தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் இந்தியாவில் பணியாற்றிய ஐரோப்பிய மதபரப்பாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன; அவை பொதுவாக மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களாலேயே அறியப்படுகின்றன — சீகன்பால்க் (Ziegenbalg), ஃபேப்ரிசியஸ் (Fabricius), ரேனியஸ் (Rhenius) ஆகியோரின் திருப்புதல்கள் அதற்கு எடுத்துக்காட்டுகள். இந்த ஐரோப்பியமயமான வரிசையைக் குழப்பியவர் பிலிப்பு டி மெல்ஹோ (1723–1790) என்ற இலங்கைத் தமிழர். அவரது பெயர் டச்சுக்காரருடையது போலத் தோன்றினாலும், அவர் ஒரு பச்சைத் தமிழர்; தனது மொழிபெயர்ப்புப் பணியை இலங்கையிலேயே மேற்கொண்டார். இதுவரை தமிழ் அவர்களுக்கு அயல்மொழியாக இருந்த வெளிநாட்டவர்களே வேதாகமத்தை மொழிபெயர்த்திருந்த நிலையில், ஒரு தாய்மொழிப் பேச்சாளர் தனது சொந்த மொழியிலேயே வேதாகமத்தை மொழிபெயர்க்க முயன்ற இச்செயல் முதல் முயற்சியாகும்.
மெல்ஹோவின் வாழ்க்கையும் பணியையும் பற்றிய தகவல்களில் பெரும்பகுதி, அவரைப் பெரிதும் பாராட்டும் வர்ணனைகளிலிருந்தே வருகிறது. அவற்றில் ஒன்று சைமன் காசி செட்டி (1807–1860) என்பவரின் நினைவுக் குறிப்புகள். இந்தக் காசி செட்டி இலங்கையின் டச்சு நிர்வாகி, நீதிபதி, மேலும் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். அவரது எழுத்துகளில், மெல்ஹோவின் மேன்மையைப் பற்றிய பக்தி உணர்வு, அவருடைய சமூகப் பின்னணியால் வடிவமைக்கப்பட்ட ஒரு சமூகப் பெருமை உணர்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இருவரும் ஒரே தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாகக் கொழும்புச் செட்டியார் வணிகச் சமூகத்துடன் இணைந்தவர்கள் என்பதால் காசி செட்டியின் மெல்ஹோ பற்றிய பார்வை ஒருவிதத்தில் பலவீனமானதாகவும் படுகிறது.

மற்றொரு மெல்ஹோ பற்றிய விவரம், முந்தைய அத்தியாயத்தில் சொல்லப்பட்ட கவிஞரான கூழங்கையார் எழுதியவற்றிலிருந்து வருகிறது. பிலிப்பு டி மெல்ஹோவுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய மற்றும் நீண்டகாலத் தொடர்பின் மூலம், கூழங்கையார் வேதாகமத்தில் உறுதியான புலமை பெற்றார்; அதே நேரத்தில், மெல்ஹோவின் மொழிபெயர்ப்புப் பணிகளில் அவர் உதவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மெல்ஹோவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் அவரது எழுத்துகளில் காணப்படும் உருவக விளக்கங்களுக்குப் பின்னால் பெரும்பாலும் கூழங்கையாரின் தாக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. யோசேப்பின் வரலாறு எனும் அவரது படைப்பிலிருந்த 1,023 செய்யுள்களில் நான்கு செய்யுள்கள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. இவற்றில் — கூழங்கையார் கவித்துவமான மரியாதையுடன் மெல்ஹோவின் அபார ஞானம், அவரின் பிறரைப் பேணும் பண்பை இயற்கை உவமானங்களான மழை, இடி, மின்னல்களுடன் ஒப்பிட்டு அளவுக்கு மீறி வர்ணிக்கிறார். அவரது அறிவுக்கும் நற்குணத்திற்கும் கூழங்கையார் காட்டும் கண்ணியமும், கரிசனையும் முழுச் செய்யுள்களிலும் தெளிவாகத் தெரிகிறது.
