போரிற்குப் பிறகு வரலாற்றை வாழ்தலும் வரைதலும் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
27 நிமிட வாசிப்பு

போரிற்குப் பிறகு வரலாற்றை வாழ்தலும் வரைதலும் – பகுதி 1

June 2, 2026 | Ezhuna

இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வடக்கு – கிழக்குச் சமூகத்தின் உண்மையான நிலையை ‘போருக்குப் பின் அமைதிக்கு முன்: வடக்குக் கிழக்கில் அறிவு, அதிகாரம், அன்றாட வாழ்க்கை’ எனும் இந்தத் தொடர் ஆராய்கிறது. ‘போர் முடிந்துவிட்டது’ என்ற மேலோட்டமான கொண்டாட்டங்களை நிராகரிக்கும் இத்தொடர், அங்கு இராணுவக் கட்டுப்பாடு, கண்காணிப்பு மற்றும் நில அபகரிப்பு போன்றவை இன்றும் ஒரு தொடர்ச்சியான நிர்வாக முறையாகவே நீடிப்பதாக வாதிடுகிறது. சமூகவியல், தொல்லியல், வரலாறு, மானிடவியல் எனப் பல துறைகளின் ஊடாக, மக்களின் அன்றாட வாழ்வில் அதிகாரம் எவ்வாறு ஊடுருவியுள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாழ்வியல் அனுபவங்களை முன்னிறுத்தி, முறையான அரசியல் தீர்வில்லாத இந்த நிலையை ‘முழுமையடையாத இறையாண்மை’ என வரையறுக்கிறது. போருக்குப் பிந்தைய நீதி மற்றும் நல்லிணக்கம் குறித்த ஒரு புதிய முன்னோக்கை வெளிப்படுத்துவதாக இத்தொடர் அமையும்.

தொடக்கக் குறிப்புகள் 

துப்பாக்கிகள் ஓய்ந்தவுடன் போர்கள் முடிவதில்லை. அவை நினைவுகள், மௌனம், சடங்குகள், அதிகாரத்துவம், நிலப்பரப்பு, மொழி ஆகியவற்றின் வழியே நீடிக்கின்றன. சேதமடைந்த வீடுகள், காணாமல் போன ஆவணங்கள், மாற்றப்பட்ட கடற்கரைகள், தணிக்கை செய்யப்பட்ட நினைவுகூரல்கள் ஆகியவற்றில் அவை உயிர் வாழ்கின்றன. மக்கள் நினைவில் வைத்திருப்பவற்றிலும், அவர்கள் கூற மறுப்பவற்றிலும், அரசுகள் மறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துபவற்றிலும் அவை தொடர்கின்றன. போருக்குப் பிந்தைய சமூகங்களில், வரலாறு மீதான போராட்டம், நிலப்பரப்பிற்கான போராட்டத்தைப் போலவே அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. இலங்கையின் 2009க்குப் பிந்தைய நிலை இதைத் தீவிரத்துடன் விளக்குகிறது. உள்நாட்டுப் போரின் முடிவானது, ஒரு நிலைபெற்ற வரலாற்றுப் புனைவையோ அல்லது கடந்த காலத்தைப் பற்றிய ஒருமித்த புரிதலையோ உருவாக்கவில்லை. மாறாக, அது பிளவுபட்ட, ஆழமாகப் போட்டியிடப்பட்ட ஒரு வரலாற்று நிலப்பரப்பை உருவாக்கியது. அதில் போட்டியிடும் தரப்பினர், போர் என்றால் என்ன, அதன் பொருள் என்ன, யார் துன்பப்பட்டார்கள், யார் தியாகம் செய்தார்கள், அதன் பின்விளைவுகளிலிருந்து எத்தகைய எதிர்காலம் சட்டபூர்வமாக உருவாக முடியும் என்பவற்றை வரையறுக்க முயல்கின்றனர்.

போருக்குப் பிந்தைய இலங்கையின் வரலாறு என்பது வெறும் பின்னோக்கிய பார்வை மட்டுமல்ல என்ற கருத்திலிருந்து இந்தக் கட்டுரை தொடங்குகிறது. அது போரின் போது நடந்தவற்றை ஆவணப்படுத்துவது மட்டுமல்ல; மாறாக, ஆளுகையினதும் அரசியல் போராட்டத்தினதும் ஒரு செயலூக்கமான களமாகவும் உள்ளது. அதன் வழியாக சட்டபூர்வத்தன்மை, இறையாண்மை, பாதிக்கப்பட்ட நிலை, சொந்தம் என்ற உணர்வு ஆகியவை தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு நிறுவனங்கள் அல்லது சீரற்ற வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் மட்டுமல்ல, நினைவுகளின் மேலாண்மையின் மூலமாகவே போர் நிலைத்திருக்கிறது. உத்தியோகபூர்வ விவரிப்புகள், பொது நினைவுகூரல்கள், ஆவணக்காப்பகங்கள், நினைவுச்சின்னங்கள், பள்ளிப் பாடத்திட்டங்கள், சட்டப் பிரிவுகள், குடும்பக் கதைகள், மௌனங்கள் ஆகிய அனைத்தும், போர் எவ்வாறு அறியப்படுகிறது என்பதையும், போருக்குப் பிந்தைய தேசம் எவ்வாறு கற்பனை செய்யப்படுகிறது என்பதையும் வடிவமைப்பதில் பங்கேற்கின்றன.

எனவே, ஒரு பேரழிவிற்குப் பிறகு வரலாற்றை எழுதுவது என்பது நிகழ்வுகளை மீண்டும் கட்டமைப்பது மட்டுமல்ல. அது, கடந்த காலத்தை விவரிக்கும் அதிகாரமே அரசியல் ரீதியாகச் சார்புடையதாக இருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய களத்தில் நுழைவதாகும். இலங்கையில், இந்தக் களம் ஆழ்ந்த சமச்சீரற்ற தன்மைகளால் குறிக்கப்படுகிறது. உத்தியோகபூர்வ ஆவணக்காப்பகங்கள், கல்வி அமைப்புகள், ஊடக விவரிப்புகள், தேசிய நினைவுகூரல் நடைமுறைகள் ஆகியவற்றின் மீது அரசு நிறுவன ரீதியான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், தமிழ்ச் சமூகங்கள், முன்னாள் போராளிகள், உயிர்பிழைத்தவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள், அதிகாரபூர்வ அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்டு, துண்டுதுண்டான மற்றும் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாற்று வரலாறுகளைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இந்த வரலாறுகள், கண்காணிப்பு மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மையின் கீழ் அடிக்கடி நிலையற்றதாக இருக்கும் தனிப்பட்ட ஆவணக்காப்பகங்கள், கிசுகிசுக்கப்படும் கதைகள், சடங்கு ரீதியான துக்க அனுசரிப்புகள், புகைப்படங்கள், சாட்சியங்கள், நினைவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

போருக்குப் பிந்தைய அரசு, வெற்றி, தேசிய ஒற்றுமை, பயங்கரவாதத்திலிருந்து விடுதலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு மேலாதிக்கக் கதையை வலுப்படுத்த முயன்றுள்ளது. இந்தக் கட்டமைப்பிற்குள், அமைதியையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீட்டெடுத்த ஒரு மனிதாபிமான நடவடிக்கையாகப் போர் சித்தரிக்கப்படுகிறது. இராணுவம் இறையாண்மையினதும் மனிதாபிமானத்தினதும் நாகரிகத்தினதும் பாதுகாவலராகப் போற்றப்படுகிறது. புனரமைப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை நல்லிணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்குமான சான்றுகளாக முன்வைக்கப்படுகின்றன. இந்த அதிகாரபூர்வக் கதையில், போர் முடிந்துவிட்டது, தேசம் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டுவிட்டது, மேலும் வரலாறு நிலைத்தன்மை அடைந்து வளர்ச்சியை நோக்கி முன்னேறுகிறது. ஆயினும், வடக்கிலும் கிழக்கிலும், போரின் முடிவின் பொருள் வேறுவிதமாக உணரப்படுகிறது. பல தமிழ் குடிமக்களுக்கு, மே 2009 ஒரு முடிவைக் குறிக்கவில்லை, மாறாக ஒரு பேரழிவையே குறிக்கிறது. போரின் இறுதிக் கட்டங்கள், பெருமளவிலான பொதுமக்களின் இறப்பு, இடப்பெயர்வு, காணாமல் போதல், இராணுவமயமாக்கல், தீர்க்கப்படாத துக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன. 

போருக்குப் பிந்தைய காலம், வன்முறையிலிருந்து ஒரு முழுமையான முறிவைக் குறிப்பதற்குப் பதிலாக, கண்காணிப்பு, இடஞ்சார்ந்த ஒழுங்குமுறை, அதிகாரத்துவப் புறக்கணிப்பு, நினைவுக் கட்டுப்பாடு போன்ற பிற வழிகளில் போரின் தொடர்ச்சியாகவே பெரும்பாலும் உணரப்படுகிறது. எனவே, அரசால் கற்பனை செய்யப்பட்ட வரலாற்றுப் பிளவு என்பது அனைவராலும் பகிரப்படுவதில்லை. வெவ்வேறு சமூகங்கள் வெவ்வேறு வரலாற்று காலங்களில் வாழ்கின்றன. முள்ளிவாய்க்காலில், உயிர் பிழைத்த ஒருவர் இதை இவ்வாறு வெளிப்படுத்தினார்: “வெளியில் உள்ளவர்கள் போர் முடிந்துவிட்டது என்கிறார்கள். ஆனால் இங்குள்ள பல குடும்பங்களுக்கு, அது அவர்களுக்குள் இன்னும் முடிவடையவில்லை.”

அதிகாரபூர்வ முடிவுக்கும், வாழ்ந்து தொடரும் நிலைக்கும் இடையிலான இந்த வேறுபாடு, போருக்குப் பிந்தைய வரலாற்று உணர்வைப் புரிந்துகொள்வதற்கு மையமானது. போரின் “பின்” என்பது ஒரே மாதிரியாக அனுபவிக்கப்படுவதில்லை. சிலருக்கு, வரலாறு இயல்புநிலையை நோக்கி நகர்கிறது. மற்றவர்களுக்கு, அது தீர்க்கப்படாத துக்கத்திலும் நிச்சயமற்ற தன்மையிலும் இடைநிறுத்தப்பட்டு நிற்கிறது. எனவே, வரலாறு மீதான போராட்டம் என்பது காலம் மீதான போராட்டமும் ஆகும். கடந்த காலத்தை மூடிவிட முடியுமா, துக்கத்தை நிறைவு செய்ய முடியுமா, அரசியல் வன்முறையை ஒரு நிலையான தேசிய விவரிப்பாக மாற்ற முடியுமா என்பது குறித்த போராட்டமாகவே அது நிலைபெற முயல்கிறது.

போருக்குப் பிந்தைய இலங்கை, ஆவணக்காப்பகச் சமச்சீரின்மை என்று அழைக்கப்படக்கூடிய ஒன்றால் வகைப்படுத்தப்படுகிறது. ஆவணக்காப்பகங்கள் உண்மைகளின் நடுநிலையான களஞ்சியங்கள் அல்ல. அவை, எது வரலாற்று ரீதியாகத் தெரியும், எது விளிம்புநிலையில் இருக்கும் அல்லது அழிக்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தின் நிறுவனங்கள். அரச ஆவணக்காப்பகம் நிலைத்தன்மை, நிறுவன அங்கீகாரம் மற்றும் பொதுத் தெரிவுநிலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அது அருங்காட்சியகங்கள், நினைவிடங்கள், பாடப்புத்தகங்கள், உரைகள் மற்றும் சட்ட உரையாடல்கள் மூலம் நினைவுகளை ஒழுங்கமைக்கிறது. அது தேர்ந்தெடுக்கப்பட்ட விவரிப்புகளைத் தேசிய வரலாறாக உருமாற்றுகிறது.

