சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
23 நிமிட வாசிப்பு

சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 1

June 16, 2026 | Ezhuna

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க

இக்கட்டுரை ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க அவர்கள் ‘Federalism: Myths and Realities’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் எளிமைப்படுத்தப்பட்ட தழுவலாக்கமாகும். மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனத்தின் (CPA) ‘Essays on Federalism’ (2016) என்ற கட்டுரைத் தொகுப்பு நூலின் நான்காவது அத்தியாயமாக இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. இன்றைய பொருத்தம் கருதி இத் தழுவலாக்கத்தைத் தந்துள்ளோம்.

2002ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. சமஷ்டி முறையைப் பரிசீலித்தல், உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு மூலம் அரசியல் தீர்வைக் காணுதல் எனும் இரு விடயங்களில் இரு தரப்பினரிடையேயும் உடன்பாடு ஏற்பட்டது. இது அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது என றொகான் எதிரிசிங்க குறிப்பிடுகிறார். 

அடுத்து அவர் இலங்கையின் இனப்பிரச்சினை ஆரம்பத்தில் ஒரு சிறிய, சிக்கலற்ற பிரச்சினையாகவே இருந்தது. இன்று அது பூதாகரமான வடிவத்தைப் பெற்று பெரிய, சிக்கலான பிரச்சினையாகி விட்டது எனக் குறிப்பிடுகிறார். இனப் பிரச்சினையின் பரிணாம வளர்ச்சியை நான்கு கட்டங்களாக அவர் வகுத்துக் காட்டுகிறார்.

  1. சட்டசபை/ பாராளுமன்றத்திற்கான பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சினைகள் (Questions of Representation), மனக்குறைகள் (Grievances), மொழியின் அடிப்படையிலான பாரபட்சம், மொழி உரிமைக் கோரிக்கைகள் என்பனவாகவே முதற்கட்டத்தில் இப்பிரச்சினை இருந்தது.
  2. அடுத்த நிலையில் அதிகாரப் பரவலாக்கம் (Decentralisation) என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
  3. மூன்றாவது கட்டம் சுயாட்சிக்கான (Autonomy) கோரிக்கையாக அமைந்தது.
  4. அண்மைக்காலத்தில் முற்கூறிய மூன்று கட்டங்களையும் தாண்டிய வேறொரு நிலைக்கு இது நகர்ந்துள்ளது. இப்போதுள்ள கோரிக்கைகளாவன – தமிழ் மக்கள் தாம் ஒரு தேசிய இனம் என்றும், தமக்கு தேசம் என்ற தகுதி (Nationhood), சுயநிர்ணய உரிமை (Self-Determination) என்பனவற்றின் அடிப்படையிலான அபிலாசைகள் உள்ளன என்றும், அவை நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும், கொன்பெடரேஷன் (Confederation) என்பதன்படியான சமஷ்டித் தீர்வு வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

மேற்கண்டவாறு இலங்கையின் இனப்பிரச்சினையின் பரிணாம வளர்ச்சியை எடுத்துக்காட்டும் றொகான் எதிரிசிங்க, கட்டுரையின் தலைப்பில் குறிப்பிட்ட சமஷ்டி முறை பற்றிய புனைவுகளையும் உண்மைகளையும் (Myths and Realities) பிரித்து அறிவதற்கான வழியைக் காட்டுகிறார்.

தவறு எங்கே உள்ளது?

இலங்கையின் இனப்பிரச்சினையின் தோற்றம், வளர்ச்சி வரலாற்றை மேற்கண்டவாறு வகுத்துக் கூறும் கட்டுரையாசிரியர், இனப்பிரச்சினையின் ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கையின் அரசாங்கங்களின் எதிர்வினை (Response) என்னவாக இருந்தது? என்ற வினாவை எழுப்பும் முறையில் பின்வருமாறு கூறுகிறார்.

“இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த அரசாங்கங்கள் உரிய வேளையில் நியாயமான தீர்வுகளை வழங்கத் தவறின. பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தத்தை 1957இல் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால் பல்லாண்டுகளாகத் தொடர்ந்த யுத்தம் இடம்பெற்றிருக்காது. இரத்தக் களரியும், பேரழிவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கும். 2000ஆம் ஆண்டில் அரசாங்கம் ஓர் அரசியல் யாப்பு வரைவை (Draft Constitution) முன்வைத்திருந்தது. இது முன்னேற்றமான வரைவாக இருந்தது. 1980களிலேயே 2000ஆம் ஆண்டு வரைவு போன்ற தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைத்திருந்தால் அக்காலத்திலேயே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இலகுவாக எட்டப்பட்டிருக்கும்.”

ஒற்றையாட்சி அரசு

அடுத்தடுத்து தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்தன. ஒவ்வொரு தோல்வியும், ஒவ்வொரு மீறலும் பிரச்சினையை மேலும் மேலும் சிக்கலாக்கின. துரோகத்தனம் (Betrayal) காரணமாக எழும் நம்பிக்கையீனம், சந்தேகம் (Distrust and Suspicion) என்பன பேச்சுவார்த்தை என்ற செயல்முறையைச் (Process) சிக்கலாக்கின. பேச்சுவார்த்தையின் போது பேசுவதற்கான விடயப் பொருளும் (Substance) மாறிக் கொண்டிருந்தது. 1994-1995 காலத்தில் பேச்சுவார்த்தையின் தோல்வி, 2002-2003 பேச்சுவார்த்தையின் போது பேசுவதற்குரிய விடயப் பொருளை மாற்றியது. 1994-1995 காலத்தில் அரசியல் யாப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் பேசுபொருளாக இருந்தது. அப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதால் 2002-2003இல் பேசுபொருளான விடயம் (Substance) வேறாக அமைதல் தவிர்க்க முடியாததாயிற்று.

இன்றைய நிலையில் எதிர்காலத்தில் அரசியல் தீர்வு காண வேண்டுமானால் பகிர்ந்தளிக்கப்படும் அதிகாரங்களில் (Devolved Powers) மத்திய அரசு தலையீடு செய்து, அவ்வதிகாரங்களைப் பறிப்பது இடம்பெறாத வகையில் அரசியல் யாப்புப் பாதுகாப்புகள் இருத்தல் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. எதிர்கால அரசியல் யாப்பு யோசனைகள் ஒற்றையாட்சி அரசு (Unitary State) என்ற எல்லைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்க வேண்டும். இது தவிர்க்க முடியாதது என்றே தோன்றுகிறது (It seems almost certain that this will require moving beyond the frontiers of unitary state).

‘ஒற்றையாட்சி அரசு’ என்ற எல்லையைத் தாண்டிச் சிந்திக்கும் தேவையை றொகான் எதிரிசிங்க வலியுறுத்துகிறார்.

துணிச்சலான முடிவு

1995 – 2000 காலத்தில் அரசியல் யாப்புத் திருத்தம் பற்றிய திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பு வரைவில் ‘இலங்கை ஒற்றையாட்சி அரசு’ (Sri Lanka is a unitary state) என்ற சொல்லாட்சியை நீக்குவது என்ற முடிவை அரசியல் யாப்பை வரைந்த குழுவினர் மேற்கொண்டனர். இம்முடிவைத் துணிச்சலான முடிவு (Courageous Decision) என றொகான் எதிரிசிங்க குறிப்பிடுகிறார். சிங்கள மொழியில் ‘எக்சத்’, ‘எக்கீய’ என்ற இரு சொற்களும் ஒரே அர்த்தம் உடையனவாகப் பாவிக்கப்படுகின்றன. அதாவது, ‘எக்சத்’ என்றால் ‘United’ என்றும் ‘Unitary’ என்றும் விளக்கப்படுத்தலாம். இதனால் இச்சொல்லை அரசியல் யாப்பில் இருந்து நீக்க வேண்டும்; அரசியல் யாப்பில் ‘ஒற்றையாட்சி நாடு’, ‘பெடரல் நாடு’ (சமஷ்டி நாடு) போன்ற லேபல்கள் (Labels) இருக்கக்கூடாது என அரசியல் யாப்பை வரைந்த குழுவினர் முடிவு செய்தனர்.

