கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் - பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
25 நிமிட வாசிப்பு

கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 3

May 18, 2026 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

6. பெருங்கடல் வர்த்தகம் 

கந்தரோடையினதும் அதன் துணை ஊர்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்கு விவசாயம், மந்தை வளர்ப்பு, பரவைக்கடல் மீன்பிடிப்பு ஆகிய நடவடிக்கைகள் உதவி செய்த போதிலும், கந்தரோடையின் நகரமயமாக்கத்திற்கும், நாட்டின் நாகரிக வளர்ச்சிக்கும் முக்கிய உந்துதலாக இருந்தது அதன் துறைமுகங்கள் வழியாக மேற்கொண்ட வெளிநாட்டு வணிகச் செயற்பாடுகளே ஆகும். இந்து மாகடலின் வர்த்தகப் பாதையில் யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைவிடம் அமைந்திருந்ததனால் கிரேக்க-உரோம, பாரசீக, அரேபிய, சீன, இந்திய கடல்வழி வர்த்தகத்தில் யாழ்ப்பாணத் துறைமுகங்கள் முக்கிய பங்காளிகளாக இருந்தன. அக்காலத்தில் நாகநாட்டின் சமூக-பொருளாதாரப் பெருவளர்ச்சியும், மேம்பாட்டு நிலையும் வர்த்தக நடவடிக்கைகளிலே தங்கியிருந்தன.

யாழ்ப்பாணம் ஒரு சிறிய தீபகற்பமாக இருந்த போதிலும், இந்து மாகடலில் அமைந்த அதன் கேந்திர மையம் அதன் துறைமுகங்களுக்கு அதன் அளவை விடப் பாரிய முக்கியத்துவம் அளித்திருந்தது. இந்து மாகடலின் காற்று வீச்சு மேற்கிலிருந்து வரும் பாய்க்கப்பல்கள் இந்தியாவின் அல்லது இலங்கையின் மேற்குக் கரையில் தங்க வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கொடுத்திருந்தது. இவை அக்கலன்களின் தங்குதுறைகளாகவோ அல்லது பிரயாணத்தின் இறுதி மையங்களாகவோ இருந்திருக்கும். இந்தியாவின் வடகரைத் துறைகள் கடற் கொள்ளைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளுக்கு உட்பட்டிருந்தபடியினால், மன்னார்க்குடா வழியாக வரும் கப்பல்களுக்கு இலங்கையின் மேற்குக் கடல் துறைகள் பாதுகாப்பான புகலிடங்களாக இருந்தன. மாந்தைத் துறை, பண்டைய யாழ்ப்பாணப் பண்ணைத்துறை, பூநகரித்துறை, யம்புகோளம், காயாத்துறை ஆகிய துறைகள் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தன.

கந்தரோடை அகழ்வுகளில் கி.மு. 500ஆம் ஆண்டிற்குரிய அச்சுக்குத்திய வெள்ளியிலான வட இந்திய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கி.மு. 500ஆம் ஆண்டிற்குரிய அம்போரா மதுச்சாடிகள் யாழ்ப்பாணத் துறையிலும், கி.மு. 300ஆம் ஆண்டு முதல் கி.பி. 100ஆம் ஆண்டு வரையிலான ‘ரௌலெற்ரெட்’ மட்பாண்டங்களும், கி.மு. 200ஆம் ஆண்டு முதல் கி.பி. 450ஆம் ஆண்டு வரையிலான பெருந்தொகையான உரோம நாணயங்களும் கந்தரோடை அகழ்வுகளிலும் கிடைத்திருக்கின்றன.

இக்காலத்தில் யம்புகோளத் துறை கடலில் அமிழ்ந்துவிட்டபடியினால் கடலடித் தொல்லியல் ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் 2011–12, 2017ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகள், முன்னர் அவ்விடத்திலிருந்த யாழ்ப்பாணப் பண்ணைத்துறையில் நிலத்தின் கீழ் பொதிந்திருந்த பொக்கிஷங்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. அக்காலத்தைய சில கண்டுபிடிப்புகளைச் சுருக்கமாகக் கூறின் –

1. பெருங்கற் பண்பாட்டுக் கலன்கள்: கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் – கி.மு. 1000 முதல்  கி.பி. 100 வரை.

2. வட இந்திய வர்த்தகம்: வட இந்திய மெருகூட்டப்பட்ட கறுப்புநிற மட்கலன்கள் – கி.மு. 500 – கி.பி.200.

3. தமிழக வர்த்தகம்: பல்வகைப் பொருட்கள்

4. உரோம வர்த்தகம்: ரௌலெற்ரெட் மட்பாண்டம் – கி.மு. 300 – கி.பி. 100

உரோம நாணயங்கள்: கி.மு. 100 – கி.பி. 450.

சிவப்பு மெருகிட்ட அறிற்றைன் கலன்: கி.மு.100 – கி.பி.100.

உரோம நாணயங்கள் – யாழ்ப்பாண அகழ்வு.

5. தெற்கு ஆசிய வர்த்தகம்: சஸானிய இஸ்லாமிய மட்பாண்டம் – கி.பி. 800 – 900.

6. அரேபிய வர்த்தகம்: தகர மெருகூட்டப்பட்ட மட்பாண்டம் – கி.பி. 800 – 1000.

அரேபிய நாணயங்கள் – யாழ்ப்பாண அகழ்வு.

7. சீன வர்த்தகம்: யூல் பச்சை மட்பாண்டம் – கி.பி. 800 – 900.

