1991 - 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
30 நிமிட வாசிப்பு

1991 – 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் – பகுதி 1

July 1, 2026 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

இக்காலகட்டம் ஈழத்தமிழர் அரசியல் பிராந்திய மட்டத்தில் இருந்து விலகி, சர்வதேச மட்டத்திற்கு நகர்ந்த காலகட்டமாகும். ராஜீவ் காந்தியின் மரணத்துடன் இந்தியா ஈழத்தமிழர் அரசியலில் நேரடியாகத் தலையிடுவதை நிறுத்திக் கொண்டது. இதுவே சர்வதேச மட்டத்திற்கு ஈழத்தமிழர் அரசியல் செல்வதற்கான வாய்ப்புகளை கொடுத்து இருந்தது.

ஈழத்தமிழர் அரசியல் இலங்கை மட்டத்தில் இருந்த போது இலங்கை அரசு மாத்திரமே எதிரியாக இருந்தது. அது பிராந்திய மட்டத்திற்குச் சென்றபோது இலங்கை அரசும் பிராந்திய அரசு இந்தியாவும் எதிரிகளாக வந்தன. அது சர்வதேச மட்டத்திற்குச் சென்ற போது இலங்கை அரசு, பிராந்திய அரசு, சர்வதேச வல்லரசுகள் என்பன எதிரிகளாக வந்தன. இவையனைத்தும் சேர்ந்து ஆயுதப்போராட்டத்தை அழித்தமையே வரலாறாகும்.

ரஞ்சன் விஜேரட்ணா கொலை

இவர் வல்பொல முதலிகே ஜோர்ஜ் ஏர்கிலிஸ் விஜேரட்ணாவுக்கும் ரொசலிண்ட் மரியா சேனாநாயக்கவுக்கும் பிறந்தார்; குருத்தலாவை புனித தோமையார் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கல்கிசை புனித தோமையார் கல்லூரியில் மேல்நிலைக் கல்வியையும் மேற்கொண்டார். பின்னர் பெருந்தோட்டத் துறையில் அதிகாரியாக இணைந்து பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டு விவசாயத்துறை ஆராய்ச்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பெருந்தோட்டத் துறைக்குப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இலங்கை நீள் துப்பாக்கி படையின் லெப்டினன்ட் கேணலாக நியமிக்கப்பட்டார்.

1988ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சபைத்தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தனது அரச பணிகள் அனைத்திலிருந்தும் விலகினார். பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று பாதுகாப்புப் பிரதி அமைச்சராகப் பணியாற்றினார்.

1991 மார்ச் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டம், அராலியில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடாத்திய தூரத்தில் இருந்து இயக்கும் ஊர்தி வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார். இதன் போது 13 பொதுமக்கள், 5 அமைச்சு பாதுகாப்பு ஊழியர்கள், அமைச்சர் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். லெப்டினன்ட் கேணல் ரஞ்சன் விஜேரட்ணா இறப்பின் பின்னர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். கொத்தலாவலை பாதுகாப்பு பயிலகம் (தற்போது கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம்) அவருக்கு சட்டத்துறையில் முனைவர் பட்டத்தை வழங்கியது.

கொக்கட்டிச்சோலை படுகொலைகள் (Kokkadicholai Massacre)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் உள்ள கொக்கட்டிச்சோலை என்ற ஊரில் தமிழ் மக்கள் மீது இத்தாக்குதல் இடம்பெற்றது. இத்தாக்குதல் 1991ஆம் ஆண்டு யூன் மாதம் 12ஆம் திகதி அன்று நடத்தப்பட்டது. இதன் போது மொத்தம் 152 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகளை விசாரணை செய்ய இலங்கை அரசு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. படுகொலைகளை நடத்திய இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த கட்டளை அதிகாரி தவறிவிட்டதாக ஆணைக்குழு கண்டறிந்தது. அவரைப் பதவியில் இருந்து அகற்றுமாறு ஆணைக்குழு பரிந்துரைத்தது. அத்துடன் படுகொலைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரில் 19 பேரை ஆணைக்குழு அடையாளம் கண்டது. கொழும்பில் நடத்தப்பட்ட இராணுவ விசாரணைகளில் இந்தப் 19 பேரும் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட போதிலும், பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கோவை மகேசன் மரணம்

இவர் ஈழத் தமிழ்ப் பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். சுதந்திரன் வாரப் பத்திரிகை, மற்றும் சுடர் மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஈழத்தமிழின விடுதலையே இவரது உயிர்மூச்சாக இருந்தது. நாட்டுப்பற்றாளராக, இனப்பற்றாளராக தன் இறுதி மூச்சு உள்ளவரை பணியாற்றியவர்.

இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கில் 1938 மார்ச் 22 இல் பிறந்த கோவை மகேசனின் இயற்பெயர் மகேஸ்வர சர்மா. மகேஸ்வர சர்மா என்ற பெயரை மகேசன் எனவும், கோப்பாயைக் குறிக்க கோவை என்றும் சேர்த்துத் தனது பெயரைக் கோவை மகேசன் என எழுதினார். தந்தையார் பெயர் சோ. இரத்தினசபாபதி ஐயர். தாயார் பெயர் இரத்தினம்மா. மனைவி பெயர் விசாலாட்சி. சிறு வயதிலேயே தாயை இழந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கோப்பாய் சைவத் தமிழ் கலவன் பாடசாலையிலும் (நாவலர் பாடசாலை), மேற்படிப்பை கோப்பாய் கிறித்தவக் கல்லூரியிலும் கற்றார். சிரேஷ்ட தராதர (கலைப்பிரிவு) சோதனையில் சிறப்புத் திறமைகளுடன் சித்தியடைந்தார். சில காலம் யாழ்ப்பாணம் கச்சேரியில் தேர்தல் திணைக்களத்தில் பணியாற்றினார்.

