திருப்புமுனை எட்டு
கலாநிதி றொபின் கொனிங்ஹாம்: அநுராதபுரமும் ஆதி இரும்புக்காலமும்

CONINGHAM, R.A.E. (1995): ‘The Rise of Cities in Sri Lanka’ in F.R. Allchin: The Archaeology of Early Historic South Asia, Cambridge University Press.
ALLCHIN, F.R. (1995): The Archaeology of Early Historic South Asia, Cambridge U.P.
CONINGHAM, ROBIN (1999): Anuradhapura: The British – Sri Lankan Excavations at Anuradhapura Salgaha Watta 2: Volume 1 The Site, Archaeopress, Oxford.
CONINGHAM, ROBIN (2006): Anuradhapura: The British – Sri Lankan Excavations at Anuradhapura Salgaha Watta 2: Volume 2 The Artefacts, Archaeopress, Oxford.
————————————————

பேராசிரியர் றொபின் கொனிங்ஹாம் தொல்லியல், மானிடவியல் ஆகிய கற்கைகளை கேம்பிரிஜ் பல்கலைக்கழக கிங்ஸ் கல்லூரியில் கற்று கலாநிதிப் பட்டம் பெற்றவர். 2005ஆம் ஆண்டிலிருந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பேராசிரியராகக் கடமையாற்றி வருகிறார். இவர் UNESCO நிறுவனத்தினரால் 2014ஆம் ஆண்டில் ‘தொல்லியல் கலாசார பாரம்பரியத்தில் நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கான’ தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் தனது குழுவினருடன் நேபாளம், இந்தியா, இலங்கை, ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளில் தொல்லியல் ஆய்வுகளுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். இலங்கையில் 1994–95, 1996–97, 1998–99 ஆம் ஆண்டுகளில் அநுராதபுரத்திலும், 2017இல் யாழ்ப்பாணம் கோட்டையிலும் தொல்லியல் அகழ்வாய்வுகளை மேற்கொண்டார். அநுராதபுர அகழ்வாய்வுகளை மேற்கொண்ட சமயம் இலங்கை முழுவதினதும் இடைக்கற்கால மையங்கள், வரலாற்றுக்கு முற்பட்ட மையங்கள், பெருங்கற்காலக் கறுப்பு-சிவப்பு மட்பாண்ட மையங்கள் பற்றித் தனது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார்.
————————————————
இன்றைய அநுராதபுரம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரமாகும். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது ஒரு காட்டின் நடுவிலிருந்த சிறிய கிராமமாகவே இருந்தது (Davy 1821: 225). அநுராதபுரத்தின் தற்போதைய தோற்றத்திற்கு, அவ்விடத்தின் புராதன நீர்ப்பாசன அமைப்பை மறுசீரமைத்த பிரித்தானிய காலனித்துவவாதிகளே காரணமாவர் (Brohier, 1934). அநுராதபுரத்தின் பெருமை, அதிகமான இலங்கை மக்களின் இதயத்திலும் மனத்திலும், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தீவின் அரச தலைநகரமாக அது விளங்கியதன் பதிவாகும். வேறு சிலருக்கு அது காலனித்துவ காலத்திற்கு முற்பட்ட அற்புதமான பிரம்மாண்டமான கடந்தகாலத்தின் சின்னமாகும். இன்னும் சிலருக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டிய ஒரு புனிதத் தலமாகும். மேலும் சிலருக்கு ஆசியாவின் செழுமையான பண்பாட்டுப் பாரம்பரியத்தை நினைவூட்டும் பண்டைய நகரமாகும்.
தொல்லியல் ரீதியாக, இலங்கையின் வரலாற்றில் காலவரன்முறையிலும் கலைப்பொருட்களின் வரிசையிலும் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் சான்றுகளை வெளிக்கொணர்ந்தது என்ற வகையில் அநுராதபுரம் மிக முக்கியமான மையமாகும். கடந்த அரை நூற்றாண்டாக மாந்தை, கந்தரோடை, பொம்பரிப்பு, இப்பன்கட்டுவ ஆகிய இடங்களில் முக்கியமான அகழ்வாய்வுகள் நடைபெற்றபோதிலும், அவற்றின் அறிக்கைகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. இந்த நிலை காரணமாக, இந்த நாட்டின் ஆதி வரலாற்றை அறிந்துகொள்வதற்கு உரைமூலங்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனுடன், நம்பிக்கைக்குரிய காலவரன்முறைத் தேதிவரிசை இல்லாததும், அநுராதபுரத்தை இந்த நாட்டின் கால ஆராய்ச்சிக்கான மாதிரி ஆய்வுத்தளமாகக் கொண்டு அகழ்வாய்வுகளை மேற்கொள்ள வழிவகுத்தது.
1984ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை இங்கே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், காலவரன்முறையான ஒரு கட்டமைப்பு வரிசையை அநுராதபுரத்திற்குக் கொடுத்துள்ளன. இதை மாதிரியாகக் கொண்டு இத்தீவின் மற்றைய தொல்லியல் மையங்களை ஒப்பீட்டு ரீதியில் காலக்கணிப்புச் செய்ய முடியும் (Coningham, 1995: 1).
————————————————
தொல்லியல் அகழ்வாய்வுகளும், கதிரியக்கக் கரிம ஆய்வுகளும் அநுராதபுர நகரத்தின் ஆரம்பத்தை கி.மு. 800ஆம் ஆண்டிற்கு எடுத்துச் செல்கின்றன. அநுராதபுரம் மல்வத்து ஓயா நதிக்கரையில் நிறுவப்பட்டது. மல்வத்து ஓயா ஒரு ஆழமற்ற ஆறாகும். இதிலிருந்து பெறக்கூடிய நீரைக் கொண்டு கணிசமான மக்கள் தொகையைத் தக்கவைக்க இயலாது. மேலதிகமாகக் குளங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கி.மு. முதலாவது ஆயிரத்தாண்டின் முதற்பாதி வரையிலும் மேலதிகமான குளங்கள் எவையும் கட்டப்படவில்லை. இந்த நிலையில், அங்கே நகரம் ஏற்பட்ட காலத்தில் பெரியதொரு சனத்தொகை இருந்திருக்க வாய்ப்பில்லை.
அநுராதபுரத்தின் முக்கியத்துவம் இருவகையானது. ஒன்று, வரலாற்றுக் காலத்தில் நாட்டின் வரலாற்று, சமய, கலாசாரப் பாரம்பரியங்களைப் பேணியமை. இரண்டாவது, தொல்லியல் ரீதியாக அதன் அளவு, ஆழம், தொழில்சார் நிலப்படிவங்களின் செழுமை, வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் ஆதி வரலாற்றுக் காலங்களில் அங்கே வாழ்ந்த மக்களின் இயல்புகள் என்பனவாகும்.
நகரத்தின் வளர்ச்சி
கி.மு. 800ஆம் ஆண்டுக் காலத்தில் குடியிருப்புகளின் பரப்பு 50 ஹெக்டேர்களாகக் கணிக்கப்படுகிறது. கி.மு. 700–600ஆம் ஆண்டு காலத்தில் அது ஒரு நிறுவப்பட்ட நகரமாக வளர்ச்சியடைந்திருந்தது. கி.மு. 300ஆம் ஆண்டளவில் நகரத்தின் பரப்பு 100 ஹெக்டேர்களாக விரிவடைந்திருந்தது. அக்காலகட்டத்தில் அநுராதபுரம் தென் ஆசியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்தது (Deraniyagala 1992, Addendum I).
அநுராதபுர நகரம் இருந்த இடத்தில் அகநகர், வெளிநகர் என இரண்டு நகரப் பகுதிகள் காணப்படுகின்றன. மத்தியில் இருக்கும் அகநகர் (Citadel) என அழைக்கப்படும் மண்மேடு பண்டைய நகரத்தின் மையப் பகுதியாகும். வெளிநகரில் நான்கு பெரிய தாதுகோபங்கள் காணப்படுகின்றன. அவையாவன மகாதூபமான றுவன்வெலிசாய, ஜேதவனராமய, மிரிசவெட்டி, அபயகிரி என்பன. அவற்றிற்குரிய ஆராமங்களும், மேலும் பல குளங்களும், நீர்ப்பாசன வேலைகளும் அங்கே காணப்படுகின்றன.
தொல்லியல் அகழ்வாய்வுகள்
கலாநிதி சிரான் தெரணியகல 1969ஆம் ஆண்டில் அகநகர் (Citadel) மேட்டில் பல இடங்களில் ஆழமான சோதனைக் குழிகளை வெட்டியிருந்தார். இந்தக் குழிகள் அகநகரின் வெவ்வேறு இடங்களில் காணப்பட்ட வெவ்வேறு குடியிருப்பு மட்டங்களின் ‘குடியிருப்பு வரிசை’ முறையை அறியத் தந்தன.
