1980ஆம் ஆண்டின் பின்னர் தென்னாசியத் தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்களையும் வரலாற்று ஆர்வலர்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த முக்கிய வரலாற்று நிகழ்வாக ஆனைக்கோட்டை கரையாம்பிட்டி தொல்லியல் அகழ்வாய்வு காணப்படுகின்றது. இதற்கு யாழ்ப்பாணத்தின் பூர்வீக மக்களின் இரு மனித எலும்புக்கூடுகளும், அவற்றில் ஓர் எலும்புக்கூட்டின் தலைமாட்டுப் பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துப் பொறிப்புடன் கூடிய முத்திரை மோதிரமும் இங்கு முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டமை முக்கிய காரணமாகும். இவ்விடம் யாழ்ப்பாண நகருக்கு வடமேற்கே ஆறு மைல் தொலைவில் நாவாந்துறைக் கடற்பகுதிக்கு அண்மையில் உள்ள இந்து, கிறிஸ்தவ மயானங்களுக்கு அருகில் காணப்படுகின்றது.
தற்போது இதன் அமைவிடச் சுற்றுச் சூழலையும், பௌதிக வளங்களையும் நோக்கும் போது முற்பொருகாலத்தில் இவ்விடம் மக்கள் வாழாத ஒதுக்குப்புறமாகவே இருந்ததென எண்ணத் தூண்டுகின்றது. ஆனால் இவ்விடத்தைச் சுற்றிவர உள்ள பல இடங்களிலும் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நாகரிகம் அடைந்த சமூகம் வாழ்ந்துள்ளது என்பதை 1980, 2024ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
அவற்றுள் 2024ஆம் ஆண்டு இங்கு மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானபூர்வமான அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கடல்சார் உயிரினச் சுவடுகள், தரைசார் விலங்கினங்களின் எச்சங்கள் என்பவற்றைச் சான்றாகக் கொண்டு இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இங்கு வாழ்ந்த மக்களின் பலதரப்பட்ட உணவு வகைகளை அறிந்துகொள்ள முடிகின்றது. அவற்றின் வரலாற்றுச் சிறப்பம்சங்களை எடுத்துரைப்பதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த பூர்வீக மக்கள் யார்? அவர்கள் அறிமுகப்படுத்திய பண்பாடு என்ன? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எப்போது வந்தார்கள்? முதலான கேள்விகளுக்கான சுருக்கமான பதில்களை இவ்விடத்தில் நோக்கலாம்.
வரலாற்று ரீதியாக இலங்கையில் தனித்துவம் வாய்ந்ததாகக் கணிக்கக்கூடிய பிராந்தியங்களில் ஒன்றாக வட இலங்கை காணப்படுகின்றது. இது பாளி மொழியில் நாகதீபம் எனவும், தமிழில் நாகதீவு, நாகநாடு எனவும் அழைக்கப்படுகின்றது. ஆயினும் இலங்கை வரலாறு கூறும் பாளி இலக்கியங்களில் வட இலங்கையின் பூர்வீக மக்கள், அவர்களின் மொழி, மத நம்பிக்கைகள், சமூகம், பொருளாதாரம் பற்றிய வரலாறு பெருமளவுக்குப் புகைபடர்ந்ததாகவே காணப்படுகின்றது. வரலாற்று இலக்கியங்களுடன் தொல்பொருட் சான்றாதாரங்களையும் பயன்படுத்தி வரலாறு எழுதும் மரபு ஐரோப்பாவில் தோன்றி அம்மரபு படிப்படியாக இலங்கை போன்ற தென்னாசிய, தென்கிழக்காசிய நாடுகளுக்கும் அறிமுகமாகியது. இதன் காரணமாக பல நாடுகளது பூர்வீக மக்கள், பண்பாடு பற்றிய பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகளில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இதற்குத் தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் சிறந்த சான்றுகளாகும். இலங்கையைப் பொறுத்தவரை தென்னாசியாவில் தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு அதற்கு உண்டு. இதற்குக் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமான போது கூடவே வரலாற்றுச் சம்பவங்களையும் செவிவழியாகப் பேணும் மரபும் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டமை முக்கிய காரணமாகும். இவற்றை அடிப்படையாகக்கொண்டே தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் முதலான பாளி மொழி வரலாற்று இலக்கியங்கள் தோன்றின. இவ்விலக்கியங்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் இருந்து விஜயன் தலைமையில் ஏற்பட்ட மக்கள் புலப்பெயர்வுடன்தான் இலங்கையின் மனித வரலாறும், நாகரிக வரலாறும் தோன்றியதாகக் கூறுகின்றன. இவர்களின் வருகையின் போது இங்கு இயக்கர், நாகர் என்ற மக்கள் வாழ்ந்ததாக இவ்விலக்கியங்கள் கூறினாலும் அவர்கள் மனிதப் பிறவிகள் அற்ற அமானுசர்களாகவே வரலாற்று ஆய்வுகளில் பார்க்கப்பட்டனர்.