இளவயதிலேயே தமிழ்ப்பற்று மிகுந்தவராக இருந்தார். பேரறிஞர் அண்ணாவின் எழுத்துகளால் கவரப்பட்டார். தற்காலிக வேலை மூலம் கிடைத்த சொற்ப தொகையில் பெரும் பகுதியை புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்கவே செலவிட்டார். குடும்பத்தில் வசதிகள் குறைவாக இருந்தபோதிலும் அவரது தமிழ்ப்பற்று அவ்வாறு செலவு செய்ய வைத்தது.

இவரது இளமைக்காலத்தில் இலங்கையில் தமிழ் அரசியல் உருவாகத் தொடங்கியது. தமிழ்ப்பற்று மிக்க இவர் தமிழ் அரசியலால் கவரப்பட்டார். தந்தை செல்வா உருவாக்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். 1956 ஆம் ஆண்டு கோப்பாய் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கு. வன்னியசிங்கத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.

மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பெருஞ்சித்திரனார், பழ. நெடுமாறன், பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் போன்ற பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

லலித் அத்துலத் முதலி கொலை

இவர் 1972ஆம் ஆண்டு முன்னாள் இலங்கை பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் அழைப்பை ஏற்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார். அத்துலத்முதலி, அகலவத்தை தேர்தல் தொகுதிக்கான கட்சியின் முதன்மை அமைப்பாளராக ஆக்கப்பட்டார். அத்துலத்முதலி 1977 ஆண்டின் இலங்கை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக இரத்மலானை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கை நாடாளுமன்றம் சென்றார். இவருக்கு வர்த்தக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு ஓர் ஆண்டின் பின்னர் துறைமுக அமைச்சும் கொடுக்கப்பட்டது. பின்னர் தேசிய பாதுகாப்பு அமைச்சும் கொடுக்கப்பட்டது. 1988 ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் விடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்கு முயன்றார். எனினும் இதில் ரணசிங்க பிரேமதாசா வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் பிரேமதாச அதிபரான போது இவருக்குப் பிரதமர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் வேளாண்மை அமைச்சும் பின்னர் கல்வி – உயர்கல்வி அமைச்சுமே கொடுக்கப்பட்டது.

பிரேமதாசாவின் தலைமையில் விரக்தியுற்ற அத்துலத்முதலி அவர் மீது நம்பிக்கையில்லா மசோதா ஒன்றைக் கொண்டு வந்து தோல்வியுற்றார். இதனால் இவரும் இவருக்கு ஆதரவளித்தவர்களும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர். ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிய இவர் தனது தலைமையில் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். 1993 ஏப்ரல் 23 ஆம் திகதி கொழும்பு கிருலப்பனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அரசு விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்தி, அடுத்த நாள் சம்பவ இடத்திற்கு அண்மையில் சயனைட் உண்டு இறந்து காணப்பட்ட தமிழ் இளைஞரையே கொலையாளி என்றது. இருப்பினும் அப்போதைய அதிபர் பிரேமதாச மீதும் சந்தேகம் நிலவி வந்தது.

யாழ்ப்பாணப் பேச்சுவார்த்தை

1994இல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்த சந்திரிகா உடன்பட்டுக் கொண்டார். அவரின் நிலைப்பாடு பெரும்பான்மை இனத்துடன் சிறுபான்மை இனமாகிய தமிழர்களை இணங்கிப் போகச் செய்வது தான். இலங்கை அரசிலே சந்திரிகாவின் ஆட்சிக்காலமானது தமிழருக்கு எதிரான மிகக் கொடூரமான வரலாற்றுக் கட்டமாக அமைகிறது. சந்திரிகா 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி பிரதம மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதன்போது தமிழர்களிடம் நல்ல ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக அத்தியாவசியப் பொருட்கள் மீதான தடை நீக்கம், தமிழ் கைதிகளின் விடுதலை என பல்பரிமாண இயல்பைக் கொள்கைகளாக வெளிப்படுத்துவது போல் செயற்பட்டார். இதனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திரிகா மீது சந்தேகம் கொண்டார். தமது நீண்ட கால கோரிக்கையை வெளிப்படுத்தக் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் இடம்பெற்ற முக்கியமான விடயங்களாவன:

  1. தமிழர் தாயகத்தின் இயல்பு நிலையைத் தோற்றுவிக்க பொருளாதாரத் தடைகளை முற்று முழுதாக நீக்கிவிடல்.
  2. நிரந்தரமான போர் நிறுத்தம் செய்து நிபந்தனையற்ற பேச்சுகளை ஆரம்பித்தல்.

