கொம்புமுறி விளையாட்டு தமிழர்கள் மத்தியில் கிழக்கிலங்கையில் மட்டுமே நிகழ்த்தப்படுகின்றது. ஆனால் இவ்விளையாட்டு சிங்கள மக்கள் மத்தியிலும் அங்கெலிய விளையாட்டு என்ற பெயரிலே இன்றும் பயில்நிலையிலிருந்து வருகின்றது. இவ்விரு விளையாட்டுக்களிலும் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய ஐதீகக் கதைகள் பின்னிப் பிணைந்துள்ளன. ஆனால் சிலப்பதிகாரம் கூறுகின்ற செய்திகளிலிருந்து இந்த ஐதீகக் கதைகள் தரும் செய்திகள் பாரிய அளவிலே வேறுபடுகின்றன. கண்ணகி வழிபாட்டுடன் கோவலனது வழிபாட்டினையும் இவ்விளையாட்டுக்கள் உள்ளீர்த்துள்ளன. கோவலனை அளுத் தெவியோ என்ற பெயரிலே சிங்கள மக்கள் வழிபடுகின்றனர். கிழக்கிலங்கையிலும் கொம்புமுறி விளையாட்டு நடைபெறுகின்ற சில பிரதேசங்களில் கண்ணகி ஆலயங்களுடன் கோவலனுக்கான ஆலயங்களும் அமைந்து காணப்படுகின்றன.
கொம்புமுறி விளையாட்டானது விவசாயத்தினை மேற்கொள்கின்ற சமூகத்தினரிடையே பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. விவசாயம் செய்து அறுவடை முடிந்த பின்னர் ஓய்வாக இருக்கின்ற காலப்பகுதிகளில் மீண்டும் விவசாயம் செய்வதற்கான நல்ல மழைவளத்தினை வேண்டியே கொம்பு விளையாட்டு நிகழ்த்தப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் விவசாயம் செய்து அதனைத் தம்முடைய சீவனோபாயமாகக் கொண்டு ஆதியிலிருந்து வாழ்ந்து வருவோர் கிழக்கிலங்கையின் சாதி அடுக்கமைவில் முதன்மை பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களுள் முக்குவர், வேளாண் வகுப்பினர் போன்றவர்களை இணைத்துக் கொள்ள முடியும்.
மட்டக்களப்பு மான்மியம் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒவ்வொரு தெய்வம் சிறப்பானதாக அமைந்துள்ளதைக் குறிப்பிடுகின்றது.
“உழவருக்குச் சிவனாமுடுக்கு மாரியம்மன்
நளவருக்கு வயிரவனாம் நாடார்க்குக் கண்ணகையாம்
தெழுவருக்குப் பிதுராம் தொண்டருக்கு வேலவனாம்
மழுவருக்கு வீரபத்திரன் மறையோர்க்கு நான்முகனே
வேந்தருக்கு மாலாம் வேடருக்குக் கன்னிகளாம்
ஏந்துபணி செய்வோர்க்குக் காளி யாம் – நேந்துவைக்கின்
முட்டன் முடுவன் முனிவரெவரார் வரினும்
பட்டமது கட்டிவைத்தான் பாண்டிமன்னன் நிச்சயித்தான்1 ”
(எவ்.எக்ஸ்.சி., நடராசா, மட்டக்களப்பு மான்மியம், பக்.97.)
இவ்வாறு நாடாருக்குரிய தெய்வமாகக் கண்ணகியை இச்சாதிக் கல்வெட்டு கூறுகின்றது. ஆனால் பிற்காலத்திலே நாடாருக்குரிய கண்ணகி வழிபாடானது முக்குவருக்கும் வேளாளருக்குமுரிய வழிபாடாக மாற்றமடைந்துள்ளது. கண்ணகி வழிபாடானது நாடார்களால் மட்டக்களப்பிற்குக் கொண்டுவரப்பட்டதென்று மட்டக்களப்பு மான்மியமும் கர்ணபரம்பரைக் கதைகளும் குறிப்பிட்டாலும் இன்று கண்ணகி வழிபாடு பெரும்பாலும் முக்குவரிடையேயும் வேளாளரிடையேயும் அதிகம் காணப்படுகின்றது2 (சி., மௌனகுரு (1998), மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள், விபுலம் வெளியீடு, மட்டக்களப்பு, பக்.245). கூவாய் குயிலே வசந்தன், ஊர்சுற்றுக்காவியம் போன்ற இலக்கியங்களில் கண்ணகியம்மன் கோயில்கள் அமைந்திருப்பதாகக் கூறப்படுகின்ற பல ஊர்கள் வேளாளர், முக்குவர் ஆகிய சாதியினர் அதிகமாக வாழ்கின்ற ஊர்களாகவே அமைந்திருக்கின்றன.
