இலங்கைக்குப் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் எதிர்நோக்கிய தொடர் பாதிப்பு நிலை குறித்து உலக நாடுகளும் அறிந்துகொண்டன. இதன் விளைவாக இம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக் கோசங்கள் குவிந்தன. இவ்வாறான தூண்டுதலின் விளைவாகவே இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி இந்தியா கவனம் செலுத்த முனைகிறது. இலங்கை ஆட்சியாளர்களுக்கு இந்தியா கொடுத்த அழுத்தங்களின் காரணமாக இந்தியத் தமிழர்களின் நலன் சார்ந்த சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு இலங்கையில் உருவாக்கி அமுல்படுத்தப்பட்ட சட்டங்களில் பின்வரும் சட்டங்கள் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
- 1912 – மருத்துவ வசதிச் சட்டம்
- 1920 – கல்வி சகாயச் சட்டம்
- 1927 – சம்பளச் சட்டம்
இவ்வாறே இந்தியாவில் உருவாகி 1922இல் அமுல்படுத்தப்பட்ட வெளியேற்றத் தடைச்சட்டத்தின் ஊடாகவும் இலங்கைக்கு இந்தியர்களை வெளியேற்றுவதில் கட்டுப்பாடு ஏற்படுகிறது. இச்சட்டத்தின் காரணமாகவே இலங்கைக்குப் புலம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதன் பின்புதான் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில் அக்கறை செலுத்துகிறார்கள். இம்மக்களது அடிப்படைப் பிரச்சினைகள், உரிமைகள் குறித்த கவனம் ஏற்படுகிறது. தொடரும் பாதிப்பு நிலைமைகளுக்குத் தீர்வு தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்தின் முதலாம் வகுதியினர் என்ற வகையிலும் மலையக மக்களின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இலங்கையில் தொழில் உரிமைக் கோரிக்கை வரலாற்றில் 1860இல் இடம்பெற்ற தச்சுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டமே முதலாவதாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதன் பின்னர் 1899இல் இடம்பெற்ற அச்சுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும் கவனத்தைப் பெறுகிறது. இப்போராட்டங்களின் தொடர் நிலையில், 1920ஆம் வருடம் ஏ.ஈ. குணசிங்க தலைமையில் இலங்கையில் ‘போராட்ட இயக்கம்’ ஆரம்பமாகிறது. ஏ.ஈ. குணசிங்க தலைமையிலான இலங்கை தொழிலாளர் சங்கத்தினால் 1923இல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இப்போராட்டம் இலங்கையில் தொழிற்சங்கப் போராட்ட வரலாற்றில் முக்கிய தடம் பதித்தவொன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது. மேற்குறித்த போராட்ட முன்நகர்வுகளின் தொடர் செயற்பாடுகளினால் இடதுசாரிய சிந்தனையாளர்கள் ஒன்றிணைகிறார்கள். இவ்வாறான எழுச்சிப் போக்கின் விளைவாக முதலாவது அரசியல் கட்சியை ஸ்தாபிக்கும் மனநிலை வலுப்பெறுகிறது. 1935இல் இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியாக இடதுசாரிகள் ஒன்றிணைந்து ‘லங்கா சமசமாஜக் கட்சி’ எனும் பெயரில் கட்சியை உருவாக்குகிறார்கள். இவ்வாறான போக்குடனேயே இலங்கையின் தொழிற்சங்க அரசியல் முன்னெடுப்புகள் நகர்த்தப்படுகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் 1922இல் அமுல்படுத்தப்பட்ட வெளியேற்றத் தடைச்சட்டம் சிறிது காலத்திலேயே தளர்த்தப்படுகிறது. இதன் பின்னணியில் பெருந்தோட்டத்துறையினரின் கோரிக்கைகள் காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் 1939இல் இந்தியா ‘பயிற்றப்படாத தொழிலாளர் வெளியேற்றத் தடைச் சட்டத்தை’ நிறைவேற்றுகிறது. இந்நிலைமையும் இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள், தங்களது தொழிற்சங்கச் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்துவதற்குத் தூண்டுதலாக அமைகிறது. வெளியேற்றத் தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட சமகாலத்திலேயே இந்திய வம்சாவளித் தமிழர்களை ஒன்றிணைத்து கோ. நடேசய்யரினால் தொழிற்சங்கம் உருவாக்கப்படுகிறது. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் எனும் பெயரில் உருவான சங்கத்தின் செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கோ. நடேசய்யரின் செயற்பாட்டில் அக்காலத்தில் இருந்த துண்டு முறைமை நீக்கப்பட்டமை கவனத்திற்குரியதாகும். ஏ.ஈ. குணசிங்கவுடனான நடேசய்யரின் நட்பு, இருவரதும் அமைப்புச் செயற்பாடுகள், முரண்பாடுகள் மற்றும் பிரிவு எனத் தொடர்ந்த நிகழ்வுகள் கவனத்தைப் பெறுகின்றன. ஏ.ஈ. குணசிங்கவின் இந்திய எதிர்ப்புவாத முன்னெடுப்புகள் விமர்சனத்திற்கு உள்ளாயின. இதன் விளைவாக, ஏ.ஈ. குணசிங்க தலைமையில் ஒன்றிணைந்த நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் அவரது அமைப்பிலிருந்து விலகத் தொடங்கினார்கள்.
