முல்லைத்தீவுச் சமர்
சூரியக்கதிர் (ரிவிரச) என்ற குறியீட்டுப் பெயருடன் ஒரு படையெடுப்பை சிங்கள இராணுவம் மேற்கொண்டது. இப்படையெடுப்பில் சனங்களற்ற ஒரு நகரத்தையே கைப்பற்ற முடிந்தது. இப்படையெடுப்பு பற்றி முன்கூட்டியே அறிந்திருந்த விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் வடமராட்சி மக்களை தென்மராட்சிக்கு இடம்பெறச் செய்தது. இதனால் வடமராட்சி மக்கள் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்தனர். இதனாலே சிங்கள இராணுவத்தினர் வடமராட்சி என்ற வெறும் கிராமத்தைக் கைப்பற்றினர்.
இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவுப் படைத்தலம் எட்டு சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. கடலோரம் அமைந்திருந்த முல்லைத்தீவு நகரையும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களையும் உள்ளடக்கியதாக விஸ்தரிக்கப்பட்டிருந்த இப்பாரிய படைத்தலம் மிகவும் இறுக்கமான பாதுகாப்பைக் கொண்டிருந்தது. இயற்கைச் சூழலும் படைத்தலத்தின் பாதுகாப்புக்கு வலுச் சேர்த்தது. ஒருபுறம் இந்து மாகடல், மறுபுறம் நந்திக்கடல், இன்னொரு புறத்தில் வட்டுவாகல் ஆறு; இவ்விதம் கடலும் நீரேரியும் ஆறுமாக மூன்று புறமும் இயற்கையின் பாதுகாப்பும், ஒருபுறம் மட்டும் தரையுமாக இப்படை முகாம் அமைந்திருந்தது. முகாமின் வெளிப் பாதுகாப்பு வேலி 10 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்டது. அப்பாதுகாப்பு வேலி உறுதியான காவல் அரண்களாலும் கண்ணிவெடித் திடல்களாலும் பலம் பெற்றிருந்தது. வெளிப் பாதுகாப்பு வலயத்தின் மையப் பகுதியில் கடலோரமாக மூன்று கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்ட உட்பாதுகாப்பு வலயம் ஒன்றும் அமைந்திருந்தது. இது இரும்புக்கோட்டை போன்ற அதி உயர் பாதுகாப்பைக் கொண்டது. தாக்குதல் நிகழ்ந்த அன்றைய தினம் இரண்டு ‘பட்டாலியன்’ (Battalion) படையினரும் பீரங்கி, மோட்டார் அணிகளுமாக மொத்தம் 1600 துருப்புகள் படை முகாமில் இருந்தன.
1996 ஜூலை 18ஆம் நாள் அதிகாலை முல்லைத்தீவுப் பெருந்தலம் மீதான தாக்குதல் ஆரம்பமானது. மிக உக்கிரமானதாக வெடித்த இப்பெரும் சமரில் இருதரப்பு சுடுகலன்களின் வெடிச்சத்தத்தால் முல்லைத்தீவு பிரதேசமே அதிர்ந்து கொண்டிருந்தது. சமர் தொடங்கிய சில மணி நேரத்திற்குள் எட்டு முனைகளில் வெளிப் பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு புலிப்படை அணிகள் முகாமிற்குள் நுழைந்தன. கடலோரமான இரு முனைகளில் காவலரண் வரிசையை உடைத்தெறியும் புலிகளின் புதுமையான அதிரடித் தாக்குதல் திட்டம் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தனர் கடற்புலிகள்.
முல்லைத்தீவுப் படைத்தலத்திற்கு பேராபத்து எழுந்துள்ளது என்பதை அறிந்ததும் வெற்றிலைக்கேணியில் இருந்தும், பின்பு திருகோணமலையிலிருந்தும் இலங்கை கடற்படை அணிகள் போர்க்களத்துக்கு விரைந்தன. ‘பராக்கிரம’ என்ற தலைமைப் போர்க்கப்பலுடன் ஏழு ‘டோரா’ அதிவேகச் சண்டைப் படகுகள், இரண்டு தரையிறங்குக் கலங்கள் உட்பட மொத்தம் 15க்கும் மேற்பட்ட கடற்கலங்கள் கடற்படைத் தலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடல் வழியான உதவிகளையும் தரையிறக்கத்தையும் தடுத்து நிறுத்தவும் புலிகள் திட்டம் வரைந்திருந்தனர். இதன்படி கரையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் 5 கிலோமீட்டர் அகலத்திலுமாக வியூகம் வகுத்து அக்கடற்கரைப் பரப்பில் கடற்புலிக் கலங்கள் சுற்றுக்காவலில் விடப்பட்டிருந்தன. இதனால் கடற்புலிகளின் பாதுகாப்பு வலயத்தை உடைத்து உதவிப்படைகளை தரையிறக்க இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட பகீரத முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. குண்டுவீச்சு விமானங்கள், போர் உலங்கு வானூர்திகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து கடற்படையின் பீரங்கிப் படைகளுடன் போராடி கடல் வழியாகத் துருப்புகளை தரையிறக்கும் முயற்சிகளை கடற்புலிகள் முறியடித்தனர்.
