வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் - பகுதி 5
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
17 நிமிட வாசிப்பு

வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 5

September 9, 2026 | Ezhuna

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பெரும்பாலும் வறண்ட மற்றும் அரை வறண்ட காலநிலைச் சூழலுக்குட்பட்ட பகுதிகளாகும். இப்பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகைகள் (River Basins) நீர் வளங்களின் முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன. இவை குடிநீர், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தொழில் மற்றும் சூழலியல் சமநிலைக்கான ஆதாரங்களாகவும் உள்ளன. முரண்பாடுகள், நிலவளப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், காடழிப்பு, கட்டுப்பாடற்ற மணல் அகழ்வு, நிலத்தடி நீரின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இவ்வாற்றுப் படுகைகளின் நீரியல் சமநிலையைப் பாதித்துள்ளன. எனவே, இவற்றின் தற்போதைய நிலையை அறிவியல் மற்றும் தரவுசார்ந்த முறையில் ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய திறம்பட்ட பயன்பாட்டிற்கான வழிமுறைகளை முன்வைப்பது கட்டாயமானதாகும். ‘வடக்கு – கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் நீர்வள இருப்பும் பயன்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மூலோபாயங்களும்’ எனும் இக்கட்டுரைத் தொடர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து ஆற்றுப்படுகைகளையும் ஒருங்கிணைந்த முறையில் ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நீர் வளத்தின் திறம்பட்ட பயன்பாட்டையும் சமநிலைப்படுத்தும் வழிமுறைகளை முன்வைக்கும். இது நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் கொள்கை அடிப்படையிலான வழிகாட்டி ஆவணமாகவும் அமையும்.

2.2.1.3 கனகராயன்குளம்

2.2.1.3.1. கனகராயன் குளத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் நீரியல் முக்கியத்துவம்

வட மாகாணத்தின் தொன்மையான நீர்ப்பாசன மரபுகளில் முக்கிய இடம்பெறும் கனகராயன் குளம், வரலாறு, புவியியல் மற்றும் விவசாயப் பொருளாதாரம் ஆகிய மூன்று பரிமாணங்களிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. ‘கனகராயன்’ என்ற பெயர், வன்னிப் பிரதேசத்தில் ஒரு காலத்தில் செல்வாக்குடன் வாழ்ந்ததாகக் கருதப்படும் ‘ராயன்’ எனும் தலைமைக்குடி மக்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதேபோன்று ‘பல்லவராயன் குளம்’, ‘அக்கராயன் குளம்’ போன்ற பெயர்களும் வன்னிப் பிரதேசத்தின் பாரம்பரியக் குடியேற்ற அமைப்புகளையும், அப்பகுதியின் சமூக-அரசியல் வரலாற்றையும் பிரதிபலிப்பதாகக் காணப்படுகின்றன. இப்பெயர்கள், அப்பகுதியில் வாழ்ந்த சிற்றரசர்கள் அல்லது நிலப்பிரபுக்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கனகராயன் குளத்தில் அமைந்துள்ள செப்பனிடப்பட்ட கற்களால் (Dressed Stone Masonry) நிர்மாணிக்கப்பட்ட துருசு, அப்பகுதியின் பாரம்பரிய நீர்ப்பாசனப் பொறியியல் திறனையும், நீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நுணுக்கமான கட்டுமானத் தொழில்நுட்பத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான தொல்பொருள் மற்றும் பொறியியல் மரபுச் சின்னமாகக் காணப்படுகிறது.

கனகராயன் குளம் – செப்பனிடப்பட்ட கற்களால் நிர்மாணிக்கப்பட்ட துருசு

தற்போது காணப்படும் கனகராயன் குளம், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், 1888 முதல் 1896 வரையிலான காலப்பகுதியில் மறுசீரமைக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. இதன் மூலம் கனகராயன் ஆற்றின் மேல்பகுதியில் அமைந்துள்ள ஒரு துணை நதியின் நீரோட்டம் தடுத்துச் சேமிக்கப்பட்டு, அப்பகுதியில் விவசாய அபிவிருத்திக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. எனினும், 1996ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் குளத்தின் அணைக்கட்டு உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டது. பின்னர், 2000ஆம் ஆண்டில் மீண்டும் புனரமைக்கப்பட்டு, அதன் நீர்ப்பாசனச் சேவைகள் மீளமைக்கப்பட்டன.

