இலங்கையின் வடக்குப் பகுதியில் கண்ணகி வழிபாடு
கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எடுத்த விழாவில் கலந்துகொண்ட இலங்கை வேந்தன் கயபாகு மீளும் போது ஜம்புகோளப்பட்டினம் என்ற சம்பில் துறையிலே வந்திறங்கினான் என்று கருதப்படுகின்றது. கயபாகு வேந்தன் கந்தரோடையிலுள்ள அங்கணாமக்கடவையில் பத்தினிக்குக் கோயில் அமைத்துத் தனது உருவச் சிலையையும் கோயில் முன்றலில் நிறுவியிருக்கலாம் என்பர்.1 அடையாளம் காணமுடியாத நிலையிலுள்ள அங்கணாமைக்கடவைக் கண்ணகி கோவில் கந்தரோடையிலுள்ள கதிரமலைக்கு அருகாமையில் இருந்ததாக இன்றைய ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.2 அங்கணாமக்கடவையின் கண்ணகியம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறத்திலிருந்த கல்லாலான கஜபாகு மன்னனின் சிலை சில நூற்றாண்டுகளிற்கு முன் யானையொன்றினால் சிதைக்கப்பட்டுப் பின் சிலையின் காற்பகுதியும் தலையும் கலாநிதி பீரிஸ் எனபவரினால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாண நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.3
இதனைப் போன்றே அனுராதபுர இராட்சிய காலத்தில் பௌத்த மதத்தின் புனிதச் சின்னமாகிய புனித வெள்ளரசு மரக்கிளை சங்கமித்தை பிக்குணியால் இலங்கைக்கு ஜம்புகோளப்பட்டிணத் துறைமுகத்தினூடாகவே கொண்டுவரப்பட்டது என மகாவம்சம் கூறுகின்றது. மகாவம்சம் தரும் இச்செய்தியின் மூலமாகக் கண்ணகி வழிபாடும் இத்துறைமுகத்தினூடாகவே அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபடப்பட்டிருக்கலாம் என்று கருதமுடிகின்றது.
கயபாகு மன்னன் நாடெங்கிலும் கண்ணகி கோயில் அமைத்து வழிபாடு செய்ய வேண்டுமெனக் கட்டளையிட்டதைத் தொடர்ந்து வரோதயசிங்கையாரியன் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கண்ணகி கோயில்கள் தோன்றின என்பார் சி. கணேசையர்.4 கணேசையரின் இக்கருத்து ஆய்விற்குரியது. கயபாகு மன்னன் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் (174–196) அனுராதபுரத்தை ஆட்சி செய்தவனென ஆய்வுகள் கூறுகின்றன.5 யாழ்ப்பாண இராச்சியத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சி செய்த காலப்பகுதி கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரையுள்ள (1250–1650) காலப்பகுதியாகும். இக்காலப்பகுதிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை.
ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட கண்ணகி கோயில் வேலம்பிராயில் உள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்டதே களையோடை, அங்கணாமக்கடவை கண்ணகி கோயில்களென்றும் முத்துத்தம்பிப்பிள்ளை கூறுகின்றார்.6 யாழ் குடாநாட்டிலே அனலைதீவு, வற்றாப்பளை, கிரிப்பாய், சங்குவயல், கேலங்கிராய், உருப்பளை முதலான இடங்களில் ஆரம்பத்தில் கண்ணகி கோயில்கள் அமைந்திருந்தனவென்று நாட்டார் பாடலொன்று குறிப்பிடுகின்றது.7

ஆரம்பத்தில் வடக்கிலே பல கண்ணகி கோயில்கள் இருந்தன என்பதற்கு கண்ணகியம்மன் பள்ளுப் பாடல் ஒன்று ஆதாரமாக உள்ளது.
“அங்கணம்மைக் கடவை செட்டிபுல மச்சூழ்
ஆனதொரு வற்றாப்பளை மீதுறைந் தாய்
பொங்கு புகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்
புகழ் பெருகு கேலங்கிராய் மீதுறைந் தாய்
எங்குமே உன்புகழை மங்காம லோத
என்றனது சிந்தையி லுறைந்த காரணியே
பங்கமுறு துயரங்கள் தீரவருள் புரிவாய்
பரிவு செறி கேலங்கிராயி லுறை மாதே.” 8
இப்பள்ளுப் பாடலின் மூலம் இலங்கையின் வடக்குப் பகுதியில் ஆரம்பகாலத்தில் புகழுடன் விளங்கிய கண்ணகி அம்மன் ஆலயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.
