கட்சி அரசியலுக்கு முந்திய யாழ்ப்பாணம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
16 நிமிட வாசிப்பு

கட்சி அரசியலுக்கு முந்திய யாழ்ப்பாணம்

June 1, 2026 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்டகேட்ட, கேள்விப்பட்டவாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

கார்த்திகேசு இந்திரபாலா– 

இலங்கையில் 1931இல் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு, நாட்டின் சட்டவாக்க சபைக்கு முதலாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்பொழுது அரசியல் கட்சிகள் இருக்கவில்லை. இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏ.ஈ. குணஸிங்ஹ தலைமையில் தொழில் கட்சி (Labour Party) என்ற பெயரால் ஒரு கட்சி நிறுவப்பட்டிருந்தது. வேறு கட்சிகள் 1935இன் பின்னர்தான் அமைக்கப்பட்டன. 1931இல் கட்சி அரசியல் (Party Politics) இருக்கவில்லை.

ஓர் அரசியல் கட்சி என்பது குறிப்பிட்ட ஒரு கருத்தியலை (சித்தாந்தம் / Ideology) அடித்தளமாக வைத்துச் சில குறிக்கோள்களை அடைய இயங்கும் அமைப்பு. இக்கருத்தியலைப் பொதுப்பட ஏற்றுக்கொள்வோர் கட்சியில் சேர்ந்து அல்லது அதை ஆதரித்து, அதன் குறிக்கோள்களை அடைவதற்கு வலுவூட்டுவர். தனியாட்களாக அரசியலில் செயலாற்றுவதை விட, கட்சியின் ஒழுங்கமைப்பு (Structure) மூலம் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது (Structural Participation) கூடுதலான பலனை அளிக்கின்றது.

ஒரு குறிப்பிட்ட கருத்தியலை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் அரசியல் கட்சி உதவுகின்றது. ஆளுமைப் பலம் மிக்க சில தனியாட்களுடைய புரட்சிகரமான சிந்தனைகளைப் பெருந்திரள் மக்களிடையே பரப்பி மாற்றங்களுக்கு வழிவகுப்பதற்குக் கட்சியமைப்பு மிகவும் பயன்படுகின்றது. இது கட்சியரசியலின் நன்மையாகவும் அமையலாம், தீமையாகவும் அமையலாம். அடொல்வ் ஹிட்லர், விலாடிமிர் லெனின், மாஒ சே டுங், ஈ.வே. ராமசாமி போன்ற தலைவர்களின் வரலாற்றில் இதைக் காணலாம்.

இலங்கையில் 1931இல் முதல் தடவையாக வயதுவந்தோர் வாக்குரிமை வழங்கப்பட்டு, புதிதாக நிறுவப்பட்ட அரச சபைக்கு (State Council – இது அந்நாட்களில் அரசாங்க சபை எனத் தமிழ்ச் செய்தித்தாள்களில் பெயர்க்கப்பட்டது) தேர்தல் நடத்தப்பட்ட போது கட்சி அடிப்படையில் அல்லாது தனியாட்களாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர் (முதலாவது முக்கிய அரசியல் கட்சியாக நிறுவப்பட்ட லங்கா சம சமாஜக் கட்சி 1935இலேதான் உருவாகியது).

தேர்தல் பகிஷ்கரிப்பு

பிரித்தானியர் ஆண்ட இலங்கை 1930கள் தொடங்கியபோது ஒரு புதிய வரலாற்றுக் கட்டத்திற்குள் நுழைந்தது. இதுவே பிரித்தானியர் ஆட்சியின் இறுதிக் கட்டமும் ஆகும். டொனமூர் சீர்திருத்தங்கள் ஒரு புதிய சட்டவாக்க சபையை அறிமுகப்படுத்தியது. வயதுவந்தோர் வாக்குரிமை பொதுமக்களை அரசியலில் பங்குகொள்ள வைத்தது. அரசியல் தலைவர்கள் இவர்களைப் புறக்கணிக்க முடியாத நிலை தோன்றியது. இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் ஒழிந்தது. கட்சி அரசியல் வருவதற்கு வழிதிறக்கப்பட்டது.