1990–91ஆம் ஆண்டுகளில் பெரிய அளவிலான அகழ்வாய்வு நடத்தப்பட்டது. ‘பிரித்தானிய–அநுராதபுரத் திட்டம்’ என்ற இந்த அகழ்வாய்விற்கு பிரித்தானிய அகழ்வாராய்ச்சியாளர்களான ரேமண்ட் ஆல்சின் மற்றும் றொபின் கொனிங்ஹாம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆங்கிலத்தில் இது ‘Anuradhapura Salgaha Watta Plot 2: ASW2’ என அழைக்கப்பட்டது (Coningham 1999, 2006).
2004–2008ஆம் ஆண்டுகளில் நகரத்தின் வெளிப்பகுதியிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன (Anuradhapura – The Hinterland Project). கொழும்பிலுள்ள கலைகள் மற்றும் மானிடவியல் ஆய்வு மன்றம் (Arts and Humanities Research Council) ஆதரவு வழங்கிய இந்தத் தொல்லியல் ஆய்வில் டர்ஹாம், களனியா, பிராட்ஃபோர்ட், ஸ்டெர்லிங், பிரிஸ்டல் ஆகிய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்துறை ஆய்வுக் குழு பங்குபற்றியது. இந்த ஆய்வின் நோக்கம், பரந்த நிலப்பரப்பில் அநுராதபுரம் நகரமயமாக்கப்படுவதற்கு முன்னரும் பின்னரும், அதனை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த சமூகங்களின் வாழ்வியல் மாற்றங்கள் எவ்வாறு இருந்தன என்பதை ஆராய்வதாகும் (Coningham 2013).
அகநகர் மேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பின்வரும் அகழ்வு வரிசைகள் இனங்காணப்பட்டன. பிரித்தானிய அகழ்வுக்குழு ASW2 குழியில் கண்ட அடுக்குநிலைகளுக்கு (Stratified Levels), அடிப்பகுதியிலிருந்து மேல்நோக்கி, ‘L’ இலிருந்து ஆங்கில எழுத்துகளை வரிசையாக வழங்கியுள்ளனர்.
காலம் L: இடைக்கற்காலம் (கி.மு. 2000–840)
ஆரம்பகால மனிதக் குடியேற்றம் ASW2 குழியின் அடிப்பகுதியில், பிற்காலக் குடியேற்றங்களுக்குக் கீழே, சரளைக் கற்களிடையே காணப்பட்டது. குவார்ட்ஸ் கற்களினால் செய்யப்பட்ட கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. விறாண்டிகள், கத்திகள், கூர்க்கற்கள், சுத்தியல்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் என்பன கணிசமான அளவில் கிடைத்தமை, இப்பகுதியில் மக்கள் குடியிருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றது. இப்பொருட்களின் கதிரியக்கக் காலக்கணிப்புகள், இம்மக்கள் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டின் ஆரம்ப காலத்திலிருந்தே இவ்விடத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதைக் காட்டுகின்றன (Deraniyagala 1992; Allchin 1995; Coningham 2001, 2006a).
காலம் K: ஆதி இரும்புக்காலம் (கி.மு. 840–460)
சரளைக் கற்களுக்கு மேலே காணப்படும் செந்நிற-மண்ணிறப் பழைய மண்ணில் இக்குடியிருப்பு அடுக்கு காணப்படுகிறது. இந்தக் குடியிருப்பு அடுக்கு 18 ஹெக்டேர் பரப்பிலுள்ள பல குழிகளில் இனங்காணப்பட்டுள்ளது. ASW2 குழியில் 2.5 மீட்டர் விட்டத்தில் வட்டவடிவில் பல தூண்குழிகள் காணப்பட்டன. ஒரு பக்கத்தில் இத்தூண்குழிகள் பக்கவாட்டாகச் சென்றன. இது ஒரு ஆரம்பகால வீடு (குடிசை) இருந்த இடத்தைக் காட்டியது. அந்த மட்டத்தில் பல மெருகூட்டப்பட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகள், குறியீட்டு எழுத்துகளைக் கொண்ட ஓடுகள், இரும்புக் கசடுகள், இரும்புப் பொருட்கள் மற்றும் கால்நடை எலும்புகள் கிடைத்தன. அந்த மட்டத்தில் மக்களின் குடியிருப்புச் செறிவு, அநுராதபுரம் ஒரு நகரமாக மாறியிருந்ததைக் காட்டியது. கதிரியக்கக் கரிம ஆய்வுகள் இக்காலத்தின் ஆரம்பத்தை கி.மு. 840ஆம் ஆண்டாகக் காட்டின (Deraniyagala 1992; Allchin 1995; Coningham 2006a).
காலம் J: ஆரம்ப வரலாற்றுக் காலம் I (கி.மு. 460–350)
இந்த அகழ்வு மட்டத்தில் ASW2 குழி ஐந்து கட்டமைப்புக் கட்டங்களைக் காட்டியது. இவை ஆழமாகப் புதைக்கப்பட்ட பெரிய தூண்களைக் கொண்ட வட்டவடிவான குடிசைகள் இருந்ததைக் காட்டுகின்றன. இரண்டாவது கட்டத்தில் 5 மீட்டர் விட்டம் கொண்ட வட்டவடிவான குடிசையின் தளம் காணப்பட்டது. இதன் அருகில் 1.25 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு குழி காணப்பட்டது. அக்குழி சாம்பலால் நிரப்பப்பட்டு சிவப்பு மண்களியால் மூடப்பட்டிருந்தது. அதை அகழ்ந்தபோது இரும்பு அம்புநுனி, சிறிய செப்புக் கலவையினாலான ஒரு பொருள், மூன்று கறுப்பு-சிவப்புக் கிண்ணங்கள், ‘கிராபிட்டி’ குறியீடுகள் பொறிக்கப்பட்ட மூன்று கலன்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.
“இந்தக் குழியில் எலும்புகள் காணப்படாத போதிலும், சாம்பலோடு காணப்பட்ட கூட்டமைப்புப் பொருட்கள் தென்னிந்தியப் பெருங்கற் பண்பாட்டு இரும்புக்கால ஈமப்புதையல்களை, குறிப்பாக பொம்பரிப்பிலும் மாஸ்கியிலும் அகழப்பெற்ற ஈமப்புதையல்களை நினைவூட்டுகின்றன” (Allchin 1995: 163–164).

அநுராதபுர ASW2 அகழ்வுகளில் கண்ட மட்பாத்திரங்களும் சாம்பலும் கொண்ட ஈமப்புதையல் குழி. Image source: R.A.E. Coningham.
மூன்றாவது கட்டத்தில் நெருப்பூட்டும் சூளைகளும், இரும்புக் கசடுகளும் காணப்பட்டன. நான்காவது கட்டத்தில் 5.5 மீட்டர் விட்டம் கொண்ட குடிசையின் நடுவில் நான்கு தூண்களின் அடித்தளங்கள் காணப்பட்டன. இது மரத்தினாலான ஒரு கூரையைத் தாங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்தது. இக்குடிசையின் பக்கச் சுவர்களும் கூரையும் ஓலைகளாலும் புற்களாலும் மூடப்பட்டிருக்கலாம் (Allchin 1995; Coningham 2006b).
இக்காலத்தின் மட்பாண்டங்கள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துவது மெருகூட்டப்பட்ட பளபளப்பான கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களாகும். இவற்றைத் தவிர இரும்பு மற்றும் செம்புக் கசடுகள், மணிகள், குதிரை எலும்புகள், அம்பு நுனிகள், தந்தம் என்பனவும் காணப்பட்டன. இந்த மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான பொருட்களில் ஒன்று பிராமி எழுத்துகளின் பகுதிகள் கீறப்பட்ட மட்கலத் துண்டுகளாகும். இந்த மட்டத்தின் கதிரியக்கக் காலக்கணிப்புகள் கி.மு. 450க்கும் கி.மு. 350க்கும் இடைப்பட்ட ஆண்டுகளைத் தந்திருந்தன (Allchin, 1995). ஆனால் முன்னர் தெரணியகல மேற்கொண்ட வெப்பஒளிர்வு (Thermoluminescence Dating) தேதிக்கணிப்பு ஆய்வுகளில், இந்த அகழ்வு மட்டத்திற்குக் கி.மு. 600–500 ஆண்டுகள் வழங்கப்பட்டிருந்தன (Deraniyagala, ASW1–1992).
காலம் I : ஆரம்ப வரலாற்றுக் காலம் 2 (கி.மு. 350–275)
இக்காலத்தில் நகரின் குடியிருப்புப் பகுதி 66 ஹெக்டேர்களாக விரிவடைந்திருந்தது. முன்பிருந்த உருண்டையான மரக்கட்டைகள் கொண்ட தூண்குழிகளுக்குப் பதிலாக, நீள்சதுரமான மரக்கட்டைகளைக் கொண்ட தூண்குழிகள் காணப்பட்டன. இக்காலம் எட்டுக் கட்டங்களைக் கொண்டிருந்தது.
