தீபகற்ப இந்தியா
தீபகற்பமாக விளங்கும் இந்திய உபகண்டத்தின் தென்பகுதி – வடக்கே நிலத்தொடர்பாலும், மற்றைய மூன்று பக்கங்களிலும் – மேற்கே அரபுக் கடலாலும், தெற்கே இந்து மாகடலாலும், கிழக்கே வங்காளக் கடலாலும் சூழப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நிலம் தெற்கு நோக்கிச் செல்லச் செல்லச் சுருக்கமடைந்து தெற்கே குமரி முனையில் முடிகிறது. இந்தியத் தீபகற்பத்தின் வடக்கெல்லையான விந்திய மலைத்தொடர் கங்கைச் சமவெளியின் தென் எல்லையைத் தழுவிக்கொண்டு கிழக்கே பீகாரில் ராஜ்மஹால் குன்றுவரை பரந்திருக்கிறது. தீபகற்பத்தின் மேற்கே மேற்கு மலைத் தொடரும், கிழக்கே கிழக்கு மலைத் தொடரும் அரண்களாக இருக்கின்றன.
இந்த நிலப்பாளத்தின் கல்லியல் இணைப்பாக்கம் மூன்று வகையான பாறை அடுக்கமைவுகளைக் கொண்டிருக்கிறது. கைமூர் தொடர் (Kaimur Range) மணற்பாறைகளைக் (Sandstone) கொண்டிருக்கிறது. தக்காண பீடமும், கதியவார் பகுதியும் அடையற்பாறை (Sedimentary) நிலம். தென்னகத்தின் மிகுதிப்பகுதி முக்கியமாக கருங்கல்லினால் ஆனது. இதைத் தவிர சிறுபகுதி பாறை அமைப்புகளில் மணற்பாறை, தீக்கல் (Basalt), குவாட்ஸ், அகேற், படிக்கல் (Chalcedony) ஆகியவை காணப்படுகின்றன (Spate, O.H.K. 1957; Lal, B.B. 1957). கற்கால மக்கள் இக்கற்களை உபயோகித்தே கற்கோடரிகள், சீவல்கள் (Flakes), பிளப்பிகள் போன்ற பெரிய கல்லாயுதங்களையும், பின்னர் நுண்கற்களைக் கொண்ட கருவிகளையும் தயாரித்தார்கள்.
தீபகற்ப இந்தியா ஆரை வடிவிலமைந்த ஆற்றுத் தொகுதியைக் (Radial River System) கொண்டிருக்கிறது. சம்பால், பெத்வா, சன் ஆகிய ஆறுகள் வடக்கு நோக்கி ஓடி கங்கை-ஜமுனை ஆற்றுத் தொகுதியுடன் சங்கமமாகின்றன. நர்மதா, தப்தி ஆறுகள் மேற்கு நோக்கிச் சென்று அரபிக் கடலை அடைகின்றன. மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, தாமிரபரணி ஆறுகள் கிழக்கே ஓடிச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
தீபகற்பத்தின் மேற்பகுதிகளில் ஆறுகள் அகலம் குறைவானவை ஆதலால் அவைகளிலிருந்து பெறப்படும் ஆற்று வண்டல்கள் (Alluvial Deposits) கரை நிலங்களில் பரவலாகப் படிவதில்லை. ஆற்று வண்டல்கள் அதிகமாக உள்ள படிநிலங்கள் ஆறுகளின் கழிமுகங்களிலேயே காணப்படுகின்றன. ஆதலால், உள்நாடுகளைக் காட்டிலும் இக்கழிமுக நிலங்களே அதிக செழிப்பும் வளமும் கொண்ட நிலங்களாகும். புராதன நகரங்களான காவிரிப்பூம்பட்டினம், கொற்கை போன்றவை நதிகளின் கழிமுகங்களில் அமைக்கப்பட்டிருந்தமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
சிந்து-கங்கை நதிகளுக்கு இமாலயத்தின் பனிப்பாளங்கள் நீரை வழங்குகின்றன. வெப்பமான கோடை காலங்களில் பனி உருகி ஓடுவதால், இக்காலங்களிலும் இந்த ஆறுகளில் கணிசமான அளவு நீர் ஓடிக்கொண்டிருக்கும். மழைக் காலங்களில் பெருகியோடும் தீபகற்ப நதிகளின் நீரோட்டம் கோடை காலங்களில் நலிவடைந்துவிடும்.
தமிழ்நாட்டின் முக்கிய நதிகள்


நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பது போல, ஒரு நிலத்தில் வாழும் மக்களின் பண்பாட்டையும் அவர்களது வாழ்வியலையும் அவர்கள் வாழும் மண்ணின் தன்மையும், அங்கே நிலவும் தட்பவெப்ப நிலையும், சூழலுமே தீர்மானிக்கின்றன. அவ்வாறே தமிழக மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் அந்த நிலத்தின் சூழலும், பருவக் காற்றுகளும், மழையின் தன்மையும், ஆறுகளின் போக்குகளுமே தீர்மானித்து வந்திருக்கின்றன.
