உதவி வழங்கும் நாடுகளின் ஒஸ்லோ மாநாடு
சமாதான முயற்சிக்கு உலக ஆதரவைப் பெறவும் சர்வதேச சமூகத்திடம் இருந்து அவசர நிதியுதவி திரட்டும் நோக்கத்துடனும் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு ஒன்றை நோர்வே அரசு கூட்டியது. இம்மாநாடு 2002 நவம்பர் 25ஆம் நாள் அன்று ஒஸ்லோவில் உள்ள ‘ஹால்மன்கோமன் பார்க்’ விடுதியில் இடம்பெற்றது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசிய-பசிபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த 37 நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். நோர்வே வெளிவிவகார அமைச்சர் திரு. ஜான் பீட்டர்சன் இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.
ஒஸ்லோவில் நிகழ்ந்த நிதியுதவி மாநாடு இலங்கையின் சமாதான முயற்சியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. வெவ்வேறான குறிக்கோள்களையும் நலன்களையும் கொண்ட சக்தி வாய்ந்த சர்வதேச அரசுகள் இலங்கை விவகாரத்தில் கூடுதலாகத் தலையீடு செய்வதற்கு சமாதான முயற்சி வழி சமைத்துக் கொடுத்தது. ஆரம்பகட்டங்களில் சர்வதேச சமூகத்தின் பங்கு மிகவும் வரையறுக்கப்பட்டதாக இருந்தது. அதாவது, புனர்வாழ்வு அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி தருவதாக வாக்களித்து, அமைதி வழியில் அரசியல் தீர்வு காணுமாறு நெருக்கடியில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் ஊக்கப்படுத்துவதாக அது அமைந்தது. ஒஸ்லோ நிதியுதவி மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியன முனைப்பான முன்னணிப் பங்கை வகித்ததுடன் பேச்சுகளின் முன்னேற்றத்துடன் நிதியுதவியும் இணைக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம், தனிநாட்டுக் கோரிக்கை ஆகியன கைவிடப்படுவதற்குப் பெறுபேறாக நிதியுதவி வழங்க இந்நாடுகள் முன்வந்தன. வெளியுலக வல்லரசுகளின் இத்தலையீட்டுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதன் அடிப்படையில் சர்வதேச சமூகத்தின் தலையீடு பக்கச் சார்பாகத் திரும்பியதுடன் ஒரு சாரார் (விடுதலைப் புலிகள்) மீது அழுத்தம் பிரயோகிக்கவும் இடம் அளித்தது.
மூன்றாம் கட்டப் பேச்சு
மூன்றாம் கட்டப் பேச்சுகள் 2002 டிசம்பர் 2 தொடக்கம் 5 வரை ஒஸ்லாவில் உள்ள ‘எஸ்.ஏ.எஸ். பிளாசா’ விடுதியில் நடைபெற்றது. விடுதலைப் புலிகள் தரப்பு பிரதிநிதிகள் குழுவில் மாற்றம் இருக்கவில்லை. அரச பிரதிநிதிகள் தரப்பில் திரு. ரவூப் ஹக்கீம் பங்கு கொள்ளவில்லை. உட்கட்சித் தகராறு மோசமடைந்ததால் வந்திறங்கிய ஹக்கீம் அன்றைய தினமே அவசரமாகக் கொழும்பு திரும்பினார். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆலோசகராக திரு. எம்.ஐ.எம். மொகைதீன், பேச்சுகளின் போது முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
உடனடி மனிதாபிமான புனர்வாழ்வுத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் நிறுவப்பட்ட உப-குழுவான ‘சிரான்’ செயல்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக திரு. தமிழ்ச்செல்வன் கூறினார். வடக்குக் கிழக்கில் மனிதாபிமானப் பணிகளைத் துரிதகதியில் நடைமுறைப்படுத்துவது அவசியம் என திரு. மகேஸ்வரன் வலியுறுத்தினார். இந்தக் குறிக்கோளுடன் வடக்குக் கிழக்கு புனர்நிர்மாண நிதியத்தை வெகுவிரைவில் நிறுவுவதென இரு தரப்பினர் மத்தியிலும் இணக்கம் காணப்பட்டது. சமாதான முயற்சியில் பெண்களின் பங்கு பற்றி விவாதிக்கப்பட்டது. சமாதானப் பேச்சுகளில் பெண்ணியப் பிரச்சினைகளை உள்ளடக்குவது பற்றி ஆராய்வதற்காக பெண்களுக்கான உப-குழு ஒன்றை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களது வாழ்நிலையை மேம்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் நோக்கத்துடன் ஐ.நா. சிறுவர் நிதியத்துடன் (யுனிசெப்) பங்குதாரராக இணைந்து செயற்திட்டம் ஒன்றை உருவாக்குவதென முடிவாகியது.
