19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வர்க்க இனத்துவ உணர்வு நிலை - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
27 நிமிட வாசிப்பு

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வர்க்க இனத்துவ உணர்வு நிலை – பகுதி 2

April 16, 2026 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன

இலங்கையில் அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் வரலாறு

அந்நியர் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இலங்கையில் மேற்கிளம்பின. அந்நியக் கிளர்ச்சிகள் சில சந்தர்ப்பங்களில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளாகவும் அமைந்தன. பௌத்த பிக்குகள் இத்தகைய கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கியதையும், அக்கிளர்ச்சிகளில் பங்கு பற்றியதையும் காண முடிகிறது. இதன் பின்னணியில் பௌத்த பிக்குகள் பௌத்த சமயத்தைத் தூய்மைப்படுத்துவதிலும், பௌத்த மறுமலர்ச்சியிலும் தமது பங்களிப்பை வழங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே முரண்பாடுகள் எழுந்தன. பிரித்தானிய ஆட்சியாளர்கள் கிறிஸ்தவர்களை ஆதரிப்பவர்களாகவும், மதமாற்றத்திற்குத் துணை செய்பவர்களாகவும் நோக்கப்பட்டனர். மிஷன் பாடசாலைகளில் படித்தவர்களான உயர்வகுப்பினர் ஆங்கிலக் கல்வியைப் பெற்றது மட்டுமல்லாது கிறிஸ்தவத்திற்கும் மதம் மாறினர். இலங்கையின் முன்னணியில் இருந்த அக்காலத்தின் உயர் குடும்பங்கள் பல பௌத்தத்தைக் கைவிட்டு கிறிஸ்தவத்திற்கு மாறிய குடும்பங்களாக இருந்தன. பழைய பணக்காரர்கள் மாத்திரமல்லாது புதுப்பணக்காரர்களும் (New Rich) கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினர். இந்நிலையில் புதுப்பணக்காரர்களில் ஒரு பிரிவினரான முதலாளிகள் பௌத்தத்தின் தீவிர பற்றாளர்களாக இருந்தனர். சாராயக் குத்தகை வர்த்தகம், காரியச் சுரங்கத் தொழில், தென்னை, கறுவா, ரப்பர் ஆகிய வர்த்தகப் பயிர்ச்செய்கை போன்றவற்றில் முதலீடு செய்து பெரும் செல்வத்தை இவர்களால் தேட முடிந்தது. செல்வமும் சொத்துகளும், புதிதாகக் கிடைத்த சமூக அந்தஸ்தும் இருந்த போதும் அரசாங்க சட்ட சபையிலும், அரசாங்க நிர்வாகத்திலும் தமக்குப் பிரதிநிதித்துவம் இல்லையே என்ற மனக்குறை புதுப்பணக்கார முதலாளிகளிடம் இருந்தது. அரசாங்க உயர் பதவிகளில் கிறிஸ்தவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. ஆனால், பௌத்தர்கள் புறந்தள்ளப்பட்டனர். சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை எடுத்து நோக்கின் 1833 முதல் 1912 வரை புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களான நபர்கள், ஒரே ஒரு குடும்பத்தில் இருந்து (ஒபயசேகர – டயஸ் பண்டாரநாயக்க குடும்பம்) தொடர்ச்சியாகச் சட்டசபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர் (விதிவிலக்காக ஒரே ஒரு தடவை மட்டும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர் அல்லாத பௌத்த சிங்களவர் இக்காலத்தில் சட்ட சபைக்கு நியமிக்கப்பட்டார்). இக்காரணத்தால் பௌத்த முதலாளிகளும், பௌத்த குட்டி முதலாளிப் பிரிவினரும் தாம் உரிமைகள் மறுக்கப்பட்ட பிரிவினராக இருப்பதாக உணர்ந்தனர். சிங்கள – பௌத்தர்கள் அரசியலிலும் பண்பாட்டிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட பிரிவினராக உள்ளனர் என்ற கருத்து அவர்கள் மனதில் வலுப்பெற்றது.

