முன்னர் மலையக மக்களின் கல்வி வளர்ச்சி குறித்து மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, 1990களுக்குப் பின்னரான காலப்பகுதியில் மலையகக் கல்வி வளர்ச்சிக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும், அதன் விளைவாக உருவான சமூகத் தாக்கங்களையும் இக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது. அத்துடன், மலையக மக்களின் மரபு ரீதியான தொழில்களிலும், அவர்களது தனித்துவமான பாரம்பரியப் பண்பாட்டுக் கோலங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் இக்கட்டுரை விரிவாக விளக்குகின்றது.
தேசிய கல்வி முறைக்குள் உள்வாங்கப்பட்ட மலையகத் தமிழர்கள்
1972 மற்றும் 1975க்கு இடையில் தேசியமயமாக்கலின் போது, இலங்கை அரசாங்கம் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் உட்பட தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களைக் கையகப்படுத்தியது. தோட்டங்களால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலைகளையும் கையகப்படுத்தியது. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட தோட்டப் பாடசாலைகள் மற்றும் அவற்றின் முகாமைத்துவம் என்பன ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) மற்றும் அரச தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டன. இப்பாடசாலைகளை முறைசார்ந்த அரச கல்வி அமைப்பில் ஒருங்கிணைக்கும் செயல்முறை 1970களின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, அது 1980கள் வரை நீடித்தது. தமிழர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாகவும், இனவாதத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஆட்சிமுறை காரணமாகவும், தோட்டங்களில் உள்ள தமிழ்மொழிப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது மெதுவாகவே இடம்பெற்றது.

மேற்குறிப்பிட்டது போல, சுமார் 400 தோட்டங்களை ஒரே இரவில் தேசியமயமாக்கிய அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் தேசத்தைக் கட்டியெழுப்பியதோடு, இலவசக் கல்வியையும் நடைமுறைப்படுத்தியது. ஆனாலும், இதற்குப் பின்னணியாக இருந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அத்தகைய வரப்பிரசாதங்களை வழங்குவதில் அது முனைப்புடன் செயற்படவில்லை. தோட்டப் பாடசாலைகளைப் பொறுப்பேற்பதற்கு அதற்கு 13 ஆண்டுகள் எடுத்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தோட்டப் பாடசாலைகள் அனைத்தும் 1977 முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. இதில் முதல் கட்டமாக 1977 ஆம் ஆண்டு வரை 304 பாடசாலைகள் பொறுப்பேற்கப்பட்டன. பின்னர் 1978 – 1979 காலப்பகுதியில் 1 பாடசாலை பொறுப்பேற்கப்பட்டது. தொடர்ந்து 1980 ஆம் ஆண்டில் ஒரே தடவையில் 346 பாடசாலைகள் பொறுப்பேற்கப்பட்டன. இறுதியாக, 1990 ஆம் ஆண்டின் முடிவில் மொத்தம் 721 பாடசாலைகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன (பொன். ராமதாஸ்: 2017, எம். ஆர். விஜயானந்தன்: 2023).
தோட்டப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதில் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களில் பெரும்பாலோர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே காணப்பட்டனர். ஆயினும், 1970களின் பின்னர் தோட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்கள மக்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான வெறுப்புணர்வுகள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, அதிலிருந்து விடுபடுவதற்காக பெரும்பாலான வடக்கு மாகாண ஆசிரியர்கள் தமது இருப்பிடங்களுக்கு திரும்பிச் சென்றனர். அவ்வாறு ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்ப மலையக இளைஞர்கள் தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். இவ்வாறு தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்களில் 402 பேரை, அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட தோட்டப் பாடசாலைகளில் உதவி ஆசிரியர்களாக கடமையாற்றும் வகையில் நியமனமும் வழங்கப்பட்டது.
1985 ஆம் ஆண்டு பெருந்தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த ஆய்வில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் போதிய முதலீடுகளை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், அரசாங்கம் பொறுப்பேற்ற பாடசாலைகளுக்கு ஸ்வீடன் நாட்டினால் நிதி உதவி வழங்கப்பட்டது. ஸ்வீடன் நாட்டின் உதவி கிடைக்கப்பெறுவதற்கு காரணமாக இருந்தது, அந்நாட்டின் நிதி உதவியுடன் பதுளை மாவட்டத்தில் 1980களில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட கிராமிய அபிவிருத்தி திட்டமாகும். இதன்போது பரீட்சார்த்த நிலையில் பதுளை மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு தோட்டப் பாடசாலைக்கு அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேசியமயமாக்கப்பட்ட மலையகப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்ட போது, அதனை ஸ்வீடன் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இதன் அடிப்படையில், ஸ்வீடிஷ் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஏஜென்சி (SIDA) நிறுவனத்தின் நிதியுதவியுடன், அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட 436 பாடசாலைகளில் பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன (தை. தனராஜ்: 2017). இவற்றில் 420 பாடசாலைகளில் மட்டுமே வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறை வசதிகள், நீர் விநியோகம், மின்சார இணைப்பு, தளபாடங்கள், அதிபர் மற்றும் ஆசிரியர் விடுதிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
1986 ஆம் ஆண்டு ‘Plantation Sector Development Programme’ மற்றும் Plantation Sector Teacher Programme’ எனப்படும் பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றொரு பகுதியாக ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதற்கான விசேட ஆசிரியர் சேர்க்கை செயல்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. இச்செயல்திட்டத்தின் மூலம் விசேடமாகப் பயிற்சி பெற்ற 1,898 பேர், திட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர் (எம்.ஆர். விஜயானந்தன்: 2023). மேலும், 1980களின் பின்னர் தேசியமயமாக்கப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு SIDA நிறுவனத்துடன் சேர்ந்து GTZ, UNICEF போன்ற சர்வதேச நிறுவனங்களும் பெருமளவு நிதி உதவிகளை வழங்கின.
இலங்கையில் ஆசிரியர் தேவைகளை கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் 17 கல்வியற் கல்லூரிகளை நிறுவியிருந்த போதிலும், அது பெருந்தோட்டப் பாடசாலைகளின் ஆசிரியர் தேவையை போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை. இந்நிலையில், GTZ வழங்கிய நிதி உதவியுடன் நுவரெலியா மாவட்டத்தில் 18ஆவது தேசிய கல்வியற் கல்லூரி நிறுவப்பட்டது. ‘ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி’ எனப் பெயரிடப்பட்ட இக்கல்லூரியின் அபிவிருத்திக்கு ‘ஜெர்மனிய தொழில்நுட்பம்’ நீண்டகால அடிப்படையில் நிதி உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இக்கல்லூரியில் 1992 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 3,581 பேர் பயிற்சி பெற்று பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ளனர். இவர்களில் ஏறக்குறைய 2,000 பேர் ஆரம்பக் கல்விப் பயிற்சி பெற்றவர்களாகவும், 272 பேர் விஞ்ஞானம் கற்பிக்கப் பயிற்சி பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர் (பொன். ராமதாஸ்: 2017).