இதற்கு மாறாக, பல ஈழத்தமிழரின் நினைவுகள் பலவீனமான, சிதறிய வடிவங்களில் நிலைத்திருக்கின்றன. குடும்பங்கள் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை இழுப்பறைகளிலும், நெகிழிப் பைகளிலும், மறைக்கப்பட்ட அலமாரிகளிலும் பாதுகாக்கின்றன. தாய்மார்கள் அரசாங்க அலுவலகங்களுக்கும் மனித உரிமை ஆணைக்குழுக்களுக்கும் பலமுறை சென்றதற்கான சான்றுகளைக் கொண்ட தேய்ந்த ஆவணங்களைச் சுமந்து செல்கின்றனர். முன்னாள் போர் வலயங்கள் முறையான அங்கீகாரம் இன்றி, அதிகாரபூர்வமற்ற நினைவு நிலப்பரப்புகளாக மாறுகின்றன. இந்த ஆவணக்காப்பகங்கள் நிறுவனமயமானவை அல்ல, மாறாக நெருக்கமானவை. பாதுகாக்கப்பட்டவை அல்ல, மாறாக எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. நினைவுகூர்தலே அரசியல் ரீதியாக உணர்திறன் மிக்கதாக மாறக்கூடிய சூழல்களில் அவை நிலவுகின்றன. 

வவுனியாவில் ஒரு பெண், காணாமல் போன தன் மகன் தொடர்பான தான் வைத்திருக்கும் ஆவணங்களைப் பற்றி விவரித்தார்: “இந்தப் பேப்பர்கள்தான் என்னட்ட மிஞ்சிக்கிடக்கு. இதை நான் துலைச்சா, அவனை இன்னொருக்கா தொலைச்சது போலதான்.” போருக்குப் பிந்தைய இலங்கையில் உள்ள ஆவணக்காப்பகங்கள் வெறும் அருவமான வரலாற்றுத் தொகுப்புகள் அல்ல. அவை உயிர்வாழ்தல், கண்ணியம், அங்கீகாரம் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்ட ஆழ்ந்த உணர்வுபூர்வமான பொருள்கள் என்பதை அவரது கூற்று வெளிப்படுத்துகிறது. அந்த ஆவணக்காப்பகம் சான்றாகவும் துக்கமாகவும் மாறுகிறது. அதே நேரத்தில், போருக்குப் பிந்தைய வரலாற்று நிலப்பரப்பில் மௌனம் ஒரு மைய இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு மௌனத்தை நினைவின் அல்லது அறிவின் இல்லாமையாகப் புரிந்துகொள்ளக்கூடாது. மாறாக, அது சமூகத்தால் உருவாக்கப்பட்ட, அரசியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒரு நிலையாகும். மக்கள் தாங்கள் வெளிப்படையாகக் கூறாத வரலாறுகளை அறிந்திருக்கிறார்கள். குடும்பங்கள் சில நிகழ்வுகளைத் தங்களுக்கு நம்பிக்கையான வட்டங்களுக்குள் மட்டுமே விவாதிக்கின்றன. முன்னாள் போராளிகள் கடந்த காலத்தைப் பற்றிய பொது விவாதத்தைத் தவிர்க்கிறார்கள். வகுப்பறைகளில் போரைப் பற்றி எவ்வாறு பேசுவது என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையை ஆசிரியர்கள் கையாளுகிறார்கள். மௌனம் என்பது உயிர்வாழ்தல், எச்சரிக்கை மற்றும் சில சமயங்களில் சோர்வின் ஒரு முறையாக மாறுகிறது.

இந்த மௌனம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது வரலாற்றுப் பரிமாற்றத்தையே வடிவமைக்கிறது. இளைய தலைமுறையினர் பெரும்பாலும் துண்டு துண்டான வரலாறுகளைப் பெறுகிறார்கள். அதாவது, இடைநிறுத்தங்கள், விடுபடல்கள் மற்றும் பொதுவில் விவாதிக்கக் கூடாதவை பற்றிய எச்சரிக்கைகளால் குறுக்கிடப்பட்ட முழுமையற்ற கதைகள். யாழ்ப்பாணத்தில், ஒரு பல்கலைக்கழக மாணவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “நாங்கள் கதைகளின் துண்டுகளைக் கேட்டு வளர்ந்தோம், முழுமையான கதையை ஒருபோதும் கேட்டதில்லை. துண்டுகளிலிருந்து புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்கிறோம்.” இந்தப் பிளவு, போருக்குப் பிந்தைய ஒரு வரலாற்று உணர்வை உருவாக்குகிறது. அது தெளிவால் அல்ல, மாறாக இருபொருள்தன்மையாலும் முழுமையின்மையாலும் குறிக்கப்படுகிறது. வெளிப்படையான விவரிப்புகளின் மூலம் மட்டுமல்லாமல், குறிப்புகள், சைகைகள், உணர்ச்சிபூர்வமான சூழல்கள் மற்றும் மௌனங்கள் மூலமாகவும் போரின் நிச்சயமற்ற நிலை நிலைத்திருக்கிறது.

எனவே, இந்தக் கட்டுரை வரலாற்றை ஒரு நிலையான அறிவுத் தொகுப்பாக அணுகாமல், போட்டி நினைவுப் பழக்கவழக்கங்களின் ஒரு களமாக அணுகுகிறது. அதிகாரபூர்வ நினைவு, ஒத்திசைவு, முடிவு, சட்டபூர்வத்தன்மை ஆகியவற்றை நாடுகிறது. எதிர்-நினைவு, பிளவு, இழப்பு மற்றும் தீர்க்கப்படாத வன்முறையைப் பாதுகாக்கிறது. சர்வதேச மனித உரிமைகள் ஆவணப்படுத்தல், சான்று, பொறுப்புக்கூறல், சட்ட அங்கீகாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மற்றொரு ஆவணக்காப்பகத்தை அறிமுகப்படுத்துகிறது. புலம்பெயர் சமூகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள், நினைவு நிகழ்வுகள், அரசியல் செயல்பாடுகள் ஆகியன மூலம் பரவும் நாடுகடந்த நினைவு வடிவங்களை உருவாக்குகின்றன. இந்த வெவ்வேறு நினைவு அமைப்புகள் ஒன்றையொன்று இடைவெட்டுகின்றன, போட்டியிடுகின்றன, சில சமயங்களில் முரண்படுகின்றன.

முக்கியமாக, வரலாறு மீதான இந்தப் போட்டி, இறையாண்மை மற்றும் அரசியல் அதிகாரம் மீதான பரந்த போராட்டங்களிலிருந்து பிரிக்க முடியாதது. போரின் விவரிப்பைக் கட்டுப்படுத்துவது என்பது, நாட்டின் தார்மீகக் கட்டமைப்பையே வரையறுப்பதாகும். எனவே, போருக்குப் பிந்தைய இலங்கையின் வரலாறு என்பது கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்ல. அது அடிப்படையில் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றியது. அது குடியுரிமை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், சொந்தம் என்ற உணர்விற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை வடிவமைக்கிறது.

சமமற்ற சமூக சீரமைப்பு, இறையாண்மையற்ற பிரதேசம் குறித்து முந்தைய கட்டுரைகளில் உருவாக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை கட்டமைக்கப்பட்டுள்ளது. மீட்சியும் இடஞ்சார்ந்த சொந்தம் என்ற உணர்வும் சமமற்ற முறையில் விநியோகிக்கப்படுவதைப் போலவே, வரலாற்று அங்கீகாரமும் அவ்வாறே உள்ளது. சில வரலாறுகள் நிறுவனமயமாக்கப்பட்டு பொதுவெளியில் நினைவுகூரப்படுகின்றன. மற்றவை பாதிக்கப்படக்கூடியவையாகவும், சிதறடிக்கப்பட்டவையாகவும், நிலையற்றவையாகவும் இருக்கின்றன. வரலாற்றுப் பார்வை என்பதே ஒருவித அதிகாரமாக மாறுகிறது.

போட்டி விவரிப்புகள், ஆவணக் காப்பக மௌனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ நினைவு நடைமுறைகளை ஆராய்வதன் மூலம், போர் அதன் முறையான முடிவுக்குப் பிறகும் எவ்வாறு தொடர்ந்து மீண்டும் எழுதப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை முயல்கிறது. போரின் போது என்ன நடந்தது என்பதை மட்டும் இது கேட்கவில்லை, மாறாக விவரிப்பு, ஆவணப்படுத்தல், நினைவுகூர்தல் ஆகியவற்றின் அரசியல் மூலம் போர் எவ்வாறு தொடர்கிறது என்றும் கேட்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், போருக்குப் பிந்தைய இலங்கை என்பது வன்முறையிலிருந்து மீண்டு வரும் ஒரு சமூகம் மட்டுமல்ல, மாறாக வன்முறையின் அர்த்தம் குறித்தே ஒரு தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு சமூகம் என்று அது வாதிடுகிறது.

பின்வரும் பிரிவுகள் இந்த இயக்கவியலை விரிவாக ஆராய்கின்றன. அடுத்த பிரிவு, போருக்குப் பிந்தைய கதையாடல் மீதான போராட்டத்தையும், போர் விளக்கப்பட்டு நினைவுகூரப்படும் போட்டிக் கட்டமைப்புகளையும் ஆராய்கிறது. அடுத்தடுத்த பிரிவுகள் உத்தியோகபூர்வ ஆவணக்காப்பகங்கள், அந்தரங்கமான மற்றும் துண்டுதுண்டான நினைவுப் பழக்கவழக்கங்கள், வரலாற்று வடிவமாக மௌனம், போரின் போட்டிக் காலங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆவணப்படுத்தலின் அரசியல் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து, போருக்குப் பிந்தைய இலங்கையில் வரலாறு முழுமையடையாததாகவும், நிலையற்றதாகவும், ஆழமாக சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.

போருக்குப் பிந்தைய கதையாடல் மீதான போராட்டம்

2009 மே மாதம் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது, அந்தப் போர் என்னவாக இருந்தது அல்லது அதன் முடிவின் அர்த்தம் என்ன என்பது குறித்த ஒரு பொதுவான புரிதல் ஏற்படவில்லை. மாறாக, போருக்குப் பிந்தைய காலகட்டம், கதையாடல் அதிகாரம் மீதான ஒரு தீவிரமான போராட்டத்தைத் தொடங்கி வைத்தது. வன்முறை, தியாகம், இறையாண்மை, பாதிக்கப்பட்ட நிலை, தேசிய பிணைப்பு ஆகியவற்றின் அர்த்தத்தை வரையறுக்கும் உரிமை யாருக்கு உண்டு என்பது குறித்த ஒரு போட்டி அது. வரலாற்றாசிரியர்கள் அல்லது அரசியல் உயரடுக்கினருக்குள் மட்டும் அடங்கிவிடாமல், இந்தப் போராட்டம் அன்றாட வாழ்வில் ஊடுருவி, பொதுச் சடங்குகள், பாடசாலைப் பாடத்திட்டங்கள், ஊடக உரையாடல்கள், நினைவு அனுசரிப்புகள் ஆகியவற்றை மட்டுமன்றி நெருக்கமான குடும்ப உரையாடல்களைக் கூட வடிவமைக்கிறது. அந்தப் போர் வெறுமனே போட்டி நிறைந்த நினைவுகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை. அது போட்டி நிறைந்த தார்மீக உலகங்களையும் உருவாக்கியது.

