அறிமுகம்
கிராமிய நிகழ்த்துகைக் கலைகள் மனித குலத்தின் ஆன்மிக, சமூக, அழகியல் விழுமியங்களின் வரலாற்று முக்கியத்துவங்களாகத் திகழ்கின்றன. வழிபாட்டோடும் சமயச் சடங்குகளோடும் பின்னிப் பிணைந்துள்ள மரபுவழிக் கலை வடிவங்கள் வெறும் அழகியல் காட்சிப் பொருளாக மட்டுமன்றி, சமூகத்தின் கூட்டு நனவிலி மனநிலையைப் பிரதிபலிக்கும் பண்பாட்டுக் குறியீடாகவும் இயங்குகின்றன. “சடங்கோடும் சமயத்தோடும் எந்தக் கலை இணைந்து வாழ்கிறதோ அக்கலைக்கு அழிவில்லை” என்ற மானிடவியல் கூற்றுக்கிணங்க, தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காலங்காலமாகப் பேணப்பட்டு வரும் சடங்குசார் கூத்து மரபுகளில் அண்ணன்மார் சாமி எனப்படும் ‘பொன்னர் சங்கர்’ வரலாற்று ஆற்றுகை முதன்மையான இடத்தைப் பெறுகிறது.
பதினொன்றாம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளின் இடைக்காலக் கொங்கு நாட்டின் அரசியல், பொருளியல், சாதிய முரண்கள், குல அதிகாரப் போட்டிகளைப் பின்னணியாகக் கொண்ட இவ்வரலாறு, தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியில் வாய்மொழி இலக்கியமாகவும் உடுக்கையடிப் பாடலாகவும் படுகளச் சடங்காகவும் செழித்து வளர்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக இலங்கையின் மத்திய மலைநாட்டுத் தேயிலைத் தோட்டங்களுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், தங்களின் உழைப்புச் சுமையையும் வாழ்வியல் ஏக்கங்களையும் கடந்து தங்களின் அடையாளத்தைப் பேணிக் காப்பதற்காக இக்கலை மரபுகளையும் தம்முடன் எடுத்துச் சென்றனர்.
இலங்கையின் மலையகச் சூழலில் பொன்னர் சங்கர் வரலாற்று மரபானது இரண்டு முதன்மை வழிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது:
அ. சடங்கு நிலைப்பட்ட உடுக்கையடிக் கதைப் பாடல் மரபு
ஆ. கூத்து ஆற்றுகை சார்ந்த பொன்னர் சங்கர் கூத்து மரபு
மலையகத் தோட்டப் புறங்களில் நிலவிய இறுக்கமான லயக் குடியிருப்புச் சூழல், தொழிற்சாலைக் கட்டுப்பாடுகள், பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றின் மத்தியிலும், பொன்னர் சங்கர் வரலாறு ஒரு புனித வழிபாட்டு மரபாகத் தகவமைத்துக் கொண்டது. இக்கட்டுரை, பொன்னர் சங்கர் கதையின் வரலாற்றுத் தோற்றம், தமிழகப் பின்னணி, இலங்கையிலும் குறிப்பாக மலையகப் பெருந்தோட்டப் பரப்பிலும் இது வேரூன்றிய வழிபாட்டுப் பரிமாணங்கள், உடுக்கையடிக் கதை சொல்லலின் சடங்கியல் தன்மை, ஆற்றுகையின் உச்சமான படுகளச் சடங்கு, கூத்தமைப்பின் காட்சி மொழி, இசை, ஒப்பனை, வழிபாட்டுப் பண்பாட்டு உட்கூறுகளை விரிவாகவும் முழுமையாகவும் ஆராய்கிறது.
தமிழகத்தில் பொன்னர் சங்கர் வரலாறும் உருவாக்கமும்
பொன்னர் சங்கர் காவியம் தமிழகத்தின் கொங்கு மண்டல வரலாற்றோடும் சமூக அமைப்போடும் பிரிக்க முடியாதவாறு பிணைந்துள்ளது. சோழப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலத்திலும் குறுநில மன்னர்கள் எழுச்சி பெற்ற காலத்திலும், கொங்கு நாட்டின் காவிரியாற்றங்கரைப் பகுதிகளில் நிலவுடைமை ஆதிக்கத்துக்கான போட்டிகள் நிலவின. வேட்டுவ சமூகத்தினருக்கும் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினருக்கும் இடையே எல்லைப் போர்கள் நிகழ்ந்தன. தாய்வழிச் சொத்துரிமை தொடர்பாகத் தந்தைவழிப் பங்காளிகளுக்கு இடையே குடும்பச் சதிகளும் நடந்தன. இவையே இக்கதையின் வரலாற்றுத் தளமாகும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு.
இக்காவியத்தின் மூல மையம் ‘அண்ணன்மார் சாமி கதை’ என்ற பெயரில் வாய்மொழி இலக்கியமாக, உடுக்கையடிப் பாடல்களாகக் கொங்குப் பகுதி முழுவதும் பாடப்பட்டு வருகிறது. இது பெரியண்ணன் என்ற பொன்னரும், சின்னண்ணன் என்ற சங்கரும் இரட்டையர்களாக அவதரித்து, தங்களின் குலதெய்வமான பெரியகாண்டியம்மனின் அருளாலும், தங்கை நல்லதங்காள் மற்றும் தங்களின் தளபதிகளான சாம்புவன், அத்தாப்பிள்ளை, வீரமலை ஆகியோரின் துணையோடும் வாழ்ந்து மறைந்த வரலாறாகும்.

பொன்னர் – சங்கர் கதையின் பாத்திரங்களின் உறவுமுறைகள்
இது தொடர்பில் இந்தியாவிலும் இலங்கையிலும் பல்வேறுபட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன, நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆய்வாளர்களான பேராசிரியர் வானமாமலை, பேராசிரியர் பிருந்தா பெக், கலாநிதி சண்முகசுந்தரம், பேராசிரியர் கார்த்திகேயன் போன்றோர் தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியில் உள்ள வழிபாடுகள் பற்றி விரிவான ஆய்வுகளைத் தந்துள்ளனர்.