இவ்விரு கோரிக்கைகளை முதன்மைப்படுத்திய கடிதத்தின் பிரதி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக புதிய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்கடிதமானது 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது. அதற்குப் பதில் கடிதத்தை 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வாயிலாக தலைவர் பிரபாகரனுக்கு சந்திரிகா அனுப்பி இருந்தார். அதில் தலைவர் பிரபாகரன் கூறிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளமை தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளை முற்று முழுதாக நீக்கிவிடுமாறு பிரபாகரன் விடுத்த கோரிக்கைகள் சார்ந்து சந்திரிகா தனது கடிதத்தில் எதுவுமே குறிப்பிடவில்லை. அத்துடன் போர் நிறுத்தம் சார்ந்தும் எதுவும் தெரிவிக்கவில்லை. இதன் பின்னர் 1994 செப்டம்பர் 12 அன்று மேற்கூறிய குறைபாடுகள் காரணமாக மீண்டும் ஒரு கடிதம் சந்திரிகாவுக்கு பிரபாகரனால் அனுப்பப்பட்டது. அதில், விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழு பிரதிநிதிகளை அவர் அறிமுகப்படுத்தியதுடன் போர் நிறுத்தம் குறித்து தான் தெரிவித்த யோசனையை அரசாங்கம் புறக்கணித்ததையிட்டு கவலையையும் வெளிப்படுத்தியிருந்தார். இயல்பு நிலையை மீளக் கொண்டுவந்து அமைதியைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் தெரிவித்து எழுதியிருந்தார். இம்மடலுக்கு சந்திரிகாவிடம் இருந்து எதுவித பதிலும் கிடைக்கவில்லை. இந்நாட்களில் சிறீலங்கா கடற்படை மற்றும் வான்படை என்பவற்றுக்கும் விடுதலைப்புலிப் போராளிகளுக்கும் இடையில் சண்டைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன.

சிறீலங்கா கடற்படைக்குச் சொந்தமான ‘சாகரவர்த்தனா’ எனப்படும் போர்க்கப்பல் மன்னார்க் குடாவில் கடற்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது 24 கடற்புலிகள் கொல்லப்பட்டார்கள். போர்க்கப்பலின் தளபதியும் மற்றும் ஒரு கடற்படை அதிகாரியும் கடலிலிருந்து மீட்கப்பட்டு போர்க்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்கள் கழித்து 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று பிரபாகரனுக்கு சந்திரிகா அம்மையாரினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் அரசதரப்பு பிரதிநிதிகள் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் அக்கடிதத்தில் சந்திரிகாவினால் பேச்சுவார்த்தைக்கு என நியமிக்கப்பட்டவர்கள் இனப்பிரச்சினை பற்றிய ஆழமான அறிவைப் பெற்றவர்களாக இருக்கவில்லை என்பது புலிகளின் தலைமைப் பீடத்திற்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.

புலிகளின் பேச்சுவார்த்தைப் பிரதிநிதிகள்:

1. திரு.எஸ். கரிகாலன் (உதவி அரசியல் பொறுப்பாளர்)

2. திரு.எஸ். இளம்பரிதி (அரசியல் பொறுப்பாளர், யாழ்ப்பாண மாவட்டம்)

3. திரு.ஏ. ரவி (பொறுப்பாளர், பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்)

4. திரு.எஸ். டொமினிக் (பொறுப்பாளர், பொது நிர்வாகப் பிரிவு )

அரசதரப்பு பிரதிநிதிகள்: 

1. திரு.கே. பலபத்தபென்டி (பிரதம மந்திரியின் செயலர், சட்டத்தரணி)

2. திரு. லயனல் பெர்னான்டோ (உல்லாசப் பிரயாணத்துறை, தகவல் அமைச்சுச் செயலர்)

3. திரு.ஆர். ஆசீர்வாதம் (இலங்கை வங்கியின் அதிபர்)

4. திரு.என்.எல். குணரெட்னா (அதிபர், திட்ட அமைப்பு இணையம், கட்டடக்கலை நிபுணர்)

குறித்த நிபுணர்கள் குழுவினது கடிதத்தைத் தொடர்ந்து 1994 அக்டோபர் 13ஆம் திகதி பேச்சுவார்த்தை நாளாக உறுதிப்படுத்தப்பட்டது. இதற்காக அரசதரப்பு வருகை தந்து பலாலி விமானத்தலத்தில் தரையிறங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதன் போது பேசப்படும் விடயங்கள் என அரசு தரப்பினால் தீர்மானிக்கப்பட்டவைகளாக:

1. அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து, மிகக் குறைந்த விலையில் இப்பொருட்களின் விநியோகம்.

2. மின்சார விநியோகம், வீதிகள், நீர்ப்பாசன வசதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகளின் சீரமைப்பு.

3. யாழ்ப்பாண நூலகத்தின் புனர்நிர்மாணம்.

4. போர் நிறுத்தத்திற்கு வழி செய்யும் வகையில் பகைமை நடவடிக்கைகளை நிறுத்துவது பற்றி ஆராய்தல்.

5. மற்றும் முக்கிய விடயங்கள்.

எனினும் மையப் பிரச்சினையாகக் காணப்பட்ட பொருளாதாரத் தடை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது புலிகளின் தரப்பினருக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

முதல் கட்டப் பேச்சுவார்த்தைகள் 

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் மத்தியில் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கு புலிகள் தரப்பினர் உடன்பாடு தெரிவித்தனர். அரசாங்கம் முன்மொழிந்த இரண்டு தினங்களில், விடுதலைப் புலிகள் இணங்கிய 13 மற்றும் 14 ஆம் திகதிகளிலேயே இந்த முதற்கட்டப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது முதலாவதாக, யாழ்ப்பாணத்து மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் பொருட்களைக் கொண்டு செல்லுதல் தொடர்பான இன்னல்களைத் தீர்வு செய்வதற்காக சங்குப்பிட்டி – கேரதீவுப் பாதையைத் திறந்துவிடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் முதல் கட்டப் பேச்சின் போது உருப்படியான முடிவுகள் எதுவும் எட்டப்படாமையானது புலிகள் தரப்பினருக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள்