இலங்கையின் முதலாவது அரசியற் கட்சியாக உருப்பெற்ற ‘லங்கா சமசமாஜ கட்சி’ சூரியமல் இயக்கத்தின் வெற்றியில் பிறந்தது என்பார்கள். இரண்டாவது உலகப் போரின் போது இக்கட்சி இரண்டாகப் பிளவுபடுகிறது. அப்பிளவின் பின்னர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவாகிறது. கம்யூனிஸ்ட் கட்சியிலும் சீன சார்பு, ரஷ்ய சார்பு பிளவுகள் உருவாகின்றன. சீன சார்பு பிரிவினர் தோழர் சண்முகதாசன் தலைமையில் ஒன்றிணைகிறார்கள். இலங்கையில் இடதுசாரிய அரசியலில் தோழர் சண்முகதாசன் குறித்து சாதகமானதும், பாதகமானதுமான விமர்சனக் கண்ணோட்டம் நிலவுகின்றமை அவதானத்திற்குரியதாகும். இவ்வாறு தோழர் சண்முகதாசன் தலைமையில் உருவான அமைப்பின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக செங்கொடிச் சங்கம் உருவாக்கப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் இடது சாரிய அமைப்புகள் பல்வேறு வாதங்களை முன்வைத்து பிளவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதன்மூலமான செங்கொடிச் சங்கத்தின் உருவாக்கமும், பின்னர் அந்த அமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளும் கவனத்தைப் பெறுகின்றன. எஸ். நடேசன் தலைமையில் செங்கொடிச் சங்கம் முன்னெடுத்த செயற்பாடுகள் மலையகத்தில் மிகுந்த சர்ச்சைக்குரியதாக இருந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாக்கம் மலையகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த நேரத்தில், செங்கொடிச் சங்கத்தின் புரட்சிகர செயற்பாடுகளும் பெரிதும் தாக்கத்தைச் செலுத்தியுள்ளன. மலையக சமூக அசைவியக்கத்தில் செங்கொடிச் சங்கத்தின் பங்களிப்பின் பிரதிபலிப்பாக, அவ்வமைப்பு வெளியிட்ட ‘போராட்டத் தீ’ பாடல் தொகுப்பும் கலை இலக்கிய மேடைகளும் இதற்குத் தக்க சான்றுகளாக விளங்குகின்றன.
தமிழகத்தில் தொடங்கப்பெற்ற திராவிடக் கருத்து நிலைகளோடு அக்கால சினிமாப்பாடல்கள் செல்வாக்குப் பெறுகின்றன. சுயமரியாதை தொடர்பான கருத்தியல் வலுப்பெற்றதாக விளங்கியது. அக்கருத்து நிலையை வலுப்படுத்தும் வகையிலேயே கலை இலக்கியச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போக்குகள் மலையகத்திலும் தீவிரமாகப் பின்பற்றப்பட்டமை கவனத்திற்குரியதாகும். தனிநபர்களின் வீதிப்பாடல்கள் அவ்வகையான எழுச்சிப் போக்குகளுடன் பாடல்களை உருவாக்கியிருந்தமை அறிந்ததே. எழுச்சிக்கும், ஒன்றிணைவுக்கும் அறைகூவலை விடுக்கும் பணியினை அப்பாடல்கள் ஆற்றியிருந்தன. மாறாக, இயக்கமயப்படுத்தும் அமைப்பார்ந்த செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் அமைந்த பாடல்கள் என்ற வகையில் இப் ‘போராட்டத் தீ’ பாடல்கள் அதீத கவனத்தைப் பெறுகின்றன.
இலங்கையில் நடைமுறையில் இருந்த ‘அத்துமீறல் பிரவேச சட்டம்’ காரணமாக தோட்டங்களுக்குள் நிர்வாகத்தின் அனுமதியின்றி எவரும் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. தொழிற்சங்கத் தலைவர்கள் தோட்டங்களுக்குள் செல்ல முடியாது. சில தோட்ட நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க மறுத்தன. தொழிற்சங்கங்களினதும் இடதுசாரிய சக்திகளினதும் தொடர் அழுத்தம் காரணமாகவே இச்சட்டம் மாற்றப்பட்டது. பின்னர் தொழிற்சங்கக் கூட்டங்கள் கலை நிகழ்வுகளாக அரங்கேறின. இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதில் செங்கொடிச் சங்கத்தின் பங்கேற்பு முன்மாதிரியானதாக விளங்கியது. இவ்வாறான கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காகவே தொழிற்சங்கக் கட்டமைப்புடன் சேர்ந்து புரட்சிகர கலை இலக்கியக் குழுக்கள் தோட்டங்கள் தோறும் இயங்கின. இவ்வியக்கத்தால் நிகழ்த்தப்படும் கலை நிகழ்வுகளில் கவிதைகள், வில்லுப்பாட்டுகள், நாடகங்கள், புரட்சிகரப் பாடல்கள் போன்றன அரங்கேற்றப்பட்டன. மதச் சாயமில்லாத வகையில் காமன் கூத்தைத் தழுவிய நிலையில் ‘நவீன காமன் கூத்து’ என நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன. காமன் கூத்தில் இடம்பெறும் பாடல்களின் மெட்டுகளைத் தழுவி மலையக சமூகத்தின் போராட்டங்கள், சமூகப் பிரச்சினைகளை அடையாளப்படுத்தும் வகையில் பாடல்கள் புனையப்பட்டு அரங்கேற்றப்பட்டன. அவ்வாறே சாதிய ஒடுக்குமுறைகளைச் சாடும் வகையில் தமிழகத்தில் கலைவாணரினால் நிகழ்த்தப்பட்ட ‘கிந்தனார்’ வில்லுப்பாட்டு அவதானத்தைப் பெற்றது. அவ்வில்லுப்பாட்டைத் தழுவிய வகையிலும் தோட்டங்களில் வில்லுப்பாட்டு நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்வுகளில் இணைக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பாகவே ‘போராட்டத் தீ’ பாடல்களின் தொகுப்பு நூல் வெளிவந்தது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சீன சார்பு அணியினராகப் பிரிந்த நிலையிலேயே செங்கொடிச் சங்கம் தனது பணிகளை முன்னெடுத்தது. சீனப் போராட்டம் மீதான ஆர்வம் இவ்வியக்கத் தோழர்களின் பாலும் கவனத்தைப் பெற்றிருந்தது. இதன் காரணமாகவே, மாவோவின் கருத்து வெளிப்பாடுகளைச் சுமந்த நிலையில் இயக்கத் தோழர்கள் தமது இயக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள். இவர்கள் மாவோவினுடைய கருத்து நிலைகளைப் பிரசார உத்திகளாகப் பிரயோகித்தமை கவனத்திற்குரியது. ‘போராட்டத் தீ’ புரட்சிகரப் பாடல்களின் தொகுப்பு நூல் என்ற வகையில் முக்கிய கவனத்தைப் பெறுகின்றது. அத்தொகுப்பு நூலில் மாவோவின் சிந்தனைக்குரிய வரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அமைந்த வரிகளுள்,
“ஆயுத பலாத்காரத்தால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, யுத்தத்தாற் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, புரட்சியின் கேந்திரக் கடமையும், அதன் அதி உயர்ந்த வடிவமும் ஆகும். புரட்சி பற்றிய இந்த மாக்சிச-லெனினிச கோட்பாடு சர்வவியாபகமாகப் பொருந்தியது. சீனாவுக்கு மாத்திரமல்ல, இதர நாடுகளுக்கும் பொருந்தியது.”