சிங்கள பௌத்தர்களின் எதிர்ப்புணர்வு பண்பாடு, அரசியல் என்ற இரு தளங்களில் வெளிப்பட்டது. பண்பாட்டுத் தளத்தில் வெளிப்பட்ட எதிர்ப்புணர்வு அரசாங்கத்திற்கு எதிரானதாக இருந்தது. அரசாங்கம் கிறிஸ்தவ மிஷனரிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து வந்தது; இதனால் சிங்கள அரசர்கள் காலத்தில் பௌத்தத்திற்குக் கிடைத்து வந்த அரச ஆதரவு இல்லாமல் பௌத்தத்தின் வளர்ச்சி தடைப்படுகிறது என பௌத்தர்கள் மனம் குமுறும் நிலை ஏற்பட்டிருந்தது. பௌத்தத்திற்கு அரச ஆதரவு இல்லாமல் போனபடியால் பௌத்த கோவில்களுக்கு மக்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதற்கும், நிதி உதவி வழங்குவதற்கும் செல்வந்தர்களான சிங்கள – பௌத்த முதலாளி வகுப்பினர் முன்வந்தனர். அவர்கள் இதற்கான நிறுவன அமைப்புகளை உருவாக்கிச் செயற்பட்டனர். அரசாங்கத்திற்கு எதிரான பௌத்தர்களின் இயக்கம் வலுப்பெறுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அரசாங்கம் பௌத்த சமயக் கல்விக்கு பாடசாலை முறைமையில் இடமளிக்காமல் அக்கல்வியைப் புறக்கணித்தமை ஆகும். கல்வித்துறையில் கிறிஸ்தவத்தின் மேலாதிக்கத்தை அரசாங்கம் அனுமதித்து வந்தது. அரசாங்கம் சாராய விற்பனை, வெளிநாட்டுக் குடிவகைகளின் இறக்குமதி மற்றும் விற்பனை தொடர்பாகக் கடைப்பிடித்த கொள்கை காரணமாக இலங்கையில் பல சமூகப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன எனவும், ஆங்கிலமயப்பட்ட கிறிஸ்தவ உயர்வகுப்பினர் அந்நியமான சமூக மதிப்பீடுகளை (Social Values) மக்களிடையே பரப்பிச் சமூகச் சீரழிவுகளுக்கு வழிவகுத்துள்ளனர் எனவும் பௌத்த சீர்திருத்தவாதிகளால் குற்றம் சாட்டப்பட்டது. பௌத்த சீர்திருத்தவாதிகளின் அரசாங்க எதிர்ப்புக்கு இக்காலத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளிலிருந்து பகுத்தறிவுவாதிகளிடமிருந்தும், சுதந்திரச் சிந்தனையாளர்களிடமிருந்தும் (Rationalist and Freethinkers) ஆதரவு கிடைத்தது. அவ்வாறான சிந்தனையுடையவர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரான கொள்கையுடையவர்களாய் இருந்தனர். அமெரிக்காவின் தியோசொபிக்கல் சபை (Theosophical Society) மனிதர்களிடையே சகோதரத்துவம் (Brotherhood of Man) என்ற கொள்கையை வலியுறுத்திய அமைப்பாகும். இவ்வமைப்பு கிறிஸ்தவத்தை எதிர்த்ததோடு கிழக்கத்தைய சமயங்களான இந்துமதம், பௌத்தம் ஆகியவற்றிற்கு ஆதரவு வழங்கிச் செயற்பட்டது. தியோசொபிக்கல் சபையைச் சேர்ந்த கேர்ணல் ஒல்கொட் (Colonel Olcott), ஹெலனா பிளவாட்ஸ்கி (Helena Blavatsky) என்னும் இருவர் 1880 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்தனர். அவர்களால் இலங்கையில் தொடரப்பட்ட நடவடிக்கைகள், பௌத்த சமய சீர்திருத்த இயக்கத்திற்கு பேரூக்கம் அளிப்பதாக அமைந்தது. குறிப்பாக பௌத்த பாடசாலைகளை அமைக்கும் இயக்கத்தை ஒல்கொட் ஆரம்பித்து வைத்து பௌத்த கல்விக்கு உதவினார். குணானந்த தேரர், ஹிக்கடுவே சுமங்கல தேரர் என்னும் இரு பௌத்த துறவிகளாலும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்த பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் தியோசொபிஸ்டுகளின் வருகையால் செயல்துடிப்புடையதாக மாறியது. ஒழுங்கமைத்தல், நிர்வாகம், பிரசார நடவடிக்கைகள் என்பனவற்றில் நிபுணத்துவம் மிக்கவரான கேர்ணல் ஒல்கொட் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்திற்கு செயல் வேகத்தை (Dynamism) வழங்கினார். புதுப்பணக்காரர்களான (New Rich) பௌத்தர்கள் பலரும் பௌத்த இயக்கத்திற்கு பெருந்தொகை நிதி உதவியை வழங்கி ஆதரித்தனர். நிதி உதவி வழங்கி ஆதரித்த புதுப்பணக்காரர்களில் முக்கியமானவர்கள் சிலரது பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தின் முன்னணி சாராயக் குத்தகை வர்த்தகரான தோமஸ் டி சில்வா அமரசூரிய.

காலி மாவட்டத்தைச் சேர்ந்த சைமன் பெரேரா அபயவர்த்தன. இவர் கோப்பி, கறுவாத் தோட்டங்களின் உடைமையாளராவார்.

பாணந்துறையின் பிரபல சாராயக் குத்தகை வர்த்தகர்களான பலர். இவர்களுள் P. ஜெராமியஸ் டயஸ், M. கொர்ணலிஸ் பெரேரா, M. மத்தேஸ் சல்காடோ, அந்திரிஸ் பெரேரா, P. டொமிங்கோ டயஸ் என்போர் குறிப்பிடத்தக்கோராவர். 

சிங்கள – பௌத்த வர்த்தகர்களான C.H. டொன் கறோலிஸ், N.S. பெர்ணான்டோ, D.D. பெட்ரிஸ், W.E. பஸ்ரியன், R.A. மிராண்டோ, அன்டிரிஸ் மென்டிஸ் போன்ற பலர். 

மேலே குறிப்பிட்டவர்கள் போன்ற செல்வந்தர்கள் நிதி உதவியை வழங்கினர். இன்னொரு புறத்தில் சிங்கள – பௌத்த அறிவாளிகள் பலர் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளர்களாக விளங்கினர். அவர்களுள் அநகாரிக தர்மபால, C. டொன் பஸ்ரியன், C. மாரட்டினஸ் பெரேரா, வலிசிங்க ஹரிசந்திர என்போர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் துண்டுப் பிரசுரங்களை எழுதி வெளியிட்டனர். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளை எழுதினர். மதுவிலக்கு அமைப்புகள், பௌத்த சமய அமைப்புகளும் நடத்திய பிரசாரக் கூட்டங்களில் மேற்குறித்தோர் உரையாற்றி அவ்வமைப்புகளின் சமய, சமூகப்பணிகளுக்கு உதவினர்.

பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் வளர்ச்சியுற்ற காலத்தில் சிங்கள – பௌத்த முதலாளி வகுப்பினரிடையே சிங்கள இனவாதக் கருத்துகள் தோன்றின. அவர்கள் அவற்றை குறுகிய மதவாத, இனவாதப் பாதையில் இட்டுச் சென்றனர். N.S. பெர்ணாண்டோ என்பவர் 1875 ஆம் ஆண்டில் ஒரு சின்னக் கடை ஒன்றை ஆரம்பித்து வியாபாரம் செய்யத் தொடங்கி, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அச்சிடுவதற்கான காகிதத்தையும் எழுதுவதற்கான உபகரணங்களையும் இறக்குமதி செய்யும் வர்த்தகராக உயர்ச்சி பெற்றார். இத்துறையில் இலங்கையின் முதலாவது இறக்குமதியாளர் என்ற சிறப்பும் இவருக்கு உள்ளது. இவர் தனது வியாபார நிலையத்தில் பௌத்தர்களை மட்டுமே வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். அவர் பௌத்த மதப்பற்றாளராகவும், பௌத்த சமயச் சடங்குகளை நடத்துவதற்கு நிதி உதவி வழங்குபவராகவும் இருந்தார். அவர் அனுராதபுரத்தில் ஒரு ‘யாத்திரிகள் விடுதியை’ அமைப்பதற்கு நிதி உதவினார். அவர் வர்த்தகர்களுக்கான சஞ்சிகையொன்றையும் ‘வெலந்த மித்திரயா’ (வணிக நண்பன்) என்ற பெயரில் ஆரம்பித்து நடத்தி வந்தார்; அப்பத்திரிகையில் ‘அராபிய இரவுகள்’ கதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.