டியூசன் கல் பாண்டம் – கி.பி. 700 – 1100

மிங் கால பீங்கான் – கி.பி. 1300 – 1600

சீன நாணயங்கள் – யாழ்ப்பாண அகழ்வு

(நாணயப் படங்கள் – நன்றி: ப. புஷ்பரட்ணம்)

இலங்கையின் வடபகுதியில் கிடைத்த நாணயங்களில் உரோம நாணயங்கள் முக்கியமானவை. இவை கி.மு. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரையான காலத்திற்குரியவை. இக்காலத்தில் உரோமப் பேரரசு கீழைத்தேய நாடுகளுடன் நெருக்கமான வர்த்தகத் தொடர்பினை மேற்கொண்டிருந்தது. இவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், கிரேக்க – உரோமரது நூல்களிலும் காணப்படுவதோடு, உரோமரின் மட்பாண்டங்களும் மதுச்சாடிகளும் இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் கிடைத்துமுள்ளன (சிற்றம்பலம், சி.க., 1993: 500).

உரோம நாணயங்கள் பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களால் ஆனவை. இத்தகைய நாணயங்கள் கந்தரோடை, வல்லிபுரம், மண்ணித்தலை, வெட்டுக்காடு, திருக்கேதீஸ்வரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்களில் பொதுவாக முன்பக்கத்தில் கிரீடம் அணிந்த மன்னனின் தலையும், தலையைச் சுற்றிவரப் புள்ளிகளும் உள்ளன. நாணயத்தின் பின்பக்கத்தில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று போர் வீரர்கள் அல்லது சிலுவை முதலிய உருவங்கள் உள்ளன. இந்த நாணயங்களில் பெரும்பாலானவை கி.பி. மூன்றாம், நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு உரியவை. காரணம், இக்காலப்பகுதியில் உரோம வணிகர்கள் நேரடியாக இலங்கையின் துறைமுகங்களுக்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் (சிற்றம்பலம், 1993: 501).

7. கட்டடக் கலையும் சிற்பங்களும்

ஆனைக்கோட்டை – நவாலி எல்லைப் பகுதியில் வெளிக்கொணரப்பட்ட பண்டைக்காலக் கட்டடம். இது பொழியப்பட்டு நீள்சதுரமாக வெட்டப்பட்ட சுண்ணாம்புக் கற்களிளால் அடித்தளமும், சுவர்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அக்காலத்தைய அரச, அல்லது  வேளிர் வகுப்பு மக்களின் கட்டடங்கள் இவ்வாறான கட்டட அமைப்பைக் கொண்டிருக்கலாம். Image Source: Dr. P. Ragupathy.

கந்தரோடையில் காணப்படும் தனித்துவமான உள்நாட்டு அம்சம் பவளக் கற்களையும் சுண்ணாம்புக் கற்களையும் கொண்டு செதுக்கப்பட்ட கட்டடக்கலையும் சிற்பக்கலையுமாகும். இக்கற்களே அக்கால யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட முக்கிய கட்டடப் பொருட்களாகும். இக்கற்களை உபயோகித்த கட்டட – சிற்பக் கலையானது யாழ்ப்பாணப் பௌத்தக் கட்டடங்களை அமைப்பதில் ஆரம்பித்து, பண்டைய கட்டடங்களையும் சிற்பங்களையும் உருவாக்கி, சமீப காலங்களில் அவற்றை சீமெந்தில் மாற்றியமைக்கும் வரை பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இக்கற்களை சிறப்பாக வெட்டி, பொழிந்து, உருவாக்கும் தொழில்நுட்பத்தில் யாழ்ப்பாணக் கல் தச்சர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். யாழ்ப்பாணப் பௌத்தத்தில் காணப்படும் இந்தக் கட்டடப் பொருட்களும், அவற்றைப் பயன்படுத்தும் தொழில்நுட்பமும் இலங்கையின் பெருநிலப்பரப்பில் காணப்படும் பௌத்த ஸ்தூபங்களிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. இப் பவளக்கல் – சுண்ணாம்புக்கல் தொழில்நுட்பப் பயன்பாடு இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு வெளியே நடைபெற்றதாகத் தெரியவில்லை.

யாழ்ப்பாணப் பௌத்தச் சிற்பங்களும் பண்டைய கட்டடங்களும் யாழ்ப்பாண மண்ணின் கீழே காணப்படும் ‘மையோசீன்’ காலத்து சுண்ணாம்புக் கற்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. நிலத்தின் மேலிருக்கும் மண் படையை நீக்கினால் சுண்ணாம்புக்கற் படை வெளிவருகிறது. சில இடங்களில் மேல் மண்தரை மழையினால் கழுவப்பட்டு சுண்ணாம்புக்கல் அடுக்கு மேலே தெரிவதும் உண்டு.

ஆனைக்கோட்டையில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வுகளில், ஆனைக்கோட்டை – நவாலி எல்லைப் பகுதியில் தரவைப் பற்றைகளால் மூடப்பட்டிருந்த ஒரு பண்டைய கட்டடத்தை கலாநிதி இரகுபதி வெளிப்படுத்தினார். இக்கட்டடத்தின் அடித்தளம் சுண்ணாம்புக் கற்களால் ஆனது. இக்கற்கள் நீள்சதுரமாக வெட்டப்பட்டு, பொழியப்பட்டு, ஒன்றுடன் ஒன்று பொருந்தும் வகையில் செதுக்கிப் பொருத்தப்பட்டிருக்கின்றன. பக்கச் சுவர்களும் இவ்வகையான பெரிய சுண்ணாம்புக் கற்களை அடுக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கட்டட நிலத்தின் அடிப்பகுதியில் ஒரு வட்டவடிவான குழி காணப்படுகிறது.