“உலகில் உள்ள பொருட்களனைத்திலும் மக்கள் தான் மிக மதிப்புடையவர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மக்கள் உள்ள வரை உலகிற் பலவித அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.”
“அரசியல் வேலை என்பது பொருளாதார வேலைகள் எல்லாவற்றிலும் உயிர் நாடி.”
“யுத்தம் புரட்சியைத் தூண்டும்: புரட்சி யுத்தத்தை தடுக்கும்.”
“அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்.”
போன்ற வரிகள் குறிப்பிடத்தக்கவை.
மாவோவின் வரிகளைப் போற்றும் அதே வேளை மாவோ மீதான பிடிப்புணர்வால் அவரைப் போற்றும் வரிகளைக் கொண்ட பாடல் வரிகளும் கவனத்தைப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாகப் பின்வரும் வரிகளைக் குறிப்பிடலாம்.
“தொழிலாளர் தோழர் மா ஓ
துயர் தீர்க்கும் எங்கள் மா ஓ
உழைப்பாளி தோழர் மா ஓ
உயர்வான எங்கள் மா ஓ
கடல் போன்ற சிந்தனையாலே
கரை காணா எங்கள் மா ஓ
சோஷலிசம் ஓங்க வேண்டும்
மக்கள் துயரங்கள் நீங்க வேண்டும்
மாக்ஸிஸம் ஓங்க வேண்டும்
மா சேதுங் வாழ வேண்டும்
அடிமையின் துயர் தீர்க்கும் எங்கள்
அன்பான தோழர் மா ஓ
எமக்காக வாழும் மா ஓ”
என மாவோ மீது அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் வரிகள் கவனத்திற்குரியவை. இப்பாடல்கள் சீனப் போராட்டக் களத்தையும் அப்போராட்டத்தின் வெற்றி நகர்வுகளையும் தோழர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தான் சார்ந்த அமைப்பின் தோழர்களிடம் அந்த அமைப்பின் மீது பற்றுறுதியை ஏற்படுத்தும் வகையிலும், உணர்வுகளைத் தூண்டி திடப்படுத்தும் போக்கிலும் கவனம் கொண்டு இவ்வரிகள் புனையப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் மாவோவின் போராட்டக் குணாம்சத்தையும், அணுகுமுறைகளையும், வழிகாட்டல்களையும் மேன்மைப்படுத்தும் நோக்கில் பல பாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சீன விடுதலைப் போராட்டக் களத்தில் சக போராளிகளை ஆற்றுப்படுத்தும், ஆறுதல்படுத்தும், உற்சாகப்படுத்தும், திடப்படுத்தும் போக்கில் தோழர் மாவோவின் அணுகுமுறைகள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன. இந்நிலைமையினை மாவோ எழுதிய கவிதைகளிலும் உணர முடிகிறது. அதன் போக்கில் தோழர் மாவோவின் சிந்தனைகள் பல இடங்களில் மேற்கோள் காட்டப்படுகின்றமை கவனத்திற்குரியதாகும். மதம், சாதி வேறுபாடுகள் குறித்த அவதானத்தில் அதற்கெதிரான போர்க்குணப் பாய்ச்சலை வலியுறுத்தும் போக்கில் மாவோ ஆராதிக்கப்படுவதையும் காணலாம். அறுபதுகளின் இறுதியில் தமிழ்த் திரையுலகில் “நாதஸ்வர ஓசையிலே” எனும் பாடல் கவனத்தைப் பெற்றிருந்தது. அப்பாடலின் மெட்டைத் தழுவிய நிலையில் “சங்கானைக் கென் வணக்கம்” எனும் பாடலும் சாதி, மத ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான கருத்து நிலையைக் கொண்டிருப்பதைக் காணலாம்.
“செங்குருதி கடல் குடித்துச்
செழித்த மதத்துக்குள்
வெங்கொடுமை சாக்காடாய்
வீற்றிருந்த சாதியினைச்
சங்காரம் செய்யத்
தளைத்தெழுந்து நிற்கின்ற
சங்கானைக் கென் வணக்கம்”
மேலும், “எண்ணத்திற் கோடி ஏற்றம் தருகின்றாய் – புண்ணுற்ற நெஞ்சுள் புதுமை நுழைக்கின்றாய், கண்ணில் எதிர்காலம் காட்டி நிற்கின்றாய்” எனும் வரிகள் மாவோ மீதான நம்பிக்கையின் உச்சத்தைத் தொடுகின்றன. “ஐந்து பெரும் கண்டத்தும் எழுந்து வரும் பூகம்பம்” என மாவோ சித்தரிக்கப்படுவதானது உலக அரசியலில் மாவோவின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்துவதாக அமைகிறது.