D.D. பெட்ரிஸ் என்னும் சிங்கள வர்த்தகர் புறக்கோட்டையில் துணிக்கடையொன்றை நடத்திவந்தார். அவர் பிரதானமாக இந்தியாவில் இருந்து புடவைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்தார். பௌத்தர்களான பெண்கள் மேற்கத்திய பாணி உடைகளை அணியக் கூடாதெனப் பத்திரிகைகள் மூலம் பிரசாரம் செய்ததோடு பௌத்தர்களான பெண்களின் தேசிய உடையாக புடவையை அணிவதை ஊக்குவித்தார். 1915 ஆம் ஆண்டின் முஸ்லிம்களுக்கு எதிரான கலகத்தின் போது N.S. பெர்ணாண்டோ, பெட்ரிஸ் ஆகிய இருவரதும் மகன்களுக்கு, புறக்கோட்டைப் பகுதியின் முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது தாக்குதல் தொடங்குவதற்குச் சனக்கூட்டத்தை ஏவிவிட்டு கலகத்தைத் தூண்டி வன்முறைத் தாக்குதல்களைச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் புறக்கோட்டை (Pettah) ஐரோப்பியர் அல்லாத பிற இனத்தவர்களின் வியாபார நிலையங்கள் உள்ள பகுதியாக இருந்தது. பௌத்தர்களான வர்த்தகர்கள் கோவில்களுக்கும், பாடசாலைகளுக்கும் தாராளமாக நிதி உதவி செய்தனர். மதுவிலக்குச் சங்கங்களுக்கு நிதி உதவி வழங்கினர். அக்காலத்தில் பௌத்த – சிங்களப் பத்திரிகைகள் பௌத்தர்களான வர்த்தகர்களுக்கு ஆதரவு கொடுத்துப் பிரசாரம் செய்தன. 1888 ஆம் ஆண்டளவில், 1915 இன் முஸ்லிம் எதிர்ப்புக் கலகத்திற்கு முன்பே, ‘சரசவி சண்டிறச’ (Sarasavi Sandrasa) என்னும் பத்திரிகை ‘அந்நிய சுரண்டல்காரர்கள்’ என சிறுபான்மை எதிர்ப்பு பிரசாரத்தைத் தொடங்கியிருந்தது. முஸ்லிம்களின் கடைகளையும், உணவகங்களையும் சிங்களவர்கள் பகிஷ்கரிக்க வேண்டும் எனப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியான இப்பிரசாரம் இறுதியில் முஸ்லிம் எதிர்ப்புக் கலகத்திற்குக் காரணமாயிற்று.

அந்நிய வர்த்தகர்களுக்கு எதிரான பத்திரிகைக் கட்டுரைகளை பௌத்த பிக்குகளும் பௌத்த இயக்கத்தின் முன்னணி ஆளுமைகளான பலரும் எழுதிவந்தனர். உதாரணமாக அநகாரிக தர்மபால அந்நிய வர்த்தகர்களுக்கு எதிரான கண்டனங்களை அடிக்கடி வெளியிட்டார். சிங்கள வர்த்தகர்கள் நேரிய, நீதியான வழிகளில் வியாபாரம் செய்து பொருள் ஈட்டுவதாக புகழ்ந்துரைத்த தர்மபால, தேசப்பற்றுடையவர்களாய் நாட்டின் முன்னேற்றத்திற்கான காரியங்களுக்கு நிதி உதவ வேண்டுமென அவ்வர்த்தகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பம்பாய் நகரத்து பெரு வணிகர்களும், தென்னிந்தியாவின் வியாபாரிகளும் இலங்கையின் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக தர்மபால கண்டனம் செய்தார்.

பௌத்த மறுமலர்ச்சிக் கருத்தியலும் இனவாதமும்

இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் அரசியல் நோக்கங்கள் சிலவற்றைக் கொண்ட ஒரு கிளர்ச்சி இயக்கம் (Agitational Movement) என்பதில் ஐயமில்லை. இவ்வியக்கம் முழுமையான அரசியல் இயக்கமாக வளர்ச்சியுறாத பகுதி அரசியல் இயக்கம் (Semi – Political Movement) ஆகவும் காணப்பட்டது. காலனிய சமூகத்தில் கிறிஸ்தவர்கள் அனுபவித்த சலுகைகளை இவ்வியக்கம் சவாலுக்கு உட்படுத்தியது. கிறிஸ்தவ மிஷனரிகளின் கல்வித்திட்டத்தை பௌத்த மறுமலர்ச்சியாளர்கள் எதிர்த்ததோடு பௌத்த பாடசாலைகளுக்குப் பொருத்தமான கல்வித்திட்டம் தேவை என வலியுறுத்தினர். குடிப்பழக்கம் போன்ற சமூகத் தீங்குகளுக்கு அந்நியர் ஆட்சியே காரணம் எனக் கூறினர். பண்டைக்காலத்தின் சிங்களப் பண்பாடு அற ஒழுக்கம் சார்ந்ததெனவும், காலனிய ஆட்சியில் பண்பாட்டுச் சீரழிவு ஏற்பட்டதெனவும் கூறினர்.

பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அநகாரிக தர்மபாலவின் பிரசாரம் 1903 இல் அனுராதபுர நகரத்தைப் புனித நகரெனக் கூறி, அங்கிருந்த இறைச்சிக்கடைகள், சாராயத்தவறணைகள் முதலியவற்றையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் அவ்விடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடப் பௌத்தர்களைத் தூண்டியது. அந்நிய ஆட்சியை அகற்றுவதற்குப் பதில் மறுமலர்ச்சியாளர்கள் சிறுபான்மையினரது வர்த்தக முயற்சிகளுக்கும், மதத்திற்கும் எதிராகச் செயற்பட்டதை 1903 இன் அனுராதபுரச் சம்பவங்கள் எடுத்துக்காட்டின. 1912 ஆம் ஆண்டிலும் மதுவிலக்கு இயக்கம் ஊடாக வெளிப்பட்ட எதிர்ப்பு இத்தகைய அரசியல் உள்ளடக்கத்தை கொண்ட சமயச் சார்புடைய கிளர்ச்சி நடவடிக்கையாகும்.