இந்த காசிச் செட்டி, கூழங்கையார் ஆகியோர் மெல்ஹோ பற்றி உருவாக்கிய பிம்பங்கள், மெல்ஹோவை ஒரு பாண்டித்தியம் மிக்க ஆசானாக மட்டுமல்ல, மனிதகுல நலனில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒருவராகவும் சித்தரிக்கின்றன. இவற்றைப் படிக்கிறவர்கள் இவை பக்தி கலந்த மரியாதையுடன் எழுதப்பட்டவை என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
பிலிப்பு டி மெல்ஹோ (Philip de Melho): ஒரு சுருக்கமான வாழ்க்கை வரலாறு
பிலிப்பு டி மெல்ஹோ 1723 ஏப்ரல் 23 அன்று கொழும்பில் செட்டியார் சமூகத்தில் பிறந்தார். ‘செட்டி’ என்ற பெயர் செல்வந்த வணிகர் அல்லது வர்த்தகர் என்பதைக் குறிக்கும் சொற்களிலிருந்து வந்தது. இலங்கையிலுள்ள செட்டிச் சமூகத்தின் துல்லியமான தோற்றம் உறுதியாக நிறுவப்படவில்லை. அண்மையில் வெளியான ஒரு நூலின்படி, இன்றைய செட்டியார்களின் மூதாதையர்கள் வடமேற்கு இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்து, மலபார் மற்றும் சோழ மண்டலக் கடற்கரைகளில் குடியேறியிருக்கலாம்; பின்னர் இளவரசர் விஜயனின் வேண்டுகோளின் பேரில் மதுரை மன்னரால் ‘இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்’ எனக் கூறப்படுகிறது. மேலும், புனித மரத்தைப் பாதுகாப்பதற்காக வந்த இளவரசர் சுமித்தனும் அவரது ஏழு சகோதரர்களும் ஒரு செட்டியாரின் மகன்கள் என்றும் அந்நூல் வலியுறுத்துகிறது. தென்னிந்தியப் பகுதிகளில் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த செட்டியார்கள், பின்னர் அரசியல் அமைதியின்மையும் பஞ்சமும் காரணமாக தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர் என்றும் அந்நூல் பதிவு செய்கிறது (Reggie Candappa (ed.), History of the Colombo Chetties (கொழும்பு: Foremost Productions Ltd, 2000), 15.)
மெல்ஹோவின் குடும்பம் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் டச்சு சீர்திருத்தச் சபைக்கு நீண்டகாலம் சேவை செய்தது. அவரது தந்தை சைமன் டி மெல்ஹோ டச்சு ஆட்சியின் முக்கிய தமிழ்ப் பெயர்ப்பாளர் மற்றும் ஆளுநர் வாசலின் தலைமைத் தமிழ் முதலியார் (Chief Tamil Mudaliyar of the Gate) என்ற உயர்ந்த பதவியை வகித்தார். ஆனால் அடிமை வம்சப் பின்னணியால் இக்குடும்பம் இகழ்ச்சியையும் சந்தித்தது. பிலிப்பு டி மெல்ஹோ விரைவில் டச்சு சீர்திருத்தச் சபையின் முக்கிய தமிழர் தலைவராக உயர்ந்தார். அவர் மற்றொரு செல்வாக்கு மிக்க செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்த மக்தலேனா ஒண்டாட்சியைத் திருமணம் செய்தார். ஆனால் அவரது இரண்டு மகன்களும் இளமையிலேயே, கல்விப் பராயத்தில், இறந்துபோயினர். தெய்வவியல் மற்றும் தமிழ் இலக்கிய உலகில் அவர் பெற்றிருந்த உயர்ந்த நிலை, ஐரோப்பியரும் இலங்கையரும் சேர்ந்த அறிஞர்களிடையே அவரை 18ஆம் நூற்றாண்டின் சிறப்பு ஆளுமையாகத் திகழச் செய்தது.
டச்சு சீர்திருத்தச் சபையின் முதல் குருவான இலங்கைத் தமிழர் என்ற சிறப்பும் பிலிப்பு டி மெல்ஹோக்கு உண்டு. கொழும்பில் 1705இல் நிறுவப்பட்ட கல்வி நிறுவனத்தில் அவர் கல்வி கற்றார்; இது இலங்கைத் தமிழ் இளைஞர்களை மதப்பணி மற்றும் குடியியல் சேவைகளில் ஈடுபடப் பயிற்றுவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அங்கு அவர் எபிரேயம், கிரேக்கம் போன்ற வேதாகம மொழிகளையும் இலத்தீன், டச்சு, போர்த்துகீசியம் போன்ற மேற்கத்தேய மொழிகளையும், மேலும் தமிழையும் ஆழமாகக் கற்றார். முக்கியமாக, கிறிஸ்தவ தெய்வவியலில் உறுதியான பாண்டித்தியம் பெற்றார்.
மெல்ஹோ சிறந்த கல்விச் சாதனையுடன் பதினேழு வயதுக்குள் மூத்த மாணவர் நிலைக்கு உயர்ந்தார்; இருபது வயதில் முழுப் பாடத்திட்டத்தையும் முடித்து லெய்டன் பல்கலைக்கழகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட மிகத் தகுதியுடையவராகத் திகழ்ந்தார். டச்சுத் திருச்சபைப் போதகர்கள் பல்கலைக்கழகத் தெய்வவியல் பட்டம் பெறுவது வழக்கம் என்றாலும், ஐரோப்பா செல்ல வேண்டிய வாய்ப்பை அவர் காரணமறியாமல் நிராகரித்தார். ஆனாலும் பல்கலைக்கழகப் பட்டமின்றி, பிரசங்ககர் (Predikant) எனும் மூத்த போதகர் தகுதியைப் பெற்றவரானார். 1746இல் தமிழ் புதிய ஏற்பாட்டைத் திருப்பும் குழுவிலும், தமிழர்களுக்கான அனைத்து மதநூல்களின் மொழிபெயர்ப்புகளைச் சீராய்வு செய்யும் பொறுப்பிலும் இணைக்கப்பட்டார். 1753இல் வடக்கு மாகாண ஆசாரியராக நியமிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களுக்கும் பள்ளிகளுக்கும் மேற்பார்வையாளராகவும் இருந்தார்.
