இலங்கையில் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சிக்கான பின்னணி
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
17 நிமிட வாசிப்பு

இலங்கையில் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சிக்கான பின்னணி

July 22, 2026 | Ezhuna

மலையகத் தமிழர்களின் புதிய வரலாற்றை இருபத்தோராம் நூற்றாண்டு அரசியல், பண்பாட்டுச் சூழலுக்கேற்ப எழுத வேண்டிய தேவை இன்றியமையாதது ஆகும். இவர்களின் 200 ஆண்டுகால வாழ்வு, இலங்கையின் பெருந்தோட்டங்களில் ஒரு வரலாற்று விபத்தாக நிகழ்ந்திருந்தாலும், இவர்களுக்கென்று ஒரு நெடிய பாரம்பரியம் உண்டு என்பதை மறுக்க முடியாது. இந்த நெடும்பயணத்தில், இவர்கள் நூற்றுக்கணக்கான வன்முறைகளுக்கும், குடியுரிமை பறிப்பு, நிலவுரிமை பறிப்பு உள்ளிட்ட பாகுபாடுகளுக்கும் ஆளாகினர். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தங்களால் இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் இலங்கையின் ஏனைய சமூகங்களால் அடிமைக் குடிகளாகவே பார்க்கப்பட்டனர். ஆயினும், இத்தகைய அவலங்களுக்கு மத்தியிலும், இந்த மக்கள் தமது தனித்துவமான மொழி, பண்பாடு, உற்பத்தி முறை, கூட்டு உளவியல் ஆகியவற்றைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வகையில், இந்நூற்றாண்டின் கண்ணோட்டத்தில், அவர்களது தனித்துவமான இருப்பை நிலைநிறுத்தும் முகமாக அவர்களுக்கான ஒரு புதிய அரசியல் – பண்பாட்டு அடையாளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு ‘மலையகத் தமிழர்களின் அரசியலும் பண்பாடும்’ எனும் இத்தொடர் எழுதப்படுகின்றது

இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்திடையே 1906, 1912, 1950ஆம் ஆண்டுகளில் முக்கியமான பல நிகழ்வுகள் இடம்பெற்றன. 1906ஆம் ஆண்டு மாட்டு வண்டிக்காரர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசியல், மதரீதியான கொதிநிலைகள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கம் கொழும்பு நகரப் பாட்டாளிகளிடையே ஆழமாக வேரூன்றியது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் இயக்கம் ஒன்று காணப்படவில்லை. மதரீதியான அமைதியின்மை, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அரசின் அநேக செயற்பாடுகள் விமர்சனங்களுக்குள்ளாகின. அரசியல் முறைமையானது 1833ஆம் ஆண்டிலும் மாற்றமின்றித் தொடர்ந்தது. 2.5 மில்லியன் கீழ்நாட்டுச் சிங்களவர்கள் ஒரேயொரு கிறிஸ்தவரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.

அக்காலப்பகுதியில் ஆளுநராக இருந்த சேர் ஹென்றி பிளேக் மற்றும் காலனிய நாட்டுச் செயலாளரான சேர் அலெக்ஸாண்டர் அஸ்மோர் ஆகியோர் மத்தியதர வர்க்கத்தினரிடையே பிரசித்தமாக இருக்கவில்லை. 1904ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வாழ்க்கைத் தர உயர்வு, சமூக நலச் சேவைகளுக்கான உயர் செலவு, வீட்டு வசதி, உணவு, பானங்கள் என்பனவற்றின் விலை உயர்வு போன்றன மாற்றமில்லாமல் தொடர்ந்தன. 

