார்களைத் தனக்குப் பேன் பார்க்கும்படி கூற, சிறார்கள் அவரின் தலைமுடியை விரித்துப் பார்த்தபோது தலைமுழுதும் கண்ணாகத் தெரிய, அஞ்சிய அச்சிறுவர்களை நோக்கி “நான் வைகாசித் திங்களன்று மீண்டும் வருவேன்” எனக் கூறி மறைந்தார். இந்நிகழ்வை ஊரிலுள்ளோரிடம் சிறுவர்கள் கூறினர். கண்ணகியின் அருளை உணர்ந்த ஊரார் அவ்விடத்திலேயே கண்ணகை அம்மனுக்குக் கோயிலெழுப்பி வழிபட்டனர். வைகாசி மதி நாளில் கடல்நீரில் விளக்கும் ஏற்றி வழிபடுகின்றனர்.

இவை போலவே பல கோயில்களிலும் அதிசய நிகழ்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள செய்தியினைக் காணலாம். தம்பிலுவில் கண்ணகியம்மன் கோவிலில் சுடப்படாத பச்சைமண் பானையில் பொங்கல் பொங்குகின்ற மரபானது இன்றளவும் தொடர்கின்றமையினைக் காணலாம். இவ்வாறான நடைமுறைகள் மக்களிடம் கண்ணகியை அறக்கடவுளாக அறிவுறுத்துவதோடு, வாய்மைக்கு எதிரான செயல்களில் மக்களை ஈடுபடா வண்ணம் காக்கக்கூடிய உளப்பாங்கினையும் உருவாக்குகின்றது.

மட்டக்களப்புப் பகுதியில் தாயின் வழிப்பட்டதான குடிமுறையே பின்பற்றப்படுகின்றது. பெரும்பாலான கண்ணகி கோயில்களில் இக்குடிமுறையில் வரும் கட்டாடியார்களே பூசை செய்வோராக உள்ளனர்.

கண்ணகி வழிபாட்டு மரபில் திரிபுகள்

தமிழர்களின் தாய்தெய்வ வழிபாட்டு மரபில் வீரபத்தினி வழிபாடாக மலர்ந்த கண்ணகி வழிபாட்டை வைதீகமயப்படுத்துதல் நோக்கில் சக்தி வழிபாட்டு மரபுடன் இணைத்து பல்வேறு இலக்கியங்களும் கற்பிதங்களை உருவாக்கியமை பெரும் பின்னடைவாகும். இவ்வாறான குழப்பங்கள் பிற்காலத்தில் எழும் என்பதை உணர்ந்தமையாலேயே இளங்கோவடிகள் அக்காலத்தில் வழங்கிய தாய்தெய்வ வழிபாடுகளை எல்லாம் சுட்டிக்காட்டி, அவ்வழிபாட்டு முறைமையிலிருந்து கண்ணகி வணக்கம் மாறுபட்டது என்பதை,

“அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்

பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி

வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை அல்லள்;

அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை

ஆடல் கண்டருளிய அணங்கு சூர் உடைக்

கானகம் உகந்த காளி தாருகன்

பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள்;

செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;

பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்”