1990களின் பின்னர் தேசிய கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்ட தோட்டப் பாடசாலைகளின் வளர்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் தோட்ட மக்களிடையே குறிப்பிடத்தக்க அளவில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், ‘இடைவிலகல்’ கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான அனுமதிகள் அதிகரித்துள்ளன. பல பாடசாலைகளில் புதிய கட்டடங்கள், மின்சார இணைப்புகள், இணைய வசதிகள், ‘Smart Board’கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர்களும் தாங்கள் படித்த பாடசாலைகளின் கல்வி முன்னேற்றத்தில் அதிக ஈடுபாட்டுடன் செயற்படும் போக்கும் பல மலையகப் பாடசாலைகளில் காணப்படுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக, சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட பாடசாலைகளில் மலையக மக்கள் தமது பிள்ளைகளை அனுமதிப்பதுடன், அவ்வாறு அனுமதி பெற்ற மாணவர்களின் கல்வி நலன் கருதி, தங்களது குடும்பங்களுடன் அப்பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களுக்கு இடம்பெயர்ந்து தற்காலிகமாகக் குடியமரும் போக்கினையும் தற்போது மலையகத்தில் பரவலாகக் காணமுடிகின்றது. மேலும், பெற்றோர்கள் தமது நாளாந்த வேலைகளுக்கு மேலதிகமாக, தமது பிள்ளைகளின் கல்விக்குத் தேவையான செலவுகளைச் சேகரிக்கவும், குறிப்பாக மேலதிக வகுப்புகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்காக மேலதிக வருவாயைத் தேடி வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லும் நிலவரங்களையும் மலையகத்தில் சாதாரணமாகக் காண முடிகிறது.
இன்று மலையகத்தில் ஏறக்குறைய 1AB தரத்திலான பாடசாலைகளின் எண்ணிக்கை 22 ஆகவும், 1C தரத்திலான பாடசாலைகளின் எண்ணிக்கை 120 ஆகவும் காணப்படுகின்றன. ஆரம்பக் கல்வியின் தராதரங்கள் தேசிய அளவில் நன்கு உயர்ந்துள்ளன. வருடாந்தம் சுமார் 20,000க்கு மேற்பட்ட மலையக மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இவர்களில் சுமார் 5,000 பேர் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். மேலும், வருடாந்தம் சுமார் 1,500 பேர் தேசிய பல்கலைக்கழகங்களில் உள்ள பல்வேறு கற்கைநெறிகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இன்று பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக மலையகத்தைச் சேர்ந்த சுமார் 25 பேர் வரை பணியாற்றுகின்றனர். இவர்களில் அரைப்பங்கு பேர் கலாநிதி (PhD) பட்டம் வரை தமது கல்வித் தரத்தை உயர்த்தியவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். மேலும், பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த சிலர் தொழில்நுட்பக் கல்வியை மேற்கொண்டு திறமையான தொழிலாளர்களாகவும் வளர்ந்து வருகின்றனர். குறிப்பாக உதவி தாதியர்கள், பராமரிப்பாளர்கள், இயந்திரப் பழுதுபார்ப்பு, கட்டட நிர்மாணம், மின்சார இணைப்பு போன்ற தொழிற்கல்வித் துறைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியைப் பூர்த்தி செய்தவர்கள் மத்திய தர வர்க்கமாக வளர்ச்சி அடைந்து, ஆசிரியர் சேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் மட்டுமன்றி, வைத்தியர்கள், சட்டத்தரணிகள், வங்கியாளர்கள், சுகாதார அதிகாரிகள், எழுத்தாளர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தொழில்களிலும் பணியாற்றுகின்றனர்.
மேற்குறிப்பிட்டவாறு கடந்த 25 வருடங்களில் மலையக மக்களிடையே முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், தேசிய மட்டத்தில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மலையக மக்களின் இதுவரையான அடைவு போதுமானதாக இல்லை என்பதே உண்மையாகும். குறிப்பாக, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். தேசிய ரீதியில் சுமார் 75 வீதமானவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைவதாகக் காணப்பட்டாலும், மலையகத்தில் ஏறக்குறைய 60 வீதமான மாணவர்கள் மட்டுமே அத்தகைய அடைவினைப் பெறுகின்றனர். அதேபோல், மலையகப் பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களில் சுமார் 30 முதல் 40 வீதமானவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதில்லை. இவ்வாறு இடைவிலகிச் செல்பவர்களில் ஆண் மாணவர்களே அதிகமாக இருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

மேலும், இன்று இலங்கையில் அரசாங்கத் தொழில்துறைகளில் மொத்தமாக 1.15 மில்லியன் பேர் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை மொத்த தொழில்புரிபவர்களில் சுமார் 14.5 வீதமாகும். மலையக மக்களில் இவ்வாறு அரசாங்கத் துறையில் பணிபுரிபவர்களாக சுமார் 25,000 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஏறக்குறைய 20,000 பேர் ஆசிரியர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை மலையகத்தின் மொத்த மக்கள் தொகையான சுமார் 1.3 மில்லியனுடன் ஒப்பிடும்போது 1.9 வீதமாகவே காணப்படுகிறது. ஆகவே, அரசாங்கம் அல்லது அதனுடன் தொடர்புடைய தொழில்துறைகளில் மலையக மக்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என்பதை கவலைக்கிடமான நிலையாகக் குறிப்பிட வேண்டியுள்ளது.
பெருந்தோட்டத் தொழில்களும் ஏற்பட்ட மாற்றங்களும்
தேயிலைப் பெருந்தோட்டத் தொழிலைப் பொறுத்தவரை, அது தோட்ட நிர்வாகத்தினால் அல்லது முகாமையாளர்களினால் இடப்படும் பணிகளை நிறைவேற்றும் ஒரு முறைமைக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது. இலங்கையில் பெருந்தோட்டத் தொழில்கள் தோட்டத் தொழிலாளர்கள் (இந்தியன்) கட்டளைச்சட்டத்தின் (Estate Labour (Indian) Ordinance) படியே இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இச்சட்டமானது தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய வம்சாவளித் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. இதன்படி, ஒவ்வொரு தொழிலாளியும் தன்னை வேலைக்கு அமர்த்தும் நபருடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்கிறார் (T.V. ராசரத்தினம்: 1982). ‘Estate Labour (Indian) Ordinance No. 3 of 1889’ எனப்படும் இச்சட்டம், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இவர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு ஒரு மாதத்திற்கு கணக்கிடப்படும் மொத்த ஊதியம் அடுத்த மாதத்தின் பத்தாம் திகதிக்கு முன் வழங்கப்பட வேண்டும் என்றும் விதிமுறைகள் குறிப்பிடுகின்றன. மேலும், வேலை நிபந்தனைகள், தொழில் தகராறுகள், தொழிலாளர்களின் சுகாதாரம், ஊதியம் போன்றவற்றை உள்ளடக்கிய 14 அத்தியாயங்களையும் சில பிற்சேர்க்கைகளையும் கொண்டதாக இச்சட்டம் அமைகிறது. குடிபெயர்ந்து வந்த இந்தியத் தொழிலாளர்களுக்கான இந்த தொழிலாளர் கட்டளைச்சட்டத்தின் அடிப்படையில், அவர்கள் மேற்கொள்ளும் தொழில்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை:
முதல் வகை – தேயிலைச் செடிகளை பராமரித்தலும், தேயிலைக் கொழுந்துகளை அறுவடை செய்து தொழிற்சாலைக்கு அனுப்புதலும் (Field Operations).