1905ஆம் ஆண்டு இலங்கை சமூக மறுசீரமைப்புச் சபை தொடங்கப்பட்டது. இச்சபையின் தலைவராக கலாநிதி ஆனந்த குமாரசுவாமி காணப்பட்டார். இவர் பிரித்தானியாவில் விஞ்ஞானக் கல்வி கற்றவர். கவின் கலைகளில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார். இச்சபையின் நிர்வாகச் சபையில் மியூசியஸ் ஹைகின்ஸ், பீட்டர் டீ. ஆப்ரோ, டி.பி. ஜெயந்திலால், மார்ட்டின் பெரேரா, அன்னி பெசன்ட், அநகாரிக தர்மபால ஆகியோர் இடம்பெற்றனர். அன்னி பெசன்ட் அவர்கள் சமூக புனருத்தானச் சபையின் உறுப்பினராகவும் மிதவாதியாகவும் திகழ்ந்தார். இச்சபை மேலைத்தேயப் பாணியிலான சமூகப் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தியது. சமூகக் கொதிநிலைகளைத் தணித்தல், மரண தண்டனைக்கு எதிர்ப்பு போன்ற தாராளவாதக் கொள்கைகளை இச்சபை கொண்டிருந்தது. பிரித்தானிய தாராளவாதக் கட்சிகளை ஆதரித்தமை (1906), விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியமை, ‘இலங்கை தேசிய மீளாய்வு’ (1907) என்ற இதழை வெளியிட்டமை என்பன இச்சபையின் நடவடிக்கைகளாகும்.

அன்னி பெசன்ட் அம்மையார் மேலைத்தேய ஆடம்பர வாழ்வும் கலாசாரமும் கீழைத்தேய நாடுகளில் ஏற்படுத்தவுள்ள பாதகமான விளைவுகளைப் பற்றி எச்சரித்தார். மேலும், கீழைத்தேய சுதேசிய மொழிகள், கலாசாரம், மரபுகள், சுயாதீனத் தன்மை என்பனவற்றை இலங்கையர் தமது கரங்களில் எடுக்க வேண்டுமென தனது விரிவுரைகளில் எடுத்துரைத்தார்.

இன்னொரு புறம், மேலைத்தேய ஆடம்பரங்கள், கலாசாரங்களுக்கு எதிரான சுதேசிய சிங்கள பௌத்தச் சித்தாந்த மேலாண்மை கொண்ட கல்வி கற்ற கீழ் மத்தியதர வர்க்கத் துறவிகள், ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், ஆயுர்வேத சுதேச வைத்தியர்கள், வணிகர்கள், சிறு நில உடமையாளர்கள் ஆகியோர் சமய, அரசியல் கண்ணோட்டங்களில் கேள்வியெழுப்பினர். இச்சிந்தனைப் போக்கானது கிராமப்புற, நகர்ப்புற வெகுசனங்களுக்கிடையில் செல்வாக்குச் செலுத்தியது.

1905ஆம் ஆண்டு அரச அதிகாரிகளால் பௌத்தர்களிடையே முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டதாகப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டின. 19ஆம் நூற்றாண்டில் இயங்கிய பௌத்த எதிர்ப்பு இயக்கங்கள் அரசியல் தன்மையுடையவையாக இருந்தன. அவை அநகாரிக தர்மபால மற்றும் வலிசிங்க ஹரிச்சந்திர ஆகியோரால் வழிநடத்தப்பட்டன.

