மலையக வாய்மொழிப் பாடல்களில் வெளிப்படும் துரைமார்களின் அதிகாரம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

மலையக வாய்மொழிப் பாடல்களில் வெளிப்படும் துரைமார்களின் அதிகாரம்

March 23, 2026 | Ezhuna

கப்டன் ஹென்றி பேர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிச் செய்கையோடு மலையக மக்களின் வாய்மொழிப் பாடல் வரலாறு ஆரம்பிக்கின்றது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரின் பூரண கட்டுப்பாட்டில், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட்டு இம்மக்கள் வாழ்ந்தமையால், உலகில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களில் இருந்து இவர்களின் பாடல்கள் தனித்துவம் பெறுகின்றன. இத்தகைய இருள் சூழ்ந்த வாழ்வியலுக்குள் சிக்கிய மக்களின் வரலாறு, துன்பம், துயரம் ஆகியவற்றை இவர்களின் வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. இன்று, மலையக மக்களின் 200 வருடகாலப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் முக்கிய கூறுகளாகவும் இவை திகழ்கின்றன. அந்தவகையில், மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் அவர்களது வாய்மொழிப்பாடல்கள் வழியாகப் புரிந்துகொள்ளும் நோக்குடன் எழுதப்படுவதாக, ‘மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்’ எனும் இத்தொடர் அமைகின்றது

இலங்கையின் பொருளாதாரத்துக்கு மைய சக்தியாக விளங்குவது பெருந்தோட்டத் துறையாகும். பிரித்தானியக் காலனித்துவம் உருவாக்கிய இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் இலங்கை அரசு முழுமையாகத் தவிர்த்து மேலெழ முடியாத அளவுக்கு அதன் தாக்கம் நிலைபெற்றிருக்கிறது. பிரித்தானியக் காலனித்துவம் உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பொருளாதாரக் கட்டுமானங்களை வடிவமைத்தது. கைத்தொழில் புரட்சியின் பின்னர் தங்கள் நாட்டிற்கு தேவையான மூலவளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கும் பிரித்தானியர் வளமிக்க நாடுகளை தங்களது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து தமது ஆட்சியை நிலைநிறுத்தினர். அதன் பின்னர் அந்த நாடுகளில் தொடர்ச்சியான வருமானத்தை ஈட்டித்தரும் பொருளாதார வழிமுறைகளையும் அவர்கள் திட்டமிட்டு அமைத்தனர். 

இலங்கையில் கைத்தொழில் சார்ந்த ஒரு பொருளாதாரக் கட்டுமானத்தை உருவாக்காமல், விவசாயத்தை மையமாகக் கொண்ட ஏற்றுமதிப் பொருளாதார அமைப்பை உருவாக்கியதன் விளைவாக இன்று வரை இலங்கை அந்நியச் செலாவணிப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது.

இலங்கையில் பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்பட்ட வாசனைத் திரவியங்கள், கறுவா, முத்து, மாணிக்கம் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டிய போர்த்துக்கேயரையும் ஒல்லாந்தரையும் போல அல்லாமல், 1815 ஆம் ஆண்டு இலங்கை முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பிரித்தானியர் நாட்டில் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் வீட்டுப் பயிராக இருந்த கோப்பிப் பயிரை 1823 ஆம் ஆண்டு முதல் வர்த்தக நோக்கில் பயிரிடத் தொடங்கினர். அதன்படி கண்டி மாவட்டத்தின் கம்பளை ‘சிங்கபிட்டி’ என்ற இடத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் கோப்பி பயிரிடப்பட்டது. பின்னர் அது அதிக வருமானத்தை ஈட்டித்தந்ததால் அதன் பயிரிடல் விரைவாக விரிவுபடுத்தப்பட்டது.

அதேவேளை, இக்காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த கோல்புரூக்–கமரன் ஆணைக்குழு நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொண்ட நிர்வாகச் சீர்திருத்தங்களின் விளைவாக பெருமளவிலான பிரித்தானிய அதிகாரிகள் வேலை வாய்ப்பை இழந்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாட்டில் நிரந்தரமான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குவதற்கும் பெருந்தோட்டத் துறையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக 1840 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க காணிச் சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1840 ஆம் ஆண்டில் மட்டும் 13,275 ஏக்கர் நிலம் குறைந்த விலையில் பிரித்தானிய உயர் அதிகாரிகளுக்கு விற்கப்பட்டது. இதுபோல பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பிரித்தானியர்களுக்கு வழங்கப்பட்டன.