இரண்டாவது வகை – தொழிற்சாலையில் பெறப்படும் தேயிலைக் கொழுந்துகளை பதனிடுதல் மற்றும் சந்தைப்படுத்துவதற்காக தயாரான நிலையில் களஞ்சியப்படுத்துதல் (Factory Operations).
தோட்டங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் இவ்விரு வகைகளில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் உள்ள மொத்த தொழிலாளர்களில் சுமார் 90 வீதமானவர்கள் தேயிலைச் செடிகளைப் பராமரிக்கும் முதல் வகைத் தொழில்களில் ஈடுபட்டவர்களாக உள்ளனர். மிகச் சிறிய எண்ணிக்கையிலானவர்களே தேயிலை பதனிடும் தொழிற்சாலைகளிலும் மற்றும் தரத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
‘Estate Labour (Indian) Ordinance’ இன் பிரகாரம் பின்வரும் தொழில்களே தோட்ட முகாமையாளர்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. தேயிலைச் செடியைப் பராமரித்தலும் அறுவடை செய்தலும்
காடு வெட்டுதல், புல் வெட்டுதல், கானை வெட்டுதல், தேயிலைக் கொட்டைகள் அல்லது செடித் துண்டுகளை கன்றுத் தவறணையில் பாத்தி கட்டி நட்டுப் பராமரித்தல், தேயிலைக் கன்றுகளுக்கு நீர் வார்த்தல், தேயிலைச் செடிகளில் ‘பாசாண்’ அகற்றல், அழுக்கெடுத்தல், படர் செடி அகற்றல், எல்லைகளைச் சுத்தம் செய்தல், கூனியடித்தல், குழி போடுதல், நிழல் மரம் நடுதல், வேறு உப செடிகள் வளர்த்தல், கட்டடங்கள் கட்டுதல், பாதைகளையும் கட்டடங்களையும் திருத்திப் பராமரித்தல், கொழுந்து கொய்தல், கொய்தெடுக்கப்பட்ட கொழுந்துகளை அதற்குரிய கூடையில் சுமந்து சென்று தோட்டப்பிரிவின் பொறுப்பாளரான கணக்கப்பிள்ளையிடம் ஒப்படைத்தல், தேவையான போது கொய்தெடுக்கப்பட்ட கொழுந்துகளில் முதிர்ந்த இலைகளை அகற்றல், மட்டம் ஒடித்தல், கவ்வாத்து வெட்டுதல், உரம் பரப்புதல், வங்கிகளில் கட்டடம் கட்டுதல், முள்ளுக்குத்துதல், எல்லை அமைத்தல், பொருட்களைத் தூக்கிச் செல்லுதல், கொய்தெடுக்கப்பட்ட தேயிலைக் கொழுந்துகளை அளவிட்டு அதற்குரிய பைகளில் நிரப்பி வாகனங்களில் ஏற்றி தொழிற்சாலைக்கு கொண்டு செல்லுதல், தேவையான போது கம்பி மூலமாக அனுப்புதல் போன்றவை.
2. தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் தொழில்கள்
கொழுந்து வாட்டுதல், அரைத்தல், பதப்படுத்தல், காய்ச்சுதல், தரம் பிரித்தல், சுத்தமாக்கல், மீண்டும் தரப்படுத்தல், குச்சுப் பொறுக்குதல், நிறுத்தல், களஞ்சியப்படுத்தல் ஆகியவையாகும். இவ்வாறு களஞ்சியத்தில் சேகரிக்கப்பட்ட தேயிலை, தேவைக்கேற்ப பொதியிடப்பட்டு அடையாளமிடப்பட்டு விற்பனைக்காக வண்டிகளில் ஏற்றப்படுகிறது.
3. தொழிலாளர்கள் புரியும் ஏனைய வேலைகள்
பசளையை எடுத்துச் செல்லுதல், தொழிற்சாலையில் விறகு வெட்டுதல், லயன்களையும் அதன் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்தல், கூட்டுதல், மலசல கூடங்களைச் சுத்தம் செய்தல் ஆகியவையாகும்.
4. கங்காணியின் வேலை
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு அப்பால், 1 மற்றும் 2 ஆம் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்களின் தொழில்களுடன் தொடர்புடைய அல்லது அவசியமாக உருவாகும் பிற பணிகளையும் தோட்ட முகாமையாளரின் கட்டளையின்படி கண்காணிப்பதே கங்காணியின் முக்கிய பொறுப்பாகும் (மூலம்: 1944 மே 19 ஆம் திகதி, அரசாங்க வாத்தமானி இல. 9272).
ஆனால் இன்று தோட்டத் தொழில்களில் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தோட்டத் தொழிலாளர்களில் 60.58 வீதத்தினர் தோட்டங்களில் நிரந்தரமாக வேலை செய்பவர்களாக இல்லை. 24.95 வீதமானவர்கள் தோட்டத் தொழிலில் நிரந்தரமாக ஈடுபடுபவர்களாகவும், 14.47 வீதமானவர்கள் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களாகவும் காணப்படுகின்றனர் (A. S. Chandrabose: 2023).
தோட்டங்களில் தேயிலைச் செடிகளில் இருந்து கொழுந்து கொய்தலும், அதனை தொழிற்சாலையில் பதனிடுதலுமே பிரதான தொழில்களாக காணப்படுகின்றன. ஆனால், தேயிலைச் செடிகளைப் பராமரிக்கும் பிற பணிகள் பெருமளவில் இன்று கைவிடப்பட்டுள்ளன அல்லது இயன்றவரை தவிர்க்கப்பட்டுள்ளன. இவ்வேலையை விட்டு விலகியவர்களில் ஒரு பகுதியினர் வெளியிடங்களுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். மற்றவர்கள் தோட்ட முகாமைத்துவம் வழங்கிய தற்காலிக தொழில்களில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியிலேயே தோட்டங்களில் தற்காலிக தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இங்கு குறிப்பிடப்படும் தற்காலிக தொழிலாளர்களில் பெரும்பாலோர் முன்பு நீண்டகாலமாக தோட்டங்களில் நிரந்தரத் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்களாக உள்ளனர். இவர்களில் அதிகமானோர் ஆண் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக இருந்த காலத்தில் அனுபவித்து வந்த ‘Estate Labour (Indian) Ordinance’ இன் அனைத்து உரிமைகளிலிருந்தும் பின்னர் விலக்கப்பட்டனர். இவ்வாறு விலக்கப்பட்ட இவர்கள் வேலைவாய்ப்பின்றி பின்தள்ளப்பட்டவர்களாகவும் மாறினர்.