அநகாரிக தர்மபால (1864–1933) தனது 14ஆவது வயதில் கொட்டாஞ்சேனை விகாரையின் பிக்குவான மீகெட்டுவத்த குணானந்தருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். ‘The Light of Asia’ என்ற இந்தியாவில் வெளியான நூல் அவரில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. கேர்ணல் ஒல்கொட் மற்றும் பிளாவட்ஸ்கி ஆகியோரை வரவேற்கும் நிகழ்விலும் பங்கேற்றார். 1884ஆம் ஆண்டு மதுரையிலிருந்த அவர்களின் சபையின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். தர்மபால அப்போது கல்வித் திணைக்களத்தில் எழுதுவினைஞராகக் கடமையாற்றினார். பிற்காலத்தில் பௌத்த இயக்கத்தில் முழுநேர ஊழியரானார். மேலும், சிரமமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார். 1889 ஆம் ஆண்டு யப்பானுக்குப் பயணித்தார். 1891ஆம் ஆண்டு கல்கத்தாவில் மகாபோதி சங்கத்தைத் தாபித்தார். 1893ஆம் ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற சமய மாநாட்டில் தேரவாத பௌத்தர்களின் பிரதிநிதியாகப் பங்கேற்றார். இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், மேலைத்தேய வாழ்வியல் முறைகளுக்கு எதிராகவும் செயற்பட்டதோடு, சிங்களவர்கள் மற்றும் அவர்களது சமயம், மொழி, தேசிய பாரம்பரியங்கள் ஆகியவற்றின் மீது பெருமித உணர்வையும் கொண்டிருந்தார். பௌத்த மத இயக்கத்தில் வெகுசனங்களைக் கவரக்கூடிய தலைவராக அநகாரிக தர்மபால திகழ்ந்தார். அவர் மத்தியதர வர்க்க கிறிஸ்தவமயமாதலைச் சவாலுக்குட்படுத்தினார். மேலும், போர்க்குணம் வாய்ந்த பௌத்தர்களைக் கவரக்கூடியவராகவும் திகழ்ந்தார்.

பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் இன்னொரு தலைவரான வலிசிங்க ஹரிச்சந்திர மகாபோதி சங்கத்தின் செயலாளரானார். இவர் பின்தங்கிய கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்குப் பயணித்தார். இவரது உரைகள் பௌத்தர்களிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இவர்கள் இருவரும் அநுராதபுரத்திலுள்ள பௌத்த புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கப் போராடினர்.

1903ஆம் ஆண்டு அநுராதபுரக் கலவரம்

1903ஆம் ஆண்டு பௌத்த மத ஊர்வலங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து ஹரிச்சந்திர, பொசன் போயா தினத்தன்று ஓர் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தார். இது கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறையாக மாறியது. இதனையடுத்து ஹரிச்சந்திர கைது செய்யப்பட்டார். இதையெதிர்த்து பிரித்தானிய அரசாங்கத்திற்கு அநகாரிக தர்மபால எழுதிய கடிதத்தில், பௌத்தர்களின் நகரமாகிய அநுராதபுரத்திலிருந்து மதுபானக் கடைகளையும், இறைச்சிக் கடைகளையும், வெளிநாட்டுத் தேவாலயங்களையும் அகற்ற வேண்டுமெனவும், இது பௌத்தர்களின் கோரிக்கையெனவும் குறிப்பிட்டார்.

மது ஒழிப்பிற்கான இயக்கம், பிற்காலத் தலைவர்களை அரசியல் ரீதியாகப் பயிற்றுவிப்பதற்கான ஓர் இயக்கமாக முக்கியத்துவம் பெற்றது. மத, அரசியல் மறுமலர்ச்சிக்கும் இது வித்திட்டது. 1889ஆம் ஆண்டு ‘தியோசபிஸ்ட்’ இதழில், மதுபான நுகர்வு அதிகரிப்பதற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. இவ்வியக்கம் தென்பகுதியில் பாரிய கூட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கையொப்பமிட்ட முறைப்பாடுகளை ஏற்படுத்தியது. அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராக அநகாரிக தர்மபாலவும் அவர்களது கிளர்ச்சி இயக்கத்தினரும் கிராமப்புற, நகர்ப்புறங்களில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தினர். “மது அருந்துபவர்கள் சாதியற்றவர்கள்” என்ற சுலோகம் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. ஐரோப்பியர்கள் “இறைச்சியுண்ணும் பறையர்கள்” எனக் கண்டிக்கப்பட்டனர். சிங்களத் தலைவர்கள் தமது கண்டனங்களைப் பௌத்த இதழ்களிலும், ஆங்கிலத்திலும் பிரசுரித்தனர்.

