கந்தரோடையிலும் வட இலங்கையிலும் கண்ட ஆதிகால நாணயங்கள் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
24 நிமிட வாசிப்பு

கந்தரோடையிலும் வடஇலங்கையின் பிற இடங்களிலும் கண்ட ஆதிகால நாணயங்கள் – பகுதி 1

April 6, 2026 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

அறிமுகம்: இலங்கையில் ஆதிகால நாணயங்கள்

இலங்கையில் காணப்படும் நாணயங்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: ஒன்று உள்ளூர் நாணயங்கள், மற்றது வெளிநாட்டு நாணயங்கள். இலங்கையில் தொல்லியல் அகழ்வுகளில் காணப்படும் மிகப் பழமையான நாணயங்கள் இந்திய நாட்டு நாணயங்களாகும். அவை அங்கிருந்து இந்திய வர்த்தகர்கள் மூலம் இங்கு வந்த நாணயங்களாகும். இவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்த மற்றைய நாணயங்களில் கிரேக்க, உரோம, பாரசீக, அரேபிய, சீன, போர்த்துக்கேய, டச்சுக்கார, பிரித்தானிய நாணயங்கள் குறிப்பிடத்தக்கவை. இலங்கையில் காணப்படும் வெளிநாட்டு நாணயங்களில் பெருந்தொகையானவை தமிழ்நாட்டு நாணயங்களாகும்.

இலங்கையின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளிலும், மேலாய்வுகளிலும் இந்திய நாட்டு மௌரிய, குசான, குப்த, சாதவாஹன, தென்னிந்திய சங்ககால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாணயங்கள் இலங்கையில் பல இடங்களில் காணப்பட்ட போதிலும் குறிப்பாக அநுராதபுரம், மாந்தை, அக்குறுகொடை, கந்தரோடை, யாழ்ப்பாணக் கோட்டை, வல்லிபுரம், பூநகரி ஆகிய மையங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை பண்டைக்காலப் பெருநகரப் பகுதிகளும், வணிக மையங்களுமாகும். உரோமக் குடியரசிலிருந்தும், உரோமானியப் பேரரசிலிருந்தும் (Republic of Rome and Imperial Rome) கி.மு. 300க்கும் – கி.பி. 500க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நாணயங்கள் கந்தரோடை மற்றும் யாழ்ப்பாண மையங்களிலும், மாந்தையிலும் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. (Codrington 1924; Sivasamy 1974; Seyone 1998; Bopearachchi 1998, 1999; Pushparatnam 2001, 2002; Carswell 2013).

இந்த வெளிநாட்டு நாணயங்களை மாதிரியாகக் கொண்டே உள்ளூர் நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில் அச்சுக்குத்திய அல்லது உருவங்கள் பதித்த இலங்கை நாணயங்கள் சாதவாஹன, சங்ககால நாணயங்களின் மாதிரிகளிலே வெளியிடப்பட்டன. இவ்வகையான நாணயங்களாக திஸ்ஸ, யானை-சுவாஸ்திக்கா, சிங்கம்-சுவாஸ்திக்கா, கட்டமிட்ட மரம்-சுவாஸ்திக்கா ஆகிய நாணயங்களைக் கூறலாம் (Codrington, H.W. 1924: 22). மிச்சினர், இந்த இலங்கை நாணயங்கள் சங்ககால பாண்டிய நாணயங்களின் அகத்தூண்டல் எனக் கருதுகிறார் (Michiner, M. 1998: 629). புஷ்பரட்ணம், இந்த இலங்கை நாணயங்களில் சங்ககால, சாதவாஹன நாணயங்களின் தாக்கங்கள் இருப்பதாகக் கூறுகிறார் (Pushparatnam, P. 2002: 70).

யானையும், மரமும், மூன்று சிகரங்கள் கொண்ட குன்றும், மத்தளமும் உள்ள உருவங்கள் கொண்ட இலங்கை நாணயங்கள் பாண்டியப் பெருவழுதி நாணயங்களின் மீள்பதிப்புகள் எனக் கூறப்படுகிறது (Krishnamurthy, R. 1997: 47). திஸ்ஸ வகை நாணயங்களில் ஒரு வட்டமும் அதன்மேல் ஒரு பிறை வடிவும் காணப்படுகின்றன. இதை நந்திபாத வடிவம் என்பர். இது ஒரு திமில் (ஏரி) கொண்ட காளையின் தலையை பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறுவர். இந்த வடிவம் பாண்டிய மற்றும் சாதவாஹன நாணயங்களில் காணப்படுகிறது (Gupta, P.L. 1965: 15).

