பின் நோக்கிய தேசியவாதம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
16 நிமிட வாசிப்பு

பின் நோக்கிய தேசியவாதம்

April 2, 2026 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்டகேட்ட, கேள்விப்பட்டவாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

கார்த்திகேசு இந்திரபாலா– 

ஐரோப்பியப் பேரரசுவாதம் (European Imperialism) ஆசியாவில் படரத் தொடங்கிய காலத்தில் ஆசியச் சமூகங்கள் அதனை எதிர்நோக்கத் தயாராக இருக்கவில்லை. படைபலத்தாலும் அறிவியல் வளர்ச்சியாலும் ஆதிக்கம் பெற்றிருந்த ஐரோப்பிய வல்லரசுகளின் வருகை ஒரு பெரும் சவாலாக நின்றது. ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு வழிகளில் அச்சவாலுக்குப் பதிலளிக்க முயன்றது. பல தோல்வி கண்டன, சில வெற்றிபெற்றன.

இவற்றை இங்கு கூறுவது என் நோக்கம் அல்ல. எனினும் இரண்டொரு எடுத்துக்காட்டுகள் இலங்கையர் பதிலை நாம் பார்க்கும்போது பின்புலமாக அமைவது நல்லது.

ஐரோப்பிய வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டபோது சில ஆசிய அரசுகள் எதிர்த்துப் போராடித் தோல்வியுற்றன. சில வளைந்து கொடுத்து அடங்கின. சீனாவும் ஜப்பானும் ஐரோப்பியரை உள்ளே விட மறுத்துக் கதவை இழுத்து மூடின. வல்லரசுகள் சும்மா விடுவார்களா?

சீனா மறுத்ததும் பிரித்தானியா பலாத்காரமாக உள்ளே நுழைந்தது. பின்னர் விபரீத விளைவுகள் ஏற்பட்டன. ஜப்பானும் கதவை இழுத்து மூடியது. ஆனால் அமெரிக்கா மிரட்டலைக் கையாண்டு உள்ளே நுழைந்தது. மற்ற வல்லரசுகள் பின்னே வந்தன.

இந்த ஆக்கிரமிப்புக்கு ஜப்பான் எதிர்ப்புக் கொடுக்காது பணிந்தது. ஆனால் இச்சவாலுக்கு அது வகுத்த பதில், அதன் எழுச்சிக்கு உதவியது. ‘உன்னால் செய்யமுடியும் என்றால், உன்னை விடத் திறமையாக என்னால் செய்யமுடியும்’ எனக் கூறிக்கொண்டு, ஒரு மேலைத்தேச வல்லரசு போல மாறுவதற்கு ஜப்பான் தீர்மானித்தது.

மத்தியகாலப் பண்பாட்டினுள் மறைந்திருந்த ஜப்பானிய சமூகம் நவீனமயமாகியது. மேலைத்தேச முறைப்படியான அரசியல் யாப்பு அமைக்கப்பட்டு, ஒதுங்கியிருந்த பேரரசன் அந்த யாப்புக்கு அமைந்த அரச தலைவனாக்கப்பட்டான் (மேஜி மறுசீரமைப்பு/ Meiji Restoration). அவனும் மக்களும் மேலைத்தேச உடையை அணியத் தொடங்கினர். யாப்புக்கு அமையும் பாராளுமன்றம் உருவாகியது. மேலைத்தேச முறைகளைக் கற்றுவர மாணவர்கள் அனுப்பப்பட்டனர். ஆங்கிலேயர் கடற்படையை ஒத்த ஒரு கடற்படையும் ஜெர்மன் முறைகளைத் தழுவிய ஒரு தரைப்படையும் உருவாகின. அமெரிக்கக் கல்விமுறை பின்பற்றப்பட்டது. இந்த மாற்றங்கள் தொடங்கி 50 ஆண்டுகளுக்குள் ஜப்பான் ஓர் ஐரோப்பிய வல்லரசை (1905இல் ருஷ்யப் பேரரசை) போரில் வெற்றிபெறும் அளவுக்கு எழுச்சிபெற்றது. ஏனைய வல்லரசுகள் தங்களுக்குச் சமனான ஒரு வல்லரசாக ஜப்பானை ஏற்றுக்கொண்டன.

