“இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள் அநேகமாகத் தென்னிந்தியாவில் நிலவிய நாகரிகத்தை ஒத்ததான நாகரிகத்தையே வளர்த்தெடுத்தார்கள் என எண்ணுவது நியாயத்தின் பாற்பட்டதாகும். இத்தகைய நோக்கிற்றான் கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய இலங்கையின் வடபகுதியிற் தழைத்த நாகரிகம் பற்றி விவரிக்க முடியும். இலங்கையின் மதிப்பிட முடியாத தொல்லியற் சின்னங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் போது இத்தகைய ஆய்வுத் தடயங்கள் சான்றுகளாக நின்று இதை நிரூபிக்கும்.”
— செ. இராசநாயகம், 1921.
“It seems reasonable to consider the inhabitants of Peninsular India and Sri Lanka within the traditional framework of the Iron Age culture complex in which the erection of Megalithic structures was a common practice.”
— Kennedy, K.A.R. 1975: 6.
“The archaeological excavations at Kantarodai in 1970 by Dr Vimala Begley was the first step taken to establish that a settlement in Sri Lanka developed on an Iron Age Megalithic cultural basis. Subsequent excavations and studies have proven beyond doubt that the entire island of Sri Lanka was civilized on the adoption of a Megalithic culture during the millennium before the Common Era.”
— Siva Thiagarajah, 2016.
இலங்கையின் வரலாற்றாசிரியர்கள் மீளுரைத்த மகாவம்சம் கூறும் இலங்கை வரலாறு
தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் பரவியபோது கூடவே வரலாற்றைப் பேணும் மரபும் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பௌத்த மதம் தொடர்பான செய்திகளைப் பௌத்த விகாரைகளில் இருந்து வாய்மொழிச் செய்திகளாகப் பேணிவந்த பௌத்த குருமார், அம்மதத்திற்குத் தொண்டாற்றிய மன்னர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு, வரலாற்றுச் சம்பவங்களையும் பேணி வந்தனர். அவ்வாறு பேணப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தீபவம்சம், கி.பி. 6ஆம் நூற்றாண்டில் மகாவம்சம், அதைத் தொடர்ந்து பல குருமார்களினால் கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்கும் – கி.பி. 19ஆம் நூற்றாண்டிற்குமிடையே பல கட்டங்களில் எழுதப்பட்ட சூளவம்சம் ஆகிய பாளி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இப்பாளி இலக்கியங்கள் பௌத்த மதத்தை, அதிலும் குறிப்பாக தேரவாத மதத்தின் தோற்றம், பரவல், வளர்ச்சி தொடர்பான வரலாற்றை முன்னிலைப்படுத்திக் கூறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டெழுந்தவை. ஆயினும் அவ்விலக்கியங்களே ஈழத்தின் ஆதிகால வரலாற்றை அறிய உதவும் முதன்மை நூல்களாகப் பார்க்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் இலங்கையின் பூர்வீக மக்கள், பண்பாட்டு உருவாக்கம் தொடர்பான வரலாற்றைக் கூறுவதில் மகாவம்சம் முக்கியமான மூலாதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்நாட்டின் பூர்வீக மக்களைப் பற்றிக் கூறும் மகாவம்சம், கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து வந்த விஜயன் தலைமையில் குடியேறிய அவனது 700 தோழர்களுடன் இலங்கையின் மனித வரலாறும், நாகரிக வரலாறும் தொடங்கியதாகக் கூறுகிறது (Mahavamsa Ch. vi-vii: 51-55). இவர்களது வருகைக்கு முன்னர் இந்த நாட்டில் வாழ்ந்த மக்களை இயக்கர், நாகர் என இந்நூலும், ஏனைய பாளி நூல்களும் குறிப்பிட்டாலும், இலங்கையின் மூத்த வரலாற்று அறிஞர்கள் அவர்களை மனிதப்பிறவிகள் அல்லாத ‘அமானுஜர்கள்’ என்றே விளக்கம் அளித்துள்ளனர் (Mendis, G.C. 1943:9; Paranavitana, S. 1961:181).
“The Yakshas and the Nagas mentioned in Buddhist works of this time do not refer to human beings” (Footnote 3) – G.C. Mendis, 1943, page 9.
“In the Mahāvamsa and the Manimēkalai, as indeed in the ancient Sanskrit and Pāli literature in general, the Nāgas are never represented as human beings, but as a class of superhuman beings who inhabited a subterranean world, whose normal form was that of serpents, but who could assume any form at will. Certain places in the world of men, such as Nāgadīpa and Kalyāni in Ceylon, are also mentioned as their abodes, but the fact that they were not regarded as human beings is proved by the statement in the Mahāvamsa that at the time of the Buddha’s visit to Nāgadīpa and other places in Ceylon, there were no human beings in Ceylon (Mahavamsa Ch. xv, verse. 164)” – Paranavitana, 1961: page 181.
இதன் மூலம் விஜயன் வழிவந்த சிங்கள மக்களே இலங்கையின் பூர்வீக மக்கள் என்றும், அவர்களுடனேயே இலங்கையின் மனித வரலாறும், நாகரிக வரலாறும் தொடங்குகிறது என்றும் கருத்தாக்கங்கள் இவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
விஜயனின் வரலாறும் சிங்கள மக்களின் தோற்றமும்
அரசகுமாரன் விஜயனதும் அவனது 700 தோழர்களினதும் வரலாறு கி.பி. 4ஆம் – 6ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் எழுதப்பட்ட பாளி இலக்கியங்களில் இடம்பெறுகிறது. முதலில் தீபவம்சத்தில் சிறுகதையாக எழுதப்பட்ட இவ்வரலாறு (Dipavamsa – Law, B.C. 1957), பின்னர் மகாவம்சத்தில் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது (Mahavamsa Ch. VI, VII – Geiger, W. 1950).
வட இந்தியாவில் வங்க நாட்டை (Bengal in East India) ஆட்சி செய்த அரசனுக்கும், கலிங்கத்தைச் சேர்ந்த (Orissa, also in East India) அரசிக்கும் அழகான மோகங்கொள்ளக்கூடிய ஒரு மகள் இருந்தாள். அவளது நடத்தையை பெற்றோர் கண்டித்ததை அடுத்து அவள் அவர்களது அரண்மனையை விட்டு வெளியேறி வர்த்தகர்களின் ஒரு பயணக்குழுவைச் சேர்ந்துகொண்டாள். அவர்களுடன் மகத நாட்டுக்குச் செல்லும் காட்டுப்பாதையில் லாலா என்ற இடத்தில் ஒரு சிங்கம் (Sinha) அவளைக் கண்டு ஆசைகொண்டு அவளைத் தூக்கிக்கொண்டு தனது குகைக்கு எடுத்துச் சென்றது. அக்குகையில் அச்சிங்கம் அவளைக் கட்டுப்படுத்தி மனைவியாக்கி குடும்பம் நடத்தியது. அவளுக்கு சிஹபாகு என்ற மகனும் சிஹசீவலி என்ற மகளும் பிறந்தார்கள்.
சிஹபாகுவுக்கு 16 வயதானபோது தனது தாயையும், தங்கையையும் அழைத்துக்கொண்டு சிங்கத்தின் குகையிலிருந்து தப்பியோடினான். கோபங்கொண்ட சிங்கம் அருகிலிருந்த கிராமங்களை அழித்து நாசமாக்கியது. இதை அறிந்த இளைஞன் சிஹபாகு அச்சிங்கத்தைக் கொன்று நாலாயிரம் தங்கக் காசுகள் பரிசாகப் பெற்றான். தான் பிறந்த இடமான லாலாவுக்கு மீண்ட சிஹபாகு அங்கே சிஹபுர என்ற பெயரில் ஒரு நகரம் அமைத்து அதற்கு அரசனானான். தனது தங்கை சிஹசீவலியை மணந்துகொண்ட சிஹபாகுவிற்கு 32 மகன்கள் பிறந்தார்கள். அவர்களில் மூத்தவனான விஜயன் பட்டத்து இளவரசனானான்.
