லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பிலுள்ள தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் நாவற்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் தென்மராட்சியின் இன்னொரு கோவிற்பற்றான வரணி தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம்.
வரணிக் கோவிற்பற்று வரணி, குடமியான், தாவளை-இயற்றாலை, மந்துவில், வரணி-இயற்றாலை ஆகிய ஐந்து துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை நிலப்படத்தில் காணமுடிகிறது (படம்-1).

எல்லைகள்
லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி வரணிக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் உப்பாறு கடல்நீரேரியும் வடமராட்சிப் பிரிவும் எல்லைகளாகக் காணப்படுகின்றன. கிழக்கு எல்லையில் வடமராட்சிக் கடல்நீரேரி உள்ளது. இக்கடல்நீரேரிக்கு அடுத்த பக்கத்தில் உள்ள குடத்தனையும் வரணிக் கோவிற்பற்றின் ஒரு பகுதியாக உள்ளது. தெற்கில் கச்சாய், எழுதுமட்டுவாழ் ஆகிய கோவிற்பற்றுகள் உள்ளன. மேற்கில் சாவகச்சேரி கோவிற்பற்று அமைந்துள்ளது. குடத்தனையின் கிழக்கு எல்லையில் வங்காளக் குடாக் கடல் அமைந்துள்ளது.
கோவிற்பற்றின் தென்மேற்கு மூலைப் பகுதியில் வரணி-இயற்றாலை துணைப்பிரிவு அமைந்துள்ளது. அதற்கு மேற்கே தெற்கு எல்லையை அண்டிக் குடமியான் துணைப்பிரிவும் வடக்கு எல்லையோரமாக மந்துவில், தாவளை-இயற்றாலை ஆகிய துணைப்பிரிவுகளும் உள்ளன. கோவிற்பற்றின் கிழக்குப் பகுதியில் வரணி துணைப் பிரிவு அமைந்துள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி வரணித் துணைப் பிரிவுக்குக் கிழக்கே வடமராட்சிக் கடல்நீரேரிக்கு அடுத்த பக்கத்தில் காணும் குடத்தனைப் பகுதியும் வரணித் துணைப்பிரிவைச் சேர்ந்ததாக நிலப்படம் குறித்துக் காட்டுகிறது (படம்-2).

எல்லைகள் துல்லியமாக இல்லாவிட்டாலும், வரணிக் கோவிற்பற்றுக்குள் நிலப்படம் காட்டும் துணைப்பிரிவுகளின் அமைவிடங்கள் ஒத்த பெயர் கொண்ட இன்றைய கிராம அலுவலர் பிரிவுகளின் அமைவிடங்களுடன் பெருமளவுக்கு ஒத்து வருகின்றன. ஆனால், வரணி-இயற்றாலை துணைப் பிரிவின் அமைவிடம் இன்றைய வரணி-இயற்றாலை கிராம அலுவலர் பிரிவின் அமைவிடத்திலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. லெயுசிக்காமின் நிலப்படத்தில் எல்லைகள் பிழையாக வரையப்பட்டிருப்பது இம்முரண்பாட்டுக்குக் காரணமாக இருக்கலாம்.
ஒல்லாந்தர் கால வரணிக் கோவிற்பற்றின் பெரும் பகுதி தற்போதைய சாவகச்சேரி பிரதேசச் செயலர் நிர்வாகப் பிரிவின் ஒரு பகுதியாக உள்ளது. இக்கோவிற்பற்றின் பகுதியாக நிலப்படம் காட்டும் குடத்தனை தற்காலத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேசச் செயலர் பிரிவுக்குள் அடங்குகிறது. உள்ளூராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை குடத்தனை தவிர்ந்த இக்கோவிற்பற்றின் ஏனைய பகுதிகள் சாவகச்சேரி பிரதேச சபைக்குள்ளும் குடத்தனை பருத்தித்துறை பிரதேச சபைக்குள்ளும் அடங்குகின்றன.
