பாடலாசிரியர் எம்.பி. வேல்சாமி தாஸனின் சமூக விழிப்புணர்வும் ஆன்மிக கருத்துகளும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

பாடலாசிரியர் எம்.பி. வேல்சாமி தாஸனின் சமூக விழிப்புணர்வும் ஆன்மிக கருத்துகளும்

April 21, 2026 | Ezhuna

இலங்கையின் மலையக நாட்டார் மரபு, அழகியலையும் வாழ்வியலையும் மட்டுமல்ல; எதிர்ப்புவாதச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துபவை. சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக மலையக மக்களிடையே தோன்றிய எதிர்ப்புணர்வுகள் பல்வேறு கலைவடிவங்களாகவும் உருமாறியுள்ளன. அவ்வகையில் சமூக அடையாளச் சிக்கல், உரிமை மறுப்பு, வரலாற்றுப் புறக்கணிப்பு, பொருளாதாரத் திண்டாட்டம் ஆகிய அனுபவங்களின் எதிரொலியாக, ‘மலையக வீதிப்பாடல்கள்’ உருவாகுவதைக் காண்கின்றோம். முச்சந்தி இலக்கிய வகையின் ஒரு முக்கியகூறாக விளங்கும் இப்பாடல்கள், எழுச்சிக் கோசங்களையும், அரசியற் சிந்தனைகளையும் முன்வைப்பவை. இப்பாடல்கள் சித்திரிக்கும் விடயப்பரப்புகளையும், அவற்றை இயற்றிய பாடலாசிரியர்களையும், அவர்களுக்குப் பின்னணியாக அமைந்த சூழ்நிலைகளையும் ஆவணப்படுத்தும் நோக்கம் கருதியதாக ‘மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள்’ எனும் இத்தொடர் பரிணமிக்கும். தலைப்பில் அமைந்தது போலவே, அவ்வாறு எழுந்த பாடல்கள் ஏற்படுத்திய சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் தொடர்பிலும் இத்தொடரின் உள்ளடக்கம் விரிவுபெறும்.

 

ஐம்பதுகளின் இறுதி முதல் இரண்டாயிரமாம் ஆண்டு வரையில் பாடலாசிரியர் வேல்சாமி தாஸனின் செயற்பாடுகள் மலையக சமூக அசைவியக்கத்தினுள் அவதானிப்பிற்குரியதாக அமைந்திருந்தன. தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பங்குடி தொகுதியின் மைலன்கோன்பட்டி கிராமத்தை பூர்விகமாகக் கொண்டதன் அடையாளமாக ‘மெய்லாங்கோன்பட்டி எம்.பி. வேல்சாமி தாஸன்’ என தன்னைத் தனது பாடல் நூல்களில் அடையாளப்படுத்தியுள்ளார். இலங்கையில் கண்டி, தெல்தோட்டை, பட்டியாகம தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்த நிலையிலேயே தனது எண்ண உணர்வுகளை இவர் பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது இரண்டு பாடல் நூல்கள் மாத்திரமே இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சமுதாய சிந்தனைக்குரிய வெளிப்பாடுகளை உட்சுமந்ததாக ‘இலங்கை தொழிலாளர் இம்சைக் குரல்’ இரண்டாம் பாகம் திகழ்கிறது. ஆன்மிகத் தெளிவின் வெளிப்பாடாய் ‘சிவஜோதி பதிகம்’ அமைந்துள்ளது. இவ்விரு பாடல் தொகுப்புகள் வேல்சாமி தாஸனின் எண்ணவோட்டங்களின் அடையாளமாகத் திகழ்கின்றன.  