மேலைத்தேச ஏகாதிபத்தியத்தின் சவாலை ஏற்றபோது ஜப்பானிய தேசியவாதம் முன் நோக்கிச் சென்றது. புறத்தில் மேலைத்தேசப் பண்பாட்டையும் அகத்தில் பாரம்பரிய ஜப்பானியப் பண்பாட்டையும் கொண்ட ஒரு தேசிய இனம் உருவாகியது.

இதை ஒத்த வகையில், மேற்கு ஆசியாவில் துருக்கியும் ஒரு முன் நோக்கிய தேசியவாதத்தைக் கடைப்பிடித்து உலகை அதிசயிக்க வைத்தது. நவீன துருக்கியின் தந்தை எனப்படும் முஸ்தாபா கெமால் தலைமையில் 1̀920களில் மத்தியகாலப் பண்பாட்டில் மூழ்கிக் கிடந்த நாடு நவீன நாடாக மாறியது. இன்று நினைத்தும் பார்க்க முடியாத மாற்றங்கள் அங்கு நடைபெற்றன. 

ஓர் இஸ்லாமிய சுல்தானரசாக (Sultanate) இருந்த துருக்கியர் நாட்டை மதச்சார்பற்ற (Secular Republic) குடியரசாக மாற்றி, இஸ்லாமியச் சட்டத்தை நீக்கி, இஸ்லாமிய நீதிமன்றங்களை ஒழித்து, மதம்சார் கல்வி நிலையங்களை அகற்றியதுடன் பல சமூக மாற்றங்களும் கொண்டுவரப்பட்டன. ‘துருக்கித் தொப்பி’ (Fez) என உலகெங்கும் அறியப்பட்ட தலை அணி தடை செய்யப்பட்டது. ஆண்களூம் பெண்களும் ஐரோப்பிய உடையை அணியத் தொடங்கினர். அரபு எழுத்தில் (Arabic Script) எழுதப்பட்டுவந்த துருக்கி மொழியை ஐரோப்பிய மொழிகள் போன்று ரோம எழுத்தில் (Roman Script) எழுதுவதற்குச் சட்டமும் மாற்றங்களும் கொண்டுவரப்பட்டன. பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு அரசியலில் பங்குகொள்ள உரிமையும் வாக்குரிமையும் அளிக்கப்பட்டன. கெமாலின் தலைமைத்துவ வழிகாட்டலில் துருக்கி ஓர் ஐரோப்பிய, நவீன நாடாக மாறியது. 

எனினும், பழுத்த இனவாதம் துருக்கியர் தேசியவாதத்துக்கு அடித்தளமாக அமைந்தது. துருக்கியர் இனத்தால் ‘வெள்ளையர்’ என்றும், துருக்கி மொழியே எல்லா மொழிகளுக்கும் மூலமொழி என்றும், துருக்கியருடைய மூதாதையர் மேலான நாகரிகம் ஒன்றை உருவாக்கியவர்கள் என்றும் பலவகைகளில் துருக்கியர் தேசிய இனத்தை ஐரோப்பியருக்குச் சமானமான இனமாக மட்டுமல்ல, மேலான இனமாகக் காட்ட முயன்று, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் சவாலுக்குத் துருக்கி பதிலளித்தது.

ஜப்பானும் துருக்கியும் முன் நோக்கிச் சென்று ஐரோப்பியப் பேரரசுவாதம் விடுத்த சவாலுக்குப் பதிலளிக்க, இதை ஒத்த வகையில் இலங்கையரை ஒன்றுபடுத்தி ஒரு நவீன நாட்டைக் கட்டி எழுப்பத் தலைவர் எவரும் முன்வந்ததாகக் கூறுவதற்கில்லை. மாறாக, நாட்டைப் பின்நோக்கிய பாதையில் அழைத்துச்செல்ல விரும்பியவர்களே கூடுதலாகக் குரல் எழுப்புவதைக் காண்கிறோம்.