1994 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற இணக்கம் தெரிவிக்கப்பட்டது. சந்திரிகா அம்மையார் கடிதம் ஒன்றை பிரபாகரனுக்கு அனுப்பி இதனை உறுதிப்படுத்தியிருந்தார். இதை விட 1994 ஆம் ஆண்டு காமினி திஸ்ஸநாயக்க கொழும்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் ஒரு மனிதக் குண்டுதாரியினால் கொல்லப்பட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் இந்த அரசியல் கொலைக்கு விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்தினர். சந்திரிகா அரசாங்கம் அவசரப்பட்டு புலிகள் மீது குற்றம் சுமத்தவில்லை. ஆயினும் கொலை குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் கொலைக்கு உரிமையும் கோரவில்லை; மறுக்கவும் இல்லை. இந்தக் கொலையின் பின்னணியில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இணைந்த ஒரு கூட்டுச் சதி உள்ளதாக குற்றம் சுமத்தி கொழும்பு நகரப்புறங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. யாழ்ப்பாணப் பொது நூல் நிலையத்தை தீவைத்துக் கொழுத்தி தமிழரின் விலை மதிக்க முடியாத வரலாற்று நூல்களையும் ஏடுகளையும் நெருப்பில் நாசம் செய்த அந்தப் பண்பாட்டுப் படுகொலை நிகழ்வுக்கு பிரதான சூத்திரதாரியாக விளங்கிய காரணத்தினாலேயே காமினி திஸ்ஸநாயக்க விடுதலைப் புலிகளின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கலாம் என தமிழ் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

காமினியின் கொலைக்கான காரணகர்த்தாக்கள் எனப் புலிகள் மீது ஐக்கிய தேசியக் கட்சி பகிரங்கமாகச் சுமத்திய குற்றச்சாட்டு மற்றும் கூட்டுச் சதி குறித்த விமர்சனங்கள் காரணமாக, சந்திரிகா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் கண்ணும் கருத்துமாக இருந்த சந்திரிகா அம்மையார் சமாதான முயற்சிகளுக்கு உடனடியாக மூடுவிழா நடத்தி அமைதி வேண்டி நின்ற ஆதரவாளர்களைப் பகைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. இதன் காரணமாக, அவர் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்ததோடு, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்குப் பொதுமக்களின் ஆதரவைக் கோரித் தேர்தல் களத்தில் இறங்கினார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக காமினி திஸ்ஸநாயக்கவின் மனைவி சிறீமா திஸ்ஸநாயக்க தேர்தலில் போட்டியிட்டார்.

நெடுங்கேணித் தாக்குதல் 

1994 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் நாள் அன்று புதிய ஜனாதிபதியாக சந்திரிகா பதவிப்பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து புதிய அரசு அதிபராக பதவியேற்றமைக்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக விடுதலைப் புலிகள் இயக்கம் 1994 நவம்பர் 12 தொடக்கம் 19ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தப் பிரகடனம் செய்தது. இச்செய்தியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசாங்கத்திற்கும் தெரிவித்து இருந்தது. ஆனால் அரசாங்கத்திடமிருந்து எதுவித பதிலும் கிடைக்கவில்லை. போர் நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி விடுதலைப்புலி போராளிகள் அமைதி பேணி வந்த நேரத்தில் சிங்கள ஆயுதப்படைகள் புலிகளுக்கு எதிராக பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குடிமனைகள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்களும் நடைபெற்றன. இதன் விளைவாக பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு படுகாயமும் அடைந்தனர்.

இதேவேளை விடுதலைப் புலிகளை ஆத்திரமூட்டும் கோரச் சம்பவமும் வன்னியில் நிகழ்ந்தது. வன்னியில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் சிங்கள இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது பதுங்கி இருந்து தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் சிங்கள இராணுவத்தினர் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான லெப்டினன்ட் கேணல் அமுதன் அவர்களைச் சுட்டுக்கொன்றதுடன் அவரது தலையையும் வெட்டி எடுத்துச் சென்றனர். அமுதனது துண்டிக்கப்பட்ட தலையைத் திருப்பி ஒப்படைக்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் இக்கோரிக்கை சிங்கள இராணுவத்தினரினால் நிராகரிக்கப்பட்டது. இந்நிகழ்வானது புலிகளின் தலைமைப் பீடத்திற்கு ஆத்திரத்தையும் ஆழமான ஏமாற்றத்தையும் கொடுத்தது. இச்சம்பவங்களின் பின்னர் 1994 நவம்பர் 19ஆம் திகதி அன்று பாதுகாப்பு உதவி அமைச்சர் திரு. அனுருத்த ரத்வத்தே, தலைவர் பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் உடனடியாகவே இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் செய்து கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இரண்டாம் கட்டப் பேச்சுகள் ஆரம்பமாக இருந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸ்ஸநாயக்க கொல்லப்பட்டமையினால் தற்காலிகமாகப் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரமுற்ற புலிகள் அமைப்பு நெடுங்கேணித் தாக்குதலுக்கு நீதி கோரி கேணல் அனுருத்த ரத்வத்தேக்கு கடிதம் அனுப்பினர். ரத்வத்தே, பகை நிறுத்த உடன்பாட்டின் பின்னரே பேச்சுகள் ஆரம்பமாகுமெனக் கூறினார்.

