வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
24 நிமிட வாசிப்பு

வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 2

June 3, 2026 | Ezhuna

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பெரும்பாலும் வறண்ட மற்றும் அரை வறண்ட காலநிலைச் சூழலுக்குட்பட்ட பகுதிகளாகும். இப்பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகைகள் (River Basins) நீர் வளங்களின் முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன. இவை குடிநீர், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தொழில் மற்றும் சூழலியல் சமநிலைக்கான ஆதாரங்களாகவும் உள்ளன. முரண்பாடுகள், நிலவளப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், காடழிப்பு, கட்டுப்பாடற்ற மணல் அகழ்வு, நிலத்தடி நீரின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இவ்வாற்றுப் படுகைகளின் நீரியல் சமநிலையைப் பாதித்துள்ளன. எனவே, இவற்றின் தற்போதைய நிலையை அறிவியல் மற்றும் தரவுசார்ந்த முறையில் ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய திறம்பட்ட பயன்பாட்டிற்கான வழிமுறைகளை முன்வைப்பது கட்டாயமானதாகும். ‘வடக்கு – கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் நீர்வள இருப்பும் பயன்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மூலோபாயங்களும்’ எனும் இக்கட்டுரைத் தொடர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து ஆற்றுப்படுகைகளையும் ஒருங்கிணைந்த முறையில் ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நீர் வளத்தின் திறம்பட்ட பயன்பாட்டையும் சமநிலைப்படுத்தும் வழிமுறைகளை முன்வைக்கும். இது நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் கொள்கை அடிப்படையிலான வழிகாட்டி ஆவணமாகவும் அமையும்.

2.1.1.2 அகத்திமுறிப்பு குளம் 

அருவி ஆறு (மல்வத்து ஓயா) குறுக்கே மறுகட்டமைக்கப்பட்டு, வலதுகரை உள்வாய்க்கால் மூலம் கட்டுக்கரைக் குளத்திற்கும், இடதுகரை அகத்திமுறிப்பு உள்வாய்க்கால் மூலம் அகத்திமுறிப்பு திட்டத்திற்கும் நீர் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டது. கட்டுக்கரைக் குளம் மற்றும் அகத்திமுறிப்பு திட்டங்களின் கீழ் பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்புகள் முறையே 24,438 ஏக்கரும் 6,231 ஏக்கரும் ஆகும். இவ்விரு திட்டங்களிலும் முறையே 162 மற்றும் 40 சிறிய குளங்களின் கீழ் உள்ள நிலப்பரப்புகளும் அடங்குகின்றன.

அகத்திமுறிப்பு திட்டம், தேக்கம் அணைக்கட்டின் (அருவி ஆறு) இடதுகரையில் அமைந்துள்ளதுடன், சுமார் 1930 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. இந்தத் திட்டம், தேக்கம் அணைக்கட்டின் இடதுகரையிலிருந்து பிரியும் உள்வாய்க்காலையும், இரண்டு தலைவாய்கள் (Regulator) மூலம் கட்டுப்படுத்தப்படும் நீர்விநியோக அமைப்பையும் கொண்டுள்ளது. இத்திட்டம் 24 சிறிய குளங்களுக்கும், 14 சிறிய குளங்களுக்கு நீர் வழங்கும் அகத்திமுறிப்பு பெரிய குளத்திற்கும் நீர் வழங்குகிறது. உள்வாய்க்காலின் நீளம் சுமார் 15.75 மைல்கள் ஆகும். திட்டத்தின் கீழ் பயிரிட திட்டமிடப்பட்ட மொத்த நிலப்பரப்பு 6,231 ஏக்கராக இருந்தாலும், ஒதுக்கீட்டுப் பகுதிகளிலும் பயிரிடப்படுவதால் நடைமுறையில் 7,000 ஏக்கரிற்கு மேற்பட்ட நிலப்பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வாய்க்காலின் நீளத்தில் மொத்தம் ஒன்பது கிளை நீரெடுப்புகள் (Off-takes) அமைந்துள்ளன. வாய்க்கால் இறுதியில் அகத்திமுறிப்பு குளத்தைச் சென்றடைகிறது. இந்த வாய்க்காலின் தலைவாய்கள் 01 மைல் 4,300 அடி தொலைவில் அமைந்துள்ளன; அவற்றில் இரண்டு கதவுகள் உள்ளன. தலைவாய்க்கு மேல்பகுதியில் ஐந்து வாய்க்கால் வான் அமைப்புகள் (Canal Spills) காணப்படுகின்றன. முதல் நான்கு வாய்க்கால் வான்கள் மரத்தடுப்பு அமைப்புகளுடன் காணப்படுகின்றன; ஐந்தாவது வாய்க்கால் வான் நான்கு திறப்புகளைக் கொண்ட திருகு முறை உயர்த்தும் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. வாய்க்கால் 07 மைல் 3,700 அடி வரை எந்தக் கிளை நீரெடுப்பும் இன்றித் தொடர்கிறது. இத்திட்டம் சுமார் 2,560 விவசாயக் குடும்பங்களின் வயல்வெளிகளுக்கு நிச்சயமான பாசன நீரை வழங்குகிறது.