2009 இனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இலங்கை அரசு ஒரு மேலாதிக்கக் கதையாடல் கட்டமைப்பை நிறுவுவதில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிகாரபூர்வ உரையாடல்கள் விடுதலை, மனிதாபிமான மீட்பு, தேசிய ஒன்றிணைப்பு, பயங்கரவாதத்தின் தோல்வி ஆகிய கருப்பொருள்களை வலியுறுத்தின. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியானது, ஒரு உத்திசார் வெற்றியாக மட்டுமல்லாமல், பல தசாப்த கால வன்முறைக்குப் பிறகு நாட்டைப் பிளவுபடுவதிலிருந்து காப்பாற்றி அமைதியை மீட்டெடுத்த ஒரு நாகரிகச் சாதனையாகவும் சித்தரிக்கப்பட்டது. அரச விழாக்கள், இராணுவ நினைவுக் கொண்டாட்டங்கள், தொலைக்காட்சி ஆவணப்படங்கள், அரசியல் உரைகள் இந்தக் கதையாடலை மீண்டும் மீண்டும் வலுப்படுத்தின. பொதுமக்களைப் பாதுகாக்கவும் இறையாண்மையைப் பேணவும் மேற்கொள்ளப்பட்ட, அவசியமான, தார்மீக ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட ஒரு போராக அது சித்தரிக்கப்பட்டது. இராணுவ வீரர்கள், அவர்களின் தியாகங்களால் அமைதியையும் வளர்ச்சியையும் சாத்தியமாக்கிய தேசிய நாயகர்களாகப் போற்றப்பட்டனர். வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட வீதிகள், பாலங்கள், இரயில் பாதைகள், பொதுக் கட்டடங்கள் போன்ற புனரமைப்புத் திட்டங்கள், முன்னர் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதற்கான சான்றுகளாகக் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தக் கதையாடல் கட்டமைப்பு ஒரே நேரத்தில் பல அரசியல் செயல்பாடுகளைச் செய்தது. முதலாவதாக, அது இராணுவ வெற்றியைப் போருக்குப் பிந்தைய அரசின் தார்மீக அடித்தளமாக மாற்றியது. இரண்டாவதாக, தேசிய ஒற்றுமையின் ஒரே முறையான உத்தரவாதமாக அரசை அது நிலைநிறுத்தியது. மூன்றாவதாக, அது போரைப் பற்றிய மாற்று விளக்கங்களை பிரிவினைவாதம், தீவிரவாதம் அல்லது தேசத்துரோகம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி, அவற்றின் நம்பகத்தன்மையைச் சிதைத்தது. கொழும்பில் ஓர் அரசாங்க அதிகாரி இந்த நிலைப்பாட்டைச் சுருக்கமாக இவ்வாறு கூறினார்: “பயங்கரவாதத்தால் நாடு முப்பது ஆண்டுகளாகத் துன்புற்றது. இராணுவம் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, அமைதிக்கான சூழலை உருவாக்கியது. அதுதான் மைய உண்மை.” “மைய உண்மை” என்ற சொற்றொடர் முக்கியமானது. போருக்குப் பிந்தைய வரலாற்றுப் பேச்சு வெறும் விவரிப்பு மட்டுமல்ல. அது நெறிமுறை சார்ந்தது என்பதை அது வெளிப்படுத்துகிறது. அது ஏற்றுக்கொள்ளக்கூடிய பொது நினைவின் எல்லைகளை நிறுவுகிறது. ஆயினும், வடக்கிலும் கிழக்கிலும், இந்த உத்தியோகபூர்வமான விவரிப்பு, போரினதும் அதன் பின்விளைவுகளினதும் முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களுடன் அடிக்கடி மோதுகிறது. பல தமிழர்களிடையே, போர் முதன்மையாக விடுதலை அல்லது தேசிய மீட்சி என்ற கண்ணோட்டத்தில் நினைவுகூரப்படவில்லை, மாறாக இடப்பெயர்வு, அச்சம், இழப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் தீர்க்கப்படாத துக்கம் ஆகியவற்றின் வழியாகவே நினைவுகூரப்படுகிறது. குறிப்பாக மோதலின் இறுதி மாதங்கள், அளவற்ற பொதுமக்களின் துன்பத்துடனும் பேரழிவுடனும் தொடர்புடையதாகவே இருக்கின்றன.

முல்லைத்தீவில், ஓர் ஆசிரியர் விளக்கினார்: “அரசியல்வாதிகள் வெற்றியைப் பற்றிப் பேசும்போது, நாங்கள் வாழ்ந்த போரிலிருந்து வேறுபட்ட ஒரு போரைப் பற்றி அவர்கள் பேசுவது போல் உணர்கிறோம்.” இந்தக் கூற்று, போருக்குப் பிந்தைய இலங்கையின் வரையறுக்கும் பண்புகளில் ஒன்றான, இணை வரலாற்று யதார்த்தங்களின் இருப்பைப் பிரதிபலிக்கிறது. ஒரே நிகழ்வுகள் முற்றிலும் மாறுபட்ட தார்மீக, உணர்ச்சிபூர்வமான கட்டமைப்புகள் மூலம் விளக்கப்படுகின்றன. அரசைப் பொறுத்தவரை, மே 2009 என்பது இறையாண்மையின் மீள்நிறுத்தம், பயங்கரவாதத்தின் தோல்வி, அமைதியினதும்  அபிலாஷையினதும் தொடக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அது பெருமளவிலான பொதுமக்கள் மரணம், இடப்பெயர்வும் இழப்பும், அரசியல் அபிலாஷைகளின் சரிவு, பெருமளவில் இராணுவமயமாக்கப்பட்ட போருக்குப் பிந்தைய ஒழுங்கின் தொடக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இவை வரலாற்றைப் பற்றிய வெறும் முரண்பட்ட கருத்துகள் அல்ல. அவை சட்டபூர்வத்தன்மை என்பதைப் புரிந்துகொள்வதற்கான போட்டிக் கட்டமைப்புகளாகும்.

பொது நினைவுகூர்தல்களின் போது, கதையாடல் மீதான இந்த முரண்பாடு குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது. அரசால் வழிநடத்தப்படும் வெற்றி நாள் கொண்டாட்டங்கள், இராணுவ வீரம், தேசபக்தி ஒற்றுமை, தேசத்திற்கான தியாகம் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. இராணுவ அணிவகுப்புகள், உரைகள் மற்றும் நினைவு நிகழ்வுகள், போர் மீட்பிலும் ஸ்திரத்தன்மையிலும் முடிவடைகிறது என்ற ஒரு வெற்றிவாதக் கதையாடலை மீண்டும் உருவாக்குகின்றன. அதே நேரத்தில், தமிழரின் நினைவுகூர்தல் நடைமுறைகள் பெரும்பாலும் துக்கம், பிரிவு, இறந்தவர்களை நினைவுகூர்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. இந்த நடைமுறைகள் துக்கம், அரசியல் எச்சரிக்கை ஆகிய இரண்டாலும் வடிவமைக்கப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் பொது நினைவுகூர்தல், குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அல்லது போர்க்கால பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்பான நினைவுகூர்தல் விஷயத்தில், வரலாற்று ரீதியாகக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில், ஒரு பல்கலைக்கழக மாணவர் நினைவுகூர்தல் நிகழ்வுகளைச் சுற்றியுள்ள சூழல் குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்: “தெற்கில், அவர்கள் போரின் முடிவைக் கொண்டாடுகிறார்கள். இங்கே, மக்கள் இறந்தவர்களை அமைதியாக நினைவுகூர்கிறார்கள்.” கொண்டாட்டத்திற்கும் அமைதியான நினைவுகூர்தலுக்கும் இடையிலான இந்த வேறுபாடு, வரலாற்றுக் கதையாடல்கள் இடரீதியாக எவ்வாறு வேறுபடுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. நாட்டின் வெவ்வேறு பகுதிகள், போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் வெவ்வேறு உணர்வுபூர்வமான புவியியல்களைக் கொண்டுள்ளன. முக்கியமாக, கதையாடல் மீதான போராட்டம் அரசுக்கும் தமிழ் குடிமக்களுக்கும் இடையே மட்டுமல்ல, அது தமிழ்ச் சமூகங்களுக்குள்ளும் நிலவுகிறது. முன்னாள் போராளிகள், குடிமைச் சமூக ஆர்வலர்கள், மதத் தலைவர்கள், புலம்பெயர் குழுக்கள் மற்றும் இளைய தலைமுறையினர், போரைப் பற்றியும் அதன் மரபு குறித்தும் பெரும்பாலும் மாறுபட்ட புரிதல்களைக் கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு மாற்றான இயக்கங்களின் சில முன்னாள் ஆதரவாளர்களுக்கு, இந்தப் போர் அரசியல் இலட்சியம், கூட்டுத் தியாகம் மற்றும் அரசுக்கு எதிரான எதிர்ப்பு ஆகிய கதையாடல்களுடன் இன்னும் பிணைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களோ, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் இருந்த சர்வாதிகாரம், கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் நீடித்த இராணுவமயமாக்கலின் பேரழிவுகரமான விளைவுகள் ஆகியவற்றை வலியுறுத்தி, தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். வன்னியில் வசிக்கும் ஒரு முன்னாள் மாற்று இயக்க உறுப்பினர் விளக்கினார்: “ஒரு காலத்தில், இந்தப் போராட்டம் கண்ணியத்தையும் சுய ஆட்சியையும் கொண்டு வரும் என்று பலர் நம்பினர். ஆனால் போர் பல உயிர்களையும் அழித்தது. இரண்டுமே உண்மைதான்.” இந்த இருநிலைத்தன்மை, தமிழ் நினைவுகளை ஒருங்கிணைந்த அல்லது ஒத்திசைவானவை என எளிமையாகச் சித்தரிப்பதைச் சிக்கலாக்குகிறது. போரின் நினைவுகள் சமூகங்களுக்கு இடையில் மட்டுமல்ல, அவற்றுக்குள்ளும் பிளவுபட்டுள்ளன.

புலம்பெயர் சமூகங்கள் இந்த விவரிப்புக் களத்திற்கு மற்றொரு அடுக்கை அறிமுகப்படுத்துகின்றன. இலண்டன், டொராண்டோ, ஓஸ்லோ உள்ளிட்ட பிற இடங்களில், இலங்கையில் போருக்குப் பிந்தைய சூழலில் வாழும் குடிமக்கள் வெளிப்படுத்தும் தேசியவாதக் கண்ணோட்டங்களை விட, புலம்பெயர் சமூகங்களின் நினைவுப் பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் மோதலைப் பற்றிய வலுவான கண்ணோட்டங்களைப் பாதுகாக்கின்றன. டிஜிட்டல் ஊடகங்கள், படங்கள், உரைகள், தியாகிகளின் கதைகள், நினைவு உள்ளடக்கங்களை நாடுகடந்த வலைப்பின்னல்களில் பரப்பி, புவியியல் ரீதியாகப் பரவியிருந்தாலும் உணர்ச்சி ரீதியாகத் தீவிரமான வரலாற்று உணர்வு வடிவங்களைத் தக்கவைக்கின்றன.

இது குறித்து ஒரு வன்னிக் குடிமகன் என்னிடம் சொன்னார்: “வெளிநாடுகளில் உள்ள மக்கள் போராட்டத்தைப் பற்றி வேறுவிதமாகப் பேசுகிறார்கள். இங்கே, மக்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள், ஏனென்றால் நாங்கள் ஒவ்வொரு நாளும் அதன் விளைவுகளுடன் வாழ்கிறோம்.” ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளால் தயாரிக்கப்படும் அறிக்கைகள், பொதுமக்களின் உயிரிழப்புகள், காணாமல் போதல், தடுப்புக்காவல், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான குண்டுவீச்சு மற்றும் கூறப்படும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன. இந்த விவரிப்புகள், பொறுப்புக்கூறல், சான்றுகள் மற்றும் உரிமை மீறல்களை மையமாகக் கொண்ட சட்ட மற்றும் மனிதாபிமானக் கட்டமைப்புகளின் மூலம் உருவாக்கப்படுகின்றன.

