ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க
நியூட்டன் குணசிங்க அவர்கள் எழுதிய ‘Changing Socio – Economic Relations in the Kandyan Countryside’ என்னும் நூல் கண்டியின் நிலமானிய சமூகத்தில் பிரித்தானிய காலனிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மாற்றங்களை ஆய்வு செய்யும் நூலாகும். இந்நூலின் இரண்டாவது அத்தியாயம் ‘The Kandyan Social Formation’ (கண்டியின் சமூக உருவாக்கம்) என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இவ்விரண்டாவது அத்தியாயத்தின் (பக். 21 – 44) பின்வரும் உபதலைப்புகளின் கீழ் உள்ள கருத்துகளைத் தழுவல் மொழிபெயர்ப்பாக இத்தமிழ்க் கட்டுரையில் தந்துள்ளோம்.
- அறிமுகம் – பக். 21-22
- உற்பத்தியின் சமூக உறவுகள் – பக். 22-29 (Social Relations of Production)
- மேன்மிகை சுரண்டப்படும் முறைகள் – பக். 29-33 (Patterns of Surplus Extraction)
- சமூக அடுக்கமைவும் கருத்தியலும் – பக். 33-36 (Social Stratification and Ideology)
நாயக்கர் அரசர் காலத்தின் கண்டிய சமூக உருவாக்கத்தை மார்க்சிய நோக்கில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. மார்க்சிய வகைமைகளை (Categories) உபயோகித்து கண்டியின் சமூக உருவாக்கம் (The Kandyan Social Formation) பற்றி ஆராயும் இக்கட்டுரை கருத்துச் செறிவான ஆங்கில நடையில் எழுதப்பட்டுள்ளது.
அறிமுகம்
கண்டி அரசு முதலாம் விமலதர்ம சூரியனால் 1591 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மலைநாட்டுப் பகுதியின் நகரமான கண்டி அம்மன்னனால் தலைநகரமாகவும் நிறுவப்பட்டு அரச மாளிகை அந்நகரில் நிறுவப்பட்டது. முதலாம் விமலதர்மசூரியன் 1591 – 1604 காலத்தில் கண்டியை ஆட்சி செய்தவன். கரையோர மாகாணங்களைப் போர்த்துக்கேயர் கைப்பற்றி தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்த பின்னணியிலேயே போர்த்துக்கேயருக்கு எதிர்ப்பாக கண்டி அரசு தோற்றம் பெற்றது என்பது கவனத்திற்குரியது. இந்த வகையில் கண்டி அரசின் தோற்றம் காலனியத்திற்கான எதிர்வினை ஆகும். கண்டிய அரசு 1591 முதல் 1815 வரையான சுமார் இரண்டு நூற்றாண்டு காலம் நிலைபெற்றிருந்தது. அக்காலம் முழுவதும் அவ்வரசு போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரித்தானியர் ஆகிய காலனியவாதிகளுக்கு எதிராக தொடர்ச்சியான போர்களை நடத்தி வந்தது. இப்போர்கள் காரணமாக கரையோர மாகாணங்களையும், கண்டியையும் பிரிக்கும் எல்லைக்கோடுகள் மாறி மாறிக் கொண்டிருந்தன. ஆயினும் கண்டியின் உட்பகுதிகளான மத்திய மலைப்பகுதி, ஊவா மாகாணம், வடமத்திய மாகாணத்தின் நுவரகலாவிய என்பனவற்றுள் காலனியவாதிகளால் ஊடுருவ முடியவில்லை. அப்பகுதிகள் கண்டி அரசர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே 1815 வரை இருந்து வந்தன (எனது கள ஆய்வுக்குரிய கிராமங்களான தெலும் கொடவும், யக்கடகமவும் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள கிராமங்கள்; அவை காலனியத்தின் ஆட்சிக்குள் உட்படாதவையாக இருந்தன).
கண்டியைத் தலைநகராகக் கொண்ட அரசு 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது என்பதைக் கொண்டு, அதன் விளைவாகக் கண்டியில் ஒரு புதிய சமூக உருவாக்கம் தோன்றியது எனக் கருதக்கூடாது. 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கண்டியில் இருந்து 10 மைல் தூரத்தில் உள்ள கம்பளை நகரம் கம்பளை அரசின் தலைநகரமாக இருந்தது. கண்டியின் சமூக உருவாக்கத்தின் அடிப்படையான அமைப்பியல் கூறுகள் (Structural Elements) கண்டி அரசின் தோற்றத்திற்கு முன்பே உருவாகியிருந்தன. காலனியத்தின் ஆபத்து (Colonial Danger) என்ற காரணி 14 ஆம் நூற்றாண்டில் இருக்கவில்லை. ஆனால், கண்டி அரசு தொடர்ச்சியாகவே ஐரோப்பியக் காலனியவாதிகளின் ஆக்கிரமிப்பு பற்றிய அச்சத்துடனேயே இருந்து வந்தது. அவ்வரசு ஆக்கிரமிப்பாளரான அந்நிய வல்லரசுகளை ஒன்றுக்கொன்று மோதவிட்டுத் தன் இருப்பைப் பாதுகாக்கும் தந்திரோபாயத்தைக் கையாண்டது. இவ்வாறான தொடர்ச்சியான போர்கள் கண்டியின் சமூக உருவாக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தின; குறிப்பாக அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகள் மாறின. அரசு மக்களைப் போரில் ஈடுபடுவதற்காக அணிதிரட்டியது. போர் தொடங்கியதும், களத்தில் நின்று போராடுபவர்களாக மக்கள் மாற்றப்பட்டனர்.
