அறிமுகம்
மனித குல வரலாற்றோடு பின்னிப்பிணைந்த இயற்கை – இயற்கை வழிபாட்டின் வழி உருவான தெய்வங்களுள் பெண் தெய்வங்களுக்குத் தனியிடம் உண்டு. தமிழர் சமயவியலின் தொடக்கத்தில் கொற்றவை எனும் பாலை நிலத் தெய்வம் அடையாளப்படுத்தப்படுகின்றாள். தமிழர் வாழ்வியல் புலத்தில், ஏன் மனிதரின் வரலாற்றில், வேட்டையாடலுக்குத் தலைமை தாங்கி இனக்குழுவை வழிநடத்தியது தொடக்கம் நிலையான குடியிருப்பு, உற்பத்திச் செயற்பாடுகள் என்பவற்றில் பெண்ணின் பங்கு பிரதானமானது என்பதை அறிய முடிகிறது. அவளது பிள்ளைப்பேறு கால ஓய்வு – மருத்துவத் தேவையை முன்னிட்டு, குடும்பப் பொறுப்பு ஆணின் கையிற்கு முதலில் தற்காலிகமாகவும், பின்பு நிரந்தரமாகவும் அதிகார மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்பு ஆணால் சமூகப் பொறுப்பும் அதிகாரமும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமிழர் வரலாற்றில் விளைச்சலற்ற, கொடிய வெயில், மழை, காற்று நிறைந்த பாலை நிலத் தெய்வமாக, கொடூரமானவளாக, சீற்றம் நிறைந்தவளாக கொற்றவை என்னும் ஒரேயொரு பெண் தெய்வம் சித்திரிக்கப்படுகிறது. பெண்ணின் சீற்றம்தான் அவளின் தெய்வ அடையாளமோ எனத் தமிழர் சமய வரலாற்றைக் கற்குந் தோறும் தோன்றுகின்றது. கொற்றவை, கண்ணகி, காரைக்கால் அம்மை, மாரி, காளி என இப்பட்டியல் நீளும்.
பிற்காலத் தாய்மை பற்றிய உரையாடலில்தான் சாந்த சொரூபியாக, காருண்யமாக, தத்துவத் தளத்தில் பரம்பொருளின் ஆற்றலாக (இயக்க சக்தி) அவள் சித்திரிக்கப்படுகின்றாள். காலம் தோறும் ஆணின் பார்வையிலான பெண்ணாகவே மனிதர், விலங்கு மட்டுமல்ல தெய்வப் பெண்ணும் கட்டமைக்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. இந்தப் பின்னணியில் இருந்து கொண்டுதான் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் நின்று நிலவும் பெண் தெய்வங்களை, அவை பற்றிய ஆராய்ச்சிகளை நிகழ்த்தக் கூடியதாக உள்ளது.
அதிலும் நாட்டாரியல் சார்ந்த பெண் தெய்வங்கள் நோய் நொடிகள், பஞ்சம், பட்டினி தருகின்றனவாகவே அதிகம் அடையாளப்படுத்தப்படுகின்றன. அவற்றின் நின்றும் மாறுபட்ட பெண் தெய்வமாக, குலதெய்வமாக பூசைக்கிழவி என்னும் தெய்வம் காணப்படுகின்றாள்.
கொரோனாக் காலத்தில் மலேசியப் பல்கலைக்கழகம் நடாத்திய சர்வதேச விவாதப் போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை பயிற்றுவித்து போட்டிக்கு அனுப்பும் பொறுப்பில் நான் இருந்த காலத்தில் மாணவர்களுடனான உரையாடல் நாட்டார் தெய்வங்கள் பற்றித் திரும்பியது. அப்போது ஆழியவளையைச் சேர்ந்த செல்வி. டிலோஜினி மோசேஸ் இந்தத் தெய்வம் பற்றிய அறிமுகத்தை எனக்குத் தந்தார். அவருடன் தொலைபேசி வழி உரையாடி தெய்வம் இருக்கும் இடங்களை ஓரளவு அறிந்து கொண்டு சமூகவியல் ஆய்வாளரும் படைப்பாளியுமான திரு. நா. மயூரரூபன் மற்றும் நாட்டாரியல் ஆய்வு ஆர்வலர் திரு. கோ. விஜிகரன் ஆகியோருடன் வடமராட்சி கிழக்குப் பகுதிக்குச் சென்று இந்த ஆய்வை நடத்தினோம்.