ஒரு சமூகத்தை வழிநடத்திக் கூட்டிச்செல்ல முன்வரும் ஒரு தலைவன் (Leader) எங்கு கூட்டிச்செல்ல வேண்டும் என்பது பற்றித் திடமான குறிக்கோள் (Goal) உடையவனாகவும், தன்னை எதிர்நோக்கும் மெய்நிலையை உணர்பவனாகவும் (Sense of Reality), வரலாற்றில் நடந்தவற்றை உணர்பவனாகவும் (Sense of History) இருத்தல் அவசியமாகும். முஸ்தாபா கெமால் துருக்கியர் சமூகத்தை ஓர் ஐரோப்பிய சமூகமாகவும் துருக்கி நாட்டை ஓர் ஐரோப்பிய நாடாகவும் மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கித் தன் மக்களை அழைத்துச் சென்று, நவீன துருக்கியை ஐரோப்பிய நாடுகளுடன் சமநிலையில் நிமிர்ந்து நிற்க வைத்தமை 20ஆம் நூற்றாண்டு உலக வரலாற்றில் ஓர் ஒப்பற்ற நிகழ்வாகும். இதை அறிவது, இன்றைய துருக்கி நாடு ஏனைய இஸ்லாமிய நாடுகளில் இருந்து வேறுபட்டு நிற்பதை விளங்கிக்கொள்ள உதவும்.

இதே காலத்தில் இலங்கையில் நடந்தது என்ன? பிரித்தானியர் ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்க இயக்கம் எதுவும் இருந்ததா? இலங்கை மக்கள் அனைவரையும் ஒரு தேசிய இனமாக இணைத்து வழிநடத்த எவராவது முன்வந்தாரா? 

ஆங்கிலேயர் ஆட்சி 1920களில் ஒரு திருப்புமுனையை அடைந்தது என்பது இன்று பின் நோக்கிப் பார்க்கும்போது எமக்குப் புலப்படுகின்றது. அந்தத் தசாப்தத்தின் தொடக்கத்தில் காலனிய அரசு எடுத்த ஒரு நடவடிக்கையும் தசாப்தத்தின் இறுதியில் புகுத்திய ஒரு சீர்திருத்தமும் நவீன இலங்கையின் வரலாற்றுப் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்தின. இவற்றுக்கு மத்திய வகுப்பினர் தயாராக இருக்கவில்லை. 

முதலாவது, 1920 வரை இருந்த இனக்குழு அடிப்படையிலான பிரதிநிதிகளை (Communal Representatives) ஆளுநர் சட்டவாக்க சபைக்கு நியமிக்கும் முறைக்குப் பதிலாக இடம்சார் (Territorial Representation/ பிரதேச அடிபடையிலான) பிரதிநிதிகளைத் தேர்தல் மூலம் உறுப்பினராக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டமையாகும். இது தமிழ் அரசியல்வாதிகளும் சிங்கள அரசியவாதிகளும் பிரிந்து செல்ல முக்கிய காரணமாகியது. இதைச் சிங்களத் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தமிழ்த் தலைவர்கள் பலர் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

இரண்டாவது, வயதுவந்தவர் அனைவருக்கும் வாக்குரிமை (Universal Adult Franchise) வழங்கப்பட்டமையாகும். இது இரு தரப்பிலும், சிங்கள – தமிழ் மத்திய வகுப்புத் தலைவர்கள் பலரைக் கலங்க வைத்தது. ஆங்கிலக் கல்வி பெறாத பெருந்தொகை மக்களுக்குத் தங்களுடன் சமமாக வாக்குரிமை வழங்குவதை இவர்கள் விரும்பவில்லை.

நாட்டின் மெய்நிலை

இந்த அரசியல் வளர்ச்சிகள் ஏற்பட்ட 1920களில் நாட்டின் மெய்நிலை என்ன? ஒரு நவீன இலங்கையை உருவாக்குவதற்கு நாட்டு மக்களை ஒன்றிணைத்து அழைத்துச்செல்லத் தனி இயக்கம் ஒன்று இருக்கவில்லை. தேசிய உணர்வுகளையும் அரசியல் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் பல இயக்கங்கள் இருந்தன எனலாம்.