இலங்கையின் வடபகுதியில் கண்ணகி வழிபாடு பரவிய முறை பற்றிப் பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறியுள்ளனர். அவை ஐதீகங்களை அடிப்படையாகக் கொண்டனவாக அமைந்துள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனால் பல துண்டங்களாக வெட்டப்பட்ட கோவலனைக் கண்ணகி ஒன்றாகச் சேர்த்துத் தைத்து அவனிற்கு உயிரளிக்கின்றாள். உயிர் பெற்ற கோவலன் எழுந்திருந்து,
“மாதகியோ கண்ணகியோ வந்தவர்கள் படுகளத்தில்
மாதகியாள் வந்தாலே வாடியென் மடிமேல்” 9
எனக் கூறினான். மாதவியின் பெயரையே முதலிலே கூறினானென்று கோபம் கொண்ட கண்ணகி தன்னை ஐந்து தலை நாகமாக உருமாற்றி மதுரை மாநகரம் துறந்து, தெற்கு நோக்கிச் சென்று முதலிலே நயினாதீவில் தங்கினாள். பின்னர் வட்டுக்கோட்டைப் பாங்கூரிலுள்ள சுருட்டுப்பனை வழியாகச் சீரணி, அங்கணாமக்கடவை, அளவெட்டி, சுருவில் முதலான இடங்களிலே தங்கினாள். ஐந்து தலை நாகமாகக் கண்ணகி நகர்ந்து சென்ற வழியே வழுக்கியாற்றுப் பள்ளமாக மாறியதென்பர். இவ்விடங்களிலே அமைந்துள்ள கோயில்களிலெல்லாம் ஐந்து தலை நாகத்தின் சந்நிதானமும் அம்மனின் சந்நிதானமும் அமைந்துள்ளன. நவாலியில் வழுக்கியாற்றிற்கு அண்மையிலமைந்துள்ள களையோடைக் கண்ணகி அம்மன் ஆலயம் இத்தகைய ஐதிகத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்விடங்களில் அமைந்துள்ள ஆலயங்கள் சில நாகதம்பிரான் ஆலயங்களாகவும் அம்மன் ஆலயங்களாகவும் மாற்றமடைந்துள்ளன. சீரணியிலுள்ள கோயில் நாகம்மாள் கோயிலெனவும் அளவெட்டி, சுருவில் போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள கோயில்கள் நாகதம்பிரான் கோயில்களெனவும் அழைக்கப்படுகின்றன. இக் கர்ணபரம்பரைக் கதை ஒரு வரலாற்றுக் குறியீடாகவும் இருக்கலாம். அதாவது கேரளத்திலிருந்து ஈழத்துக்குக் கண்ணகி வழிபாடு வந்தமை பற்றிப் பல ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். கேரளத்தில் பகவதியை (கண்ணகியை) நாக பகவதியாக வழிபடுகின்றனர். எனவே கண்ணகி வழிபாடு கேரளத்திலிருந்து ஈழத்து வடபுலத்துக்கு வந்து அங்கு பரவியதைக் காட்டுமாப் போல் இக்கதை அமைகின்றது. அதேவேளை கேரள நாகபகவதி வணக்கத்தின் தாக்கமும் கண்ணகி–நாக இணைப்புக்கு ஓர் உந்துசக்தியாக இருக்கலாம்.10
நயினாதீவிலிருந்து புறப்பட்ட கண்ணகி, கோப்பாய், மட்டுவில், வேலம்பிராய், கச்சாய் வழியாகச் சென்று நாகர் கோயிலையடைந்து பின்னர் கரைச்சியிலுள்ள புளியம்பொக்கணையை அடைந்து, இறுதியாக வற்றாப்பளையை அடைந்தாள் என்று சிலர் கருதுகின்றனர். கண்ணகி இவ்வாறு தங்கிய பல இடங்களில் பத்தாவது இடமே வற்றாப்பளை ஆகும். இவ்விடத்தைப் ‘பத்தாம்பனை’ என்று ஆரம்பத்தில் அழைத்தனர். பின்னர் இவ்வூரின் பெயர் நாளடைவில் மருவி ‘வற்றாப்பளை’ என அழைக்கப்பட்டது. வற்றாப்பளைக் கண்ணகை ஆலயத்தில் விநாயகர், நாகதம்பிரான் ஆகிய மூர்த்திகளும் பரிவாரத்திலுள்ளனர். ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வருகின்ற குளிர்த்திச் சடங்கின் போது இங்கு கடல் நீரில் கோயிலின் விளக்கு ஏற்றப்படுகின்றது.
