(Coastal Foragers Beyond the Mainland: Seafaring and Early Island Settlement on Velanai, Jaffna, Sri Lanka, ca. 3460 cal BP)
ஆங்கில மூலம்: திலங்க எம். சிறிவர்தன, இந்திக்க ருவன் ஜயசேகர, ஜனீனா நோனிஸ், நதீர எச். திஸாநாயக்க மற்றும் ஜூட் பெரேரா
இந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டுவதற்கு: Thilanka M. Siriwardana, Indika Ruwan Jayasekara, Janeena Nonis, Nadeera H. Dissanayake & Jude Perera (01 Apr 2026): Coastal Foragers Beyond the Mainland: Seafaring and Early Island Settlement on Velanai, Jaffna, Sri Lanka, ca. 3460 cal BP, Journal of Island and Coastal Archaeology, DOI: 10.1080/15564894.2026.2624853
கட்டுரைக்கான இணைய மூலம்: https://doi.org/10.1080/15564894.2026.2624853
சுருக்கம்
வறண்ட காலநிலை மற்றும் அரிதான கல் தரைவளம் காரணமாக, வட இலங்கையில் உள்ள ‘அரை வறண்ட’ யாழ்ப்பாணக் குடாநாடு வரலாற்றுக்கு முந்தைய கால வாழ்விடங்களுக்குப் பொருத்தமற்றதாகப் பலமுறை கருதப்பட்டது. வேலணைத் தீவில் உள்ள ஒரு சிப்பிக்குவியலில் (CB/Ex1) மேற்கொள்ளப்பட்ட புதிய அகழ்வாராய்ச்சிகள் இந்தக் கருத்துக்குச் சவால் விடுகின்றன. அவை, கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வேளாண்-கால்நடை வளர்ப்பு இடப்பெயர்வுகள் நிகழ்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கடலோர வளங்களைப் பயன்படுத்திய, இற்றைக்கு ஏறக்குறைய 3460 ஆம் ஆண்டைச் சேர்ந்த, பிந்தைய ஹோலோசீன் காலத்துக் கடலோர உணவு சேகரிக்கும் சமூகத்தை வெளிப்படுத்துகின்றன. வட இலங்கையில் தீவுவாசிகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்ததற்கான, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட மிகப்பழமையான சான்றை இந்த ஆய்வு வழங்குகிறது. இதில் உள்ளூருக்குத் தொடர்பல்லாத நுண்கற்காலச் சிறு வெட்டுக் கருவிகளும் அடங்கும். அங்கு வசித்த மக்கள், கடல் மற்றும் நிலவாழ் விலங்கினங்களுடன் சிப்பியையும் (Gafrarium Pectinatum) முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். ஓத (கடற்கரையில் கடல் வற்றுவதும் பெருகுவதுமான அன்றாடச் செயற்பாடு ‘ஓதம்’ என்ற ஒரு சொல்லால் அழைக்கப்படும்) இடைவெளிப் பவளப்பாறைகளைத் தந்திரமாகப் பயன்படுத்தினர். அவர்களின் தொழில்நுட்பக் கருவித்தொகுப்பு, உள்ளூரில் கிடைக்கும் சுண்ணாம்புக்கல், எலும்புக் கருவிகள் மற்றும் பெருநிலப்பரப்பிலிருந்து பெறப்பட்ட வெளியூர் மூலப்பொருட்களின் கூட்டினால் உருவானது. இது, திட்டமிட்ட மூலப்பொருள் போக்குவரத்து மற்றும் இடப்பெயர்ச்சியையும், அத்துடன் குறுகிய தூரக் கடல் பயணத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகள், விளிம்புநிலைச் சூழல்களில் கடலோர உணவு சேகரிப்பாளர்களின் தகவமைப்பு உத்திகளையும், பிராந்திய இடப்பெயர்ச்சி மற்றும் பரிமாற்ற வலைப்பின்னல்களில் அவர்களின் ஆரம்பகாலப் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. இவை இலங்கையின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் தற்போதைய வகைமாதிரிகளை மாற்றியமைக்கின்றன. தெற்காசியாவில் நீண்டகால மனிதச் சுற்றுச்சூழல் தொடர்புகளையும் தொடக்ககாலக் கடல்சார் மரபுகளையும் மீளமைப்பதில் கடலோரத் தொல்பொருள் தலங்களின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
அறிமுகம்
தெற்காசியாவிலேயே மிகவும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்ட ஒன்றாக இலங்கையின் வரலாற்றுக்கு முந்தைய பதிவுகள் உள்ளன. இவை பல்வேறுபட்ட சூழல்களுக்கு ஏற்ப மனிதர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்ட நீண்ட வரலாற்றை வழங்குகின்றன (புவாவன் மற்றும் பலர். 2013; டெனெல் 2020; தெரணியகல 1992; ஒப்பன்ஹைமர் 2009; பெரெரா மற்றும் 2011; வெடேஜ், அமானோ மற்றும் பலர். 2019) (Boivin et al. 2013; Dennell 2020; Deraniyagala 1992; Oppenheimer 2009; Perera et al. 2011; Wedage, Amano, et al. 2019). இலங்கைத் தீவின் ஈரமான மற்றும் தெற்கின் வறண்ட வலயங்களில் மனிதர்கள் இருந்ததற்கான சான்றுகள் பிந்தைய பழையூழிக்காலத்தைச் (பிளீஸ்டோசீன் – Pleistocene) சேர்ந்தவை (அமானோ மற்றும் பலர். 2024; தெரணியகல 1992; லாங்லி மற்றும் பலர். 2020; வெடேஜ், அமானோ மற்றும் பலர். 2019) (Amano et al. 2024; Deraniyagala 1992; Langley et al. 2020; Wedage, Amano, et al. 2019). ஆயினும் யாழ்ப்பாணக் குடாநாடும் அதன் தீவுகளும் (படம் 1) உட்பட, ‘அரை வறண்ட’ வடக்குப் பகுதிகள் முந்திய ஆய்வு விவரிப்புகளில் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.

படம் 1. (அ) ஆய்வுப் பகுதியில் வேலணைத் தீவின் அமைவிடம். இலங்கையின் வடக்கில் அறியப்பட்ட நுண்கற்காலத் தலங்கள் மற்றும் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள பிற தலங்கள் (பட ஆதாரம்: Open Topography இலிருந்து பெறப்பட்ட SRTM 15)

(ஆ) வேலணைத் தீவு மற்றும் CB/Ex1 இன் அமைவிடம் (பட ஆதாரம்: கூகிள் எர்த்)
வரலாற்றுக்கு முந்தைய குடியிருப்புகளுக்கு அரிதான பகுதியாக வடக்கு இலங்கையை முந்தைய தொல்லியல் வகைமாதிரிகள் சித்தரித்தன. இதற்கு ‘அரை வறண்ட’ காலநிலை, குறைவான நன்னீர் வளங்கள், வரையறுக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் கற்கருவிச் சான்றுகளின் பற்றாக்குறை ஆகியவை காரணமாகக் காட்டப்பட்டன (தெரணியகல 1992) (Deraniyagala 1992). இதன் விளைவாக, இப்பகுதியின் மிகப் பழமையான குடியேற்றமானது, கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தென்னிந்தியாவிலிருந்து வந்த வேளாண்-கால்நடை வளர்ப்பாளர்களின் இடப்பெயர்வுகளால் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது (படம் 2) (தெரணியகல 1992; ஹெல்விங் மற்றும் பலர். 2022; ரகுபதி 1987; சிறிவர்தன 2024) (Deraniyagala 1992; Helwing et al. 2022; Ragupathy 1987; Siriwardana 2024).
நிலையற்ற காலநிலை மற்றும் வளங்களின் கணிக்க முடியாத தன்மையைக் கைக்கொள்வதற்கு பிந்தைய ஹோலோசீன் காலத்தில் உலகெங்கிலும் உள்ள கடலோரச் சமூகங்கள் கடல்சார் சூழல் அமைப்புகளை அதிகளவில் சார்ந்திருந்தன (ஜெரார்டினோ 2013; பார்க்கிங்டன், கிரியாகோ, மற்றும் ஃபிஷர் 2015; ரிக் 2024; விக்காம்-ஜோன்ஸ் 2014) (Jerardino 2013; Parkington, Kyriacou, and Fisher 2015; Rick 2024; Wickham-Jones 2014). ஓத இடைவெளிப் பவளப்பாறைகள், கழிமுகங்கள் மற்றும் சதுப்புநிலக் காயல்கள், கணிசமான நிறைவான வளங்களை வழங்கின. அவை நீண்டகாலக் குடியேற்றம் மற்றும் இடப்பெயர்வு உத்திகளுக்கு ஆதரவளித்தன (பேயின் 2021; எர்லாண்ட்சன் 2001; மரியன் 2016; ஸ்னாடி மற்றும் பலர். 2021; சுசினி மற்றும் பலர். 2023; செல்லர் மற்றும் பலர். 2023) (Beyin 2021; Erlandson 2001; Marean 2016; Snoddy et al. 2021; Susini et al. 2023; Zeller et al. 2023).
இருப்பினும், வரலாற்றுக்கு முந்தைய கடலோரத்தில் தகவமைத்துக்கொண்டதற்கான தொல்பொருள் சான்றுகள் தெற்காசியாவில் குறைவாகவே உள்ளன. அவை முக்கியமாக தெற்கு இலங்கையில் செறிந்துள்ளன (அதிகாரி மற்றும் ரிஸ்பெர்க் 2007; அமானோ மற்றும் பலர். 2024; தெரணியகல 1992; குலதிலக மற்றும் பலர். 2018; ராபர்ட்ஸ் மற்றும் பலர். 2022; சிறிவர்தன 2015a, 2015b, 2020; சிறிவர்தன மற்றும் மனுசிங்க 2024; சோமதேவா மற்றும் ரணசிங்க 2006) (Adikari and Risberg 2007; Amano et al. 2024; Deraniyagala 1992; Kulatilake et al. 2018; Roberts et al. 2022; Siriwardana 2015a, 2015b, 2020; Siriwardana and Manusinghe 2024; Somadeva and Ranasinghe 2006). ஈரமான மற்றும் இடைப்பட்ட மண்டலங்களில் உள்ள தளங்கள், மழைக்காட்டு வளங்களைச் சார்ந்திருக்கும் உணவு சேகரிப்பாளர்களின் வாழ்வாதார உத்திகள் குறித்த நுண்ணறிவுகளை வழங்குகின்றன (ரொபர்ட்ஸ் மற்றும் பலர் 2015) (Roberts et al. 2015). அதே சமயம் வறண்ட மற்றும் அரை வறண்ட தெற்கு கடலோரப் பகுதிகளில் உள்ளவை வளங்கள் நிறைந்த பகுதிகளுடனான தொடர்புகளைக் குறிக்கின்றன (ரொபர்ட்ஸ் மற்றும் பலர் 2022) (Roberts et al. 2022) (படம் 2). இருப்பினும், ‘ரொபர்ட்ஸ் மற்றும் பலரின். (2022)’ ஆய்வின்படி, இந்தத் தெற்குக் கடற்கரை உணவு சேகரிப்பாளர்கள், குறுகிய அளவிலான கடலோர வாழ்வாதாரத்தை மட்டும் பின்பற்றவில்லை. அவர்கள் பற்றிய நிலையான ‘ஐசோடோப்’ முடிவுகள், உள்நாட்டு வறண்ட காடுகள் மற்றும் புதர்களுடைய நிலங்கள் மீதான கலவையான சார்பைக் காட்டுகின்றன. இது கடல் உணவுகளால் கூடுதலாகப் பூர்த்தி செய்யப்பட்டதே தவிர, அவற்றால் முழுமையாக ஆதிக்கம் செலுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகின்றது. இந்தக் கலப்புச் சூழலியல் உத்தி, இயக்கத்தன்மையையும் தகவமைப்புப் பன்முகத்தன்மையையும் வலியுறுத்துகிறது. இந்த உள்நாட்டு-கடலோரச் சமநிலையை அங்கீகரிப்பது மிக முக்கியமானது. ஏனெனில் இது அரை வறண்ட வடக்குக் கடற்கரைகளில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கை முறைகள் குறித்த நமது புரிதலில் உள்ள ஒரு பெரிய இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது. ஹோலோசீன் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு மனிதர்கள் காட்டிய முழு அளவிலான தகவமைப்புப் பற்றியவற்றை மீண்டும் கட்டமைப்பதற்கு, அதிகம் ஆராயப்படாத இந்த நிலப்பரப்புகளை ஆய்வு செய்வது அவசியமாகும்.