இவ்வியக்கங்களைத் தலைமை வகித்து நடத்திய சுதேச முதலாளித்துவ வகுப்பிடம் காலனிய அரசுக்கு எதிரான தேசிய விடுதலை இயக்கத்தை ஒழுங்கமைக்கும் துணிச்சல் இருக்கவில்லை. பிரதான பிரச்சினைகளை விட்டு, முக்கியமற்ற இரண்டாம்பட்ச பிரச்சினைகளை (Marginal Issues) முன்வைத்து அரசாங்க அதிகாரிகளைச் சீண்டுவதே இவர்களது வேலையாக இருந்தது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் விடுதலை இயக்கம் இலங்கையில் தோன்றவில்லை.

இலங்கையில் தேசிய விடுதலை இயக்கம் தோற்றம் பெறாமைக்குரிய காரணம் ஏகாதிபத்தியத்தோடு பொருளாதார முரண்பாடுகளை உடைய தேசிய முதலாளி வர்க்கம் இலங்கையில் உருவாக்கம் பெறாமையேயாகும். இலங்கையின் பழைய நில உடைமை குடும்பங்கள் (Old Land Owning Families) பிரித்தானியாவின் பக்கம் சார்புடையனவாக, காலனிய அரசாங்கத்திற்குத் தமது உறுதியான ஆதரவை வழங்கின. முதலாளி வர்க்கத்தின் இன்னொரு பிரிவான புதிய பணக்காரர்களான முதலாளிகள் தமது வகுப்பிற்கான சலுகைகளைப் பிரித்தானியரிடம் முறையீடு செய்து பெற்றுக் கொள்வதிலேயே குறியாக இருந்தனர். பிரித்தானிய காலனிய அரசாங்கத்தோடு பகைப்பதற்கு இப்பிரிவினர் தயாராக இருக்கவில்லை. 1912க்கும் 1923க்கும் இடைப்பட்ட காலத்தின் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் பற்றியும் இப்பிரிவினர் அக்கறை செலுத்தவில்லை.

இக்காரணங்களால் இலங்கையின் முதலாளி வர்க்கத்தால் அந்நிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. தங்களை அரசாங்கத்திற்கு விசுவாசமற்றவர்கள் என்று கருதிவிடக்கூடாது என்ற சிந்தனை உடையவர்களாய் தமது நடவடிக்கைகளை இவ்வகுப்பினர் மிகுந்த அவதானத்துடன் மேற்கொண்டனர். இவ்வகுப்பினரின் நடவடிக்கைகளை கூர்மையாக அவதானித்து அரசாங்கத்திற்குப் புலனாய்வு அறிக்கைகளை அனுப்பிக் கொண்டிருந்த பொலிஸ் மா அதிபர் ஹெர்பட் டவ்பிக்கின் (Herbert Dowbiggin) அவர்களின் அறிக்கைகள் மூலம் இவ்வகுப்பினரின் மனப்பாங்கை அறிய முடிகிறது. பலவீனமான இந்த வகுப்பிடம் தேசிய உணர்வை (National Consciousness) கிளர்ந்தெழச் செய்யக்கூடிய கருத்தியல் இருக்கவில்லை. அவர்களுக்கு பகுத்தறிவு நோக்கில் ஆராயும் திறன் இருக்கவில்லை. தாராள மனப்பான்மைக் கருத்துகளால் கவரப்பட்டவர்களாக இவர்கள் இருக்கவில்லை. இவர்களின் சமூக அரசியல் சிந்தனை மேலோட்டமானது.

வர்த்தக மூலதனம் பொருட்களை வாங்கி விற்கும் வர்த்தக நடவடிக்கைகளில் கவனம் குவிப்பதாக இருக்கும். அம்மூலதனம் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் (Science and Technology) பிரயோகிக்கும் உற்பத்திச் செயல்முறையில் அக்கறை கொள்வதில்லை. வர்த்தக மூலதனத்தின் இந்த இயல்பு (The Nature of Merchant Capital) காரணமாக வர்க்க முதலாளி வகுப்பிடம் தேசியவாத உணர்வு தோன்றுவதில்லை; மேற்கு நாட்டில் தோன்றிய பகுத்தறிவுவாதம், தாராளவாதம் (Liberalism) போன்ற சிந்தனைகள் இப்பிரிவினரைக் கவர்வதில்லை.

வர்த்தக முதலாளித்துவ வகுப்பின் இந்த இயல்புகள் காரணமாக அவ்வகுப்பினரிடம் பழமைவாதக் கருத்துகளும், மூடநம்பிக்கைகளும் வேரூன்றியிருந்தன. இதனால் அந்நியர் ஆட்சிக்கு எதிராகவும், அந்நிய மூலதனத்திற்கு எதிராகவும் இலங்கையரின் தேசியவாதம் (Srilankan Nationalism) வளர்வதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. ஆகையால் மரபு வழிச்சமூகத்தில் முக்கியம் பெற்றிருந்த சமயம், சாதி, இனக்குழுமம் (Ethnicity) என்பனவற்றின் அடிப்படையிலான இனவாத உணர்வுகள் மேலோங்கின.

தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி அனைத்து மக்களையும் அணிதிரட்டி தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய பலம்வாய்ந்த தேசிய முதலாளி வகுப்பு இலங்கையில் உருவாகவில்லை. பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் இறுதியில் இனவாதம் (Communalism), சாதிவாதம் (Casteism) என்பனவற்றை தழுவிக் கொண்டு சீரழிவுப் பாதையில் சென்றது. அதனிடம் பின்வரும் கருத்தியல் போக்குகள் முனைப்பாக வெளிப்பட்டன.