முதலாவது கட்டத்தில் 5.7 சதுர மீட்டர் அளவுடைய தனி அறை ஒன்று அதன் தூண்குழிகளையும் சுவர் அடிகளையும் கொண்டு இனங்காணப்பட்டது.
நான்காவது கட்டத்தில் அந்தக் கட்டுமானம் 40 சதுர மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்தது. முதல் கூறிய அறையுடன் மேலும் ஒரு அறை வடக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. அத்துடன் மேற்குப் பக்கத்தில் இரு அறைகளையும் இணைக்கும் வகையில் ஒரு விறாந்தை அமைக்கப்பட்டிருந்தது. உள் இரண்டு அறைகளும் அவற்றை இணைக்கும் விறாந்தையும் வரலாற்று மற்றும் சமகாலச் சிங்களக் கட்டடக்கலையின் முக்கிய அலகுகளில் ஒன்றாகும். கி.மு. நான்காம் நூற்றாண்டிற்குரிய இக்கட்டடம் ஒரு மூலப்படிமமாகக் கருதப்படுகிறது. நான்காவது கட்டத்தில் சுடப்பட்ட கூரை ஓடுகள் முதல்முறையாகத் தோன்றுகின்றன (Allchin 1995: 165; Coningham 2001, 2006a).
காலம் H: ஆரம்ப வரலாற்றுக் காலம் 3–4 (கி.மு. 275–225; கி.மு. 225–150)
இந்த இரு காலப்பகுதிகளும் முன்னர் சிரான் தெரணியகல குறிப்பிட்ட நான்காம் காலத்திற்குச் (Period IV) சமமானவை. இக்காலத்தில் ASW2 குழியில் வீடுகள் எவையும் காணப்படவில்லை. இங்கே காணப்பட்ட ஒரு குழியில் மரக்கட்டைகள் வைத்து எரித்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டன. குழியைச் சுற்றியிருந்த மண் உயிர்க்காற்றுடன் இணைவுற்றிருந்தது (Oxygenated). எரித்த பின்னர் அக்குழி மண்போட்டு மூடப்பட்டிருந்தது.
அந்தக் குழியினுள் விகிதாசாரமற்ற உயர் செறிவில் மணிகள், அப்பிரகம் (Mica), சங்கு, இரும்புப் பொருட்கள், றூலெட்டெட் மட்பாண்டங்கள், மட்பாண்டத் துண்டுகள், பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட ஓடுகள் என்பன காணப்பட்டன. இக்குழியின் வடிவம், அளவு மற்றும் அதில் காணப்பட்ட பொருட்களை அடிப்படையாகக் கொண்டு, ஆய்வாளர் ரேமண்ட் ஆல்சின் இவ்விடம் ஓர் ஈமச்சடங்கு நடைபெற்ற இடமாக இருந்திருக்கலாம் எனக் கருதுகிறார் (Allchin, 1995: 168).
இதற்கு மேலுள்ள மட்டத்தில் ஒன்றின் மேல் ஒன்று அமைக்கப்பட்டிருந்த, முன்பு கூறிய வடிவத்திலான ஐந்து வீடுகள் காணப்பட்டன. இவற்றில் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டிருந்த அமைப்பு, 16 சதுர மீட்டர் அளவுடைய செங்கற்கள் பதிக்கப்பட்ட தரையைக் கொண்டிருந்தது. அதன் சுவர்கள் வெண்காரை பூசப்பட்டு, அதன் மேல் வெள்ளையடிக்கப்பட்டிருந்தன. இச்சுவருக்கு அப்பால் ஒரு குறுகலான ஒழுங்கை காணப்பட்டது. இந்த ஒழுங்கை, நகரத்து வீடுகள் ஒழுங்கைகளாலோ வீதிகளாலோ பிரிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றது (Allchin 1995; Coningham 2001, 2006a).
இக்காலத்தின் மற்றைய பொருட்களாக றூலெட்டெட் மட்பாண்டங்கள், அரிக்கமேடு வகை மட்பாண்டங்கள், மெருகிடப்பட்ட கறுப்பு மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் நாணயங்கள் காணப்பட்டன. நாணயங்களில் யானை மற்றும் சுவஸ்திகா குறியீடுகள், புத்தச் சக்கரங்கள், லக்ஷ்மி நாணயங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை (Allchin 1995: 169).
கோட்டைச் சுவர்
அகநகர் மேட்டின் தென்பக்கத்தில் தோண்டப்பட்ட குழிகள், நகரின் வெளிப்புறத்தில் எட்டு மீட்டர் உயரமுடைய ஒரு மண் அரணையும் (Rampart), அதன் மேல் அமைக்கப்பட்ட சுவரையும் வெளிக்கொணர்ந்தன. மண் அரண் 2.5 மீட்டர் அகலமுடையதாக இருந்தது. இதன் இரண்டாம் கட்டத்தில் கல்லும் சிவப்பு மண்ணும் கலந்து கட்டப்பட்ட அரணின் அகலம் 3 மீட்டராக அதிகரித்திருந்தது. மூன்றாவது கட்டத்தில் அரணின் உயரம் மேலும் 3 மீட்டராலும் அகலம் மேலும் 1 மீட்டராலும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
அரணின் விளிம்பு ஆய்வு வரைவின் கணக்கெடுப்பு (Contour Survey), அந்த அரண் 100 ஹெக்டேர் பரப்பளவைச் சுற்றியிருந்ததை அறியத் தருகிறது (Coningham 1993).
இடைக்கற்கால–இரும்புக்கால மேலணைவு
அநுராதபுர அகழ்வாய்வுகள், இடைக்கற்காலத்திற்கும் ஆதி இரும்புக்காலத்திற்கும் இடையே ஒரு மேலணைவு (Overlap) இருப்பதைக் காட்டுகின்றன. பழங்குடியினரான இடைக்கற்கால மக்களுக்கும் இரும்பை உபயோகித்த பெருங்கற்கால மக்களுக்கும் இடையே உடல் ரீதியான மற்றும் கலாசார ரீதியான கலப்பு (Cultural and Physical Fusion) ஏற்பட்டிருக்கலாம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது (Seneviratne, S. 1985: 66).
கதிரியக்கத் தேதிக்கணிப்புகளின்படி அநுராதபுரத்தின் ஆதி இரும்புக்காலம் கி.மு. 1000ஆம் ஆண்டு எனக் கணிக்கப்படுகிறது (Deraniyagala, S.U. 1996: 4).
விவசாயமும் நீர்ப்பாசனமும்
அநுராதபுரத்தில் மக்கள் தொகை பெருகி, அது பெரிய நகரமாக விரிவடைந்ததற்கு வேளாண்மைப் பெருக்கமே முக்கிய காரணியாக இருந்தது. அங்குள்ள பழமையான குளங்களும், அவற்றின் நவீன காலம் வரையான தொடர்ச்சியான இருப்பும் இதற்குச் சான்று பகர்கின்றன. ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வெள்ளம் பாயும் இப்பிரதேசத்தில், ஏனைய மாதங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை காணப்படும். ஆறுகளின் நீர் வற்றி, அவை ஆழமற்ற இணைக்கப்பட்ட குளங்களாகக் காட்சியளிக்கும்.
மாரி காலத்தில் மேலதிக நீரும், கோடையில் தண்ணீர்ப் பஞ்சமும் கொண்ட நிலப்பரப்பில் வாழும் ஒரு பெரிய நிரந்தர சமூகத்தை ஆதரிப்பதற்காக, நீரைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முறையான அமைப்புத் தேவைப்பட்டிருக்க வேண்டும். நீர் மேலாண்மை இரண்டு சாத்தியமான முறைகளால் செயல்படுத்தப்படலாம்:
(1) பள்ளத்தாக்குகளுக்குக் குறுக்கே அணைக்கரை அமைத்து ஒரு வடிகால் குளத்தை உருவாக்குவது. இதன் மூலம் மேலதிக மழைநீரைப் பாதுகாக்கலாம்.
(2) குளங்களுக்கிடையே தொடுவாய்க்கால்கள் அமைப்பதன் மூலம் நீரை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குத் திசைதிருப்பலாம்.
அநுராதபுரத்தில் ஆரம்பகாலத்தில் எவ்வகையில் தண்ணீரைக் கட்டுப்படுத்தினார்கள் என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறிய முடியவில்லை. இலக்கிய ஆதாரங்களே இது பற்றிய தகவல்களை வழங்குகின்றன (Allchin, R. 1995). இலக்கிய ஆதாரங்களின்படி, இவ்விடத்தில் அநுராதகமம் என்ற கிராமத்தை நிறுவிய அநுராதா என்ற அரசகுமாரன் ஒரு குளத்தைக் கட்டியிருந்தான் (Mahavamsa IX:11). பின்னர் பாண்டுகாபயன் இக்குடியிருப்பைப் பெரிதாக்கி, நீர் வழங்கல் அமைப்பையும் விரிவுபடுத்தினான் (Mahavamsa IX:59–60) எனக் குறிப்பிடப்படுகிறது.
