1983 - 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் - பகுதி 5
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
16 நிமிட வாசிப்பு

1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 5

June 4, 2026 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு

பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கமுள்ள ஆட்சியமைப்பில் தேசிய இனங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள், உரிமைகளைப் பாதுகாப்பது இன்று உலக ரீதியாகவே பெரும் பிரச்சினையாகவுள்ளது. பாதுகாக்கும் பொறுப்பினை பெரும்பான்மை இனத்தின் கைகளில் வழங்க முடியாது. அவ்வாறு வழங்கப்பட்டால் அவை இயல்பாகவே துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படும்.

இலங்கையைப் பொறுத்தவரை சட்ட, நிர்வாக, நீதி நிறுவனங்கள் ஆகிய மூன்றும் இவ்விடயத்தில் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டே வந்திருக்கின்றன. சட்ட நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றுவதற்கும், ஏற்கெனவே வழங்கப்பட்ட சட்ட ஏற்பாடுகளையும், உரிமைகளையும் நீக்குவதற்கும் என்றுமே பின்னின்றதில்லை. தனிச் சிங்களச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம், 6 ஆவது திருத்தச் சட்டம், அவசரகாலச் சட்டம் எனப் பலவற்றினை இவ்வாறு நிறைவேற்றியிருந்தது. அதேவேளை 29 ஆவது பிரிவு போன்ற தமிழ் மக்களுக்கு சார்பான சட்ட ஏற்பாடுகளை நீக்கியும் இருக்கின்றது.

நிர்வாக நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கு சார்பான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில்லை. தமிழ் மொழி அரச கரும மொழி விடயமும், 13 ஆவது திருத்தமும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். அதேவேளை சட்ட ஏற்பாடுகளில் சிங்கள மக்களுக்குச் சார்பாக இருக்கின்ற விடயங்களை நிறைவேற்றப் பின்னிற்பதுமில்லை. அரச கரும மொழிச் சட்டத்தினை சிங்களக் குடியேற்றங்களுள்ள பிரதேசங்களில் உடனடியாகவே பிரயோகித்தமை இதற்கு நல்ல சான்றாகும். ஆனால் மலையகம் உட்பட தென்னிலங்கையில் அதனைப் பிரயோகிப்பதில் அக்கறை காட்டவில்லை.

அதேவேளை சுற்றுநிருபங்களின் மூலம் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கும் தயங்குவதில்லை. 13 ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்ட இவ்வாறான பல அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

நீதித்துறையிலும் முன்னர் குறிப்பிட்டது போல இலங்கை நீதிமன்றங்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்குச் சார்பாக தீர்ப்புகளை வழங்கியதில்லை.

எனவே தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள், உரிமைகளுக்கான பாதுகாப்பை சிங்கள ஆதிக்க நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடியாது. அதனை தமிழ் மக்களிடமே ஒப்படைத்தல் வேண்டும் அல்லது தமிழ் மக்களுக்கென வீட்டோ அதிகாரம் கொண்ட கூட்டு அமைப்புகளிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.

13 ஆவது திருத்தத்தில் இத்தகைய ஏற்பாடுகள் எதுவுமில்லை. அங்கு பகிர்வு அதிகாரங்களே எதுவுமில்லாமல் இருக்கும் போது கூட்டு அதிகாரத்தையோ, கூட்டு அதிகாரத்தளத்தில் பகிர்வு அதிகாரங்களிற்கான பாதுகாப்பைப் பற்றியோ நாம் நினைத்தே பார்க்க முடியாது. பாதுகாப்புத் தளங்கள், அரசியல் யாப்பினைத் திருத்துவதில் பங்கு, கூட்டு அதிகாரத்தளத்தில் சுயாதீனமான பங்கு என்பவற்றிலேயே தங்கியுள்ளன. 13 ஆவது திருத்தத்தில் இவை எதுவுமே இல்லை.

ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய கடிதங்கள்

இந்தியா–புலிகள் யுத்தம் மிகவும் கொடூரமானதாக, மூர்க்கத்தனம் மிக்கதாக அமைந்திருந்தது. இந்தப் போரில் இந்திய இராணுவமும் விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகளும் பலத்த உயிரிழப்பை சந்தித்தன. 1987 அக்டோபர் 11 அன்று யாழ்ப்பாணம் மீது இந்திய இராணுவம் படையெடுப்பை மேற்கொண்ட அன்று பல்கலைக்கழகத்திற்கு அண்மித்த பிரம்படியில் 40 பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது போன்று 1987 அக்டோபர் 21 அன்று யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையிலும், 1987 அக்டோபர் 27 அன்று சாவகச்சேரியிலும் மிருகத்தனமான படுகொலைகள் இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான கொலைகள் தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட பாரிய அழிவாகும். இந்தியாவுடன் போர் தொடங்கி மூன்று மாத காலத்துக்குள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு போர் நிறுத்தம் செய்து பேச்சுகளை நடத்தி சமரச உடன்பாட்டுக்கு வருமாறு மூன்று கடிதங்களை பிரபாகரன் எழுதினார். இவை முறையே 12.10.1987, 14.10.1987, 13.01.1988 ஆகிய திகதிகளில் எழுதப்பட்டன. இருப்பினும் மூன்று கடிதங்களுக்கும் ராஜீவ் காந்தி பதிலளிக்கவில்லை.

மாகாணசபைத் தேர்தல் – 1988

1988 டிசம்பர் 10 இல் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் அ. வரதராஜப் பெருமாள் வடக்கு – கிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சரானார். 1990 மார்ச் 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தருவாயில், வடக்கு – கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு அமைதிப் படையினருடன் சேர்ந்து இந்தியா சென்றார். இதனை அடுத்து அரசுத்தலைவர் பிரேமதாசா மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.

இலங்கையில் மாகாண சபைகள் (Provincial Councils) என்பது இலங்கை மாகாணங்களுக்கான சட்டவாக்க அவைகளாகும். இலங்கை அரசியலமைப்பின் படி, மாகாண சபையானது குறிப்பிட்ட மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சி, சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிர்வாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன. ஆனாலும் நடுவண் அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. மாகாண சபைக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

1987 யூலை 29 இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை–இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது. 1988 பெப்ரவரி 3 இல் ஒன்பது மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

மாகாண சபைகள் அமைக்கப்படுவதற்கான நோக்கம் என்னவென இலங்கை–இந்திய ஒப்பந்தத்தின் முகவுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

  • இலங்கையின் இறைமையையும், தன்னாதிக்கத்தையும் ஒற்றை ஆட்சியையும் பாதுகாப்பதற்காகவும்,
  • இலங்கை பல்லின மக்களான சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் வாழும் நாடாவதாலும், பல மொழி பேசும் ஒரு நாடாக ஏற்றுக் கொள்வதாலும்,
  • பல்லின மக்கள் வாழ்வதால் அவ்வவ் இனத்திற்கு வெவ்வேறான மொழி, கலாசாரம், என்பன உண்டு என்பதை அங்கீகரிப்பதாலும்,
  • தமிழ் மொழி பேசுபவர்கள் இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒன்றாகக் கலந்து வசிப்பதுடன், வடக்கு – கிழக்கில் பெரும்பான்மையாக வசிப்பதால் அவ் வடக்கு – கிழக்கு அவர்களது பூர்வீக பூமி என ஏற்றுக் கொள்வதாலும்,
  • இலங்கை சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஒற்றையாட்சி என்பதாலும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியிருப்பதாலும், 

மாகாண சபைகள் அமைக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஒன்பது மாகாண சபைகளில் இலங்கை–இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 டிசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 1988 செப்டம்பர் 2 இல் இரு மாகாணங்களும் வடக்கு–கிழக்கு மாகாண சபை என்ற பெயரில் இணைக்கப்பட்டன.

