தேசிய காங்கிரஸ் தேடிய தீர்வு
இலங்கைக்குத் தன்னாட்சி கிடைக்கும் வாய்ப்புத் தென்பட்டதும் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் பல செயற்பாடுகளில் தீவிரமாக இறங்கினர். அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரில் பிரித்தானிய அரசாங்கம் யாப்பு ஒன்றைத் திணிக்குமுன் காங்கிரஸ் ஒரு யாப்பைத் தயாரிக்க வேண்டும் என இவர்கள் விரும்பினர். எனினும், இவர்களுடைய காங்கிரஸ் பல்வேறு குழுக்களையும் வேறுபட்ட கருத்துகளையுடைய தனியாட்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது. சிலர் தீவிரப் போக்கை ஆட்சியாளருக்கு எதிராகக் கடைப்பிடித்தனர். பலர் சிங்கள பௌத்த இயக்கத்தின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர்.
இத்தகைய நிலையில், அரசியல் முன்னேற்றத்துக்குத் தேவைப்பட்டது ஒற்றுமை என்பதைக் காங்கிரஸ் உணர்ந்தது. ஒற்றுமை இல்லாது ஆட்சியாளரிடம் இருந்து தாம் வேண்டிநின்ற சுதந்திரத்தைப் பெறமுடியாது என்பதைத் தலைவர்கள் நன்கு அறிந்திருந்தனர். இதனால், நாட்டில் எல்லோருக்கும் சமத்துவம் கொடுத்து வேறுபட்ட சமூகக் குழுக்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு யாப்பைத் தயார்படுத்துவதற்குக் காங்கிரஸ் தீர்மானித்தது.
இதற்காக, துணக்குழு (Sub-committee) ஒன்று 1940 திசெம்பரில் நியமிக்கப்பட்டது. இதில் வைத்தியர் R. சரவணமுத்து, ஸ்டான்லி த சொய்சா, H.A. கோட்டேகொட, டட்லி சேனாநாயக்க, J.R. ஜயவர்தன ஆகியோர் இருந்தனர். குழுவின் ஒருங்கிணைப்பாளராக (Convenor) ஜயவர்தன பணியாற்றினார்.
சில மாதங்களின் பின் (1941 நடுப்பகுதியில்) துணைக்குழு தயாரித்த யாப்பு வரைவை (Draft Constitution) காங்கிரஸ் சபைக்கு ஜயவர்தன சமர்ப்பித்தார். இது உண்மையான மக்களாட்சிப் பண்புகள் பலவற்றைக் கொண்டிருந்தது. இதில் அடங்கியுள்ள மூன்று கூற்றுகளை மட்டும் காட்டுவதன் மூலம் எத்தகைய இலட்சியத்தை ஜயவர்தன போன்ற தலைவர்கள் அப்பொழுது வெளிப்படுத்தினர் என்பதை அறியலாம்:
- “Differences of religion, creed, faith or language shall not prejudice any citizen of Lanka in any way”.
- “The official language shall be Sinhalese in Sinhalese-speaking areas, and Tamil in Tamil-speaking areas”.
- “The culture, language and script of any minority group shall be protected”.
பொன்னம்பலம் தனது ‘ஐம்பதுக்கு ஐம்பது’ கோரிக்கையைத் துரிதமாக எடுத்துச்செல்ல, காங்கிரஸ் உறுப்பினர் சிலர் இது தொடர்பாகத் தீர்மானம் எடுப்பதற்குச் சில முன்மொழிவுகளை வைத்தனர். இவற்றுள் இரண்டை இங்கு குறிப்பிடலாம்.