தமிழகத்தில் இக்கதையின் உருவாக்கத்தை மூன்று முதன்மை அடுக்குகளாக அடையாளம் காணலாம். முதலாவது – வரலாற்று அடுக்கு, காடுகளைத் திருத்தி நாடாக்கிய வேளாண் குடிகளுக்கும், வேட்டையாடி வாழ்ந்த பூர்வகுடிகளுக்கும் இடையே நில உரிமை, நீர் உரிமை தொடர்பாக ஏற்பட்ட மோதல்கள். இரண்டாவது – தொன்மவியல் அடுக்கு, பொன்னிவள நாட்டின் வீழ்ச்சி, மாயவரின் (விஷ்ணு) அவதாரத் திட்டம், சோழ மன்னனின் தலையீடு, சிவனும் பார்வதியும் தாமரை நாச்சிக்குக் குழந்தை வரம் அருளுதல், பூமாதேவி குழந்தைகளை மண்ணிலிருந்து எடுத்து வளர்த்தல் போன்ற ஆன்மிக மீயியற்கைக் (Supernatural) கதையாடல்கள். மூன்றாவது – சடங்கியல் அடுக்கு, படுகளத்தில் வீரர்கள் மாண்டு போவதும், தங்காள் தவம் புரிந்து மாய சக்தியால் உடன்பிறப்புகளை உயிர்ப்பிப்பதும், மீண்டும் மானுட உடலுடன் வாழ மறுத்து அண்ணன்மார் சோதியோடு கலப்பதும், தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுவதும்.
தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறைக்கு அருகிலுள்ள வீரப்பூர், அரசூர், வையப்பமலை போன்ற புனிதத் தலங்கள் இக்கதையின் சடங்கியல் மையங்களாக விளங்குகின்றன. வீரப்பூரில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் ‘அண்ணன்மார் சாமி படுகளத் திருவிழா’ இருபத்தாறு முதல் இருபத்தேழு நாட்கள் வரை மிக விரிவான முறையில் நடத்தப்படுகிறது. அங்குள்ள படுகள மைதானம், சப்தகன்னிமார் ஆலயம், தபசுக் காடு, காவிரி ஆற்றுப்படுகை ஆகிய புவியியல் களங்கள் கதையின் நேரடிச் சான்றுகளாகக் கருதப்படுகின்றன. மக்கள் அவற்றை வழிபாட்டுத்தலங்களாகக் கொண்டு வழிபடுகின்றனர்.

வீரப்பூர் படுகளத் திருவிழாவில் ஆய்வாளரால் எடுக்கப்பட்ட புகைப்படம்
இலங்கையில் அண்ணன்மார் வழிபாடுகள்
தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் அண்ணன்மார் வழிபாடு இலங்கையிலும் உள்ளது. மலையகத்துக்கு அண்ணன்மார் சுவாமி வழிபாடு வருவதற்கு முன்பே வட இலங்கை முழுவதும் அண்ணன்மார் சுவாமி கோயில்கள் எழுந்துவிட்டன. ஆனால், அக்கோயில்களில் சடங்கு நிலைப்பட்ட வழிபாட்டில் கூத்தம்சம் இல்லை என்றே சொல்ல வேண்டும். அண்ணன்மார் சுவாமி கதையை அம்மானைப் பாடல்களாக உடுக்கடித்துப் பாடுவதும், பக்தர்கள் உருக்கொண்டாடுவதும் வழக்கமாகும். வட இலங்கைப் பகுதிகளில் (யாழ்ப்பாணம், வன்னி மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு) மலையகத்திற்கு வழிபாடு வருவதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்னரே அண்ணன்மார் சுவாமி ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக நிறுவப்பட்டிருந்தன.
வட இலங்கையில் அண்ணன்மார் வழிபாடு பெருமளவில் கிராமியச் சிறுதெய்வக் கோயில்களோடும் காவல் தெய்வ மரபுகளோடும் இணைந்ததாகவே காணப்படுகிறது. எனினும், வடபகுதி ஆலயங்களில் கூத்தாக நிகழ்த்தப்படும் ஆற்றுகைப் பண்பைக் காண முடியாது; வழிபாடுகளும், பக்தர்கள் மீது தெய்வங்கள் உருக்கொண்டு ஆடும் சடங்கு நிலைப்பட்ட வழிபாடே அங்கு முதன்மை பெற்றது. அண்ணன்மார் காவியத்தின் துயரமும் வீரமும் வாய்மொழிப் பாடல்களாக வடபகுதிச் சடங்குகளில் அன்னை செல்லாண்டி, பெரியகாண்டி, அண்ணன்மாரைப் போற்றிப் பாடும் பதிகங்களாக நிலைநிறுத்தப்பட்டன.
மலையகத்தில் அண்ணன்மார் வழிபாடுகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் இலங்கையின் மத்திய மலைநாட்டுத் தேயிலைத் தோட்டங்களை அமைப்பதற்காகக் கொங்கு மண்டலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை போன்ற பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட தொழிலாளர்கள், தாங்கள் சுமந்து வந்த ஆன்மிகக் காவலர்களாக அண்ணன்மார் சாமியைக் கண்டனர். காடுகளை அழித்துப் புதிய தோட்டங்களை உருவாக்கும் ஆபத்தான பணியில் பாம்புகள், சிறுத்தைகள், யானைகள் போன்ற வன விலங்குகளின் அச்சுறுத்தல்களையும், கொலரா, மலேரியா போன்ற கொடிய நோய்களையும் எதிர்கொண்ட உழைக்கும் மக்கள், படுகளத்தில் துணிந்து நின்று வென்ற அண்ணன்மாரைத் தங்களின் பாதுகாப்புத் தெய்வங்களாக வரித்துக்கொண்டனர். மலையகச் சூழலில் அண்ணன்மார் வழிபாடு தனித்தன்மையான சில சமூக, பண்பாட்டுப் பரிமாணங்களைப் பெற்றுள்ளது.