இலங்கையில் நிலவிய மெய்நிலையைப் பார்க்கும்போது முதலில் என் கவனத்தை ஈர்ப்பது அநகாரிக தர்மபால தொடக்கிவைத்து வளர்த்த சிங்கள – பௌத்த இயக்கத்தின் படர்ச்சியாகும். சுதந்திர கால இலங்கையின் போக்கையும் நிகழ்வுகளையும் விளங்கிக்கொள்ள இதை அறிந்திருப்பது அவசியமாகும். ஆனால், நவீன இலங்கை வரலாற்றை எழுதிய ஆய்வாளர்கள் இதற்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். இவர்களுக்கு ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பினர் (1920இல் 4000 பேர் கூட இவ்வகுப்பில் இல்லை) எடுத்த தீர்மானங்களும் அவர்களிடையே எழுந்த வேறுபாடுகளும் கூடுதலான முக்கியத்துவம் உடையவை.

தர்மபாலவின் செயற்பாடுகள் பற்றி முன்னர் கூறியிருந்தேன். இவை பௌத்த மக்கள் மத்தியில் தேசிய உணர்வை வளர்க்கப் பெரிதும் ஊக்கம் கொடுத்தன. சிறப்பாக, 1920களில் எழுந்த சூழலில், தாம் ஆரியர் என்ற இன உணர்வு கூடுதலாக வளர்ந்து, இந்த அடையாளத்தைக் காட்டும் வகையில் ஆர்ய-ஸிங்ஹள உடை என ஆண்களுக்கு வகுக்கப்பட்ட புதிய உடை நகர்ப்புறங்களுக்கு வெளியே செல்வாக்குப் பெற்றிருந்த சிங்கள மொழி ஆசிரியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள் போன்றோர் மத்தியில் பரவியது. இதே வேளையில், தர்மபால கண்டித்த ஐரோப்பியப் பெயர்கள் (குறிப்பாக பெரேரா, த சில்வா, பர்ணாந்து போன்றவை) கைவிடப்பட்டு, சிங்களப் பெயர்கள் எடுக்கப்பட்டன.

இலங்கையில் பரவிக்கொண்டிருந்த பௌத்த இயக்கத்தில் தர்மபால முழுக் கவனத்தையும் செலுத்தித் தலைமை தாங்கி அதை நடத்தவில்லை. அவர் பெரும்பாலும் இந்தியாவில் மஹாபோதிச் சங்கத்தின் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அத்துடன் இலங்கையின் காலனிய அரசாங்கம் அவரை ஒரு ‘குழப்பம் விளைவிப்பவராக’க் கருதியதால், இலங்கைக்கு அவர் திரும்பி வருவதைச் சிறிது காலம் தடைசெய்தது (ஒரு முறை, 1915இல், அவர் கொல்கத்தாவில் வீட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்).

அரசியலில் பங்குகொள்ள தர்மபால விரும்பியதில்லை. பௌத்த இயக்கத்தை ஓர் அரசியல் இயக்கமாக மாற்றுவதற்கு அரசியல்வாதிகளும் இருக்கவில்லை எனலாம். எனினும், கொழும்புக்கு வெளியே செல்வாக்குப் பெற்ற நாட்டுப்புற உயர்குழாத்தினர் (Rural Elite) சிலர் மது ஒழிப்பு இயக்கத்தின் வழியாகப் பௌத்தர்களுக்கு வழிகாட்டும் தலைவர்களாக அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்களுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள் சேனாநாயக்க குடும்பத்தினர் ஆவர். 

போத்தலே என்ற ஊரில் டொன் ஸ்பேட்டர் சேனாநாயக்க என்ற கொயிகம சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காரீயச் சுரங்கச் சொத்துகள் (Graphite Mining) மூலம் செல்வம் பெற்றுப் பிரித்தானியர் ஆட்சியில் புதிதாக எழுச்சிபெற்ற ஒரு செல்வந்தரானார். இவருக்கு மூன்று புதல்வர் – டொன் சாள்ஸ் (D.C.), பிரெடெரிக் ரிச்சாட் (F.R.), டொன் ஸ்டீபன் (D.S.). மூவரும் மது ஒழிப்பு இயக்கத்திலும் பௌத்த இயக்கத்திலும் ஈடுபட்டுப் பெரும் செல்வாக்கைப் பெற்றனர்.