இந்நிலையில் பாளி இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு பிரித்தானியர் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சில தொல்லியல் ஆய்வுகளால் புதிய வரலாற்று உண்மைகள் வெளிப்படுத்தப்பட்ட போதிலும் அவை இலங்கையின் பாரம்பரிய வரலாற்று நம்பிக்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரவில்லை. ஆனால் 1970இற்குப் பின்னர் உள்நாட்டு, வெளிநாட்டுத் தொல்லியல் அறிஞர்களால் விஞ்ஞானபூர்வமான தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளால் வட இந்தியாவில் இருந்து மக்கள் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வட இலங்கையிலும், தென்னிலங்கையிலும் மத்திய பழங்கற்கால, நுண்கற்கால மற்றும் பெருங்கற்கால மக்களும், பண்பாடும் பரவியிருந்தமைக்கு நம்பகரமான தொல்லியற் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றுள் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது குடியேற்றம், பண்பாடு தொடர்பான தொல்லியற் கண்டுபிடிப்புகள் இலங்கையின் அதிமுக்கிய வரலாற்று நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகின்றன. இது பௌத்த மதமும், பௌத்த பண்பாடும் பரவுவதற்கு முன்னர் இலங்கையில் தோன்றிய புரட்சிகரமான புதிய பண்பாடாகப் பார்க்கப்படுகின்றது. இது புதிய நாகரிகத்தின் அறிமுகமாக மட்டுமன்றி புதிய மக்களின் புலப்பெயர்வாகவும் அமைந்துள்ளது. இதனால் இலங்கையின் பல இடங்களில் புதிய குடியேற்றங்கள் தோன்றி மக்கள் பெருக்கம் ஏற்பட்டன.
பெருங்கற்காலப் பண்பாட்டுப் பரவலோடு கற்காலப் பண்பாட்டில் நாடோடிகளாக உணவுக்கு அலைந்து திரிந்த மக்கள் நிரந்தரமாக ஓர் இடத்தில் தங்கி உணவு உற்பத்தியில் ஈடுபடும் நிலை உருவாகியது. கற்கருவிகளைப் பயன்படுத்தி வந்த மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் இரும்பு, செம்பு முதலான உலோகங்களைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கினர்.
அவற்றுள் மட்பாண்டங்களை வனைவதற்குரிய சில்லின் அறிமுகம், நிலத்தைப் பண்படுத்துவதற்கான ஏரின் பயன்பாடு, நெற்செய்கையின் தோற்றம், கால்வாயுடன் கூடிய நீர்ப்பாசன முறை, சிறு தொழில்நுட்பத்தின் ஆரம்பம், சுற்றாடலைக் கட்டுப்படுத்திப் பயன்பெறும் நிலை, கிராமக் குடியிருப்புகளின் தோற்றம், வலைப்பின்னல் கொண்ட பண்டமாற்று மையங்களின் தோற்றம், மக்கள் பெருக்கம் அதிகரிப்பதற்கான சூழ்நிலையின் உருவாக்கம், குறுநில அரசுகளின் தோற்றம், குதிரைகளின் அறிமுகம், புதிய ஈமச் சின்னங்களின் தோற்றம், புதிய மட்பாண்ட உருவாக்கம் (கறுப்பு-சிவப்பு நிறம்) முதலான புதிய பண்பாட்டு அம்சங்கள் அறிமுகமாகியதைக் குறிப்பிடலாம்.