வீதிகள்
ஒல்லாந்தர் காலத்திலேயே வரணிக் கோவிற்பற்றினுள் பல வீதிகள் இருந்துள்ளதை லெயுசிக்காமின் நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. அத்துடன், இவ்வீதிகள் வரணிக் கோவிற்பற்றின் பெரும்பாலான பகுதிகளை நல்ல முறையில் இணைப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. சாவகச்சேரியிலிருந்து வரணிக் கோவிற்பற்றின் நீளப்பாட்டு அச்சை அண்டிச் செல்லும் ஒரு வீதி வரணித் துணைப் பிரிவுக்குள் நீளப்பாட்டு அச்சுக்குக் குறுக்காகச் செல்லும் இன்னொரு வீதியில் வரணித் தேவாலயத்துக்கு அருகே முடிவடைகிறது. இந்த வீதி, சாவகச்சேரியிலிருந்து தற்காலத்து டச்சு வீதி, வேம்பிராய்-வரணி வீதி ஆகிய வீதிகளின் தடத்தில் இன்றைய வரணி மத்திய கல்லூரிச் சந்தி வரை சென்று, அங்கிருந்து கொடிகாமம்-புலோலி வீதித் தடத்தில் சென்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. ‘டச்சு வீதி’ என்ற பெயரும், அது ஒல்லாந்தர் காலத்து வீதி என்பதைக் காட்டுகிறது.
நிலப்படத்தில் வரணித் தேவாலயச் சந்திப்புக்கு மேற்கில் முன்னர் குறிப்பிட்ட குறுக்கு வீதியிலிருந்து தொடங்கும் ஒரு வீதி வடக்கு நோக்கிப் புலோலிக்குச் செல்கிறது. தற்காலத்தில் சாவகச்சேரியிலிருந்து புலோலிக்குச் செல்லும் வீதி இடையில் முறியாமல் தொடர்ச்சியான வீதியாக இருப்பதைக் காண முடிகிறது. மேலே குறிப்பிட்ட குறுக்காகச் செல்லும் வீதி தென்கிழக்குத் திசையில் எழுதுமட்டுவாழ் நோக்கிச் செல்ல, வடமேற்குப் பக்கமாக வரணிக் கோவிற்பற்று எல்லையில் முடிவடைகிறது. தேவாலயச் சந்தியிலிருந்து சாவகச்சேரி நோக்கிச் செல்லும் வீதியில் சந்தியிலிருந்து சற்றுத் தொலைவில் தொடங்கும் ஒரு வீதி எழுதுமட்டுவாழ் நோக்கிச் செல்கிறது. இதன் பெரும்பகுதி தற்காலத்தில் சுட்டிபுரம் கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகாகச் செல்லும் மிருசுவில் வீதித் தடத்துடன் பொருந்துவதாகத் தெரிகிறது.
தேவாலயச் சந்தியிலிருந்து சாவகச்சேரி நோக்கிச் செல்லும் வீதியில், வரணிக் கோவிற்பற்றின் தெற்கு எல்லைக்குச் சமீபமாகத் தொடங்கும் இன்னொரு வீதியும் கொடிகாமத்தினூடாக எழுதுமட்டுவாழுக்குச் செல்கிறது. இதைத் தற்காலத்து வீதி எதனுடனும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. இறுதியாகக் குறிப்பிட்ட இரண்டு வீதிகளையும் குறுக்காக இணைக்கும் ஒரு வீதியையும் நிலப்படம் காட்டுகிறது. இவ்வீதியின் பெரும் பகுதி வரணிக் கோவிற்பற்றுக்குள்ளேயே அடங்குகிறது. இந்த வீதி தற்காலத்துப் புத்தூர் – மீசாலை வீதியின் கிழக்குப் பகுதியாக இருக்கக்கூடும். நிலப்படத்திலுள்ள வரணித் தேவாலயச் சந்திக்கு அண்மையிலிருந்து புலோலி நோக்கிச் செல்லும் வீதியையும் அச்சந்தியூடாக எழுதுமட்டுவாழுக்குச் செல்லும் வீதியையும் குறுக்காக இணைக்கும் இன்னொரு வீதியும் நிலப்படத்தில் உள்ளது. இதையும் தற்காலத்து வீதி எதனுடனும் அடையாளம் காணக்கூடியதாக இல்லை.
