லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – எழுதுமட்டுவாழ்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
8 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – எழுதுமட்டுவாழ்

August 29, 2026 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

லெயுசிக்காமின் தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள கச்சாய்க் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அதே பிரிவில் உள்ள எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றுத் தொடர்பாகக் குறித்த நிலப்படம் தரும் தகவல்களைப் பார்க்கலாம். 

நிலப்படத்தின்படி எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றில் எழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், அம்பன், நாகர்கோயில் ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன (படம்-1).

எல்லைகள்

லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றின் வடக்கில் வங்காளக் குடாக் கடலும்; மேற்கில் வரணி, கச்சாய் ஆகிய கோவிற்பற்றுகளும்; கிழக்கில் பச்சிலைப்பள்ளிப் பிரிவும்; தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியும் எல்லைகளாக உள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் கிழக்குக் கரைக்குச் சமாந்தரமாக அமைந்துள்ள ஒடுக்கமான, நீண்ட கடல்நீரேரி எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றை இரண்டாகப் பிரிக்கிறது. கடல்நீரேரிக்கு வடக்கில் அம்பன், நாகர்கோயில் ஆகிய துணைப்பிரிவுகள் அமைந்துள்ளன. ஏனைய மூன்று துணைப்பிரிவுகளும் அதன் தெற்குப் பக்கத்தில் உள்ளன. தெற்குத் துண்டின் கடல்நீரேரிக் கரையை அண்டி மேற்கில் மிருசுவிலும் கிழக்கே எழுதுமட்டுவாழும் அமைந்துள்ளன. அவற்றுக்குத் தெற்கில் கரம்பகம் துணைப்பிரிவு உள்ளது. 

நிலப்படம் காட்டும் எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றுக்குள் அடங்கிய பகுதிகளில் அம்பன், நாகர்கோயில் ஆகிய துணைப்பிரிவுகள் தவிர்ந்த ஏனையவை இன்றைய சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குள் அடங்குகின்றன. அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் இப்பகுதிகள் சாவகச்சேரிப் பிரதேச சபையைச் சேர்ந்தவை. அம்பனும் நாகர்கோயிலும் இன்றைய வடமராட்சி கிழக்குப் பிரதேசச் செயலர் பிரிவின் பகுதிகளாக உள்ளன. உள்ளூராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை அம்பனும் நாகர்கோவிலும் இன்றைய பருத்தித்துறைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் அடங்குகின்றன. 

வீதிகள்

கச்சாய்த் தேவாலயத்துக்கு அருகிலிருந்து தொடங்கும் இரண்டு வீதிகள் எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றுக்குள் நுழைகின்றன. ஒரு வீதி கரம்பகம் துணைப்பிரிவுக்குள் இரண்டாகப் பிரிந்து ஒன்று புலோப்பளைத் தேவாலயத்தை அண்டியும் மற்றது கரையோரமாக ஆனையிறவை நோக்கியும் செல்கின்றன. இவற்றுள் ஒரு வீதி தற்காலத்து கச்சாய் – கிளாலி வீதியுடன் பொருந்தக்கூடும். மற்றக் கிளை வீதியைத் தற்காலத்து வீதி எதனுடனும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. கச்சாயிலிருந்து வரும் மற்ற வீதி முன்னர் குறிப்பிட்ட வீதிக்கு வடக்கே கரம்பகம் துணைப்பிரிவின் வடக்கெல்லைக்கு அருகே நுழைந்து இரண்டாகப் பிரிகிறது. ஒன்று நேரே முகமாலை நோக்கிச் செல்ல மற்றது வடகிழக்கு நோக்கி எழுதுமட்டுவாழுக்குச் செல்கிறது. இவற்றுள் முகமாலை நோக்கிச் செல்லும் வீதியைத் தற்காலத்தில் உள்ள எந்த வீதியுடனும் அடையாளம் காண முடியவில்லை. ஆனால், எழுதுமட்டுவாழுக்குச் செல்லும் கிளை வீதி, முறையான திசையில் இல்லாவிட்டாலும் பிழையாக வரையப்பட்ட இன்றைய எழுதுமட்டுவாழ் – கிளாலி வீதியாக இருக்கக்கூடும்.

நிலப்படத்தில் கொடிகாமத்தினூடாக முகமாலை நோக்கிச் செல்லும் ஒரு வீதி எழுதுமட்டுவாழூடாகச் செல்கிறது. இதை ஓரளவு தெளிவாகவே இன்றைய கண்டி வீதியின் ஒரு பகுதி எனக் கொள்ளலாம். வடமராட்சியிலிருந்து வருகின்ற இன்னொரு வீதி கடைசியாகக் குறிப்பிட்ட வீதியை எழுதுவாட்டுவாழில் சந்திப்பதாக நிலப்படம் காட்டுகிறது. இதுவும் இன்றைய வீதியெதனுடனும் பொருந்திவரவில்லை.