தமிழகத்தில், கொடுமணலில் பேராசிரியர் கா. ராஜன் மேற்கொண்ட அகழ்வுகளில், கடினமான நிலத்தளங்களில் காணப்படும் வட்டவடிவான குழிகளில் இரும்புக் கனிமத்திலிருந்து இரும்பை உருக்கியெடுக்கும் உலைக்களங்கள் இருந்ததைக் காட்டியிருக்கிறார். இக்கிடங்கு இப்படியான ஓர் உலைக்களம் இருந்த இடமாக இருக்கலாம்; அல்லது ஒரு சாதாரண சேமிப்புக் கிடங்காகக்கூட இருந்திருக்கலாம். இக்கட்டடத்தின் மேற்பகுதி எவ்வாறு அமைந்திருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்துதான் பார்க்க முடியும். பெருங்கற்களையே இத்தனை செவ்வனே அறுத்துப் பதிப்பவர்கள், பக்க மரங்களை நட்டு, கூரைகளை நீண்ட மரக்கட்டுமானக் கட்டைகளையும் சிலாகைகளையும் கொண்டு அமைத்து, மேலே சூளையில் சுட்ட களிமண் பலகை ஓடுகளைக் கொண்டு வேய்ந்திருப்பார்கள். அக்காலத்தைய சாதாரண மண் குடிசைகளினிடையே காணப்பட்ட இப்படியான வதிவிடங்கள் அக்காலத்தைய அரச அல்லது வேளிர் வகுப்பு மக்களின் கட்டடங்களாக இருக்கக்கூடும்.

கந்தரோடையின் பௌத்த ஸ்தூபங்களின் அடித்தளங்கள் பவளக் கற்களால் ஆனவை. செவ்வனே அறுக்கப்பட்டு செதுக்கப்பட்ட பவளக்கற்கள் வட்டவடிவாக நான்கு வரிசைகளில் அடுக்கப்பட்டிருப்பதாக கலாநிதி கொடகும்புர தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார் (Godakumbura, C.E., 1968). பவளக்கற்கள் கடலின் அடியில் உயிருள்ள வெண்ணிறப் பவளக்கொடிகளாக வளருகின்றன. இவை மூன்று-நான்கு அடி உயரமும், ஆறு-எட்டு அடி நீளமும் கொண்டவையாக வளருகின்றன. இவற்றைக் கடலிலிருந்து பெயர்த்தெடுத்து, ஈரமாக இருக்கும் போது அல்லது நீரில் ஊறவைத்து மென்மையாக்கிய பின்னரே தேவையான உருவங்களில் அறுக்கவோ செதுக்கவோ முடியும். இக்கற்கள் காய்ந்துவிட்டால் அவற்றை வெட்டும் போது சிறு துண்டுகளாகப் பிளவுபடும். பவளக்கல் தொழில்நுட்பம் இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மறக்கப்பட்டுவிட்டது.

கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட கடினமான மண்ணிறக் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இது போல் பீரிஸினால் கண்டுபிடிக்கப்பட்டதோ அல்லது கலாநிதி கொடகும்புரவினால் கண்டெடுக்கப்பட்டதோ தெரியவில்லை. சிலைக்குப் பக்கத்தில் எந்த விவரமும் குறிக்கப்பட்டிருக்கவில்லை. அது ஒரு தூணின் உச்சியில் கூரையைத் தாங்கும் விட்ட மரத்தின் கீழ்முனையில் பொருத்தப்பட்டிருந்த தூண்தாங்குக் கல்லாக இருக்கலாம். மேலே செதுக்கப்பட்ட கல் மேசையின் கீழே கலைவடிவான ஒரு சிங்க முகம் செதுக்கப்பட்டிருக்கிறது. முகத்தைச் சுற்றியுள்ள அகலமான விளிம்புக்கல் செதுக்கில் இரண்டு இணையான பள்ளக் கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. அதன் கீழே சதுரமான தூணின் பகுதி காணப்படுகிறது.

1919இல் போல் பீரிஸ் கண்டெடுத்த லக்ஷ்மி நாணயங்கள் உலோகங்களினால் சுட்ட களிமண் அச்சுகளில் உருக்கி வார்த்தெடுக்கப்பட்ட நாணயங்களாகும். ஆனால் ஸ்டீயடைட் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உருவம் ஒரு லக்ஷ்மி பட்டயமாக இனங்காணப்பட்டுள்ளது. உடுப்பு எதுவுமின்றி, இரு கைகளிலும் ஆயுதம் போன்ற இரு தண்டங்களைப் பிடித்தவாறு இந்த உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது.

2023ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அரச தொல்லியல் நிறுவனமும் (German Archaeological Institute KAAK – Bonn), ஸ்ரீலங்கா தொல்லியல் துறையும் இணைந்து கந்தரோடையில் ஒரு தொல்லியல் அகழ்வாய்வை நிகழ்த்தின. அந்த அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சில பொருட்கள் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினால் வெளியிடப்பட்டன. அவற்றில் கற்களில் செதுக்கிய இரு சிறு உருவங்கள் கவனிக்கத்தக்கவை.

மண்ணிறக் கல்லில் (ஸ்டீயடைட் கல் போலத் தெரிகிறது) மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட லக்ஷ்மி உருவம் சிறந்த வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. மற்றொரு பச்சைநிறக் கல்லில் மூன்று தலைகள் கொண்ட நாகம் போன்ற ஓர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இது தெளிவாக இல்லை (கீழே காணப்படும் படத்தைப் பார்க்கவும்).

கந்தரோடை தூண்தாங்கு கல் சிற்பம் – யாழ்ப்பாண அருங்காட்சியகம்

கல்லில் செதுக்கிய லக்ஷ்மி. Courtesy: Paul Pieris.

