திருப்புமுனை ஆறு
கலாநிதி விமலா பெக்லி: பொம்பரிப்பில் இரும்புக்கால பெருங்கற் தாழிப்புதையல்கள்
BEGLEY, VIMALA (1967): Archaeological Exploration in Northern Ceylon, Expedition Summer 1967, University of Pennsylvania, Philadelphia.
BEGLEY, VIMALA (1973): ‘Protohistoric Material From Sri Lanka (Ceylon) and Indian Contacts’, Ecological Backgrounds of South Asian Prehistory, ed. Kenneth A.R. Kennedy and Gregory Possehl, South Asian Occasional Papers and Thesis, Cornell University, pages 190-196.
BEGLEY, VIMALA (1981): Excavations of Iron Age Burials at Pomparippu 1970, Ancient Ceylon, No. 4: 49-95.
——————————————————————-

இந்தியாவில் நியூ டெல்லியைப் பிறப்பிடமாகக் கொண்ட விமலா சஹானி அங்கே இளமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்ற பின்னர் அமெரிக்காவின் பிலடெல்பியா பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் 1965 முதல் 1967 வரை அதே பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் உதவிக்காப்பாளர் பதவியிலும் பணியாற்றினார். அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கலாநிதி வேய்ன் எடிசன் பேக்லியைத் (Dr. Wayne Edison Begley) திருமணம் செய்து கொண்ட பின்னர் தனது பெயரை விமலா பெக்லி என மாற்றிக்கொண்டார். தமிழ்நாட்டில் அரிக்கமேட்டில் நீண்டகாலம் அகழ்வுகளை மேற்கொண்டிருந்தார். இலங்கையில் பொம்பரிப்பு, கந்தரோடை ஆகிய தொல்லியல் தலங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கிறார். (04 May 1931 – 22 March 2000).
அறிமுகம்
இலங்கையின் தொல்லியலில் இடைக்கற்காலத்திற்கும் ஆதாரபூர்வமாக எழுதப்பட்ட வரலாற்றுக் காலத்திற்குமிடையே நீண்டதொரு கலாசார மற்றும் காலவரிசை இடைவெளி காணப்படுகிறது. இலங்கையின் பிந்திய இடைக்கற்காலத்தைப் பற்றி கணிசமான அளவு ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அதைத் தொடர்ந்த ஐயாயிரம் ஆண்டுக்கால தொல்லியல் ஆதாரங்கள் அளவிலும், தரத்திலும் அருகியே காணப்படுகின்றன. அதற்கு இலங்கை வரலாற்றின் இயல்பு, வரலாற்றுப் பதிவுகள், தொல்லியலாய்வுகளின் நோக்குநிலை என்பனவே காரணமாகும்.
இலங்கைக்கு தேரவாத பௌத்தம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் தொகையில் பெரும் பகுதியினரால் தழுவிக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக இலங்கையின் கல்விசார் ஆராய்ச்சி பௌத்தமத இலக்கியங்களினது ஆய்வு மற்றும் பொருள் விளக்கம் பற்றியும், அவை எழுதப்பட்ட மொழியின் (பாளி) கற்கையிலும் மையமாக அமைந்தது. இலங்கையின் ஆய்வுகளில் காணப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் இலக்கியங்களைச் சார்ந்து விளக்கப்பட்டன அல்லது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. உண்மையில் இலங்கையின் வரலாற்றாசிரியர்கள் இந்த நாட்டின் ஆதி வரலாற்றை பாளி மொழியிலுள்ள நிகழ்ச்சித் தொடர்கதையான (Chronicle) மகாவம்சத்திலிருந்தே எடுத்துரைக்கிறார்கள். மகாவம்சம் மதிப்புமிக்க ஒரு பதிவேடாக இருந்த போதிலும், ஒரு வரம்பிற்கு உட்பட்டு, பழைய காலத்து நிகழ்வுகளை புராணக்கதை போல உரைக்கிறது (Begley, V. 1981: p. 53).
இலங்கையின் இடைக்கற்கால ஆய்வுகள் விரிவாக முன்னெடுக்கப்பட்டாலும், தேசிய மற்றும் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களைச் சுத்திகரிப்பதிலும், புனரமைப்பதிலுமே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மாறாக, ஆதி மனிதர்களின் வரலாறு அல்லது அவர்களின் வாழ்வியல் கூறுகளைக் கற்றுக்கொள்வதற்கான நோக்குநிலை புறக்கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையில் தொல்லியலுக்கும் அதனைச் சார்ந்த, தொடர்புடைய துறைகளுக்கும் ஒரு பெரிய செயற்பாட்டுப் பணி காத்திருக்கிறது (Begley, V. 1981: p. 53).
இலங்கையின் இடைக்கற்காலத்திற்கும் வரலாற்றுப் பதிவுகள் ஆரம்பமான காலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு பரவலான கருத்து நிலவுகிறது. அதாவது, வேட்டையாடி உணவு சேகரிக்கும் முறை மிக நீண்ட காலம் தொடர்ந்தது என்றும், விவசாயச் சமூகங்களின் உருவாக்கம் மற்றும் நாகரிக வளர்ச்சி என்பது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வட இந்திய இந்தோ-ஐரோப்பிய மொழியினரின் வருகைக்குப் பின்னரே நிகழ்ந்தது என்றும், அதன் தொடர்ச்சியாக இரு நூற்றாண்டுகள் கழித்து பௌத்த மதம் பரவிய பிறகே இவை முழுமை பெற்றன என்றும் ஆதாரமற்ற ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளும், பௌத்த மதமும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் கலாசாரப் பண்புகள். இந்நாட்டின் வளர்ச்சிக்கும், நாகரிகத்திற்கும் அவை பெரும் உத்வேகத்தை அளித்திருக்கின்றன. ஆனாலும் மற்றைய பங்களிப்புக் காரணிகளான மக்கள் தொகைப் பரவல், சுற்றுச்சூழல், பொருளியல் கூறுகள் போன்ற அம்சங்கள் தீவிரமாக வரையறுக்கப்படவுமில்லை, அல்லது ஆய்வு செய்யப்படவுமில்லை. மக்கள் ஆதியில் மட்பாண்டங்களை உபயோகிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று உபயோகப்படுத்தும் மட்பாண்டங்கள் வரையான வரிசை (Ceramic Sequence) உபயோகமான வரலாற்றுத் தகவல்களைத் தருகிறது. இலங்கையில் அதன் கற்கைக்கான அடித்தளம் அமைக்கும் பணி இதுவரை முயற்சிக்கப்படவில்லை (Begley, V. 1981: p. 53).