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை வடக்கில் பிரசித்தி பெற்றிருந்த கண்ணகியம்மன் வழிபாடு ஆறுமுகநாவலரின் சைவ சமய மறுமலர்ச்சிச் செயற்பாட்டினால் ‘செட்டிச்சி வழிபாடு’ எனக்கூறப்பட்டு கண்டனத்திற்குள்ளானது. “இம் மானிடப் பெண்ணிற்குப் பூசை செய்ய ஆகம விதி உண்டோ” என்றும், “சைவ சமயிகளென்று பெயரிட்டுக்கொண்டு அநேக மூடர்கள் உயிர்ப்பலி ஏற்கின்ற துட்ட தேவதைகளையும், காடன், மாடன், காட்டேறி, சுடலைமாடன், மதுரைவீரன், முனி, கண்ணகி முதலானவர்களை வழிபடுகின்றனர். இவர்களெல்லோரும் சிவத்துரோகிகள்; இவர்களே அஞ்ஞானிகள்” 11 என்றும் நாவலர் கூறியுள்ளார்.
நாவலரின் இயக்கத்திற்கு செவிசாய்த்த இடங்களிலெல்லாம் ஆலயத்திலுள்ள மூல மூர்த்திகள் யாவும் சிற்ப சாஸ்திர விதிக்கமைந்து, ஆலயங்கள் ஆகம நெறிக்குட்பட்டு அமைக்கப்பட்டன. இதனால் வடக்கிலுள்ள கண்ணகையம்மன் ஆலயங்கள் இராஜேஸ்வரி, நாகபூசணி, நாகேஸ்வரி, புவனேஸ்வரி, மனோன்மணி, முத்துமாரி கோயில்களாக மேல்நிலையாக்கம் செய்யப்பட்டன. ஆயினும் இவ்வழிபாடு அடியோடு மறைந்துவிட்டது என்று கூறுவதற்கில்லை. பருத்தித்துறையிலுள்ள மாதனை கண்ணகியம்மன் ஆலயம் பண்டைய வழமையின் சின்னமாகத் திகழ்கின்றது.12
இலங்கையின் கிழக்குப் பகுதியில் கண்ணகி வழிபாடு
இலங்கையின் ஏனைய பகுதிகளை விட கிழக்குப் பகுதியிலேதான் கண்ணகிக்கு அதிகமான ஆலயங்கள் காணப்படுகின்றன. அதிலும் மட்டக்களப்புப் பகுதியில் கண்ணகி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடாகக் காணப்படுகின்றது. இங்கு கண்ணகி வழிபாடு இல்லாத ஊரே இல்லை என்று கூறும் அளவிற்கு கண்ணகி வழிபாடு இங்குள்ள மக்களுடன் இரண்டறக்கலந்து காணப்படுகின்றது. “மட்டக்களப்புப் பகுதியிலே ஏனைய தெய்வங்களுக்குக் கிடைக்காத சிறந்த இடம் கண்ணகிக்குக் கிடைப்பதால் கண்ணகி வழிபாடு இங்குதான் வேரூன்றி வளர்ந்ததோ என்றுகூட எண்ணத் தோன்றும்.” 13 என்று எம். சற்குணம் கூறுகின்றார். இக்கூற்று மட்டக்களப்புப் பிரதேசத்தில் கண்ணகி வழிபாட்டிற்குரிய முக்கியத்துவத்தை விளக்கி நிற்கின்றது.
மட்டக்களப்பில் கண்ணகி அம்மன் கோயில்கள் அமைந்துள்ள இடங்கள் பற்றி, ‘ஊர்சுற்றுக்காவியம்’ அல்லது ‘உடுக்குச்சிந்து’ என்ற காப்பியச் செய்யுள் பின்வருமாறு கூறுகின்றது.