ஒஸ்லாவில் நிகழ்ந்த மூன்றாம் கட்ட சுற்றுப் பேச்சுகளின் போது இரு தரப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக கனடிய கூட்டாட்சி மன்றத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஒன்றும் வந்திருந்தது. இவர்களில் முன்னாள் ஒன்ராறியோ பிரதமர் திரு. பொப் ரேய், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் கமரோன், மன்ற நிர்வாகிகளில் ஒருவரான திரு. கார்ள் நரன்பேர்க் ஆகியோர் அடங்குவர். இந்த நிபுணர்களுடன் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் இரு சந்திப்புகளை நிகழ்த்தினார்கள். இதன் போது சமஸ்டி பற்றிய பிரச்சினைகளும் உள்ளக, வெளியக சுயநிர்ணய உரிமை தொடர்பான விவகாரங்களும் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான சர்ச்சை பற்றியும் அதிகம் பேசப்பட்டது.
உயர் பாதுகாப்பு வலயம் பற்றிய சர்ச்சை
உயர் பாதுகாப்பு வலயங்கள் என சிறீலங்கா இராணுவம் பிரகடனம் செய்துள்ள பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் அவசியத்தை விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் குடிமக்களை மீள்குடியமர்த்தும் திட்டம் ஒன்றை டிசம்பர் 21ஆம் நாளுக்கு முன்னர் சமர்ப்பிக்க இருப்பதாக யாழ்ப்பாண தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மீள்குடியேற்றப் பிரச்சினையில் இராணுவத் தரப்பு இறுக்கமான கடும்போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் தமிழ் மண்ணில் தனது ஆக்கிரமிப்புப் பிடியை இராணுவம் தளர்த்தப் போவதில்லை என்றும் புலிகளின் தரப்பில் இந்த உப-குழுவுக்குத் தலைமை வகித்த வட பிராந்தியக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தலைவர் பிரபாகரனிடம் தெரிவித்தார்.
ஜெனரல் பொன்சேகா தான் வாக்குறுதி அளித்தது போல 2002 டிசம்பர் 20ஆம் நாள் அன்று உயர் பாதுகாப்பு வலயம் சம்பந்தமான தனது திட்டத்தை விடுதலைப் புலிகளிடம் சமர்ப்பித்தார். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மூலமாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட இத்திட்டம் புலிகள் இயக்கத்திற்குக் கடும் சினத்தை ஏற்படுத்தியதுடன் பெரும் சர்ச்சையையும் தோற்றுவித்தது. “இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று குடியமர்வதானால் விடுதலைப் புலிகள் தமது போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைவதோடு தமது நீண்டதூரச் சுடுகலன்களையும் கையளிக்க வேண்டும்” என்ற நிபந்தனையை பொன்சேகாவின் திட்டம் கொண்டிருந்தது. பகை உணர்வுடன் மிகவும் காரமான வார்த்தைப் பிரயோகத்துடன் வரையப்பட்ட கடிதத்தில் விடுதலைப் புலிகளைப் ‘பயங்கரவாதிகள்’ எனப் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விட்டால் புலிகள் இயக்கத்திற்கு நற்பெயர் ஏற்பட்டுவிடும் எனவும் அவர் ஆதங்கம் தெரிவித்திருந்தார். உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இடம்பெயர்ந்தோரைக் குடியமர்த்தினால் அது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பெரும் அரசியல் வெற்றியாக முடியும். அது யாழ்ப்பாணத்தின் அரசியல் சூழ்நிலையை விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாக்கிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். உயர் பாதுகாப்பு வலயங்களைப் பலவீனப்படுத்தும் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாதெனவும் ஜெனரல் பொன்சேகா அரசாங்கத்தை எச்சரித்தும் இருந்தார். யாழ்ப்பாண இராணுவத் தளபதி முன்வைத்த திட்டத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் உடனடியாகவே நிராகரித்தது.
