நிலஅமைப்பியல் ஆய்வுகள் (Geological Surveys)
இந்து சமுத்திரத்தில், இந்தியாவிற்குத் தெற்கே, சமுத்திரத்தின் பெரும் பகுதியை நிறைத்துக்கொண்டு லெமூரியா என்றொரு நிலப்பரப்பு இருந்திருப்பது சாத்தியமா?
சில தீவுகள் கடலினுள் அமிழ்ந்து போவது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். அதுபோன்று ஒரு பெரிய கண்டம் கடலினுள் மூழ்கிப் போகுமா? இதற்குரிய விடைகளை அறிந்து கொள்வதற்கு நில அமைப்பியல் பற்றிய ஓர் அடிப்படை அறிவு அவசியமாகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை நமது பூமியைச் சூழ்ந்திருக்கும் நிலக் கண்டங்களும் சமுத்திரங்களும் பூமி உருவான காலத்திலிருந்து அப்படியே இருந்து வந்திருக்கின்றன என்ற கோட்பாடே நிலவியல் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவி வந்தது.
1915ஆம் ஆண்டில் அல்ஃப்ரெட் வெஜினர் (Alfred Wegener) என்ற ஜேர்மனிய நில அமைப்பியல் அறிவியலாளர் ‘கண்டங்களினதும் சமுத்திரங்களினதும் தோற்றம்’ (The Origin of Continents and Oceans) என்ற பூகோளவியல் பற்றிய ஆழமான ஆய்வுநூலை எழுதி வெளியிட்டார். அடுத்து இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டிருந்த இந்த நூல் அன்றைய அறிவியலாளர்கள் மத்தியிலும், அறிஞர்கள் மத்தியிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்பூமியானது ஒரு தனியான திடப்பொருள் அல்ல. அதன் மத்தியில் உள்ள எரிகுழம்பின் (Magma) மேல் 2900 கிலோமீட்டர் கனதியான ‘மான்ரில்’ (Mantle) எனப்படும் ‘நிலஉறை’ காணப்படுகிறது. இதன் மேல் 60 முதல் 140 கி.மீ. கனதியான பாறைப் பொருளினால் ஆன 16 பெரிய ‘கண்டத்தகடுகள்’ (Tectonic Plates) பூமிப்பந்தைச் சுற்றி அமைந்திருக்கின்றன. உலகம் முழுவதிலுமுள்ள கண்டங்களும், சமுத்திரங்களும் இந்த கண்டத்தகடுகளின் மேலே அமைந்திருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார் வெஜினர் (Alfred Wegener, 1966). இதைத் தொடர்ந்து மேலும் பல பூகோளவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்கால ஆய்வுகள், மேலும் நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தரமான கண்டத்தகடுகள் 16 பெரும் தகடுகளோடு இணைந்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றன.

பூமியின் நடுப்பகுதியிலிருக்கும் எரிகுழம்பிலிருந்து வெளிவரும் வெப்பச் சலனம் மேலிருக்கும் நிலஉறையான ‘மான்ரிலையும்’ அதன்மேலுள்ள கண்டத்தகடுகளையும் அசைய வைக்கிறது. இக்கண்டத்தகடுகள் ஒன்றைவிட்டொன்று விலகும்போது அவற்றினூடே பீறிட்டு வெளிவரும் எரிகுழம்பே எரிமலையாக வெடித்து வெளிவருகிறது. இக் கண்டத்தகடுகள் ஒன்றோடொன்று உராயும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.
இற்றைக்கு 300 மில்லியன் (3000 கோடி) ஆண்டுகளுக்கு முன்னர், இப்பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு இருந்தன. இதற்குப் பஞ்ஜியா என்ற பெயர் கொடுக்கப்பட்டது. பூமியின் வடகோளம் முதல் தென்கோளம் வரை பஞ்ஜியா பரந்திருந்தது. பஞ்ஜியாவின் வடகோளத்திலிருந்த பெருங் கண்டம் ‘லொறேசியா’ (Laurasia) என்றும், தென்கோளத்திலிருந்த மிகப் பெருங் கண்டம் ‘கொண்ட்வானா’நிலம் (Gondwanaland) என்றும் அழைக்கப்பட்டது. பஞ்ஜியாவுக்குக் கிழக்கே இருந்த நெடுங்கடலுக்கு ரெதிஸ் மாகடல் எனப் பெயரிடப்பட்டது.

லொறேசியா என்ற பெருங்கண்டத்திலிருந்து பின்னர் வட அமெரிக்கா பிரிந்துபோக, மிகுதிப் பகுதியிலிருந்து ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்கள் உருவாகின (Dietz, 1970). தென்பெருங் கண்டமான ‘கொண்ட்வானா’விலிருந்து இந்தியா-இலங்கை, அவுஸ்திரேலியா, அந்தாட்டிக்கா, ஆபிரிக்கா ஆகிய தேசங்கள் உருவாகின (Trompette, R. 1994).