1995 ஜனவரி இரண்டாம் நாள் அன்று யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தில் இரண்டாம் கட்டப் பேச்சுகள் இடம்பெற்றன. இம்முறை அரச தூதுக்குழுவில் புதிதாக இரு படைத்துறை அதிகாரிகள் பங்கு கொண்டனர். மூத்த இராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஏ.எஸ். பீரிஸ், கடற்படை அதிகாரியான கேப்டன் பிரசன்னா ராஜரத்தின ஆகியோரே இருவருமாவர். விடுதலைப் புலிகளின் தூதுக்குழுக்களுக்கு அரசியல் துறை பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பகை நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது பற்றியும் அமைதி வழிமுறைகள், நடைமுறைகள், கண்காணிப்பு போன்ற அம்சங்கள் பற்றியும் இரண்டாவது சுற்றுப் பேச்சில் முக்கியமாகப் பேசப்பட்டது. போர் நிறுத்த காலத்தில் எல்லையில் நிலை கொண்டுள்ள இரு தரப்பு படையணிகளும் தம்முடைய 600 மீட்டர் இடைவெளியை சூனியப் பிரதேசமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், சகல விதமான போர் நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

கடற்றளங்களையும் கரையோர இராணுவ முகாம்களையும் அண்மித்த கடற்பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய கடற் பிராந்தியத்தில் மீன்பிடித் தொழிலை வழமை போல செய்யலாமென அரச பிரதிநிதிகள் தெரிவித்தனர். வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மாவட்டங்களில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுக்களை நிறுவவும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை அக்குழுக்களின் தலைவர்களாக நியமிக்கவும் இணக்கம் காணப்பட்டது. போர் நிறுத்தத்தைக் கைவிடுவதனால் 72 மணி நேரக் காலக்கெடு கொடுக்கப்பட வேண்டும் எனவும் முடிவாகியது. போர் நிறுத்த விதிகள், கட்டுப்பாடுகளைக் கொண்டதாக ஏழு அம்ச ஆவணம் ஒன்றும் தயாரிக்கப்பட்டது. பகை நடவடிக்கைகள் நிறுத்தப் பிரகடனத்தில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையின் பெயரில் ஒரே நேரத்தில் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் கைச்சாத்திட்டனர். இதன்படி 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் நாளில் இருந்து போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

பகை நடவடிக்கை நிறுத்தப் பிரகடனம்

மத்தியில் இணக்கம் காணப்பட்ட பகை நடவடிக்கை நிறுத்த அமுலாக்க நடைமுறைகள் வருமாறு:

  1. இந்தக் காலகட்டத்தில் இருதரப்பினரும் எவ்விதப் போர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது. அப்படியான போர் நடவடிக்கை இந்த உடன்பாட்டை மீறுவதாகக் கருதப்படும்.
  2. பாதுகாப்புப் படைகளும் விடுதலைப்புலிப் படையணிகளும் 600 மீட்டர் இடைவெளியை விடுத்து தங்களது தற்போதைய கள நிலைகளில் தரித்து நிற்க வேண்டும். ஆயினும் இருதரப்புப் படைகளும் தத்தம் காவலணி நிலையிலிருந்து 100 மீட்டர் வரை நடமாடலாம். ஆனால் குறைந்தது 400 மீட்டர் இடைவெளியைத் தம்மிடையே வைத்துக் கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் எந்தத் தரப்பினராவது பிரவேசித்தால் அது பகை நடவடிக்கையாகவே கருதப்படும்.
  3. அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, நாட்டின் இறையாண்மையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் தமது சட்டபூர்வமான செயற்பாடுகளில் கடற்படையும் வான்படையும் ஈடுபட்டிருக்கும் அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பகை நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் குறிப்பிட்ட கடற்பிரதேசங்களில் சட்டபூர்வமான மீன்பிடிப்புக்கு இடையூறு விளைவிக்காமலும் செயற்படும்.
  4. எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது குழுவுக்கோ, தனிப்பட்ட நபருக்கோ எதிராக நாசகார வேலைகள், வெடிகுண்டு வெடித்தல், கடத்தல், கொலை புரிதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அதுவொரு பகை நடவடிக்கையாகக் கருதப்படும்.
  5. (அ) மேற்கண்ட உடன்பாட்டு விதிகள் மீறப்படும் சம்பவங்களை விசாரிப்பதற்காக கண்காணிப்புக் குழுக்கள் நிறுவப்படலாம். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு – அம்பாறை ஆகிய பகுதிகளிலும் தேவை எழும் வேறு இடங்களிலும் இந்தக் குழுக்கள் நியமிக்கப்படலாம்.

(ஆ) இரு தரப்பிலிருந்தும் புகார்கள் செய்யப்படும் போது சம்பவங்களை விசாரித்து பிணக்குகளைத் தீர்த்து வைக்க உடன் நடவடிக்கை எடுப்பது குழுக்களின் பொறுப்பாகும்.

(இ) கனடா, நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் இருந்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அமைப்பிலிருந்தும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளும் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோரும் இக்குழுக்களில் அங்கத்துவம் பெறலாம்.

(ஈ) ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அங்கத்தவர்கள் அடங்குவர். வெளிநாட்டுப் பிரதிநிதியே குழுவின் தலைவராகச் செயல்படுவார்.