பெரும்பாலும் ஆற்றங்கரை நாகரிகங்கள் உருவாகும்போது ஆற்றின் கழிமுக அரங்கத்தில் அல்லது இடையில் வேளாண்மையை மையப்படுத்திய ஒரு நகரமும், ஆறு கடலுடன் சங்கமமாகும் இடத்தில் ஒரு துறைமுக அல்லது வாணிப நகரமும் உருவாகிறது வழக்கம். சோழ நாட்டில் உறந்தை (உறையூர்) காவேரி நதியின் இடை நகரமாகவும், காவிரிப்பூம்பட்டினம் கடற்கரை வாணிப நகரமாகவும் அமைந்திருந்தன. பல்லவ நாட்டில் காஞ்சி பாலாற்றின் இடைநகரமாகவும், மாமல்லபுரம் கடற்கரை நகரமாகவும் அமைந்திருந்தன. பாண்டிய நாட்டில் மதுரை வைகை ஆற்றின் இடைநகராகவும், கொற்கை தாமிரபரணியின் வணிகத் துறையாகவும் அமைந்திருந்தது. அவ்வாறே, சேர நாட்டில் கருவூர் வஞ்சி உள்நாட்டு நகரமாகவும், வஞ்சித்துறை வாணிபத் துறையாகவும் விளங்கின.
பாலாறு
தமிழகத்தின் முக்கியமான நதிகளில் வடக்கே ஓடும் பாலாறும் ஒன்று. வரலாற்றுக் காலத்தில் இந்த நதிக்கரையில் அமைந்த காஞ்சி நகரம் பல்லவ அரசர்களினதும், சோழ அரசர்களினதும் தலைநகராக விளங்கியது. கர்நாடக மாநிலத்தில் சிக்கபல்லபுரம் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் ஆரம்பமாகும் இந்த நதி, கர்நாடகத்தில் 93 கி.மீ. (58 மைல்) தூரம் ஓடிய பின் ஆந்திரப் பிரதேசத்தினூடே 33 கி.மீ. (21 மைல்) தூரம் ஓடி, பின்னர் தமிழகத்திற்கு வந்து அங்கே 222 கி.மீ. (138 மைல்) ஓடிச் சென்று வயலூரில் வங்காளக் கடலை அடைகிறது. இதற்கு நீர் வழங்கும் ஏழு கிளை ஆறுகளில் செய்யாறு முக்கியமானது.
தமிழ் நாட்டில் பாலாற்றில் அமைக்கப்பட்ட அணைக்கட்டு ஆற்றுநீரைத் திருப்பி பூண்டி நீர்த்தேக்கத்திற்கும், செம்பரம்பாக்கம் ஏரிக்கும் அனுப்பிவைக்கிறது. சென்னை நகருக்கு தண்ணீர் வழங்கும் நீர்த்தேக்கங்கள் இவை. ஆந்திரப்பிரதேச அரசு பாலாற்றுக்குக் குறுக்கே கணேசபுரம் என்ற இடத்தில் கட்டிய நீர்ப்பாசன அணைக்கட்டைத் தொடர்ந்து இந்த ஆற்றில் வரும் நீர் வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும், சென்னை நகரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சமீப காலங்களில் ஆந்திர நாட்டுடன் செய்த ஒப்பந்தப்படி சென்னை நகருக்கு கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் வரவழைக்கப்படுகிறது.
தென்பெண்ணை (பொன்னை ஆறு)
பண்டைய தமிழகத்தில் தென்பெண்ணை என்றும், இன்று தமிழ் நாட்டில் பொன்னை ஆறு என்றும், கன்னடத்தில் தக்ஷிண பினாகினி என்றும் அழைக்கப்படும் இந்த நதிக் கரையிலே திருவண்ணாமலை, குட்டலூர் ஆகிய நகரங்கள் அமைந்திருக்கின்றன. தமிழ் நாட்டில் 497 கி.மீ. (308.8 மைல்) தூரம் வரை ஓடிச்செல்லும் இந்த ஆறு இங்கிருக்கும் இரண்டாவது நீண்ட நதியாகும்.
கர்நாடக மாநிலத்தில் சிக்கபல்லபுரம் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் இந்த நதி உருவாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டில் 1953இல் ஆரம்பித்து 1958இல் கட்டி முடிக்கப்பட்ட சாத்தனூர் அணைக்கட்டும், சாத்தனூர் நீர்த்தேக்கமும், முதலமைச்சர் காமராஜர் காலத்தில் திட்டமிட்டுக் கட்டி முடிக்கப்பட்ட முக்கியத்துவமிக்க நீர்ப்பாசனத் திட்டங்களாகும்.
இந்த நதி வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் வற்றி வறண்டு போயிருக்கும். மாரியில், பெருமழைக் காலங்களில், ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து திரண்டு வரும் பெருவெள்ளம் ஆற்றில் பிரவாகமாக ஓடும். இதன் காரணமாக இந்நீரைச் சேகரித்து வைக்கும் நீர்த்தேக்கங்களால் வருடம் முழுவதும் மக்களால் விவசாயத்திற்கும் மற்றைய தேவைகளுக்கும் இந்நீரைப் பாவிக்க முடிகிறது. இந்த ஆற்றங்கரைகளில் பல தூரங்களுக்குப் பரந்திருக்கும் மணற்குன்றுகள், முற்காலத்தில் இது பெரியதொரு நதியாக ஓடியிருக்கலாம் என ஊகிக்க வைக்கின்றன. இந்த ஆற்றைப் பற்றி சங்ககால இலக்கியங்களும், தேவாரப் பாடல்களும் புகழ்ந்துரைக்கின்றன.