பூசைக்கிழவி
ஐரோப்பிய காலனிய கால வழிபாடாகவே பூசைக்கிழவி வழிபாடு சொல்லப்படுகின்றது. இது பொதுக்கோயில் அற்ற தெய்வம். வீடுகளில் மட்டுமே வைத்து வணங்கப்பட்டு வருகின்ற இத்தெய்வம் பூசைக்கிழவி, பூசையம்மன் எனவும் இதன் இருப்பிடம் பூசைக்கிழவி கோயில், ஆச்சி கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆரம்பகாலங்களில் பூசைக்கிழவி என்று அழைக்கப்பட்டு வந்தாலும் தற்போது பூசையம்மன் என்பதே பெருவழக்காக இருப்பதாக உடுத்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை சதீஸ் (வயது 41) தெரிவித்தார். அதேவேளை ஆழியவளைப் பிரதேசத்தில் இன்றும் பூசைக்கிழவி என்னும் பெயரே பெருவழக்காக உள்ளது. தமிழர் மரபில் தெய்வீகம் பெற்ற பெண்களை, சமூக முன்னேற்றத்திற்கு உழைக்கும் பெண்களை கிழவி – ஆச்சி ஆக்கிவிடுகிற பண்பாட்டுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது. ஒளவையாரை கிழவி, ஆச்சி ஆக்கிக் குறிப்பிடுவதும், புனிதவதியை என்புருவாக்கி காரைக்கால் அம்மை – காரைக்கால் பேய் ஆக்கியதுமான கதைகள் மனங்கொள்ளத்தக்கன. அத்தோடு மாரி, காளி முதலான பெண் தெய்வங்களை மாரியம்மா, காளியாச்சி, அம்மாச்சி என வழங்கும் வரலாறுகள் காணப்படுவதும் சுட்டிக்காட்டத்தக்கது.

வீடுகளில் வைத்தே இத்தெய்வங்கள் ஆதரிக்கப்படுகின்றமையினால் இது முன்னோர் வழிபாடாகவோ, குலதெய்வ வழிபாடாகவோ தான் அமைந்திருக்க வேண்டும். அது பற்றிய சரியான தகவல்களை அறிதல் மிகச் சிரமமானதாகவே இருந்தது. இவ்வழிபாடு காலனியகால சமய ஒடுக்குமுறைக் காலத்தில் வெளியில் மற்றவர்களுக்குத் தெரியாமல் வீட்டு வளவினுள் மரத்தின் கீழ் வைத்து வழிபட்ட வழிபாட்டு முறையாகவுமே இருந்து வந்துள்ளது. குறைந்தது, நூறு வருட – அம்மாவின் அம்மம்மா காலத்திற்குரிய வழிபாடு என்பதே பொதுக்கூற்றாக உள்ளது.
இவ்வழிபாடு நின்று நிலவும் பிரதேசங்கள்
கடலும் கடல் சார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த நிலமும் ஒருங்கிணைந்து இருக்கின்ற, இரு மரபும் துய்ய அமைந்திருக்கின்ற வடமராட்சி கிழக்கின் உடுத்துறை, தாழையடி, வத்திராயன், மருதங்கேணி, ஆழியவளை போன்ற பிரதேசங்களில் இத்தெய்வ வழிபாடு உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. இப்பிரதேசங்களில் உள்ள, பெரும்பாலும் சைவசமயம் சார்ந்தவர்களின் வீடுகளில் இவ்வழிபாடு காணப்படுகின்றது. தத்தம் வளவுகளில் கிழக்குத்திசை நோக்கி சிறு கோயில், மண் – ஓலைக் கொட்டில்களாக இருந்த கோயில்கள், இன்று பெரும்பாலும் சீமெந்துக்கற்களால் கட்டப்பட்ட சிறு கோயில்களாக மாற்றமுற்றுள்ளன. சில கிறிஸ்தவர்கள் வீடுகளிலும் தெய்வ வழிபாடு நிலவுவதாக அறிய முடிகிறது. காலங்காலமாக தம் மூதாதையர் வணங்கி வந்த தெய்வத்தை, நம்பிக்கையைக் கைவிட முடியாமல் அல்லது இத்தெய்வத்தின் மீது உள்ள நம்பிக்கையிலோ பிடிப்பினாலோ இவ்வழிபாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கலாம்.