“சீனம் எழுந்து நிற்கும்
சிங்கார காட்சி கண்டு
ஆனந்தம் பிறக்குதெங்கள் நெஞ்சிலே – சீனம்
அடைகின்ற வெற்றியெங்கள் வெற்றியே!”
என்ற கோசங்கள் மூலமாக சீனப் போராட்ட வெற்றியை முன்னிலைப்படுத்திப் பெருந்தோட்ட மக்களது போராட்ட முன் நகர்வும் இவ்வாறு அமைதல் வேண்டும் என வலியுறுத்தப்படுவதைக் காணலாம். “மா ஓ எம் தலைவன் – இந்த மாநிலம் போற்றிடும் தலைவன், அடிமை வாழ்வினை அகற்றிடவே ஆயுதம் ஏந்தி போர் செய்தான்” எனவும் இப்பாடல்களில் மாவோ புகழப்படுவதைக் காணலாம்.
செங்கொடிச் சங்க அங்கத்தவர்களின் உணர்வுகளை வலுப்படுத்துவதையும், கூர்மைப்படுத்துவதையும் நோக்காகக் கொண்ட பாடல்களும் கவனத்தைப் பெறுகின்றன. கம்யூனிஸ சித்தாந்தத்தைக் கற்பிக்கும் பாங்கில், பாடல்கள் வழியாகவும் கருத்து நிலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தோழர்களான மார்க்ஸ், லெனின் குறித்த மேற்கோள்களும் இவ்வரிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். “மார்க்ஸிஸம் – லெனினிஸம் – மா சேதுங் சிந்தனைச் சோலையில் நாம் வாழ – இந்த மாநிலம் முழுதும் செங்கொடி பட்டொளி வீசிப் பறந்தாட”, “மார்க்ஸிஸ லெனினிஸத்தால் – மாவோவின் சிந்தனையால், போர்க்கவசம் பூண்டு நிற்கும் சீனமே”, “மார்க்சிஸம் – லெனினிஸம் – மாவோ இசம், வாழ்க்கையின் தத்துவம் கம்யூனிசம்” போன்ற வரிகள் கவனத்தைப் பெறுகின்றன. அவ்வாறே பாலஸ்தீன விடுதலை மார்க்கம் தொடர்பான வெளிப்பாடுகளும் போராட்ட வீரர் ‘யாசீர் அரபாத்’ தொடர்பான பதிவுகளும், அல்பேனிய நாட்டின் போராளியும் ஆட்சியாளருமான ‘அன்வர் ஹோஷா’வின் சிறப்பினை எடுத்துரைக்கும் பாடலும் ‘போராட்டத் தீ’ தொகுப்பில் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்நிலைமையானது கம்யூனிசம் தொடர்பில் தோழர்களுக்குப் பரந்த அறிவை ஏற்படுத்தும் கைங்கரியமாக அமைந்தமை கவனத்திற்குரியதாகும்.
தொழிற்சங்க இயக்கம் சார்ந்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தோட்டங்களில் தாம் சார்ந்த தொழிற்சங்கத்தின் கொடியை அனுதினமும் பறக்க விட்டிருக்கும் நடைமுறைகளைக் காணலாம். தோட்டங்கள் என்றால் கட்சிக்கொடியைக் கம்பத்தில் பறக்க விட்டிருக்கும் காட்சியும் அடையாளமாகிறது. தோட்டங்களின் ஒற்றுமைத் தன்மையையும், பிரிவினைவாதங்களின் போக்குகளையும் அடையாளப்படுத்தும் வகையிலும் இக்கொடிக்கம்பங்கள் உற்று நோக்கப்படுகின்றன. அவ்வகையில் அறுபதுகளின் பின்னர் தோட்டங்களில் செங்கொடிகளும் வீரியமாகப் பறக்கத் தொடங்கின. அக்கோட்பாடுகள் சார்ந்த பிரசாரங்களும் தோட்டங்களில் வெகுவாக முன்னெடுக்கப்பட்டன. பாரம்பரியக் கலைகளை மாத்திரம் அரங்கேற்றி மகிழ்ந்த தோட்டக் களங்கள் அக்கலைகளை விடுதலை உணர்வுக்கும், வேட்கைக்கும் ஏற்றாற் போல் நிலைமாற்றித் திருப்தி கண்டன. கல்வி உரிமை மறுப்புக் காணப்பட்ட போதிலும் இயல்பாகக் கல்வியின்பால் அக்கறை செலுத்தி அறிவியல் பாதையில் மலையகம் நகர்ந்தது. சித்தாந்தங்களை விளங்கிக் கொள்ளும், விளங்க வைக்கும் போக்கில் அதன் அடைவுகள் திருப்திகரமானதாகவே முன்நகர்த்தப்பட்டன. மக்கள் மனதில் செல்வாக்குப் பெற்றிருந்த “சத்தியமே லட்சியமாய் கொள்ளடா” என்ற பாடலின் மெட்டில், இயக்க உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட “செங்கொடியை உண்மையென்று எண்ணடா- செங்கொடி பிடித்து நீயும் போராடடா” என்ற தொடக்க வரிகளோடு, பாடல் வரிகள் பின்வருமாறு தொடர்கின்றன.
“சொத்துடையோர் இத்தனை நாள் உலகிலே – உன்னை
சுரண்டி வந்து வாழ்வு கண்ட விதத்தினை – நீ
புத்தியுடன் எண்ணி நல்ல வழி சொல்லுவாய் – வர்க்கப்
போதமுடன் வெகுண்டெழுந்து போராடுவாய்.