விவிலிய, மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மட்டுமல்ல தமிழிலும் மெல்ஹோ ஒரு நிபுணராகவும் உயர்ந்த மதிப்பைப் பெற்ற அறிஞராகவும் திகழ்ந்தார். அக்காலத்தில் தமிழ்மொழி உலகின் மையமாக இருந்த யாழ்ப்பாணத்தில் வசித்தபோது, அங்கிருந்த முக்கியமான புலவர்கள், கவிஞர்கள், தத்துவ ஞானிகளுடன் தொடர்பு கொண்டு தனது இலக்கண-மொழியியல் அறிவை விரிவுபடுத்தினார்; கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காக விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். மதம் சார்ந்த விஷயங்களில் கூழங்கையார் நடத்திய விவாதம் குறிப்பிடத்தக்கது.
தமிழின் நிலையான நிகண்டுவாக இருந்த ‘சிந்தாமணி நிகண்டு’வை அவர் விரிவுபடுத்தி, பல புதிய செய்யுட்களைச் சேர்த்தார்; அவை அவரது இலக்கணத் திறமையையும் கவிதைத் திறனையும் வெளிப்படுத்தின. இச்சேர்த்தல்கள் பின்னர் 1856ஆம் ஆண்டில் மணிப்பயிற்சி அச்சக வெளியீட்டில் இணைக்கப்பட்டன. அவை அக்காலத் தமிழறிஞர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அவரின் உயர்ந்த இலக்கண-கவிதை நயத்துக்குச் சாட்சியமாகுகின்றது.
யாழ்ப்பாணத்தில் சபைக்குருவாக இருந்தபோது, டச்சு சீர்திருத்த மதத்தை விளக்கியும் பாதுகாத்தும் பல தமிழ் நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்தார். அதேபோல், ஆளுநர் ஸ்க்ரூடரின் ஆட்சிக்காலத்தில் பிரபலமாக இருந்த மருதப்ப பிள்ளையைப் போற்றும் மருதப்ப குறவஞ்சி என்ற செழுமையான குறவஞ்சி நாடகத்தையும் இயற்றினார். அவரது பிற படைப்புகள் பல, போர்த்துகீசியம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பிரசங்கங்கள் உட்பட, இப்போது கிடைப்பதில்லை. வேதாகம மொழிபெயர்ப்புக்கான அவரது கடிதங்கள் மற்றும் அவரின் விவிலியத் திருப்புதல்கள் மட்டும் இன்று எஞ்சியுள்ளன.

1750ஆம் ஆண்டு, டி மெல்ஹோ திருச்சபைக் குருவாக அர்ப்பணிக்கப்பட்ட போது, அவர் புதிய ஏற்பாட்டின் முதல் பத்து நூல்களைத் தமிழில் திருப்பும் பணியை (மத்தேயு சுவிசேஷத்திலிருந்து எபேசியருக்கு எழுதிய எழுத்து வரை) முடித்திருந்தார். அவரது சக ஊழியர்களின் ஆர்வமும் ஒத்துழைப்பும் இல்லாததால், இந்தப் பொறுப்பு முழுவதும் அவர் மீதே விழுந்தது.
அவரது விரிவான கல்வியும், இறையில் பக்குவமும் மற்றும் டச்சுத் திருச்சபை வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட இடைவிடாத உழைப்பும் காரணமாக, டச்சு ஆளுநர் ஃபால்க் அவருக்கு ‘ராபாய் டி மெல்ஹோ’ (Rabbi de Melho) என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டினார். பழைய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த போது, 67ஆவது வயதில் டி மெல்ஹோ மரணமடைந்தார்.
சத்தியத்தின் ஜெயமும் சங்கீதப் பண்பாட்டும்: டிமெல்ஹோவின் தெய்வவியல் சிந்தனையை வெளிப்படுத்தும் இரண்டு வாதபூர்வ நூல்கள்
வேதாகம மொழிபெயர்ப்பை மேற்கொள்வதற்கு முன், டி மெல்ஹோ இரண்டு முக்கிய விளக்கவியல் நூல்களை எழுதினார். முதலில், அவர் டச்சு மறுமலர்ச்சித் திருச்சபை சார்பாக கத்தோலிக்கப் போதனைகளுக்கு எதிரான ஒரு தர்க்கவாத எழுத்தை எழுதினார். இது 1753ஆம் ஆண்டு, ‘சத்தியத்தின் ஜெயம்’ அல்லது ‘ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முக்கிய கோட்பாடுகளுக்கான மறுப்பு’ என்ற தலைப்பில் டச்சு மொழியில் பிரசுரமானது; கோவா கத்தோலிக்கக் குருமாரின் தீவிர செயல்பாட்டால் இலங்கையில் கத்தோலிக்கம் மறைவாக முன்னேறுவதைத் தடுக்கவே இந்த விளக்கப் பிரசுரத்தை உருவாக்கினார். “கத்தோலிக்கர்கள் பெரியதும் சிறியதுமான புத்தகங்களை எழுதி ஊரிலே தங்கள் தவறான மதத்தைப் பரப்புகிறார்கள். இவர்கள் பொய்யான தீர்க்கதரிசிகள்” என்று எச்சரித்தார் (சத்தியத்தின் ஜெயம், 67). “இவர்கள் சுத்தமான ஆகமத்தின் திருவசனமாகிய சர்வ வல்லபனுடைய (இறைவனுடைய) ஆயுதங்களைச் சர்வ வல்லபனுக்கே விரோதமாகப் பாவிக்கவும் செய்து, நிலையற்ற மனுஷராக தங்கள் சொந்தக் கெடுதிக்குக் கீழ்ப்படுகிறார்கள்” என்றும் சாடினார் (சத்தியத்தின் ஜெயம், 63).