கண்டி அரசு எதிர்நோக்கிய ஆபத்து என்பதும் தொடர்ச்சியான அச்ச உணர்வும் இருந்த போதும், கண்டியின் சமூக உருவாக்கம் அமைப்பியல் உறுதிநிலை (Structural Stability) உடையதாக வளர்ச்சியுற்றிருந்தது. யோன் டேவி (John Davy) “கரையோரப் பகுதிகளில் மூன்று நூற்றாண்டுகளில் நடந்தது போன்ற மாற்றங்கள் எதுவும் மலைப்பகுதியின் சிங்களவர் சமூகத்தில் ஏற்படவில்லை” என்று தனது நூலில் குறிப்பிட்டார். போர்ப்ஸ் (Forbes) என்பவரும் 1680 இல் நொக்ஸ் விவரித்தது போன்ற நிலையிலேயே 1815 இலும் கண்டி இருந்தது என்று குறிப்பிட்டார்.
உற்பத்தியின் சமூக உறவுகள் (Social Relations of Production)
கண்டியின் கிராமங்களின் தோட்டக் காணிகள் ‘கொட’ (Garden – Goda) என்றும், நீர்ப்பாய்ச்சல் வசதியுடைய நெற்காணிகள் ‘மட’ (Mada) என்றும் அழைக்கப்பட்டன. நெற்காணியில் (மட) நடைபெறும் உற்பத்தி கண்டிய பொருளாதாரத்தின் உயிர்நாடியாக அமைந்தது எனலாம். அந்த உற்பத்தியின் மூலமே மக்களின் உணவுக்கான அரிசி பெறப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட நெல்லைக் கொடுத்துத் தமக்குத் தேவையான பிற அத்தியாவசியப் பொருட்களை மக்கள் பெற்றுக் கொண்டனர். நெல் பண்டமாற்றுக்கான ஊடகமாகவும் விளங்கியது. நெல், கொடுக்கல் வாங்கலுக்கான ஊடகமாக, பணம் போன்று அமைந்தது என றொபர்ட் நொக்ஸ் குறிப்பிட்டுள்ளதைக் (Knox : 1966 : 184) காணலாம்.
கண்டியில் காணிகளை அளவிடும் முறை மக்களிடையே நெல் விவசாயம் பெற்றிருந்த பண்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாய் உள்ளது. நெல்லின் முகத்தலளவை அலகாக ‘அமுணம்’ என்ற அளவை வழக்கில் இருந்தது. ஓர் ‘அமுணம்’ நெல் ஏறக்கறைய 5 புசல்களுக்குச் சமமாகும். ஓர் அமுணம் நெல்லை விதைப்பதற்குத் தேவையான காணி ஓர் அமுணம் என அழைக்கப்பட்டது. விதை நெல்லின் அளவைக் கொண்டே காணியின் பரப்பளவு அளவிடப்பட்டது. காணியை அளப்பதற்குத் தனியான அளவுமுறை கண்டியில் இருக்கவில்லை. ஓர் அமுணம் விதை நெல் விதைப்புக்குத் தேவையான நெற்காணி ஏறக்குறைய இரண்டு ஏக்கர் பரப்பளவுடையது. நெற்காணியை அளவிடும் அமுணம் என்ற அளவையையே ‘கொட’ என்ற மேட்டுநிலத்தை அளவிடவும் பயன்படுத்தினர். ‘கொட’ எனும் மேட்டுநிலம் தோட்டக்காணியைக் குறிப்பதாகும். ‘மட’ எனப்படும் பள்ளக்காணி நெற்காணியைக் குறிப்பதாகும்.
கண்டியின் அரசர்களால் காணிகள் கொடையாக வழங்கப்படும் போது எவ்வளவு அமுணம் காணி வழங்கப்பட்டது என்பதும், அக்காணியின் எல்லைகள் எவை என்பதும் காணிக்கொடை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டன. மேட்டுநிலம் நெற்காணியை அடுத்த நிலம் எனக் குறிப்பிடப்படும்; அதன் அளவைக் குறிப்பிடுவதில்லை. அரசனிடமிருந்து காணிகளை பிரபுக்கள் பெற்றனர். அவ்வாறு பெறும் பிரபுக்கள் குத்தகைக்காரர் (Tenants) என்ற வகையினராவர். கோவில்களுக்கு நிலம் கொடையாக வழங்கப்படின், கோவில் நிர்வாகமே அதன் உடைமைக் குத்தகைக்காரராக இருக்கும். குத்தகைக்காரர்களுக்கு நிலக் கடமைகள் (Duties) விதிக்கப்பட்டன. இக்கடமைகள் கொடையாகக் கொடுக்கப்பட்ட நெற்காணி தொடர்பானவையாகும். மேட்டுநிலம் தொடர்பான கடமைகள் என எதுவும் விதிக்கப்படவில்லை. நெற்காணியுடன் சேர்ந்த மேட்டுநிலம் அதனோடு இணைந்த மேலதிக நிலமாகவே கருதப்பட்டது.
உதாரணமாக யக்கடகம கிராமத்தின் பகுதியாக அமைந்த சிற்றூர் அதிகரப்பிட்டிய என்ற பெயருடையது. அதிகரப்பிட்டியவின் நெற்காணிகள் ‘தெகல் தொறுவ’ (Degaldoruwa) என்ற பெயருடைய பௌத்த கோவிலுக்குக் கொடையாக வழங்கப்பட்டது. இதனால் அதிகரப்பிட்டிய சிற்றூர் (Hamlet) முழுமையாக (நெற்காணி, மேட்டுக்காணி உட்பட அனைத்தும்) தெகல் தொறுவ பௌத்த கோவிலின் உடைமையாகக் கருதப்பட்டது. கோவில் நிலத்தின் குத்தகைக்காரர்களான நெற்காணிக் குத்தகையாளர்களுக்குரிய கடமைகள் விதிக்கப்பட்டிருந்தன. கோவிலின் நெற்காணியைப் பயிரிடுவோர் வெவ்வேறு சாதியினராக இருந்தனர். குயவர் குலத்தவரான பயிரிடுவோர் பானைகளைக் (Pots) கோவிலுக்குக் கொடுத்தனர். துணி வெளுப்போரான பயிரிடுவோர் சலவை செய்யப்பட்ட துணிகளைக் கொடுத்தனர். வெண்கலம், பித்தளைப் பாத்திரங்கள், கருவிகள் என்பனவற்றையும், இரும்புக் கருவிகளையும், அவ்வேலைகளோடு தொடர்புடைய தொழில்களையும் செய்தவர்களுக்கும் சேவைக் கடமைகள் விதிக்கப்பட்டன. இசைக்கலைஞர்கள் மேளமடித்தல், நடனம் ஆடுதல் போன்றவற்றை நிகழ்த்தும் கடமை உடையவர்கள். நெற்காணியோடு தொடர்புடைய தோட்ட நிலத்திற்குரிய கடமைகள் என எதுவும் விதிக்கப்படவில்லை. மேலே குறிப்பிட்ட சான்றுகள் கண்டியின் சமூக உறவுகளில் நெல் உற்பத்தியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன.