படம் 2. இலங்கையில் அறியப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய குகை மற்றும் திறந்தவெளித் தலங்களின் பரவலுடன், ஒரு வருடத்திற்கான சராசரி வறண்ட மாதங்களின் எண்ணிக்கை (ஆஷ்டன் மற்றும் பலர். 1997க்குப் பிறகு). முக்கியமான மேல் மற்றும் கீழ் எல்லைத் தலங்கள் திகதிகளுடன் குறிக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள்: அமானோ மற்றும் பலர். (2024), தெரணியகல (1992), குணதிலகே (2006), குலதிலகே மற்றும் பலர். (2018), சிங்வி, தெரணியகல மற்றும் செங்குப்தா (1986), சிறிவர்தன மற்றும் மனுசிங்க (2024) மற்றும் வெடேஜ், பிசின், மற்றும் பலர். (2019).
இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய, தற்போதைய ஆய்வு வேலணைத் தீவில் நீண்டகால மனிதச் சுற்றுச்சூழல் இடைவினைகளை ஆராய்வதற்காக ஒரு வரலாற்றுச் சூழலியல் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. தொல்லியல் மற்றும் சுற்றுச்சூழல் மானிடவியலில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சூழலியல், நிலப்பரப்புகளை மனிதச் செயல்பாடு மற்றும் சூழலியல் செயல்முறைகளுக்கு இடையேயான தொடர்ச்சியான பின்னூட்டத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட மாறுகின்ற வரலாற்றுப் பேசுபொருளாகக் கருதுகிறது (ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் பலர். 2017; பிராஜே மற்றும் பலர். 2017; க்ரம்லி 2021; ஏங்கல்ஸ் மற்றும் வைட்ஹவுஸ் 2023) (Armstrong et al. 2017; Braje et al. 2017; Crumley 2021; Engels and Whitehouse 2023). சுற்றுச்சூழலை ஒரு நிலையான பின்னணியாகக் கருதுவதற்குப் பதிலாக, இந்த அணுகுமுறை, வாழ்வாதாரம், தொழில்நுட்பம், வளப் பயன்பாடு மற்றும் குடியேற்ற நடைமுறைகள் ஆகியவை எவ்வாறு பரந்த அளவிலான தரவுத்தொகுப்புகளைப் பயன்படுத்தி காலப்போக்கில் கடலோரச் சூழலியலைத் தீவிரமாக மாற்றியமைத்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இவ்வணுகுமுறை வேலணைத் தீவில் (ஊர்காவற் துறைப் பகுதி) பயன்படுத்தப்படும் போது, வரலாற்றுச் சூழலியல் அந்த இடத்தை ஓர் இணைப்பரிணாம வளர்ச்சி பெறும் கடலோர அமைப்பின் ஒரு பகுதியாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. உணவுச் சேகரிப்பாளர்கள் ‘அரை வறண்ட’ கடற்கரைகள், சிப்பிகள் நிறைந்த பவளப்பாறைகள் மற்றும் ஏற்ற இறக்கமான கடல் மட்டங்களுக்கு இங்கு தங்களைத் தகவமைத்துக் கொண்டனர். அதே நேரத்தில் அவர்களின் செயல்பாடுகள் உள்ளூர் கடலோர அம்சங்களின் மாற்றத்திற்கும் பங்களித்தன. இந்தக் கட்டமைப்பு, சுற்றுச்சூழல் வரம்புகளை வலியுறுத்திய பாரம்பரிய பண்பாட்டுச் சூழலியல் மாதிரிகளைக் (தெரணியகல 1992) (Deraniyagala 1992) கடந்து செல்கிறது. மேலும் வேலணையின் சான்றுகளை தகவமைப்பு மற்றும் ஒட்டுமொத்த நிலப்பரப்பு உருமாற்றத்தின் பதிவாக வாசிக்க அனுமதிக்கிறது.
இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், தற்போதைய ஆய்வு யாழ்ப்பாணக் குடாநாட்டில் உறுதிசெய்யப்பட்ட முதல் வரலாற்றுக்கு முந்தைய தலமான வேலணைத் தீவில் மேற்கொள்ளப்பட்ட புதிய அகழ்வாராய்ச்சிகளில் கவனம் செலுத்துகிறது. வரலாற்றுக்கு முந்தைய வாழ்விடங்களுக்குப் பொருத்தமற்றதாக முன்னர் கருதப்பட்ட வட இலங்கையின் அரை வறண்ட கடலோரச் சூழல்களுக்கு, உணவு சேகரிப்பாளர்கள் எவ்வாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டனர் என்பதை ஆராய்வதற்கு இந்தத் தலம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. நாங்கள் அடுக்குமுறைப் பகுப்பாய்வு, கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு மற்றும் மெல்லுடலிகள், முதுகெலும்பி எச்சங்கள், கற்கருவிகள் மற்றும் எலும்புக் கருவிகள் ஆகியவற்றின் விலங்குத் தொல்பொருள் ஆய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தினோம். பரந்த வரலாற்றுச் சூழலியல் கட்டமைப்பிற்குள், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் இடைவினைகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான பதிலீடுகளாகச் சூழலியல் உணர்திறன் கொண்ட வகைப்பாடுகளைப் பயன்படுத்த, நாங்கள் ஒரு குறிகாட்டிக் குழு அணுகுமுறையைப் (ஏங்கல்ஸ் மற்றும் வைட்ஹவுஸ் 2023; கென்வர்ட் மற்றும் ஹால் 1997) (Engels and Whitehouse 2023; Kenward and Hall 1997) பயன்படுத்துகிறோம். இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பின் மூலம், இந்த ஆய்வு கடலோர உணவுத் தேடல் உத்திகள், தொழில்நுட்பத் தகவமைப்புகள் மற்றும் இடப்பெயர்வு முறைகளை மதிப்பிடுகிறது. மேலும் வேலணைச் சமூகத்தை பரந்த தெற்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் வரலாற்றுக்கு முந்தைய வலையமைப்புகளுக்குள் நிலைநிறுத்துகிறது.
சுற்றுச்சூழல் பின்னணி
65,610 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 60க்கும் மேற்பட்ட சிறிய கடலோரத் தீவுகளையும் கொண்டது இலங்கை. பல்வேறு காலநிலை மண்டலங்களைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடும், வேலணை (இது சுமார் 36 சதுர கிலோமீட்டர்) உள்ளிட்ட அதன் தீவுகளும், இந்த நிலப்பரப்பின் வடகோடியில் உள்ள அரை வறண்ட நீட்சியாக அமைந்துள்ளன (படம் 2). இப்பகுதியில் ஆண்டுதோறும் 1000 மி.மீ.க்கும் குறைவான மழைப்பொழிவு கிடைக்கிறது. தென்மேற்குப் பருவக்காற்றின் காலத்தில், நீண்ட வறண்ட காலங்களும், வடகிழக்குப் பருவக்காற்றிலிருந்து குறுகிய, தீவிர மழையும் ஏற்படுகின்றன. இவை, வளங்கள் பற்றாக்குறையுள்ள இப்பகுதிக்கு இன்றியமையாத தற்காலிக நன்னீர்க் குளங்களையும் நீர்த்தேக்கங்களையும் உருவாக்குகின்றன (பனபொக்கே 1996) (Panabokke 1996). இத்தகைய பருவகால உச்சநிலைகளும், வரையறுக்கப்பட்ட நன்னீரும், வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களுக்கு, குறிப்பாக நீர் இருப்பு மற்றும் வாழ்வாதார நிலைத்தன்மை ஆகியவற்றில் கடுமையான தடைகளை ஏற்படுத்தியிருக்கும்.
ஹோலோசீன் காலத்தில், மாறிவரும் பருவமழை அமைப்புகளும் ஏற்ற இறக்கமான கடல் மட்டங்களும் வடக்குக் கடற்கரையின் வாழ்வாதாரத் தன்மையை மாற்றியமைத்தன (அச்யுதன் 2022; மோகபாத்ரா மற்றும் பலர். 2019; ரணசிங்கே, ஓர்டிஸ், மூர் மற்றும் பலர். 2013) (Achyuthan 2022; Mohapatra et al. 2019; Ranasinghe, Ortiz, Moore, et al. 2013). படம் 3 விளக்குவது என்னவென்றால், மத்திய ஹோலோசீன் உகந்த காலநிலை (சுமார் 6000–4000BP) தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகளில் மாற்றங்களைத் தூண்டி, மழைப்பொழிவை அதிகரித்து, ஏற்ற இறக்கமான கடல் மட்டங்களை ஏற்படுத்தியது (அச்யுதன் 2022; கயந்தா மற்றும் பலர். 2021; கட்டுபோதா 2015; லாம்பெக், யோகோயாமா மற்றும் பர்செல் 2002; மோகபாத்ரா மற்றும் பலர். 2019; வீணா மற்றும் பலர். 2014) (Achyuthan 2022; Gayantha et al. 2021; Katupotha 2015; Lambeck, Yokoyama, and Purcell 2002; Mohapatra et al. 2019; Veena et al. 2014). உயர்ந்து வரும் கடல் மட்டமும், தீவிரமடைந்த பருவமழையும் ஓத இடைப்பாறை அமைப்புகள், சதுப்புநிலக் காடுகள் மற்றும் கடற்புல்வெளிகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வழிவகுத்திருக்கலாம். இந்தச் சூழல் அமைப்புகள் ஊட்டச்சத்து நிறைந்த கடலோர வாழ்விடங்களை உருவாக்கி, பலதரப்பட்ட கடல் மற்றும் நிலவாழ் விலங்கினங்களுக்கு ஆதரவளித்தன (நோரிஸ் 1960; சோமநாடர் 1963; வீரகோன் மற்றும் பலர். 2020) (Norris 1960; Somanader 1963; Weerakoon et al. 2020).
இந்தச் சூழலியல் மாற்றங்கள் மனிதர்கள் பயனீட்டுவதற்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. இன்று, வேலணையின் திறந்த புல்வெளி, மணல் குன்றுகள், முட்புதர்கள் மற்றும் சிதறிய காடுகளால் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இருப்பினும், சமீபத்திய காடழிப்பால் யானைகள், மான்கள் மற்றும் கலைமான்கள் உள்ளிட்ட பல்வேறு நிலவாழ் வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக மாற்றமடைந்துள்ளதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன (பால்தேயஸ் 1672; காசி-சிட்டி 1834; பெத்தியகோடா மற்றும் சுதாசிங்க 2021; டென்னன்ட் 1860; வீரகோன் மற்றும் பலர். 2020) (Baldaeus 1672; Casie-Chitty 1834; Pethiyagoda and Sudasinghe 2021; Tennent 1860; Weerakoon et al. 2020). இந்த வளங்களின் இருப்பு, சிதைந்த சுண்ணாம்புப் பாறைகளிலிருந்து கிடைக்கும் நன்னீருடன் சேர்ந்து, அதன் வறண்ட காலநிலை இருந்தபோதிலும், வேலணையை வரலாற்றுக்கு முந்தைய கால வாழ்விடத்திற்குரிய ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றியிருக்கின்றது. புவியியல் ரீதியாக, பெருநிலப்பரப்பில் உள்ள வன்னி வளாகத்தின் படிகம் மற்றும் ‘செர்ட்’ தாங்கிய பாறை அமைப்புகளுக்கு மாறாக, யாழ்ப்பாணக் குடாநாட்டின் ‘மியோசீன்’ சுண்ணாம்பு மேடை மற்றும் ‘குவாட்டர்னரி’ படிவுகள் மிகக் குறைந்த அளவே செதுக்கக்கூடிய கற்களை வழங்குகின்றன (கூரே 1984) (Cooray 1984). எனவே, வன்னிப் பிரதேசம், வடக்கு இலங்கையில் வரலாற்றுக்கு முந்தைய கருவிகள் தயாரிப்பிற்கான கற்கருவி மூலப்பொருட்களின் மிக அருகிலுள்ள கணிசமான ஆதாரமாக விளங்குகிறது.