கனகராயன் குளம், கனகராயன் ஆற்றின் மேற்பகுதியில் உருவாகும் நீரோட்டத்தைத் தேக்கி, சுமார் 314 ஏக்கர் நெல் வயல்களுக்கு பாசன வசதிகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 120 விவசாயக் குடும்பங்கள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றன. எனவே, இக்குளம் வெறும் நீர்த்தேக்கமாக மட்டுமன்றி, கிராமப்புற வாழ்வாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் ஆதாரமாக விளங்கும் சமூக-பொருளாதார வளமாகவும் கருதப்படுகிறது.

முப்பது ஆண்டுகால உள்நாட்டு மோதல் முடிவடைந்த பின்னர், இக்கட்டமைப்புகளை மீளமைத்து விவசாயத்தை உயிர்ப்பிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. அந்தப் பின்னணியில், உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட ‘அவசர வடக்கு மீட்புத் திட்டம்’ (Emergency Northern Recovery Project – ENReP) (உலக வங்கியின் இச்செயல் திட்டத்தின் திட்டப் பணிப்பாளராக கட்டுரையாளரே பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது) மூலம் கனகராயன் குளப்பாசனத் திட்டமும் புனரமைக்கப்பட்டது. இப்புனரமைப்பு, குளத்தின் உட்கட்டமைப்புகளை மீளமைப்பதுடன் மட்டுமல்லாமல், போருக்குப் பிந்தைய காலத்தில் விவசாய உற்பத்தியை மீளத் தொடங்குவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கியது.

‘ENReP’ மூலம் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு, ஒரு கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படக் கூடாது. குளத்தின் நீர்த்தேக்கத் திறன், நீர்வரத்துக் கட்டுப்பாடு, விநியோக அமைப்பு, குளக்கட்டு மற்றும் தொடர்புடைய பாசனக் கட்டமைப்புகள் ஆகியவை மீளச் செயல்படுவதன் மூலம், முழுமையான கிராமப்புற நீர்வள மேலாண்மைச் சங்கிலி மீண்டும் செயல்படுத்தப்பட்டது. எனவே, கனகராயன் குளத்தின் புனரமைப்பு, உட்கட்டமைப்பு மீட்பு மற்றும் விவசாய வாழ்வாதார மீட்பு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்த ஒரு முக்கியமான தலையீடாகக் கருதப்படலாம்.

2.2.1.3.2 கனகராயன் குளத்தின் நீர்ச் சமநிலை ஆய்வும் செயற்பாட்டு முறைமையும்

கனகராயன் குளத்தின் நீர்வளப் பயன்பாட்டுத் திறன் மற்றும் பாசன முகாமைத்துவ செயற்பாடுகளை அறிவியல் அடிப்படையில் மதிப்பிடுவதற்காக, கட்டுரையாளரின் ‘Northern River Basins Yield Study for Operational Policy of Irrigation Schemes & Water Resources and Agriculture Development Strategy for North – 2020 – 2035’ என்னும் நூலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் நீர்வரத்து (Yield) அடிப்படையிலான திட்டமிடல் மூலோபாயங்களுடன் ஒத்திசைவாக விரிவான நீர்ச் சமநிலை (Water Balance) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்விற்குத் தேவையான நீரியல் தரவுகள் (Hydrological Data) மற்றும் பரப்பு–கொள்ளளவு (Area-Capacity) தொடர்பான தகவல்கள் வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டன. இத்தரவுகள் தொகுக்கப்பட்டு, நீர்த்தேக்கத்தின் சேமிப்புத் திறன், நீர்வரத்து, பாசனத் தேவைகள் மற்றும் நீர்ப் பயன்பாட்டு முறை ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. அதன் விவரம் கீழே உள்ள உருவில் தரப்பட்டுள்ளது.

இந்த நீர்ச் சமநிலை ஆய்வின் முடிவுகள், கனகராயன் குளம் ஒரு நிலையான மற்றும் நம்பகமான பாசனத் திட்டமாகச் செயற்படுவதற்கான அடிப்படை அளவுகோல்களை உறுதிப்படுத்துகின்றன. அதன்படி, குளத்தின் குறைந்தபட்ச செயற்பாட்டு நீர்மட்டம் ஐந்து அடி (5 ft.) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு கீழ் நீர்மட்டம் குறைந்தால், திட்டத்தின் செயல்திறன் பாதிக்கப்படக்கூடும் என்பதால், இந்த அளவு பாதுகாப்பான செயற்பாட்டு ஆழமாகக் கருதப்படுகிறது.