இவ்வாறு லெயுசிக்காமின் நிலப்படத்திலுள்ள பல வீதிகள் தற்கால வீதிகளுடன் பொருந்தாமைக்கு, அவ்வீதிகள் நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் வெறுமனே வழித்தடங்களாக இருந்து பின்னர் முறையான வீதிகளாக மேம்படுத்தப்படாமல் விட்டது காரணமாக இருக்கக்கூடும். அல்லது மேற்படி நிலப்படத்தில் இன்று இல்லாத வீதிகளாகத் தோன்றுபவை பிழையாக வரையப்பட்டிருக்கலாம்.

கட்டடங்கள்

ஏற்கெனெவே எடுத்தாண்ட கோவிற்பற்றுகளைப் போலவே, எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றிலும் கிறித்தவ தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையும் நிலப்படத்தில் முக்கியத்துவம் கொடுத்துக் குறித்துள்ளனர். இவற்றைத் தவிர இரண்டு யானைப்பந்திகளும் துறைகளோடு இணைந்த இரண்டு கரையோர மடங்களையும் நிலப்படத்தில் காணமுடிகிறது. 

தேவாலயமும் தேவாலய இல்லமும்

எழுதுமட்டுவாழ்த் தேவாலயம் மண்ணால் கட்டப்பட்டிருந்த அதேவேளை, அதோடிணைந்த தேவாலய இல்லம் கற்கட்டடமாக இருந்ததாகவும் போல்தேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.1 அந்நூலிலுள்ள படமும் அவ்வாறே காட்டுகிறது.2 படத்தின்படி, தேவாலயக் கூரை ஓலை அல்லது வைக்கோலால் வேயப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதேவேளை, அப்படம் தேவாலய இல்லத்தை ஓடு வேய்ந்த கட்டடமாகக் காட்டுகிறது. தேவாலய இல்லத்துக்கு நீண்ட படிக்கட்டு வழியாக ஏறிச் செல்ல வேண்டும் என போல்தேயஸ் பாதிரியார் தகவல் தருகிறார். படத்தின்படியும் இக்கட்டடம் மேடான இடத்தில் அமைந்திருப்பதுடன், தரைத் தளமும் நில மட்டத்திலிருந்து உயர்த்தி அமைக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. தரைத்தளத்துக்கு ஏறிச் செல்வதற்கான படியமைப்பையும் படத்தில் காணமுடிகிறது.  

தேவாலயமும் இல்லமும் கொடிகாமத்திலிருந்து முகமாலையை நோக்கிச் செல்லும் வீதியை அண்டி அதன் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ளதை நிலப்படம் தெளிவாகக் காட்டுகிறது. மேற்படி வீதி இன்றைய கண்டி வீதியின் பகுதி என மேலே எடுத்துக்காட்டினோம். மேற்படி வீதியும் கிளாலி வீதியாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட வீதியும் சந்திக்கும் இடத்தில் தேவாலயம் அமைந்துள்ளது. இவ்விடம் இன்றைய எழுதுமட்டுவாழ் சந்தி என ஊகிக்கலாம். 

தற்காலத்தில் இவ்விடத்தில் ஒல்லாந்தர்காலத் தேவாலயத்தின் எச்சங்கள் எதுவும் இல்லை. அதேவேளை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வேறு பல இடங்களில் உள்ளது போல், பிரித்தானியர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய அமெரிக்க இலங்கை மிசனோ, வெஸ்லிய மெதடிஸ்ட் மிசனோ, சேர்ச் மிசன் சபையோ ஒல்லாந்தத் தேவாலயத்தைத் திருத்திப் பயன்படுத்தியதற்கோ அது இருந்த இடத்தில் பாடசாலைகள் அல்லது பிற வசதிகளை நிறுவியதற்கோ சான்று எதையும் காணமுடியவில்லை. ஒல்லாந்தர் காலத்தில் புரட்டஸ்தாந்த கிறித்தவத்தின் முக்கிய நிலையங்களில் ஒன்றாக இருந்த எழுதுமட்டுவாழ், பிரித்தானியர் காலத்தில் கவனிக்காமல் விடப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

யானைப்பந்தி

நிலப்படத்தின்படி எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றுக்குள்ளும் இரண்டு யானைப் பந்திகள் காணப்படுகின்றன. ஒன்று மிருசுவில் துணைப் பிரிவுக்குள்ளும் மற்றது எழுதுமட்டுவாழ்த் துணைப் பிரிவுக்குள்ளும் உள்ளன. மிருசுவிலில் உள்ள யானைப்பந்தி சாவகச்சேரியிலிருந்து கொடிகாமத்துக்கூடாக எழுதுமட்டுவாழுக்கு வரும் வீதிக்குத் தெற்கே சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது. எழுதுமட்டுவாழில் உள்ள யானைப்பந்தி எழுதுமட்டுவாழ் தேவாலயச் சந்தியிலிருந்து முகமாலைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் அதற்குத் தெற்குப் பக்கத்தில் உள்ளது. எழுதுமட்டுவாழில் கம்பனியின் பழக்கப்பட்ட யானைகளுக்கான பந்திகள் இருப்பதாகப் போல்தேயஸ் பாதிரியாரும் குறிப்பிட்டுள்ளார். யானைகளுக்கான தீனி இங்கே இலகுவாகக் கிடைப்பதே அதற்குக் காரணம் எனவும் அவர் கூறுகிறார்.3  