கந்தரோடை அகழ்வுகளில் கண்ட கற்களில் செதுக்கிய உருவங்கள். 1. லக்ஷ்மி உருவம்,   2. மூன்று தலைகள் கொண்ட நாக உருவம். Courtesy: German Archaeological Institute, Kantarodai Excavations 2023.

8. கைவினைத் தொழில்நுட்பம்

இலங்கையில் வாழ்ந்த சமூகங்கள் தொழிலை முதற்காரணமாகக் கொண்ட சமூகப் பிரிவுகளாக இருந்ததை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதலான பிராமிக் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. இச்சமூகங்கள் மணிகர (மணிவேலைக் கலைஞர்), தலதர (பொற்கொல்லர்), கபகர (இரும்பு வேலை செய்வோர்), தபகர (செம்பு வேலை செய்வோர்), தலதர அல்லது கூபகர (கிணறு வெட்டுவோர்), தடவய (நெசவாளர்), வணிஜ (வணிகர்), கமிக (கமக்காரர்) எனப் பிராகிருத மொழிக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.

கைத்தொழிலாளர்களிடையே ஆரம்பகால குடியேற்றங்களில் அதிகமாக வாழ்ந்தவர்கள் பானை வனையும் குயவர்கள்தாம். கந்தரோடையில் கண்ட தொல்பொருட்களில் மிக ஆதியான திகதியைத் தருவது குயவர்கள் சில்லில் வனைந்து சூளையில் சுடவைத்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களாகும். இதன் ஆரம்ப திகதி கி.மு. 1350ஆம் ஆண்டைக் காட்டியிருக்கிறது. இதன் தொடராக சட்டிகள், வட்டில்கள், கிண்ணங்கள் என்பன காணக்கிடக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் ஆதிகாலத்திலிருந்தே மக்கள் கைத்தொழில்நுட்பத்தில் பனையின் ஓலைகளிலிருந்தும், நார்களிலிருந்தும், மட்டைகளிலிருந்தும் பலவகையான பொருட்கள் செய்வதில் சிறப்படைந்திருந்தனர். பாய்கள், பெட்டிகள், கடகங்கள், சுளகுகள், நீற்றுப் பெட்டிகள், கைவிசிறிகள், வயலுக்கு நீர் இறைக்கும் பெரிய பட்டைகள் எனப் பல தரப்பட்ட பனைமரப் பொருட்கள் பல நூற்றாண்டுகளாக மக்களின் பாவனைப் பொருட்களாக இருந்து வந்திருக்கின்றன.

மணிக்கற்கள் தொழில்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான பொருட்களின் மூலமே செல்வம் பெருகியது. உரோமாபுரியின் ஆதிக்கம் மத்தியதரை நாடுகளில் பரவியதன் விளைவாகத் தென்னிந்தியாவிற்கும் யவன உலகிற்கும் இடையிலான வாணிபத் தொடர்புகள் அதிகரித்தன. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும், வணிகப் பாதைகளிலும் நகரங்களிலும் பெருமளவில் கிடைத்துள்ள உரோம நாணயங்கள் இந்த வளர்ச்சிக்கான தெளிவான ஆதாரங்களாகும். உரோமப் பேரரசில் அடங்கிய தேசங்களில் நகரமயமாக்கமும் ஆடம்பர வாழ்க்கையும் வழமையாகின. உயர்குடிப் பெண்கள் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டனர். நுண்ணிய அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட நுண்துகில்கள், வாசனைப் பொருட்கள், மணிமாலைகள் மற்றும் ஆபரணங்கள் முதலானவை பிரதான வியாபாரப் பொருட்களாகிவிட்டன. அவை பெரும்பாலும் தெற்காசியாவிலேயே கிடைத்தன. கல்மணிகள், கண்ணாடி மணிகள், பசைமணிகள் என்பனவும் இங்கிருந்து மத்தியதரை நாடுகளுக்கு வணிகர்களாற் கொண்டுசெல்லப்பட்டன. இவ்வாறான சூழ்நிலையில் தமிழகத்திலும் இலங்கையிலும் மணிகளின் உற்பத்தி பெருகியது.

யாழ்ப்பாணத்தில் கந்தரோடை கல்மணிகளின் ஓர் உற்பத்தி நிலையமாகச் செயல்பட்டது. பல்வேறு தரங்களிலுள்ள பெறுமதிவாய்ந்த மூலக்கற்களைக் கொண்டுவந்து ஆபரணங்களுக்குரிய ஒளிபொருந்திய மணிக்கற்களாகச் செய்தல் ஒரு பிரதான தொழிலாக மாறியது. பல பட்டறைகளில் (தொழிற்சாலைகளில்) அவை செம்மைப்படுத்தப்பட்டன என்று கருதலாம். இவ்வாறு செம்மைப்படுத்தப்பட்ட மணிகளின் மூலப்பொருட்களாகப் பயன்படுத்திய கற்களின் ஒரு தொகுதி யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் இன்றும் பேணப்படுகின்றது. 1966இல் கலாநிதி கொடகும்புர அகழ்வாய்வுகளை நடத்தியபோது ஒரு சிறு குழியில் மட்டுமிருந்து 22,000 மணிகள் கிடைத்தன. இவை இப்போதும் யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த விலைமதிப்பற்ற கற்களுள் அகேற் (Agate), சூதுபவளம் (Carnelian), பச்சைக்கல் (Jade), மஞ்சள் மணிக்கல் (Jasper), மரகதம் (Beryl), நீலமணி (Sapphire), கார்னெற் மணிக்கல் (Garnet) என்பன காணப்படுகின்றன. இவற்றுள் சூதுபவளம், கார்னெற் போன்ற கற்களின் கனிமங்கள் பிற இடங்களிலிருந்து (இந்தியா) தருவிக்கப்பட்டு இங்கே செம்மையான மணிக்கற்களாக உருவாக்கப்பட்டிருப்பதை பீரிஸ் குறிப்பிட்டிருக்கிறார் (Pieris, P.E., 1919: 65). கற்களின் தொகையையும் அவற்றின் பரந்த வகைவீச்சையும் பார்க்கும்போது, அக்காலத்தில் கந்தரோடையே இலங்கைத் தீவு முழுவதிலும் மணிக்கற்கள் உற்பத்தியில் முன்னணியில் இருந்தது போலத் தோன்றுகிறது.