அகத்திமுறிப்பு குளம் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. 1990 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக அகத்திமுறிப்பு குளம் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டது. விவசாயிகள் இடம்பெயர்க்கப்பட்டதுடன், 1990க்குப் பின்னர் திட்டத்தின் பராமரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், தேக்கம் அணைக்கட்டின் மேற்பகுதியில் பல அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டதும், அருவி ஆறு நீர்ப்பிடிப்பு பகுதியில் கைவிடப்பட்டிருந்த குளங்கள் மீளமைக்கப்பட்டதும் காரணமாக, அண்மைக் காலங்களில் அருவி ஆற்றின் நீரோட்டம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. இதன் விளைவாக, அகத்திமுறிப்பு வாய்க்காலின் கீழுள்ள கிராமக் குளங்களுக்கு போதுமான அளவு நீர் நிரப்பம் கிடைக்காமல், வறட்சி ஆண்டுகளில் பயிரிழப்புகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

நீண்டகாலமாகச் செயல்பட்டிருந்ததால், அருவி ஆற்றிலிருந்து நீர் பகிர்வு செய்யப்படும் போது கட்டுக்கரைக் குளத்திற்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை நிலவுகிறது. மேலும், கட்டுக்கரைக் குளத்திற்கான உள்வாயின் அடித்தளம் அகத்திமுறிப்பு உள்வாயை விட 2 அடி தாழ்வாக அமைந்துள்ளது.

கட்டுக்கரை திட்டத்தின் கீழ் பயிரிடப்படும் நிலப்பரப்பு 15,578 ஏக்கரில் இருந்து 24,438 ஏக்கராக உயர்ந்துள்ளதுடன், அகத்திமுறிப்பு திட்டத்தின் கீழ் உள்ள நிலப்பரப்பும் 4,538 ஏக்கரில் இருந்து 5,794 ஏக்கராக அதிகரித்துள்ளது. மேல்நிலப் பகுதிகளில் நீர்ப்பிடிப்பு வளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாலும், பிரதான பாசனத் திட்டங்களில் கடுமையான நீர்முகாமைத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாலும், இவ்விரு திட்டங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவு நீர்வரத்து தற்போது இல்லை. இதன் விளைவாக, பெரும்போக சாகுபடியின் இறுதிக்கட்டங்களில் இரு திட்டங்களும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. சிறுபோக சாகுபடி மிகவும் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், பெரும்போக பருவத்தில் தொடர்ந்து ஏற்படும் பயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில், அருவி ஆற்றின் தென்பகுதியில் கல் ஆறு மற்றும் அகத்தி ஆறு நீர்த்தேக்கங்களை அமைத்து, அகத்திமுறிப்பு திட்டத்திற்கு மேலதிக நீர் வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. அருவி ஆற்றிலிருந்து நீர் திறக்க இயலாத காலங்களில், இந்த நீர்த்தேக்கங்கள் அகத்திமுறிப்பு திட்டத்திற்கு துணை நீராதாரமாகச் செயல்படும். எனினும், இந்நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு அகத்திமுறிப்பு திட்டத்தின் முழு நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. ஆகையால், இந்நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்ட பின்னரும், அருவி ஆற்றிலிருந்து குறைந்த அளவிலான நீர்விடுவிப்பு நடைமுறை தொடர வேண்டும்.

2.1.1.3 கல் ஆறு நீர்த்தேக்கம் – அகத்திமுறிப்பு திட்டத்திற்கு மேலதிக நீர் வழங்கும் திட்டம் 1

முன்மொழியப்பட்ட கல் ஆறு நீர்த்தேக்கம், கல் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இதன் அமைவிடக் குறியீடு C/17 (7.70 x 3.60) ஆகும்.

கல் ஆறு நீர்த்தேக்கத் தளத்தை அடைய, முருங்கன்–சிலாவத்துறை–மறிச்சுக்கட்டி வீதியில் பயணித்து, கொண்டச்சி சந்தியில் இடதுபுறமாகத் திரும்பி கொண்டச்சி–பாய்மடு–அனுராதபுரம் வீதியூடாகச் செல்ல வேண்டும். கொண்டச்சி சந்தியிலிருந்து சுமார் 8 மைல் தொலைவில், பிரதான வீதிக் கட்டைவாய்க்கு (Causeway) மேற்பகுதியில், முன்மொழியப்பட்ட கல் ஆறு நீர்த்தேக்கத் தளம் அமைந்துள்ளது.

முன்மொழியப்பட்ட நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு 41.60 சதுர மைல்கள் ஆகும். ISO நீர்வரத்து வளைவின் (ISO Yield Curve) அடிப்படையில், ஒரு சதுர மைலுக்கு 300 ஏக்கர் அடி (Ac.ft.) நீர்வரத்துக் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மொத்த (Gross) நீர்வரத்து 12,480 ஏக்கர் அடி ஆகும். இதில் 70 சதவீதம் பயனுள்ள நீர்வரத்தாகக் கணக்கிடப்படுவதால், பயனுள்ள நீர்வரத்து 8,736 ஏக்கர் அடியாக மதிப்பிடப்படுகிறது.