இற்றைக்கு 200 மில்லியன் (2000 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் நடுவிலிருக்கும் எரிகுழம்பிலிருந்து வெளிக்கிளம்பிய வெப்பம் ஏற்படுத்திய சலனத்தினால் கொண்ட்வானா பெருங்கண்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிளவுபட ஆரம்பித்தது. கொண்ட்வானா பல கண்டத்தகடுகள் ஒன்றோடொன்று இணைந்ததனால் ஏற்பட்ட பெருங்கண்டமாதலால், இத்தகடுகள் பிரிந்து போக ஆரம்பித்தன. இந்தியா ஆபிரிக்காவை விட்டுப் பிரிந்தபோது அதனோடு ஒட்டிக்கொண்டு மடகஸ்கார் தீவும் பிரிந்தது. இலங்கை, இந்தியக் கண்டத்தகட்டிலே இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. மடகஸ்கார் தனியான ஒரு கண்டத்தகட்டிலே இந்தியத் தகட்டோடு ஒட்டிக்கொண்டிருந்தது. பின்னர் மடகஸ்கார் தீவு இந்தியாவிலிருந்து பிரிந்துபோக, இந்தியத் தகடு வடக்கு நோக்கி ஆண்டுக்கு 20 செ.மீ. (ஒரு மில்லியன் ஆண்டுகளில் 200 கிலோமீட்டர்) வீதம் ரெதிஸ் மாகடலில் நகர்ந்தது.

- தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, மடகஸ்கார், இந்தியா, அந்தாட்டிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களும் நாடுகளும் இணைந்த பெருங்கண்டம் கொண்ட்வானா. இந்நிலப்பகுதிகளின் இன்றைய கரைகள் கூட ஒன்றோடொன்று சரியாக இணைகின்றதும் –
- முற்காலத்தில் வாழ்ந்த சில உயிரினங்களின் பாறைப் படிவங்கள் இணைந்திருந்த இந்நாடுகளில் காணப்படுவதும் (படம் பார்க்க) – வெஜினரின் ‘கொண்ட்வானா’ கோட்பாட்டுக்கு வலுச் சேர்க்கிறது.
இந்திய நிலம் மேலே (வடக்கே) நகர்ந்து செல்ல, அதன் பின்னால் மிகுதியிருந்த கண்டத்தகட்டில் கடல் புகுந்து இந்து மாகடல் உருவாயிற்று. இப்படி உலகின் ஒவ்வொரு கண்டமும் சமுத்திரமும் உருவானதை வெஜினர் விஞ்ஞான ரீதியாகவும், பூகோளவியல் ரீதியாகவும், அற்புதமான அறிவியல் (Scientific) வாதங்களோடும் எடுத்துரைத்தார்.
வடக்கு நோக்கி ரெதிஸ் சமுத்திரத்தில் நகர்ந்துகொண்டிருந்த இந்தியக் கண்டத்தகடு 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய (லொறேசிய) கண்டத்தகட்டுடன் பயங்கரமாக மோதியது. ஆசியக் கண்டத்தகட்டின் கீழே புகுந்த இந்தியத்தகடு ஆசியக் கண்டத்தகட்டை மேலே மேலே உயர்த்தித்தள்ள, அதன் மேலிருந்த பாறை மேலே எழுந்து இமயமலை உருவாயிற்று (Van Andel, 1985). இதனால்தான் இன்றும் இமயமலையில் கடற்பிராணிகளின் படிவ எச்சங்கள் காணப்படுகின்றன.

பூமியின் ஆரம்பகாலத்தில் இருந்த முக்கியமான நிலப்பகுதிகளே இன்றுவரை நிலைத்து நிற்கின்றன. இதில் லெமூரியா என்றொரு கண்டத்திற்கான நிலப்பகுதி இருந்ததே இல்லை.
இந்தியக் கண்டத்தகடு இன்றும் ஆசியக் கண்டத்தகட்டினுள் ஆண்டுக்கு 5 செ.மீ. வீதம் செருகிக்கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இமயத்தின் அடிவார நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. அடிக்கடி நேபாளத்தில் இடம்பெறும் நிலநடுக்கங்களுக்கும் இக்கண்டத்தகடுகள் ஒன்றின் கீழ் ஒன்று செருகித் தள்ளுவதே காரணமாகும்.
250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பரந்திருந்த பஞ்ஜியா என்ற பெருநிலத்திலிருந்தே இன்றிருக்கும் கண்டங்களும் நிலங்களும் உருவாகியுள்ளன. பஞ்ஜியாவில் லெமூரியாவுக்கு என்றோ, குமரிக் கண்டத்திற்கு என்றோ, ஒரு கண்டத்திற்குரிய நிலம் இருக்கவே இல்லை. ஆனால், பஞ்ஜியாவிலிருந்து பிரிந்து போன இந்தியாவின் கரையோர நிலங்கள் – சில சமயம் 200 கிலோமீட்டர் அகலம் வரையான நிலங்கள் – பனியுக இறுதியில் கடலினுள் அமிழ்ந்து போயின. அவற்றில் ஒன்று குமரிநாடாக இருந்திருக்க வேண்டும். பலப்பல தலைமுறைகளுக்கு முன்னர் இடம்பெற்று, மக்களின் மரபு ஞாபகங்களிலிருந்த (Race Memories) இச்சம்பவத்தை சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டிருக்கலாம்.