பல உயிர் பிழைத்தவர்களுக்கு, இத்தகைய ஆவணங்கள் உள்நாட்டு நிறுவனங்களில் இல்லாத அங்கீகாரத்தை வழங்குகின்றன. காணாமல் போன ஒருவரின் தாய் இவ்வாறு விளக்கினார்: “குறைந்தபட்சம், எங்களுக்கு என்ன நடந்தது என்பதை யாரோ ஒருவர் பதிவு செய்துள்ளார்.” இருப்பினும், சர்வதேச விவரிப்புகளுக்கும் வரம்புகள் உள்ளன. அவை பெரும்பாலும், மோதலின் அரசியல், வரலாறு என்பவற்றின் சிக்கலான தன்மையை மழுங்கடிக்கக்கூடிய உலகளாவிய சட்டப் பிரிவுகளின் மூலம் துன்பத்தை வரையறுக்கின்றன. மேலும், அறிக்கைகளின் பரவல் என்பது நீதி, பொறுப்புக்கூறல் அல்லது களத்தில் பொருள்ரீதியான மாற்றமாக மாறும் என்று அவசியமில்லை.

கிளிநொச்சியில் ஒரு சமூக ஆர்வலர் இவ்வாறு குறிப்பிட்டார்: “பல அறிக்கைகள், பல விசாரணைகள், பல கூட்டங்கள் உள்ளன. ஆனால் இங்கு அன்றாட வாழ்க்கை எளிதில் மாறுவதில்லை.” ஆவணப்படுத்துதலுக்கும் உருமாற்றத்திற்கும் இடையிலான இந்த இடைவெளி, ஒரு பரந்த வரலாற்று இடைநிறுத்த உணர்விற்கு வழிவகுக்கிறது. போர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், உள்நாட்டில் சர்ச்சைக்குரியதாக உள்ளது; பகிரங்கமாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படாமல் உள்ளது. கதையாடல் மீதான இந்தப் போராட்டம், கல்வியின் மூலமும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுதல் மூலமும் வெளிப்படுகிறது. பாடசாலைப் பாடத்திட்டங்கள் பெரும்பாலும், இன மோதலின் கட்டமைப்பு சார்ந்த காரணங்களையோ அல்லது தமிழ் அரசியல் குறைகளின் சிக்கலான தன்மையையோ குறைத்து மதிப்பிடும் அதேவேளையில், பயங்கரவாதம், தேசிய ஒற்றுமை, இராணுவ வெற்றி ஆகியவற்றை வலியுறுத்தி, மோதலின் அரசை மையமாகக் கொண்ட வரலாறுகளையே மீண்டும் உருவாக்குகின்றன.

ஆசிரியர்கள் பெரும்பாலும் இந்தத் தலைப்புகளை எச்சரிக்கையுடன் கையாளுகிறார்கள். யாழ்ப்பாணத்தில், ஒரு வரலாற்று ஆசிரியர் விளக்கினார்: “பாடப்புத்தகங்களில் சில விஷயங்கள் உள்ளன, மாணவர்கள் வீட்டில் சில விஷயங்களைக் கேட்கிறார்கள். சில சமயங்களில் அவை பொருந்துவதில்லை.” எனவே, மாணவர்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த மற்றும் சில சமயங்களில் முரண்பாடான வரலாற்று கட்டமைப்புகளுக்குள் வளர்கிறார்கள். அதிகாரபூர்வ விவரிப்புகள், குடும்ப நினைவுகள், சமூக ஊடக உரையாடல்கள், புலம்பெயர்ந்தோர் சித்தரிப்புகள், உள்ளூர் மௌனங்களும் வதந்திகளும் ஆகியன பன்மைத் தன்மையுடையனவாகவும் முரண்பட்டனவாகவும் உள்ளன. இந்தத் துண்டாடல், ஒரு சீரான வரலாற்றை ஒருமித்த கருத்தின் மூலம் அல்லாமல், முழுமையற்ற மற்றும் போட்டி நிறைந்த விவரிப்புகளின் மூலம் போரை மரபுரிமையாகப் பெறும் ஒரு தலைமுறையை உருவாக்குகிறது. ஒரு பல்கலைக்கழக மாணவர் இவ்வாறு சிந்தித்தார்: “நாம் வரலாற்றின் துண்டுகளை வெவ்வேறு மூலங்களிலிருந்து அறிந்துகொள்கிறோம். முழுமையான உண்மை என்ன என்பதை அறிவது கடினம்.” இந்தச் சூழலில் “முழுமையான உண்மை” என்ற சொற்றொடரே நிலையற்றதாகிறது. போட்டி நிறைந்த விவரிப்புகள் வெறுமனே வெவ்வேறு உண்மைகளை முன்வைப்பதில்லை. அவை உண்மைகளை வெவ்வேறு தார்மீக உலகங்களுக்குள் ஒழுங்கமைக்கின்றன.

இந்த நிலையற்ற தன்மை அச்சத்தாலும் சுய தணிக்கையாலும் தீவிரப்படுத்தப்படுகிறது. மௌனம் என்பது இல்லாமையாக அல்ல, மாறாக நிச்சயமற்ற அரசியல் களத்தில் வழிசெலுத்தும் ஒரு முறையாகச் செயல்படுகிறது. தனிப்பட்ட முறையில் என்ன சொல்லலாம், பொதுவில் என்ன சொல்லலாம் என்பதற்கு இடையே மக்கள் பெரும்பாலும் வேறுபாடு காண்கிறார்கள். வடக்கைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் விளக்கினார்: “எல்லைகள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். கவனமாகப் பேசக் கற்றுக்கொள்கிறீர்கள்.” இந்தக் கவனமே வரலாற்று உரையாடலை வடிவமைக்கிறது. விவரிப்புகள் குறியீட்டு வடிவிலும், துண்டு துண்டாகவும், மறைமுகமாகவும் மாறுகின்றன. அதே நேரத்தில், மௌனம் சோர்வையும் பிரதிபலிக்கக்கூடும். சிலர், போர்க்கால அனுபவங்களை மீண்டும் நினைவுகூரத் தயக்கம் காட்டினர்; அது பயத்தினால் மட்டுமல்ல, உணர்ச்சி ரீதியான சோர்வின் காரணமாகவும் ஆகும். ஒருவர் இவ்வாறு கூறினார்: “இந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் பலமுறை பேசியுள்ளோம். சில நேரங்களில் மக்கள் உயிர் பிழைத்து, வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவே விரும்புகிறார்கள்.”

சாதாரண வாழ்க்கைக்கான இந்த விருப்பம், போருக்குப் பிந்தைய அனைத்து நினைவுகளும் அரசியல் அணிதிரட்டலை நோக்கியே அமைந்துள்ளன என்ற அனுமானங்களைச் சிக்கலாக்குகிறது. பலருக்கு, நினைவுகள் சோர்வு, நடைமுறைவாதம் மற்றும் அன்றாட உயிர்வாழ்வின் தேவைகளுடன் சேர்ந்தே இருக்கின்றன. எனவே, போருக்குப் பிந்தைய விவரிப்பு மீதான போராட்டத்தை, உண்மைக்கும் மறுப்புக்கும் இடையிலான ஓர் இருமைக்குள் சுருக்கிவிட முடியாது. அது பலதரப்பட்ட பங்களிப்பாளர்கள், காலங்கள், உணர்ச்சிப் பதிவுகள் மற்றும் அரசியல் திட்டங்களை உள்ளடக்கியது. நடந்தவை குறித்து மட்டுமல்லாமல், பின்வரும் விடயங்கள் குறித்தும் விவரிப்புகள் போட்டியிடுகின்றன:

 எவ்வகையான துன்பங்கள் பொதுவெளியில் அங்கீகரிக்கப்படுகின்றன?

 பேசுவதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது?

 எந்த மரணங்களுக்காக வருந்த வேண்டும்?

 எந்த அரசியல் அபிலாஷைகள் சட்டபூர்வமானவை?

 போரை உண்மையிலேயே முடிந்துவிட்டதாகக் கருத முடியுமா?

இந்த அர்த்தத்தில், வரலாறு என்பது குறியீட்டு மற்றும் நிறுவன வழிமுறைகள் மூலம் மோதலின் தொடர்ச்சியாக மாறுகிறது. விவரிப்பு மீதான இந்தப் போராட்டம், போருக்குப் பிந்தைய இலங்கை வரலாற்றைக் கடந்து சென்ற ஒரு சமூகம் அல்ல, மாறாக அதற்குள் ஆழமாக மூழ்கிய ஒரு சமூகம் என்பதை இறுதியில் வெளிப்படுத்துகிறது. போட்டியிடும் விவரிப்புகள் கடந்த காலத்தின் எச்சங்கள் அல்ல அவை நிகழ்காலத்தில் ஆளுகை, அடையாளம், நினைவகம் மற்றும் அரசியல் சாத்தியக்கூறுகளை வடிவமைக்கும் செயலூக்கமுள்ள சக்திகளாகும்.

உத்தியோகபூர்வ நினைவும் அரச ஆவணக்காப்பகமும்

போருக்குப் பிந்தைய இலங்கையில், வரலாறு குறித்த போராட்டம் பேச்சு, சாட்சியம் அல்லது பொது விவாதம் ஆகியவற்றின் மூலம் மட்டும் நடத்தப்படவில்லை. அது ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், நினைவிடங்கள், பாடசாலைப் பாடத்திட்டங்கள், நினைவுச் சடங்குகள், அரசாங்க வெளியீடுகள் மற்றும் அரசால் கட்டுப்படுத்தப்படும் குறியீட்டு நிலப்பரப்புகள் ஆகியவற்றின் மூலம் நிறுவனமயமாக்கப்பட்டது. இந்த நிறுவன வடிவங்கள் நினைவைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதைத் தீவிரமாக ஒழுங்கமைத்து ஒழுங்குபடுத்துகின்றன. உத்தியோகபூர்வ நினைவு என்பது, போருக்குப் பிந்தைய அரசு தனது சட்டபூர்வத்தன்மையை உறுதிப்படுத்தவும், தேசிய அடையாளத்தை உருவாக்கவும், மோதல் குறித்த ஒரு குறிப்பிட்ட விளக்கத்தை நிலைப்படுத்தவும் உதவும் மைய வழிமுறைகளில் ஒன்றாகிறது. இந்த அர்த்தத்தில், ஆவணக்காப்பகம் என்பது உண்மைகளின் ஒரு செயலற்ற களஞ்சியம் அல்ல, மாறாக அது அரசியல் அதிகாரத்தின் ஒரு கருவியாகும்.

நவீன அரசு தனது வரலாற்றுத் தொடர்ச்சியையும் தார்மீக சட்டபூர்வத்தன்மையையும் நிலைநிறுத்த ஆவணக்காப்பகங்களைச் சார்ந்துள்ளது. எது வரலாற்று ரீதியாகக் காணக்கூடியதாகிறது, எது சான்றாக வகைப்படுத்தப்படுகிறது, எது அங்கீகரிக்கப்பட்ட தேசிய நினைவின் எல்லைக்குள் நுழைகிறது என்பதை ஆவணக்காப்பகங்களே தீர்மானிக்கின்றன. போருக்குப் பிந்தைய இலங்கையில், அரச ஆவணக்காப்பகங்களும் உத்தியோகபூர்வ நினைவு நடைமுறைகளும் பிராந்திய ஒற்றுமை, இராணுவத்தின் தியாகம், பயங்கரவாத எதிர்ப்பு, தேசிய மீட்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஓர் ஒத்திசைவான கதையை உருவாக்கப் பணியாற்றியுள்ளன. இந்தக் கதையாடலின் மூலம், போரானது ஒரு சிக்கலான அரசியல் மற்றும் வரலாற்று மோதலில் இருந்து, மீட்பு மற்றும் மறுசீரமைப்பின் தார்மீக ஒழுங்குடைய ஒரு கதையாக உருமாற்றப்படுகிறது.