முல்லைத்தீவு பெருந்தலத்தின் வெளிப்புறக் காப்பு வியூகத்தை உடைத்தெறிந்து தரை வழியாகவும் கடல் வழியாகவும் உட்புகுந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் ஆங்காங்கே அமைந்திருந்த உப-முகாம்களையும் உட்காவலரண்களையும் தாக்கி அழித்தனர். சண்டையின் பின்பு பிரதான முகாம் பகுதிக்குள் நுழைந்த புலியினர் தலத்தின் கட்டளைப் பணிமனை, பீரங்கி, மோட்டார் ஏவுதலங்கள், தொலைத்தொடர்பு நிலையம், போர்த்தளவாடக் களஞ்சியம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். முகாமின் மையமாக அமைந்த கட்டடப் பகுதிக்குள் எஞ்சிய சிங்களப் படைகள் முடக்கப்பட்டு இருந்தன. அத்துடன் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
படைத்தலத்தினுள் நிகழ்ந்த சண்டை தற்காலிகமாக ஓய்வடைந்த வேளையின் பின்னர் தென்புறக் கரையோரமாக மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த சிலாவத்தை பகுதியில் வான்வழி மூலம் மீட்புப் படைகள் தரையிறக்கப்பட்டன. கடற்கரை மணற்பரப்பில் 300 மீட்டர் விட்ட நிலப்பரப்பில் ‘எம்.ஐ.17’ ராட்சத உலங்கு வானூர்திகள் மூலம் சிறப்பு அதிரடிப்படையினர் தரையிறக்கப்பட்டனர். ஒரு புதிய போர்முனை திறக்கப்பட்டது. இந்த மீட்புப்போர் நடவடிக்கைக்கு ‘திரிவிடபஹர’ (மும்முனைத் தாக்குதல்) எனப் பெயரிடப்பட்டது. மீட்புப்படைகள் இறங்கிய பகுதியைச் சூழ்ந்து கொண்ட புலிகளின் படையணிகள் எதிரியை நகர விடாது முடக்கி வைத்து கடும் சமரில் ஈடுபட்டனர்.
ஜூலை பதினெட்டாம் திகதி நள்ளிரவுடன் முல்லைத்தீவுப் பெருந்தலம் முழுமையாக புலிகளிடம் வீழ்ச்சி அடைந்தது. எனினும் கடல் வழியாலும் வான் வழியாலும் மீட்புப்படைகளை தொடர்ந்து அனுப்பி வைக்கும் முயற்சிகளை இலங்கையின் படைத்துறைத் தலைமை கைவிடவில்லை. ஜூலை 20, 21, 22, 25 ஆம் திகதிகளில் கடல் வழியாகவும், வான் வழியாகவும் மீட்புப்படைகளை தரையிறக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. தொடர்ச்சியாக நிகழ்ந்த கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் இரண்டு பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. கடற்படைக் கலங்கள் பல சேதமாக்கப்பட்டன. தரையிறங்கிய மீட்புப்படைகளின் நிலை படுமோசமாகியது. புலிகளின் போரணிகளால் சுற்றிவளைக்கப்பட்டு மோட்டார்கள், இயந்திரத் துப்பாக்கிகளால் உக்கிரமான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு வந்ததால் இறக்கப்பட்ட துருப்புகளுக்கு பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. மீட்புப்படைகளை மீட்டெடுப்பதே இலங்கைப் படைத் தலைமைக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இறுதியாக ஜூலை 26ஆம் திகதி அன்று புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலுக்கு மத்தியில் மீட்புப் படையணிகள் அவசர அவசரமாக மீட்டெடுக்கப்பட்டன. அத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முல்லைத்தீவுச் சமர் முடிவுக்கு வந்தது. முல்லைத்தீவுச் சமருக்கு ‘ஓயாத அலைகள் – I’ என பெயரிட்டார் பிரபாகரன்.
முல்லைத்தீவுத் தாக்குதல் நடவடிக்கையின் பிரதான கட்டளைத் தளபதியாக கேணல் பால்ராஜும், தாக்குதல் ஒருங்கிணைப்புத் தளபதியாக கேணல் தீபனும் பணியாற்றினர். சார்ள்ஸ் அன்டனி சிறப்புப் படையணி, மகளிர் படைப்பிரிவு, கடற்புலிகள் அணி ஆகியவற்றுடன் வேறு அணிகளும் இச்சமரில் பங்குபற்றின.