கட்டடங்கள்
வழமை போல, வரணிக் கோவிற்பற்றிலும் கிறித்தவ தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையும் நிலப்படத்தில் முக்கியத்துவம் கொடுத்துக் குறித்துள்ளனர். இவற்றைத் தவிர இரண்டு யானைப்பந்திகளையும் ஓர் அம்பலத்தையும் நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. அத்துடன், ஒரு மீன்பிடித் துறையும் உள்ளது.
தேவாலயமும் தேவாலய இல்லமும்
வரணியில் இருந்த தேவாலயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட போல்டேயஸ் பாதிரியார், அது மரஞ் செடிகள் நிறைந்த இடத்தில் அமைந்திருந்ததாகவும், குறிப்பாகக் காலையிலும் மாலையிலும் கவர்ச்சிகரமாகத் தோற்றம் தந்ததாகவும் கூறுகிறார். அவர் சூழலையும் மரஞ் செடிகளைப் பற்றியும் நல்ல விதமாகவே குறிப்பிட்டிருந்தாலும், தேவாலயமும் அதோடு சேர்ந்த இல்லமும் மண்ணால் மோசமான முறையில் கட்டப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இல்லம் அகலமான அறைகளையும் கூடத்தையும் கொண்டிருந்ததாகவும், மேற்தளத்தில் குளிர்மையான அறைகள் இருந்ததாகவும் எழுதியுள்ளார்.1 நூலிலுள்ள வரணித் தேவாலயத்தைக் காட்டும் படத்தில் கட்டடங்களை மண்ணாலான சுவர்களையும் ஓலைக் கூரைகளையும் கொண்டவையாகவே காட்டியுள்ளனர்2 (படம்-3). ஆனால், விவரிப்பில் உள்ளவாறு படத்தில் இல்லம் இரண்டு தளங்களைக் கொண்டதாக இல்லை.

1834 ஆம் ஆண்டில் அமெரிக்க இலங்கை மிசனைச் சேர்ந்தோர் வரணியைத் தனியான ஒரு நிலையமாக அறிவித்து மதப் பணியாற்றத் தொடங்கினர்.3 அங்கே அவர்கள் ஒரு தமிழ் மொழிப் பாடசாலையையும் நிறுவினர். ஆனால், ஒல்லாந்தர்காலத் தேவாலயத்தையோ அது இருந்த இடத்தையோ தமது தேவைக்குப் பயன்படுத்தியதைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை. இத்தேவாலயம் நிரந்தரமற்ற கட்டடப் பொருட்களால் ஆனதால், அமெரிக்க மிசன் அங்கே வரும்போது அது பயன்படுத்த முடியாத அளவுக்கு அழிந்த நிலையில் இருந்திருக்கக்கூடும்.
யானைப்பந்தி
இதுவரை பார்த்த கோவிற்பற்றுகளில் இல்லாதவாறு வரணிக் கோவிற்பற்றில் இரண்டு யானைப் பந்திகளை நிலப்படம் காட்டுகிறது. இரண்டுமே வரணித் துணைப்பிரிவில் ஒன்றுக்கொன்று குறுகிய தூர இடைவெளியில் அமைந்துள்ளன. யானைகளுக்குத் தேவையான உணவு முதலியவை இவ்விடத்தில் அதிகமாகக் கிடைத்ததால் இங்கே கூடுதலான யானைகளை வைத்துப் பராமரித்திருக்கக்கூடும். சாவகச்சேரியிலிருந்து வரணித் தேவாலயச் சந்திக்குச் செல்லும் வீதியை எழுதுமட்டுவாழில் இருந்து வரும் வீதி சந்திக்கும் இடத்துக்கு அண்மையில் ஒரு யானைப் பந்தி உள்ளது. மற்றது, வரணித் தேவாலயத்திலிருந்து எழுதுமட்டுவாழுக்குச் செல்லும் வீதிக்குத் தெற்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் காணப்படுகின்றது.