எல்லையற்ற துன்பம் உன்னை வருத்தினும்
செல்வர் தொல்லை பெருகி வந்து தடுக்கினும் – நீ
கொள்கை எனும் திடம் கொண்டு போராடுவாய் – கையின்
கொடு விலங்கை உடைத்தெறிய போராடுவாய்”
அவ்வாறே செங்கொடிச் சங்கம் மீதான உணர்வைப் போதிக்கும் பாடல்களும் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
செங்கொடிச் சங்கம் மீதான அவதானத்தை மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்தும் முனைப்பில் திரையுலகில் அபிமானத்தைப் பெற்ற பாடல்கள், மலையகச் சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றம் காண்கின்றன. “நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க” என்ற பாடல் குறவர்களின் வாழ்வியல் முறையை எடுத்துரைக்கும் பணியை ஆற்றியிருந்தது. விளிம்பு நிலை மக்களது மேம்பாட்டை வலியுறுத்தும் கருத்தியலாளர்கள் இப்பாடல் தொடர்பிலும் கவனத்தைச் செலுத்தியுள்ளார்கள். அப்பாடலைத் தழுவிய நிலையில் செங்கொடிச் சங்கத்தின் நோக்கங்களைப் புலப்படுத்தும் நோக்கில் வரிகளை இணைத்துள்ளார்கள்.
“நாங்க புதுசா சேர்ந்துக்கிட்ட
செங்கொடிச் சங்கம் – நல்ல
பாடுபடும் பாட்டாளியின் சங்கம்
காட்டை வெட்டி ரோட்டமைத்து
தேயிலை நட்டோம்
இருந்த ஓட்டை கையை விட்டு
இழந்து விட்டோம்
அன்று யூ.என்.பி ஆட்சியில்
பறி கொடுத்தோம்.
பத்து பேரு ஒரு வீட்டில்
இருப்போமுங்க – அதில்
படுத்துக் கூட நிம்மதியாய்
தூங்க மாட்டோம்
எல்லோரும் கால் நீட்ட
இடமில்லைங்க – இதை
எடுத்துச் சொல்ல மக்களுக்கு
அஞ்சமாட்டோம்.
பாட்டன் பூட்டன் அமைத்த
இந்த தோட்டத்திலே – வெறும்
பஞ்சைகளாய் வாழ இங்கு தேவையில்லை
கோடி கணக்கில் நாங்கள்
உழைக்கையிலே – இங்கு
குடல் வத்த வேலை செய்ய தேவையில்லை
சர்க்காரு எங்களையே முறைக்கையிலே – நாங்கள்
சாத்வீகம் பேசுவதில் பயனுமில்லை
எல்லோரும் புரட்சி வழி
சென்றிடுவோம் – நாங்கள்
துவக்கெடுத்து போராடி வென்றிடுவோம்.”
வாழ்வியல் அவஸ்தைகள், உழைப்பைச் சுரண்டிய அவலங்கள், உரிமை மறுப்புச் சட்டங்களின் பாதிப்புகள், வீட்டுப் பிரச்சினை, சக தொழிற்சங்கங்களின் பிற்போக்குத் தனங்கள் போன்றன பாடுபொருள்களாக உற்று நோக்கப்படுகின்றன. இப்பாடலின் இறுதி வரி துப்பாக்கி மீதான அவதானத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. இவ்வாறான வழிப்படுத்தலைப் பல பாடல்களிலும் அவதானிக்கலாம்.
“ஆயுதங்கள் ஏந்திப் போர்கள் செய்தே
தொழிலாளி ஆட்சியை ஏற்றிடடா”
“துப்பாக்கி நாமே ஏந்திச் சென்று
விடுதலை நாமே பெற்றுக்கொள்ள”
“நீங்கள் இதுவரையில் குடித்த இரத்தமெல்லாம
நாங்கள் எடுத்திடுவோம் நாளையே – கையில்
ஆயுதங்கள் எடுத்து விடும் நாளிலே”
“எலி என இகழ்வார் நமை நடுநடுங்க – இன்றே
புலி என துவக்கெடுத்து புறப்படுங்கள்”
“ஆற்றல் மிகு கரத்தில் ஆயுதங்கள் ஏந்துவதே
மாற்றத்துக்கான வழி மாற்றுவழி ஏதுமில்லை”
“துவக்கு ஏந்த வேண்டும் – சுரண்டல்
தகர்ந்து போக வேண்டும்”
“ஆள்பவன் கைகளிலே
இருக்கும் ஆயுதத்தைப் பாரு
அந்த ஆயுதம் இல்லாமல் – உன்னை
அடக்கிடல் நடவாது”
“துவக்கு ஏந்த வேண்டும் – சுரண்டல்
தகர்ந்து போக வேண்டும்”
போன்ற பாடல்களின் மேற்படி வரிகளின் தாக்கம் தவறான அணுகுமுறைகளுக்கும் வாய்ப்பாக அமைந்தது. இந்நிலைமையானது மலையக இளைஞர்களைத் தவறான வழியில் வழிப்படுத்தியமைக்குத் தூண்டுதலாக அமைந்தது என்ற குற்றச்சாட்டும் ஏற்புடையதாகவே உள்ளது. ஏனெனில் பின்னாளில் ஆயுத இயக்கங்களின் தொடர்புகளினால் மலையக இளைஞர்கள் பல்வேறு சிக்கல் நிலைமைகளுக்கு உள்ளானார்கள். ஆயுதப் போராட்டத்திற்கான எந்தவொரு அடித்தளமும் இல்லாத நிலையில் அதற்கான தூண்டுதல் தவறானது என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீதும் அதன் தலைவர் தொண்டமான் மீதும் செங்கொடிச் சங்கம் போன்ற புரட்சிகர அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அவ்வமைப்பு மீது விமர்சனங்கள் இருந்த போதிலும் அகிம்சை வழியிலான அதன் முன்வைப்புகள் பொருத்தமானவைகளாகவே திகழ்ந்தன. இவ்வாறு ஆயுதப் புரட்சியால் தூண்டப்பட்ட பல புரட்சியாளர்களைக் காப்பாற்றிய சௌமியமூர்த்தி தொண்டமானின் அணுகுமுறைகளைக் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. மலையகத்தில் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும் கிளர்ச்சியூட்டும் நடைமுறையே காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. கட்சிகளுக்கு அங்கத்தவர்களை இணைப்பது, மேதினக் கூட்டங்களுக்கு மக்களைச் சேர்ப்பது போன்ற செயற்பாடுகளில் கிளர்ச்சியூட்டும் நடைமுறையைப் பயன்படுத்தியே மக்களை வழிப்படுத்தியமை அவதானிக்கத்தக்கதாகும். இது, மாவோ அபிமானிகள், மாவோவினால் முன்வைக்கப்பட்ட “அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்” என்ற வியாக்கியானத்தைக் கவனிக்க மறந்து விட்டதன் விளைவுமாகும்.
