ஆன்மிக நாத்திக வெளிப்பாட்டுத்தளம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

ஆன்மிக நாத்திக வெளிப்பாட்டுத்தளம்

July 23, 2026 | Ezhuna

இன்றைய இருப்பில் இயங்கும் சமூக சக்திகள் தத்தமக்கான நலன்களின் நோக்கில் கடந்த காலத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன. மேலாதிக்கத் தமிழ்த் தேசியம், தலித்தியம், விடுதலைத் தேசியம் என்பவற்றின் கருத்தியல் தளங்களை அடிப்படையாக உடைய சமூக சக்திகள் இன்றைய இயக்கங்களாகச் செயற்படுகின்றன. எமக்கான நவீன வரலாற்றைக் கட்டமைத்த ஆளுமையாகிய ஆறுமுக நாவலர் குறித்து இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய கண்ணோட்டத்தில் மறுவாசிப்பை மேற்கொள்கின்றன; இதன்வழியாக, கடந்தகாலச் சமூக சக்திகள் வழிவகுத்துவிட்டிருந்த இயங்குமுறை அமைந்த அடித்தளங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. இதேபோன்ற பின்னணிக்குரிய ஏனைய சமூகங்களில் இயங்கிய ஆளுமைகளுடன் எமது இயங்கு தளத்துக்குரிய ஆளுமைகளை ஒப்பிடுவதன் வாயிலாக செய்யப்பட்டவற்றையும், செய்திருக்கத்தக்கன எவை என்பதையும் மதிப்பீடு செய்வது அவசியமானது. இவற்றின் பெறுபேறுகள் எமக்கான எதிர்கால மார்க்கத்தை வடிவமைப்பதற்கு மிகமிக முக்கியமானவை ஆகும். “சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்” எனும் இத்தொடரானது நாவலரின் பங்களிப்புக் குறித்த மதிப்பீட்டின் வழியாக சமகால இயங்குமுறையைக் கணிப்பிட்டு, சுயவிமரிசனங்களுடன் புதிய பாதையையும், அதற்குரிய சரியான மார்க்கத்தையும் கண்டடையும் நோக்கில் எழுதப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள் நிலப்பிரபுத்துவச் சமூக முறைமையைத் தகர்த்தபடி தம்மைத் தேசங்களாகக் கட்டமைத்துக் கொண்டே உலகப் பந்தின் ஏனைய நிலப்பரப்புகளைக் காலனிகளாக்கி ஆட்சிபுரிந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் எமக்குரிய ஆளுமையாக முகிழ்ந்தவர் ஆறுமுக நாவலர். அவர் பற்றிப் பேசுகிற போது அவரது சமகாலத்தின் ஏனைய ஆளுமைகள் செயற்பட்ட பாங்கு குறித்தும் கவனம் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். ஈழத்தமிழ்ப்புலத்தின் இலக்கியம், மொழி, மதம் எனும் பன்முகத் தளங்களில் நாவலரின் செயற்பாடுகளே முனைப்புடையதாய் அமைந்திருந்தன. அவருடன் ஒப்பிடும் வகையில் சிங்களச் சமூகத்தில் வெளிப்பட்டிருந்த ஓர் ஆளுமையான அநகாரிக தர்மபால இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை செயற்படும் வாய்ப்புடன் இருந்த வகையில் சற்றுப் பிற்பட்ட காலத்தவராவார். நாவலரைப் போலவே இந்து சமயத்தளத்தில் இயங்கியவர்களாக வள்ளலார், ராஜா ராம்மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோர் இந்தியாவில் செயற்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். இந்துச் சமயத்தில் புரையோடிப்போயிருந்த சாதியத்தைச் சாடியவாறு கடவுளுக்குரிய சமத்துவக் குணாம்சத்தை ஏனையவர்கள் முனைப்பாக்கி இருந்ததைப் போலன்றி சாதியாசாரங்கள் அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியவரான நாவலர் அனைத்தையும் கடந்த மேலாதிக்கச் சக்தியான பதிக் கோட்பாட்டை (சைவசித்தாந்தத்தை) பரப்புரை செய்பவராக விளங்கினார்.