மேலும், மாற்று வருமான வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் தோட்டங்களுக்குள் மிகவும் குறைவாகவே உள்ளன (காணி, வீடு மற்றும் சுயதொழில் மேற்கொள்ளும் உரிமைகள் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால்). இதனால், தாங்கள் வாழ்ந்து வந்த தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் அறியப்படுகிறது.
தோட்ட முகாமைத்துவம் தமது பல்வேறு வகையான பராமரிப்பு வேலைகளுக்காக, தமது தோட்டத்தில் வாழும் தற்காலிக தொழிலாளர்களை மட்டுமன்றி, பிற தோட்டங்களிலிருந்தும் தொழிலாளர்களை வரவழைத்து தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதை அவதானிக்கலாம். அதுமட்டுமன்றி, தற்போது அட்டன், கொட்டகலை, தலவாக்கலை, வட்டவளை போன்ற இடங்களைச் சூழவுள்ள தோட்டங்களில் தற்காலிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வது சாதாரணமாகக் காணப்படுகிறது. கொழுந்து கொய்தலுக்காகவும் இவ்வாறு தொழிலாளர்கள் ஒரு தோட்டத்திலிருந்து மற்றொரு தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதும், பின்னர் மாலை வேளையில் அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு திரும்புவதும் பொதுவான நிகழ்வாக உள்ளது. இவ்வாறு ‘Hired workers’ஐ அழைத்துச் செல்ல தனியார் பேருந்துகளும் லொறி போன்ற கனரக வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. வெளியே சென்று வேலை செய்யும் இத்தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஊதியம் ரூபா 1000 வேலை முடிவில் அன்றே வழங்கப்படுகிறது.
தோட்ட முகாமையாளர்களுக்கு இவ்வாறு தற்காலிக தொழிலாளர்களைப் பயன்படுத்துவது மிகவும் வசதியானதாகவும், தேவையான அளவில் தொழிலாளர்களைத் திரட்டிக்கொள்ள உதவுவதாகவும் உள்ளது. இந்நிலையில், ஒருபுறம் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களும், மறுபுறம் தேவைக்கேற்ப தற்காலிகத் தொழிலாளர்களும் கிடைப்பதால், தோட்ட வேலைகளுக்குத் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
தோட்டங்களில் நிரந்தரமாக வேலை செய்யாத, ஆனால் அதனை வசிப்பிடமாகக் கொண்டு வாழும் தொழிலாளர்களில் 7.98 வீதமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் திருமணம் செய்து கொண்டு இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளைப் பெற்றுள்ள இளம் தாய்மார்களாக உள்ளனர். அதேவேளை, மேலும் 21.95 வீதமானவர்கள் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு நகர்ப்புறங்களுக்கு வேலைக்குச் செல்லுபவர்களில் இளம்வயது பெண்கள் மட்டுமன்றி, 50 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களும் உள்ளனர். இவர்கள் கொழும்பில் உள்ள வீடுகளில் காவல் பணி, தனியார் அலுவலகங்களில் உதவியாளர் பணிகள், பூந்தோட்டப் பராமரிப்பு, சிறு கைத்தொழில் பொருட்களைப் பொதியிடுதல், வியாபாரக் குறியீடுகள் ஒட்டுதல், உணவகங்களில் ரொட்டி தயாரித்தல் மற்றும் சமையல் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஏனையவர்களில் 6.00 வீதமானவர்கள் தாம் வாழும் தோட்டங்களிலேயே சுயதொழில் புரிபவர்களாக உள்ளனர். இவர்களில் கால்நடை வளர்ப்பு, காய்கறிச் செய்கை மேற்கொள்வோர் ஆகியோர் 7.96 வீதமாக உள்ளனர். அதேவேளை, தையல் மற்றும் அலங்கார வேலைகளில் ஈடுபட்டுள்ளோர் 3.32 வீதமாகவும், தோட்டங்களை விட்டு வெளியே சென்று கட்டுமானத் துறையில் பணிபுரிபவர்கள் 6.64 வீதமாகவும் காணப்படுகின்றனர். மேலும், முச்சக்கரவண்டி ஓட்டி வருமானம் பெறுபவர்கள் 10.32 வீதமாக உள்ளனர். இவ்வாறு தோட்டங்களில் சுயதொழில் மேற்கொள்ள சட்டரீதியாக பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், மேற்கண்டபடி 60.58 வீதமானவர்களில் சிலர் தாம் வாழும் தோட்டங்களில் சுயமுயற்சியாளர்களாகவும் தமது உழைப்பின் உரிமையாளர்களாகவும் உருவாகி வருகின்றனர் என்பது ஒரு முன்னேற்றமான நிலையாகக் கருதப்பட வேண்டும்.
தோட்டத்தில் வேலை செய்பவர்களில் பெரும்பாலோர் 18 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருபவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் அதிகமானோர் 40 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் மேலும் ஒரு விளக்கத்தைப் பெற முடிகிறது. அதாவது, தோட்டங்களில் தொழில்புரிபவர்களில் பெரும்பாலோர் வயதானவர்களாக இருப்பது தெளிவாகிறது. இந்நிலையில், தோட்டங்களில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் குறைந்த நிலையில் உள்ளது என்பதும் புலனாகிறது.
மலையக மக்களின் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களில் ஒரு பகுதியினர், இந்த நாட்டிற்கு வருகை தந்த காலத்திலிருந்து இன்றுவரை தமது மூதாதையர்கள் வாழ்ந்த தென்னிந்திய கிராமிய பண்பாட்டின் பல அம்சங்களை தொடர்ந்து பின்பற்றுகின்றனர். இந்த அடுக்கில் வாழ்கின்றவர்களை இரண்டு பிரிவுகளாக அடையாளப்படுத்தலாம். அதில் ஒரு பகுதியினர் மத்திய மலைநாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களாகவும், ஏனையோர் அங்குள்ள கிராமங்கள் மற்றும் சிறிய, பெரிய நகரங்களில் வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இவர்கள் தென்னிந்திய வழக்கிலான மொழிநடையை தமது நாளாந்த தொடர்பாடல்களில் இன்றும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக ‘ஆமா’, ‘வந்துட்டேன்’, ‘போயிட்டேன்’, ‘ஒனக்கு’, ‘இம்புட்டு’, ‘ரொம்ப’, ‘சொன்னியா’, ‘வச்சியா’, ‘கலாய்கிறேன்’, ‘சாதம்’, ‘அம்மாயி’, ‘தொங்க வீடு’ போன்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இதற்கு மேலாக, உறவுமுறை தொடர்பான ‘மாமா’, ‘அத்தான்’, ‘சகல’, ‘சம்பந்தி’, ‘கொழுந்தனார்’, ‘கொழுந்தியா’, ‘அத்தாச்சி’ போன்ற பல சொற்களும் நாளாந்தப் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகின்றன.