F.R. சேனாநாயக்க இங்கிலாந்துக்குச் சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துத் திரும்பியபின், பௌத்த கழகமாகிய ‘Buddhist Theosophical Society’ மற்றும் அரசியல் கழகமாகிய லங்கா மஹஜன ஸபா ஆகியவற்றில் தீவிர பங்கெடுத்து, ஒரு பிரபல சிங்கள பௌத்த கொயிகமத் தலைவராக எழுச்சிபெற்ற வேளையில், 1926இல், அகால மரணமடைந்தார். இதன் விளைவாக அவருடைய தம்பி D.S. சேனாநாயக்க தன் தமையனாரின் இடத்தைப் பெற்று அரசியலில் உயர்வுபெற்றார். 

இவர் 1920களில் ஒரு சிங்கள பௌத்த தலைவராக எழுச்சிபெற்று, ஆங்கிலேயரிடம் இருந்து கூடுதலான அரசியல் உரிமைகளைக் கோரும் இலங்கைத் தேசிய காங்கிரஸில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியபோதிலும், தர்மபால தொடக்கிவைத்த சிங்கள – பௌத்த இயக்கத்துக்குத் தலைமைதாங்கும் நிலைக்குச் செல்லவில்லை. D.S. சேனாநாயக்க அரசியலில் ஒரு மிதவாதிப் (Moderate) பௌத்த தலைவராக, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இலங்கையை விடுவிக்க விரும்பியோருள் ஒருவராக 1920களில் காணப்பட்டார்.

இலங்கையர் தேசியவாதத்தை முன் நின்று வளர்க்க முயன்ற பொன்னம்பலம் அருணாசலம் தான் தொடக்கிவைத்த இலங்கைத் தேசிய காங்கிரஸில் இருந்து 1921இல் விலகினார். இந்த நிகழ்வுடன் உண்மையான ‘இலங்கையர் தேசியவாதமும்’ எழுச்சிபெற முடியாது மறைந்துவிட்டது. தன் இயக்கத்தைக் கைவிட்டு, அருணாசலம் வடக்கு நோக்கிச் சென்று, யாழ்ப்பாணச் சங்க (Jaffna Association) உறுப்பினர்களுடன் கூடி, புதிதாக நிறுவப்பட்ட தமிழ் மஹாஜன சபையின் செயற்பாடுகளில் பங்குபற்றி, பின்னர் ‘Ceylon Tamil League’ என்ற கழகத்தை அமைப்பதற்கும் உதவினார்.

முன் நோக்கிக் காலடி வைத்த அருணாசலம் 1921இலும் பின்னரும் எடுத்த நடவடிக்கைகள் இலகுவில் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிராக உள்ளன. வரலாற்று ஆய்வாளர்கள் இது தொடர்பாகப் பல கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். எனினும், உண்மையை அறிந்துகொள்ள முடியாது என்று நான் நினைக்கிறேன். பல வினாக்கள் மனதில் எழுகின்றன. இவற்றுக்கு விடை காண்பது கடினம்.   

இங்கிலாந்தில் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் இருந்து தன் மனதில் பேணப்பட்ட கனவு காங்கிரஸ் அமைக்கப்பட்ட போது நிறைவேறியதாக (“…the fulfilment of dreams cherished from the time I was an undergraduate at Cambridge…”) மனநிறைவுடன் கூறிய அருணாசலம், எதற்காகக் காங்கிரஸ் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் அதைக் கைவிட்டு வேறொரு வழியில் புறப்பட்டார்? இவ்வழியில் சென்று, இலங்கையிலும் தென் இந்தியாவிலும் பிற தமிழர் குடியேற்றங்களிலும் ‘தமிழகத்தின் ஒன்றிணைப்பையும் ஒற்றுமையையும் வளர்க்க’ (“to promote the union and solidarity of ‘Tamil akam’ the Tamil land…”) விரும்புவதாக அவர் கூறியதன் பொருள் என்ன?