பிரித்தானியக் காலனித்துவ ஆக்கிரமிப்பினை அரசியல் – பொருளாதாரத் தளங்களில் முறியடிக்க இயலாத நிலையில் அன்றைய செயற்பாட்டாளர்கள் அனைவரும் இருந்துள்ளனர். அத்தகைய அடிமை நிலைக்குக் கால்கோலிட்டிருந்த ஆணாதிக்க – சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவரது சமகால இந்திய ஆளுமைகள் குரல் கொடுத்தது போல ஏன் நாவலரது இயங்குமுறை அமையாமல் போனது? பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாதிய எதிர்ப்புணர்வு வீச்சுடன் மேலெழுந்த இந்தியச் சமூகத்தில் இன்றுவரை சாதி மோதல்கள் முனைப்புடன் இருப்பது எதனால்? இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாகிச் செயற்படுவதன் காரணமாகப் பாரிய இன மோதல்கள் இடம்பெறாமல் இருப்பதைப் போல இலங்கையில் சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்கள் அனைவரும் அந்நியோன்யமான வாழ்வு இணைப்பைப் பெற்றிருக்க வேண்டுமே, எதன் பேரில் இனத்தேசிய மோதல் இங்கே கொழுந்துவிட்டு எரிகிறது?

இவையனைத்திலும் காலனித்துவப் பொருளுற்பத்தி உறவு ஊடாட்டம் கொண்டுள்ளது. கிழக்கிந்தியக் கம்பனி எனும் வர்த்தக அமைப்பு எம்மிடையே நிலவிய ஆட்சி முரண்களைத் தந்திரோபாயமாகக் கையாண்டு ஆக்கிரமிப்பை முழு நிறைவாக மேற்கொண்டதில் இருந்து, பிரித்தானிய முடியாட்சியின் கீழ் எமது நாடுகள் ஆட்பட்டது வரை எம்மை ஆளும் தேவையின் பொருட்டு எமது சமூக இருப்பையும் வழக்காறுகளையும் வரலாற்றையும் ஆய்வு செய்து அறிய வேண்டிய தேவை காலனித்துவத்துக்கு இருந்தது. அதன் பொருட்டுத் தொடக்கம் பெற்ற மானிடவியல், நாட்டாரியல், சமூகவியல், மொழியியல் போன்ற ஆய்வுத்துறைகள் இன்று பெரிதும் விரிவுபட்டனவாக வளர்ச்சியடைந்துள்ளன. எமது நாடுகள் சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த ஆய்வுப் புலங்களைவிடவும் சுயசார்புடன் எமது விருத்தியை எவ்வாறு வென்றெடுப்பது என்ற துறைகளில் ஆய்வாளர்களின் ஊழல், மோசடிகள் சுயசார்புப் பொருளாதார முன்னேற்றத்தை முடக்கிய போது ஏகாதிபத்திய ஊடுருவலுக்குக் கதவுகளை அகலத் திறக்க வேண்டிய வகையிலான திறந்த பொருளாதார முறைமை மேலெழுந்து வந்தது. இந்த மாற்றத்துக்காட்பட்ட எண்பதாம் ஆண்டுகளில்தான் மீண்டும் மானிடவியல் சார்ந்தனவாகிய மேலே குறிப்பிட்ட ஆய்வுப் புலங்கள் வீறுடன் முனைப்படைந்தன என்பது தற்செயலான ஒரு விடயமல்ல.