பொன்னர் சங்கர் உடுக்கையடிக் கதை
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் பொன்னர் சங்கர் கதை நிகழ்த்தப்படும் மிகவும் தொன்மையான சடங்கு வடிவம் ‘உடுக்கையடிக் கதை’ ஆகும். இது குறிப்பிட்ட தோட்டக் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் முதன்மைத் திருவிழாவாக அமைகிறது. பொன்னர் சங்கராக தெய்வமாடும் இருவர் உடுக்கினை இசைத்துப் பொன்னர் சங்கர் வரலாற்றினைப் பாடுவர். அவ்வாறு பாடும்போது, இருவரும் உருக்கொண்டு ஆடுவர். அவர்கள் ஆவேசமாக ஆடித் திருவிழாக் காண வந்திருக்கும் அனைவருக்கும் கட்டுச் சொல்லுவர். பின்னர் பொன்னர், சங்கர், வீரமலை, அத்தாப்பிள்ளை ஆகியோர் படுகளம் வீழ்வர். தங்காளாக தெய்வமாடுபவர் கையில் பிரம்பு கொண்டு அவர்களை உயிர்பெறச் செய்வார். இது பார்க்கும்போது இந்தியாவின் வீரப்பூர், அரசூர் போன்ற பிரதேசங்களில் செய்யப்படும் படுகளச் சடங்கு போலவே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றிச் சடங்கு நிகழ்வில் உடுக்கையடிப்பவர் குறிப்பிடுவதாவது: “இந்தியாவுல வீரபூர்ல இருந்து வாதமடக்கி மரம் கொண்டுவந்து கோவில அமைச்சாங்களாம் தம்பி”. இதன் அடிப்படையில், இந்தியாவின் உடுக்கையடிக் கதையே இங்கு மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆற்றுகை நிகழும் வெளியை நோக்கினால், மலையகத்தில் இச்சடங்கு ஆலயத்தின் முன்பாகத் தொடங்கும். ஆகமக் கோயில்கள் இல்லாத பகுதிகளில் மரத்தடியில் தொடங்கும். தற்காலத்தில் சில தோட்டப் பகுதிகளில் மட்டுமே இவ்வடிவம் வழக்கில் உள்ளது. நான் ஆய்வுக்காகப் பயணித்தபோது மீரியபெத்தையில் இந்த உடுக்கையடிக் கதை, படுகளம் மிகப் பிரபலமாகச் செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே மண்சரிவினால் அந்த ஊரே அழிந்துபோனது. அத்தோடு பொன்னர் சங்கர் கதைப்பாடலும் படுகளமும் மறைந்துபோனது.
கூத்தாக ஆற்றுகை செய்தல்
மலையகப் பகுதி மக்கள் தங்களின் திருவிழாக் காலங்களில் பெரும்பாலும் இந்தக் கூத்தை நடத்துகின்றனர். திருவிழாக் காலங்களில் மட்டுமல்லாமல், மாசி மாதத்திலும் அதிகமான இடங்களில் இது அரங்கேற்றப்படுகிறது. மலையகத்தைப் பொறுத்தவரை, இக்கூத்தை நிகழ்த்தும் காலகட்டம் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுகிறது. தோட்டங்கள்தோறும் பொதுவாகக் கூத்துக்கான பயிற்சியை வழங்கும் கூத்து அண்ணாவியார் ஒருவர் இருப்பார். இவர் கூத்து மாஸ்டர் என்று அழைக்கப்படுகிறார். கூத்துக் கலைஞர்கள் இந்த மாஸ்டரிடம் இரண்டு மாதங்கள் வரை பயிற்சி மேற்கொள்வார்கள். கூத்துப் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் கோயிலில் சிறப்புப் பூசை செய்யப்படுகிறது. பழங்கள், பாக்கு, வெற்றிலை போன்ற பொருட்களை வைத்துத் தூபதீபம் காட்டி இந்தப் பூசை நடைபெறும். இந்தப் பூசையைக் கூத்து மாஸ்டரே நடத்துகிறார். ஆரம்பமாக, கணபதி வந்தனத்துடன் கூத்து தொடங்குகிறது. இதைக் கூத்து மாஸ்டரும் கலைஞர்களும் சேர்ந்து பாடுகின்றனர். கோயில் பூசை நிறைவடைந்தவுடன், அனைவருக்கும் விபூதி, சந்தனம், குங்குமம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு, கூத்து மாஸ்டரால் கூத்துக் கலைஞர்களுக்குக் காப்புக் கட்டப்படும். அன்றிலிருந்து கூத்து மேடையேறி முடியும்வரை, கூத்துக்காரர்கள் மாமிசம் உண்பதைத் தவிர்ப்பார்கள். மது அருந்த மாட்டார்கள், தாம்பத்திய உறவில் ஈடுபட மாட்டார்கள்.
இவ்வாறு காப்புக்கட்டலின் பின்னர் கூத்து ஒத்திகை ஆரம்பமாகும். முதலாவதாக, கூத்து மாஸ்டர் தாளம் பிசகாமல் ஆடக் கற்றுக்கொடுப்பார். கூத்து மாஸ்டர்கள் மக்களால் மதிப்புக்குரியவர்களாகவும், தெய்வம் போன்றவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். பொன்னர் சங்கர் கூத்து பொதுவாகச் சமமான தரையிலோ அல்லது சிறிது உயர்த்தப்பட்ட மேடையிலோ ஆடப்படுகிறது. பார்வையாளர்கள் மூன்று திசைகளிலிருந்தும் நின்ற நிலையில் பார்ப்பார்கள். இது தற்போதைய சூழலில் அனைத்துப் பகுதிகளிலும் பொதுவான முறையாக இருந்தாலும், சில பிரதேசங்களில் சிறிய மாற்றங்களைக் காண முடியும். அரங்கத்திற்கு அருகில் பெரியகாண்டி தவம் செய்வதற்குரிய அறுபது அடி உயரமான கம்பம் நாட்டப்படுகிறது. சில தோட்டங்களில் இதன் உயரம் நாற்பது அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தோட்டங்களில் வானளவு உயர்ந்து நிற்கும் ‘கருப்பந்தேல’ மரத்தை வெட்டி, அதில் படிகள் அமைத்து அரங்கத்தில் நிலைநிறுத்துகின்றனர். கம்பத்தின் உச்சியில் பெரியகாண்டி தவம் செய்யக்கூடிய வகையில் ஒரு பரண் அமைக்கப்படும். இந்த மரப்பரணைச் சுற்றிப் பூமாலைகள் கட்டப்படும். கம்பத்தின் இருபுறத்திலும் ஏறுவதற்கு அமைக்கப்பட்டிருக்கும் படிகளின் துணையுடன் பெரியகாண்டி பரணை அடைவார். இது தவம் செய்வதற்கென அமைக்கப்படும் மேடை அமைப்பாகும்.