முல்லைத்தீவுச் சமரில் இலங்கை இராணுவம் பாரிய உயிரிழப்பைச் சந்தித்தது. படை முகாம் சண்டையில் 1200 இராணுவத்தினரும், தரையிறக்கப் பகுதியில் 300 பேருமாக மொத்தம் 1500 படையினர் முல்லைத்தீவுச் சமரில் களப்பலியாகினர். புலிகளின் தரப்பில் ஆண்களும் பெண்களுமாக 315 போராளிகள் உயிரிழந்தனர். இச்சமரில் கனரகப் பீரங்கிகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். இரண்டு ‘122 எம்.எம். பீரங்கிகள்’, நான்கு ‘120 எம்.எம். மோட்டார்கள்’, ஆயிரம் பீரங்கி எறிகணைகள், 1000 சிறு ரக இயந்திரத் துப்பாக்கிகள், பல இலட்சம் கோடி பெறுமதியான பொருட்கள் எனப் பெருந்தொகை ஆயுதங்கள் புலிகள் வசமாகின. விடுதலைப் புலிகளிடம் சிக்கிய ஆயுதத் தளவாடங்களின் பெறுமதி இருநூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என அரசு தரப்பு இராணுவ ஆய்வாளர் ஒருவர் மதிப்பீடு செய்தார்.
ஜூலை 26ஆம் திகதி அன்று தரை இறங்கிய மீட்புப் படைகளை விரட்டி அடித்து முல்லைத்தீவுச் சமருக்கு முடிவு கட்டிவிட்டு, படை முகாமில் கைப்பற்றி ஆயுதத் தளவாடங்களை புலிகள் தரப்பு அகற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய இலங்கை இராணுவம் புதிய படை நடவடிக்கையை முடுக்கிவிட்டது.
ஆனையிறவுப் பெருந்தலத்திலிருந்து முன்னேறிய இலங்கைப் படையணிகள் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த பரந்தன் பகுதியைக் கைப்பற்றின. ‘சத்ஜெய’ எனப் பெயரிடப்பட்ட இப்படை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து பரந்தனின் வீழ்ச்சியை அபாரமான இராணுவ சாதனையாகப் பரப்புரை செய்தது அரசாங்கம். பரந்தனைக் கைப்பற்றிய மறுவாரமே 1996 ஆகஸ்ட் 4ஆம் திகதி அன்று ‘சத்ஜெய 2’ என்ற பெயரில் இலங்கை இராணுவம் கிளிநொச்சி மீது படையெடுப்பை நிகழ்த்தியது. கிளிநொச்சியை நோக்கி முன்னேறிய இராணுவத்தினரை எதிர்த்து விடுதலைப் புலிகளின் படையணிகள் மூர்க்கமாகப் போரிட்டன. புலிகளின் கடும் எதிர்த்தாக்குதல் காரணமாக இராணுவத்தினரின் தந்திரோபாயக் குறிக்கோள் முழுமையாக நிறைவு பெறவில்லை. கிளிநொச்சி நகரத்தின் ஒரு பகுதியை மட்டுமே இராணுவத்தால் கைப்பற்ற முடிந்தது. முல்லைத்தீவில் எதிர்கொண்ட பேரழிவுக்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் பல நாட்களாகத் தொடர்ந்த கிளிநொச்சிச் சமரின் போது பீரங்கிகளாலும் விமானங்களாலும் குண்டுமாரி பொழிந்து கிளிநொச்சி நகரையும் அதன் சுற்றுப்புறங்களையும் இலங்கைப் படைகள் தரைமட்டமாக்கின.
ஜெயசிக்குறுச் சமர்
ஈழத் தமிழரின் எழுச்சி வடிவமான புலிகள் இயக்கத்தை அழித்து தமிழரின் தாயக நிலங்களை இலங்கை அரசாட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடன் புதிய படையெடுப்புகள் முடுக்கிவிடப்பட்டன. இப்படை நடவடிக்கைகளில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது ‘ஜெயசிக்குறுச்’ (வெற்றி நிச்சயம்) சமராகும். மிகவும் நீண்ட சமர்களுள் ஒன்றாக இராணுவ ஆய்வாளர்களால் கருதப்படும் இப்போர் நடவடிக்கை 18 மாதங்கள் வரை நீடித்தது. வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை 70 கிலோமீட்டர் நீட்சியுடைய ‘ஏ-9’ நெடுஞ்சாலையைத் திறந்து வடக்கையும் தெற்கையும் இணைப்பது ஜெயசிக்குறுச் சமரின் மூலோபாயக் குறிக்கோள் என அரச தரப்பில் கூறப்பட்டது. எனினும் இப்படை நடவடிக்கையின் உண்மையான குறிக்கோள் வன்னியை இரண்டாகப் பிளந்து விடுதலைப் புலிகளை நேரடி மோதலுக்குள் இழுத்து, அவர்களது மையத் தலங்களை அழித்து, யாழ்ப்பாணப் படை முகாம்களுக்கு விநியோகப் பாதையை அமைத்து, தமிழரின் வரலாற்றுத் தாயகத்தை இலங்கை இராணுவத்தின் நிரந்தரக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதேயாகும்.
இதன்படி 1997ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி ஜெயசிக்குறுச் சமர் ஆரம்பமானது. போர் விமானங்களும் பீரங்கிகளும் குண்டுமழை பொழிந்து முன்னரங்குகளைத் தாக்கி அழிக்க, பீரங்கி வண்டிகள் அனல் கக்கி முன்னேற, அதன் பின்னால் கவச வாகனங்களிலும் கால்நடையாகவும் வரிசை வரிசையாக ஆயுதம் தரித்த ஆக்கிரமிப்புத் துருப்புகள் வன்னி மண்ணை ஊடறுத்து இரு களமுனைகளில் முன்னேறின.