இப்புதிய சூழலில், 1931இல் இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. அரசியலில் அக்கறைகொண்ட மத்திய வகுப்பினர் தேர்தலில் பங்குகொள்ள ஆர்வமுற்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய திருப்பம் உருவாகியது.

இத்திருப்பத்தை விளங்கிக்கொள்ள 1920களில் வளர்ச்சிபெற்ற இந்திய அரசியல் செல்வாக்கை அறிந்திருக்க வேண்டும். இந்தியத் தேசிய இயக்கம், குறிப்பாக மகாத்மா காந்தியின் போராட்டம், யாழ்ப்பாணத்தில் பொதுவாகவும் இளைஞர் மத்தியில் சிறப்பாகவும் செல்வாக்குப் பெற்றிருந்தது. காந்தி 1927இல் வருகை தந்து, பல இடங்களில் உரையாற்றி இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்ததின் விளைவாகத் தேசிய உணர்ச்சி பொங்கத் தொடங்கியது எனலாம்.

இப்பின்புலத்தில் யாழ்ப்பாணத்து மாணவர் காங்கிரஸ் டொனமூர் சீர்திருத்தங்களை வன்மையாக எதிர்த்து, இலங்கைக்கு ஸ்வராஜ் (தன் ஆட்சி) வழங்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பிப் பரவலாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது. இவற்றின் விளைவாகத் தேசிய உணர்ச்சி 1930களில் எங்கும் எழுந்தது. இந்நிலை பற்றி 1935இல் குல சபாநாதன் எழுதும்போது, “இக்காலத்திலே ‘தேசீயக் கிளர்ச்சி, தேசீயக் கிளர்ச்சி’ எனப் பலர் சத்தமிடுகின்றனர்” எனச் சுருக்கமாகக் கூறினார் (Jaffna College Miscellany 1935).

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் 1931இல் மிகுந்த ஆர்வத்துடன் அரசியல் எதிர்ப்பில் ஈடுபட்டமைக்கு இந்தியத் தலைவர்கள் சிலர் வருகைதந்து கொடுத்த ஆதரவும் ஒரு முக்கிய காரணமாகும். பெரும் மதிப்புப் பெற்றிருந்த முன்னிலைத் தலைவர்களாகிய சரோஜினி நாயுடு அம்மையார், கமலாதேவி சட்டோபாத்யாய அம்மையார், ஜவஹர்லால் நேரு அவர்கள் யாழ்ப்பாணத்தில் பெரும் கூட்டங்களில் இளைஞர்களுக்கு உரையாற்றி அவர்களுக்கு ஊக்கத்தை அளித்தனர்.

கமலாதேவி சட்டோபாத்யாய மாணவர் காங்கிரஸின் 1931ஆம் ஆண்டுக்குரிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர். அவர் தலைமையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஏப்பிரல் 23இல் மாணவர் காங்கிரஸின் ஆண்டு அமர்வுகள் தொடங்கியபோது கமலாதேவி யாழ்ப்பாணம் தட்டார் தெருவில் இருந்து நீண்ட ஊர்வலமாக முற்றவெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இளைஞர்கள் கதர் உடை உடுத்து, காந்தித் தொப்பி அணிந்து, ‘வந்தே மாதரம்’ பாடலையும் பாரதியார் பாடல்களையும் பாடிச் சென்றனர். முற்றவெளியில் ஒரு பெரும் மக்கள் கூட்டம் கூடியிருந்தது. கமலாதேவி தலைமை இருக்கையில் அமர்ந்தார். அது யாழ்ப்பாண வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகியது. முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் இத்தகைய மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஒரு பெண்மணி தலைமை தாங்கிய நிகழ்வாக இது கருதப்படுகின்றது. கே. நேசையா (பிற்காலத்தில் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறைப் பேராசிரியர்) வரவேற்புரை வழங்கினார்.

ஏப்பிரல் 25இல் நடைபெற்ற பொதுமக்கள் கூட்டத்தில் பொதுத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது: 

“Whereas the Donoughmore Constitution militates itself against the attainment of Swaraj, this Congress further pledges itself to boycott the scheme.” 