இலங்கையின் இடைக்கற்காலத்திற்கும், வரலாற்றுக் காலத்திற்கும் இடையிலான இடைவெளி நிகழ்வுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையே ஒழிய அக்காலத்தில் ஒன்றும் நடைபெறவில்லை என்று அர்த்தம் அல்ல. சில சமூகங்களில் இடைக்கற்காலம் நவீன காலம்வரை நீடித்திருக்கிறது. இலங்கையின் வேடர் சமூகத்தைப் பொறுத்தவரை ‘உயர் நாகரிகமும்’, ‘பழமையான கலாசாரங்களும்’ அருகருகே ஒரே சமயத்தில் இயங்கி வந்திருக்கின்றன. இது இலங்கையில் மட்டுமல்ல, தென்னாசியாவின் வரலாற்றில் ஒரு பொதுவான அம்சம்.
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்டகாலம், வரலாற்றுதயகாலம் என்பன தீபகற்ப இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுதயகாலம் என்பனவற்றுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்டகால மனிதன் ஊகிக்கக்கூடிய வரையில் தீபகற்ப இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வந்திருக்கிறான். புத்தமத காலத்திலிருந்து தொடர்ச்சியாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் தொடர்புகள் இருந்து வந்திருப்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியான தொடர்புகளும், கருத்துகளின் பரிமாற்றங்களும், மக்களின் இடப்பெயர்வும் புத்தமதம் வருவதற்கு முந்திய ஆண்டுகளிலும் நடைபெற்றிருக்கும். புவி இயற்பியல் மற்றும் கலாசாரத் தொடர்புகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நடைபெற்றிருக்கும் என்பதை மறுக்க இயலாது. ஆனால், அக்காலகட்டம் பற்றிய பதிவுகள் எதுவும் காணப்படவில்லை. இலங்கையின் பண்பாட்டுப் பரிணாமமானது அதன் வரலாறு நெடுகிலும் ஒரு தனித்துவமான போக்கைக் கொண்டுள்ளது. எங்களது ஆய்வுகளில் ஆதிகால வடஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறுதியான தொல்லியல் தொடர்புகளைக் காட்டும் சான்றுகள் ஏதும் இதுவரை காணப்படவில்லை. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களின் பண்பாட்டுக் காலக்கணிப்பிற்கு அவற்றைத் தென்னிந்திய மட்பாண்டங்களின் தொடர்வரிசையுடன் ஒப்பிடுவதே மிகவும் பொருத்தமானதாக இருந்தது (Begley, V. 1981: p. 54).
இலங்கையின் வரலாற்றாய்வில் இடைக்கற்காலத்திற்கும் வரலாற்றுக் காலத்திற்கும் இடையிலான காலப்பகுதி மிகக் குறைவாக ஆய்வு செய்யப்பட்டிருப்பது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. எங்களது ஆய்வின் குவிமையம் இந்தக் காலப்பகுதியைக் கொண்டிருந்தது. இதன் தொடக்கப்புள்ளியாக எங்கள் ஆய்வுகளுக்கு நாங்கள் இலங்கையின் வடக்குப் பிராந்தியங்களையே தேர்ந்தெடுத்தோம். இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று: இலங்கையின் வடமேற்குப் பகுதித் துறைமுகங்களுக்கும், தென்னிந்தியத் துறைகளுக்கும் இடையே அடிக்கடி நிகழும் கலாசார மற்றும் வணிகப் போக்குவரத்து காரணமாக இரு இடங்களுக்கும் இடையே நெருங்கிய ஒப்புமைகள் இருப்பதாக எதிர்பார்ப்பதனால், பண்பாடுகளின் ஒப்பீட்டுக் காலக்கணிப்புகளுக்கு இது தரவுகளை வழங்கும். இரண்டாவது: இந்தப் பிராந்தியம் இந்தியப் பெருநிலம் போன்ற சுற்றுச்சூழலைக் கொண்டு, ஒத்த பின்னணியைச் சேர்ந்த விவசாய சமூகங்களின் நகர்விற்கும் குடியேற்றத்திற்கும் ஏற்றதாக இருந்தது.
1967ஆம் ஆண்டில் இப்பிரதேசங்களில் மேலாய்வு ஒன்று நடத்தப்பட்டது (Begley, V. 1967). குடியிருப்புப் பகுதிகளில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் கந்தரோடை, ஆய்விற்கு மிகவும் ஏற்றதாகப்பட்டது. இதற்கான காரணம் மிகப்பரந்த பகுதியில் மேற்பரப்பு மட்பாண்டங்கள் சிதறிக் கிடந்தமை ஆகும். அவற்றினிடையே தென்னிந்திய வகை கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும், றூலெட்டெட் மட்பாண்டங்களும் காணப்பட்டன. இடுகாட்டு மையங்களைப் பொறுத்த மட்டில் கோகபே, பொம்பரிப்பு இரண்டும் அகழ்விற்குப் பொருத்தமானதாகப் பட்டன.
1970 ஆம் ஆண்டில் கந்தரோடையிலும் பொம்பரிப்பிலும் சிறிய அளவில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டன. கந்தரோடையில் குடியேற்ற ஆரம்பகாலத்தையும், மட்பாண்டங்களின் பண்பாட்டுக்கால வரிசையையும் கண்டறிவது முக்கியமான நோக்காக இருந்தது. பொம்பரிப்பில் தாழியடக்க வளாகத்தின் தன்மையையும், அங்கே புதையுண்டிருக்கும் மக்களின் மானிடவியல் அம்சங்களை பேராசிரியர் கென்னெடியின் உதவியுடன் கண்டறிவதும் நோக்கமாக இருந்தது.
