இலங்கையில் கண்ணகி வழிபாடு புகுந்த முறை
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
12 நிமிட வாசிப்பு

இலங்கையில் கண்ணகி வழிபாடு புகுந்த முறை

March 24, 2026 | Ezhuna

இலங்கைத் தமிழர்களிடையே கண்ணகி வழிபாடு என்றும் சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடு என்றும் வழங்கப்பட்டு வரும் வழிபாடுகளுடன் தொடர்புடைய சடங்குசார் நிகழ்த்து கலைகளில் ஒன்றாகவே ‘கொம்புமுறி’ விளையாட்டு இடம்பெற்று வருகின்றது. இக்கொம்புமுறி விளையாட்டு சமயம், கலை ஆகிய இரு துறைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இது சிங்களவர்களால் ‘அங்கெலிய’ என்று அழைக்கப்படுகின்றது. இந்நிகழ்வு ஆடி மாதத்தில் அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதியில் நிகழ்த்தப்படுவது வழக்கம். தமிழர்களின் கொம்புமுறிக்கும் சிங்களவர்களின் அங்கெலியவிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பினும் அவை தமக்கிடையே தனித்துவமான பண்புகளையும் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் கண்ணகி வழிபாட்டிற்கும் அதனுடன் தொடர்புடைய நிகழ்த்து கலையான கொம்புமுறி விளையாட்டுக்கும் இடையிலான தொடர்பினையும், அதன் சமுதாய மானிடவியல் பின்புலத்தினையும், கொம்புமுறி விளையாட்டின் சடங்குசார் நிகழ்த்துகலை முறைமையினையும், தமிழ் – சிங்கள கொம்புமுறி விளையாட்டுகளுக்கு இடையிலான ஒற்றுமை – வேற்றுமைகளையும் ஆராய்வதாக ‘கொம்புமுறி விளையாட்டு: இலங்கையில் கண்ணகி – பத்தினி வழிபாட்டின் எச்சம்’ எனும் இத்தொடர் இடம்பெறுகின்றது.

சிலப்பதிகாரம் என்பது தமிழர் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்ற ஓர் இலக்கியமாகும். சிலம்பில் கண்ணகி ஒரு வழிபாட்டுத் தெய்வமுமாகிய நிலையில் இலக்கிய வாழ்விற்கான தளமும் வாய்ப்பாகின்றது. தமிழ்ச் சூழலில் சிலப்பதிகாரம் என்ற சொல்லாடல் மூன்று நிலைகளில் நிலைபெற்று நிற்கின்றது. முதலாவது அதனுடைய காவியத்தன்மை, இரண்டாவது அதனுடைய பொதுமக்கள் மயப்பாடு, மூன்றாவது அது சடங்காசாரத்துடன் இணைந்த நிலை. இந்த மூன்று நிலைகளையும் தாண்டி இன்னொரு தளமும் அதற்குண்டு. அது தமிழர்கள், மலையாளிகள், சிங்களவர்கள் ஆகிய இனங்களிடையேயும் பரவலாகச் செல்வாக்குப் பெற்றுள்ளது.1 ஆகையினாலேதான் வேறு எந்த இலக்கியப் பிரதிக்குமில்லாத பன்முகத்தன்மை சிலப்பதிகாரக் கதைமரபிற்கு உண்டு. 

தாய்த்தெய்வ வழிபாட்டுமுறையானது பண்டைக்காலம் தொட்டு எல்லாச் சமூகங்களிலும் இருந்து வந்திருக்கிறது. இதனாலேதான் பெண்தெய்வங்களும் அத்தெய்வங்களின் வழிபாட்டு முறைகளும் மிகக்கூடுதலான இடத்தை பண்டைக்கால மக்களிடையே பெற்றுக்கொண்டுள்ளன. பெண்ணைத் தெய்வமாகக் கொண்டு வணங்கும் முறை திராவிடரிடையே ஆழமாக வேரூன்றுவதற்கு தாய்த்தெய்வ வழிபாட்டு முறையே காரணமாயிருந்திருக்க வேண்டும். திராவிடப் பண்பாடும் ஆரியப் பண்பாடும் கலந்து உருவான இந்து சமயத்திலே தாய்த்தெய்வ வழிபாடான சக்தி வழிபாடு என்பது, சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. சக்தியின் அம்சமாகவே பெண் தெய்வங்கள் அனைத்தும் தோற்றம் பெறுகின்றன. கொற்றவை, மாரி, ஐயை போன்ற பெண் தெய்வங்களனைத்தும் சக்தியின் அவதாரமாகவே கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நிலையிலேதான் கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வமாம் கண்ணகிக்கும் வழிபாடு தோன்றியிருக்க வேண்டும்.