என்று வகைமை செய்கின்றார். ஆனபோதும் அதை உணராது இவ்வாறான பிழைகளை இலக்கிய ஆசிரியர்கள் செய்துவிட்டனரெனலாம். ஆறுமுக நாவலரின் கண்ணகி வழிபாட்டிற்கெதிரான வைதீகத் திரிபு மாற்றத்திற்கு ஆதரவு தரும் வகையில் யாழ்ப்பாணத்து சமூகம் கண்ணகி கோயில்களை இராஜராஜேஸ்வரி கோயில்களாக மாற்றிய செயலையும், தங்களது வரலாற்றினைத் தாங்களே சிதைத்து அயல்படுத்திக் கொள்ளும் பிற்போக்குத் தனத்தையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் சொல்லப்புகின் விரியும். குலமும் குலதெய்வமும் அற்று வேரற்ற தன்மையைக் கொண்டுள்ள யாழ்ப்பாண மேம்போக்குச் சிந்தனை இவைபோன்ற செயல்களின் வழி தங்களது தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்துதலைப் பல இடங்களில் காணலாம். இது இவ்வாறாயின், கிழக்கிலும் பார்ப்பனர்களைக் கொண்டு கண்ணகி வழிபாட்டினையும் பூசை முறைகளையும் நடத்தும் மாற்றுமுறை ஏற்பட்டு வருவது ஏற்புடையதல்ல. கண்ணகியை அர்ச்சிக்க சிவாச்சாரியார்களிடம் ஏது மந்திரம் உண்டு? எதுவுமில்லை. அவர்களுக்கு காட்டேரியும் கண்ணகியும் ஒன்றுதான். எல்லாவற்றிற்கும் உமையை வணங்கும் சாந்த மந்திரமே உண்டு. எம் தாயை வேறு பெயர் சொல்லி அழைத்தால் திரும்பியும் பார்ப்பாளோ? சிவாச்சாரியார் பூசை செய்யும் கோயில்களில் கட்டாடியார் வந்து பூசை செய்தால் ஏற்றுக் கொள்வார்களா? தங்களுக்கொரு  நீதி, பிறருக்கொன்றா?

செல்வப் பற்றாக்குறையால் கண்ணகி கோயில் திருவிழாக்களின் காலத்தைக் குறைத்தலும் அதிகரித்துள்ளது எனலாம். பதினைந்து நாள் நடைபெறும் சடங்கை எட்டு நாள்களாகவும், மூன்று நாள்களாகவும் மாற்றுதல் என்பது சடங்கு நடைமுறைகளைக் காலப்போக்கில் இழப்பதற்கு வழிவகுக்கும்.

திருவிழா ஒழுங்குகளில் சமுதாய மேலோங்குச் சிந்தனையில் செய்யும் மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை வழிபாட்டு மரபிலிருந்து அயல்படுத்திவிடும். சான்றாக மட்டுவில் பன்றித்தலைச்சியிலுள்ள கண்ணகை அம்மன் கோயிலில் பங்குனித் திங்கட்கிழமைகளில் கோவலன் கதைப்பாடல் பறையடிப்பவர்களால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பறை இசைக்கேற்ப பாடப்பட்டு வந்தது. பிறகு பாடப்படுவதில்லை. கோவலன் கதை ஏடு இருந்தால்தானே பாடுவார்கள் என்று அவ்வேட்டையும் களவாக எங்கோ எறிந்துவிட்டார்கள். அம்மரபும் அதோடு முடிந்துவிட்டது. என்ன மடமை!

இவை போன்ற பல காரணிகளே கண்ணகி வழிபாட்டு மரபானது சீர்கெடக் காரணமாயிற்றெனலாம். கண்ணகி வழிபாட்டைத் திரித்து வைதீக மாற்றத்திற்குள் உட்படுத்தியமைக்குச் சான்றாக அமையக்கூடிய தலமாக கொங்கு நாட்டிலுள்ள திருச்செங்கோட்டைக் குறிப்பிடலாம். இத்தலம் மாறுதலான வரலாற்றினை முன்னமே குறிப்பிட்டுள்ளேன். விடுபட்ட சில விடயங்களை இங்கு குறிப்பிடுதல் இன்றியமையாததாகின்றது.

திருஞானசம்பந்தரின் சைவ எழுச்சி தமிழகமெங்கும் பரவிய காலத்தில் திருச்செங்கோட்டிலிருந்த கண்ணகி கோயிலும் சிவன் கோயிலாக மாறுதலடையத் தொடங்கியது. ஆயினும் பண்டைய கண்ணகி வழிபாட்டுத் தொன்மங்களை இன்றளவும் அங்கு காணலாம். கொங்கு வெள்ளாளரில் ஒரு பகுதியினரான திருமுடியார் என்போரே இக்கோயிலில் இறைக் கைங்கரியத்திற்கு அமர்த்தப்பட்டிருந்தனர். ஞானசம்பந்தரின் வருகைக்குப் பின் ஆதிசைவர்கள் குடியமர்த்தப்பட்டு வேளாளர்கள் அயல்படுத்தப்பட்டனர்.