வரணி மகா வித்தியாலயத்துக்கும் (வரணி மத்திய கல்லூரி) சுட்டிபுரம் கண்ணகை அம்மன் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பழைய செங்கற் கட்டட அழிபாடுகள் காணப்படுவதாகவும் அது அப்பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் குதிரை லாயம் ஒன்றின் எச்சமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.4 ஏறத்தாழ அந்தப் பகுதியிலேயே யானைப் பந்திகளை நிலப்படம் குறித்துக் காட்டுவதால், மேற்குறிப்பிட்ட கட்டட அழிபாடுகள் நிலப்படம் காட்டும் யானைப் பந்திகளின் அழிபாடாக இருப்பதற்கும் சாத்தியம் உள்ளது.
அம்பலம்
சாவகச்சேரியிலிருந்து வரணித் தேவாலயத்துக்குச் செல்லும் வீதியில் ஓர் அம்பலம் இருப்பதை நிலப்படம் காட்டுகிறது. மந்துவில் துணைப்பிரிவுக்குள் இது அமைந்துள்ளது. இது இன்றைய வேம்பிராய் – வரணி வீதியை அண்டி இருந்திருக்கக்கூடும். நிலப்படத்தின்படி, இந்த வீதி தென்மராட்சியின் முக்கியமான நகரமான சாவகச்சேரியை வடமராட்சியின் முக்கிய நகரான பருத்தித்துறையுடன் இணைக்கும் ஒரே வீதியாகக் காணப்படுகிறது. இதனால், பொது மக்கள், வணிகர் முதலியோரின் போக்குவரத்துக்கு இவ்வீதி முக்கியமானதாக இருந்திருக்கும். மேற்படி பயணிகள் இளைப்பாறிச் செல்வதற்காக இந்த அம்பலம் அமைக்கப்பட்டிருக்கும் எனலாம்.
மீன்பிடித் துறையும் மடமும்
வரணி துணைப்பிரிவைச் சேர்ந்த குடத்தனையின் கிழக்குக் கடற்கரையில் மடம் போன்ற ஒரு குறியீட்டைக் காண முடிகிறது. இதன் அருகே நாவற்குழிக் கோவிற்பற்றில் உள்ளது போலவே ‘Vis Ratel’ எனப் பெயர் குறித்துள்ளனர். எனவே சென்ற கட்டுரையில் விளக்கியவாறே இதையும் ஒரு மடத்தோடு கூடிய மீன்பிடித் துறை எனக் கொள்ள முடியும். இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வுகளில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் கால நாணயங்களும், பழைய மட்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. இதனால், இவ்விடத்தில் போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே ஒரு துறைமுகம் இருந்தது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். போர்த்துக்கேயருக்கு முன்பே இது முக்கியத்துவம் பெற்ற இடமாக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தும் உண்டு.5
குளங்கள்
வரணிக் கோவிற்பற்றுக்குள் 85 குளங்களை நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. இவற்றுள் வரணித் துணைப்பிரிவுக்குள் கொக்கட்டியான் குளம், தம்பாலைக் கிராய், சிவிலிக் குளம், நுளம்பாய்க் குளம், மலிச்சிக் குளம், சிவியான் புட்டி(1), சிவியான் புட்டி (2), முலவைக் குளம், இலியார் குளம், கிராயடிக் குளம் (1), கிராயடிக் குளம் (2), வண்ணான் தாழ்வு (1), வண்ணான் தாழ்வு (2), மாணிக்கவில் குளம், புள்ளிச் செடிக் குளம், உக்கிலுவில் குளம், சாவிலிக் குளம், மாவில் குளம் (1), கல்குளுவில் குளம் (1), இலங்கைநாயகன் குளம், தண்டிகைச் சாலி (1), தண்டிகைச் சாலி (2), கல்குளுவில் குளம் (2), குட்டுமெச்சல் குளம், குமார குளம், சம்பைக் குளம், கொல்லன் குளம், மாவில் குளம் (2), நீலன் குளம், மாவில் குளம் (3), வெட்டுக் குளம், கட்டாலைக் குளம், வேலன் குளம், திக்கில் குளம், புதரிக் குளம், சிறிய குளம், அழகப்பெருமாள் குளம், தச்சன் குளம் ஆகிய சிறப்புப் பெயர்களைக் கொண்ட 42 குளங்களும்; குளம், துரவு, கேணி முதலிய பொதுப் பெயர்களால் குறிக்கப்பட்ட நான்கு குளங்களும் உள்ளன. இவை தவிர, வரணி துணைப்பிரிவுக்குள் அடங்கிய குடத்தனையில் மாவாக் கேணி, உலெவியடிக் குளம் ஆகிய இரண்டு குளங்கள் உள்ளன. இங்கே சில பெயர்கள் இரண்டிரண்டு தடவைகளும் ஒரு பெயர் மூன்று தடவையும் வருகின்றன. உண்மையிலேயே ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட பல குளங்கள் இருந்தனவா அல்லது ஒரு குளத்தையே பல இடங்களில் பிழையாகக் குறித்துள்ளனரா தெரியவில்லை.
