1920களில் இலங்கையின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள் இந்த வெடிப்பை மேலும் விரிவடையவிட்டனர். அது 1930களில் அகன்று சென்றது; அடுத்த தசாப்தத்தில், 1940களில், நிரப்ப முடியாத நிலப்பிளவாக விரிந்தது. ஆட்சியாளருடைய செயல்பாடுகளும் அகலச்சென்ற பிளவை ஒடுக்க உதவவில்லை. உண்மையில் ஆட்சியாளர் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.
பின்புலம்
இருபதாம் நூற்றாண்டின் முதற்காலில் இந்தியத் தேசியவாதிகளுடைய கலைச்சொல் அகராதியில் ‘வகுப்புவாதம்’ (Communalism) என்ற பொருள் பொதிந்த சொல்லொன்று சேர்க்கப்பட்டது. அது பின்னர் தேசிய இயக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் மதம் சார்ந்த அல்லது இனக்குழு (Ethnic) சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டோர் மீது பாய்ச்சுவதற்குப் பயன்படும் கூரிய அம்புகளில் ஒன்றாக மாறியது. இத்தகைய செயல்பாடுகள் வகுப்புவாதம் எனப்பட்டது. இதில் ஈடுபடுவோர் ஒற்றுமைப்பட்ட இந்தியாவை, எல்லோரும் இந்தியர் என்ற தேசிய உணர்வை, வளர்ப்பதற்குப் பாதகம் விளைவிப்பவர்கள் என மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகிய முன்னணித் தலைவர்கள் வர்ணித்தனர். இந்தியத் தேசியவாதிகள் ‘எல்லோரும் இந்தியர்’ என்ற இலட்சியத்துக்கு எதிராகச் செயல்பட்டோரை ‘வகுப்புவாதிகள்’ என்று பெயரிட்டு வெட்கமடையச் (Shaming) செய்தனர்.
வகுப்புவாதம் என்ற பொருளை அணுகிய முறையில் நேருவுக்கும் காந்திக்கும் இடையில் வேறுபாடு உண்டு. காந்தியின் அணுகுமுறை ஒழுக்கநெறி (Morality) மற்றும் மதம் (Religion) சார்ந்த நிலைப்பாட்டில் இருந்து வெளிப்பட்டது. காந்தியின் நோக்கில் உண்மையான ஆன்மீகம் (Spirituality) எல்லா மக்களையும் ஒன்றுபடுத்தும் சக்தியே, பிரிக்கும் சக்தியல்ல; மத அடிப்படையில் வகுப்புவாதிகளாக நடப்போர் தங்கள் மத நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறார்கள் (Betrayal of Faith).
இந்து, முஸ்லிம் எனப் பிரிவினை வளர்க்கும் வகுப்புவாதிகள் தத்தம் மதத்தையே அழிக்கின்றனர் எனக் காந்தி இவர்களைத் தாக்கினார். ‘Young India’ என்ற சஞ்சிகையில் 1927இல் அவர் எழுதியது இதனை விளக்கும்: “The Hindu thinks that in quarreling with the Mussalman he is benefitting Hinduism, and the Mussalman thinks that in fighting the Hindu he is benefitting Islam. But each is ruining his faith.” இந்தியா என்பது பாரத மாதாவின் குடும்பம் – வகுப்புவாதம் இக்குடும்பத்தைக் குலைக்கும் என்பது காந்தியின் கருதுகோள்.
நேருவின் அணுகுமுறை வேறு. அவர் சோசலிசக் கருத்துகளைக் கடைப்பிடித்தவர். அத்துடன் அவருடைய நோக்கு பகுத்தறிவை அடித்தளமாகக் கொண்டது (Rationalist). அவர் நோக்கில் வகுப்புவாதம் பேரரசுவாதிகளின் ஆயுதம் (“Communalism is an old weapon of the imperialists”). ஆகவே, வகுப்புவாதிகள் இந்தியரைப் பிளவுபடுத்தும் பேரரசுவாதிகளுக்கு உதவுபவர்கள்.