நான்காவது கட்டப் பேச்சு
ஒரு நெருக்கடியான அரசியல்-இராணுவப் பின்புலத்தில் நான்காவது கட்டப் பேச்சு தாய்லாந்தில் ‘நக்கோன் பாதோம்’ என்னும் இடத்தில் ‘றோஸ் கார்டன்’ விடுதியில் 2003 ஜனவரி 6ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரையில் நடைபெற்றது. இதன்போது, உயர் பாதுகாப்பு வலயம் பற்றிய ஜெனரல் பொன்சேகாவின் திட்டத்தைச் சிறீலங்கா இராணுவத் தலைமை பத்திரிகைகளுக்குக் கசியவிட்டமை குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், பெண்ணிய விவகாரக் குழுவிற்கு இரு தரப்பிலிருந்தும் தலா ஐந்து பிரதிநிதிகளை நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் சார்பில்:
- செல்வி சிவகாமி சுப்பிரமணியம் (தமிழினி)
- செல்வி ரேணுகா சண்முகராசா
- செல்வி மதிமலர் பாலசிங்கம்
- செல்வி சிறீதேவி சின்னதம்பி
- செல்வி வசந்தா சோமசுந்தரம்
அரச தரப்பில்:
- கலாநிதி குமாரி ஜெயவர்த்தன
- கலாநிதி தீபிகா உடகம
- செல்வி குமுதினி சாமுவேல்
- செல்வி பைசோன் சகாரியா
- கலாநிதி பசீலா ரியா
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஐந்தாவது கட்டப் பேச்சு
ஜேர்மனியில் ‘பேர்லின்’ நகரில் இரண்டு நாட்களுக்கு, 2003 பிப்ரவரி 7ஆம், 8ஆம் திகதிகளில் ஐந்தாம் கட்டப் பேச்சு நடைபெற்றது. பேர்லின் நகரில் உள்ள நோர்வே தூதரகத்தில் பேச்சுகள் ஆரம்பமாகிய ஒரு சில மணி நேரத்தின் பின்பு வன்னியிலிருந்து அன்ரன் பாலசிங்கத்திற்கு, ‘யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அப்பால் நெடுந்தீவுக்கு அருகாமையில் சிறீலங்கா கடற்படையினர் கடற்புலிப் படகொன்றைக் கைப்பற்றி, கடற்படைத் தலத்திற்குக் கட்டி இழுத்துச் செல்வதாக’ ஓர் அவசரச் செய்தி கிடைத்தது. இது முற்றிலுமான இருதரப்புச் சமாதானப் பேச்சுவார்த்தையைக் குழப்பும் சந்தர்ப்பமாக அமைந்தது.
கடலில் மோதல்களைத் தவிர்க்கும் நோக்குடன் சில பாதுகாப்பு ஒழுங்குகளை வகுப்பதற்கு அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கண்காணிப்புக் குழு அதிகாரிகளுமாக இணைந்து கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது. சிரான் உப-குழுவின் செயற்பாட்டு அறிக்கை ஒன்றை திரு. பேர்னாட் குணதிலக சமர்ப்பித்தார். தமிழ் மக்களின் மனிதாபிமானப் புனர்வாழ்வுத் திட்டங்களைத் துரிதகதியில் நடைமுறைப்படுத்துமாறு திரு. தமிழ்ச்செல்வனும் திரு. மகேஸ்வரனும் வலியுறுத்தினர். வடக்குக் கிழக்கு நிவாரண நிதியின் வைப்பகமாகச் செயற்பட உலக வங்கி இணங்கி இருப்பதாகவும், இது சம்பந்தமாக வெகு சீக்கிரத்தில் ஓர் உடன்பாடு செய்யப்படும் என்றும் திரு. குணதிலக தெரிவித்தார். தமிழ் மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்ய அவசரமான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு உதவி வழங்கும் நாடுகளைக் கோருவதென இருதரப்பும் முடிவெடுத்தது.
அடுத்ததாக வயது குறைந்த சிறுவர்களைப் படைத்துறையில் இணைத்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக நிராகரித்த திரு. தமிழ்ச்செல்வன், பல்வேறு அனாதை இல்லங்களிலும் சிறுவர் நலன்புரி நிலையங்களிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களை விடுதலைப் புலிகள் இயக்கம் பராமரித்து வருவதாகக் கூறினார். “போரினால் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவும் ஏழ்மையும் வறுமையும் காரணமாகப் பெருந்தொகையான சிறுவர்கள் ஏதிலிகளாக, அனாதைகளாக வாழ வழியின்றி விடுதலைப் புலிகளிடம் தஞ்சம் கோரி வருகிறார்கள். இவர்களை அரவணைத்து நாம் பராமரித்து வருகிறோம். இச்சிறாரைப் பராமரித்து அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கு விடுதலை இயக்கம் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகின்றது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இயக்கத்தில் இணைக்க முயல்வதில்லை” என்று தெரிவித்த அவர், சமீபத்தில் வயது குறைந்தவர்கள் என்ற காரணத்திற்காக 350 சிறுவர்களைப் பெற்றோர்களிடம் ஒப்படைத்ததாகவும் கூறியிருந்தார். போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் ஐ.நா. சிறுவர் நிதியத்துடன் இணைந்து ஒரு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த விடுதலைப் புலிகள் இணங்கினர்.