  • வரலாற்றைத் திரித்தல் (Distortion of History)
  • தோற்ற மூலப் புனைவுகளை மீள் உயிர்ப்பித்தல் (Revival of Origin Myths)
  • வீரர்கள் பற்றிய புனைவுகள் (Hero Myths)
  • பண்டைய ‘பொற்காலம்’ (Past ‘Golden Age’)

பௌத்த மறுமலர்ச்சிக் (Buddhist Revival) கருத்தியலில் ஒன்றோடொன்று தொடர்புடைய இனவாத – சமயப் புனைவுகள் கலப்புற்றிருந்தன. இவற்றின் கலவையான மூன்று முக்கிய கருத்தினங்கள் சிங்கள – பௌத்தர்களிடையே இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்தன.

அ) ‘ஆரிய இனம்’ என்ற புனைவு (The Myth of the ‘Aryan Race’) – இப்புனைவின் அடிப்படையில் சிங்கள மொழியைப் பேசும் மக்கள் ‘ஆரிய இனத்தவர்’ (Aryan Race) என்று நம்புதல்.

ஆ) ‘சிஹலதீப’ (Sihaladeepa) என்னும் எண்ணக்கரு – விஜயன் இலங்கைத் தீவில் வந்து இறங்கி, சிங்கள ‘இனத்தை’ இத்தீவிற்கு உரியவர்களாக்கினான் என்னும் புனைவு.

இ) ‘தம்மதீப’ (Dhammadipa) என்னும் எண்ணக்கரு (அதாவது இலங்கை புத்த தம்மத்திற்குரிய தீவு) – இந்த எண்ணக்கரு கௌதம புத்தர் இலங்கைக்கு மூன்று தடவை வருகை தந்தார்; அவர் தன் வருகையின் மூலம் இலங்கைக்கும் பௌத்த தம்மத்திற்கும் பிரிக்க முடியாத விசேட உறவை உருவாக்கினார் என்ற புனைவு.

மேலே குறிப்பிட்ட புனைவுகளில் ‘ஆரிய இனம்’ என்ற புனைவைத் தொடக்கி வைத்த மேற்கு நாட்டவரின் பங்களிப்பு குறிப்பிடப்பட வேண்டியது. 19 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியைப் படித்து ஆராயத் தொடங்கிய மேற்குநாட்டவர்களான ‘ஒரியன்டலிஸ்ட்’ எனப்படும் கீழ்த்திசைவாதிகள் சமஸ்கிருதத்திற்கு ஐரோப்பிய மொழிகளோடு உள்ள உறவு பற்றிக் குறிப்பிட்டனர். அவர்கள் ஐரோப்பிய மொழிகளைப் பேசுவோர் பொதுவான ஓர் இனத்தில் இருந்து தோன்றியவர்கள் எனக் கருதினர். அந்தப் பொதுவான இனத்தை ‘ஆரிய இனம்’ (Aryan Race) எனவும் தாம் ஆரிய இனத்தின் வழித்தோன்றல் என்றும் கூறினர். மொழியியல் சார்ந்த கண்டுப்பிடிப்பு (Linguistic Discovery) இவ்வாறான இனவாதக் கோட்பாட்டிற்கு (Racial Theory) வித்திட்டது.

ரொமிலா தாப்பர் குறிப்பிட்டிருப்பது போல் ஐரோப்பிய மொழிகளைப் பேசுவோர் ஒன்றோடொன்று தொடர்புடைய மொழிகளைப் பேசும் மக்கள் என்பதே உண்மையாக இருக்கும்போது, அதனைத் திரிபுபடுத்தி இனத்தையும் (Race) மொழியையும் இணைத்துக் காணும் இனவாதக் கோட்பாடு 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அரசியல் சிந்தனையாளர்களிடையே செல்வாக்குப் பெற்றது. பிரான்சில் கொபினோவும் (Gobineau), இங்கிலாந்தில் சேம்பர்லின் (Chamberlain), ஜேர்மனியில் ஷோப்பன்ஹவர் (Schopenhauer) என்பவர்களும் இனவாதக் கருத்தியலின் உருவாக்கத்திற்கு பங்களிப்பை நல்கினர். இதன் விளைவாக ‘இனத்தூய்மை’ (Racial Purity) உடைய ‘மேன்மை மிகு ஆரிய இனம்’ என்னும் புனைவு உருவாக்கப்பட்டு பின்னர் அது பாசிசக் கோட்பாடாக (Fascism) வளர்ச்சியுற்றது.

இந்தியாவின் இந்து மறுமலர்ச்சியாளர்கள் ‘ஆரிய இனம்’ என்னும் இப்புனைவை மிகுந்த புளகாங்கிதத்துடன் ஏற்றுக் கொண்டதோடு கீழ்த்திசைவாதத்தின் ‘பண்டைய இந்தியாவின் பொற்காலம்’ (Golden Age) என்ற கருத்தையும் உள்வாங்கிக் கொண்டனர். இந்திய மரபின் ஆணிவேராக ‘வேத மரபு’ (Vedic Tradition) உள்ளது எனவும் கூறினர். ஆரியர்கள் இயற்கையால் ‘தேர்வு செய்யப்பட்ட மக்கள்’ என்றும், இந்தியப் பண்பாட்டின் தோற்ற மூலமாக ஆரியர்கள் விளங்கினர் எனவும், இந்தியாவின் ஏனைய மக்களினங்களை ‘நாகரிகப்படுத்தியோர்’ ஆரியர்களே என்றும் கூறலாயினர்.

19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டிலும் பரவலாகப் பேசப்பட்ட இந்த ‘ஆரிய இனம்’ என்னும் புனைவை இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியாளர்களும் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக் கொண்டனர். இலங்கையில் அக்காலத்தில் வலுவான தேசியவாதக் கருத்தியல் ஒன்று உருவாக்கம் பெறாத பின்னணியில் ‘ஆரிய இனம்’ என்னும் கருத்தியல் செல்வாக்குப் பெற்றதில் வியப்பில்லை எனலாம். இனத்தூய்மையையும் இனமேன்மையையும் சிங்கள இனத்திற்கு உரித்தாக்குவதும், கற்பனையான இலட்சியப்படுத்தப்பட்ட, அமைதியான மகிழ்ச்சியான கடந்தகாலத்தை (Idyllic Past) கொண்டிருந்த இனம் என்ற பொய்ப்புனைவை வழங்குவதுமான இக்கருத்து இலங்கையில் செல்வாக்குப் பெற்றது.

