ஈழத்தில் தமிழர் வாழும் இடங்களில் கண்ணகி வழிபாடு நிலைத்திருப்பது போல சிங்கள மக்கள் வாழும் இடங்களிலும் கண்ணகி வழிபாடு பத்தினி வழிபாடாக நிலைபெற்று வருகின்றது. கயபாகு மன்னன் அனுராதபுரியை தலைநகராகக் கொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆட்சிசெய்த போது, கண்ணகியின் காற்சிலம்பை யானை மேல் வைத்து ஊர்வலமாகச் சென்று பெருவிழாக் கொண்டாடினான். இவ்விழாவிற் கலந்துகொண்ட சிங்களக் குறுநில மன்னர்களும் தங்களது பிரதேசங்களிலே இவ்வழிபாட்டை நிலைநிறுத்தினர் என்பது வரலாற்றுக் குறிப்பாகும். இது கண்டி மாநகரில் நடைபெறும் எசல (ஆடி) பெரஹராவின் ஆரம்பமாய் இருக்கலாம் என ஆனந்த குமாரசுவாமி தனது மத்திய காலத்துச் சிங்களக் கலை என்னும் நூலிற் கூறியுள்ளார்.1
“பெரஹரா” என்ற சிங்களச்சொல் “பிரஹாரம்” என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதனைக் கோவிலுக்கு வெளியே சுற்றி வருதல் எனத் தமிழிற் கொள்ளலாம். கண்டி இராச்சியத்தில், 1ஆம் விமலதர்மசூரியனின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த சீயநாட்டுப் புத்தபிக்குகளின் விருப்புப்படி கண்ணகி விழாவில் புத்தபிரானின் புனித தந்தப் பேழையும் இடம்பெறத் தொடங்கியது. இன்றும் எசலப் பெரஹராவில் பத்தினி சிலையும் வீதிவலம் வருகின்றது. இவ்விழாவின் கடைசி நாளில் நிகழும் நீர்வெட்டும் கெத்தெம்பை ஆற்றிலே நிகழ்கின்றது. இந்த நீர்வெட்டு நிகழ்ச்சி கயவாகு மன்னன் சமுத்திரத்தைத் தனது தண்டால் பிளந்து சென்ற செய்தியை நினைவு படுத்துகின்றது.
நிக்கவவக் குகையிற் கண்டெடுக்கப்பட்ட சந்தனக்கட்டையாலான கண்ணகை, கோவலன் சிலைகள் கயவாகு மன்னனால் கொண்டுவரப்பட்டதாய் இருக்கலாம் என ஹென்றி பார்க்கர் கருதுகின்றார். கணநாத் ஒபயசேகர சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித் தெய்வ வழிபாடு பெரும் செல்வாக்குடன் விளங்கியிருப்பதை விரிவாக விளக்கியுள்ளார். இலங்கையின் மேற்கு, தென் கரையோர மாகாணங்களிலும், சப்பிரகமுவ மாகாணத்திலும், கண்டிப் பிராந்தியத்தில் கண்டி, மாத்தளை, ஹங்குரான்ஹெத்த மற்றும் பதுளை ஆகிய இடங்களிலும் இவ்வழிபாடு நிலைபெற்றுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார். பாணமைப் பிரதேசத்தில் சுனாமிப் பேரலையின் தாக்கத்திற்குப் பின்னர் பத்தினி வழிபாடு மீண்டும் புத்தெழுச்சி பெற்று விளங்குகின்றது.
கண்ணகி வழிபாடு சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு முன்னர் சக்கா, தாதரத்தா, விறூலகா, விறூபக்கா, வேசவனா முதலான தெய்வங்கள் வழிபாட்டிற்குரிய தெய்வங்களாக விளங்கின. அத்துடன் தரா, கிரியம்மா முதலான பெண் தெய்வங்களும் முக்கியம் பெற்றிருந்தன. பத்தினித் தெய்வ வழிபாடு இம்மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற, ஏனைய தெய்வங்களின் செல்வாக்கு படிப்படியாகக் குன்றத் தொடங்கியது.
சமன் தெய்யோ என்று அழைக்கப்பட்ட சமனலகந்த என்ற மலையின் காவல் தெய்வத்திற்குப் பதிலாகப் பத்தினி தெய்வ வழிபாடு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. சிங்களவர்கள் மத்தியிலுள்ள கிரியம்மா வழிபாட்டுடன் பத்தினி வழிபாடு தொடர்புபடுகின்றது. பத்தினித் தெய்வத்தினைச் சில இடங்களில் ஹலம்ப குமாரி கிரியம்மா, ஹந்தன் குமாரி கிரியம்மா என்றும் அழைக்கின்றனர். கிரியம்மா வழிபாடானது மொனராகல, மஹாஓயா போன்ற பிரதேசங்களிலுள்ள வேடர்கள் மத்தியில் காணப்பட்ட வழிபாடாகும். இவ்வழிபாடு இறந்த மூதாதைத் தாய்மாரை வழிபடும் முறையிலிருந்து பிறந்தது. கிரியம்மா வேறு, பத்தினித் தெய்வம் வேறு. கிரியம்மா மலைகளில் நிற்பவள் என்று சிங்களவர்கள் நம்புகின்றனர். பத்தினி மலைகளில் ஒருபோதும் உறைவதில்லை. பத்தினித் தெய்வ வழிபாடு இலங்கையில் பரவலடைந்த பின்னர் கிரியம்மா வழிபாடானது பத்தினித் தெய்வ வழிபாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். பத்தினியைப் பௌத்த பெண் தெய்வமான அமராவதியுடன் இணைத்து நோக்குவதும் உண்டு.