கொம்புமுறி விளையாட்டிலே வடசேரியினருக்கான குடிகளாக, கண்டன்குடி, சருகுபில்லிக்குடி, பணிக்கனார்குடி, குருக்கள்குடி போன்றன விளங்குகின்றன. தென்சேரியினருக்குரிய குடிகளாக, கட்டப்பத்தான்குடி, மாளவன்குடி, வயித்திக்குடி, வேடர்குடி, சிங்களக்குடி, கோரைக்களப்புக்குடி (கரையார் குடி) போன்ற குடிகள் காணப்படுகின்றன. இதிலே கண்டன்குடி, சருகுபில்லிக்குடி, வயித்திக்குடி, கட்டப்பத்தான்குடி, குருக்கள்குடி போன்ற குடிகள் வேளாளக் குடிகளாகும். பணிக்கனார்குடி, மாளவன்குடி போன்ற குடிகள் முக்குவக் குடிகளாகும். இத்துடன் சேரிப்பிரிப்பில், வேடர்குடி, சிங்களக்குடி, கரையார்குடி போன்ற குடிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இது கொம்புமுறி விளையாட்டின் சேரிப்பிரிப்பின் போது முக்குவ, வேளாளருக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமையையே காட்டி நிற்கின்றது. வண்ணார், அம்பட்டர், பறையர், தட்டார் (விஸ்வ குலத்தார்) போன்ற சாதியைச் சேர்ந்த மக்கள் கொம்புமுறி விளையாட்டில் எந்தச் சேரிக்குள்ளும் அடக்கப்பட மாட்டார்கள். கொம்புகள் முறிக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் பூசையின்போதும் முக்குவ, வேளாளக் குடிகளைச் சேர்ந்தவர்களே பூசைத் தட்டுக்களைக் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுவர்.
கொம்புமுறி விளையாட்டுடன் தொடர்புடைய நிகழ்த்து கலையான வசந்தன் கூத்தும் விவசாயத்தினை மேற்கொள்கின்ற சமூகத்தினராலேயே ஆடப்படுகின்றது. “மக்கள் வயல்வேலைகள் முடிந்தபின் நிறைந்த இன்பத்தினால் ஆடும் ஓர் இனிய கூத்து3” (வி.சீ., கந்தையா (1964), மட்டக்களப்புத் தமிழகம், ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், பக்.200.) என்று வி.சீ. கந்தையா வசந்தன் கூத்தைக் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து வசந்தன் கூத்து விவசாயம் செய்கின்ற சமூகத்தினரிடையே எவ்வாறான செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதனை அறிய முடிகின்றது. தெய்வ வணக்கம் தொடர்பான வசந்தன் கவிகளுள் கண்ணகி பற்றிய வசந்தன் பாடல்களே அதிகமாகக் காணப்படுகின்றன. அம்மன் பள்ளு, மாதவி நடனம், கூவாய் குயிலே வசந்தன் முதலியன கண்ணகி வழிபாட்டினைச் சார்ந்த வசந்தன் கூத்துக்களாகக் காணப்படுகின்றன.
அடிநிலை மக்களான பறையர், நளவர், வண்ணார், அம்பட்டர், கடையர் ஆகியோரிடத்தில் வசந்தன் ஆட்டம் இருந்தமைக்கோ, அன்றி இவ்வாட்டத்தை அவர்கள் ஆடியதற்கோ சான்றுகள் கிடைக்கவில்லை. எனவே வசந்தன் ஆட்டம் ஆடியோர் மட்டக்களப்பின் சாதி அதிகார அடைவில் நிலைபெற்றிருந்த முக்குவர், வேளாளர் ஆகிய வகுப்பினரேயாகும்4 (சி., மௌனகுரு, மு.கு.நூ., பக்.246.)
கொம்புமுறி விளையாட்டின்போது வெற்றிக்களிப்பில் எதிர்ச் சேரியினரை இகழ்ந்து பாடப்படுகின்ற வசைப்பாடல்களும் தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சாடுகின்ற விதத்திலேயே பாடப்படுகின்றன. இதனைப் பின்வரும் கொம்புமுறி விளையாட்டுப் பாடலடிகளினூடாகக் காணலாம்.
“தென்சேரியான் கொம்பு எங்கே எங்கே?
வண்ணாண்ட கச்சைக்கு உள்ளே உள்ளே”
“வடசேரியான் கொம்பு எங்கே எங்கே?
செம்பறப் பற்றைக்கு உள்ளே உள்ளே”
கொம்புமுறி விளையாட்டின்போது பாடப்படுகின்ற பாடல்களுள் மழையை வேண்டுவதான பாடல்களும் காணப்படுகின்றன. மழையை வேண்டுவோர் விவசாயிகளேயாவர். ஏடகக் கொம்புகள் கொண்டு செல்லப்படும் ஏடக ஊர்வலங்களின் போதும் மழையை வேண்டி ‘மழைக் காவியம்’ பாடப்படுகின்றது.
“ஆழமுறு கடல் நீர் வானமது வருஷித்து
அகலமுறும் ஆறுகுளம் நிறை மழைபொழியக்
கோளதுகு ணக்கிடப ராசியது மேவியுங்
கொடியவெயி லல்லாது மழையில்லை யம்மா
நாளது தெரிந்துமறை வேதியர்க ளோதவே
நாங்கள் படுதுயர் கண்டு தாங்கரிய வெள்ளம்
தாழமுறு குளமதுகள் நிறையவே யுன்கிருப
தந்துதவு தம்பிலுவில் தங்கு மாதாவே.5”
(நா., நவநாயகமூர்த்தி (1999), தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, வானதி வெளியீடு, அக்கரைப்பற்று, பக்.92.)