வவுனியாவிலிருந்து நொச்சிமோட்டை ஊடாக ஓமந்தை வரை நகர்ந்து அங்கிருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேறுவது ஒரு களமுனையின் இலக்கு. ‘டொலர், கென்ட்’ பண்ணைப் பகுதிகளூடாக முன்னேறி நெடுங்கேணியைக் கைப்பற்றி அங்கிருந்து புளியங்குளம் வரை நகர்ந்து முதல் அணியுடன் இணைந்து கொள்வது இரண்டாவது களமுனையின் நோக்கு. பின்பு இரு களமுனைப் படைகளையும் இணைத்து புலிகளின் தலங்களைத் தேடி அழித்தபடி கிளிநொச்சி வரை முன்னேறிச் செல்வதே ஜெயசிக்குறுவின் மூலோபாயக் குறிக்கோள். 45 மைல் தூரமுடைய கிளிநொச்சி வரையிலான இந்நெடுஞ்சாலையை நான்கு மாதங்களில், அதாவது மாரிமழைக் காலத்திற்கு முன்னதாகக் கைப்பற்றி விடுவதே இலங்கைப் படைத்தலைமையின் திட்டமாக இருந்தது.
இருமுனைகளிலிருந்தும் இராணுவத்தினர் வன்னியின் எல்லைப் பிரதேசத்தை ஊடுருவி முன்நகரத் தொடங்கியதும் விடுதலைப் புலிகளின் போர் அணிகள் மூர்க்கமான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டன. வன்னி மீதான படையெடுப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த புலியினர் உடனடியாகவே பீரங்கி, மோட்டார் படைப்பிரிவுகளை களத்தில் இறக்கினர். புலிகளின் கடும் எதிர்ப்புக் காரணமாக இலங்கைப் படைகளின் முன்னேறும் வேகம் குறைந்தது. இதில் முதல் தடவையாக இலங்கை இராணுவம் புலிகளின் பீரங்கி எறிகணைகளுக்கு முகம் கொடுத்துப் போரிட நேரிட்டது. இதனால் அரச படைகளுக்கு உயிர்ச்சேதம் அதிகரித்தது. எல்லைப்புறக் கிராமங்களாகிய ஓமந்தையையும் நெடுங்கேணியையும் கைப்பற்றுவதற்கு இரண்டு வாரங்கள் வரை கடும் சமர் புரியவேண்டியிருந்தது. இச்சமரில் 125 படையினர் கொல்லப்பட்டதுடன் 500 பேர் வரை காயமடைந்தனர். அத்துடன் நான்கு பீரங்கி வண்டிகள் அழிக்கப்பட்டன. மிகவும் துல்லியமாக நடத்தப்பட்ட புலிகளின் பீரங்கி மோட்டார் தாக்குதல்களின் விளைவாக படுகாயம் அடையும் படையினரின் விகிதாசாரம் நாளுக்கு நாள் உயர்ந்து வர, நகர்வு வேகமும் நாளுக்கு நாள் படிப்படியாகக் குறைந்தது.
1997 ஜூன் மாதம் பத்தாம் திகதி நள்ளிரவு தாண்டிக் குளம் வெளிப் பாதுகாப்பு வலயத்தை ஊடுருவி உட்புகுந்த புலிகளின் சிறப்பு அதிரடிப் படையணிகள் கட்டளைத் தலைமையகம் மீதும், ஆயுதக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதலைத் தொடுத்தன. வெடிமருந்துக் கிடங்குகள் தீப்பற்றி வெடித்தன. பல்லாயிரம் எறிகணைகளும் பீரங்கி வண்டிக் குண்டுகளும் வெடித்துச் சிதற அப்பிரதேசமே தீப்பற்றி எரிந்தது. பல இராணுவ வாகனங்கள் எரிந்து சிதைந்தன. அங்குமிங்கமாகச் சிதறி ஓடிய இராணுவத்தினர் புலிகளின் இலக்குகளுக்குப் பலியாக்கினர். 24 மணி நேரமாகத் தாண்டிக் குளத்தை நிலைகுலைய வைத்துப் பேரழிவை ஏற்படுத்திய பின்னர் புலிகளின் படையணிகள் அங்கிருந்து விலகின. இத்தாக்குதலில் 400 படையினர் கொல்லப்பட்டனர்; 570 பேர் காயமடைந்தனர். இரண்டு பீரங்கி வண்டிகளும் அழிக்கப்பட்டன. நொச்சிமேட்டைப் பாலமும் புலிகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இச்சமரில் மூன்று கரும்புலிகள் உட்பட 85 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
ஜூன் 24ஆம் திகதியன்று பெரியமடுப் பகுதியில் ஜெயசிக்குறுப் படைகளின் முன்னரங்கு நிலைகள் மீது விடுதலைப் புலிகள் துணிகரத் தாக்குதலை நிகழ்த்தினர். படையினரின் பீரங்கி, மோட்டார் தலங்கள், வழங்கல் மையம், கட்டளைப் பீடம் ஆகியன புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகிச் சிதைந்தன. இத்தாக்குதலின் போது ஒரு ‘120 எம்.எம்.’ பீரங்கியையும், நூற்றுக்கணக்கான எறிகணைகளையும் புலிகள் கைப்பற்றினர். இச்சண்டையில் 185 படையினர் கொல்லப்பட்டனர்; 200 பேர் வரை படுகாயம் அடைந்தனர்; புலிகள் தரப்பில் 94 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இத்தாக்குதலின் விளைவாக புளியங்குளம் பழையவாடி வரை முன்னேறிய இராணுவம் பழைய நிலைகளுக்குப் பின்வாங்கியது.