இது தவிர, அரங்கிலே படுகளத்துக்கென ஐந்து மரங்கள் நடப்படுகின்றன. அவை ஆலமரம், அரசமரம், வாழைமரம், முருங்கைமரம், கொட்டமுத்துமரம் ஆகியன. இவை படுகளம் நடந்த இடத்தைக் குறியீடாகச் சுட்டிக் காட்டுகின்றன. இந்த மரங்களின் நடுவில்தான் மரணமடைந்த பொன்னர், சங்கர், வீரமலை, அத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களும் கிடத்தப்படுகின்றன. தபசுக் கம்பம், மேலே குறிப்பிட்ட ஐந்து மரங்கள் தவிர, இங்கு வேறு எந்த மேடை அலங்காரப் பொருட்களும் வைக்கப்படுவதில்லை.

பொன்னர் சங்கர் கூத்து பெரும்பாலும் மூன்று நாள் கூத்தாகவே நடத்தப்படுவது வழக்கம். கூத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆடுவர். சில ஊர்களில் ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஆடுவர். ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியாக ஆடுவர். ஒரு காலத்தில் தொடர்ந்து மூன்று நாட்களும் இந்தக் கூத்தை ஆடி வந்தனர். பின்னர், ஒவ்வொரு வாரமும் ஒரு பகுதியாகவும், அல்லது ஒவ்வொரு மாதமும் ஒரு பகுதியாகவும் ஆடப்பட்டு வருகிறது. சில தோட்டங்களில் ஒவ்வொரு பிரிவையும் வருடத்திற்கு ஒருமுறை ஆடுகின்றனர். பெரும்பாலான தோட்டங்களில் பொன்னர் சத்தியம் செய்யப் போவதில் இருந்து தொடங்கி, படுகளத்தில் உயிர்பெற்றுத் தெய்வமாகும் வரையான மூன்றாவது பகுதியையே நிகழ்த்தி வருகின்றனர்.
பொன்னர் சங்கர் கூத்தும் வழிபாட்டுச் சடங்குகளும்
மலையகத்தில் ஆடப்படும் அனைத்துக் கூத்துகளும் வெறும் பொழுதுபோக்கிற்காக நிகழ்த்தப்படுவதில்லை. மாறாக, அவை பக்தி உணர்வுடனும், சடங்குடன் இணைந்த வகையிலும் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பொன்னர் சங்கர் கூத்தும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனை அரங்கேற்றும் மக்களும், பார்வையிடும் மக்களும் தெய்வ நம்பிக்கையுடன் பங்கெடுக்கின்றனர். அதனால், கூத்தாடுபவர்கள் விரதம் இருந்து ஆடுவதுபோலவே, பார்ப்பவர்களில் பலரும் விரதம் இருந்தே பார்வையாளராகப் பங்கேற்கின்றனர்.

அறுபது அடி உயரமான தபசுக் கம்பம் அரங்கில் நாட்டப்படும்போது சிறப்புச் சடங்குகள் செய்யப்படுகின்றன. இக்கம்பம் நாட்டப்படும் குழியில் நாணயங்களும், நவதானியங்களும் போடப்படுகின்றன. கும்பம் வைத்துப் பழம், பாக்கு, வெற்றிலை படைத்து, தூபதீபம் காட்டிய பின்னரே கம்பம் நடப்படுகிறது. நாட்டப்பட்ட கம்பத்துக்குப் பட்டுத் துணி அணிவிக்கப்பட்டு, விபூதி, சந்தனம், குங்குமம் இடப்படுகின்றன. மீண்டும் தூபதீபம் காட்டி அங்கு வந்திருக்கும் அனைவருக்கும் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
கூத்தாடும் மேடையில் கம்பத்தை அடுத்து, படுகளத்திற்குரிய ஐந்து மரங்கள் நடப்படுகின்றன. இம்மரங்கள் நடப்படுவதற்கு முன், நடப்படும் குழிகளில் நவதானியங்கள் இட்டுத் தூபதீபம் காட்டப்படுகிறது. ஆலமரம், அரசமரம், வாழைமரம், முருங்கைமரம், கொட்டமுத்து ஆகிய மரங்களை நட்ட பின்னரும் தூபதீபம் காட்டிக் கிரியைகள் செய்யப்படுகின்றன.
மலையகக் கூத்துகள் அனைத்திலும் கரகம் பாலித்தல் முக்கிய இடம்பெறுகிறது. கூத்திற்கு முன் கூத்தர்களும் பக்தர்களும் இரண்டு கரகச் செம்புகளுடன் நீர்நிலைகளுக்குச் செல்வர். நீர்நிலைகளில் அடியவர்கள் இறங்கிக் கை, கால்களைக் கழுவித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வர். கரகம் எடுப்போர் முழுக்கு நீராடுவர். பின்னர், தப்பு வாசித்தும் பாடியவாறும் வருவர். முத்துமாரி அம்மன் மீதும் கரகப் பாடல்களைப் பாடுவர். கரகம் வரும் வழியில் பக்தர்கள் தண்ணீர் தெளித்தும், பூக்களைத் தூவியும் வரவேற்று வருவது வழக்கம். ஊர்வலத்தில் வரும் சில பக்தர்கள் உருக்கொண்டு சாமியாடுவர். கரகம் எடுத்து வருகின்றவர்களும் உருக்கொண்டு சாமியாடுவதுண்டு. கரகங்கள் அரங்கை அடைந்ததும் தபசுக் கம்பத்தில் இறக்கி வைக்கப்படும். பின்னர், பழம், பாக்கு, வெற்றிலை வைத்துத் தூபதீபம் காட்டிப் பூசை செய்யப்படும். உருக்கொண்டு ஆடுபவர்களையும் தெய்வங்களாகவே நினைத்துப் பூசை செய்வர். சிலர் சாமியாடியபடியே அருள்வாக்குக் கூறுவர். திருமணம் ஆகாத பெண்களும், குழந்தைப் பேறு இல்லாத தம்பதியரும் விரதமிருந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வர்.