யாழ்ப்பாணக் குடாநாட்டில், பல கோவிற்பற்றுகளில் யானைப்பந்திகள் இருந்ததை லெயுசிக்காமின் நிலப்படங்கள் குறித்துக் காட்டுகின்றன. ஆனால், இதுவரை நாம் பார்த்த எந்தவொரு கோவிற்பற்றுத் தொடர்பிலும் இல்லாமல் எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றில் மட்டும் யானைப்பந்தியைப் பற்றி போல்டேயஸ் பாதிரியார் தகவல் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

துறைகளும் மடங்களும்

எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றின் அம்பன், நாகர்கோயில் ஆகிய துணைப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் வங்காளக் குடாக்கடற் கரையோரமாக ஒவ்வொரு துறையும் அவற்றை அண்டிச் சிறிய மடங்களும் இருப்பதை நிலப்படம் காட்டுகிறது. நாகர்கோயிலில் உள்ளது ‘vis’ (மீன்) என்னும் முன்னொட்டுடன் இருப்பதால், வேறு இடங்களில் சுட்டிக்காட்டியது போல, அது மீன்பிடித்துறை எனலாம். எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றின் தெற்கேயுள்ள யாழ்ப்பாணக் கடல்நீரேரிக் கரை, நீளம் குறைந்தது. அப்பகுதியில் துறைகள் எதுவும் இல்லை.

குளங்கள்

எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றுக்குள் 33 குளங்களை நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. இவற்றுள் கரம்பகம் துணைப்பிரிவுக்குள் நீரிவில், சம்பாலைக் குளம், வேரக்கல், நுணுவில், நுணுவில் குளம், சிரவில், கட்டைக்கட்டு, நுணுவில் குளம், தனத்தான் குளம் ஆகிய ஒன்பது சிறப்புப் பெயர்களைக் கொண்ட குளங்களும் ஒரு கேணியுமாகப் பத்து நீர்நிலைகள் உள்ளன. எழுதுமட்டுவாழ்த் துணைப் பிரிவுக்குள் மருதடிக் குளம், அடம்பன், கருந்தலி, முதலைக்கேணி, ஒட்டுவெளி, ஒட்டுவெளி, சிறுவுலைவல்லை, வட பொக்கணை, ஆரத்திப் பொக்கணை, பெரிய வுல்வல்லை, கிராய்க் குளம், கிரவில் வடக்கு, சிராவில் ஆகிய 13 நீர்நிலைகளைக் குறித்துள்ளனர். மிருசுவில் துணைப்பிரிவில் ஆறு குளங்களைக் காணமுடிகிறது. அவை, நுணுவில், வெட்டுக் குளம், நவிண்டான் குளம், அம்பட்டன் குளம், இரத்தில் குளம், தும்பிரிசிட்டி என்பன. அம்பனில் மருதடிக் குளம் என்னும் ஒரு குளமும் நாகர்கோவிலில் வெட்டுத்துரவு, பெண்டுகள் குளம் என்னும் பெயரில் இரண்டு குளங்களுமாக மூன்று நீர்நிலைகள் உள்ளன. இங்கும், ஒட்டுவெளி, நுணுவில் ஆகிய குளங்கள் அருகருகே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் குறிக்கப்பட்டுள்ளன. இவை வெவ்வேறு குளங்களா அல்லது பிழையாக இரண்டு, மூன்று தடவைகள் குறித்துள்ளனரா என்பது தெரியவில்லை.

எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றை அடக்கிய பகுதிக்குள் தற்காலத்தில் 60க்கு மேற்பட்ட குளங்கள் உள்ளன.4 இவற்றுள், எழுதுமட்டுவாழ் துணைப்பிரிவில் உள்ள ஒட்டுவெளிக் குளமும், மிருசுவில் துணைப்பிரிவில் உள்ள வெட்டுக் குளம், நவிண்டான் குளம், இரத்தில் குளம் ஆகிய மூன்று குளங்களும் அம்பன் துணைப்பிரிவில் மருதடிக் குளமும் பெயர் மாற்றமின்றி தற்காலப் பதிவுகளிலும் காணப்படுகின்றன. இவற்றைவிட, கரம்பகம் துணைப்பிரிவில் நிலப்படம் குறித்துள்ள வேரக்கல் குளம், தற்காலத்தில் வேதக்கல் குளம் என அழைக்கப்படுவதாகத் தெரிகிறது. அதேபோல, நாகர்கோயில் துணைப்பிரிவில் இருப்பதாக நிலப்படம் காட்டும் பெண்டுகள் குளம், தற்காலப் பதிவுகளில் பெண்டுகள் கேணிக் குளம் என்ற பெயரால் குறிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

  1. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 332.
  2. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 345.
  3. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 332.
  4. தகவல்: விவசாய அபிவிருத்தித் திணைக்களம்.


About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்