இளங்கோவடிகள் கண்ணகி வரலாற்றிற்குக் காவிய வடிவம் கொடுப்பதற்கு முன்பே பண்டைக்கால மக்களிடையே இக் கண்ணகிக் கதை  மரபுகள் வழங்கி வந்துள்ளன என்பதற்குச் சான்றுகள் பல காணப்படுகின்றன. கண்ணகி கதைமரபின் மூலக்கூறுகள், சங்க இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. நற்றிணைப் பாடலொன்றும்2 புறநானூற்றுப் பாடல்களும்3 பதிற்றுப்பத்தின் பதிகமும்4 இக்கருப்பொருளை விளக்கி நிற்கின்றன. வடமொழியில் ஒருமை மகளிர் எனப்பட்ட கற்புடைப்பெண்டிர் பலர் உளர். தமிழ் மொழியில் அத்தகைய ஆற்றல் படைத்த ஒருவளே கண்ணகி ஆவாள்.5  

தமிழகத்தில் சிலப்பதிகாரக் காலத்திலிருந்து கொற்றவை கண்ணகியாக வணங்கப்பட்டிருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதையிலே கொற்றவை, காளி என்னும் தெய்வங்களோடு கண்ணகியின் தோற்றம் ஒப்பீடு செய்யப்பட்டிருப்பது இதற்குச் சான்றாக அமைகின்றது. எனவே சிலப்பதிகாரக் காலத்தில் இருந்து கொற்றவை, காளி ஆகிய தெய்வங்களின் அம்சங்கள் கண்ணகியோடு சேர்க்கப்பட்டும் கண்ணகி வழிபாடு தோற்றம் பெற்றிருக்கலாம்.6  

தமிழ் மக்களிடையே மிகப்பழங்காலந் தொட்டுப் பத்தினித்தெய்வ வழிபாடானது நிலவி வருகின்றது. கண்ணகி வழிபாடு பண்டைய தமிழகத்தையும் ஈழத்தையும் இணைக்கும் வழிபாடு மட்டுமன்றிச் சிங்கள – தமிழ்க் கலாசாரங்களை ஒன்று சேர்த்து நிற்கும் வழிபாடும் இஃதென்றால் மிகையாகாது.7 சோழ மண்டலத்துக் கண்ணகி பாண்டிய மண்டலத்தில் வீரக் கற்பரசியாகி, சேர மண்டலத்திலே பத்தினித் தெய்வப் படிமம் சார்ந்து, ஈழ மண்டலத்துச் சிங்களவரிடைப் பத்தினி தெய்யோ எனப் பெயர்பெற்று, மட்டக்களப்புத் தமிழகத்திலே கண்ணகை அம்மன் ஆகி விளங்குகின்றாள்.8

கண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி ஆராய்வதற்கான இலக்கிய ஆதாரங்களுள் ஐம்பெருங் காப்பியங்களுலொன்றான சிலப்பதிகாரமும் ஒன்றாக விளங்குகின்றது. சிலப்பதிகார இலக்கியத்தின் வழி இரு நிலைகளில் கண்ணகி வழிபாடு இலங்கைக்குப் பரவிய செய்தி குறிப்பிடப்படுகின்றது.9 சேரன் செங்குட்டுவன் சேரநாட்டில் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கைக் கயபாகு மன்னன் கலந்து கொண்டதாகவும் அவனால் கண்ணகி வழிபாடு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரையிலும், வரந்தரு காதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரை,        