இளவரசன் விஜயன் தீய நடத்தை கொண்டவனாக இருந்தான். அவனது நண்பர்களும் சகிக்க முடியாத வன்முறைச் செயல்கள் கொண்டவர்களாக இருந்தார்கள். அரசன் சிஹபாகு விஜயனையும் அவனைப் பின்பற்றும் 700 தோழர்களையும் நாடுகடத்தி துரத்திவிட்டான். அவர்கள் லாலாவிலிருந்து கப்பல் எடுத்து தெற்கு நோக்கிப் பயணமானார்கள். வழியில் சுப்பாரகா என்ற துறையில் சில காலம் தங்கினார்கள். அங்கும் அவர்கள் மேற்கொண்ட துர்நடத்தை காரணமாக உயிருக்குப் பயந்து திரும்பவும் கப்பல் எடுத்துச் சென்றார்கள். இறுதியில் அவர்களது கப்பல் இலங்கையை புத்தபிரான் ‘நிப்பான’ அடைந்த நாளில் சென்றடைந்தது. அவர்கள் இலங்கையைச் சென்றடைந்த இடமான தம்பபண்ணியில் விஜயன் ஒரு நகரத்தை அமைத்தான்.
விஜயன் அங்கே சந்தித்த பழங்குடியினரான இயக்கர்களின் இளவரசி குவன்னாவை (குவேனி) திருமணம் செய்துகொண்டான். அவளது துணையோடு அங்கிருந்த இயக்க சமூகத்தை அடக்கியாள முடிந்தது. அவர்களுக்கு ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள் பிறந்தார்கள். இயக்க மனைவியுடன் அரசனாக முடிசூட்ட முடியாது என்பதால் மதுரையிலிருந்து ஒரு பாண்டிய இளவரசியை வரவழைத்து, திருமணம் செய்து விஜயன் அரசனாக முடிசூடிக்கொண்டான். தனது 700 நண்பர்களுக்கும், பாண்டியக் கன்னியர்களை வரவழைத்து மணம் செய்வித்தான். விஜயனதும் அவனது நண்பர்களினதும் வம்சத்தினரே பிற்காலத்தில் சிங்கள மொழி பேசும் சிங்கள மக்களானார்கள்.
விஜயன் இலங்கைக்கு வந்த சமயம் இங்கிருந்த பூர்வீக மக்கள் பற்றி பாளி இலக்கியங்கள் கூறும் வரலாறுகள் புராணக் கதைகள் போன்று இருக்கின்றன. தீபவம்சம் தரும் தகவல்களின்படி (Dipavamsa Ch.1: 19-21, Law 1959), இலங்கைக்கு விஜயன் வருவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த குடிமக்கள் ஆவிகள் மற்றும் பேய்கள் ஆவர் (Spirits and Demons). மகாவம்சம் இங்கு வாழ்ந்த மக்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் கொண்டவர்கள் எனக் கூறுகிறது.
விஜயனும் அவனது தோழர்களும் பாண்டிய நாட்டிலிருந்து பெண்களைப் பெற்றுக்கொண்ட போதும் வட இந்திய சிங்கபுரத்துடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்தார்கள் என பாளி இலக்கியங்கள் உரைக்கின்றன. விஜயன் அரச வாரிசு எவரும் இல்லாமல் இறந்தபோது இலங்கையிலிருந்த வடஇந்தியக் குடியேற்றத்தார் விஜயனின் பிறந்த நகரான சிங்கபுரத்திற்கு தூதுவர்களை அனுப்பி, விஜயனின் மருமகனான பாண்டுகஅபயன் என்பவனை இலங்கையின் அடுத்த அரசனாக அழைத்து வந்தார்கள்.
பாளி இலக்கியங்கள் அடுத்துப் பரிந்துரைப்பது என்னவெனில் விஜயனின் அரசுக்குப் பின்னர் இத்தீவில் பல சிறிய சுதந்திர அரசுகள் இருந்ததாகவும், பாண்டுகஅபயன் அவற்றையெல்லாம் ஒன்றாக்கி அநுராதபுரக் குடியேற்றத்தை நாட்டின் தலைநகரமாக ஆக்கினான் என்பதாகும். பாண்டுகபாயன் அநுராதபுர நகரத்தைச் சுற்றிவரப் பாதுகாப்பு அரண்கள் அமைத்து, புதிய புறநகர் குடியிருப்புகளையும் ஏற்படுத்தினான். குளங்களை அமைத்து விவசாயத்தை வளர்த்தான். தனது மாமனை நகரக் காவலனாகவும், சண்டாளர்களை நகர சேவைகளைப் புரிபவர்களாகவும் ஆக்கினான்.
பாளி இலக்கியங்கள் கூறும் முக்கியமான தகவல், மூன்றாம் நூற்றாண்டில் பாண்டுகஅபயனின் பேரனான தேவநம்பியதீசன் காலத்தில் மௌரிய சக்கரவர்த்தி அசோகனின் மகனான மகிந்தர் தலைமையில் பௌத்த சமயப் பரப்புரைக் குழு இந்த நாட்டை வந்தடைந்ததாகும்.
பாளி இலக்கியங்களான தீபவம்சம், மகாவம்சம் இரண்டிலும் கூறப்படும் இலங்கையில் ஆரியர்களின் இடப்பெயர்வும் குடியேற்றமும் அந்நூல்கள் எழுதப்படுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுக்காலமாக எவ்வாறு இந்த வரலாறு சேகரிக்கப்பட்டிருந்தது என்பது அந்நூல்களில் கூறப்படவில்லை.
விஜயன் கதையின் மூலம்
மகாவம்சம் கூறும் விஜயனின் கதை முதலில் நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தீபவம்சத்தில் கூறப்பட்ட கதையின் விரிவாக்கம் ஆகும். அக்கதை தீபவம்சத்தில் இவ்வாறு ஆரம்பிக்கிறது (Dīpavamsa Ch. IX: 1): “லங்கா தீவு சிங்கத்தை (sīha) ஆதாரமாகக் கொண்டு சீஹல என அழைக்கப்பட்டது. இத்தீவின் தோற்றம் பற்றிய கதையைக் கூறுகிறேன், கேளுங்கள்”.
தீபவம்சம் கி.பி. நான்காம் நூற்றாண்டில் அநுராதபுர மகாவிகாரையில் வாழ்ந்த பௌத்த குருமாரினால் எழுதப்பட்டது. இலங்கைத் தீவின் குடியேற்ற ஐதீகம் பற்றி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆக்கப்பட்ட ஒரு கதை ‘திவ்வியவதன’ என்ற பௌத்த அவதான நூலில் இடம்பெறுகிறது. விஜயனின் கதை இதிலிருந்து மாற்றியமைக்கப்பட்டதாக ஒரு கருத்து உள்ளது.
திவ்வியவதன கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் ஆக்கப்பட்ட ஆதிகால பௌத்த ஐதீகக் கதைகளைக் கொண்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு E.B. கொவெல், R.A. நீல் என்னும் இரு பல்கலைக்கழக ஆசிரியர்களால் எழுதப்பட்டு 1886ஆம் ஆண்டில் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தினரால் வெளியிடப்பட்டது. இந்த நூலின் 523-529ஆம் பக்கங்களில் இக்கதை கூறப்படுகிறது:
ஜம்புதுவீபத்தைச் சேர்ந்த பெரிய வியாபாரியான சிம்ஹவின் மகனான சிம்ஹள என்பவன் இரத்தினங்களைத் தேடி இலங்கைக்கு தனது நண்பர்களுடன் வருகிறான். இலங்கைக்கு வந்த சிம்ஹளவும் அவனது நண்பர்களும் இங்கே வாழ்ந்த இராட்சதருடன் தங்கி வாழ்கிறார்கள். சில காலம் செல்ல, தமது கள்ளக்காதலிகளின் தூண்டுதலினால் இராட்சதர்களால் அவர்கள் சிறைப்படப் போவதை அறிந்ததும், சிம்ஹளவும் அவனது நண்பர்களும் பறக்கும் குதிரையொன்றின் உதவியுடன் இலங்கையிலிருந்து தப்பிச் செல்கின்றனர். நாளடைவில் சிம்ஹள தனது நாட்டின் அரசனாகிறான். தனது நாட்டிலிருந்து ஒரு பெரும் படையைச் சேர்த்துக்கொண்டு இலங்கைக்குப் படையெடுத்து வருகிறான். இங்கிருந்த இராட்சதரைத் துரத்திவிட்டு இலங்கையில் புதிய அரசை உருவாக்குகிறான். அன்றிலிருந்து இந்த நாடு சிம்ஹளத்வீப (Simhaladvipa) என அழைக்கப்படுகிறது (Divyavadāna 1886, XXXVI: p. 528).