பத்தினி வழிபாடு சிங்கள மக்களின் சமய வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. இத்தெய்வத்தினைத் தொற்றுநோய்களின், அதாவது அம்மை, சின்னமுத்து, பொக்குளிப்பான் போன்ற நோய்களிலிருந்து காக்கும் அதி தேவதையாக அவர்கள் கொள்வதோடு, பத்தினியைத் துர்க்கையாகவும் எட்டுக்காளிகள் சூழ்ந்திருக்கும் ஈழத்தின் காவற் தெய்வமாகவும் கொள்வர்.

சிங்களவர்கள் இருபத்தைந்து வகையான பத்தினியை உருவகித்து வழிபடுவர். அவற்றிலே ஏழு வடிவங்கள் (சத்பத்தினி) முக்கியத்துவம் பெற்றவை. அவை, ஜதின்னா, சுரன்கா, மணிமேகா, ஜினிஜல, ஸ்ரீமாலா, ஐயாராண்டா, ஒறுமாலா என்பனவாகும். பத்தினித் தெய்வம் மாங்கனி, நீர், பூ, கல், தீ, துப்பட்டி, தந்தம் ஆகிய பொருட்களிலிருந்து தோன்றிய காரணத்தினால் முறையே, அம்ப பத்தினி, ஜல பத்தினி, மல் பத்தினி, சிறிமாமுனி பத்தினி, கினி பத்தினி, ஒறுமாலா பத்தினி, தெத பத்தினி என்ற பெயர்களைப் பெறுகின்றாள் என்ற ஐதீகம் சிங்கள பௌத்தர்களிடையே நிலவுகின்றது. பிற்காலத்தில் பத்தினி வழிபாடானது, புத்த சமயத்துடன் பெரிதும் இணைக்கப்படலாயிற்று. இவ்வாறு இணைக்கப்பட்டதற்கு அப்பால் தனிச் சிங்களத் தெய்வமாகவே கண்ணகியை நிலைநாட்டுகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்றன. இது நவகமுவ பத்தினியின் மேல் பாடப்பட்ட ‘தலுமுற பூஜாவ’ என்னும் இலக்கியத்தில் பின்வருமாறு வெளிப்படுகின்றது.
“நவகமுவவில் வாழும் அழகிய பெண் தெய்வமே உன்
வல்லமையால் தமிழ்க் கடவுளர்களைத் தண்டித்தவளே“
மேலும் ‘பஹம் கம்புறா’ என்னும் இலக்கியமானது பத்தினியை பௌத்தத்தின் ஏழு கிரியம்மாக்களில் ஒருவராக அடையாளப்படுத்துவதோடு பத்தினி அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்து அதன்வழி புத்தரின் நிலையை அடையவிருப்பதாகவும் குறிப்பிடுகின்றது. ஒறுமாலா பத்தினி தெய்வம் புத்தர் நட்ட மா விதையில் இருந்து தோன்றியவள் என்று பௌத்தர்கள் நம்புகின்றனர். இப்பத்தினி கண்டிப்பான இயல்பைக் கொண்டவள் என்பதனால் மைத்திரி புத்தர் வடிவத்திலே இவளை இனங்காண முட்பட்டனர். ‘பத்தினி ஹெல்ல’ என்ற சிங்கள இலக்கியமானது, பாண்டிய மன்னனது அரண்மனைத் தோட்டத்தில் மிக உயர்ந்து வளர்ந்த மா மரம் ஒன்று இருந்ததெனவும் அதில் அழகிய பெரிய மாங்கனியொன்று யாருமே பறிக்க முடியாத நிலையில் காணப்பட்டதாகவும் கூறுகின்றது. இந்நிலையில் சக்கரக்கடவுள் எனப்படுகின்ற இந்திரன் பிராமணனாக மாறுவேடம் தரித்து வானுலகிலிருந்து பூமிக்கு வந்து அதற்கு அம்பினால் எய்ததாகவும், அப்போது மாங்கனி நிலத்தில் வீழ்ந்த போது அதிலிருந்து சிதறிய ஒரு துளியானது பாண்டிய மன்னனின் கண்ணில் பட்டதாகவும், அதனால் கண் பார்வையை இழந்த மன்னன் அம்மரத்தை வெட்டி வீழ்த்த ஆணையிட்டதாகவும், அதனை வெட்டி வீழ்த்தப் பணியாளர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததால் பீதியடைந்த மன்னன் மாங்கனியைத் தங்கத்தினாலான குடத்தினுள் வைத்து காவிரியாற்றில் விடுமாறு கட்டளையிட்டதாகவும், அக்குடம் கரையொதுங்கிய போது அம்மாங்கனியானது புத்தர் பெருமானுக்குப் பிரசாதமாகப் படைக்கப்பட்டதாகவும், பின்னர் ஆற்றில் வீசப்பட்ட மா விதையிலிருந்து பத்தினித் தெய்வம் தோன்றியதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறாக ‘சிங்கள பௌத்த’ அடையாளப்படுத்தல்களிற்கிடையே பேணப்படும் கண்ணகியின் இருப்பு, கண்ணகியின் சுயமான தமிழ் அடையாளத்திற்கு அச்சுறுத்தலாகவும் அமைய வாய்ப்புண்டு.