இந்திய விடுதலைப் போராளிகளின் பேச்சுகள் இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தின. கமலாதேவி சட்டோபாத்யாய அம்மையாரும் சரோஜினி நாயுடு அம்மையாரும் உரையாற்றியபின், இளைஞர்கள் தெருவழியே ஓடி, பிரித்தானியக் கொடியைக் கிழித்தெறிந்து, ‘ஸ்வராஜ்’, ‘பகிஷ்கரிப்பு’ என்று முழக்கம் செய்தனர் எனக் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்து இளைஞர்கள் தீவிர எதிர்ப்புத் தன்மையுடையவர்கள் என்பதை நேருவும் அவதானித்திருந்தார். மனைவி கமலா, மகள் இந்திரா ஆகியோருடன் மே 1931இல் யாழ்ப்பாணம் சென்ற நேரு தன் சகோதரி கிருஷ்ணாவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்: 

“We went to Jaffna in the far north by train and had a tumultuous welcome. Jaffna is the centre of the Tamil and of the aggressive youth leagues. We had a heavy programme, motored all over the neighbourhood, and had a dip in the sea…” (Letter to Krishna Nehru, 22/05/1931).

தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு இளைஞர்கள் தீர்மானம் எடுத்தபோது வேட்பாளர்களாகப் பதிவு செய்வதற்கு அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த பலர் தயாராகிக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் மிகுந்த ஆவலுடன் தேர்தலில் போட்டியிடக் காத்திருந்தனர் என அறியமுடிகின்றது. வயதில் மூத்தோரான இவர்களைத் தேர்தலில் பங்குகொள்ள வேண்டாம் என நிறுத்துவது இளைஞர்களுக்கு ஒரு சவாலாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

இளைஞர் வெற்றி

வட மாகாணத்தில் தேர்தல் வேட்பாளர்களாக முன்வந்தோருள் நால்வர் முக்கியமானவர்கள். ஒருவர் அருணாசலம் மகாதேவா (பிறப்பு 1885). இவர் பொன்னம்பலம் அருணாசலத்தின் மகன்; பரமேஸ்வராக் கல்லூரியின் அதிபராக முன்னர் கடமை ஆற்றியவர். ஆகவே இவருக்குக் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது எனலாம். இவரைப் போன்று செல்வாக்குப் பெற்றவர் சு. நடேசபிள்ளை (பி. 1895). இவர் பொன்னம்பலம் இராமநாதனின் மருமகன் (மகளை மணம் முடித்தவர்; தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்). அத்துடன், பரமேஸ்வராக் கல்லூரியின் அதிபராகப் பெருமதிப்பைப் பெற்றிருந்தவர். மகாதேவாவின் உறவினராகிய சிறீ பத்மநாதனும் போட்டியிட ஆவலுடன் இருந்தார். இவர்களுக்கு இளையவராக அப்பொழுது அரசியலில் தன் நீண்ட பயணத்தைத் தொடங்கியவர் ஜி.ஜி. பொன்னம்பலம் (பி. 1902) ஆவார். இவர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடத் தயாராக இருந்தார்.

இவர்களை விட மூத்தவராகக் காணப்பட்டவர் முன்னர் சட்டவாக்க சபையில் இருந்த வைத்திலிங்கம் துரைசுவாமி (பி. 1875) ஆவார். இவரும், க. பாலசிங்கமும் (பி. 1876) தேர்தலில் பங்குகொள்ளத் தயாராய் இருந்தனர் என அறியமுடிகின்றது. 

இவர்களுடனும் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பிய பிறருடனும் இளைஞர்கள் வாதிட்டு வெற்றிபெறுவது கடினமாக இருந்திருக்கும். இதனால் அவர்கள் ஓர் உபாயத்தைக் கடைப்பிடித்தனர். தத்தம் ஊர்களில் இயங்கிய ஊர்ச் சபைகளைப் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்கச் செய்தனர். இளைஞர்கள் செயல்பாடுகளை ஆழமாக ஆய்வு செய்த Jane Russell நிகழ்ந்ததை இவ்வாறு வர்ணித்துள்ளார்: 

“On May 1st, a significant date, the Youth Congress decided to force the candidates to boycott the elections by seeking a mandate from the villages. The conservatives were thrown into panicky confusion. Two days later, on the eve of polling, led by Duraiswamy and Balasingham, whom the Youth Congress leaders most respected among the ‘conservatives’, they agreed to withdraw their candidatures.”