அரங்கிலிருந்து சிறிது தூரத்திலுள்ள கோயிலில் அல்லது பிள்ளை மடுவத்தில் அல்லது பஜனை மண்டபத்தில் ஒப்பனை (வேடமிடுதல்) செய்யப்படும். அல்லது தனியான ஒரு வீட்டில் இது நடைபெறும். கூத்து மாஸ்டர் கற்பூரம் கொளுத்தி, கடவுள் வணக்கம் பாடிய பின்னரே கூத்தர்களுக்குத் திருநீறு பூசி ஒப்பனையைத் தொடங்கி வைப்பார். ஒப்பனை முடிவடைந்ததும் ஒவ்வொரு பாத்திரமும் தெய்வமாகவே கருதப்படும். பின்னர் முதல் காட்சியில் தோன்ற வேண்டிய பாத்திரங்கள் மேடையை நோக்கி வந்து, வரிசையாக நிற்பர். அப்பொழுது கூத்து வாத்தியார் அல்லது பூசாரியால் (ஆனால் தற்போது பண்டாரங்கள் என்று சொல்லப்படும் ஆகமக் கோயில்களில் பூசை செய்பவர்களாலும்) அரங்கப் பூசை செய்யப்படும். அரங்கப் பூசைக்கு முன் சில தோட்டங்களில் கோழியொன்று பலியிடப்படுவது வழக்கம். வேறு சில தோட்டங்களில் நீற்றுப்பூசணிக்காயை வெட்டி அதன்மீது குங்குமத்தைத் தடவிப் பலியிடல் வழக்கம். தூபதீபம் காட்டி அரங்கப் பூசை செய்த பின்னர் காப்புச் செய்யுள் பாடப்படும்.

இப் பொன்னர் சங்கர் கூத்தில் மூன்று தடவைகள் திருமண நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. முதலில் கோளாத்தாக் கவுண்டருக்கும், பவளாத்தாவுக்கும் திருமணம் நடக்கிறது. இரண்டாவதாகக் குன்னுடையானுக்கும், தாமரை நாச்சிக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதனை விரிவாக நிகழ்த்திக் காட்டுகின்றனர். மூன்றாவதாகப் பொன்னரும் சங்கரும் முத்தாயி, பவளாயி என்னும் பெண்களை மணக்கின்றனர். இந்தச் சடங்குகளின்போது அரங்கில் மாவிலைத் தோரணம் கட்டுகிறார்கள். இருபுறமும் வாழைக்கன்றுகளை நடுகிறார்கள். கும்பம் வைத்துக் குத்துவிளக்கேற்றுகிறார்கள். பழம், பாக்கு, வெற்றிலை வைத்துத் தூபதீபம் காட்டிப் பூசை செய்கின்றனர். சில கூத்துகளில் கூத்து மாஸ்டரே புரோகிதராகப் பணியாற்றுவார். வேறு சில கூத்துகளில் கூத்தர் ஒருவர் புரோகிதராக நடிப்பார். மாலை மாற்றுதல் முக்கியமாக இடம்பெறும். மணமக்களாக நடிப்பவர்களுடைய பெற்றோர் சபையில் இனிப்புப் பண்டங்களை வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வர். உறவினர்கள் சிலர் மணமக்களுக்கு அன்பளிப்புச் செய்வர். பணமாகக் கொடுக்கப்படும் அன்பளிப்பு கூத்து மாஸ்டருக்கு உரியதாகும். திருமணமாகாத பெண்களும் ஆண்களும் இத்திருமணக் காட்சியைக் காண்பதன் மூலம் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியத்தைப் பெறலாம் என நம்புகிறார்கள்.
தாமரைநாச்சி குழந்தை வரம் வேண்டித் தவம் செய்வதற்காக நாகமலைக்குச் செல்கிறாள். அங்கே ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, சாணத்தால் மெழுகி அவ்விடத்தில் நின்று தவம் செய்ய ஆரம்பிக்கிறாள். மண்ணால் சிவலிங்கம் செய்து அதற்கு மாலையணிந்து பூக்களால் அர்ச்சனை செய்து வணங்கத் தொடங்குகின்றாள். பின்னர், மூச்சை அடக்கி ஒற்றைக் காலில், நுனிவிரலில் நின்றபடி சிவனையும் பார்வதியையும் நினைத்துத் தவமியற்றுகின்றாள்.
தவத்தின் உச்ச நிலையில் தாமரைநாச்சி உருக்கொண்டு ஆடுவது வழக்கம். சிவனும் பார்வதியும் காட்சி தரும்போது, தாமரை இயல்பு நிலைக்கு வந்து, அவர்களைச் சுற்றி வலம் வந்து, பாதங்களைக் கழுவி, பூக்களால் அர்ச்சித்து வணங்குவாள். இந்நிகழ்ச்சியின் போது பார்ப்போரில் சிலரும் உருக்கொண்டு சாமியாடுவது வழக்கம். பிள்ளை வரம் பெற்றுத் திரும்பும் தாமரையிடம் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் விபூதி, பிரசாதம் பெற்று வணங்குவர். சிலர் தொட்டில், ஏணை போன்றவற்றைக் காணிக்கையாக வழங்குவர்.
