சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
19 நிமிட வாசிப்பு

சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 2

June 25, 2026 | Ezhuna

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க

இலங்கையின் இன்றைய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு

இந்திய அரசின் அழுத்தம் காரணமாக 1987 ஆம் ஆண்டு இந்திய–இலங்கை உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் விளைவாக அதிகாரப் பகிர்வு (Devolution) என்ற கருத்து இலங்கையின் அரசியல் யாப்பினுள் புகுந்தது.

13 ஆவது அரசியல் திருத்தம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறை உண்மையான அதிகாரப் பகிர்வை வழங்கத் தவறியது. மாகாண சட்டசபைகள் (Legislatures) அதிகாரம் அற்றவையாக இருந்தமையால், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முறைமையாக இது விளங்கவில்லை. இம்முறைமை குறித்து ஏமாற்றமும் விரக்தியுணர்வும் மக்களிடம் மேலோங்கியிருந்தது. இம்முறைமையின் பிரதான குறைபாடுகள் பின்வருவன:

அ. மாகாண சபைகளுக்கு எந்தவொரு விடயம் குறித்தும் முழுமையான அதிகாரம் இருக்கவில்லை.

ஆ. மாகாணங்களுக்கு மத்திய அரசாங்க மட்டத்தில் அரசியல் செல்வாக்கு இருக்கவில்லை.

இ. இவ்வாறு அரசியல் செல்வாக்கு இல்லாத காரணத்தால், மாகாண சபைகளுக்கு எனப் பகிர்ந்தளிக்கப்பட்ட அரசியல் அதிகாரங்களை (Devolved Political Powers) மத்திய அரசாங்கம் திருப்பித் தானே பறித்தெடுத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

ஈ. இலங்கையின் அரசியல் முறைமையில் அரசியல் யாப்பு மேன்மையானது; அதனை மீற முடியாது என்ற நிலை இருக்கவில்லை (The constitution of Sri Lanka is not supreme). இக்காரணத்தால் அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தம் வழங்கிய அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை மீறும் சட்டங்கள் பலவும் இருந்தன.

உ. மாகாண சபைகளை மத்திய பாராளுமன்றம் ஒருதலைப்பட்சமாகக் கலைத்து விடலாம். அல்லது மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கலாம்; நீக்கிவிடலாம். (Provincial councils can be abolished, or their powers curtailed, by the central parliament acting unilaterally)

ஊ. சுகாதாரம், கல்வி போன்ற முக்கியமான துறைகளில் வழங்கப்பட்டுள்ள குறைந்த அளவான அதிகாரங்களைக் கூட மத்திய அரசின் நிர்வாகத் துறைக்கு இலகுவாக மாற்றிவிடலாம். (The central executive can recentralize power very easily)

மேற்குறிப்பிட்ட ஐந்து குறைபாடுகளும் இல்லாத அதிகாரப் பகிர்வு மூலமே சுயாதீனமான மாகாண சபை முறையினை உருவாக்கலாம். இந்த ஐந்து குறைபாடுகளும் இல்லாத அதிகாரப் பகிர்வு சமஷ்டியின் (Federalism) சாரம்சமான கூறாக அமையும். இக்கருத்தை றொகான் எதிரிசிங்க அவர்கள் பின்வருமாறு தெளிவாக விளக்கிக் கூறுகிறார்.

“The way to overcome the glaring deficiencies in the present provincial council system is to introduce a scheme of devolution of power which includes the five features described above as the essence of federalism. Substantial devolution of power which is secure, guaranteed, which provides for a remedy in situations where such powers are exceeded or undermined, and which ensures that provincial/regional interests are represented at the centre and that the centre and provinces/regions do not have an adversarial relationship with each other, requires the incorporation of these basic features of federalism.”

13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் நடைமுறையில் தோல்வியில் முடிவடைந்துவிட்டது; ஒற்றையாட்சி லேபலுடன் கூடிய இலங்கையின் அரசியல் யாப்பின் வெளிப்படையான குறைபாடுகள் (Glaring Deficiencies) ஐந்து உள்ளன. அவை 13 ஆவது திருத்தம் மூலம் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப் பகிர்வை (Devolution of Powers) நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்கின்றன என றொகான் எதிரிசிங்க எடுத்துக்கூறுகிறார். மாகாண சபைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அவை அரசியல் அதிகாரங்கள் (Political Powers) உடைய அலகுகளாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும். மத்திய அரசாங்கம் மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறித்தெடுக்கக் கூடாது. மாகாண சபைகளினதும் பிராந்தியங்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் வலுவுடைய அரசியல் அலகுகளாக மாகாண சபைகள் செயற்பட வேண்டும் என்பன றொகான் எதிரிசிங்க அழுத்திக் கூறும் கருத்துகளாகும்.