யாழ்ப்பாணத்தில் பெருங்கற்காலக் குடியிருப்புகள்
அநுராதபுரத்தை அடுத்து இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய பெருங்கற்காலக் குடியிருப்பு மையமாக யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை காணப்படுகின்றது. இங்கு 1970ஆம் ஆண்டு முதன்முதலாக அமெரிக்கப் பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வாளர் விமலா பேக்லி தலைமையில் விரிவான தொல்லியல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. விஞ்ஞானபூர்வமான இந்த அகழ்வாய்வின் மூலம் இங்கு பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது குடியிருப்புகள் இருந்ததற்கான பலதரப்பட்ட சான்றாதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றைத் தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்த விமலா பேக்லி கந்தரோடை மக்கள் தமிழகத்தில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம் அல்லது கந்தரோடையில் வாழ்ந்த மக்கள் தமிழகப் பெருங்கற்கால மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 1980ஆம் ஆண்டு பேராசிரியர் பொ. இரகுபதி அவர்கள் வரலாற்றுத்துறை மாணவர்களுடன் இணைந்து ஆனைக்கோட்டையில் தொல்லியல் மேலாய்வில் ஈடுபட்டபோது அங்கு பெருங்கற்கால மக்களது ஈமச்சின்ன அழிபாடுகள் இருப்பதை முதன்முதலாக உறுதிப்படுத்தியிருந்தார். பின்னர் அவ்விடத்தில் பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்களின் தலைமையில் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், பேராசிரியர் பொ. இரகுபதி ஆகியோர் இணைந்து இரு கட்டங்களாக ஏழு நாட்கள் மேற்கொண்ட அகழ்வாய்வில் இத்தொல்லியல் மையம் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரியதென்பதை உறுதிப்படுத்தினர். இவ்வகழ்வாய்வின் போது பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளில் ஒன்றான நீளக்கிடத்தி அடக்கம் செய்யப்பட்ட ஈமச்சின்னத்தில் இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைதான் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது பெருங்கற்கால மனித எலும்புக்கூடுகள் என்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. அத்துடன் இந்த மனித எலும்புக்கூடு ஒன்றின் தலைமாட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மண்சட்டியில் இருந்து ஈரெழுத்துப் பொறித்த முத்திரை மோதிரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை – தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டு மனித எலும்புடன் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது முத்திரை மோதிரமாகும். இம்முத்திரை மோதிரத்தின் எழுத்தமைதியைக் கொண்டு இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னரே ஆனைக்கோட்டையின் பூர்வீக குடிகளாகப் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை நிச்சயப்படுத்திக் கூறலாம். இந்த உண்மையை 2024ஆம் ஆண்டு ஆனைக்கோட்டையில் பெருங்கற்காலக் குடியிருப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு மேலும் உறுதிப்படுத்துகின்றது.
2024ஆம் ஆண்டு அகழ்வாய்வு
இந்த அகழ்வாய்வு யாழ்ப்பாண மரபுரிமை மையத்தால் நன்கு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இதற்கு வேண்டிய நிதியைப் பிரித்தானிய சமூக முன்னேற்ற நடுவகம் வழங்கியிருந்தது. இலங்கைத் தொல்லியல் திணைக்கள அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட இவ்வகழ்வாய்வானது யாழ்ப்பாணத்தில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளை விட சில அம்சங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றது.
இவ்வகழ்வாய்வில் தொல்லியல் ஆய்வில் உயர்ந்த கல்விப் புலமையும், பயிற்சியும் வெளிநாட்டு அகழ்வாய்வில் பங்கெடுத்த அனுபவமும் உடைய சிரேஷ்ட ஆய்வாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அத்துடன் ஜேர்மன் நாட்டு தொல்லியல் அறிஞர் கலாநிதி அரியாணி இந்த அகழ்வாய்வில் பங்கெடுத்ததுடன், நவீன காலக்கணிப்பிற்காகத் தெரிவு செய்திருந்த ஏழு கரிம மாதிரிகளின் காலத்தைத் தமது நாட்டு ஆய்வுகூடத்தில் கணித்து தந்திருப்பது இந்த அகழ்வாய்வின் இன்னொரு முக்கிய அம்சமாகும். கந்தரோடை யாழ்ப்பாணத்தின் முக்கிய பெருங்கற்காலக் குடியிருப்பு மையமாகப் பார்க்கப்பட்டாலும் அப்பண்பாட்டிற்குரிய ஈமச்சின்னம் ஒன்றுதானும் இதுவரை அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் 1980இல் ஆனைக்கோட்டையில் பெருங்கற்கால ஈமச்சின்ன மையமும், 2024ஆம் ஆண்டு அதற்குத் தெற்கே 100 கி.மீற்றர் தொலைவில் பெருங்கற்காலக் குடியிருப்பு மையமும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இவ்வாய்வின் இன்னொரு சிறப்பாகும். கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் முக்கிய அகழ்வாய்வுகள் சில மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவற்றின் பெறுபேறுகள் அறிக்கைகளாக வெளியிடப்படாமை முக்கிய குறைபாடாகும். ஆனால் 2024ஆம் ஆண்டு அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுப் பெறுமதியுடைய சான்றாதாரங்கள் அனைத்தும் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு அதன் ஆரம்ப அறிக்கை தொல்லியல் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன் விரிவான அறிக்கையும் விரைவில் வெளிவர இருப்பது இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
சமகால நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பலவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வாய்வு எமது பல்கலைக்கழக தொல்லியல், கலாசார சுற்றுலாப் பிரிவு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த பயிற்சிக்களமாக இருந்ததுடன், அவர்களே இதன் முக்கிய பங்குதாரர்களாகவும் செயற்பட்டு வருவதும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
இந்த அகழ்வாய்வு தொல்லியற் திணைக்கள அனுமதிக்கு ஏற்ப 30 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதற்கான அகழ்வாய்வுக் குழி 3 x 4 மீற்றர் நீள அகலத்தில் அமைக்கப்பட்டு அதன் இயற்கை மண்ணை அடையாளப்படுத்தும் வரை அகழ்வு செய்யப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியில் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள் மிகவும் நுணுக்கமானவை மற்றும் அறிவியல்பூர்வமானவை. அகழ்வாய்வுத் தலமானது முறையான வரைபடங்கள் மற்றும் சதுரக் கட்டங்களாக (Grids) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்ணடுக்கும் (Stratigraphic Units) அதன் காலவரிசைப்படி கவனமாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது பத்துக்கு மேற்பட்ட கலாசார மண்படைகள் அடையாளம் காணப்பட்டன.