இலங்கைத் தீவு பாளி மொழியில் சீஹல என அழைக்கப்பட்டமைக்கு மற்றுமொரு விளக்கம் உள்ளதை சில ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். இலங்கைத் தீவிற்கு ‘ஹெலதிவி’ (ஹெலதீவு) என்றொரு பெயர் உள்ளது. இது சிகிரியா எழுத்துப் பதிவுகளிலும் காணப்படுகிறது. இன்று இலங்கை ‘ஸ்ரீலங்கா’ என அழைக்கப்படுவதைப் போல முற்காலத்தில் ‘ஸ்ரீஹெல’ என அழைக்கப்பட்டது. பாளி மொழியில் அது ‘சீஹெல’ ஆயிற்று. அதைத்தொடர்ந்து இந்த நாடும் நாட்டு மக்களும் ‘சிஹல’ ஆனார்கள்.
‘சிஹல’ என்ற பதம் பதிவு செய்யப்பட்ட ஆதிப் பெயர் ஆந்திரப் பிரதேசத்திலிருந்த ‘சிஹல விஹார’ ஆகும். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து சென்ற பௌத்த குருமார்கள் அங்கே தங்கியிருந்ததனால் அப்பள்ளிக்கு இப்பெயர் கொடுக்கப்பட்டது. இந்த ஆரம்பத்தை உணராத பௌத்த குருமார்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டில் சீஹல என்ற பதம் சிங்கத்தைக் குறிப்பிடுவதாக எண்ணி, இலங்கையினதும் இலங்கை மக்களின் வரலாற்றிலும் எப்படியாவது சிங்கத்தைத் திணிக்க எண்ணி விஜயனின் கதையைச் சிருஷ்டித்தார்கள்.
இலங்கையின் பாளி நூல்களில் தமிழர், தமிழ் மன்னர்கள், அவர்களது மதங்கள் தொடர்பான வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆயினும் இவர்களை இலங்கைக்குரிய மக்களாகக் குறிப்பிடாது அக்கரையில் இருந்து (தமிழகத்தில் இருந்து) வணிகராக, படையெடுப்பாளராக, ஆக்கிரமிப்பாளராக வந்துபோன அந்நியர் எனக் குறிப்பிடுகின்றன. விஜயனும் அவனது 700 தோழர்களும் வடஇந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறியதாகப் பாளி இலக்கியங்களால் கூறப்படுகின்றமை, சிங்கள மக்களின் மூதாதையினர் வடஇந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு அடிப்படை ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. அதே பாளி இலக்கியங்களால் விஜயனுக்கும் அவனது 700 தோழர்களுக்குமான மணப்பெண்களும், 18 வகைத் தொழில் தெரிந்த 1000 குடும்பங்களும், தமிழ்நாட்டிலிருந்து (பாண்டிய நாட்டிலிருந்து) வந்து இலங்கையில் குடியேறியதாகக் கூறப்படுகின்றமை, விஜயன் காலத்திலேயே தமிழர்களின் மூதாதையினர் தமிழ்நாட்டிலிருந்து வந்ததற்கு ஆதாரமாகக் கொள்ளப்படவில்லை. இதனால் இலங்கை வரலாற்று நூல்களில் பாளி இலக்கியக் கருத்துகளே தற்காலம்வரை செல்வாக்குச் செலுத்தி வருகின்றன (புஷ்பரட்ணம், ப. 2017: 3-4).
1959ஆம் ஆண்டில் பேராசிரியர் பரணவிதான பதிப்பாசிரியராக இருந்து இலங்கைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘இலங்கை வரலாறு’ (History of Ceylon, Vol. 1, Part 1) என்ற நூலில், ‘வரலாற்றுக் காலத்தில் அண்டை நிலப்பகுதிகளிலிருந்து இத்தீவின் இறையாண்மைக்காக சிங்கள மக்களுடன் பல தடவைகள் போரிட்ட திராவிடர்கள், இத்தீவில் முதல் ஆரியக் குடியேற்றங்கள் ஏற்பட்டபோது இங்கே இருந்தார்கள் என்பதற்கு எதுவிதமான ஆதாரமும் இல்லை’ எனக் கூறியிருந்தார்.
இதே பேராசிரியர் பரணவிதான 1967ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘சிங்ஹலயோ’ (Sinhalayo) என்ற நூலில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்: “பெருங்கற்கால மையங்களும், தாழிப்புதையல் கழனிகளும் திராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளிலெல்லாம் காணப்படுகின்றன. அவர்களின் சாட்சிகளாக இருக்கும் ஈமச்சடங்கு வழக்கங்கள் ஆதிகால தமிழ் இலக்கியங்களிலே சுட்டிக்காட்டப்படுகின்றன. எனவே கற்பதுக்கைகளிலும், கல்லறைகளிலும், மற்றும் பெரிய தாழிக் குடங்களிலும் தங்களது இறந்தவர்களைப் புதைத்தவர்கள் இத்திராவிடர்கள் என உய்த்துணர்வது நியாயமானதே.”
அக்காலத்தில் மேற்கூறிய கருத்தை பேராசிரியர் பரணவிதான பொதுப்படையாக திராவிட மக்கள் வாழும் பிரதேசங்களைக் குறித்துக் குறிப்பிட்டாரே ஒழிய, குறிப்பாக இலங்கைத் தமிழரை நோக்கி இது கூறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
2005ஆம் ஆண்டில், 1980இல் முதலில் வெளிவந்த தனது ‘ஸ்ரீலங்காவின் வரலாறு’ (A History of Sri Lanka) என்ற நூலின் புதிய பதிப்பை வெளியிட்ட பேராசிரியர் கே.எம். டி. சில்வா, நூலின் ‘காலனித்துவவாதிகளும் குடியேறிகளும்’ என்ற முதல் பகுதியில் இந்தத் தீவில் இ.மு. 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதக் குடியிருப்புகள் ஏற்பட்டு, இ.மு. 34,000 ஆண்டுக் காலத்தில் இம்மனிதக் குடியேற்றங்களின் தெளிவான ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும், மகாவம்சம் கூறும் கி.மு. 5ஆம் நூற்றாண்டின் இந்தோ-ஆரிய காலனித்துவமே (Indo-Aryan Colonization) இந்நாட்டின் நாகரிகத்திற்கு வித்திட்ட முக்கியமான நிகழ்வு எனக் கூறியிருந்தார் (De Silva, K.M. 2005: 6-9).
திருப்புமுனை ஒன்று
கலாநிதி விமலா பெக்லி: பெருங்கற் பண்பாட்டைப் பேணி வளர்ந்த குடியிருப்பு மையம்
Vimala Begley (1974): Excavations of Iron Age Settlements at Kantarodai 1970, Iowa City, (Unpublished).
Vimala Begley (1973): ‘Protohistoric Material from Sri Lanka (Ceylon) and Indian Contacts’ in Ecological Backgrounds of South Asian Prehistory, Ed. Kenneth A.R. Kennedy and Gregory Possehl, South Asian Occasional Papers and Thesis, Cornell University, pp. 190-196.
——————————————————————
இலங்கையின் தொல்லியல் வரலாற்றில் முதன்முதலாக ஒரு ‘மக்கள் குடியிருப்பான கந்தரோடை தென்னிந்திய மாதிரியான பெருங்கற் பண்பாட்டைக் கடைப்பிடித்து அதன் படிமுறை வளர்ச்சியால் நகரமயமானதொரு மையம்’ என எடுத்துக்காட்டியவர் அமெரிக்க பென்சில்வேனியப் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வாளர் கலாநிதி விமலா பெக்லி. இந்த அகழ்வாய்வில் அவரோடு இணைந்து செயலாற்றியவர்கள் அமெரிக்காவில் சிக்காகோ அருங்காட்சியகக் காப்பாளராகப் பணியாற்றிய டாக்டர் பென்னெற் புரொன்சன், மற்றும் டாக்டர் முகம்மது மாறூவ். இந்த மூவருமே பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்திலிருந்து தத்துவக் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்ட சக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
——————————————————————
இலங்கையில் பொம்பரிப்பிலும், கந்தரோடையிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் அமெரிக்காவின் பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகத்தின் தென் ஆசியப் பிரிவினரால் இலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட கால – வரலாற்று உதயகாலக் கற்கையின் பொருட்டு ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கான நிதியை பென்சில்வேனிய பல்கலைக்கழக அருங்காட்சியகத்தினர் ஒழுங்கு செய்திருந்தார்கள். 1967ஆம் ஆண்டில் பென்சில்வேனிய பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் உதவிக் காப்பாளராகவிருந்த கலாநிதி விமலா பெக்லி முதலில் ஒரு தொல்லியல் மேலாய்வு செய்யும் பொருட்டு பொம்பரிப்பு, கந்தரோடை ஆகிய இரு இடங்களுக்கும் வந்து மேலாய்வுகளை மேற்கொண்டார். அவரது தொல்லியல் மேலாய்வுகளின் அறிக்கை 1967ஆம் ஆண்டின் பல்கலைக்கழகச் சஞ்சிகையான ‘Expedition’ இல் வெளிவந்தது.