சங்குத் தொழில்

பண்டைய கந்தரோடையில் வருமானத்தைப் பொறுத்தவரையில் மணிக்கற்கள் தொழிலுக்கு அடுத்தபடியாக சங்கு வேலைப்பாடுகளைக் கூறலாம். சங்குகள் கடலோரங்களிலே, குறிப்பாக மன்னார் வளைகுடாவில் கிடைத்தன. அங்கிருந்தும் ஏராளமான சங்குகள் கந்தரோடைக்குக் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டிருக்கும். சங்கிலிருந்து வளையல்கள், காப்புகள், சங்கவளை, சங்கவடம், மோதிரங்கள் மற்றும் சிறு ஆபரணங்கள் செய்வது சங்கறுப்பு வினைஞர்களால் குடிசைத்தொழிலாக நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்திருக்கிறது.

மணிமேகலையில் வரும் ஒரு பாடலில் நாகநாட்டு அரசன் ஒருவனின் பெயர் வளைவாணன் எனவும், அவனது மகளின் பெயர் பீலிவளை என்றும் கூறப்படுகிறது. சங்கின் மகிமை எவ்வளவு தூரம் மக்களின் வாழ்வியலில் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம். இலட்சக்கணக்கில் அறுக்கப்பட்ட சங்குகளின் துண்டுப் பகுதிகள் கந்தரோடையில் காணப்பட்டதாக போல் பீரிஸ் தனது தொல்லியல் அறிக்கையில் குறிப்பிடுகிறார். காலாகாலமாக சங்குத் துண்டுகளை வண்டிகளில் ஏற்றிச்சென்று சுண்ணாம்புச் சூளைகளில் அடுக்கிவைத்து நீறாக்குவது வழக்கமாக இருந்தது. அவ்வாறான சுண்ணாம்புச் சூளைகள் புராதன காலத்தில் சுன்னாகத்தில் இருந்தன (பத்மநாதன், 2024: 175).

கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுத்த மணிகளால் ஆக்கப்பட்ட மாலைகள். நன்றி: ப. புஷ்பரட்ணம்.

9. உலோகத் தொழில்

ஆதி வரலாற்றுக் காலத்தின் தொடக்கத்திற்கு முன்பே யாழ்ப்பாணத்தில் உலோகப் பழக்கம் பரவலாகிவிட்டது. இரும்பினாலான பலவகையான பொருட்கள் கந்தரோடை, ஆனைக்கோட்டை, சந்திராந்தை முதலான இடங்களில் கிடைத்துள்ளன. வெவ்வேறுவிதமான ஆணிகள், அம்புநுனிகள், கத்திகள், வாள்கள் என்பன இவற்றில் அடங்கும். ஆனைக்கோட்டையில் இரும்பினால் செய்யப்பட்ட சிறிய விளக்கொன்றும் கிடைத்துள்ளது. உலோகத் தொழில்களில் ஏற்பட்டிருந்த முன்னேற்றம் பற்றிய கூடுதல் விவரங்கள் கள ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள் மூலமாக வெளிவந்துள்ளன. பொன், வெள்ளி, செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களினால் செய்யப்பட்ட பலவகைப் பொருட்கள் கிடைத்துள்ளன. ஆதியில் இலங்கையின் மற்றைய இடங்களில் இவ்வளவு உலோகப் பொருட்கள் காணப்பட்டதாகத் தெரியவில்லை.

கந்தரோடை, ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கி.மு. 500ஆம் ஆண்டு காலத்தைய இரும்பு, செம்பு உலோகப் பொருட்களையும் செப்பு முத்திரைக் காசுகளையும் காணுமிடத்து, உலோகப் பொருட்களை உருவாக்கும் கொல்லர்கள் அக்காலத்தில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. செம்பு, வெண்கலம், பித்தளை முதலான உலோகங்களில் உருவாக்கப்பட்ட பல வகையான உபகரணங்கள் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கந்தரோடையில் உற்பத்தி செய்யப்பட்டன.