அவற்றிலிருந்து காலக்கணிப்பிற்காகத் தெரிவு செய்யப்பட்ட காலக்கணிப்புகளில் இருந்து இற்றைக்கு 2900ஆம் ஆண்டிலிருந்து (கி.மு. 865) ஐரோப்பியர் காலம் வரை ஒரு மனிதக் குடியேற்றம் ஆனைக்கோட்டையில் இடையீறற்று இருந்ததை உறுதிப்படுத்த முடிகின்றது. அவற்றுள் கி.மு. 5ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட 1000 ஆண்டுகால கலாசார மண் அடுக்குகளிலிருந்து வரலாற்றுப் பெறுமதிமிக்க சான்றுப் பொருட்கள் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இச்சான்றாதாரங்கள் பெரும்பாலும் இலங்கையிலும் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், அண்மையில் கீழடி முதலான இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது வாழ்வியல் அம்சங்களோடு நெருங்கிய ஒற்றுமை கொண்டுள்ளதை வெளிப்படுத்துவனவாக உள்ளன. அவற்றுள், ஆனைக்கோட்டையின் பண்டைய கடல்சார் மற்றும் தரைசார் உணவு முறைகளை, நவீன கோணத்தில் ஆர்வத்தோடும் வியப்போடும் ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.
ஆனைக்கோட்டை அகழ்வாய்வில் தொல்லுயிர் விலங்கியலின் பங்களிப்பு
சமகாலத்தில் தொல்லியல் அகழ்வாய்வின் நோக்கங்களும், அவற்றின் பார்வைகளும் பலவாறு மாற்றமடைந்தும், விரிவடைந்தும் செல்வதைக் காண முடிகின்றது. இதற்கு நவீன விஞ்ஞானத் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் தீவிர வளர்ச்சியின் செல்வாக்கு தொல்லியல் ஆய்வுத்துறையிலும் ஏற்பட்டு வருவது முக்கிய காரணமாகும். இன்று எந்தவொரு துறைசார்ந்த ஆய்வும் குறிப்பிட்ட துறைக்குள் நின்று மட்டும் வளரமுடியாது என்ற கருத்துக் காணப்படுகின்றது.
அதற்குப் பதிலாக குறிப்பிட்ட துறை சார்ந்த ஆய்வானது அதற்கு உதவக்கூடிய பிறதுறைகளுடன் இணைந்து ஆய்வு செய்யப்படுவதே நடுநிலையான ஆய்வாகப் பார்க்கப்படுகின்றது. அவ்வாறு செய்யப்படும் ஆய்வுகளின் முடிவுகளே விஞ்ஞானபூர்வமான முடிவாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்கள் நீண்டகாலமாகத் தாம் முன்னெடுக்கின்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில் பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல துறை சார்ந்த புலமையாளர்களின் பங்களிப்பைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல், கலாசார சுற்றுலாத்துறை மாணவர்களின் கல்விப் போதனையிலும், அகழ்வாய்வு முறையிலும் பிற துறை சார்ந்த புலமையாளர்களின் பங்களிப்பு 2018இல் இருந்தே ஓரளவு பெறப்பட்டு வருகின்றது.