1969ஆம் ஆண்டில் டாக்டர் விமலா பெக்லி பென்சில்வேனியப் பல்கலைக்கழக அருங்காட்சியக உதவிக் காப்பாளர் பதவியிலிருந்து விலகியிருந்தார். ஆனாலும் அகழ்வு செய்யும் காலத்தில் அகழ்வைத் தான் ஏற்று நடத்துவதாக உறுதியளித்திருந்தார். பொம்பரிப்பு – கந்தரோடை அகழ்வாய்வுகள் 1970ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஒழுங்கு செய்யப்பட்டது. இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளராகவிருந்த ராஜா டி. சில்வா அதற்கான அனுமதியை வழங்கியிருந்தார். அகழாய்வுகளை கலாநிதிகள் விமலா பெக்லி, பென்னெற் புரொன்சன், மொகமெட் மாறூவ் ஆகிய மூவரும் மேற்கொண்டார்கள். பொம்பரிப்பு அகழ்வாய்வில் கண்ட சில கபாலங்களையும் எலும்புகளையும் அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்று அவற்றைப் பகுப்பாய்வு செய்ய மானிடவியலாளர் டாக்டர் கென்னெத் கென்னெடி ஒப்புக்கொண்டிருந்தார்.
1974ஆம் ஆண்டு மே மாதம் டாக்டர் விமலா பெக்லி கந்தரோடை, பொம்பரிப்பு மையங்களின் அகழ்வாய்வு அறிக்கைகளையும், அவற்றோடு டாக்டர்கள் கென்னெடி, லூக்காக்ஸ் ஆகியோரின் பொம்பரிப்பு அறிக்கைகளையும் இணைத்து இலங்கைத் தொல்லியல் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்தார். அவர் அந்த அறிக்கைகளை அனுப்பி சரியாக ஏழு ஆண்டுகளின் பின்னர், 1981ஆம் ஆண்டு மே மாதம் வெளியான இலங்கைத் தொல்லியல் திணைக்களச் சஞ்சிகையான ‘Ancient Ceylon No. 4’ இல் ‘Excavations of Iron Age Burials at Pomparippu, 1970’ என்ற அறிக்கை வெளிவந்தது. ஆனால் அவர் சமர்ப்பித்த ‘Excavations of Iron Age Settlements at Kantarodai, 1970’ என்ற அறிக்கையை இலங்கைத் தொல்லியல் திணைக்களம் வெளியிடவில்லை.
1977ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளராகவிருந்த கலாநிதி சிரான் தெரனியகல, கந்தரோடை அகழ்வாளராகவிருந்த டாக்டர் பென்னெற் புரொன்சனைத் தொடர்புகொண்டு கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுத்த தொல்பொருட்களின் கதிரியக்கக் கரிமத் திகதிகளைப் பெற்றுக்கொண்டார். அக் கால அட்டவணை கலாநிதி இரகுபதியின் ‘யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடியிருப்புகள்’ நூலில் கீழ்க்கண்டவாறு வெளிவந்தது.

கந்தரோடையில் பென்சில்வேனியப் பல்கலைக்கழகக் குழுவினர் மேற்கொண்ட விஞ்ஞானபூர்வ அகழ்வில் வெளிக்கொணர்ந்த தொல்பொருட்களின் கதிரியக்கக் கரிம தேதிக் கணிப்பு. Courtesy: Bennet Bronson & Siran Deraniyagala
விமலா பெக்லியின் கந்தரோடை பற்றிய விரிவான தொல்லியல் அறிக்கையை அன்றைய இலங்கை அரசின் வேண்டுகோளின் பேரில் இலங்கைத் தொல்லியல் திணைக்களம் வெளியிடாது விட்ட போதிலும், அந்த ஆய்வின் முக்கியமான பகுதிகள் 1973இல் வெளியான அவரது ஒரு கட்டுரையில் வெளிவந்திருந்தன (Begley, V. 1973: 191-196).
இந்த ஆய்வின்போது தற்போது பௌத்த ஸ்தூபங்கள் காணப்படும் இடங்களுக்கு அருகில் நான்கு மீட்டர் ஆழத்தில் இரு ஆய்வுக்குழிகள் அமைக்கப்பட்டு அகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இன்றைய நிலமட்டத்திலிருந்து நான்கு மீட்டர் ஆழத்திற்குக் குடியிருப்பு எச்சங்கள் காணப்பட்டன. அதன் அடிப்பகுதியில் பெருங்கற் பண்பாட்டுக்கு உரிய வரலாற்று உதயகாலப் படையும், அதைத் தொடர்ந்து வரலாற்றுத் தொடக்ககாலப் படையும் அடையாளம் காணப்பட்டன. பொம்பரிப்பு, அநுராதபுரம் ஆகிய இடங்களில் இடைக்கற்காலப் (Mesolithic) பண்பாட்டை அடுத்து ஆதி இரும்புக்காலப் பெருங்கற் பண்பாடும், அதையடுத்து வரலாற்றுத் தொடக்ககாலப் பண்பாடும் காணப்பட்டன. ஆனால் கந்தரோடையில் இடைக்கற்காலப் பண்பாட்டுக்குரிய சான்றுகள் காணப்படாது பெருங்கற் பண்பாடும், அதையடுத்து வரலாற்றுத் தொடக்ககாலப் பண்பாடும் காணப்பட்டன. இதிலிருந்து யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியிருப்பு பெருங்கற்காலப் பண்பாட்டுடன் ஆரம்பமானதை அறிய முடிகிறது.
இந்த அகழ்வின்போது வெவ்வேறு வகையான கலாசாரப் படைகள் இனங்காணப்பட்டன. வரலாற்று உதயகால கலாசாரப்படையில் (கலாசாரப்படை மட்டம் ஒன்று) பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (Megalithic Black-and-Red Ware) காணப்பட்டன. அதற்கு மேலுள்ள கலாசார மட்டத்தில் வரலாற்றுத் தொடக்ககாலச் சின்னங்களுடன் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் காணப்பட்டன. அதற்கும் மேலுள்ள மூன்றாவது கலாசாரப்படையில் பெருங்கற் பண்பாட்டு கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களுடன் உரோம றூலெட்டெட் மட்பாண்டங்கள் (Rouletted Ware), மற்றும் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஓடுகள் என்பன காணப்பட்டன. நான்காவது கலாசாரப் படையில் பௌத்த மத எச்சங்களும், உரோம நாணயங்களும் காணப்பட்டன. வேறுபட்ட கலாசாரப் படைகளுக்கிடையிலான தொடர்புகளை நோக்கும்போது வரலாற்று உதயகால மக்களே வரலாற்றுக்காலப் பண்பாட்டையும் வளர்த்தெடுத்தனர் என்பதை அறிய முடிகிறது.
விமலா பெக்லி கந்தரோடையின் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களுக்கும், தென்னிந்திய பெருங்கற் பண்பாட்டு மட்பாண்டங்களுக்கும், கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட அநுராதபுர கெடிகே பகுதியில் காணப்பட்ட மட்பாண்டங்களுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பதாகக் கூறியுள்ளார். இங்கு கிடைத்த பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களில் பானைகள், குவளைகள், வட்டில்கள் என்பன தென்னிந்திய பெருங்கற் பண்பாட்டு மட்பாண்டங்களைப் பெரிதும் ஒத்திருப்பதாகவும், இந்த ஒற்றுமைகள் கந்தரோடையில் வாழ்ந்த பெருங்கற்கால மக்களும் தென்னிந்தியத் திராவிட மக்களும் ஒரே இனத்தவராக அல்லது நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர் என்பதைக் காட்டுகின்றன எனவும் குறிப்பிடுகிறார்.
கந்தரோடை மற்றும் பொம்பரிப்பு அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்கால மட்பாண்டங்களுக்கு இடையிலான மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டு, இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பொம்பரிப்பு முதல் கந்தரோடை வரை இம்முன்னோர்களின் குடியிருப்புகள் ஒரு தொடர்ச்சியாக அமைந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
1974ஆம் ஆண்டு மே மாதம் விமலா பெக்லி கந்தரோடை அகழ்வாய்வு அறிக்கையை இலங்கைத் தொல்லியல் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்த சமயம் அகழ்ந்தெடுத்த பொருட்களின் கதிரியக்கக் கரிமத் தேதிக் கணிப்புகள் வெளிவரவில்லை. ஓர் ஊகத்தில் இப்பண்பாட்டின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டிற்கும், கி.மு. முதலாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். 1977ஆம் ஆண்டில் பெறப்பட்ட கந்தரோடை கதிரியக்கக் கரிமத் தேதிக் கணிப்பு மேலே தரப்பட்டுள்ளது.