இலங்கையில் வகுப்புவாதம்
இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தில் இருந்தே வகுப்புவாதம் ஆட்சியாளரால் வளர்க்கப்பட்டது எனலாம். முதல் தடவையாக நாட்டுக்கு ஒரு சட்டவாக்க சபையை அமைத்தபோது சிங்களவருக்கு ஒரு பிரதிநிதி, தமிழருக்கு ஒரு பிரதிநிதி என்ற கோட்பாடு வெளிப்படும் வகையில் ஒரு சிங்கள உறுப்பினரும் ஒரு தமிழ் உறுப்பினரும் நியமிக்கப்பட்டனர். அவ்வாறே, ஒரு பறங்கியரும் மூன்று ஐரோப்பியரும் அவரவர் இனக்குழுக்களின் சார்பில் உறுப்பினராக நியமனம் பெற்றனர்.
இப்படி இனக்குழு அடிப்படையில் மக்களைப் பிரித்து நாட்டை ஆளுவதே சரியான முறை என்பதை இலங்கையர் ஏற்றுக்கொள்வதற்கும் தொடர்ந்து எதிர்பார்ப்பதற்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது. இதனால், 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் கண்டியரும் முஸ்லிம்களும் அரசியல் விழிப்புணர்வைப் பெற்றபோது அவர்களுக்கும் ஆட்சியாளர் ஒவ்வொரு பிரதிநிதியை நியமித்தனர்.
இனக்குழு அடிப்படையிலான பிரதிநிதித்துவமே முறையான பிரதிநிதித்துவம் என்ற கோட்பாடு மேலும் இறுகியது. சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருந்த சிங்களவருக்குக் கொடுக்கப்பட்ட அரசியல் வலு சமமான முறையில் சிறுபான்மையினராகிய தமிழருக்கும் வழங்கப்படும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது. தமிழ் மத்திய வகுப்பினர் இந்த நிலை எப்பொழுதும் இருக்கும் என்று எண்ணினர். இந்த எண்ணம் பிரித்தானியர் ஆட்சி நிலையானது என்ற கருத்துடன் தொடர்புடையதாகையால், அந்த ஆட்சிக்கும் அசையாத ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஆனால், 1920களில் இந்த நிலை மாறியபோது தமிழ் மத்தியவகுப்புத் தலைவர்கள் ஏக்கம் அடைந்தனர். முன்னர் கூறியதுபோல, இவர்கள் இனக்குழு அடிப்படையிலான பிரதிநிதித்துவத்துக்காகப் பல வகைகளில் போராடினர். சிங்கள மத்தியவகுப்புத் தலைவர்கள் இவர்கள் கருத்துகளை எதிர்த்தனர். ‘வகுப்புவாதி’ என்ற அம்பு இரு பக்கங்களிலும் இருந்து பாய்ந்தது.
இப்புதிய சூழலில் இலங்கையர் தேசியவாதத்துக்குப் பெரிதும் உழைத்த அருணாசலம் கூட மேற்கூறிய அம்புவீச்சுக்குத் தப்பவில்லை. தெற்கில் இருந்து F.R. சேனாநாயக்க (D.S. சேனாநாயக்கவின் தமையன்) அவரை வகுப்புவாதி என்றார்; வடக்கில் இருந்து ‘Hindu Organ’ ஆசிரியரும் அதே சொல்லை அவர்மீது வீசினார். இக்கட்டத்தில் ‘வகுப்புவாதி’ என்பது ஒருவரை இழிவுபடுத்தும் சொல்லாக மாறிவிட்டது.
சிங்களத் தலைவர்கள் பக்கத்தில் A.E. குணஸிங்ஹ, பண்டாரநாயக்க, D.S. சேனாநாயக்க போன்றோரும் வகுப்புவாதிகள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பழமை பேணுவோர் குழு
யாழ்ப்பாணத்தில் 1940களில் அரசியல் களத்தில் இளைஞர் காங்கிரஸ் குழுவினர், இடதுசாரிக் குழுவினர் ஆகியோரைக் காட்டிலும் கூடுதலான செல்வாக்குப் பெற்றவர்கள் பழமை பேணுவோர் (Conservatives) குழுவினர் என்றே கூறவேண்டும். இவர்களே யாழ்ப்பாணத்தவர் பிரதிநிதிகளாக அரச சபையில் இருந்தவர்கள். யார் இந்த அரச சபை உறுப்பினர்? யாழ்ப்பாணத் தொகுதி உறுப்பினர் அருணாசலம் மகாதேவா, பருத்தித்துறை உறுப்பினர் ஜி.ஜி. பொன்னம்பலம், காங்கேசன்துறை உறுப்பினர் சு. நடேசன், ஊர்காவற்றுறை உறுப்பினர் வை. துரைசுவாமி. யாழ்ப்பாணத்துக்கு வெளியே எஞ்சிய வட மாகாணத்தின் தொகுதியாக மன்னார்-முல்லைதீவு இருந்தது. அதன் உறுப்பினர் ஜெகநாதன் தியாகராஜா.