பெரும்போகப் பருவத்தில், 135 நாட்கள் வளரும் நெற்பயிரை அடிப்படையாகக் கொண்டு மொத்தம் 314 ஏக்கர் பரப்பளவில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிறுபோகப் பருவத்தில் 105 நாட்கள் வளரும் குறுகிய கால நெல் வகைகளைப் பயன்படுத்தி 125.6 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட முடியும் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இதன் அடிப்படையில், இத்திட்டத்தின் மொத்தப் பயிரிடல் தீவிரம் (Cropping Intensity) 1.4 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், ஒரு ஆண்டில் நிலப்பரப்பின் மொத்தப் பயன்பாடு பெரும்போகத்திற்கு 100%, சிறுபோகத்திற்கு 40% பயிர் செய்யப்பட வேண்டும் என்பதாகும். இது நீர்வளத்தை திறமையாகப் பயன்படுத்தும் திட்டமாக கனகராயன் குளம் செயல்படுவதைக் காட்டுகிறது.

மேலும், பாசனத் தேவைகளுக்கு அப்பால் கால்நடைப் பயன்பாடு, வீட்டுத் தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகள் போன்ற பிற பயன்பாடுகளுக்காக ஆண்டிற்கு 6 ஏக்கர் அடி (Acre-feet) அளவிலான நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது. இதன் மூலம், இத்திட்டம் வெறும் விவசாயப் பயன்பாட்டிற்கானதாக மட்டுமன்றி, பல்துறை நீர்வளத் தேவைகளை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த நீர்வள முகாமைத்துவ அணுகுமுறையைப் பிரதிபலிப்பதாகவும் விளங்குகிறது.

மேலும் இந்த நீர்ச் சமநிலை ஆய்வு, அவற்றின் அடிப்படையில் குளத்தின் சேமிப்புத் திறன், வருடாந்த நீர்வரத்து, பாசனத் தேவைகள் மற்றும் உபரி நீர் வெளியேற்ற அளவுகள் ஆகியவை விஞ்ஞான ரீதியாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகள், கனகராயன் குளத்தின் தற்போதைய செயற்பாட்டு அமைப்பு அதன் நீர்வரத்துத் திறனுக்கு ஏற்ப நிலையானதாக இருப்பதையும், மஹா மற்றும் யாலா பருவங்களில் திட்டமிட்ட பயிர்ச் செய்கைகளை ஆதரிக்கக்கூடிய நம்பகமான நீர்வள அடித்தளத்தை வழங்குவதையும் உறுதிப்படுத்துகிறது. 

மேலும், எதிர்காலத்தில் காலநிலை மாற்றம், மழைப்பொழிவு மாறுபாடு மற்றும் அதிகரித்து வரும் நீர்த் தேவைகள் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்காக, அறிவியல் அடிப்படையிலான நீர்வள முகாமைத்துவத்திற்கும், பாசன அட்டவணை மேம்பாட்டிற்கும் இவ்வாய்வு ஒரு முக்கிய வழிகாட்டியாக அமைகிறது. இவ்வாறு, கனகராயன் குளம் வரலாற்றுப் பாரம்பரியம், பாரம்பரிய நீர்ப்பாசன அறிவு, நவீன பொறியியல் அணுகுமுறைகள் மற்றும் கிராமிய சமூகங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வட மாகாணத்தின் முக்கியமான நீர்வளச் சொத்துகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கனகராயன் குளத்தின் நீர்ச் சமநிலை (Water Balance) ஆய்வு