பாராளுமன்றத்தின் இறைமை 

பாராளுமன்றத்தின் இறைமை என்னும் பிரித்தானிய யாப்புத் தத்துவம் (British Constitutional Doctrine), ஜனநாயக முறைமையைப் பின்பற்றும் உலக நாடுகளால் காலத்துக்கு ஒவ்வாத பிற்போக்கான தத்துவம் எனப் புறக்கணிக்கப்பட்டுள்ள தத்துவமாகும். பிரித்தானியாவின் காலனிகள் சிலவற்றின் அரசியல் யாப்புகளில் இது புகுத்தப்பட்ட போதும், பின்னர் அந்நாடுகளால் இத்தத்துவம் புறந்தள்ளப்பட்டுவிட்டது. இன்று பிரித்தானியாவும் பாராளுமன்ற இறைமை என்ற தனது கண்டுபிடிப்பைக் காலத்துக்கு ஒவ்வாதது எனப் புறந்தள்ளிவிட்டது. இந்நிலையில் இலங்கையில் 1972 இல் கொல்வின் ஆர்.டி. சில்வா இத்தத்துவத்தை இலங்கையின் அரசியல் யாப்பில் புகுத்திவிட்டார். ஆயினும், 1972க்கு முன்னர் இலங்கையின் அரசியல் யாப்புச் சட்டவியலில் (Constitutional Jurisprudence) காணப்படாத அந்நியமான கருத்து இது. 1972–1978 என்னும் குறுகிய காலம் மட்டும் இலங்கையின் அரசியல் யாப்பின் பகுதியாக இக்கருத்து இருந்தது. அது பின்னர் 1978 இல் மறைந்துவிட்டது என்றும் றொகான் எதிரிசிங்க குறிப்பிடுகிறார்.

“The sovereignty of parliament is an obsolete British constitutional doctrine which has been incorporated in a handful of countries and today rejected in most of them, including the country of its origin! It is somewhat quaint that the Sinhala nationalist forces are so besotted by this British doctrine, which, incidentally, was not a feature of our constitutional jurisprudence either from 1948–1972 or from 1978 to date! in Sri Lanka the doctrine of parliamentary sovereignty existed, and that too by implication, only between 1972 to 1978.”

காலத்துக்கு ஒவ்வாத (Quaint) இக்கருத்தால் சிங்கள தேசியவாத சக்திகள் கவரப்பட்டுப் பாராளுமன்ற இறைமை என்றும், மாகாண சபைகளுக்குப் பாராளுமன்றம் தனது இறைமையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் பேசுவதுமான வேடிக்கை இலங்கையில் நடைபெறுவதை றொகான் எதிரிசிங்க எடுத்துக்காட்டுகிறார். ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் அதிகாரப் பகிர்வு மூலம் அரசியல் தீர்வு காணப்படும் ஒரு சந்தர்ப்பம் எவ்வாறு கைநழுவிப் போனது என்பதையும் அவர் எடுத்துக்காட்டுகிறார்.

இலங்கையில் ‘கொன்பெடரேசன்’ அரசியல் முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு

இலங்கையில் உச்சபட்ச அதிகாரப் பகிர்வை (Maximum Devolution) நடைமுறைப்படுத்த வேண்டும்; அதற்கு மிகவும் பொருத்தமான முறையாக ‘கொன்பெடரேசன்’ முறை அமைய முடியும்; அதுவே இலங்கையை ஐக்கியப்பட்ட தேசமாக (United Country) வைத்திருக்க உதவும் என்ற கருத்தை 1995 டிசம்பர் 20 ஆம் திகதி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்வைத்தார். அதே கருத்தைப் பிரபாகரனும் அப்போது கூறினார் என்று றொகான் எதிரிசிங்க குறிப்பிடுகிறார். இந்த ஆலோசனையை ஆராய்ந்து ஓர் அறிக்கையைத் (Framework Document) தயாரிக்கும்படி பேட்ஸ், வெல்ஸ் அண்ட் பிரைத்வெய்ட் என்ற பிரித்தானிய சட்ட நிறுவனத்திடம் (British Firm of Solicitors, Bates, Wells and Braithwaite) வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோள் ‘Sri Lanka Peace Support Group’ என்ற குழுவால் மேற்படி நிறுவனத்திடம் விடுக்கப்பட்டது எனவும் றொகான் எதிரிசிங்க குறிப்பிடுகிறார். சிறிலங்கா சமாதான ஆதரவுக் குழு என்ற அமைப்பில் ‘Tamil Academics, Professionals and Clergy from International Community’ போன்றோர் உள்ளடங்கியிருந்தனர் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