அநுராதபுரத்தின் ஆதிக்குடியிருப்பாளர்கள்
அநுராதபுரத்தில் ஆதியில் குடியிருந்த மக்களின் இனக்குழும அமைப்பைப் பற்றி இன்று எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் குடியிருப்பாளர்களில் பெரும்பான்மையான மக்கள் இடைக்கற்கால மக்களின் வம்சாவளியினராகவே இருந்திருக்கலாம். அவர்களில் ஒரு பகுதியினர் — ஒருவேளை உயரடுக்கைச் சேர்ந்தவர்களாக இருந்து — தென்னிந்தியப் பெருங்கற் பண்பாட்டை (Megalithic BRW Culture) கொண்டுவந்த வேளாண் குடியினராக இருந்திருக்கலாம் என ஆல்சின் கருதுகிறார் (Allchin 1995: 159–169).
ஆதி இரும்புக்காலம்
இலங்கையில் ஆதி இரும்புக்காலத்திற்கும் ஆரம்ப வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்ட 75 குடியேற்ற மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன (Deraniyagala 1992). இந்த மையங்களின் பரவலாக்கம், இந்தத் தீவின் பல்வேறு சுற்றுச்சூழல் மண்டலங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த வாழ்வாதார நடவடிக்கைகள் ஹொலோசீன் காலத்திற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு, சில மையங்களில் சமீப காலம் வரை தொடரப்பட்டிருக்கின்றன (ஹொலோசீன் காலம்: 11,700 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசிப் பனியுகம் முடிவுற்ற காலம்).
இந்த மையங்களில் பெரும்பாலானவை கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ள கிளிஞ்சல் மேடுகள் (Shell Middens) ஆகும். இவை கடல்வள உணவை உட்கொண்ட மக்கள் வாழ்ந்த மையங்களாகும். அம்பாந்தோட்டைக்குச் சமீபமாக தென்கரையில் அமைந்துள்ள ஹெனகஹபுகல (Henagahapugala) குடியிருப்பு கி.மு. 1400க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படுகிறது. இலங்கையின் மேற்குக் கரையில் புத்தளத்தின் அர்ணகல்லு (Arnakallu Archaeological Site) குடியிருப்பு கி.மு. 1130 முதல் கி.மு. 900 வரையான ஆண்டுகளைக் காட்டுகிறது. மாந்தைக்கு அருகிலுள்ள ஒரு திறந்தவெளி முகாம் தளம் கி.மு. 1800ஆம் ஆண்டைக் காட்டுகிறது.
உள்நாட்டு மையங்களில் திறந்தவெளிக் குடியிருப்பான ‘பெல்லன்பண்டி பலஸ்ஸ’ (Bellanbandi Palassa), ஓர் அருவிக்கரையில் அமைந்த மையமாகும். இது காட்டும் கி.மு. 380ஆம் ஆண்டு, ஐயத்திற்குரிய காலக்கணிப்பாகக் கருதப்படுகிறது. பாததொம்ப-லெனா, பெலி-லெனா ஆகிய குகைக் குடியிருப்புகள் கி.மு. 26,500க்கும் கி.மு. 9500க்கும் இடைப்பட்ட ஆண்டுகளைத் தருகின்றன. அநுராதபுர அகழ்வாய்வுகளில் கண்ட அடிமட்டங்கள், கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டிலேயே இங்கு அடர்த்தியான குடியிருப்பு இருந்ததைக் காட்டுகின்றன.
இத்தீவின் வரலாற்றுக்கு முற்பட்டகால மையங்களின் பரந்த செறிவும், அங்கே காணப்படும் எலும்புகளின் தொகையும் — மூன்று உள்நாட்டு மையங்களில் 53 மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன (Deraniyagala 1985: 19) — கணிசமான அளவு வேட்டையாடி-உணவு சேகரிக்கும் மக்கள் இங்குள்ள சுற்றுச்சூழல் மண்டலங்களைப் பயன்படுத்தியிருந்தனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
இத்தீவில் வாழும் வேட்டையாடி-உணவு சேகரித்து வாழும் வேடர்களின் வாழ்வாதார முறைகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1881ஆம் ஆண்டு அரசாங்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 2,228 வேடர்கள் ஆறு புறமண (அயல் திருமணமுறை), தாய்வழி மற்றும் பிராந்தியக் குலங்களாகப் பிரிந்திருந்தனர் (Sarasin and Sarasin 1892: 79–80). ஒவ்வொரு குழுவினரும் அவர்களுக்குச் சொந்தமான குகைகள், காடுகள் மற்றும் நீரோடைகளைக் கொண்டிருந்தனர். குறிப்பிட்ட குளங்களும் மரங்களும் தனிப்பட்ட குடும்பங்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன (Seligman and Seligman 1911: 33).
கென்னெடியின் மாதிரியின்படி, இலங்கையின் பழங்குடி மக்கள் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு, ஒருங்கிணைந்து உயிர்வாழ்ந்தனர்.
புராதனகால மையங்களிலிருந்து பெறப்படும் தேதிகள், பரந்த அடிப்படையிலான வாழ்வாதார முறைகளை மேற்கொண்ட கணிசமான மக்கள், பெரும்பாலான சூழலியல் மண்டலங்களைப் பயன்படுத்திக்கொண்டு, ஹொலோசீன் காலத்திற்கு முன்னரே இந்தத் தீவில் தங்களை நிலைநாட்டிக் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகின்றன (Deraniyagala 1992).
தீபகற்ப இந்தியாவில் இனாம்காம் (Inamgaon)
அகழ்வாய்வுகளில் கண்டது போல, வெண்கலக் கால மக்கள் படிப்படியாக வளர்ச்சி பெற்று, இடைநிலைக் கட்டங்களை அடைந்து, பின்னர் நகர்ப்புறச் சமூகங்களாக மாற்றமடைந்திருக்கின்றனர். இலங்கையில் அம்மாதிரியான இடைநிலைக் கட்டங்கள் எவையும் காணப்படவில்லை. இத்தீவில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு புதிய கற்காலம் இருந்ததாகவும் தெரியவில்லை.
இத்தகைய தொடர்பற்ற வளர்ச்சியை, இலங்கையின் பல மையங்களில் இரும்புக்காலப் பண்பாடு நுண்கற்காலக் கருவிகளின் மேல் நேரடியாகக் காணப்படுவதன் மூலம் அறிய முடிகிறது (Coningham 1995: 136). பல அறிஞர்கள், இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் இரும்பு பற்றிய அறிவு கொண்ட புதிய மக்கள் தொகையொன்றின் வருகையே எனக் கூறியுள்ளனர். பொம்பரிப்பில் இரும்புக்கால மக்களின் எலும்பு எச்சங்களை ஆராய்ந்த இரு மானிடவியலாளர்கள், அவை புதிய மக்களொன்றின் வருகையை உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளனர் (Lukacs and Kennedy 1981: 106).
இக்கருத்து செனிவிரத்தின காட்டிய பரவல் கோட்பாட்டுடன் இணக்கமாக உள்ளது (Seneviratne 1984: 283). அவர் பரிந்துரைத்ததாவது:
வடமேற்கு இலங்கையின் ஈமப்புதையல் பண்பாடு அதன் உத்வேகத்தை வைகை–தாமிரபரணி சமவெளிகளின் தாழி–கல்வட்ட அடக்க முறையிலிருந்து பெற்றுக்கொண்டது மிகவும் சாத்தியமாகும்…. அதுபோன்று வடமத்திய இலங்கையின் கல்லறை அடக்க முறை, புதுக்கோட்டையிலிருந்து (தமிழ்நாடு) சித்தூர் (ஆந்திரப் பிரதேசம்) வரை பரந்திருக்கும் கல்லறை அடக்க மரபின் நீட்சியாகும்.
ஆதி இரும்புக்காலத்தின் உள்நாட்டுப் பரவல் முறை இன்னும் தெளிவற்றதாக உள்ளது. ஆரம்பகாலக் குடியிருப்பு மையங்களில் இரண்டு கடற்கரையிலிருந்து உள்நாட்டில் அமைந்துள்ளன. வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்புக்காலக் குடியிருப்பைக் காட்டுகிறது. அதே சமயம் இப்பன்கட்டுவ கி.மு. 540–400ஆம் ஆண்டுகளைக் காட்டுகிறது. வடக்கே கந்தரோடை இரும்புக்காலக் குடியிருப்பு கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைக் காட்டுகிறது (Deraniyagala 1992: 356).