தெய்வவுரு
ஆரம்பகாலத்தில் கல் வைத்து இத்தெய்வத்தை உருவநிலைப்படுத்தி உள்ளனர். பிற்காலத்தில் சூலம் இணைக்கப்பட்டுள்ளது. இன்று இரும்புச் சூலத்தைக் கைவிட்டு, பித்தளைச் சூலம் பெரும்பான்மை வழிபடு பொருளாக மாறியுள்ளது.
இவ்வழிபாட்டின் தனித்துவ அம்சம் பானையை வைத்து தெய்வ உருநிலைப்படுத்தி வழிபடுதலாகும். இரண்டு கொத்துக்கு மேல் (2 ½ kg) நெல்லைக் கொள்ளக்கூடிய (உள்ளடக்கக் கூடிய) அளவுடைய பானை வைக்கப்பட்டு அதனுள் நெல் முழுமையாக இடப்படுகின்றது. அதனுள் சில்லறைக் காசினை இட்டு வைக்கும் வழக்கமும் இன்று காணப்படுகின்றது. முன்பு பொன், வெள்ளி முதலியனவும் இட்டிருக்கலாம். அந்தப் பானையின் மேல் சட்டியைக் ‘கவிட்டு’ மூடிக் கட்டிவைக்கின்றனர். பானைக்கு திருநீறும் பொட்டும் இடப்படுகிறது. சில இடங்களில் தத்தம் வசதிக்கேற்ப பட்டுக் கட்டும் வழக்கமும் காணப்படுகிறது. இப்பானைக்கருகில் சூலமும் வைக்கப்படுகிறது. இரண்டுக்கும் இணைந்தே வழிபாடு இயற்றப்படுகிறது.
அதேநேரம், நேரிலும் கனவிலும் இத்தெய்வத்தைக் கண்டவர்களாகத் தம்மை அடையாளப்படுத்தியவர்கள் அதனை வெள்ளைச் சேலை கட்டிய ‘குடுகுடு’ கிழவி என்றனர். சிலர் நிழலைக் கண்டதாகவும், அது பெரிய தோற்றம் உடைய முதிர் பெண்ணின் வடிவம் என்கின்றனர்.
பூசைக்கிழவி பற்றிய கதைகள்
பூசைக்கிழவியின் தொன்மம் பற்றிய தேடலின் வழி ஒரு கதையை மட்டும் அறிய முடிந்தது.
இந்தியாவின் தமிழகப் பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு முன் வயது போனவர்கள் பலர் இணைந்து கோவில் ஒன்றில் வாழ்ந்து வந்தனர். அந்தக் கோயிலில் சிறப்பாக பூசைகள் நடைபெற்று வந்ததனால் கோயிற் பிரசாதம் இவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது. ஒரு குறையும் இன்றி வாழ்ந்து வரும் காலத்தில் திடீரென்று ஒரு நாள் புயலோடு கூடிய பெருமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கியது. அந்தக் கோயிலில் இருந்தவர்களெல்லாம் திசை கெட்டு ஓடினர். இவர்களுள் கிழவிகள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு கோயிலில் தஞ்சம் அடைந்தனர்.