அடுத்து இலங்கையின் அரசியல் வரலாற்றில் ‘பெடரலிசம்’ (சமஷ்டி) என்ற சொல்லாடல் எப்போது ஆரம்பித்தது? அது பின்னர் இன்று வரை என்னென்ன விதமான திரிபுகளுடன் பேசப்பட்டு வருகிறது என்பதை எதிரிசிங்க விவரித்துக் கூறுகிறார். ‘Federalism in Ceylon’s Political Discourse’ என்ற உப தலைப்பில் அவர் கூறியிருப்பனவற்றை அடுத்து நோக்குவோம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் சமஷ்டி என்ற அரசியல் சொல்லாடல்

சமஷ்டி என்ற அரசியல் சொல்லாடல் (Political Discourse) 1920களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களால் முதன் முதலாகத் தொடக்கி வைக்கப்பட்டது. அவர் அப்போது இளைஞராகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுத் திரும்பிய ஒருவராகவும் இருந்தார். 1920களின் பிற்பகுதியில் டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு வந்து பல இடங்களுக்கும் சென்று மக்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது கண்டியின் சிங்களவர்களின் பிரதிநிதிகள் குழுவொன்று, டொனமூர் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த போது இலங்கைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு தேவை எனக் கூறியது. கண்டியின் சிங்களவர்கள், கரைநாட்டுச் சிங்களவர்களில் இருந்து வேறானவர்கள் என்றும், கண்டிய மாகாணம் என்பதை சமஷ்டியின் ஓர் அலகாக ஏற்றுத் தமக்குச் சுயாட்சி (Autonomy) அதிகாரங்கள் தரப்பட வேண்டும் எனவும் அக்குழுவினர் டொனமூர் ஆணைக்குழுவினரைக் கேட்டனர். அக்குழுவினர் இலங்கை மூன்று தனித்தனி மாகாணங்களைக் கொண்ட சமஷ்டியாக இருத்தல் வேண்டும் எனவும் கோரினர்.

அவர்கள் உபயோகித்த சொற்தொடர்களும், மொழியும், வாதங்களும் (Language and Arguments) இன்று தமிழர்கள் பேசுபவற்றை ஒத்தனவாய் இருந்தன.

கண்டியில் அக்காலத்தில் ‘கண்டி மக்களின் தேசிய அசெம்பிளி’ (Kandyan National Assembly) என்ற அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. இலங்கைத் தேசிய காங்கிரசில் (Ceylon National Congress) உறுப்பினர்களாக இருந்த பல அரசியல் தலைவர்கள் அந்த அமைப்பில் இருந்து விலகி ‘கண்டி மக்களின் தேசிய அசெம்பிளி’ என்ற அமைப்பில் சேர்ந்து கொண்டனர். கண்டி மக்களின் தேசிய அசெம்பிளி பிரதிநிதிகள் குழு டொனமூர் ஆணைக்குழுவின் முன்னர் தோன்றி பின்வருமாறு கூறினர்.

“Ours is not a communal claim or a claim for the aggrandisement of a few: It is a claim of a nation to live its own life and realise its own destiny….We suggest the creation of a federal state as in the United States of America…. a federal system….. will enable the respective nationals of the several states to prevent further inroads into their territories and to build up their own nationality”

மேற்படி கூற்றில் உள்ளடங்கியிருக்கும் கருத்துகளைத் தமிழில் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

“எமது கோரிக்கை இனவாதக் கோரிக்கை அன்று; அல்லது இதை ஒருசில தனிநபர்களின் ஆதிக்க மனப்பாங்கை வெளிப்படுத்தும் கோரிக்கையாகவும் கருத முடியாது. இக்கோரிக்கை ஒரு தேசிய இனத்தின் கோரிக்கை (A Claim of a Nation). அத்தேசிய இனம் தனது வாழ்வைத் தானே அமைத்துக்கொள்ள விரும்புகிறது. தன் தலைவிதியைத் தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது போன்ற சமஷ்டி அரசை (Federal State) இலங்கையில் நிறுவ வேண்டும் என நாம் விரும்புகிறோம். நாம் ஒரு சமஷ்டி முறை (Federal System) இலங்கைக்கு தேவை என்று கேட்கிறோம். அமெரிக்காவில் உள்ளது போன்ற சமஷ்டி முறையை இங்கு உருவாக்க வேண்டும் எனக் கோருகிறோம். அந்தச் சமஷ்டி முறையில் சேர்ந்துள்ள பல அரசுகளில் ஒவ்வொரு மாநில அரசும் தனது புவியியல் பரப்புகளை (Territories) வெளியில் இருந்து வரும் ஊடுருவல்களிலிருந்து தடுத்து நிறுத்தி, தமது தேசிய இனத்தை (Nationality) வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல முடியும்.”