இந்த நீர்ப்பிடிப்பு பரப்பிலிருந்து கிடைக்கும் 8,736 ஏக்கர் அடி பயனுள்ள நீர்வரத்திலிருந்து 7,500 ஏக்கர் அடி நீரைச் சேமிக்கக்கூடிய வகையில், கல் ஆற்றின் குறுக்கே அணை அமைத்து நீர்த்தேக்கம் உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் முழுமையான ஆய்வுகள் மற்றும் நிலஅளவீட்டுக் கணக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், 7,500 ஏக்கர் அடி பயனுள்ள கொள்ளளவைப் பெறும் வகையில் முழுச் சேமிப்பு மட்டம் (F.S.L. – Full Supply Level) உயர்த்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

முன்மொழியப்பட்ட உள்வாய்க்கால்களிலிருந்து, தற்போது கைவிடப்பட்டுள்ள பழைய வாய்க்காலின் வழியாக சுமார் 1.5 மைல் தூரம் வரை புதிய வாய்க்கால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், மாவில்லு பகுதியின் மேல்பகுதியை ஒட்டியவாறு வாய்க்கால் தொடரும். அகத்தி ஆறு நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து அதிகப்படியான நீரை மாவில்லு பகுதிக்கு வெளியேற்றவும், தேவையான சமயங்களில் தேவையான அளவு நீரை வாய்க்காலுக்குள் திருப்பி விடவும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

முன்மொழியப்பட்ட வாய்க்கால் மேலும் சுமார் 5 மைல்கள் நீளமாகத் தொடர்ந்த பின்னர், இரு கிளைகளாகப் பிரிக்கப்படும். அவற்றில் கட்டுப்பாட்டு அமைப்புகள் பொருத்தப்பட்டு, சோனகனெடுங்குளம் மற்றும் அகத்திமுறிப்பு குளங்களுக்கு நீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்படும். இவ்வாய்க்கால்களின் மொத்த நீளம் சுமார் 9.5 மைல்கள் ஆகும்.

2.1.1.4 அகத்தி ஆறு நீர்த்தேக்கம் – அகத்திமுறிப்பு திட்டத்திற்கு மேலதிக நீர் வழங்கும் திட்டம் 2

அகத்தி ஆறு நீர்த்தேக்கம், அகத்தி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளதுடன், அதன் அமைவிடக் குறியீடு C/17 (8.90 x 6.15) ஆகும்.

2,961 ஏக்கர் அடி பயனுள்ள நீர்வரத்திலிருந்து 2,100 ஏக்கர் அடி நீரைச் சேமிக்கக்கூடிய நீர்த்தேக்கம் உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் முழுமையான ஆய்வுகள் மற்றும் நிலஅளவீட்டு கணக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், 2,100 ஏக்கர் அடி பயனுள்ள கொள்ளளவைப் பெறும் வகையில் முழுச் சேமிப்பு மட்டம் (FSL – Full Supply Level) உயர்த்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், கல் ஆற்றிலிருந்து அகத்திமுறிப்பு திட்டத்திற்கான முன்மொழியப்பட்ட ஊட்ட வாய்க்காலின் (Feeder Channel) அடித்தள மட்டத்தைக் கருத்தில் கொண்டு, அணைக்கட்டின் அமைவிடம் கீழ்ப்பகுதிக்கு மாற்றப்பட வேண்டியிருக்கலாம்.

முன்மொழியப்பட்ட உள்வாய்க்கால்களிலிருந்து, அகத்திமுறிப்பு திட்டத்திற்கான ஊட்ட வாய்க்காலுடன் இணைக்கும் வகையில், தேவையான நீர்வீழ்ச்சிக் கட்டமைப்புகளுடன் (Drop Structures) சுமார் 0.7 மைல் நீளமுடைய நீரூட்டும் வாய்க்காலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட நீர்த்தேக்கத் தளத்தில் அகத்தி ஆற்றின் படுக்கை மட்டம் உயரமாக இருந்தால், அதிகபட்ச நீரெடுப்பு (Maximum Draw-off) சாத்தியமாகும் வகையில் நீர்த்தேக்கத் தளம் கீழ்நோக்கி மாற்றப்படலாம்.

துருசின் அடித்தள மட்டம் (Sill Level), முழுச் சேமிப்பு மட்டம் (FSL) மற்றும் அணையின் மேற்பகுதி மட்டம் (BTL) ஆகியவை தற்காலிகமாக முறையே 100 அடி RL, 105 அடி RL மற்றும் 112 RL அடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனினும், முழுமையான ஆய்வுகள் மற்றும் நிலஅளவீட்டு கணக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர் இம்மட்டங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு திருத்தப்பட வேண்டியிருக்கலாம்.

2.1.1.5 பாவற்குளம்

வவுனியாவில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான பாவற்குளம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொன்மையான நீர்ப்பாசனக் குளமாகக் கருதப்படுகிறது. கிறிஸ்து சகாப்தத்திற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் நாக மன்னர்களால் கட்டப்பட்டது. குளத்தை அண்டிய பகுதிகளில் குருவித்தலைப் பாவற்கொடிகள் அதிகமாகக் காணப்பட்டபடியால் இந்தக் குளம் பாவற்காய்க்குளம் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் பாவற்காய்க்குளம் என்பது பாவற்குளம் எனச் சுருங்கிவிட்டது.