பொம்பரிப்பு இடுகாட்டு வளாகம்
இலங்கையின் வடபகுதியில் மேற்குக் கரையில் புத்தளத்திலிருந்து 32 கி.மீ. வடக்கேயும், மன்னாரிலிருந்து 89 கி.மீ. தெற்கிலும் அமைந்திருக்கும் நன்கு அறியப்பட்ட வரலாற்றுதயகால இடுகாடு பொம்பரிப்பு. இத்தலம் வில்பத்து தேசிய காட்டு மிருகப் புகலிடத்தின் தெற்கு எல்லைக்குள் அமைந்திருப்பதனால் மக்கள் வசிக்காத பகுதியாக உள்ளது. எளிதில் கடல்வழியாக அடையக்கூடிய ஒரு கடற்கரையிலிருந்து இத்தலம் 6 கி.மீ. தொலைவில் உள்ளதனால் கடல் வழியாக இவ்விடத்தை சுலபமாக அடைய முடியும். முற்காலத்தில் கந்தரோடைக்கும் அநுராதபுரத்திற்கும் வழித்தொடர்பு இருந்ததற்குத் தொல்லியல் சான்றுகள் உள்ளன. அது போன்று பொம்பரிப்புக்கும் அநுராதபுரத்திற்கும் தொடர்புவழி இருந்திருக்கலாம்.
இந்த இடுகாட்டு வளாகத்திற்குச் சமீபமாக காலம் அறியப்படாத பழமையான குளங்கள் உள்ளன. இந்த இடுகாட்டுக்குத் தெற்கே 1.6 கி.மீ. தொலைவில் ஓடும் கலாஓயா நதி நன்னீருக்கான முக்கிய மூலமாகும். இந்த விசாலமான இடுகாடு ஏறக்குறைய 4 ஏக்கர் பரப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 1.5 முதல் 2 மீட்டர் தூரத்திற்கு ஒரு புதையல் குழி வீதம் 8,000 தாழிப் புதையல்கள் காணப்படுகின்றன. சராசரியாக ஒரு புதையல் குழியில் 1.6 தனிநபர்களின் படி இங்கே 10,000-12,000 மக்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இடுகாட்டை உபயோகித்த மக்களின் குடியிருப்பு இந்த இடுகாட்டிற்குச் சமீபத்தில்தான் இருக்க வேண்டும். இந்த இடுகாட்டிற்குக் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் பழைய பௌத்த விகாரையான ‘கல்கே விகாரை’ காணப்படுகிறது.
இந்த இடத்தில் முதன் முதலாக 1924இல் A.M. ஹோகார்ட் ஒரு புதைகுழியைக் கண்டுபிடித்தார். 1956ஆம் ஆண்டில் தொல்லியல் திணைக்களத்தினருக்காக டாக்டர் ராஜா டி சில்வா அகழ்வுகளை மேற்கொண்டு பல தாழிகளை வெளிக்கொணர்ந்தார். அவரது ஆய்வு இவ்விடத்தில் ஏராளமான தாழிகளைக் கொண்ட தென்னிந்திய இரும்புக் காலத்துடன் தொடர்புடைய ஓர் இடுகாட்டு வளாகம் (Burial Complex) இருப்பதைக் காட்டியது (Deraniyagala, P.E.P. 1957:8; 1958: 16-17).
இலங்கையின் வரலாற்றுதய காலத்தைப் பற்றிய கற்கைக்கு இந்த இடுகாட்டு வளாகங்களைப் பற்றிய புரிந்துணர்வு இன்றியமையாததாகத் தோன்றுகிறது. 1967, 1970 ஆம் ஆண்டுகளில் நாங்கள் பார்வையிட்ட ஐந்து இடங்களில் பொம்பரிப்பு, அதனுடைய பரப்பினாலும், ஏற்கனவே அது பற்றிய தகவல்கள் இருப்பதாலும் அகழ்வாய்வு செய்வதற்குப் பொருத்தமான இடமாகப்பட்டது.
புதையல்கள்
குழம்பியிராத புதையல்கள் உள்ள ஒரு பகுதியில் 100 மீ x 100 மீ. பரப்பு (100 சதுர மீட்டர்) அளந்து குறிக்கப்பட்டு அதனுள் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தளத் திட்டம், படங்கள் வரைதல், குழிகள் தோண்ட வேண்டிய இடங்கள் அனைத்தும் டாக்டர் பென்னெட் புரொன்ஸனால் மேற்கொள்ளப்பட்டன.
மொத்தத்தில் A முதல் N வரை குறிக்கப்பட்ட 14 புதையல்கள் அகழ்வு செய்யப்பட்டன. அவற்றில் குறைந்தது 23 பேர் புதைக்கப்பட்டிருப்பார்கள். இந்த இடுகாட்டு வளாகத்தையும், அதில் புதையுண்ட சமூகத்தையும் பற்றிய உறுதியான முடிவுகளைப் பெறுவதற்கு இது போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயமாகக் கூற முடியும். எல்லாப் புதையல்களும் பல தலைமுறைகளைக் கொண்டிருந்த போதிலும், ஒரே பண்பாட்டு அம்சங்களையே வெளிப்படுத்துகின்றன.
பொம்பரிப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் A முதல் N வரை இலக்கமிடப்பட்ட 14 அகழ்வுக் குழிகளில் பெரிய தாழிகளும் அவற்றுள்ளே புதைக்கப்பட்டவர்களின் எலும்புகளும், அல்லது உடைந்த தாழிகளும் அவற்றோடு உடைந்த எலும்புத் துண்டுகளும், சிறிய பாத்திரங்களும், கறுப்பு-சிவப்பு மற்றும் பலவகையான மட்பாண்டங்களும், செப்புக் கம்பிகள், மணிகள், நெய்த பருத்தித் துணித்துண்டுகள், செப்புக் காப்புகள், செப்பு வளையல்கள், இரும்புக் கத்திகள், இரும்பு வேல் ஆகிய பல பொருட்களும் ஈமப் படையல்களாகக் காணப்பட்டன.