நிலவுடைமை அமைப்பு நிலவிய மத்தியகாலத்தில் சாதி முறைமை என்பது பொருளுற்பத்தி உறவாகச் செயற்பட்ட பாங்கு உலகின் முதல்நிலை விருத்திக்குரிய நாடாக இந்திய உபகண்டத்தை வளர்த்தெடுக்க வகை செய்திருந்தது. அதிலும் தமிழ்நாடு அதியுச்ச வளர்ச்சியின் மையமாகத் திகழ்ந்தது. முதல் தொல்பொருள் அகழ்வாய்வுத் தலங்களில் ஒன்றாக வெளிப்பட்ட ஆதிச்சநல்லூர் தமிழகத்தின் தொன்மைப் பலத்துக்குச் சான்றாக விளக்கம் தந்த போதிலும், அதன் தொடர்ச்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல், சிந்துவெளியின் வீழ்ச்சிக்குப் பின்னர் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எழுந்த முதல் நகரப் பண்பாடாக வட இந்தியாவை வெளிப்படுத்தும் ஆய்வுத் தூண்டல்கள் வலுப்பட்டிருந்தன. தமிழிலக்கிய – இலக்கணத் தொன்மையைக் கவனிப்பதை விடுத்து ரிக் வேத வரவை முதன்மைப்படுத்தியதோடு வட இந்தியாவை மையப்படுத்தி வரலாற்றெழுதுமுறையைத் தூண்டி வளர்த்தது ஏன்? ஆரியர் என்போர் வெளியே இருந்து வந்தோர் என்ற வரலாற்றுக் கட்டத்தைக் கடந்து திராவிடருடன் கலப்புற்று உருவான பிராமண மதமே தொடர்ந்து இயங்கியிருந்தது. அதனாலேயே ஓர் உயர்தர விருத்தி சாத்தியப்பட்ட உயர்ந்தோர் என்ற பொருள் மாற்றம் பெற்ற புரிதலே நிதர்சனமாகி இருந்த போதிலும் ஆரிய – திராவிட மோதலுக்குரிய ஆய்வுகள் தூண்டப்பட்டது ஏன்? தமிழின் உண்மைப் பலம் எதுவோ, அவற்றை மறைத்து மாயைகளுக்குள் தள்ளும் லெமூரியா கண்டம் பற்றிய புனைவுகளுக்குள் திசை திருப்பிவிட்டமைக்கான காரணம் என்ன?

இந்தியாவை ஒட்டச் சுரண்டி ஓட்டாண்டி நிலைக்கு ஆளாக்கிய ஏகாதிபத்தியம் இலங்கைக்காக அரசியல் உரிமைகளை அதிகமாக வழங்கி வந்ததுடன் இலங்கையின் உட்கட்டமைப்பு விருத்தியில் கூடுதல் கவனம் செலுத்தியதில் உள்நோக்கம் எதுவும் இல்லாதிருக்குமா? சிங்கள மக்களிடையே இந்திய விரோதத்தை வளர்த்த அதேவேளை நாட்டின் அரசியல் அதிகாரத்தை மிக அதிக அளவில் சிங்களத் தரப்புக்கே வழங்கியிருந்தது ஏன்? டொக்ரர் க்ரீன் உள்ளிட்ட மருத்துவத் தொழில்நுட்பக் கல்வியை வழங்கிய முன்னோடிகள் தமிழகத்தில் மட்டுமன்றி சிங்களப் பகுதிகளிலும் செயற்பட இடம் தராமல் யாழ்ப்பாணத்தில் இயங்குவதற்கு அனுமதித்தது எதற்காக? இலங்கை பூராகவும் யாழ்ப்பாணத்தவர் உத்தியோகம் பார்க்கும் கல்வி விருத்தியை வழங்கியிருந்த சூழலில், ஆறுமுக நாவலர் கந்தளாய்க் குடியேற்றத் திட்டத்தில் ஐரோப்பியர் உள்வாங்கப்படுவதை விடவும் இலங்கையர்களான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் குரல் கொடுக்க இயலுமாயிருந்தது. எமது ஆளுமையிடம் தேசமளாவிய பரந்த நோக்கு ஏற்பட வழி செய்தது போலன்றி அநகாரிக தர்மபாலர் இலங்கை என்பது சிங்கள நாடு எனக் குரல்கொடுக்க ஏற்ற அரசியல் – சமூக நியதி ஏற்படும் சூழல் கட்டமைக்கப்பட்டது ஏன்? எமக்கான தேசக் கட்டமைப்பைச் செயற்கையாக ஏற்படுத்திய ஏகாதிபத்தியம் தொடர்ந்தும் உள் மோதல்கள் வாயிலாகத் தேசிய ஒற்றுமை வலுப்பட்டு விடாமலாக்கும் கைங்கரியங்களை ஆற்றியிருந்தது என்பதே இவையனைத்துக்குமான ஒற்றைப் பதில்!