ஆறாவது கட்டப் பேச்சு
விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மத்தியிலான ஆறாவது கட்டப் பேச்சானது 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையான நாட்களில் ஜப்பானில் அழகிய மலைப்பிரதேசமான ‘ஹக்கோன்’ என்னுமிடத்தில் ‘பிரின்ஸ்’ விடுதியில் நடைபெற்றது. இதன்போது மூன்றாம் நாள் அமர்வை ஆரம்பித்து வைத்து பேசிய திரு. ஹெல்கிசன், ஆறுமாத காலங்களாக நிகழ்ந்த 6 சுற்றுப் பேச்சுகள் பற்றி ஒரு மீளாய்வு செய்தார். அரசியல், மனிதாபிமானம், பாதுகாப்பு என்ற ரீதியில் முப்பரிமாண அணுகுமுறையில் சமாதான முன்னெடுப்பை ஆய்வு செய்த அவர், அரசியல் மட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மனிதாபிமான, பாதுகாப்புப் பிரச்சினைகளில் ஏற்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டார். உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினை ஒரு பாரதூரமான சிக்கலாக மாறியுள்ளதை ஏற்றுக்கொண்ட அவர், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இப்பிரச்சினை தீர்க்கப்படுவது அவசியம் என்றார். ஏழாவது கட்டப் பேச்சுகளை ஏப்ரல் இறுதியில் தாய்லாந்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
பேச்சுகளை இடைநிறுத்த புலிகள் முடிவு
ஆறு கட்டங்களாக நீடித்த சமாதானப் பேச்சுகளின் பலாபலன்கள் குறித்து நோர்வேயின் பிரதம அனுசரணையாளர்கள் செய்தது போலவே விடுதலைப் புலிகளின் தலைமையும் பேச்சுகள் பற்றி ஒரு திறனாய்வு செய்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சரியாக இனம் கண்டு, பரஸ்பர நல்லுறவுடன் இருதரப்பும் மனம் திறந்து கருத்தாடக்கூடிய ஒரு நல்லெண்ணச் சூழ்நிலை ஏற்பட்டது மட்டுமே பேச்சுகளின் ஓர் ஆக்கமான அம்சமாக இருந்தது. பேச்சுகள் தொடர்ந்த வேளையில் படுபாதகமான சம்பவங்கள் நிகழ்ந்தபோதும், இரு தரப்பினரும் நிதானமாகப் பிரச்சினையை அணுகித் தீர்த்துக் கொண்டதால் பேச்சுகள் முறிந்து போய் முடங்குவது தவிர்க்கப்பட்டது. இந்த ஆக்கபூர்வமான அம்சத்தைத் தவிர, இந்தப் பேச்சுகள் மூலம் தமிழ் மக்களின் அவலமான பிரச்சினைக்குத் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இவ்வாறான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே புலிகள் தரப்பு பேச்சுவார்த்தையில் இருந்து விடுபடுவதற்குத் தீர்மானித்தது.
பெண் போராளி அங்கயற்கண்ணி மரணம்
கேணல் கிட்டுவும் அவரின் தோழர்களும் மரணமடைந்த நாளில் விடுதலைப் போராட்டத்தில் இவர் இணைந்தார். இவரிடம் இயல்பாகவே ஆளுமைத்தன்மை இருந்தது. தொடக்கத்திலிருந்தே இவர் குழுத் தலைவியாக இருந்து வந்தார். விளையாட்டில் இவர் திறனுடன் விளங்கினார். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளுக்கிடையே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தார். கடற்புலிகள் மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றார். எட்டு மணித்தியாலம் இருபத்தேழு நிமிடங்களில் பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோமீற்றர்கள்) நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்தினார். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’யின் போது லெப். கேணல் பாமாவின் குழுவில் ஒருவராகக் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அங்கயற்கண்ணி 1994 ஆகஸ்ட் 16இல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தரித்து நின்ற இலங்கைக் கடற்படையினரின் வடபிராந்தியத் தலைமைக் கட்டளையிடும் தாய்க்கப்பல் மீது கரும்புலித் தாக்குதல் நடத்திக் கப்பலைத் தகர்த்து வீரச்சாவடைந்தார். இவர் வெடித்த வெடியோசை யாழ். குடாநாட்டில் பல மைல்கள் தொலைவிற்கு மிக அதிர்வுடன் கேட்கக்கூடியதாக இருந்தது.