• அரசாங்கத்தின் சார்பாக இருவர்
• விடுதலைப் புலிகளின் சார்பாக இருவர்
• வெளிநாட்டில் இருந்து ஒருவர்

(உ) இந்தக் குழுவினர் தமது பணிகளைச் செய்வதற்கான நடமாட்டச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது ஒப்பந்தம் செய்து கொண்ட இரு தரப்பினரதும் பொறுப்பாகும்.

(ஊ) நடுநிலையாகவும் துரிதமாகவும் இந்தக் குழுக்கள் செயற்படுவதற்கான வசதிகளை வழங்குவது குறித்து இருதரப்பும் பேசி இணக்கம் காண வேண்டும்.

(எ) உள்ளூரில் உடனுக்குடன் பிரச்சினைகளுக்கு இணக்கம் காணும் நோக்கில் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கும் விடுதலைப் புலிகளின் பிரதேச தளபதிகளுக்கும் மத்தியில் தொடர்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இரு தரப்பினரில் ஒருவர் உடன்பாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தல் கொடுக்கும் வரை போர் நிறுத்தம் தொடரும். விலகும் அறிவிப்புக்கு 72 மணி நேரக் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகள்

1995 ஜனவரி 14ஆம் நாள் அன்று மூன்றாவது கட்டப் பேச்சுகள் யாழ்ப்பாணத்தில் வழமையான இடத்தில் நிகழ்ந்தன. சென்ற கட்டப் பேச்சில் கலந்து கொண்ட அரச பிரதிநிதிகளே இம்முறையும் பேச்சில் கலந்து கொண்டனர். மோதல்களைத் தவிர்த்து அமைதி நிலையை செம்மையாகப் பேணும் வகையில் பகைநிறுத்தச் செயற்பாட்டு விதிகள் திருத்தி அமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் பேச்சுகளின் போது வலியுறுத்தினர். கிழக்கு மாகாணத்தில் மோதல்நிலை ஏற்படும் ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருப்பதாக எடுத்து விளக்கிய புலிகளின் பிரதிநிதிகள், புலிகளின் கெரில்லா அணிகளின் நடமாட்டச் சுதந்திரத்திற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வற்புறுத்தினர். பகை நிறுத்தத்தை சமாதானக் குழுக்கள் சரிவரக் கண்காணிப்பதற்கு ஏதுவாக களநிலை யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு உடன்பாட்டு விதிகளும் கட்டுப்பாடுகளும் மாற்றி அமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும் என பிரதிநிதிகள் அரசு குழுவை வேண்டிக் கொண்டனர். போர் நிறுத்தச் செயற்பாட்டு விதிகளை விரிவுபடுத்தி அவற்றை ஒரு தனி ஆவணமாக அல்லது உடன்பாட்டின் துணை ஆவணமாக வரைய வேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்தினர்.

விடுதலைப்புலி பிரதிநிதிகளின் கோரிக்கையை அரசாங்கம் சாதகமாகப் பரிசீலனை செய்யும் என உறுதி அளித்த திரு பலபத்தபென்டி கிழக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகளை தமக்கு விவரமாக எழுதி அனுப்பி வைக்குமாறு தமிழ்ச்செல்வனை வேண்டிக் கொண்டார்.

மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் உறுதியற்ற விளக்கப்பாட்டில் சந்திரிகா அரசாங்கம் இருந்தது. கிழக்கு மாகாணத்தில் நிலவிய இறுக்கமான பாதுகாப்பை எவ்வகையிலும் தளர்த்துவதை இராணுவ உயர்பீடம் விரும்பவில்லை. பகை நிறுத்த உடன்பாடு பற்றிய பேச்சுவார்த்தை சரியாக மேற்கொள்ளப்படவோ, வடக்குக் கிழக்கிற்கான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் புலிகளின் தலைமைப் பீடத்தினை சந்திக்கவோ இல்லை. எனினும் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பொருட்கள் மீதான தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, பின்வருவன தொடர்பான தடைகள் நீக்கப்பட்டன.

  1. விளையாட்டுத் துப்பாக்கிகள்
  2. மின்சாரக் கம்பிகள் அல்லது மின்னியக்கக் கருவிகள்
  3. மின்சார அல்லது மின்னியக்க விளையாட்டுப் பொருட்கள்
  4. அலுமினியப் பாத்திரங்கள்
  5. சாக்குகள்
  6. நுண்ணிய உருள் குண்டுகள்
  7. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள்
  8. அச்சு இயந்திரங்கள்
  9. தங்கம், இரசாயனப் பொருட்கள்
  10. சிறு மின்கலங்கள் தவிர்ந்த ஏனைய மின்கலங்கள் (Penlight Batteries)