வன்னிப் பிரதேசத்தின் தென்பகுதி நதியான அருவியாற்றின் பிரதான கிளையாகிய கல்லாற்றை மலைப்பாங்கான இடத்தில் மறித்துக் கட்டி இரண்டு குளங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது இவற்றில் ஒன்று பாவற்குளம் என அழைக்கப்படுகிறது. இதனோடு ஒட்டியுள்ள மற்றைய குளம் உளுக்குளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பாவற்குளம்

பாவற்குளத்துடன் தொடுக்கப்பட்டிருக்கும் உளுக்குளத்திற்கும் பாவற்குளத்து நீர் பாய்கின்றது. மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டமான பாவற்குளத்தின் அணைகளில் புராதன கலிங்குக் கற்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. கலிங்குகள் பொதுவாக வாயில் கொட்டுடன் கூடியவையாக இருக்கின்றன. அதாவது கணிசமான அளவு அகலமும் சிறிய தடிப்பமுடைய நீண்ட கல்துண்டங்கள் கலிங்கின் ஓரங்களில் போடப்பட்டு மிகவும் கவனமாகப் பொருத்தப்பட்டுள்ளன.

கல்வேலைப்பாட்டுக்குப் பின்னால் செங்கல் வேலை செய்யப்பட்டு ஆதாரம் அளிக்கப்படுகின்றது. வாயில் கொட்டுடன் கூடிய கலிங்குகள் ஐந்தை தற்போதும் காணக்கூடியதாக உள்ளது. மேலும் இதுவரை தனக்குத் தெரிந்த மட்டில் இலங்கைத்தீவிலுள்ள நான்குக்கும் மேற்பட்ட கலிங்குகளுடன் கூடிய ஒரேயொரு குளம் இது என திரு. பாக்கர் கூறுகிறார். கலிங்குகளில் புறநடையாக உள்ள ஒன்று தவிர ஏனையவை நன்னிலையில் உள்ளன. இலங்கையில் உள்ள குளங்களுள் பாவற்குளமே 4 கலிங்குகளைக் கொண்டிருப்பதாக ஜே.பி. லூயிஸ் குறிப்பிடுகின்றார். இக்குளத்தின் கலிங்குகள் இரண்டில் பயன்படுத்தப்பட்டிருந்த கட்டடக் கற்துண்டங்கள் (துருசுக் கற்கள்), பதவியாக் கலிங்கில் பயன்படுத்தப்பட்டிருந்தவற்றை விட மிகப் பழமையானவை. பதவியாக் கலிங்கு கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. பாவற்குளத்தின் கலிங்குகளை அமைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் செங்கற்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தவை என பாக்கர் குறிப்பிட்டுள்ளார்.

இக்குளம் பற்றி ஜே.பி. லூயிஸ் தனது Manual of Vanni District என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பாவற்குளத்தில் இரண்டு புராதன நீர்ப்பாசனக் கால்வாய் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை முறையே 3 மைல் மற்றும் 2¼ மைல் நீளத்தைக் கொண்டவையாக அமைந்துள்ளன. இக்குளம் சுமார் 2 மைல் நீளமான அணைகளைக் கொண்டுள்ளது. இந்த அணைகளின் உட்புறச் சரிவுகளில் அலைகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அலைகல் (Rip-Rap) பாதுகாப்பு அடுக்குகள் பொதுவாக இடப்பட்டுள்ளன.

பல நூற்றாண்டுகளாக முறையாகப் பராமரிக்கப்படாததாலும், அணைக்கட்டில் ஏற்பட்ட உடைப்புகளாலும் இக்குளம் கைவிடப்பட்டுப் புதர்கள் மண்டிய நிலையை அடைந்தது. இதன் பின்னர், 1958 ஆம் ஆண்டில் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம் இக்குளத்தைக் கண்டறிந்து, அதன் அணைக்கட்டைப் புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது.

பாவற்குளம், அருவி ஆறு நீர்ப்பிடிப்பு மண்டலத்தின் கீழ் உள்ள கல் ஆறு மற்றும் கல்குண்டமடு ஆறு ஆகிய நீர்வழிகளிலிருந்து நீரைப் பெறுகிறது. இக்குளம் தற்போது 4,134 ஏக்கர் பரப்பளவிலான நெற்செய்கை மற்றும் பிற பயிர்ச்செய்கைகளுக்கு பாசன நீர் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1,700 விவசாயக் குடும்பங்கள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றன.

பாவற்குளம்

வடக்கு மாகாணத்தின் வறண்ட வலயப் பகுதியில் அமைந்துள்ள பாவற்குளம், அப்பகுதியின் உணவுப் பாதுகாப்பு, விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மகா மற்றும் யாலா பருவங்களில் சாகுபடி நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் இக்குளத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

பாவற்குளத்தில் உள்ள வான் 125 அடி நீளமும், 60 அடி அகலமும் உடையது. வான்கள் வழமையில் கலிங்குகளாகக் கட்டப்பட்டன. அதாவது தூண்கள் தொடராக அமைக்கப்பட்டதன் மூலம் சட்டக அமைப்பின் மீது அணை ஏற்படுத்தி நிர்மாணிக்கப்பட்டது. இதன் மூலம் ஏறத்தாழ 2 அடி ஆழத்துக்கு மேலதிக நீரைப் பிடித்து வைத்துக்கொள்ள முடிந்தது. பாவற்குளத்தில் இத்தகைய கலிங்கு ஒன்றைக் காணமுடியும்.