இவர்களுடன் பழமை பேணும் குழுவினராக ‘Jaffna Association’ என்ற கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இரண்டாம் உலகப் போர் முடிவடையும் கட்டத்தை அணுகிய போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சுதந்திரம் விரைவில் கிடைக்கும் என்ற எண்ணம் அரசியல்வாதிகள் மனதில் எழுந்தது. முன்னர் கூறியது போல், முக்கிய அரசியல் தலைவர் ஒவ்வொருவரும் தத்தமக்குச் சாதகமான அரசியல் யாப்பினைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளில் ஈடுபடுவதைக் காணலாம்.
இவர்களுள் மிகவும் தீவிரமாகச் செயல்பட்ட ஒருவர் D.S. சேனாநாயக்க ஆவார். அண்ணன் F.R. சேனாநாயக்க அகால மரணம் அடைந்தபின் அரசியலில் படிப்படியாக முன்னேறிய இவர், 1931இல் புதிய அரச சபையின் உறுப்பினராகி, விவசாயத் துறை அமைச்சர் பதவியைப் பெற்று முன்னணித் தலைவர்களுள் ஒருவரானார். அப்பொழுது தொட்டு இவர் தனக்கென ஒரு பாதையை வகுத்து நாட்டின் முதல்வராக வருவதற்குப் பெருவிருப்பு உடையவராய் செயல்பட்டார் என்பதில் ஐயமில்லை.
சேனாநாயக்கவின் ஆளுமைப் பண்புகள் மற்றும் அரசியல் சிந்தனை பற்றிப் பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். எனினும், இவருடைய ஆளுமையையும் கருத்துகளையும், இவற்றுக்கு மேலாக இவர் நாட்டுக்குத் தேவை என வகுத்திருந்த திட்டத்தையும், இலகுவில் புரிந்துகொள்ள முடியாது என்று நான் நினைக்கின்றேன்.
இவர் காலத்தில், முன்னர் கூறியது போல, மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டில் முதன்மை நிலையைப் பெற்றுத் தங்கள் சமூகத்தை உயர்த்துவதற்குப் பெருவிருப்புக் கொண்டிருந்தனர். ஒருவர் சேனாநாயக்க, மற்றவர்கள் பண்டாரநாயக்கவும் ஜயவர்த்தனவும் ஆவர். மூவரும் வெவ்வேறு சிந்தனைகளை மனதில் கொண்டு வேறுவேறு திட்டங்களை வகுத்தனர் எனலாம்.
சேனாநாயக்க படிப்படியாக, மெதுவாக, தயக்கமில்லாது தன் திட்டத்தை வகுத்தார். இவர் கல்வி நிறுவனங்களில் அதிகம் படிக்காதவர் (எட்டாம் வகுப்புடன் பாடசாலையை விட்டவர்). ஒரு மிதவாதி. மேலைத்தேச நிலைக்கும் முதலாளித்துவ முறைக்கும் சார்பானவர்.
பண்டாரநாயக்க செல்வந்தர் குடும்பம் ஒன்றில் தனியொரு மகனாகப் பிறந்து, சிறுவயதில் பாடசாலைக்கு அனுப்பப்படாது வீட்டிலேயே நியமிக்கப்பட்ட ஆங்கிலேய ஆசிரியர் ஒருவரால் கல்வி ஊட்டப்பட்டுப் பின்னர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டவர். பட்டம்பெற்று நாடு திரும்பிய போது தொழில்புரிய வேண்டிய தேவை இருக்கவில்லை. உடனடியாக அரசியலில் இறங்கி, முற்போக்குச் சிந்தனையை வளர்க்கும் கட்சி ஒன்றைத் தொடங்கினார். தன் சோசலிசக் கருத்துகளை வெளிப்படுத்தினார். அடுத்து, இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என அறைகூவினார். அதன் பின் சிங்கள மகாசபையை நிறுவி அதன் தலைவரானார். தயக்கம் நிறைந்தவர். ஒரு கொள்கையைத் திடமாகப் பற்றி ஓர் இடத்தில் நிற்கும் தன்மை இல்லாதவர். பொறுமை என்பது அவருடைய பண்புகளில் ஒன்று என்று கூறுவதற்கில்லை.