“அது கேட்டுக் கடல் சூழ் இலங்கைக் கயவாகுவென்பான் நங்கைக்கு நாட்பலி 

பீடிகைக் கோட்டமுந் துறந்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென 

ஆடித்திங் கலகவயினாங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப 

மழை வீற்றிருந்து வளம்பலபெருகிப் பிழையா விளையு நாடாயிற்று.10

எனக் குறிப்பிடுகின்றது. இது போலவே சிலப்பதிகாரத்தின் வரந்தருகாதை, 

“வலமுறை மும்முறை வந்தனள் வணங்கி

உலக மன்னவன் நின்றோன் முன்னர்

அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்

பெருஞ் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும்

குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்

கடல் சூழிலங்கைக் கயவாகு வேந்தனும்

எந்நாட்டாங்கண் இமய வரம்பின்

நன்னாட் செய்த நாளணி வேள்வியில்……….11

சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரில் கண்ணகி சிலையைப் பிரதிஷ்டை செய்தபோது, இலங்கை மன்னன் கயபாகுவும் பிரசன்னமாகியிருந்தான் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. இது போன்றே பாண்டியன் வெற்றிவேற் செழியனும் சோழன் பெருங்கிள்ளியும் கொங்கிளக்கோசரும் மாளுவவேந்தரும் பங்கேற்றுக்கொண்டு தத்தம் நாடுகளிற்கும் கண்ணகியை எழுந்தருளுமாறு வேண்டி நின்றனர் என்ற செய்தியும் கிடைக்கப்படுகிறது. கயபாகு மன்னன் சேர நாட்டிலிருந்து கண்ணகி வழிபாட்டினைக் கொண்டுவந்த நிகழ்வினைச் சிங்கள வரலாற்று நூல்களும் இலக்கிய நூல்களும் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, ராஜாவலிய, பூஜாவலிய முதலான வரலாற்று நூல்களும் கஜபாகதாவ, கோகிலசந்தேச, பரக்கும் பாசிரித்த முதலிய இலக்கிய நூல்களும் குறிப்பிடுகின்றன.12

ராஜாவலிய, கோகிலசந்தேச, சிங்கள இராஜரத்தினாகர, பரக்கும் பாசிரித்த போன்ற நூல்கள் சிலப்பதிகாரத்தினின்று சிறிது வேறுபட்ட கதையினைக் கூறுகின்றன. கயபாகு மன்னன் கண்ணகியின் காற்சிலம்புடன் பிற அணிகலன்களையும் நான்கு கோயில்களின் தெய்வங்களையும் ஆயுதச் சின்னங்களையும் வலகம்பாகு காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட புனிதப் பாத்திரத்தினையும் பெற்றுக்கொண்டு இலங்கைக்குக் கொண்டு வந்து கண்ணகி வழிபாட்டினைத் தோற்றுவித்தான் எனக் கோகிலசந்தேச கூறுகின்றது. ராஜாவலிய, கயபாகு கண்ணகி சிலையினைக் கொண்டுவந்த போது 24,000 கைதிகளையும் கொண்டுவந்தானென்றும் அவர்களை அலுத்குரு, சாரசியபத்து, யட்டிநுவரை, தும்பறை, ஹேவாஹட்டை, பன்சியபத்து, எகொடதிக, மெகொடதிக என்னும் இடங்களிலே குடியமர்த்தினான் என்றும் செய்திகளைத் தருகின்றது. இவ்விடங்களில் இன்றும் கண்ணகி வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சிங்கள ராஜரத்தினாகர (16 ஆம் நூற்றாண்டு) கஜபாகு சோழநாட்டை வென்று 12,000 சோழக்கைதிகளைச் சிறைப்பிடித்துக் கொண்டுவந்தமை, புத்ததாது சின்னத்தைக் கொண்டுவந்தமை ஆகிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது. கயவாகு சோழநாட்டிற்குச் சென்று 24,000 பேரைக் கொண்டு வந்த செய்தியைப் பரக்கும் பாசிரித்த (15 ஆம் நூற்றாண்டு) என்ற இன்னோர் சிங்கள நூலும் வர்ணிக்கிறது. சிங்கள கஜபாகதா (கயவாகு கதை) என்ற நூலில் ‘மடு உபத்த’ என்ற பத்தினியின் கிரியைகள் பாடப்படுகின்றன. அந்நூலில் பத்தினியின் வழிபாட்டை ‘சேரமான் ராஜீ’ (சேரமான் அரசன்) என்பவனே அறிமுகம் செய்தான் எனக் கூறுகின்றது. இந்தச் சேரமான் ராஜீ வேறு யாரும் அல்லன். அவன் சேரன் செங்குட்டுவனாகத்தான் இருக்க வேண்டுமென்பது தெளிவு.13 