தாமரைக்குப் பிள்ளை பிறந்ததும் அது ஒரு பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அப்பொழுதும் சபையில் இருக்கும் உறவினர்கள் இனிப்புப் பண்டம் முதலானவற்றைப் பரிமாறிக் கொள்கின்றனர். கூத்துக்காரர்கள் சிலர் பார்வையாளர்கள் மத்தியில் வந்து குழந்தைக்குப் பால் வாங்குவதற்கெனப் பணம் சேகரிப்பர். இந்தத் தொகையும் கூத்து மாஸ்டருக்கே உரியதாகும். பொன்னர் சங்கருக்கு ஏடு தொடக்குவது சில கூத்துகளில் விரிவாகச் செய்யப்படுகிறது. கும்பம் வைத்துக் குத்துவிளக்கேற்றித் தங்கத் தட்டில் அரிசி பரப்பி அதன்மீது எழுத வைத்து ஏடு தொடக்குவர். இதனையும் கூத்து மாஸ்டரே செய்கிறார். அப்பொழுது பொன்னர் சங்கர் குருவுக்குக் காணிக்கை வழங்குவார்கள்.
பெரியகாண்டி தவம் செய்யத் தபசுக் கம்பத்தில் ஏறுமுன்னர் கம்பத்துக்குச் சிறப்புப் பூசை செய்யப்படும். ஒவ்வொரு படியாக ஏறும்பொழுது பூக்களைத் தூவிப் பெரியகாண்டியின் பெயரைச் சொல்லி வணங்குவர். அவர் கம்பத்தின் உச்சியில் ஏறித் தவம் செய்யத் தொடங்கியதும், பார்ப்போரில் சிலர் உருக்கொண்டாடுவர். உருக்கொண்டாடியோருக்குத் திருநீறு இட்டு நீர் தெளிக்க, அவர்கள் இயல்பு நிலை அடைவர். அப்பொழுது அவர்கள் வெள்ளைத் துணிகளில் படுக்க வைக்கப்படுவர். பெரியகாண்டி தவம் செய்யும்போது, அவருக்குக் காவலாக மகாமுனி நியமிக்கப்படுகிறார். அவர் கம்பத்தின் அடியில் காவலுக்கு நிற்பார். அவருக்குப் படையல்கள் செய்து, விசேடப் பூசையும் செய்வர். கூத்து முடிவின்போது மகாமுனிக்கு விசேடமான படையல்கள் செய்வர். கள்ளு, சாராயம் போன்றவையும் படைக்கப்படும். சேவல் ஒன்றும் அவருக்குக் கொடுக்கப்படும். அவர் அதனை வாயால் கடித்துப் பலி எடுத்தபின் வீசிவிடுவார். பின்னர் மகாமுனி கம்பத்திலிருந்து விடுவிக்கப்படுவார். பெரியகாண்டி தவம் முடிந்து கம்பத்திலிருந்து இறங்குவதற்கு முன்னர் அங்கிருந்து பூக்களைப் பக்தர்கள்மீது வீசுவார். கம்பத்தைச் சுற்றிக் கட்டியுள்ள பூக்களையும் மாலைகளையும் கிழித்து எறிவார். கீழே உள்ள பார்வையாளர்கள் அந்தப் பூக்களை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்ட பின்னர் அவற்றைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வர். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் இந்தப் பூக்கள் கிடைப்பதைப் பெரும் பேறாகக் கருதுவர்.
தங்காள் பெரியகாண்டியையும் ஏனைய தெய்வங்களையும் வணங்கிப் புனித தீர்த்தத்தை வலம் வந்தபடி தெளிப்பாள். அப்பொழுது அண்ணன்மாரும் மற்றவர்களும் உயிர் பெற்று எழுவார்கள். பெரியகாண்டி மீது புகழ் மாலை பாடப்படும். உயிர் பெற்றெழுந்த பொன்னரும் சங்கரும் இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெற்று வாழ்வது முறையல்ல எனக் கூறி, சந்தனக் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிச் சோதியுடன் கலந்து தெய்வங்களாவர். தங்காளும் பெரியகாண்டியும் விண்ணுலகம் அடைவர். அப்பொழுது அவர்களைத் தெய்வங்களாக ஏற்றுச் சிறப்புப் பூசை செய்வர். வீரமலைக்கும் மகாமுனிக்கும் காவல் தெய்வங்களுக்குரிய பூசை நிகழ்த்தப்படும். கூத்து முடிவடைந்ததும், மகாமுனியை விடுவிப்பதும், முன்னர் கொண்டுவந்து வைக்கப்பட்ட கரகங்களை நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்வதும் இடம்பெறும். இந்நிகழ்ச்சியின் போதும் பார்வையாளர்கள் அனைவரும் கலந்துகொள்வர். இந்த ஊர்வலம் நடக்கும்போது ஊர் முழுவதும் ஆடரங்காகத் திகழும். கரகம் எடுப்போர் மட்டுமல்லாமல் பக்தர்களும் உருக்கொண்டு ஆடுவர். நீர்நிலையை அடைந்ததும் கரக நீர் நீர்நிலையோடு கலக்கப்படும். வந்த அடியவர்களுள் சிலர் நீராடுவர். மற்றவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படும். இத்துடன் பொன்னர் சங்கர் விழாக் கூத்து முடிவடையும்.
கூத்தில் உருவேறியாடுதல்
பொன்னருக்கு ஆடும் நபர் சாதாரணமாக அமர்ந்திருப்பார். பாடல்களைப் பாடும்போது கண்களை மூடிப் பொன்னரைத் தன் மனதில் நினைத்து வேண்டிக் கொண்டிருப்பார். கதையில் வரும் பொன்னரின் பாடல்களைச் செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார். தப்பு மற்றும் உடுக்கையொலியும் பொன்னர் பற்றிய கதை நிகழ்வுகளும் பொன்னரின் பாத்திரத்தினை மனதின் முன் நிறுத்தி விடும். இதில் சுவாரசியம் என்னவென்றால் கூத்தில் பாத்திரங்களாக ஆற்றுகை செய்துகொண்டிருக்கும் போதும், கூத்தர்கள் தெய்வ நிலைக்குச் செல்வர். அதன்போது, கூத்து சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுப் பின்வரும் விடயங்கள் நிகழ்கின்றன. அதன் பின்னரே, மீண்டும் கூத்து விட்ட இடத்தில் இருந்து தொடங்குகின்றது.