சாத்தனூர் அணைக்கட்டு (1958)
காவேரி (காவிரி) நதி
இந்தியாவிலுள்ள பெருநதிகளுள் கர்நாடக, தமிழக மாநிலங்களினூடாகச் செல்லும் காவேரி நதியும் ஒன்று. கர்நாடகத்தில் மேற்கு மலைத் தொடரிலுள்ள பிரம்மகிரித் தொடரில், கடல் மட்டத்திலிருந்து 1,341 மீட்டர் உயரத்தில் உருவாகும் இந்த நதி 800 கி.மீ. தூரம் ஓடிச்சென்று மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகாரில், வங்காளக் குடாவில் கடலை அடைகிறது. தமிழ் நாட்டிலுள்ள மிக நீளமான நதி இதுவாகும்.

பண்டைய தமிழகத்தில் இது பொன்னி நதி என்றும் பெயர்பெற்றிருந்தது. பொன்னிறமான சேற்று வண்டல்கள் (Silt) இந்நதிக் கரைகளில் படிவதால் இந்த நதிக்கு ‘பொன்னி’ என்ற பெயர் உண்டானதாகச் சிலர் கூறுவார்கள். பண்டைய தென்னிந்திய மக்களுக்கு காவேரி ஒரு புனிதமான நதி. இந்நதி ‘காவேரியம்மா’ (Mother Cauvery) என மக்களால் வழிபடப்பட்டு வந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் இந்நதி வெகுவாகப் பாராட்டப்பட்டிருக்கிறது.
“உழவர் ஓதை, மதகு ஓதை, உடைநீர் ஓதை, தண்பதங் கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப, நடந்தாய், வாழி காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன் வளனே; வாழி, காவேரி”
‘உழவரின் ஏர்மங்கல ஓசையும், மதகின் வழியே நீரோடும் ஓசையும், வயல் வரப்புகளை உடைத்துக்கொண்டு பாய்கின்ற நீரின் ஓசையும், புதுப்புனல் விழாக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் இருமருங்கும் ஆர்ப்பரிக்க நடந்து வந்தாயே, காவேரியே, நீ நீடூழி வாழி!
விழாக் கொண்டாடுவோரின் ஆரவாரம் பின்னணியில் சிறந்தொலிக்க நீ நடந்தாயே, அதெல்லாம் வாயில் காத்து, அரண்களைக் காவல் செய்யும் வீர மறவர்களின் போர் முழக்க ஓசையும் கொண்ட வளவன் சோழனது ஆட்சியின் வளமான (விவசாய) நடவடிக்கைகளே என நீ அறிவாய், காவேரியே, நீ வாழ்க!’ என்கிறார் இளங்கோ அடிகள் (சிலப்பதிகாரம் VII: கானல் வரி 17-24).
நெடுங்காலமாக இந்த நதிக்கரையில் உதித்த நாகரிகங்களுக்கும், உருவான பேரரசுகளுக்கும் காவேரி நதி உள்ளுயிர்ப்பாக, அகத்தூண்டுதலாக (Inspiration) இருந்து வந்திருக்கிறது. இந்த உந்துதலே பல்வேறு வகையான கலைகள், பண்பாடு, தத்துவம் ஆகியன இந்த நதிக்கரையில் உருவாகக் காரணமாக அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் இந்நதி மிக விரிவான நீர்ப்பாசன விவசாய அமைப்புகளை உருவாக்க ஏதுவாக இருந்து, பண்டைய அரசுகளினதும், நவீன கால நகரங்களினதும் ஆதார உயிர்நாடியாக இருந்து வந்திருக்கிறது (Lifeblood of the ancient kingdoms and modern cities).
சென்ற நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் இந்த நதியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர, மேட்டூர், ஹேமாவதி, ஹராங்கி, காபினி, பனசுர ஸாகர், அமராவதி (Amaravati Hydroelectric, Irrigation Dam) ஆகிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டபடியினால் இந்த நதியில் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. இதன் காரணமாக மாநிலங்களுக்கிடையே தொடர்ந்து பிரச்சினைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
காவேரி ஆற்றின் கழிமுகப் பகுதி மக்கள் அடர்த்தியாக வாழும் குடியிருப்புப்பகுதி. இங்கே வதியும் மக்கள் வங்காளக் குடாவில் உருவாகும் சூறாவளிகளாலும், மழைக்கால ஆற்றுப் பெருக்கு வெள்ளத்தினாலும் பாதிக்கப்படுகிறார்கள். காவேரிக் கழிமுகத்தின் வடக்கேயுள்ள பிரிகிளை நதி (Distributary) கொள்ளிடம். கொள்ளிடம் திருவரங்க ஆற்றிடைத் தீவினருகில் காவேரியிலிருந்து பிரிந்து கிழக்கே சென்று வங்காளக் குடாவில் கடலை அடைகிறது.