ஜெயசிக்குறுப் படைகளின் வழங்கல் மையமாகத் திகழ்ந்த ஓமந்தைப் படைத்தலம் மீது 1997 ஆகஸ்ட் முதலாம் திகதி புலிகளின் படையணிகள் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 135 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
ஜெயசிக்குறுச் சமர் ஓராண்டைப் பூர்த்தி செய்தது. 365 நாட்கள் வரை தொடர்ச்சியாக முழுப் பலத்தையும் பிரயோகித்துப் போராடியும் 35 கிலோமீட்டர் நீளப்பாதையையே அரச படைகளால் கைப்பற்ற முடிந்தது. ஓராண்டுச் சமரில் 1350 படையினரையே பலி கொடுத்ததாக அரசாங்கம் இராணுவத்தின் உயிரிழப்பைக் குறைத்துக் கூறியது. 3000 படையினருக்கு மேல் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் விடுத்த அறிக்கையை நம்பகமானது என உலக இராணுவ நிபுணர்கள் ஏற்றுக்கொண்டனர். வன்னி நெடுஞ்சாலைப் பாதுகாப்புச் சமரில் புலிகள் தரப்பில் 1300 போராளிகள் களப்பலியாகினர் என விடுதலைப் புலிகள் அறிவித்தனர். ஓராண்டு காலமாக ஓயாத தாக்குதல்களை மேற்கொண்ட போதும் நெடுஞ்சாலை மீதான புலிகளின் பிடியை இராணுவத்தினரால் அசைக்க முடியவில்லை. கிளிநொச்சியின் தென்புறப் பகுதியில் இருந்து மாங்குளம் சந்தை வரையிலான நெடுஞ்சாலை புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இந்த ஓராண்டுச் சமரில் இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படையணிகள் சிதைவுற்றன. ‘எயார்மொபைல்’ அதிரடிப் படைகளையும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற சிறப்புப் படையணிகளையும் கொண்ட ‘53ஆவது டிவிசன்’ படைப்பிரிவு பாரிய இழப்புகளைச் சந்தித்தது.
நான்கு மாத கால வரையறையுடன் ஆரம்பமான ‘வெற்றி நிச்சயம்’ சமர் 18 மாதங்கள் வரை இழுபட்டு தனது இராணுவக் குறிக்கோளையும் நிறைவு செய்ய முடியாது இடைநடுவே தோல்வியில் முடிவு கண்டது. இந்தச் சமரில் 6000 படையினர் கொல்லப்பட்டனர்; 15,000 பேர் காயமடைந்தனர்; பெருந்தொகையான படையினர் ‘ஏ-9’ நெடுஞ்சாலையில் கொல்லப்பட்டதால் அப்பாதையை ‘மரணத்தின் நெடுஞ்சாலை’ என ஓர் இராணுவ ஆய்வாளர் வர்ணித்தார். இச்சமரையடுத்து பெருந்தொகையான இராணுவத்தினர் படையிலிருந்து விலகினர்; இச்சமரில் இலங்கை இராணுவத்தின் பல சிறப்புப் படையணிகள் சிதைவுற்றன. புலிகள் தரப்பில் 3000 போராளிகள் களப்பலியாகினர்.