கண்டியின் பொருளாதாரம் பிழைப்பூதியப் பொருளாதாரம் (Subsistence Economy) ஆகும். நெற்காணி மட்டுமல்லாமல் மேட்டுநிலத்தின் உற்பத்திகளும் கிராமத்தவர்களின் சீவனத்திற்கு ஆதாரமாய் விளங்கின. பழங்கள், காய்கறி வகைகள் ஆகியன மேட்டுநிலத்தில் உற்பத்தியாயின. கால்நடைகளுக்குத் தேவையான தீவனமும் மேட்டுநிலத்தில் இருந்தே பெறப்பட்டது.
கமுகு, பலா, தென்னை, தோடை, எலுமிச்சை, கறுவா ஆகிய பயிர்கள் தோட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதாக றொபர்ட் நொக்ஸ் குறிப்பிட்டுள்ளார் (1966 : 23-24). உற்பத்தி முறையின் முக்கியமான கூறாக தோட்ட நில உற்பத்திகள் விளங்கிய போதும், தோட்ட நிலம் (கொட) பொருளாதாரத்தின் இரண்டாம் நிலைக் கூறாகவே விளங்கியது. இக்காரணத்தால் மேட்டுநிலத்தின் தோட்டப் பயிர்ச்செய்கை கண்டியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் உற்பத்திச் செயல்முறையாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. “கண்டியர்கள் கமுகு, தென்னை போன்றவற்றையும், பழமரங்களையும் தமது வீடுகளைச் சுற்றி வளர்க்கிறார்கள்; கோவில் வளவுகளில் பூமரங்கள் நாட்டப்படுகின்றன. சில காய்கறி வகைகளையும், கிழங்கு, சீனி வத்தாளை, வெங்காயம் போன்றவற்றையும் இடைக்கிடை பயிரிடுகிறார்கள். ஆயினும் ‘தோட்டச் செய்கை’ என ஒன்று கண்டியில் காணப்படவில்லை என்றே கூற வேண்டும் (டேவி: 1969: 2026)” என்று ஜோன் டேவி கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. செறிவான பயிர்ச்செய்கையும், பயிரிடுகைச் சிறப்பாக்கமும் (Crop Specialisation) கண்டியில் காணப்படவில்லை என்பதையே டேவியின் கூற்று எடுத்துக்காட்டுகிறது.
நெற்காணி, மேட்டுக்காணி என்பவற்றை விட, காட்டு நிலம், தரிசு நிலம் (Waste Land) என்பனவும் கண்டியின் கிராமங்களில் காணப்பட்டன. காட்டு நிலமும் (வனம்) தரிசு நிலமும் அரசுக்குரிய நிலம் (Crown Land) எனக் கருதப்பட்டன. அரசுக்குரிய நிலத்தை மாவட்ட மேலதிகாரியான ‘திசாவ’யின் அனுமதியுடன் பயிர் செய்யலாம். கண்டியின் பொருளாதாரத்தில் காட்டு நிலமும், தரிசு நிலமும் முக்கிய இடத்தைப் பெற்றன. கண்டியின் மலைப்பகுதிகளில் காடுகளும், தரிசு நிலமும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையாகவும், சேனைப் பயிர்ச்செய்கைக்கான நிலமாகவும் விளங்கின. மலைப்பகுதிகளின் வனங்களில் மக்கள் அடுப்பு எரிப்பதற்கான விறகையும் பெற்று எரிபொருள் தேவையை நிறைவு செய்தனர். மலைநாட்டின் காடுகள் சூழலியல் சமநிலையைப் பேண உதவின. போதிய மழைவீழ்ச்சி கிடைத்தது. மண்ணரிப்பைக் காடுகள் தடுத்தன. மலைமுகடுகளில் இருந்து வரும் ஊற்றுநீரும், மழைநீரும், நீரோடைகள் மூலம் பாய்ந்து வந்து நெற்காணிகளுக்கான நீரை வழங்கின.