யாழ்ப்பாணத் தொகுதிகளில் வேட்பாளர் அனைவரும் பகிஷ்கரிப்புச் செய்தனர்.

யாழ்ப்பாணத்து இளைஞர்கள் அவசரமாக மன்னாருக்குச் சென்று அங்கு வேட்பாளராக நின்ற ஜி.ஜி. பொன்னம்பலத்தைத் தேர்தலில் இருந்து விலகுமாறு வேண்டினர். அவர் அதற்கு மறுத்தார். அதனால் அங்கு தேர்தல் நடைபெற்றது. ஆனாலும் அதில் பொன்னம்பலம் வெற்றிபெறவில்லை.

அரசியலில் பிளவு

தேர்தல் பகிஷ்கரிப்பு யாழ்ப்பாண அரசியலில் ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தியது. தேர்தலைப் பகிஷ்கரித்தமை தவறு எனக் கருதியோர் ஒரு புறம். பகிஷ்கரிப்பை ஆதரித்து இளைஞர்களுக்கு உற்சாகம் அளித்தோர் இன்னொரு புறம். அக்காலத்தில் வெளிவந்த ஈழகேசரி, இந்து சாதனம், Hindu Organ போன்ற செய்தித்தாள்களைப் பார்க்கும்போது கல்விகற்ற மத்திய வகுப்பினரிடையே பகிஷ்கரிப்புக்குச் சார்பான நிலை குறிப்பிடத்தக்கதாக இருந்தது எனலாம்.

பகிஷ்கரிப்புக்கு எதிரானவர்களும் துரிதமாகச் செயல்பட்டுக்கொண்டு இருந்தனர் என்றே கூறவேண்டும். இவர்கள் பெரும்பாலும் ஆங்கிலக் கல்விகற்ற மத்திய வகுப்பினர். இவர்களைப் பொதுப்பட ‘Conservatives’ (பழமைவாதிகள்) என Jane Russell போன்ற ஆய்வாளர் கருதுவர்.  இவர்களுள் பலர் Ceylon Tamil League என்ற அரசியல் கழகத்தில் உறுப்பினராக இருந்தனர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நியாயதுரந்தரர் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட (இன்று சட்டத்தரணிகள் எனப்படுவோர்) சட்ட வல்லுநர்கள் இக்கழகத்தில் இருந்தனர்.

ஏச்.ஏ.பி. சந்திரசேகரா 1932இல் இக்கழகத்தின் தலைவராகக் கடமையாற்றினார். இவருக்குப் பின் 1933இல் அருணாசலம் மகாதேவா தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாகத் தேர்வான ஒன்பதின்மருள் ஒருவராக ஜி.ஜி. பொன்னம்பலம் இருந்தார்.

யாழ்ப்பாணத்துச் சைவ மத்திய வகுப்பினருடைய அபிப்பிராயத்தைப் பிரதிபலிப்பதாகவும் அவர்களுடைய கருத்துகளை உருவாக்கும் செல்வாக்குடையதாகவும் காணப்பட்ட இந்து சாதனம், Hindu Organ ஆகிய செய்தித்தாள்களின் ஆசிரியர் தலையங்கத்திலும் கட்டுரைகளிலும் மகாதேவா, பொன்னம்பலம் ஆகியோர் விமர்சிக்கப்படுவதைக் காணலாம்.

மகாதேவாவின் அரசியல் கொள்கை இனவாத (அக்காலத்தில் வகுப்புவாதம் எனப்பட்டது) பண்புகளைக் கொண்டது என்றும் அவர் தலைமை வகிக்கும் கழகம் இலங்கைத் தமிழர் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என அவர் தவறாகக் கோருகிறார் என்றும் வெளிப்படையாக மகாதேவாவை விமர்சிக்க Hindu Organ தயங்கவில்லை: 

“The League’s claim to represent the Thamils as a whole is as preposterous as it is unfounded … Mr. Mahadeva knows only too well that communalism in any shape or form will not find favour with the Thamils of this Province. Moreover, the Thamil League never enjoyed the confidence of the Thamils in the Island. Conceived in hate, the League was ushered into existence by the late Sir P. Arunachalam to prop up his claim for a Thamil seat for the Western Province. When Sir P. Arunachalam broke away from the Congress, he wanted a stage from which he could vent his communal bitterness and organized the Thamil League. Before the League could aspire to lead the Thamils it should purge itself of the canker of communalism which appears to have poisoned its very soul.” (Editorial, 05/10/1933)