அந்த நடைமுறை விஞ்ஞான பீடாதிபதியாக இருந்த பேராசிரியர் ரவிராஜன் அவர்களால் தொடக்கப்பட்டு விலங்கியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் நோபல் சுரேந்திரன், புவியியல் துறைப் பேராசிரியர் – கலைப்பீடாதிபதி நாகமுத்து பிரதீபராஜா, பௌதிகத்துறை பேராசிரியர் முருகதாஸ் தணிகைச்செல்வன், அத்துறை சார்ந்த பேராசிரியை செல்வி சுதர்சினி உபேந்திரன் முதலியோரால் தொடரப்படுகின்றன.
இந்நிலையில் ஆனைக்கோட்டை அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கடல்சார், தரைசார் எச்சங்களை அடையாளப்படுத்துவதிலும் வகைப்படுத்துவதிலும் புலமையுடைய தொல்லியல் ஆய்வாளர் யூட் பெரேரா மற்றும் விலங்கியல்துறைப் பேராசிரியர் நோபல் சுரேந்திரன் ஆகியோரின் பங்களிப்புச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
உயிரினச் சுவடுகளை அடையாளம் காணல், வகைப்படுத்தல், அவற்றின் சிறப்புகள்
ஆனைக்கோட்டை அகழ்வாய்வின் போது அப்பிரதேச மக்களால் உண்ணப்பட்ட பலதரப்பட்ட உணவு வகைகளின் எச்சங்கள், உயிரினச் சுவடுகள் கிடைத்துள்ளன. அவற்றை வகைப்படுத்தி ஆராய்வதிலும், அடையாளப்படுத்துவதிலும் அத்துறை சார்ந்த புலமையாளர்களின் பங்களிப்பு அவசியமாகக் காணப்பட்டது. அவற்றுள் மீன் வகைகளையும், மிருக எலும்பு வகைகளையும் அடையாளம் காண்பது முக்கிய பணியாகும். அதில் களப்பணி முறை மூலம் பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள், மீன்கள், மிருக எலும்புகள் மற்றும் சங்கு, சிப்பி, மட்டி என்பன பொருத்தமான மாதிரிகளைப் பின்பற்றி எடுக்கப்பட்டன.
இவை கண்டெடுக்கப்பட்ட மண்ணடுக்குகளுடன் ஒப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டன. துண்டுபடல் ஆய்வு முறை (Fragmentation Analysis) மூலம் இந்த எலும்புகள் மற்றும் கடல் மீன்களின் ஓடுகள் மனிதர்களால் உணவிற்காக உடைக்கப்பட்டனவா அல்லது இயற்கையாகச் சிதைந்தனவா என்பது கண்டறியப்பட்டது. இத்தகைய துல்லியமான அணுகுமுறை அந்தக் காலத்து மக்களின் தொழில்நுட்ப அறிவையும் இயற்கை வளங்களையும் அவர்கள் கையாண்ட வழிமுறைகளையும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
குறிப்பாக விலங்கியல் தொல்பொருளியல் (Zoo-Archaeology) எனும் நவீன அறிவியல் முறைப்படி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு மண்ணில் புதைந்து கிடக்கும் சிறிய எலும்புத் துண்டுகளைப் பகுப்பாய்வு செய்து அக்கால மக்களின் வாழ்வியலை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி வருவதைக் குறிப்பிடலாம்.
ஆனைக்கோட்டை அகழ்வாய்வின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகக் கடல்பசு (Sea Cow) எனும் பாலூட்டியின் எச்சங்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை மன்னார் வளைகுடா மற்றும் யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வேட்டையாடும் நுட்பங்களில் சிறந்து விளங்கியதை உறுதிப்படுத்துகின்றன.
கடல்பசுக்கள் பெரும்பாலும் கடற்புற்கள் நிறைந்த பகுதிகளில் வாழ்வதால் பண்டைய காலத்தில் ஆனைக்கோட்டையைச் சுற்றியுள்ள கடல்பகுதி பொருத்தமான வளங்களுடன் இருந்ததை இது உறுதிப்படுத்துகின்றது. இவற்றுடன் சுறா, முரல், பாரை மற்றும் கிளிமீன் போன்ற ஆழ்கடல் மீன்களின் எலும்புகள் ஆனைக்கோட்டையில் கிடைத்துள்ளமை அம்மக்கள் சிறந்த மாலுமிகளாகவும் கடலைத் தங்களின் முதன்மையான வாழ்வாதாரமாகக் கொண்டவர்களாகவும் இருந்ததை உறுதிப்படுத்துகின்றது.