போர் முடிவடைந்த பின்னர் அரசின் சொல்லாடல்களில் இந்தச் செயல்முறை தெளிவாகத் தெரிந்தது. அரசாங்க உரைகள், பொதுமக்களைப் பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றுவதற்கும் தேசத்தை மீண்டும் ஒன்றிணைப்பதற்கும் நடத்தப்பட்ட ஒரு “மனிதாபிமான நடவடிக்கை” என்று இராணுவ நடவடிக்கையை மீண்டும் மீண்டும் சித்தரித்தன. பொது நினைவுகூரல்கள் வீரம், தேசபக்தி, தியாகம் ஆகியவற்றை வலியுறுத்தின. வடக்குக் கிழக்கில் உள்ள அபிவிருத்தித் திட்டங்கள், அரசின் கருணைமிக்க மறுசீரமைப்பிற்கான சான்றுகளாகக் காட்டப்பட்டன. இது, இராணுவ வெற்றியானது அமைதியையும் செழிப்பையும் உருவாக்கியுள்ளது என்ற கருத்தை வலுப்படுத்தியது. கொழும்பில் உள்ள ஓர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் விளக்கினார்: “அதிகாரபூர்வ நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நாடு பிளவிலிருந்து காப்பாற்றப்பட்டது. தேசிய அளவில் போர் இப்படித்தான் நினைவுகூரப்படுகிறது.” இந்தத் தெளிவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. அதிகாரபூர்வ நினைவகம் ஒருமைப்பாட்டை நாடுகிறது, ஏனெனில் ஒருமைப்பாடு இறையாண்மையை நிலைப்படுத்துகிறது. தெளிவின்மை, போருக்குப் பிந்தைய சட்டபூர்வத்தன்மை சார்ந்திருக்கும் தார்மீக உறுதியை அச்சுறுத்துகிறது.

அதிகாரபூர்வ நினைவகத்தின் உருவாக்கம் கதையாடல்கள் மூலம் மட்டுமல்ல, பொருள் மற்றும் நிறுவன வடிவங்கள் மூலமாகவும் நிகழ்கிறது. அருங்காட்சியகங்கள், நினைவுச்சின்னங்கள், இராணுவ நினைவிடங்கள், பொது விழாக்கள், போர் எவ்வாறு இடரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் அனுபவிக்கப்படுகிறது என்பதை வடிவமைக்கின்றன. அவை நினைவுகூர்தலின் ஒரு படிநிலையை நிறுவுகின்றன. அதில் சில வகையான துன்பங்கள் உயர்த்தப்படுகின்றன, மற்றவை குறைக்கப்படுகின்றன, உள்வாங்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. தெற்கில், போர் நினைவிடங்கள் பெரும்பாலும் வீரர்களை தேசத்தின் பாதுகாவலர்களாகச் சித்தரிக்கின்றன. இராணுவக் கல்லறைகளும் நினைவுச்சின்னங்களும் தியாகம் பகிரங்கமாகக் கௌரவிக்கப்படும் புனிதமான தேசிய இடங்களாகப் பராமரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் வெற்றி நாள் நினைவுகூரல்கள், இராணுவ அணிவகுப்புகள், உரைகள் மற்றும் தேசபக்தி நிகழ்ச்சிகள் மூலம் இந்த அடையாளபூர்வ ஒழுங்கை வலுப்படுத்துகின்றன. போர், தேசிய மீட்பின் ஒரு கதைக்குள் பொதிந்துவிடுகிறது. இதற்கு மாறாக, ஈழத்தமிழரின் துயரங்கள் அதிகாரபூர்வ நினைவுகளில் மிகவும் நிச்சயமற்ற ஒரு நிலையை வகிக்கின்றன. அது மனிதாபிமான அடிப்படையில் அங்கீகரிக்கப்படலாம், ஆனால் அரசு வன்முறை, இடப்பெயர்வு அல்லது சர்ச்சைக்குரிய இறையாண்மை ஆகியவற்றின் பரந்த அரசியல் வரலாற்றின் ஒரு பகுதியாக அரிதாகவே கருதப்படுகிறது. பொதுமக்கள் உயிரிழப்புகள் பெரும்பாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் சோகமான ஆனால் தவிர்க்க முடியாத விளைவுகளாகவே சித்தரிக்கப்படுகின்றன. இன ரீதியான ஓரங்கட்டல், போர்க்காலப் பொறுப்புக்கூறல் அல்லது இராணுவமயமாக்கல் தொடர்பான கட்டமைப்பு சார்ந்த கேள்விகள், அரசை மையமாகக் கொண்ட விவரிப்புகளில் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வை, ஆவணக்காப்பக உள்ளடக்கத்தின் அரசியல் என்று அழைக்கப்படக்கூடிய ஒன்றைப் பிரதிபலிக்கிறது. ஆவணக் காப்பகங்களும் அதிகாரபூர்வ நினைவு நடைமுறைகளும் வெறுமனே தகவல்களைச் சேமிப்பதில்லை. வரலாற்று ரீதியாக முறையான துயரமாகக் கருதப்படுவது எது என்பதை அவையே தீர்மானிக்கின்றன.

அரசால் நிதியுதவி செய்யப்படும் அருங்காட்சியகங்களிலும் இராணுவக் கண்காட்சிகளிலும் இந்தச் சமச்சீரற்ற தன்மை குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது. வடக்கிலுள்ள ஒரு இராணுவ அருங்காட்சியகத்தில், கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், சீருடைகள், தகவல் தொடர்பு சாதனங்கள், இராணுவ நடவடிக்கைகளின் புகைப்படங்கள் ஆகியவை முக்கியமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மீட்பு, இராணுவ வீரம், தொழில்நுட்ப வெற்றி ஆகியவற்றை வலியுறுத்தும் கண்காட்சிகள் வழியாகப் பார்வையாளர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். தமிழ் பொதுமக்கள், அரசியல் அதிகாரம் கொண்ட அல்லது வன்முறையின் சிக்கலான அனுபவங்களைக் கொண்ட வரலாற்றுப் பாத்திரங்களாகக் காட்டப்படாமல், பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களாகவே பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட ஒரு தமிழ்ப் பாடசாலை ஆசிரியை தனது கருத்தை இவ்வாறு விவரித்தார்: “கண்காட்சி வழியாக நடந்து செல்லும்போது, எங்களைப் போன்றவர்கள் அதில் இடம்பெறாமலேயே முழுப் போரும் விளக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.” அவரது கூற்று, ஆவணக்காப்பகப் புறக்கணிப்பின் வன்முறையைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அழித்தொழிப்பு என்பது எப்போதும் மறுப்பின் மூலம் நிகழ்வதில்லை. அது பெரும்பாலும் தனிநபர்களதும் சமூகங்களினதும் அரசியல் குரலைப் பறிக்கும் விவரிப்புகளில் உள்ளடக்கப்படுவதன் மூலமே நிகழ்கிறது.

இந்த அருங்காட்சியகம், போரின் அரசை மையமாகக் கொண்ட ஒரு தார்மீகப் புவியியலைக் கட்டமைக்கிறது, அதில் இராணுவம் தியாகத்தையும் சட்டபூர்வமான தன்மையையும் உருவகப்படுத்துகிறது, அரசு பாதுகாப்பையும் ஒழுங்கையும் பிரதிபலிக்கிறது, பொதுமக்கள் முதன்மையாக மீட்புப் பணிகளைப் பெறும் செயலற்றவர்களாக நிலைநிறுத்தப்படுகிறார்கள், தமிழ் அரசியல் வரலாறுகள் பயங்கரவாதத்தில் சுருக்கப்படுகின்றன. இந்தத் தார்மீக ஒழுங்குமுறை, மோதலின் சிக்கலான தன்மையை எளிதாக்கி, ஒரு தனித்துவமான தேசிய கதையை நிலைப்படுத்துகிறது.

பாடசாலைப் பாடத்திட்டங்கள் இந்தக் கதைக்கட்டமைப்பை மேலும் நிறுவனமயமாக்குகின்றன. வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் பொதுவாக பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகிய கருப்பொருள்கள் மூலம் மோதலைச் சித்தரிக்கின்றன. அதே நேரத்தில் இலங்கையில் இன மோதலின் ஆழமான அரசியல், மொழி மற்றும் வரலாற்று வேர்களைக் குறைத்து மதிப்பிடுகின்றன. போருக்குப் பிந்தைய தேசம், அரச இறையாண்மையின் கீழ் ஒன்றுபட்டதாகவும் நல்லிணக்கம் கொண்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தமிழ் வரலாற்று ஆசிரியர் இந்த முரண்பாடு குறித்து இவ்வாறு சிந்தித்தார்: “பாடத்திட்டத்தில் இருப்பதால் நாங்கள் சில விஷயங்களைக் கற்பிக்கிறோம்; மாணவர்கள் வீட்டில் வேறு சில விஷயங்களைக் கேட்கிறார்கள். சில சமயங்களில் இந்த இடைவெளி மிகவும் பெரியதாக இருக்கிறது.”

அதிகாரபூர்வ வரலாற்றுக்கும் வாழ்ந்த நினைவுகளுக்கும் இடையிலான இந்த இடைவெளி, இளைய தலைமுறையினரிடையே ஒரு துண்டுபட்ட வரலாற்று உணர்வை உருவாக்குகிறது. மாணவர்கள் நிறுவன அமைப்புகளில் போரின் ஒரு பதிவைக் கற்கும் அதே வேளையில், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குள் வேறுபட்ட கதையாடல்களை எதிர்கொள்கின்றனர். சில ஆசிரியர்கள் சில தலைப்புகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதன் மூலம் இதைக் கவனமாகக் கையாளுகிறார்கள். மற்றவர்கள், அதிகாரபூர்வ விஷயங்களுடன் நேரடியாக முரண்படாமல், நுட்பமான விமர்சனப் பிரதிபலிப்பு வடிவங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். ஓர் ஆசிரியர் விளக்கினார்: “நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பாடத்திட்டத்தை நீங்கள் வெளிப்படையாக எதிர்க்க முடியாது, ஆனால் சில விஷயங்கள் விடுபட்டுள்ளன என்பதை மாணவர்களும் அறிவார்கள்.” அந்த “விடுபட்டவை” வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன. இல்லாமை என்பதே ஒரு கதையாடல் கட்டுப்பாடாகச் செயல்படுகிறது.

அதிகாரபூர்வ நினைவுகள் இடரீதியாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. போருக்குப் பிந்தைய இலங்கையில் நினைவுகூர்தலின் புவியியல், யாருடைய இழப்புகளுக்காகப் பொதுவில் வருந்த வேண்டும் என்பதில் உள்ள கடுமையான சமச்சீரற்ற தன்மைகளை வெளிப்படுத்துகிறது. அரசால் ஆதரிக்கப்படும் நினைவுகூர்தல் நிகழ்வுகள் மிகவும் வெளிப்படையாகவும் நிறுவன ரீதியாகவும் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், தமிழ் நினைவுகூர்தல் நடைமுறைகள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டவையாகவோ, தற்காலிகமானவையாகவோ அல்லது அரசியல் ரீதியாக நிலையற்றவையாகவோ இருக்கின்றன.