I) ஏகாதிபத்தியப் பதியின் மேலாதிக்கம்

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து காலனி நாடுகளை வேட்டையாடும் ஐரோப்பிய நாடுகளுக்குரிய பயணம் இரண்டாம் உலக யுத்தத்துடன் முடிவுக்கு வந்தது. போர்த்துக்கல், ஒல்லாந்து, ஸ்பெயின், பிரெஞ்சு, பிரித்தானியா எனத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சில காலம் தலைமை (பதி) எனும் பாத்திரத்தை வகித்து வந்தன. இருபதாம் நூற்றாண்டில் பிரித்தானியாவும் பிரான்சும் முதல் இரண்டு தலைமை நாடுகளாக இருந்த போதும், மேற்காசிய நாடுகளில் கருப்புத் தங்கம் எனும் எரிபொருள் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டிருந்தது. தங்க வேட்டைக்காகப் புதிய கண்டங்களைக் கண்டுபிடிக்கும் வீரசாகச நாடுகாண் பயணங்கள் மேலும் தேவைப்படாத வகையில் காலனிகளில் நிரந்தர ஆட்சி பெற்றிருந்த பிரித்தானியாவும் பிரான்சும் தமது பார்வையில் மத்திய கிழக்கு என அழைத்த மேற்காசியப் பிராந்தியத்தைப் பல நாடுகளாகப் பிரித்துப் பங்குபோட்டுக் கொண்டன. அரபு மொழி – இஸ்லாம் மதம் எனும் பொது உணர்வுடன் ஒரே நாடு போல இயங்கி வந்த அரேபிய மண் பல தேசங்களாகப் பிளவுபடுத்தப்பட்ட ஏகாதிபத்திய நலன் இன்று வரை பிரித்தாளுவோருக்கு ஆதாயங்களை வாரி வழங்கிவருவதனை அவதானிக்க இயலும்; அதன் பொருட்டு அரபு மண் யுத்தக் களரியாக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஏகாதிபத்திய விருத்தியைப் பெற்ற ஜேர்மன், இத்தாலி, ஜப்பான் எனும் மூன்று நாடுகள் அச்சு நாடுகள் என்ற ஒன்றுபடலுடன் உலகை மறுபங்கீடு செய்வதன் பொருட்டுத் தொடுத்த இரண்டு உலக மகாயுத்தங்களிலும் தோல்விகளைச் சந்தித்தன. அதன் பேரில் நட்பு நாடுகள் எனப்பட்ட பிரித்தானியா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா எனும் அணிக்குப் பணிந்து தமது ஏகாதிபத்திய நலனைத் தொடர வேண்டிய நிலை அச்சு நாடுகளுக்கு ஏற்பட்டது. அச்சு நாடுகள் மட்டும் உலக யுத்தங்களினால் பலவீனப்பட்டன என்பதற்கில்லை; ஐரோப்பிய ஏகாதிபத்தியத் திணை முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பின்னடையும் வகையில் யுத்த முனைப்பின் பொருட்டுத் தமது சக்திகள் அனைத்தையும் விரயமாக்கி இருந்தது. அந்த ஏகாதிபத்திய நாடுகளை விடவும் அதிக இழப்புகளைச் சந்தித்த சோவியத் ஒன்றியம் ஹிட்லரின் படையெழுச்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஜப்பான் தோற்கடிக்கப்பட்டு மக்கள் சீனம் என்ற சோசலிச நாடு சாம்பல் மேடாக்கப்பட்ட அழிவிலிருந்து தம்மைக் கட்டியெழுப்பிச் சாதனைகள் படைத்ததைப் போல, பிற நாடுகளைச் சுரண்டி வாழ்ந்து வந்த ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தினால் மீண்டெழ இயலவில்லை.

அதனிடமிருந்து ஏகாதிபத்தியத் தலைமையைக் கையேற்றிருந்த ஐக்கிய அமெரிக்கா பாசிச வெறித்தனத்துக்கு எதிரான முனையில் இழப்புகளைப் பெரிதாகச் சந்தித்திருக்கவில்லை. செத்த பாம்பை அடிப்பது போல தான் கண்டுபிடித்த அணுகுண்டுகளை ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டிருந்த ஜப்பானின் அப்பாவி மக்கள் மீது வீசிப் பரீட்சித்ததைத் தொடர்ந்து, மிகப்பெரும் இராணுவ வல்லரசு தானே எனக் காட்டியிருந்தது ஐக்கிய அமெரிக்கா. சமாதானத்தை நிலைநாட்டும் ஐக்கிய நாடுகள் சபையைத் தனது மண்ணில் உருவாக்கும் வாய்ப்பைப் பெற்றதுடன் தங்கத்துக்குப் பதிலாகத் தனது நாணயமான டொலரில் உலக நாடுகளது வர்த்தகம் இடம்பெற ஏற்ற நடவடிக்கைகளில் இறங்கியது. பெற்றோலிய வர்த்தகம் பிரதான இடத்தை எடுத்த சூழலில் மத்திய ஆசிய நாடுகளில் (குறிப்பாக சவுதி அரேபியாவுடன்) மேற்கொண்ட ஒப்பந்தங்கள் வாயிலாக பெற்றோ-டொலர் எனும் பொருளுற்பத்தி உறவுச் சங்கிலியில் உலக நாடுகளைப் பிணைத்துக் கொண்டது.