இத்தூண்கள் பருமனிலும் வடிவத்திலும் மிகவும் ஒழுங்கற்றவை. பெரிய தூணுக்கு முற்பக்கமாகச் சில அங்குலங்கள் விலகி 5 அல்லது 6 அடி உயரமுள்ள குறுகிய தூண் உள்ளது. இச்சிறிய தூண்களின் நிரை, வான் பாயும் நீருக்குச் சற்று முன்பக்கமாக குளக்கட்டின் மத்திய கோட்டின் வழியே குளப்பக்கமாக அமைந்துள்ளது.

இச்சிறு தூண்களிடையே தடிகளும் மண்ணும் கொண்டு தற்காலிக அணை ஒன்று எழுப்பப்பட்டிருக்கும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தின் இறுதியில் மேலதிக நீரைச் சேமித்து வைக்க வேண்டிய தேவையின் போது, இத்தகைய உயர்ந்த தூண்களுக்கு இடையே அணை ஏற்படுத்தப்பட்டு நீர் தேக்கி வைக்கப்படும். அதி உயரமான தூண்கள் எவ்விதப் பயன்பாடும் அற்றனவாக உள்ளன. சிலவேளை கலிங்கை மூடி வெள்ளம் பாயும்போது பாதசாரிகளால் இது தற்காலிக அடிப்பாலத்தின் இறங்குதுறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனலாம். இதன் மூலம் பயணிகள் எப்போதாவது வான் நீருக்கு மேலாகப் பாயும் வெள்ளத்தைக் கடந்து செல்லக்கூடியதாயுள்ளது.

குளத்தின் அணைக்கட்டுப் பகுதியில் முன்னொரு காலத்தில் உயரமான பாறையில் அமைந்திருந்த சிறிய சிதைவுகளும், மலர்களைத் தூவி வழிபடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பெரிய பீடம் ஒன்றும் காணப்பட்டது.

இப்பீடம் இப்போது ‘அரச ஆசனம்’ எனப்படுகிறது. இப்பீடம் பற்றித் திரு. பாக்கர் கூறுவதாவது: “இப்பீடத்திலிருந்து குளத்தினதும், அதன் தளத்தினதும் ஒரு பகுதியையும் மிக நன்கு தரிசிக்க முடியும். இவ்வாறே எதிர்த்திசையிலிருந்தும் தரிசிக்கலாம். தமிழ் ஆட்சியாளர் ஒருவரின் ஆணைக்கமைய தற்போதைய இடத்தில் இப்பீடம் வைக்கப்பட்டிருக்கலாம்.”

ஐந்துதலை நாகபாம்பை வழிபட்ட நாகர்களின் கற்பனை திறனில் உருவாகிய பல சிற்ப வடிவங்கள் இருக்கின்றன. ஐந்துதலை நாகம் என்பது கற்பனை வடிவமா என்பது ஆய்வுக்குரிய விடயமாகும். அந்தவகையில் நீர்ப்பாசனத்திற்கு பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து குளங்களைக் கட்டுவதில் தலைசிறந்தவர்களான நாகர்கள், தங்களது காவல் தெய்வமான ஐந்துதலை நாக உருவங்களை கருங்கற்களில் பொறித்து குளக்கட்டுகளில் வைத்து வழிபட்டுள்ளமைக்கு ஆதாரமாக பல இடங்களில் ஐந்துதலை நாகச்சிலைகள் உள்ளன. இவை பாவற்குளத்திலும் உண்டு. 

கருங்கல்லில் ஐந்து தலை நாக பாம்பின் சிற்பம்

இக்குளத்தின் அணைக்கட்டில் காணப்படும் பெரிய கருங்கல்லில் ஐந்து தலை நாக பாம்பின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. குளக்கட்டில் தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட நாகச்சிலை தற்போது குளக்கட்டின் துருசு மேல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இதைப் போன்ற சிற்பத்துடன் கூடிய கல் ஒன்று செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள மதுவைத்தகுளம் அணைக்கட்டில் இருக்கிறது. இக்குளங்கள் நாக மன்னர்களால் ஒரே காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். இந்த நீர்த்தேக்கம் யாரால் எக்காலத்தில் கட்டப்பட்டது என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஆனால் நிச்சயமாக இக்குளம் பற்றி பழைய வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்பழைய பெயரை அறிந்தால் மட்டுமே இக்குளம் பற்றி மேலும் பல சுவாரசியமான தகவல்களைப் பெற முடியும்.

ஆறுமுகம் (1969) குறிப்பிட்டதன்படி, பாவற்குளத்தின் அணைக்கட்டு சுமார் 2 மைல் நீளமுடையதாக இருந்தது. 1960களின் இறுதிப் பகுதியில் இக்குளம் சுமார் 27,000 ஏக்கர் அடி நீரைத் தாங்கக்கூடிய சேமிப்புக் கொள்ளளவைக் கொண்டிருந்ததுடன், முழுச் சேமிப்பு மட்டத்தில் (Full Supply Level) நீர் பரவிய பரப்பளவு சுமார் 3,000 ஏக்கராகக் காணப்பட்டது. இக்குளத்தின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு சுமார் 115 சதுர மைல்கள் ஆகும்.