பின்னர், இதனை அவர் தமிழில் ‘சத்தியத்தின் ஜெயம்’ என மொழிபெயர்த்தார். சத்தியத்தின் ஜெயம் நூலை எழுதுவதற்கான நோக்கத்தைத் தீவிரமான தெளிவுடன் வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில்: “ரோம சபையின் தடுமாற்றங்களைச் சுருக்கமாகவும் கெட்டியாகவும் அடக்கப்படுத்தி அதற்குமாறாக ஸ்தாபிக்கப்பட்ட சாதாரண சத்தியத்தைத் திருத்தப்பட்ட சபை படிப்பிக்கிறபடி சர்வேஸ்வருடைய சுத்தமான திருவசனத்தின்படி பரிபாலனம் பண்ணினோம்” (சத்தியத்தின் ஜெயம், 64, 65). ஜோன் ஃப்ரெய்ரா டி அல்மேடாவின் ‘Differença d’a Christandade’ என்ற கத்தோலிக்க எதிர்ப்பு நூலை, ரோமன் சபையின் மறுத்தலுக்கான முதன்மையான பிரதியாக மெல்ஹோ எடுத்துக்கொண்டார். அத்துடன் கத்தோலிக்க அதிகாரப் பிரதிநிதிகளாகக் கருதப்படும் ரோபர்ட் பெல்லார்மின் (Robert Bellarmine), நான்காம் பயஸ் பாப்பாண்டவர் (Pius IV), ட்ரெண்ட் பேராயக்குழு (Council of Trent) ஆகியோரின் எழுத்துகள் பெரிதாக்கப்பட்ட எழுத்தில் காட்டப்பட்டு, ஒவ்வொன்றும் தனித்தனியாக எதிர்க்கப்பட்டும் இவரால் விளக்கப்பட்டன.
இவர் கத்தோலிக்கர்களின் வழிபாட்டு முறைகளை இகழ்ந்தார். ரோமன் திருச்சபை ஊக்குவித்த பரிந்துரை ஜெபங்களை இகழ்ந்தார். “சுத்தமான மரியாயீ, தேவமாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். பேதுரு சாமீ, பவுல் சாமீ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்ற பிரார்த்தனையைப் பகடி செய்தார் (சத்தியத்தின் ஜெயம்,101). கத்தோலிக்கக் குருமாரை — ‘இதயத் திருடர்கள்’, ‘சத்தியத்திற்கு எதிரானவர்கள்’, ‘புத்தியிலே பாழாய்ப்போனவர்கள்’ என அவமதித்தார் (சத்தியத்தின் ஜெயம், 79). “அவர்கள் 1 தீமோத்தேயு நூலில் விவரிக்கப்பட்டுள்ள கடைசிக்கால பொய்யான ஆசாரியர்கள்” என்று விமர்சித்தார். கத்தோலிக்கக் குருமாரின் நடத்தையிலும் பிழை கண்டுபிடித்தார். “இவர்கள் பெண்களைத் தங்களின் வஞ்சக வலையில் வீழ்த்தி அடிமையாக்குபவர்கள்” என்றார் (சத்தியத்தின் ஜெயம், 67). இவர் இலங்கைத் தமிழர்களுக்குக் கொடுத்த அறிவுரை: “ரோமன் சபை பசாசுகளின் படிப்பினையைப் படிப்பிக்கிற சபை, அதனால் அதனிடம் பரிசினை கொண்டிருக்கலாகாது.” (சத்தியத்தின் ஜெயம், 219). இவருடைய எண்ணப்படி கத்தோலிக்கத் திருச்சபை என்பது ஓர் எதிர் – கிறிஸ்து மார்க்கம் ஆகும் (சத்தியத்தின் ஜெயம், 64).
‘சத்தியத்தின் ஜெயம்’ இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்படும் வேத திருப்புதல் தொடர்பாக, குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நூலின் முன்னுரையில், எழுத்துக்குறிகளை அறிமுகப்படுத்தி அவற்றைப் பயன்படுத்தியதற்கான தனது காரணத்தை மெல்ஹோ விளக்கியுள்ளார். அவருடைய வரிகளில்: “இந்தச் சிறு நூலை முறையாகவும் புரிதலுடன் வாசிப்பதற்காக—எந்த இடத்தில் வாசிப்பை நிறுத்த வேண்டும், எங்கு சிறிது ஓய்ந்து சுவாசம் எடுக்க வேண்டும், அதன் மூலம் கருத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய மொழிகளின் சிறந்த நடைமுறையைப் பின்பற்றி, அவற்றின் செயல்பாடுகளை இங்கே பயன்படுத்தி விளக்கியுள்ளோம். ஐரோப்பிய மொழிகளின் தனித்துவமான ஓட்டத்துக்கு ஏற்ப, தரிப்புக்குறிகளை எச்சரிக்கையுடன் அமைத்துள்ளோம்.”