2.2.1.4 கனகாம்பிகைக் குளம் 

2.2.1.4.1 வரலாற்றுப் பின்னணி மற்றும் புனரமைப்பு

கனகாம்பிகைக் குளம் (Kanagambikai Kulam – A/19) கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில், கனகாம்பிகை நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான நடுத்தர பாசனத் திட்டமாகும். இக்குளம் 1960ஆம் ஆண்டு நெல் பயிர்ச்செய்கையை முன்னெடுக்கும் நோக்கில் கட்டமைக்கப்பட்டது. இப்பகுதியின் விவசாய நிலங்களின் தன்மை ஒரே மாதிரியாக இல்லாததுடன், முழுப்பரப்பும் நெல் பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கவில்லை. இதனால், குளத்திலிருந்து நீரை ஒழுங்காக வழங்குவதற்கும், நீர் இழப்பைக் குறைப்பதற்கும், நிலப்பரப்பின் தன்மைக்கு ஏற்ற நீர்ப்பாசன முறையை உருவாக்குவதற்கும், சில பாசனக் கால்வாய்கள் கற்காரையால் உள்தளமிடப்பட்ட (Concrete-lined) கால்வாய்களாக அமைக்கப்பட்டன. இதன் காரணமாக, முழுமையான நெல் சாகுபடிக்குப் பதிலாக, திட்டத்தின் ஒரு பகுதி துணை உணவுப் பயிர்கள் (Subsidiary Food Crops) அல்லது மாற்றுப் பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்தப்படலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது.

கனகாம்பிகைக் குளத்திற்கு பிரதான நீர்வரத்து டிறை ஆறு (Dri Aru) வழியாகக் கிடைக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் பகுதியில் உற்பத்தியாகும் இவ்வாறு, பருவகால மழையை மட்டுமே நம்பிப் பாயும் ஒரு நீரோட்டமாகும். எனவே, கனகாம்பிகைக் குளத்தின் நீரியல் செயல்பாடு, அந்த நீர்ப்பிடிப்புப் பகுதியில் கிடைக்கும் பருவமழை, மேல்நிலை நீர்வரத்து மற்றும் நிலப்பரப்பின் நீர்த் தேக்கத் திறன் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையது. இத்தகைய பருவகால நீர்வள அமைப்புகளில், மழை அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் கிடைக்கும் மேலதிக நீரைச் சேமித்து வைத்து, பின்னர் விவசாயத் தேவைக்கேற்ப கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்துவது முக்கியமான மேலாண்மைக் கொள்கையாகும்.

குளம் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட பின்னர், அதன் முழுச் சேமிப்பு நீர்மட்டம் (Full Supply Depth – F.S.D.) 10.5 அடி ஆகும் வகையில் 1970ஆம் ஆண்டில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு (Augmented) மேம்படுத்தப்பட்டது. இந்த விரிவாக்கம், குளத்தின் நீர்த்தேக்க மற்றும் பாசனத் திறனை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது. குளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலம், பருவமழைக் காலத்தில் கிடைக்கும் நீரை அதிகளவில் சேமித்து வைத்து, வறட்சி அல்லது மழையற்ற இடைக்காலங்களில் விவசாயப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வாய்ப்பு மேம்படுத்தப்பட்டது. குறிப்பாக, மஹா மற்றும் யாலா ஆகிய இரு பருவங்களிலும் திட்டமிட்ட முறையில் நீரைப் பயன்படுத்துவதற்கான அடிப்படையை இவ்விரிவாக்கம் உருவாக்கியது.

காலப்போக்கில், குளக்கட்டு, நீர்விநியோக அமைப்பு மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் தேவைகள் உருவாயின. இதனைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட ‘Emergency Northern Recovery Project’ (ENReP) திட்டம் மூலம் கனகாம்பிகைக் குளத்தில் மேம்பாட்டு மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு மாகாணத்தில் நீண்டகால மோதலால் பாதிக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீளமைத்து, விவசாய உற்பத்தியையும் கிராமப்புற வாழ்வாதாரத்தையும் மீட்டெடுப்பது ‘ENReP’இன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அந்தப் பரந்த புனரமைப்பு அணுகுமுறையின் ஒரு பகுதியாக கனகாம்பிகைக் குளத்திற்கான தலையீடும் மேற்கொள்ளப்பட்டது.

‘Integrated Water Resources Management Project’ (IWRMP) திட்டத்தின் கீழ், இக்குளத்தின் மேலதிக மேம்பாட்டிற்கும் நிலையான புனரமைப்பிற்கும் தற்போது சுமார் ரூ. 80 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குறிப்பாக குளக்கட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், குளத்திலிருந்து விவசாய நிலங்களுக்கு நீரைச் சீரான முறையில் வழங்கும் பாசனக் கட்டமைப்பு மற்றும் வடிகால் அமைப்பு மேலும் மேம்படுத்தப்பட உள்ளது. வலுவான குளக்கட்டு என்பது வெறும் நீர்த்தேக்கப் பாதுகாப்பிற்கான கட்டமைப்பு மட்டுமல்ல; அது குளத்தின் நீர்ப்பாசன நம்பகத்தன்மை, விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் எதிர்பாராத வெள்ள அபாயக் குறைப்பு ஆகியவற்றோடும் நேரடியாக இணைந்துள்ளது.