“பட்டிநகர் தம்பிலுவில் காரைநகர் வீரமுனை
பலிசுபெறு கல்முனைகல் லாறுமாகி ழூரெருவில்
செட்டிபா ளையம்புதுக் குடியிருப்பு மண்முனை
செல்வமுத லைக்குடா கொக்கட்டிச் சோலை
அட்டதிக் கும்புகழ் வந்தாறு மூலை
அன்பான சித்தாண்டி நகரதனில் உறையும்
வட்டவப் பூங்குழல் மண்முனைக் கண்ணகையே
மனதினில் நினைக்கவினை மாறியோ டிடுமே.” 14
இதே போன்று பின்வரும் ‘கூவாய் குயிலே’ வசந்தன் பாடலிலும் கிழக்கிலே காணப்படுகின்ற கண்ணகை அம்மன் கோயில்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“செட்டிநக ரத்துலவு தேவிகண் ணகையைநிதம்
தேடியே நினைந்து கூவாய் குயிலே
பட்டிநகர் தம்பிலுவில் பாடல்புகழ் காரைநகர்
பத்தினிகண் ணகையென்று கூவாய் குயிலே
வெற்றிபுனை வீரநகர் மேவரிய கல்முனையும்
மேவியகண் ணகையென்று கூவாய் குயிலே
உற்றபாண் டிருப்பினோ குலவியநீ லாவனையில்
ஓதரிய கண்ணகையைக் கூவாய் குயிலே.” 15
‘பட்டிமேட்டுக் கண்ணகியம்மன்’ காவியத்திலுள்ள பாடலும் மட்டக்களப்பில் கண்ணகையம்மன் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் இடங்களைக் கூறுகின்றது.

“ஆதியே பட்டிநகர் தம்பிலுவில் காரேறு
அதிகமுள வீரமுனை கல்முனைநீ லாவணை
ஓதியே பாண்டிசெறி கல்லாறுமகி ளுரெருவில்
உற்றகளு வாஞ்சிகளு தாவளை பழுகாமம்
நீதிசெறி தேத்தாவெ னுஞ்செட்டி பாளையம்
நேராங் கிரான்குளம் புதுக்குடியி ருப்புச்
சுற்றுமுறு முதலைக்கு டாவிலுறை பவளே
உற்றுமே தாண்டவன் வெளியதனி லேவந்து
உவமைபெறு கொத்துக்கு ளத்திமிலை தீவு
வெற்றிபுனை வந்தாறு மூலையீச் சந்தீவு
மேலான அங்கணா மைக்கடவை வெளியிலும்…” 16
கிழக்கிலங்கையில் கண்ணகியம்மன் வழிபாடு பரவிய முறை பற்றிப் பலரும் பலவாறு எடுத்தியம்புகின்றனர். மட்டக்களப்புப் பிரதேசத்திற்கு, வெருகலம்பதிக்குக் கிழக்குப் பக்கத்திலே உள்ள இலந்தைத் துறைமுகத்தில் மதுரை நகரில் இருந்து செம்பக நாச்சியம்மன், பத்திரகாளியம்மன், கண்ணகி அம்மன் சிலைகள் மூன்று கொண்டுவரப்பட்டதாகவும், செம்பகநாச்சியார் சிலையை ஈச்சிலம்பத்தையிலும், பத்திரகாளி அம்மன் சிலையை சம்பூர்க் கடற்கரையிலும், கண்ணகியம்மன் சிலையை மட்டக்களப்புத் தென்பாகத்திலுள்ள ஊரிலும் வைத்து வழிபட்டதாக வெருகலம்பதி செவிவழிச் செய்தி மூலம் எடுத்து விளக்குவர். இம்மரபுவழிக் கதை மூலம் இப்பிரதேசத்திற்குக் கண்ணகி வழிபாடு தமிழகத்தில் இருந்து நேரடியாகக் கொண்டுவரப்பட்டதாக அறிய முடிகின்றது.17
இரண்டாவது பாண்டியப் பேரரசின் காலத்தில் திருக்கோயிலைச் சூழவுள்ள பிரதேசங்களில் பாண்டியக் குடியேற்றங்களும் கலாசாரச் செல்வாக்கும் ஏற்பட்டன. திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில் என்பன பாண்டியக் கட்டடச் செல்வாக்கில் உருவாகியமையை கலாநிதி இந்திரபாலா எடுத்துக்காட்டுகின்றார்.18 பாண்டிய நாட்டவர்கள் கண்ணகியின் சாபத்தினால் தமது நாட்டில் அடிக்கடி மழை பெய்வதில்லை என்றும், அதற்காகக் கண்ணகியை வழிபட வேண்டுமெனவும் நம்பியவர்கள். சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரை கண்ணகியின் சாபத்தினால் பாண்டிய நாட்டில் மழையில்லாது கொடிய நோய்கள் பரவியதால் கள வேள்வி செய்து 1000 பொற்கொல்லர்களைப் பாண்டிய மன்னன் பலிகொடுத்த செய்தியைத் தருகின்றது. இந்நம்பிக்கையேடு இங்கு வந்த பாண்டியர்கள் திருக்கேயிலைச் சூழவுள்ள பட்டிமேடு, தம்பிலுவில், வீரமுனை முதலான இடங்களில் கண்ணகி கோயில்களை அமைத்திருக்கலாம்.