ஜயவர்த்தன தூரநோக்குடன் திட்டம் வகுப்பவர். இக்கட்டத்தில் இவர் மேலே குறிப்பிடப்பட்ட இருவருடனும் போட்டியிடும் நிலையில் இருக்கவில்லை. எனினும், இவர்களுக்கு இருந்த பெருவிருப்பு அவருக்கும் இருந்தது. தனக்குத் தருணம் வரும்வரை காத்திருக்க அவரிடம் பொறுமை இருந்தது. அதுவரை தன் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராகுவதற்குத் தேவையான செயல்களில் இடைவிடாது ஈடுபட்டார். இவரைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.
இலங்கை சுதந்திரம் பெறும் தறுவாயில் இருந்தபோது, இந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தைப் பெற்று வழிநடத்தப் பெருவிருப்புக் கொண்டோராய்க் காணப்பட்ட சேனாநாயக்கவும் பண்டாரநாயக்கவும் (ஜயவர்த்தனவும்கூட) தங்கள் இனக்குழுப் பற்றில் இருந்து வெளியேறி, முழு இலங்கையரையும் ஒன்றுகூட்டி வழிகாட்டும் தலைவர்களாக எழுச்சிபெறத் தவறினர். இந்த வகையில் இவர்களை இந்தியத் தேசியத் தலைவர்களுடன் ஒப்பிட முடியாது. பின்னர் நாம் காணும் சிங்கப்பூர் தலைவராகிய லீகுவான் யூ (Lee Kuan Yew) வெளிப்படுத்திய தலைமைத்துவப் பண்புகள் இவர்களிடம் எள்ளளவும் இருக்கவில்லை.
சேனாநாயக்கவின் எழுச்சி
இலங்கைக்குச் சுதந்திரம் கிட்டிவிட்டது என்பதைக் கூடுதலாக உணர்ந்து செயல்பட்டவர் சேனாநாயக்க என்றே சொல்ல வேண்டும். மிகச்சாதுரியமாக, வியக்கத்தக்க புத்திசாலித்தனத்துடன், தனது நிலையை ஆட்சியாளர்களுக்குக் கிட்ட நகர்த்திப் பிறர் எவரும் சவால்கொடுக்க முடியாத வகையில் முன்னிலையை அடைந்தார். தேசிய காங்கிரஸில் இருந்த பிற சிங்களத் தலைவர்கள் பிளவுபட்டுக் காணப்பட்டனர். சில இளம் உறுப்பினர் தீவிரப் போக்கைக் கடைப்பிடித்து இலங்கைக்கு முழுச் சுதந்திரம் உடனடியாக வேண்டும் என்று அடம்பிடித்தனர். சிலர் மிதவாதிகளாக இருந்தபோதிலும் சேனாநாயக்கவைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். காங்கிரஸின் முழு ஒத்துழைப்பு சேனாநாயக்கவுக்குத் தேவைப்பட்டது. ஆனாலும் அவர்களுடன் இணைந்து ஆட்சியாளரைப் பகைத்துக்கொள்ள சேனாநாயக்க விரும்பவில்லை. தான் அவர்களுள் ஒருவர் அல்லர் என்பதை ஆட்சியாளருக்குக் காட்டி, பிரித்தானிய அரசாங்கத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டிய அவசியம் இருந்தது.

பிரித்தானிய அரசாங்கம் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பரிந்துரை செய்ய ஓர் ஆணைக்குழுவை அனுப்பத் தீர்மானித்துள்ளதாக 1943 மே மாதத்தில் அறிவித்தது. உடனே இலங்கையில் அரசியல் செயல்பாடுகள் துரிதமடைந்தன. சேனாநாயக்க காத்திருந்த சமயம் வந்தது. அவர் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். காங்கிரஸின் தீர்மானங்களால் கட்டுப்படாது சுதந்திரமாக இயங்க இச்செயல் உதவியது.