மேலும், அகழ்வாய்வில் எலும்புகள் சிறிய துண்டுகளாகக் கண்டறியப்பட்டது. அவை அக்கால மக்களால் துண்டுகளாக உடைக்கப்பட்டு உணவிற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம். சில எலும்புகள் ஊசி வடிவில் செயற்கையாக மாற்றியமைக்கப்பட்டதாகக் காணப்பட்டன. இவற்றை அக்கால மக்கள் ஊசி போன்ற கருவிகளாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆழமான மண் அடுக்குகளில் சங்கு, சிப்பிகள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. நண்டு போன்ற ஓடுடைய கணுக்காலிகள் ஆழமான அடுக்குகளில் மட்டுமே அரிதாகக் காணப்பட்டன.
மீன்களின் வகைகளும், அவற்றின் சிறப்பியல்புகளும்
ஆனைக்கோட்டை அகழ்வாய்வின் போது கிடைத்த மீன்களின் எலும்புகள், தாடைப் பகுதி, பற்கள், முதுகெலும்பு மற்றும் உடலமைப்பு என்பன மீன்களின் இனவகைகளையும் கடலில் அவற்றின் வாழ்விடங்களையும் தெளிவாக அடையாளம் காண உதவுகின்றன. உதாரணமாக விளைமீன் போன்ற மீன்களின் வலுவான பற்கள் அவை கடலடிப்பகுதியில் உணவு தேடும் இனங்களாக இருந்ததைக் காட்டுகின்றன.
வலுவான முன்வாய்ப் பற்களை உடைய கிளிமீன் வகைகள் கடற்பாறைகளில் படிந்திருக்கும் பாசி வகைகளை உரித்து அவற்றை உண்ணும் திறன் கொண்டதாகக் காணப்படுகின்றன. இதனால் இவ்வகை மீன்கள் முருகைக்கற்பாறைச் சூழலுடன் தொடர்புடையவை என்பது தெளிவாகத் தெரிகின்றது. கோழிமீனின் (Acanthurus sp.) வால்பகுதியில் காணப்படும் கூர்மையான முள்போன்ற அமைப்பானது அதன் பாதுகாப்பையும் முருகைக்கற்பாறைச் சூழலுடன் கொண்டிருந்த தொடர்பையும் எடுத்துக்காட்டுகிறது. கலவாமீன் போன்ற மீன்கள் பருமனான தாடையும், வலுவான உடல் அமைப்பும் கொண்டவை. இவை பதுங்கிப் பாய்ந்து வேட்டையாடும் மீன் வகைகளாகும். கெளிறு, கெளுத்தி முதலான மீன்கள் நீரின் அடிப்பகுதி மணல் மற்றும் உவர் நீர்ச் சூழல்களுடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. இத்தகைய அடையாளங்கள், ஆழமற்ற கடற்கரை, பாறைப்பகுதிகள் மற்றும் உவர்நீர் நிலப்பரப்புகளில் மேற்கொண்ட மீன்பிடி முறைகளை உணர்த்துகின்றன.
இத்தகைய சூழல்களில் விளைமீன், கிளிமீன், கோழிமீன், கலவாமீன், கெளிறு, கெளுத்தி போன்ற மீன்கள் அதிக அளவில் கிடைத்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இம்மீன்களைப் பிடிக்க எளிய ஆனால் திறமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
கரையோர அணைகள், மீன் கூடுகள், கைவலைகள், வீச்சு வலைகள் போன்றன அக்காலத்தின் முக்கிய மீன்பிடிச் சாதனங்களாக இருந்திருக்கலாம். இக்கருவிகளைப் பயன்படுத்துவதற்குத் தனிநபர் திறனை விட, குழுவாக இணைந்து செயல்படுவதே அவசியமாக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் கடல் உணவுச் சேகரிப்பில் ஒரு கூட்டு மற்றும் சமத்துவ சமூக அமைப்பாக இருந்தனர் எனக் கூறலாம்.
அகழ்வாய்வில் கிடைத்த மேற்கூறப்பட்ட மீன் எலும்புகளில் இருந்து சற்று வேறுபட்ட கடல்சார் சூழலை வெளிப்படுத்தும் மீன் எலும்புகளும் ஆனைக்கோட்டை அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. அவற்றுள் கூர்மையான பற்கள் கொண்ட குண்டன் சுறா, எலிச்சுறா போன்ற மீனினங்களின் எலும்புகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவை ஆழ்கடலில் வேட்டையாடப்பட்ட உயர்மட்ட மீன் வகைகளாகும்.