நான்காவது கட்டப் பேச்சுவார்த்தைகள்

தலைவர் பிரபாகரன் தெரிவித்த யோசனைக்கு இணங்க நான்காவது கட்டப் பேச்சுகள் ஏப்ரல் மாதம் முதலாம் நாள் நடைபெறவில்லை. முற்கூட்டிய திகதியில் பேச்சுகளை முன்னெடுக்க சந்திரிகா விரும்பவில்லை. நேரடிப் பேச்சுகளை அவர் வேண்டுமென்றே பிற்போட்டார். மேற்கொண்டு ஆக்கபூர்வமான முடிவுகளைச் செயல்படுத்தாமல் தள்ளிப்போடவும் விடுதலைப் புலிகள் விதித்த காலக்கெடுவை செல்லாததாக்குவதற்கும் பேச்சுகளை தள்ளிப்போடும் தந்திரோபாயத்தை சந்திரிகா கடைப்பிடித்தார். பிரபாகரனுக்கு அனுப்பி வைத்த சுருக்கமான கடிதத்தில் நான்காவது கட்டப் பேச்சுகளை ஏப்ரல் 8 தொடக்கம் 10 வரையான நாட்களில் நடத்தவே அவர் விரும்பினார். சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகள் தவறான பரப்புரை செய்வதாகவும் சந்திரிகா தனது கடிதத்தில் குற்றம் சாட்டினார். உதவி வழங்கும் நாடுகளிடமிருந்து கடன் உதவிகளைப் பெற்று, அதனை இராணுவ விரிவாக்கத்திற்கு பயன்படுத்தும் நோக்குடனே பேச்சுவார்த்தை நாடகத்தை அரசாங்கம் மேடையேற்றி வருவதாக புலிகள் இயக்கம் விமர்சனப் பிரசாரம் செய்வதாக அவர் சாடினார். அரசாங்கம் பெறவிருக்கும் கடனுதவியில் பெரும்பங்கு போரினால் சிதைந்த தமிழ்ப் பகுதிகளின் புனர்நிர்மாணத்திற்கும் அபிவிருத்திக்கும் ஒதுக்கப்பட்டதாக சந்திரிகா அரசு குறிப்பிட்டது.

இதற்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதியும் ஜனாதிபதி சந்திரிகா நீண்ட கடிதம் ஒன்றை பிரபாகரனுக்கு அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் அதுவரை வடமாகாணத்துக்கு என தடை விதிக்கப்பட்டிருந்த பல்வேறு பொருட்களுக்கான பொருளாதாரத் தடை, மீன்பிடி மீதான தடை எனப் பல்வேறு தடைகள் நீக்கப்பட்டு இருந்தன.

பொருளாதாரத் தடை 

அதன்படி கீழ்கண்ட பொருட்கள் மட்டும் இப்பொழுது தடை விதிக்கப்பட்ட பட்டியலில் உள்ளன என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  1. ஆயுதங்கள் அல்லது ரவைகள்
  2. வெடி மருந்துகள்
  3. தொலை இயக்கிகள்
  4. இரட்டைத் தொலைநோக்கிகள்
  5. தொலைநோக்கிகள்
  6. திசையறி கருவிகள்
  7. சீருடைத் துணிகள்
  8. சிறு மின்கலங்கள் 

இவற்றைத் தவிர ஏனைய பொருட்கள் அனைத்தும் தடையின்றி வடக்கிற்குக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் எனவும், இது குறித்த ஏனைய விவரங்கள் தொடர்பாகவும் மேற்குறித்த எட்டுப் பொருட்களையும் தடை செய்வது தொடர்பாகவும் அரச வர்த்தமானியும் வெளியாகும் எனவும் அக்கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. 

மீன்பிடி மீதான தடைகள்

மீன்பிடி மீதான தடை கணிசமான அளவு தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, 

1. தலைமன்னாரிலிருந்து பேய்முனை வரை கரையிலிருந்து ஐந்து மைல் தூரத்திற்கு மட்டுமே மீன் பிடிக்கும் அனுமதி உண்டு.

2. கரையோரமாக அமைந்திருக்கும் பாதுகாப்புப் படைகளின் முகாம்களில் இருந்து பக்கவாட்டாக இருபுறமும் ஒரு மைல் தூரம் வரையும், கரையிலிருந்து கடலை நோக்கியதாக இரு கடல் மைல்கள் தூரம் வரையும் மீன்பிடிப்பதற்கு அனுமதி இல்லை.

3. மூன்றாவதாக கரையோரமாக உள்ள துறைமுகங்கள், குடாக்கள், கழிமுகங்களில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. இது குறித்து எழக்கூடிய பிரச்சினைகள் பற்றி உள்ளூர் மன்றத்தில் பேச்சுகளை நடத்தி இணக்கம் காண வேண்டும்.

அதாவது தொண்டைமானாற்றிலிருந்து பேய்முனை வரையும், யாழ்ப்பாண நீரேரியிலும் வழமை போல மீன்பிடிக்கும் அனுமதி உண்டு. பேய்முனையிலிருந்து தலைமன்னார் வரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மூன்று மாதத்திற்குள் மேல் பரிசீலனை செய்யப்படும். இந்தக் கால இடைவெளிக்குள் சிறீலங்காவின் பிரதேசக் கடலெங்கும் மீன்பிடிக்க அனுமதிக்கும் உடன்பாடுகளைச் செய்து கொள்ள அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுக்கும்.

வடக்கில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை நீக்கி அவர்களது வாழ்வில் இயல்பு நிலையை ஏற்படுத்தும் குறிக்கோளுடனேயே பெட்ரோல், டீசல் உட்பட மக்களின் பாவனைப் பொருட்கள் மீதான தடையையும் மீன்பிடி மீதான கட்டுப்பாடுகளையும் அகற்றி உள்ளதாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

பூநகரி முகாம் தொடர்பான விவகாரம் 

சங்குப்பிட்டி வீதியை பொதுமக்களின் போக்குவரத்திற்குத் திறந்து விடுவதானால் பூநகரி இராணுவ முகாம் அகற்றப்பட வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு இராணுவ முகாமின் வெளிப்புற எல்லையை 600 மீட்டர் வரை நகர்த்தி உள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றோடு வீதியில் சோதனைகள் நடைபெறாது என்றும் எவ்வித தடையும் இன்றி குடிமக்கள் அந்த வீதியைப் பாவிக்கலாம் என்றும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. 