கொள்கையளவில் கண்டியின் அனைத்து நிலங்களும் அரசின் உடைமையாகவே கருதப்பட்டன. இந்நிலங்களின் நில உரிமைமுறை (Land Tenure System) ஒழுங்கமைக்கப்பட்ட குத்தகை முறையாக இருந்தது. கண்டியின் பழைய சமூகத்தின் கருத்தியல் அரசனை ‘நிலத்தின் உடைமையாளனான பிரபு’ (Lord of the Soil) எனக் குறிப்பிட்டது. றொபர்ட் நொக்ஸ் அவர்களின் குறிப்புகளை வாசிக்கும் போது அவர் கண்டியின் யதார்த்த நிலையை மேற்படி கருத்தியலின் நோக்கில் புரிந்திருப்பதையும் காண முடியும். நாடு முழுவதும் அரசின் உடைமையான நிலமாகும். அந்நிலத்தை அவர் மக்களிற்கு பிரித்துக் கொடுக்கிறார். அவர் மேலும் கூறுவதாவது, “கண்டியின் குடியிருப்புகள் யாவும் அரசனின் உடைமைகளாகவே உள்ளன. அவற்றில் குடியிருப்போர் அந்நிலத்தை தமது ஆற்றலுக்கு ஏற்ப உழுதும், பசளையிட்டும் பயன்களை அனுபவிக்கின்றனர். அத்தோடு அரசனிற்குத் தேவையான நெல்லை அவனது பண்டசாலைக்குச் சேர்ப்பிக்கின்றனர். பின்னர் இக்குடியிருப்புகள் அமைந்த கிராமங்களை அரசன் பிரபுக்களிடம் கையளித்து, அவற்றில் இருந்து முன்னர் அரசனிற்கு வந்து சேர்ந்த உற்பத்திகளையும் பயன்களையும் பிரபுக்களே துய்க்கும்படியும், பரிபாலிக்கும்படியும் பொறுப்பளிக்கிறான் (நொக்ஸ் 1966 : 81).” நொக்ஸ் இவ்வாறு விளக்கிக் கூறியதற்கு அமைய அரசனே சட்டப்படியான (De jure) நிலவுரிமையாளனாக இருந்தான். ஆனால், நடைமுறையில் கண்டியின் பெரும்பகுதி நிலங்கள் பிரபுக்களின் உடைமைகளாக இருந்தன. அந்நிலங்களில் இருந்து வரும் வருவாயையும், குடியானவர்களின் சேவைகளையும் பிரபுக்களே பெற்று ஆண்டு அனுபவித்து வந்தனர்.
அரசனே முழுநிலத்தையும் தன் உடைமையாக வைத்திருந்தான் என்று கொண்டால் ‘அரசருக்குரிய நிலம்’ (Royal Land) என்று ஒரு பகுதி நிலத்தை அடையாளப்படுத்திக் கூற வேண்டிய தேவை இருந்திருக்காது. உண்மையில் அரசன் ‘கபடாகம்’ கிராமங்களையும் (Gabadagam Villages), காட்டு நிலத்தையுமே தனது உடைமையாக வைத்திருந்தான். ‘கபடாகம்’ என்ற சொல் ‘பண்டசாலை’ (Stores) என்ற பொருள் உடையது. கபடாகம் கிராமங்களின் (Stores Villages) காணிகளைப் பயிரிட்ட விவசாயிகள் விளைவின் ஒரு பகுதியை நேரடியாக அரசனின் பண்டசாலைக்குக் கொண்டு போய்க் கொடுத்தனர். பயிரிடும் நெற்காணிகளில் ‘பங்கு’ (Pangu), ‘நிலப்பங்கு’ (Nilapangu) என இருவகை இருந்தன. ‘பங்கு’ என்ற வகைக் காணிகள் உயர்சாதியினரான ‘கொவிகம’ விவசாயிகளுக்கு வழங்கப்பட்டவை. பங்கு காணிகளின் உற்பத்தி முழுமையையும் அவ்விவசாயிகளே பெற்று அனுபவிக்கலாம். அரசனிற்கு ‘சேவை’ செய்யும் கடப்பாடு அவர்களுக்கு இருக்கவில்லை. ‘நிலப்பங்கு’ காணிகளைப் பெற்றவர்கள் தரத்தில் தாழ்நிலையில் உள்ள குத்தகைக் குடிகளாவர். அவர்கள் உற்பத்தியின் ஒரு பகுதியைச் சுமந்து சென்று அரசனின் பண்டசாலையில் சேர்க்கும் கடப்பாட்டைக் கொண்டிருந்தனர். அத்தோடு வேலைக்காரர்கள் போன்று அவர்கள் ‘திசாவ’யின் வீட்டில் அடிமை வேலைகளைச் செய்தல் வேண்டும் (பீரிஸ் 1950 : 53-54). கபடாகம் நிலங்களின் நிலப்பிரபுவாக அரசனே விளங்கினான். அவன் கபடாகம் நிலத்தின் வாடகையை ‘உழைப்பு வாடகை’ (Labour Rent) என்ற வடிவத்தில் பெற்றான். ‘உழைப்பு வாடகை’ என்னும் கருத்து நெல் உற்பத்தியுடன் மட்டும் தொடர்புடையதன்று. வெவ்வேறு விசேட சேவைகளைச் செய்வோராலும் ‘சேவை’ (Service) என்ற வடிவிலும் (கொல்லர், தச்சர், குயவர் போன்ற கைவினைஞர்களால்) உற்பத்திப் பொருட்கள், கருவிகள் என்ற பண்டங்கள் வடிவிலும் உழைப்பு வாடகை செலுத்தப்பட்டது. இவ்வாறாக சாதி அடிப்படையிலான உழைப்பு வாடகை ‘சேவைகள்’, ‘பண்டங்கள்’ என்ற இருவேறு வடிவில் அறவிடப்பட்டன. கண்டியின் உழைப்புப் பிரிவினை சாதி அடிப்படையிலானது (The Caste Oriented Division of Labour) என்பது கவனத்திற்குரியது.
பல்வேறு நிர்வாகப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பிரபுக் குலத்தவர்களுக்கு அரசனது நிலங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த நிலக்கொடைகள் அரசனது கபடாகம் நிலத்தில் இருந்து வழங்கப்பட்டன. ஆயினும் சில கிராமங்கள் குறிப்பிட்ட பதவிகளுக்குரிய நிலங்களாக இருந்தன. உதாரணமாக கண்டியின் 5 கிராமங்கள் அரசனின் முதலாவது ஆலோசகரான ‘அதிகாரம்’ (Adikarama) என்ற பதவிக்குரிய கிராமங்களாக இருந்தன. அந்த 5 கிராமங்களும் கீழ்க்கிராமங்கள் (Lower Villages) என அழைக்கப்பட்டன. அதேபோல் இரண்டாம் ஆலோசகர் பதவிக்குரிய 5 கிராமங்கள் உயர் கிராமங்கள் (Upper Villages) எனப்பட்டன. இவை ‘பத்தாவலி’ (Badavali) எனப்பட்டன. இப்பதவியில் இருப்பவர் இறந்ததும் அவை அரசனின் உடைமையாகத் திரும்பிச் சென்றன. அவ்வாறே அப்பதவியில் இருப்பவர் அரசனால் பதவி நீக்கம் செய்யப்படும் போதும் அந்நிலங்கள் அரசனிற்கு திரும்பிச் சென்றன. பத்தாவலி நிலத்தையுடைய ஒருவருக்கு நிரந்தர நிலம் வழங்கப்பட்டால் அவர் இரண்டையும் உடைமையாகக் கொண்டிருப்பார்.