அதேபோல் நீளமான உடல், கூர்மையான பற்கள் கொண்ட சீலா மற்றும் பாரை மீன்கள் மற்றும் வலுவான உடல், பிளவுபட்ட வாலை உடைய பாரை மீன், திறந்த கடலில் வாழும் கொப்பரை, குல்லா, கட்டா, கட்டாப்பாரை முதலான மீன் வகைகளின் எலும்புகளும் இங்கு கிடைத்துள்ளன.
இவ்வகை மீன்கள் கடலில் வேகமாகவும் கூட்டமாகவும் செல்லும் தன்மை கொண்டன. இத்தகைய ஆழ்கடல் மீன்களின் இருப்பு பண்டைய காலத்தின் மேம்பட்ட கடல்சார் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துகின்றது. இம்மீன்களைப் பிடிக்க ஆனைக்கோட்டையின் பூர்வீக மக்களிடையே வலுவான கடற்பயணப் படகுகள் அவசியமாக இருந்திருக்க வேண்டும். மேலும் திசை நிர்ணய அறிவு, காற்றின் திசை, அலைகள், நட்சத்திரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட வழிசெலுத்தும் திறனும் அம்மக்களிடம் இருந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. இத்தகைய மீன்பிடி முறைகள் அதிக ஆபத்தானவை என்றாலும் அவை அதிகளவான மீன் உணவை வழங்குவதால் இது அவர்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய செயற்பாடாக இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இதனால் நீர்நிலைகளில் மீன்களைப் பிடிப்பதற்கான படகுகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத் திறனும் இக்காலத்தில் சிறப்புத் தொழிலாக வளர்ந்திருந்ததெனக் கூறலாம்.
மீன்களின் வகைகள், அளவுகள் என்பவற்றின் அடிப்படையிலும் இக்கால சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. கிளிமீன், கோழிமீன் போன்ற சிறிய மீன்கள் தினசரி உணவாக இருந்திருக்கலாம். விளைமீன், கலவாமீன், கெளுத்திமீன் போன்றவை நடுத்தர அளவிலான உணவாகப் பயன்படுத்தப்பட்டன எனலாம். குண்டன் சுறா, எலிச்சுறா, சீலா, கொப்பரை, குல்லா போன்ற பெரிய மீன்கள் அதிகளவு உணவை வழங்குவனவாகவும், அவற்றைச் சேமித்து மற்றவர்களுக்குப் பகிர்ந்து வழங்கும் கடல் உணவுகளாகவும் இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
மீன்களுடன் சேர்த்துக் கிடைத்த சிப்பி உயிரினங்களும் இம்மக்களின் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முக்கிய பங்காற்றுகின்றன. இங்கு கிடைத்த சிப்பி, மட்டி போன்றவை மணற்பரப்புகளில் வாழும் உயிரினங்களாகும். முத்துச்சிப்பி, வெண்சங்கு, வலம்புரிச்சங்கு, கடல்நத்தை போன்றவை கடற்கரை மற்றும் அலைப்பகுதிகளுடன் தொடர்புடையவை.
இவை எளிதாகச் சேகரிக்கக்கூடியவை என்பதால் குறைந்த உழைப்பில் கிடைக்கும் உணவாக இருந்திருக்கலாம். கையால் சேகரித்தல், சிறிய தோண்டல் கருவிகள், கூண்டு முறைகள் போன்ற எளிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
தரைவாழ் விலங்கினங்கள்
மந்தை வளர்ப்பு மற்றும் வேட்டையாடல் ஆகிய இரு தொழில்துறைகளும் ஆனைக்கோட்டை மக்களின் நிலப்பகுதி சார்ந்த வாழ்வியல் முறையில் முக்கிய அம்சங்களாக இருந்ததை அகழ்வாய்வில் கிடைத்த சான்றாதாரங்கள் உறுதிசெய்கின்றன. அகழ்வாய்வின் போது அங்கு கண்டெடுக்கப்பட்ட மாடு, ஆடு மற்றும் பன்றி போன்ற வளர்ப்பு விலங்குகளின் மிகுதியான எலும்புகள் அம்மக்கள் ஒரு நிலையான விவசாய சமூகமாகவும், கால்நடை வளர்ப்பை பொருளாதாரத் தொழிலாகக் கொண்டிருந்ததையும் எடுத்துக்காட்டுகின்றன. அதேசமயம் காடுகளிலிருந்து வேட்டையாடப்பட்ட புள்ளிமான் மற்றும் முயல்களின் எலும்புகள் அவர்கள் இயற்கை வளங்களைப் பயன்படுத்தியதை உணர்த்துகின்றன. குறிப்பாக மனிதர்களுடன் இணைந்து வாழ்ந்த நாய் மற்றும் பூனைகள் என்பவற்றின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அவர்கள் விலங்குகளைத் தங்களின் வாழ்வியல் தோழர்களாகவும் பாதுகாப்பாளர்களாகவும் மாற்றியிருந்ததை வெளிப்படுத்துகிறது. மேற்புற மண் அடுக்குகளில் மீன், பறவைகள் மற்றும் ஆமைகளின் எண்ணிக்கை உயர்வடைந்து காணப்பட்டதோடு, கால்நடை போன்ற வீட்டு விலங்குகளின் எலும்புகளும் முதன்மை பெற்றன. இது அவர்கள் ஒரு முதிர்ச்சியடைந்த விவசாய மற்றும் கால்நடைச் சமூகமாக மாறியிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