படம் 3. தென்னிந்தியா மற்றும் இலங்கையில் ஹோலோசீன் கால சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் கடல் மட்ட மாற்றங்கள். (அ) பின்வரும் பதிவுகளின் அடிப்படையிலான காலநிலைப் போக்குகள்: i. இலங்கையின் தென்கிழக்கு வறண்ட மண்டலக் கடற்கரைப் பகுதி (ரணசிங்க, ஓர்டிஸ், மூர், மற்றும் பலர். 2013); ii. இலங்கையின் மத்திய உயர்நிலப்பகுதிகள் (பிரேமதிலகே மற்றும் ரிஸ்பெர்க் 2003); iii. தென்மேற்கு கேரளா, இந்தியா (வீணா மற்றும் பலர். 2014). (ஆ) ஹோலோசீன் காலத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாற்றங்கள், வேலணை அகழ்வாராய்ச்சியின் திகதிகளைக் குறிக்கும் சிவப்பு-கோடிட்ட கோடுகளுடன்.
ஒருங்கிணைந்து, தீவிரமடைந்த பருவமழை, உயர்ந்துவரும் கடல் மட்டம், மற்றும் வளங்கள் நிறைந்த ஓத இடை வாழ்விடங்களின் வளர்ச்சி ஆகியவை மத்திய ஹோலோசீன் முதல் பிற்பகுதி வரையிலான காலகட்டத்தில் ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த கடலோர நிலப்பரப்பை உருவாக்கின. இந்தச் சுற்றுச்சூழல் நிலைமைகள் வடக்குக் கடற்கரை முழுவதும் கடல்சார், காயல்சார், மற்றும் நிலப்பரப்புசார் வாழ்விடங்களின் ஒரு கலவையை உருவாக்கின. இந்தச் சூழலியல் பின்னணியைப் புரிந்துகொள்வது, வேலணையில் மனிதச் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கும், வரலாற்றுக்கு முந்தைய காலக் குடியிருப்புகள் நிகழ்ந்த சுற்றுச்சூழல் நிலைமைகளை அறிவதற்கும் ஓர் அடித்தளத்தை வழங்குகிறது.
தெற்கு இலங்கையில் ஹோலோசீன் காலக் கடலோரத் தகவமைப்புகள்
குறைவாக ஆராயப்பட்ட வடக்குக் கடற்கரையானது, இலங்கையின் கடலோரத் தகவமைப்புகளை ஒப்பிடுவதற்கு, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட தெற்குக் கடற்கரை தொடர்பான ஆய்வுகளை முக்கியமானதாக ஆக்குகிறது. தெற்குக் கடற்கரைப் பகுதிகளில் மனிதக் குடியேற்றம் பிந்தைய பிளீஸ்டோசீன் காலத்தில் தொடங்கியது. பாதிராஜவெல போன்ற தலங்கள், சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முந்தைய கடலோரச் செயல்பாடுகளின் ஆரம்பகால திறந்தவெளிச் சான்றுகளைப் பாதுகாத்து வருகின்றன (அமானோ மற்றும் பலர். 2024; மேலும் காண்க தெரணியகல 1992; சிங்வி, தெரணியகல, மற்றும் செங்குப்தா 1986) (Amano et al. 2024; see also Deraniyagala 1992; Singhvi, Deraniyagala, and Sengupta 1986).
மிகச் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள், செறிவான சிப்பிக்குவியல் உருவாக்கம் மிகவும் தாமதமாக, அதாவது இற்றைக்குச் சுமார் 5200 முதல் 3400 காலத்தில், கடல் மட்டம் நிலைபெற்று புதிய ஓத இடை வாழ்விடங்கள் தோன்றியபோது நிகழ்ந்தது என்பதைக் காட்டுகின்றன (அமானோ மற்றும் பலர். 2024; கட்டுபோதா மற்றும் புஜிவாரா 1988; ராபர்ட்ஸ் மற்றும் பலர். 2022) (Amano et al. 2024; Katupotha and Fujiwara 1988; Roberts et al. 2022). மினியதிலியா, கலமட்டிய மற்றும் பல்லேமலாலா போன்ற தலங்கள், கழிமுகச் சிப்பிகள் (மெரிட்ரிக்ஸ் sp.) மற்றும் பிற கடல் வளங்கள் மீதான சார்பு அதிகரித்து வருவதை நிரூபிக்கின்றன. இது மத்திய முதல் பிற்பகுதி ஹோலோசீன் காலத்தில் கடலோரப் பகுதி தீவிரமடைந்ததைக் குறிக்கிறது (தெரணியகல 1992; குலதிலகே மற்றும் பலர். 2018; சிறிவர்தன மற்றும் மனுசிங்க 2024) (Deraniyagala 1992; Kulatilake et al. 2018; Siriwardana and Manusinghe 2024). கோதவாயவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மத்திய ஹோலோசீன் காலக் கடலோர உணவு தேடுபவர்கள், கடல் மட்டம் உயர்வாக இருந்த காலங்களில் சிப்பிகள் நிறைந்த கரையோர முகடுகளை மீண்டும் மீண்டும் ஆக்கிரமித்திருந்தனர் என்பதை மேலும் நிரூபிக்கின்றன (கருணாரத்ன மற்றும் பலர். 2024) (Karunaratne et al. 2024). தீவின் வடமேற்கில், மத்திய ஹோலோசீன் கடல்சார்ந்த அடுக்குகளைக் கொண்ட ஒரே தலம் மாந்தை (மன்னார்) ஆகும். அங்கு, காயல் களிமண் மற்றும் அடிமட்டக் குப்பைக் குவியல் அடுக்குகள் இற்றைக்கு ஏறத்தாழ 3600 ஆண்டுகள் காலத்தைச் சேர்ந்தவை எனக் காலவரையறை செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று நிலைபெற்றிருந்த கடல்சார்ந்த பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது (கார்ஸ்வெல், தெரணியகல, மற்றும் கிரஹாம் 2013; தெரணியகல 1992; கிங்வெல்-பன்ஹாம் மற்றும் பலர். 2018) (Carswell, Deraniyagala, and Graham 2013; Deraniyagala 1992; Kingwell-Banham et al. 2018).
இந்தக் கடலோரத் தலங்கள், மாறிவரும் கடற்கரைகளுக்கு ஏற்ப மனிதர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டதற்கான முக்கிய சான்றுகளாக நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன (தெரணியகல 1958; ஹர்ம்சன் 2017; ஹர்ம்சன் மற்றும் கருணாரத்ன 2016; கட்டுபோதா 1994; கட்டுபோதா மற்றும் புஜிவாரா 1988; வீரரத்ன மற்றும் பலர். 2022) (Deraniyagala 1958; Harmsen 2017; Harmsen and Karunaratne 2016; Katupotha 1994; Katupotha and Fujiwara 1988; Weerarathne et al. 2022). பலதரப்பட்ட பதிலீட்டுப் பகுப்பாய்வுகள், இந்தச் சமூகங்கள் கடல்சார் சேகரிப்பு, மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு வேட்டையாடுதல் ஆகியவற்றை இணைத்து, நெகிழ்வான உணவுத் தேடல் உத்திகளைக் கடைப்பிடித்தன என்பதை இப்போது வெளிப்படுத்துகின்றன (அதிகாரி மற்றும் ரிஸ்பெர்க் 2007; கருணாரத்ன மற்றும் பலர். 2024; குலதிலக மற்றும் பலர். 2014, 2018; ராபர்ட்ஸ் மற்றும் பலர். 2022; சிறிவர்தன 2015a, 2015b; சிறிவர்தன மற்றும் மனுசிங்க 2024; சோமதேவா மற்றும் ரணசிங்க 2006) (Adikari and Risberg 2007; Karunaratne et al. 2024; Kulatilake et al. 2014, 2018; Roberts et al. 2022; Siriwardana 2015a, 2015b; Siriwardana and Manusinghe 2024; Somadeva and Ranasinghe 2006).
இத்தகைய கண்டுபிடிப்புகள், உலகளாவிய பனி யுகத்திற்குப் பிந்தைய போக்குகளைப் பிரதிபலிக்கின்றன. அங்கு கடலோரத்தில் உணவு தேடுபவர்கள், பெருகிவரும் சிக்கலான வாழ்க்கை முறைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கடல் மற்றும் நிலம் ஆகிய இரண்டு வாழ்விடங்களையும் பயன்படுத்திக் கொண்டனர் (பேயின் 2021; காஸ்க்ரோவ் 1999) (Beyin 2021; Cosgrove 1999).
வேலணையின் குப்பைக் குவியலை இந்தப் பரந்த வடிவத்திற்குள் புரிந்து கொள்ள வேண்டும். தெற்கின் தலங்களைப் போலவே, இதுவும் ஹோலோசீன் கடல் மட்ட நிலைப்படுத்தல் மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட கடலோர வளப் பயன்பாட்டுக் காலத்தைச் சேர்ந்தது. ஆனால் சூழலியல் ரீதியாக வேறுபடுகிறது. ஈரப்பதம் உள்ள, அரை வறண்ட, சரிவில் அமைந்துள்ள தெற்குக் கடலோரத் தலங்களுக்கு மாறாக, வேலணை மிகவும் சீரான அரை வறண்ட தீவுச் சூழலில் அமைந்துள்ளது. இந்தச் சுற்றுச்சூழல் வேறுபாடுகளை அங்கீகரிப்பது, இலங்கையின் கடலோரத் தொல்பொருள் பதிவில் உள்ள பிராந்திய வேறுபாடுகளை மதிப்பிடுவதற்குத் தேவையான பின்னணியை வழங்குகிறது.