ஏனைய மலையக வீதிப்பாடல்களை ஆவணப்படுத்தும் முனைப்பிலும் பாடலாசிரியர் எம்.பி. வேல்சாமி தாஸனின் ஈடுபாடு முக்கியத்துவம் பெறுகிறது. அந்த ஈடுபாட்டின் காரணமாகவே பல பாடலாசிரியர்களின் பாடல்களைத் தரிசிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியுள்ளது. வீதிப்பாடல்கள் குறித்த ஆவணங்களில் பெ. முத்துலிங்கம் தொகுத்த ‘பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்’ நூல் முக்கிய கவனத்திற்குரியதாகிறது. இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள வீதிப்பாடல்கள் வேல்சாமி தாஸனின் சேகரிப்பில் இருந்தவையாகும். வேல்சாமி தாஸனின் அந்திம காலத்தில் அவரின் சேகரிப்பிலுள்ள இப்பிரதிகளை ‘மலைமுரசு’ க.ப. சிவம் பெற்றுக்கொண்டுள்ளார். க.ப. சிவத்திடமிருந்து அந்தனி ஜீவா பெற்றுக்கொண்டார். அவை கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் புசல்லாவை இராமன்துரை தோட்டத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்தமையினால் அவற்றைத் தொகுக்க வேண்டும் என்ற உந்துதல் பெ. முத்துலிங்கத்திடம் ஏற்பட்டுள்ளது. இப்பாடல்களைச் சேகரிக்கும் ஆர்வம் வேல்சாமி தாஸனிடத்தில் காணப்பட்டதன் விளைவாகவே இவ்வாறானதொரு தொகுப்பு ஆவணத்தை தயார் செய்ய முடிந்தது.

தமிழகத்தில் கவனத்தைப் பெற்ற திராவிடம் பற்றிய கருத்து நிலைகள் மலையகத்தையும் ஊடுருவுகிறது. இத்திராவிட சிந்தனையை ஊடுகடத்தும் முனைப்பில் தமிழ் சினிமாவின் தாக்கம் பெரிதும் துணை நின்றுள்ளது. சமுதாயத்தில் நிலவிய மூடப் பழக்கவழக்கங்களைக் களையும் நோக்கிலான சீர்திருத்தக் கருத்துகள் சினிமாவின் பேசுபொருளாகியது. 1952இல் வெளியாகிய ‘பராசக்தி’ திரைப்படம் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்று வரையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துவனவாகும். மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான இத்திரைப்படம் வீதிப்பாடலாசிரியர்களிலும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தாக்கம் வேல்சாமி தாஸனிலும் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. 

வேல்சாமி தாஸனின் ‘இலங்கை தொழிலாளர் இம்சைக் குரல்’ எனும் தலைப்பில் அமைந்த பாடல் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் உள்ளடக்கமும் சித்தரிப்புகளும் அவதானத்திற்குரியவையாகும். 1957இல் கண்டி ராஜ வீதியில் அமைந்திருந்த குருநாதன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட இத்தொகுப்பு 0-4-0 அணாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாரத மாதாவின் படத்துடன் காந்தி, நேரு ஆகியோரின் படங்களும் இத்தொகுப்பின் அட்டையாக உள்ளன. பொதுவாக உ. சிவமயம் என அச்சிடப்படும் வழக்கமே காணப்படுகின்ற நிலையில் உ. ஸ்ரீ குகமயம் என குறிப்பிடப்பட்டுள்ளமை அவதானத்தைப் பெறுகிறது.

பொதுவாக இரண்டாயிரமாம் ஆண்டு வரையில் வீதிப்பாடல் தொகுப்புகளைப் போலவே சினிமாப் பாடல் தொகுப்புகளும் வெளியாகின. நகரங்களுக்குச் செல்லும் போது பாட்டுப் புத்தகங்களை வாங்குவது அக்காலத்தின் கட்டாயமான செயற்பாடாகும். நகரங்களில் பாட்டுப் புத்தகங்களின் விற்பனை எப்போதும் சிறப்பான நிலையிலேயே காணப்படும். தோட்டங்களுக்கு வரும் பெட்டி வியாபாரிகளும் பாட்டுப் புத்தகங்களை கொண்டுவந்து விற்பனை செய்வார்கள். பாட்டுப் புத்தகங்கள் திரைப்படம் குறித்த விவரணக் குறிப்பைக் கொண்டிருக்கும். அவ்வாறான திரைப்படப் பாடல்களில், பராசக்தி திரைப்படத்தில் உடுமலை நாராயண கவி எழுதிய பாடல் மிகுந்த கவனத்தைப் பெறுகிறது. அப்பாடல் பின்வருமாறு வரிகளைக் கொண்டமைந்துள்ளது.

“தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்

காசுமுன் செல்லாதடி – குதம்பாய்

காசு முன் செல்லாதடி.