வைகை நதி
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் (Western Ghats) வருசநாடு மலையில் உருவாகும் வைகை நதி, வடக்கே பழனி மலைக்கும், தெற்கே வருசநாடு மலைகளுக்குமிடையே உள்ள கம்பம் பள்ளத்தாக்கில் வடகிழக்குத் திசையில் ஓடிச் சென்று, பின்னர் வருசநாடு மலையின் கிழக்கு எல்லையில் திரும்பி தென்கிழக்குத் திசையில் தேனி, திண்டுக்கல், மதுரை நகரங்களினூடாக ஓடிச் சென்று கிழக்கே அழகன்குளத்திற்கு சமீபமாக பாக்கு விரிகுடாவில் வங்கக் கடலை அடைகிறது. பாண்டிய நாட்டின் புராதன தலைநகரான மதுரை வைகை நதிக் கரையினிலே அமைந்திருக்கிறது. இந்த நதி 258 கி.மீ. (160 மைல்) நீளம் கொண்டது.
வைகை நதியின் நீர்பிடிப்புப் பகுதிகள் தென்மேற்குப் பருவ மழையாலும், வடகிழக்குப் பருவக் கனமழையாலும் நீர்வளம் பெற்று இருபோக விளைச்சல்களையும், மற்றும் பல சமவெளிப்பகுதிப் பயிர்களையும் அளித்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி வருகிறது. இந்த நதியானது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையும் நறுமணப் பொருட்களை கிழக்கிலுள்ள தமிழக நகரங்களுக்குக் கொண்டு வந்த ஒரு வணிகப் பெருவழியாக விளங்கி வந்திருக்கிறது. சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான பரிபாடலில் இந்த நதியின் பெருமைகளை எடுத்துரைக்கும் பாடல்கள் இடம்பெறுகின்றன.
வைகை நதிக்கு மேலாக உள்ள பெரியார் அணைக்கட்டு 1895ஆம் ஆண்டில் ஜோன் பென்னிகுவிக் என்ற பிரித்தானியப் பொறியியலாளரின் வழிகாட்டலில், பிரித்தானிய பொறியியல் இராணுவப் பிரிவினரால் (British Army Engineering Corps) திருவாங்கூர் அரசுக்காகக் கட்டப்பட்டது. தேனி மாவட்டத்தில், ஆண்டிப்பட்டியில் வைகை நதிக்கு மேலாக தமிழ்நாடு அரசினரால் அமைக்கப்பட்டது வைகை அணைக்கட்டு (Vaigai Dam). மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் இங்கிருந்து நீர் வழங்கப்படுகிறது.

மதுரையில் வைகை நதியின் தோற்றம்

வைகை அணைக்கட்டு. நன்றி: Times of India.
சமீப காலங்களில் – 2014ஆம் ஆண்டு முதலாக வைகை நதிக் கரையில், இன்றைய மதுரை நகரிலிருந்து தென்கிழக்காக அமைந்த கீழடி என்ற கிராமத்தில், இந்திய மத்திய தொல்லியல் திணைக்களத்தினராலும், 2017களிலிருந்து தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறையினராலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளும், அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களும், அவற்றின் கரிமக்கதிர் காலக்கணிப்புகளும், பொ.யு.மு. 700 ஆண்டுக் காலத்திலிருந்து பொ.யு. 300ஆம் ஆண்டுக்காலம் வரை இத்தலம் ஒரு சங்ககால நகரமாக விளங்கியிருப்பதை எடுத்துக் காட்டுகின்றன (இங்கே நடைபெற்ற தொல்லியலாய்வுகள் பற்றி இனிவரும் இயல்களில் காணலாம்).
பொருநை நதி (தாமிரபரணி)
பொருநை நதி, மேற்கு மலைத்தொடரில், அம்பாசமுத்திரம் தாலுகாவிலுள்ள பாபநாசத்திற்கு மேலே, பொதிகை மலையின் அகஸ்தியர்கூடம் சிகரத்தில் உதயமாகி, முதலில் கேரள நாட்டில் வடக்கு நோக்கி ஓடியபின் கிழக்கே திரும்பி, பின்னர் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வழியாக ஓடிச்சென்று மன்னார்க் குடாவில் கடலை அடைகிறது. இதன் நீர்த்தோற்றுவாய் முக்கியமாக தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைகளில் தங்கியிருக்கிறது. மழை தவறாத காலங்களில் வருடத்தில் இரு தடவை இந்நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இந்நதியின் உதயத்திலிருந்து அது கடலை அடையும் தூரம் 128 கி.மீ. (80 மைல்கள்) ஆகும்.