இந்த வகையில், வேலணைக் கடலோரத் தகவமைப்புப் புவியியல் மற்றும் சூழலியல் நிறமாலையை விரிவுபடுத்துவது தெற்கின் தொல்லியல் ஆய்வுத் தொடருக்கு முழுமையைத் தருவதாக அமைகிறது. பிராந்தியச் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை, கடல் வளப் பயன்பாட்டின் வெவ்வேறு, ஆனால் ஒன்றிணைந்த உத்திகளை எவ்வாறு வடிவமைத்தது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. மேலும் ஹோலோசீன் காலத்தில் கடலோரத்தில் செறிவாகப் பகிரப்பட்ட ஒரு செயல்பாட்டின் வழியாக, வடக்கு மற்றும் தெற்குக் கடற்கரைகளை இது இணைக்கிறது. கடலோரத் தீவுக் குடியேற்றத்திற்கான தெளிவான சான்றாகவும் இது விளங்குகிறது. பிந்தைய ஹோலோசீன் காலத்தில் பிரதான நிலப்பகுதிக்கு அப்பால் கடலோரக் குடியேற்றத்தின் ஒரு முக்கியமான விரிவாக்கத்தையும் குறிக்கிறது.
பொருட்கள் மற்றும் முறைகள்
அகழ்வாராய்ச்சி மற்றும் மாதிரியெடுத்தல்
வேலணைத் தீவில் தொடக்கநிலை மேற்பரப்பு ஆய்வு 2003இல் நிகழ்த்தப்பட்டது CB/EX1 (9°37011.8500N 79°54033.0900E/CB=சாட்டி கடற்கரை). பாறை அடுக்கியல் பகுப்பாய்விற்காகச் சிப்பிக்குவியல் மேட்டின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பெறுவதற்காக, 1–2 மீட்டர் ஆழத்திற்கு ஓர் அகழி தோண்டப்பட்டது. அகழ்வாராய்ச்சி இயற்கையான அடுக்குகளில் 92 செ.மீ. ஆழம் வரை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது வழக்கமான பாறை அடுக்கியல் முறைகளைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்டது. அனைத்துப் படிவுகளும் 5 மி.மீ. அரிதட்டு வழியாக உலர்வாகச் சலிக்கப்பட்டது. பின்னர் சிறிய விலங்கு மற்றும் கற்கருவிப் பொருட்களை மீட்டெடுப்பதற்காக 0.2 மி.மீ. அரிதட்டு வழியாக ஈரமாகச் சலிக்கப்பட்டன. இந்த முறை பாறை அடுக்கியல் விளக்கத்திற்கு உதவியதுடன், சிப்பிக்குவியலின் உருவாக்கச் செயல்முறைகள், காலவரிசைத் தொடர்கள் மற்றும் வரலாற்றை மீண்டும் கட்டமைக்கவும் உதவியது.
ரேடியோகார்பன் காலவரிசை
ஒரு காலவரிசைக் கட்டமைப்பை நிறுவுவதற்காக, தனித்துவமான அடுக்குகளிலிருந்து மாதிரிகளாக எடுக்கப்பட்ட கரி மற்றும் சிப்பி (Gafrarium Pectinatum) ஓடுகளில் ரேடியோகார்பன் காலக்கணிப்பு நடத்தப்பட்டது. கடல்சார் படிவுகளைக் குறிக்கும் அடுக்குகள் 5 மற்றும் 6 இலிருந்து இரண்டு ஓட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதே நேரத்தில் இரண்டு கரி மாதிரிகள் முக்கிய மனிதனால் உருவாக்கப்பட்ட குப்பை மேட்டுப் படிவான அடுக்கு 4 இலிருந்து பெறப்பட்டன. கடல்சார் படிவுகளின் காலத்தைக் கணக்கிடுவதற்குச் சிப்பி ஓடுகளின் நம்பகத்தன்மை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது (பெட்சே மற்றும் பலர். 2013) (Petchey et al. 2013). ரேடியோகார்பன் பகுப்பாய்வுகள் ‘பீட்டா அனலிட்டிக்ஸ்’ (அமெரிக்கா) நிறுவனத்தால் ‘முடுக்கிநிறை நிறமாலையியல்’ (AMS) முறையைப் பயன்படுத்திச் செய்யப்பட்டன. முடிவுகள் உயர் நிகழ்தகவு அடர்த்தி வரம்பு முறை (HPD) (ப்ரோங்க் ராம்சே 2009) (Bronk Ramsey 2009) மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட −105±34 என்ற DR மதிப்பானது Marine20 அளவுத்திருத்தத் தரவுத்தொகுப்பிலிருந்து பெறப்பட்டது. இது இந்து சமுத்திரத்தின் வடக்குப் பகுதிக்கான (http://Calib.org/marine) உகந்த திருத்த மதிப்பாகும். இது காலக்கணிப்புச் செய்யப்பட்ட சிப்பிகளில் உள்ள கடல் நீர்த்தேக்க விளைவைத் திருத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கரி மாதிரிகள் IntCal20(ரைமர் மற்றும் பலர் 2020) (Reimer et al. 2020) மென்பொருளைப் பயன்படுத்தி அளவுத்திருத்தம் செய்யப்பட்டன. இந்தப் பகுப்பாய்வுகள், இப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய கால வாழ்விடங்களுக்கான முதல் அடுக்கு வரிசையை வழங்குகின்றன.
முதுகெலும்பற்ற விலங்கினப் பகுப்பாய்வு
முதுகெலும்பற்ற உயிரினங்களின் எச்சங்கள், உலகக் கடல்வாழ் உயிரினங்கள் பதிவேடு (WoRMS பதிப்புக் குழு 2024) (WoRMS Editorial Board 2024), எம். பெர்னாண்டோவின் இலங்கைக் கடற்கரைச் சிப்பிகளுக்கான வழிகாட்டி (2009), மற்றும் நிலவாழ் உயிரினங்களுக்கான ரஹீம் மற்றும் நாக்ஸின் படைப்பு (2006) ஆகியவற்றைப் பயன்படுத்தி மிகக் குறைந்த வகைப்பாட்டு நிலை வரை அடையாளம் காணப்பட்டன. அடையாளம் காணப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை (NISP), அரிதட்டில் உள்ள அனைத்துக் கண்டறியும் மாதிரிகளையும் எண்ணுவதன் மூலம் பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் அடையாளம் காணப்படாத சிப்பித் துண்டுகள் எடை போடப்பட்டன.
குறைந்தபட்ச உயிரினங்களின் எண்ணிக்கை (MNI), மீண்டும் வராத உறுப்பு (NRE) அணுகுமுறையைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்டது. இதில், இருவால்வு உயிரினங்களுக்கு கீல்களும், வயிற்றுக்காலிகளுக்கு நுனிகளும் முக்கியக் குறிகாட்டிகளாகக் கருதப்பட்டன (ஜியோவாஸ் 2009; மேசன், பீட்டர்சன், மற்றும் டிஃப்பனி 1998) (Giovas 2009; Mason, Peterson, and Tiffany 1998). ஹாரிஸ், வெய்ஸ்லர் மற்றும் ஃபாக்னர் (2015) ஆகியோரால் கோடிட்டுக் காட்டப்பட்ட பரிந்துரைகளைப் பின்பற்றி, மூடிகளும் (Opercula) கிடைக்கப்பெற்ற போது எண்ணப்பட்டன. இருவால்வு உயிரினங்களுக்கு, இடது மற்றும் வலது கீல்கள் இரண்டும் எண்ணப்பட்டன, மேலும் அதிக எண்ணிக்கையானது MNI மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது (மேசன், பீட்டர்சன் மற்றும் டிஃப்பனி 1998) (Mason, Peterson, and Tiffany 1998). ஹாரிஸ், வெய்ஸ்லர் மற்றும் ஃபாக்னர் (2015) செம்மைப்படுத்திய நெறிமுறையானது, மிகவும் சிதறிய உயிரினக் கூட்டங்களுக்கு ஒரு விரிவான கட்டமைப்பை வழங்கினாலும், வேலணையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உயிரினங்கள் பொதுவாக நன்றாகப் பாதுகாக்கப்பட்டிருப்பதும், பெரிய இனங்களிடையே சிதறல்கள் குவிந்திருப்பதும், ஒரு நிலையான NRE அடிப்படையிலான அணுகுமுறையை முதன்மையாகச் சார்ந்திருக்க எங்களை அனுமதித்தது.
அகழ்வாராய்ச்சி அலகுகளுக்குள் இனங்களின் மிகுதி மற்றும் செழுமையை அளவிட ஷானன் பன்முகத்தன்மை குறியீடு பயன்படுத்தப்பட்டது (க்ரூஸ்-யுரிப் 1988; பெரெஸ் 2010) (Cruz-Uribe 1988; Peres 2010). இந்தக் குறியீடு பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்டது:

இதில் Pi என்பது ஒவ்வொரு இனத்தின் விகிதாசார மிகுதியைக் குறிக்கிறது. இனங்களின் பயனுள்ள எண்ணிக்கை (ENS) பின்னர் ENS = eH0 (ஷராஷி 2022) (Sharashy 2022) என வருவிக்கப்பட்டது. இதில் ‘e’ என்பது இயல் மடக்கையின் அடிமானம் ஆகும். இது அந்தத் தொகுப்பில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சமமான பொதுவான இனங்களின் எண்ணிக்கையின் மதிப்பீட்டை வழங்குகிறது.
மாதிரியில் உள்ள அனைத்து ஓடுகளும், அவற்றின் துண்டுகளின் அளவு அல்லது நிலையைப் பொருட்படுத்தாமல் பகுப்பாய்வு செய்யப்பட்டன. பல்வேறு உயிரின வகைகளிடையே ஒப்பீட்டுத்தன்மையை உறுதி செய்வதற்காக, உணவுக்காகச் சேகரிக்கப்படவில்லை என நம்பத்தகுந்த வகையில் கருதப்பட்ட இனங்கள் அடையாளம் காணப்பட்டுத் தனியாகக் கையாளப்பட்டன. இவை தரவுத்தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டாலும், பயனீட்டின் அளவுசார் அளவீடுகளிலிருந்தும் விளக்க விவாதங்களிலிருந்தும் விலக்கப்பட்டன. ஏனெனில், அவற்றின் இருப்பு, வேண்டுமென்றே சேகரிப்பதை விட, இயற்கையான கடற்கரைப் படிவையே அதிகம் பிரதிபலிக்கிறது. இந்த அணுகுமுறை, தரவுத்தொகுப்பில் நிலைத்தன்மையைப் பேணிக்கொண்டே, சூழலியல் ரீதியாகத் தற்செயலான உயிரினங்களால் உணவுத் தேடல் சமிக்ஞை சிதைக்கப்படுவதைத் தவிர்க்கிறது.
அளவு மாறுபாட்டை மதிப்பிடுவதற்கு, ஓடுகளின் நீளம், அகலம், உயரம் மற்றும் எடை ஆகியவை அளவிடப்பட்டன. ஓடுகளின் நிலை குறித்த பண்புசார் அவதானிப்புகள் மூலம், சிதைவு மற்றும் பதப்படுத்துதலுக்கான சான்றுகள் (எ.கா.: உடைதல், துளையிடுதல், எரித்தல்) பதிவு செய்யப்பட்டன. இந்தத் தரவுகள், பெரிய அல்லது அதிக மகசூல் தரும் இனங்களைத் தேர்ந்தெடுத்தல், பதப்படுத்துதலின் தீவிரம் மற்றும் வளப் பயனீட்டல் முறைகள் உள்ளிட்ட கடந்தகால மனித உணவுத் தேடல் உத்திகள் குறித்த உள்நோக்குகளை வழங்குகின்றன (கம்ப்பெல் மற்றும் பிராஜே 2015; ஃபாக்னர் 2010; ஜியோவாஸ் 2009; ஸ்பென்னெமான் 1987, 1989) (Campbell and Braje 2015; Faulkner 2010; Giovas 2009; Spennemann 1987, 1989). இனங்கள் மற்றும் புவியடுக்குகள் முழுவதும் ஓடுகளின் அளவீடுகளை ஒப்பிடுவது, இயற்கையான கடற்கரைப் படிதலை, திட்டமிட்ட சேகரிப்பு மற்றும் நுகர்விலிருந்து வேறுபடுத்தி அறிய உதவும் (ஸ்பென்னெமன் 1987). தரவுத்தொகுப்பின் தொடர்புகள், வடிவங்கள் மற்றும் உறவுகளை ஆராய, வெல்ச்சின் அனோவா, க்ருஸ்கல்-வாலிஸ் சோதனை மற்றும் பிந்தைய பகுப்பாய்வுகள் உள்ளிட்ட விளக்கப் புள்ளிவிவரப் பகுப்பாய்வுகள் பயன்படுத்தப்படும் (Welch’s ANOVA, the Kruskal–Wallis Test, and Post Hoc Analyses).
முதுகெலும்பி விலங்கினப் பகுப்பாய்வு
சிதைந்த முதுகெலும்பி எச்சங்கள் வெறும் கண்ணால் பரிசோதிக்கப்பட்டு, சாத்தியமான மிகக் குறைந்த வகைப்பாட்டு நிலைக்கு வகைப்படுத்தப்பட்டன. பற்கள், ஓட்டோலித்கள் (Otoliths – சிலவகைக் கடல் மீன்களின் தலையில் உருவாகும் கற்படிமமம்) மற்றும் தோல் முள்ளெலும்புகள் போன்ற கண்டறியும் கூறுகளுக்குப் பரிசோதனைக்காக முன்னுரிமை அளிக்கப்பட்டது. மாதிரிகள் வாழ்விடங்களாகப் (நீர்வாழ், நிலவாழ், பறப்பன) பிரிக்கப்பட்டு, விலங்கினப் பயன்பாட்டு முறைகளைப் புரிந்துகொள்வதற்காக அப்பகுதியின் சுற்றுச்சூழல் பின்னணியுடன் ஒப்பிடப்பட்டன. NISP எண்ணிக்கைகள் பெறப்பட்டாலும், சிதைவு காரணமாக MNI மதிப்பீடு சாத்தியமாகவில்லை. அடையாளம் காண முடியாத துண்டுகள், கண்டறிய முடியாத எலும்புகள் எனக் குறிக்கப்பட்டன.
கற்கருவிகள் மற்றும் எலும்புக் கருவிகளின் பகுப்பாய்வு
கற்கருவிகள் மற்றும் எலும்பு முனைகளின் பகுப்பாய்வுகள் தொழில்நுட்ப உத்திகளையும் தகவமைப்புகளையும் ஆராய்ந்தன. எலும்புக் கருவிகள் அவற்றின் உருவவியல் மற்றும் செயல்பாட்டு மாறுபாடுகளுக்காக மதிப்பிடப்பட்டன. மேலும் உடல் நீளத்திற்கும் முனை நீளத்திற்கும் இடையிலான தொடர்புகள் ஆராயப்பட்டன. வாழ்வாதார நடவடிக்கைகளில் அவற்றின் பயன்பாட்டைத் தீர்மானிக்கக் கருவிகள் தேய்மானம் மற்றும் உற்பத்தி அடையாளங்களுக்காகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன. கற்கருவித் துண்டுகள் மற்றும் கரிமக் கருவிகளின் பரிமாணப் பகுப்பாய்வு இலத்திரனியல் அளவுமானிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. அவற்றின் அதிகபட்ச நீளம், அகலம் மற்றும் தடிமன் 0.1 மி.மீ துல்லியத்துடன் அளவிடப்பட்டது. கருவி தரப்படுத்தல் மற்றும் செயல்பாட்டை மதிப்பிடுவதற்குப் பரிமாண மாறிகளுக்கு இடையிலான தொடர்புகள் புள்ளிவிவர ரீதியாக மதிப்பிடப்பட்டன. இந்த முறைகள், தொழில்நுட்ப உத்திகள் மற்றும் தகவமைப்பு நடத்தைகளைக் கருத்தில் கொள்ள தெற்காசியச் சூழல்களில் பயன்படுத்தப்படும் அணுகுமுறைகளைப் பின்பற்றுகின்றன (லாங்லி மற்றும் பலர். 2020; பிசின் மற்றும் பலர். 2022; வெடேஜ், அமானோ மற்றும் பலர். 2019; வெடேஜ், பிசின் மற்றும் பலர். 2019) (Langley et al. 2020; Picin et al. 2022; Wedage, Amano, et al. 2019; Wedage, Picin, et al. 2019). இந்தத் தரப்படுத்தப்பட்ட அளவீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், கடலோரத் தொகுப்புகளை உள்நாட்டுப் பகுதிகளிலுள்ளவற்றுடன் ஒப்பிட்டு, கருவிப் பயன்பாடு, உற்பத்தி உத்திகள் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எடுத்துக்காட்ட முடியும்.
முடிவுகள்
வேலணைத் தீவின் பாறை அடுக்குகள் மற்றும் ரேடியோகார்பன் காலவரிசை CB/Ex1 அகழ்வாராய்ச்சி 92 செ.மீ. ஆழத்தை எட்டியது. இது மயோசீன் சுண்ணாம்புப் பாறையின் மீது அமைந்திருந்த ஆறு பாறை அடுக்குகளை (L1–L6) வெளிப்படுத்தியது. அடித்தள அடுக்குகளில் (L5 மற்றும் L6) சுண்ணாம்புப் பாறையின் மீது கடல் சிப்பிகள் மற்றும் மணல் படிவுகள் இருந்தன. இவற்றில் தொல்பொருட்கள் இல்லை. ஆனால் சுமார் 6300–5970 கால BP காலகட்டத்தில் இயற்கையான கடலோரப் படிவு நிகழ்ந்ததைக் குறிக்கும் அலைகளால் அரிக்கப்பட்ட சிப்பிகள் பாதுகாக்கப்பட்டிருந்தன (படங்கள் 4 மற்றும் 5).