சுமார் பத்து ஆண்டுகளுக்குள் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கோப்பி பயிரிடப்பட்டது. இந்தக் கோப்பித் தோட்டங்களில் வேலை செய்வதற்கு சிங்கள மக்கள் முன்வராததால், தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘வீரபுரன் அப்பு’ தலைமையில் ஒரு பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது; அதனை ஆங்கிலேயர் கடுமையாக அடக்கியதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட தென்னிந்தியத் தமிழ் மக்கள் தான் இன்று மலையக மக்கள் என்ற பெயரில் தங்கள் இருப்பிற்கும் உழைப்பிற்கும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பிரித்தானிய அரசு இந்தியாவில் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளும் கடுமையான வரி விதிப்புகளும் மக்களின் வாழ்வைப் பெரிதும் பாதித்தன. அதனுடன் அக்காலத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும் தமிழ்நாட்டில் பசி, வறுமை, வேலையின்மை போன்ற துயரநிலைகளை உருவாக்கியது. இந்தச் சூழலில் சாதி அடக்குமுறையால் கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் புதிய வாழ்வையும் மன விடுதலையையும் எதிர்நோக்கி இலங்கை, பர்மா, பிஜி, மலேசியா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயரத் தொடங்கினர்.

இந்த இடப்பெயர்வு வலுப்பெற்றதன் பின்னர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் முகவர் அலுவலகங்கள் அல்லது ‘ஏஜென்சி ஆபீஸ்கள்’ தோன்றின. அவற்றின் பொய்யான பிரசாரங்களும், சொந்த மண்ணில் நிலவிய வறுமையும் அடக்குமுறைகளும் காரணமாக ஏழை எளிய மக்கள் ஆசை வார்த்தைகளால் மயக்கப்பட்டு கூலித் தொழிலாளர்களாக பிரித்தானிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டனர். தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்ட இம்மக்கள் கடற்கரை முகாம்களுக்கு கால்நடையாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 100 பேர் செல்லக்கூடிய கப்பல்களில் 200 பேருக்கும் மேல் ஏற்றப்பட்டு மன்னாருக்குக் கொண்டுவரப்பட்டனர். அந்தப் பயணங்களின் போது பல விபத்துகளும் மரணங்களும் நிகழ்ந்தன. ‘ஆதிலட்சுமி’ கப்பல் விபத்து இம்மக்களின் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பெரும் துயரச் சம்பவமாகும்.

மன்னாரிலிருந்து சுமார் 130 மைல் தொலைவில் உள்ள மாத்தளைக்கு இம்மக்கள் கால்நடையாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். மாத்தளையிலிருந்து பிரித்தானிய முதலாளிகள் தங்கள் தோட்டங்களுக்குத் தேவையான தொழிலாளர்களை கங்காணிகளின் மேற்பார்வையில் அழைத்துச் சென்றனர். ஆனால் தோட்டங்களை அடையும் முன்பே பலர் நோய், பசி, மழை, வெயில் போன்ற துன்பங்களால் உயிரிழந்தனர். சிலர் நடக்க முடியாமல் காடுகளில் விடப்பட்டு அனாதைகளாக உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களே இம்மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டனர்; அவர்கள் ‘கங்காணிகள்’ என அழைக்கப்பட்டனர். தொழிலாளர்களை துரைமார்களிடம் ஒப்படைத்த பின்னரும் அவர்கள் கங்காணிகளின் மேற்பார்வையிலேயே வைக்கப்பட்டனர். இம்மக்களை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ‘துண்டு முறை’ மற்றும் ‘பற்றுச் சீட்டு’ போன்ற அடக்குமுறை நடைமுறைகள் பயன்படுத்தப்பட்டன. இவ்விரு முறைகளும் தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டு தப்பிச் செல்லாமல் தடுக்க உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளாக நீண்டகாலம் நடைமுறையில் இருந்தன.