ஆந்திர தேசத்து அச்சுக்குத்தி முத்திரை பதித்த (Punch-marked) நாணயங்களில் மூன்று மெல்லிய இலைகள் காணப்படும். சாதவாஹன நாணயங்களில் இவை தடித்த புதர் இலைகளாக இருக்கும். இந்த முத்திரை நாணயப் பாரம்பரியம் இலங்கையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை நாணயங்களில் காணப்படும் சிங்க உருவம் ஆந்திரதேச நாணயங்களில் காணப்படுவது போல உள்ளது. ஆனால் ஒரு கம்பத்தில் பதித்த ஸ்வாஸ்திக்கா இலங்கைக்கு உரிய தனியான அமைப்பாகத் தெரிகிறது. இம்மாதிரியான நாணயங்கள் இந்தியாவில் காணப்படவில்லை. இந்திய நாணயங்கள் இலங்கை நாணயங்களின் தோற்றத்திற்கு உந்துதலாக இருந்த போதிலும், காலப்போக்கில் இலங்கை தனது தனித்துவமான சொந்த வடிவங்களை உருவாக்கியுள்ளது (Pushparatnam, P. 2002: 71).

தென்னிந்தியாவின் தமிழக நாணயங்கள் அவற்றை வெளியிட்ட அரசர்களின் சின்னங்களையோ அல்லது அரச முத்திரைகளையோ பதிவு செய்தன. இந்த இலச்சினைகள், அரசர்களையும் அரசுகளையும் அடையாளம் காண வைத்தன. எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலங்கை நாணயங்களில் இப்படியான இலச்சினைகளைக் காண முடியவில்லை.

நாணயவியலாளர் கொட்றிங்டனும் (1924: 24-25), அவருக்கு முந்திய வரலாற்றாசிரியர்களும் இலங்கை நாணயங்களில் கண்ட பெரும்பாலான சின்னங்கள் பௌத்த மதத்தைக் குறிப்பிடுவதாகக் கொண்டு அவை சிங்கள அரசர்களால் வெளியிடப்பட்டிருப்பதாக அறிவித்தார்கள். அதே சமயம் இலங்கையில் காணப்பட்ட நாணயங்களில் தமிழ் எழுத்துகளோ அல்லது தமிழர் சின்னங்களோ காணப்பட்டால் அவை தமிழ் நாட்டிலிருந்து வர்த்தகர்களாலோ, அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது கலாசாரத் தொடர்புகளினாலோ கொண்டுவரப்பட்டிருக்கின்றன என முடிவெடுத்தார்கள். சற்று ஆழமாக ஆய்வு செய்திருந்தார்களேயானால் அவை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் என்பதை அறிந்திருப்பார்கள்.

இலங்கையின் பல செல்வாக்குமிக்க அறிஞர்கள் 13ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் தமிழ் மக்களின் பாரிய குடியேற்றங்களோ அரசுகளோ எதுவும் இருக்கவில்லை என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாக இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட பல பண்டைய தமிழ் நாணயங்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, விஜயநகர, நாயக்கர் கால நாணயங்கள் என வலுவான ஆதாரமேதுமின்றி வகைப்படுத்தப்பட்டன. இந்த வகைப்பாட்டிற்குள் அடங்காத நாணயங்கள் தவறாக அடையாளம் காணப்பட்டன, அல்லது மிக மோசமான நிலையில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன.

வட இலங்கை நாணயங்கள்

வட இலங்கையில் ஆதிகால முத்திரை நாணயங்களிலிருந்து ஐரோப்பியர் காலத்தைய நாணயங்கள் வரை பல மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. வல்லிபுரம், நாகர்கோயில், புலோலி, மட்டுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு, தெல்லிப்பளை, கந்தரோடை, தொல்புரம், சுழிபுரம், வட்டுக்கோட்டை, அல்லைப்பிட்டி, மண்கும்பான், நாரந்தனை, புங்குடுதீவு, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர், பூநகரி, மாந்தை, வரணி, கச்சாய், உடுத்துறை, முல்லைத்தீவு என இன்னும் பல இடங்களில் பண்டைய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்நாணயங்களின் நீண்டகாலப் பரவல் காணப்பட்ட இடங்களாக கந்தரோடை, பூநகரி, மாந்தை மற்றும் யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய மையங்களைக் கூறலாம் (Pushparatnam, P. 2002: 24-25; 2021).

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று-தொல்லியல்துறைப் பேராசிரியராக இருந்த பரமு புஷ்பரட்ணம் வட இலங்கை நாணயவியல்துறை விற்பன்னராவார். அவர் யாழ்ப்பாண மற்றும் வன்னிப் பிரதேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான நாணயங்களைச் சேகரித்து அவற்றின் காலவரிசைப்படி, அவை உள்ளூர் அல்லது வெளிநாட்டு நாணயங்கள் என வகைப்படுத்தியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட மையத்தில், ஒரு குறிப்பிட்ட அகழ்வு மட்டத்தில், ஒரு குறிப்பிட்ட வகையான மட்பாண்ட ஓடுகளுடன் இடம்பெறும் நாணயங்கள் நம்பகமாக ஒரு காலவரிசையைத் தருகின்றன. இலங்கைத் தமிழரின் நாணயவியல் ஆய்விற்கு பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் ஆற்றிய பங்கு அளப்பரியது. இக்கட்டுரையில் இடம்பெறும் பல நாணயங்கள் அவரது சேகரிப்பிலிருந்து பெற்றுக் கொண்டவையாகும். அவருக்கு எமது நன்றிகள் உரியது.