வட இலங்கையில் முக்குகர் செல்வாக்கைப் பெற்றிருந்த போது, கண்ணகி வழிபாடு செய்யும் பாண்டிய நாட்டுக் கரையார் வட இலங்கையில் குடியேறினர். இதனால் இவ்விரு இனங்களுக்குமிடையே மனக்கசப்பு உருவானது எனலாம். இதனை எடுத்துக் காட்டுவதே கண்ணகி வழக்குரை காவியம் கூறும் மீகாமன் வெடியரசன் போர் எனலாம். கண்ணகி வழிபாட்டிற்குரியவர்களை எதிர்த்ததால் காலப்போக்கில் கரையாரோடு முக்குகரும் கண்ணகி வழிபாட்டை மேற்கொள்ளத் தொடங்கினர்.19 வட இலங்கையில் ஏற்பட்ட இம்மாற்றம் கிழக்கிலும் ஏற்பட்டிருக்கலாம்.
மட்டக்களப்பு மான்மியம், கிழக்குப் பிரதேசத்திற்கு கண்ணகி வழிபாடு யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிடுகின்றது. யாழ்ப்பாணத்தின் ஒத்துக்குடாப் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவனும் அவனது தங்கையர்களான, மயிலி, செம்பி என்பவர்களும் ஏழு ஆலய ஊழியக் கோவிக்குடும்பங்களையும் ஏழு நாடார் குடும்பங்களையும் அழைத்துக்கெண்டு ஏழு கண்ணகையம்மன் விக்கிரகங்களோடு படகிலேறி மட்டக்களப்பின் மண்முனை என்னும் ஊரில் வந்திறங்கினர். இவர்கள் மண்முனைக்கு அருகிலுள்ள ஊர் ஒன்றில் (புதுக்குடியிருப்புக்கும் கிரான்குளத்திற்கும் இடையிலுள்ள சிராம்பியடி எனக் கூறப்படுகின்றது) குடியேறி, ஏழு கண்ணகி விக்கிரகங்களையுமிருத்திப் பூசை செய்து வந்தனர். இவர்கள் கண்டி மன்னனின் அனுமதியைப் பெறாமல் இங்கு குடியேறியமையால் இக்குடிகளின் தலைவனான கந்தப்பனைக் கொன்று ஏழு விக்கிரகங்களில் ஒன்றை இருந்த இடத்திலேயும், ஏனைய ஆறு விக்கிரகங்களையும் ஆறு ஊர்களிலுமிருக்கவும், நாடாரைப் பூசகராகவும் கோவியரை ஆலய ஊழியராகவும் நியமிக்கும்படி கண்டி மன்னன் கட்டளையிட்டானென மட்டக்களப்பு மான்மியம் குறிப்பிடுகின்றது.20 இதன்படி புதுக்குடியிருப்பு, தாளங்குடா, மண்முனை, ஆரையம்பதி, செட்டிபாளையம், களுவாஞ்சிக்குடி, மகிழூர், எருவில், மகிழடித்தீவு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை போன்ற ஊர்களில் கண்ணகி வழிபாடு பரவியதாக நம்பப்படுகின்றது.
பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் வரலாற்றினைப் பொற்புறாவந்த காவியத்தின் மூலம் அறிய முடிகின்றது. சீதாவாக்கையிலிருந்து வந்த நாகமங்கலையம்மனின் புறா வழிபாடே பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் வழிபாடாக மாற்றமடைந்திருக்கின்றது என்ற செய்தியைப் பொற்புறாவந்த காவியம் காட்டுகின்றது. பொற்புறாவந்த காவியத்தில் பல தொன்மங்கள் உரைக்கப்படுகின்றன. நாகமங்கலையென்ற அம்மன் பொற்புறாவாக இலங்கை வந்தாளென்றும், அந்தப் பொற்புறாவைப் பிடிக்க மன்னன் ஏவலரை ஏவினானென்றும், அவர்களால் அதனைப் பிடிக்க முடியாது போன போது, ஏழு கன்னியரை அனுப்பினால் அவர்கள் கையில் தான் அகப்படுவதாக மன்னன் கனவில் நாகமங்கலையம்மன் உரைத்தாளென்றும், ஏழு கன்னியரை மன்னன் வாவிக்கரைக்கு அனுப்ப ஒரு கன்னியின் கரத்தில் பொற்புறாவின் ஓர் இறகு வந்து வீழ்ந்ததென்றும், அதனைக்கொண்டு மன்னன் நாகமங்கலை அம்மனிற்கு கோயில் அமைப்பித்தானென்றும், பின் இலங்கை நகர் முழுவதும் கண்ணகி சிலை கொண்டு செல்லப்பட்டு தம்பிலுவிலுக்கு கொண்டு வரப்பட்டதென்றும், தம்பிலுவில்லில் மளுவரசன் வகுத்துவாரில் வந்த மங்கலப்போடி என்பவன் பூசகராக நியமிக்கப்பட்டானென்றும், பின் இறக்காம நகரில் கங்குடாவெளி என்னும் இடத்தில் அம்மன் கோயில் கொண்டாளென்றும், பின்னர் பட்டிமேட்டிற்கு அவள் சென்றாளென்றும் பல விடயங்கள் கூறப்படுகின்றன.
இலங்கையில் கண்ணகி வழிபாட்டோடு நாகம் தொடர்புபடுத்தப்படுகின்றது. நாகமங்கலையே கண்ணகியாகப் பிறந்தாள் என்று கண்ணகி வழக்குரை காவியமும் பொற்புறாவந்த காவியமும் கூறுகின்றன. நாகமணி கொண்டே கண்ணகியின் காற்சிலம்பு செய்யப்பட்டதென்றும் கூறுவர். மதுரையை எரித்த கண்ணகி ஐந்துதலை நாகத்தின் வடிவில் யாழ்ப்பாணத்தை வந்து சேர்ந்தாள் என்பது ஓர் ஐதிகம். இதனைப் போன்று மட்டக்களப்பு மண்முனைப் பகுதியிலும் பண்டாரியாவெளியிலும் மகிழடித்தீவிலும் எழுந்தருளியுள்ள நாகத்தின் உடன்பிறப்பாகிய கொம்பி, கண்ணகி ஆலய ஸ்தாபகியாகவும் கூறப்படுகின்றாள். இவ்வாறு கண்ணகியம்மன் நாகத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்ற செய்தியானது, கண்ணகி வழிபாடு இலங்கைக்கு வரும்போது நாக வழிபாட்டிற்கிருந்த செல்வாக்கைக் காட்டுவதுடன் அக்கால நாகர் குல மக்களின் செல்வாக்கினையும் எடுத்துக் காட்டுகின்றது.