முதலாவது, P. de S. குலரத்ன (1893 – 1976) முன்வைத்தது. இது இலங்கையின் பாராளுமன்றம் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியது. புதிய மன்றத்தில் 107 பிரதிநிதிகள் இருக்கவேண்டும் என்றும், அவர்கள் 60 சிங்களவர், 40 தமிழர், இந்தியர், முஸ்லிம்கள், 4 ஐரோப்பியர், 3 பறங்கியர் எனப் பிரிக்கப்பட வேண்டும் என்றும் குலரத்ன முன்மொழிய, R.S.S. குணவர்தன வழிமொழிந்தார். மிகுந்த செல்வாக்குடைய பௌத்தப் பிரமுகரான குலரத்ன (மனைவி ‘Hilda Westbrook’ இலங்கையின் பௌத்தப் பெண்பிள்ளைகளின் கல்விக்காகப் பெரிதும் உழைத்தவர், விசாகா வித்தியாலயத்தின் அதிபர்), ஆனந்தாக் கல்லூரியின் அதிபர், யாழ்ப்பாணத்தவருடன் நல்ல தொடர்பு வைத்திருந்தவர். எனினும், தனது முன்மொழிவைப் பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர் எதிர்த்தனர் என்றும் சிறுபான்மையினர் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கவலையுற்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் முன் தீர்மானத்துக்கு வைக்கப்பட்ட இன்னொரு முன்மொழிவு சிறிது வேறுபட்டது. இதன்படி, 100 பிரதிநிதிகளைக் கொண்ட மன்றத்தில், 60 பெரும்பான்மையினர்க்கும் 40 சிறுபான்மையினர்க்கும் இடங்கள் ஒதுக்கப்படும். இதனை முன்மொழிந்தவர் சைமன் அபேவிக்ரம, வழிமொழிந்தவர் A.P. ஜயசூரிய.
கம்யூனிஸக் கட்சியின் முன்மொழிவு
சுதந்திரத்தின் பின் இலங்கை ஒரு முற்றிலும் புதிய நாடாக உருவாக வேண்டும் எனச் சிந்தித்துத் திட்டம் வகுத்த குழு கம்யூனிஸக் கட்சியாகும். தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ் காங்கிரஸ் ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பினர் நோக்கில் இருந்து இலங்கையின் எதிர்காலம் பற்றிச் சிந்தித்தும், பெரும்பான்மை – சிறுபான்மை என்ற பாகுபாட்டை வைத்து முரண்பட்டுக் கொண்டும் இருக்க, தொழிலாளர் ஒன்றியமாகிய ‘Ceylon Trade Union Federation’ (CTUF) மிகவும் முற்போக்கான கோட்பாடுகளை முன்வைத்து எதிர்கால இலங்கையை ஒரு முன்னேற்றமான நாடாக மாற்றத் திட்டம் வகுத்தது.
அரசியல் சீர்திருத்தம் தொடர்பாகத் தேசிய காங்கிரஸ் துரித செயற்பாடுகளில் இறங்கியபோது, 1944 செப்தெம்பர் CTUFஇன் செயற்குழு கூடி ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுத்தது. அத்தீர்மானம் தேசிய காங்கிரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில், எத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையில் சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பு அமையவேண்டும் என்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது.
“இலங்கையின் எதிர்கால வளர்ச்சிப் பாதை சிங்கள மக்கள் தவிர்ந்த ஏனையோர் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அமைந்த, ஒரு தேசிய இனத்தைக் கொண்ட ஒற்றையாட்சி நாடாகக் கருதும் பாதையாகாது” (“Ceylon’s future development will not be along the lines of a one nation unitary state, with all except the Sinhalese people being regarded as minorities living within this state.” – M.W. Roberts, Documents of the Ceylon National Congress, III: 2575).
இதே அறிக்கையில் மேலும் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் இன்று எமக்கு வியப்பைத் தருபவையாக இருக்கின்றன. இலங்கையில் சிங்களரும் தமிழரும் இரு வேறுபட்ட தேசிய இனங்களாக (Nationalities) உருவாகி இருப்பதை வலியுறுத்தி, இவற்றுக்கு சுயநிர்ணய (Self-determination) உரிமை உண்டு என்பதையும் இந்த அறிக்கை பிரகடனப்படுத்தியது. இதனை அப்படியே இங்கு கொடுப்பது பயனளிப்பதாகும்:
“As in fact there are two distinct nations historically evolved nationalities in Ceylon – the Sinhalese and the Tamils – each with their own contiguous territory as their homeland, their own language, economic life, culture and psychological make-up, as well as interspersed minorities living in the territories of these nationalities, this Committee declares that the Constitution of a free Ceylon must be based on the following principles:
- Recognition of the equality and the sovereignty of the peoples of Ceylon.