கடந்த 250 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் ஏற்பட்ட புவி அமைப்பியல் மாற்றங்கள்
ஒரு காலத்தில் இந்தியா மடகஸ்கார் தீவோடு ஒட்டிக்கொண்டிருந்து பின்னர் பிரிந்து போனதை வெஜினர் வெகு தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார். எனவே மடகஸ்காரிலும் இந்தியாவிலும் ஒரே வகையைச் சேர்ந்த புராதன விலங்குகளும், தாவரங்களும் இருப்பது சாத்தியமாகிறது. வெஜினரைத் தொடர்ந்து வந்த பல பூகோள ஆய்வாளர்கள் அவரது கோட்பாடுகள் அசைக்கமுடியாத உறுதியான ஆதாரங்களின் மேல் அமைக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
வெஜினர் முன்வைத்த ஆதாரங்களையும், கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய அறிஞர்களும், விஞ்ஞானிகளும் லெமூரியா என்றொரு கண்டம் இருந்திருக்கச் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து ஸ்கிளேட்டரின் கருத்தை நிராகரித்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் மேல்நாடுகளில் லெமூரியா கருத்து வலுவிழந்து போய் மக்கள் நினைவினின்றும் மறைந்து போயிற்று. ஆனால் தமிழகத்தில் பல அறிஞர்கள் இவ்விஞ்ஞான முடிவுகளைப் பற்றி அறிந்திருந்தும் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருந்தார்கள்.
இவர்களில் அரசியல் சார்புடையோர் செய்த தவறான பிரசாரங்களாலும், எழுதிய தவறான நூல்களாலும், தவறான பாடப்புத்தகங்களாலும் மாணவர்களுக்குத் தவறான தமிழர் வரலாறு போதிக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய நூலில் “லெமூரியா அல்லது குமரிக்கண்டத்தில் ஆரம்பமான திராவிட நாகரிகமே தென்னிந்திய நாகரிகம். அது இங்கிருந்து மொகஞ்சதாரோவுக்கும் ஹரப்பாவுக்கும் பரவி அங்கிருந்து சென்று சுமேரிய நாகரிகமானது. அங்கிருந்தே அரேபியா, எகிப்து, கிரேக்கம், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு நாகரிகம் பரவியது. ஒவ்வொரு திராவிடனும் இதை நினைக்கும்போது பெருமையால் பூரிப்படையாமல் இருக்க முடியாது.” எனக் குறிப்பிடுகிறார்.
தேவநேயப் பாவாணரின் சீடரான மதிவாணன் 1970–80களிலும் லெமூரியா பற்றியே பேசிக்கொண்டிருந்தார். அவர் 1981இல் தமிழக அரசு வெளியிட்ட தமிழரின் தோற்றம் பற்றிய மெய்விளக்கப் படத்திற்கு (Documentary Film) வசனம் எழுதியிருந்தார். இன்றைய ஆய்வுகள் காட்டும் பூகோள, நிலவியல், அறிவியல் ஆதாரங்களை விடுத்து பாவாணர், அப்பாத்துரை போன்றோரின் அதீத மொழிப்பற்றினால் உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்ட நூல்கள் சான்றுகளாக முன்வைக்கப்பட்டன. இவை தமிழர் வரலாறாக பாடநூல்களில் இடம்பெற்றன. இம்மாதிரியான எழுத்துகளால் உண்மையான தமிழர் வரலாறு திரிபடைந்து புராண, இதிகாச, கற்பனைக் கதைகளாக இன்று கூறப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சியடையாத ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்றும், அதற்கு மேலும் கீழும் விண்ணுலகும், பாதாள உலகும் இருப்பதாகவும் அக்கால அறிஞர்கள் எழுதிவைத்தார்கள். அறிவியல் வளர்ச்சியடைந்த போது எவ்வாறு பூமி உருண்டையானது என்பதை அறிந்து புராதன கருத்துகள் நிராகரிக்கப்பட்டனவோ, அதுபோன்று நவீன விஞ்ஞான ஆய்வுகள் காட்டும் ஆதாரபூர்வமான உண்மைகளை ஏற்றுக்கொள்வதே அறிவுடமை ஆகும்.