1995 காலத்தில் இப்படியான ஒரு ‘Confederal Proposal’ ஒன்றிற்கான திட்ட வரைவினை பிரித்தானியாவின் சொலிசிட்டர் நிறுவனம் தயாரித்து வழங்கியது என்பது பெரும்பாலான இலங்கையர்களின் நினைவில் இருந்து மறைந்தே போய்விட்டது எனலாம். 1995க்கும் 2000 ஆவது ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் அதிகாரப் பகிர்வு பற்றிய பயனுள்ள உரையாடல்கள் இடம்பெற்றன. இக்காலத்தில் நான்கு முக்கிய ஆவணங்கள் (Documents) தயாரிக்கப்பட்டன. அவையாவன:

  1. 1995 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அதிகாரப் பகிர்வு யோசனைகள் (The Devolution Proposals of August 1995). இந்த ஆவணத்தில் அதிகாரப் பகிர்வு பற்றிய பொதுத் தத்துவங்கள் (General Principles) எடுத்துக்கூறப்பட்டன.
  2. 1996 ஜனவரியில் முற்கூறிய ஆவணத்தின் அடிப்படையில் விரிவான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் யோசனைகள் அடங்கிய அரசியல் சட்ட வரைவு (The Legal Draft of January 1996) வெளியிடப்பட்டது.
  3. 1997 மார்ச் மாதம் அரசியல் யாப்பு யோசனைகள் வரைவு (Draft Constitutional Proposal of March 1997) வெளியிடப்பட்டது. இது மூன்றாவது முக்கிய ஆவணமாகும்.
  4. இறுதியாக, ஆகஸ்ட் 2000 ஆம் ஆண்டில் அரசியல் யாப்பு மசோதா வரைவு (Draft Constitution Bill of August 2000) வெளியிடப்பட்டது.

மேற்குறித்த நான்கு ஆவணங்களிலும் அரசியல் யாப்பின் ஒற்றையாட்சி லேபல் நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இக்காலத்தில் ‘Unitary Label’ஐ நீக்குவதில் ஒருமித்த கருத்து இந்த ஆவணங்களூடாக உருவாகியிருந்தமை முக்கியமான விடயம் என றொகான் எதிரிசிங்க குறிப்பிடுகிறார். ஆயினும், அதிகாரப் பகிர்வு பற்றிய 1995–2000 கால உரையாடல்கள் நடைமுறையில் பயனுடைய அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கவில்லை. இக்கால முயற்சிகள் தோல்வியடைந்த பின்புலத்திலேயே 2001–2003 கால சமாதான முயற்சிகள் இடம்பெற்றன.

2001-2003 காலத்தில் இடம்பெற்ற அரசியல் யாப்பு விவாதங்களும் சமாதான முயற்சிகளும்

றொகான் எதிரிசிங்க அவர்களின் கட்டுரையில் அடுத்து ‘The Constitutional Debate and the Peace Process, 2001–2003’ என்னும் உபதலைப்பின் கீழ் அவர் எழுதியிருப்பவற்றை அறிமுகம் செய்யும் வகையில், ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் பின்னணி பற்றியும் அப்பேச்சுவார்த்தையின் மூன்றாவது சுற்று உரையாடலின் முடிவில் வெளியிடப்பட்ட ஒஸ்லோ அரசாங்க அறிக்கையில் (Oslo Communiqué) கூறப்பட்டவை பற்றியும் சில முக்கிய பின்னணித் தகவல்களை இப்பகுதியில் தருகின்றோம்.

2001 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தவேளை ஒஸ்லோ பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் முடிவில் டிசம்பர் 2002 இல் நோர்வே அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடங்கியிருந்த பிரகடனம், சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை உள்ளடக்கியிருந்தது.

“The agreement reached between the government of Sri Lanka and the LTTE to explore federalism and internal self-determination within a united Sri Lanka as the basis of a political solution to the ethnic conflict in late 2002 raised hopes for a durable peace in the island.”