ஓயாத அலைகள் II – கிளிநொச்சி சமர்
முல்லைத்தீவைப் புலிகளிடம் பறி கொடுத்த இலங்கை இராணுவம் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றி அதனை ஒரு பாரிய படைத்தலமாகக் கட்டியெழுப்பி பரந்தனூடாக ஆனையிறவுப் பெருந்தலத்துடன் இணைத்து வைத்திருந்தது. பரந்தன் – கிளிநொச்சி படையணித் (பிரிகேட்) தலைமையகக் கட்டடம், இரு பெரிய படை முகாம்கள், 15 உபமுகாம்கள், 16 கிலோமீட்டர் சுற்றுவட்டத்திலான முன்னரங்கக் காவலரண்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பெருந்தலமாக கிளிநொச்சி விளங்கியது. கிளிநொச்சிப் படைத்தலத்தின் முன்னணிக் காவலரண்களைக் கைப்பற்றி, தலத்தின் பிரதான வலயத்தில் அமைந்த படையணித் (பிரிகேட்) தலைமையகத்தையும் மற்றும் முக்கிய முகாம்களையும் கைப்பற்றும் பொறுப்பு கேணல் தீபனிடம் கையளிக்கப்பட்டிருந்தது. ஆனையிறவு இராணுவப் படைத்தலத்தில் இருந்து உதவிகளைத் தடுத்து நிறுத்தி கிளிநொச்சியைத் தனிமைப்படுத்தும் பொறுப்பு கேணல் பால்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
1998 அக்டோபர் மாதம் 27ஆம் நாள் அதிகாலை 1.20 மணிக்கு கிளிநொச்சிப் படைமுகாம் மீதான தாக்குதல் தொடங்கியது. படை முகாமின் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் நிகழ்த்திய புலிகளின் படையணிகள் பல இடங்களில் வெளிப் பாதுகாப்பு வேலியை உடைத்து உட்புகுந்தன. முன்னரங்க நிலைகள் புலிகளிடம் வீழ்ச்சியடைந்ததால் திகில் அடைந்த இராணுவத்தினர் கடுமையாகப் போராடி சில நிலைகளை மீளக் கைப்பற்றினர். ஆனால் புலிப்படை வீரர்கள் தீவிரமாகப் போராடி அந்நிலைகளை மீண்டும் தம்வசப்படுத்தினர். அன்று பகல் முழுதும் சமர் உக்கிரமடைந்தது. கிளிநொச்சி இராணுவப் படைமுகாமில் அமைந்திருந்த கனரக மோட்டார் ஏவுதலங்கள் மீது குண்டுகள் பொழியப்பட்டன. ஆனையிறவிலிருந்த இராணுவத்தினரின் பீரங்கித் தலமும் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியது.
கிளிநொச்சிப் படைத்தலத்தின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகளைத் தம்வசமாக்கிய புலிகளின் படையணிகள் மிகவும் இறுக்கமான பாதுகாப்பரண்களைக் கொண்ட உள்ளக வேலியை உடைத்தெறிய முற்பட்டன. ஆனால் இங்கு புலிகள் எதிரியின் மூர்க்கமான தாக்குதலை எதிர்கொள்ள நேர்ந்தது. 27ஆம் திகதி மாலை, இரண்டாம் கட்டமாக நிகழ்ந்த இச்சமரில் புலிகளின் படையணிகள் தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளகப் பாதுகாப்பு நிலைகளை உடைத்து படை முகாமின் மையப் பகுதிக்குள் நுழைந்தன. சரியாக 40 மணிநேரக் கடும் போரின் பின்பு ‘ஓயாத அலைகள் இரண்டு’ முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகள் கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர்; இந்தப் பெருந்தாக்குதலில் 1250 படையினர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் 398 போராளிகள் களப்பலியாகினர்.
ஓயாத அலைகள் III: வன்னி மீட்புச் சமர்
கிளிநொச்சிப் பெருந்தலம் வீழ்ச்சியடைந்து கிளிநொச்சி நகரும் அதன் சுற்றுப்புறங்களும் முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. கண்டி – யாழ்ப்பாணப் பெருவீதியைக் கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டு இராணுவம் மாங்குளத்துடன் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்படியிருந்தும் வன்னி நெடுவீதியின் கிழக்குப் புறமாகவும் மேற்குப் புறமாகவும் கணிசமான நிலப்பரப்பு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. 1998 டிசம்பர் ஆரம்பப் பகுதியில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘ரிவிபல’ படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பட்டினம் படையினரிடம் வீழ்ச்சியடைந்தது. இதை அடுத்து நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியோடு கரிப்பட்டமுறிப்பு பகுதி இணைக்கப்பட்டு பெரியதொரு நிலத்துண்டை இராணுவம் விழுங்கியது. இதற்கிடையில் வவுனியா மாவட்டத்தின் மேற்குப் புறமாகவும் மன்னார் மாவட்டத்திலும் ‘போர் முழக்கம்’ (ரணகோச) என்ற தொடர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு மூன்றுமுறிப்பு, இரணை இலுப்பைக் குளம், பூவரசம் குளம், பாலம்பிட்டி, மடு, பெரியமடு, பாப்பாமோட்டை போன்ற பெருநிலப் பரப்புகளை இராணுவம் கைப்பற்றியது. இவ்விதம் வன்னி நிலத்தின் அரைவாசிப் பகுதி, கிட்டத்தட்ட 1200 சதுர மைல் பிரதேசம், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
கிளிநொச்சிப் பெருந்தலத்தை அழித்து கிளிநொச்சிப் பிரதேசத்தை மீட்டெடுத்த புலிகள் அடுத்த தாக்குதலுக்கான ஆயத்தங்களைச் செய்து வந்த வேளையில், முல்லைத்தீவு மாவட்டத்தை மையத்தலமாகக் கொண்டு இயங்கி வந்த விடுதலைப் புலிகள் அமைப்புக்கு, முல்லைத்தீவின் வாசலில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருந்த ஒட்டுசுட்டான் வரை இலங்கை இராணுவம் முன்னகர்ந்திருப்பது பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. ஒட்டுசுட்டானிலிருந்தும் நெடுங்கேணியிலிருந்தும் கிழக்கு நோக்கிய போர்க்களங்களை இராணுவம் திறந்தால் அங்கிருந்து 15 மைல் தொலைவில் உள்ள புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு பேராபத்து எழலாம் என புலிகளின் தலைமை கருதியது. இந்த ஆபத்தைத் தடுக்கும் நோக்குடன், வன்னி நிலத்தை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் குறிக்கோளுடன், ஒரு பாரிய படை நடவடிக்கை திட்டமிடப்பட்டது.