வடக்கில், பொதுமக்கள் உயிரிழப்புகள் அல்லது தமிழ்ப் போராளிகளின் நினைவுகூர்தல் தொடர்பான நிகழ்வுகள் வரலாற்று ரீதியாக கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் அல்லது தலையீடுகளை எதிர்கொண்டுள்ளன. நினைவாற்றல் என்பது இறையாண்மையுடனும் சட்டபூர்வத்தன்மையுடனும் பிணைக்கப்பட்டிருப்பதால், பொதுத்துக்க அனுசரிப்பே அரசியல்மயமாக்கப்படுகிறது. நினைவுக் காலங்களில் நிலவும் சூழலை ஒரு பல்கலைக்கழக மாணவர் இவ்வாறு விவரித்தார்: “மக்கள் கவனமாக நினைவுகூர்கிறார்கள். துக்கம் அனுசரிப்பது கூட அரசியல் சார்ந்ததாக உணரப்படலாம்.” இந்தக் கவனமானது, இப்புத்தகம் முழுவதும் ஆராயப்படும் பரந்த நிலையைப் பிரதிபலிக்கிறது. போருக்குப் பிந்தைய காலகட்டம், நிறுவனங்கள் மற்றும் வெளியின் மூலம் மட்டுமல்லாமல், உணர்ச்சிபூர்வமான மற்றும் குறியீட்டு ரீதியான ஒழுங்குமுறையின் மூலமும் நிர்வகிக்கப்படுகிறது. அரசின் ஆவணக்காப்பகமும் அதிகாரத்துவ வகைப்பாட்டின் மூலமே செயல்படுகிறது. “பயங்கரவாதி”, “புனர்வாழ்வளிக்கப்பட்டவர்”, “காணாமல் போனவர்”, “போர் வீரர்” அல்லது “பொதுமக்கள் உயிரிழப்பு” போன்ற வகைப்பாடுகள், தனிநபர்கள் நிறுவன நினைவகத்தில் எவ்வாறு நுழைகிறார்கள் என்பதை வடிவமைக்கின்றன. இந்த வகைப்பாடுகள் அங்கீகாரத்தை மட்டுமல்ல, இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்பு, சட்டபூர்வமான தன்மை மற்றும் பொதுமக்களின் பார்வை ஆகியவற்றையும் தீர்மானிக்கின்றன. 

காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் பணியாற்றும் ஒரு சமூக ஆர்வலர் இவ்வாறு விளக்கினார்: “அரசு நிர்வகிக்கக்கூடிய வகைப்பாடுகளை விரும்புகிறது. ஆனால் பல அனுபவங்கள் அந்த வகைப்பாடுகளுக்குள் நேர்த்தியாகப் பொருந்தவில்லை.” வாழ்ந்த அனுபவத்திற்கும் நிர்வாக வகைப்பாட்டிற்கும் இடையிலான இந்தப் பொருந்தாமை, அதிகாரத்துவ நினைவகத்தின் வரம்புகளை வெளிப்படுத்துகிறது. ஆவணக்காப்பகம் சிக்கலான தன்மையை நிர்வகிப்பதற்காக அதை எளிதாக்குகிறது. அதே நேரத்தில், அதிகாரபூர்வ நினைவகம் முற்றிலும் நிலையானதாகவோ அல்லது கேள்விக்குட்படுத்தப்படாததாகவோ இல்லை. இலங்கையில் உள்ள வெவ்வேறு அரசியல் நிர்வாகங்கள் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நினைவுகூர்தல் தொடர்பான முக்கியத்துவத்தை மாற்றி வந்துள்ளன. சர்வதேச அழுத்தம், உள்நாட்டுச் செயல்பாடுகள் மற்றும் மாறிவரும் அரசியல் சூழல்கள் ஆகியவை போர்க்கால வன்முறை மற்றும் வரலாற்று அங்கீகாரம் குறித்த விவாதங்களை அவ்வப்போது மீண்டும் எழுப்புகின்றன. ஆயினும், இந்த மாற்றங்கள் அரசை மையமாகக் கொண்ட நினைவின் ஆழமான கட்டமைப்பை அரிதாகவே தகர்க்கின்றன. இராணுவ சட்டபூர்வத்தன்மை மற்றும் பிராந்திய மீட்புக் குறித்த மையக் கதை, அரசியல் மாற்றங்கள் கடந்தும் குறிப்பிடத்தக்க வகையில் நெகிழ்ச்சியுடன் நிலைத்திருக்கிறது. கொழும்பில் உள்ள ஒரு பத்திரிகையாளர் குறிப்பிட்டார்: “அரசாங்கங்கள் மொழியைச் சற்றே மாற்றலாம், ஆனால் போரைப் பற்றிய அடிப்படைக் கதை பொதுவாக அப்படியேதான் இருக்கிறது.” இந்தத் தொடர்ச்சி, சமகால இலங்கை அரசின் சட்டபூர்வத்தன்மைக்கு போர் எவ்வளவு மையமானது என்பதைப் பிரதிபலிக்கிறது. வெற்றிக் கதை போருக்குப் பிந்தைய அரசியல் அமைப்புடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது.

முக்கியமாக, உத்தியோகபூர்வ நினைவு என்பது அடக்குமுறை அல்லது புறக்கணிப்பு மூலம் மட்டுமே செயல்படுவதில்லை. அது உள்வாங்குதல் மற்றும் இயல்பாக்குதல் மூலமாகவும் செயல்படுகிறது. அபிவிருத்தித் திட்டங்கள், உட்கட்டமைப்புப் புனரமைப்பு, பொது விழாக்கள் ஆகியவை வரலாற்று முடிவை ஊக்குவிக்கும் முன்னேற்றத்தையும் முன்னோக்கிய இயக்கத்தையும் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றன. வீதிகள், தொடர்வண்டிப் பாதைகள், நகர அபிவிருத்தி ஆகியவை அமைதியினதும் புனரமைப்பின் பொருள்சார்பினதும் சின்னங்களாக மாறுகின்றன. கிளிநொச்சியில், ஒரு முதலாளி இதை இவ்வாறு விளங்கப்படுத்தினார்: “செய்தி எப்போதும் உடனடி வளர்ச்சியைப் பற்றியதாகவே இருக்கிறது. மக்கள் கடந்த காலத்தை விடுத்து எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் கருத்து.” எனவே, வளர்ச்சி குறித்த உரையாடல் ஒரு தற்காலிக உத்தியாகச் செயல்படுகிறது. அது சர்ச்சைக்குரிய வரலாறுகளிலிருந்து விலகி, நவீனமயமாக்கல்,  பொருளாதார வளர்ச்சி குறித்த விவரிப்புகளை நோக்கி நகர்வதை ஊக்குவிக்கிறது.

பல பிரதேசவாசிகள் இந்த முன்னோக்கிய உரையாடலை இருவிதமான உணர்வுகளுடன் அனுபவிக்கின்றனர். உட்கட்டமைப்பு மேம்பாடுகள் சமூகங்களுக்குப் பொருள்ரீதியாகப் பயனளித்தாலும், அவை இழப்பு, பொறுப்புக்கூறல் அல்லது வரலாற்று அங்கீகாரம் தொடர்பான கேள்விகளுக்குத் தீர்வு காண்பதில்லை. போரின் போது தன் கணவரை இழந்த ஒரு பெண் குறிப்பிட்டார்: “வீதிகள் முக்கியமானவை. ஆனால் மக்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு வீதிகள் பதிலளிப்பதில்லை.” அவரது கூற்று, வளர்ச்சி சார்ந்த நினைவின் வரம்புகளை வெளிப்படுத்துகிறது. பொருள்சார்ந்த புனரமைப்பு, தார்மீக அல்லது வரலாற்று அங்கீகாரத்திற்கு முழுமையாக மாற்றாக அமைய முடியாது.

போருக்குப் பிந்தைய இலங்கையில் அதிகாரபூர்வ நினைவகம் என்பது, நிறுவன அதிகாரம், குறியீட்டுப் புலப்பாடு, அதிகாரத்துவ வகைப்பாடு, இடஞ்சார்ந்த அமைப்பு, வளர்ச்சிசார் உரையாடல், தேர்ந்தெடுத்த உள்ளடக்கமும் நீக்கமும் ஆகிய கூறுகளின் கலவையின் மூலம் செயல்படுகிறது. இவை அனைத்தும் ஒன்றிணைந்து, மாற்று வரலாறுகளைப் பலவீனமானவையாகவோ அல்லது முழுமையற்றவையாகவோ ஆக்கும் அதே வேளையில், அரச இறையாண்மையை நிலைப்படுத்தும் ஒரு வரலாற்றுக் கட்டமைப்பை உருவாக்குகின்றன. ஆயினும், இத்தகைய விரிவான கதை மேலாண்மையின் தேவையே, அதிகாரபூர்வ ஒத்திசைவின் கீழ் உள்ள உறுதியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. மாற்று நினைவுகள், வீட்டுக் காப்பகங்கள், அமைதியான நினைவுகூரல்கள் மற்றும் தீர்க்கப்படாத துக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சி, போர் வரலாற்று ரீதியாக இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆகவே, காப்பகம் என்பது வரலாறு சேமிக்கப்படும் ஓர் இடம் மட்டுமல்ல, அது தொடர்ச்சியான அரசியல் போராட்டத்தின் ஒரு களம். நிறுவனக் காப்பகங்களிலிருந்து, போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களே பேணிவரும் துண்டு துண்டான, அந்தரங்கமான நினைவு வடிவங்களுக்கு நாம் திரும்பும்போது, இந்தப் போராட்டம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. 

ஆவணக் காப்பக மௌனங்களும் தமிழர் நினைவின் பலவீனமும்

போருக்குப் பிந்தைய இலங்கையில் உத்தியோகபூர்வ நினைவுகள் நிறுவனங்கள், நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரச ஆவணக் காப்பகங்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தாலும், தமிழ் நினைவுகள் பெரும்பாலும் மிகவும் பலவீனமான வடிவங்களில் நிலைத்திருக்கின்றன. அது சேதமடைந்த புகைப்படங்கள், மறைக்கப்பட்ட ஆவணங்கள், கிசுகிசுக்கப்பட்ட விவரிப்புகள், மங்கிவரும் கல்லறைகள், அலைபேசிப் பதிவுகள், கையெழுத்துக் கடிதங்கள் மற்றும் குடும்பங்களுக்குள் சொல்லப்படும் கதைகளில் காணப்படுகிறது. இந்த நினைவு வடிவங்கள் அரச ஆவணக் காப்பகங்களின் நிலைத்தன்மையையோ அல்லது சட்டபூர்வமான தன்மையையோ அரிதாகவே கொண்டுள்ளன. அவை சிதைவு, பறிமுதல், அச்சம், இடப்பெயர்வு, சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியவை. ஆயினும், போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் பேரழிவின் பின்விளைவுகளில் தொடர்ச்சியைப் பேண முயற்சிக்கும் மிக முக்கியமான வரலாற்றுத் தளங்களில் ஒன்றாக அவை விளங்குகின்றன.

போருக்குப் பிந்தைய தமிழரின் நினைவுகள் ஆவணக் காப்பகப் பலவீனம் என்ற நிலையால் குறிக்கப்படுகின்றன. வரலாற்று நினைவுகள் இருக்கின்றன, ஆனால் பெரும்பாலும் நிறுவனப் பாதுகாப்போ அல்லது பொதுப் பாதுகாப்போ இன்றி இருக்கின்றன. சமூகங்கள், அரசியல் ரீதியாக நிலையற்றதாகவும் உணர்ச்சி ரீதியாகச் சுமையாகவும் இருக்கும் நெருக்கமான மற்றும் பரவலான நினைவுப் பழக்கவழக்கங்கள் மூலம் வரலாறுகளைத் தக்கவைத்துக் கொள்கின்றன. மௌனமே ஆவணக்காப்பகத்தின் ஒரு பகுதியாக மாறுகிறது. வெறுமனே ஒரு வெறுமையாக இல்லாமல், பொதுவெளியில், தனிப்பட்ட முறையில், அல்லது எதை நினைவுகூரலாம் என்பதை வடிவமைக்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட சூழலாக அது விளங்குகிறது.

வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உள்ள பல வீடுகளில், ஆவணக்காப்பகங்கள் முறையான சேகரிப்புகளாக ஒழுங்கமைக்கப்படாமல், சாதாரண வீட்டுப் பொருட்கள் மூலமாகவே பாதுகாக்கப்படுகின்றன. ஒரு கட்டிலுக்கு அடியில் உள்ள பிளாஸ்டிக் பை, பூட்டப்பட்ட அலமாரி, ஒரு பழைய இரங்குப்பெட்டி, அல்லது கவனமாக மடிக்கப்பட்ட ஒரு கோப்பு ஆகியவற்றில், தொலைந்துபோன குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தடைப்பட்ட வாழ்க்கையின் எஞ்சிய தடயங்கள் இருக்கலாம். வவுனியாவில், காணாமல் போன தன் மகனைத் தேடிக்கொண்டிருந்த ஒரு தாய், ஒரு மர அலமாரிக்குள் இருந்து ஒரு சிறிய பிளாஸ்டிக் பையை எடுத்தார். அதற்குள், ஆணையங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட புகார்களின் நகல்கள், கடவுச்சீட்டு அளவுப் புகைப்படங்கள், பாடசாலைச் சான்றிதழ்கள், மங்கிய அடையாள அட்டை ஆகியவை இருந்தன. பேசுவதற்கு முன், அவர் ஒவ்வொரு ஆவணத்தையும் கவனமாகக் கையாண்டார். “அவனைப் பற்றி எனக்கு எஞ்சியிருக்கும் ஒரே விஷயங்கள் இவைதான்” என்று அவர் மெதுவாகக் கூறினார். அந்தக் கோப்புறையே காத்திருப்பின் ஓர் ஆவணக்காப்பகமாக மாறியிருந்தது. ஒவ்வொரு ஆவணமும் ஒரு முடிவைக் குறிக்கவில்லை, மாறாக மீண்டும் மீண்டும் நிகழ்தலைக் குறித்தது: அரசு அலுவலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்வது, மீண்டும் மீண்டும் சாட்சியமளிப்பது, அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடைக்கக்கூடும் என்ற மீண்டும் மீண்டும் வரும் நம்பிக்கை. அந்த ஆவணக்காப்பகம் நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்கவில்லை, அது அதைப் பாதுகாத்தது.

காணாமலாக்கப்பட்ட கணவனைத் தேடிக் கொண்டிருக்கும் பெண்ணொருத்தி போரின் இறுதி ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சுட்டிக்காட்டினாள். “சனங்கள் அவற்ற முகத்தை மறந்துவிடுவார்கள் என்று நான் பயப்படுறன். இதனாலதான் அவற்ற படத்தை வச்சிருக்கிறன்.” காணாமல் போனவர்களின் குடும்பத்தினருடனான உரையாடல்களில், மறதி குறித்த இந்த அச்சம் அடிக்கடி வெளிப்பட்டது. ஆவணக்காப்பகம் என்பது நிறுவனங்களுக்கான ஒரு சான்றாக மட்டுமல்லாமல், அழிவிலிருந்து தற்காத்துக் கொள்ளும் ஓர் அரணாகவும் மாறுகிறது. சமூக, அரசியல் சூழல் அங்கீகாரத்திற்கு உத்தரவாதம் அளிக்காததால், நினைவுகள் பொருள் வடிவில் பாதுகாக்கப்படுகின்றன. பல வீடுகளில், புகைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட முக்கிய பங்கை வகிக்கின்றன. காணாமல் போன அல்லது இறந்த உறவினர்களின் உருவப்படங்கள் கவனமாக, ஆனால் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. சில குடும்பங்கள் புகைப்படங்களை வரவேற்பறைகளில் முக்கியமாக வைக்கின்றன. மற்றவர்கள் அவற்றை மறைத்து வைத்து, நம்பகமான உரையாடல்களின் போதோ அல்லது நினைவுகூரும் தருணங்களிலோ மட்டுமே வெளியே எடுக்கிறார்கள்.

கிளிநொச்சியில், போரின் இறுதிக் கட்டங்களில் காணாமல் போன தனது கணவரின் புகைப்படங்களை எவ்வாறு கையாளுகிறார் என்பதை ஒரு பெண் விவரித்தார். “சில நேரங்களில் நான் படத்தை வெளியே வைப்பேன். சில நேரங்களில் அதை உள்ளே வைத்துவிடுவேன். அது யார் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தது.” அவரது கூற்று, எச்சரிக்கையையும், இடஞ்சார்ந்த விழிப்புணர்வால் நினைவாற்றல் நடைமுறைகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறது. நினைவுகளின் வெளிப்படைத்தன்மை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படுகிறது. பொதுவெளியில் காட்சிப்படுத்துவது உணர்ச்சிபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் அது பாதிப்புக்குள்ளாகும் தன்மையையும் உருவாக்கக்கூடும். மற்றொரு பெண் விளக்கினார்: “மக்கள் இந்த விஷயங்களை எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்று ஒருபோதும் சொல்ல முடியாது.” இந்த நிச்சயமற்ற தன்மை, போருக்குப் பிந்தைய சூழலில் நினைவுகளின் அரசியல் நிலையற்ற தன்மையைப் பிரதிபலிக்கிறது. நினைவுகூர்தலே சந்தேகத்திற்குரியதாக மாறக்கூடும், குறிப்பாக விடுதலைப் புலிகளுடனோ அல்லது போர்க்கால அணிதிரட்டலுடனோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய நபர்களுடன் இணைக்கப்படும்போது அது சிக்கலானதாகிறது.

தமிழர் நினைவின் பலவீனமானது, இடப்பெயர்ச்சியுடனும் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. போர் முழுவதும் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்த போது, பல குடும்பங்கள் ஆவணங்கள், கடிதங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை இழந்தன. குண்டுவீச்சு, தப்பி ஓடுதல், வெள்ளம், கைவிடுதல் ஆகியவற்றால் முழு வீட்டு ஆவணக் காப்பகங்களும் காணாமல் போயின. தப்பிப்பிழைப்பவை பெரும்பாலும் தற்செயலாகவே அவ்வாறு ஆகின்றன. முல்லைத்தீவில் உள்ள ஒரு முன்னாள் பாடசாலை அதிபர், பல வருட இடப்பெயர்வுக்குப் பிறகு தனது அழிக்கப்பட்ட வீட்டிற்குத் திரும்பியதை நினைவு கூர்ந்தார். “எல்லாம் சேதமடைந்திருந்தது. புத்தகங்கள், சான்றிதழ்கள், குடும்பப் புகைப்படங்கள். ஏதாவது எஞ்சியிருக்கிறதா என்ற ஏக்கத்தோடு இடிபாடுகளுக்குள் நாங்கள் தேடினோம்.” இறுதியில், அவர் தனது மகளுக்குச் சொந்தமான, பாதி எரிந்த ஒரு கொப்பியைக் கண்டுபிடித்தார். “அது ஒரு சாதாரண பாடசாலைக் கொப்பிதான், ஆனால் இதற்கு முன்பு இங்கு ஒரு வாழ்க்கை இருந்தது என்பதை அது எங்களுக்கு நினைவூட்டியதால் நாங்கள் அதை வைத்திருந்தோம்” என்று சொன்னார். 

சாதாரணமானதாகத் தோன்றும் பொருட்களின் மீதான இந்த பற்றுதல், ஆவணக் காப்பகங்கள் அதிகாரபூர்வ முக்கியத்துவத்தின் மூலம் மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமான தொடர்ச்சியின் மூலமும் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பிரதிபலிக்கிறது. அன்றாடப் பொருட்கள் பேரழிவுகளில் இருந்து தப்பிப்பிழைப்பதால் வரலாற்றுப் பொருள்களாக மாறுகின்றன. ஆவணக்காப்பகங்களின் அழிவு பரந்த சமூக விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில், நிலப் பத்திரங்கள், கல்விச் சான்றிதழ்கள், பிறப்புப் பதிவேடுகள், அடையாள ஆவணங்கள் தொலைந்து போயின அல்லது சேதமடைந்தன. இந்த இழப்பு நினைவாற்றலை மட்டுமல்ல, உரிமைகள், வாழ்வாதாரங்கள் மற்றும் நிறுவன அங்கீகாரம் ஆகியவற்றைப் பெறுவதையும் பாதிக்கிறது. மன்னாரைச் சேர்ந்த ஒரு விவசாயி சொன்னார்: “ஆவணங்கள் இல்லாமல், உங்கள் வரலாறு மறைந்துவிடுவது போலாகும். நீங்கள் யார், நீங்கள் எவ்விடத்தைச் சேர்ந்தவர் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டியுள்ளது.” இங்கு ஆவணக்காப்பகம் இறையாண்மை மற்றும் குடியுரிமையிலிருந்து பிரிக்க முடியாதது. தனிநபர்களை நிறுவனங்கள் அங்கீகரிக்கும் அடிப்படையாக ஆவணங்கள் அமைகின்றன. ஆவணக்காப்பகங்கள் துண்டாடப்படும் போது, சொந்தம் என்ற உணர்வே நிலையற்றதாகிவிடுகிறது.

அதே நேரத்தில், தமிழரின் நினைவுகள் பொருள்கள் மூலமாக மட்டுமல்லாமல், வாய்மொழிப் பரிமாற்றம் மூலமாகவும் பேணப்படுகின்றன. கதைகள் வீடுகளுக்குள், பெரும்பாலும் தேர்ந்தெடுத்தும் எச்சரிக்கையுடனும் புழங்குகின்றன. மூத்த தலைமுறையினர் இடப்பெயர்வு, ஒளிந்து கொள்ளுதல், குண்டுவீச்சு மற்றும் அச்சம் ஆகியவற்றை விவரிக்கின்றனர். ஆனால் இந்தக் கதைகள் பெரும்பாலும் மௌனத்தால் துண்டு துண்டாகின்றன. யாழ்ப்பாணத்தில், ஒரு பல்கலைக்கழக மாணவி, தன் பெற்றோரிடமிருந்து போரைப் பற்றி எவ்வாறு அறிந்துகொண்டார் என்பதைப் பற்றி இவ்வாறு நினைவுகூர்ந்தார்: “அவர்கள் ஒருபோதும் அமர்ந்து முழுக் கதையையும் சொன்னதில்லை. பல ஆண்டுகளாக சிறு சிறு துண்டுகளையே நீங்கள் கேட்கிறீர்கள்.” அவர் சற்று நிறுத்திவிட்டு மேலும் கூறினார்: “சில சமயங்களில், தாங்கள் அதிகமாகச் சொல்லிவிட்டதைப் போல, திடீரென்று நிறுத்திவிடுவார்கள்.” இந்தத் தடைப்பட்ட கதைசொல்லல், மன அதிர்ச்சியும் அரசியல் எச்சரிக்கையும் வரலாற்றுப் பரிமாற்றத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. நினைவுகள், சீரான கதைகளாக அல்லாமல், துண்டுகளின் மூலமாகவே பரிமாறப்படுகின்றன.