அப்போது தெய்வமாடுபவரின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. கால்கள் நடுங்குகின்றன, உடல் இலேசாகக் குலுங்குகிறது, தசைகள் இறுகுகின்றன. சற்று நேரத்தில் எங்கோ செல்வது போல ஓர் உணர்வு தோன்றுகிறது. உடல் குலுக்கம் அதிகரித்து, நன்றாக ஆடத் தொடங்குகிறார். அதுவரை சாந்தமாகவும், எல்லோரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர், பொன்னரின் பாத்திரம் தன் உடலில் புகுந்த பின்னர் செயற்படும் விதம் பார்ப்பதற்குப் பயமாக இருக்கும். கத்திக் கூச்சலிட்டு எதையோ தேடுவார். பூசாரியிடமும் அங்கு இருப்பவர்களிடமும் தன் ஆயுதத்தையும் எலுமிச்சம் கனியையும் கேட்பார். அவருக்கு வாள் கையில் தரப்படும். பின்னர், கூச்சலிட்டபடியே வாளினைக் கொண்டு வீசி ஆடுவார். பக்தர்களை மிரட்டியவாறு வாள் கொண்டு பல்வேறு பாவனைகளை உடல் மூலமாகவும், கூச்சலிட்டுக் குரல் மூலமாகவும் செய்வார். சாதாரணமாக அவர் இருந்த நிலையில் இருந்து மாறிப் பொன்னராக உருவெடுத்துப் பொன்னரின் உடல்மொழியை எடுத்துக் கொண்டு பொன்னராகத் தன்னை உருமாற்றுகிறார். இவர் உணர்வுபூர்வமாகத் தன்னைப் பொன்னராக மாற்றிக் கொள்கிறார். இவ்வாறு சித்திரிக்கும்போது பல்வேறு செயற்பாடுகளை இயல்பாகச் செய்வதைக் காணலாம். எலுமிச்சையைக் கடித்து அதனை அங்கும் இங்கும் வீசுவது, முறைத்துக் கொண்டே கத்தியோடு சிலை இருக்கும் பக்கமாகச் செல்லுதல் போன்ற செயற்பாடுகளைச் செய்வார். சிலையைக் கண்டு பூரிப்போடு திரும்பவும் ஆடிவருவார்.
இதில் முக்கியமான நிகழ்வு, பொன்னர் வந்து கட்டுச் சொல்லுதல். நோய் தீர வேண்டி வரும் பக்தர்களுக்குக் கட்டுச் சொல்லி, அவர்களின் குறைகளையும் நோய்களையும் அவர் தீர்ப்பதாக நம்பப்படுகின்றது. குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு அவர் குழந்தை வரம் கொடுப்பதாகவும் நம்பப்படுகின்றது. இவ்வாறு வரும் பக்தர்களின் முகத்தைப் பார்த்து, அவர் முகபாவனையை ஒருவிதமாகச் சுழிக்கிறார். பின்னர் அவர்களின் பிரச்சினையையும் குறைகளையும் கூறி, அதற்கான தீர்வையும் சொல்கிறார்.
பேய் பிடித்து வரும் நபர்களைக் கண்டதும் பொன்னர் ஆவேசமாக எழுகிறார்; நக்கலாக அவர்களின் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறார்; பின்னர் திருநீறு பூசி, அவர்களுக்குச் சுகமளிக்கிறார் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.
நோயுடன் வருபவருக்கு, நோய் தீரும் என்று வாக்குச் சொல்வார். ஒருவரின் வாழ்வில் நடந்தவற்றையும், ஒருவருக்கு என்ன நோய் என்பதையும் அவர் சொல்வார். பொன்னராகச் சித்திரிக்கும் தெய்வாதி சொல்வது உண்மை என்றே அவ்வாறு வந்தவர்கள் கூறுவர்.
பொன்னரே தெய்வீகப் பாத்திரமாக ஒருவரின் மீது வந்து புகுந்து, மக்களின் குறை தீர்ப்பதாக அனைவரும் நம்புகின்றனர்.
படுகளச் சடங்கு
இப்படுகளச் சடங்கு தமிழகத்தின் வீரப்பூரில் உள்ள படுகளம் என்னும் சிற்றூரில் இன்னும் நிகழ்த்தப்படுகின்றது. இது பொன்னர் சங்கரோடு மற்ற அனைவரும் போரில் மாண்ட இடம் ஆகையால் வருடா வருடம் இவ்விடத்தில் இந்தச் சடங்கு தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. மலையகத்தில் இப்படுகள நிகழ்வானது உடுக்கையடிக் கதையின் இறுதியில் இடம்பெறுகின்றது. பொன்னராக உருவேறி ஆடும் நபர் ஆட்டத்தின் உச்சத்தில் கதையின் இறுதிப் பகுதியில் மூர்ச்சையாகிக் கீழே விழுவார். அவர் இறந்தவர் போல் காட்சி தருவார். மூச்சு மட்டும் இருக்கும்; அவரின் உணர்வுகள் இருக்காது. அவர் மயக்க நிலையில் இருப்பது தெரியும். இவ்வாறான படுகளம் போர்க்களத்தில் பொன்னர் மாய்கின்ற காட்சியினைச் சித்திரிப்பதாக அமைகின்றது.
சங்கர் வரும்போது அவரைப் பிடித்துக் கட்டுப்படுத்துபவர்கள் பிடிக்க முடியாமல் கஷ்டப்படுவர். சங்கரின் உடல் ஓர் இடத்தில் நிற்காமல், யாரோ வீசுவது போலப் பின்னால் சென்று விழும். பின் குதித்துப் புரண்டு ஆடும்போது எவராலும் அவரைப் பிடிக்க முடியாது. சங்கர் தன் கண்களை அகோரமாகவும் கோப உணர்வோடும் வைத்துக் கொண்டு ஆடுவார். பக்தர்கள் முன் வந்து ஆடும்போது, அவர்களும் பயப்படும் வகையில் ஆடுவார். பொன்னரைப் போலவே சங்கரும் கட்டுச் சொல்லி முடிந்ததும் படுகளத்தில் வீழ்வார்.