(மேற்குறிப்பிட்டது தவறான தகவல். கந்தரோடையில் 1970ஆம் ஆண்டு அகழ்வாய்வுகளில் ‘B’ குழியிலிருந்து எடுத்த இரு பதக்கூறுகள் கி.மு. 1000க்கு மேற்பட்ட ஆண்டுகளைக் காட்டுகின்றன. மேலே ஆரம்பத்தில் உள்ள கந்தரோடை கதிரியக்கக் கரிம அட்டவணையைப் பார்க்கவும்.)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆதி இரும்புக்காலக் குடியிருப்புகள் இரு குடியிருப்பு மையங்களை மட்டுமே காட்டுகின்றன. ஒன்று அநுராதபுரம்; மற்றொன்று கந்தரோடை. யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் மேலாய்வுகளில் சந்தேகத்திற்குரிய 18 ஆதி வரலாற்றுக்கால அல்லது பெருங்கற் பண்பாட்டுத் தலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன (Ragupathy 1987). முறையான அகழ்வாய்வுகளும் கதிரியக்கத் தேதிக்கணிப்புகளும் கிடைக்காததனால் அவை இந்தப் பகுதியில் சேர்க்கப்படவில்லை.
அநுராதபுரத்தின் இரும்புக்கால அகழ்வாய்வுகளைப் பற்றி விரிவாக இந்த நூலிலும் வேறு பல இடங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் கந்தரோடையின் விஞ்ஞானபூர்வமான தொல்லியல் வரிசை தெரியவில்லை. 1970ஆம் ஆண்டில் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தினர் அகழ்வாய்வு செய்தார்கள். ஆனால் அத்தலத்தின் கட்டமைப்பு வரிசை எதுவும் தெரியவில்லை. இந்த முக்கியமான தலத்தின் அகழ்வாய்வு அறிக்கையை புதிய மிலேனியம் ஆரம்பமாவதற்கு முன்னர் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தினர் முடித்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது (Coningham, R. 1995: 137).
(பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் கந்தரோடை அகழ்வாய்வு அறிக்கையும், பொம்பரிப்பு அகழ்வாய்வு அறிக்கையும் கலாநிதி விமலா பெக்லியால் 1974ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. சரியாக ஏழு ஆண்டுகள் கழித்து, 1981ஆம் ஆண்டு மே மாதம் Ancient Ceylon No. 4 சஞ்சிகையில் பொம்பரிப்பு அகழ்வாய்வு அறிக்கை பிரசுரிக்கப்பட்டது. இந்தப் பொம்பரிப்பு அறிக்கையின் இறுதிப் பகுதியில் (பக். 94) கந்தரோடை அகழ்வாய்வு அறிக்கை இதே சஞ்சிகையில் வரவிருக்கிறது என விமலா பெக்லி குறிப்பிடுகிறார். ஆனால் இலங்கைத் தொல்லியல் திணைக்களம் இந்த அறிக்கையை வெளியிடவே இல்லை. இந்த உண்மையை பேராசிரியர் றொபின் கொனிங்ஹாமிற்கு எவரும் தெரிவித்திருக்கவில்லை போல உள்ளது.)
இதன் இரண்டாவது தரவுத் தொகுப்பு பெருங்கற் பண்பாட்டு ஈமப்புதையல்கள் பற்றியது. இந்த இடுகாடுகள் அமைப்பிலும், காலத்திலும் பெரிய வேறுபாடுகளைக் காட்டுகின்றன. 1984ஆம் ஆண்டில் செனிவிரத்ன இவ்வகையான 19 மையங்களைப் பதிவு செய்திருந்தார். அவரது அறிக்கையில் தேக்கம், பொம்பரிப்பு, கரம்பன்குளம் என்பன தாழிப்புதையல்களைக் கொண்டிருந்தன. தமென்னகொடெல்ல, வடிகவேவா, கோக்கெபெ, திவுல்வேவா, றபீவா, மச்சகம, கதிரவெளி, இப்பன்கட்டுவ, பின்வேவா, கலதற, மாமடுவ, அலுத்பொம்புவ ஆகிய மையங்கள் கல்லறைப் புதையல்களைக் கொண்டிருந்தன (Seneviratne 1984). யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினரால் நடத்தப்பட்ட ஆய்வு, வல்லிபுரத்தில் ஒரு கல்லறைப் புதையலையும், ஆனைக்கோட்டையில் ஒரு தாழிப்புதையலையும் எடுத்துக்காட்டியிருந்தது (Ragupathy 1987).
இந்த இடுகாட்டு மையங்கள் அளவிலும், உள்ளடக்கத்திலும், காலத்திலும் வேறுபடுகின்றன. பொம்பரிப்பு ஏறக்குறைய 8,000 தாழிப்புதையல்களையும், அவற்றுள் 10,000 முதல் 12,000 மக்களின் சடலங்களையும் கொண்டிருக்கின்றது (Begley 1981). அதே சமயம் காரைநகரில் ஒரே ஒரு நீளக்கிடத்திய புதையல் மட்டுமே காணப்பட்டது (Seneviratne 1984: 240).
இப்பன்கட்டுவவின் காலம் கி.மு. 700ஆம் ஆண்டிற்கும் கி.மு. 400ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். ஆனைக்கோட்டை நீளக்கிடத்திய புதையலோடு காணப்படும் பள்ளமிட்ட ஓடுகள், லக்ஷ்மி பட்டயங்கள், றூலெட்டெட் மட்பாண்டங்கள் என்பன அதன் காலத்தை கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்கின்றன. இதன் அருகாமையில் ஆதிகால நீர்ப்பாசன அமைப்புகள் காணப்படுவதால், அருகிலேயே பண்டைய குடியேற்றங்களின் எச்சங்கள் காணப்பட வேண்டும் (Seneviratne 1984). இருந்தாலும், விரைவான காட்டு வளர்ச்சியும் புதிய வாழ்விட வீடுகளின் தோற்றமும் பண்டைய குடியிருப்புகளைத் தொல்லியல் ரீதியாகக் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவிடுகின்றன.
————————————————
அநுராதபுர ASW2 அகழ்வாய்வுகளில், வாழ்வாதார முறைகளைப் பொறுத்த அளவில், வரலாற்றிற்கு முற்பட்ட பிற்கால விலங்கின உணவு எச்சங்களுக்கும் ஆரம்பகாலக் குடியிருப்புகளுக்கும் இடையே காணப்படும் நெருங்கிய உறவு குறிப்பிடத்தக்கது. செனிவிரத்ன குறிப்பிட்டிருப்பது போன்று, சமூகத்தினரால் கட்டமைக்கப்பட்ட பெரிய கட்டடங்கள் இல்லாதது, தலைவர்களுக்கு அதிக குடிமக்களை அணிதிரட்டும் திறன் இல்லாததைக் காட்டுகிறது.
பெருங்கற்காலக் கல்லறைகள் அளவில் சிறியன. அவை ஒரு கூட்டுக் குடும்பத்தின் பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டன. ஒரு கல்லறையை அமைக்க (கற்களைப் பாறைகளிலிருந்து கற்பலகைகளாக வெட்டியெடுத்து, அவற்றைக் கொண்டுவந்து நிலத்தில் வெட்டிப் பொருத்த) 5000 மணித்தியால வேலை நேரம் எடுக்கும் எனக் கணிக்கப்படுகிறது (Renfrew & Bahn 1991: 180).
————————————————
இந்திய உபகண்டத்தின் வடபகுதியில் நகரமயமாக்கப்பட்ட இடங்களின் தொழில்நுட்பம் இங்கே வருகை தந்ததற்கான தொல்லியல் சான்றாகக் கருதப்படும் ஆரம்ப பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஓடுகள், அநுராதபுர ASW2–J மட்டக் குடியிருப்புகள் ஆரம்பித்து ஒன்றரை நூற்றாண்டுக்குள் இடம்பெறுகின்றன எனக் கூறப்பட்டுள்ளது (Coningham 1993: 121). இப்பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கலவோடுகளின் வெப்பஒளிர்வு (Thermoluminescence) காலக்கணிப்பு, கி.மு. 700க்கும் கி.மு. 500க்கும் இடைப்பட்ட காலத்தைக் காட்டியது.
சிரான் தெரணியகல இதை வடஇந்திய மக்களின் இடப்பெயர்விற்கான ஆதாரமாக எடுத்துக்கொண்டார்.
“இரு மண்பாண்டங்களில் காணப்படும் வடஇந்தியப் பிராமி எழுத்துகள் இக்காலத்தில் ஸ்ரீலங்காவை வந்தடைந்த வெளிப்புறத் தூண்டுதல்களாகும். எனவே, மகாவம்சம் கூறும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ‘விஜயனினதும் அவனைப் பின்பற்றியவர்களினதும்’ வருகையோடு தொடர்புடைய ஆதாரமாக இதைக் கொள்ளத் தூண்டுகிறது” (Deraniyagala 1990a: 160).