ஈழ இரும்பு

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இயற்கையாக இரும்புத் தாதுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் மண்ணின் மேற்பரப்பு அகழ்வுகளில் (Surface Mining) இரும்புக் கனிமங்கள் — இரும்பு ஒக்ஸைட் (Iron Oxide) வடிவங்களில் காணப்படுகின்றன. இரும்புக் கனிமத் திரள்கள் செம்மண் படர்ந்த புன்னாலைக்கட்டுவன், ஏழாலை, கட்டுவன் போன்ற வட யாழ்ப்பாணக் கிராமப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. அங்கிருந்தே இக்கனிமங்கள் நாடெங்குமுள்ள கொல்லர்களின் உலைக்களங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இரும்பை உருக்க 1200 முதல் 1400 செல்சியஸ் வரையிலான வெப்பம் தேவைப்படுகிறது. உலைக்களங்களில் நிலக்கரியின் மேல் சுட்ட களிமண் மூசைகளில் (Crucible) இரும்புத் தாதுகளைப் போட்டுத் துருத்தி, ஊதுதுளை கொண்டு ஊதி, எரித்து உருக்குவார்கள். இரும்பு உருகித் திரவமாக வரும் போது அதை இன்னொரு மூசையிலிட்டு ஏற்ற அளவான கற்றாழைத் (Aloe Vera) தாழைகளோடு கலந்து மீண்டும் உருக்குவார்கள். அவ்வாறு உருக்கும் போது தாழையிலுள்ள கரிமம் இரும்போடு கலந்து கடினமான எஃகு இரும்பு உருவாகும். இத்தயாரிப்பு முறையில் தயாரிக்கப்பட்ட இரும்பு ‘ஈழ இரும்பு’ எனப்பட்டது. முற்காலத்தில் கொல்லர்களால் யாழ்ப்பாணக் கிராமங்களில் இது ஒரு குடிசைத்தொழிலாக நீண்டகாலம் நடைபெற்றது. விவசாயத்திற்குத் தேவையான ஏர்முனைகள், நீர்ப்பாசனச் சத்தகங்கள், கத்திகள், மரம் வெட்டும் கோடரிகள், பிக்கான்கள் என்பன உள்ளூர் இரும்புக் கொல்லர்களினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

ஆனைக்கோட்டை அகழ்வுகளில் கண்டெடுத்த ஆதிகால இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள், ஒரு குத்துவாள், ஈட்டிமுனை ஆகியனவும் ஒரு செப்புக் குச்சியும் காணப்படுகின்றன. படம் நன்றி: பொ. இரகுபதி.

செம்பு

இரும்போடு ஒப்பிடும்போது, குறிப்பிட்ட சில இடங்களில் அகழ்ந்த பெரிய குழிகளிலிருந்தே செம்புத்தாது எடுக்கப்படுகிறது. இலங்கையில் பெரிய செம்புத்தாது அகழ்தெடுக்குமிடம் திரிகோணமலை மாவட்டத்திலுள்ள சேருவிலை ஆகும் (Jayawardena, D.E. de S., 1982; Seneviratne, S., 1994). இங்கிருந்தே இலங்கையின் பல இடங்களுக்கு செப்புத்தாது எடுத்துச் செல்லப்பட்டது.

கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட செம்பினாலான வளையல்கள், மோதிரங்கள், கோலக்குச்சிகள், குண்டூசிகள், நாணயங்கள் ஆகியவற்றைக் காணுமிடத்து, கணிசமான அளவு செப்புத்தாது உள்ளூரிலேயே கிடைத்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. செப்புத்தாதை நிலக்கரியின் சூட்டில் உருக்கியே செம்பு உலோகத்தை வெளியே எடுத்தார்கள். செம்பை தகர உலோகத்துடன் உருக்கிக் கலந்தே வெண்கலம் செய்யப்பட்டது. கந்தரோடை அகழ்வுகளில் மத்தியகால வெண்கல உருவங்கள் பேராசிரியர் கிருஷ்ணராசா அவர்களால் வெளிக்கொணரப்பட்டமை ஏற்கனவே (இயல் 12) கூறப்பட்டுள்ளது.

கந்தரோடை அகழ்வுகளில் போல் பீரிஸ் கண்டெடுத்த பல நீளங்கள் கொண்ட செப்புக்குச்சிகள். அவர் இவற்றை பெண்கள் கண்களுக்கு மை தீட்டும் கோலக்குச்சிகள் (Kohl Sticks) எனக் கருதினார்.

விநாயகரின் செப்பு உருவம்      

பாலகிருஷ்ணனின் செப்பு உருவம்

(படங்கள் நன்றி: செ. கிருஷ்ணராசா)

10. தொடர்பு மொழி: தமிழ்ப்பிராமி எழுத்தும் தமிழ் மொழியும் 

கந்தரோடையிலுள்ள கட்டுமானங்களிலும், அங்கு புராதன காலத்தில் புழங்கிய பாவனைப் பொருட்கள், வழிபாட்டுச் சின்னங்கள், நாணயங்கள் என்பவற்றிலும், அங்கு கிடைத்துள்ள கலவோடுகளிலும் தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதப்பட்ட தமிழ்மொழிச் சொற்கள் அமைந்திருக்கின்றமை ஒரு சிறப்பம்சமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்தகைய அரும்பொருட்கள் கந்தரோடையிலிருந்து பெருந்தொகையிலே கிடைத்திருக்கின்றன (பத்மநாதன், சி., 2024: 177).

கந்தரோடையில் அமைந்த புராதனமான கட்டுமானங்களின் உதிரிப் பகுதிகளிடையே பெருந்தொகையான தூண்தாங்குக் கற்கள் காணப்பட்டன என்பதை போல் பீரிஸ், சார்ள்ஸ் கொடகும்புர ஆகியோர் எழுதிய அறிக்கைகள் மூலம் அறிய முடிகிறது. அவற்றில் ஒருசில உருப்படிகள் மட்டுமே இந்நாட்களில் யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன (பத்மநாதன், சி., 2024: 177).