ஒரு கட்டத்தில் அக்கோயிலிலிருந்து வேறிடம் செல்லத் தலைப்பட்டனர். இவர்களுள் ஒருவரான ‘நயினாதீவு அம்மன்’ முதலில் புறப்படத் தயாரான போது அந்தக் கடற்கரையை அண்டி ஒரு கப்பல் தோன்றியது. அந்தக் கப்பலில் ஏறிய அம்மன் “நான் மட்டும்தான் இதில் ஏறுவன். வேற ஒருத்தரும் ஏற வேண்டாம்” என்று கூறினார். கப்பல் புறப்பட்டுச் சென்றது. தலைக்கு மேல் கழுகு பறந்து வந்து கொண்டிருந்தது. கப்பல் கரைக்கு அண்மையில் வந்தபோது கப்பல் கடலில் தாழத் தொடங்கியது. கழுகு, நாகபூசணி அம்மனைச் சுமந்து வந்து கரையிலிருந்த பற்றைக்கருகில் இறக்கிவிட்டது. பின்னர் அவர் அதற்கருகில் இருந்த கொட்டிலில் வாழ்ந்திருந்தார். கப்பலாக வந்து கடலில் தாழ்ந்த நாகமும், சுமந்து வந்த கழுகும் இப்போதும் நயினாதீவு திருவிழாக் காலத்தில், இதனால்தான் இன்றுவரை தோன்றுகின்றன.
மற்றையக் கிழவிகள் மறுபுறமாக ஓடி வந்தனர். அதில் ஒருவர் திரியா அம்மன். அவர் மருதங்கேணி காட்டுக்குள் சென்று தெய்வமானார். ஏனைய கிழவிகள் ஓடியோடி வந்தனர்.
கோயிலுக்கு வளுந்து வைத்துப் பொங்குவர். வீட்டில் பானை வைத்துப் பொங்குவர். முன்பு வீடு, இணைப்பற்ற பகுதிகளை உடையதாக இருந்தது. வடக்குப் பகுதி படுக்கையறையாகவும், தெற்குப்பகுதி விருந்தினர் தங்குமிடமாகவும், கிழக்குப் பகுதி சமையலறையாகவும், மேற்குப் பகுதியில் உள்ள அறை தூய்மைப்படுத்தப்பட்ட பாத்திர பண்டங்கள் வைக்குமிடமாகவும் காணப்பட்டன. வடக்கு அறை அறுக்கையாக (மூடிக்கட்டி வாயில் உடையதாய்) இருக்கும். குசினி ஓரளவு அறுக்கையாகவும், தெற்குத் திசையில் இருப்பது கொட்டிலாகவும் இருக்கும். மேற்குக் கொட்டில் தூய்மையான, மட்சம் புழங்காத ஒன்று. எல்லாக் கூரையும் பனையோலையால் வேயப்பட்டிருக்கும்.
அதில் மேற்கு திசையில் உள்ள பண்டக அறையில் (தாயறை?) கடற்கரை ஓரமாக ஓடி வந்த கிழவிகள் அவ்வூர்களில் இருந்த மேற்குப் பக்க அறைகளுள் (ஓலைக் கொட்டில்கள்) புகுந்து பானைக்குள் ஒளிந்துகொண்டு சட்டியால் மூடிக்கொண்டனர். ஒவ்வொரு வீட்டாரும் தத்தம் தேவைக் காலத்தில் அறைக்குச் சென்று மூடியைத் திறந்து பானையைப் பார்க்கும்போது வெள்ளைச்சீலை கட்டி, முக்காடு போட்டபடி கிழவிகள் வெளியே வந்தனர். தம்மை ஆதரிக்குமாறு கோரினர். புனித அறையில் இருந்து வந்ததால் இவர்கள் பூசைக்கிழவி, பூசையம்மன் என்று கூறப்பட்டனர். செல்லையதீவு, கரவெட்டி தெற்கு வழி சென்று, கடைசியாக வற்றாப்பளையில் போயிருந்ததாகக் கூறப்படுகின்றது (தகவல்: செல்லத்துரை சத்தியகீர்த்தி (வயது 76), உடுத்துறை).
இத்தகைய கதை, கண்ணகி இலங்கை வந்து பயணித்து வற்றப்பாளை சென்றடைந்த கதையை ஒத்திருப்பினும் சம்பவங்கள், இடங்கள் வேறுபடுகின்றன. வற்றாப்பளை மட்டுமே ஒன்றாக அமைகின்றது.
பானைக்குள் சட்டியால் மூடிய நிலையில் கிழவிகள் இருந்ததனால் பூசைக்கிழவிகள் வழிபாட்டில், மூடிய நிலையில் உள்ள பானை இன்றியமையாத குறியீடாயிற்று.