வட இலங்கையில் காணப்படும் நாணயங்களில் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவையும், வெளிநாடுகளிலிருந்து வர்த்தகத் தொடர்புகளாலும், கலாசாரப் பரிமாற்றங்களாலும் இங்கு வந்தடைந்த நாணயங்களும் அடங்கும். வெளிநாட்டு நாணயங்கள் அவை உற்பத்தி செய்யப்பட்ட நாடுகளின், அவை தயாரிக்கப்பட்ட காலத்தைய அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை மதிப்பீடு செய்ய உதவுகின்றன. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் ஒரு நாட்டின் அரசு, குடியேற்றம், மொழி, எழுத்து, சமயம், பண்பாடு ஆகியவற்றை அறிய உதவுகின்றன.

ஐரோப்பியர் காலத்திற்கு முற்பட்ட வட இலங்கை நாணயங்கள் கி.மு. 600ஆம் ஆண்டுக்காலம் முதல், கி.பி. 1500 ஆண்டுக்காலம் வரை காணப்படுகின்றன. அவைகளில் காணப்படும் சின்னங்களும், அவற்றின் காலமும் இந்த மண்ணின் பரந்துபட்ட வணிக – பொருளாதாரத் தொடர்புகளையும், அரசியல் மற்றும் சமய நடவடிக்கைகளையும், இக்காலப்பகுதியில் மக்களின் கலாசார முன்னேற்றத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.

வட இலங்கையின் தொல்நகரமான கந்தரோடை பண்டைய நாணயங்கள் பொதிந்து கிடக்கும் ஒரு மையமாகும். வரலாற்றறிஞர் போல் பீரிஸ் கந்தரோடையில் ஒரு மாத கால ஆய்வில் 35 அச்சுக்குத்திய வெள்ளி நாணயங்களையும், 75 லக்ஷ்மி நாணயங்களையும், 150 உரோம நாணயங்களையும் கண்டெடுத்திருக்கிறார்.

நாணயத் தொடர் 1

ஆதி இந்திய வெள்ளி முத்திரை நாணயங்கள் கி.மு. 600 – 300.

நாகர்கால முத்திரை நாணயங்கள் கி.மு. 300.

1917ஆம் ஆண்டில் இடம் பெற்ற கந்தரோடை அகழ்வுகளில் கி.மு. 600ஆம் ஆண்டிற்கும் கி.மு. 300ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைய வெள்ளியினாலான அச்சுக்குத்திய பல இந்திய முத்திரை நாணயங்களை ஆய்வாளர் போல் பீரிஸ் கண்டுபிடித்தார். அக்காலத்தில் கந்தரோடைக்கும், வட இந்தியாவிற்கும் இடையில் நடைபெற்ற வர்த்தகத் தொடர்புகள் காரணமாக இவை கந்தரோடையை வந்தடைந்திருக்கின்றன என அவர் கருதினார் (Pieris, Paul E. 1917). அவர் கண்டெடுத்த இந்த நாணயங்கள் கொழும்பு அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

வடஇந்தியாவில் கி.மு. 600-500 ஆண்டுக்காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டு கந்தரோடை அகழ்வுகளில் கண்ட வெள்ளி முத்திரை நாணயங்கள்.

இம்மாதிரியான முத்திரை குத்திய நாணயங்கள் வட இந்தியாவில் கி.மு. 600ஆம் ஆண்டுக் காலத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து அவை தென்னிந்தியாவுக்கும், இலங்கைக்கும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் யானை, மீன் (பாண்டிய) சின்னங்களைக் காட்டும் முத்திரை நாணயங்கள் கி.மு. 400–300 ஆண்டுக் காலத்திலிருந்தும், புலி (சோழ), வில் (சேர) சின்னங்களைக் காட்டும் முத்திரை நாணயங்கள் கி.மு. 300 ஆம் ஆண்டிலிருந்தும் தயாரிக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன. இவ்வகை நாணயங்களே முதன் முதலாக அரசுகள் வெளியிட்ட நாணயங்களாகும். இவ்வகை நாணயங்களைத் தயாரிப்பதற்கான சுட்ட களிமண் அச்சுகள் காஞ்சிபுரத்திலும், கரூரிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன (Krishnamurthy, R. 1991; Sethuraman 1994: 14).

சுட்ட களிமண் அச்சுகளில் (Terracotta moulds) வெள்ளி அல்லது செம்பை உருக்கி வார்த்து, சற்று சூடு தணிந்தபின் வேண்டிய சின்னங்களை அதில் அச்சுக் குத்தி இந்நாணயங்கள் தயாரிக்கப்படும். நாணயங்கள் அனைத்தும் ஒரே எடையில் இருக்க வேண்டும் என்பதற்காக கூடிய எடைகொண்ட நாணயங்களின் மூலைகள் வெட்டப்பட்டு எடை ஒரே சீராக்கப்படும்.

இலங்கையில் இம்மாதிரியான முத்திரை நாணயங்களை உற்பத்தி செய்யும் சுடுமண் அச்சுகள் அநுராதபுரத்திலும் (Deraniyagala, S. 1972: 150), அக்குறுகொடையிலும் (Bopearachchi, O. 1994: Plate 25) கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த முத்திரை நாணயங்களை கி.மு. 300ஆம் ஆண்டிற்கு உரியதாகப் பல ஆய்வாளர்கள் கருதியுள்ளார்கள் (Parker, H. 1981: 463–474; Codrington, H. W. 1924: 11–17; Bopearachchi, O. 1999: 21).