கண்டி மக்களின் பிரதிநிதிகளின் மேற்படி கூற்றை மேற்கோள் காட்டும் றொகான் எதிரிசிங்க, இன்று தமிழ்த் தேசிய அரசியல் குழுக்களின் மொழியை ஒத்த மொழியில் கண்டியர்கள் 1920களில் பேசினர் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

1972 அரசியல் யாப்பு

1948இன் பின்னர் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு அரசியல் யாப்பான 1972இன் அரசியல் யாப்பில் முதல் தடவையாக ‘ஒற்றையாட்சி அரசு’ (Unitary State) என்ற ‘லேபல்’ ஒட்டப்பட்டது. இவ்வாறு இலங்கை அரசை ஒற்றையாட்சி அரசு என்று அடையாளப்படுத்திய அரசியல் பின்புலத்தை நோக்கும்போது, இதுவொரு வக்கிரமான செயல் என்றே கூற வேண்டும். இச்செயல் தமிழ்மக்களின் முகத்தில் அறைந்தது போன்ற ஓர் அவமதிப்பு என்றும் கூறலாம். 1972க்கு முந்திய காலத்தில் பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை, டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை என்னும் இரு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. அவ்வுடன்படிக்கைகளில் தமிழ் மக்களின் குறைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதோடு, அதிகாரப் பகிர்வு (Devolution of Power) வழங்குவதற்கான உடன்பாடும் காணப்பட்டது.

இவ்வாறான உடன்படிக்கைகள் இரண்டிலும் பொருத்திக் கொண்ட விடயங்கள் உதாசீனம் செய்யப்பட்டிருந்த பின்னணியில் 1970 பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டது. அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“இலங்கையின் தமிழ்பேசும் மக்கள் சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு (Federal-type of Constitution) வேண்டும் என்றும், அத்தகைய அரசியல் யாப்பின் மூலமே தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் நம்புகிறார்கள். சமஷ்டி முறையின் கீழ் தமது அலுவல்களைத் தாமே நிர்வகித்துக் கொள்ளவும், தம்மை அழிவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என நம்புகிறார்கள். அத்தகைய முறை ஒன்றின் கீழ்தான் தமிழ் பேசும் மக்கள் கௌரவத்துடன் வாழ முடியும் எனவும், தமது பிறப்புரிமையான சுதந்திரத்தையும், பிரஜைகளுக்குரிய சமத்துவத்தையும் உடையவர்களாகத் தமது சிங்களச் சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.”

தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் காந்தியின் அகிம்சை வழியிலான அமைதிவழிப் போராட்டமான சத்தியாக்கிரகத்தில் நம்பிக்கை கொண்டு செயற்பட்டார். அவரது செயற்பாடுகள் ஜனநாயக – அரசியல் வழிமுறையாகும். இந்த அணுகுமுறை தோல்வியடைந்து விட்டது என தமிழர்களில் பலர் அக்காலத்தில் உணர்ந்தார்கள். இக்காரணத்தால் தமிழ் மக்களிடையே இருந்த கிளர்ச்சிவாதிகள் 1970 பாராளுமன்றத் தேர்தலின் போது, பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்டார்கள். இந்த வேட்பாளர்களுக்குத் தமிழரசுக் கட்சி தனது உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தியது. அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பிரிவினைக் கோரிக்கையை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக அமைந்தது.