அற்புதங்கள்
• யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்றபோதும், தான் குறுக்குப்பாதைகளால் வந்து பூசை செய்ததாகவும், தனக்கேதும் நிகழவில்லை என்றும், கோயிலும் எந்தச் சேதமுமின்றி இருந்ததாகவும் திரு. செ. சத்தியகீர்த்தி குறிப்பிடுகின்றார். பேய் பீடித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் கலையாடி சத்தியகீர்த்தி பூசாரி இக்கோயிலில் தீர்வு (திருநீறு போடல், குறி சொல்லல்) வழங்குவதாக இக்கோயிலின் அருகில் வசிக்கும் திரு. வே. சதீஷ் குறிப்பிடுகின்றார்.
• வீட்டில் உரிய வகையில் வழிபாடு செய்ய மறந்தால், குற்றங்கள் ஏதும் நிகழ்ந்தால், கிழவி வடிவிலான நிழலுருத் தோன்றி வீட்டாரை உட்செல்ல விடாமல் வழிமறைத்து நிற்கும் என செல்வி. மோ. டிலோஜினி குறிப்பிடுகின்றார்.
• இளைஞர் சிலரிணைந்து முயல் பிடிப்பதற்காகக் காட்டிற்குச் சென்றனர். வழியில் வீரபத்திரர் கோயில் உண்டு. சென்ற இளைஞர்களில் ஒருவர் திடீரென வீழ்ந்து குழறத் தொடங்கினார். கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனையவர்கள் தூக்கிக்கொண்டு சத்தியமூர்த்தி பூசாரியின் வீட்டுக் கோயிலுக்குக் கொண்டு வந்தனர். அவர் கலையாடி நீறு போட்டவுடன் இளைஞர் எழுந்து சாதாரணமாக வீட்டுக்குச் சென்றார்.
கோயிலமைப்பு
வீட்டு வளவினுள் துடக்கு (தீட்டு) உள்ளவர்கள் புழங்காத இடத்தில், குறிப்பாக வேப்பமரத்தின் கீழ் இத்தெய்வம் கல்ரூபத்தில் வழிபடப்பட்டது. பின்பு ஓலைக் கொட்டில்களில் மூடிய பானையும் (அதனுள் நெல், அருகம்புல், காசு போன்றன இடப்பட்டன) திரிசூலமும் வைத்து வழிபடப்பட்டது. வசதிக்கேற்ப தற்காலத்தில் தத்தம் வளவுகளில், வழிபாட்டிடங்களை கிழக்குத்திசை நோக்கிய சிமெந்துக் கற்களாலான சிறு கோயில்களாக மாற்றி வருகின்றனர். அத்தோடு சில வீடுகளில் முனி, ஆஞ்சநேயர், சத்தியம்மன் போன்ற துணைத் தெய்வங்களும் வைத்து வணங்கப்படுகின்றன. பெருங்கோயில் பண்பாடு, கட்டட அமைப்பு எதுவும் இந்தத் தெய்வத்துக்கு இல்லை.
வழிபாட்டு முறை
பெண்கள் வழி பேணப்பட்டு வரும் வழிபாடாக இருந்தாலும் (தாய் – மகள் – மகள்) ஆண்வழிச் சமூகத்தினரே பூசாரிகளாக விளக்கு வைக்கும் ‘பாக்கியம்’ பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர். பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் வாரந்தோறும் விளக்கு வைக்கும் பாரம்பரியமே காணப்படுகிறது. காலைப்பொழுதில் விளக்கு வைத்து பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, தேங்காய் அடித்து, கற்பூரம் ஏற்றி வழிபடுகின்றனர். சிலர் தத்தம் வசதிக்கேற்ப மாலைப் பொழுதுகளில் வழிபடுகின்றனர்.
திரியா அம்மன் கோயிலில் வைகாசி மாதம் பொங்கல் தொடங்கும். அதன் பின் ஒவ்வொரு கோயிலாக ஆனி மாதம் வரைக்கும் மடை பரவுதல் நடைபெறும் வழக்கம் காணப்படுகின்றது. ஆடி மாதம் மடை பரவுதல் நடைபெறுவதில்லை.