2.2.1.4.2 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அறிவியல்நகர் (Ariviyal Nagar) நீர்த் தேவைகளும் கனகாம்பிகைக் குளமும்

கனகாம்பிகைக் குளத்தின் எதிர்காலப் பயன்பாட்டில் ஒரு முக்கியமான கூடுதல் வாய்ப்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அறிவியல்நகர் (Ariviyal Nagar) வளாகத்திற்குத் தேவையான நீரை வழங்குவது ஆகும். முன்மொழியப்பட்ட நீர்ச்சமநிலை மதிப்பீட்டின் அடிப்படையில், மாதத்திற்கு சுமார் 125 ஏக்கர்-அடி (Acre-feet) நீரை அறிவியல் நகர் பல்கலைக்கழக வளாகத்திற்கு வழங்கக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இது சரியான நீர்வள மேலாண்மை மற்றும் விநியோகக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டால், பல்கலைக்கழக வளாகத்தில் நிலவும் நீர்ப்பற்றாக்குறையைத் தணிப்பதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும்.

அறிவியல் நகர் வளாகத்திற்கான இந்த நீர் வழங்கல் முன்மொழிவு, விவசாயப் பயன்பாட்டை பாதிக்காத வகையில் நீர்வளத்தின் முன்னுரிமை அடிப்படையிலான ஒதுக்கீடு என்ற கொள்கையில் செயல்படுத்தப்பட வேண்டும். அதாவது, குளத்தின் ஆரம்பச் சேமிப்பு, எதிர்பார்க்கப்படும் பருவகால நீர்வரத்து, பெரும்போக மற்றும் சிறுபோகப் பாசனத் தேவைகள், குறைந்தபட்ச செயற்பாட்டு நீர்மட்டம், ஆவியாதல் மற்றும் பிற நீரிழப்புகள் ஆகியவற்றை முதலில் கணக்கில் கொண்டு, அதன் பின்னர் பல்கலைக்கழக வளாகத்திற்கான கூடுதல் நீர் ஒதுக்கீட்டை நிர்ணயிப்பது பொருத்தமானதாகும். இதன் மூலம் விவசாய நீர்விநியோகம் மற்றும் கல்வி நிறுவனத்தின் நீர்த் தேவை ஆகிய இரண்டுக்கும் இடையில் சமநிலையான நீர் மேலாண்மை அமைப்பை உருவாக்க முடியும்.

இத்தகைய நீர்விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அறிவியல் நகர் வளாகத்தில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் தற்போதைய அழுத்தத்தை ஓரளவு குறைக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, நிலத்தடி நீர்மட்டம் மற்றும் நீர்த் தரம் தொடர்பாக நீண்டகாலப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சூழலில், மேற்பரப்பு நீர் ஆதாரத்திலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீரை வழங்குவது ஒரு மாற்று நீர்வளமாகச் செயல்படக்கூடும். எனினும், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன், பல்கலைக்கழகத்தின் உண்மையான மாதாந்த நீர்த்தேவை, உச்ச நேரத் தேவை, குடிநீர் மற்றும் குடிநீரல்லாத பயன்பாடுகளின் பிரிப்பு, சுத்திகரிப்பு தேவைகள், குழாய் வழித் தூரம் மற்றும் மின்சாரச் செலவு ஆகியன தனியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

2.2.1.4.3 கனகாம்பிகைக் குளத்தின் நீர்ச்சமநிலைப் பகுப்பாய்வு

கனகாம்பிகைக் குளத்தின் நீர்ப்பாசன மற்றும் பிற நீர்வளப் பயன்பாடுகளை அறிவியல் அடிப்படையில் மதிப்பிடுவதற்காக, இந்நூலில் விளக்கப்பட்டுள்ள நீர்வளக் கொள்கைகள் மற்றும் மேலாண்மை உத்திகளுக்கு இணங்க விரிவான நீர்ச்சமநிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட நீரியல் தரவுகள் மற்றும் குளத்தின் பரப்பளவு–கொள்ளளவுத் (Area–Capacity) தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்தப்பட்ட அடிப்படை நீரியல் மற்றும் பரப்பளவு–கொள்ளளவுத் தரவுகளும், நீர்ச்சமநிலை ஆய்வின் முடிவுகளும் கீழே வழங்கப்பட்டுள்ளன.