தமிழர் தரப்பில்
வரவிருக்கும் ஆணைக்குழுவுக்குத் தமிழர் சார்பில் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அரசியல்வாதிகளும் பிறரும் செயல்பாடுகளைத் தொடங்கினர். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் வலு இழந்த இயக்கமாகிவிட்டது. ‘Jaffna Association’ என்ற அரசியல் கழகமும் முன்போல இயங்கவில்லை. அனுபவம் மிக்க அரசியல்வாதிகளாகச் செல்வாக்குடன் காணப்பட்டோருள் க. பாலசிங்கம், வை. துரைசுவாமி, சு. நடேசன், அ. மகாதேவா, ஜெ, தியாகராஜா ஆகியோர் இருந்தனர். இளம் தலைமுறையைச் சேர்ந்த, எழுச்சி பெறும் ஒரு தலைவராக ஜி.ஜி. பொன்னம்பலம் இருந்தார். ஆனால் இவர்களிடையே கருத்து ஒற்றுமை இருக்கவில்லை.
ஒற்றுமையின்மை வெளிப்படையாகப் பலரும் அறியக்கூடிய வகையில் இருந்தது என எண்ணுவதற்கு இடமளிக்கும் வகையில் யாழ்ப்பாணத்துச் செய்தித்தாள்கள், குறிப்பாக ‘Hindu Organ’ மற்றும் ‘Morning Star’, ஒற்றுமை தேவை என வலியுறுத்தின.
தமிழ்க் காங்கிரஸின் உதயம்
இப்பின்புலத்தில், பொன்னம்பலத்துடன் கூடி நடேசன் மற்றும் தியாகரஜா ஆகியோர் தமிழ்ப் பிரமுகர்களை ஒரு கூட்டத்துக்கு அழைத்தனர். இது ஓகஸ்து 1944இல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செப்தெம்பர் 03இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்ற கட்சியை அமைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் மாபெரும் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் சு. நடேசன், க. பாலசிங்கம், E.M.V. நாகநாதன் போன்ற பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பொன்னம்பலம் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய வசீகரமான ஆளுமையும் ஆங்கிலத்தில் அவருக்கு இருந்த நாவன்மையும் ஆங்கிலக் கல்விகற்ற யாழ்ப்பாணத்து மத்திய வகுப்பினரை அவர்பால் ஈர்த்தன. இருபது ஆண்டுகளுக்கு முன் ‘ஸ்வராஜ்’ எனக் குரல் எழுப்பிய மாணவர் காங்கிரஸைச் சேர்ந்த பிரமுகர்கள் கூட பொன்னம்பலத்துக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். அவர்களுள் மாணவர் காங்கிரஸின் முதலாவது தலைவராக இருந்த J.V. செல்லையா, செயலாளராக இருந்த I.P. துரைரத்தினம், (1950களில்) S.R. கனகநாயகம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பொன்னம்பலத்தையும் பெரும்பாலான தமிழ் அரசியல் தலைவர்களையும் வருத்திய பிரச்சினை சீர்திருத்தப்பட்ட சட்டவாக்க சபையின் பிரதிநிதித்துவ முறை ஆகும். 1920கள் வரை இருந்த இன அடிப்படையிலான பிரதிநிதித்துவ முறை 1931இல் கைவிடப்பட்டது. அத்துடன், வயதுவந்தோர் அனைவர்க்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இந்த இரு மாற்றங்களும் இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தின.
உலகப் பின்புலம்
இலங்கையில் நாட்டின் எதிர்காலம் பற்றி அரசியல்வாதிகள் கருத்து முரண்பாடுகளுடன் விவாதித்துக் கொண்டிருந்த அதே காலத்தில் இரண்டாம் உலகப் போர் முற்றுப்பெற்று உலகமே மாறிவிட்டது. வரலாறு காணாத வல்லரசாக எல்லாக் கண்டங்களில் கால் ஊன்றி நின்ற பிரித்தானியப் பேரரசு திடீரென நிலைகுலைந்தது.