நவாலி தேவாலயத் தாக்குதல்
வலிகாமம் பகுதியில் இலங்கை அரசினரால் முன்னோக்கிப் பாய்தல் (லீட் ஃபோர்வேட்) இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பலாலியில் இருந்தும் அளவெட்டியில் இருந்தும் வான் தாக்குதல்களையும் குண்டுத் தாக்குதல்களையும் மக்கள் குடியிருப்புகளை நோக்கி மேற்கொண்டிருந்தனர். இதனால் மக்கள் உடுத்த உடையுடன் கையில் அகப்பட்ட பொருட்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென். பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.
அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது. இரண்டும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் பலத்த சேதமடைந்தன. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 65 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். சுமார் 150இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆண்டுதோறும் ஜூலை 9ஆம் நாள் நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் நினைவுகூரும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலி சென். பீற்றர்ஸ் ஆலயப் பகுதியிலும் படுகொலைச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அருணாசலம் தங்கத்துரை கொலை
இவர் இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1970 முதல் 1977 வரை மூதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1994ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1997, ஜூலை 5ஆம் திகதி திருகோணமலையில் வைத்து விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தீவிர அரசியலில் இறங்கினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அப்போது இருந்த மூதூர் தொகுதியில் 1970ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தங்கத்துரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும், அக்கட்சியின் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
1977ஆம் ஆண்டில் மூதூர் தேர்தல் தொகுதி ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக மாற்றப்பட்டது. சிங்கள மக்களுக்காக சேருவில என்ற புதிய தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும், மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும், சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது. இதனால் தங்கத்துரை 1977ஆம் ஆண்டு தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட முடியவில்லை.
தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில், 1978ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டியில் நடந்த வன்முறைச் சம்பவமொன்றில் இவருக்கும் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். திருகோணமலை, மட்டக்களப்புச் சிறைகளில் எட்டு மாதங்கள் அடைக்கப்பட்டிருந்த இவர், பின்னரே விடுவிக்கப்பட்டார்.
1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1983ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரங்களை அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவர் பதவியைத் துறந்தார். 1994இல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு அம்மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1997ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதி திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்குபற்றிய போது விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இவருடன் கல்லூரி அதிபர் உட்பட ஐவர் உயிரிழந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம் சாட்டியது.
நீலன் திருச்செல்வம் கொலை
இவர் ஒரு மிதவாத, ஆற்றல்மிகுந்த, அரச சட்ட அமைப்பு அறிவு வாய்ந்த, சர்வதேச மதிப்புப் பெற்ற ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவரே இலங்கையில் கொள்கை பற்றிய முன்னணி ஆய்வு நிறுவன அமைப்புகளின் (Centre for Ethnic Studies, Law Society Trust) அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர்.
நீலன் திருச்செல்வம் 1999 ஜூலை 29 அன்று தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். தற்கொலைத் தாக்குதல் மாதிரியை முன்வைத்தும் பிற பின்புலங்களை முன்வைத்தும் இக்கொலையை தமிழீழ விடுதலைப் புலிகளே செய்திருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர் சந்திரிக்காவின் அரசியல் தீர்வு யோசனைகளை உருவாக்குவதில் பாரிய பங்கினைச் செலுத்தினார்.
மடுமாதா தேவாலயத் தாக்குதல்
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும், புனித யாத்திரைத் தலமாகவும் மடு தேவாலயம் விளங்குகின்றது. மன்னார் மாவட்டத்தில் மடுப் பிரதேச செயலகப் பிரிவில் இத்தேவாலயம் அமைந்துள்ளது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இன, மத வேறுபாடின்றி மக்கள் வந்து தரிசிக்கின்ற ஒரு புனிதத் தலமாக மடு தேவாலயம் விளங்குகின்றது. 1990ஆம் ஆண்டைத் தொடர்ந்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து, பாதுகாப்பான இடம் எனக் கருதி மடுமாதா திருத்தலத்தில் தஞ்சம் புகுந்தனர். 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி பாலம்பிட்டி, சின்னப்பண்டிவிரிச்சான் காட்டுப் பகுதியூடாக மடு நோக்கி முன்னேறிவந்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறு முன்னேறினார்கள். இதனால் பாலம்பிட்டி, தட்சணாமருதமடு மக்களும் இடம்பெயர்ந்து மடுப் பிரதேசத்தில் தங்கியிருந்தார்கள். பாலம்பிட்டிப் பிரதேச மக்களை இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி மடு தேவாலயத்தில் தங்கவைத்தார்கள்.