மேலே தரப்பட்ட ஆங்கில வாக்கியத்தில் உள்ளடங்கியுள்ள கருத்துகளை பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம். 

1. உள்ளக சுயநிர்ணயம் (Internal Self-determination), சமஷ்டி (Federalism) என்பனவும், தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகப் பகுதிகளுக்கு (In areas of historical habitation of the Tamil speaking people) அதிகாரத்தைப் பகிர்தல் என்பதும் இரு தரப்பினராலும் ஏற்கப்பட்டன. 

2. மேற்படி விடயங்களின் அடிப்படையிலான அரசியல் தீர்வு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் (Within a United Sri Lanka) ஏற்படுத்தப்படும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

3. மேற்குறித்த அடிப்படைகளின்படி, இனத்துவப் பிரச்சினைக்கான தீர்வைப் பரிசீலிப்பதென இருதரப்பினரும் இணங்கிக்கொண்டனர்.

4. இந்த இணக்கப்பாடு இலங்கையில் நிலையான சமாதானம் (Durable Peace) ஏற்படப் போகின்றது என்ற நம்பிக்கையை 2002 ஆம் ஆண்டின் இறுதியில் தோற்றுவித்தது. 

“It helped allay the concerns of the sceptics that the organisation was not interested in accommodation and compromise. The breakdown in the negotiations since April 2003 may have rekindled the views of the sceptics, but the constitutional debate in the past one and a half years has focused on federalism, which is in itself a significant development. Many of us have argued for years that a solution must be based on federal lines.”

மேற்கண்ட பந்தியில் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் குறித்துக் கூறியிருக்கும் ஒரு கருத்தை அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறோம். அப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோதிலும், அவை அரசியல் யாப்பு விவாதத்தை (Constitutional Debate) சமஷ்டி குறித்துக் குவியப்படுத்துவதாக அமைந்தது. இது குறிப்பிடத்தக்கதொரு முன்னேற்றமாகும் (A Significant Development).

ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் அடிப்படை இயல்புகள்

இலங்கையில் சிங்களவர் மத்தியில் சமஷ்டி பற்றிய அச்சமும் தவறான கருத்துகளும் உள்ளன. இதற்குக் காரணம், அவர்கள் சமஷ்டி என்றால் என்ன என்பதைப் பற்றிய அடிப்படையான விடயங்களையே புரியாதவர்களாக இருப்பதுதான். ஒற்றையாட்சி என்றால் என்ன என்பது பற்றியும் சரியான புரிதல் இல்லாதவர்களாகவே சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் உள்ளனர். தமிழ் மக்களிடமும் கூட சமஷ்டி–ஒற்றையாட்சி என்பன குறித்த தப்பெண்ணங்கள் நிறைய உள்ளன. இப்பின்னணியில் றொகான் எதிரிசிங்க ‘The Essence of a Unitary Constitution’ என்ற உபதலைப்பின் கீழ் எழுதியிருப்பவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அ. ஒற்றையாட்சி வரைவிலக்கணம்

“The unitary form of government is one in which all legislative and executive authority is vested in a single legislature and a single government. The Latin “unus” means one. It has also been described as one in which the habitual exercise of supreme legislative authority is carried out by one central power.”

மேலே தரப்பட்ட மேற்கோளில் பொதிந்துள்ள கருத்துகளைத் தமிழில் இவ்வாறு கூறலாம்:

  1. ‘Unus’ என்ற லத்தீன் மொழி வேர்ச்சொல் ‘ஒன்று’ என்ற பொருளுடையது. ஒற்றையாட்சி முறை அரசாங்கம் என்ற பொருளுடைய ‘Unitary Form of Government’ என்ற தொடர், நாட்டில் ஒரே ஒரு சட்டசபை மட்டுமே இருக்கும்; நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கமும் ஒன்று மட்டுமே இருக்கும் என்ற பொருளுடையது.
  2. ஆகையால், சட்டங்களை ஆக்கும் மேலான அதிகாரங்களை உடைய சட்டசபை (Legislature), மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரமுடையதாக (Central Power) இருக்கும்.

ஒற்றையாட்சி என்பதன் சாரம்சமான அடிப்படைக் கருத்து இதுவே.