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்

காசுக்குப் பின்னாலே – குதம்பாய்

காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்

சாட்சி கோர்ட்டு ஏறாதடி – குதம்பாய்

சாட்சி கோர்ட்டு ஏறாதடி.

பைபையாய் பொன் கொண்டோர்

பொய் பொய்யாய் சொன்னாலும்

மெய் மெய்யாய் போகுமடி – குதம்பாய்

மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவரானாலும் இல்லாதவரை

நாடு மதிக்காது – குதம்பாய்

நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்

வெள்ளிப் பணமடியே – குதம்பாய்

வெள்ளிப் பணமடியே”

இப்பாடலைத் தழுவி வேல்சாமி தாஸனால் பின்வரும் வரிகள் எழுதப்படுகின்றன.

“வானம் பூமி நடு மத்தியிலுதித்த

மானிட நேயர்களே – சிறந்த

மானிட நேயர்களே

மாநகர் லங்கையில் கானகமழித்து

மாடுபோலே யுழைத்தோம் – தினம்

மாடுபோலே யுழைத்தோம்

கங்காணிகள் தோட்டப்பங்காளிகள் போலவே 

காவலாக வருவார் – நமக்கு

காவலாக வருவார்            

சிந்தாமணியில் விந்தைநீர் பெருக

சீறி மிரட்டிடுவார் – கங்காணி

சீச்சீ போ என்றிடுவார்

இந்தவிதமாக சொந்தம் பாராட்டியே 

பந்தம் பிடித்திடவே – உயர்த்தி

பந்தம் பிடித்திடவே 

சொந்தப் புத்தியை துரையவரிழந்து 

துள்ளிக் குதித்திடுவார் – பந்தப்பேய்

துற்புத்தி கேட்டிடுவார்”

பொதுவாக இப்பாடல்களில் சித்தர்கள் பாடி வைத்த பாடல்களின் உள்ளடக்கமும் உருவகமும் செல்வாக்குப் பெறுகின்றது.

“சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்

சாட்சி கோர்ட்டு ஏறாதடி – குதம்பாய்”

என்ற வரிகளில் ‘குதம்பாய்’ என விழிக்கப்படுகின்றமையை அவதானிக்கலாம். குதம்பை சித்தரினால் இயற்றப்பட்ட பாடல்களில் இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. குதம்பை என்பது பெண்கள் காதுகளில் அணியும் ஆபரணம் ஆகும். குதம்பை அணிந்த பெண்களை குதம்பாய் என அழைப்பார்கள். குதம்பை அணிந்த பெண்களை விழித்து தன் கருத்துகளை எடுத்துரைத்தமையால் குதம்பை சித்தர் என இவர் அழைக்கப்பட்டுள்ளார். நிலையாமையை மறுக்கும் குதிக்கும் மனதைத்தான் குதம்பை எனச் சொல்லியிருக்கக் கூடும் என்ற கருத்தும் உள்ளது. “வெட்ட வெளிதான் மெய்நிலை, ஞானிகள் முத்தமிழைக் கற்று அதனைத் தழுவ வேண்டும். ஞானிகள் மெய்ப்பொருளைக் காண வேண்டும்” போன்ற வலியுறுத்தல்கள் தான் குதம்பாய் பாடல்களின் உள்ளடக்கங்களாக அமைகின்றன. வீதிப்பாடலாசிரியர்கள் சித்தர்களின் வெளிப்பாடுகளை தாங்கள் அறிந்த வகையில் வெளிப்படுத்தியதையும் அவதானிக்க முடிகிறது.

சித்தர் பாடல்களில் ‘ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே’ என்ற விழிப்பு இடம்பெறுகிறது. ‘இடைக்காடர்’ சித்தரினால் பாடப்பட்ட பாடல்களே இவ்வாறு விழிக்கப்பட்டுப் பாடப்பட்டுள்ளன.

“மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக் கோனே! முத்தி

வாய்த்ததென்று எண்ணோடா தாண்டவக்கோனே!

சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே! – யாவும்

சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே!”

என்ற பாடல் வரிகள் ஞானத்தின் வெளிப்பாடாய் தொடர்கின்றன. அவ்வாறான சொல்லாடல் பராசக்தி திரைப்படத்திலும் பின்வருமாறு புனையப்பட்டுள்ளது.

“ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – காசு

காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே

உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே – காசு

முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பிணத்தைக்

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பணப்

பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே”⁠⁠⁠⁠

பின்வருவது வேல்சாமி தாஸனால் இப்பாடலின் மெட்டில் புனையப்பட்டுள்ள வரிகளாகும்.

“காலை மணி ஐந்துக்கெல்லாந் தப்படிப்பாங்கோ – வந்து

கணக்குப் போலே ஆறுக்கெல்லாம் பிரட்டெடுப்பாங்கோ

வேலையிலே யேழுக்கெல்லாம் இல்லாவிட்டாங்கோ – நமக்கு

வேலையில்லை என்று சொல்லி விரட்டிடுவாங்கோ”

இவ்வாறு வேலையிலிருந்து விரட்டப்படுபவர்களால், மீளவும் அன்றைய பொழுதில் வேலையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படும். அவற்றில் கங்காணியிடம் மன்றாடுவது ஒரு வகை அணுகுமுறையாகும். அந்நிலைமையை வலியுறுத்தும் வகையில் பின்வரும் பாடல் இசைக்கப்படுகிறது.

“இன்று மட்டும் பிழை பொறுத்து கங்காணியாரே – நெஞ்சில் 

இரக்கம் வைத்து வேலை தாங்கள் கங்காணியாரே

பிள்ளை குட்டிக்காரனையா கங்காணியாரே – நாளை 

பிரட்டுடனே வாரேனையா கங்காணியாரே” 

பொதுவாக வீதிப்பாடல்கள் காமன் கூத்துப் பாடல்களைத் தழுவிய நிலையில், அப்பாடல்களின் மெட்டுகளில் அமைந்திருந்தமையை அவதானித்துள்ளோம். மலையகத்தின் முக்கூத்துகளில் ஒன்றான ‘பொன்னர் – சங்கர்’ கூத்துப் பாடல்களைத் தழுவிய நிலையிலும் பாடகர் வேல்சாமி தாஸன் பாடலியற்றியுள்ளார். ‘பொன்னர் – சங்கர்’ அண்ணன்மார் சாமி கதை எனவும் அழைக்கப்படுகின்றது. அக்கதையில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடலுக்கு ஒத்த வகையில் வேல்சாமி தாஸனுடைய பின்வரும் பாடல் வரியும் அவதானத்தைப் பெறுகிறது.

“பந்தக்காரப் பேய்களெல்லாம் அண்ணமார்களே – வெகு

பரபரப்பாய் முன்னோடுவார்கள் அண்ணமார்களே

விந்தையாகப் பேசிடுவார் அண்ணமார்களே – நல்ல

விபரீதமாய் கோள் முடிப்பார் அண்ணமார்களே”

பொன்னர் – சங்கர் கூத்தில் பிரயோகிக்கப்படும் பாடல் அமைப்பை ஒத்த வகையில் அமைந்த பாடல்களையும் வேல்சாமி தாஸன் இயற்றியுள்ளார். எடுத்துக்காட்டாக, 

“கறுத்ததெல்லாம் தண்ணீரென்பீர் பெரியண்ணாவே

வெளுத்ததெல்லாம் பாலுமென்பீர் பெரியண்ணாவே

கபடு சூது தானறியா பெரியண்ணாவே

தாராள வம்சமே பெரியண்ணாவே

மொட்டை வெள்ளாள குலம் பெரியண்ணாவே

ஏரி பிடித்தறியா பெரியண்ணாவே”

என்று தொடரும் பொன்னர் சங்கர் கூத்துப் பாடலொன்றை அடியொற்றி இவரும் பொருத்தமான சொல்லாடல்களுடன் தன்னை அறிமுகம் செய்யும் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

“வஞ்சமில்லாத வேல்சாமி கவியுரை 

நெஞ்சாரவே யுணர்வீர் – நண்பரே

நெஞ்சாரவே யுணர்வீர்….”