தெரணியகல அநுராதபுரம் ‘ASW1 – Anuradhapura Salgaha Watta Plot 1’ இல் மேற்கொண்ட அகழ்வுக் குழியில் ‘பிய அநுராத’ என்ற பிராகிருத எழுத்துப்பதிவு கொண்ட ஒரு கலவோட்டைக் கண்டெடுத்தார் (Deraniyagala 1992: 746). அக் கலைப்பொருளைப் பற்றி அவர் இவ்வாறு கூறினார்:
“ஒரு கலவோட்டில் ‘அநுராத’ என்ற பெயர் இடம்பெறுவது மிகவும் முக்கியமானது. அநுராதபுரத்தை நிறுவியவர் விஜயனின் ஒரு மந்திரியான அநுராத என்பவர். ‘அநுராத’ என்ற விண்மீன் கூட்டத்தின் கீழ் இது நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘அநுராதர்கள்’ இங்கே வசித்தார்கள். பாண்டுகாபயனின் தாய்வழி மாமனின் பெயரும் அநுராத. இந்த ஆதாரம் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற விஜயனின் காலம் பற்றிக் கூறும் அடிப்படை வரலாற்று உண்மையின் மையக் கருத்திற்குச் சான்றாக அமைகிறது” (Deraniyagala 1992: 747).
————————————————
இக்கால அகழ்வாய்வுகளின்படி, கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்து தமிழ்ப் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் தமிழ்நாட்டின் கீழடி, அழகன்குளம், பொருந்தல், கொடுமணல் ஆகிய இடங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.
அநுராதபுரத்தில் கண்ட கலவோட்டில் காணப்படும் ‘தயாகுடெ’ (தயாவின் குடம்) என்ற வாசகம் தமிழ்ப் பிராமி எழுத்து என இந்திய கல்வெட்டு நிபுணர் கே.வி. ரமேஷ் இனங்கண்டுள்ளார். மேலும், ‘குட’, ‘குடம்’, ‘குடுவை’ ஆகிய குடத்தைக் குறிக்கும் சொற்கள் சமஸ்கிருதம், பிராகிருதம், பாளி ஆகிய மொழிகளில் கிடையாது. தமிழிலும் மலையாளத்திலும் மட்டுமே இச்சொற்கள் காணப்படுகின்றன.
அநுராதபுரத்தில் காணப்படும் பிராமி எழுத்துப் பதிவுகள் தமிழ்நாட்டிலிருந்தே சென்றதாகக் கருதப்படுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பிராமி எழுத்துப் பதிவுகள் இதுவரை வடஇந்தியாவில் கண்டெடுக்கப்படவில்லை. மேலும், மட்பாண்டங்களில் எழுதும் வழக்கம் வடஇந்தியாவில் கிடையாது. பண்டைய தமிழகத்திலும் இலங்கையிலுமே இவ்வழக்கம் காணப்படுகிறது.

இலங்கையில் அநுராதபுரத்தில் கண்டெடுத்த கலவோட்டில் காணப்படும் ‘தயா குடெ’ என்ற தமிழ்-பிராமி வாசகம். இதன் வெப்பேற்றுக் கதிர் காலக்கணிப்பு இதன் திகதியை கி.மு 700-500 ஆண்டிற்கு எடுத்துச் செல்கிறது. நன்றி: S.U. Deraniyagala

அநுராதபுரத்தில் கண்ட ‘பிய அநுரத’ கலவோடு. Image Courtesy: S.U. Deraniyagala

யாழ்ப்பாணத்தில் கண்ட ‘அநுராத ஸ’ கலவோடு. Image Courtesy: S. Krishnarajah.
‘அநுராத’ என்ற பெயர் பொறித்த கலவோடு அநுராதபுரத்தில் மட்டுமல்ல, யாழ்ப்பாண அகழ்வுகளிலும் கிடைத்திருக்கிறது. இந்தப் பெயர் கொண்டவர்கள் யாழ்ப்பாணத்திலும் இருந்திருக்கிறபடியால், ‘பிய அநுராத’ (பிரியமான அநுராதா) அநுராதபுரத்தை நிறுவியவரின் உறவினரைக் குறிப்பதாக உறுதியாகக் கூற முடியாது. இது ஒரு சாதாரண குடிமகளைக் குறிப்பிடுவதாகவும் இருக்கலாம். ‘பிய’ (பிரியமான) என்ற பிராகிருதப் பதம் கல்வெட்டுகளில் பொதுவாகப் பெண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
————————————————
இலங்கையில் பெருங்கற் பண்பாட்டு கறுப்பு-சிவப்பு மட்பாண்ட மையங்கள்
இதுவரை பேசப்பட்ட தொல்லியல் மற்றும் மானிடவியல் ஆய்வுகள், இற்றைக்கு 3200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இடைக்கற்காலத்தில் நுண்கற்கருவிகளைக் கொண்டு வேட்டையாடி-உணவு சேகரித்து வாழ்ந்த மக்கள், சடுதியாக காடுகளை விட்டு நாட்டுக்குள் வந்து, கல்லாயுதங்களுக்குப் பதிலாக இரும்பு ஆயுதங்களை உபயோகித்து, குளக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் ஆரம்பகால விவசாயத்தில் ஈடுபட்டு, மட்பாண்டங்களில் உணவை உட்கொண்டு, இறந்தவர்களை தாழிகளிலும் கல்லறைகளிலும் புதைத்து, சடுதியானதொரு சமூக வாழ்வியல் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றன.
இந்த வாழ்வியல் மாற்றத்திற்கு தமிழகத்திலிருந்து பொங்கி வந்து இலங்கைத் தீவெங்கும் பரவிய பெருங்கற் பண்பாடே காரணம் என்பதையும் நீங்கள் இங்கே பேசப்பட்ட ஆய்வுகள் மூலம் அறிந்திருக்கிறீர்கள். இப்பெருங்கற் பண்பாட்டின் முக்கிய கூறுகள் பின்வருமாறு:
- அடிப்படையான இரும்பு உலோகத் தொழில்நுட்பம். தமிழகத்தில் பல மையங்களில் கி.மு. மூன்றாம் ஆயிரத்தாண்டு காலத்திலிருந்தே இரும்பு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சமீபகால கதிரியக்க ஆய்வுகள் இரும்புப் பயன்பாட்டின் ஆரம்ப காலத்தை சிவகளை: கி.மு. 3345, கி.மு. 3259; ஆதிச்சநல்லூர்: கி.மு. 2522; மயிலாடும்பாறை: கி.மு. 2172; கீழ்நமண்டி: கி.மு. 1692 ஆகிய ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இவ்விடங்களிலிருந்து கி.மு. 1200ஆம் ஆண்டுக்கு முன்னரே இரும்புத் தொழில்நுட்பம் தமிழகத்தின் பெரும்பாலான மையங்களைச் சென்றடைந்திருந்தது. கி.மு. 1200–1000 காலப்பகுதியில் பெருங்கற்காலப் பண்பாடு இலங்கையை அடைந்தபோது, இரும்பு உலோகத் தொழில்நுட்பம் ஆரம்ப நிலையில் இல்லாமல், முன்னேற்றமடைந்த ஒரு தொழில்நுட்ப வடிவமாகவே இலங்கையை அடைந்திருக்கும்.
- மட்பாண்டச் செய்கைக்கான சக்கரம்.
- பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டம்.
- உழுவதற்கான ஏர்; இரும்பினாலான ஏர்முனை.
- நெற்பயிர்ச் செய்கை.
- குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளின் உதவியுடன் நீர்ப்பாசனம்.
- புதிய குடியிருப்புகளின் நிறுவல் – ஊர்களின் தோற்றம்.
- இறந்தவர்களுக்கான புதிய அடக்க முறைகள்.
- மட்பாண்டங்களில் குறியீட்டு எழுத்துகள்.
- மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப உணவுத் தன்னிறைவு.
- சமூகத் தலையார் – வேள்
தமிழகத்திலிருந்து மூன்று வழிகளில் பெருங்கற்காலப் பண்பாடு இலங்கையை அடைந்திருக்கிறது. சுதர்ஸன் செனிவிரத்ன ஏற்கனவே தனது ஆய்வில் இரு வழிகளைக் கூறியிருந்தார்.
1. இலங்கையின் வடமேற்குப் பகுதியிலிருக்கும் ஈமப்புதையல் கலாசாரம் (தாழி–கல்வட்டம்) பாண்டிய நாட்டின் வைகை–தாமிரபரணிப் பகுதிகளிலிருந்து வந்திருக்கிறது என்பது நிச்சயமாகிறது. ‘தம்பபண்ணி’ என்ற பெயர் திருநெல்வேலியிலுள்ள முக்கியமான நதிக்கும், வடமேற்கு இலங்கையில் தெதுறு ஓயா, கலா ஓயா நதிகள் பாயும் பிரதேசத்திற்கும் கொடுக்கப்பட்ட பெயராகும். இலங்கையின் பாளி இலக்கியங்களின்படி, ‘தம்பபண்ணி’ இலங்கையில் வடஇந்தியர்கள் வந்து குடியேறிய முதல் உறைவிடம். இந்த வடஇந்தியர்கள் மதுரையுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள் என அவை கூறுகின்றன.