- Recognition that the nationalities (Sinhalese and Tamil) have the right to free self-determination including the right, if they so desire, to form their own separate independent state.
- Recognition that the interspersed minorities should have i) statutory guarantees protecting their political, social, economic, cultural, educational and linguistic rights and their freedoms of their religious worship; ii) statutory abolition of privileges and discrimination based on caste, race or community; iii) making the infringement of the above a penal offence under the constitution.
- Recognition that the Indians, now in Ceylon, who wish to make Ceylon their permanent home and adopt Ceylon citizenship should be given the same rights and privileges as any other community in Ceylon.
இந்த அறிக்கையைத் தேசிய காங்கிரசுக்கு அனுப்பியபின், ஒக்டோபர் 15இல் (1944) கொழும்பு நகர மண்டபத்தில் இலங்கைக் கம்யூனிஸக் கட்சி பொதுமக்கள் கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டத்தில் 5000 பேர் கூடியிருந்தனர் எனக் கட்சி பதிவு செய்துள்ளது. மேலே தரப்பட்டுள்ள பிரகடனம் கூடியிருந்த பொதுமக்கள் முன் வைக்கப்பட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து கட்சியால் நியமிக்கப்பட்ட பீட்டர் கெனமன், அ. வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் இலங்கைக்கு ஒரு கூட்டாட்சி (சமஷ்டி/ Federal) முறை யாப்பைத் தயாரிப்பதற்கான குறிப்பாணையை (Memorandum) கட்சியின் செயற்குழுவுக்குச் சமர்ப்பித்தனர் (M.W. Roberts, மேற்படி: 2574-2579).
யாழ்ப்பாண சமூகம் ஒன்றின் போராட்டம்
ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பு யழ்ப்பாணத்தவர் தாம் அனுபவிக்கும் நிலையை இழக்க நேரிடும் என்ற ஏக்கத்தில் பிரித்தானிய ஆட்சியாளர் போகுமுன் தம் நிலையைப் பாதுகாக்கப் பெரிதும் முயன்றுகொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தின் இன்னொரு சமூகக்குழு பொதுப்பட அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய உரிமைகள் இல்லாது தாம் சுரண்டப்படுவதை நிறுத்தித் தமக்கும் மற்றவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை அன்னிய ஆட்சியாளர் போகுமுன் அவர்களிடம் இருந்து பெறுவதற்குப் போராடியது. உண்மையில் இந்த உரிமைகளைக் கொடுக்கும் வலு அன்னியரிடம் அல்லாது யாழ்ப்பாணத்தவர் கையிலேயே இருந்தது!
இந்த சமூகக்குழு பாரம்பரிய சாதிப் பாகுபாட்டில் கீழ்மட்டத்தில் இருந்தோரை உள்ளடக்கியது. இவர்கள் பொதுப்படக் கீழ்சாதி மக்கள் என்றும் குறிப்பாக சாதிப் பெயர்களாலும் வழமையாக அழைக்கப்பட்டவர்கள். பின்னர், ‘தாழ்த்தப்பட்டோர்’, ‘ஒடுக்கப்பட்டோர்’ என்ற வர்ணனைகளைப் பெற்றவர்கள். இவர்களைச் சூழவிருந்தோர் சமூக மாற்றங்களுக்கு இலக்காகி முன்னேற, 1920களில் இவர்களும் சிறிது விழிப்படையத் தொடங்கி, அமைப்புமுறை மூலமாகத் தம் நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி 1927இல் யாழ்ப்பாணத்துக்கு வந்தமை இவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

அதே ஆண்டில், 1927இல், ‘யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம், சுன்னாகம்’ (ஆங்கிலத்தில் ‘Jaffna Depressed Classes League’) என ஒரு கழகம் அமைக்கப்பட்டு, திராவிடன் என்ற ஒரு செய்தித்தாளும் தொடக்கப்பட்டது. இத்துடன், சிறு முன்னேற்றத்துக்கான அறிகுறி போன்று, சில சைவர்களும் கிறிஸ்தவர்களும் சேர்ந்து ‘Jaffna Depressed Tamils’ Service League’ என்ற சேவைக் கழகத்தை அமைத்தனர். இதனைத் தொடக்குவதில் கல்வித் துறையில் பெயர்பெற்றிருந்த நெவின்ஸ் செல்வத்துரை என்பவரும் ஜொஎல் போல் (Joel Paul) என்பவரும் முக்கிய பங்கு வகித்தனர். இக்கழகத்தின் சார்பில், 1931 ஜனவரியில் இருந்து ஜனதர்மபோதினி என்ற ஒரு மாத இதழை ஜொஎல் போல் வெளியிட்டார்.