பொருநை நதிக்கு, பல கிளை நதிகள் பரந்த பெரும் நிலப்பரப்பிலிருந்து நீர் வழங்குகின்றன. இவைகளில் பேயாறு, கரையாறு, சேர்வலார், பாம்பர், மணிமுத்தாறு, வராகநதி, ராமாநதி, ஜம்புநதி, கல்லாறு, கருணையாறு, பச்சையாறு, சித்தாறு, குண்டாறு, ஐந்தருவி ஆறு, அனுமாநதி, கருப்பநதி, அழுதகன்னி ஆறு என்பன முக்கியமானவை (Rivers of Western Ghats, 2012).
சங்ககால இலக்கியங்களில் இந்நதி ‘பொருநை’, ‘தண்பொருநை’, ‘பொருநல்’ ஆகிய பெயர்களால் வழங்கப்படுகிறது. சங்க இலக்கியமான புறநானூற்றில், இளவெயினியார் பாடிய பாடல் இது:
“அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாலைக்குக்
குலவனச் சினைப் புக் கொய்து
தண்பொருனைப் புனல் பாயும்
விண்பொரு புகழ், விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே,
வெப்புடைய அரண் கடந்து
துப்புறுவர் புறம்பெற் றிசினே,
புறம் பெற்ற வய வேந்தன்.”
-புறநானூறு 11: 1-10.

பொதிகை மலையில் தோன்றி வரும் பொருநை நதி
சேர நாட்டில் வஞ்சி நகரிலிருந்து அரசோச்சிய பெருங்கடுங்கோவின் புகழ் பாடும் இப்பாடலில் ‘தண்பொருனைப் புனல் பாயும் விண் புகழ் விறல் வஞ்சி’ என அவனது நகரம் புகழ்ந்துரைக்கப்படுகிறது.
சங்ககாலத்தின் பின்னர் பொருநையின் பெயர் ‘தாம்ரபர்ணி’ என சமஸ்கிருதமயப்படுத்தப்பட்டு, சமஸ்கிருத இலக்கியங்களான மகாபாரதம், வால்மீகி இராமாயணம் போன்ற புராணங்களில் புனிதமான நதியென வர்ணிக்கப்படுகிறது. காலப்போக்கில் தமிழிலும் இந்நதி தாமிரபரணி என்றே அழைக்கப்படலாயிற்று.
புராதன பாண்டிய நகரமான கொற்கை தாமிரபரணி நதியின் கழிமுகத்துறையருகே அமைந்திருந்தது. கொற்கையைத் தலைநகராகக் கொண்ட முதலாம் பாண்டிய அரசு இந்நதியின் கழிமுகத்துறையிலிருந்து பெறப்பட்ட முத்துகளுக்கும் சங்குகளுக்கும் புகழ் பெற்றிருந்தது. பொ.யு.மு. 350-270இல் வட இந்தியாவில் வாழ்ந்த கௌடில்யர் (சாணக்கியர்) மௌரியப் பேரரசர்களான சந்திரகுப்தன், அவரது மகன் பிந்துசாரன் ஆகியவர்களின் முதன் மந்திரியாகவும், முக்கிய ஆலோசகராகவும் இருந்தவர். அவர் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூலில் (Arthashastra Chapter 2: 32) இந்தியாவில் காணப்படும் மிகச் சிறந்த முத்துக்களை ‘பாண்டிய கபாடக’ என அழைக்கிறார்.
பல நூற்றாண்டுகளாக தாமிரபரணி நதி தமிழர் பண்பாட்டினதும், நாகரிகத்தினதும் சின்னமாகப் பேசப்பட்டு வந்திருக்கிறது. பாண்டிய மன்னர்கள் தாமிரபரணி ஆறு பாயும் நாட்டின் மன்னர்கள் என வடமொழி இலக்கியங்கள் விதந்துரைக்கின்றன.
இந்த நதிக்கு ‘தாமிரபரணி’ என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணத்தை பலர் ஆராய்ந்திருக்கிறார்கள். கால்டுவெல் பாதிரியார் தனது ‘திருநெல்வேலி வரலாறு’ (1881) என்ற நூலில் “தாமிரம் என்றால் சிவப்பு நிறம், பரண என்றால் இலைகள், எனவே சிவப்பு இலைகளைக் கொண்ட மரம்” என விளக்கமளிக்கிறார்.
ஓர் ஆற்றுக்கு ஒரு மரத்தின் பெயரைக் கொடுத்தார்கள் என்ற விளக்கம் சரியானதாகப் படவில்லை. சில அறிஞர்கள் மாற்றுக் கருத்தொன்றை முன்வைத்திருக்கிறார்கள்: ‘தாமிரம்’ என்றால் செம்பு. ‘வருணி’ என்றால் ஓடை அல்லது ஆறு. செம்மண்ணின் மேலாக ஓடும் இந்த நதி ஒரு செப்பு நிறத்தைக் கொடுத்தபடியினால் ‘தாமிரவருணி’ எனப் பெயர் பெற்று, பின்னர் ‘தாமிரபரணி’ ஆயிற்று.
பண்டைய நாட்களில் திருநெல்வேலி மாவட்டத்தினூடே ஓடிச்சென்று கடலை அடைந்த இந்த நதி மத்திய காலத்தில் இரண்டாகப் பிரிந்து, ஒரு கிளை திருநெல்வேலி ஊடாகவும், மற்றைய கிளை தூத்துக்குடி மாவட்டத்தினூடாகவும் சென்று மன்னார்க் குடாவில் கடலை அடைகிறது.