இந்து சமுத்திர அடிநில ஆய்வுகள் (Survey of the Indian Ocean Floor)
அகில உலக நிறுவனமான சர்வதேச விஞ்ஞான ஆலோசனைச் சபையின் (International Council for Science) ஓர் அங்கமான சர்வதேச சமுத்திர ஆய்வு நிர்வாகக் குழு (Scientific Committee on Oceanic Research: SCOR) அமெரிக்க தேசிய விஞ்ஞான நிறுவனத்தின் (National Science Foundation) பொருளுதவியோடு 1960ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதிலுமுள்ள முக்கியமான பெருங்கடல்களை ஆய்வு (Survey) செய்து வந்திருக்கிறது. இக்குழு 1962ஆம் ஆண்டிலிருந்து இந்து சமுத்திர கடலடி ஆய்வை மேற்கொண்டது. இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் பெறுபேறுகள் ‘International Indian Ocean Expedition: SCOR Report 1964’ என்ற அவர்களது அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதன் பின்னர் அமெரிக்க செய்மதி ஆய்வுகள் (Satellite Surveys) 1990களில் இந்து சமுத்திரத்தின் பல பகுதிகளை விண்வெளியிலிருந்து படம்பிடித்து வெளியிட்டிருக்கின்றன. சமீப காலங்களில் ‘இந்து சமுத்திர ஆய்வுக் குழு’ (Indian Ocean Research Group: IORG) மற்றும் ‘Catlin Seaview Survey’ ஆகிய நிறுவனங்களும் இந்து மாகடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. இவர்களில் எந்த நிறுவனத்தினரும் இந்து மாகடலின் அடியில் இந்தியாவுக்குத் தெற்கே ஒரு நிலப்பரப்பு அமிழ்ந்திருப்பதைக் காணவில்லை. அதே சமயம் தென்கிழக்கு ஆசியாவில் – இந்து மாகடலின் அடியில் – அமிழ்ந்துபோன தென்கிழக்கு ஆசியாவின் சுண்டா பெருநிலப்பரப்பு இனங்காணப்பட்டிருக்கிறது.
இந்து சமுத்திர ஆய்வுகளில், நிலக் கண்டங்களில் மலைத்தொடர்கள் இருப்பது போல சமுத்திரத்தினுள்ளும் மலைத்தொடர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1. மாலைதீவு–லட்சத்தீவு–சாகோஸ் மலைமுகடு 2. குமரிக்கடல் மலை 3. தொண்ணூறு-பாகை-கிழக்கு கடல் மலைமேட்டுத் தொடர் (1. The Chagos-Laccadive Ridge 2. Comorin Seamounts and 3. The Ninety-East Ridge) என்பன இந்தியாவிற்குச் சமீபமாக இந்து சமுத்திரத்திலுள்ள கடல் மலைகளும், கடல் மேடுகளுமாகும். இந்தியாவுக்குத் தொலைவிலிருக்கும் முக்கியமான இந்து சமுத்திர கடலடி பூகோள அமைப்புகள்: மத்திய மேடு (Central Ridge), தென்-கிழக்கு இந்து சமுத்திர மேடு (Southeast Indian Ridge), கேர்குலன் மலைப்பீடம் (Kerguelen Plateau) என்பன. இந்து சமுத்திரத்தின் தென் துருவப் பகுதியில் அவுஸ்திரேலியாவிலிருந்து தென்மேற்காக 3,000 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு கடலடி எரிமலையின் உச்சியே இந்த கேர்குலன் மலைப்பீடம் (SCOR Report, 1964; James R. Heirtzler, 1977; Verzbitsky, E.V. 2003).

கடைசியாக நடைபெற்ற பனியுகத்தின் முடிவில் சமுத்திர மட்டம் மேலெழுந்தபோது தென்-கிழக்கு ஆசியாவில் இந்து சமுத்திரம் மூடிக்கொண்ட ‘சுண்டா பெருநிலம்’ (படம்). மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமாத்ரா, போர்ணியோ ஆகிய தீவுகள் இப்பெருநிலத்தின் மூழ்கிப் போகாது விட்ட, நீரின் மேலே தெரியும் நிலப்பகுதிகள். இவை அமிழ்ந்த காலத்தில் இந்தியக் கரையோர நிலங்களும் நீரில் மூழ்கி, இலங்கை இந்தியாவிலிருந்து தனிநாடாகப் பிரிந்தது.
இந்தியாவுக்குத் தெற்கே இந்து சமுத்திரத்தின் அடியிலுள்ள கடல் மேடுகள் (Ocean Floor Ridges of the Indian Ocean near Peninsular India)

இந்தியாவுக்குத் தெற்கே இந்து சமுத்திரத்தின் அடியிலுள்ள கடல் மேடுகள். அமெரிக்க நாஸா நிறுவனம் வெளியிட்ட செய்மதி ஆய்வுகள் காட்டும் இந்து சமுத்திர அடிநிலப்படம்.OCEAN FLOOR RIDGES OF THE INDIAN OCEAN NEAR PENINSULAR INDIA – NASA
1.மாலைதீவு-லட்சதீவு-சாகோஸ் மலைமுகடு 2. குமரிக்கடல் மலை 3. தொண்ணூறு பாகை-கிழக்கு கடல்மலைத் தொடர் 4. வலது பக்கம்: சுண்டா தீவுகளைக் கொண்ட கடலடிமேடை.
1. The Chagos-Laccadive Ridge 2. Comorin Seamounts 3. The Ninety-East Ridge, the longest underwater ocean floor ridge 4. Sunda Archipelago shelf on the upper right. Picture Courtesy: National Aeronautics and Space Administration (NASA).