அத்தோடு மேலும்,

“பாவலன் வேல்சாமி சொல்லைத் தட்டிடாதீங்கோ – துஷ்ட

பரிதாபத்தை நீண்ட காலம் விட்டிடாதீங்கோ…”

என்றவாறும்,

“மங்களமாய் வாழ்ந்திட வேல்சாமி நேசரே – இனி

மனங்கனிந்து ஒற்றுமையாய் சேர்ந்திடுவீரே

மாமயிலாங்கோன் கவியைப் பார்த்திடுவீரே – எல்லாம்

மனமறியத் தெரிந்து பாட்டை வாங்கிடுவீரே

தென்னிலங்கை வாழும் பெரியோரே கேளுங்கோ – இந்த 

தேசத்தில் படுந்துயரைப் பாடி வாரங்கோ”

என்றவாறும் பாடல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. 

காங்கிரசில் ஏற்பட்ட பிளவால் சமூகத்தில் ஒற்றுமை சீர்குலைந்து போனதை தனது பாடல்களில் வெளிப்படுத்துகிறார். “ஓட்டுரிமை நாட்டுரிமை ரெண்டும் போச்சுதே – இப்போ ஓரவஞ்சம் பேசும் நீதி அதிகமாச்சுதே’ என வலியுறுத்துகிறார். தனது கடமைகளில் உணர்வுடனும், உண்மையுடனும் ஈடுபடுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் முனைப்பையும் அவரது பாடல்களில் காணலாம். உழைப்பும் உணர்வு சார்ந்து இருத்தல் வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக பாடலாசிரியர் வலியுறுத்துவதையும் அறிய முடிகிறது. 

“ஆலவட்டம் போட்டுக்கொண்டு வேலைவெட்டி செய்யாமலே

அழகு நடை வேண்டாமப்பா மக்களே – உங்கள் 

அடிவயிறு சுருங்கிப்போகும் – மக்களே

மண்பறிந்துண்ணேலென்ற கண்மணியான் – தொழிலை

மனதுவைத்துச் செய்திடுங்க மக்களே – மழை

மனம்போற் சொரிந்திடும் பார் – மக்களே”

பொதுவாக தோட்டங்கள் சோபை இழந்தமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று தோட்டத் தொழிலாளர்களின் பிடிப்பில்லா நிலை ஆகும். ஒரு காலகட்டத்தில் ‘எங்க தோட்டம், நம்ம தோட்டம்’ என்ற உணர்வு மலையக மக்களிடத்தில் நிலைபெற்றிருந்தது. அந்தக் காலம் வரை தோட்டங்களும் நன்றாக இருந்தன; மக்களின் வாழ்க்கை முறையும் சிறப்பாக இருந்தது.

தோட்டங்களில் வாழும் மக்கள் மீதான அக்கறை நாட்டின் ஆட்சியாளர்களிடம் காணப்படாதமையால், அந்தத் தொழிற்துறையிலிருந்து இம்மக்களை அந்நியப்படுத்தும் முனைப்பில் அவர்கள் வெற்றி கண்டனர். அதன் விளைவாக ‘எங்கள் தோட்டம்’ என்ற உணர்விலிருந்து இம்மக்கள் விலகிச் செல்கின்றனர். ‘யாருடைய தோட்டம்? நமக்கென்ன?’ என்ற மனநிலை வளர்கிறது. இதன் காரணமாக தோட்டங்களும் சீரழிகின்றன; மலையக மக்களும் சிதைவடைகின்றனர்.

‘கல்வி, பொருளாதாரம் ஆகிய அளவீடுகள் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன’ என்ற கருத்து நிலவினாலும், எமது சமூக அடித்தளம் அசைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உணர மறுக்கின்றனர். உழைப்பையே அடையாளமாகக் கொண்டிருந்த மலையக மக்கள் சோம்பேறிகளாக மாற்றப்பட்டதன் பின்னணியில் உள்ள நுண் அரசியலைப் பற்றிய தெளிவு அவசியமாகிறது. இவ்வாறான விடயங்களைத் தெளிவுறுத்தும் அவதானம் வேல்சாமி தாஸனின் படைப்புகளில் பொதிந்திருப்பது தெளிவாகிறது.

‘இலங்கை தொழிலாளர் இம்சைக் குரல்’ இரண்டு பாகங்கள் வெளிவந்த நிலையில், இதன் மூன்றாம் பாகத்தையும் வெளியிடும் எண்ணம் பாடலாசிரியரிடம் இருந்தது. ஆனால் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது இதன் இரண்டாம் பாகம் மட்டுமே என்பதால், அவரது தொடக்கநிலைச் சிந்தனைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. அவர் இரண்டாம் தொகுப்பை 1957 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அதனை வெளியிட்ட பின் நாற்பத்து மூன்று ஆண்டுகள் கழித்தே அவர் மறைந்துள்ளார். இதனால் அவரது எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் குறைந்திருப்பது கவலைக்குரியது.