அரசனிற்கு மிகச்சிறந்த சேவையாற்றியவர் என்று கருதப்படும் ஒரு நபரிற்கு அரசன் நிலத்தை நன்கொடையாக வழங்கி, அதனை அந்நபரும், அந்நபரின் சந்ததியினரும் எக்காலத்துக்குமாகத் தொடர்ந்து உடைமையாளர்களாக இருக்கும் வகையில் அக்கொடையை வழங்குவதுண்டு. அத்தகைய காணி ‘நிந்தகம்’ (Nindagam) எனப்படும். அவ்வகை காணிகளைப் பிரபுக்களும், அவர்களது சந்ததியினரும் பரம்பரை பரம்பரையாக நேரடி உடைமையாக அனுபவித்து வந்தனர். ஒரு குறிப்பிட்ட பதவியுடன் தொடர்புடைய ‘பத்தாவலி’ நிலத்தில் இருந்து ‘நிந்தகம்’ நிலம் வேறுபட்டது. உதாரணமாக ‘யக்கடகம’ கிராமத்திற்கு அண்மையில் இருந்த கிராமம் ஒன்று, 1657 ஆம் ஆண்டு விஜயவர்த்தன செனிவிரத்தின பண்டித வகல முதியாரம் என்பவருக்கு ‘நிந்தகம்’ நிலக் கொடையாக வழங்கப்பட்டது. இவர் மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை திசாவனியின் உடசியபத்துவ என்ற பகுதியின் ரத்வத்த என்ற இடத்தைச் சேர்ந்தவராவார். ‘ரத்வத்த முதியாரம்’ எனப் பெயர் பெற்ற இவர் அரசனிற்காகப் போரில் தன் உயிரையும் துச்சமென மதித்துப் போரிட்டவர். இதனைப் பாராட்டி இவருக்கு பின்வரும் நிலக்கொடைகள் வழங்கப்பட்டன.
ஹல்மிலிப்பிட்டிய – 2 அமுணம் நிலம்
மெதம்புவ – 1 அமுணம் நிலம்
ஹபுக்கணுவய – 2 ‘பெல’ (Pelas) நிலம்
அக்கரஹிட – 2 பெல நிலம்
இரியட் கொட்டாவெலப் பிரிட்டி கும்புற – 1 அமுணம் நிலம்
வெவக்கும்புற – 3 பெல நிலம்
வேறு சில நிலங்கள்
இந்நெற்காணிகளின் மேட்டுநில எல்லைகளும் வரையறை செய்து கூறப்பட்டு ரத்வத்த வகல முதியாரத்திற்கு வழங்கப்பட்டன (Lawrie: 1848).
‘நிந்தகம்’ வகைக் காணிகள் இருவகையில் பயிரிடப்பட்டன. குறித்த ஒரு காணியைப் பயிரிடும் குத்தகைக் குடியான் விவசாயிக்கு அக்காணியின் ஒரு பகுதியின் உற்பத்தி உரியதாக இருக்கும். மீதி நிலத்தின் உற்பத்தியை அரசனின் கபடாகத்திற்கு அவன் கொடுத்துவிட வேண்டும். இது உழைப்பு வாடகை (Labour Rent) செலுத்தப்படும் ஒரு முறையாகும். இன்னொரு வகை நிலத்தில் அரசனின் நிலம், பயிரிடும் குடியானின் நிலம் என்ற பகுப்பு இருப்பதில்லை. அப்படிப்பட்ட நிந்தகம் நிலத்தில் பல விவசாயக் குடியான்களுக்குப் பங்குகள் இருக்கும். அவர்கள் தத்தம் நிலப்பங்குகளைப் பயிரிட்டு முழு உற்பத்தியையும் தாமே எடுத்துக்கொள்வர். அதன்பின் அவர்கள் விதிக்கப்பட்ட அளவு பண்டத்தையோ அல்லது சேவையையோ அரசனிற்குக் கொடுப்பர்.
கண்டியின் இறுதி அரசனின் முதலாவது அதிகாரமாக எகலப்பொல அதிகாரம் விளங்கினார். எகலப்பொல அதிகாரத்தின் 12 அமுணம் நிலத்தை யக்கடகமவைச் சேர்ந்த 16 கைவினைஞர்கள் பயிரிட்டு வந்தனர். இப்பதினாறு கொல்லர் தொழில் சாதிக் கைவினைஞர்களுக்கு வருடாந்த பெரஹரவின் போது செய்ய வேண்டிய சேவைக் கடமைகள் சில ஒதுக்கப்பட்டிருந்தன. வருடாந்த பெரஹரவின் போது கொண்டு செல்லப்படும் கொடிச்சீலைகள், பதாகைகள் என்பவற்றிற்குத் தேவையான கம்புகளை வெட்டிக் கொடுப்பது இப்பதினாறு பேரின் கடமையாக விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் எகலப்பொல அதிகாரத்தின் வீட்டில் பதினைந்து நாட்களுக்கு காவல் கடமையில் ஈடுபட வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது. அக்கடமைக்குப் பதிலாக ஒரு வெள்ளி நாணயத்தைக் கொடுத்து காவல் கடமையில் இருந்து விலக்குப் பெறலாம்.