1906ஆம் ஆண்டு ‘மகாபோதி’ இதழில், “பிரித்தானியரின் ஆட்சியின் ஒரு நூற்றாண்டுகளில் சிங்களவர்கள் ஆசியாவிலேயே பின்தங்கிய மக்களாகிவிட்டனர்” என எழுதப்பட்டது. 1906ஆம் ஆண்டு மார்ச் மாத மகாபோதி இதழ், பிரித்தானியர் ஆட்சியின்கீழ் ஓவியம், மதுபானம், வறுமை, புறக்கணிப்பு, கிறிஸ்தவமயமாக்கல் ஆகியவற்றைக் கண்டித்து எழுதியது.

யப்பானியச் செல்வாக்கு

1905ஆம் ஆண்டு ஜாரிய ரஷ்யாவை யப்பான் தோற்கடித்தது. நவீனமயமாதலும், கைத்தொழில் வளர்ச்சியும், யப்பானின் அரசியல் நிகழ்வுகளும் இலங்கையைப் பாதித்தன. யப்பானியப் பேரரசர் முட்சுஹிட்டோ (1867–1912) யப்பானை நவீனப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். இக்காலப்பகுதியில் யப்பானிய மாணவர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சென்று விஞ்ஞானத்தையும் நவீன கைத்தொழில் நுட்பங்களையும் கற்றனர். யப்பானில் நவீன கைத்தொழிலும், நவீன இராணுவமும், கடற்படையும் எழுச்சி பெற்றன.

ரஷ்யாவின் தோல்வியானது ஆசியாவில் ஐரோப்பியரின் ஆதிக்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய வல்லரசுகளின் தூரக்கிழக்குப் போட்டியில் யப்பான் நுழைந்தது. மஞ்சூரியாவிலும் போர்ட் ஆர்தரிலும் ரஷ்யாவின் ஆதிக்கம் வீழ்ந்தது. 18 மாதங்கள் நீடித்த ரஷ்ய–யப்பான் போரில் ரஷ்ய இராணுவமும் போர்ட் ஆர்தரும் வீழ்ந்தன. ‘கேப்’ வழியாக உலகின் பாதியைச் சுற்றிப் பயணித்த ரஷ்யாவின் பால்டிக் கடற்படை, 1905ஆம் ஆண்டு மே மாதம் சுசிமா அருகே நடைபெற்ற போரில் முழுமையாக அழிக்கப்பட்டது. இவ்வீழ்ச்சி 1905ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது.

புரட்சியும் போரும் நிறைந்த இவ்வாண்டின் நிகழ்வுகள் ஆசிய தேசியவாதிகள் மீது பாரிய செல்வாக்கைச் செலுத்தின. சக்திமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டிருந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களை, கீழைத்தேய அரசுகளும் வீழ்த்த முடியும் என்பதனை இது உணர்த்தியது. விளாடிமிர் லெனின் இந்நிலையைப் பற்றி குறிப்பிடும்போது, “முற்போக்கான முன்னேறிய ஆசியா, சீரமைக்க முடியாத ஐரோப்பாவை வீழ்த்தும்” என்கிறார். சன் யாட்-சென் குறிப்பிடுகையில், “யப்பானிய வெற்றி ஆசியாவின் அனைத்து மக்களுக்கும் எழுச்சிக்கான அடிப்படையான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டார்.

இளைஞனாக இருந்த ஜவஹர்லால் நேரு குறிப்பிடுகையில், “இந்நிகழ்வானது ஆசியாவின் மனதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என விவரித்தார். மேலும், “இந்நிகழ்வு ஆசியாவுக்கு எதிரான ஐரோப்பிய ஆட்சியின் மீதான வெற்றி” எனவும் எழுதினார். அதோடு, “ஐரோப்பிய சக்திமிக்க நாடுகளை இந்தியாவால் ஏன் வெல்ல முடியாது?” என வினவினார்.