கந்தரோடையில் அகழ்வாய்வுகளில் கிடைத்த, பெயரெழுதப்பட்ட கல்லிலமைந்த பெருந்தொகையான பண்பாட்டுச் சின்னங்கள் யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களத்தினரின் அனுமதியுடன் பேராசிரியர் பத்மநாதன் இவற்றைப் பரிசீலனை செய்து தனது கண்டுபிடிப்புகளையும் கருத்துகளையும் வெளியிட்டிருக்கிறார். யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் காணப்படும் சின்னங்களாவன —

  1. புத்தர் படிமங்கள்
  2. புத்தர் பாதம்
  3. தூபிகளின் உதிரிப் பாகங்கள்
  4. காணிக்கைகளாக வழங்கப்பெற்ற சிற்றுருவத் தூபிகள்
  5. பௌத்தக் கட்டுமானங்களின் உதிரிப் பாகங்கள்

புத்தர் படிமங்களில் முதலாவது அவரது ஸ்தானக் கோலம் ஆகும். அதில் நாகரின் வழமைக்கு ஏற்ப, அவர்களைப் பற்றிய இரு வசனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாக வடிவங்கள் பல அதில் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது படிமத்தின் கீழ்ப்பாகம் மட்டுமே எஞ்சியுள்ளது. அதன் வட்டமான பீடத்தில் “மணி ணாகன்” என்னும் பெயர் தெரிகின்றது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு உரியது எனக் கொள்ளத்தக்க மூன்றாவது புத்தர் படிமத்தில் “வேள் ணாகன் மகன் வேள் கண்ணன்” என்ற தொடர் தெளிவாகத் தெரிகிறது (பத்மநாதன், சி., 2024: 179).

யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் புத்தர் பாதங்களில் ஒன்று கந்தரோடையில் 1966–67ஆம் ஆண்டுகளின் அகழ்வாய்வுகளில் கிடைத்தது. “மணி ணாகன்” என்னும் பெயர் அதில் மீண்டும் மீண்டும் பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனோடு கண்டுபிடிக்கப்பட்ட கற்பேழை ஒன்றிலும் “மணி ணாகன்” என்ற பெயரைக் காணமுடிகிறது. தொல்பொருள் திணைக்கள ஆணையாளரான சார்ள்ஸ் கொடகும்புர எழுதி வெளியிட்ட கட்டுரையொன்றில் இவற்றின் புகைப்படங்களைக் காணலாம் (பத்மநாதன், சி., 2024: 179).

மேலே காணப்படும் ஆய்வாளர் சார்ள்ஸ் கொடகும்புர 1966-67இல் கந்தரோடையில்  அகழ்ந்தெடுத்த புத்தபாதக் கல்லின் அடிப்பகுதியில் “மணி ணாகன்” என்ற பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பேராசிரியர் பத்மநாதன் அறியத்தருகிறார்.

சொற்கள் எழுதப்பட்ட பல துண்டுகளும் யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் மூன்று உருப்படிகளின் தலைப்பாகத்தில் “மணி ணாகன் பள்ளி” என்ற பெயர் காணப்படுகிறது. ஒரு தூணின் தலைப்பாகத்தில் நாகப்படம் தெரிகின்றது. தாந்தாமலையிலுள்ள சில தூண்கள் (கொக்கட்டிச்சோலை மலைக்கோயில்) இவ்வாறு அமைந்துள்ளன. இத்தூண்கள் கந்தரோடையில் அமைந்திருந்த பௌத்தப்பள்ளி நாகரால் அமைக்கப்பட்டிருந்தமையின் அடையாளங்களாகும். “மணி ணாகன் பள்ளி” என்ற பெயர் அதற்குரியதாகும் (பத்மநாதன், சி., 2024: 179).

பெயர் பொறித்த கலவோடுகள்

தமிழகத்தைப் போல இலங்கையிலும் பாத்திரங்களிலும், நாணயங்களிலும், முத்திரைகளிலும் தமிழ்ப் பிராமி எழுத்துகளில் பெயர்களை எழுதும் வழக்கம் காணப்பட்டது. கந்தரோடையில் தனது ஆய்வுகளில் கண்டெடுத்த தமிழ்ப் பிராமி எழுத்துகள் பதித்த கலவோடுகள் பல யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருஷ்ணராசாவிடம் உள்ளன. இவற்றில் சிலவற்றை அவர் வாசித்து வீரகேசரி பத்திரிகையிலும், அவர் எழுதிய நூலிலும் பிரசுரித்திருக்கிறார் (கிருஷ்ணராசா, செ., 1998). அவற்றுள் ‘அபிசிதன்’, ‘ஆபதி’, ‘குணி’ ஆகிய பல எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன.

‘அபிசிதன்’ என்ற தமிழ்ப் பிராமிப் பதிவு கொண்ட கலவோடு – கி.மு. 300. Images Source: S. Krishnarajah

கந்தரோடை தமிழ்ப் பிராமி எழுத்துக் கலவோடுகள்

கந்தரோடை தமிழ்ப் பிராமி எழுத்துக் கலவோடு. Image Source:  S. Krishnarajah.

‘அபிசிதன்’ என்பது ‘அபிசித’ என்ற பிராகிருதச் சொல்லின் தமிழ் வடிவமாகும். அதன் பயன்பாட்டை இருவிதமாகக் கொள்ளலாம். ஒன்று, அது எதுவிதமான சிறப்பான காரணமுமின்றி பெற்றோர் தங்களின் பிள்ளைக்கு இட்ட பெயர் என்பதாகும். மற்றது, அது ஞானஸ்நானம் பெற்ற ஒருவரின் பட்டப்பெயராகக் கொள்ளத்தக்கது. அந்த வகையில் அது பௌத்த சங்கத்திலுள்ள ஒருவரின் பெயராக இருக்கலாம். இக்கலவோடு அவரது பிக்குப் பாத்திரத்தின் ஒரு துண்டாக இருத்தல் கூடும் (பத்மநாதன், சி., 2011: 29).