1999 நவம்பர் மாதம் இரண்டாம் திகதி அதிகாலை 12.30 மணி அளவில் விடுதலைப் புலிகளின் போரணிகள் ஒட்டுசுட்டானில் முதற் களமுனையைத் திறந்தனர்; இதுவரை விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் நிகழ்ந்திராத மாபெரும் சமரை, புலிகள் இயக்கம் ஆரம்பித்தது. தளபதி கேணல் ஜெயத்தின் வழிநடத்தலில் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியும் மாலதி படையணியும் இராணுவத்தினரின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகளை உடைத்தெறிந்தன.
இரண்டாம் நிலைப் பாதுகாப்பு அரண்களையும் தகர்த்து முன்னேறிய புலிகள் படையணிகள் உபமுகாம்களைக் கைப்பற்றி பிரதான தலம் மீது மும்முரமான தாக்குதலைத் தொடுத்தன. ஒட்டுசுட்டான் படைத்தலத்தின் கட்டளை மையம் நிலைகுலைய இலங்கைப் படைகள் சிதறி ஓடின. தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் படைத்தலம் புலிகள் வசம் வீழ்ந்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் வெளிப்புறச் சிறுமுகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. ஒட்டுசுட்டான் பட்டினமும் அதன் சுற்றுப்புறங்களும் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
விடுதலைப் புலிகளின் படைபலம், சுடுகல வலு, நவீனமயப்படுத்தப்பட்ட விசேட படையணிகள், அவற்றின் ஒருங்கிணைவான அசைவியக்கம், தாக்குதல் தந்திரங்கள் குறித்து தவறான மதிப்பீடுகளைக் கொண்டிருந்த இலங்கை இராணுவ உயர்பீடத்திற்கு ஓயாத அலை மூன்றின் தாக்குதல் ஆச்சரியத்தையும் திகைப்பையும் கொடுத்தது.
1999 நவம்பர் மூன்றாம் நாள் விடுதலைப் புலிகளின் இன்னொரு படைத்தொகுதி அம்பகாமம் படைத்தலம் மீது பாரிய தாக்குதல் ஒன்றைத் தொடுத்தது. இச்சமர் முனையை தளபதி கேணல் தீபன் வழிநடத்த, லெப். கேணல் சேகரின் தலைமையில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியும் ஜெயந்தன் படையணியும் சமரில் பங்கு கொண்டன. பல மணிநேரமாகக் கடும் சமர் நிகழ்ந்தது. இறுதியில் படைத்தலம் புலிகளின் வசம் வீழ்ந்தது. மணவாளன், பட்டமுறிப்பு பகுதிகளைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்பு, புலிப்படையணிகள் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கரிப்பட்டமுறிப்பு நோக்கி முன்னேறின.
நவம்பர் நான்காம் திகதி அன்று இரு களமுனைகளிலும் புலிப்படை அணிகள் மீளமைக்கப்பட்டன. கைப்பற்றிய பிரதேசங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன் புதிய அணிகளை இணைத்து ஒழுங்கமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான தயாரிப்பு வேலைகள் நடைபெற்றன. மூத்த தளபதி கேணல் பானுவின் தலைமையில் இயங்கிய கிட்டு பீரங்கிப் படையணிகள் இச்சமர்களில் அலாதியான திறமையைக் காண்பித்தன. நவம்பர் ஐந்தாம் திகதி கேணல் திலீபன் தலைமையில் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, இம்ரான் – பாண்டியன் படையணி ஆகிய விடுதலைப் புலிகளின் படையணிகள் கரிப்பட்டமுறிப்பின் பிரதான தலம் மீது தாக்குதலைத் தொடுத்தன.
முன்னணிப் பாதுகாப்பு அரண்களையும் இடைநிலைத் தடைகளையும் உடைத்தெறிந்து உள்நுழைந்த புலிகள் படைத்தலத்தைச் சுற்றி வளைத்து முற்றுகைக்கு உள்ளாக்கினர். கரிப்பட்டமுறிப்பு புலிகள் வசம் வீழ்ச்சியடைந்ததால் கேந்திர முக்கியத்துவம் பெற்ற மாங்குளப் பெருந்தலத்திற்கு பேராபத்து எழலாம் என அச்சம் கொண்டது இலங்கைப் படைத்தலைமை. இதனால், கரிப்பட்டமுறிப்பைக் கைவிடக்கூடாது என படைத்தல அதிகாரிகளுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக இத்தலத்தில் நிலைகொண்டிருந்த அரச படையணிகள் மிகவும் மூர்க்கமான தற்காப்புச் சமரில் குதித்தன. ஆயினும் எறிகணைகளை வீசிய வண்ணம் அலை அலையாக முன்னேறிய புலிகளின் படையணிகளை இலங்கை ஆயுதப் படைகளால் எதிர்கொள்ள முடியவில்லை.