இவ்வாறு படுகளத்தில் மாண்டு கிடக்கும் அண்ணன்மாரின் உடல்களைக் கண்டு கதறி அழும் தங்காள், தனது கற்பின் வலிமையாலும் தீராத பாசத்தாலும் சிவபெருமானையும் மாயவரையும் நோக்கித் தவமிருக்கிறாள். அவளது எல்லையற்ற பக்திக்கும் கண்ணீருக்கும் இரங்கி, ஈசன் அவளுக்கு அமுதத் தீர்த்தமும், மந்திர சக்தியும் கொண்ட திருநீற்றையும் அருளுகிறார். கூத்து மற்றும் கோயில் திருவிழாக்களில், தங்காள் அண்ணன்மாரின் உடல்கள் மீது அமுத நீரைத் தெளித்து, வேப்பிலையாலும் மலர்களாலும் தடவி, உயிர்ப்பிக்கும் மந்திரங்களை ஓதி, அவர்களைத் தட்டியெழுப்பும் காட்சி நிகழ்த்தப்படுகிறது. தெய்வத் திருவருளாலும் தங்கையின் அன்பினாலும் அண்ணன்மார் மீண்டும் உயிர்பெற்று எழுகின்றனர்.
இவ்வுயிரெழுப்பும் சடங்கு படுகளக் கூத்தின் உச்சக்கட்ட ஆன்மிக மற்றும் நாடகீய நிகழ்வாகக் கருதப்படுகிறது. களத்தில் சடலங்களாகத் தரையில் கிடக்கும் நடிகர்கள் மீது பூசாரிகள் சாமியாடிப் புனித நீர் தெளித்து எழுப்பும்போது, மானுட வீரர்கள் மரணத்தை வென்று தெய்வ நிலையை அடைவதாகப் பக்தர்கள் உணர்வுபூர்வமாக நம்பி வழிபடுகின்றனர். துயரத்தை வெற்றியாகவும், மரணத்தைத் தனித்துவமாகவும் மாற்றும் இந்த உயிர்ப்பித்தல் நிகழ்வு, தியாகம், சகோதரப் பாசம், தெய்வீக நீதி ஆகியவற்றை நிலைநிறுத்தும் சடங்கியல் மீளுருவாக்கமாக இன்றளவும் போற்றப்படுகிறது.
தொகுத்து நோக்கும்போது, மலையகத்தில் நிகழ்த்தப்படும் பொன்னர் சங்கர் கூத்தும் அதன் வழிபாட்டுச் சடங்குகளும் வெறும் பழங்கால நினைவுகூரல் மட்டுமல்ல; அவை பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகத்தின் உளவியல் பலமாகவும் கூட்டு ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும் விளங்குகின்றன. காலனித்துவக் கொத்தடிமை அமைப்பிலும், அதன் பின்னரான அரசியல் விளிம்புநிலை வாழ்விலும், மலையக மக்கள் தங்களின் கூட்டுத் துயரங்களைத் தங்காளின் ஒப்பாரியிலும், தங்களின் சமூக விடுதலை வேட்கையைப் பொன்னர் சங்கரின் வீரத்திலும் உருவகப்படுத்திக் கொள்கின்றனர்.
உடுக்கையடிச் சடங்கின் வழியே பக்தர்களுக்குக் கிட்டும் அருள்வாக்கும், கூத்தரங்கில் நிகழும் உயிர்ப்பித்தல் சடங்கும் மக்களின் அன்றாட வாழ்வியல் துயரங்களுக்கான ஆன்மிக மருந்தாகச் செயல்படுகின்றன. இக்கூத்து வடிவம் தாயகத் தமிழகத்துடனான பண்பாட்டுத் தொப்புள்கொடி உறவை அறுபடாமல் பாதுகாக்கும் ஒரு வரலாற்றுப் பாலமாகவும், மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான நாடக மரபின் சிகரமாகவும் நிலைத்து நிற்கிறது.
உசாத்துணை மூலங்கள்
இன்பமோகன், வ. (2012). கிழக்கிலங்கைச் சடங்குகள். குமரன் புத்தக இல்லம்.
சிவரத்தினம், சு. (2008). சடங்குகளினூடாக மட்டக்களப்பு. விபுலம் பதிப்பகம்.
சுந்தரம்பிள்ளை, காரை. செ. (2005). ஈழத்து மலையகக் கூத்துகள். பாரதிப் பதிப்பகம்.
தருமராஜன், டி. (2006). சனங்களின் சாமிகள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்.
நித்தியானந்தன், மு. (2014). கூலித்தமிழ். க்ரியா வெளியீடு.
பக்தவத்சல பாரதி. (2012). மானிடவியல் கோட்பாடுகள். அடையாளம் வெளியீடு.
மௌனகுரு, சி. (1988). சடங்கிலிருந்து நாடகம் வரை. நாகலிங்கம் நூலாலயம்.
ஹரீஸ், மீரா. எஸ். (2014). இலங்கையின் இந்திய வம்சாவழி மக்களின் பாரம்பரியக் கூத்துகள். நிர்தய கலாலயம் வெளியீடு.
D’Andrade, R. G. (1995). The Development of Cognitive Anthropology. Cambridge University Press.
Lavenda, R. H., & Schultz, E. A. (2007). Core Concepts in Cultural Anthropology (3rd ed.). McGraw-Hill.
Miller, T., & Yúdice, G. (2002). Cultural Policy. SAGE Publications.
Milner, A. (1996). Literature, Culture and Society (2nd ed.). Routledge.
Morgan, L. A., & Kunkel, S. R. (1998). Aging: The Social Context. Pine Forge Press.
Rojek, C. (2007). Cultural Studies. Polity Press.