நிலைகுலையும் பேரரசின் பாகங்களில் இருந்து புதிய அரசுகள் தோன்றின. இவை முன்னர் தனி அரசுகளாக அல்லது தனிநாடுகளாக இருக்கவில்லை. பிரித்தானியப் பேரரசு இவை உருவாகுவதற்கு உதவியது. தென் ஆசியாவை எடுத்துக்கொண்டால், தனக்கென எல்லைகள் வரையறுக்கப்பட்ட இந்தியா என்ற தனியொரு நாடு முன்னர் இருக்கவில்லை. இன்று நாம் காணும் இந்தியா ஒரு புதிய நாடு. விடுதலைக்குப் போராடிய இந்தியத் தலைவர்கள் இப்புதிய நாட்டைக் கட்டியெழுப்பத் திட்டமிட்டுச் செயலாற்றினர். பிரித்தானியரைத் துரத்திவிட்டு முன் இருந்த நிலைக்குச் செல்ல அவர்கள் போராடவில்லை. இதனைப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
இலங்கையின் நிலையும் அத்தகையதே. ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளே வரையறுக்கப்பட்ட எல்லைகளை வகுத்தனர். பிரித்தானியரிடம் இருந்து நாட்டைப் பெறுவதற்குத் தயாராய் நின்ற அரசியல் தலைவர்கள் முன் நோக்கி ஒரு புதிய அரசை உருவாக்குவதற்குச் செயல்படவில்லை. ஐரோப்பியர் வருகைக்கு முன்பிருந்த நிலை என அவர்கள் எண்ணிய நிலையை மீளமைப்பது அவர்கள் திட்டங்களில் முக்கிய இடத்தைப் பெற்றது.
தென் ஆசியாவில் உருவாகிய புதிய அரசுகளுள் பல வகைப்பட்ட இனக்குழுக்களும் பண்பாட்டுக் குழுக்களும் அகப்பட்டன. இவை புறப்பட்டு வெளியே செல்லமுடியாத வகையில் புதிய அரசுகள் வடிவம் பெற்றன. இதுதான் அப்பொழுது காணப்பட்ட மெய்நிலை (Reality). இனக்குழுத் தலைவர்களும் பண்பாட்டுக்குழுத் தலைவர்களும் புதிய அமைப்பிற்குள் எவ்வாறு தத்தமக்குப் பொருத்தமான இடத்தைக் கண்டுகொள்வது (Finding Accommodation within the New Framework) என்பதை வகுக்க வேண்டிய தேவை இருந்தது.
சேனாநாயக்க வகுத்த தேசியம்
சுதந்திர இலங்கையில் முதல் இடத்தைப் பெறுவதற்கான ஓட்டப் பந்தயத்தில் மிகத் திறமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் சிறிதும் வேகம் குறையாது சீராக ஓடியவர் சேனாநாயக்க என்பதில் ஐயமில்லை. பண்டாரநாயக்க வகுத்த திட்டம் தூரநோக்குடையது; ஆனால் அவருக்குப் பலம் கொடுத்த சிங்கள பௌத்த இயக்கம் வெளியே வந்து அவரை வெல்ல வைப்பதற்குத் தயாராக இருக்கவில்லை; அதற்கான சாத்தியம் ஆங்கிலேயர் ஆட்சி இருக்கும்வரை தோன்ற வாய்ப்பே இருக்கவில்லை. அன்னியர் ஆட்சி முற்றுப் பெற்றபின் ஒருசில ஆண்டுகளுள் அந்த இயக்கம் வெற்றி பெறுவதற்கான நிலை உருவாகிக்கொண்டிருந்தது.
சேனாநாயக்கவின் விலகாத குறிக்கோள், பிரித்தானியப் பேரரசுக்குள் (கனடா, அவுஸ்திரேலியா போன்று) டொமினியன் நிலையை (Dominion Status) இலங்கைக்குப் பெறுவது. ஆட்சியாளர் அதற்கு உடன்படவில்லை. ஆனால் சேனாநாயக்க அதைக் கைவிடவில்லை. இக்குறிக்கோளை அடைவதற்கு அவர் சிங்கள பௌத்த இயக்கத்தின் உதவியை நாடவும் இல்லை. ஆட்சியாளர் மனதை இளக வைப்பதற்கு மென்மையான அழுத்தத்தை தளராது கொடுக்க வேண்டியிருந்தது. இலங்கையின் எல்லாப் பிரிவினரும் தன் பின்னே ஒற்றுமையாகத் தான் கேட்பதையே கேட்டு நிற்கின்றார்கள் என அதே ஆட்சியாளருக்குக் காட்ட வேண்டிய அவசியமும் இருந்தது.