நிந்தகம் நிலங்களை நிலக்கொடையாகப் பெற்ற பிரபுக்கள் தாம் கொடையாகப் பெற்ற நிலங்களின் கிராமங்கள் மீது பூரண அதிகாரம் கொண்டிருந்தனர். அக்கிராமங்களில் வாழ்ந்தோர் அவர்களின் அடிமை – குடிமைகள் போன்றே வாழ்ந்தனர். நிந்தகம் உடைமையாளர்களான பிரபுக்கள் அரசனுக்கு 5 வெள்ளிக் காசுகளை வருடாந்த பெரஹரவின் போது கொடுத்தால் போதுமானது.
கண்டியின் கோவில்களுக்கும் அரசனிடமிருந்தும், பிரபுக்களிடமிருந்தும் பெருந்தொகைக் காணிகள் நிலக்கொடையாகக் கிடைத்தன. பௌத்த கோவில்களுக்கு வழங்கிய நிலக்கொடைகள் ‘விகாரகம்’ (Viharagam) எனவும், கத்தரகம, பத்தினி, விஷ்ணு போன்ற கடவுளர்களுக்கு வழங்கிய நிலக்கொடைகள் ‘தேவாலகம்’ (Devalagam) எனவும் அழைக்கப்பட்டன. விகாரகம் நிலங்கள் கோவிலின் பிரதம குருவான பிக்குவின் உடைமையாக இருந்தன. அவற்றின் உடைமை பிக்குவின் சீடர் வழியில் பரம்பரை பரம்பரையாக உடைமை கொள்ளப்பட்டது. தேவாலகம் நிலங்களும் உடைமைகளும் பிரபுக்குலத்தைச் சேர்ந்த துறவிகள் அல்லாதவரின் நம்பிக்கைப் பொறுப்பாக (Trustee) இருந்தன. உதாரணமாக, தெலும் கொடவின் லங்காதிலக விகாரைக்குச் சொந்தமான 143.5 ஏக்கர் விகாரகம் நெற்காணிகள் அப்பகுதியின் 7 கிராமங்களில் காணப்பட்டன.
1. தெலும் கொடவின் விகாரகம் காணியின் ஒரு பகுதியைப் பயிரிட்டு வந்த குடியானவன், விவசாயம் செய்யும் (கொவிகம உபபிரிவு ஒன்றின்) சாதியினராக இருந்தால், அவர் விகாரையின் இரவுக் காவலாளியாக ஒரு மாதத்தில் ஆறு இரவுகள் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் விகாரைக்கு மூன்று கூடை மலர்களைக் கொடுக்க வேண்டும். விகாரையின் வளவைத் தினமும் கூட்டிச் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். வருடாந்த பெரஹர ஊர்வலத்தில் பங்கேற்பது, கண்டியின் கோவிலின் நிலத்தை மெழுகுவதற்கு வேண்டிய மாட்டுச் சாணத்தை வருடத்தில் ஒரு தடவை கொடுத்து உதவுதல், வருடாந்த பெரஹர விழாவின் போது தலைமைக் குருவிற்கு பலகாரங்களையும், வெற்றிலையையும் கொடுத்தல் ஆகிய கடமைகள் அவ்விவசாயக் குடியானவருக்கு விதிக்கப்பட்டிருந்தன.
2. தெலும் கொடவின் விகாரகம் காணியின் ஒரு பகுதியை துணி வெளுக்கும் சாதியைச் சேர்ந்த ஒருவர் பயிரிட்டு வந்தார். அவர் 500 யார் பருத்திச் சீலையை விளக்கு எரிப்பதற்கான துணியாகக் கோவிலுக்கு கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது.
3. விகாரகம் காணியின் ஒரு பகுதியை மேளம் அடிக்கும் சாதியைச் சேர்ந்த ஒருவர் பயிரிட்டு வந்தார். அவருக்கு விகாரையில் மாதத்தில் 6 தடவை மேளம் அடிக்கும் கடமை இருந்தது. அதைவிட, அவர் விழாக்களின் போதும் மேளம் அடிக்க வேண்டும். மேலும், விகாரையில் இரவுக்காவல் வேலை, விகாரையின் வளவின் புல்பூண்டுகளை அகற்றிச் சுத்தம் செய்தல், வெளியே உள்ள கொட்டகைகளின் கூரைகளை வேய்தல், ஓடுகள் செய்வதற்கு வேண்டிய களி மண்ணை வழங்குதல் போன்ற கடமைகளும் அவருக்கு விதிக்கப்பட்டிருந்தன. விகாரையின் பிரதான குருவிற்கு காய்கறிகளையும், வெற்றிலையையும் அவர் வழங்கியும் வந்தார்.
தெலும் கொடவின் தேவாலகம் காணியின் இரு துண்டங்கள் துணி வெளுக்கும் சாதியைச் சேர்ந்தோரால் பயிரிடப்பட்டன. இவர்கள் பின்வரும் சேவைகளைச் செய்ய வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது.
- ஆடைகளை சலவை செய்து கொடுத்தல்.
- தேவாலயத்தின் உட்புறத்தில் துணிகளால் கூரையை அலங்கரித்தல், பந்தல் போடுதல்.
- வருடாந்த விழாவின் போது கொண்டு செல்லப்படும் தீப்பந்தங்களுக்கு வேண்டிய துணியைக் கொடுத்தல்.
- 500 திரிகளை (பருத்தியால் செய்யப்பட்டவை) தேவாலயத்திற்குக் கொடுத்தல்.
- தேவாலய விழாக்களில் பங்கேற்றல்.
- தேவாலயத்திற்கு வருடத்திற்கு இரு தடவை வெற்றிலையைக் கொடுத்தல்.
(Lawrie: 1896)
மேலே விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதோடு, தேவாலயத்தைச் சுற்றியுள்ள முத்தெட்டு நிலங்களில் (Muttetu Fields) பயிரிட்டு அவற்றின் உற்பத்தியை தேவாலயத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளரான நிலப்பிரபுவின் வீட்டில் ஒப்படைக்கும் கடமையும் பயிரிடுவோருக்கு இருந்தது.