சிங்களவர்களை தேர்வு செய்யப்பட்ட மக்கள் (Chosen People) எனவும், அம்மக்கள் பௌத்தத்தின் காவலர்களாகப் புத்தராலேயே தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் எனவும் அநகாரிக தர்மபால நம்பினார். அவர் சிங்களவர்களின் நாடி நரம்புகளில் ஓடும் இரத்தத்தில் காட்டு மிராண்டிகளின் இரத்தத்தின் கலப்பு (Savage Blood) இல்லை எனவும், சிங்கள இனம் ஆரிய நாகரிகத்தின் பிரதிநிதிகளாக இருந்து வருகின்றது என்றும் தனது எழுத்துகளில் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தார்.

இலங்கையின் வம்சபுராணக் கதைகளின்படி, வங்காளத்தின் ‘சிங்கபுர’ என்ற இடத்தில் இருந்து வந்த விஜய என்னும் இளவரசனின் புனைவோடு ஆரியர் என்னும் கருத்து தொடர்புடையதாக உள்ளது. இன்று வங்காளிகள் தம்மை ஆரிய இனத்தினர் என்று கூறுவதை மறுத்துரைக்கும் நிலையில், வங்காளத்தில் இருந்து வந்த ஆரியரின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து விநோதமான ஒரு கற்பிதமாகும்.

‘தம்மதீப’ (Dhammadipa) என்னும் எண்ணக்கரு சிங்களவருக்கான சிறப்பு வகிபாகத்தை வலியுறுத்துகிறது. புத்தர் இலங்கைக்கு மூன்று தடவைகள் வருகை தந்தார்; அவர் இறப்பதற்கு முன்னர் படுக்கையில் இருந்தவாறு ‘சக்கர’ (Sakra) என்னும் தெய்வத்தை அழைத்து இலங்கைக்குச் செல்லும் விஜயனைப் பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் என்றும், இலங்கைத்தீவில் 5000 ஆண்டுகளுக்கு பௌத்தம் செழித்து ஓங்கும் என்றும் கூறியதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. மகாவம்சத்தின் இப்புராணப் புனைவில் மூன்று கருத்தினங்கள் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம்.

அ) ஆரிய இனம் என்ற கருத்து

ஆ) விஜயன் என்ற புனைவு

இ) சிங்கள ‘இனம்’ பௌத்தத்தினைப் பாதுகாக்கும் தெய்வீக ஆணையைப் பெற்ற இனம் எனும் கருத்து. 

மேற்படி மூன்று கருத்தினங்களின் சேர்க்கையாக அமைந்த இனவாதக் கருத்தியல் இலங்கையின் அரசியலின் போக்கில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியது. 

இனவாதக் கருத்தியலின் சமூக அரசியல் விளைவுகள்

மேற்குறித்த இனவாதக் கருத்தியலை ஏற்றுக்கொண்டு அதனால் ஆதர்சம் பெற்ற சமூக வர்க்கங்களைப் பற்றி மேலே குறிப்பிட்டோம். இவ்வாறாக இனவாதக் கருத்தியல் புனைவை (Mythology) ஏற்றுக்கொண்டதன் சமூக அரசியல் விளைவுகள் யாவை என்பதை அடுத்து நோக்குவோம்.

முதலாவதாக மேற்குறிப்பிட்ட புனைவுகளை உள்ளடக்கிய சிங்கள பௌத்தக் கருத்தியல் பிற எல்லா இனக்குழுமங்களையும் விட இலங்கைக்கு முதலில் வந்து சேர்ந்த நாகரிகமுடைய குடியேற்றவாசிகள் (Civilised Inhabitants) சிங்களவர்களே என்றும், ஆகையால் இந்த நாடு தமக்கே உரித்துடையது என்றும் கூறும் நிலை ஏற்பட்டது. ‘நாட்டின் சட்டமுறையான உடமையாளர்கள்’ (Legitimate Owners of the Country) எனக் கருதும் இக்கருத்தின் விளைவு பாரதூரமானது. பிந்திவந்த குடியேறிகள் அனைவரும் இக்கருத்தின்படி ‘அந்நியர்கள்’ (Foreigners) எனக் கருதப்பட்டனர்.

இக்கருத்தின் தர்க்க ரீதியான முடிவாக ‘சிங்களவர்களின் நாடு’ (Land of the Sinhalese) என்ற எண்ணக்கரு உருவானது. ‘சிங்களவர் அல்லாதோர்’ (Non – Sinhalese) இங்கே வந்து தங்கியிருப்பதற்கு எஜமான் இனமான சிங்கள இனம் அனுமதித்துள்ளது. இது அவ்வினத்தின் கருணையின் பயனாகக் கிடைத்த ஒரு சலுகையாகும். அச்சிங்கள இனத்திற்கு இந்நாட்டினை உரிமை கொள்வதற்கான முந்திய உரிமை (Prior Rights of Possession) உள்ளது. இந்த உரிமை ‘மண்ணின் மைந்தர்’களின் (பூமிபுத்திர – Sons of the Soil) பிரத்தியேக தனியுரிமை (Exclusive Right) ஆகும்.

இப் ‘பூமிபுத்திர கொள்கையை’ அநகாரிக தர்மபால 1922 இல் எழுதிய குறிப்பு ஒன்று தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

‘இலங்கைப் புகையிரதப் பகுதியின் நிர்வாக அறிக்கையில் (Administration Report) அப்பகுதியின் பொது முகாமையாளர் ‘தமிழர்களும், கொச்சின்களும், ஹம்பன்காறயாக்களும்’ பெருந்தொகையில் வேலை செய்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இது இந்த நாட்டின் வளத்திற்கு ஆகக்கூடிய பெரும்பங்கை (Largest Share) வழங்கும் மண்ணின் புதல்வர்களான சிங்களவர்களுக்குச் செய்யப்படும் அநீதியான, தீங்கான நடவடிக்கையாகும்.’

சுருங்கக்கூறின் இலங்கையின் சட்டமுறையான உரித்தாளர்கள் சிங்களவர் மட்டுமே என்பதை இக்கருத்தியல் வலியுறுத்துகிறது.