டொலரில் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டியிருந்த காரணத்தால் ஐக்கிய அமெரிக்காவின் தொடர்பின்றி வேறு இரண்டு நாடுகள் இடையே மேற்கொள்ளப்படுகின்ற வர்த்தகத்தின் போதும் கூட அந்தந்தத் தேசங்களின் நாணயத்தை டொலருக்கு மாற்றுவதில் வருகின்ற பணத்தொகை ஐக்கிய அமெரிக்க மத்திய வங்கிக்கு வந்து சேர்வதாக இருந்தது. இந்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் உறுதிப்படுத்தவுமென மேற்கொள்ளப்பட்ட வியட்னாம், ஈராக், ஆப்கானிஸ்தான் யுத்தங்களின் முடிவில் அவமானத்துடன் பின்வாங்கி வந்த போதிலும் பெற்றோ – டொலர் மேலாண்மை தக்கவைக்கப்படுவது கேள்விக்குள்ளாகவில்லை.

சென்ற வருடத்தில் அதனைக் கைவிட்டுப் புதிய உலக ஒழுங்கு மேலெழ ஏற்றதாக பிரிக்ஸ் அமைப்புக்குரிய நாடுகள் செயலொழுங்குகளை மேற்கொள்ளத் தொடங்கி இருந்தன; சீனாவின் யுவான், ரஷ்யாவின் ரூபிள், இந்தியாவின் ரூபாய் என்ற நாணயங்கள் வாயிலாக வர்த்தகப் பரிமாற்றம் இடம்பெறுவதைத் தடுக்க இயலாத நிலை ஐக்கிய அமெரிக்காவுக்கு; சவுதி அரேபியாவுடனான பெற்றோ – டொலருக்கான காலக்கெடு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அதனைப் புதுப்பித்துக் கொள்ள முற்படாதது மட்டுமன்றி, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்புரிமையையும் சவுதி அரேபியா பெற்றுக் கொண்டதன் வாயிலாக ஒற்றை மேலாதிக்கத்தை ஐக்கிய அமெரிக்கா இழந்தமை பன்மைத்துருவங்களுக்கான புதிய உலக ஒழுங்கு நிதர்சனமாகிவிட்டமையை உறுதிப்படுத்துவதாக அமைந்தது!

உலகத்தின் புதியதாகத் திகழ்ந்திருந்த தனது ஏவலுக்குப் பணியும் நிலையில் நாடுகள் இனியும் இல்லை என்பதை ஏற்க இயலாத நெருக்கடியில் ஐக்கிய அமெரிக்கா நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் தொடக்கியிருந்த உலக மயமாதலுக்குரிய திறந்த பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து தானே விலகி, அடாவடித்தனமான வரிவிதிப்புகளையும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டது. தனது மேலாதிக்கமும் செல்லுபடியாகும் எனக் காட்டுவதற்கு ஈரான் மீது யுத்தத்தைத் தொடுத்து மூக்குடைபடும் அவதிக்கு ஆளாகி வருகிறது. வியட்னாம், ஈராக், ஆப்கானிஸ்தான் யுத்த முனைகளில் ஆக்கிரமிப்புச் சாத்தியப்பட்ட பின்னர் அவமானத்துடன் வெளியேற நேர்ந்தது. ஈரானின் வாசலைத் தொட இயலாத வகையில் தனது பலவீனத்தை வெளிப்படுத்தும் அவமானகரத் தோல்வியை அது வெளிப்படுத்துவதன் வாயிலாக ஒடுக்கப்பட்ட தேசங்கள் முன்னர் போல இலகுவில் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் இல்லை என்ற வரலாற்றுச் செல்நெறி மாற்றம் மேலெழுந்துவிட்டது.