படம் 4. CB/Ex1 அகழாய்வுக் குழி – வடக்குப் பக்க வெட்டுமுகத்தின் படிமஅடுக்கியல்

படம் 5. வேலணைச் சிப்பிக்குவியல் (CB/Ex 01) அகழாய்வின் கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு வரிசை
முக்கியமான, மனிதனால் உருவாக்கப்பட்ட அடுக்கு (L4) ஒரு அடர்த்தியான, கரும்பழுப்பு நிற மணல் அடுக்காகும். இதில் ஏராளமான சிப்பிகள், எலும்புகள், கரி மற்றும் படிகக் கழிவுகள் உள்ளன. இது வேலணைக் குப்பைக் குவியல் படிவைக் குறிக்கிறது. உடையக்கூடிய முதுகெலும்பி எச்சங்களை விடவும் மெல்லுடலிகளின் சிப்பிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த அடுக்கிலிருந்து பெறப்பட்ட இரண்டு ரேடியோகார்பன் அளவீடுகள், இற்றைக்கு 3569–3446 மற்றும் 3467–3371 ஆண்டுக்காலத்தைச் சேர்ந்தவை (BP) எனக் கணிக்கின்றன. இது, அங்கு மக்கள் வசித்த காலகட்டத்தை இற்றைக்கு ஏறத்தாழ 3460 ஆண்டுக் காலம் (கி.மு. 1500) எனக் குறிப்பிடுகிறது. களப் பதிவு நோக்கங்களுக்காக, குழிகளைக் கொண்டு சூழல்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இவை L4A மற்றும் L4B எனப் பெயரிடப்பட்டன. இருப்பினும், இவை இரண்டும் ஒரே புவியடுக்கையே குறிக்கின்றன. இந்தக் குப்பைக் குவியல்களின் ஆழமற்ற தன்மை (சுமார் 15 செ.மீ.), பதப்படுத்தப்பட்ட உணவை அப்புறப்படுத்துவது தொடர்பான அவ்வப்போதைய மனிதச் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறது. இது, குறுகிய காலத்தில் குறைந்த படிவு விகிதத்தைப் பிரதிபலிக்கிறது (படங்கள் 4 மற்றும் 5). மேல் அடுக்குகளில் (L3–L1), மனிதச் செயல்பாடுகளின் வெளிப்படையான அறிகுறிகள் ஏதுமின்றி, இறுக்கப்பட்ட, சிதைந்த மணல் குன்றுகள் உள்ளன (படம் 4). இராணுவக் கட்டுமானத்திற்காக புல்டோசர் கொண்டு சமன்படுத்தப்பட்டதால் இவை சிதைக்கப்பட்டன. மேலும், இவற்றின் மேற்பரப்பில், பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகள் உட்பட, பிற்காலப் போர்க்காலச் செயல்பாடுகளின் அறிகுறிகள் காணப்படுகின்றன. ஒன்றாக, புவியடுக்கு மற்றும் காலவரிசைச் சான்றுகள், வடக்கு இலங்கையில் காலவரையறுக்கப்பட்ட மிகப் பழமையான வரலாற்றுக்கு முந்தைய குடியிருப்பு இருந்ததை நிறுவுகின்றன.
முதுகெலும்பற்ற விலங்கினங்கள்
வேலணை CB/Ex1 இலிருந்து கிடைத்த முதுகெலும்பற்ற உயிரினங்களின் தொகுப்பில் 78.4 கிலோகிராம் எடையுள்ள பொருட்களும், 14,605 அடையாளம் காணக்கூடிய ஓடுகளும் உள்ளன. இது வகைப்பாட்டியல் ரீதியாகப் பன்முகத்தன்மை வாய்ந்த மெல்லுடலி விலங்கினங்களைக் குறிக்கிறது (அட்டவணை 1; அட்டவணை S1). இந்தப் பகுப்பாய்வில் 7746 சேற்று ஊர்வன (செரித்திடே மற்றும் பொட்டாமிடிடே) விலக்கப்பட்டுள்ளன. இவை மொத்த எடையில் வெறும் 0.93% மட்டுமே ஆகும். மற்ற வகைப்பாடுகளுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், அவற்றின் சிறிய ஓட்டு எடை காரணமாக, அவற்றின் இருப்பு மிகுதி அளவீடுகளைத் தவறாக வலியுறுத்தியிருக்கும். அவற்றை நீக்குவது, பெரிய மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இனங்களின் பயன்பாடுகளை, அறிகுறிகளை வெளிப்படுத்த உதவுகிறது.
கீழ் அடுக்குகள் (L5–L6) முதன்மையாக இயற்கையாக உருவானவை. சிதறிய ஓடுகள் மற்றும் குறைந்தபட்சக் கலைப்பொருட்களுடன் காணப்படுகின்றன. இந்த அடுக்குகள் குறைந்த ஆற்றல் கொண்ட கடல்சார் செயல்முறைகள், ஓதப் படிவு மற்றும் வண்டல் படிதல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன. இதன் விளைவாக சிறிய ஓடுகளும் குறைவான அதிக விளைவைத்தரும் வகைகளும் காணப்படுகின்றன. இதற்கு மாறாக, மேல் L4 அடுக்கு, மீண்டும் மீண்டும் ஓடுகளை அப்புறப்படுத்துதல், அதே இடத்தில் பதப்படுத்துதல், மற்றும் பெரிய, அதிக மகசூல் தரும் வகைப்பாடுகளைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மனிதச் செயல்பாடுகளின் தெளிவான சான்றுகளைக் காட்டுகிறது. பன்முகத்தன்மை அளவீடுகள் இந்த வடிவத்தை ஆதரிக்கின்றன: ஷானன் குறியீடு (H0 = 1.3) மற்றும் அதனுடன் தொடர்புடைய பயனுள்ள இனங்களின் எண்ணிக்கை (ENS = 3.7) ஆகியவை ஒப்பீட்டளவில் குறைந்த பன்முகத்தன்மையைக் குறிக்கின்றன, இது ஒரு சிறிய எண்ணிக்கையிலான வகைப்பாடுகளின் வலுவான ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கிறது (இணைப்பு 2: அட்டவணை S2 ஐப் பார்க்கவும்).



படம் 6. CB/Ex 1 இல் அகழாய்வில் பதிவுசெய்யப்பட்ட மெல்லுடலி எச்சங்களின் விளக்கப் புள்ளிவிவரங்கள்; C மற்றும் D பகுப்பாய்வுகளில் G. pectinatum சேர்க்கப்படவில்லை.
இந்தக் குறைந்த பன்முகத்தன்மைப் பாங்கானது, சீரற்ற கடற்கரைச் சேகரிப்பைக் காட்டிலும், அதிகப் பலன் தரும் இனங்களில் கவனம் செலுத்தும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சிப்பி சேகரிப்பு அணுகுமுறையுடன் ஒத்துப்போகிறது. இந்தப் பாங்கானது படம் 6Dஇல் தெளிவாகத் தெரிகிறது. அங்கு கடல் நத்தை, ஊரி (Rissoina Ambigua, Clithon Oualaniense, Pardalinops Testudinaria and Pyrene Flava) போன்றவை அந்தத் தொகுப்பில் பெரும்பான்மையாக உள்ளன. அதே நேரத்தில், மீதமுள்ள வகைப்பாடுகள் குறைந்த எண்ணிக்கையில் நீண்ட பரவலை உருவாக்குகின்றன (படம் 6A மற்றும் D).


படம் 7. ஓட்டின் எடை மற்றும் சராசரி அளவை அடிப்படையாகக் கொண்டு CB/Ex1 அகழாய்வில் பதிவு செய்யப்பட்ட மெல்லுடலி வகைப்பிரிவுகளின் ஒப்பீட்டுப் பிரதிநிதித்துவம்.
L4இல் 45 நத்தையினங்களும் (1680 MNI) மற்றும் 14 இருவால்வு இனங்களும் (2738 MNI) உள்ளன (படம் 6A மற்றும் B). எடை அடிப்படையிலான மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலான அளவீடுகள், உயிர்ம அளவில் இருவால்வுகள் ஆதிக்கம் செலுத்துவதையும், எண்ணிக்கையில் நத்தையினங்கள் ஆதிக்கம் செலுத்துவதையும் காட்டுகின்றன. இருவால்வுகளுக்குள், Gafrarium Pectinatum (வரிகளுடைய சிப்பி – கிளிஞ்சல்) பெருமளவில் மேலோங்கி, மொத்த ஓட்டு எடையில் 59.1% பங்களித்து, குப்பைக் குவியலின் வாழ்வாதார அடையாளத்தின் மையமாக அமைகிறது. நத்தையினங்களில், Lambis sp. (MNI 37), Terebralia Palustris (MNI 27), Turbinella Pyrum (MNI 11), Magistrombus Succinctus (MNI 8), Volegalia Cochlidium (MNI 6), மற்றும் Pleuroploca Trapezium (MNI 8) ஆகியவை முக்கிய உண்ணக்கூடிய இனங்களாக உள்ளன. இவற்றில் பல பெரிய உடலமைப்புக் கொண்ட, அதிக மகசூல் தரும் இனங்கள் ஆகும். இவை, Clithon Oualaniense, Rissoina Ambigua, மற்றும் Neritina Pulligera போன்ற சிறிய ஓத இடைப்பகுதி இனங்களுடன் ஒப்பிடும்போது அதிக கலோரி வருவாயை வழங்குகின்றன (படம் 6D மற்றும் 7A மற்றும் B).
நவீன ஒப்புமைகள் மற்றும் ஒப்பீட்டுச் சூழலியலின் அடிப்படையில், இனங்களின் வாழ்விடப் பண்புக்கூறுகள், பல கடலோரச் சூழல்களில் பரவலான பயன்பாட்டைக் குறிப்பிடுகின்றன (படம் 6C). இவற்றில், ஓத இடைப்பகுதிப் பாறைக் கரைகள் MNIஇல் 58%, மணல் கடற்கரைகள் மற்றும் சதுப்புநிலக் காடுகள் 18%, மற்றும் கடற்புல் படுக்கைகள் 6% ஆகும். ‘Terebralia Palustris’ போன்ற சதுப்புநிலக் காடுகளுடன் தொடர்புடைய இனங்கள், உவர்நீர்ச் சூழல்களின் பயன்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. மீதமுள்ள விகிதத்தில் நிலப்பரப்பு இனங்கள் அடங்கும், குறிப்பாக ‘Ariophanta Semirugata’ மற்றும் A. Exilis, இவை பழங்காலச் சூழல் மாறுபாட்டையோ (உள்ளூரில் அதிக ஈரப்பதம் உள்ள சூழல்கள்) அல்லது உள்நாட்டுப் பகுதிகளிலிருந்து மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமாற்றத்தையோ பிரதிபலிக்கக்கூடும்.
இந்தத் தொகுப்பு முழுவதும் ஓடுகளின் பாதுகாப்பு பொதுவாக நன்றாக உள்ளது, இருப்பினும் L4இல், குறிப்பாக பெரிய வயிற்றுக்காலிகள் மற்றும் இருவால்வு உயிரினங்களில், சிதைவு 65.5% வரை அடைகிறது. L4, குழி B இலிருந்து (7301 கிராம்; 6336 துண்டுகள்) கிடைத்த, அடையாளம் காணக்கூடிய, ஆனால் அளவிட முடியாத Gafrarium sp. ஓட்டுத் துண்டுகள், இந்தத் தொகுப்பின் மிகவும் சிதைந்த பகுதியின் மாதிரியாக ஆய்வு செய்யப்பட்டன. இது, பதப்படுத்துதல் தொடர்பான உடைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய படிவு முறைகளை மதிப்பிட உதவியது (அட்டவணை 2). அனைத்து Gafrarium sp. ஓடுகளில் 53.87% மட்டுமே முழுமையாகவோ அல்லது மீண்டும் உருவாக்கக்கூடியதாகவோ இருந்தன.
இத்தகைய குறிப்பிடத்தக்க ஓட்டுச் சிதைவை Terebralia Palustris, Lambis Chiragra, Murex sp., Turbinella Pyrum, Pleuroploca Trapezium, Magistrombus Succinctus, Chicoreus Virgineus, Pinna Bicolor, Isognomon Isognomum, மற்றும் Turbo Intercostalis உள்ளிட்ட பிற வகை உயிரினங்களிலும் காணலாம். I. Isognomum (MNI ¼2; எடை ¼ 253கி) மற்றும் P. Bicolor (MNI ¼2; எடை ¼182கி) போன்ற துண்டாக்கப்பட்ட இருவால்வு உயிரினங்கள், நுகர்வை மதிப்பிடுவதில் MNIஐ விட எடை அளவீடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. பல மாதிரிகளில் உள்ள துண்டுகளின் விளிம்புகளும் வெப்ப மாற்றமும், சமைக்கும் போதும் பதப்படுத்தும் போதும் மனிதர்களால் உடைக்கப்பட்டதையும் எரிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றன.
L4இல் சுத்தியல் கற்களும் ஒரு சுண்ணாம்புக்கல் பட்டடையும் இருப்பது இந்த விளக்கத்தை ஆதரிக்கிறது. T. Intercostalis இன் மூடி எண்ணிக்கைகள் நுனி எண்ணிக்கைகளுடன் நன்கு பொருந்துகின்றன (25 vs. 28). இது படிந்த பிறகு ஏற்படும் இழப்புக் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. இருப்பினும், P. Trapezium இன் மூடிகளுக்கும் (நான்கு) நுனி எண்ணிக்கைகளுக்கும் (29) இடையே உள்ள முரண்பாடுகள், சிதைவை அதிகம் எதிர்க்கும் Turbo இன் சுண்ணாம்பு மூடிகளுடன் ஒப்பிடும்போது, கொம்பு மூடிகள் மோசமாகப் பாதுகாக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. இந்த புதைபடிவவியல் ஆய்வுகள், L4இன் மனிதத் தோற்றத்தையும், அந்த இடத்திலேயே மெல்லுடலிகள் தீவிரமாகப் பதப்படுத்தப்பட்டதையும் உறுதிப்படுத்துகின்றன.