பேராசிரியர் கிருஷ்ணராசா தமிழ்ப் பிராமி எழுத்துப் பதித்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்புநிறக் கலன்கள், உரோம அறிற்றைன் கலன்கள், ரௌலெற்ரெட் கலன்கள் ஆகியவற்றின் கலவோடுகளைச் சேகரித்து வைத்திருந்தார். 2015ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி திங்கட்கிழமை அன்று பேராசிரியர் பத்மநாதன், பேராசிரியர் கிருஷ்ணராசாவைச் சந்தித்தார். அவரிடமிருந்த தமிழ்ப் பிராமி எழுத்துகள் கொண்ட கலவோடுகளை இருவருமாக இணைந்து பரிசீலனை செய்தனர். அவர்களால் வாசிக்கப்பட்ட பெயர்கள் இவை (பத்மநாதன், சி., 2024: 180):

இலக்கம்சொல்/ பெயர்மட்கலன் வகை
1.அய்திகறுப்பு-சிவப்பு
2.அநுராதன்சிவப்புக் கலன்
3.அபிசிதன்கறுப்பு-சிவப்பு
4.கதிரன்கறுப்பு-சிவப்பு
5.கண்ணன்       கறுப்பு-சிவப்பு
6.மணிணாகன்கறுப்பு-சிவப்பு, சிவப்பு
7.மகன்கறுப்பு-சிவப்பு
8.ணாகன்கறுப்பு-சிவப்பு
9.ணாகன் கூபன்கறுப்பு-சிவப்பு
10.மிதிரன்அறிற்றைன் கலன்
11.வேள்சிவப்பு

கந்தரோடையில் இதுவரை கிடைத்த கலவோடுகளில் அநுராதன், கண்ணன், கதிரன், மிதிரன், நாகன் கூபன் (ணாகன் கூபன்) என்னும் தனிநபர்களின் பெயர்கள் கிடைத்துள்ளன. “நாகன் கூபன்” என்பது தொழில் சார்ந்த பெயராகவும் கொள்ளத்தக்கது. கிணறு, கேணி, குளம் என்பவற்றைத் தோண்டுவதைத் தொழிலாகக் கொண்ட நாகரை “நாகன் கூபன்” என்று சொல்ல முடியும். அபிசிதன், குணி என்போரைப் பௌத்த சங்கத்தவர் என்று கருதலாம். கந்தரோடையில் இதுவரை கிடைத்த கலவோடுகளில் ஒன்றைத் தவிர மற்றவை எல்லாவற்றிலும் தமிழ்ப் பிராமி வடிவங்களில் தமிழ்ச் சொற்களும் மக்களின் பெயர்களுமே எழுதப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் நாகரைப் பற்றியவை. நாகர்கள் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதற்கும், அந்த மொழி யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் குறிப்பாகக் கந்தரோடையிலும் பேச்சுவழக்கில் இருந்தது என்பதற்கும் இவை உறுதியான ஆதாரங்களாகும் (பத்மநாதன், சி., 2024: 180–181).

கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ப் பிராமி பதிவு செய்யப்பட்ட கலவோடுகள், அவற்றில் பதிவு செய்யப்பட்ட எழுத்து வடிவங்களின் அமைப்புக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு கி.மு. 300ஆம் ஆண்டிற்கு உரியதாகக் கணிக்கப்படுகின்றன. அதே சமயம், அநுராதபுர அகழ்வாய்வுகளில் கிடைத்த கலவோடுகளில் கண்ட இதே வகையான வடிவங்களைக் கொண்ட பிராமி எழுத்து வடிவங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கதிரியக்கக் கரிம மற்றும் வெப்பேற்று ஒளிவீச்சியல் காலக்கணிப்புகளின் (Radiocarbon and Thermoluminescence dating) அடிப்படையில், அந்த எழுத்துகளின் பொதுவான காலம் கி.மு. 500 எனத் தீர்மானிக்கப்பட்டது (Deraniyagala, S.U., 1992: 739–750; Coningham, R., 1999; Deraniyagala and Abeyratne, 2000). இக்கலவோடுகளில் ‘தயா குடெ’ (தயாவின் குடம்) என தமிழ்ப் பிராமி எழுத்துகள் பதித்த ஒரு மட்பாண்டத் துண்டும் காணப்பட்டது. இம்மட்பாண்டத் துண்டின் காலம் கி.மு. 700க்கும் கி.மு. 500க்கும் இடைப்பட்டதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் அநுராதபுரத்தில் கண்டெடுத்த கலவோட்டில் காணப்படும் ‘தயா குடெ’ என்ற தமிழ்-பிராமி வாசகம். இதன் வெப்பேற்றுக் கதிர் காலக்கணிப்பு இதன் திகதியை கி.மு 700-500 ஆண்டிற்கு எடுத்துச் செல்கிறது. நன்றி: S.U.Deraniyagala

பிராமி எழுத்துகளின் எழுத்து வடிவ அமைப்புக்கூறுகளை மட்டும் கொண்டு மதிப்பிடப்படும் திகதிக் கணிப்பு எப்போதும் துல்லியமான காலத்தைக் காட்டுவதில்லை. தமிழகத்தில் 2010ஆம் ஆண்டு வரை தமிழ்ப் பிராமி எழுத்துகளின் ஆரம்பகாலம் கி.மு. 300ஆம் ஆண்டு என்றே கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீப காலங்களில் ஆதிச்சநல்லூர், கீழடி, அழகன்குளம், பொருந்தல், கொடுமணல் ஆகிய மையங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்த தமிழ்ப் பிராமி எழுத்துகள் கொண்ட கலவோடுகளின் கதிரியக்கக் காலக்கணிப்புகள் கி.மு. 600ஆம் ஆண்டைக் காட்டுகின்றன.

பணக்குறை காரணமாக கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கதிரியக்கக் காலக்கணிப்புகளுக்கு அனுப்பப்படவில்லை. அக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், கந்தரோடை எழுத்துகளும் இதற்கு நிகரான திகதிகளைத் தந்திருக்கும் எனக் கருதுகிறேன்.

தொடரும். 



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்