இதனுடன், வருடம் முழுவதும் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள பொங்கல், பட்டிப் பொங்கல், சிவராத்திரி, சித்திரை பௌர்ணமி, அமாவாசை, பங்குனி உத்திரம், ஆடி பதினெட்டு, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபம், மார்கழி பஜனை போன்ற திருவிழாக்கள் மலையகத்திலும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் வாழும் இந்தியத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த விழாக்களில் சில, அவர்களின் மூதாதையர்கள் தென்னிந்தியாவில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் கொண்டாடப்பட்டவையாகும். உதாரணமாக ‘தைப்பொங்கல்’ விழாவைக் குறிப்பிடலாம். இவ்விழா, தமிழர்களின் உணவில் முக்கிய இடம்பெறும் அரிசி உற்பத்திக்கு ஆதாரமான சூரியனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது. இதன்போது, விவசாயிகள் தமது நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட புதிய அரிசியை வீட்டு முற்றத்தில் வைத்து புதிய பாத்திரத்தில் பொங்கி, சூரியனுக்கு நிவேதனம் செய்து கொண்டாடுவார்கள். இவ்விழா நெற்செய்கை போன்ற விவசாயச் சூழலோடு தொடர்புடையதாக இருந்தாலும், இடம்பெயர்ந்து முற்றிலும் மாறுபட்ட தொழில் சூழலில்—தேயிலை மற்றும் ரப்பர் பெருந்தோட்டங்களில்—வேலை செய்யும் மலையகத் தமிழர்கள், தமது மூதாதையர்கள் தென்னிந்தியாவில் கொண்டாடிய அதே மரபில் இதனை இன்றுவரை பெருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், இம்மக்கள் மத்தியில் பிரபல்யமானதும் தென்னிந்திய மரபினை தொடர்ந்தும் பின்பற்றுகின்ற மற்றுமொரு விழாவாக மாரியம்மன் திருவிழா நடைபெறுகிறது. தென்னிந்தியத் தமிழர்கள் பல காரணங்களுக்காக மாரியம்மன் வழிபாட்டை மேற்கொள்கின்றனர். அவற்றில் முக்கியமானவை விவசாய வளர்ச்சிக்கு தேவையான மழையைப் பெறுதல், பெண்மையைப் போற்றும் தாய்வழிபாட்டின் அடையாளமாகக் கொண்டாடுதல், அம்மை போன்ற தொற்றுநோய்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டுதல் ஆகியவையாகும். இதனால், தோட்டங்களில் வாழும் மக்கள் மாரியம்மன் வழிபாட்டை தமது பிரதான தெய்வ வழிபாடாகக் கொண்டாடுகின்றனர். குறிப்பாக, தோட்டங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பல அண்மைக்காலங்களில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது. தோட்டங்களில் நடைபெறும் அம்மன் திருவிழாக்களை நடத்துவதற்கு தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தின் கீழும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ‘சாமி கும்பிடு’ எனப்படும் நடைமுறையின் கீழ் தோட்ட நிர்வாகமும் அம்மன் விழாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் காணப்படுகிறது.
இதனைத் தவிர, காமன் கூத்து பல தோட்டங்களில் நடைபெறுகிறது. இருப்பினும், அர்ச்சுனன் தபசு மற்றும் பொன்னர் சங்கர் போன்ற கூத்துகள் எல்லா தோட்டங்களிலும் நடைபெறுகின்றன என்று கூற முடியாது.
இது போன்று சிறுதெய்வங்களை வணங்கும் மரபும் தொடர்ந்து காணப்படுகிறது. இவர்கள் வணங்கும் சிறுதெய்வங்களில் மதுரை வீரன், மாடசாமி, ரோதமுனி, காட்டு மாரியம்மன், சிந்தாகட்டி போன்ற தெய்வங்கள் பிரபலமானவையாக உள்ளன. தென்னிந்தியத் கிராமங்களில் காவல் தெய்வங்களாகவும் குலதெய்வங்களாகவும் வணங்கப்பட்ட இச்சிறுதெய்வ வழிபாடுகள் இன்றளவும் இவர்களின் வாழ்வியலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
நாட்டில் ஏற்பட்ட யுத்தநிலை மற்றும் சிலர் தாயகம் திரும்பியமை போன்ற காரணங்களால் சில காலம் செயலிழந்து காணப்பட்ட சிறுதெய்வ வழிபாடுகள், கடந்த சில ஆண்டுகளில் மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன. உதாரணமாக, அட்டன் குடாஓயா தோட்டத்தில் 2024 மார்ச் மாதத்தில் புனரமைக்கப்பட்ட மதுரை வீரன் கோவிலில் நடைபெற்ற பூஜை நிகழ்வுகளை குறிப்பிடலாம்.
மேலும், பெருந்தோட்டங்களில் வாழும் பெரும்பாலானவர்கள் திருமணம், கோவில் திருவிழாக்கள், பூஜை வழிபாடுகள் போன்ற சந்தர்ப்பங்களில் தென்னிந்தியத் தமிழர்களின் மரபுகளை இன்றுவரை பின்பற்றி வருகின்றனர். அணியும் ஆடைகள், வண்ணப் பூச்சுகள் மட்டுமன்றி, இவ்வாறான நிகழ்வுகளில் வாழைமரம், மாவிலை போன்றவற்றைப் பயன்படுத்தி அலங்காரத் தோரணங்கள் அமைத்தல், தலையில் பூமாலை சூட்டிக் கொள்வது, திருமணங்களில் மேளம் அடித்து நாதஸ்வரம் இசைப்பது போன்றவை தென்னிந்திய மரபின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றன.
இதற்கு மேலாக, வாசலில் கோலம் இடுதல், மஞ்சள் நீர் தெளித்தல், ஆலத்தி எடுத்தல், தப்பு, கிளாரினெட் போன்ற வாத்தியங்களின் இசையுடன் மாரியம்மன் தேர்த்திருவிழாவை நடத்துதல் போன்றவையும் தோட்டங்களில் காணப்படுகின்றன. இவ்வனைத்தும் இவர்கள் தென்னிந்திய மரபுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் இந்தியத் தமிழர்களாக வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கான சான்றுகளாகும்.
மலையகத்தில் வாழும் தமிழர்கள் காய்கறிகளை தமிழ்மொழி பேசும் கடைகளில் வாங்கினாலும், அக்காய்கறிகளுக்கான சிங்களப் பெயர்களைப் பயன்படுத்தியே கொள்வனவு செய்வதும் சாதாரணமாகக் காணப்படுகிறது. உதாரணமாக, கத்தரிக்காய் (பட்டு), வெண்டைக்காய் (பண்டக்கா), வல்லாரை (கொடுகொல), முள்ளங்கி (ராபு), பாகற்காய் (கரவில), கருவேப்பிலை (கரபிஞ்சா), ரொட்டி மா (பாண் பிடி), பயறு (முங்கெட்ட), பீர்க்கங்காய் (எலபட்டு), சக்கரை வள்ளிக்கிழங்கு (பத்தோல), நெத்தலி கருவாடு (ஆல்மெஸ்சோ) போன்ற சிங்களப் பெயர்களைப் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.