இவை மட்டுமல்ல, என் மனதில் எழும் முக்கியமான ஒரு கேள்வி இதுவாகும்: இளைய சிங்கள பௌத்த தலைவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டபோது, அவர்கள் ஆதிக்கம் பெறுவதற்கு இலகுவில் இடமளிக்காது, தொடர்ந்து அருணாசலமும் யாழ்ப்பாணத்துத் தலைவர்களும் காங்கிரஸில் இருந்து செயற்பட்டிருந்தால் நிலைமையை மாற்றியிருக்க முடியுமா?

அருணாசலமும் யாழ்ப்பாணத் தலைவர்களும் காங்கிரஸை விட்டு வெளியேறியமைக்குக் காரணம் 1921இல் நடைபெற்ற தேர்தலில் அருணாசலத்துக்குக் கொழும்பில் ஒரு தொகுதியைக் கொடுக்கத் தவறியமை என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இத்தகைய ஒரு காரணத்துக்காக அருணாசலம் தன் இலட்சியத்தைக் கைவிட்டார் என்பது சரியான விளக்கமாக எனக்குத் தோன்றவில்லை.

இலங்கையின் தென் பகுதியில் ஒரு சமயத் தேசியவாதமாகவும் பண்பாட்டுத் தேசியவாதமாகவும் எழுச்சிபெற்று வந்த சிங்கள – பௌத்த இயக்கம், 1915இல் இருந்து ஓர் அரசியல் இயக்கத்தின் பண்புகளையும் பெறத் தொடங்கியது. தம் ஆதிக்கத்துக்கு ஆபத்து விளைவிக்கும் பண்புகளைக் கொண்டு எழும் சக்திகளைக் கவனமாக அவதானித்து வந்த ஆங்கிலேய ஆட்சியாளர் 1915இல் இடம்பெற்ற பௌத்த – முஸ்லிம் கலவரத்தின் போது இத்தகைய ஒரு சக்தியைக் கண்டனர். இதனால், தாமதமின்றி, சேனாநாயக்க சகோதரர்களையும் பிற பௌத்த அரசியல் தலைவர்களையும் சிறைப்படுத்தினர்.

இந்த இயக்கத்தின் படிப்படியான வளர்ச்சியை அருணாசலம் நிச்சயம் கவனித்து வந்திருப்பார். அது தேசிய காங்கிரஸ் அமைப்புக்குள் புகுந்து அவருக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணியது என்று கொள்ள இடமுண்டு. சிறப்பாக, புதிய பௌத்த அரசியல் தலைவர்களாக எழுச்சிபெற்றுக் கொண்டிருந்த சேனாநாயக்க சகோதரர்கள் இவருக்குப் பிரச்சினை கொடுத்தனர் என இவர் மறைமுகமாகக் கூறிய ஒரு விஷயத்தில் இருந்து வெளிப்படுகிறது. 

காங்கிரஸுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட வேறுபாடு பற்றி ‘Times of Ceylon’ செய்தித்தாளுக்கு விளக்கும்போது, “…a clique who got hold of the Congress machine, imposed its will on a weak President of the Congress…” எனக் கூறினார். இவ்வாறு அருணாசலம் குறிப்பிட்ட சிறுகுழுவினருள் சேனாநாயக்க சகோதரர் அடங்குவர் என்பது வரலாற்றாசிரியர் கிங்ஸ்லி த சில்வாவின் கருத்தாகும் (“There was no doubt that the criticism was directed at men like F.R. and D.S. Senanayake, D.B.Jayatilaka and others, many of them ‘Prison-graduates’ of 1915…”).

சிங்கள – பௌத்த இயக்கத்தின் செல்வாக்கு அரசியலில் வளர்வதைத் தணிக்க முடியாத நிலையைக் கண்டு தனது ‘இலங்கையர் தேசியவாதத்தைக்’ கைவிட்டு, விரக்தியடைந்த ஒருவராகப் புதிய வழியில் அருணாசலம் செல்லத் தொடங்கினார் என்றே நான் நினைக்கின்றேன்.