1875ஆம் ஆண்டு யப்பானிய போர்க் கப்பல் இலங்கை வந்தபோது அதன் அதிகாரிகளுக்கு சேர் முத்துக் குமாரசுவாமி இரவு விருந்தளித்தார். சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் பிரித்தானிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பல யப்பானிய மாணவர்களைச் சந்தித்தார். இக்காலப்பகுதியில் மேலைத்தேய விஞ்ஞான, தொழில்நுட்ப இரகசியங்களைக் கற்றுத் தேறும் பணியில் யப்பானிய இளைய தலைமுறை இறங்கியது. போர்ட் ஆர்தர் கைப்பற்றப்பட்ட பின்னர் யப்பானியர் பெரும் போர்முறை அறிவியலைக் கற்றனர். இலங்கையிலோ நூற்றாண்டு காலமாக விஞ்ஞானக் கல்வி புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டனர்.

ரஷ்யா மீதான யப்பானின் வெற்றியானது இலங்கைப் பௌத்த தேசியவாதிகளிடையே அரசியல் ரீதியான பிரக்ஞையை ஏற்படுத்தியது. ஆசிய தேசியவாதமானது ஐரோப்பிய ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் பெற்ற வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. இது மிகுந்த முக்கியத்துவமுடைய நிகழ்வாக அமைந்தது.

இலங்கை தேசியவாதியான விக்டர் கொறயா என்பவர் ‘கிழக்கும் மேற்கும்’ என்ற தனது விரிவுரையில், “யப்பானிய வெற்றி நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஆசியா பெற்ற வெற்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வெற்றியைப் பௌத்தப் பத்திரிகைகளும் பெரிதும் வரவேற்றன.

இலங்கையில் யப்பானிய உதவி நிதியம் தொடங்கப்பட்டது. கேர்ணல் ஒல்கொட் அவர்கள் 1883, 1902, 1913ஆம் ஆண்டுகளில் யப்பானுக்குப் பயணித்தார். தர்மபால யப்பானிய அறிவியல் திறன்களால் பெரிதும் ஆகர்ஷிக்கப்பட்டார். தனது குடும்பத்தினரையும் யப்பானில் கல்வி கற்க ஊக்குவித்தார். அவர் யப்பானியர்களின் அவையில் உரையாற்றியபோது, “ஆசிய மக்கள் வீழ்ச்சியுற்றிருக்கிறார்கள். யப்பான் ஆசியாவின் ஞானியாகத் திகழ்கிறது. நீங்கள் சுதந்திரமானவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஐரோப்பிய அபாயத்தை எதிர்கொள்ள யப்பானியர்கள் ஐரோப்பிய நவீனக் கலைகளையும் அறிவியலையும் கற்றார்கள். தமது பண்பாட்டை மிகச் சக்திமிக்கதாக மாற்றினார்கள்” என எழுதினார்.

இக்காலப்பகுதியில் மத்தியதர வர்க்கம் யப்பானியப் போர் வெற்றியில் கவரப்பட்டது. இதனை 15,000 அஞ்சல் அட்டைகள் மூலம் விளம்பரப்படுத்தியது. யப்பானிய ஜெனரல்களின் புகைப்படங்களைத் தாங்கிக்கொண்டு, ரஷ்யாவின் தோல்வியைக் கொண்டாடினர்.

இந்தியத் தேசியவாதத்தின் செல்வாக்கு

இலங்கையும் இந்தியாவும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கியிருந்த காலப்பகுதியில் இந்தியத் தேசியவாதம் தோற்றம் பெற்றது. 1906ஆம் ஆண்டு மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இச்செல்வாக்கை எடுத்துக்காட்டியது. 1885ஆம் ஆண்டு இந்தியத் தேசிய காங்கிரஸ் இயக்கம் தோற்றம் பெற்றது. பால கங்காதர திலகர் போர்க்குணமிக்க இந்துத் தேசியவாதியாக மகாராஷ்டிர மாநிலத்தில் தோன்றினார். வங்காளத்தில் அரவிந்த கோஷ் போன்றவர்கள் ஆங்கிலம் பேசும் மேலடுக்குகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அரசியல் சீர்திருத்தங்களைக் கோரினர். திலகர் போர்க்குணமிக்க தலைமையால் மக்களை ஈர்த்தார். இந்திய வெகுசனங்களையும் கவர்ந்தார்.