ஸ்கைலா பரமமோசைன், ஸ்கைலா ஸ்பீசிஸ் மற்றும் ஃபிட்லர் நண்டுகள் (NISP = 7) ஆகியவற்றின் ஓட்டுடலித் துண்டுகள் உள்ளிட்ட பிற முதுகெலும்பற்ற உயிரினங்களின் எச்சங்கள், பல்வேறுபட்ட வாழ்வாதார உத்திகளைக் குறிக்கின்றன.
காஃப்ரேரியம் பெக்டினேட்டம்: உருவ அளவியல் மற்றும் புள்ளியியல் பகுப்பாய்வு
ஜி. பெக்டினேட்டத்தின் (வரிகளுடைய சிப்பி – கிளிஞ்சல்) ஆதிக்கமும் அளவு மாறுபாடும், வாழ்வாதாரத் தீவிரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை ஆராய்வதற்கான ஒரு முக்கிய பதிலீடாக இதை ஆக்குகின்றன. இந்த இனம் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல கடல்களில் உள்ள மணல் அல்லது பாறை நிறைந்த ஓத இடை மண்டலங்களின் சூடான, ஆழமற்ற நீரில் வாழ்கிறது. L4 (3500–3400 cal BP) இலிருந்து 2000க்கும் மேற்பட்ட ஓடுகள் மற்றும் L5–L6 (6300–5974 cal BP) இலிருந்து 300க்கும் மேற்பட்டவற்றின் அளவீடுகள், வரிசைமுறை முழுவதும் மேல்நோக்கிச் செல்லும்போது சீரான அளவு குறைவதைக் காட்டுகின்றன (அட்டவணைகள் 2–4; படம் S1).
சராசரி ஓட்டு நீளங்கள் அடுக்கு 4 (34.86 மிமீ) முதல் அடுக்குகள் 5–6 (40.44–44.19 மி.மீ) வரை அதிகரிக்கின்றன. அடுக்கு 4 இல் 52.67 மி.மீ ஆக இருந்த அதிகபட்ச நீளம், அடுக்கு 5 இல் 62.29 மி.மீ ஆக உள்ளது. ஓட்டின் அகலம் மற்றும் உயரம் இதே போக்கைப் பின்பற்றுகின்றன. பழைய அடுக்குகளில் பெரிய ஓடுகள் காணப்படுகின்றன (அட்டவணை 3; படம் 8). கூடுதல் தகவல்கள் துணை அட்டவணைகளில் கிடைக்கின்றன. வெல்ச்சின் அனோவா (F4, 233.238) ¼ 53.411, p<0.001) (அட்டவணைகள் S3–S5), லெவின் சோதனையால் (அட்டவணை 4) அடையாளம் காணப்பட்ட சமமற்ற மாறுபாடுகளைக் கணக்கில் கொள்கிறது. க்ருஸ்கல்-வாலிஸ் சோதனை முடிவுகள், அனைத்து அளவு அளவுருக்களான ஓட்டின் நீளம் (H=235.269, p<0.001), ஓட்டின் உயரம் (H=283.560, p<0.001) மற்றும் ஓட்டின் அகலம் (H=261.635, p<0.001) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காட்டின. இது சூழல்களுக்கு இடையே ஓட்டின் அளவில் சீரற்ற மாறுபாடு இருப்பதைக் குறிக்கிறது (அட்டவணை S6). இவை புவியடுக்கு அலகுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடுகளைக் காட்டுகின்றன. வெல்ச்சின் அனோவா, அடுக்குகள் 5-6 இல் உள்ள ஓடுகள், அடுக்கு 4 இல் உள்ள ஓடுகளை விட குறிப்பிடத்தக்க அளவில் பெரியவை என்பதைக் காட்டுகிறது. படம் 8 இல் காட்டப்பட்டுள்ளபடி, ஓட்டின் அகலம், உயரம் மற்றும் எடை ஆகியவற்றிலும் இதே போன்ற வடிவங்கள் தெளிவாகத் தெரிகின்றன.


இந்த வேறுபாடுகள் எங்கு ஏற்பட்டன என்பதைக் கண்டறிய, போன்ஃபெரோனி மற்றும் ஹோம் திருத்தங்களுடன் டன்னின் பிந்தைய சோதனைகள் நடத்தப்பட்டன (துணை இணைப்பு 2: அட்டவணைகள் S8–10). ஓட்டின் நீளத்தைப் பொறுத்தவரை, குழி A நிலை 6 மற்றும் குழி A நிலை 4, குழி B நிலை 4 ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க ஜோடி வேறுபாடுகள் (p<0.001) காணப்பட்டன. அதேபோல், குழி A நிலைகள் 4–5 மற்றும் குழி Bஇன் அனைத்து நிலைகளுக்கும் இடையேயும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் (p<0.001) காணப்பட்டன. குழி A நிலை 4 மற்றும் குழி B நிலை 4க்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் காணப்படவில்லை (p=0.765). இது, குழிகளுக்கு இடையேயான பக்கவாட்டு மாறுபாடு மிகக் குறைவு என்பதையும், அளவு மாறுபாடு முதன்மையாக இடஞ்சார்ந்த மாதிரி விளைவுகளை விட செங்குத்து (கால) மாற்றங்களையே பிரதிபலிக்கிறது என்பதையும் குறிக்கிறது (அட்டவணை S8).

படம் 8. CB/Ex 01 அகழாய்வின் அனைத்து அடுக்குகளிலும் பதிவுசெய்யப்பட்ட G. pectinatum இனத்தின் ஓட்டு வடிவளவியல் அளவீடுகளின் சராசரி மதிப்புகள்
ஓட்டின் உயரத்தைப் பொறுத்தவரை, குழி A நிலைகள் 4–5 மற்றும் குழி Bஇல் உள்ள அதற்கேற்ற நிலைகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் (p<0.001) தெளிவாகத் தெரிந்தன. இதில், குழி Bஇன் ஓடுகள் தொடர்ந்து சிறியதாக இருந்தன. ஆழமான அடுக்குகளில் (குழி A நிலை 6) மேல் அடுக்குகளை விட கணிசமாகப் பெரிய ஓடுகள் கிடைத்தன (p<0.001), அதே சமயம் குழி A நிலைகள் 5 மற்றும் 6க்கு இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் கண்டறியப்படவில்லை (p¼0.064) (அட்டவணை S9).