லட்சத்தீவு-மாலைதீவு-சாகோஸ் மலைமுகடு (The Chagos-Laccadive Ridge): இந்திய மேற்குக் கடலில் கேரள நாட்டுக்கரையில் ஆரம்பித்து தெற்கு நோக்கி இந்து சமுத்திரத்தில் படரும் பாறைத் தொடர். இது படிப்படியாக வளர்ந்த பவளப்பாறைத் திட்டுகள் (Coral Atolls) ஆகும். இவையே இன்று கடலுக்கு மேல் வரிசையாகத் துருத்திக்கொண்டிருக்கும் தீவுக் கூட்டங்களான லட்சத்தீவு-மாலைதீவுக் கூட்டங்கள். சாகோஸ் மலைமுகடானது இந்தியக் கண்டத்தகடு வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சமயம், ஆபிரிக்க கண்டத்தகட்டுடன் இணைந்த போது ஏற்பட்ட பிளவில், பூமியின் அடியிலிருந்து கிளம்பி வந்த எரிகுழம்பு, அக்கண்டத்தகடுகளினூடே பெருகி வந்து நீரின் குளிர்மையால் பாறையாகி உண்டான மலைத்தொடர் ஆகும். இதை ‘றியூனியன் வெப்பக் குறியிடம்’ (Réunion Hotspot) என்று அழைப்பர் (Avraham, Z.B. et al. 1977; Verzbitsky, E.V. 2003; Stow, D.A.V. 2006; McClanahan et al. 2000; Kuiter, R.H. 2014).
குமரிக்கடல் மலைமேடு (Comorin Seamounts): குமரிமுனைக்குச் சமீபமாக இந்து சமுத்திரத்தினடியில் 400 கிலோமீட்டர் வரை நீளமான மலைமேடு காணப்படுகிறது. பனியுகக் காலத்தில் கடல் மட்டம் கீழே சென்ற பொழுதில், இம்மலைமுகட்டின் ஒரு பகுதி குமரிமுனையின் நிலத்தொடராக வெளியே தெரிந்திருக்கும் (SCOR Report, 1964).
தொண்ணூறு-பாகை-கிழக்கு கடல் மலைமேட்டுத் தொடர் (Ninety East Ridge): இந்து சமுத்திரத்தினடியிலுள்ள மிக முக்கியமான தொடர் மலைமேடு இது. தீர்க்க ரேகை (Meridian) 90 பாகைக்கு சமாந்தரமாக வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவினருகிலிருந்து தெற்கு நோக்கி – தென்கிழக்கிலுள்ள இந்து சமுத்திர மேட்டை நோக்கி (Southeast Indian Ridge – SEIR) – நேர்கோட்டில் சுமார் 5,000 கிலோமீட்டர் (3,100 மைல்) தூரத்திற்கு நீண்டு கிடக்கும் உலகின் மிக நீளமான இந்தக் கடல் மலை, 1962ஆம் ஆண்டு சமுத்திர ஆய்வின் போது முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது (SCOR Report, 1964).

சர்வதேச சமுத்திர ஆய்வு நிர்வாகக் குழு (Scientific Committee on Oceanic Research: SCOR) வெளியிட்ட இந்து சமுத்திர அடிநிலப்படம். இதில் குமரிக்கண்டம் என்றொரு கண்டம் இருந்ததற்கான கடல்மேடு காணப்படவில்லை. அதே சமயம் சுண்டாமாநில கடல் மேடு காணப்படுகிறது. Picture Courtesy: American Association for the Advancement of Science (AAAS).
இந்தியக் கண்டத்தகடும், அவுஸ்திரேலிய கண்டத்தகடும் ஒன்றோடு ஒன்று பொருந்தும் நேர்கோட்டில் இந்த தொண்ணூறு-பாகை-கிழக்கு கடல் மலைமேட்டுத் தொடர் அமைந்திருக்கிறது. இக் கண்டத்தகடுகள் இணைந்த காலத்தில், இந்தியத் தகடு வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தமையால், பூமியின் அடியிலிருந்து கிளம்பி வந்த எரிகுழம்பு அக்கண்டத்தகடுகளினூடே பெருகி வந்து நீரின் குளிர்மையால் பாறையாகி மலைத் தொடராகியிருக்கிறது என்பதே பூகோளவியலாளர்கள் தரும் விளக்கம் (Weiss, D. et al. 1993: 57–89).
இருபதாம் நூற்றாண்டின் பூகோளவியல் ஆய்வுகளிலும் சரி – கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக மேற்கொள்ளப்பட்ட இந்து சமுத்திர ஆய்வுகளிலும் சரி – அமெரிக்கச் செய்மதி ஆய்வுகளிலும் சரி – லெமூரியா என்றோ, குமரிக் கண்டம் என்றோ இந்து சமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்திருப்பதற்கான சாத்தியம் எதுவுமே இல்லை என்பது அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இத்தனை ஆய்வுகளின் பின்பும் – ஆதாரங்களின் பின்பும் – நம்மவரில் ஒருசாரார் ‘லெமூரியா’ பற்றியும், குமரிக் கண்டம் பற்றியும் பேசுவதையும் எழுதுவதையும் போன்ற தவறான செயல் எதுவுமே இருக்க முடியாது.