அணிகலன்களும் அலங்காரப் பொருட்களும்
ஆனைக்கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த சிலவகை கலைவடிவங்கள், அழகுசாதனப் பொருட்கள் என்பவற்றை நோக்கும் போது கடலில் இருந்து பெறப்பட்ட மீன்கள், சங்கு, சிப்பி முதலான உயிரினங்கள் உணவுக்காக மட்டுமன்றி அவற்றில் இருந்து கிடைத்த எலும்புகள், பிற எச்சங்களில் இருந்து அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள் என்பவற்றை செய்வதற்கும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது. உதாரணமாக சுறா போன்ற மீன் இனங்களின் கூர்மையான பற்களைப் பயன்படுத்தி கழுத்து மாலைகள் மற்றும் கழுத்து மணிகள் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
பாரை, கொப்பரை மற்றும் குல்லா போன்ற மீன்களின் விலா எலும்புகள் மணிகளாகக் கோர்க்கப்பட்டு சங்கிலியாக அணியப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. சீலா போன்ற மீன்களின் எலும்புகள் பெண்களின் சிகை (சீப்பு) அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. விளைமீன், கலவா போன்ற மீன்களின் செவிக்கற்கள் (Otoliths) மெருகான அமைப்பைக் கொண்டிருப்பதால் அவை மணிகள், சிறிய அணிகலன்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. சங்கு, சிப்பிகளில் துளையிடப்பட்டு அவை மணிகள், காதணிகள் மற்றும் அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முத்துச் சிப்பி, சங்கு என்பன உயர்ந்த சமூக நிலை, வர்த்தக முக்கியத்துவம் என்பவற்றுடன் தொடர்புடையன. இத்தகைய அணிகலன்கள் அழகுக்காக மட்டும் அணியப்படவில்லை; அவை சமூக அடையாளம், கடல்சார் தொடர்புகள் மற்றும் பண்பாட்டு மரபுகளையும் வெளிப்படுத்துகின்றன. சில மண்ணடுக்குகளில் வெண் சங்குகள் குவியலாகக் கிடைத்துள்ளன. இக்காலத்தில் மந்தை வளர்ப்பும் ஆனைக்கோட்டை மக்களின் முக்கிய தொழிலாக இருந்ததால் இங்கு கிடைத்த சங்குகள் மாடுகளின் கழுத்தில் அணியப்பட்ட புனிதப்பொருட்களாகவும் இருக்கலாம்.
ஆனைக்கோட்டை அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கடல்சார் மற்றும் தரைவாழ் உயிரினங்களின் சுவடுகள், எச்சங்கள், எலும்புகள் முதலானவற்றை ஆதாரங்களாகக் கொண்டு பண்டையகால மக்களின் பலதரப்பட்ட உணவுப் பழக்கங்களையும், அவற்றின் பயன்பாடுகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது. அதேவேளை இவ்வாதாரங்கள் அக்கால மக்களின் கடல்சார் தொடர்புகள், கடல்சார் வர்த்தகம், கடற்பயணங்கள், கடற்கலன்களின் வகைகள், அவற்றின் தொழில்நுட்பத் திறன்கள், அவற்றில் ஏற்பட்ட படிமுறையான வளர்ச்சி பற்றியும் கடல்சார் சமூகங்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சமய நம்பிக்கைகள், சமூக நடத்தை, குடும்ப உறவுகள் மற்றும் கடந்தகால சுற்றுச்சூழல், பௌதிக நிலை முதலானவற்றை அறிந்து கொள்ளவும் பெரிதும் உதவுகின்றன. இவை பற்றிய ஆய்வுகள் அத்துறையில் புலமையுடையோரின் பங்களிப்புடன் எதிர்காலத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி: வலம்புரி.