பாவற்குளம், வடக்கு வறண்ட வலயப் பகுதியில் அமைந்துள்ள முக்கியமான நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாக விளங்குகிறது. பரந்த நீர்ப்பிடிப்பு பரப்பும் அதிக நீர்தாங்கு கொள்ளளவும் காரணமாக, இக்குளம் விவசாய உற்பத்தி மற்றும் நீர்வள முகாமைத்துவத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. குறிப்பாக பருவ மழைநீரைச் சேமித்து, கீழ்நிலப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளுக்கு திட்டமிட்ட முறையில் பாசன நீர் வழங்கும் திறனை இக்குளம் கொண்டிருந்தது.

தற்போது பாவற்குளத்தில் ஒரு தாண்டு (Spill) மற்றும் இரண்டு தலைவாய்கள் (Sluices) அமைந்துள்ளன. இத்தலைவாய்கள் மூலம் குளத்தில் சேமிக்கப்படும் நீர் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெளியேற்றப்பட்டு, கீழ்ப்பகுதிகளில் உள்ள நெற்செய்கை மற்றும் பிற பயிர்ச்செய்கைகளுக்கு பாசனநீர் வழங்கப்படுகின்றது. மேலும், தாண்டு அமைப்பு அதிகப்படியான வெள்ள நீரைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதன் மூலம் அணைக்கட்டின் பாதுகாப்பையும் நீர்த்தேக்கத்தின் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துகிறது.

2.1.1.6 இரட்டைப் பெரியகுளம்

இரட்டைப் பெரியகுளம், கல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள முக்கியமான நீர்ப்பாசனக் குளம். இக்குளம் 3,534 ஏக்கர் அடி (Acre Feet) கொள்ளளவை உடையதாகும். இது இடது கரை, வலது கரை மற்றும் மத்திய ஒழுக்கு வாயில்களைக் கொண்ட வழக்கமான மண் அணைக்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வலது கரையின் இறுதிப்பகுதியில் தெளிவான மேல்வெளிப்பு (Clear Overflow) அமைப்புடனும் இயற்கை வெள்ளப்பாய்வு வசதியுடனும் கூடிய உபரி நீர்பாய்ச்சி (Spillway) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அணைக்கட்டு இயற்கையாகக் காணப்படும் பாறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் அமைந்துள்ளதால், அதன் நிலைத்தன்மையும் பாதுகாப்பும் வலுப்பெற்றுள்ளன.

இக்குளத்தின் கீழ் மொத்தமாக சுமார் 550 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது சுமார் 340 விவசாயக் குடும்பங்கள் இக்குளத்தின் மூலம் பெரும்போக மற்றும் சிறுபோகப் பருவங்களில் நெல் செய்கையில் ஈடுபட்டு வாழ்வாதார நன்மைகளைப் பெற்று வருகின்றன. இதன் மூலம் பிராந்திய வேளாண் உற்பத்தி மேம்படுவதோடு, கிராமப்புற மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இக்குளம் முக்கிய பங்காற்றுகிறது.

வரலாற்றுப் பின்னணியில், இக்குளம் 1886 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டதுடன், பின்னர் 1995 ஆம் ஆண்டில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்புனரமைப்பு நடவடிக்கைகள் மூலம் குளத்தின் நீர்த்தேக்க திறன், அணைக்கட்டின் பாதுகாப்பு மற்றும் பாசன செயல்திறன் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இரட்டைப் பெரியகுளம் இப்பகுதியின் நிலையான நீர்வள முகாமைத்துவத்திற்கும் வேளாண் வளர்ச்சிக்கும் ஆதாரமான பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்பாகத் திகழ்கிறது.

2.1.1.7 முகத்தான் குளம்

முகத்தான் குளம் என்பது வெங்கலச் செட்டிகுளம் பிரதேசத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து பெறப்படும் நீராலும், மருதமடுக் குளத்தின் உபரி நீராலும் ஊட்டமளிக்கப்படும் முக்கியமான நீர்ப்பாசனக் குளமாகும். இக்குளம் வவுனியா மாவட்டத்தின் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகத்தான் குளம் பகுதியில் அமைந்துள்ளது.

இக்குளம் அப்பகுதியின் பாரம்பரிய புவியீர்ப்பு நீர்ப்பாசன (Gravity Irrigation) அமைப்புகளில் ஒன்றாக விளங்கி, விவசாய நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான நீர்வள ஆதாரமாகச் செயல்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் சேமிக்கப்படும் நீர், பெரும்போக மற்றும் சிறுபோகப் பருவங்களில் நெல் மற்றும் பிற பயிர்ச் செய்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது.

மருதமடுக் குளத்தின் உபரி நீரைப் பெறும் தன்மையால், முகத்தான் குளம் பருவமழை மாற்றங்களின் போதும் ஒரு நிலையான நீர்வளத்தைப் பேணும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. மேலும், இக்குளம் நிலத்தடி நீர் மீள்சேர்க்கை, சுற்றுச்சூழல் சமநிலைப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களின் சமூக–பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றிலும் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், முகத்தான் குளம் பிராந்தியத்தின் நிலையான வேளாண் வளர்ச்சிக்கும் நீர்வள முகாமைத்துவத்திற்கும் ஆதாரமான பாரம்பரிய நீர்ப்பாசன வளமாகக் காணப்படுகிறது.