வடக்கு–கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு ஒருபோதும் இடம்பெறவில்லை. ஒவ்வோர் ஆண்டும் அரசுத் தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இலங்கைத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. 2006 யூலை 14 இல் மக்கள் விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாண சபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் ஜெயவர்த்தனாவினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 ஒக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து 2007 ஜனவரி 1 இல் வடக்கு – கிழக்கு மாகாண சபை வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 1988 ஆம் ஆண்டு 2ஆம் இலக்க 3(3) உட்பிரிவுச் சட்டத்தின் படி, ஒவ்வொரு மாகாண சபைக்கும் அந்தந்த மாகாணத்தின் மக்கள் தொகை, நிர்வாகப் பிரிவு மற்றும் ஏனைய காரணங்களைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையாளர் உறுப்பினர் தொகையைத் தீர்மானிப்பார். இச்சட்டமூலத்தின் 13ஆம் பிரிவின் படி, மாகாண சபைக்குப் போட்டியிட விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றில் அல்லது சுயேட்சைக் குழு ஒன்றின் சார்பில் போட்டியிடலாம். இவ்வாறு போட்டியிடுபவர் மாகாணத்திற்குள் உள்ள நிர்வாக மாவட்டம் ஒன்றுக்கே போட்டியிடலாம். முழு மாகாணத்திற்கும் போட்டியிட முடியாது.

ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாதல்

ரணசிங்க பிரேமதாசா 1924ஆம் ஆண்டு யூன் 23ஆம் திகதி பிறந்தார். இவர் 1989 ஜனவரி 2ஆம் திகதி முதல் 1993 மே 1ஆம் திகதி வரை இலங்கையின் 3 ஆவது (நிறைவேற்று அதிகாரத்துடன் 2 ஆவது) ஜனாதிபதியாகப் பதவியில் இருந்தார். முன்னதாக இவர் 1978 முதல் 1989 வரை ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசில் பிரதமராகப் பணியாற்றினார். 1986 இல் இவருக்கு “ஸ்ரீ லங்காபிமான்ய” என்ற இலங்கையின் அதியுயர் பட்டம் அரசுத்தலைவர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனாவால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இப்பட்டம் வழங்கப்பட்டது. பிரேமதாசா 1993 மே 1 அன்று கொழும்பு நகரில் நடைபெற்ற மே நாள் பேரணி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்ட ஒருவரால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தார். இவரது நினைவாக இவர் கொலை செய்யப்பட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கொலை

இவர் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளராகவும் செயற்பட்டு வந்தார்.

எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும் அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப் போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாமைத்தன்மையை எடுத்துக்காட்டின. இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கியிருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. 1989 யூலை 13ஆம் திகதி கொழும்பில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார். தொடக்கத்தில் இவர்களது கொலைகளுக்குப் பொறுப்பேற்க மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னாளில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மாவீரர் தினம் பிரகடனம்

இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாயகத்திற்காகத் தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழப் புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப் போராட்டப் போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1989 இல் பிரகடனம் செய்யப்பட்டது. உலகின் பல்வேறு தேசங்கள் தமது போர் வீரர்களைக் கௌரவிப்பதற்காகக் கடைப்பிடிக்கும் நினைவு தினங்களைப் போலவே, ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாவீரர் நாளும் அமைந்திருக்கின்றது. ஈழத் தமிழர் அநேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.

விடுதலைப் புலிகளின் லெப். சங்கர் (சத்தியநாதன்) என்ற முதல் மாவீரனின் நினைவு நாள்தான் நவம்பர் 27. விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதியாக விளங்கிய சங்கர் மீது சிங்கள இராணுவம் கடும் கோபம் கொண்டிருந்தது. 1982ஆம் ஆண்டு இராணுவத்தின் தேடுதல் வேட்டைக்கு இலக்காகி, 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதியன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டார். சங்கர் தப்பி ஓட முயன்றபோது, வயிற்றில் குண்டு பாய்ந்தது. அப்படியும் சிங்கள இராணுவத்தினரிடம் சிக்காமல் தப்பித்து மேற்சிகிச்சைக்காக தமிழகம் சென்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது தலைவர் பிரபாகரனின் மடியிலேயே சங்கரின் உயிர் பிரிந்தது.

ராஜீவ் காந்தி கொலை

ஸ்ரீபெரும்புதூரில் 1991 மே 21 அன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலைத் தாக்குதலை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தேன்மொழி ராசரத்தினம் என்ற தனு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் ராஜீவ் காந்தி உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியமை, இந்திய இராணுவ நடவடிக்கைகளால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவை இத்தாக்குதலுக்கான பின்னணிக் காரணங்களாக இந்திய நீதிமன்றங்களால் சுட்டிக்காட்டப்பட்டன.