இவையாவற்றிற்கும் மேலாக, மலையகம் முழுவதும் நடைபெறும் பெரும்பாலான பொதுநிகழ்வுகள் மற்றும் விருந்துபசாரங்களின் போது பரிமாறப்படும் உணவு வகைகளில் கணிசமான மாற்றங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, இந்நிகழ்வுகளில் வழங்கப்படும் உணவுகளில் பெரும்பாலானவை சிங்கள மக்களின் உணவு மரபுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன. முன்னர், இவர்கள் திருமணம் போன்ற விருந்துபசாரங்களில் வாழை இலையில் சோறு, சாம்பார், வடை, கூட்டு, பொரியல், பாயாசம், தயிர், ரசம், பப்படம் போன்ற பாரம்பரிய உணவுகளைப் பரிமாறி வந்தனர். ஆனால், தற்போது சிங்கள உணவுப் பழக்கவழக்கங்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன்படி, கட்டியான பருப்புக் கறி, பிலாக்காய் கறி, ‘மோஜோ’ எனப்படும் கத்தரிக்காய் பொரியல், நறுக்கிய கத்தரிக்காயை பொரித்து அதில் சீனி சேர்த்து வெள்ளைக் கடலையுடன் கலந்து தயாரிக்கும் பிரட்டல், நொருக்கிய காய்ந்த மிளகாயுடன் செய்யப்பட்ட கிழங்குப் பிரட்டல், கட்லட், தேங்காய் சம்பல், சலட் போன்ற உணவுகள் விருந்துபசாரங்களில் பொதுவாக வழங்கப்படுகின்றன. மேலும், முன்பு திருமண விருந்துகளில் முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது காய்கறி உணவுகளுடன் சேர்த்து மாமிச உணவுகளையும் பரிமாறுவது வழக்கமாகியுள்ளது. இது மலையகத் தமிழர்களின் உணவுப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும், கலாசார பரிமாற்றத்தின் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
இதுபோன்று, சில நிறுவனங்களின் மற்றும் ஆவணங்களின் பெயர்கள் தமிழில் இருந்தாலும், அவற்றை சிங்களப் பெயர்களால் குறிப்பிடுவதும் வழக்கமாகிவிட்டது. உதாரணமாக, நீதிமன்றம் (உசாவி), தீர்ப்பு (தீந்துவ), பிறப்பு சான்றிதழ் (உபன் சாத்திக), மரண சான்றிதழ் (மரண சாத்திக), போராட்டம் (உத்கோசன), காணி உரிமைப் பத்திரம் (ஒப்பு), ஊர்வலம் (பெலபாலி) போன்ற சொற்கள் சிங்கள வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், விருந்துபசாரங்களின் போதும், வீட்டிலும், முச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் போதும் இடையிடையே சிங்களப் பாடல்களைக் கேட்டு மகிழ்வதும் மலையகத்தில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு வழக்கமாக உள்ளது.
நாம் மேலே அவதானித்தது போல், ஒருபுறம் தமது மூதாதையர்கள் கடைப்பிடித்த தென்னிந்தியப் பண்பாடுகளுடன் பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வரும் இந்தியத் தமிழர்களிடையே, மறுபுறம் இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்களின் பழக்கவழக்கங்கள் படிப்படியாக ஊடுருவி வருகின்றன. குறிப்பாக மலையகப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழும் இந்தியத் தமிழர்கள், அங்குள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் மட்டுமன்றி அரச அலுவலகங்களில் பணிபுரியும் நபர்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. குறிப்பாக பொலிஸ் நிலையங்கள், கிராம அதிகாரிகள் போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பங்களில் சிங்கள மொழியில் பேச வேண்டிய அவசியம் உருவாகிறது. இதற்குக் காரணமாக, சிங்கள மொழி அரச நிர்வாக மொழியாக மேலோங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், அரச ஆவணங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது, அதிகாரிகள் புரிந்துகொள்ளக்கூடிய சிங்கள மொழியைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ளுதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இவ்வாறான சூழல், அவர்களின் நாளாந்த வாழ்க்கையிலும் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
மேலும், இலங்கையின் வடக்கு – கிழக்கு மாவட்டங்களில் குடியேறி, அங்கு வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுடன் ஒருங்கிணைந்து வாழும் இந்தியத் தமிழர்களை மற்றுமொரு பண்பாட்டு அடுக்காக அடையாளப்படுத்தலாம். இலங்கையின் வடக்கு – கிழக்கில் வாழும் இலங்கைத் தமிழர்கள் உள்ள பகுதிகளுக்கு மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்தியத் தமிழர்களின் வருகை அண்மைக்காலத்தில் இடம்பெற்ற ஒன்றாகும். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் பெரும் பகுதியினர் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். குறிப்பாக, சிங்களக் கிராமங்களை அண்டியுள்ள தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களே இவ்வாறான இடப்பெயர்வுகளில் அதிகளவில் ஈடுபட்டனர்.
மலையகப் பெருந்தோட்டங்களில் தொழில்புரிய வந்த இந்தியத் தமிழர்கள் வடக்கு – கிழக்குப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து செல்லக் காரணமாக தென்பகுதி மாவட்டங்களில் அவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் முக்கிய பங்காற்றின. இதனுடன், 1972–75 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் விளைவாக வேலை இழந்தவர்களும் தமது வாழ்வாதாரத்தைத் தேடி இடம்பெயர்ந்தனர். மேலும், வடக்கு – கிழக்கில் செறிவாக வாழும் இலங்கைத் தமிழர்களிடையே வாழ்வது பாதுகாப்பானது என்ற உணர்வும் இவர்களின் குடிப்பெயர்வுக்குக் காரணமாக அமைந்தது.
மேற்கூறப்பட்ட காரணங்களுக்கு மேலாக, வடக்கு – கிழக்குப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட கவர்ச்சிகரமான குடியேற்றத் திட்டங்களும் இந்த இடப்பெயர்வை ஊக்குவித்தன. குறிப்பாக, வடக்கில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்ட விவசாய நடவடிக்கைகளின் போது அதிகளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். புதிதாகக் குடியேறிய மலையக மக்களுக்கு நிறுவன ரீதியான பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டன. விவசாயத்திற்கும் வீடமைப்பிற்குமான நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. தோட்டங்களில் காணியுரிமையோ அல்லது வீடுகளின் உரிமையோ பெற முடியாத நிலையில், மேலும் இன முரண்பாடுகள் காரணமாக அச்சமுற்ற சூழலில் வாழ்ந்த மக்கள் வடக்கு – கிழக்கில் குடியேறுவதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதினர்.
இது ஒருபுறம் இருக்க, இலங்கை அரசாங்கம் பெருந்தோட்டக் கட்டமைப்பில் கொண்டு வந்த மாற்றங்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக 1972–1975 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்ட பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டன. அதன் பின்னர், அரசுடமையாக்கப்பட்ட பெருந்தோட்ட நிலங்களில் சுமார் 40 வீதம் சிறுதோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தேயிலைச் சிற்றுடைமையாளர்கள் உருவாக்கப்பட்ட போதிலும், பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வந்த தொழிலாளர்களுக்கு அத்தகைய நற்பலன்கள் வழங்கப்படவில்லை. மேலும், அரசுடமையாக்கப்பட்ட தோட்டங்களில் ஆரம்ப கட்டங்களில் ஆயிரக்கணக்கான கிராமிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அந்த வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டனர்.