19ஆம் நூற்றாண்டுக்கு முன்பதாக தமிழில் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டதாக மேலே வாசித்த மெல்ஹோவின் வரிகள் தெரியப்படுத்துகின்றன. ஒற்றை மேற்கோள் (‘ ’) தவிர்த்து மற்ற தரிப்புகள் 1759ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியதாகத் தெரிகிறது (ஞானம் பாலச்சந்திரன், மெல்ஹோ பாதிரியார் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு – கி.பி. 1759, ஞானம் பதிப்பகம், கொழும்பு, 2016, 111)
இவரது நூலான சத்தியத்தின் ஜெயம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, 1775 ஆம் ஆண்டில், தாவீதினுடைய சில சங்கீதங்களையும் வேறு சில வேதாகமப் பாடல்களையும் தொகுத்து ‘Some Psalms of the Royal Prophet David and other Songs of Praise’ என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் விவிலிய சங்கீதங்களை மேற்கத்தேய இசை வடிவங்களுக்கு ஏற்ப அமைத்து, ஐரோப்பிய இசை மரபுகளை தனது தமிழ்ச் சமூகத்துக்குள் அறிமுகப்படுத்தினார்.
இதில் 1, 22, 23, 24, 47, 51, 68, 69, 90, 100, 103, 110, 117, 118, 121, 122 ஆகிய சங்கீதங்கள் இடம்பெற்றிருந்தன. சங்கீதங்களைத் தவிர இதில் சீமோனின் பாடல், சாக்கரியாவின் பாடல், சிமியோனின் நன்றிப் பாடல், மரியாவின் பாடல் போன்ற வேதாகமத் துதிப்பாடல்கள், பத்துக் கட்டளைகள் மற்றும் அவர் கிறிஸ்துவின் வணக்கம் (Kiṟisttuvin Vaṇakkam) என அழைத்த கர்த்தரின் ஜெபமும் இடம்பெற்றிருந்தன — இவை அனைத்தும் எளிமையான, உரையாடல் நயமுடைய பாணியில் வடிவமைக்கப்பட்டவை. இந்த சங்கீதங்கள் அனைத்தும் ஐரோப்பிய சுரவரிசைகளில் அமைக்கப்பட்டிருந்தன. மக்களிடம் கருத்துகளை எளிமையாகவும் எளிதில் அணுகக்கூடிய வகையிலும் எடுத்துச் செல்ல இசைக்கு உள்ள சக்தியை மெல்ஹோ உணர்ந்ததால், பக்தி உணர்வைத் தூண்டும் இசை வடிவத்தை அவர் பயன்படுத்தினார்.
இந்தச் சங்கீதங்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் எங்கும் விளக்கப்படவில்லை. ஆனால் இந்தத் தேர்வில் இடம்பெற்றுள்ள பதினாறு சங்கீதங்களையும் ஒன்றுசேர்த்து வாசிக்கும் போது வெளிப்படும் செய்தி இதுதான்: மனித இயல்பின் உச்சம், கடவுளின் கருணை, மேலும் அதைவிட முக்கியமாக, வேதத்தில் வெளிப்படும் கடவுள் அந்நிய ஜாதியரையும் அரவணைக்கிறார் என்ற உண்மை. இந்த மத்தியதரைக் கடவுள் இப்போது தமிழர்களுடைய கடவுளுமாகிறார், தேவனும் ஆகிறார் என்பதே இதன் மூலம் சுற்றி வளைத்துச் சொல்லப்பட்ட செய்தி.