இந்தப் பின்னணியில் கோப்பி உற்பத்தி செழிப்புடன் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் கோப்பிப் பயிருக்கு ஏற்பட்ட நோய் அதன் உற்பத்தியை முற்றிலும் பாதித்தது. இதற்கான மாற்றாக தேயிலை பயிரிடல் அறிமுகப்படுத்தப்பட்டது. தேயிலை உற்பத்தி தொடங்கிய பின்னர் பெருமளவிலான தொழிலாளர்கள் நிரந்தரமாக இங்கு தங்கி தங்கள் வாழ்வியல் அடையாளத்தை உருவாக்கத் தொடங்கினர். அந்தக் காலகட்டத்தில் தோன்றிய வாய்மொழிப் பாடல்கள் இம்மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளை எந்தவித மறைப்பும் இல்லாமல் வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. அவற்றின் வழியாக துரைமார்களின் செயற்பாடுகள் எவ்வாறு இம்மக்களின் வாழ்வில் செல்வாக்குச் செலுத்தின என்பதையும், அந்தச் செல்வாக்கு இன்று வரை எந்த அளவுக்குத் தொடர்கிறது என்பதையும் கண்டுகொள்ளலாம்.

‘துரை’ என்ற சொல், சென்னை மாகாண நிர்வாகத்தை மேற்கொண்ட பிரித்தானிய அதிகாரிகளை, அவர்களுக்குக் கீழே பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அழைப்பதற்காகப் பயன்படுத்திய சொல்லாகும் என்பதை நா. கோவிந்தராஜன் எழுதிய ‘வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும்: மொழியில் உதித்த பேரரசு’ என்ற நூலில் எடுத்துக்காட்டுகிறார். அதேபோல் இலங்கையிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய பிரித்தானியர்கள், இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் தங்களை ‘எஜமான்’ அல்லது ‘துரை’ என அழைக்கும்படி செய்தனர்.

கோப்பிக் காலத்தில் மலையக வாய்மொழிப் பாடல்கள் துரைமாரைப் பற்றி பின்வருமாறு தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறது 

“கோப்பி பழுத்திருச்சு

கொண்டு போக நாளாச்சு

சீமை துரைங்களெல்லாம்

சிரிக்கிறாங்க ஜன்னலிலே”

இந்தப் பாடல் கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்று துரைமார்கள் பெரும் இலாபத்தைப் பெற்றுக்கொண்டு வெற்றிக்களிப்பில் இருந்ததை எடுத்துக்காட்டுகிறது. அதேபோல் ‘சீமைத்துரை’ என்ற சொல்லாடல் தன் நாட்டிற்கு அந்நியமான வெளிநாட்டவரைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

அதேவேளை, கோப்பி பயிரிடுவதற்குத் தயாரான ஆரம்பகாலங்களில் கோப்பித் தோட்டத் துரைமார்கள் எவ்விதமான அடிப்படை வசதிகளும் அற்ற சூழலிலேயே தங்கள் வாழ்நாளைக் கழித்தனர். அந்தக் கடினமான சூழ்நிலைகளில் கூட அவர்கள் எவ்வாறு தோட்ட நிர்வாகத்தை நடத்தி வெற்றியடைந்தார்கள் என்பதை ‘கசந்த கோப்பி’ என்ற நாவல் எடுத்துக்காட்டுகிறது. ஆரம்ப காலங்களில் இத்துரைமார்கள் தொழிலாளர்களுக்கு உரிய கூலியை வழங்காமல், அவர்களை அடித்து உதைத்துத் துன்புறுத்தியதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. அதற்கான ஓர் உதாரணமாக கீழ்க்கண்ட பாடலைக் காணலாம்.

“கோணக் கோண மலையேறி

கோப்பிப்பழம் பறிக்கையில

ஒரு பழம் தவறிச்சின்னு

ஒதச்சானய்யா சின்னதுரை”

இன்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்டத் துரைமார்களை எதிர்த்து பேசினாலோ, அல்லது தொழிலாளர்கள் தங்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் போராடினாலோ, அவர்களுக்கு வேலை வழங்காமல் நிறுத்திவைக்கும் நடைமுறை காணப்படுகிறது. பின்னர் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் அதிகாரங்களின் ஆதரவுடன் அவர்களை வேலைநீக்கம் செய்யும் அதிகாரமும் தோட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை இன்றும் பல தோட்டங்களில் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. பல இடங்களில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சம்பவங்களும் நாள்தோறும் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன.