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா கந்தரோடை அகழ்வாய்வுகளில் நான்கு வெள்ளியினாலான முத்திரை நாணயங்களைக் கண்டுபிடித்திருக்கிறார். இவற்றில் காணப்படும் நாக இலச்சினைகள் இவை நாகதீபத்து நாக அரசர்களால் வெளியிடப்பட்டது என்பதை எடுத்துரைக்கின்றன. இந்த நாணயங்களில் காணப்படும் கதிரவன் பன்னிரண்டு கதிர்களைக் கொண்டது. இந்திய நாணயங்களில் காணப்படும் சூரியன் பதினாறு கதிர்கள் கொண்டதாகும். கந்தரோடை நாணயங்களின் காலம் கி.மு. 300 ஆண்டு எனக் கணிக்கப்படுகிறது (கிருஷ்ணராசா, செ. 1998: 65–72).

கந்தரோடையில் போல்பீரிஸ் கண்ட முத்திரை நாணயம். Courtesy: H.W. Codrington                       

கந்தரோடையில் கிருஷ்ணராசா கண்ட முத்திரை நாணயம் – காலம் கி.மு. 300. Courtesy: S. Krishnarajah, 1998.

நாணயத் தொடர் 2

கந்தரோடை லக்ஷ்மி நாணயங்கள்: கி.மு. 300 – கி.பி. 500.

இவ்வகையான நாணயங்கள் முதன் முறையாக ஆய்வாளர் போல் பீரிஸ் அவர்களினால் 1917ஆம் ஆண்டில் கந்தரோடையில் இடம்பெற்ற அகழ்வுகளில் இனங்காணப்பட்டன. இவற்றில் காணப்படும் பெண் உருவங்களின் வடிவங்களைக் கொண்டு இவற்றிற்கு லக்ஷ்மி நாணயங்கள் என்ற பெயரை அவர் கொடுத்தார். இவை உண்மையில் நாணயங்களா அல்லது சமய சம்பந்தமான பட்டயங்களா என்ற சர்ச்சை இன்னும் அறிஞர் மத்தியில் உள்ளது. ஆனால் பெரும்பாலான நாணயவியலாளர்கள் இவற்றை நாணயங்களாகவே கணிப்பிடுகிறார்கள்.

இலங்கையில் இந்த நாணயங்கள் பல மையங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இவை பல உருவ வகைகளில், செம்பு, ஈயம், சிலிக்கா, நிக்கல், இரும்பு ஆகிய பல உலோகங்களில் காணப்படுகின்றன. இவற்றின் சேகரிப்புத் திரட்டுகள் வட இலங்கையிலும், தென் இலங்கையிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கந்தரோடை அகழ்வுகளில் இவை மிகப் பழமையான குடியிருப்புகளில், கி.மு. 300ஆம் ஆண்டிற்குரிய உரோம மட்பாண்டங்கள் காணப்படும் அகழ்வுப்படிவு அடுக்குகளிலிருந்து, கி.பி. 500ஆம் ஆண்டுகள் வரையான அகழ்வுப்படிவு அடுக்குகள் வரை (Stratified layers) – 800 ஆண்டுக் காலமாகக் காணப்படுகின்றன.

கந்தரோடை அகழ்வுகளில் கண்ட லக்ஷ்மி நாணயங்கள். நன்றி: ப. புஷ்பரட்ணம்.

1885ஆம் ஆண்டில் முல்லைத்தீவில் ஒரு மண் பானையில் இவ்வகையான 51 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. 1917 ஆம் ஆண்டில் போல் பீரிஸ் நூற்றுக்கணக்கான லக்ஷ்மி நாணயங்களை கந்தரோடையில் கண்டெடுத்தார். அதன் பின்னர் வட இலங்கையில் நல்லூர், வல்லிபுரம், ஆனைக்கோட்டை, பூநகரி, உடுத்துறை, மாதோட்டம் ஆகிய மையங்களிலும், அநுராதபுரம், திஸ்ஸமகாராம, அக்குறுகொட, சிலாபம், புத்தளம், நிந்தவூர் ஆகிய இடங்களிலிருந்தும் இவ்வகை நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன (Pieris, P.E. 1917; Codrington 1924; Sivasamy 1974; Krishnarajah 1983; Bopearachchi 1998, 1999; Pushparatnam 2001, 2002: 81).

இந்த நாணயங்களில் காணப்படும் பெண் உருவம் லக்ஷ்மி என அடையாளம் காணப்பட்டபோதிலும், எல்லா நாணயங்களிலும் காணப்படும் பெண் உருவங்களில் பொதுவான உருவக அம்சங்கள் காணப்படுவதாகக் கூற முடியாது. சில நாணயங்களில் ஓர் இளமங்கையையும், சிலவற்றில் ஒரு வயதான பெண்ணையும் காண முடிகிறது. அதிகமான நாணயங்களில் ஒரு தாமரைப்பூவில் நிற்கும் பெண் ஒரு கையில், சில சமயங்களில் இரு கைகளிலும், தண்டுடன் கூடிய தாமரை மலரைப் பிடித்திருக்கிறார். சில நாணயங்களில் தாமரைத் தண்டுக்குப் பதிலாக கையில் திரிசூலமோ அல்லது குத்துவிளக்கோ காணப்படுகிறது.