பெற்றோ – டொலர் உற்பத்தி உறவு பலவீனப்பட்ட போதிலும் உலக மொழியாக ஆங்கிலம் பெற்றிருந்த மேலாதிக்கமும் ஊடகத்துறை வலைப்பின்னலுமே ஐக்கிய அமெரிக்கக் கருத்தியல் மேலாண்மை ஓரளவேனும் உயிர்ப்புடன் இருக்க உதவி வருகிறது. புதிய தொழில்நுட்ப விருத்திகள் மொழிப் பரிமாற்றத்தை ஜனநாயகப்படுத்துவதுடன் இனியும் மேலைத்தேசங்களுக்குரிய வாய்ப்பை நிராகரித்து சீனா, ஈரான், வடகொரியா, இந்தியா வரையில் புதிய கண்டுபிடிப்புகள் பெருகி வரும் காரணத்தால் கருத்தியல் தலைமை ஐக்கிய அமெரிக்காவை விட்டு நீங்கும் காலத்தை விரைவுபடுத்தி வருகிறது எனலாம்.

II) சுத்த சமரச சன்மார்க்கத்தில் இருந்து மத நீக்கத்துக்கு

நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாகக் காலனித்துவ மேலாதிக்கத்துடனேயே மேலைத்தேசங்களின் முதலாளித்துவ விருத்தி ஏற்பட்டு வந்தது. இரண்டு நூற்றாண்டுகளாக ஏகாதிபத்திய உற்பத்தி உறவில் ஒடுக்கப்பட்ட தேசங்களைச் சமவீனமான பரிவர்த்தனை வாயிலாகச் சுரண்டி வந்த ஏகாதிபத்திய அணி இன்று உள் முரண்பாடுகளுக்குள் சிக்கல்படுகிறது. ஒடுக்கப்பட்ட தேசங்கள் புதிய உலக ஒழுங்கினூடாக ஆளுமை பெற இயலுவதனாலேயே ஏகாதிபத்தியத் திணைகளின் இத்தகைய உள்முரண்பாடு வலுப்பட வேண்டி ஏற்பட்டது. சுரண்டப்படும் நாடுகள் தொடர்ந்தும் பணியத் தயாரெனில் உயர் பதி அந்தஸ்துடன் ஐக்கிய அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகள் அனைத்துக்கும் தலைவராகத் திகழ்ந்திருக்க இயலும். ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பொய்க் குற்றச்சாட்டுகளுடன் யுத்தத்தைத் தொடுத்த போது கூட்டுத் தாக்குதலுக்குச் சென்ற நேட்டோ அணிக்குரிய ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீதான போரில் களமாடத் தயக்கம் காட்டுவது ஒடுக்கப்பட்ட தேசம் இன்று பெற்றுவிட்ட ஆளுமையின் கனதியின் காரணமாகவே. முன்னர் போலத் தொழுதேற்றிப் போற்றும் பதியாக அன்றித் தலைமைத் தாதாவுக்குரிய அடாவடித்தனங்களை ஐக்கிய அமெரிக்கா வெளிப்படுத்த நேர்ந்துள்ளமையானது ஏகாதிபத்தியத் திணையின் பலவீனத்தின் வெளிப்பாடு.

ஏகாதிபத்தியத்தின் பதி பலவீனப்படுவதும், தேசங்கள் அனைத்தும் தலைமைத் தாதாவுக்குக் கட்டுப்பட மறுத்துத் தமக்குள் சமத்துவம் பேண முற்படுவதும் இனிமேல் முனைப்புற்று வளரவுள்ள உலகச் செல்நெறி. இது போன்ற ஒரு மாற்றத்தை நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் தகர்ந்து சென்ற வரலாற்றிலும் கண்டு வந்திருக்கிறோம். சோழப் பேரரசர் காலம் (கி.பி. 10-13 ஆம் நூற்றாண்டுகள்) உலகின் முதல் நிலை வல்லரசாகத் தமிழகம் திகழ்ந்த வரலாற்றினை உடையது என்பதனைப் பேசி வந்துள்ளோம். நிலத்துடன் பிணைக்கப்பட்ட பண்ணையடிமைகளைச் சுரண்டும் நிலப்பிரபு தலைமை பெற்று இயங்கிய அன்றைய வாழ்முறையில் மதம் சமூக இயக்கத்துக்கான பிரதான கருவி. நிலப்பிரபுத்துவத்தின் அதியுச்ச மேலாதிக்கம் பெற்றிருந்த வெள்ளாளர் சைவசித்தாந்தம் வாயிலாக வெளிப்படுத்திய பதிக் கோட்பாடு கடவுள் பற்றிய கருத்தியலில் அதியுச்சமான ஒன்றாக இருந்தது. பதி மட்டுமே அதியுயர் கடவுள், அதன் ஏவலுக்கு ஆட்பட்டனவே ஏனைய அனைத்தும்.