பின்னர் 1992 ஆம் ஆண்டில் அரசுடமையாக்கப்பட்ட தோட்டங்கள் நீண்டகால குத்தகைக்கு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதன் பின்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆண் தொழிலாளர்கள் பலர் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படாமல் இருந்தனர்; உற்பத்தித் திறன் குறைக்கப்பட்டது. நிறுவனங்கள் இலாப நோக்கில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக தொழிலாளர்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த மாற்றங்கள், அதுவரை பெருந்தோட்டத் தொழிற் கட்டமைப்பில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வாழ்ந்து வந்த மக்களிடம் வேலையின்மை, போதிய வருமானமின்மை, உற்பத்தித் திறனில் வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளை உருவாக்கின. இதன் விளைவாக, பல தொழிலாளர்கள் தமது பாரம்பரியத் தொழில்களிலிருந்து விலகி, தோட்டங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலைகள், அவர்களின் வாழ்வியலில் முக்கியமான மாற்றங்களையும் புதிய சமூக-பொருளாதார சூழலையும் உருவாக்கக் காரணமாகின.
இத்தகைய சூழல்களில் இவர்களின் இடப்பெயர்விற்கு இலங்கையின் வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற தமிழ் மக்களின் போராட்ட நிலைமைகளும் கணிசமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தின. வேலை தேடி அல்லது மாற்று வருமானத்தைக் கண்டுபிடிக்க வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டபோதிலும், தமிழர்கள் என்பதற்காக இவர்களைச் சந்தேகத்துடன் அணுகிய பெரும்பான்மை சமூகத்தின் வெறுப்புணர்வு, இவர்களின் நாளாந்த வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கியது.
1978, 1983, 1985 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களின் போது மலையக மக்கள் பெரிதும் துன்புறுத்தலுக்குள்ளாகினர். இந்த நிகழ்வுகள், பெரும்பான்மை மக்களிடையே தமது உயிரையும் சொத்துகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அச்சத்துடன் வாழும் நிலைக்கு இம்மக்களைத் தள்ளின. இதனால், பெரும்பான்மைச் சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் தமது நாளாந்த வேலைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது. சாதாரண தொழிற்சங்கப் போராட்டங்களைக் கூட முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
மேற்குறிப்பிட்ட சூழலுக்கு மாறாக, பெருந்தோட்டங்களுடன் குறைந்த அல்லது தொடர்பற்ற நிலையில், தென்னிந்தியப் பண்பாட்டைத் தொடர்ந்தபடி பெருநகரங்களில் வாழும் இந்தியத் தமிழர்களையும் மற்றொரு சமூக அடுக்காகக் காணலாம். இவர்களில் ஒரு பகுதியினர் இலங்கையின் முக்கியமான வர்த்தகர்களாக விளங்குகின்றனர்; மற்றவர்கள் நகரங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வாழ்கின்றனர். குறிப்பாக, கொழும்பு நகரில் வியாபாரம் மற்றும் தொழில்களை நடத்திவரும் இவர்கள், மலையகத்திலிருந்து வேலை தேடி வரும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நிலையில் உள்ளனர். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் தென்னிந்தியாவில் இருந்து வணிக நோக்கத்துடனே இலங்கைக்கு வந்தவர்களாகவும் உள்ளனர்.
இவ்வாறு கொழும்பு மட்டுமன்றி மலையகப் பகுதிகளிலும் பாரம்பரியமாக வணிகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியத் தமிழர்கள், தமக்குச் சமமாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் போரா, சிந்தி, மேமன், மலாயர், சீனர், இந்தியர், பாகிஸ்தானியர் போன்ற பல்வேறு சமூகங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றனர். மேலும், முன்னணி அரசியல் பிரமுகர்களுடனும் நெருங்கிய உறவை வைத்துள்ளனர். இத்தகைய உறவுகள் இவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உதவியாக உள்ளன.
இப்போது கொழும்பு மற்றும் பிற நகரங்களில் வியாபாரம் மற்றும் தொழில்களை நடத்திவருபவர்களில் பலர் பாரம்பரியமாக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் அல்லர். அண்மைக் காலங்களில் மலையகத் தோட்டப்புறங்களில் இருந்து தொழில் தேடி நகரங்களை நோக்கி வந்தவர்களான இவர்கள் சிறு வியாபாரங்களிலிருந்து தொடங்கி, பெரிய முதலீடுகளைக் கொண்ட தொழில் அதிபர்களாக வளர்ந்துள்ளனர். ஏற்றுமதி–இறக்குமதித் துறைகளிலும், மற்ற வர்த்தகங்களிலும், இவர்கள் பாரம்பரியமாக இத்துறையில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு இணையான வர்த்தகர்களாக உயர்ந்துள்ளனர். எனினும், இவ்வாறு மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு வந்து வளர்ந்துள்ள புதிய வர்த்தகர்களுக்கும், நகரங்களில் நீண்டகாலமாக பெரிய அளவிலான வர்த்தகங்களில் ஈடுபட்டு வந்த இந்தியத் தமிழர்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் அதிகம் காணப்படுவதில்லை.
பாரம்பரியமாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தென்னிந்திய வேரைக் கொண்ட வர்த்தகர்கள், தமது நலன்கள், உறவுகள் மற்றும் வணிகத் தொடர்புகளை பெரும்பாலும் தமது மூதாதையர்கள் வாழ்ந்த தென்னிந்தியாவுடனே பேணி வருகின்றனர். வர்த்தகம் மற்றும் இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ‘இலங்கை இந்திய சமுதாயப் பேரவை’ மற்றும் ‘இந்திய வம்சாவளியினருக்கான உலக நிறுவனம்’ போன்றவற்றின் செயற்பாடுகளை இதற்கான உதாரணங்களாகக் கூறமுடியும். இவ்வாறான அமைப்புகளில், அண்மைக் காலங்களில் மலையகத்திலிருந்து நகரங்களுக்கு வந்து வளர்ந்த வர்த்தகர்களில் மிகச் சிலரே உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கொழும்பு போன்ற நகரங்களில் வாழ்கின்ற இவர்கள் தங்களுடைய இன அடையாளத்தை பொதுவாக ‘இந்திய வம்சாவளியினர்’ என்றவாறே குறிப்பிடுகின்றனர். கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இவர்களின் தனிப்பட்ட எண்ணிக்கை தெளிவாகப் பதிவு செய்யப்படாதிருந்தாலும், கொழும்பு போன்ற நகரங்களில் வசிப்பவர்களின் தொகையில் தமிழர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதைக் காண முடிகிறது. 2012 மக்கள் தொகைக் கணிப்பீட்டின்படி, கொழும்பில் சிங்களவர்கள் 206,282 (36.7%), தமிழர்கள் 176,972 (31.5%), இஸ்லாமியர்கள் 165,457 (29.5%) எனப் பதிவாகியுள்ள நிலையில், சிங்களவர்களுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது பெரும்பான்மை மக்களாக தமிழர்களே காணப்படுகின்றனர். இவர்களில் கணிசமான பகுதியை இந்தியத் தமிழர்கள் நிரப்புகின்றனர்.
கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள புறநகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவளியினரின் கலாசாரம் தென்னிந்தியத் தமிழ்க் கலாசாரத்தோடு ஆழமாக இணைந்துள்ளது. கொழும்பில் நடைபெறும் பல்வேறு கலாசார விழாக்களின் போது தென்னிந்தியக் கலைஞர்கள், பேச்சாளர்கள், இந்து மதப் பீடாதிபதிகள் ஆகியோரை அழைத்து விழாக்கள் நடத்தப்படுவது இவர்களின் தென்னிந்தியத் தொடர்புகள் இன்னும் வலுவாகத் தொடர்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.
தோட்டங்களில் இருந்து 1980களில் கொழும்பிற்கு வந்து வர்த்தகத்தில் நிலைபெற்று முன்னணியில் உள்ள பலர், தனிப்பட்ட முறையிலும் ஒன்றிணைந்தும் மலையகப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு செயற்படும் பல அமைப்புகளில், திரு. மகேஸ்வரன் தலைமையில் செயற்படும் ‘மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்’ கடந்த 25 ஆண்டுகளாக கல்வி தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு கொழும்பு செட்டியார் தெருவை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த மன்றம், தமது உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் மாதாந்த நிதிகளைச் சேகரித்து, மலையகப் பாடசாலைகளுக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்குவதோடு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஆதரவு வழங்குகிறது.
இதுபோன்று கல்வி சேவைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளாக பேராசிரியர் தை. தனராஜ் தலைமையில் செயல்படும் ‘உதவும் கரங்கள்’ மற்றும் தொழிலதிபர் எஸ். பத்மராஜ் தலைமையில் இயங்கும் ‘சுப்பையா செல்லம் ஞாபகார்த்த நிதியம்’ ஆகியவற்றையும் குறிப்பிடலாம். இவ்வமைப்புகளில், ‘மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்’ இன்று மலையகத்தில் வலுவாகக் கட்டியெழுப்பப்பட்ட தன்னார்வ அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இவ்வமைப்பின் நோக்கம், இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்கள் கல்வித்துறையில் முன்னேற்றமடைந்து, தமது பாரம்பரியக் கலாசாரத்தைத் தக்கவைத்துக்கொண்டு சிறப்பான சமூகமாக முன்னேறுவதற்கு ஆதரவாக இருப்பதாகும்.
முடிவுரை
பெருந்தோட்டங்களில் குடியேறிய இந்தியத் தமிழர்கள் மிகவும் காலதாமதமாகவே தேசியக் கல்வி அமைப்பில் இணைக்கப்பட்டனர். 1990கள் வரை இவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரும்பாலும் ஆரம்பக் கல்வி மட்டத்திலேயே நிலைத்திருந்தன. பின்னர், அரசாங்கம் பொறுப்பேற்று மேற்கொண்ட நடவடிக்கைகளும், வெளிநாட்டு உதவிகளும் இணைந்து பாடசாலைக் கல்வியில் ஏற்பட்ட அபிவிருத்தி மலையக மக்களிடையே கணிசமான விழிப்புணர்வை உருவாக்கியது. இருப்பினும், இந்த நாட்டின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது, தேசிய மட்டத்தில் முன்னேறுவதற்காக இவர்களுக்குக் கூடுதல் உழைப்பைச் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பது தெளிவாகும்.
தொழில்களைப் பொறுத்தவரையில், இன்று பெருமளவானோர் பெருந்தோட்டங்களில் சுயதொழில்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், இவ்வாறு சுயதொழில் மேற்கொண்டாலும், ஏனைய மாவட்டங்களில் உள்ள மக்களுக்குக் கிடைக்கும் அரசாங்கச் சலுகைகள் இவர்களுக்குச் சமமாகக் கிடைப்பதில்லை.
பண்பாட்டு நிலையைப் பொறுத்தவரையில், சிங்கள மக்களுடன் வாழும் இவர்கள் விருப்பத்தோடு அல்லது சூழ்நிலைக்கேற்ப சிங்களப் பண்பாட்டை ஏற்றுக்கொள்வதையும் காண முடிகிறது. அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குக் குடியேறியவர்கள் அங்குள்ள உள்ளூர்ச் சமூகங்களுடன் இணைந்து வாழும் சூழலில், அவர்களது வாழ்க்கை முறைகளில் மாற்றங்களையும் வெளிப்படுத்துகின்றனர்.
இவ்வாறு பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றங்களுக்கு உட்பட்டவர்களாக மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் — அல்லது மலையகத் தமிழர்கள் — இன்று அடையாளப்படுத்தப்படுகின்றனர். இவர்களிடையே நிகழ்ந்துள்ள இந்த சமூக மாற்றங்களை விரிவாக ஆராய்வதற்கான அடித்தளமாக இக்கட்டுரை அமைகிறது.
உசாத்துணை மூலங்கள்
Chandrabose, A. S. (2023). Employment prospects in the tea plantation sector: An analysis of selected estates in Nuwara Eliya District in Sri Lanka. In Malayaham Beyond 200. R. Sivalingam Memorial Committee, Colombo 6.
Chandrabose, A. S. (2015). Hired labour in the tea smallholding in Kotapola in the District of Matara in Sri Lanka. Paper presented at the Annual Academic Sessions, Open University of Sri Lanka, 19–20 November 2015.
Chandrabose, A. S., & Ramesh, R. (Eds.). (2018). Tea Plantation Community in Sri Lanka (1867–2017): 150 Years (in Tamil). Express Newspapers (Ceylon) Ltd.
Department of Census and Statistics. (2022). Sri Lanka Labour Force Survey: Annual Report 2022. Ministry of Finance, Colombo.
Ramadas, P. (2017). பெருந்தோட்டப்புற பாடசாலைகளுக்கென ஆசிரியர் ஆட்சேர்ப்பு: ஒரு வரலாற்று நோக்கு. In A. S. Chandrabose & R. Ramesh (Eds.), Tea Plantation Community in Sri Lanka: 150 Years (1867–2017): An analysis of socio-economic, political and cultural mobility. Express Newspapers (Ceylon) Ltd., Colombo.
Rasarathinam, T. V. (1982). Plantation Workers Manual. CWC/AFFLI.
Shanmugaratnam, N. (1997). Privatization of tea plantations: The challenges of reforming production relations in Sri Lanka—An institutional historical perspective. SSA, Colombo.
Sivaram, B. (Ed.). (2000). Plantation management in the new millennium. NIPM.
Vijayananthan, M. R. (2023). மலையகக் கல்வி அபிவிருத்தியில் சீடா செயற்றிட்டத்தின் பங்களிப்பு. குமரன் அச்சகம், கொழும்பு – 6.