இந்த லக்ஷ்மி நாணயத்தில் வலது கையில் ஏந்திய தாமரைத் தண்டும், மறுபக்கத்தில் ஒரு தண்டில் பொருத்தப்பட்ட சுவாஸ்திக்கா சின்னமும் காணப்படுகிறது. நன்றி: ப. புஷ்பரட்ணம்.

இந்த லக்ஷ்மி நாணயங்கள் இலங்கையின் பல மையங்களில் காணப்பட்ட போதிலும், வட இலங்கையில் கந்தரோடையில் இவை பெரிய அளவில் குவிந்துள்ளன. கந்தரோடையில் நடைபெறும் ஒவ்வொரு அகழ்வாய்வுகளிலும் பெருந்தொகையான லக்ஷ்மி நாணயங்கள் கிடைப்பதனால், இந்நாணயங்களின் தோற்றப் புள்ளி – தயாரிப்பு மையம் – பண்டைய கந்தரோடை நகரமே என்ற தர்க்கரீதியான முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

நாணயத் தொடர் 3

ஆதிகால யாழ்ப்பாண நாக நாணயங்கள்: கி.மு. 300 – கி.பி. 300.

யாழ்ப்பாணத்தில் உடுத்துறை என்ற கிராமத்தில் கலாநிதி புஷ்பரட்ணத்தினால் கண்டெடுக்கப்பட்ட வட்டவடிவான ஒரு நாணயத்தின் முன்பக்கத்தில் தமிழ்ப் பிராமியில் ‘நாகபூமி’ எனப் பதிக்கப்பட்டிருக்கிறது. நாணயத்தின் பின்பக்கத்தில் ஒரு மீனின் இலச்சினை காணப்படுகிறது (Pushparatnam, P. 2002). இந்த நாணயம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ‘நாகபூமி’ என்ற பெயர் நாகர்களின் சுதந்திரமான பூமியில் வெளியிடப்பட்ட நாணயம் என்ற பொருளைத் தருகிறது. பின்பக்கத்தில் காணப்படும் மீன் இலச்சினை, பாண்டிய மன்னர்களைப் போல யாழ்ப்பாணத்து நாகர்களும் இந்த இலச்சினையை உபயோகித்திருக்கிறார்கள் என்பதை அறியத்தருகிறது. ஆனால் இங்கே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த நாணயத்தில் காணப்படும் பிராமி எழுத்துகள் கி.மு. 300 ஆம் ஆண்டுக் காலத்திற்கு உரியவை. கி.மு. 100ஆம் ஆண்டுக் காலத்திற்குரிய மதுரைப் பாண்டிய நாணயங்களில் காணப்படும் மீன் சின்னம் கோடுகளால் வரையப்பட்டது. இந்த நாக நாணயத்தில் மீன் சின்னம் உருவவியல் சார்ந்து (Anthropomorphic) அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பகாலக் கொற்கைப் பாண்டியர்களின் இலச்சினை யானை என நாணயவியலாளர் லொவெந்தால் குறிப்பிடுகிறார். ஆரம்பகால மதுரைப் பாண்டிய நாணயங்களில் ஒரு பக்கம் யானைச் சின்னமும் மறுபக்கம் கோடுகளால் வரைந்த மீன் சின்னமும் காணப்படுகிறது. பிற்கால மதுரைப் பாண்டிய நாணயங்களில் மீன் இலச்சினை உருவவியலாகப் பொறிக்கப்பட்டது. Source:H.W. Codrington.

கந்தரோடையில் ஆய்வாளர் சேயோனால் கண்டெடுக்கப்பட்ட ஒரு நாக நாணயத்தில் (Seyone 1998), நாணயத்தின் முன்பக்கத்தில் மேலே ஒரு பெண் தெய்வ உருவமும், பக்கங்களில் நீண்ட ஸ்ரீவஸ்தா சின்னமும் காணப்படுகிறது. இச் சின்னம் விஷ்ணுவின் மார்பில் காணப்படுகிறது என்பது ஐதீகம். இப்பெண் தெய்வம் லக்ஷ்மியைக் குறிப்பிடுகிறது. இந்த நாணயத்தின் மறுபக்கத்தில் தேய்ந்த பிராமி எழுத்துகளில் ‘உதிபன்’ என்ற பெயர் காணப்படுகிறது. இது இந்த நாணயத்தை வெளியிட்ட நாக அரசனின் பெயராக இருக்கலாம். இந்நாணயத்தில் காணப்படும் பிராமி எழுத்துகளின் உருவவியல் (Morphology) அமைப்பைக் கொண்டு இந்த நாணயம் கி.மு. 200 ஆம் நூற்றாண்டிற்கு உரியதாகக் கணிக்கப்படுகிறது (Pushparatnam, P. 2001).