காந்தி வந்தபோது Jaffna Depressed Classes League, Jaffna Depressed Class Association என்ற அமைப்புகளைச் சேர்ந்தோர் முற்றவெளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவருக்குத் தங்கள் வரவேற்புரைகளை (Address) எழுத்தில் வழங்கினர். அதன்பின், டொனமூர் ஆணைக்குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து உரிமைகோரினர். அதிக முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சோல்பரி ஆணக்குழுவினரிடம் 1940களில் தங்கள் குறைகளை எடுத்துக்கூறித் தமக்கென வேறான பிரதிநிதித்துவம் வேண்டிநின்றனர். இதன் பின், 1946இல், புதிய பாராளுமன்றத் தொகுதிகளை நிர்ணயிக்க நியமிக்கப்பட்ட ‘Delimitation Commission’ முன் தமக்கு வேறான பிரதிநிதித்துவம் பெற ஒழுங்கு செய்யவேண்டும் எனக் கோரினர். எதுவிதப் பலனும் கிட்டவில்லை. இது பற்றி ஆழமாக ஆய்வு செய்த ஓர் அறிஞர், ‘Mark Edward Balmforth’ என்பவர், இவ்வாறு கூறியுள்ளார்:
“During the work of each of these three commissions, oppressed-caste activists gave testimony, held political meetings, and wrote publicly to protect their electoral rights. In response, oppressed-caste leaders faced claims denying their community’s existence, threats of verbal and physical harm, and the regular denial of reasonable requests for the same rights their fellow citizens enjoyed.” (Caste – A Global Journal of Social Exclusion, 6 (2), Nov. 2025).
இந்த மூன்று தசாப்தங்களிலும் (1920கள், -30கள், -40கள்) இவர்கள் எவ்வாறு தங்கள் விடுதலைக்குத் தடையாக இருந்தவற்றை அகற்ற முயன்றனர்? இவர்களுக்கு முதலாவதாக இருந்த குறை கல்வியின்மை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து, யாழ்ப்பாணத்தின் உயர் சமூகத்தினர் பாரம்பரியக் கட்டுப்பாடுகளை உதறித்தள்ளி, கிறிஸ்தவ மிஷனரிமாருடைய பாடசாலைகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பி, ஆங்கிலக் கல்வியைப் பெறவைத்து, சமூக முன்னேற்றப் பாதையில் பயணித்தனர். பின்னர், சைவப் பிள்ளைகள் படிப்பதற்கெனப் பல பாடசாலைகள் திறக்கப்பட்டன.
இவை 1920களில் பலவாக இருந்தபோதிலும், தாழ்த்தப்பட்டோர் என்போரது பிள்ளைகளுக்கு இவற்றில் அனுமதி பெறமுடியாத நிலை காணப்பட்டது. சில பாடசாலைகளில் அனுமதி கிடைத்தும் இப்பிள்ளைகள் மற்றவர்களுடன் சமமாக இருந்து (Equal Seating) படிக்க முடியவில்லை. மற்றப் பிள்ளைகள் கதிரை/ வாங்குகளில் இருந்து படிக்க, இவர்கள் வகுப்பின் பின்புறத்தில் நிலத்தில் உட்கார்ந்து படிக்க வேண்டியிருந்தது. இப்பிள்ளைகள் மற்றவர்களுக்கு அருகே இருந்து உண்பது (Inter-caste Dining) தடை பண்ணப்பட்டது. தடைகளை நீக்க ஆங்கிலக் கல்விகற்ற மத்திய வகுப்பினர் துணியக்கூடிய சூழல் இருக்கவில்லை. மத்திய வகுப்புத் தலைவர்களும் துணிவுடன் வழிகாட்டவில்லை.