2. இலங்கையின் வடமத்திய, வடகிழக்குப் பகுதிகளில் காணப்படும் கல்லறை அடக்கங்கள் வடகிழக்கு வழியாகப் பரவியது எனக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் வரை பரந்து காணப்படும் கிழக்குக் கரைப் பகுதியில் கல்லறை அடக்கங்களே பரவலாகக் காணப்படுகின்றன. இக்கல்லறை அடக்கப் பண்பாடு அங்கிருந்தே இலங்கையின் கிழக்கு வழியாக வடமத்திய பகுதிக்குப் பரவியுள்ளது.
தமிழ்நாட்டின் கிழக்குக் கரையை அண்டிய காவேரி நதி வளமளித்த நிலத்தில் கல்லறை அடக்கங்கள் காணப்படுகின்றன. அங்கிருந்து இப்பண்பாடு வடகிழக்கு இலங்கையை அடைந்து யான்ஓயா நதிக்கரை வழியாக வடமத்திய இலங்கை வரை பரவியிருக்கிறது. முன்பு கூறியபடி, முக்கியமான கல்லறை அடக்கங்கள் தமென்னகொடெல்ல, குருஹல்ஹின்ன, வடிகவேவா, கொக்கெபெ, திவுல்வேவா, றொபீவா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
3. இவற்றோடு மூன்றாவது வழியும் ஒன்று உண்டு.
பண்டைய யாழ்ப்பாணத்தின் சம்புகோவளத் துறை வழியாகவும், பண்ணைத்துறை (யாழ்ப்பாணக் கோட்டையிருக்கும் துறை) வழியாகவும் இப்பண்பாடு கந்தரோடை, ஆனைக்கோட்டை ஆகிய மையங்களையும், மற்றைய பெருங்கற்கால மையங்களையும் அடைந்திருக்கிறது. திண்டுக்கல், மதுரை வழியாக அழகன்குளம் வரை வரும் வைகை ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளிலிருந்த தாழிப்புதையல் மற்றும் நீளக்கிடத்திப் புதையல் பண்பாடு அங்கிருந்து யம்புகோளத் துறை, பண்ணைத்துறை வழியாக யாழ்ப்பாணத்தின் பெருங்கற்பண்பாட்டு மையங்களை வந்தடைந்திருக்கிறது.
இலங்கையின் இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டுப் பரவலை, அப்பண்பாட்டின் முக்கிய கூறுகளில் ஒன்றான கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்களின் பரவலைக் கொண்டு கண்டறியலாம் என தொல்லியல் பேராசிரியர் றொபின் கொனிங்ஹாம் கணிப்பிடுகிறார். இலங்கையில் அம்மட்பாண்டத்தின் பரவலை ஐந்து வலயங்களாகப் பிரித்துள்ளார் (Coningham 1999: 143). கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்களின் உற்பத்தி கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முடிவதற்கு முன்னரே முடிவடைந்துவிட்டது. எனவே, இம்மட்பாண்டங்கள் காணப்படும் இடங்களில் அவற்றைப் பயன்படுத்திய மக்கள் இக்காலத்திற்கு முன்பே அவ்விடங்களில் குடியேறி அவற்றை உபயோகித்திருக்க வேண்டும்.

இலங்கையில் ஐந்து வலயங்களாக அமைந்த பெருங்கற் பண்பாட்டு கறுப்பு-சிவப்பு மட்பாண்ட மையங்கள். Image Source: Dr Robin Coningham, 1999.
1) வடஇலங்கை வலயம்: யாழ்ப்பாணத் தொகுதி
கடந்த அரை நூற்றாண்டுகளாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்கால கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள் தனியான ஒரு தொகுதியாக அமைகின்றன. இம்மட்பாண்டங்கள் மிக அதிகமாகக் காணப்பட்ட மிகப் பழமையான மையம் கந்தரோடை ஆகும். இவ்விடத்தில் கி.மு. 1350ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 200ஆம் ஆண்டு வரையான கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. கந்தரோடையைத் தவிர, கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள் காணப்பட்ட இரு தாழிப்புதையல் மையங்களும் (ஆனைக்கோட்டை, வல்லிபுரம்), நீளக்கிடத்திப் புதையல் கொண்ட இரு மையங்களும் (ஆனைக்கோட்டை, சந்திராந்தை), ஒரு கல்லறைப் புதையல் மையமும் (வல்லிபுரம்) அகழ்வுகளில் காணப்பட்டமை ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இவை தவிர, பல யாழ்ப்பாணக் குடியிருப்பு மையங்களில் கறுப்பு–சிவப்பு மட்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனைக்கோட்டையில் கி.மு. 915ஆம் ஆண்டிலிருந்து குடியேற்றம் இடம்பெற்றமைக்கான கதிரியக்கக் கரிமத் திகதிகள் ஜேர்மனிய கதிரியக்க ஆய்வுக்கூடத்திலிருந்து தொல்லியல் ஆய்வாளர் கலாநிதி பரமு புஷ்பரட்ணத்தினால் பெறப்பட்டுள்ளன.
Anaikoddai – Radiocarbon Dates 2024 – German Archaeological Institute, Bonn.

Image Source: Dr. Paramu Pushparatnam.
தாழிப்புதையலும் நீளக்கிடத்தி அடக்கம் செய்யப்பட்ட குழிகளும் காணப்பட்ட இடம் ஆனைக்கோட்டை. இப் புதைகுழிகளில் கறுப்பு–சிவப்பு மட்பாண்ட ஓடுகளும் இரும்புப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கலாநிதி இரகுபதி, சந்திராந்தை (காரைநகர்), கும்புறுப்பிட்டி, சாட்டி (வேலணை), கொட்டுப்பணிவு (மண்ணித்தலை) ஆகிய மையங்களில் புதையல்களோடு கறுப்பு–சிவப்பு மட்கலன்கள் கண்டெடுக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார் (Ragupathy, P. 1987: 57–78).
1972ஆம் ஆண்டில் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்குச் சமீபமாக இருந்த ஒரு மண்மேட்டை அகழ்ந்தபோது, பெரிய கல் மேசையினால் மூடப்பட்டு, கற்களினால் சுவரமைக்கப்பட்ட ஒரு புதைகுழியும் அதனுள்ளே எலும்புகளைக் கொண்ட ஒரு தாழியும் (Urn in a Cist) காணப்பட்டது. இப் பெருங்கற் பண்பாட்டுப் புதையலில் கார்னீலியன் மற்றும் மதிப்புமிக்க கற்கள், கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள், குடுவைகள், இரும்பு ஆணிகள், நாணயங்கள் என்பன காணப்பட்டன (இந்திரபாலா, கா. 1973; Ragupathy, P. 1987: 83).
வன்னிப் பகுதியில் மண்ணித்தலை, கல்முனை, வெட்டுக்காடு, பள்ளிக்குடா, பல்லவராயன், ஈழவூர், கட்டுக்கரை, சாட்டி மற்றும் பல மையங்களின் அகழ்வாய்வுகளிலும் மேலாய்வுகளிலும் கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள் காணப்பட்டதை தொல்லியல் அறிக்கைகளில் கலாநிதி புஷ்பரட்ணம் கூறியுள்ளார் (புஷ்பரட்ணம், ப. 1987: 83; 2017: 35–37).
(2) அநுராதபுரத் தொகுதி
அநுராதபுர மாவட்டத்தில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற் பண்பாட்டு மையம் குருகல்ஹின்ன என்ற இடமாகும். வடமத்திய மாகாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த ஆர்.டபிள்யூ. லீவேர்ஸ் 1889ஆம் ஆண்டில் இவ்விடத்தில் இரு பெருங்கற் கல்லறைகளைக் (Cist burials) கண்டுபிடித்தார். அதன் பின்னர் 75 ஆண்டுகள் கழித்து இந்த மையத்தில் இரு கல்லறைகள் அகழ்ந்து திறக்கப்பட்டன (Godakumbura, 1967: 105). இந்த அகழ்வாய்வின் அறிக்கை வெளியிடப்படவில்லை.
அநுராதபுரத்தின் பழைய நகரத்தின் அகழ்வுகளின் போது அதன் ஆரம்பகால குடியிருப்புகள் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டைக் காட்டியுள்ளன. அங்கு காணப்பட்ட ஆதி இரும்புக்காலம் கி.மு. 840–450 ஆண்டுக் காலத்தைக் காட்டியுள்ளது. இக்காலப் பகுதியில் மெருகேற்றப்பட்ட கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள், கீறல் எழுத்துப் பொறித்த கலவோடுகள், இரும்புக் கசடுகள், கால்நடை எலும்புகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன (Coningham & Allchin, 1995: 159–169).
இப்பன்கட்டுவ பெருங்கற் கல்லறைப் புதையல்கள் குருநாகல்–தம்புல்ல வீதியில், தம்புல்ல நகரிலிருந்து தென்கிழக்காக 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இப்புதையல்கள் 1970ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு, 1988–1991 ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்யப்பட்டது. இப்புதையல்களில் கண்ட ஈமப் பொருட்களில் கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள், பலவகையான களிமண் கலன்கள், இரும்பு, செம்பு, தங்கத்தினாலான கலைப் பொருட்கள், மணிகள், இரத்தினக் கற்கள், கழுத்தணிகள் என்பன காணப்பட்டன. இப்புதையல்களின் கதிரியக்கக் கரிம ஆய்வுகள் கி.மு. 700ஆம் ஆண்டுக் காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன (Karunaratne, P.P. 2010; Sunday Observer, 6/10/2013).