குடமியான் துணைப் பிரிவில் மிகாப்புலிக் குளம், விளம்புலாட்டிக் குளம், நீலன் வயற் குளம், செம்மானெட்டியன் குளம், வண்ணான் குளம், கொக்குப் பள்ளம் ஆகிய ஆறு குளங்கள் உள்ளன. தாவளை-இயற்றாலை துணைப்பிரிவில் 17 குளங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இல்லிக் குளம், வண்ணான் குளம், வெட்டுக்குளம் ஆகிய மூன்று குளங்கள் மட்டுமே சிறப்புப் பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளன. ஏனையவற்றைப் பொதுப் பெயர்களாலேயே குறித்துள்ளனர். மந்துவில் துணைப் பிரிவில் குறித்துள்ள 14 குளங்களுள் கோட்டையடிக் கிராய், காயலடிப்பாயன் கிராய், மாப்பாணன் துரவு, இலந்தைக் கிராய், ஆண்டார் துரவு, கூனிக் கிராய், அன்றிக் கிராய், மன்னாலிக் கிராய், மாய்குழிக் கிராய், காயன்வல்லைக் குளம், கேளங் குளம், ஒற்றைக் கேணி, இடக்கியன் குளம் ஆகிய 13 குளங்கள் சிறப்புப் பெயரால் குறிக்கப்பட்டுள்ளன. வரணி-இயற்றாலைத் துணைப்பிரிவில் காணப்படும் ஆறு குளங்களுமே பொதுப் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளன.
ஒல்லாந்தர்கால வரணிக் கோவிற்பற்று எல்லைக்குள் இப்போது ஏறத்தாழ 150 குளங்கள் இருப்பதாகப் பதிவுகள் காட்டுகின்றன.6 நிலப்படத்திலுள்ள பெயர்களைத் தற்காலப் பதிவுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவான ஒல்லாந்தர்காலக் குளப் பெயர்களே இன்றும் பயன்பாட்டில் உள்ளதை அறிய முடிகின்றது. நுளம்பாய்க் குளம், வண்ணான் தாழ்வுக் குளம், மாணிக்கவில் குளம், மாவில் குளம், குமார குளம், கொக்குப் பள்ளக் குளம், கூனிக் கிராய்க் குளம், கேளங் குளம் ஆகிய குளப் பெயர்கள் மாற்றமின்றித் தொடர்கின்றன. நிலப்படத்தில் காணும் உக்குளுவில் குளம், கற்குளுவில் குளம் ஆகிய பெயர்கள் தற்காலத்தில் சிறிய மாற்றங்களுடன் முறையே உக்குளுக் குளம், கற்குளுக் குளம் என அழைக்கப்படுகின்றன.
குறிப்புகள்
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 330 and 332.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 343.
- Report of the American Ceylon Mission 1868 (Jaffna: Strong & Asbury Printers, 1869), 9.
- சி.கா. கமலநாதன், வரணியின் மரபுரிமைகள் – பாகம் 1 (வரணி: புராதன குருநாதர் கோயில், 2012), 44.
- கமலநாதன், வரணியின் மரபுரிமைகள் – பாகம் 1, 43.
- தகவல்: விவசாய அபிவிருத்தித் திணைக்களம்.