மேலும் திக்கவெவ என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுத்த கண்ணகி, கோவலன் சிலைகள் கயவாகு வேந்தனால் கொண்டுவரப்பட்டவையென ஹென்றி பாக்கர் அபிப்பிராயப்படுகின்றார்.14 

மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின்படி இலங்கையில் கண்ணகி வழிபாடானது சேர அரசுடனான தொடர்பினாலேயே பரவியதென அறிய முடியும். ஆனால் கண்ணகி வழிபாடு சேர அரசுடனான தொடர்பின்றிப் பாண்டிய அரசுடனான தொடர்பினாலேயே ஏற்பட்டிருக்க வேண்டுமென்றும் அறிஞர்கள் கூறுவர்.15  

கண்ணகி வழிபாடானது கயபாகு மன்னன் காலத்தில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட முன்னரே, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பண்டைக்காலந்தொட்டு நெருங்கிய தொடர்புகள் இருந்திருக்கின்றன. முன்னர் தமிழகமும் இலங்கையும் இணைந்த நிலப்பரப்பாக இருந்தன என்றும், பின்னர் கடல்கோளினால் இவை இரண்டு தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன என்றும் கருதப்படுகின்றன. இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாரிற்குமிடையே ஆழமற்ற கடற்சந்தி ஏறத்தாழ 32 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கின்றது. சிலப்பதிகாரத்தின் பின்வந்த காப்பியமான மணிமேகலையில் கடல்கோள் இடம்பெற்ற குறிப்பு உள்ளது. சங்கப்பாடல்களுள் ஈழத்துப் பூதன்தேவனார் என்ற இலங்கையைச் சேர்ந்த புலவரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மகாவம்சத்திற்கூடச் சங்ககாலத்துடன் தொடர்புடைய பல கதைகள் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடியும். உதாரணமாக எல்லாளனைப் பற்றி மகாவம்சம் தரும் செய்தி தமிழக மனுநீதிகண்ட சோழனின் கதையை ஒத்துக் காணப்படுகிறதைக் காணலாம். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்தது பற்றிக் கூறும் செய்தி தமிழகத்தில் வேரூன்றியிருந்த பெருங்கற்காலக் கலாசாரத்தின் அம்சமாகிய நடுகல் வழிபாட்டம்சத்தையே குறிக்கின்றது. ஈழத்திலும் பெருங்கற்காலக் கலாசாரத்தின் ஓர் அம்சமாக நடுகல் வழிபாட்டு முறை விளங்கியிருப்பதை தொல்லியற் சான்றுகள் உறுதி செய்கின்றன.

தமிழகத்தில் தோன்றிய கண்ணகி வழிபாடு இலங்கை – இந்திய அரசியல், கலாசார உறவு முறையினாலும், வணிக நடவடிக்கைகளினாலும் இலங்கையில் பரவியிருக்கலாம். இவ்வாறிருக்க கண்ணகி வழிபாட்டை இலங்கைக்குக் கொண்டுவந்தவன் கயபாகு மன்னனே என்று சிலப்பதிகாரம், ராஜாவலிய, பூஜாவலிய, கோகிலசந்தேச, பரக்கும் பாசிரித்த போன்ற நூல்கள் கூறிநிற்க, மகாவம்சத்திலும் தீபவம்சத்திலும் கஜபாகு பற்றிய குறிப்பு இருந்தபோதும் தமிழகத்திலிருந்து கண்ணகி வழிபாட்டைக் கொண்டுவந்த செய்தி அவற்றில் சொல்லப்படவில்லை.16 மகாவம்சம், தீபவம்சம் பேன்ற நூல்களில் இடம்பெறாத பல முக்கியச் சம்பவங்கள், குறிப்புகள் உண்மைக்குப் புறம்பானவை அல்ல என்பதைப் பேராசிரியர் உ. வில்லியம் கைகர் போன்ற வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வர். 