தொழிலாளர்களை தங்கள் சங்கம் நோக்கி ஆள்திரட்டும் பணியில் இவ்வெழுச்சிப் பாடல்கள் பெரிதும் சாதகமான சூழ்நிலைகளையே ஏற்படுத்தின. எழுபதுகளின் தொடக்கத்தில் தோட்டங்களில் தொழிலாளர்களின் வாழ்வியல் நிலைமைகளை எடுத்துரைப்பதில் இப்பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. அப்பாதிப்பு நிலைமைகளில் இருந்து விடுதலை பெறுவோம் என்ற முனைப்புடனே தோட்டத் தொழிலாளர்களிடம் உத்வேகம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறான பாடல்களில் பின்வரும் பாடலும் முக்கியமானது.
“மாறு மனிதா மாறு புரட்சி மனிதனாக மாறு
தேடும் மனிதன் சுரண்டப்பட்டு வாடி நிற்பதை பாரு
உடுத்த கந்தல் குடிக்க கஞ்சி கிடைப்பதில் என்ன நியதி
நாற்றம் வீசும் லயத்தில் வாழும் ஏழை வாழ்வில் அநீதி
துரையின் பங்களா சொர்க்கலோகம் அதைச் சுற்றி பூங்கா நந்தவனம்
இந்த இரண்டு நிலையும் அறிந்து மனதில் தெளிந்து கொள்வது நன்றாகும்
உழைத்த நீயும் களைப்பினிலே படுத்துறங்கும் போது – உன்னை
அழைப்பது போல் அறிகுறியாய் சங்கொலியும் கேட்கும்
முந்திப் போனால் தெம்பாகும் கொஞ்சம் பிந்திப்போனால் வம்பாகும்
இதன் படியே வேலை செய்தும் பேரு கிடைப்பதும் சந்தேகம்”
வர்க்க உணர்வைப் போதித்து தொழிலாளர்களை, தொழிலாளர் உணர்வாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கம் கருதிய வகையில் பாடல்களைத் தருவதிலும் ‘போராட்டத் தீ’ பாடல் குழுவினர் அக்கறை செலுத்தியுள்ளார்கள். அதன் உந்துதலில் “வாழ்ந்து காட்ட வேண்டும்” என்ற பாடலின் மெட்டில் “வர்க்க உந்துதல் வேண்டும்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட பாடல் அவதானத்தைப் பெறுகிறது.
“உழைத்து வாழ வேண்டும் – உரிமைப்
போரில் சேர வேண்டும்
வறுமையோடு சுழன்று – வர்க்க
உணர்வு வேண்டும்
உழுபவன் இல்லாமல்
இந்த உலகிற்கு வாழ்வேது
இந்த உண்மையை உணராமல் – மனிதன்
வாழ்வது பெருந்தீது”
என்றவாறு, தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளி வர்க்கத்தினரின் சுகபோக நிலைமைகளைக் கண்டிக்கும் வகையிலும் பாடுபொருள் தொடர்கிறது. “உலகம் பிறந்தது எனக்காக” எனும் பாடலின் மெட்டில் அமைந்த பாடலில், எதிர்ப்புணர்வு மிக ஆவேசமாக எடுத்துரைக்கப்படுகின்றமையைக் காணலாம்.
“உலகில் உழைப்பவன் பாட்டாளி – அதை
உறிஞ்சிக் கொழுப்பவன் முதலாளி
பட்டினி கிடப்பவன் தொழிலாளி
பணத்தைச் சேர்ப்பவன் முதலாளி
எதிரிக்குப் பயப்படத் தேவையில்லை
இழப்பதற்கொன்றும் எமக்கில்லை
துணிந்து நின்றே போராடுவோம்
தொழிலாளர் ஆட்சியை அமைத்திடுவோம்”
அவ்வாறே பல பாடல்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்து நிலையிலும் தொழிலாளர்களுக்கு எழுச்சி நிலையைப் போதிக்கும் லாவகத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளன. அந்நோக்கம் கருதிய பாடல்களின் வரிசையில் “காகித ஓடம்” எனும் பாடலின் மெட்டில் “புரட்சியின் கீதம் ஒலித்திட வேண்டும்” என்ற பாடல் அமையப்பெற்றுள்ளது. பாரதியின் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற மெட்டிலமைந்த பாடலும் உழைப்பின் மகத்துவத்தையும், உழைப்பாளர் பாதிப்பு நிலைமையினையும் எடுத்துரைக்கிறது. “பஞ்சமுண்டு பசியுண்டு பாரு தோழா – இந்தப் பாழும் உலகை மாற்றப் போராடு தோழா!” என்ற அறைகூவலும் கவனத்தைப் பெறுகிறது.