பௌத்தம் இலங்கைத் தீவின் சமயமென்றும், இத்தீவை ‘தம்மதீப’ (Dhammadipa) என்றும் கூறும் இன்னொரு கருத்தியல் முற்கூறிய கருத்தியலை வலியுறுத்தும் துணைக்கருத்தியலாக அமைந்துள்ளது. ஏனைய சமயங்களைப் பின்பற்றுவோர் தொல்லை கொடுக்காது, நல்ல முறையில் ஒழுக வேண்டும் (Good Behaviour) என்ற நிபந்தனையின்படி இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் பிற சமயத்தவர்கள் இனம் என்ற அடிப்படையில் தாழ்ந்த நிலையினர்; அவர்களின் சமயங்களும் சமயம் என்ற வகையில் தரம் குறைந்தவை (Racially and Religiously Inferior).

அநகாரிக தர்மபால 1921 ஆம் ஆண்டில் இலங்கையின் பிற சமயத்தவர்களை கீழ்ப்பட்ட இனங்களின் அஞ்ஞானிகள் (Infidels of Degraded Race) என்று குறிப்பிட்டார். இவ்வாறு தமிழர், முஸ்லிம்கள், ஐரோப்பியர்கள் ஆகிய இனத்தவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் சிங்கள பௌத்த இனவாதத்தின் (Sinhala Buddhist Chauvinism) ஊற்றாக அமைவது என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ‘பொற்காலம்’ (Golden Age) என்ற கருத்தைச் சார்ந்த பொய்ப்புனைவுகளே இக்கருத்தியலின் ஊற்றாகும் எனலாம்.

சிங்கள – பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தோடு பின்னிப் பிணைந்தவையாக இப்பொய்ப்புனைவுகள் அமைந்தன. அக்காலத்தில் எழுதப்பட்ட நாவல்களிலும், எழுதி மேடையேற்றப்பட்ட நாடகங்களிலும், அக்காலத்தின் பத்திரிகையாளர்களின் எழுத்துகளிலும் இப்பொய்ப்புனைவுகள் வெளிப்படுத்தப்பட்டன; மக்களிடம் பரப்பப்பட்டன. எடுத்துக்காட்டாக பியதாச சிறிசேனவின் நாவல்களைக் குறிப்பிடலாம். அவரது நாவல்களின் கதாநாயகர்களும் கதாநாயகிகளும் பௌத்த சமயப் பற்றாளர்களாகவும், சிங்களவர் என்ற பெருமிதம் உடையவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பர். அந்நாவல்களில் எல்லாச் சிறுபான்மை இனத்தவர்களும் வெறுப்புக்கும் கண்டனத்திற்கும் உரியவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பர்.

பியதாச சிறிசேன ‘சிங்கள ஜாதிய’ என்ற பத்திரிகையின் ஆசிரியராவார். அவர் 1909 ஆம் ஆண்டில் அப்பத்திரிகையில் கரையோர மூர்கள், கொச்சின்காரர்கள், அந்நியர்கள் ஆகியோரின் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம்; அவற்றைப் பகிஷ்கரியுங்கள் எனச் சிங்களவர்களைக் கேட்டுக் கொண்டார். இதேபோன்று W.A. de சில்வாவும் தனது நாவல்களில் தமிழர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை உண்டாக்கும் கருத்துகளை எவ்வித தயக்கமும் இன்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஜோன் டி. சில்வா மேடையேற்றிய நாடகங்கள் பல பண்டைய சிங்கள இராச்சியங்களின் அரசர்களைப் புகழ்ந்து பாராட்டும் முறையில் அமைந்தன. கடந்தகாலத்தின் பெருமையையும் இற்றை நாளில் சிங்கள இனத்தின் வீழ்ச்சியையும் எடுத்துக்காட்டிய அவரது நாடகங்கள், பண்டைய காலத்து உயர் விழுமியங்களையும் மரபுகளையும் மீண்டும் மலரச் செய்ய வேண்டும் என்ற உணர்வைச் சிங்களவர் மனதில் ஊட்டுவனவாக அமைந்தன.

இலங்கையில் அக்காலத்தில் வர்த்தகம், தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட கடும் போட்டிச் சூழ்நிலையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் மீது வெறுப்புணர்வு வளர்ந்திருந்தது. பல்வேறு துறைகளின் தொழில் வாய்ப்புகளை சிறுபான்மை இனத்தினர் அபகரித்துக் கொள்கிறார்கள் என்ற காழ்ப்புணர்ச்சி சாதாரண மனிதர்களிடமும் பரவியிருந்தது. இப்பின்னணியில் இனவாதக் கருத்தியல் பல்வேறு சமூக வர்க்கங்களையும் கவர்ந்திழுக்கும் சக்தியுடையதாக இருந்தது.

முதலாளி வர்க்கத்திடம் சிறுபான்மை இனத்து முதலாளிகள் மீதும், வர்த்தகர்கள் மீதும் குரோதம் வளர்ந்திருந்தது. இக்குரோத உணர்வு நகரத் தொழிலாளர் வர்க்கம், கிராமத்து விவசாய வர்க்கம் ஆகிய உழைப்பாளி வர்க்கங்களிடையிலும் பரவியது. சிற்றுடமை உற்பத்தியாளர்களான குட்டி முதலாளி வர்க்கம் (Petty – Bourgeoisie Class), சிறு வர்த்தகர்கள், நகரம்சார் வெண்சட்டை உத்தியோகத்தர் வர்க்கம் (White – Collar Working Class) ஆகிய இடைத்தர வர்க்கங்களும் தமது எதிர்காலம் நிச்சயமற்றதாக இருப்பதை உணர்ந்தன. பொதுவாக சாதாரண மனிதனின் வாழ்வு பொருளாதார நெருக்கடிகளின் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது.