கந்தரோடையில் சேயோனால் கண்டெடுக்கப்பட்ட கி.மு. 200 ஆம் ஆண்டிற்குரிய நாக நாணயம். இதன் முன் பக்கத்தில் ஸ்ரீவஸ்தா சின்னமும், பின் பக்கத்தில் ‘உதிபன்’ என்ற பெயரும் காணப்படுகிறது. ப. புஷ்பரட்ணம்.

இங்கே கண்டெடுக்கப்பட்ட சதுர வடிவான ஒரு நாணயம் நிற்கும் நிலையிலுள்ள ஒரு மானின் உருவத்தைக் காட்டுகிறது. ஆரம்பகால நாணயங்கள் சதுர வடிவானவை. இந்த நாணயம் சங்ககால நாணயம் போலத் தோற்றமளித்தாலும், சங்ககால நாணயங்களில் மான் உருவத்தைக் காண முடியாது. இலங்கைத் தமிழ்க் குறுநில அரசர்களால் சங்ககால நாணயங்களின் மாதிரியில் இவை தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கலாநிதி புஷ்பரட்ணம் கருதுகிறார் (Pushparatnam, P. 2002).

மான் உருவம் பதித்த சதுரவடிவான நாணயம். நன்றி: ப. புஷ்பரட்ணம்.

நாணயத் தொடர் 4

உரோமாபுரி நாணயங்கள்: கி.மு. 100 – கி.பி. 500.

கந்தரோடையில் போல் பீரிஸ் கண்டெடுத்த உரோம நாணயங்கள்: உரோமப் பேரரசர்கள் – இரண்டாம் வலென்ரைன், ஆர்க்கேடியஸ், இரண்டாம் தியோடோசியஸ் உருவங்கள். Courtesy: H.W. Codrington.

யாழ்ப்பாணத்தில் கந்தரோடை, வல்லிபுரம், யாழ்ப்பாணக் கோட்டை, பூநகரி மற்றும் ஆரம்பகால குடியிருப்புகளில் கி.மு. 100ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து கி.பி. 500ஆம் ஆண்டு காலம் வரையான தங்கம், வெள்ளி, வெண்கலம், செம்பு ஆகிய உலோகங்களினாலான உரோம நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. 1919ஆம் ஆண்டில் கந்தரோடையில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு தேய்மான நிலைகளிலிருந்த 150 உரோமாபுரி நாணயங்களைப் பெற்றுக்கொண்டதாக ஆய்வாளர் போல் பீரிஸ் குறிப்பிட்டிருக்கிறார். இவற்றைப் பரிசோதனை செய்த நாணயவியலாளர் கொட்றிங்டன், இந்த நாணயங்களில் அதிகமானவை பெரிய கொன்ஸ்டன்ரைன் (கி.பி. 306–337), வலென்ரைன் (கி.பி. 364–374), முதலாம் தியோடோசியஸ் (கி.பி. 379–395), ஆர்க்கேடியஸ் (கி.பி. 395–408), இரண்டாம் தியோடோசியஸ் (கி.பி. 402–450) ஆகிய உரோமப் பேரரசர் காலத்திற்கு உரியது எனக் கணிப்பிட்டதாக பீரிஸ் குறிப்பிடுகிறார் (Pieris, P.E. 1919: p. 57). கந்தரோடையில் அகழ்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் அனைவரும் சிறிய குழிகளிலிருந்தே பெருந்தொகையான உரோம நாணயங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். இலங்கையில் வேறு எந்த மையமும் இந்த அளவு உரோம நாணயங்களை வெளிக்காட்டுவதில்லை.

இந்த நாணயங்களோடு யாழ்ப்பாணக் குடியிருப்புகளில் காணப்பட்ட கி.மு. 500 ஆம் ஆண்டுக்காலத்தைய கிரேக்க அம்போரா சாடிகள், தொடர்ந்து வந்த உரோம ரௌலெற்ரெட் பாண்டங்கள், அரிற்றைன் பாண்டங்கள் மற்றும் உரோமக் கலைப்பொருட்கள் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுக்காலமாக யாழ்ப்பாண மையங்களில் செழித்திருந்த கிரேக்க-உரோம வர்த்தகத்தின் சான்றாகத் திகழ்கின்றன.

யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில் உரோம நாணயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காலத்திற்குக் காலம் நிலத்தைத் தோண்டும் போதெல்லாம் கிடைத்து வருகின்றன. வட யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம்–பருத்தித்துறை வீதிக்கருகாமையில் அமைந்த கிராமம் வரணி. சில ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே ஒரு மண் பானையில் சேமிக்கப்பட்ட பல உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. பல நாணயங்கள் அவற்றின் தங்கம் அல்லது வெள்ளி உலோகப் பெறுமதிக்காகவே மக்களால் சேகரிக்கப்பட்டு வந்திருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

உரோமப் பேரரசின் வெள்ளி நாணயங்கள்.