கிழக்கில் ஆயுதம் தரித்த புலிப்போராளிகளின் நடமாட்டம்

பகை நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே இப்பிரச்சினை பேசி தீர்க்கப்பட வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரச்சினை பற்றியும், இரு தரப்பும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும், சமாதானக் குழுக்களை இயக்குவது பற்றியும் பேச்சுகளை நடத்தி இணக்கப்பாடு கண்டு அதனைச் சமாதான உடன்பாட்டின் இணை ஆவணமாகச் சேர்த்து செம்மையாக நடைமுறைப்படுத்தத் தயாராக உள்ளதாக அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இது சம்பந்தமான பேச்சுகளை மே மாதம் 5 திகதி தொடக்கம் 10ஆம் திகதிக்கு இடையிலான நாட்களில் நடத்தலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை பேச்சுகளைத் தொடர்ந்து நடத்தலாம் என்றும், அடுத்தகட்டப் பேச்சுகளில் கீழ்க்கண்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் யோசனை தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  1. பகை நிறுத்த உடன்பாட்டுக்கு ஓர் இணை ஆவணம் தயாரிப்பது குறித்துப் பேசுவது.
  2. புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் பற்றிய கூட்டு அதிகார சபையை நிறுவுதல்.
  3. எதிர்காலப் பேச்சுகளை வடிவமைத்தல்.

யாழ்ப்பாணப் பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்கள்

ஆறு மாத காலத்தைக் கொண்ட இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தையில் நாளுக்கு சில மணி நேரம் நீடித்த நான்கு சுற்றுப் பேச்சுகளே நடந்தன. விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிரச்சினைகளின் சிக்கலான பரிமாணங்களைப் பார்க்கும் பொழுது நேரடிப் பேச்சுக்கு ஒதுக்கப்பட்ட கால அவகாசம் மிகவும் சொற்பமானதாக இருந்தது. சில சிக்கலான பிரச்சினைகள் குறித்து விடுதலைப் புலிகள் விளக்கங்களை நாடிய போதெல்லாம் அரசாங்கம் வேண்டுமென்றே சந்திப்புகளைப் பிற்போட்டு பேச்சுகளில் நீண்ட அர்த்தமற்ற கால இடைவெளிகளை ஏற்படுத்தியது.

ஆற்றலும் அனுபவமும் அதிகாரமும் கொண்ட மூத்த அரசியல்வாதிகள் எவரையுமே பேச்சுகளில் பங்குகொள்ள ஜனாதிபதி சந்திரிகா அனுமதிக்கவில்லை. குறைந்த தர நிர்வாகிகளையும் படை அதிகாரிகளையும் அரச தரப்புப் பிரதிநிதிகளாக அவர் நியமித்தார். இவர்களுக்கு தமிழ் மக்களது பிரச்சினைகளின் ஆழம், அகலம் எதுவுமே தெரியாது. அத்தோடு அவற்றைத் தீர்த்து வைக்கும் அரசியல் அதிகாரமும் அவர்களிடம் இருக்கவில்லை. தகைமை குறைந்த பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்ததில் இருந்து, நேரடிப் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை அரசாங்கம் விரும்பவில்லை எனலாம். பேச்சுகள் முறிந்து போகும் தறுவாயில், கடைசிக் கட்டப் பேச்சுக்கு, அரச தரப்பின் தலைவராக எவ்வித அரசியல் அனுபவமும் அதிகாரமும் அற்ற ஒரு கிறித்தவக் குருவானவரையே சந்திரிகா அம்மையார் அனுப்பி வைத்தார்.

கடிதப் பரிமாற்றம் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மத்தியிலான சமச்சீரற்ற உறவு நிலையைப் பிரதிபலித்துக் காட்டியது. எஜமான்–அடிமை என்ற தோரணையில் சிறீலங்கா அரசு தன்னை உயர்நிலையில் நிறுத்தி புலிகளைத் தாழ்த்தப்பட்ட தரப்பாகவே அணுகியது.

சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் மத்தியில் சமாதானப் பேச்சுகள் நடைபெறுவதை சிங்களப் படைத்துறை ஆரம்பத்திலிருந்து விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் முன்வைத்த நியாயமான மனிதாபிமானக் கோரிக்கைகள் குறித்து அரச படைத்தரப்பு மிகவும் இறுக்கமான, விட்டுக்கொடுக்காத கடும் போக்கைக் கடைப்பிடித்தது. பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு சிங்கள இராணுவம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. மக்களின் நாளாந்த வாழ்வுக்கு அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் இராணுவப் பாவனைப் பொருட்களாக சித்தரித்துக் காட்டியது.

சர்வதேச கண்காணிப்புக் குழுவின் மேற்பார்வையுடன் ஒரு நிலையான நிரந்தரமான போர் நிறுத்த உடன்பாட்டைச் செய்து கொள்ள சிறீலங்காவின் இராணுவத் தலைமைப் பீடம் விரும்பவில்லை. உதவிப் பாதுகாப்பு அமைச்சரான கேணல் ரத்வத்தே, தலைவர் பிரபாகரனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், அரசாங்கம் ஒரு நிரந்தரமான போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்றும் அதிகாரபூர்வமற்ற இறுக்கமான தற்காலிகமான பகை நிறுத்தத்தையே விரும்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொடரும்.



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்