தன்னுடைய உணர்வுகளோடு ஒத்துப்போகும் பிற பாவலர்களின் பாடல்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியும் அவரின் முக்கிய சிறப்பாகும். இப்பணியில் அவர் ஈடுபடாமல் இருந்திருந்தால், இவ்வகை ஆவணங்கள் பலவும் கவனத்திற்கு வராமல் போயிருக்கும். மலையக சமூகத்தின் எதிர்ப்பிலக்கிய சிந்தனையை அறிய முயலும்போது, வேல்சாமி தாஸன் ஒரு முக்கிய ஆளுமையாகத் திகழ்கிறார்.

வேல்சாமி தாஸனின் சமூக உந்துதலை அவரது ‘இலங்கை தொழிலாளர் இம்சைக் குரல்’ பாடல்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இதேவேளை, அவரை வேறொரு பரிமாணத்தில் காட்டுவது ‘சிவஜோதி பதிகம்’ ஆகும். அது சிவனை ஞான ஒளியாகவும், ஆத்மாவின் உள் ஒளியாகவும் போற்றிப் பாடும் பத்துப் பாடல்களின் தொகுப்பாகும். இது ஆன்மாவின் அறியாமை இருளை நீக்கி, சிவஞான ஒளியை அடைய வேண்டிப் பாடப்படுவதாகக் கருதப்படுகிறது.

முன்னதாக ‘மெய்லாங்கோன்பட்டி எம்.பி. வேல்சாமி’ என்ற அடையாளத்துடன் அறிமுகமான இவர், பின்னர் ‘ஸ்ரீ ரமண சொரூப சிவஜோதி’ என்ற ஆன்மிக அடைமொழியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

‘சிவஜோதி பதிகம்’ தொகுப்பில் பத்துப் பதிகங்களுடன் ‘சிவஜோதி கீதம்’ என்ற தலைப்பில் ஆறு பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் உள்ள பாடல்களை வேல்சாமி தாஸன் தொகுத்துள்ளார். இப்பதிகங்கள் அவரை உள்ளார்ந்த முறையில் கவர்ந்துள்ளன. தாம் பெற்ற ஆன்மிக திருப்தியை பிறரும் அடைய வேண்டும் என்ற நோக்கில் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

மேலும், ஸ்ரீ கதிர்காமதோத்திர கீதாமிர்தம், ஸ்ரீ ஷண்முஹானந்த மாலை, லாவணித் திருப்புகழ், ஸ்ரீ வள்ளி ஜெனனக் கும்மி, ஸ்ரீ சிவசக்தி கணேசர் பதிகம், ஸ்ரீ சிவசக்தி பதிகம், ஸ்ரீ ஹரி இராமானந்த பஜனை (நான்கு பாகங்கள்) போன்ற ஆன்மிக நூல்களையும் அவர் தொகுத்துள்ளார். இப்பதிகங்கள் வெளிப்படுத்தும் உண்மைகளை அறிந்து பெற்ற தெளிவின் அடிப்படையிலேயே அவர் மறுபதிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவரது முயற்சியும் கவனத்திற்குரியது. “ஞாபகமூட்டுகிறேன். அன்பு வாசகர்களின் உற்சாக குறைவினால் அநேக முக்கிய அறிவுரை புஸ்தகங்கள் பின்தங்கிக் கிடக்கின்றதென ஞாபகிக்கின்றேன்” என்ற அவரது குறிப்பும், “அன்பர்களே! கற்றவர், கௌரவர், கருத்துளர், கற்றாரும், கல்லாரும், நாவலரும், பாவலரும், எமது சிற்றறிவின் நூலின் சாரமறிந்து ஏற்பதுடன், அனைவர்களின் மனோற்சாகமே எமது கலைவளம்” என்ற விளக்கமும் வாசகர்களை விழிப்புணர்வூட்டுகின்றன.