இது தொடர்பான விவரங்கள் பல. அவற்றை இங்கு கூறாது ஓர் எடுத்துக்காட்டின் மூலம் அக்கால நிலையை விளங்க வைக்கலாம். யாழ்ப்பாணத்து மக்களின் தன்னிகரிலாத் தலைவன் எனப் புகழப்பட்ட பொன்னம்பலம் இராமநாதன் 1913இல் சைவப் பெண் பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கென இராமநாதன் கல்லூரியை நிறுவினார். பின்னர், 1921இல், ஆண் பிள்ளைகளுக்குப் பரமேஸ்வராக் கல்லூரியை நிறுவினார்.
அப்பொழுது தன் நோக்கத்தை இராமநாதன் இவ்வாறு வெளியிட்டார் என்று கூறப்பட்டுள்ளது: “Parameshvara College was founded to bring inexpensively within the reach of Tamil boys the blessings of a sound education” (M. Vaithilingam, The Life of Sir Ponnambalam Ramanathan, II:463). ஆனால், இங்கு ‘Tamil boys’ என்ற சொற்கள் தமிழ் ஆண் பிள்ளைகள் அனைவரையும் குறிப்பிடவில்லை (அமெரிக்கா தனிநாடாக அமைக்கப்பட்ட போது வெளியிடப்பட்ட ‘Declaration of Independence’ ஏட்டில் “all men are created equal” என்று எழுதிய அமெரிக்கத் தலைவர்கள் எல்லா மனிதர்களையும் குறிப்பிடவில்லை; அவர்கள் ‘all men’ என்பதை ‘வெள்ளை மனிதர்’ என்ற பொருளில் எழுதினர், தொடர்ந்தும் கறுப்பின அமெரிக்கர்களை அடிமைகளாக வைத்திருந்தனர்). இரு கல்லூரிகளுக்கும் 1950கள் வரை (இலங்கை சுதந்திரம் பெற்றபோது கூட) ‘தாழ்த்தப்பட்டோர்’ என்று வர்ணிக்கப்பட்ட பிள்ளைகள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது (Balmforth, மேற்படி). பரமேஸ்வராக் கல்லூரியின் முதல் அதிபர் இராமநாதனின் தம்பியார் மகன் அருணாசலம் மகாதேவா; அவருக்குப் பின் அதிபராய் இருந்தவர் இராமநாதனின் மருமகன் சு. நடேசன். இவர்கள் இருவரும் பின்னர் அரசியல் தலைவர்களாக முன்னிலைக்கு வந்தவர்கள்.
சோல்பரி ஆணைக்குழு 1945இல் வந்து விசாரணை நடத்திய போது, ‘All-Ceylon Minority Tamil Mahasabha’ என்ற அமைப்பைச் சேர்ந்தோர் தமது இன்னல்களை எடுத்துரைத்து, தமக்கென வேறான பிரதிநிதி ஒருவரைத் தேர்ந்துகொள்வதற்கு ஒழுங்கு செய்யுமாறு வேண்டினர். இவர்கள் கேட்பது நியாயமானது எனக் கருதிய ஆணைக்குழுவினர் இவர்களுக்கான பிரதிநிதி ஒருவரைத் தேர்ந்துகொள்ளக்கூடிய வகையில் ஒரு பெரிய பல்-உறுப்பினர் தொகுதியை (Multi-member Constituency) அமைக்குமாறு பின்னர் நியமிக்கப்படவிருந்த ‘Delimitation Commission’ குழுவுக்குப் பரிந்துரை செய்தனர்.
இதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என 1946இல் ‘Delimitation Commission’ யாழ்ப்பாணத்தில் நடத்திய தொடர்கூட்டத்தில் கருத்துகள் பெற முயன்ற போது, ‘All-Ceylon Minority Tamil Mahasabha’ சார்பில் J.D. ஆசீர்வாதம், M.A.C. பெஞ்சமின், D. ஜேம்ஸ், P. ஜோனா, G. நல்லையா ஆகியோரும், ‘Minority Tamils Progressive Union’ சார்பில் A.B. ராஜேந்திரா, M.C. சுப்பிரமணியம், ஆரிய பத்திரண ஆகியோரும், ‘Nationalist Tamils Committee’ சார்பில் S.H. பேரின்பநாயகம், A.E. தம்பர் ஆகியோரும் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி. பொன்னம்பலமும் சாட்சியம் அளித்தனர். ‘சிறுபான்மைத் தமிழர்’ எனப்பட்டோருக்குத் தனியான பிரதிநிதி தேவை என முன்வைக்கப்பட்ட கருத்துகளைப் பொன்னம்பலம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்த ‘Balmforth’ இவ்வாறு கருத்துத் தெரிவிதுள்ளார்:
“In his multiple testimonies before the Delimitation Commission, the leader of the All-Ceylon Tamil Congress and State Council member for Point Pedro G.G. Ponnambalam offered a master class in lawyerly skill and charismatic charm. While his Oxbridge English and patrician courtesy were common to his generation of Ceylonese politicians, Ponnambalam also had a wickedly sharp sense of humor and was known to use insults to devastating effect. Due to his experience, position, and skill, Ponnambalam’s testimony carried enormous weight. … Ponnambalam systematically deconstructed the arguments of oppressed-caste activists who sought representation as minorities among Ceylonese Tamils.” (Balmforth, மேற்படி).
பிரித்தானியர் போகுமுன் தம் உரிமைகளைப் பெற்றுச் சமநிலையில் மற்றவர்களுடன் வாழலாம் என எண்ணிய ‘தாழ்த்தப்பட்ட’ சமூகத்தினர்’ 1940களில் எதையும் பெறவில்லை. பல நூற்றாண்டுகளாக இறுகிப்போயிருந்த சமூகக் கட்டுப்பாடுகளை இலகுவில் தளரச்செய்ய முடியாது என்பதைக் கண்டுகொள்ள முடிந்தது.
மத்திய வகுப்பின் எழுச்சி
அன்னியப் பேரரசுவாதிகள் நாட்டைவிட்டுப் போகும் கட்டத்தில் மத்திய வகுப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் என்ற கேள்வி எழலாம். அன்னியர் வந்து ஆட்சியைக் கைப்பற்றிய போது வேந்தர்கள் இருந்தார்கள், அவர்களுக்கு உதவியாக உயர்குலத்தினர் இருந்தார்கள். அன்னியர் வெளியேறும் கட்டத்தில் அவர்கள் இல்லை. அவர்களை அழித்துவிட்டுப் புதிய சமூக வகுப்பு ஒன்று உருவாகுவதற்கு ஆட்சியாளர் வழிதிறந்தனர். இதுதான் ஆங்கிலக் கல்வி கற்ற மத்தியவகுப்பு. அன்னியர் ஆட்சிநடத்த இது பெரிதும் உதவியது. அன்னியர் போகும்போது பேச்சுவார்த்தை நடத்தி நாட்டைத் திருப்பிக்கொடுப்பதற்கான உடன்பாட்டைச் செய்துகொள்ள மத்திய வகுப்பின் தலைவர்கள்தான் இருந்தார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது இலங்கையின் தென்பாகத்தில், முக்கியமாகக் கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய நகரங்களிலும் அவற்றின் சூழலிலும் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் இந்த மத்திய வகுப்பு எழுச்சிபெற்றது. ஆனால், யாழ்ப்பாணத்தவர் மத்திய வகுப்பிற்கும் சிங்கள மத்திய வகுப்பிற்கும் இடையில் பல முக்கியமான வேறுபாடுகள் இருந்தன. இரு பிரிவுகளும் எவ்வாறு தோன்றி வளர்ச்சி பெற்றன என்பதை அறிவதன் மூலம் அவற்றுக்கிடையே காணப்பட்ட வேறுபாடுகளை விளங்கிக்கொள்ளவும், 1940களில் ஏற்பட்ட பிளவுக்கான பின்புலத்தைக் கண்டுகொள்ளவும் முடியும். மத்திய வகுப்பின் எழுச்சியை அடுத்ததாகப் பார்க்கலாம்.