இந்த நீர்ச்சமநிலை ஆய்வின் அடிப்படையில், கனகாம்பிகைக் குளத்தின் குறைந்தபட்ச செயற்பாட்டு நீர்மட்டம் 4 அடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, குளத்தின் நீர்மட்டம் 4 அடிக்குக் கீழ் சென்ற பின்னர் வழக்கமான பாசனத் தேவைகளுக்காக நீரைத் தொடர்ந்து வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். இவ்வாறு குறைந்தபட்ச நீர்மட்டத்தைப் பேணுவதன் மூலம், பருவத்தின் இறுதியில் எதிர்பாராத நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், குளத்தின் மீதமுள்ள நீரை பாதுகாப்பு மற்றும் அவசரத் தேவைகளுக்காக வைத்திருக்கவும் முடியும்.

பெரும்போகப் பருவத்தில் 260 ஏக்கர் நிலப்பரப்பை பயிரிடுவதற்கான சாத்தியம் நீர்ச்சமநிலை ஆய்வின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரப்பளவு, பருவமழைக் காலத்தில் கிடைக்கும் நீர்வரத்து மற்றும் சேமிப்பின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட ஒரு நடைமுறைப் பாசனப் பரப்பாகக் கருதப்படுகிறது. பெரும்போகப் பருவத்தில் அதிகளவு நீர்வரத்துக் கிடைக்கும் காலத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நீர்ப்பாசனத் திட்டம் பருவத்தின் ஆரம்ப நீர்த்தேக்க நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்பட வேண்டும்.

சிறுபோகப் பருவத்திற்கு 104 ஏக்கர் பாசனப் பரப்பளவு முன்மொழியப்பட்டுள்ளது. மஹா பருவத்துடன் ஒப்பிடும்போது யாலா காலத்தில் நீர்வரத்து மற்றும் மழைவீழ்ச்சி பொதுவாக குறைவாகவும் அதிக நிச்சயமின்மையுடனும் இருக்கக்கூடும் என்பதால், கட்டளைப் பரப்பின் ஒரு பகுதியை மட்டுமே பயிரிடுவது நீரியல் ரீதியாக பாதுகாப்பான அணுகுமுறையாகும். இதன் மூலம் சிறுபோகப் பருவத்தின் நடுப்பகுதிக்குப் பின்னர் குளத்தின் சேமிப்பு மிகக் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் கட்டுப்படுத்தப்படலாம்.

பெரும்போக மற்றும் சிறுபோகப் பருவங்களில் பரிந்துரைக்கப்பட்ட பயிரிடும் பரப்பளவுகளின் அடிப்படையில், குளத்தின் பயிரிடல் தீவிரம் (Cropping Intensity) சுமார் 1.4 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குளத்தின் கிடைக்கக்கூடிய நீர்வளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடைமுறை விவசாயப் பயன்பாட்டு அளவுகோலாகும். எதிர்காலத்தில் அதிகப்படியான பரப்பளவை பயிரிடுவதற்கு முன், கூடுதல் நீர்வளம் உண்மையில் கிடைக்கிறதா என்பதும், அதற்காக குளத்தின் சேமிப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு அமைப்பில் கூடுதல் மேம்பாடு தேவையா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மேலும், நீர்ச்சமநிலை ஆய்வில் பிற நீர்த் தேவையாக மாதத்திற்கு சுமார் 125 ஏக்கர்-அடி அளவு ஒதுக்கீடு கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பிற நீர்த் தேவையின் முக்கியப் பயன்பாடாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் நகர் வளாகத்திற்கு நீர் வழங்கும் முன்மொழிவு கருதப்படுகின்றது. இதனைச் செயல்படுத்தும் போது, அந்த 125 ஏக்கர்-அடி மாதாந்த ஒதுக்கீடு ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் சம அளவில் வழங்கப்பட வேண்டுமா, அல்லது பருவகால நீர்வரத்துக்கு ஏற்ப மாறுபடும் அளவில் வழங்கப்பட வேண்டுமா என்பது தனியாகத் தீர்மானிக்கப்பட வேண்டும். நீர்வளம் குறையும் காலங்களில் விவசாயத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஒரு நெகிழ்வான நீர் ஒதுக்கீட்டு முறையை (Adaptive Allocation System) உருவாக்குவது பொருத்தமானதாக இருக்கும்.