1999 நவம்பர் ஐந்தாம் திகதி பிற்பகல் 3 மணியளவில் மாங்குளம் சந்தியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இலங்கை இராணுவத்தின் இரு படைப்பிரிவுகளின் தலைமையகங்களையும், சிறப்புப் படையணி ‘பட்டாலியனையும்’, பீரங்கி, மோட்டார் ஏவுதலங்களையும் கொண்டதான உயர்நிலைப் பாதுகாப்பு வலயமாக விளங்கிய இப்பெருந்தலமானது அரச படைகளினதும் புலிப்படைகளினதும் பலப்பரீட்சைக் களமாக மாறியது. இரு தரப்பும் மூர்க்கமாகப் பொருதின. புலிகளிடமிருந்த அலாதியான உறுதிப்பாடு இலங்கைப் படையினரிடம் இருக்கவில்லை.
நவம்பர் ஆறாம் நாள் புளியங்குளம் படைமுகாம் விடுதலைப் புலிகளின் இருமுனைத் தாக்குதலுக்கு இலக்காகியது. நைனாமடுவிலிருந்து முன்னேறிய புலி அணிகளும் கனகராயன்குளத்தில் இருந்து முன்னேறிய புலி அணிகளும் ஒன்றிணைந்து பெரும் தாக்குதலை நிகழ்த்தி புளியங்குளத்தை அன்றைய தினமே கைப்பற்றின. புளியங்குளத்தை மீட்டதுடன் புலிப்படை நின்றுவிடவில்லை. அங்கிருந்து மேற்கே கண்டி வீதியால் முன்னேறி பனிக்கநீராவி, பன்றிக்கெய்தகுளம் போன்ற பகுதிகளையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. போராளிகள் ஓமந்தைக்குச் சமீபமாக எல்லைக் காவல் நிலைகளைப் பலப்படுத்தினர்.
இது இவ்வாறு இருக்க, நவம்பர் ஆறாம் திகதி மணலாற்றுப் பிரதேசத்தில் ஒதியமலையில் நிலைகொண்டிருந்த புலிப்படையணிகள் சிலோன் தியேட்டர், கென்ற்பார்ம், தனிக்கல், அளவெட்டிகுளம், வசாவிளான்குளம், பப்பாசிக்குளம் ஆகிய பகுதிகளை இராணுவத்திடமிருந்து மீட்டெடுத்தனர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் விவசாயிகளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் நோக்கத்தை புலி வீரர்கள் நிறைவு செய்தனர். ஓயாத அலைகள் மூன்றின் இரண்டாம் கட்டப் போர் நடவடிக்கையாக, ‘போர் முழக்கம்’ என்ற பெயரில் மன்னார் – பூநகரிப் பாதையில் இலங்கை இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களை நவம்பர் மாதம் 18 தொடக்கம் 20ஆம் திகதிகள் வரை நிகழ்த்திய சமரில் புலிப்படையணிகள் மீட்டெடுத்தன.
ஓயாத அலை மூன்று என்ற குறியீட்டுப் பெயருடன் நிகழ்ந்த வன்னிப் பெரும் சமரின் முழுப் பரிமாணத்தையும் இலங்கை அரசினாலும் இராணுவத் தலைமையினாலும் சரிவரக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. 20,000 இராணுவத்தினர் 500 சதுர மைல் பாதுகாப்பு வலயத்தில் கெட்டியாகக் கட்டிக்காத்த பெரும் படைத்தலங்கள் புலிகளின் தாக்குதலில் ஒவ்வொன்றாக ஒரு சில நாட்களில் நிலைகுலைந்து விழுந்த விசித்திரத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நம்ப முடியாதது ஒன்று நடந்து விட்டது போல் சிங்கள அதிகார வர்க்கம் திகைத்து நின்றது.
தமிழீழ மண் மீட்புப் போரில் ஓயாத அலைகள் மூன்று பெரும் போரியல் சாதனைகளைப் படைத்தது. சிங்களக் குடியேற்றம் விழுங்கிய மணலாற்று மண் உட்பட வன்னியின் பெருநிலங்கள் விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த வெற்றியின் பயனாக படைச்சமர் வலு புலிகளுக்குச் சாதகமாகத் திரும்பியது. தலைவரின் நேர்த்தியான நெறிப்படுத்தலும், களத் தளபதிகளின் நிதானமான மதிநுட்பமான வழிநடத்தலும், அணித் தலைவர்களதும் புலிப் போராளிகளதும் அபாரமான சாதனைகளும் ஒன்றிணைந்ததாக புலிகளின் போரியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் படைக்கப்பட்டது.