விமலா பெக்லியின் ஆய்வின் அடிநாதமாக ஒலிப்பது:
“கந்தரோடையில் குடியேற்றம் பெற்ற மக்கள் தென்னிந்திய மக்களின் கலாசார சமுதாயச் சூழலின் வழித்தோன்றல்களாகவோ அல்லது அவர்களோடு நெருக்கமான கலாசார உறவைக் கொண்டவர்களாகவோ இருந்திருக்க வேண்டும்” என்பதாகும் (Begley, V. 1973: 191-196).

கந்தரோடை அகழ்வில் கண்டெடுத்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டம். நன்றி: ப. புஷ்பரட்ணம்.
திருப்புமுனை இரண்டு
கலாநிதி சி.க. சிற்றம்பலம்: இலங்கையில் பெருங்கற் பண்பாடு
S.K. Sitrampalam (1980): The Megalithic Culture of Sri Lanka, Ph.D. dissertation (Unpublished), University of Poona.

——————————————————————
கந்தரோடையில் ஏற்பட்ட மக்கள் குடியேற்றம் பெருங்கற் பண்பாட்டைப் பேணிய ஒரு மக்கள் குடியேற்றம் எனவும், அப்பண்பாட்டின் பரிணாம வளர்ச்சியே அதனை நாகரிகமடையச் செய்தது எனவும் கூறிச் சென்றவர் கலாநிதி விமலா பெக்லி. இந்த ஆதி இரும்புக்காலப் பெருங்கற் பண்பாடே இலங்கையின் மற்றைய மையங்களின் வளர்ச்சிக்கும், நாகரிகத்திற்கும் அடித்தளமாக இருந்தது என்பதற்கான அறிவியல் ஆய்வை முதன்முதலாக மேற்கொண்டு முடிவுகளை முன்வைத்தவர் கலாநிதி சி.க. சிற்றம்பலம்.
கலாநிதி சி.க. சிற்றம்பலம் பூனா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவர் தனது தத்துவக் கலாநிதிப் பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்வு ‘இலங்கையில் பெருங்கற் பண்பாடு’ (The Megalithic Culture in Sri Lanka) என்ற பொருளிலானது. இந்த ஆய்வறிக்கையை அவர் 1980ஆம் ஆண்டு சமர்ப்பித்திருந்தார். இலங்கையிலுள்ள பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களும், மையங்களும் தென்னிந்தியாவைப் போன்று பெருங்கற்காலப் பண்பாட்டு அம்சங்களைக் கடைப்பிடித்தே நாகரிகமடைந்து நகரமயமாக்கப்பட்டன என்பதைக் காட்டிய இந்த முதல் ஆய்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆய்வு. ஆனால் இது இன்றுவரை நூலுருவம் பெறாதது ஒரு பெருங்குறை. அவர் பேராசிரியராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இதை நூல் வடிவில் பிரசுரித்திருக்க வேண்டும்.
——————————————————————
1977ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை இலங்கையின் முக்கியமான வரலாற்று மையங்களில் கலாநிதி சிற்றம்பலத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான அனுமதியை கலாசார அமைச்சராக இருந்த E.L.B. ஹிருள்ளெ வழங்கியது மட்டுமல்லாது, இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளராக இருந்த ராஜா டி. சில்வாவிடம் இந்த ஆய்விற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்குமாறும் கேட்டிருந்தார். இத்துடன் விமலா பெக்லியின் கந்தரோடை அகழ்வு அறிக்கையின் சில பகுதிகளும் அவரிடம் கொடுக்கப்பட்டன. அத்தோடு தொல்லியல் திணைக்கள உதவி ஆணையாளராக இருந்த கலாநிதி சிரான் தெரணியகலவின் முழு உதவியும் அவருக்குக் கிடைத்தது.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் இலங்கையின் ஆதிக் குடியிருப்புகள் பற்றிய புதிய தகவல்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தன. முதலாவது, இலங்கையின் பாளி இலக்கியங்கள் கூறும் ஆரம்பகால குடியிருப்புப் பகுதிகளை இத்தொல்லியல் ஆய்வுகள் உறுதி செய்தன. ஆனால், ஆதிகாலக் குடியிருப்புகள் ஆரிய மக்களின் குடியிருப்புகள் என்பதற்கான ஆதாரம் ஏதும் காணப்படவில்லை. அதுவரை கிடைத்த தொல்லியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் இலங்கையும் தென்னிந்தியாவும் பெருங்கற் பண்பாடு என அழைக்கப்படும் ஒரே கலாசார மண்டலத்தின் கீழ் வருகின்றன என்பதை உறுதிப்படுத்தின.
இந்தப் பெருங்கற்காலப் பண்பாடு நான்கு முக்கியமான கூறுகளைக் கொண்டிருந்தது. அவையாவன: குடியிருப்புகள், இறந்தோரைப் புதைக்கும் இடுகாடுகள், குளங்கள், வயற்பரப்புகள் என்பனவாகும். மற்றைய முக்கிய கூறுகளாக இரும்பின் பயன்பாடு, சில்லில் வனைந்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டம், அப்பாண்டங்களில் காணப்படும் குறியீட்டு எழுத்துகள் என்பன காணப்படுகின்றன. இடுகாடுகள் விவசாயத்திற்குத் தகுதியில்லாத நிலங்களிலேயே அமைக்கப்பட்டிருந்தன. இவ்வகையான குடியிருப்பு அமைப்பு உலர் வலயங்களில் இன்றுவரை தொடரப்படுகிறது.
கலாநிதி சிற்றம்பலம் ஏற்கனவே அகழ்வாய்வு மேற்கொண்ட பல இடங்களில் மேலாய்வுகளையும், சில அகழ்வாய்வுகளையும் மேற்கொண்டார். இவ்வாறு திவுல் வேவா (Diwul Wewa), றம்ப வேவா (Ramba Wewa), பண்றெல்ல வெல்லா (Pandrella Wella), கோகெபெ (Kokebe), கல்பே (Kalpe), குருகல்ஹின்ன (Guru Galhinna), வலஹவித்த வேவா (Walahawidda Wewa), பின்வேவா (Pinwewa), மஹாகல்வேவா (Mahagalwewa), மாமடுவ (Mamaduva), கதிரவெளி (Kathiraveli), பொம்பரிப்பு (Pomparippu) ஆகிய மையங்களில் மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன (இந்த ஆய்வுகளின் விவரங்கள் நான்காவது திருப்புமுனைக் கட்டுரையில் இடம்பெறுவதனால் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளன).
இவற்றோடு அநுராதபுரம், மாந்தை, திஸ்ஸமகாராம ஆகிய பண்டைய நகர அகழாய்வுகளும் மீளாய்வு செய்யப்பட்டன. குளங்கள், குளங்களுக்கருகிலிருந்த வயல்கள், சமீபத்திலிருந்த குடியிருப்புகள், இரும்பின் பயன்பாடு – அனைத்தும் எல்லா மையங்களினதும் குடியிருப்புகளின் ஆரம்ப நாட்களிலிருந்தே காணப்பட்டன. கலாநிதி சிற்றம்பலம் ஆய்வு செய்த மையங்கள் அனைத்திலும் இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களே வெளிக்கொணரப்பட்டன. குடியிருப்புகளிலும், ஈமப்புதையல்களிலும் காணப்பட்ட தொல்பொருட்களின் ஒருமைப்பாடு இவற்றிற்கிடையிலிருந்த நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டியது.
இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்ட குடியிருப்பு மையங்களில் பண்டைய இராச்சியத்தின் தலைநகரமான அநுராதபுரம் பெரிய அளவினதாகும். அநுராதபுரம் அதன் வரலாற்று உதயகாலத்தில் 10 ஹெக்டேயர் பரப்பைக் கொண்டிருந்தது. இதுவே மிகப் பெரிய வரலாற்று உதயகாலக் குடியேற்றமாகவும் இருந்தது. இதற்கு அடுத்ததாக கந்தரோடை, மாந்தை, திஸ்ஸமகாராம ஆகிய மையங்கள் இடம்பெற்றன.