“It is our firm conviction that division of the country in any form would be beneficial neither to the country nor the Tamil speaking people. Hence we appeal to the Tamil speaking people not to lend their support to any political movement that advocates the bifurcation of the country.”

தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடங்கியுள்ள மேற்படி கூற்று தமிழரசுக் கட்சி பிரிவினைவாதம் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததை எடுத்துக்காட்டுகிறது. இக்கூற்றின் தமிழாக்கம் வருமாறு:

“நாட்டைப் பிரிப்பதனால் இலங்கைக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை; அதனால் தமிழ்பேசும் மக்களுக்கும் நன்மை இல்லை. ஆகையால் நாட்டைப் பிரிக்கும் கொள்கையுடைய அரசியல் இயக்கங்களுக்கு தமிழ்பேசும் மக்கள் ஆதரவளிக்கக் கூடாது என நாம் கேட்டுக்கொள்கிறோம்.”

இந்தப் பின்னணியில் இலங்கையின் அரசியல் யாப்பில் ‘ஒற்றையாட்சி’ என்ற அடையாள ‘லேபலை’ பொறிக்கும் தேவை எதுவும் இருக்கவில்லை. சோல்பரி அரசியல் யாப்பும் அத்தகைய ‘லேபலை’ கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்ல, உலகின் எந்தவொரு ஜனநாயக நாட்டினதும் அரசியல் யாப்பிலும் இத்தகைய பிரகடனத்தைக் காண முடியாது. 

ஒற்றையாட்சித் தீர்மானத்தை அரசியல் யாப்புப் பேரவையின் (Constitutional Assembly) அமர்வில் முன்வைத்து உரையாற்றிய டாக்டர் கொல்வின் ஆர்டி. சில்வா, “எமக்கு ஞாபகத்தில் உள்ள காலம் தொட்டு இலங்கை ஒற்றையாட்சி அரசு முறையுடையதாகவே இருந்தது (From the time we can remember Sri Lanka had been a unitary state)” என்று குறிப்பிட்டார். நாடு முழுமையினதும் நன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது ஒற்றையாட்சி என்ற ‘லேபல்’ அவசியமானது என்று அவர் வாதம் புரிந்தார்.

இத்தீர்மானத்திற்கு எதிரான விமர்சனத்தை உடுவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம் முன்வைத்தார். அரசியல் யாப்புப் பேரவையில் அவர் உரையாற்றும் போது அரசியல் யாப்புக்கு நாட்டின் எல்லா மக்கள் சமூகங்களினதும் (Communities) உடன்பாடும் சம்மதமும் அவசியம் எனக் குறிப்பிட்டார். சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மீது அவர்களின் சம்மதம் இல்லாமல் ஓர் அரசியல் யாப்பைத் திணிப்பதன் விளைவுகள் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இலங்கைக்கு ஏன் சமஷ்டி அரசியல் முறை அவசியம் என்பதை எடுத்துக்காட்டி ஆணித்தரமான வாதங்களை முன்வைத்தார். பல இனத்துவக் குழுக்கள் வாழும் பன்மைத்துவச் சமூகங்களுக்கு சமஷ்டி முறையே மிகப் பொருத்தமானது. இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டி அரசைத் தோற்றுவிப்பதன் மூலம் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி செய்யவில்லை; மாறாக வேற்றுமையில் ஒற்றுமையைக் கட்டி வளர்ப்பதற்கே (To achieve unity in diversity) விரும்புகிறது என்று குறிப்பிட்ட அவர், என்றோ ஒரு நாள் இலங்கையில் சமஷ்டி அரசுமுறை ஏற்படுத்தப்படுவது உறுதி என்றும் கூறினார். சோவியத் ரஷ்யாவிலும், யுகோசிலாவியாவிலும் சமஷ்டி முறை இருப்பதால் அந்நாடுகளில் இனங்களுக்கிடையே ஒற்றுமை இருப்பதாகவும் வி. தர்மலிங்கம் குறிப்பிட்டார்.

வி. தர்மலிங்கம் அவர்களின் உரைக்கு எதிர்வினையாக கம்யூனிஸ்ட் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சரத் முத்தேட்டுவவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ரட்ணே தேசபிரிய சேநாயக்க என்ற பாராளுமன்ற உறுப்பினரும் தமது உரைகளில் கூறியவை கவனிப்புக்குரியவை.