வரலாற்றுப் புகழ் மிக்க புராதன கொற்கைத்துறை இக்காலத்தில் ஓர் உள்ளூர்க் கிராமமாக இருக்கிறது.
முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கழிமுகத்தில் இருந்த கொற்கைத் துறை, இயற்கையாக அமைந்த ஒரு துறையாக இருந்தது. பாண்டி நாட்டின் பெருந்துறையாக விளங்கிய கொற்கைத் துறை பாண்டிய மன்னர்களின் 500 ஆண்டுக்கால ரோமாபுரி வர்த்தகத்தின் அடித்தளமாக விளங்கியது. இத்துறையில் வந்து தங்கும் கப்பல்களிலிருந்து வர்த்தகர்கள் தாமிரபரணி நதி மூலம் பொருட்களை எடுத்துச் சென்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
கடந்த ஆயிரத்தெண்ணூறு ஆண்டுக்காலமாக அளவுக்கதிகமான மண்படிவுகளால் (Excessive Sedimentation) கடல் படிப்படியாகப் பின்வாங்கி இக்காலத்தைய கொற்கை, கடற்கரையிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் ஓர் உள்ளூர்க் கிராமமாக, தாமிரபரணி ஆற்றிலிருந்து 3 கி.மீ. தொலைவிற்குச் சென்றுவிட்டது. இக்கிராமத்தில் சில அடிகள் தோண்டும் போதே தொல்காலத்திற்குரிய நாணயங்களும், சங்குகளும், ரோமாபுரி மட்பாண்டங்களும் காணப்படுவதாக ஊர் மக்கள் கூறுவார்கள்.
சமீபகாலங்களில் தாமிரபரணி ஆற்றின் பண்டைய நதிக்கரை நகரங்களின் தொல்லியல் ஆய்வுகளில் கண்டெடுத்த தொல்பொருட்களின் கரிமக்கதிர் ஆய்வுகள் ‘தாமிரபரணி நாகரிகத்தின் காலத்தை இற்றைக்கு 3,200 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துச் செல்கின்றன.’ (The Hindu, 10 September 2021).
இலங்கையும் மற்றைய தீவுகளும்
இந்திய நிலப்பரப்புக்கு வெளியே பல தீவுகள் தென்-ஆசியாவின் பகுதிகளாக உள்ளன. இவற்றில் வங்காளக் குடாவில் அமைந்திருக்கும் அந்தமான், நிக்கோபார் தீவுகள் இந்திய சட்ட ஆட்சிப் பரப்பினுள் வருகின்றன. அந்தமான் ஏறக்குறைய 200 தீவுக் கூட்டங்களைக் கொண்டிருக்கிறது. இவற்றில் மூன்று, பெரிய தீவுகள். இங்கே வாழும் மக்கள் புராதன ஆஸ்திரலோயிட் மக்களின் வம்சாவளியினராவர். நிக்கோபார் 17 தீவுக்கூட்டங்களைக் கொண்டது. இங்கு வாழும் மக்கள் ‘மொன்-கமர்’ பேச்சுவழக்குகளைக் கொண்டவராவர் (வியட்நாம், கம்போடியா, முவொங், காசி, குமு மொழிகளை உள்ளடக்கிய மொழிக் குடும்பம்).
மேற்குக் கேரளக் கரையிலிருந்து தெற்கே 500 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இலட்சத்தீவுகள் நூற்றுக்கணக்கான பவளத் தீவுகளால் ஆனவை. இங்கே வாழும் மக்கள் கேரள நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு அரிசியும் மற்றைய உணவுப் பொருட்களும் இந்தியாவிலிருந்தே வருகிறது. இத்தீவகங்களும் இந்தியச் சட்ட ஆட்சிப்பரப்பினுள் வருகின்றன.
இவற்றிற்குத் தெற்கே இருக்கும் மாலைதீவுக் கூட்டம் ஒரு சுதந்திரமான நாடு. பவளக்கற்களினாலான தீவுகளைக் (Coral Islands) கொண்ட இதன் நிலப்பகுதியும், சூழலும், தட்பவெப்பமும் இலட்சத்தீவுகளைப் போன்றதாகும்.
இந்து மாகடலிலுள்ள, இந்திய நிலப்பரப்பின் தென்முனைக்குச் சமீபமாக உள்ள இலங்கைத்தீவு இன்று ‘ஸ்ரீலங்கா’ என அழைக்கப்படுகிறது. இத்தீவகம் நெடுங்காலமாக தென்-ஆசிய நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது. கடைசிப் பனியுக முடிவில் இற்றைக்கு, 7,000 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை இந்தியாவிலிருந்து தனித் தீவாகப் பிரிந்தது (Deraniyagala, S.U. 1992). இத்தீவு தென் இந்தியாவிலிருந்து பாக்கு நீரிணையாலும், மன்னார்க் குடாவினாலும் பிரிக்கப்பட்ட போதிலும், ‘இராமர் அணை’ (Adam’s Bridge) என அழைக்கப்படும் தொடர்ச்சியான சுண்ணாம்புக்கல் மணற்குன்றுகள், மன்னாரிலிருந்து இராமேஸ்வரத்தில் ‘பாம்பன் தீவு’ என அழைக்கப்படும் மணற்குன்று வரை பரந்திருக்கின்றன. இக்கடலின் மிக ஆழமிக்க பகுதி 30 மீட்டர் வரை மட்டுமே உள்ளது.