அடக்கம் செய்யும் நடைமுறைகளைப் பொறுத்த வரையில் ஒரு பொதுவான முறை வெளிப்படுகிறது. எல்லாப் புதைகுழிகளிலும் (புதைகுழி A ஒன்றைத் தவிர) தாழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு குழியிலும் ஒன்று முதல் பல தாழிகள் காணப்படுகின்றன. குழிகள் அனைத்தும் சுண்ணாம்புப் பாறாங்கற்களால் மூடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பெரிய தாழியும் 40 முதல் 90 செ.மீ. விட்டம் கொண்டவை. எலும்புகளும், ஈமப் பொருட்களும் தாழியின் அடியில் வைக்கப்பட்டிருக்கின்றன. புதைக்க முன்னர் எலும்புகள் பிரிக்கப்பட்டு, முழுமையற்று இருக்கின்றன. இறந்த பின்னர் உடல்கள் சில நாட்கள் வெளியே வைக்கப்பட்டிருந்த பின்னரே புதைக்கப்பட்டிருக்கின்றன. சிறு பிள்ளைகளைப் பொறுத்த வரையில் அவர்களின் உடல்கள் தீக்கிரையாக்கப்பட்ட பின்னர், பாதி எரிந்த நிலையில் புதைக்கப்பட்டிருக்கின்றன. கபாலங்கள் தனியாக கறுப்பு-சிவப்பு மட்பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் இருவரின் எலும்புகள் ஒரே தாழியில் வைக்கப்பட்டிருக்கின்றன. தாழிகளில் எலும்புகளும், ஈமப் பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும் ஒழுங்குமுறை, இது திட்டமிட்டு நிதானமாக இப்படி இருக்கவேண்டுமென்றே வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. புதைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கிடையிலான பரஸ்பர உறவைக் கண்டுபிடிக்கக்கூடிய சான்றுகள் ஏதுமில்லை.
இத்தாழி அடக்கங்களில் சமூக பொருளாதார நிலைகளுக்கேற்ப வேறுபாடுகள் இருந்திருக்க வேண்டும். நாங்கள் அகழ்ந்த குழிகளில் அதற்கான சான்றுகளை உறுதியாகக் காணமுடியவில்லை. அடக்கக் குழிமீது மிக உயரமாக அமைக்கப்பட்ட மண்மேடுகள் சமூகத்தில் உயர்நிலைகளைக் கொண்டவர்களின் புதையல்களாக இருக்கலாம்.
தாழிப்புதையல் பொருட்கள்
எங்களது 1970ஆம் ஆண்டு அகழ்வில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான தாழிப்பொருட்களே கிடைத்தன. அதிகமான பொருட்கள் அணிகலன்களான மணிகள், வளையல்கள், காப்புகள், ஊசிகள் என்பனவாகும். மெல்லிய செப்புத் தண்டுகள் கோலம் பூசுவதற்காக (Kohl Sticks) உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம். நாங்கள் அகழ்ந்த புதையல்கள் குறைவாக இருந்தமையால் இப்பண்பாட்டின் முழுமையான கற்கையைப் பெற முடியவில்லை.
இரும்புப் பொருட்கள்
இந்த அகழ்வில் மூன்று இரும்புப் பொருட்கள் மட்டுமே கிடைத்தன. முழுமையான இலை வடிவான ஓர் இரும்புக் கத்தி கிடைத்தது. மற்ற இரு இரும்புப் பொருட்களும் உடைந்த துண்டுகளாக இருந்தன.
செம்புப் பொருட்கள்
செம்பினால் செய்த, செம்புடன் உலோகக்கலவை செய்யப்பட்ட பொருட்கள் இரும்புடன் ஒப்பிடும்போது அதிகமாகக் கிடைத்தன. இவற்றில் ஏழு பொருட்களை எங்கள் பல்கலைக்கழக அருங்காட்சியக ஆய்வகத்திற்கு அனுப்பிப் பரிசோதித்ததில் செம்புடன் சிலவற்றில் தகரமும் ஈயமும், சிலவற்றில் ஈயம் மட்டும் கலக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த உலோகங்களின் விகிதாசார அளவுகளைக் காட்டும் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படவில்லை.
அகழ்வுகளில் கண்ட செப்புப் பொருட்கள்:
(1) செப்பு மணிகளால் செய்யப்பட்ட 23 கழுத்தணிகள். இம்மணிகளைத் தொடுத்த நூல்கள் இன்னும் மணிகளோடு இணைக்கப்பட்டிருந்தன. மணிகள் 4 மி.மீ. நீளமும், 4 மி.மீ. விட்டமும், 2 மி.மீ. துவாரத்தையும் கொண்டிருந்தன.
(2) பல வகையான செப்பு வளையல்கள்: வெவ்வேறு தடிப்புகளில், உள் விட்டம் 45 மி.மீ. கொண்டவை. இவை தவிர உடைந்த வளையல் துண்டுகள் காணப்பட்டன.
(3) நுனிகள் தடித்த செப்புத் தண்டுகள், உடைந்த செப்புத் தண்டுகளின் துண்டுகள். இவை கோலக்குச்சிகளாக இருக்கலாம்.
(4) நீண்ட செப்பு ஊசிகள் – பல அளவுகளில்: 190 மி.மீ., 160 மி.மீ., 28 மி.மீ., 12 மி.மீ. நீளமானவை.
(5) 15 துண்டுகளாகப் போயிருந்த அடையாளம் தெரியாத செப்புப் பொருள்.