கம்யூனிஸ்ட் கட்சியின் சரத் முத்தேட்டுவ, சோவியத் ரஷ்யாவிலும் யுகோசிலாவியாவிலும் சமஷ்டி முறை இருப்பதால்தான் இன ஐக்கியம் உள்ளது என்று கூறுவது உண்மையல்ல என்றார். அந்நாடுகளில் உற்பத்தி, பரிவர்த்தனை என்பனவற்றுக்கான சாதனங்களும், சொத்துகளும் பொது உடமையாக உள்ளன. அதாவது, அங்கு சோஷலிச முறை செயற்பாட்டில் உள்ளது; அதுவே இன ஐக்கியத்திற்கு உண்மையான காரணம் என்றார்.

ரட்ணே தேசபிரிய, சோஷலிச அபிவிருத்தித் திட்டத்தை (Socialist National Development Plan) தமது அரசாங்கம் திறமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒற்றையாட்சி அரசு முறை தேவை என்றார். இவர்களிருவரும் சிங்கள தேசியவாதத்தின் ஒற்றையாட்சித் திட்டத்திற்கு ஆதரவான வாதத்தை சோஷலிசக் கருத்தியல் நோக்கில் (Socialist Ideological Perspective) முன்வைத்தமையைக் காண முடிகிறது.

1972 அரசியல் யாப்பின் பிரிவு 45 (1)

டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா 1972 அரசியல் யாப்பின் சிற்பி ஆவார். அவர் வரைந்தளித்த அரசியல் யாப்பின் பிரிவு 45 (1), இலங்கையில் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இனிமேல் இடமில்லை என்ற வகையிலான ஏற்பாட்டைச் செய்திருப்பதை றொகான் எதிரிசிங்க எடுத்துக்காட்டுகிறார். அப்பிரிவு வருமாறு:

“The national state assembly may not abdicate, delegate or in any manner alienate its legislative power, nor may it set up an authority with any legislative power other than the power to make subordinate laws.”

மேற்படி பிரிவை அதன் வாசகங்களில் சிறிதளவும் மாற்றம் செய்யாமல் அப்படியே 1978இன் அரசியல் யாப்பில் சேர்த்துள்ளார்கள். ஆக 1972, 1978 என்ற இரு அரசியல் யாப்புகளும் உருவாக்கியிருக்கும் பிரச்சினை தீர்க்கப்பட முடியாத பிரச்சினையாகி விட்டது. இதை நாம் தமிழ் வாசகர்களுக்காக விளக்கிக் கூற வேண்டியுள்ளது.

  1. தேசிய அரசுப் பேரவையின் (பாராளுமன்றம்) சட்டவாக்க அதிகாரம் (Legislative Power) கையளிக்கப்படவோ அல்லது வேறு எந்த வகையிலும் பிரித்தெடுக்கப்படவோ முடியாது என்றும், சட்டவாக்க அதிகாரம் உடைய வேறு எந்த அதிகாரத்துவ நிறுவனத்தையும் நிறுவவும் முடியாது என்றும் 45 (1) பிரிவு கூறுகிறது.
  2. ஆயினும் ஒரே விதிவிலக்கு இருக்கிறது. துணைநிலைச் சட்டவாக்க (Subordinate Legislation) அதிகாரங்களை ஏதேனும் அதிகார நிறுவனத்திற்கு கையளிக்கலாம்.

இப்பிரிவு மாகாணசபைகளிடமோ, வேறு எந்தவகையான அரசு அலகுகளிடமோ சட்ட ஆக்க அதிகாரத்தை வழங்குவதைத் தடை செய்கிறது. ஏதாவது அதிகாரங்களை மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் உள்ள நிறுவனங்களுக்கு வழங்குவதென்றால், அவை உள்ளூராட்சி உபவிதிகள் (By-Laws) போன்ற துணைநிலைச் சட்டங்களை ஆக்கும் அதிகாரங்களாகவே இருக்க வேண்டும் என்றும் 45 (1) பிரிவு கூறுகிறது. 1978 அரசியல் யாப்பு இப்பிரிவை அப்படியே சேர்த்துக் கொண்டதன் மூலம் இதனை முற்றாகவே மாற்ற முடியாத அரசியல் யாப்பு ஏற்பாடாக மாற்றிவிட்டது என்றே கூறலாம்.