பனிப்படிவு யுகங்கள் (Ice Ages)
நமது பூமியில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களால் பூமி உருவான காலத்திலிருந்து இதுவரை நான்கு பனிக்கல்ப காலங்கள் (Ice Epochs) நடைபெற்றிருக்கின்றன. இறுதியான பிளிஸ்டோசீன் (Pleistocene Ice Epoch) கல்பத்தில் மட்டும் 17 பனிப்படிவு யுகங்களும் (பனியுகங்களும்) 17 பனியிடைக் காலங்களும் இடம்பெற்றன. கடந்த 12,000 ஆண்டுகளாக நாம் 17ஆவது பனியிடைக் காலத்தில் (Interglacial Period) வாழ்ந்துகொண்டிருக்கிறோம் (Interglacial Period).

பனிப்படிவு யுகக் காலத்தில் காணப்பட்ட உலகம்: பனிப்படிவு யுகத்தின்போது பூமியின் மத்திய பகுதியிலிருந்த நிலங்களில் மட்டுமே மனிதர்கள் வசிக்கக்கூடியதாக இருந்தது. வடக்குப் பகுதியிலிருந்த நிலங்களும், தென் பகுதியிலிருந்த அந்தாட்டிக்கா கண்டமும், கடல்களும் பனிப்பாளங்களால் மூடப்பட்டிருந்தன. பனிப்பாளங்கள் 2 கிலோமீட்டர் உயரத்திற்குப் படிந்திருந்தன. பிரித்தானியா முழுவதும் பனிப்பாளங்களின் கீழே அமிழ்ந்திருந்தது. கடல் மட்டம் 135 மீட்டருக்குக் கீழே இருந்தமையால் கண்டங்களின் கரைகள் இன்றிருப்பதைவிட 200–300 கி.மீட்டர் வரை பரந்திருந்தன. இலங்கை தென்னிந்தியாவின் நிலப்பகுதியாக இருந்தது. கிழக்காசிய நாடுகள் நிலத்தொடர்பால் ஒன்றாகிவிட்டிருந்தன.
பனிப்படிவு யுகங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பூமியின் மேற்பாகம் குளிர்ந்துபோய் வட, தென் பூகோளப் பகுதிகளில் பல மைல் உயரத்திற்குப் பனி உறைந்து பனிமலைகளாக இருந்தன. பூமியின் மத்திய பகுதியை அண்டிய நாடுகளைத் தவிர மற்றைய கண்டங்களில் ஆறுகள் உறைந்து நிலங்களில் பனிக்கட்டி பாளம் பாளமாகப் படர்ந்திருந்தது. கடல் நீர் ஆவியாக மேலே போய் பின்னர் மழையாக வந்தபோது பெரும்பாலான நிலங்களில் இந்த மழை பனிக்கட்டிகளாக உறைந்து போயிருந்ததனால், கடல் மட்டம் இன்றிருப்பதைவிட 120 மீட்டர் முதல் 135 மீட்டர் வரை தாழ்வாக இருந்தது.
இற்றைக்கு முன் (இ.மு.) 115,000 ஆண்டு முதல் இ.மு. 12,000 ஆண்டு வரை நீடித்த கடைசிப் பனியுக காலத்தில் – கடல் மட்டம் இன்றிருப்பதைவிட 120 முதல் 135 மீட்டர் வரை குறைவாக இருந்த காலப்பகுதியில் – இலங்கை இந்தியாவோடு இணைக்கப்பட்ட நிலப்பகுதியாக இருந்தது. இந்நிலத்தின் நீள-அகலப் பரிமாணங்களும் இன்றிருப்பதைவிடப் பெரியதாகவே இருந்தன. இந்நிலம் ‘இந்திய-இலங்கை’ என்ற ஒரே நிலமாகும் (Peter Clark 2002; Rohling 1998).

இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்னிந்திய நிலப்பகுதி. இன்றையகால நிலவரை அதனுள் காட்டப்பட்டிருக்கின்றது. குமரிமுனையின் கீழ் நீண்டுகொண்டிருப்பது அன்றைய குமரிநாடு. நன்றி: டர்ஹாம் பல்கலைக்கழக புவியியல் துறை.
இற்றைக்கு 19,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசிப் பனியுகம் உச்ச நிலையை அடைந்திருந்த சமயம் – கடல் மட்டம் இன்றிருப்பதை விட 135 மீட்டர் தாழ்வாக இருந்த காலப் பகுதியில் – உலகம் முழுதிலும் நாடுகளெல்லாம் இன்றிருப்பதைக் காட்டிலும் மிகவும் பெரியனவாக இருந்தன. இந்தியக் கடலோரம் இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றிவர பல கி.மீ. தொலைவிற்கு அகன்றிருந்தது. குமரிமுனைக்குத் தெற்கே குமரிநாடு 200 கிலோமீட்டர் வரை பரந்திருந்ததாகக் கணிப்பிட முடிகிறது.