இவற்றை விட நேர்த்திக்கடன், தைப்பொங்கல் வருஷம், தீபாவளி, நவராத்திரி காலங்களில் மடை வைக்கும் வழக்கமும் காணப்படுகின்றது. வைகாசி, ஆனி மாத வருடாந்த மடை பரவுதலில் உறவுகளுக்குப் பங்குண்டு. யாவருக்கும் அறிவித்தே மடை பரவுதல் நடைபெறும். இந்தத் தெய்வத்துக்கு மட்சம், மாமிசம் படைப்பதில்லை.
மடையில் பொங்கல் செய்யாதது குறிப்பிடத்தக்க விடயமாகும். அவல் கடலை, கௌப்பி, மோதகம், வடை என வசதிக்கேற்ப பலகாரங்களும் மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழவகைகளும் வெற்றிலை, பாக்கு, தேசிக்காய் உள்ளிட்டவையும் வைத்து வழிபடும் மரபே காணப்படுகின்றது. இன்னும் சிலர் பொங்கலும் பொங்குவதாக அறியமுடிகின்றது. இதைத்தவிர தமது வீட்டில் விளையும் முதற்பொருள்களையும் (காய், பழம், புதிர் நெல்) இத்தெய்வத்திற்குக் காணிக்கையாக்குவர். வடை மாலைகள் கட்டி சூலத்திற்குப் போடும் வழக்கம் காணப்படுகின்றது. இது வைரவ வழிபாட்டு மரபின் வழி வந்த வழக்கமாக இருக்கலாம். இவ்வூரில், பெறுவதற்கு அரிதான பலாப்பழத்தை வாங்கி தெய்வத்திற்கு படைத்ததன் பின்பே சாப்பிடும் வழக்கம் உள்ளது. படைக்காது விட்டால் துன்ப – துயரம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
சமூக அடுக்கமைவு
மருதங்கேணி, உடுத்துறை, ஆழியவளை, வத்திராயன் பகுதிகளில் மீன்பிடித் தொழில் செய்கின்ற கரையோர மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சாதிக்குள் சாதிப் பிரிவுகள் இன்றி ஒரே சமூகத்தவரே வாழ்ந்து வருகின்றனர். ஏறத்தாழ அறுபது வீடுகளுக்கு மேல் பூசைக்கிழவியை – அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஒரே சமூகத்தினராய் இப்பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை இதில் குறிப்பிடத்தக்கதாகும். இத்தெய்வத்தை பூசைப் பேர்த்தி என்பாரும் உண்டு.
இப்பகுதியில் அண்ணமார் வழிபாடும் காணப்பட்டுள்ளது. உடுத்துறையைச் சேர்ந்த இந்த நெய்தல் நில மக்கள், கரைவலை இழுத்துவிட்டு கள், மீன், கருவாடு படைத்து அண்ணமாரை வழிபட்டனர். பெரிய நாவல் மரமொன்றின் கீழ் பொல்லு வைத்து அண்ணமார் வழிபடப்பட்டுள்ளார். இன்று இத்தெய்வ வழிபாடுமில்லை, கோவிலும் இல்லை.
சில அவதானிப்புகள்
• ஐரோப்பியக் காலனிய காலத்தில் உருவான வழிபாடாகவே பொதுவில் சொல்லப்பட்டாலும், பூசாரி சத்தியகீர்த்தி இந்தியாவில் இருந்து வந்த கிழவிகளின் கதையாக பூசைக்கிழவியின் கதையைக் கூறுகின்றார்.
• இயற்கை வழிபாட்டில் – வாழ்வில், விதை என்பது போற்றுதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய புனிதப் பொருள் என்று கருதும் பண்பாடு காணப்பட்டுள்ளது. நெய்தலுடன் மருதம் இணைந்த இந்த நிலப்பரப்பில் விதை நெல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நெல் ஈரப்பதன் இல்லாமலும் வெப்பத்தாக்கத்திற்கு உள்ளாகாமலும் பாதுகாக்கப்பட வேண்டியது. ஆதலால் பெரிய மண்பானைகளில் அதனை இட்டு சட்டி போன்ற மண்மூடிகளால் பாதுகாத்து வரும் வழக்கம் இருந்து வந்திருக்கின்றது.