சிங்கள கிராமிய இலக்கிய மரபில் பன்திஸ்கோள்முற என அழைக்கப்படுகின்ற முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட கதைகள் உண்டு. இவற்றுக்குச் சிலப்பதிகாரக் கதையே ஆதாரமாக அமைந்த போதும் அவை இலங்கையுடன் தொடர்புபட்ட பல்வேறு கதைகளைக் குறிப்பிடுகின்றன. எனினும் அமரசாரயா (பாண்டிய அரசும் நாடும் அதன் சிறப்பும்), பாதசா, சோளிபுரசகத்ய, பத்தினிபத்தும், அம்பவிதமன்ன, காவேரி, கங்காதியகெலிய, கரிகால்உபத, கங்கபன்டிம, தன்அவவாத, ருவன்நளுவ, மாதவிறங்குன்துக்கேலி கத்தாவ, கவேரிபட்டுண ஹறகிலிய வெலிநட, வெள்ளிமடம, பாலன்க (கோவலன்) வதகொத, பாலன்ம மலிமமறா இப்பதிம், சத்பத்தினி கத்தாவ, வேடபூகொவ, மேவன்பஹன (குளிர்த்தி) ஆகியவை பாண்டிநாடு, சோழநாடு, கண்ணகி, கோவலன், மாதவி முதலான பாத்திரங்களுடன் தொடர்புடையதாகவும், சிலப்பதிகாரக் கதையோட்டத்துடன் தொடர்புடையதாகவும் அமைந்து காணப்படுகின்றன. மேற்குறித்த 35 கதைகளுக்குப் புறம்பாகப் பத்தினிஹெல்ல, பளங்கஹல்ல என்னும் இரண்டு கதைகளுமுண்டு. எல்லாமாக, பன்திஸ்கோள்முற என்ற தொகுதியில் 4000 பாடல்கள் உண்டு. இவற்றைத் தவிரவும் பத்தினிகத்தாவ, பத்தினிவிலாபய, சலம்பகத்தாவ, பத்தினிபிளிம, பாளங்கமாறுவேசிந்துவ எனப்பல உதிரிக் கதைகளும் உண்டு. சொக்கறி எனும் சிங்களக் கூத்தும் பத்தினி வழிபாட்டுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது என்பார் சரச்சந்திரா.
பத்தினி வழிபாட்டுடன் தொடர்புடைய அங்கெலிய (கொம்பு விளையாட்டு), மல்கெலிய (பூ விளையாட்டு), தொடங்கெலிய (தோடம்பழ விளையாட்டு), பொல்கெலிய அல்லது பொறபொல் கிரீம (போர்த்தேங்காய் உடைத்தல்) ஆகிய விளையாட்டுகளும் சிங்கள மக்களிடையே இடம்பெற்று வருகின்றன.
அடிக்குறிப்புகள்
1. எம்., சற்குணம், மு.கு.நூ. பக்.114.
2. த., கனகரத்தினம், மு.கு.நூ, பக்.229.
3. எம்., சற்குணம், மு.கு.நூ. பக்.114.
4. Gananth Obeyesekara (1984), The Cult Of Goddess Pattini, Chicago University Press, P.3.
5. Parker, H (1909), Ancient Ceylon, London, P.151.
6. http://kanaga-sritharan.tripod.com/kannaki.htm.
7. கே.என்.ஓ., தர்மதாச, எச்.எம்.எஸ்., துன்தெனிய (1994), சிங்கள தேவபுராணய, அரச அச்சக வெளியீடு, கொழும்பு. பக்.202.
8. மேலது, பக்.201-202.
9. என்., சண்முகலிங்கன், இலங்கை-இந்திய மானிடவியல் சமயம் சமூகம் பற்றிய ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை. பக்.19.
10. Parker. H, op.cit., P.633.
11. இரா.வை., கனகரத்தினம், மு.கு.நூ, பக்.12.
12. Raghavan (1967) P.125-126.
13. என்., சண்முகலிங்கன், மு.கு.நூ, பக்.20.
14. வெல்லாவூர்க் கோபால், மு.குநூ, பக்.234.
15. வ., மகேஸ்வரன், மு.கு.நூ, பக்.59.
16. செ., சுந்தரம்பிள்ளை (1993), உடுக்கடிக் கதையும் அதனுடன் தொடர்புடைய வேறு தகவல்களும், தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர், இந்துக் கலாசார அலுவல்கள் திணைக்களகம், பக்.67.