பெரியபண்டிவிரிச்சானில் தங்கியிருந்த படையினர் இரவு 9.45 மணியளவில் டாங்கிகளிலிருந்து எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். முதல் இரண்டு எறிகணைகளும் மடு தேவாலயத்திற்கு முன்னிருந்த ஆலமரத்தில் பட்டுச் சிதறின. இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மூன்றாவது எறிகணை மடு தேவாலயத்தின் இருதய ஆண்டவர் ஆலயத்தின் மீது வீழ்ந்து வெடித்தது. அப்போது அந்த ஆலயத்தினுள்ளிருந்த குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகள், முதியவர்கள் என முப்பத்தியொரு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்கள். அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மக்களில் ஒன்பது பேர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்தார்கள். இறந்தவர்களில் இருபத்தேழு பேரின் உடல்களைத் தேவாலய ஆயர் வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று, விசாரணையின் பின் மீண்டும் மடு தேவாலயத்திற்கு எடுத்து வந்து மடு சேமக்காலையில் அடக்கம் செய்தார். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சேதமடைந்த மண்டபம் இன்றும் அப்படியே உள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த தெய்வசேகரம் அமரசிங்கம் இப்படுகொலை பற்றி கூறுகையில்: “அன்றைய தினம் 6.30 மணிக்குப் பின்னர் அப்பகுதியெங்கும் சரமாரியான துப்பாக்கிச் சத்தமும் எறிகணை வீச்சுச் சத்தமும் கேட்டவண்ணமிருந்தன. மக்களனைவரும் ஆலயத்தில் உறங்கிக்கொண்டிருந்த வேளை சரியாக இரவு 9.15 மணியிருக்கும். முதலாவது எறிகணை திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் விழுந்து வெடித்தது. அடுத்த எறிகணை ஆலயத்தின் முன் நின்ற ஆலமரத்தில் விழுந்து வெடித்தது. அதன்பின்னர் கடைசியாக ஏவப்பட்ட எறிகணை நான் இருந்த இடத்திற்கு மேலிருந்த இரும்புக் கம்பியில் வீழ்ந்து வெடித்தது. இதன்போது என்னைச் சுற்றியிருந்த எனது அம்மாவான சந்திரசேகரம் பூமணி, அக்காவான அம்பிகாவதி, இவரின் மூத்த மகனான கஜானன், பெரியப்பாவின் மகன்-மனைவி மற்றும் மகள்-கணவர் உட்பட பல உறவினர்கள் இறந்திருந்தார்கள்.
இதன்போது நாற்பது பேர் வரை இறந்தும் அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் வரை காயமடைந்தும் இருந்தார்கள். இவ்வெறிகணைத் தாக்குதலின் பின்னர் வேறெந்த வெடிச்சத்தமும் இல்லாமல் ஒரே அமைதியாகக் காணப்பட்டது. எங்கள் மேல் வீசப்பட்ட எறிகணைகள் அனைத்தும் தேவாலயத்திற்கு முன்னாலிருந்த மடு அரச செயலகத்திலிருந்த இராணுவத்தினர் ஏவியதை நான் உட்பட பல மக்கள் கண்டோம். இதிலிருந்து இதனை வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலாகவே கருத வேண்டியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் பண்டிவிரிச்சானிலிருந்த ஒரு மதுபானச்சாலையை உடைத்து அங்கிருந்த மதுவை அருந்திய பின்னரே இச்செயலைச் செய்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்ற பின்னர் எனது அண்ணாமார் ஏனையோர்களின் உதவியுடன் இரவு 1.00 மணியளவில் என்னை இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றி வவுனியா வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அதன்பின்னர் மயக்கமுற்ற நான் இருபத்தைந்து நாட்களுக்குப் பின்னர்தான் பழையபடி எனது சுயநினைவைப் பெற்றேன்…”
தொடரும்.