• குறிப்பாக இலங்கையின் வடக்கு மாகாண பருவப் பெயர்ச்சி மழை, காற்று என்பன வடக்கு, தெற்கு திசைகளைச் சார்ந்தவை. ஆதலால் மேற்குக் கொட்டிலில் வைத்து மண் பானைகளில் நெல்மணி பாதுகாக்கப்பட்டிருக்கலாம். நெல்மணியைச் செல்வமாகக் கருதிவந்த காலமானது கடந்துவந்த வழித்தடத்தில் பணப் பெறுமானம் உருவானபோது, அதனையும் பானையில் இட்டிருக்கலாம். அதேபோல சாணியால் மெழுகப்பட்ட கொட்டிலில், வைக்கப்பட்ட நெல் மணியுடன் அறுகம்புல்லையும் இட்டு பூச்சிகளின் தாக்கத்திற்கு உள்ளாகாதவாறு மூடி இருக்கலாம்.
• கடற்றாய் வழங்கும் மட்சம் வாழ்வாதாரத்திற்கு உரியதெனினும் மருத நிலம் தரும் நெல்மணியும் சமாந்தரமானதும் முதன்மையானதுமாகும். உலகெங்கும் பூதங்கள் புதையல் காத்த கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை ஒத்து, மண் பானைகளை கிழவிகள் காத்த கதையாக இக்கதையைப் புரிந்துகொள்ளலாம்.
• கறுக்காய்த் தீவில் உள்ள நெய்தல், மருதம் இணைந்த நிலப்பரப்பில் வாழும் நெய்தல் நில மக்கள், மாரி காலத்தில் மண் பானையில் வளந்துக்கான நெல்மணிகளை இட்டு, நீர் புகாதவாறு வாயை இறுகக்கட்டி, அதனைத் தமது குல தெய்வமாகக் குடி கொண்டிருக்கும் பெரும்படைக் கோயிலுக்கருகிலுள்ள பூவரச மரத்தின் உச்சியில் கட்டிவிடுவர். பின்பு பங்குனி மாதம் அதனை இறக்கி (வெயிற் காலம்) வளந்து வைத்துப் பொங்கி படைப்பர். மாரிகால வெள்ளப்பெருக்கிலிருந்து விதை நெல்லைப் பாதுகாக்கும் திட்டம் இதுவெனலாம். இதுவே பின் ஆகமக் கோவில்களில் கோபுரங்களின் கலசங்களில் தானியம் இடும் செயல்நிலையானது.
• இதையொத்தே கடல் நீர் உட்புகும் அபாயமும், மழை வெள்ளப்பெருக்கு அபாயமும் உள்ள இந்த ஊர்களில் நெல்மணியைப் பாதுகாக்கும் எண்ணத்தோடு ஒவ்வொரு வீடுகளிலும் உயர்வான பீடத்தில் மூடிய பானை வைக்கப்பட்டு, அருகில் காவலுக்குத் திரிசூலமும் வைக்கப்பட்ட பூசைக்கிழவி வழிபாடு நடைபெற்று வந்திருக்கிறது என்றே ஊகிக்க முடிகிறது. விவசாயத்தைக் கண்டுபிடித்தவள் பெண் என்பதை இவ்வழிபாடு நிரூபணம் செய்கின்றது.
• இப்பானைகளில் அறுவடைக் காலத்தில் (தை மாதம்) புது நெல் இடப்படுகிறது. ஆண்டுதோறும் நடாத்தப்படும் மடைக்கு முன் நெல் மாற்றப்படுதல், ‘விதை நெல்’ எனும் கருத்தை உறுதிப்படுத்துகின்றது. வருடந்தோறும் முதலில் பானையில் நெல்லை இட்டவாறே அடுத்த முறை நெல்லை மாற்றி வைக்க வேண்டும். அவர் பெரும்பாலும் பூசாரியாக அல்லது குடும்பத் தலைவராக இருப்பார். அவர் இல்லாதுபோகும் சந்தர்ப்பத்திலேயே அடுத்தவர் இப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது எழுதாத விதியாக உள்ளது.
• பானைக்குள் நெல்லினை இட்டு வழிபடுவதாலோ என்னவோ இந்தத் தெய்வத்துக்கு பொங்கல் இடும் வழக்கம் இல்லை.