முதலாவதாக, பிரித்தானியர் கடும் போரில் ஈடுபட்டிருந்த போது, பிற தலைவர்களைப் போல் “முழுமையான சுதந்திரத்தைத் தா” எனக் கூச்சல் இடாது, வேண்டிய ஒத்துழைப்பை சேனாநாயக்க கொடுக்க முன்வந்தார். விவசாய அமைச்சர் நிலையில் இருந்து கொண்டு பிரித்தானியரின் போர் முயற்சிகளுக்கு (War Effort) தேவைப்பட்ட இறப்பர் (Rubber) இலங்கையில் இருந்து கொடுக்கப்படுவதற்கும் உணவுத் தட்டுப்பாட்டினால் பிரச்சினைகள் எழா வண்ணம் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் (Food Security) கடுமையாக உழைத்து ஆட்சியாளருக்கு விசுவாசத்தை சேனாநாயக்க காட்டினார். இது பிரித்தானிய அரசாங்கத்துடன் அன்னியோன்னிய உறவை வளர்ப்பதற்குப் பெரிதும் உதவியது. அத்துடன், இலங்கை சுயாட்சிக்கு தயாராயுள்ள ஒரு பொறுப்பு வாய்ந்த நாடு என்பதையும் ஆட்சியாளருக்குக் காட்ட முடிந்தது.
இரண்டாவதாக, அவர் தலைசிறந்த ஓர் உபாயத்தை வகுத்து ‘வல்லவர் மூவர்’ (Triumvirate) எனப் பெயர்பெற்ற ‘உறவுக்குழு’ (Alliance) ஒன்றை உருவாக்கி, பிற தலைவர்கள் தலையிடாத வகையில் திட்டங்களை வகுத்து ஆட்சியாளருடன் தொடர்புகொண்டார். இக்குழுவில், சேனாநாயக்கவுடன், பொதுமக்கள் பாதுகாப்புக்கான போர்க்கால ஆணையாளராகப் பதவி (Civil Defence Commissioner) வகித்த ஒலிவர் குணத்திலக (பின்னர் இலங்கையின் தேசாதிபதிப் பதவியைப் பெற்றவர்) மற்றும் அய்வர் ஜெனிங்ஸ் (Ivor Jennings) ஆகியோர் இருந்தனர். ஜெனிங்ஸ் வழியாகப் பிரித்தானிய அரசாங்கத்திடம் தனக்குச் சார்பான நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கு சேனாநாயக்க வாய்ப்பைப் பெற்றார்.


மூன்றாவதாக, நாட்டின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாகத் தான் முன்வைக்கும் சீர்திருத்தத் திட்டத்துக்கு ஆதரவளிக்கின்றனர் எனப் பிரித்தானிய அரசாங்கத்துக்கு சேனாநாயக்க காட்ட வேண்டிய அவசியம் இருந்தது. இதனையும் மிகவும் சாதுரியமாக அவர் சாதித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குள் சேனாநாயக்க பிற போட்டியாளர்களைத் தள்ளிவிட்டுத் தான் நினைத்தவற்றைச் சாதித்தார். பிரித்தானிய அரசாங்கம் 1943 மே மாதத்தில் அரசியல் திருத்த ஆணைக்குழுவை அனுப்புவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து சேனாநாயக்க தேசிய காங்கிரஸில் இருந்து விலகித் தனியாக இயங்கத் தொடங்கினார். சோல்பரி ஆணைக்குழு 1945இல் இலங்கைக்கு வந்தபோது பிறர் அக்குழுவைப் புறக்கணித்தாலும், மறைவாக இக்குழுவுடன் உறவாடினார். அதே ஆண்டு லண்டனுக்குச் சென்று தனியாகப் பிரித்தானிய அமைச்சர்களைச் சந்தித்தார்.
ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய போதிலும் தன் முயற்சியைக் கைவிடாது சேனாநாயக்க பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டம் அடங்கிய ‘White Paper’ பத்திரத்தை இலங்கையின் அரச சபை ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தார். அவர் வழிகாட்டலில் ஜெனிங்ஸ் புதிய யாப்பை எழுதி உதவ, நாடு சுதந்திரத்தை நோக்கித் தடையின்றி நகர்ந்தது. புதிய யாப்புக்கு அமைய 1947இல் முதலாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்று சேனாநாயக்க முதலாவது பிரதம அமைச்சரானார். அதே ஆண்டு நவம்பர் 11இல் பிரித்தானிய அரசாங்கத்துடன் மூன்று உடன்படிக்கைகளைச் செய்தார். பத்து நாட்களின் பின் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. இலங்கை 1948 பெப்பிரவரி 4இல் டொமினியன் நிலையைப் பெற்றது.