துரைமார்களிடம் உள்ள இந்த அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான சட்ட நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பதும் கண்கூடாகத் தெரிகிறது. இதன் விளைவாகவே மலையகத்தில் தொழிற்சங்கங்கள் பெருமளவில் உருவாகின. பல இடங்களில் வேலை தொடர்பான முரண்பாடுகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படும் சூழ்நிலைகளில், அவர்களின் சார்பாக தொழிற்சங்கங்கள் துரைமார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர முயற்சிக்கின்றன.

பல சந்தர்ப்பங்களில் தொழில் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் வழக்குத் தீர்க்கப்படும் வரை தொழிலாளர்கள் வேலை இன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இத்தகைய நிலைமைகள் துரைமார்களின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்படுகின்றன. மனித உரிமைச் சட்டங்களும் தொழிற் சட்டங்களும் நடைமுறையில் இருந்தபோதிலும், இத்தகைய அநீதிகளை முழுமையாகத் தடுக்க முடியாமல் இருப்பது கவலைக்கிடமானதாகும். தொழிலாளர் வாக்குகளைப் பெற்று அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் பதவியேற்றவர்கள் கூட இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாமல் இருப்பது புரியாத ஒரு நிலையாகவே உள்ளது.

மேலும், குமாரி ஜெயவர்த்தன அவர்கள் பெருந்தோட்டச் சமூகத்தை ஒரு ‘மூடிய சமூகமாக’ அடையாளப்படுத்துகிறார். அவரின் கருத்துப்படி, தோட்டத் துரைமார்கள் ஒரு சிறிய நிலப்பிரபுத்துவ அரசனைப் போலவே செயற்படுகின்றனர். தொழிலாளர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் தோட்ட நிர்வாகத்திடமே இன்றும் உள்ளது. அதேவேளை, பெண்கள் இரட்டைச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, தோட்டத்தில் உழைப்புச் சுரண்டல், வீட்டுக்குள் ஆணாதிக்கச் சுரண்டல், பாலியல் சுரண்டல் ஆகிய பல்வேறு சுமைகளைச் சுமக்கும் நிலைமையில் மலையகப் பெண்கள் இருக்கின்றனர்.

முல்லோயாப் போராட்டம் துரைமார்களின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு முக்கியமான எதிர்ப்புப் போராட்டமாக அமைந்தது. இந்தப் போராட்டத்தின் போது உயிரிழந்த முல்லோயா கோவிந்தன் அதிகார வர்க்கத்தால் இரத்தம் சிந்த வைக்கப்பட்ட முதல் தியாகியாகப் பதிவாகிறார்.

குமாரி ஜெயவர்த்தன கோவிந்தனின் மரணத்தைத் தொடர்ந்து அரசாங்கம் நியமித்த விசாரணைக் குழு மேற்கொண்ட ஆய்வுகளைப் பற்றி குறிப்பிடுகிறார். அதுவரை ‘தோட்டமே துரையின் தனிப்பட்ட ராஜ்ஜியம்’ என்ற எண்ணத்துடன் செயற்பட்ட துரைமார்கள், அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் தங்கள் செயற்பாடுகளுக்கு அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய நிலை உருவானது என்பதையும் அவர் விளக்குகிறார்.

துரைமார்களுக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டம் பல முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியது. அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:

  1. தொழிற்சங்க அங்கீகாரம்
  2. அரசியல் விழிப்புணர்வு
  3. நிர்வாகக் கட்டுப்பாடு

இந்த மாற்றங்களின் மூலம் துரைமார்களின் தன்னிச்சையான அதிகாரங்களுக்குச் சட்டரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவ்வாறான சட்டக் கட்டுப்பாடுகள் அவசியமானதாக மாறியிருந்தமை, துரைமார்கள் கடந்த காலங்களில் ஆட்சிமுறைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தியிருந்தனர் என்பதை உணர்த்துகிறது.