இறக்குமதிப் பொருள்களைப் பகிஷ்கரித்தல்

இந்திய விடுதலை இயக்கத்தினர் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியான பல பொருள்களை வாங்கவேண்டாம் எனப் பகிஷ்கரிப்பை நடத்தியமை யாழ்ப்பாணத்து இளைஞர்களையும் சில பிரமுகர்களையும் அத்தகைய இயக்கத்தை நடத்துவதற்குத் தூண்டியது. இந்த இயக்கத்தை முன் நின்று நடத்திய தலைவர் கதிரவேற்பிள்ளை பாலசிங்கம் ஆவர். வெளியில் இருந்து இறக்குமதியான சீனி, சிகரெட்டு, புடவை ஆகியவற்றைப் பகிஷ்கரித்து, பனங்கட்டி, சுருட்டு, கதர் ஆடை ஆகியவற்றைக் கூடுதலாக உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு இளைஞர்கள் ஊரூராகச் சென்று பரப்புரை செய்தனர்.

பகிஷ்கரிப்பு தொடங்கி ஓர் ஆண்டு நிறைவுற்றபோது யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு அரியாலை, திருநெல்வேலி, கொக்குவில் ஆகிய இடங்களில் இருந்து ஊர்வலமாக மக்கள் சென்றனர்.

தேர்தலை நடத்த முயற்சி

இத்தகைய இயக்கத்தினால் மாணவர் காங்கிரஸ் (1931இல் இதன் பெயர் இளைஞர் காங்கிரஸ் என மாற்றப்பட்டது) தொடக்கிய பகிஷ்கரிப்பு மக்கள் ஆதரவை இழக்காது தொடர்ந்து நீடித்தாலும், அரசாங்கமும் அரச சபைக்கு (State Council) உறுப்பினராகச் செல்ல விழைந்தோரும் பகிஷ்கரிப்பை நீக்கித் தேர்தலை நடத்துவதற்கு வழிசெய்ய முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இது தொடர்பாக அருணாசலம் மகாதேவா முக்கியத்துவம் பெற்றார் எனலாம்.

பகிஷ்கரிப்பை எதிர்த்தோர் சார்பில் செயல்பட்ட ஒருவர் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணிபுரிந்த கச்சேரி முதலியாராகிய சி.கே. சுவாமிநாதன் என்பவர் ஆவர். இவர் பகிஷ்கரிப்புக்கு எதிராக எழுதிய கட்டுரை செய்தித்தாள்களில் வெளிவந்தன. இதனை விமர்சித்த Hindu Organ இவரும் தொடக்கத்தில் பகிஷ்கரிப்பை ஆதரித்தவர் என்பதைச் சுட்டிக்காட்டியது.

பகிஷ்கரிப்பால் யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது (Isolated) என்றும் பகிஷ்கரிப்பு மூலம் சில தலைவர்கள் தங்களிடத்தில் அரசியல் புத்திசாலித் தன்மை (Political Wisdom) இல்லாமையையும் மெய்நிலையை (Reality) உணரமுடியாத தன்மை இருப்பதையும் வெளிப்படுத்தினார்கள் எனவும் சுவாமிநாதன் கண்டனம் தெரிவித்தார்: 

“… it showed a lack of political wisdom and appreciation of realities on the part of some of our leaders to imitate the actions of the great Indian leaders in their struggle for freedom.”