நாடுகாட்டுப்பரவணிக் கல்வெட்டில் காரைதீவு, பட்டிமேடு முதலான கண்ணகி அம்மன் ஆலயங்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இக்கல்வெட்டில் பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் கோயிலில் சிங்களக் கட்டாடி சிங்களப் பத்தாதி கொண்டு பூசை செய்தமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.21
காரைதீவுக் கண்ணகையம்மன் ஆலயம் வன்னியர்களின் ஆட்சி உச்சநிலை பெற்றிருந்த போது தோன்றியது எனக் கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் அறியமுடிகின்றது. இப்பகுதியை அரசாண்ட வன்னி மன்னன் நிலபுலன்களைப் பார்வையிட வந்தபோது அரசனின் யானை கீழே விழுந்து படுத்ததாகவும், அப்போது அருகிலேயுள்ள கண்ணகி கோயிலில் பூசை செய்து கொண்டிருந்த தேவந்தி என்ற பெண் விவரம் அறிந்து வேப்பமிலை அரைத்துக் குளிகை செய்து, யானைக்குப் பருக்கிய பின் யானை எழுந்ததாகவும் அதற்குக் கைம்மாறாக அரசன் கண்ணகிக்கு ஆலயம் அமைத்துக் கொடுத்ததாகவும், அரசனுடைய இரு மனைவியருள் ஒருவரான, சிறிய பூங்கோதை இழந்த கண் பார்வை அம்மனை வணங்கியதால் கிட்டியதாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதை காணப்படுகின்றது.

கயபாகு மன்னனால் கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு அனுராதபுரத்திற்கும் பின் அங்கிருந்து கண்டிக்கும், கண்டியிலிருந்து மட்டக்களப்பிற்கும் பரவியதென வி.சீ. கந்தையா குறிப்பிடுகின்றார். கி.பி.16 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் கிழக்குப் பிரதேசம் கண்டி இராச்சியத்திற்கு உட்பட்டிருந்தது. ஊர்சுற்றுக்காவியத்தின் இறுதிப் பகுதியிலுள்ள பாடலொன்றிலே “காமநகர் வாழ்குளக் கண்டியுறை மாதே” (பாடல். 63) என்று கூறுதலாற் கண்டி நகரிலிருந்த கண்ணகி கோயிலும் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றிருந்ததென்று தெரிகிறது.22 கண்டிக்கும் மட்டக்களப்பிற்குமிடையே பண்டைய காலத்திலிருந்து வணிகத் தெடர்பு இருந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து கண்டிக்குச் செல்வதற்கான பழைய வழியொன்றிருந்துள்ளது. அது காரைதீவிலிருந்து சம்மாந்துறை, வீரமுனைகளுக்கூடாகச் சென்றது. மண்டூரிலிருந்தும், பழுகாமத்திலிருந்தும் வந்த ‘கண்டி அதர்’ (கண்டிக்குச் செல்லும் காட்டு வழி) இரண்டும் ஊவா மாகாண எல்லையினைச் சார்ந்துள்ள ‘கண்டியக் கட்டு’ என்னும் இடத்தில் வீரமுனை வழியோடு ஒன்றுபட்டன.23 இவையனைத்தும் கண்டிப் பிரதேசம் மட்டக்களப்புடன் கெண்டிருந்த தொடர்பினை எடுத்துக்காட்டுகின்றன.
மட்டக்களப்பில் அடிக்கடி மழை பெய்யாமை கண்ணகி அம்மன் வழிபாட்டை மென்மேலும் ஊக்கப்படுத்தியது. இதனை இப்பிரதேசத்திலே எழுந்த இலக்கிய வடிவங்களான, கண்ணகை அம்மன் குளிர்த்திப் பாடல்கள், கண்ணகை அம்மன் மழைக்காவியங்கள், கூவாய்குயில் வசந்தன் பாடல்கள், கொம்பு விளையாட்டுப் பாடல்கள் போன்றன உறுதி செய்கின்றன.
திருகோணமலைப் பிரதேசத்தில் பறையன்குளம், பாலம்போட்டாறு, மலைமுந்தல், கந்தளாய், ஆகிய இடங்களிலெல்லாம் பழைய பத்தினியம்மன் கோயில்கள் இருந்தன.24 சாம்பல்தீவு, குறும்பிட்டி, நிலாவெளி, பள்ளிக்குடியிருப்பு, நிலாப்பளை, சம்பூர், மூதூர், இலங்கைத்துறை முகத்துவாரம், சம்புக்கேணி, கும்புறுப்பிட்டி, ஈச்சந்தீவு, ஆலங்கேணி, உவர்மலை போன்ற பகுதிகளில் கண்ணகி அம்மன் வழிபாடு நிலைபெற்று வருகின்றது. எனினும் கோணநாதரின் புகழ் மிகுதியினால் கண்ணகி அம்மனின் செல்வாக்கு இப்பிரதேசத்தில் குறைவாகவே காணப்படுகின்றது.