அநுராதபுரத்து அகழ்வாய்வுகள் மூன்று கலாசாரக் கட்டங்களை – இடைக்கற்காலம், இரும்புக்காலம் (பெருங்கற் பண்பாட்டுக்காலம்), ஆரம்ப வரலாற்றுக்காலம் – காட்டின. இதன் அகழ்வாய்வு ஆதாரங்கள் இடைக்கற்காலக் குடியேற்றங்கள் இரும்புக்காலத்திற்கு மாறி, அவை பின்னர் ஆரம்ப வரலாற்றுக்காலத்திற்கு மாறியதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையில் கற்கால மக்களின் குடியேற்றங்கள் காணப்படவில்லை. அது இரும்புக்காலக் குடியேற்ற மக்கள் ஆரம்ப வரலாற்றுக்கால மக்களாகத் தொடர்ந்ததைக் காட்டுகின்றது. மாந்தை அகழ்வுகள் மத்திய கற்கால, இரும்புக்காலக் குடியேற்றங்களைக் காட்டுகின்றன. திஸ்ஸமகாராமவும் முறையான அகழ்வு செய்யப்படும் போது அநுராதபுரம் போன்ற கலாசாரக் கட்டங்களைக் காட்டலாம். அதன் இரும்புக்கால, ஆரம்ப வரலாற்றுக்காலக் குடியேற்றங்கள் மட்டுமே அகழ்வுகளில் இதுவரை வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன.
இந்தக் கற்கைக்கு முக்கியமான அடுத்த பகுதி மல்வத்து ஓயா, தெதுறு ஓயா ஆகிய நதிகள் பாயும் வடமேற்கு இலங்கை. இந்த நிலப்பகுதி பண்டைய நாகதீபத்தின் ஒரு பகுதி மட்டுமல்லாது, இலங்கையின் பாளி இலக்கியங்களின்படி ஆரம்பகால இந்தோ-ஆரியர்கள் இத்தீவில் வந்திறங்கி, பின்னர் தங்களது முதலாவது தலைநகரை அமைத்துக்கொண்ட தம்பபண்ணி என்ற பகுதியுமாகும். இன்று இந்நிலப்பகுதியிலுள்ள முக்கியமான தளங்கள் மாந்தையும், பொம்பரிப்புமாகும். பொம்பரிப்பு அகழ்வுகள் அந்த இடுகாட்டில் 10,000 – 12,000 மக்கள்வரை புதைக்கப்பட்டிருந்ததாகக் காட்டுகின்ற போதிலும், அவர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இறுதியாக நமக்கு முக்கியமான பண்டைய குடியிருப்பு மையம் தென்கிழக்கு இலங்கையிலுள்ள உருகுணை இராச்சியத்தின் தலைநகரமான மகாகமம் (அக்குறுகொட). இங்கே இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் கந்தரோடை, அநுராதபுரம் போன்று கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், மட்பாண்ட எழுத்துகள், இரும்புப் பொருட்கள் என்பன கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இப்பொருட்கள் கந்தரோடை, அநுராதபுரம் போன்று பெருங்கற் பண்பாட்டைக் கடைப்பிடித்த மக்களே இங்கும் குடியிருந்தனர் என்பதைக் காட்டுகின்றன.
மட்பாண்டங்களைப் பொறுத்தவரையில் அநுராதபுரத்து மட்பாண்டங்களை இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒன்று பெருங்கற்கால மட்பாண்டங்கள்; அடுத்தது ஆதி வரலாற்றுக்கால மட்பாண்டங்கள். அகழ்வுகளில் பெருங்கற் பண்பாட்டு கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் அகழ்வடுக்கு 3Aஇலும், ஆதி வரலாற்றுக்கால மட்பாண்டங்கள் அகழ்வடுக்கு 4Aஇலும் 4Bஇலும் காணப்பட்டன. அகழ்வடுக்கு 4Bஇல் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும் மற்றைய ஆதி வரலாற்றுக்கால மட்பாண்டங்களும் கலவையாகக் காணப்பட்டன. இங்கே அகழ்வடுக்கு 3Aஉடன் அகழ்வடுக்கு 4Bஇன் இடவியல் மேலணைவு (Stratigraphical Overlap) காணப்படுகிறது. இதன் முக்கியத்துவம் இவற்றிற்கிடையே காணப்படும் பண்பாட்டுத் தொடர்ச்சி (Cultural Continuum) ஆகும்.
இந்தப் பண்பாட்டுத் தொடர்ச்சியைத் தவிர, இம்மட்பாண்டங்கள் தென்னிந்திய மட்பாண்டங்களுடன் நெருங்கிய ஒற்றுமையைக் காட்டுகின்றன. கந்தரோடையில் அகழ்வுகளை மேற்கொண்ட விமலா பெக்லி கூறுகிறார்: “சில மட்பாண்ட வகைகள், குறிப்பாக கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், தென்னிந்திய இரும்புக்கால மட்பாண்டங்களுக்கு இணையாக உள்ளன. இந்த இரு இடங்களிலும் குடியேறியவர்கள் பொதுவான தோற்றம் கொண்டவர்கள் அல்லது நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்” (“Certain ceramic types, especially the black-and-red ware, parallel those of the Iron Age of South India and possibilities are great that the settlers in both areas were of common origin or at least in close contact”. Begley, V. 1973: pp. 191-196).
மேலும் இதே வகையான கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் அநுராதபுரம், பொம்பரிப்பு, குருகல்ஹின்ன, பின்வேவா, அக்குறுகொட, மெஹேவித்த, கொல்லன்கனத்த, ஆனைக்கோட்டை, காரைநகர் ஆகிய இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இக் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களான பானைகள், கிண்ணங்கள், தட்டுகள் வெவ்வேறு வடிவங்களிலும் உருவங்களிலும் காணப்படுகின்றன. இவற்றை ஒத்த இணைகளான பெருங்கற் பண்பாட்டு மட்பாண்டங்கள் ஆதிச்சநல்லூர், அமிர்தமங்கலம், சானூர், போர்க்களம், அரிக்கமேடு, திருக்காம்புலியூர், பிரம்மகிரி, மாஸ்கி ஆகிய தீபகற்ப இந்திய மையங்களிலும் காணப்படுகின்றன (Sitampalam, S.K. 1980: 191-229).
தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும் பெருங்கற் பண்பாட்டு மட்பாண்டங்களில் காணப்படும் ஒரே வகையான குறியீட்டு எழுத்துகள் (Graffiti) நட்சத்திரம், சுவஸ்திகா, சக்கரம், சூலம், அங்குசம், பிராமி எழுத்து ‘ம’ என்பனவாகும். இவை தவிர இயற்கையாகக் காணப்படும் இலை போன்ற வடிவங்களும் வரையப்பட்டுள்ளன. பொம்பரிப்பு அகழ்வுகளில் ஒரு பானை ஓட்டில் கண்ட ‘குதிரையின் கடிவாளம்’ வரைபடம் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பானையிலும் காணப்படுகிறது (Sitampalam, S.K. 1980: 265-277).
கலாநிதி சிற்றம்பலத்தின் ஆய்வு மூன்று முதன்மைக் கருத்துகளைக் கொண்டது:
- பெருங்கற் பண்பாட்டிற்கு முந்திய முன்னோடி மக்கள்.
- இலங்கையில் பெருங்கற் பண்பாட்டின் விரிவான பரவலாக்கம்.
- பெருங்கற் பண்பாட்டின் கர்த்தாக்கள் (ஆக்கியோர்).
இலங்கையின் இடைக்கற்காலம் இரு கட்டங்களைக் கொண்டது. ஒன்று இடைக்கற்காலப் பலாங்கொடைப் பண்பாடு, மற்றது இடைக்கற்காலத்திற்குச் சற்று முற்பட்ட இரத்தினபுரிப் பண்பாடு. இவற்றின் பரவல் தீவெங்கும் காணப்பட்ட போதிலும், அவை தென்னிலங்கையிலேயே அடர்த்தியாகக் காணப்பட்டன. இக்கற்காலத்தின் கல்லாயுதங்களின் அமைப்பு தென்னிந்திய இடைக்கற்கால மற்றும் இடைக்கற்காலத்திற்கு சற்று முற்பட்ட காலக் கல்லாயுதங்களை ஒத்திருக்கின்றன. இந்த அடிப்படைத் தகவல் இலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தை விளக்குவதற்கு உறுதியான பின்னணியாகும்.