இராமநாதனின் நிலை

உலகின் பல பாகங்களில் அரசியல் விழிப்புணர்ச்சி பரவி, மக்களாட்சிக் கருத்துகள் அடக்கப்பட்ட மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற 1920களில் இலங்கையிலும் அதன் தாக்கத்தைக் காண முடிகின்றது. வாக்குரிமையும் இடம்சார் தேர்தல் மூலப் பிரதிநிதித்துவமும் மக்களாட்சி முறையின் முக்கிய பண்புகளாகக் காணப்பட்டன. இப்பண்புகளை மனமுவந்து ஏற்றுக்கொள்வதில் தென் ஆசிய அரசியல்வாதிகளுக்குச் சில பாரம்பரிய விழுமியங்கள் தடையாக இருந்தன.

இலங்கையில் 1920இல் ஆங்கிலக் கல்வி கற்ற 4000க்கும் குறைந்த ஆண்கள் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். சமூகத்தில் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்கள். அவர்களுள் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையினர் பாரம்பரிய சாதிப்பாகுபாட்டால் சமத்துவம் பெறாதவர்கள். இவர்கள் அனைவருக்கும் அரசியலில் சமத்துவம் கொடுத்து வாக்குரிமையை வழங்குவது மத்திய வகுப்பினருக்கு அச்சத்தை உண்டு பண்ணியது. இதனால் வடக்கிலும் தெற்கிலும் அரசியல் தலைவர்கள் பலர் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படுவதை எதிர்த்தனர்.

ஆனால் இடம்சார் பிரதிநிதிகளுக்கான தேர்தலை எதிர்ப்பது இலகுவாக இருக்கவில்லை. இத்தகைய தேர்தல்முறை தமக்குச் சாதகமாக இருக்கும் என்பதை உணர்ந்த சிங்கள அரசியல் தலைவர்கள் இதனை ஆதரித்தனர். தமிழ் அரசியல் தலைவர்களும் இதனை ஆதரித்தனர்; எனினும், இது தமக்குச் சாதகமாக இருக்காது என்பதையும் உணர்ந்தனர்.

இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டபோது அதன் முதலாவது தீர்மானத்தை (Resolution) பொன்னம்பலம் இராமநாதன் முன்மொழிந்து, சட்டவாக்க சபையின் உறுப்பினர்களுள் 80% ஆவது இடம்சார் தேர்தல் வழியாக வரவேண்டும் எனக் கோரினார். சில ஆண்டுகளின் பின் அவர் இத்தேர்தல் முறையை எதிர்த்தார்.

தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரும் இடம்சார் தேர்தல் முறையை எதிர்த்தனர் என்று கூறுவதற்கில்லை. வட மாகாண உறுப்பினரும் (வைத்திலிங்கம் துரைசுவாமி) கீழ் மாகாண உறுப்பினரும் (ஈ.ஆர். தம்பிமுத்து) இராமநாதனுக்கு எதிராக இடம்சார் தேர்தல் முறையை ஆதரித்தனர் என இராமநாதனின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார். இவ்விருவரும் கொழும்பில் தமிழருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்த்தனர்.

யாழ்ப்பாணத்து மத்திய வகுப்பினர் சட்டவாக்க சபையின் சீர்திருத்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகளை இட்டு வாதித்த வேளையில், யாழ்ப்பாணத்து இளைஞர் சிலர் இந்தியத் தேசியவாத இயக்கத்தின் வளர்ச்சி வேகத்தால் உற்சாகப்படுத்தப்பட்டவராய், இலங்கையிலும் அத்தகைய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல விழைந்தனர். மத்திய வகுப்பினரைப் போல் அல்லாது இவர்கள் தீவிர இலட்சியவாதிகளாய் இலங்கையர் தேசியவாதத்தில் நம்பிக்கை வைத்தனர். எனினும் இந்த இளைஞர்களுடைய தேசியவாதத்திலும் பின் நோக்கிய பண்புகள் காணப்பட்டன. இவர்களது செயற்பாடுகள் பற்றியும் பின் நோக்கிச் செல்ல முயன்ற கண்டியர் தேசியவாதம் பற்றியும் பின்னர் பார்க்கலாம்.



About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்