1907ஆம் ஆண்டு தீவிரவாத, மிதவாத காங்கிரஸ் தலைவர்களிடையேயான பிரிவு வெளிப்பட்டது. தீவிரவாதிகள் “இந்தியாவிற்கு சுயராச்சியம்” என்ற சுலோகத்தை உயர்த்திப் பிடித்தனர். இச்செய்திகள் இலங்கைப் பத்திரிகைகளில் வெளியாகின. இது வெகுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்திய, இலங்கை நாடுகளுக்கிடையேயான பிணைப்பும், தியோசபிக்கல் சபையினரின் இந்தியப் பயணங்களும், பௌத்தக் கல்வி இயக்கத்தில் செல்வாக்குச் செலுத்தின.

அநகாரிக தர்மபால பல ஆண்டுகள் கல்கத்தாவில் வசித்தார். அங்குதான் அவர் 1891ஆம் ஆண்டு மகாபோதி சங்கத்தைத் தாபித்தார். அவர் வாழ்ந்த பகுதி இந்திய தேசியவாதத்தின் இதயமாகத் திகழ்ந்தது. மேலும், அவர் இரவீந்திரநாத் தாகூரின் கலாசார மறுமலர்ச்சி இயக்கத்தையும் கண்டார். சுயராச்சியத்தை வேண்டிய வெகுமக்கள் இயக்கமொன்று தோற்றம் பெறுவதை உற்று நோக்கினார்.

‘மோர்னிங் லீடர்’ பத்திரிகையின் உரிமையாளர், பாரிஸில் வசித்து வந்த கிருஷ்ணவர்மா என்பவருக்கு எழுதிய கடிதத்தில், “இந்துஸ்தானத்தை எவ்வளவு காலத்திற்கு வறுமை தாக்குகின்றதோ, இலங்கையும் அவ்வாறே வதைக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

மாட்டு வண்டிக்காரர்களின் வேலைநிறுத்தம்

இலங்கைப் பொருளாதாரத்தில் நவீன பொருளாதார வளர்ச்சியிலும், அதன் சரக்கு மற்றும் போக்குவரத்திலும் மாட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியமான இடமுண்டு. பெருந்தோட்ட முதலாளிகள், அரச அதிகாரிகள் போன்றவர்களையும், அறுவடை செய்யப்பட்ட கோப்பி, கொக்கோ, வாசனைத் திரவியங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான விறகு, கட்டுமானப் பொருட்கள் என்பவற்றையும் இடம்விட்டு இடம் கொண்டு செல்வதற்கு மாட்டு வண்டிகளே பயன்படுத்தப்பட்டன.

1901ஆம் ஆண்டு 17,000 மாட்டு வண்டிகளும், 1910ஆம் ஆண்டில் 23,000 மாட்டு வண்டிகளும் சேவையில் ஈடுபட்டன. இக்காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டார் கார்களுக்காக வீதிப் போக்குவரத்துச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. எனினும், மாட்டு வண்டிகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டங்கள் காணப்படவில்லையென குற்றம் சாட்டப்பட்டது. கொழும்பு மாநகர சபை மற்றும் பொலிசாரின் ஊழல் என்பன காரணமாக வழமையாக ரூ.15 முதல் ரூ.20 வரை தண்டம் விதிக்கப்பட்டது. ஆனால், வண்டில்காரர்கள் மாதம் ரூ.12 முதல் ரூ.15 வரையே உழைத்து வந்தனர்.