அரசனாலும், கோவில்களாலும், நிலப்பிரபுக்களாலும் உடைமை கொள்ளப்பட்டிருந்த நெற்காணிகள், கிராமங்களின் உற்பத்தி ஒழுங்கமைப்பு மேலே எடுத்துக் கூறப்பட்டது. மேற்குறித்தவற்றை விட, கண்டி அரசுக்கு ஆபத்து எழும்போது, அரசனிற்கு பாதுகாப்பை வழங்கும் கடப்பாடுடைய கிராமங்களும் கண்டியில் இருந்தன. அத்தகைய கிராமங்களில் குடியான்கள் விதிக்கப்பட்ட வரிகளை அரசனிற்குச் செலுத்த வேண்டும். இதைத் தவிர அவர்கள் வேறு எதனையும் அரசனிற்குக் கொடுக்க வேண்டியதில்லை. இவ்வகைக் கிராமங்களின் காணிகள் சொந்த உடைமைகளாகக் கருதப்பட்டன. இவற்றை விற்கலாம், வாங்கலாம். தெலும் கொடவிற்கு ஒன்றரை மைல் தூரத்திலுள்ள ‘எலடத்த’ (Eladetta) என்ற கிராமம் இவ்வகைக் கிராமம் ஆகும்.
17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கண்டியில் கைதியாக வைக்கப்பட்டிருந்த றொபர்ட் நொக்ஸ் (Robert Knox) அக்கிராமத்தில் சிறிய துண்டுக் காணியை கொள்வனவு செய்ய விரும்பினார். இது பற்றி அப்பகுதியின் திசாவயிடம் அவர் விசாரித்து அனுமதி கேட்டார். அதற்கு திசாவ, நொக்ஸ் அத்துண்டுக் காணியைக் கொள்வனவு செய்வதில் சட்டப்படி எத்தடையும் கிடையாது என்று கூறி அனுமதி கொடுத்தார் (1966: 271-272). றொபர்ட் நொக்ஸ் குறித்த காணியின் பயிர்ச்செய்கை உரிமையை மட்டுமன்றி அக்காணியின் உடைமை உறுதியையும் (Title) பெற்றுக் கொண்டார் என்றே கருதலாம். இவ்வகைக் காணிகள் தடையின்றி விற்கவும் வாங்கவும்படக்கூடிய காணிகளாகும் (Freehold Lands). இத்தகைய காணிகளின் விற்பனையும் கொள்வனவும் அரிதாக நிகழும் நிகழ்வுகள் அல்ல; பெருமளவிலான விற்பனைகள் இடம்பெற்றதைப் பற்றிய தரவுகள் காணிப் பதிவு ஆவணங்களில் காணப்படுகின்றன.
இக்கிராமத்தில் நடைபெற்ற காணி விற்பனை பற்றிய ஆவணம் (1793) ஒன்று காணிப் பதிவகத்தில் உள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த ‘கட்டிஎத்தன’ (Katyethana) என்ற விவசாயி வறியவராகி, ஆதரவற்றவரான போது அவர் தனது காணியை ‘ஹலியத்தே முகாந்திரம் றால’ என்பவருக்கு விற்பனை செய்தார். ஹகட்டேக கும்புற என்ற பெயருடையவர் 2 பெல (2 Pelas) பரப்பளவுடைய காணியையும், தான் வசிக்கும் வீட்டையும், வளவையும் மேற்குறித்த ஹலியத்தே முகாந்திரம் றாலவிற்கு 160 றித்திகள் (160 Ridies) பணத்திற்கு விற்பனை செய்ததையும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது. இவ்விற்பனையை உறுதிப்படுத்திய சாட்சிகளாக 8 பேர் குறிப்பிடப்பட்டிருந்தனர் (Lawrie, 1898 : 11 : 954).
கண்டி அரசன் கண்டி இராச்சியத்தின் எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளின் நிலங்களினதும் சட்டப்படியான உடைமையாளனாக (De jure Owner) இருந்தான். ஆயினும், ‘கபடாகம்’ நிலம் மட்டுமே அவனது உடைமையாக இருந்தது. அவற்றில் மட்டுமே அவனுக்கு உண்மையான உரிமை (De Facto Ownership) இருந்தது.
அரசன் நிலப்பிரபுக்களின் நிந்தகம் காணிகளைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை உடையவன். இந்த அதிகாரம் அரசன் என்ற முறையில் அவனுக்கு இருக்கும் ‘இறைமை’ (Sovereignty) சார்ந்த அதிகாரமே அல்லாமல், நிலத்தின் உடைமையாளன் (Owner of the Land) என்பதால் எழும் அதிகாரம் அன்று. காணிகளை அரசன் பறிமுதல் செய்வது, பிரபுக்கள் செய்த அரசியல் குற்றங்களுக்கான தண்டனையே ஆகும்.
கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட காணிகள் விடயத்திலும் அரசனிற்கு அதிகாரங்கள் இல்லை. விகாரகம் காணிகளுக்கு அரசன் வரிவிதிக்க முடியாது. விகாரையின் நிலப்பிரபுக்களும், விகாரைகளின் துறவிகளும் அரசனிற்கு வரிகள் எதனையும் செலுத்த வேண்டியதில்லை. தேவாலகம் நிலங்களின் உடைமையாளர்களான நிலப்பிரபுக்கள் 500 முதல் 3000 வரையான றித்திகள் (Ridis) பணத்தை வேறுபடும் அளவில் வருடாந்த வரியாகச் செலுத்த வேண்டும் (பீரிஸ்: 1956 : 74-75). கோவில்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் புனிதமானவை (Sacred) என்னும் கருத்தியல் கண்டியில் மக்களிடம் பரவியிருந்தது. இதனால் அரசன் கோவில் சொத்துகளில் தலையிடுவதில்லை.