உரோம நாணயங்களும் உரோம உலக வர்த்தகமும்

கிரேக்கர்கள் கி.மு. 500ஆம் ஆண்டுக் காலத்திலிருந்தே நாணயங்களைத் தயாரித்து வந்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து உரோமர்கள் உரோமாபுரி குடியரசாக இருந்த காலத்தில் கி.மு. 326ஆம் ஆண்டிலிருந்து உலோக நாணயங்களை வெளியிட்டார்கள். ஆரம்பகால நாணயங்கள் செம்பிலும், வெண்கலத்திலும் வட்டமாக உருக்கி வார்க்கப்பட்ட உலோகத் தட்டுகளின் மேல் உருவங்களை, அவை பதித்த அச்சுகளைக் கொண்டு கையினால் அடித்துத் தயாரிக்கப்பட்டன.

கி.மு. 27ஆம் ஆண்டில் உரோமாபுரி பேரரசானது. உரோமப் பேரரசின் முதலாவது மன்னனாக ஆகஸ்டஸ் முடிசூட்டிக் கொண்டான். கி.மு. 27இல் இருந்து கி.பி. 476 வரை வெளியிட்ட உரோமப் பேரரசின் நாணயங்கள் உலக வர்த்தகங்கள் அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டன.

கிறிஸ்தாப்த காலத்திலிருந்து உரோம நாணயங்களிலிருந்த தங்கமும், வெள்ளியும் அந்நாணயங்களின் பெறுமதிக்கு ஏற்றதாக இருந்தது. அதன் காரணமாக சகல வகையான வணிக நடவடிக்கைகளுக்கும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரோம நாணயங்கள் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட பண மதிப்பிற்கு உத்தரவாதம் அளித்தன. அதன் பலனாக வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இரண்டும் உந்தப்பட்டன. எல்லா வகையான மக்களும் இந்த நாணயங்களைப் பெற்றுக்கொள்ள ஊக்கமுடன் பணிபுரிந்தார்கள். இந்நாணயங்களைக் கொண்டு பல நாடுகளில் பல வகையான பொருட்களையும், பல விதமான சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடிந்தது (Thiagarajah 2016: 205).

இலத்தின் மொழியில் மூத்தவர் பிளினி எழுதிய ‘இயற்கை வரலாறு’ என்னும் நூல் (Natural History by Pliny the Elder) உரோமப் பேரரசு பற்றிய மிகப்பெரிய பழைய நூலாகக் கருதப்படுகிறது. இது பத்து தொகுப்புகளில் 37 நூல்களைக் கொண்டது. இந்த நூலில் “இந்தியா, சீனா, அரேபியா தேசங்கள் ஓர் ஆண்டுக் காலத்தில் உரோமாபுரியிலிருந்து ஒருநூறு மில்லியன் செஸ்ரேசெஸ் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்” என பிளினி குறிப்பிடுகிறார். இச்செல்வத்தில் ஒரு தொகை இலங்கையையும் அடைந்திருக்கிறது.

உரோம வர்த்தகர்கள் இலங்கைக்கு இரத்தினங்கள், பட்டு, பருத்தி, யானைத்தந்தம், மயில் மற்றும் நறுமணப் பொருட்கள் குறிப்பாக மிளகு, ஏலக்காய், கிராம்பு, கறுவா ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள வந்தார்கள். அவற்றிற்குப் பதிலாக திராட்சை மது, ஆலிவ் எண்ணெய், தங்கம், வெள்ளி ஆகியவற்றை நாம் பெற்றுக் கொண்டோம். தங்கம், வெள்ளி என்பன நாணயங்களாகவும், பதக்கங்களாகவும் கிடைத்தன. உரோம மக்களுடனான வர்த்தக, கலாசார, காதல் உறவுகள் எட்டு நூற்றாண்டுகளாக இடைவிடாது தொடர்ச்சியாக இடம்பெற்றன.

உரோமக் குடியரசு கறுப்பு வெண்கல நாணயம்: கி.மு. 300.

உரோமப் பேரரசு நாணயம்: கி.பி. 300-400 (கந்தரோடை).

உரோமப் பேரரசின் தங்க நாணயம்: கி.பி. 450-500.

யாழ்ப்பாணத்தில் வரணி கிராமத்தில் கண்டெடுத்த உரோம நாணயங்களில் ஒரு பகுதி. நன்றி: செ. கிருஷ்ணராசா.

நாணயத் தொடர் 5

சங்ககால பாண்டிய நாணயங்கள்: கி.மு. 400 – கி.பி. 300.

 பாண்டிய நாட்டு அச்சுக் குத்திய முத்திரை நாணயங்கள்: கி.மு. 400.

கி.மு. 300ஆம் ஆண்டிற்குரிய கொற்கைப் பாண்டிய நாணயம். முன்பக்கம் யானையும், பின்பக்கம் மலைமுகடு, மேடையில் நிற்கும் திரிசூலம், சதுரத் தளம் என்பன கொண்டது.

தமிழக மூவேந்தர்களில் முதன்முதலாக நாணயங்களை வெளியிட்டவர்கள் பாண்டிய மன்னர்கள்தாம். அவர்கள் நாணயங்களை வெளியிடுவதற்கு அக்காலத்தில் ஆரம்பித்த கிரேக்க–உரோம, வட இந்திய வர்த்தகங்கள் உந்துதலாக இருந்திருக்கலாம். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக் காலத்திலே சதுர வடிவான பாண்டிய முத்திரை நாணயங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன.