நிலப்பிரபுத்துவம் அதியுச்ச நிலையடைந்து சிதைவுகளுக்கு உள்ளான போது ஐரோப்பியக் காலனிக்கு ஆட்படும் வரலாறு ஏற்படத் தொடங்கியது. பதினைந்தாம் நூற்றாண்டைத் தொடர்ந்து நாம் போர்த்துக்கல், ஒல்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் காலனிகள் ஆனது போல தமிழ்நாட்டுக்கு நேரவில்லை. அதே காலத்தில் வெள்ளாளரின் தனிப்பெரும் நிலப்பிரபுத்துவ மேலாண்மை தகர்ந்து விஜயநகரப் பேரரசின் தெலுங்கு மொழி பேசும் நிலப்பிரபுத்துவச் சாதிகள் பிரவேசிப்பது நிகழ்ந்தது. பதிக்கு அப்பால் அத்வைதத்திற்குரிய பிரம்மம் ஆட்சியாளர்களின் கவனிப்புக்கு உரியதாக ஆனது. இதன் பேறாக பதியின் தனி ஆதிக்கம் இழக்கப்பட்டு பிரம்மத்துடன் சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டியுள்ளதனைத் தாயுமான சுவாமிகள் வெளிப்படுத்தும் வரலாறு அரங்கேறியது.

19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியக் காலனியாகத் தமிழகம் மாற்றம் பெற்றபோது வள்ளலார் வாயிலாக வெளிப்பட்ட சுத்த சமரச சன்மார்க்கம் மக்களிடையே வேறுபாடுகளைக் குறியீடாக வெளிப்படுத்திய கடவுளர்களைக் கடந்த ஆன்மிக எழுச்சிக்குரியதாகத் தமிழகத்தை மாற்றியிருந்தது. சைவத்தின் மேலாதிக்கம், அதனுடன் இணக்கம் காணும் வைணவம் என்பன சார்ந்த மத உணர்வுகளை விட்டு விலகிய ஆன்மத் தேடல் வள்ளலார் வாயிலாக மேலெழுந்தது. அனைத்துக் கடவுளர்களும் சம அளவில் அணுகப்படும் போது பதி பெற்றிருந்த தனியான மேலாதிக்கம் கரைந்து காணாமலாகி வந்தது.

III) ஆன்மிக நாத்திகம்

இருபதாம் நூற்றாண்டின் பூரண சமத்துவம் பற்றிய சிந்தனை முளைவிடத் தொடங்கிய போது பாரதி முன்னிறுத்திய ஆன்மீக நாத்திகம் வெளிப்பட்டது. பெருங்கோயில் மையமாக இயங்கும் சமய அனுஷ்டானங்களுக்கு எதிரான சித்தர் மரபு ஆரம்பம் முதல் இயங்கி வந்த ஒன்று. இரண்டினதும் தொடக்கமாகத் திருமூலர் திகழ்ந்தார் என்பது தமிழின் தனிச்சிறப்புகளில் ஒன்று. மேலாதிக்கக் கருத்தியலாக மூன்று நூற்றாண்டுகளின் பின் வெளிப்பட்ட பதி பற்றி முதன் முதலில் வெளிப்படுத்திய திருமூலர் சமத்துவ நாட்டமுடைய சித்தர் மரபின் தொடக்குநரும் கூட. பெரிய ஆலயங்களைக் கடந்த ஒளி வழிபாட்டை முன்னிறுத்திய வள்ளலாரை அடியொற்றிப் பதிய தளத்துக்கு ஆன்மிகச் சிந்தனையை வளர்த்த பாரதி தன்னைச் சித்தர் பரம்பரையின் வாரிசாகப் பிரகடனப்படுத்தியிருந்தார்.

தமிழின் இத்தகைய தனித்துவமிக்க வரலாற்றுச் செல்நெறி எவ்வாறு ஏற்பட்டது? “வரலாற்றுச் செல்நெறியைத் தீர்மானிக்கும் சக்திகள்” எனும் அடுத்த இயலில் அது குறித்துப் பேசுவோம்!



About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்