இவை வேதாகம மூல மொழியிலிருந்து கவிதை வடிவமாக மொழிபெயர்க்கப்பட்டவை. இந்தத் தொகுப்பு, ஐரோப்பிய இசை முறைகளில் பாடப்படுவதற்காக வடிவமைக்கப்பட்டது; இதன் மூலம் ஐரோப்பியக் கலாசார வடிவங்களைப் பின்பற்றும் அவரது விருப்பமும் ஒத்திசைவும் வெளிப்படுகின்றன. சங்கீதங்கள் முதலில் செய்யுள் வடிவில் எழுதப்பட்டிருந்ததால், அவரும் தனது மொழிபெயர்ப்பை செய்யுள் வடிவிலேயே வழங்கினார். சமூகப் பரப்பில் தாம் வெளிப்படுத்திய இறையியல் கருத்துகளை விளக்கமாகப் பரிமாறுவதில் இசை பயனுள்ள ஊடகமாக இயங்க முடியும் என்பதை மெல்ஹோ உணர்ந்திருந்தார். அந்த மேற்கத்தேய இசை முறையை பக்தி அனுபவத்தை வெளிக்கொண்டுவரப் பயன்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய இசைப் பாணிகளில் இந்தச் சங்கீதங்களைப் பாடுவதற்கான காரணங்களை மெல்ஹோ நியாயப்படுத்தினார். நடப்புமுறையில் உள்ள தமிழ் மெட்டுகள் சிதைந்தவை மற்றும் குறைபாடுள்ளவை என்றும், மேற்கத்தேய மரபுகளில் இருந்து, குறிப்பாக யாப்பிலக்கணப் பாடல்களுக்காக (Metrical Psalms) அறியப்பட்ட டச்சு சீர்திருத்த இறையியலாளரான பெட்ரஸ் டாதேனஸ் (Petrus Dathenus, 1531/32-1588) என்பவரின் மெட்டுகளில், அவரின் தாள அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவை திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
தமிழ் சபையினருக்கு தான் எடுத்துரைக்க விரும்பிய கல்வினியக் கருத்துகளைத் தெளிவாகப் பரப்புவதற்கான பயனுள்ள ஊடகமாக இசை அமையக்கூடும் என்பதை மெல்ஹோ உணர்ந்திருந்தார். எனினும், சிவதேவாரங்களைப் பாடி வளர்ந்த மக்களிடம் பக்தி அனுபவத்தை வெளிப்படுத்துவதற்காக, ஏற்கனவே இருந்த தமிழ் இசைமுறைகளை அவர் வருந்தத்தக்க வகையில் ஒதுக்கிவிட்டு, மேற்கத்தேய இசை முறைகளையே பயன்படுத்தினார்.
இது ஐரோப்பியப் பண்பாட்டு வடிவங்களுக்கான மெல்ஹோவின் ஆர்வத்தையும், அவற்றை பல சமயங்களில் அவர் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்ட அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது. இது, தமிழ் மக்களுக்கும் அவர்களது சொந்தப் பண்பாட்டு வேர்களுக்கும் இடையில் இருந்த உறவில் இடைவெளி ஏற்படக் காரணமாக இருந்தது.
முன்னுரை: வேதாகம வரலாறு, தெய்வீக ஏற்பாடு, திருப்புதல் நோக்கம்
மெல்ஹோவின் மொழிபெயர்ப்பை ஆராய்வதற்கு முன், இன்னுமொரு வேலையிருக்கிறது. மெல்ஹோவின் புதிய ஏற்பாட்டுக்கு எழுதப்பட்ட நீண்ட பாராட்டுத் தொடக்க உரையைக் கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த முன்னுரை கொழும்பில் வசித்திருந்த டச்சுத் திருச்சபைப் போதகர்கள் சிகிஸ்பெர்டஸ் பிரான்ஸ்வெல்ட் (Sigisbertus Bronsveld) மற்றும் ஜோன் ஜோஆகிம் ஃபைப்ராண்ட்ஸ் (Joan Joachim Fybrands) ஆகியவர்களால் 1759 டிசம்பர் 24ஆம் தேதி எழுதப்பட்டது. அந்த அறிமுகக் குறிப்பில், இவ்விரு மறுசீரமைப்பு மதகுருக்கள் முன்பு செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகளின் வரலாற்றை ஆவணப்படுத்தி, இம்முயற்சிக்கான இறையியல் சட்டகத்தையும் இப்பணியில் டச்சு அரசின் பங்கு இறைவனால் அங்கீகரிக்கப்பட்டது என்பதையும் உறுதிப்படுத்தினர்.
முன்னுரைக்கு முன் ஒரு குறுங்குறிப்பு உண்டு. அது ‘வெளிப்படுத்தல்’ நூலில் உள்ள வசனம்: “இந்தத் தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளை வாசிக்கும் ஒருவனும், கேட்பவர்களும், அதில் எழுதப்பட்டவற்றைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்; ஏனெனில் காலம் நெருங்கியுள்ளது” (வெளி. 1:2). புதிய ஏற்பாட்டின் கடைசி நூலில் வரும் இந்த வரிகள், மெல்ஹோவின் திருப்புதலுக்கு ஒரு சுருக்கமான தெய்வீக அங்கீகாரத்தை வழங்குகின்றன. இதனை வாசிப்பவர்கள், கேட்பவர்கள், கடைப்பிடிப்பவர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதத்தை அறிவிப்பதுடன், தேவவார்த்தை புதிய வாசகர்களைச் சென்றடைய மொழிபெயர்ப்பு அவசியமானதும் நியாயமானதும் என்பதையும் மறைமுகமாக இந்த ஆரம்பக் குறிப்பு உறுதிப்படுத்துகிறது. அதேவேளை, “காலம் நெருங்கியுள்ளது” என்ற சொல்லாக்கம், இந்தப் பணியை வெறும் அறிஞர் முயற்சியாக அல்லாமல், தெய்வீகத் தருணத்தின் ஒரு பகுதியாகச் சித்தரிக்கிறது. இதனால், மெல்ஹோவின் முயற்சி புனித வரலாற்றின் இறுதியின் நெருக்கத்தையும் அண்மைத்தன்மையையும் அறிவிக்கும் அருட்கூற்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நூன்முகம் தமிழிலும் டச்சிலும் எழுதப்பட்ட 22 பக்கங்களைக் கொண்ட விரிவான உரை. இதில் மெல்ஹோவின் திருப்புதலில் பயன்படுத்தப்பட்ட முறைகள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கு எழுத்தாகப் பதிப்பதற்குப் பதிலாக, வாக்கியங்களின் உள்ளடக்கத்தின் சாரத்தைத் தெளிவாக அறிந்து, தமிழ் இலக்கணத்தையும் வாக்கிய அமைப்பையும் முறையாகப் பின்பற்றுவதே மெல்ஹோவின் நோக்கமாக இருந்தது என்கிறார்கள் இந்த முன்னுரையாளர்கள். “தமிழ் மொழியின் தன்மைக்கும் வலிமைக்கும் ஏற்ற வகையில், தமிழ் இலக்கணச் சட்டங்களைப் பின்பற்றி, தெளிவான நடையில் எழுதப்பட்ட ஒரு பதிப்பை உருவாக்குவதே குறிக்கோள்” (முன்னுரை, ப.17).