மணிகள்
மொத்தமாக 171 மணிகள் கிடைத்தன. இவற்றில் ஒன்றைத் தவிர மிகுதி அனைத்தும் புதையல்களிலிருந்தே பெறப்பட்டன. ஏராளமான மணிகள் கிடைப்பதற்கான காரணம் தனிப்பட்ட நகைப் பொருட்களை இறந்தவர்களுடன் புதைக்க வேண்டும் என்ற செயலுக்குக் கொடுத்த முக்கியத்துவமாகும். மணிகள் சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள், பச்சை, சாம்பல், பழுப்பு நிறங்களில் காணப்பட்டன.
கற்கருவிகள்
எல்லாமாக ஏழு கல் செதில்களும், கல் கருவிகளும் காணப்பட்டன. இவற்றில் சில குழியின் அடியில் தாழிக்குடங்களுக்குக் கீழே காணப்பட்டன. கல் செதில்கள் மண்ணிற மஞ்சள் சேட் கல்லினால் (Chert) ஆனவை. இரு நுண்கற்கருவிகள் (Microliths) சேட், குவார்ட்ஸ் கற்களினால் செய்யப்பட்டவை.

1970 பொம்பரிப்பு அகழ்வில் கண்ட முழுமையான தாழி. Image Source: Bennet Bronson.

கொழும்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொம்பரிப்புத் தாழி (முன்னர் ராஜா டி சில்வாவின் 1956 ஆம் ஆண்டு அகழ்வில் பெறப்பட்டது).
மட்பாண்டங்கள்
பொம்பரிப்பு மட்பாண்டங்கள் அனைத்தும் ஈமப் பாண்டங்களாகும் (Funerary Pottery). ஆகவே அவற்றின் தொகையும், பல்வகை வேறுபாடும் புதையல் சார்ந்த வரம்புகளால் நிபந்தனைக்குட்பட்டது. மட்பாண்டங்களின் வடிவங்களும், உருவங்களும் ஈமச்சடங்கு நோக்கங்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருந்தன. தட்டுகளும், கிண்ணங்களும் ஈமப் பொருட்களைக் கொள்ளும் பாத்திரங்களாக மட்டும் அல்லாது, தாழிகளின் மூடிகளாகவும் உபயோகப்படுத்தப்பட்டிருந்தன.
இப்புதையல்களில் இருவகையான மட்பாண்டங்கள் காணப்பட்டன. பெரிய தாழிகள் புதையல்களின் கொள்கலன்களாகவும், தட்டுகளும், பெரிய அகன்ற கிண்ணங்களும் அவற்றை மூடவும், ஈமப் பொருட்களின் கொள்கலன்களாகவும் பாவிக்கப்பட்டன. மற்றைய வகை மட்பாண்டங்கள் உருவத்தில் சிறியனவாக, தாழிகளுக்குள்ளே வைக்கக்கூடிய அளவில் இருந்தன. மண்டையோட்டுக் கபாலத்தை வைத்திருந்த அனைத்து மட்பாண்டங்களும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களாகவே இருந்தன. இவற்றை அடக்கம் செய்ய கறுப்பு-சிவப்பு மண்பாண்டங்களை உபயோகிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட முன்னுரிமை இருப்பதாகத் தோன்றியது.
மட்பாண்டங்கள் எளிமையானவையாகவும், நுட்பங்கள், நுணுக்கங்கள் இல்லாமலும் காணப்பட்டன. அவை ஒரே சீராக கரடுமுரடானதாக மணலும் கற்களும் மேற்பரப்பில் தெரியுமாறும் இருந்தன. சில மட்பாண்டங்கள் சில்லில் வனைந்தும், சில கைகளினால் செய்யப்பட்டும் காணப்பட்டன. பொதுவாக நடைபெறுவது போல, கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களை தலைகீழாகப் புரட்டி சூளையில் சுடும்போது கலன்களின் உட்பக்கமும், வெளிப்பக்கத்தின் கழுத்துப் பகுதியும் உயிரகவாயுக் குறைவினால் கறுப்பு நிறமாக வர, வெளிப்புறத்தின் மிகுதிப் பகுதிகள் உயிர்வாயு ஏற்றப்பட்டு (Oxidized) சிவப்பு நிறம் அடைகின்றன. தென்னிந்திய கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களைப் போல அவற்றின் வெளிப்பகுதி மெருகிடப்பட்டோ, மினுமினுப்பூட்டப்பட்டோ இருக்கவில்லை.
மத்திய அளவான மட்பாண்டங்களில் சுடப்பட்டபின் வரையப்பட்ட ஆறு வகையான குறியீட்டு அடையாளங்கள் (Post-firing Graffiti Symbols) காணப்பட்டன. இவ்வகையான குறியீட்டு அடையாளங்கள் பொம்பரிப்பில் மட்டுமல்லாது அநுராதபுரம் கெடிகே அகழ்வுகளில் கண்ட மட்பாண்டங்களிலும் (Deraniyagala, 1972), கந்தரோடை மட்பாண்டங்களிலும் காணப்படுகின்றன (Kantarodai report to be published shortly., Vimala Begley 1981: Page 85).
மட்பாண்ட வகைகளை பல வகையான கிண்ணங்கள், தட்டுகள், குடுவைகள், சாடிகள், வட்டத் திருகணிகள் (Ring Stands), ‘பேசின்கள்’, பெரிய தாழிகள் எனப் பிரிவுபடுத்தலாம். பெரிய தாழிகள் வெவ்வேறு அளவுகளில் காணப்பட்டன. அவற்றின் விட்டம் 40 செ.மீ. முதல் 90 செ.மீ. வரை வெவ்வேறு அளவுகளில் காணப்பட்டன. தாழிகளின் வெளிப்பகுதி பெரும்பாலும் கரடுமுரடானதாக கற்களையும், மணலையும் கொண்டிருந்தது. (முன்பு 1956 இல் இங்கே ராஜா டி சில்வா அகழ்ந்தெடுத்த சில தாழிகளின் வெளிப்பகுதி களி மண்ணினால் சீராகப் பூசப்பட்டு இணைக்கோட்டு வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது).