இலங்கையின் பாளி இலக்கியங்கள் கூறும் இயக்கர்கள் இந்த மேலைப் பழங்கற்கால – இடைக்கற்கால மக்களின் சந்ததியினராவர். இக்கால வேடர்கள் ஆஸ்திரோ-ஆசிய மொழிகளைப் பேசிய மேலைப் பழங்கற்கால – இடைக்கற்கால மக்களின் வம்சாவளியினர். இவர்கள் அனைவரதும் வம்சாவளியினரே பெருங்கற் பண்பாட்டைப் பேணிய மக்கள் தொகையின் கணிசமான கூறு ஆவர்.
இரண்டாவது அம்சம், இலங்கையின் வரலாற்றில் வரலாற்று உதயகாலம் பெருங்கற் பண்பாடு நிலவிய காலம் என்பதையே இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன. இக்காலத்தில்தான் பெருங்கற் பண்பாட்டு தாழி அடக்கங்கள், கல்லறைகள், கற்பதுக்கைகள், கல்வட்டங்கள் ஆகியவற்றை இங்கே நாம் காண்கிறோம். இப்பெருங்கற் பண்பாட்டுப் புதையல்கள் இலங்கையின் உலர் வலய மையங்களில் அடர்த்தியாகக் காணப்படுகின்றன. இந்த உலர் வலயம்தான் இலங்கையின் ஆதி வரலாற்றுக்கால நாகரிகம் உதயமான இடம். பாளி இலக்கியங்கள் கூறும் ஆதிகாலக் குடியிருப்புகள் இருந்த இடங்களில் இந்தப் பெருங்கற் பண்பாட்டு மையங்கள் காணப்படுவது தற்செயலாக நடைபெற்ற நிகழ்வுகள் அல்ல.
பெருங்கற் பண்பாடு தென்னிந்தியாவில் உருவான ஒரு கலாசார அம்சமாகும். தென்னிந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களிலேயே இப்பண்பாட்டு அம்சங்கள் அடர்த்தியாகக் காணப்படுகின்றன. தென்னிந்தியாவிலிருந்தே இப்பண்பாடு இலங்கையை வந்தடைந்திருக்கிறது. இந்த நிலைமை தமிழகப் பெருங்கற்கால மையங்களில் காணப்படும் அதே அம்சங்கள் இலங்கையிலும் காணப்படுவதிலிருந்து புலப்படுகிறது. தமிழகத்தில் இப்பண்பாட்டைப் பேணியோரின் வருகையால் இது இலங்கையை வந்தடைந்திருக்கலாம். அல்லது ஒரு கலாசாரப் பரவலாக இது நிகழ்ந்திருக்கலாம். இப்பண்பாட்டின் வருகையோடு திராவிட மொழிகளும் இந்த நாட்டை வந்தடைந்திருக்கலாம்.
தொல்லியல் ஆய்வுகள் தரும் விஞ்ஞானத் தகவல் யாதெனில்:
“கி.மு. ஆயிரம் ஆண்டளவில் இலங்கையில் ஆரம்பமான பெருங்கற் பண்பாடே இந்நாட்டின் சிங்கள-தமிழ் மொழிகளைப் பேசும் மக்களின் மூதாதையர்களின் நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது. தென்னிந்தியாவைப் போன்று இலங்கையின் சமூக உருவாக்கம், உணவு உற்பத்திப் பொருளாதாரம், மட்பாண்டத் தயாரிப்பு, இரும்புப் பொருட்களின் உற்பத்தி, இறந்தோரின் அடக்கம், நகரமயமாக்கம், அரசின் தோற்றம், நாகரிக வளர்ச்சி ஆகிய அனைத்தினதும் தொடக்கப்புள்ளியாக இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டு அம்சங்களே காணப்படுகின்றன.”
——————————————————————
கலாநிதி சிற்றம்பலம் இந்த ஆய்வை மேற்கொண்ட காலத்தில் இலங்கையிலுள்ள பெருங்கற்கால மையங்களின் ஆரம்பக் குடியேற்றக் கால கதிரியக்கக் கரிமத் தேதிக் கணிப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பின்னர் வெளிவந்த ஆரம்பகாலத் திகதிகள்: கந்தரோடை கி.மு. 1350–500, ஆனைக்கோட்டை கி.மு. 915–365, அநுராதபுரம் கி.மு. 840–600, பொம்பரிப்பு கி.மு. 900, இப்பன்கட்டுவ கி.மு. 700–450 ஆகிய ஆண்டுகளைக் காட்டியுள்ளன.
——————————————————————
திருப்புமுனை மூன்று
கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி: யாழ்ப்பாணத்தின் ஆதிக் குடியிருப்புகள்
Ponnampalam Ragupathy (1983): Early Settlements in Jaffna – an Archaeological Survey, Ph.D. dissertation, University of Jaffna.


பொ. இரகுபதி (1983): பெருங்கற்கால யாழ்ப்பாணம், பாவலர் தெ.அ. துரையப்பாபிள்ளை நினைவுப்பேருரை, மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை.
——————————————————————
கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் பழைய மாணவர். இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் முதுகலைப் பட்டம் (M.A.) பெற்று, பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனது தத்துவக் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வைத் தொடர்ந்தார். அவர் எடுத்துக்கொண்ட பொருள் ‘யாழ்ப்பாணத்தின் ஆதிக் குடியிருப்புகள் – ஒரு தொல்லியல் ஆய்வு’ (Early Settlements in Jaffna – An Archaeological Survey) என்பதாகும். இந்த ஆய்வை 1983ஆம் ஆண்டு சமர்ப்பித்து தத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றுக்கொண்டார். இந்த ஆய்வு 1987ஆம் ஆண்டில் ஏராளமான படங்களுடன் நூலுருவில் வெளிவந்துள்ளது.
——————————————————————
யாழ்ப்பாணத்தின் ஆதிக் குடியிருப்புகள் என்ற பெயரில் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி வெளியிட்ட ஆய்வு வட இலங்கை வரலாற்றிலே ஒரு திருப்புமுனையாக அமைந்த கற்கை எனலாம். அகழ்வாய்வுகளிலும், கள மேலாய்வுகளிலும் கிடைத்த சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞான அறிவியல் பூர்வமாக எழுதப்பட்ட பெரும் படைப்பு இது. வரலாற்றிலும், தொல்லியலிலும் ஆழமான ஆர்வம் கொண்ட ஒருவரின் தனிப்பட்ட முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொல்லியலாய்வு, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு மட்டுமல்ல. அதன் பின்னர் இப்படியானதொரு ஆய்வை வேறு எவருமே தொடர்ந்து மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடிகள் யார்? எப்போது அவர்கள் இந்தத் தீபகற்பத்திற்கு வந்தார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? இப்பிரதேசத்தின் தனித்துவமான பண்பாட்டிற்குக் காரணமான வரலாற்றுப் போக்கு என்ன? – இத்தகைய வினாக்களுக்கு விடை காண்பதே கலாநிதி இரகுபதியின் ஆய்வு ஆகும்.
இலங்கையின் வரலாறு தொடங்கும் காலத்தில் அதற்குக் காரணமாய் அமைந்தது தென்னிந்தியப் பெருங்கற் பண்பாட்டின் வருகையே என்பது இப்போது அறிவியல் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். இது இலங்கைக்கு ஆரியர் குறித்து இதுவரையும் தெரிவிக்கப்பட்டு வந்த பாரம்பரிய கருத்துகளுக்கு முற்றிலும் முரணானதாகும். இலங்கைக்கு ஆரியர் வந்தமைக்கு எவ்வித தொல்லியல் ஆதாரங்களும் காணப்படவில்லை; அதற்கு மாறாக தென்னிந்திய வரலாற்றுத் தொடக்ககாலப் பெருங்கற் பண்பாடே இலங்கையிலும் வரலாற்றுத் தொடக்கத்தைக் கொணர்ந்தது என்ற கருத்து அண்மைக்காலங்களில் பலமடைந்து வருகின்றது.
1980ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கலாநிதி இரகுபதி மேற்கொண்ட மேலாய்வொன்றில் ஆனைக்கோட்டையில் பெருங்கற் பண்பாட்டுத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் பேராசிரியர் இந்திரபாலா தலைமையில், கலாநிதி சிற்றம்பலம், கலாநிதி இரகுபதி ஆகியோருடன் இணைந்து இங்கே அகழ்வாய்வை நடத்தினார்கள். இங்கே பெருங்கற் பண்பாட்டு ஈம அடக்கங்கள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக வெளிக்கொணரப்பட்டன.