மற்றொரு மாணவர், சில விஷயங்கள் தன் குடும்பத்திற்குள் பெரும்பாலும் பேசப்படாமல் இருந்ததை விவரித்தார். “நடந்தவை என்ன என்பது பற்றி அனைவருக்கும் தெரிந்த சில விஷயங்கள் உள்ளன, ஆனால் யாரும் அதை நேரடியாக விளக்குவதில்லை.” இந்த மௌனத்தை மறதி என்று தவறாக எண்ணிவிடக் கூடாது. மாறாக, இது கட்டமைக்கப்பட்ட மறைத்தல் என்று அழைக்கப்படக்கூடிய ஒன்றைப் பிரதிபலிக்கிறது. அதாவது, அச்சம், சோர்வு, நிச்சயமின்மை மற்றும் பேரழிவு அனுபவங்களை முழுமையாக விவரிக்க இயலாமை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒருவகை நினைவகம். மௌனமே ஒரு வரலாற்று வடிவமாகச் செயல்படுகிறது என்று இனவரைவியல் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பொது உரையாடலில் எவை பாதுகாப்பாக நுழையலாம், எவை தனிப்பட்டதாகவோ அல்லது தெளிவற்றதாகவோ இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதன் மூலம் அது நினைவகத்தை ஒழுங்கமைக்கிறது. கிளிநொச்சியில் உள்ள ஒரு வீட்டில், ஒரு வயதான பெண்மணி போரின் இறுதி மாதங்களை மறைமுகமாக மட்டுமே விவரித்தார். குறிப்பிட்ட நிகழ்வுகளை விவரிப்பதற்குப் பதிலாக, அவர் அருகிலுள்ள ஒரு வயலை நோக்கி மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். “அங்கே பல விஷயங்கள் நடந்தன” என்றார் அவர். “இங்கே உள்ளவர்களுக்குத் தெரியும்” என்றார். அவர் விரிவாகக் கூற மறுத்தது நினைவகம் இல்லாததால் அல்ல. அது சில அனுபவங்களைத் தெளிவான விவரிப்பாக மாற்றுவதில் உள்ள சிரமத்தையும் – ஒருவேளை ஆபத்தையும் – பிரதிபலித்தது.

உணர்ச்சி ரீதியான சோர்விலிருந்தும் மௌனம் உருவாகிறது. பல பதிலளிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், ஆணையங்களிடம் போர்க்காலத் துன்பங்களை மீண்டும் மீண்டும் விவரிப்பதில் ஏற்பட்ட சோர்வை வெளிப்படுத்தினர். ஒரு சமூக ஆர்வலர் அதை இவ்வாறு விளக்கினார்: “மக்கள் தங்கள் கதைகளை பலமுறை சொல்லியிருக்கிறார்கள். சில சமயங்களில், எதுவும் மாறவில்லை என்று அவர்கள் உணர்வதால், பேசுவதை நிறுத்திவிடுகிறார்கள்.” இந்தச் சோர்வு மற்றொரு வகையான ஆவணச் சிதைவை உருவாக்குகிறது. அங்கீகாரமும் மாற்றமும் பின்தொடரத் தவறும்போது, சாட்சியம் நிலைத்திருக்க முடியாததாகிவிடுகிறது. அதேவேளை, சடங்குகள் மற்றும் நினைவுகூர்தல் வாயிலாக, பெரும்பாலும் அமைதியான அல்லது தன்னிச்சையான முறைகளில் நினைவுப் பழக்கவழக்கங்கள் நீடிக்கின்றன.

வடக்கில், போர்க்கால இழப்புடன் தொடர்புடைய நினைவுக் காலங்களில் சில குடும்பங்கள் தனிப்பட்ட முறையில் கூடுகின்றன. மெழுகுவர்த்திகள் மறைவாக ஏற்றப்படுகின்றன, பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன, புகைப்படங்கள் தற்காலிகமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. முல்லைத்தீவில், ஓர் இளைஞன், போரின்போது இழந்த உறவினர்களைத் தனது குடும்பம் எவ்வாறு நினைவுகூருகிறது என்பதை விவரித்தான். “நாங்கள் பெரிதாக எதுவும் செய்வதில்லை. நாங்கள் வீட்டிலேயே தங்கி, விளக்குகளை ஏற்றி, அமைதியாக நினைவுகூருகிறோம்.” அமைதிக்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. பெரிய பொதுச் சடங்குகளை விட, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் அந்தரங்கமான பழக்கவழக்கங்கள் மூலமே நினைவுகள் நிலைத்திருக்கின்றன.

பல குடும்பங்களுக்கு, கல்லறைகளும் புதைகுழிகளும் கூட சிதைவடையக்கூடிய நினைவு நிலப்பரப்புகளாக இருக்கின்றன. சில போர்க்காலப் புதைகுழிகள் போருக்குப் பிறகு அழிக்கப்பட்டன, மாற்றியமைக்கப்பட்டன அல்லது அணுக முடியாதபடி விடப்பட்டன. குறிப்பாக, முன்னாள் விடுதலைப் புலிகளின் கல்லறைகள் மிகுந்த சர்ச்சைக்குரிய இடங்களாக மாறின. கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு முன்னாள் குடியிருப்புவாசி, தன் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு கல்லறை அழிக்கப்பட்டது குறித்து நினைவுகூர்ந்தார். “சிலருக்கு , அந்த இடங்கள் அரசியல் சார்ந்தவையாக இருந்தன. குடும்பங்களுக்கு, அவை அன்புக்குரியவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களாக இருந்தன.” அரசியல் குறியீட்டிற்கும் தனிப்பட்ட துக்கத்திற்கும் இடையிலான வேறுபாடு மிக முக்கியமானது. நினைவுகூர்தலுக்கான அதிகாரபூர்வ அணுகுமுறைகள் பெரும்பாலும் அத்தகைய இடங்களை முதன்மையாகப் பாதுகாப்பு அல்லது கருத்தியல் கட்டமைப்புகள் வழியாகவே விளக்குகின்றன. அதேசமயம் உள்ளூர் சமூகங்கள் அவற்றை துக்கம் மற்றும் உறவுமுறையின் மூலம் அனுபவிக்கின்றன.

டிஜிட்டல் தொழில்நுட்பம் நினைவுகளைப் பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இளைய தலைமுறையினர் புகைப்படங்கள், சாட்சியங்கள் மற்றும் நினைவுப் பொருட்களைச் சேமிக்க கைபேசிகள், சமூக ஊடகத் தளங்கள் மற்றும் இணைய ஆவணக்காப்பகங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நாடுகடந்த நினைவுவெளிகளைப் பராமரிப்பதில் புலம்பெயர் சமூக வலைப்பின்னல்கள் குறிப்பாக முக்கிய பங்கு வகிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மாணவர் விளக்கினார்: “இணையத்தில், மக்கள் வெளிப்படையாகப் பேச அஞ்சும் விஷயங்களை நீங்கள் காணலாம்.” எனவே, எண்ணிம ஆவணக்காப்பகங்கள் வரலாற்றுப் பரவலுக்கான மாற்று இடங்களாகச் செயல்படுகின்றன. ஆயினும், அவை புதிய பதற்றங்களையும் அறிமுகப்படுத்துகின்றன. இணையத்தில் உள்ள தகவல்கள் பெரும்பாலும் துண்டு துண்டாக, உணர்ச்சிபூர்வமாக அல்லது அரசியல் ரீதியாகப் பிளவுபட்டவையாக உள்ளன. நினைவுகள், நெறிமுறைகள், புலம்பெயர் சமூகச் செயல்பாடுகள் மற்றும் காட்சிக் குறியீடுகள் மூலம் பெருகிய முறையில் ஊடகப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு, தமிழர் நினைவின் பலவீனம் என்பது பொருள் சார்ந்தது மட்டுமல்ல, அறிவு சார்ந்ததுமாகும். பின்வருவனவற்றைப் பற்றி தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது:

 யாருடைய விவரிப்புகள் முறையானவை? 

 எந்த வகையான சான்றுகள் கணக்கில் கொள்ளப்படும்? 

 கடந்த காலத்தை விவரிப்பதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது? 

 எந்த நினைவுகள் பொது வரலாற்றில் இடம்பெறலாம்? 

இந்த நிச்சயமற்ற தன்மையே மக்கள் தங்கள் சொந்த வரலாறுகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை வடிவமைக்கிறது. ஒரு முன்னாள் ஆசிரியர் இவ்வாறு சிந்தித்தார்: “சில நேரங்களில், எங்கள் அனுபவங்கள் நாட்டின் வரலாற்றில் இல்லாமல், குடும்பங்களுக்குள் மட்டுமே இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்.” அவரது கூற்று, அந்தரங்க நினைவிற்கும் உத்தியோகபூர்வ வரலாற்றுக்கும் இடையிலான சமச்சீரற்ற தன்மையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. சமூகங்கள், தேசிய நிறுவனங்களுக்குள் போதுமான அளவு அங்கீகரிக்கப்படாத வரலாறுகளைத் தாங்கி நிற்கின்றன. அதே நேரத்தில், இந்த அந்தரங்க ஆவணக்காப்பகங்கள் குறிப்பிடத்தக்க விடாமுயற்சியை வெளிப்படுத்துகின்றன. கண்காணிப்பு, இடப்பெயர்வு, சோர்வு, இழப்பு ஆகியவற்றையும் மீறி, மக்கள் கடந்த காலத்தின் தடயங்களைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். நிறுவனங்கள் அங்கீகாரம் அளிக்க மறுத்தாலும், தனிநபர்கள் அவற்றை முன்னோக்கி எடுத்துச் செல்ல வலியுறுத்துவதால் ஆவணக்காப்பகங்கள் நிலைத்து நிற்கின்றன.

முல்லைத்தீவில் உள்ள ஒரு கிராமத்தில், போருக்கு முன்பு உறவினர்கள் கூடியிருந்ததைக் காட்டும் சேதமடைந்த புகைப்படம் ஒன்றை ஒரு பெண்மணி கவனமாக விரித்தார். “எல்லாம் மாறுவதற்கு முன்பு இது நடந்தது” என்றார் அவர். சில கணங்கள் அந்தப் படத்தை மௌனமாக உற்றுப் பார்த்த பிறகு, அதைத் துணியால் சுற்றப்பட்ட ஒரு கோப்புறைக்குள் மீண்டும் வைத்தார். அந்தச் செயலே ஆவணக்காப்பக முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. பாதுகாத்தல் என்பது வரலாற்று உயிர்வாழ்வின் ஒரு செயலாக மாறுகிறது. எனவே, தமிழர் நினைவின் உடையக்கூடிய தன்மையை வெறும் பலவீனமாக மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. உடையக்கூடிய ஆவணக்காப்பகங்கள், சகிப்புத்தன்மையின் வடிவங்களையும் வெளிப்படுத்துகின்றன. கடினமான சூழ்நிலைகளிலும் சமூகங்கள் அவற்றைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதால்தான் அவை துல்லியமாக நீடிக்கின்றன. இந்தப் பலவீனமானது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. சிதறிக் கிடக்கும், தனிப்பட்ட, மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஆவணக்காப்பகங்கள், அதிகாரபூர்வ வரலாற்றோடு தொடர்புடைய நிலைத்தன்மையையும் சட்டபூர்வமான அங்கீகாரத்தையும் அடைவதற்குப் போராடுகின்றன. அவை நிச்சயமற்ற சூழல்களில் நிலவுகின்றன. அங்கு நினைவுகள், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுவதையும், தொடர்ச்சியான துக்க அனுசரிப்பையும் பெரிதும் சார்ந்திருக்கின்றன.

அதிகாரபூர்வ ஆவணக்காப்பகங்களுக்கும், அந்தரங்கமான மாற்று ஆவணக்காப்பகங்களுக்கும் இடையிலான இந்தச் சமமின்மையானது, இந்தக் கட்டுரைகள் முழுவதும் ஆராயப்பட்ட போருக்குப் பிந்தைய இலங்கையின் பரந்த சமச்சீரற்ற தன்மைகளைப் பிரதிபலிக்கிறது. நிலப்பரப்பும் மீட்சியும் சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டிருப்பதைப் போலவே, வரலாற்று அங்கீகாரமும் அவ்வாறே உள்ளது. ஆவணக்காப்பகம் என்பது இறையாண்மை சமமற்ற முறையில் செயல்படுத்தப்படும் மற்றொரு தளமாக மாறுகிறது. அங்கு சில நினைவுகள் நிறுவனமயமாக்கப்பட்டுப் பொதுவெளியில் பாதுகாக்கப்படுகின்றன, மற்றவை வீடுகள், கிசுகிசுக்கள், சடங்குகள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் வழியாக நிலையற்ற முறையில் உயிர்வாழ்கின்றன.

தொடரும். 



About the Author

மீநிலங்கோ தெய்வேந்திரன்

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்