தொகுப்புரை
பொம்பரிப்பு அகழ்வாய்வில் நாங்கள் மேற்கொண்ட முக்கிய நோக்கங்கள் ஓரளவுக்கு நிறைவேறியுள்ளன. இந்த மையத்தின் தன்மை மற்றும் அதன் விஸ்தீரணம் குறித்த புரிதலை எட்ட முடிந்தது. அத்துடன், அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை, இடுகாடு பரவியுள்ள நிலப்பரப்பு மற்றும் வரும் காலங்களில் விரிவான முறையில் அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் போன்ற விடயங்கள் தொடர்பான தெளிவான பார்வையைப் பெறக்கூடியதாக இருந்தது. இங்கே தீர்வு காணப்படாத பிரச்சினை பொம்பரிப்புப் புதையல்களை கலாசார மற்றும் காலவரிசைச் சூழலில் எந்த இடத்தில் வைப்பது என்பதுதான்.
(இந்த அகழ்வு மேற்கொண்ட காலத்தில் பொம்பரிப்பின் காலம் கணிப்பிடப்படவில்லை. பின்னர் மேற்கொண்ட கதிரியக்கக் கரிம ஆய்வுகளில் பொம்பரிப்பு மயானபூமி கி.மு. 900ஆம் ஆண்டுக் காலகட்டத்திற்கு உரியது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது – பிரிஷாந்த குணவர்த்தன, 2018: பக். 4.)
இந்தப் புதையல்களில் இரும்புப் பொருட்களும், அவற்றோடு கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும் இடம்பெறுவது தென்னிந்திய இரும்புக்கால பெருங்கற் கலாசாரத்திற்கு ஒப்புமையுடைய பண்பாகத் தெரிகிறது. இந்த இரு பண்பாடுகளும் ‘மரபுவழி’ உறவானது என அனுமானிப்பது நியாயமானதாக உள்ளது. மட்டுமல்லாது, பொம்பரிப்பு இடுகாடு இந்திய உபகண்டத்தின் தெற்குப் பகுதியில் முகிழ்த்த ஆதி இரும்புக்கால அடக்கச் சடங்கின் ஒரு பகுதியேயாகும்.
பொம்பரிப்பின் மிகப் பெரிய தொடர்புகள் தென்னிந்தியாவின் கிழக்குக்கரை மையங்களுடனானது. பொம்பரிப்பில் இரும்பு குறைவாகவே காணப்படுகிறது. தென்னிந்திய மையங்களோடு ஒப்பிடும் போது கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் சொரசொரப்பாகவும், பளபளப்பாக மெருகேற்றப்படாமலும் காணப்படுகிறது.
தென்னிந்தியாவின் பெருங்கற் பண்பாட்டு ஈமப்புதையல்களை அடையாளம் காண்பதற்குரிய மிக முக்கியமான அம்சம் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களாகும். இலங்கையில் தென்னிந்திய வகை கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் அநுராதபுரம் கெடிகேயிலும் (Deraniyagala, 1972), கந்தரோடையிலும் (Forthcoming Ancient Ceylon) காணப்படுகின்றன. இதைக் கருத்தில்கொண்டு நோக்குமிடத்து பொம்பரிப்பில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களைக் கொண்ட ஈமப்புதையல்கள் இடம்பெறுவது ஆச்சரியப்படுவதற்கில்லை. இங்கே பிரச்சினை இப்புதையல் காலத்திற்கான முழுமையான காலக்கணிப்பை வழங்குவதாகும் (இக்காலம் கி.மு. 900 ஆண்டாகப் பின்னர் கணிக்கப்பட்டுள்ளது). தென்னிந்திய அடக்கப் பாரம்பரியம் மிக நீண்ட காலத்திற்கும், நீண்ட பரப்பளவிற்கும் பரந்திருக்கிறது.
கர்நாடகத்தின் மைசூர் சமவெளி இப்பண்பாட்டின் ஆரம்ப இடமாகத் தெரிகிறது. இப்பண்பாடு, அது பரவிச் சென்ற கடலோரப் பிரதேசங்களுக்குச் சற்று தாமதமாகவே சென்றடைந்துள்ளது. இருப்பினும், அங்கு நிலைபெற்ற பின்னர் மிக நீண்ட காலத்திற்குத் தொடர்ந்திருந்தது. குடியேற்றப் பகுதிகளில் ஆதி இரும்புக்காலம் ஏறக்குறைய கி.மு. 50ஆம் ஆண்டுக்காலத்தில் முடிவுக்கு வருகிறது. ஆனால் கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் உடனடியாக முடிவுக்கு வரவில்லை. ஜெல்லீஸ்வரம், ஜடிஹெனஹல்லி மற்றும் திருநெல்வேலி மையங்களில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் வரலாற்றுக்காலம் வரை நீடித்திருக்கின்றன.
பொம்பரிப்புப் பிரதேசத்தின் இரும்புக்காலத்தை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இடுகாட்டை மட்டும் அகழ்வு செய்வதால் பெறும் தகவல்கள் மட்டும் போதாது. இந்த இடுகாட்டை உபயோகித்த மக்கள் வாழ்ந்த குடியிருப்பைக் கண்டுபிடித்து அங்கே அகழ்வாய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பொம்பரிப்பு ஆய்வின் அடுத்த கட்டம் இந்த இடுகாட்டுடன் தொடர்புடைய குடியேற்றத்தின் இடத்தைக் கண்டுபிடித்து அங்கே அகழ்வுகளை மேற்கொள்வதாகும். அத்துடன், இப்பகுதியில் காணப்படும் குளங்கள் எக்காலத்தைச் சேர்ந்தவை என்பது குறித்தோ, அவற்றின் செயல்பாடுகள் எத்தகையவை என்பது குறித்தோ முறையான தகவல்கள் ஏதும் இதுவரை அறியப்படவில்லை. பொம்பரிப்பிற்குச் சமீபத்திலிருக்கும் கல்கே விகாரை கி.பி. முதலாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக மகாவம்சம் கூறுவதாக வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் (P.E.P. Deraniyagala, 1957). இந்தக் கருத்து தொல்லியல் ரீதியாக ஆய்வு செய்யப்படவில்லை. விகாரை இருக்கும் இடத்திற்குச் சமீபமாக ஒரு குடியிருப்பு இருந்திருக்க வேண்டும். இவற்றை ஆய்வு செய்வதன் மூலம் பொம்பரிப்பின் முழுமையான வரலாற்றை வெளிக்கொணர முடியும்.