அடிக்குறிப்புகள்
1. Rasanayagam,c. Mudaliyar, Ancient Jaffna, Madras, (1926), p.90.
2. வெல்லவூர்க் கோபால், (2018), கண்ணகி வழிபாடு பார்வையும் பதிவும், வணசிங்கா அச்சகம், மட்டக்களப்பு. பக்.128.
3. http//Kanaga-sritharan.tripod.com/kannaki.htm.
4. சி., கணேசையர் (1934), ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், சுன்னாகம், பக்.7.
5. C.W. Nicholas and S. Paranavidarana, History of Ceylon, p.79-80. G.C. Mendice, The Early History Of Ceylon, p.26.
6. ஆ., முத்துத்தம்பிப்பிள்ளை (1933), யாழ்ப்பாண சரித்திரம், மூன்றாம் பதிப்பு, யாழ்ப்பாணம், பக்.29.
7. சீர்கொண்ட மதுரைநகர் மானுமடந்தை யொடு
செம்பர் குடமொடு மாங்கனிதாகி
செழியனொடு வாதாடி சிலம்பினால் தீபரப்பி
வார்கொண்ட அனலைதீவினிலிருந்து
மைகொணாப்பதியில் வீழ்ந்து பேரிகெண்டப்
பதியை மிக்க தனதாக்கிப் பின்னரும் வாலபரால்
பேசும் தேற்றாவூர் வுரப்பளை அம்பாளை ஆரத்தி
திரிபாய் யோங்கு வற்றாப்பளையில் உப்புத்
தண்ணீரை விளக்கெண்ணெய் ஆக்கியே – எங்கெங்கும்
அங்கதாய் நின்ற இறைவி கண்ணகி அம்மனே.
(தொகுப்பு : வை.கனகரத்தினம்.)
8. க., சிற்றம்பலம், மு.கு.நூ, பக்.261.
9. த.க, சண்முகநாதப்பிள்ளை (1981), நயினை நாகபூசணி ஆலய வரலாறும் அருட்பா மாலையும், சாவகச்சேரி, பக்.28.
10. சி, சந்திரசேகரம் (2016), சிலப்பதிகாரப் புத்தாக்க வடிவங்களும் அவற்றின் புனைவுகளும், மொழிமுதல் ஆய்விதழ், கொழும்பு. பக்.84.
11. க., சிற்றம்பலம் (1992), யாழ்ப்பாண இராச்சியம், யாழ் பல்கலை வெளியீடு, திருநெல்வேலி, பக்.225.
12. இரா.வை., கனகரத்தினம், மு.கு.நூ, பக்.14.
13. எம்., சற்குணம் (1978), மட்டக்களப்பில் கண்ணகை அம்மன் வழிபாடு, மெய்கண்டான் அச்சகம், கொழும்பு, பக்.56.
14. க., சபாரத்தினம் (2017), ஆரையூர்க் கண்ணகை வரலாறும் வழிபாடும், மறுகா பதிப்பகம், ஆரையம்பதி, பக்.69.
15. இணைக்கட்டாடிமார் (1994), வசந்தன் கவிகள், செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய வரலாறு, மட்டக்களப்பு, பக்.211.
16. கண., ஆறுமுகம் (2008), கண்ணகி அம்மன் பத்ததியும் பாடல்களும், சண் அச்சகம், மட்டக்களப்பு, பக்.71-72.
17. க., மகேஸ்வரலிங்கம், மு.கு.நூ, பக்.32.
18. மேலது, பக்.33.
19. எவ்.எக்ஸ்.சி, நடராசா (1962), மட்டக்களப்பு மான்மியம், ஸ்ரன்காட் பிறின்டஸ், கொழும்பு, பக்.47-48.
20. க., சபாரெத்தினம் (2017), ஆரையூர்க் கண்ணகை வரலாறும் வழிபாடும், மறுகா பதிப்பகம், ஆரையம்பதி, பக்.10-11.
21. சி., பத்மநாதன், நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு, பக்.87.
22. வி.சீ., கந்தையா, மு.கு.நூ, பக்.155.
23. மேலது, பக்.157.
24. க., நாகேஸ்வரன் (2007), கண்ணகி வழிபாடும் இராஜேஸ்வரி வழிபாடும், லஷ்மி அச்சகம், கொழும்பு, பக்.44.