உத்தேசமாக மாங்காய் வடிவில் அமைந்த இந்தத் தீவு வடக்கிலிருந்து தெற்காக 435 கி.மீ தூரமும், தென் பக்கத்தில் கிழக்கிலிருந்து மேற்காக 225 கி.மீ. அகலமும் கொண்டது. நிலஅமைப்பியல் ரீதியாக, புராதனமான பாறைகளில் காற்று-மழை-வெப்ப இயல்களினால் காலாகாலமாகப் படிந்த மண் அடுக்குகளால் இத்தீவின் நிலம் உருவாகியிருக்கிறது. இந்நிலத்தின் தாதுப்பொருட்கள் முக்கியமாக காரீயத்தையும் (Graphite), நீலமணி, மாணிக்கம் ஆகிய இரத்தினக் கற்களையும் கொண்டவை. இத்தீவின் மேல்நிலம் பலதரப்பட்ட வளங்களைக் கொண்டது. குறிப்பாக வண்டல் படிந்த ஆற்றங்கரைப் படிநிலங்கள் பயிரினங்களை செழிப்பாக வளரச் செய்யும்.
இத்தீவின் நிலப்பரப்பில், தென் மத்தியில் உள்ள மலைப்பகுதியில், கண்டி எனும் பிரதேசம் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. அங்கிருந்து நிலமட்டம் படிப்படியாக வட்ட வடிவில் கீழிறங்கி, மணற்பாங்கான கடற்கரைகளில் முடிவடைகிறது. இந்த நில அமைப்பிற்கேற்றவாறு நீரின் வடிகால், மையத்திலிருந்து நாற்திசையும் ஓடக்கூடிய ஆரை வடிவில் (Radial Drainage) அமைந்திருக்கிறது. இத்தீவிலுள்ள 335 கி.மீ (208 மைல்) நீளமான நதியான மகாவலி கங்கை, நாவலப்பிட்டியிலுள்ள ‘பொல்வத்துற’ கிராம மலைக் குன்றுகளில் உருவாகி, வடகிழக்குத் திசையில் ஓடிச் சென்று திருகோணமலைக்குத் தெற்கே கடலுடன் கலக்கிறது.

மகாவலி கங்கை
பூமத்திய ரேகைக்கு சற்று வடக்கே அமைந்த இலங்கைத் தீவின் வெப்பமண்டல தட்பவெப்பம் வருடம் முழுவதிலும் வெப்பமாகவும், ஈரமாகவும் இருக்கச் செய்யும். இத்தீவிற்கு தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைகள் மூலம் நீரானது முறையே கோடை காலத்திலும், மாரி காலத்திலும் வழங்கப்படும். தீவின் மத்திய பகுதி 500 செ.மீ. சராசரி மழை வீழ்ச்சியைக் கொண்டிருக்கிறது. அதே சமயம் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் 200 செ.மீட்டருக்குக் குறைவான மழை வீழ்ச்சியைக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டின் தட்பவெப்பம் நெற் பயிரீட்டிற்கு உகந்தது. இத்தோடு தெங்கு, தேயிலை, ரப்பர், மீன்பிடித் தொழில், விவசாயம் என்பன உணவு உற்பத்திக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிக்கின்றன. இந்த நாட்டின் சனத்தொகை பெரும்பான்மையான சிங்கள மக்களையும், தமிழர்களையும், முஸ்லிம் மக்களையும் கொண்டிருக்கிறது.

கலுகெல என்ற இடத்தில் மகாவலி கங்கைக்கு மேலாகச் செல்லும் பாலம்.
உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்
ALTER, STEPHEN (2001): Amritsar to Lahore: A Journey Across the India-Pakistan Border, University of Pennsylvania Press.
BAKER, KATHLEEN M., CHAPMAN, GRAHAM P (2002): The Changing Geography of Asia, Routledge.
BHOPAL, RAJ S. (2007): Ethnicity, Race and Health in Multicultural Societies, Oxford University Press.
BOLAN PASS, THE (1842): Letter from an Officer of the Bengal Artillery: Quetra Camp, Shawl Kot, Khorasan, 2 December 1841; Journal of the Royal Geographical Society, Vol 12 (1842), pp 109-110.
BOLAN PASS, THE (2014) The Bolan Pass, Encyclopaedia Britannica (Ultimate Edition).
BRAMWELL, JAMES (1974 Ed.): Lost Atlantis; Hollywood, Newcastle.
CALDWELL, BISHOP R. (1881): A History of Tinnevelly; Reprint 1989, Asian Educational Services, Bombay. (300 pages).
DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka: an Ecological Perspective, Dept. of Archaeology, Colombo.