(பிலடெல்பியா பல்கலைக்கழகத்தில் விமலா பெக்லி மேற்கொண்ட கலாநிதிப்பட்ட ஆய்வு ‘தென்னிந்தியாவின் ஆதி இரும்புக்காலப் பண்பாடு’ என்பது குறிப்பிடத்தக்கது).

1992 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரிக்கமேட்டு அகழாய்வில் பணியாற்றிய பெண்களோடு சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் விமலா பெக்லி (தொப்பி அணிந்திருப்பவர்).
திருப்புமுனை ஏழு
கலாநிதி ராஜா டி சில்வா: இப்பன்கட்டுவ பெருங்கற் பண்பாட்டுக் கல்லறைப் புதையல்
De SILVA, RAJA (1970-71): ‘Archaeological Excavations at Ibbankattuwa’ Annual Report of the Dept. of Archaeological Survey 1970-71, Colombo.
PREMATILLAKE, LEELANANDA; BANDARANAYAKE, SENAKA; De SILVA, RAJA; DERANIYAGALA, SIRAN U. (Eds.) (2007): History and Archaeology of Sri Lanka: The Art and Archaeology of Sri Lanka, Vol II, The Central Cultural Fund, Ministry of Cultural Affairs, Colombo.
GUNAWARDENA, PRISHANTHA (2018): Ibbankatuwa, Central Cultural Fund, Dept. of Cultural Affairs, Colombo.
——————————————————————-

இலங்கையின் ஆரம்பகால முன்னோடித் தொல்லியலாளர்களில் ஒருவரான கலாநிதி ராஜா டி சில்வா 1967-1979 ஆம் ஆண்டுகளுக்கிடையே தொல்லியல் திணைக்கள ஆணையாளராகப் பணியாற்றியவர். இலங்கையின் தொல்லியல் தலங்களுக்கு – முக்கியமாக சிகிரியா சுவரோவியங்களுக்கு விஞ்ஞான ரீதியான பாதுகாப்பு நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர். சிகிரியா ஓர் அரண்மனை அல்ல, அது ஒரு மகாயான பௌத்த மடாலயம் என ஆதாரபூர்வமாக வாதாடியவர். இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து வேதியியல் இளங்கலைப் பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலைப் பட்டத்தையும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து D.Phil. பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர். 1956ஆம் ஆண்டிலிருந்து பொம்பரிப்புத் தாழிகளையும், 1967ஆம் ஆண்டிலிருந்து யான் ஓயா தாழ்நிலப் பகுதிகளின் கல்லறை மயானங்களையும் அகழ்ந்து வெளிக்கொணர்ந்தவர். 1970ஆம் ஆண்டில் இப்பன்கட்டுவ மயானத்தை முதன் முதலாக அகழ்ந்து கல்லறைகளை வெளிக்கொணர்ந்தவர் ராஜா டி சில்வா.
——————————————————————-
1970ஆம் ஆண்டில் இலங்கையின் தொல்பொருள் திணைக்கள ஆணையாளராகவிருந்த கலாநிதி ராஜா டி சில்வா, இப்பன்கட்டுவ ஈமக்காட்டை இனம்கண்டு அவ்விடத்தின் வடக்குப் பக்கத்தில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார். அந்த அகழ்வுகளின் போது வெட்டிய கற்களால் பெட்டி வடிவில் அமைக்கப்பட்டு மற்றொரு கல் மேசையால் மூடப்பட்ட 20 கல்லறைகள் வெளிக்கொணரப்பட்டன. இக்கல்லறைகள் சில முழுவதும் நிலத்தினுள் புதையுண்டு மேல் மூடி நிலமட்டத்திலும், சில நிலத்தினுள் பாதி புதையுண்டு, மிகுதி வெளியே சிறிய சுவர்கள் போலத் துருத்திக்கொண்டும் இருந்தன.
இப்பன்கட்டுவ பெருங்கற் கல்லறை இடுகாடு குருநாகல் – தம்புல்ல வீதிக்கருகாமையில் தம்புல்ல நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில், கலா ஓயாவின் கிளை நதிகளான தம்புல்ல ஓயா, மல்வத்து ஓயா ஆகியவற்றின் எல்லையில் அழகிய இயற்கைச் சூழலில் ஒரு சதுர கி.மீ. அளவு பரப்பில் அமைந்துள்ளது.
இந்த ஈமப்புதையல் பூமியில் மூன்று தடவை வெவ்வேறு பகுதிகளில் அகழ்வாய்வுகள் நடைபெற்றுள்ளன. 1. 1970 ஆம் ஆண்டில் கலாநிதி ராஜா டி சில்வா மேற்கொண்ட அகழ்வாய்வு, 2. 1982-1990ஆம் ஆண்டுகளில் ஜேர்மன் நாட்டின் காவா நிறுவனம், களனிப் பல்கலைக்கழகம், தொல்லியல் பட்டப்படிப்பு நிறுவனம் என்பன இணைந்து நடத்திய அகழ்வாய்வுகள், 3. மத்திய கலாசார நிதியத்தினால் 2015ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது அகழ்வாய்வு. முதலாவது அகழ்வில் 20 கல்லறைகளும், இரண்டாவது அகழ்வில் 16 கல்லறைகளும், மூன்றாவதில் 26 கல்லறைகளும் வெளிக்கொணரப்பட்டன. இங்கே மொத்தமாக பெட்டிக்கல்லறைகள் (Cist) 42 கூட்டுக்களாக (Clusters), ஒவ்வொரு கூட்டிலும் ஏறக்குறைய பத்துக் கல்லறைகள் வீதம் காணப்படுகின்றன.