இந்தத் தொடக்க உரையிலிருந்து சீகன்பால்க்கிற்கு முன்பே இருந்த பல்டேயஸ் மற்றும் அட்ரியன் டி மேய் ஆகியோரின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பற்றிய தகவலையும் அறிகிறோம்; குறிப்பாக “ஐரோப்பியர்களுக்கு கடினமான இந்த மொழியைத் தன் உழைப்பாலும் கருணையாலும் கற்றுத் தேர்ந்தெடுத்த மிகப் புனிதரும் மிகப் பாண்டித்தியமும் கொண்ட பிலிப் பல்டேயஸ்” செய்த மத்தேயு சுவிசேஷ மொழிபெயர்ப்புப் பற்றியும் முன்னுரை குறிப்பிடுகிறது. இவற்றை இம்முன்னுரை விமர்சிக்கவும் தவறவில்லை. இவற்றின் குறைகள், இம்மொழிபெயர்ப்புகள் தமிழைத் தாய்மொழியாகப் பேசாதவர்களின் பணியாக இருந்ததிலிருந்தே தோன்றியவை எனவும் கூறுகிறது.
இந்த முன்னறிமுகம் ரோமன் சபைப் பிரசாரகர்களைப் பற்றி எச்சரிக்கிறது. மேலும், போர்த்துகீசியக் குருக்கள் பரப்பியவை புராணக் கதைகளும், ரோமன் திருச்சபையின் கோட்பாடுகளும், கற்பனைகளும் வாதங்களுமாகவே கருதப்பட வேண்டும்; அவை உண்மையான கிறிஸ்தவப் போதனைகள் அல்ல என்று வாசகர்களை அறிவுறுத்தி எதிரியக்கக் கிறிஸ்தவர்களை (Protestant Christians) ரோமன் கத்தோலிக்கச் செல்வாக்கிலிருந்து பாதுகாக்க முயல்கிறது (முன்னுரை, ப.16).
இது, இலங்கையில் ஒல்லாந்து ஆட்சியை தெய்வீக ஏற்பாடு என்று விளக்கம் தருகிறது. எல்லா ஐரோப்பியப் பேரரசு அமைப்பாளர்களைப் போலவே, ஒல்லாந்தும் தன்னைத் கடவுளின் கருவியாகக் கற்பனை செய்தது. இலங்கைத் தீவும் அதன் மக்களும் ‘பாக்கியவான் ஹாலந்தரின்’ ஆட்சிக்குள் வந்தது தெய்வீகச் சித்தத்தினாலேயே எனத் தெளிவாக அறிவிக்கிறது (முன்னுரை, ப.13). டச்சு ஆளுநர் குஸ்டாவ் வில்லம் வான் இம்ஹொஃப்பை “மிகப் பெருமைமிக்க, உயர்ந்த வம்சத்தில் பிறந்த சிறந்த நபர்” என மிகைப்படுத்திப் புகழப்படுகிறார்.
முன்னுரை, புதிய ஏற்பாட்டுப் புத்தகமான 1 கொரிந்தியர் 3:6ஐ மேற்கோள் காட்டுகிறது; ஆனால் பவுல் எழுதிய “நான் நட்டேன்” என்பதை மாற்றி, “பவுல் நட்டான், அப்பொல்லோ நீரூட்டினான்; ஆனால் வளர்ச்சியைத் தந்தது தேவன்” என்று மறுவடிவமைக்கிறது. அதேசமயம், டி மேய் மற்றும் டி மெல்ஹோ ஆகியோரின் முன்னோடிப் பணியைப் பாராட்டி, “இருவரும் இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக, தேவனின் கிருபையால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆசீர்வாதத்தின்படி உழைத்தனர்” எனக் குறிப்பிடுகிறது. இந்தக் கூற்று, எல்லாவற்றையும் நிகழ்த்துவது இறுதியில் தேவனே என்பதையும், மனிதர்கள் தெய்வத்தின் கருவிகள் மட்டுமே என்பதையும் வலியுறுத்துவதோடு, அட்ரியன் டி மேய் மற்றும் பிலிப்பு டி மெல்ஹோ ஆகியோர் வேதாகம இலக்கியத்தின் முக்கிய வடிவமைப்பாளர்களின் தொடரில் நிற்கிறார்கள் என்பதையும் மறைமுகமாகத் தெரிவிக்கிறது (முன்னுரை, ப.21). முன்னுரையை எழுதிய பிரான்ஸ்வெல்ட் மற்றும் ஃபைப்ராண்ட்ஸ், இவர்களின் மொழிபெயர்ப்புகளை “அவர்களின் உழைப்பின் ஒளிரும் கனிகள்” என மேலும் பாராட்டுகின்றனர்.