மாகாணசபைகள் உருவாக்கப்படுவதை எதிர்த்து சிங்கள ஆணைக்குழு (The Sinhala Commission) ஒன்றை நிறுவி, விசாரணை நடத்தி, அவ்விசாரணை பற்றிய அறிக்கை ஒன்று சிங்களத் தேசியவாதக் குழுக்களால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையிலும், சிங்களத் தேசியவாதிகளின் பிற வெளியீடுகளிலும் அரசியல் யாப்பின் ஒற்றையாட்சி என்ற அரசின் தகுதியை மாற்ற முடியாது என்று வாதிடப்பட்டது. அரசியல் யாப்பின் இந்த அம்சம் அரசியல் யாப்பின் அடிப்படைக் கூறு (The basic feature of the constitution) என்றும், ஓர் அரசியல் யாப்பின் அடிப்படைக் கூறுகளை யாப்புத் திருத்தம் (Constitutional Amendment) மூலம் திருத்த முடியாது என்றும் வாதிடப்பட்டது.

ஒற்றையாட்சி வாதமும் பிரிவினை இயக்கத்தின் தோற்றமும்

1972 அரசியல் யாப்பு ஒற்றையாட்சி வாதம் (Unitarianism) என்னும் தத்துவத்தை இலங்கையின் அரசியல் யாப்பினுள் புகுத்தியது. 1956ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் அரசியல் யாப்பின் ஒரு பிரிவாக ஆக்கப்பட்டது. பௌத்த மதத்திற்கு முதன்மையிடம் அளிக்கும் பிரிவும் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டது.

இப்பின்னணியில் 1972 அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்ததும், பிரிவினை இயக்கம் தமிழர்களிடையே படிப்படியாகச் செல்வாக்கைப் பெறத் தொடங்கியது. தமிழ் அரசியல் தலைவர்களால் சமத்துவமும் அரசியல் தன்னாட்சியும் (Equality and Political Autonomy) என்ற கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்துச் செயற்பாடுகளும் தோல்வியில் முடிந்ததைத் தமிழ் இளைஞர் இயக்கம் உணர்ந்து கொண்டது.

சோல்பரி அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த சிறுபான்மையினருக்கான காப்பீடுகள் (Minority Safeguards) நீக்கப்பட்டு, சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்திற்கும் மேற்குறிப்பிட்டவாறு அரசியல் யாப்பில் உயர் அந்தஸ்து வழங்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) என்ற அரசியல் அமைப்பை 1975இல் உருவாக்கின.

அவ்வமைப்பின் முதலாவது மாநாடு 1976ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டையில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் ‘தமிழ்த் தேசம், நாட்டின் ஐக்கியத்திற்குப் பங்கம் இல்லாதபடி அரசியல் யாப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை’ 1972 அரசியல் யாப்பு இல்லாமல் செய்துவிட்டது எனக் குற்றம்சாட்டியது.

அத்தீர்மானம் இறைமையுள்ள சோஷலிச தமிழீழ அரசை (Sovereign Socialist State of Tamil Eelam) அமைக்கும் வரை மன உறுதியோடு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்படி தமிழ் இளைஞர்களை வேண்டிக் கொண்டது. வட்டுக்கோட்டையில் நடைபெற்ற 1976ஆம் ஆண்டு மாநாட்டுடன் தமிழ்த் தேசியப் போராட்டம் தீவிரமடைந்தது.