“நம்ம தொர நல்லதொர

நாடறிஞ்ச கோட்டுத்தொர

கோட்டுத்தொர பொல்லாதவன்

ரோட்டை விட்டுக் கீழ இறங்கு”

“கொழுந்து பறிக்கையிலே

கொழுந்து தொர வந்தாரே

கையப் புடிச்சானே – அவன்

கண்ணைச் சிமிட்டினானே”

போன்ற பாடல்கள் துரைமார்கள் உழைக்கும் பெண்கள் மீது கொண்டிருந்த பார்வையை எடுத்துக்காட்டுகிறது. பெரும்பாலான இளம் பெண்கள் இத்தகைய நிலைகளுக்கு ஆளானதாக வரலாற்றுப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதாக மிரட்டித் துன்புறுத்திய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. துரைமார்களின் பாலியல் அடக்குமுறைகள் குறித்து பல்வேறு நாவல்களிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அதேவேளை, துரையின் முன்னிலையில் தொழிலாளர்கள் குடை பிடிக்கக்கூடாது, செருப்பு அணியக் கூடாது, மேலும் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்துக் கையில் வைத்திருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருந்தன. இத்தகைய அடிமைத்தனமான நடைமுறைகள் தமிழ்நாட்டில் பண்ணையார்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை மற்றும் அடிமைத்தனத்துடன் ஒப்பிடத்தக்கவையாகும். இதனை ஒப்புவிக்கும் ஒரு பாடலைக் கீழே காணலாம்.

“குடை பிடிக்கக் கூடாது – அந்தக்

கொடுமைக்காரத் துரை முன்னே

தலையில் துணி இருக்கக்கூடாது 

அந்தத் தருதலைக் கங்காணி முன்னே”

துரைமார்கள் வீதியில் வந்தால் தொழிலாளர்கள் நடுங்கியபடியே அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டிய நிலை இருந்தது. அவர்களின் தோற்றமே அதிகாரத்தின் அடையாளமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. அவர்கள் கையில் வைத்திருந்த பிரம்பு, எவ்விதமான கேள்வி கேட்பாடும் இன்றித் தொழிலாளர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அவர்களிடம் இருப்பதைக் குறிக்கும் ஒரு சின்னமாகப் பார்க்கப்பட்டது. இன்றும் மலையகத் தோட்டப் பகுதிகளில் பணிபுரியும் கங்காணிமார்கள், கணக்கப்பிள்ளைமார்கள் மற்றும் துரைமார்கள் தங்கள் கைகளில் ஒரு பிரம்பை வைத்திருப்பது, அந்த அதிகாரத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

“வெள்ளை குதிரை மேலே – நம்ம

வெள்ளைத்துரை வாராரே

கையிலே பிரம்பு இருக்க – அவர்

கண்ணிலே நெருப்பு இருக்க

தொப்பியை மாட்டிக்கிட்டு அவர்

தூரத்தில் வாராரே

தப்பு ஏதும் செஞ்சிட்டா அவர்

சவுக்கால அடிப்பாரே”

பெண்கள் கடுமையாக உழைத்து பறித்துக்கொண்டு வரும் கொழுந்துகள் ‘சரியாக இல்லை’ என்று காரணம் காட்டி ஈவிரக்கம் இன்றித் தூக்கி எறிவதும் வழக்கமாக இருந்தது. அவற்றுக்கு நிறை அளிக்காமலும் சம்பளத்தை வழங்காமலும் தண்டிப்பதும் பொதுவான நடைமுறையாக இருந்தது. 1975 – 1977 காலப்பகுதிகளில்கூட தலையில் ‘கொங்காணி’ அணிந்து வராமல் சம்பளம் பெற வருவோருக்கு சம்பளம் வழங்காமல் விரட்டி அனுப்பிய சம்பவங்கள் மலையகப் பகுதிகளில் பதிவாகியுள்ளன.

“மலை மேலே ஏறி – நான்

மடி நிறையக் கொழுந்து எடுத்தேன்

துரை வந்து பார்த்தாரே – என்

கூடையைக் கீழே தள்ளினாரே”

மலையகப் பகுதிகளில் வறுமை, நோய், வீட்டு வசதியின்மை போன்ற கடுமையான சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருந்த போதும், துரைமார்கள் மிகவும் ஆடம்பரமான பங்களாக்களில் சொகுசான வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்தச் சமூக வேறுபாட்டை பின்வரும் பாடல்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

“கொய்யாப்பழம் பழுக்கும்

கொடமல்லி பூ பூக்கும்

சீத்தாப்பழம் பழுக்கும் நம்ம

சின்னதுரை வாசலிலே”