இங்குள்ள கருவறையில் வெள்ளப் பாசானத்தில் வடித்த திருமேனி நிறுவப்பட்டு குறிப்பிட்ட காலத்தில் மாத்திரமே நடை திறக்கின்ற அமைப்பில் எண்கள் பொறிக்கப்பட்ட கற்களால் கருவறை மூடப்பட்டிருந்தது. அவ்வாறான எண்கள் பொறிக்கப்பட்ட கற்களை வரிசையாக அடுக்கி அர்த்தமண்டப (இடை நாழிகை) பகுதியை மூடிவிடுவர். கருவறைக்கு நேராக ஒரு பலகணி காணப்படும். அப்பலகணி வழியாகவே மற்றைய நாட்களில் பூசனை நடைபெறும்.

கண்ணகி கோயிலாக இருந்த காலத்தில் மூலத்திருமேனிக்கு ஒவ்வொரு நாளும் திருமுழுக்குச் (அபிஷேகம்) செய்கின்ற வழமையில்லை. அதற்கு அத்திருமேனி ஏற்புடையதல்ல. அவ்வாறு செய்தால் திருமேனி தேய்மானமடையும். பிற்காலத்தில் மாதொருபாகன் கோயிலாக மாற்றப்பட்ட பின்பு நாள்தோறும் நடைபெறும் திருமுழுக்கால் திருமேனியின் வடிவம் மாறிவிட்டது. முன்பு மதி நாளிலும் கருவா (அம்மாவாசை) நாளிலுமே திருமுழுக்கு வழிபாடு நடைபெற்றதெனலாம். இத்திருமுழுக்கிற்காக கொடுமுடி சிவகிரி சாலையிலுள்ள தலையநல்லூர் இறையிலியாக (தானக்கிராமம்) வழங்கப்பட்டது. இக்கிராமத்திலிருந்து தயிர்க் கலயம் தலைச்சுமையாக திருச்செங்கோடு கொண்டுவரப்படும். கருவா அன்று தலையநல்லூர் தயிர்க் கலயம் வந்த உடனேயே திருமுழுக்கு நடைபெறும். இவ்வூரிலுள்ள குறிப்பிட்ட கூட்டத்தாருக்கு குலதெய்வமாக பண்டு கண்ணகி விளங்கியிருப்பாள். அதனால்தான் இவ்வூரிலுள்ள ஆண்களுக்கு செங்கோட்டையன் என்றும் பெண்களுக்கு பாவாயி, பாவாத்தாள் என்றும் பெயர்சூடும் மரபு காணப்படுகின்றது. பாவை, பாவாயி என்பன கண்ணகியின் திருப்பெயர்கள். இன்றளவும் அம்மரபு தொடர்வதினைக் காணலாம்.

இவ்வூர் வைகாசித் திருவிழாவின் இறுதி நிகழ்வாக ‘சத்தாவரம்’ என்னும் நிகழ்வு நடைபெறும். இது கண்ணகி வரம் தரும் திருநாளாகும். இதனை ஈழத்துக் குளிர்ச்சிச் சடங்கோடு ஒப்பிடலாம். குளிர்ச்சியால் தடிமன் பிடித்ததாக அடுத்துவரும் நாட்களில் விடையாற்றிக் கட்டளையும் நடைபெறும். 

ஒரு மரபுத் திரிபில் கண்ணகி வழிபாடானது எவ்வகையில் வைதீகமயப்படுத்தலுக்கு உட்பட்டது என்பதை கொங்கு நாட்டுத் தலத்தினை அடிப்படையாகக் கொண்டு அறியலாம். அந்நிலை ஈழநாட்டுக் கண்ணகி கோயில்களுக்கும் வழிபாட்டு மரபினுக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனம் தேவை.



About the Author

ஜெகநாதன் அரங்கராஜ்

முனைவர் ஜெ. அரங்கராஜ் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்தவர். இவர் பழந்தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம் முதலான துறைகளில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடநூற்கள் குறித்தும் பண்டைத் தமிழர்களின் அயலகத் தொடர்புகள் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ‘செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கிய மேற்கோள் அடைவு’ என்னும் இவரது நூல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஈழம், தமிழகம் என இரண்டு தலங்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளராக இவர் திகழ்கின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்