வேல்சாமி தாஸனின் தொகுப்பு மற்றும் பதிப்பு முயற்சிகள், இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தில் பதிப்பகம் மற்றும் அச்சகம் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன. அவரது ‘இலங்கைத் தொழிலாளர் இம்சைக் குரல்’ கண்டியில் உள்ள குருநாதன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ‘சிவஜோதி பதிகம்’ நாவலப்பிட்டி ராஜா அச்சகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி ராஜா அச்சகம் நீண்டகாலமாக இத்துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அங்கு பணியாற்றிய ‘மாஸ்டர்’ என அழைக்கப்பட்ட எம்.சி. கிருஷ்ணமூர்த்தி பிள்ளையின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. 1993 ஆம் ஆண்டு கண்டியில் இந்து கலாசார அமைச்சு நடத்திய சாகித்திய விழாவில் வேல்சாமி தாஸன் கௌரவிக்கப்பட்டது தொடர்பான தகவலையும் அவர் இத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.

வீதிப்பாடலாசிரியர்களின் பல நூல்கள் இவ்வச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளன. வீதிப்பாடல்கள் உள்ளிட்ட சமூக ஆவணங்களைப் பற்றிய அறிவு கொண்டவர்களாகவும் இவ்வச்சகத்தினர் விளங்கினர். மாவனல்லையில் இருந்து பாடல்கள் இயற்றி விற்பனை செய்த மா. பெரியசாமிப்பிள்ளை பற்றிய தகவலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக வேல்சாமி தாஸன் போன்றோர் சித்தர் பாடல்கள், கூத்துப் பாடல்கள், தோத்திரங்கள், பதிகங்கள் ஆகியவற்றில் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக பாடல் இயற்றும் திறனை வளர்த்துக் கொண்டனர். முழுமையான தேர்ச்சி இல்லாவிட்டாலும், தங்கள் உணர்வுகளைப் பாடல்களாக வெளிப்படுத்த ஆர்வம் காட்டினர். இப்பாடல்களில் எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் இருந்தபோதிலும், அவை மக்கள் மத்தியில் கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்தின. மேலும், சமூக எழுச்சியையும் ஆன்மிக விழிப்புணர்வையும் உருவாக்கும் நோக்கத்துடன் இப்பாடல்கள் அமைந்திருந்தன.

இந்த அடிப்படையில், வேல்சாமி தாஸன் கண்டி மாவட்டத் தமிழர்களின் சமூக எழுச்சியில் பங்காற்றியவர் எனக் கருதப்படுகிறார். அவரது பணிகள் அப்பகுதி தமிழர்களின் சமூக அமைப்பில் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தாம் அறிந்தவற்றின் அடிப்படையில் சமூக மாற்றத்தில் தன்னை இணைத்துக் கொண்ட செயற்பாட்டாளராகவே அவர் விளங்கினார். இந்தக் கோணத்தில் அவரது பங்களிப்பு மதிப்பிற்குரியது.

உசாத்துணை நூல்கள்

யோகராசா, செ. (2023). ஈழத்து முச்சந்தி இலக்கியம். மகுடம் பப்ளிகேசன்.

முத்துலிங்கம், பெ. (2012). பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள். கயல் கவின் புக்ஸ்.

சாரல் நாடன். (1997). மலையகம் வளர்த்த தமிழ். துரவி வெளியீட்டகம்.

வேல்சாமி, எம்.பி (1957). இலங்கை தொழிலாளர் இம்சைக் குரல். கண்டி: குருநாதன் அச்சகம்.

வேல்சாமி, எம்.பி (1994). சிவஜோதி பதிகம். நாவலப்பிட்டி: ராஜா அச்சகம்.



About the Author

அருணாசலம் லெட்சுமணன்

‘ம.மா - கொத் - உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின்’ அதிபரான அருணாசலம் லெட்சுமணன், 'நிகர்' சமூக - கலை - இலக்கிய அரங்கத்தின் பிரதம அமைப்பாளருமாவார். தேசிய, பன்னாட்டு ஆய்வரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்து வருகிறார். 2023இல் மலேசியாவில் இடம்பெற்ற பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய, பன்னாட்டு இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். பயண இலக்கியங்கள், சமூக, கலை, இலக்கிய, கல்வித்துறைச் செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். இவர் ஒரு கவிஞருமாவார். சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியம் தொடர்பான விமர்சனங்கள், ஆய்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்