கி.மு. 500–400ஆம் ஆண்டு காலப் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கழிமுகத்தில் அமைந்த கொற்கைப்பட்டினம் பாண்டிய நாட்டின் தலைநகரமாக விளங்கியது. வால்மீகி இராமாயணம், மகாபாரதம் ஆகிய வட இந்திய இலக்கியங்கள் இந்தக் கடல்துறை நகரத்தை பாண்டிய-கபாடகம் என அழைக்கின்றன. பாண்டிய-கபாடகம் என்றால் பாண்டிய நாட்டின் நுழைவாயில் என்று பொருள். கௌடில்யர் (சாணக்கியர்) தனது ‘அர்த்த சாஸ்திரத்தில்’ பாண்டிய நாட்டு முத்துகளைப் பாண்டிய-கபாடக முத்துகள் என அழைக்கிறார். சங்க இலக்கியமான கலித்தொகை இந்த நகரத்தைக் கொற்கைப்பட்டினம் என அழைக்கிறது. கிரேக்க கணிதவியலாளர்-வானியலாளரான குளோடியஸ் தொலமி இந்தத் துறைமுக நகரத்தை கொல்கை என அழைக்கிறார்.

கொற்கைப் பாண்டியர்களின் ஆரம்பகால சதுர நாணயங்களில் யானை முக்கியமான குறியீடாகக் காணப்படுகிறது. இந்திய-ஆங்கிலேயரான நாணயவியலாளர் லொவெந்தால் யானை கொற்கைப் பாண்டியர்களின் அரசச் சின்னம் எனக் கருதுகிறார் (Löventhal, E. 1888). மேலே காணப்படும் கொற்கை நாணயத்தில் ஒரு பக்கத்தில் யானைச் சின்னமும் மறுபக்கத்தில் மூன்று முகடுகள் கொண்ட மலை, திரிசூலம் ஆகிய சின்னங்களும் காணப்படுகின்றன. யானைச் சின்னம் அக்காலத்தைய சேர, சோழ நாணயங்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியமான புறநானூற்றில் பரணர், கபிலர், இளங்கடுங்கோ ஆகிய புலவர்கள் தரும் தகவல் இது: அகுதை என்ற அரசன் கூடல் நகரத்தை ஆட்சி புரிந்த சிற்றரசன். அக்காலத்தில் கொற்கையிலிருந்து பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த முதலாம் நெடுஞ்செழியன் (கி.மு. 300–250) தனது பாண்டிய நாட்டை விரிவுபடுத்த எண்ணி கூடல் நகரின் மீது படையெடுத்து அகுதையை விரட்டிவிட்டு கூடல் நகரைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர் கூடல் நகரத்திற்கு ‘மதுரை’ என்ற பெயரைச் சூட்டிக்கொண்டான். 

இப்பெயரைக் கொடுத்த காரணம் வட இந்தியாவிலிருந்த ‘மதுரா’ என்ற நகரப் பெயரின் செல்வாக்காக இருந்திருக்கலாம். பின்னர் மதுரை பாண்டியர்களின் மற்றொரு தலைநகரமாக ஆக்கப்பட்டது. சில காலம் கொற்கை, மதுரை ஆகிய இரு நகரங்களிலிருந்தே பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். பின்னர் கொற்கை நகரம் கைவிடப்பட்டு மதுரை பாண்டியர்களின் தனித் தலைநகரமாகச் செயற்பட்டது.

முதலாம் நெடுஞ்செழியனின் மாங்குளம் கல்வெட்டு: கி.மு. 300.

மதுரைப் பாண்டியர்கள் தங்கள் அரசச் சின்னமாக மீனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஆரம்பகால மதுரைப் பாண்டிய நாணயங்களில் மீன் சின்னம் விலங்குருவ வடிவமாக அமைக்கப்படவில்லை. நான்கு கோடுகளைக் கொண்டே மீன் சின்னம் அமைக்கப்பட்டது. கந்தரோடையில் போல் பீரிஸ் கண்டெடுத்த மதுரைப் பாண்டிய நாணயத்தில் காணப்படும் மீன் சின்னம் இக்கோட்டு வடிவிலே அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மறுபக்கத்தில் யானைச் சின்னம் விலங்குருவ வடிவில் பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாணயத்தின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து வெளிவந்த பாண்டிய நாட்டு நாணயங்கள் வட்ட வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நாணயங்களில் மீன் விலங்குருவ வடிவமாகச் (Zoomorphic Image) சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

கந்தரோடை அகழ்வில் போல் பீரிஸ் 1917இல் கண்டெடுத்த சதுர வடிவான மதுரைப் பாண்டிய நாணயம். முன்பக்கம் யானையும், மலைமேடும், பின்பக்கம் கோடுகளால் இட்ட மீன் சின்னமும் காணப்படுகிறது. Courtesy: H.W. Codrington

பிற்காலத்தைய வட்ட வடிவான மதுரைப் பாண்டிய நாணயம். இதில் மீனின் உருவம் இரண்டு குத்துவிளக்குகளுக்கு நடுவில் காணப்படுகிறது. முன் பக்கத்தில் இதை வெளியிட்ட அரசன் கோட்டுருவமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறான். 

தொடரும். 



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்