மேற்கூறிய பின்னணியில் நோக்குகின்ற போது ஈழத்தில் கண்ணகி வழிபாடு கயபாகு காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ புகுத்தப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகின்றது.

அடிக்குறிப்புகள்

1.  வெல்லாவூர்க் கோபால், (2018), கண்ணகி வழிபாடு பார்வையும் பதிவும், பேராசிரியர் மகேஸ்வரனின் அணிந்துரை, பக்.11.

2. நற்றிணை: 216 ஆம் பாடல்.

3. புறநானூறு: 144,145 ஆம் பாடல்கள்.

4. பதிற்றுப்பத்து: ஐந்தாம்பத்தின் பதிகம்.

5. மு., இராகவஐயங்கார் (1959), கட்டுரை மணிகள், விஜயா பிறின்டஸ், மதுரை, பக்.48

6. எம்., சற்குணம் (1976), ஈழத்தில் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், திருக்கேதீச்சர குடமுழுக்கு விழா மலர், திருக்கேதீச்சரம், பக். 113.

7. க., சிற்றம்பலம் (1996), ஈழத்து இந்துசமய வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம், பக்.255.

8. வி.சீ, கந்தையா (1964), மட்டக்களப்புத் தமிழகம், ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், யாழ்ப்பாணம், பக்.153.

9. வ., மகேஸ்வரன் (2016), பெரியதும் சிறியதும், குமரன் அச்சகம், கொழும்பு, பக்.57.

10. சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம் உரைபெறு காதை.

11. சிலப்பதிகாரம், வரந்தருகாதை, 155-162.

12. இரா.வை, கனகரத்தினம் (2016), ஈழத்து நாட்டார் வழிபாடு, தமிழ்த்துறை வெளியீடு, பேராதனைப் பல்கலைக்கழகம், பக்.3.

13. த., கனகரத்தினம் (1989) சிலப்பதிகாரமும் ஈழமும், ஏழாவது உலகத் தமிழாராட்சி மாநாடு கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள், மொரீசியஸ், பக்.223.

14. க., மகேஸ்வரலிங்கம் (1996), மட்டக்களப்பு சிறுதெய்வ வழிபாடு ஓர் அறிமுகம், தில்லை வெளியீடு, மகிழடித்தீவு, பக்.27.

15. Anuradha Seneviratna (2013), Manifestation of Goddess Pattini in Sri Lanka Society, சிலப்பதிகாரப் பண்பாட்டுக் கோலங்கள். இந்து சமய கலாசார அமைச்சு, கொழும்பு, பக்.92.

16. ச., நல்லலிங்கம் (2007), இளங்கோவின் பத்தினிதெய்வப் படைப்பு, அண்ணா பதிப்பகம், சென்னை, பக்.28.



About the Author

கிருபாகரன் கவிதாஞ்சன்

கிருபாகரன் கவிதாஞ்சன் மட்டக்களப்பு மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு இளங்கலைமாணிப் பட்டத்தையும் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை மாணிப் பட்டத்தையும் பெற்றவர் ஆவார்.

தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முது தத்துவமாணிப் பட்டத்திற்கான ஆய்வாளராக தொடர்ந்தும் தனது கல்விப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். நாட்டுப்புறவியல், நாடகமும் அரங்கியிலும் ஆகிய துறைகளிலும் பல ஆக்கங்களைத் தற்காலத்தில் எழுதி வருகின்றார். என்பதோடு இவர் சிறந்த மேடை நடிகரும் ஆவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்