பகிஷ்கரிப்பு யாழ்ப்பாண அரசியலில் 1933ஆம் ஆண்டு முழுவதும் பிளவை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. மகாதேவா, நடேசன், பொன்னம்பலம் ஆகியோரும் வேறு சில தலைவர்களும் விடாமுயற்சியுடன் ஊர்ச்சபைத் தலைவர்களையும் பிற பிரமுகர்களையும் சந்தித்துத் தேர்தலை நடத்துமாறு ஆளுநருக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுத்தனர் எனச் செய்தித்தாள்களில் தகவல் வெளிப்பட்டது. இந்துசாதனம் இம்முயற்சியை இவ்வாறு கேலிசெய்தது: 

“… யாழ்ப்பாணத்திலேயுள்ள சிலரினுஞ்சிலர் இன்னமும் அரசாங்க சபையுட் புகத்தான் வேண்டுமென்று கரவாக முயற்சி செய்தல் யாது பற்றியோ அறிகிலேம்… தம் நயங்கருதி அரசசபையுட் பிரவேசிக்க ஆசைகொண்டு உழலும் இந்தச் சிலரினுஞ்சிலருள் 4 பேர் பின்புறக்கதவாலேனும் சட்டசபையுள் ஒருவாறு புகுந்து விட்டால்…” (07/09/1933).

அரச சபைத் தேர்தல்

முதல் தடவையாக, அனைவருக்கும் வாக்குரிமையுடன், 1934 ஜுலையில் யாழ்ப்பாணம் பொதுத் தேர்தலுக்குச் சென்றது. நான்கு தொகுதிகள் இருந்தன – யாழ்ப்பாணம், காங்கேசந்துறை, ஊர்காவல்துறை, பருத்தித்துறை. தெற்கில் போல, வடக்கில் தொடக்கத்திலேயே வம்ச அரசியலின் (Dynastic Politics) அறிகுறி காணப்பட்டது. தெற்கில் சேனாநாயக்க குடும்பத்தைச் சேர்ந்தோர் (டொன் ஸ்டீபின், டட்லி, ஜோன் கொத்தலாவெல) போட்டியிட்டது போல, வடக்கில் இராமநாதன் – அருணாசலம் குடும்பத்தினர் (மகாதேவா, நடேசன், சிறீ பத்மநாதன்) போட்டியில் இறங்கினர். மூத்த தலைவர்களாகிய வை. துரைசுவாமியும் க. பாலசிங்கமும் (பகிஷ்கரிப்பை ஆதரித்தவர்கள்) போட்டியிடவில்லை.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்: அ. மகாதேவா (யாழ்ப்பாணம்), சு. நடேசன் (காங்கேசந்துறை), ஜி.ஜி. பொன்னம்பலம் (பருத்தித்துறை), நெவின்ஸ் செல்வத்துரை (ஊர்காவல்துறை). யாழ்ப்பாண அரசியலில் (முழு இலங்கையிலும் கூட) பொன்னம்பலத்தின் எழுச்சியைக் குறிக்கும் தேர்தல் இதுவாகும்.

இலட்சியவாதி இளைஞர்கள்

இத்தேர்தலுடன் யாழ்ப்பாண வரலாற்றில் மறக்கமுடியாத, ஒப்பற்ற ஓர் அத்தியாயம் முடிவுற்றது எனலாம். இலட்சியவாதி இளைஞர் பரம்பரை ஒன்று ஆங்கிலக் கல்வி மூலம் மனித உரிமைகள், மக்களாட்சி, ஏகாதிபத்தியச் சுரண்டல், காந்தியின் அகிம்சைப் போராட்டம் ஆகியவற்றை ஆவலுடன் கற்று, தமது சமூகத்துக்கும் நாட்டுக்கும் சுதந்திரத்தைச் சுவைத்து வாழும், சமத்துவமும் நீதியும் நிலவும் காலத்தை உருவாக்கத் தீவிரமாக உழைத்துத் தோல்வி கண்டனர். இவர்களுடைய இலங்கையர் தேசிய இயக்கத்தைப் பற்றித் தனது Ph.D. பட்டத்துக்கு ஆய்வுரை எழுதிய Jane Russell அளிக்கும் தீர்ப்பு இதுவாகும்: 

“They saw far beyond their time…” (அவர்கள் கண்டது அவர்கள் காலத்துக்கு மிகவும் அப்பாற்பட்டது). 

இவர்களது இயக்கம் பற்றியும் இவர்களுக்குப் பக்கபலமாக உதவிய, முன் நின்று வழிகாட்டும் தகைமையுடைய தலைவராக உயர்வு பெற்ற க. பாலசிங்கம் மற்றும் வை. துரைசுவாமி பற்றியும் பின்னர் பார்க்கலாம்.



About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்