நீண்ட காலமாக மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்ட ஈமப் புதையல்கள் பொம்பரிப்பில் காணப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட தாழிப் புதையல்களாகும். இவற்றோடு பலவகையான கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. இங்கே காணப்படும் இரும்புக் காலம் கி.மு. 1200–1000 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த ஈமப் புதையல்கள் காணப்படும் பிரதேசம் வில்பத்து வனவிலங்குப் புகலிடமாகும் (Begley, V. 1981; Seneviratne, S. 1984). இப் புகலிடத்தினுள் காணப்படும் ஆதி இரும்புக்கால மையங்களான தெக்கம், அலுத்பொம்புவ, கரம்பன்குளம் ஆகிய மையங்கள் இதுவரை அகழ்வாய்வு செய்யப்படவில்லை.
மாந்தையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், இரும்பு மற்றும் கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள் மிக ஆதியான காலப் பகுதிகளிலிருந்தே இவ்விடத்தில் காணப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன. மாந்தையில் காணப்படும் இரும்பின் தொழில்நுட்பம் தமிழகத்தின் கொற்கையிலிருந்து பரவிவந்ததாகக் கருதப்படுகிறது. இலங்கையில் இரும்பின் பயன்பாடு கி.மு. 1380ஆம் ஆண்டளவில் ஆரம்பமானதாக ஆய்வாளர் சிரான் தெரணியகல கூறியுள்ளார் (Deraniyagala, S.U. 2013: 511). இந்த உலோகத் தொழில்நுட்பம் மாந்தை வழியாக வந்திருப்பின், அக்காலகட்டத்தில் அதன் பயன்பாடு மாந்தையிலும் அருகாமையிலுள்ள மற்றைய ஆதிக் குடியேற்ற மையங்களிலும் பரவியிருக்கும்.
(3) கிழக்கு இலங்கைத் தொகுதி
கிழக்கு இலங்கையின் ஈமப்புதையல்கள் அதிகமான கல்லறைப் புதையல்களைக் (Cist Burials) கொண்டிருக்கின்றன. பெரும்பாலான கல்லறைகள் யான்ஓயா நதிக் கரைகளிலே காணப்படுகின்றன. இவை இலங்கையின் வடமத்திய பகுதிகளிலிருந்து வடகிழக்கு கடற்கரை வரை தொடர்ந்து காணப்படுகின்றன (Seneviratne, S. 1984: 283).
ஆரம்ப இரும்புக்காலப் புதையல்கள் யான்ஓயாவின் கழிமுகப் பகுதிகளிலும், அதிகமான புதையல்கள் இந்நதியின் நடுப்பகுதிக் கரைகளிலும் காணப்படுகின்றன. இதிலிருந்து இப்பண்பாடு கடல்வழியாகவே இப்பிரதேசத்தை வந்தடைந்திருக்கிறது என்பதை ஊகிக்கலாம். பெருவாரியான கல்லறைப் புதையல்கள் தமென்னகொடெல்ல, குருங்கல்ஹின்ன, வடிகவேவா, கொக்கெபெ, திவுல்வேவா, றொபேவா ஆகிய இடங்களிலே காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைத்து ‘யான்ஓயா கூட்டுத் தொகுதி’ (Yan-Oya Complex) என அழைக்கப்படுகின்றன (Seneviratne, S. 1984: 283).
இக்கல்லறைப் புதையல்கள் மிக ஆழமாக முழுவதும் நிலத்தில் புதைக்கப்பட்டும், ஒரு பகுதி புதைக்கப்பட்டு மிகுதி நிலத்திற்கு மேல் தெரியும்படி அமைக்கப்பட்டும் அல்லது கற்கள் முழுவதும் நிலத்தின் மேல் அமைக்கப்பட்டும் இருக்கின்றன. இக் கல்லறைகளைச் சுற்றி கல்வட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஈமப் புதையல்களில் கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள், மணிகள், இரும்புப் பொருட்கள் என்பன காணப்படுகின்றன (Seneviratne, S. 1984: 283).

நிலத்தினுள்ளே புதைக்கப்பட்ட கல்லறை – Fully Buried Cist with Cover Stone

நிலத்தின் மேல் அமைக்கப்பட்ட கல்லறை – Fully Exposed Overground Cist
தமிழ்நாட்டில் பின்னாளில் சோழநாடு என அழைக்கப்பட்ட பிராந்தியத்தில் கல்லறைப் புதையல்கள் முக்கியமான ஈமச் சின்னங்களாகக் காணப்படுகின்றன. இப்பிராந்தியத்திலிருந்தே, முக்கியமாகக் காவேரி நதியின் கழிநிலப் பகுதிகளிலிருந்தே இப்பண்பாடு வடகிழக்கு இலங்கையை வந்தடைந்திருக்கிறது. ஆரம்ப இரும்புக்காலம் முழுவதும் இப்பண்பாட்டுப் பெயர்ச்சி இயற்கையாக நடைபெற்ற ஒரு நிகழ்வாகும் (The flow of influence from this area, particularly from the Kaveri delta, to the north-east of Sri Lanka is a natural process that continued throughout the Early Iron Age) (Seneviratne, S. 1984: 283).
(4) மேற்கு இலங்கைத் தொகுதி
தென்மேற்கு இலங்கையில் இரும்புக்கால பெருங்கற் புதையல்கள் அருகியே காணப்படுகின்றன. கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள் களனி ஆற்றங்கரையோர மையங்களிலும், கித்துல்கல, இரத்தினபுரி ஆகிய இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கல்அத்தற என்ற இடத்தில் ஒரு கல்லறைப் புதையலும், மக்கேவித்த என்ற இடத்தில் பெருங்கல் பரல் உயர்பதுக்கையும் காணப்பட்டுள்ளன (Deraniyagala, 1992).
இந்த நிலைக்கு மாறாக, அத்தனகல என்ற இடத்தில் காணப்படும் குகைகளான அலுலென, பெலிலென, பாதாதொம்பலென, பாகியன்லென ஆகிய குகைகள் அகழ்வாய்வு செய்யப்பட்டு, அவற்றில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் முறையாக கதிரியக்கக் கரிம ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இப்பொருட்கள் இலங்கையின் ஆரம்பகால நவீன மனிதரின் (Homo Sapiens Sapiens) குடியிருப்புகளைக் காட்டியுள்ளன. இவற்றில் காணப்பட்ட மனித எலும்புகளின் காலம் கி.மு. 28,000 ஆண்டுகள் எனவும், கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்களின் ஆரம்பகாலம் கி.மு. 1000–800 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது எனவும் கண்டறியப்பட்டுள்ளது (Kennedy & Deraniyagala 1989; Deraniyagala, S.U. 1992).
5) தெற்கு இலங்கைத் தொகுதி
தென் இலங்கையில் கிரிந்தி ஓயா, கும்புக்கன் ஓயா ஆகிய நதிக் கழிமுக மையங்களிலும், வளவ கங்கைத் தீரமான ரிடியகமவிலும் கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 1996ஆம் ஆண்டில் தொல்லியலாளர் ஒஸ்மண்ட் போப்பியராய்ச்சியும் சகாக்களும் இப்பிரதேசத்தில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் பெருந்தொகையான கறுப்பு–சிவப்பு மட்பாண்ட ஓடுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள் (“We are able to collect not only at Ridiyagama, but also along the Walawe Ganga, large quantities of early Black and Red Ware, some of which were engraved with early megalithic symbols” (Bopearachchi & Wickremasinghe 1999: 7).

தென் இலங்கை திஸ்ஸமகாராமையில் கண்ட பிராமி எழுத்துப் பதித்த கலவோடு. நன்றி: ஒஸ்மண்ட் போப்பியராய்ச்சி.
தென்இலங்கையின் ஆரம்பகாலத் தலைநகரமான உருகுணை, இக்கால நகரமான திஸ்ஸமகாராமை என இனம் காணப்பட்டுள்ளது. இந்த மையத்தில் காணப்படும் 6 மீட்டர் உயரமான மேடும் அதைச் சுற்றியுள்ள நான்கு பௌத்த துறவிமடங்களும் (Monasteries) கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக அகழாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இந்த மையங்களில் காணப்படும் கறுப்பு–சிவப்பு மட்பாண்டங்கள், றூலெற்றெட் கலன்கள், கலவோடுகளில் காணப்படும் பிராமி எழுத்துப் பதிவுகள், இரும்புப் பொருட்கள், இந்தோ-ரோமானிய மற்றும் செம்பினாலான முத்திரை நாணயங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன (Allchin 1995: 172–173; Bopearachchi & Wickremasinghe 1999: 7).
தொடரும்.