இ.மு. 12,000 ஆண்டு முதலாக – கடைசிப் பனியுகம் முடிவிற்கு வந்த காலத்திலிருந்து உலகைச் சூழ்ந்திருந்த பனிப்படலங்கள் உருகி, கடல் மட்டம் சிறிது சிறிதாக மேலெழுந்த போது – இந்திய-இலங்கையின் கரையோர நிலப்பகுதிகள் சிறிது சிறிதாக கடலினுள் அமிழ்ந்து போயின. குமரிநாடு சிறிது சிறிதாகக் கடலினுள் அமிழ ஆரம்பித்தது. குமரிநாட்டை முற்றாகக் கடல் கொள்ள இ.மு. 12,000 முதல் இ.மு. 7,000 வரை ஐயாயிரம் ஆண்டுகள் எடுத்திருக்கும். அமிழ்ந்த நிலம் அழிந்தோ, கரைந்தோ போய்விடவில்லை. அந்த நிலம் இன்னும் குமரிமுனையை அண்டி இந்து சமுத்திரத்தினடியில் இன்றும் கடல் மேடாகக் (Sea Mount) கிடக்கிறது.
இ.மு. 7,000 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த இலங்கை, இந்தியாவிலிருந்து தனித் தீவாகப் பிரிந்து போயிற்று. அடுத்த ஆயிரம் ஆண்டுக்காலப் பகுதியில் – பனிப்படலங்கள் உருகி ஆறுகள் வழியாகப் பெருகி வரும் நீரினாலும், மழையினாலும் ஏற்படும் கடல் பெருக்கமும், கடல் நீர் ஆவியாகப் போவதால் ஏற்படும் கடல் மட்டக் குறுக்கமும் சமநிலை அடைந்த நேரத்தில் – கடல் மட்டம் சீர்நிலை அடைந்தது.
தமிழகத்தில் விவசாயம் அறிமுகமாகி, பெருங்கற் பண்பாடு உருவாகி, சங்ககாலம் தோன்றுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பனியுக இறுதியில் நிகழ்ந்தது ‘குமரிநாடு’ கடலில் அமிழ்ந்த நிகழ்வு. மக்களின் மரபு ஞாபகங்களிலிருந்த (Race Memories) இச்சம்பவம் பாரம்பரியமாகப் பரிமாறப்பட்டு சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதே அறிவியல் ரீதியான எனது விளக்கம்.
‘தமிழர்கள் ஓர் இன மக்கள்; அவர்கள் தமிழ்நாட்டின் தொல்குடிகள்; அவர்கள் தோன்றியது இந்த மண்ணில்தான்’ என்ற கோட்பாடும் – ‘தமிழர்கள் மொசப்பத்தேமியாவிலுள்ள சுமேரியாவிலிருந்து மொகஞ்சதாரோ, ஹரப்பா வழியாகத் தமிழகத்திற்கு வந்தவர்கள்’ என்ற கோட்பாடும் – தொடரும் இயல்களில் ஆய்வு செய்யப்படும்.
உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்
ALLCHIN, BRIDGET & RAYMOND (1996): The Rise of Civilization in India and Pakistan, Cambridge University Press, Cambridge.
ANDEL, VAN T.H. (1985): New Views on an Old Planet: Continental Drift and the History of the Earth, Cambridge University Press, Cambridge.
ARAVAMUTHAN, T.G. (1930): The Oldest Account of the Tamil Academies, Journal of Oriental Research, 4: 183-201, 283-317.
AVRAHAM, Z.B., Zvi Ben, Bunce, E.T. (1977): Geophysical Study of the Chagos-Laccadive Ridge, Journal of Geophysical Research, Vol. 82, Issue B8, pp 1295- 1305.
BILLINGS, MARLAND (1990): Structural Geology, Prentice Hall of India Ltd., New Delhi.
CHILDE, V. GORDON (1950): ‘The Urban Revolution’ in Town Planning Review, Vol 21(1).
CLARK, PETER U. & MIX, ALAN C. (2002): Ice Sheets and Sea Levels of The Last Glacial Maximum; Quaternary Science Reviews 21 (1-3): 1-7.
DIETZ, R.S. and HOLDEN (1970): Reconstruction of Pangaea: Breakup and Dispersion of Continents; Journal of Geophysical Research 75(26).
DOUG MACDOUGALL (2004): Frozen Earth: The Once and Future Story of the Ice Ages; California: University of California Press.
ELHERS, JURGEN (2022): The Ice Age – 2nd Ed., Springer, Germany.
ELLIOT, SCOTT W (1925): The Story of Atlantis and the Lost Lemuria, The Theosophical Publishing House Ltd., London.
EMMILIANI, CESERE (1995): Planet Earth, Cambridge University Press, Cambridge.
HEIRTZLER, JAMES R. (1977): Indian Ocean Geology and Biostratigraphy, American Geophysical Union., USA.
IMBRIE, J., IMBRIE, K.P. (1979): Ice Age: Solving the Mystery, Enslow Publishers, NJ.
KAUTILYA: ARTHASHASTRA (Transl. R. SHAMA SASTRY) (1924): University of Mysore., Mysore.
KERR, R.A. (1994): Ancient Tropical Climates: Science 263.
KRÜGER, TOBIAS. (2013): Discovering the Ice Ages: International Reception and Consequences for a Historical Understanding of Climate, (Transl. from the German by Anne M. Hentschel), Brill, Leiden.