இந்த அடக்க முறையில், நீள்சதுரமாக வெட்டிய குழியில் நான்கு பக்கங்களிலும் நான்கு கற்பலகைகள் அடுக்கப்பட்டு, அதன்மேலும் ஒரு கற்பலகை கொண்டு மூடப்படும். இவ்வாறு அமைக்கப்படுகிற இடுகாட்டுப் புதையல்கள் ‘சிஸ்ற் புதையல்கள்’ (Cist Burials) என அழைக்கப்படும். சில சமயங்களில் இரண்டு ‘சிஸ்ற்’ பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் காணப்படும். இப்பன்கட்டுவ இடுகாட்டில் இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்த பின்னர் அச்சாம்பலை கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டத் தாழிகளில் இட்டு, அத்தாழிகளை இக்கல்லறைக் கூடத்தினுள் அடக்கம் செய்த வழக்கமும் உண்டு. அவற்றோடு இறந்தவர்களின் பாவனைப் பொருட்களும் வேறு தாழிகளில் இடப்பட்டு அவை ஈம நிவேதனப் பொருட்களாக அக்கல்லறைக் கூட்டினுள் வைக்கப்பட்டுள்ளன.
இக்கல்லறைகளில் ஈம நிவேதனப் பொருட்களாக கறுப்பு-சிவப்பு மற்றும் பலவகையான மட்பாண்டங்கள், செம்பு கலந்த உலோகங்கள், இரும்புத்துண்டுகள், தங்கம், உணவுக்குப் பயன்படும் தானிய வகைகள், அகேற், சூதுபவளம், குவார்ட்ஸ், கண்ணாடி ஆகியவற்றிலான மணிக்கற்கள் என்பன காணப்பட்டுள்ளன.
இந்த அகழ்வுகளில் கண்ட கறுப்பு-சிவப்பு, செந்நிற மட்பாண்டங்கள் சில்லில் வனைந்து வெளிப்புறம் மெருகூட்டப்பட்டிருந்தமை அக்கால மக்களின் உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பிரதிபலிக்கிறது. கதிரியக்கக் கரிம ஆய்வுகள் இந்தச் இடுகாட்டின் கால வரையறையை (1). கி.மு. 700 முதல் கி.மு. 400 ஆண்டுகளாகவும், (2). கி.மு. 600 முதல் கி.மு. 450 ஆண்டுகளாகவும் கணிப்பிடுகின்றன (Prematilleke, L. et al. 2007).

வெளிப்படுத்தப்பட்ட இப்பன்கட்டுவ இடுகாட்டுக் கல்லறை.
மக்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்த ஈமக் கூடத்தினுள் அடக்கம் செய்யப்படுகின்றன. இறந்தவர் மீண்டும் மறுபிறப்பு எடுத்தால் அடக்கம் செய்யப்பட்ட அப்பொருட்களை அவர் பாவனைக்கு எடுத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பு இது. இதன் பிரகாரம் இங்கே வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த மக்கள் மறுபிறப்பிலும், பூசைகள், சடங்குகள் என்பவற்றிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பது புலனாகிறது.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டத் தாழிகளில், உட்புறம் கறுப்பு நிறமாகவும் வெளிப்புறம் சிவப்பு நிறமாகவும் அமையப்பெற்ற தாழிகளே அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றுடன் சில முழுமையான கறுப்பு நிறத் தாழிகளும், முழுமையான சிவப்பு நிறத் தாழிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டின் அகழ்வுகளில் மட்டும் 112 மட்பாண்டத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த மையத்தின் அகழ்வுகளில் கண்ட ஈமப்புதையல் பொருட்களைக் கொண்டு சமூகத்தில் ஒரு சமூக-பொருளாதார வேறுபாடு இருந்ததைக் காண முடிகிறது. பெரிய அளவிலான மூடப்பட்ட கல்லறையில் கண்ட தங்க அணிகலன்கள், இறக்குமதி செய்யப்பட்ட ஒளிர்மணிகள் என்பன சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஒருவரைக் காட்ட, சிறிய அளவிலான சுட்ட களிமண் மணிகளையும், குறைந்த அளவிலான மட்பாண்டங்களையும் கொண்ட கல்லறைகள் எளிய வாழ்க்கைத்தரம் கொண்ட மற்றொருவரைக் காட்டுகின்றன. இந்த இடுகாட்டிற்குச் சமீபத்தில் காணப்படும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கமும், அங்கே கண்டெடுக்கப்பட்ட நெல் உமிகளும் அவ்விடத்தில் நெல் விவசாயம் நடைபெற்றதை எடுத்துக்காட்டுகின்றன.
1988ஆம் ஆண்டில் இலங்கை மத்திய கலாசார நிறுவனமும் ஜேர்மன் காவா நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் போது இந்த இடுகாட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தம்புல்ல-குருநாகல் பிரதான பாதையில் பொல்வத்த என்ற இடத்தில் இந்த இடுகாட்டுடன் தொடர்புடைய குடியிருப்புகள் இருந்ததாகக் கூறப்பட்டது. குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரமாக மட்பாண்டத் துண்டுகள் அங்கே காணப்பட்டமை எடுத்துக்காட்டப்பட்டது. மட்பாண்டத் துண்டுகள் காணப்பட்ட ஒரு சிறிய பகுதியில் வாழ்ந்த மக்கள் இப்பெரிய கல்லறை இடுகாட்டை நிரப்பியிருப்பார்களா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

கல்லறையினுள் காணப்படும் தாழிப்புதையல்: இப்பன்கட்டுவ கல்லறைப் புதையல் இடுகாடு.
தொடரும்.