ஆ. துணைநிலைச் சட்ட ஆக்கமும் துணைநிலைச் சட்டவாக்க அதிகாரமுடைய அரச நிறுவனங்களும்

ஒற்றையாட்சி முறையில் ஒரே ஒரு சட்டசபை மட்டுமே இருக்க முடியும் என்றபோதும், துணைநிலைச் சட்டவாக்கம் (Subsidiary Legislation) என்ற வகையிலான துணைநிலைச் சட்டங்களை ஆக்கும் முனிசிபல் சபைகள், பட்டின சபைகள், கிராம சபைகள் என்பன இயங்கி வருவதைக் காண முடியும். இவை கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் (Delegated Powers) மூலம் நாட்டின் மத்திய பாராளுமன்றத்திலிருந்து துணைநிலைச் சட்டவாக்க அதிகாரத்தைப் பெறுகின்றன. ‘நவீன அரசியல் யாப்புகள்’ (Modern Constitutions) என்ற நூலின் ஆசிரியர் சி. எஃப். ஸ்ரோங் (C. F. Strong) என்பவரின் பின்வரும் மேற்கோளைத் தரும் றொகான் எதிரிசிங்க இக்கருத்தைத் தெளிவுபடுத்துகிறார்.

“It does not mean the absence of subsidiary law-making bodies, but it does mean that they exist and can be abolished at the discretion of the central authority.”

“துணைநிலைச் சட்டவாக்க நிறுவனங்களை அவற்றை உருவாக்கிய பாராளுமன்றமே தனது தற்துணிவு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழித்துவிடலாம். மத்திய பாராளுமன்றம் துணைநிலைச் சட்டவாக்க நிறுவனங்களைத் தனது ஒருதலைப்பட்சமான முடிவின் மூலம் (Unilaterally) ஒழித்துவிடலாம்.”

13 ஆவது திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள், துணைநிலைச் சட்ட ஆக்கச் சபைகளுக்குரிய அதிகாரங்களை உடைய அமைப்புகளே அன்றி, முழுமையான சட்ட ஆக்க அதிகாரத்தையும் நிர்வாக அதிகாரத்தையும் உடைய அமைப்புகள் அல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.

இ. சமஷ்டி முறையின் அடிப்படை இயல்புகள் ஒற்றையாட்சியில் இருந்து முற்றிலும் வேறானவை

சமஷ்டி முறையில்: அ) மத்திய அரசுக்கும் மாநிலங்கள்/ பிராந்தியங்கள்/ அரசுகள் (Provinces/ Regions/ States) என அழைக்கப்படும் அலகுகளுக்கும் இடையில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டிருக்கும்; ஆ) மாநில/ பிராந்திய/ அரசு அலகுகள் சுயாட்சி (Autonomy) உடையனவாக இயங்கும். மாக்ஸ் பிராங்கெல் (Max Frankel), றொனால்ட் வாட்ஸ் (Ronald Watts) ஆகிய அரசியல் யாப்பு அறிஞர்களை மேற்கோள் காட்டும் றொகான் எதிரிசிங்க, சமஷ்டி முறை எவ்வாறு ஒற்றையாட்சி முறையில் இருந்து வேறுபடுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறார். றொனால்ட் வாட்ஸ் சமஷ்டி முறையின் அடிப்படை இயல்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறுகிறார். அவர் கூறியிருப்பவற்றை எமது வார்த்தைகளில் தமிழில் தந்துள்ளோம்.

1. இருநிலை அரசுகள் (Two Orders of Government)

சமஷ்டி முறையில் மத்திய–மாநில/ பிராந்தியம் என்ற இருநிலைகளில் அரசாங்கம் செயற்படும். அவ்விரு நிலை அரசுகளுக்கிடையில் சட்டவாக்க அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் பகிரப்பட்டிருக்கும். அரசியல் யாப்பின்படி தெளிவாக வகுக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு (Clear-Cut Division of Powers) இருக்கும். இந்நிலை அரசுகளுக்கிடையில் வருவாய் வளங்கள் (Revenue Resources) ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்.

2. மத்திய நிறுவனங்களில் மாநில/ பிராந்திய அரசுகளுக்குப் பிரதிநிதித்துவம்

பிராந்தியங்களின் கருத்துகளைக் கேட்டறிந்து மத்திய அரசின் நிறுவனங்கள் கொள்கை வகுப்பதற்கு (Federal/ Central Policy-Making) ஏதுவாக, மாநிலங்கள்/ பிராந்தியங்களின் குறித்தளவு எண்ணிக்கையுடைய பிரதிநிதிகளை மத்திய அரசின் சட்டவாக்கச் சபைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் சமஷ்டி முறைகளில் இருக்கும். இப்பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தின் இரண்டாம் சபை எனப்படும் செனட் சபையின் (Second Chamber of Parliament) ஊடாக வழங்கப்படும்.