இந்தத் தொடக்கக் குறிப்புகள் தமிழ் உரை வரலாற்றில் புதிதாகத் தோன்றிய ஓர் எழுத்து முறையையும் அறிமுகப்படுத்துகின்றன. கருத்துகள் தனித்தனிப் பத்திகளாக ஒழுங்குபடுத்தப்பட்டு, ஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் “ஆனால்”, “எனவே”, “இதனால்”, “ஆகிலும்”, “இவ்வாறு”, “இதற்கு அப்பால்”, “மேலும்”, “அதிகமாக”, “இறுதியாக” போன்ற இணைப்புச் சொற்களின் தமிழ் இணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன் தமிழ் உரைநடையில் இத்தகைய பத்தி அமைப்பு அல்லது தொடர்ச்சிச் சொற்கள் முறையாகப் பயன்படுத்தப்பட்டதற்கான தெளிவான ஆதாரம் இல்லை.
முன்னுரையின் மொழி சில நேரங்களில் எளிமையாகவும், சீர்மையற்றதாகவும் தோன்றலாம்; காரணம் அது அன்றாடப் பேச்சு நடையில் எழுதப்பட்டதுதான். இருந்தாலும், வாசகருக்கு அளிக்கும் மரியாதை தெளிவாகத் தெரிகிறது. தொடக்கப் பக்கமே “சுகிர்தத்தை நேசித்து வாசிப்பவனே” என்று வாசகரை மதிப்புடன் அழைக்கிறது.
இந்தப் பகுதியை முடிப்பதற்காக, முன்னுரையின் முடிவில் வரும் ஒரு வசனத்தைத் தருகிறேன். இது முன்னுரை எழுதியவர்களுக்குக் கடவுளால் வழங்கப்பட்ட தேவ கட்டளை போல் அமைகின்றது: “தேவனைப் பயந்து, ஆண்டவரை மதித்து நட; நியாயத்தீர்ப்பு நாள் நெருங்குகிறது; வானம், பூமி, சமுத்திரங்களை உண்டாக்கிய ஒருவனை வணங்கு.” இவை கடுமையான தெய்வீக உத்தரவுகள். இறுதிக்காலத்தின் பயத்தையும், அனைத்து இந்து தெய்வங்களையும் மீறிய ஒரே தேவனுக்கான முழுமையான பக்தியையும் வலியுறுத்துகின்றன. இதன் செய்தி: விவிலியக் கடவுளுக்குத் திரும்புங்கள்.
மெல்ஹோவின் வேதத்திருப்புதலின் குணாதிசயங்கள், அவர் அறிமுகப்படுத்திய நூதன முறைகள், அவரின் உறுதியான மரபுசார் இறையியல் நிலைப்பாடு எவ்வாறு டச்சுக் கல்வினியக் கிறிஸ்தவத்தின் சார்பாகப் பேசும் முக்கியமான குரலானது என்பது பற்றி மேலும் பேசலாம்.
உதவிய நூல்கள்
1. புதிய ஏற்பாடு அல்லது எங்கள் நாயனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய புதிய உடன்படிக்கையின் சகலமான பொஸ்தகங்கள். இதனை இந்த இலங்கைத் தீவுக்கு அதிபதிகளுமாகிய மேன்மையானவர்களின் கட்டளையினால் கிரேக்க பாஷையினின்று தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது. டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் அச்சுக்கூடம், கொழும்பு, 1759.
2. இராச தீர்க்கதரிசியான தாவீதின் சில சங்கீதங்களும் புகழ்ச்சிப் பாடல்களும் யாழ்ப்பாணத்திலே திருச்சபையின் சுத்தமான சுவிஷேசதாசனாகிய பிலிப் டி. மெல்லோ குருவனவராலே உலகத்தார் பாவத்தில் இராதபடிக்கு திருச்சபையினுடைய நியமமான கட்டளையின்படி இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படி பதிப்பிக்கப்பட்டது. கொழும்பு, 1755.
3. பிலிப்பு டி. மெல்லோ, சத்தியத்தின் ஜெயம், கொம்பனியின் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1753. மீள் பதிப்பு: நவரட்ணம் குகபரன், புலரி வெளியீடு, யாழ்ப்பாணம், 2023.
4. Reggie Candappa (ed.), History of the Colombo Chetties (கொழும்பு: Foremost Productions Ltd., 2000).
5. ஞானம் பாலச்சந்திரன், மெல்ஹோ பாதிரியார் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு – கி.பி. 1759, ஞானம் பதிப்பகம், கொழும்பு, 2016.
6. Simon Casie Chitty, ‘ Ceylon Celebrities: Philip de Melho 1723-1790, Ceylon Literary Register Vol. II no. 2 February. Third Series 1932, pp.49-56 .