இந்நிலைமையை எதிர்த்து 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் திகதி 5,000 மாட்டு வண்டில்காரர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் கொழும்பு மாநகர வாணிப நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. கொழும்பு மாநகர மேயர், வேலைநிறுத்தம் தொடங்கி மூன்று நாட்களின் பின்னர் சட்டத்தை மீளப் பெற்றார். இந்த வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றியாக அமைந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சலவைத் தொழிலாளர்கள் முன்னெடுத்த வெற்றிகரமான வேலைநிறுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், இவ்வெற்றி முக்கியத்துவமுடையதாகக் காணப்பட்டது.

இவ் வேலைநிறுத்தமானது வண்டில்காரர்களின் ஒன்றுபட்ட பலத்தால் வெற்றியடைந்தது. மேலும், போராட்டக்காரர்கள் மிகவும் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டனர். ஏனைய உழைக்கும் வர்க்கத்தினரும் ஆதரவளித்தனர். கொழும்பு பெட்டா பகுதியிலும் நகர மண்டபப் பகுதியிலும் வண்டில்களை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தனர். எந்தவொரு வண்டில்காரரும் சேவையில் ஈடுபட மறுத்தனர். ரூ.5 கூட வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வண்டில் தடிகளில் அமர்ந்துகொண்டு நீண்ட சுருட்டுகளைப் புகைத்தனர். பாடல்கள் பாடினர்.

இந்நிலைமையை அறிக்கையிட்ட ‘சிலோன் இன்டிபென்டன்ட்’ பத்திரிகை, “வெகுசன மக்களின் சக்தி” என எழுதியது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர் இயக்கம் விரிவடைந்து வந்ததோடு, அதன் போர்க்குணமும் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் ஐரோப்பா முதலாம் உலகப் போருக்குத் தயாராகி வந்தது. ரஷ்யப் புரட்சியும், ஜாரின் வீழ்ச்சியும், கீழைத்தேயத்தில் யப்பானின் இராணுவ வெற்றிகளும் கிழக்கின் விடுதலைக்கான பேரொளியைப் பரப்பி வந்தன. காலனிய ஆட்சிக்கெதிராக மக்கள் மெல்ல மெல்ல அணிதிரளத் தொடங்கினர்.

இலங்கை மலைக்காடுகளை நோக்கி அலையலையாகப் பாட்டாளி மக்கள் தமிழகக் கிராமங்களிலிருந்து பிரித்தானிய காலனியவாதிகளால் அழைத்துவரப்பட்டு, கோப்பி, தேயிலை, இறப்பர் தோட்டங்கள் இதே காலப்பகுதியில் உருவாக்கப்பட்டன. புதிய இனம், புதிய வர்க்கம், புதிய உற்பத்தி முறையின் மூலம் இலங்கை உலகோடு ஆழமாகப் பிணைக்கப்பட்டது. வாணிபம் பெருகியது. போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கிச் சேவைகள், காப்புறுதி, நிதி, உணவு, பானங்கள், துறைமுகங்கள் ஆகியவை வளர்ச்சியடைந்தன. இதற்கு அடிப்படையான பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான உழைப்பை நல்கிய மலையகப் பாட்டாளி வர்க்கம், புதிய அடிமைச் சமூகமாக மலையகப் பெருந்தோட்டங்களில் பனிக்குளிரில் மூழ்கிக் கிடந்தது. அங்கே இன்னும் தணல் பரவவில்லை.



About the Author

பொன் பிரபாகரன்

பொன்.பிரபாகரன், யாழ். பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவப் பட்டம் பெற்றவர். பட்டப்பின் டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும், ஊடகவியலில் டிப்ளோமாப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். மேலும், கொழும்பு வணிகப் பள்ளியில் செயற்றிட்ட முகாமைத்துவப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 'காமன் கூத்து'(மலையக தமிழரின் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் பொருண்மிய ஆய்வு), 'உப்பு ரொட்டி' (கவிதைத் தொகுப்பு), 'மலையகத் தமிழரின் சமூகவியலும் அரசியலும்' என்பன இவரது நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்