3. எழுதப்பட்ட அரசியல் யாப்பு

சமஷ்டி அரசியல் யாப்பு எழுதப்பட்ட அரசியல் யாப்பாக (Written Constitution) இருக்கும். எழுதப்பட்ட அரசியல் யாப்பினை சமஷ்டியின் அலகுகளான மாநில/ பிராந்திய அரசுகளின் சம்மதமின்றி, ஒருதலைப்பட்சமாக மத்திய அரசால் திருத்தம் செய்தல் இயலாது. சமஷ்டி அரசியல் யாப்பு மத்திய அரசுக்கும் மாநில/ பிராந்திய அரசுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் (Compact or Covenant) போன்று அமைவதால், மத்திய அரசு, மாநில/ பிராந்திய அரசுகள் என்ற இரு சாராருடையதும் சம்மதமின்றி அதனைத் திருத்த முடியாது.

4. பிணக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறும் நடுவர்

சமஷ்டி முறைகளில் மத்திய அரசுக்கும் மாநில/ பிராந்திய அரசுகளுக்கும் இடையில் எழும் பிணக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறும் நடுவர் (Umpire) என்னும் வகிபாகத்தைப் பெறும் நீதிமன்றம் (Judiciary) அவசியமான ஒரு நிறுவனமாகும். சமஷ்டி முறைகளில் நீதிமன்றங்கள் நீதி மீளாய்வு (Judicial Review) அதிகாரம் உடையனவாக விளங்கும்.

5. மத்திய–மாநில உறவுகள்

மத்திய அரசுக்கும் மாநில/ பிராந்திய அரசுகளுக்கும் இடையே பகிரப்பட்ட பொறுப்புகள் (Shared Responsibilities) இருக்கும் விடயங்களில் ஒற்றுமையான செயற்பாடுகள் அமைய வேண்டும். இதனை உறுதி செய்வதற்காக மத்திய–மாநில/ பிராந்திய உறவுகளை நெறிப்படுத்தும் அமைப்பொழுங்கு செயற்பாட்டில் இருக்கும்.

மேற்குறித்த ஐந்து பண்புகளும் சமஷ்டி முறையின் அடிப்படையான இயல்புகளாகும். இம்முறையில் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை (Devolved Powers) மத்திய அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகப் பறித்தெடுக்கவோ அல்லது அரசியல் யாப்பைத் திருத்தவோ முடியாது.

‘Federalism’ என்ற ஆங்கிலச் சொல் ‘Foedus’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். ‘Foedus’ என்ற வேர்ச்சொல் ஒப்பந்தம், உடன்பாடு, சம்மதம் என்னும் பொருளுடையதாகும். ஆகையால், ‘சமஷ்டி’ (Federalism) என்பது இருநிலை அரசுகளிடையே சுயாட்சி (Self-Rule), பகிரப்பட்ட ஆட்சி (Shared Rule) என்ற இரண்டினதும் கூட்டான உறவைக் குறிப்பதாக அமைகிறது. இக்காரணத்தால் சமஷ்டி முறை ஒருவகையான கூட்டாளி (Partnership) உறவாகும். சம்பந்தப்பட்ட தரப்பினர்களான மத்திய அரசு, மாநில/ பிராந்திய அரசுகள் என்பவற்றின் பரஸ்பர உடன்பாடின்றிச் சமஷ்டி ஒழுங்கமைப்பை மாற்றவோ அல்லது திருத்தங்களைக் கொண்டுவரவோ முடியாது என்ற கருத்தை றொகான் எதிரிசிங்க அழுத்திக் கூறுகிறார்.

‘Essays on Federalism’ நூலின் நான்காவது அத்தியாயமான (பக்கங்கள் 85 முதல் 108 வரை) ‘Federalism: Myths and Realities’ என்ற கட்டுரையின் 85 முதல் 99 வரையான 15 பக்கங்களில் கட்டுரையாசிரியர் றொகான் எதிரிசிங்க அவர்களால் கூறப்பட்டுள்ள கருத்துகள் இத்தமிழ்க் கட்டுரையில் தொகுத்தும் சுருக்கியும் கூறப்பட்டுள்ளன. இத்தமிழாக்கத்தை ஆங்கில மூலத்துடன் ஒப்பிட்டு வாசித்துக்கொள்ளுமாறு தமிழ் வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். 



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்