இச்சூழ்நிலையில் இனவாதக் கருத்தியல் எல்லாச் சமூக வர்க்கங்களிடையிலும் ஊடுருவிப் பரவியது. மக்கள் பழம்பெருமையை நினைவூட்டும் கதைகளிலும், தலைவர்களது வீரசாகச வரலாறுகளிலும் மனதைப் பறிகொடுத்தனர். தமக்கு ஒரு கழிந்துப் போன ‘பொற்காலம்’ இருந்ததெனவும், பண்டைய நாளில் தாம் உயர்நிலையில் வாழ்ந்தோமென்றும் அவர்கள் நம்பினர். சிங்களவர்களின் தோற்ற மூலக் கதைகள் சாதாரண மக்களிடமும் பரவி தமது இனத்தின் மேன்மை பற்றிய பெருமித உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

தமது ‘வரலாற்று எதிரிக்கு’ (Historic Enemy) எதிராக தமது இனத்தின் வீரத் தலைவர்கள் ஈட்டிய வெற்றிக்கதைகளும், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களைப் போரில் தோற்கடித்து வெற்றிவாகை சூடிய வரலாறுகளும் அவர்களுக்கு உணர்ச்சியூட்டுவனவாக இருந்தன. முன்பு தோற்கடிக்கப்பட்ட அதே இனக்குழுமத்தினர் இப்போது வர்த்தக, தொழிற்துறைகளில் புகுந்து தமக்குப் போட்டியாளர்களாக மாறிவிட்டதை உணர்ந்தனர்.

பண்டைய நாளில் நிகழ்ந்த துட்டகைமுனு – எல்லாளன் போர்க்கதை மீள் உயிர்ப்புச் செய்யப்பட்டது. பண்டைய வரலாற்றை இனக்குழுமங்களுக்கிடையிலான போராக (War Between Ethnic Groups) சித்தரிக்கும் தவறான வரலாற்று விளக்கங்கள் மக்களிடையே இனவெறுப்புணர்ச்சியை வளர்த்தன.

முடிவுரை

இனவாதக் கருத்தியல் இலங்கையின் பல்வேறு சமூக வர்க்கங்களினதும் உணர்வு நிலையில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும், அதன் சமூக அரசியல் விளைவுகள் பற்றியும் குமாரி ஜெயவர்த்தன அவர்கள் கூறிய கருத்துகளை மேலே விவரித்துக் கூறினோம். அக்கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

  1. இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் ஆரம்பித்த வேளையில், அவ்வியக்கத்திற்கு ஆதரவளித்த இலங்கையின் முதலாளி வர்க்கம் பலவீனமுடைய முதலாளித்துவம் (Weak Capitalism) ஆகும். இப்பலவீனமுடைய முதலாளித்துவத்தால் பலமுள்ள தேசியவாதத்தை முன்னெடுக்க முடியவில்லை. இம்முதலாளித்துவ வர்க்கம் இனவாதத்தை (Communalism) தேசியவாதம் என்ற போர்வையில் முன்னெடுத்தது.
  2. இந்த இனவாதம் சிங்களவர்களான சிறு வர்த்தகர்களிடமும், கிராமத்துச் சிற்றுடைமை உற்பத்தியாளர்களிடமும், சமூகத்தின் பிற பிரிவினர்களிடமும் கூட ஊறிச் செறிந்திருந்தது. இச்சமூக வர்க்கங்களும் பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டு தமது பொருளாதார, அரசியல் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை உணர்ந்திருந்த காரணத்தால் இனவாதத்திற்கு இலகுவில் பலியாகின.
  3. சிங்கள புத்திஜீவிகளும் (Sinhala Intelligentsia) புத்த பிக்குகளும் இனவாதத்திற்கு கருத்தியல் ஆதரவை வழங்கினர். அந்நிய ஆட்சியின் தாக்கத்தினால் மரபுவழிப் பண்பாடு சீரழிவுற்றிருப்பதைக் கண்டு மனம் கொதித்த இப்பிரிவினர் இனவாதக் கருத்தியலை ஆதரித்ததில் வியப்பில்லை.
  4. நகரத் தொழிலாளர் வர்க்கமும் பலமற்றதாக இருந்தது. அவ்வர்க்கத்திடம் பாட்டாளி வர்க்க உணர்வு (Proletarian Consciousness) வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. பெருந்தோட்டங்களிலும், நகர்ப்புறத்தின் முக்கிய தொழிற்துறைகளிலும் இக்காலத்தில் சிங்களவர் அல்லாதவர்கள் பெரும் தொகையில் தொழிலாளர்களாக வேலை செய்த காரணத்தால், நகரத் தொழிலாளர் வர்க்கத்திடமும் குட்டி முதலாளி வர்க்கத்தின் இனவாதம் ஊறிச் செறிந்தது.
  5. மேற்குறித்த பின்னணியில் சிங்கள மக்கள் தாம் பலவகையிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகமாக இருப்பதை உணர்ந்தனர். சிறுபான்மை இனத்தவர்கள் தம்மைப் பொருளாதார ரீதியில் ஒடுக்குவதாக அவர்கள் உணர்ந்தனர். அரசியல் ரீதியிலும், பண்பாட்டு ரீதியிலும் தாம் ஒடுக்கப்படுவதாகவும் அவர்கள் உணர்ந்தனர். இந்நிலையில் இனவாதப் பொய்ப்புனைவுகளும் (Racist Myths), சிங்கள வீரதீரக் கதைகளும் (Legends) அவர்களுக்கு மன ஆறுதல் தருவனவாக அமைந்தன.

சிங்கள மக்களிடம் தோன்றிய விரக்தி உணர்வு சிறுபான்மை இனங்கள் மீதும், மதச்சிறுபான்மையினர் மீதும் தாக்குதல் தொடுப்பதற்கும் தூண்டியது. பிற்போக்குவாதக் கருத்தியலான இனவாதம் மக்களிடம் செல்வாக்குப் பெற்றது. இந்தியாவின் வரலாற்று அறிஞர் பிபன் சந்திரா அவர்கள் இனவாதத்தை கடந்த 100 ஆண்டுகளின் வரலாற்றுச் செயல்முறையின் பொய்யுணர்வு (The False Consciousness of the Historical Process of the Last 100 Years) எனக் குறிப்பிட்டார். அவரின் கூற்று இலங்கையின் இனவாதம் பற்றிய புரிதலுக்கும் பொருத்தமுடையதாகும்.

‘19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வர்க்க இனத்துவ உணர்வு நிலை’ (Class and Ethnic Consciousness in Sri Lanka in the Late 19th and Early 20th Centuries) எனும் இக்கட்டுரை குமாரி ஜெயவர்த்தன அவர்களின் தெரிந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான ‘Labour, Feminism, Ethnicity in Sri Lanka’ என்ற நூலில் (பக். 264 – 283) இருந்து எடுக்கப்பட்டது. 



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்