இதனால், கனகாம்பிகைக் குளத்தை எதிர்காலத்தில் விவசாயம் + கல்வி நிறுவனம் + பல்துறை நீர்வள மேலாண்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நீர்த்தேக்கமாக மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், விவசாயப் பாசன நம்பகத்தன்மையைப் பாதிக்காமல் கூடுதல் நீர்ப் பயன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, குளத்தின் குறைந்தபட்ச 4 அடி செயற்பாட்டு நீர்மட்டம் பாதுகாக்கப்படுவதோடு, மஹா பருவத்திற்கான 260 ஏக்கர் மற்றும் யாலா பருவத்திற்கான 104 ஏக்கர் பயிரிடும் திட்டங்கள் முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும்.

மொத்தத்தில், கனகாம்பிகைக் குளம் ஒரு சாதாரண நடுத்தரப் பாசனத் திட்டமாக மட்டும் கருதப்படக் கூடாது. 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1970ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டு, 2011ஆம் ஆண்டு ‘ENReP’ மூலம் மேம்படுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது ‘IWRMP’ மூலம் மேலும் வலுப்படுத்தப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் பல்நோக்கு நீர்வளத் திட்டமாக உருவாக்கப்படக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. விவசாயத்திற்கு நம்பகமான நீர்வழங்கல், பாதுகாப்பான வடிகால் அமைப்பு, வலுவான குளக்கட்டு மற்றும் அறிவியல் நகர் வளாகத்திற்கு திட்டமிட்ட கூடுதல் நீர் வழங்கல் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டால், இக்குளம் பிராந்தியத்தின் விவசாய உற்பத்தி, கல்வி நிறுவன வளர்ச்சி மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆகிய மூன்றிற்கும் நீண்டகால ஆதாரமாக அமையக்கூடும்.

இதற்காக, எதிர்காலத்தில் கனகாம்பிகைக் குளத்திற்கு நேரடி நீர்மட்டக் கண்காணிப்பு, பருவகால நீர்ச்சமநிலை புதுப்பித்தல், நீர்வரத்து அளவீடு, குளத்தின் கொள்ளளவு மீள்மதிப்பீடு, நீர்ப்பாசன இழப்புக் கண்காணிப்பு மற்றும் பயனாளிப் பங்கேற்பு அடிப்படையிலான நீர்விநியோக மேலாண்மை ஆகியவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய தரவு சார்ந்த மேலாண்மை முறைகளை நடைமுறைப்படுத்துவது, குளத்தின் தற்போதைய பயன்பாட்டை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், எதிர்காலக் காலநிலை மாற்றம் மற்றும் நீர்ப்பற்றாக்குறைச் சவால்களையும் தாங்கி நிற்கும் நம்பகத்தன்மையையும் அதற்கு வழங்கும்.

கனகாம்பிகைக் குளத்தின் நீர்ச் சமநிலை (Water Balance) ஆய்வு

தொடரும்.



About the Author

சுப்ரமணியம் சிவகுமார்

கலாநிதி. சுப்ரமணியம் சிவகுமார் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலைப் (BSc Eng.) பட்டமும், இந்தியத் தொழில்நுட்பக்கழகம் ரூர்க்கியில் (IIT Roorkee) நீர்வள மேம்பாட்டுத்துறையில் முதுகலைப் (MSc) பட்டமும், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (PhD) பட்டமும் பெற்றவர். பின்னர் நோர்வேயின் உயிரியல் - அறிவியல் பல்கலைக்கழகத்திலும் (NMBU, Ås), வடகிழக்கு நோர்வே பல்கலைக்கழகத்திலும் (Bodø) பிந்தைய முனைவர் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராகவும், நீர்ப்பாசனப் பொறியாளராகவும் 28 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பல்கலைக்கழகங்களில் மூத்த விரிவுரையாளராகச் செயற்பட்டார். விவசாய அமைச்சகத்தில் திட்டமிடல் பணிப்பாளராகவும், வடமாகாண அவசர மீளமைப்புத் திட்டத்தின் திட்டப்பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

பல்வேறு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் விருந்தினர் விரிவுரைகளையும், முக்கிய உரைகளையும் (Keynote Speeches) நிகழ்த்தியுள்ள இவர், குறியீட்டு அறிவியல் இதழ்களில் 45க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளதோடு, இதுவரை 7 நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், 18 சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்