KUITER, RUDIE H., GODFREY, TIMOTHY (2014): Fishes of the Maldives, Atoll Editions.
McCLANAHAN, T.R., SHEPPARD, C.R.C., OBURA, D.O. (2000) Coral Reefs of the Indian Ocean, Oxford University Press, UK.
MAHALINGAM, N. (1981): Kumari Kandam −The Lost Continent, In Proceedings of the Fifth International Conference-Seminar of Tamil Studies, Madurai., Edited by M. Arunachalam, International Association of Tamil research, Madras.
RAMASWAMY, SUMATHI (1999): Catastrophic Cartographies: Mapping the Lost Continent of Lemuria, University of California Press, California, USA.
RAMASWAMY, SUMATHI (2004): The Lost Land of Lemuria, University of California Press Ltd., London.
ROHLING, E.J. et al. (1998): “Magnitudes of Sea-level low-stands of the past 500,000 years”; Nature 394, pp 162-165.
ROHLING, E.J.et al. (2003): “Sea-level fluctuations during the last Glacial Cycle”; Nature 423, pp 853-858.
SCOR REPORT (1964): International Indian Ocean Expedition Report, by Scientific Committee on Oceanic Research, International Council for Research and National Science Foundation, USA.
STANLEY, STEVEN M. (1999): Earth System History, Freeman and Company, New York.
STOW, D.A.V. (2006): Oceans: An Illustrated Reference, University of Chicago Press, Chicago.
THIAGARAJAH, SIVA (2011): Peoples and Cultures of Early Sri Lanka, Tamil Information Centre, Kingston, UK.
TORSVIK, TROND H., COCKS, L., ROBIN, M. (2017): Earth History and Palaeogeography, Cambridge University Press, Cambridge.
TROMPETTE, R.: Transl. CARROZI, A.V.: (1994) Geology of Western Gondwana (2000-500 Ma)
VERZBITSKY, E.V. (2003): Geothermal Regime and Genesis of the Ninety-East and Chagos-Laccadive ridges, Journal of Geodynamics, Vol. 35 (3).
WEGENER, ALFRED (1924): Transl. by J.G.A. SKERL: The Origin of Continents and Oceans, 3rd Ed., E.P. Dutton, New York.
WEGENER, ALFRED: Transl. JOHN BIRAM (1966): The Origin of Continents and Oceans: 4th Revised Ed., Courier Dover Publ., New York.
WEISS, D. et al. (1993): The Influence of Mantle Plumes in the Generation of Indian Oceanic Crust, Geophysical Monograph 70: 57-89.
அப்பாத்துரை, கா. (1941): குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
அறவாணன், க.ப. (1984): தமிழரின் தாயகம், International Institute of Tamil Studies, Madras.
அன்பழகன் (1975): தமிழ்க் கடல் அலைஓசை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
இறையனார் அகப்பொருள் நக்கீரர் உரை (2006): பவானந்தம் பிள்ளை பதிப்பு. பாரி நிலையம், சென்னை.
கந்தையா பிள்ளை, ந.சி. (1945): நமது நாடு, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
கந்தையா பிள்ளை, ந.சி. (1946): தமிழர் யார், முத்தமிழ் நிலையம், சென்னை.
கணபதி (1984): தமிழக வரலாறு, மதுரை பப்ளிஷிங் ஹவுஸ், மதுரை.
கனகசபை, வி. (1973): ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
சாமிநாதையர், உ.வே. (1980): சிலப்பதிகார மூலமும் ஆடியார்க்கு நல்லார் உரையும், ஜுபிலி வெளியீடு, சென்னை.
சிதம்பரனார், அ. (1948): தமிழ்ச் சங்கங்களின் வரலாறு, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
சிலப்பதிகாரம் (1997): புலியூர்க்கேசிகன் பதிப்பு, பாரி நிலையம், சென்னை.
சுப்பிரமணியன், கா. (1982): சங்ககாலச் சமுதாயம், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
செல்லம், வே.தி. (1955): தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
புறநானூறு (1996): புலியூர்க்கேசிகன் பதிப்பு, பாரி நிலையம், சென்னை.
மதிவாணன் (1977): இலெமுரியா முதல் அரப்பா வரை, சேகர் பதிப்பகம், சென்னை.
தேவநேயன், ஞா. (1944): திராவிடத் தாய், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
தேவநேயன், ஞா. (1981): தமிழனின் பிறந்தகம், ஐந்தாம் உலகத்தமிழ் விழா மலர், மதுரை.
நெடுஞ்செழியன், இரா (1953): மறைந்த திராவிடம், மன்றம் பதிப்பகம், சென்னை.
நெடுஞ்செழியன், க. (1989): இந்தியப் பாண்பாட்டில் தமிழும் தமிழகமும், மனிதன் பதிப்பகம், திருச்சி.
ஜெயகரன், சு.கி. (2001): குமரிக் கண்டம் – லெமூரியா குழப்பம், காலச்சுவடு – 33: 52-57.
ஜெயகரன், சு.கி. (2002): குமரி நிலநீட்சி, காலச்சுவடு பதிப்பகம், நாகர் கோவில்.