1978 அரசியல் யாப்பு

1977ஆம் ஆண்டு தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது. அத்தேர்தலில் புதிய அரசியல் யாப்பு ஒன்றினை இயற்றுவதற்கான மக்கள் ஆணையையும் அக்கட்சி பெற்றிருந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு ஜனாதிபதி முறை, விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்ற இரு முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இம்மாற்றங்களோடு அவ்வரசியல் யாப்பு ஒற்றையாட்சி ‘லேபல்’ (Unitary Label) என்பதையும் இணைத்தது. ஒற்றையாட்சி என்பதை இலகுவில் திருத்த முடியாத அரசியல் யாப்பு உறுப்புரையாக மாற்றி, பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமே திருத்தப்பட முடியும் என்பதையும், சர்வசன வாக்கெடுப்பு மூலம் (Referendum) மக்களின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் எனவும் விதித்தது.

சமஷ்டி, தமிழர்களின் அரசியல் கோரிக்கை (Tamil Political Demand) என்ற தன்மையுடையதாகவே 1970களின் இறுதிவரை நீடித்த பின்னணியில், 1980களில் ‘Council For Liberal Democracy – CLD’ (தாராண்மை ஜனநாயகத்திற்கான கவுன்சில்) என்ற இயக்கம் சமஷ்டிக் கோரிக்கைக்கான தனது ஆதரவை வெளியிட்டது. இந்த ‘CLD’ என்ற அமைப்பில் இலங்கையின் எல்லா இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருந்தனர்.

1987இல் இவ்வியக்கம் Liberal Party (லிபரல் கட்சி) என்ற கட்சியாக உருவாக்கம் பெற்றது. லிபரல் கட்சியின் தலைவர்கள் இலங்கைக்கு சமஷ்டி அரசியல் முறை வேண்டும் என்பதை முன்வைத்தனர். இலங்கையின் இனத்துவப் பிரச்சினையை (Ethnic Conflict) தீர்வு செய்வதற்கு சமஷ்டி முறையே பொருத்தமானதோர் அரசியல் முறை என இக்கட்சியினர் கூறினர்.

1972 முதல் இலங்கையில் மேலோங்கியிருந்த அரசியல் ஏதேச்சதிகாரம் (Political Authoritarianism) என்ற கெடுதல் போக்கிற்கு மாற்றான கொள்கையை லிபரல் கட்சி முன்வைத்தது. லிபரல் கட்சியின் செயலாளர் நாயகம் சானக அமரதுங்க (Chanaka Amaratunga), சமஷ்டியை ஆதரித்து 1986இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில் லோர்ட் ஆக்டனை (Lord Acton) மேற்கோள் காட்டி பின்வருமாறு குறிப்பிட்டார்.

“Of all the checks on democracy, federation has been the most efficacious and the most congenial… the federal system limits and restrains the sovereign power by dividing it, and by assigning to the government only certain defined rights. It checks not only the majority but the power of the whole people, and it affords the strongest basis for a second chamber, which has been found to be the essential security for freedom in every true democracy.’

ஆட்சியாளர்கள் அதிகாரத்தைத் துஸ்பிரயோகம் செய்வதைத் தடுப்பதற்கு சமஷ்டி முறையின் இறைமைப் பிரிவு (Dividing Sovereign Power) மிகச்சிறந்த வழிமுறை என்பதை மேற்குறிப்பிட்ட மேற்கோள் எடுத்துக்காட்டுகிறது.

எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் (Parliamentary Select Committee) 1991 அறிக்கை, சமஷ்டி முறைக் கருத்தை பரிசீலனைக்கு உகந்த சிறந்த கருத்தாகச் சிபார்சு செய்தது. அக்குழு 13ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த அதிகாரப் பகிர்வை விடக் கூடியளவு அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதை ஏகமனதாக ஏற்றுச் சிபார்சு செய்திருந்தது.

குழுவின் அறிக்கையில் அதிகாரப் பகிர்வு ‘இந்தியாவின் அரசியல் யாப்பில் உள்ளது போன்றதாக இருத்தல் வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மங்கள முனசிங்க குழுவின் அறிக்கை, இலங்கைக்கு இந்தியாவில் உள்ளதைப் போன்ற அரைகுறைச் சமஷ்டி முறையை (Quasi-Federal Constitutional Arrangement) சிபார்சு செய்தது என்று அக்காலத்தில் விளக்கம் கூறப்பட்டது.

தொடரும்.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்