2.1.1.8 மருதமடுக் குளம்

மருதமடுக் குளம் நறுவிலி ஆற்றின் நீரால் ஊட்டமளிக்கப்படும் முக்கியமான நீர்ப்பாசனக் குளமாகும். இக்குளம் வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மருதமடுப் பகுதியில் அமைந்துள்ளது. பிராந்தியத்தின் பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்புகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இக்குளம், அப்பகுதி வேளாண் செயற்பாடுகளுக்கு அத்தியாவசியமான நீர்வள ஆதாரமாக விளங்குகிறது.

இக்குளத்தின் கீழ் சுமார் 438 ஏக்கர் பரப்பளவிலான நெல் மற்றும் பிற பயிர்ச் செய்கைகளுக்கு (OFC) பாசன நீர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெரும்போக மற்றும் சிறுபோகப் பருவங்களில் விவசாய உற்பத்தி மேம்படுவதோடு, பல விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நெல் செய்கையுடன் இணைந்து பலவகை துணைப் பயிர்ச் செய்கைகளும் (Cash Crops) மேற்கொள்ளப்படுவதால், உள்ளூர் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்கும் இக்குளம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

மருதமடுக் குளத்தின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு சுமார் 14.6 சதுர மைல்கள் ஆகும். இப்பரந்த நீர்ப்பிடிப்பு பகுதி மழைநீரைச் சேகரித்து குளத்திற்குள் கொண்டுவருவதன் மூலம், ஆண்டு முழுவதும் நீர்வள நிலைத்தன்மையைப் பேண உதவுகிறது. மேலும், இக்குளத்தின் மொத்த நீர்த்தேக்க கொள்ளளவு 1,500 ஏக்கர் அடி (Acre Feet) ஆகும். இந்த நீர்த்தேக்கத் திறன், பருவமழைக் காலங்களில் சேமிக்கப்படும் நீரை வறட்சிக் காலங்களில் திறம்பட பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.

இக்குளம் விவசாயத் தேவைகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மீள்சேர்க்கை, சுற்றுச்சூழல் சமநிலைப் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் உயிரியல் அமைப்புகளின் நிலைத்தன்மை ஆகியவற்றிலும் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், மருதமடுக் குளம் வவுனியா பிராந்தியத்தின் நிலையான நீர்வள முகாமைத்துவத்திற்கும் வேளாண் முன்னேற்றத்திற்கும் ஆதாரமான பாரம்பரிய நீர்ப்பாசன வளமாகக் கருதப்படுகிறது.

2.1.1.9 இராஜேந்திரன் குளம்

இராஜேந்திரன் குளம் என்பது தனது சொந்த நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து நீரைப் பெறும் முக்கியமான பாரம்பரிய நீர்ப்பாசனக் குளமாகும். இக்குளம் வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இராஜேந்திரன் குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. அப்பகுதியின் வேளாண் நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கும் இக்குளம், கிராமப்புற மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

இக்குளத்தின் மூலம் சுமார் 295 ஏக்கர் பரப்பளவிலான நெல் மற்றும் பிற வயல் பயிர்ச் (Other Field Crops) செய்கைகளுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பெரும்போக மற்றும் சிறுபோகப் பருவங்களில் விவசாய உற்பத்தி நிலைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படுவதோடு, உள்ளூர் விவசாயக் குடும்பங்களின் பொருளாதார நிலையும் மேம்படுகிறது. நெல் செய்கைக்கு அப்பாற்பட்ட பல்வேறு துணைப் பயிர்களும் இக்குளத்தின் நீர்வளத்தை அடிப்படையாகக் கொண்டு பயிரிடப்படுகின்றன.

இராஜேந்திரன் குளத்தின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு சுமார் 2.40 சதுர மைல்கள் ஆகும். இந்த நீர்ப்பிடிப்பு பகுதி மழைநீரைச் சேமித்து குளத்திற்கு வழங்குவதன் மூலம், பருவகால நீர்வள தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும், இக்குளத்தின் மொத்த நீர்த்தேக்க கொள்ளளவு 850 ஏக்கர் அடி (Acre Feet) ஆகும். இந்நீர்த்தேக்க திறன், வறட்சிக் காலங்களிலும் விவசாயத் தேவைகளுக்கான நீர் விநியோகத்தை ஓரளவு நிலைநிறுத்த உதவுகிறது

இக்குளம் வேளாண் உற்பத்திக்கான ஆதாரமாக மட்டுமன்றி, நிலத்தடி நீர் மீள்சேர்க்கை, சுற்றுச்சூழல் சமநிலைப் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் உயிரியல் அமைப்புகளின் நிலைத்தன்மை ஆகியவற்றிலும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. இதனால், இராஜேந்திரன் குளம் வவுனியா பிராந்தியத்தின் நிலையான நீர்வள முகாமைத்துவத்திற்கும் பாரம்பரிய வேளாண் மரபைப் பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நீர்ப்பாசன வளமாகக் கருதப்படுகிறது.