ஆய்வுக்குழியில் இரு எலும்புக்கூட்டு அடக்கங்கள் மேற்குக்-கிழக்காக நீட்டிக்கிடத்தப்பட்ட நிலையில் காணப்பட்டன. இவற்றைச் சுற்றி ஈமப்படையல்கள் பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களில் இடப்பட்டிருந்தன. இரும்புக் கருவிகள், இரும்பு அகல் விளக்கு, சங்குகள், மணிவகைகள், கடல் உணவு எச்சங்கள் ஆகிய பல பொருட்கள் ஈமப்படையல்களில் இடம்பெற்றிருந்தன. எலும்புக்கூடு ஒன்றின் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த கறுப்பு-சிவப்பு வட்டில் ஒன்றில் ‘கோவேத’ என்ற பெயர் பொறித்த ஸ்டீயடைட் (Steatite) கல்லினாலான முத்திரை மோதிரம் கிடைத்தது. இம்முத்திரை எழுத்துகளின் தொல்லெழுத்தியலை அடிப்படையாகக் கொண்டு இப்பண்பாட்டின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டென நிர்ணயிக்கப்பட்டது.
ஆனைக்கோட்டையைத் தொடர்ந்து 1981ஆம் ஆண்டு ஜனவரியிலும், பின்னர் நவம்பரிலும் காரைநகரில் உள்ள சந்திராந்தையில் மேற்கொண்ட அகழ்வாய்வில் ஆனைக்கோட்டையில் கிடைத்தவற்றை ஒத்த ஈம அடக்கங்களும், ஈமப் புதையல்களும் காணப்பட்டன. இரும்புக் கருவிகள் காணப்படாத போதிலும், பளிங்குக் கல்லினாலான (Quartz) ஒரு குறுணிக்கல் கருவி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. கறுப்பு-சிவப்பு மட்பாண்ட வகை ஒப்பீட்டாய்வின்படி சந்திராந்தைப் புதையல் ஆனைக்கோட்டையைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகக் கணிக்கப்படுகிறது.
கலாநிதி இரகுபதி யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் வரலாற்றின் தொல் குடியிருப்புகள் இருந்ததாகக் கணிக்கப்பட்ட 41 மையங்களில் தொல்லியல் மேலாய்வுகளையும் கள ஆய்வுகளையும் மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட ஆய்வுகளில் ஆரம்பகால மையங்களில் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் காணப்பட்டன. இவற்றோடு பண்டைய குடியிருப்புகள், வாழ்வாதார முறைகள், சுற்றுச்சூழல் நிலைமைகள், நீர்வளம், நெல் வயல்கள், கடற்கரைக்கான அண்மை, ஆரம்பகாலத் தொடர்பு முறைகள், உள்நாட்டுப் பெருவழிகள், பரவைக்கடல் வழிகள் ஆகிய பல நடைமுறை வாழ்வியல் ஆய்வுகளும் அவரது தொல்லியல் ஆய்வுகளோடு இணைக்கப்பட்டமை அவரது யாழ்ப்பாணக் கற்கையின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பெருங்கற்கால மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறியமைக்கு சில அடிப்படைக் காரணிகள் உள்ளன. அவர்களது பண்பாட்டிற்கும் தொழில்நுட்பத்திற்கும் இக்குடாநாட்டின் இயற்கையமைப்பு சாதகமாக இருந்ததே காரணமெனலாம். வறண்ட காலநிலை, ஆரம்பகாலத்து எளிமையான இரும்புக் கருவிகளால் அழிக்கப்படக்கூடிய பற்றைக்காடு, சுண்ணாம்புத் தரையில் இயற்கையாகத் தோன்றிய சிறு குளங்கள், கடலுணவை ஆபத்தின்றிப் பெற்ற ஆழமற்ற பரவைக் கடல் – இவைகளே பெருங்கற் பண்பாட்டு மனிதனை ஈர்த்த யாழ்ப்பாணத்தின் கவர்ச்சிகள் ஆகும்.
பெருந்தொகையான கடல் உணவு எச்சங்களும், கால்நடை எலும்புகளும் ஈமப் படையல்களில் பெறப்பட்டன. சுறா, பிற மீன்களின் முள்ளந்தண்டு; நண்டு, கடலாமை போன்றவற்றின் ஓடுகள்; உள்ளிருக்கும் இறைச்சியை எடுப்பதற்காக உடைக்கப்பட்ட சங்குகள்; கூரிய ஆயுதத்தினால் வெட்டப்பட்ட அடையாளமுள்ள கால்நடை எலும்புகள்; விலங்குகளின் பற்கள் ஆகியவை மீன்பிடித்தலும், மந்தை வளர்ப்பும் இந்த ஆதிக் குடிகளின் வாழ்க்கையில் வகித்திருந்த முக்கிய பங்கை விளக்குகின்றன.
பெருங்கற்கால யாழ்ப்பாணத்தில் வர்த்தகம் முக்கிய இடத்தை வகித்துள்ளது. சில வகை மட்பாண்டங்கள், மணிவகைகள், கல்வகைகள், உலோகம் போன்றவை வர்த்தகப் பொருட்களாகவே இங்கு வந்திருக்க வேண்டும். சோழ மண்டலக் கடற்கரைக்கும் இலங்கைக்குமிடையே இருந்த கடல் வர்த்தகப் பாதைகளில் யாழ்ப்பாணம் கேந்திரத் தானத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கந்தரோடையின் நகரமயமாக்கத்திற்கு வெளிநாட்டுக் கடல் வர்த்தகமும், தென்னிலங்கையுடனான வர்த்தகப் பாதைகளின் வளர்ச்சியும் காரணமாகலாம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை நீடித்த உரோம வர்த்தகம் கந்தரோடையின் நகரமயமாக்கத்திற்கு உந்துதலாக இருந்திருக்கும். இதை உறுதிப்படுத்தும் வகையில் கந்தரோடையில் அதிகமான அளவில் மிகச் செறிவான உரோம மட்கலன்களும், உரோம நாணயங்களும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழ்நாட்டில் சேர் மோட்டிமர் வீலர் அகழ்ந்தாராய்ந்த அரிக்கமேடு என்ற இந்திய–உரோமத் துறைமுக நகரச் சான்றுகளுக்கு ஒப்பானதாகும்.
யாழ்ப்பாணத்திற்கும் அநுராதபுரகால இலங்கைக்கும் இருந்த தொடர்பு என்ன? இக்காலத்தில் அநுராதபுரம் இலங்கையின் பலம்வாய்ந்த மையநகரமாக விளங்கியதென்பதில் ஐயமில்லை. ஆயினும், யாழ்ப்பாணம் அநுராதபுர நாகரிக வட்டத்திற்குள் உள்ளடங்கியிருந்ததற்கான தெளிவான சான்றுகள் இல்லை. அநுராதபுரத்தை மையமாகக் கொண்ட பாளி இலக்கிய ஆதாரங்கள் தொலைவில் இருக்கும் மகாகமையைப் பற்றி அதிகம் கூறும் அதே நேரத்தில், யாழ்ப்பாணம் குறித்து மிகக் குறைந்த விவரங்களைக்கூடத் தரவில்லை எனலாம்.
இக்கால யாழ்ப்பாணம், இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவிற்கும் தென்னிலங்கைக்கும் இடையில் பண்பாடுகள் சந்திக்கும் இடைக்குறு நிலமாகவும், இந்திய உபகண்டத்தில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் தோன்றிய புதிய அலைகளை முதலில் ஏற்றுக்கொண்ட படிக்கல்லாகவும் இருந்திருக்கலாம். இந்நாட்டிற்குப் பௌத்தத்தின் வருகை சம்புத்துறையூடாக வந்தமை போலவே, பின்னர் தென்னிந்தியாவில் ஏற்பட்ட பிராமணிய மறுமலர்ச்சியும் இங்கு வந்திருக்கக்கூடும்.
பண்டைய யாழ்ப்பாண வரலாற்றியல் இலக்கியங்கள் யாவும் புகைபடர்ந்த, ஆனால் ஏகோபித்த ஒரு தகவலைத் தருகின்றன. அது ஆரியச் சக்கரவர்த்திகள் கால யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முன்னரே கதிரைமலையில் இருந்து யாழ்ப்பாணம் ஆளப்பட்ட ஒரு செய்தியாகும். சோழர் வருகையுடன் இவ்வரசு முடிவடைவதை இவ்விலக்கியங்கள் சூசகமாகத் தெரிவிக்கின்றன. கதிரைமலையில் இருந்து அரசாண்ட உக்கிரசிங்கன் மாருதப்புரவல்லியைத் திருமணம் செய்த பின்னர், கதிரைமலை இந்நூல்களால் மறக்கப்பட்டுவிடுகின்றது.
தொடரும்.