கண்டி இராச்சியத்தின் பிற்காலத்தில் அரசியல் குழப்பநிலையும் கலகங்களும் ஏற்பட்ட போது, புத்த துறவிகள் சிலருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் தலைகள் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடைமையாக இருந்த கோவில் சொத்துகள் வேறு புத்த துறவிகளுக்குக் கையளிக்கப்பட்டன. உதாரணமாக, தெலும் கொடவின் பிரதிப் பிரதம குருவான பரந்தல (Parantela) என்பவர் 1814 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்; அவரது தலை வெட்டப்பட்டது. அவரது கோவில் உடைமைகள் ‘றொபேக்கடுவ’ என்ற பெயருடைய துறவிக்குக் கொடுக்கப்பட்டன.
ஒரு குறித்த காணியை கோவில் ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கிய பின்னர், அந்தக் காணி அதன் தலைமைக் குருவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அரசன் அக்காணி விடயத்தில் எவ்வித தலையீடும் செய்ய முடியாது. அவன் கோவில் காணிகளின் நில உடைமையாளன் அல்லன். தனிநபர் ஒருவரின் சொந்த உடைமையாக (Freehold) உள்ள காணியிலும் அரசனிற்குத் தலையிடும் உரிமை இல்லை. உதாரணமாக, காட்டு நிலத்தை ஒருவருக்கு கொடுத்து அதன் உரிமையைத் தனிநபர் ஒருவருக்கு மாற்றி, அக்காணி நெற்காணியாக்கப்பட்ட பின் அக்காணிக்கு அரசன் வரிவிதிக்க முடியாது. அக்காணியைப் பெற்ற நபரே அக்காணியின் உடைமையாளராவார். அவர் அக்காணியை வேறு ஒருவருக்கு விற்கலாம். தனிநபர் ஒருவர் 30 ஆண்டுகள் ஒரு காணியைத் தனது உடைமையாக வைத்திருந்தால், அவர் அக்காணியைத் தொடர்ந்தும் தானே வைத்திருக்கலாம் அல்லது இன்னொருவருக்கு விற்கலாம் என ஜோன் டேவி குறிப்பிட்டுள்ளார் (1969 : 139).
கண்டியில் 5 வகையான நில உடைமை இருந்து வந்தது என்பதை மேலே கூறியவை எடுத்துக்காட்டுகின்றன.
- அரசனின் உடைமையான கபடாகம் நிலங்கள்.
- அதிகாரிகளின் பதவிகளுக்குரிய நிலங்கள் – பத்தாவலி
- நிலப்பிரபுக் குடும்பங்களின் உடைமையான ‘நிந்தகம்’ (Nindagam) நிலங்கள்.
- கோவில்களின் உடைமையான ‘விகாரகம்’, ‘தேவாலகம்’ நிலங்கள்.
- தனிநபர்களால் உடைமையாக உரிமை கொள்ளப்பட்ட நிலங்கள். இவை சிற்றுடைமைகளாகவும் (Small Holding) நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டிற்கு உட்படாதனவாகவும் இருந்தன.
கண்டியின் விவசாய முறைக்குத் துணையாக அப்பகுதியின் கைவினை உற்பத்திகள் (Craft Industries) அமைந்திருந்தன. கைவினை உற்பத்தி சாதி முறையினால் (Caste System) ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இரும்பு, பொன், வெள்ளி, வெண்கலம், தகரம், செப்பு ஆகிய உலோகங்களுடன் தொடர்புடைய கைவினைஞர்கள் (Smiths), பானை, சட்டிகளை வனையும் குயவர்கள், துணி நெய்யும் நெசவுத் தொழில் செய்வோர், சுண்ணாம்பு உற்பத்தி செய்வோர் ஆகிய தொழில்களைச் செய்வோர் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். மேற்குறித்த சாதியினரின் தொழில்கள் கண்டி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில், ஓர் அரச திணைக்களத்தால் (State Department) மேற்பார்வை செய்யப்பட்டன.
மேற்குறித்த சேவைத் தொழில்களைச் செய்த குடும்பங்கள், கோவில்களதும் நிலப்பிரபுக்களதும் நிலங்களைப் பயிரிடும் விவசாயக் குடும்பங்களாகவும் இருந்தன. உதாரணமாக, இரும்பு வேலை செய்யும் ஒருவர் கத்தி, மண்வெட்டி போன்ற கருவிகளை உற்பத்தி செய்து பிற விவசாயிகளுக்கு உதவுவதோடு, ஒரு நெற்காணியைப் பயிரிடுபவராகவும் இருப்பார். இவ்வாறு கைவினைஞர்கள் பயிரிடுவோராக இருப்பது, கண்டிய உற்பத்தி முறை அடிப்படையில் விவசாயப் பொருளாதாரம் (Agrarian Economy) என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இரும்பு வேலை தொழிலைச் செய்யும் சாதியினருக்கும், கிராமத்தின் விவசாயிகளுக்கும் இடையிலான பரிவர்த்தனை உறவை (Exchange Relations) றொபர்ட் நொக்ஸின் பின்வரும் கூற்று விளக்குவதாக உள்ளது:
“உழவுத் தொழிலுக்குத் தேவையான கருவிகளைச் செய்து கொடுத்தல் கம்மாளரின் வேலை ஆகும். அவர்கள் பழுதடைந்தவற்றைத் திருத்தியும் கொடுப்பர். பண்டைய வழக்கப்படி விவசாயிகள் அறுவடையின் போது ஒரு பங்கு தானியத்தை கம்மாளருக்குக் கொடுப்பார்கள். ஆனால், கம்மாளர்கள் கருவிகளைத் திருத்துவது மட்டுமல்லாது, புதிதாகக் கருவிகளைச் செய்து கொடுத்திருந்தால், அறுவடையின் போது கொடுப்பதை விட மேலதிகமாக விசேட கொடுப்பனவையும் செய்தல் வேண்டும். அவ்வேளையில் விவசாயிகள் கம்மாளரிடம் பணிவோடு வந்து, அரிசி, கோழிகள், பிற பண்டங்கள் என்பனவற்றைக் கொடுப்பார்கள். ஒரு போத்தல் சாராயத்தையும் கொடுப்பதுண்டு (1966 : 128).
தொடரும்.