“ஆறடிதான் பங்களாவாம்

அறுபது அடி பூந்தோட்டம்

பூஞ்செடிக்கு தண்ணி போடும்

புண்ணியரே என் பொறப்பு”

“பங்களா மேலிருந்து அவர்

பார்த்துச் சிரிக்கிறாரே

பச்சைக் கொழுந்து எடுத்து

நாம பசியில் வாடுகிறோம்”

இவர்களின் பங்களாக்களை இன்று சென்று பார்க்கும்போது, அவை இங்கிலாந்தில் உள்ள செல்வந்தர்களின் வீடுகளுக்கு எவ்விதத்திலும் குறையாத வசதிகளுடன் மிகவும் ஆடம்பரமாக அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ஒப்பீட்டளவில் கங்காணிகள், கணக்கப்பிள்ளைகள் குறித்துப் பல பாடல்கள் காணப்பட்டாலும், துரைமார்களைப் பற்றிய பாடல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இருப்பினும், அவ்வாறான பாடல்களில் வெளிப்படும் கருத்துகள் அவர்களின் அதிகாரத் துரைத்தனம், நிலப்பிரபுத்துவ மனப்பாங்கு மற்றும் அடக்குமுறை நடைமுறைகளைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் சட்டம், நீதி, நிர்வாகம் ஆகிய அனைத்தையும் அவர்கள் தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நிலையையும் இப்பாடல்கள் பிரதிபலிக்கின்றன.

துரைமார்கள் நிகழ்த்திய பெண்களுக்கு எதிரான பாலியல் அடக்குமுறைகள், அதற்குப் பெரிய கங்காணிமார்கள் மற்றும் கணக்கப்பிள்ளைமார்கள் எவ்வாறு துணையாக இருந்தனர் என்பன பற்றியும் பல நாவல்களிலும் ஆய்வுகளிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. உதாரணமாக குமாரி ஜெயவர்த்தன மற்றும் ரேச்சல் கொரியன் ஆகியோரின் ஆய்வுகள் முக்கியமானவையாகும். இவ்வாய்வுகள் விரிவாகப் படிக்கப்பட்டு இன்றைய தலைமுறையினர் அவற்றை அறிந்து கொள்ளும் வகையில் பரவலாக்கப்பட வேண்டும். அதேபோல் பேட்ரிக் பீப்பிள்ஸ் மலையகப் பெண்கள் உடல் ரீதியாக எதிர்கொண்ட தண்டனைகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளார். வினா அகர்வால் பெண்கள் பெருந்தோட்டத் துறைக் கட்டமைப்பில் எவ்வாறான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். 

மலையக வாய்மொழிப் பாடல்களில் சித்திரிக்கப்படும் துரைமார்கள், இன்றும் பெருந்தோட்டத் துறையை வழிநடத்தும் அதிகாரமிக்கவர்களாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களிடம் இரக்கத்துடன் பழகி, தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்த ஒருசில துரைமார்களும் வரலாற்றில் தடம் பதித்துள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதாகும்.

சான்றாதாரங்கள்

வேலுப்பிள்ளை, சி.வி. மலைநாட்டு மக்கள் பாடல்கள். கொழும்பு: மகாவலி பிரசுரம்.

சிவலிங்கம், மு. 2007. மலையகத் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள். ரெக்னோ பிரிண்டர்ஸ்.

சாரல் நாடன். 1993. மலையக வாய்மொழி இலக்கியம். சென்னை: சவுத் ஆசியன் புக்ஸ்.

கந்தையா, மு.சி. 2002. சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள். திருப்பூர்: பொன்னுலகம் புத்தக நிலையம்.

காதர், பி.ஏ. இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம். லண்டன்: சமூக இயல் பதிப்பகம்.

குமாரி ஜெயவர்த்தன. 1987. இலங்கையில் இனவர்க்க முரண்பாடு. குமரன் புத்தக இல்லம்.



About the Author

வேலாயுதம் இராமர்

வேலாயுதம் இராமர், கொ.புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கவிஞர், நாடகம், திரைப்பட நடிகர், மலையக நாட்டார் இலக்கிய செயற்பாட்டாளர் என பல்துறைசார்ந்து செயற்படுவதோடு மலையக கூத்து தொடர்பாகவும் செயற்பட்டு வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்