• வளமை உடையவள் பெண்; கர்ப்பம் தரிப்பவள்; பல பேறுகளைக் கண்ட முதிர் பெண் (கிழவி, பேர்த்தி) கருவளத்தைக் காக்கும் திறனறிந்தவள்; பிள்ளைப்பேறு பார்க்கும் மருத்துவிச்சி; அனுபவமே அவளின் அடையாளம் என்றாகிறது. ஆகவே வளப்பம் நிறைந்த விதை நெல்லைக் காக்கும் தெய்வம் பெண்ணாக, கிழவியாக, அம்மனாக சித்திரிக்கப்படுகின்றாள்.
• அண்ணமார் வழிபாடு பொதுவில் சிறுகுடி வேளாளரின் வழிபாடாகவே காணப்பட்ட போதும் இங்கு கரைவலை இழுப்பவர்களின் வழிபடுநிலை தெய்வமாக இருந்துள்ளமையை ‘நம்பிக்கை’ எனும் கருத்தாக்கம் சார்ந்த ஒன்றாகவே பார்க்க முடிகின்றது.
முடிவுரை
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கரையோரக் கிராமங்களில் மரபு மனம் மாறாத நாட்டார் தெய்வமாகப் பூசைக்கிழவி விளங்குகிறார். கிழவி, பேர்த்தி எனவும்; அம்மன் எனவும் சுட்டப்படும் இத்தெய்வம் வீட்டு வளவினுள் வைத்து வழிபடப்படும் ஒரு குலதெய்வமாகும். ஆயினும் இப்பிரதேசத்துக்கு அப்பால் உள்ள கரையோரக் கிராமங்களில் இத்தெய்வ வழிபாடு இல்லை. ஆகவே இப்பிராந்தியத்திற்குரிய தனித்துவமான பெண் தெய்வ வழிபாடாக இது அமைந்துள்ளது. வயலும் கடலும் இணைந்த வாழ்வில் நெல்மணியை – விதையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுந்துதலின் வழி வளப்பமுடைய – அதனைப் பாதுகாக்கும் திறனறிந்த முதிர்பெண்ணைக் காவல் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். கடலுடன் இணைந்த நிலமாதலால் வெள்ளப் பேரிடரில் இருந்து காக்க, நெல்மணியை மண் பானையினுள் இட்டு அதன் வாயை சட்டியால் மூடி, இறுகக்கட்டிப் பூசித்து வந்துள்ளனர். வருடத்துக்கு ஒருமுறை நெல்லை மாற்றி வந்துள்ளனர். பண்டைய காலத்தில் போக்குவரத்து ஏற்பாடுகளற்ற காடு மண்டிக்கிடந்த இப்பிரதேசத்தில் தமக்கான விதையையும், உணவையும், பாதுகாக்கும் ஏற்பாடு இது எனலாம். நோய் தீர்த்தல், பேய் – பிசாசிடமிருந்து பாதுகாத்தல், சுகம் அளித்தல், வேண்டும் பேறுகளை அளித்தல் என இத்தெய்வம் மக்களுக்கு நன்மை செய்யும் தெய்வமாகவே வணங்கப்படுகின்றது. மருதங்கேணி திரியாயம்மன் முதலியவை மேனிலையாக்கம் பெற்ற போதும் இவ்வழிபாடு ஓலைக்கொட்டிலிலிருந்து சிமெந்துக் கட்டடத்துக்கு மாறியதே தவிர, வழிபாட்டுமுறை மாறவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருக்காய்த் தீவு போல நெய்தலும் மருதமும் இணைந்த இப்பிராந்தியத்திலும், பானையில் நெல்லைப் பாதுகாக்கும் சுதேச பாதுகாப்பு முறையை முன்னிறுத்துகின்ற கரையோர மக்களின் இயற்கை வழிபாடு நிலவி வருகின்றது. காவல் தெய்வமான பூசைக்கிழவி இப்பிராந்தியத்துக்கே உரிய தனித்துவமான நாட்டார் தெய்வமாக, நிலவியல் பண்பாட்டின் நீட்சியாக, வழிபாடாக அமைந்துள்ளது.