ராஜீவ் காந்தி சம்பவம் நடைபெறுவதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சென்னை வந்திருந்தார். பின்னர் வெள்ளை நிற அம்பாசிடர் வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில் பங்கேற்றார். அவருடன் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் பயணித்தார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தை அடைந்த அவர் வாகனத்திலிருந்து இறங்கி மேடையை நோக்கி நடக்கத் தொடங்கினார். வழியிலே பல ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இரவு 10.21 மணியளவில் தனு அவரை அணுகி வணக்கம் தெரிவித்தார். அவரது கால்களைத் தொட்டு வணங்குவதற்காகக் குனிந்தபோது, தனது உடையில் மறைத்து வைத்திருந்த ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை வெடிக்கச் செய்தார். இதன் விளைவாக ராஜீவ் காந்தியும் மேலும் பதினான்கு பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கு இருந்த ஒரு புகைப்படக்காரரின் ஒளிப்படக் கருவியில் பதிவாகியிருந்தது.

ராஜீவ் காந்தி, தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்க இந்திய அமைதிப்படையை மீண்டும் அனுப்புவேன் என்று 1990 ஆகஸ்ட் 21–28 தேதியிட்ட சண்டே (Sunday) இதழுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார். இதுவே அவரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் எடுத்த முடிவுக்கான முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய உச்ச நீதிமன்றம் பின்னர் குறிப்பிட்டது. அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், தனது அதிகாரபூர்வ நெறிமுறைகளை மீறி, தமிழ்நாட்டிற்கு வந்தால் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக இருமுறை எச்சரித்திருந்தார். 1992 யூன் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில், முன்னாள் பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருந்தன என்றும், உள்ளூர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களே அவற்றைச் சீர்குலைத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தியின் கொலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட விரோதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டது. மேலும், 1987 அக்டோபரில் 12 புலிகளின் தற்கொலைகளையும், திலீபனின் உண்ணாவிரத மரணத்தையும் பின்னணிச் சம்பவங்களாகக் குறிப்பிட்டது. அதேவேளை, இக்கொலை அரசை மிரட்டும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், இதனை தீவிரவாதச் செயலாக வகைப்படுத்த முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.

விசாரணை, பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) கீழ் நடத்தப்பட்டது. சென்னையில் அமைக்கப்பட்ட தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. எனினும் மனித உரிமை அமைப்புகள், இவ்விசாரணை நியாயமான விசாரணைக்கான தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கண்டனம் தெரிவித்தன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் தீர்ப்பின் முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் பின்னர் அவை வற்புறுத்தலின் பேரில் பெறப்பட்டவை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட பின்னர் நான்கு பேருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

முருகன், பேரறிவாளன், சாந்தன் மற்றும் நளினி ஆகிய நால்வருக்கும் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் சோனியா காந்தியின் பரிந்துரையின் அடிப்படையில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூவரின் கருணை மனுக்கள் 2011 ஆகஸ்ட் மாதத்தில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்ற 2011 செப்டம்பர் 9ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பல அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தன. 2011 ஆகஸ்ட் 30 அன்று சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரின் மரண தண்டனையை எட்டு வாரங்களுக்கு நிறுத்திவைத்தது. மேலும், அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் மரண தண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சதாசிவம், ரஞ்சன் கோகாய் மற்றும் சி. கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு 2014 பெப்ரவரி 18 அன்று ரத்து செய்தது. மேலும், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும், மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் பதிலளிக்காவிட்டால் அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்ட ஜெயின் ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இக்கொலையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதித் திட்டங்கள் குறித்து மேலதிக விசாரணை நடத்துவதற்காக இந்திய அரசால் 1998 டிசம்பர் மாதத்தில் பல்நோக்கு ஒழுங்கு நடவடிக்கை கண்காணிப்பு முகமை நிறுவப்பட்டது. இந்த விசாரணை அமைப்பில் இந்தியாவின் முக்கிய புலனாய்வு மற்றும் அமலாக்க நிறுவனங்களான ‘சிபிஐ’, ‘றோ’, இந்திய உளவுத்துறை, அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்