‘போராட்டத் தீ’ குழுவினர் அவலங்கள் தொடர்பிலும் அதற்கான மாற்று நடவடிக்கைகள் குறித்தும் கரிசனையோடு பாடல்கள் பாடியுள்ளதைப் போலவே, தொழிலாளர்களின் புலப்பெயர்வும், புலப்பெயர்வுக்கான அவசியம் குறித்தும் பாடலமைத்துள்ளார்கள். “விவசாயி விவசாயி” எனும் சினிமா பாடல் உழைக்கும் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பாடலாக விளங்கியது. அம்மெட்டிலமைந்த இத்தொகுப்பில் இடம்பெறும் பாடலும் தொழிலாளர்களிடத்தில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது.
“வீராயி வீராயி
கருப்பன் என்னும் கங்காணி
கடத்தி வந்த தொழிலாளி
தட்டப்பாறை பாதையிலே காலை வைத்து
தடியர்களின் அடிமைகளாய் நீ நடந்து
உன்னோடு வந்தவர்கள் பலர் சாக
தேயிலை தூரில் தேங்காய் மாசி இருக்கு தென்று
தேன் சொட்டும் எத்தர்களின் திருப்பேச்சில்
புழுவாய் துடி துடித்த அந் நாளில்
புறப்பட்டாய் வெள்ளையனின் பலி ஆடாய்
மழையென்றும் வெயிலென்றும் பாராமல்
மலைகளை நீ பிளந்து ரோட்டமைத்து
வரிப்புலி வாழ்ந்த அந்தப் பெருங்காட்டில்
வரிசையாய் நீ நட்டாய் தேயிலைச் செடி”
எனும் வரிகள் கவலை தோய்ந்த வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
மலையகத்தவர்களின் தொழிற்சங்கப் போராட்ட வரலாற்றில் செங்கொடிச் சங்கம் முன்னின்று நடத்திய போராட்டங்களில் பதுளை கீனாக்கெல்ல போராட்டம் கவனத்தைப் பெறுகிறது. செங்கொடிச் சங்கத்துடன் இணைந்து இலங்கைத் தோட்டச் சேவையாளர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் ஆதரவும் இப்போராட்டத்திற்குக் கிடைத்தது. செங்கொடிச் சங்கத்தின் மேலவைத் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். போராட்டத்தை அடக்க முனைந்த பொலிஸாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலில் கீனாக்கெல்ல தோட்டத் தொழிலாளர்களான இராமையா, அழகர்சாமி ஆகியோர் பலியானார்கள். இப்பாதிப்பு நிலைக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல பாகங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1970இல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைத்திருந்தன. இவ்வாட்சிப் பொறுப்பின் பின்னரே மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கையின் போதே மாத்தளையில் இரண்டு தோட்டத்தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. கொழும்பில் தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாள ஊர்வலம் ஒன்றை நிகழ்த்தின. அட்டன், நோர்வூட் நகரத்திலும் இச்சம்பவத்திற்கான எதிர்ப்புக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. தோழர் பி.எம். லிங்கம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இளஞ்செழியன், பாலதம்பு உட்பட மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜயவீரவும் பங்கேற்று உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இப்போராட்டங்களில் தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டார்கள். பதுளை, கொழும்பு நீதிமன்றங்களில் இடம்பெற்ற வழக்குகள் பல்வேறு அனுபவங்களைத் தந்துள்ளன. இப்போராட்டங்களின் பின்னரே தேயிலை, இறப்பர் தோட்டங்களைத் தேசியமயமாக்குவதாக அரசாங்கம் அறிவித்தது. தோட்டங்களில் நடைமுறையில் இருந்த அத்துமீறல் பிரவேச சட்டத்தில் தளர்வு நிலையும் ஏற்பட்டது.
கீனாக்கெல்ல சம்பவம் தோட்டத்தொழிலாளர்கள், தொழிலாளர் சார்பு நிலையிலுள்ளவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான தாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஆட்சியாளர்களும் சங்கட நிலைமைகளுக்கு உட்பட்டுள்ளார்கள். ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியினரின் நடவடிக்கைகளும் இப்போராட்டங்களின் பின்னரே வலுப்பெற்றமை கவனத்திற்குரியதாகும். கீனாக்கெல்ல போராட்டத்தின் தாக்கத்தை முன்னிலைப்படுத்தி, போராட்ட உணர்வைத் தூண்டும் வகையில் பல பாடல்கள் அமைந்துள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே, ‘போராட்டத் தீ’ தொகுப்பில் இடம்பெற்ற பாடல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியான ‘புரட்சிப் பாடல்’ தொகுப்பிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.
“இந்நாட்டிலுள்ள அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகரப் போராட்டங்கள், இயக்கங்கள், எழுச்சிகள் முன் எப்பொழுதையும் விட வேகத்துடன் முன்னேறி வந்துள்ளன. வட பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களது சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், மலைநாட்டு தொழிலாளர்களால் அதிகார வர்க்கத்திற்கு எதிராக நடத்திவரும் போராட்டம், இன்னும் நாட்டில் ஏற்பட்ட வேறு பல போராட்டங்களில் இருந்து பிறந்தவையே. போராட்டங்களில் வீரத்துடன் உயிர்களை அர்ப்பணித்த தோழர்களின் தியாக உணர்வின் முன் இப்புரட்சிப் பாடல்கள் புத்தகத்தைச் சமர்ப்பிக்கின்றோம். இவை வெறும் பாடல் வெளியீடுகள் அல்ல. இவை ஒரு புரட்சிகர இயக்கத்தின் அரசியல் போராட்டங்கள் மட்டுமல்ல. புரட்சிகர கலை இலக்கியப் போக்கிலும் ஏற்படுத்திய தாக்கத்தினால் பிறந்தவையே. தனிப் பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. தேசிய – சர்வதேச மட்டங்களில் ஒன்றுக்கொன்று இணைந்த பிரவாகத்தின் சில துளிகளே.” (புரட்சிப் பாடல் தொகுப்பு நூலின் முன்னுரை வரிகள்)
“ ‘போராட்டத் தீ’ பாடல்களில் சில யாழ்ப்பாண அச்சகத்தில் வெளியிடப்பட்டன. புரட்சிப் பாடலின் தொகுதியில் இவை இடம்பெற்றன. தென்புல சிங்களத் தொழிலாளர், வடபுல தமிழ் தொழிலாளர், மலைநாட்டுத் தமிழ் சிங்களத் தொழிலாளர் மத்தியில் தோழமை உணர்வையே இது எடுத்துக்காட்டுகிறது. அக்காலத்தில் தேசிய மட்டத்தில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்திலும் பாட்டாளி வர்க்க தோழமை உறவுகள் வளர்ந்தன. சர்வதேசப் பாட்டாளி வர்க்கத் தோழமை உறவுகள் பரந்து விரிந்து, புரட்சிகர இயக்கங்களின் மற்றும் புரட்சிகர கலை இலக்கியங்களின் வளர்ச்சிப் போக்கை மேலோங்கச் செய்யும் உந்துசக்தியாக விளங்கின. வரலாற்றின் ஒரு பக்கம், மாறாத மறக்க முடியாத பக்கம். புரட்சிகரப் போராட்டங்களின் எழுச்சிக்காகப் படைக்கப்பட்டவை இப்புரட்சிப் பாடல்கள்” என்பார் தோழர் ஓ.ஏ. இராமையா (தோழர் ஓ.ஏ. இராமையாவின் நிழலும் நிஜமும்).
இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் உருவான முதல் தொழிலாளர் வர்க்கமாகத் திகழ்ந்ததுடன், முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாகவும் விளங்கினர் என்பதை அறிய முடிகிறது. இருபதுகளின் பின்னரே மலையகத்தில் இருந்து தொடங்கப்பெற்ற எழுச்சிப் பாடல்கள், சமூக விடுதலைக்கான கருத்து நிலைகளோடு முன்நகர்ந்துள்ளன. வீதிப்பாடல்களால் ஏற்பட்ட உந்துதல்களும் இந்நாட்டில் ஏற்பட்ட பல்வேறு புரட்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளமை கவனத்திற்குரியதாகும். இந்நிலையில் இருந்து பார்க்கின்ற போது, வர்க்க உந்துதலின் உணர்வையும், அதற்கு எதிரான எழுச்சிக் கோசங்களையும் மலையகத்தவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும். மலையக வீதிப்பாடல்களின் தொடர்ச்சி நிலையில் வந்த ‘போராட்டத் தீ’ பாடல்கள் தோழர்களை அணிதிரட்டுவதற்கும், ஆட்சியாளர்களிடத்தே அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் தூண்டுதலாக அமைந்துள்ளன. இதன் விளைவாக ‘போராட்டத் தீ’ பாடல்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘போராட்டத் தீ’ பாடல் தொகுப்பை அச்சுக் கோர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். நூலைப் பிரசுரித்த அச்சகம் சிதைக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டுள்ளது. கிடைத்த நூல்கள், வெளியீடுகள் அனைத்தையும் வாகனங்களில் ஏற்றிச் சென்று அழித்துள்ளார்கள். பிரதிகளை வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். செங்கொடிச் சங்கத்தின் ‘தீப்பொறி’ வெளியீடுகளும் அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.
வெறுமனே பொழுது போக்கு அம்சங்களுக்காகப் பாடல்கள் என்ற நிலைமாறி, சமூக உந்துதலுக்காக இந்த வீதிப்பாடல்கள் பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளன. புலம்பெயர்ந்து ஒரு நூற்றாண்டைக் கடந்த பின்னரும், கல்வி உரிமையும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையிலும், தம் சூழல்களில் இருந்து மீண்டெழுந்த சமூகமாக மலையகச் சமூகம் உருவாக்கம் பெற்றுள்ளது. கலைகளும் கலைகளின் பயில் களங்களும், வழிபாட்டு நம்பிக்கைகளும் மலையகச் சமூகத்தில் கல்விக்கான உந்துதலை ஏற்படுத்தி வந்துள்ளன. ஏனைய சமூக நாட்டார் பாடல்களில் இருந்து மலையக நாட்டார் பாடல்கள் தமது தனித்துவமான அம்சமான சமூக நிலைகளைப் பாடுவதன் வழியாக வேறுபட்டு நிற்பதை அவதானிக்கலாம். அதன் வழிவந்த வீதிப்பாடல்கள் ‘அரை வாய்மொழிப்பாடல்கள்’ என்ற வகுதிக்குள் தனித்துவமாக நோக்கப்படுகின்றன. இதனை ‘போராட்டத் தீ’ பாடல்களும் காத்திரப்படுத்தி நிற்கின்றன. அவை மலையக மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் சரியாக அடையாளப்படுத்தும் வலிமைமிகு பதிவுகளாகவும் திகழ்கின்றமை கவனத்திற்குரியதாகும்.
உசாத்துணை நூல்கள்
- யோகராசா. செ., (2023) ஈழத்து முச்சந்தி இலக்கியம். மகுடம் பப்ளிகேசன்.
- காதர் பீ.ஏ., (2023) இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத் தனம், சமூக இயல் பதிப்பகம்.
- முத்துலிங்கம் பெ., (2012) பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள். கயல் கவின் புக்ஸ்.
- சாரல் நாடன், (1997) மலையகம் வளர்த்த தமிழ். துரைவி வெளியீட்டகம்.
- இராமையா ஓ.ஏ., (2018) தோழர் ஓ.ஏ. இராமையா நிழலும் நிஜமும், தோழர் ஓ.ஏ. இராமையா ஞாபகார்த்த மன்றம்.
- வஹாப்தீன், ஜே., (2021) ஒலுவில் பிரதேசத்து வெகுசனப் பாடல்கள்: தொகுப்பும் பகுப்பாய்வும், பண்பாட்டலுவல்கள் திணைக்களம்-கிழக்கு மாகாணம்.