அங்கெலிய விளையாட்டு கம்மடுவ என்ற சடங்குடன் இணைந்ததாகவே நடத்தப்படுகின்றது. கம்மடுவச் சடங்கானது, அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதியில் சிங்கள மக்களால் வருடந்தோறும் நிகழ்த்தப்படுகின்றது. தமது வயல் நிலங்களை அறுவடைக்காலம் வரையும் பாதுகாத்தமைக்காகவும் தம்மைத் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கவும் அமைதியான வாழ்விற்காகவும் வளத்திற்காகவும் இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இச்சடங்கிலும் விவசாயம் செய்கின்ற சமூகத்தினரே முதன்மைப்படுத்தப்படுகின்றனர். அங்கெலிய விளையாட்டும் அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதிகளில் மழை வேண்டியே நிகழ்த்தப்படுகின்றது. மழையை வேண்டுவதாகவும் விவசாயமும் விவசாயிகளும் காக்கப்பட வேண்டுவதாகவும் அங்கெலிய விளையாட்டின்போது பாடப்படுகின்ற சில பாடல்கள் காணப்படுகின்றன. பாணமையில் அங்கெலிய விளையாட்டின்போது பாடப்படுகின்ற பாடலொன்று இவ்வாறு காணப்படுகின்றது.
“நமது கிராமத்தில்
ஹய் ஹய் ஹோ
வயல் வெளிகளுக்கு அருகிலிருக்கும் பெரிய மலைபோல
ஹய் ஹய் ஹோ
பயிர் விளைச்சல் பெருகட்டும்
ஹய் ஹய் ஹோ
பத்து விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர்
ஹய் ஹய் ஹோ…”
பாணமைப் பகுதியில் பத்தினி தெய்வத்தின் ஆலயத்தினைச் சுற்றிக் காணப்படும் பல ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யப்படுகின்ற நிலங்களாகவே உள்ளன.
கொம்புமுறி விளையாட்டின் சேரிப்பிரிப்பு முறையானது சாதியம் சார்ந்ததாகவே அமைகின்றது. இதனைச் சாதிகளிற்கிடையான முனைப்புவாதம் என்று கூறுவதைவிட சாதிய அக முனைப்புவாதம் என்று கூறுவதே பொருத்தமானதாகும். கிழக்கிலங்கையில் சாதிகளிற்குள் குடி என்னும் உட்பிரிவுகள் காணப்படுகின்றன. ஒரு கிராமத்திலே காணப்படுகின்ற ஒவ்வொரு சாதிக்கும் தத்தமக்கென்று தனித்துவமான குடி உண்டு. இக்குடிகளே கொம்புமுறி விளையாட்டில் வாரக்கட்டு என்ற பெயரிலே, வடசேரி, தென்சேரி என்று இரு குழுக்களாகப் பிரிக்கப்படும். கிழக்கிலங்கைச் சமுதாயமானது தாய்வழிச் சமுதாயமாதலினால், தாயின் குடியையே பிள்ளைகளும் பின்பற்றுவது மரபாகும். ஆனால் கொம்புமுறி விளையாட்டில் மட்டுமே தந்தையின் குடி பார்க்கப்படுகின்றது. தாய்வழிக் குடியிலிருந்து இம்முறைமையை வேறுபடுத்திக் காட்டுவதற்காகக் கொம்புமுறி விளையாட்டில் குடி என்ற சொல்லிற்குப் பதிலாக ‘வாரக்கட்டு’ என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.
தாய்வழிச் சமுதாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்ற கிழக்கிலங்கையிலே, வாரக்கட்டு என்பது பிற்காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும். கொம்புமுறி விளையாட்டு என்பது முழுவதும் ஆண்களே பங்குபற்றுகின்ற விளையாட்டாகும். பெண்கள் இவ்விளையாட்டில் பார்வையாளர்களாக மட்டுமே கலந்து கொள்வர். ஆண்கள் மட்டுமே பங்குபற்றுவதனால், தந்தை பங்குபற்றுகின்றபோது மகனும் அவரைச் சார்ந்து நிற்க வேண்டியது அவசியமாக இருந்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையிலேதான் தந்தையினது வாரக்கட்டு பார்க்கும் முறைமை தோன்றியிருக்கலாம்.
அடிக்குறிப்புகள்
1. எவ்.எக்ஸ்.சி., நடராசா, மட்டக்களப்பு மான்மியம், பக்.97.
2. சி., மௌனகுரு (1998), மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள், விபுலம் வெளியீடு, மட்டக்களப்பு, பக்.245.
3. வி.சீ., கந்தையா (1964), மட்டக்களப்புத் தமிழகம், ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், பக்.200.
4. சி., மௌனகுரு மு.கு.நூ, பக்.246.
5. நா., நவநாயகமூர்த்தி (1999), தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, வானதி வெளியீடு, அக்கரைப்பற்று, பக்.92.