DIETZ,R.S. and HOLDEN.(1970): Reconstruction of Pangaea: Breakup and Dispersion of Continents; Journal of Geophysical Research 75(26).
DOCHERTY, PADDY (2008): The Khyber Pass: A History of Empire and Invasion, Faber and Faber, London.
GUY, ARNOLD (2000): World Strategic Highways, Taylor & Francis., p. 214.
GUY, ARNOLD (2014): World Strategic Highways, Routledge., (2nd Edition).
HEATHCOTE, T.A. (2016): Balochistan, the British and the Great Game: The struggle for the BolanPass, Gateway to India, C. Hurst & Co Publishers Ltd., London.
HINDU, THE (23 Feb 2022): A Miami-based Beta Analytic Testing Laboratory published a report in 2021 which claimed that the Tamirabharani civilization along the banks of the river dates back to 3,200 years.
HINDUISM: Encyclopaedia Britannica, 14th Ed.
JONES, ROBERT WYNN (2011): Applications of Palaeontology: Techniques and Case Studies, Cambridge, University Press.
KEAY, JOHN (2000): A History of India; Harper Collins, London.
KERR,R.A. (1994): Ancient Tropical Climates : Science 263.
KHYBER PASS, THE (2011): “The Khyber Pass”, National Geographic Magazine, 21 November 2011, The National Geographic Society, Washington D.C.
KUHLE, M. (1987): “Subtropical Mountain and Highland Glaciation as Ice Age triggers and the Waning of the Glacial Periods of the Pleistocene”, Geo Journal, 14 (4): 393 ff.
KUHLE, M. (2001): “The High Glacial (Last Ice Age and Last Glacial Maximum) Ice Age the Cover of High and Central Asia” in Ethers, J. (ed.): Quaternary Glaciation − Extent and Chronology, A Closer Look, Elsevier BV, Amsterdam., pp 949-965.
KUHLE, MATTHIAS (2005): “The maximum Ice Age (Würmian) Glaciation of the Himalaya − A Glaciogeomorphological investigation of glacier trim-lines, ice thicknesses and lowest and former ice margin positions in the Mt. Everest-Makalu-Cho Oyu massifs (Khumbu – and Khumbakarna Himal) including information on late-glacial – neoglacial – and historical glacier stages, their snow-line depressions and ages” in ‘Glacial Geomorphology in Tibet and the Surrounding Mountains’, The Island Arc, Vol. 14, Issue 4.
LAL, B.B. (1997): The Earliest Civilization of South Asia, Aryan Books, New Delhi.
MANN, MICHAEL (2014): South Asia’s Modern History, Taylor & Francis, Oxford.
MARKHAM, SIR CLEMENTS ROBERT (ed.) (1878): “ British India and its Border States” p. 1-4., “The North Western Frontier of India”, p.4-7; The Ancient Silk Traders Route Across Central Asia, p. 10-14., The Geographical Magazine, Volume 5, Trubner & Co., London.
McLEOD, JOHN (2002): The History of India, Greenwood Publishing Group, MINAHAN, JAMES, B. (2016 2nd Ed.): ‘Brahui’, Encyclopedia of Stateless Nations: Ethnic and National Groups around the World, ABC-CLIO., California.
Norwine, J. (ed.) (1988): The Third World: States of Mind and Being, Unwin Hyman, London.
PATHIRANA, H.D.N.C. (1980): Geology of Sri Lanka in relation to Plate Tectonics, National Science, Vol. 8., pp 75-85
PYE, LUCIEN W (1985): Asian Power and Politics, Harvard University, Massachusetts.
RAMASWAMY, VIJAYA (2017): Historical Dictionary of the Tamils, Jawaharlal Nehru University, Rowan & Littlefield.
SHAH, MAHMOOD ALI (1992): Sardari, Jirga and Local Government Systems in Balochistan, Quasim Printers, Pakistan.
SINGH, SARINA (2004 – 6th ed.): Pakistan and the Karakoram Highway, Lonely Planet, Lonely Planet, p. 112.
SPATE, O.H.K. (1957): India and Pakistan: A General and Regional Geography, Munshiram Manoharlal Publishers, Delhi.
TAM, WILLIAM WOODTHORPE (2010): The Greeks in Bactria and India, Cambridge University Press.
TROMPETTE, R. :Transl. CARROZI, A.V.: (1994) Geology of Western Gondwana (2000-500 Ma), Balkema, Rotterdam.
UPINDER SINGH (2008): A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century., Pearson Education India, Chennai.
VAN ANDEL,T.H.: 1985: New Views on an Old Planet: Continental Drift and the History of the Earth, Cambridge University Press.
WESTERN GHATS, RIVERS OF (2012): “Origin of Tamraparni” in Rivers of Western Ghats, Centre for Ecological Studies, Indian Institute of Science, Bangalore.
WEGENER, ALFRED :Transl. JOHN BIRAM(1966): The Origin of Continents and Oceans: 4th Ed., Courier Dover Publications, New York.
YASMEEN, MOHIUDDIN (2007): Pakistan: A Global Studies, Handbook, ABC-CLIO.