ஓட்டின் அகலத்தைப் பொறுத்தவரை, டன்னின் சோதனை, குழி A நிலை 4இல் இருந்து கிடைத்த ஓடுகள் ஆழமான அடுக்குகளில் (L5–L6) இருந்து கிடைத்த ஓடுகளை விட கணிசமாகச் சிறியதாக இருந்தன என்பதைக் காட்டியது (p<0.001). இது அடுக்குகளின் வரிசைப்படி, மேல்நோக்கிச் செல்லும்போது அளவில் ஒரு குறைவு இருப்பதைக் குறிக்கிறது. குழிகளுக்கு இடையேயான ஒப்பீடுகள், குழி Bஇல் இருந்து கிடைத்த ஓடுகள் பொதுவாகக் குழி Aஇல் இருந்து கிடைத்த ஓடுகளை விடப் பெரியதாக இருந்தன, குறிப்பாக நிலை 5இல் (p¼0.002) என்பதைக் காட்டின. குழி A நிலைகள் 5 மற்றும் 6க்கு இடையிலோ (p¼0.165) அல்லது குழி B நிலை 5 மற்றும் குழி A நிலை 6க்கு இடையிலோ (p¼0.105) குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் ஏற்படவில்லை. இது ஆழமான படிவுகள் புள்ளிவிவரப்படி ஒத்தவை என்பதைக் காட்டுகிறது (அட்டவணை S10).
ஒட்டுமொத்தமாக, இந்த உருவ அளவியல் மாறுபாடுகள் பரிமாணங்கள் முழுவதும் சீராக உள்ளன. கீழ் படிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட ஓடுகள் பெரியதாகவும் மிகவும் சீராகவும் உள்ளன. அதே சமயம் குப்பைக் குவியலில் இருந்து எடுக்கப்பட்டவை சிறியதாகவும் மிகவும் மாறுபட்டதாகவும் உள்ளன. இது தீவிரமான வளப்பயன்பாடு, நெருக்கடி மற்றும் சாத்தியமான சூழலியல் அழுத்தத்தைக் குறிக்கிறது.
ஓட்டின் எடைக்கும் உருவ அளவியலுக்கும் இடையிலான உறவை ஆராய்வதற்காக, பிட் B L4 (n=585) ஒரு பிரதிநிதித்துவ மாதிரியாகக் கொண்டு பியர்சன் தொடர்புப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இது ஓட்டின் உயரத்திற்கும் எடைக்கும் இடையே ஒரு நேர்மறையான தொடர்பைக் காட்டுகிறது (r=0.741, p<0.001). ஓட்டின் அகலத்திற்கும் எடைக்கும் இடையே ஒரு மிதமான நேர்மறையான தொடர்பு காணப்படுகிறது (r=0.590, p<0.001). ஓட்டின் நீளத்திற்கும் எடைக்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு எதுவும் இல்லை (r=−0.022, p=0.646) (அட்டவணை 5). இந்த முடிவுகள், நீளத்தை விட உயரமும் அகலமுமே உயிர்ப்பொருளின் முதன்மைக் கணிப்பான்கள் என்பதைக் காட்டுகின்றன. இது வாழ்விட நிலைமைகளுக்கு G. Pectinatum இன் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் எதிர்வினைகளையும், அறுவடையின் சாத்தியமான விளைவுகளையும் பிரதிபலிக்கிறது. இந்தப் பகுப்பாய்வு அனைத்து அடுக்குகளிலும் மீண்டும் செய்யப்படவில்லை என்றாலும், இது குப்பைக் குவியலுக்குள் உள்ள பரிமாணம்-எடை உறவுகள் குறித்த ஒரு பிரதிநிதித்துவப் பார்வையை வழங்குவதோடு, மேலதிக ஆய்வுக்கு வழிகாட்டக்கூடிய வடிவங்களையும் எடுத்துக்காட்டுகிறது.
முதுகெலும்பி விலங்கினங்கள்
வேலணை CB/Ex1 அடுக்கு 4இல் இருந்து கிடைத்த முதுகெலும்பி விலங்கினத் தொகுப்பு, கடல் மீன்பிடித்தல், வேட்டையாடுதல் மற்றும் சிறிய நிலவாழ் உயிரினங்களைச் சந்தர்ப்பத்திற்கேற்பப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த அளவிலான வாழ்வாதார உத்திக்கான முக்கிய சான்றுகளை வழங்குகிறது. குப்பைக் குவியலிலிருந்து மொத்தம் 12,036 எலும்புத் துண்டுகள் (2096 கிராம்) மீட்கப்பட்டன. இது மொத்த விலங்கினத் தொகுப்பின் எடையில் 2.6% ஆகும். எலும்புகள் மிகவும் சிதைந்தும், அடிக்கடி எரிந்தும் காணப்படுகின்றன. இதனால், பற்கள், ஓட்டோலித்கள் மற்றும் தோல் முட்கள் போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்ட எலும்புகளை மட்டுமே வகைப்பாட்டியல் ரீதியாக அடையாளம் காண முடிகிறது (படம் 9). இந்தத் தொகுப்பில் தெளிவான இறைச்சி வெட்டும் அடையாளங்கள் (எ.கா., வெட்டுக் குறிகள் அல்லது தட்டியதற்கான தடங்கள்) எதுவும் காணப்படவில்லை. இது, எலும்பு துண்டாதல் என்பது பெரும்பாலும் எரித்தல், மிதித்தல் அல்லது பிற படிவுக்குப் பிந்தைய செயல்முறைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இந்தக் கூட்டத்தில் மீன் எச்சங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை முக்கியமாக சிறிய மற்றும் நடுத்தர உடலமைப்பு கொண்ட கடல் மீன்களைக் கொண்டிருக்கின்றன. இதில் 14க்கும் மேற்பட்ட இனங்கள் காணப்படுகின்றன (NISP = 1530) (படம் 9). அகந்தோபாக்ரஸ் sp. மிகவும் பொதுவான இனமாகும் (NISP = 1122). இதைத் தொடர்ந்து கார்சர்ஹினஸ் sp. (NISP = 23) மற்றும் ஸ்காரஸ் கோபன் (NISP = 15) ஆகியவை காணப்படுகின்றன. அரிதாகக் காணப்படும் மீன்களில் ராஜிஃபார்ம்ஸ், லெத்ரினஸ் sp., நெகாப்ரியான் அகுடிடென்ஸ், காரங்காய்டஸ் sp., நெட்டுமா sp., எபிநெஃபெலஸ் sp., லேட்ஸ் கால்காரிஃபர், ஸ்ட்ராங்கிலூரா sp., ஸ்காரஸ் sp., மற்றும் ஸ்பைரேனா sp. ஆகியவை அடங்கும்.

படம் 9. CB/Ex 1 அகழாய்வில் மீட்கப்பட்ட பிற விலங்கினங்களின் பன்முகத்தன்மை
பாலூட்டி எச்சங்கள் (NISP ¼57) 14 இனங்களை உள்ளடக்கியுள்ளன, அவற்றில் கொறித்துண்ணிகள் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த குழுவாக (NISP ¼ 24) உள்ளன (படம் 9). குறிப்பிடத்தக்க இனங்களில் Suncus Murinus, Bandicota Indica, Rattus sp., Mus sp., Tatera Indica Ceylonica, மற்றும் Funambulus Palmarum ஆகியவை அடங்கும். Lepus Nigricollis Sinhala மற்றும் Moschiola Meminna (NISP ¼2) போன்ற நடுத்தர அளவிலான பாலூட்டிகள், Axis Axis Ceylonensis (NISP ¼17), Cervus Unicolor (NISP ¼4), மற்றும் Sus Scrofa (NISP ¼3) போன்ற பெரிய இனங்களுடன் இணைந்து வாழ்கின்றன. அவ்வப்போது காணப்படும் கடற்பசுவின் (Dugong Dugon) விலா எலும்புகள் (NISP ¼6) மற்றும் டால்பின்கள் (Delphinus Delphis?) (NISP ¼3) ஆகியவை பெரிய கடல் பாலூட்டிகளின் சிறப்பு வாய்ந்த பயனீட்டலை எடுத்துக்காட்டுகின்றன. சாத்தியமான மைக்ரோகைரோப்டெரா எச்சங்களுக்கு மேலதிக அடையாளம் காணுதல் தேவைப்படுகிறது. ஊர்வனவற்றின் எச்சங்களில் கடல் ஆமையின் விலா எலும்புகள், துடுப்பு எலும்புகள் மற்றும் மார்பு ஓட்டுத் தகடுகள் (NISP ¼ 16) உள்ளன. இவை பெரும்பாலும் கரெட்டா கரெட்டா (Caretta Caretta) அல்லது லெபிடோகெலிஸ் ஒலிவாசியா (Lepidochelys Olivacea) இனத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
நன்னீர் ஆமையின் எச்சங்கள் (NISP ¼ 3) லிஸ்ஸெமிஸ் புங்க்டாட்டா (Lissemys Punctata) மற்றும் மெலனோகெலிஸ் ட்ரைஜுகா (Melanochelys Trijuga) இனத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. மற்ற ஊர்வனவற்றில் (NISP ¼12) கலோட்டஸ் ஸ்பீசிஸ் (Calotes sp.), வரானஸ் பெங்கலென்சிஸ் (Varanus Bengalensis) மற்றும் பாம்பு போன்ற விலங்கினங்கள் அடங்கும். சிறிதளவு பறவை எலும்புகளும் (NISP ¼5) மற்றும் இருவாழ்வி எச்சங்களும் (Bufo sp.) (NISP ¼3) கண்டெடுக்கப்பட்டன. இருப்பினும் இன அளவிலான அடையாளம் காணுதல் இயலவில்லை (படம் 9). இந்த விலங்கினத் தொகுப்பு பல்வேறு வாழ்விடங்களின் பயன்பாட்டைக் குறிக்கிறது. இதில் 56.4% எச்சங்கள் நீர்வாழ் சூழல்களிலிருந்தும் (ஓத இடைப்பகுதி/ ஓதக் கீழ்ப்பகுதி, கடலோர சதுப்புநிலக் காடு, நன்னீர்) மற்றும் 38.5% நிலப்பரப்பு வாழ்விடங்களிலிருந்தும் (வறண்ட இலையுதிர் காடு, புதர் நிலம், புல்வெளி) கிடைத்துள்ளன. பறவை எச்சங்கள் மொத்தத்தில் 5% ஆகும்.


படம் 10. CB/Ex 1 அகழாய்வில் மீட்கப்பட்ட குவார்ட்ஸ் சில்லுகளின் அளவுப் பரவல்

L4க்குள் எலும்புப் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகிறது. மீன் கூறுகள் பொதுவாக நன்கு கனிமமயமாக்கப்பட்டு, இறுக்கமாக உள்ளன. மிதமான மேற்பரப்பு அரிப்பைக் காட்டினாலும், மிகக் குறைந்த வேதியியல் சிதைவையே கொண்டுள்ளன. இதற்கு மாறாக, பாலூட்டிகளின் நீண்ட எலும்புகள் அதிக சிதைவு மற்றும் உரிதலைக் காட்டுகின்றன. இது வறண்ட கடலோரச் சூழலில் ஏற்பட்ட தீவிர மனிதச் செயலாக்கம் மற்றும் படிவுக்குப் பிந்தைய வானிலைச் சிதைவு ஆகிய இரண்டின் காரணமாக இருக்கலாம். மூஞ்சூறுகள் உட்பட கொறித்துண்ணிகள், குப்பைக் குவியலில் நிரந்தரமாக வசிப்பவர்களையோ அல்லது சந்தர்ப்பவாத வேட்டையையோ குறிக்கலாம். L5–L6இல் முதுகெலும்பி எச்சங்கள் இல்லாதது, இந்தக் கீழ் அடுக்குகள் கலாசாரச் சூழல்களைக் காட்டிலும் இயற்கையான கடல் படிவுகளைக் குறிக்கின்றன என்ற விளக்கத்தை ஆதரிக்கிறது. எனவே, அனைத்து முதுகெலும்பிப் பொருட்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட குடியிருப்பு அடுக்கிலிருந்து (L4) பெறப்பட்டவை.
தொடரும்.