2.2 மோதரகம ஆற்றுப்படுகை

2.2.1 மோதரகம அணைக்கட்டு மற்றும் வியாடிக்குளம் திட்டம்

மோதரகம அணைக்கட்டு மற்றும் வியாடிக்குளம் திட்டம் C/22 (4.50 x 5.70) அமைவிடக் குறியீட்டில் அமைந்துள்ளது. இது முசலி பிரதேச செயலாளர் பிரிவிலும் முருங்கன் பாசன பொறியியலாளர் பிரிவிலும் அமைந்துள்ள ஒரு முக்கிய பாசனத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக 1,223 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்படுவதுடன், சுமார் 421 விவசாயக் குடும்பங்கள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைந்து வருகின்றன.

மோதரகம அணைக்கட்டுத் திட்டம், பொதுவாக “வியாடிக்குளம் திட்டம்” என அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் முசலி பிரதேசத்தில் உள்ள சிறுபாசன மற்றும் கிராமப்புற விவசாய அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றும் பாசன அமைப்பாகும். மோதரகம ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மோதரகம அணைக்கட்டு, சுமார் 640 அடி நீளமுடையதாகும். இதில் 42 அங்குல விட்டம் கொண்ட மூன்று கோபுர வடிவ துருசுகள் (Tower Sluices) அமைக்கப்பட்டுள்ளன.

அணைக்கட்டிலிருந்து தொடங்கும் உள்வாய்க்கால் சுமார் 5 மைல் 3 செயின் (Chains) நீளமுடையதாகக் காணப்படுவதுடன், அதன் வழித்தடத்தில் பல வடிகால் கடப்புகள் (Drainage Crossings) அமைக்கப்பட்டுள்ளன. இந்த உள்வாய்க்கால் மூலம் மோதரகம அணைக்கட்டிலிருந்து வியாடிக்குளம் நீர்த்தேக்கத்திற்கு நீர் மாற்றி வழங்கப்படுகிறது. பின்னர், வியாடிக்குளத்தின் துருசு ஊடாக அதன் கீழ் அமைந்துள்ள பிற சிறிய குளங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது.

வியாடிக்குளம் அணையின் மண் அணை (Embankment) சுமார் 1 மைல் 33 செயின் நீளமுடையதாகும். இக்குளத்தின் நீர்த் தாங்கு கொள்ளளவு சுமார் 840 ஏக்கர் அடி (Ac.ft.) ஆகும். மேலும், இடதுகரை வான் (LB Spill) சுமார் 500 அடி நீளத்தில் அமைந்துள்ளது.

இந்தத் திட்டம், முசலி பிரதேசத்தில் உள்ள பல சிறு குளங்களுக்கும் அவற்றின் கீழ் உள்ள வயல்வெளிகளுக்கும் பாசனநீர் வழங்கும் ஒருங்கிணைந்த பாசன அமைப்பாக விளங்குகிறது. குறிப்பாக மழைப்பொழிவு குறைவாகக் காணப்படும் காலங்களில், இத்திட்டம் விவசாய உற்பத்தியை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.

வியாடிக்குளம் திட்டத்தின் கீழ் உள்ள சிறுகுளங்கள் மற்றும் சாகுபடிப் பரப்பளவுகள்:

  1. ஆத்திக்குளி – 105 ஏக்கர்
  2. பாலைக்குளி – 195 ஏக்கர்
  3. மறிச்சுக்கட்டி – 250 ஏக்கர்
  4. புளியங்குளம் – 260 ஏக்கர்
  5. கோரைமோட்டை – 80 ஏக்கர்
  6. கரடிக்குளி – 85 ஏக்கர்

மேற்கண்ட குளங்களின கீழ் மொத்தமாக 1,223 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்படுவதுடன், சுமார் 421 விவசாயக் குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடைகின்றன. இதனால், மோதரகம அணைக்கட்டு மற்றும் வியாடிக்குளம் திட்டம் முசலி பிரதேசத்தின் கிராமப்புற வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாய பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

தொடரும். 



About the Author

சுப்ரமணியம் சிவகுமார்

கலாநிதி. சுப்ரமணியம் சிவகுமார் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலைப் (BSc Eng.) பட்டமும், இந்தியத் தொழில்நுட்பக்கழகம் ரூர்க்கியில் (IIT Roorkee) நீர்வள மேம்பாட்டுத்துறையில் முதுகலைப் (MSc) பட்டமும், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (PhD) பட்டமும் பெற்றவர். பின்னர் நோர்வேயின் உயிரியல் - அறிவியல் பல்கலைக்கழகத்திலும் (NMBU, Ås), வடகிழக்கு நோர்வே பல்கலைக்கழகத்திலும் (Bodø) பிந்தைய முனைவர் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராகவும், நீர்ப்பாசனப் பொறியாளராகவும் 28 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பல்கலைக்கழகங்களில் மூத்த விரிவுரையாளராகச் செயற்பட்டார். விவசாய அமைச்சகத்தில் திட்டமிடல் பணிப்பாளராகவும், வடமாகாண அவசர மீளமைப்புத் திட்டத்தின் திட்டப்பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

பல்வேறு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் விருந்தினர் விரிவுரைகளையும், முக்கிய உரைகளையும் (Keynote Speeches) நிகழ்த்தியுள்ள இவர், குறியீட்டு அறிவியல் இதழ்களில் 45க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளதோடு, இதுவரை 7 நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், 18 சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்