ஈழத்தின் வடமேற்கில் அன்றிருந்த தமிழ்க் கூத்து மரபு – பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
21 நிமிட வாசிப்பு

ஈழத்தின் வடமேற்கில் அன்றிருந்த தமிழ்க் கூத்து மரபு – பகுதி 2

April 17, 2026 | Ezhuna

ஈழத்து மரபுவழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி, வடமோடி, சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி என அது பன்முகப்பட்டது. இவற்றுள் சில அருகிவிட்டன; சில கால ஓட்டத்துடன் நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும், அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூக காரணங்களும் இம்மாற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் தத்தமக்கென அழகியலையும், அமைப்பையும், வெளிப்பாட்டுத் திறனையும் கொண்டுள்ளன; ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும் வளர்ந்துள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வதும், அவை மாற்றம் பெற்றபோது அது சம்பந்தமாக நடந்த விவாதங்களை அறிவதும், இதன் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவருக்கும், அதனை மேலும் வளர்த்துச் செல்ல விரும்புவோருக்கும் உதவியாக இருக்கும். இப் பல்வேறு ஆற்றுகை வடிவங்கள் பற்றியும் அவை கல்வி உலகில் ஏற்கப்பட்ட பின்னணிகள் பற்றியும், அதனால் இந்த ஆற்றுகைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அறிமுகம் செய்வதாக ‘ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமைந்திருக்கும்.

முன்னுரை

ஈழத்தின் வடமேற்குப் பகுதியில் உடப்பு எனும் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலும் மற்றும் அங்குள்ள பெண் தெய்வக் கோவில்களும் ஆகமம் சாராத மக்கள் வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தன. அவற்றை விரிவாக நோக்குவோம்.

உடப்பு கிராமத்தின் தனித்துவம்

உடப்பு என்பது இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் சிலாபம் அருகில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியத் தமிழ்க் கிராமம். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் இந்துத் தமிழர்கள் ஆவர். இது ஒரு கடற்கரை மீனவர் கிராமம். அவர்களின் வாழ்வு: மீன்பிடி, இறால் வளர்ப்பு, சிறு தொழில்கள், சிலர் பொற்கொல்லர் தொழில் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள்.

உடப்பில் வாழும் மக்களில் பெரும்பாலோர் கரையார் எனப்படும் கடற்கரைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தென் இந்தியாவிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள். ஏற்கனவே அங்கு வாழ்ந்த பழங்குடிகளுடன் கலந்து ஒரு சமூகமாக ஆனவர்கள். அவர்கள் கடல்சார் தொழில்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படுகிறது. உடப்பில் ஒரே ஒரு சாதி மட்டுமல்ல, பல சாதிகள் உண்டு. ஆனால் கரையார் சமூகமே ஆதிக்கமானது. கரையாரோடு (முக்கிய சமூகம்), ஆசாரி/ பொற்கொல்லர், அம்பலவாணர், செட்டியார் எனச் சில துணைச் சமூகத்தினரும் காணப்படுகின்றனர். ஆனால் கிராம வாழ்க்கையில் கடற்கரைச் சமூக ஒற்றுமை அதிகம் காணப்படுகிறது.

உடப்பின் இந்துக்கோவில்கள்

உடப்பில் பல சிறிய – பெரிய கோவில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை: திரௌபதி அம்மன் கோவில் – உடப்பின் மிகவும் புகழ்பெற்ற கோவில். இவற்றைவிட இங்கு மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், பார்த்தசாரதி கோவில் என்பன உண்டு. இந்தக் கோவில்கள் கிராமத்தின் பாரம்பரிய இந்து மத அடையாளத்தைப் பிரதிபலிக்கின்றன.

பொதுவாக இந்தக் கோவில்கள் ஒரே சாதிக்கானவை அல்ல; கிராமச் சமூகத்திற்கே பொதுவானவை. ஆனால் ஒவ்வொரு கோவிலுக்கும் குறிப்பிட்ட குடும்பங்கள் அல்லது குலங்கள் நிர்வாகப் பொறுப்பு வகிப்பது வழக்கம். இது தென்னிந்திய மற்றும் இலங்கைக் கிராம இந்து மரபில் பொதுவான நடைமுறையாகும்.

இந்தக் கோவில்களில் தமிழ் மாதம் ஆவணியில் பொதுவாக ஜூலை இறுதி – ஆகஸ்ட் தொடக்கத்தில் 18 நாட்கள் விழா நடைபெறும். விழா ஆரம்பம்: கொடி ஏற்றம் (த்வஜாரோஹணம்). விழா முடிவு: தீமிதி. இவை இங்கு முக்கியமானவை. இந்த 18 நாள் காலத்தில் நோன்பு, சைவ உணவு, பூஜை, பாரதம் வாசிப்பு, ஊர்வலம் என்பன நடைபெறும்.

இது ஆகம வழிபாட்டுக் கோவில் அல்ல. அதாவது பிராமணர் பூஜை செய்யும் கோவில் அல்ல. உள்ளூர் பூசாரிகள் (Non-brahmin Priests) வழிபாடு நடத்துவர். இது கிராமத் தெய்வ வழிபாட்டு மரபாகும். 

இந்த 18 நாள் காலத்தில் மகாபாரதக் கதை வாசிக்கப்படுகிறது. பொதுவாக தமிழாக்கப்பட்ட மகாபாரதம் அல்லது உள்ளூர் பாரதக் கதைகள் வாசிக்கப்படும். சில நாட்களில் அர்ஜுனன், பீமன், தருமர், திரௌபதி போன்ற கதாபாத்திரங்கள் வேடம் அணிந்து நாடக வடிவில் வெளிப்படுத்தப்படுகின்றன என அறிகிறோம். இது தென்னிந்திய திரௌபதி அம்மன் கூத்து மரபுடன் தொடர்புடையது. 

இறுதி நாள் ‘தருமர் பட்டாபிஷேகம்’. மகாபாரதப் போருக்குப் பிறகு தருமர் (யுதிஷ்டிரன்) ஹஸ்தினாபுர அரசனாக முடிசூடுகிறார். இந்த நிகழ்வு நாடகமாக அல்லது சடங்காக விழாவில் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து தீமிதி (Fire Walking) நடைபெறும்.

இதனை விட சில பெண் தெய்வக் கோவில்களும் உண்டு. அவை மாரியம்மன், காளியம்மன் கோவில்களாகும். இந்தக் கோவில்களில் அம்மன் பூஜை, நேர்த்திக்கடன், காப்புக் கட்டுதல், பூக்கூடை, தீமிதி (சில இடங்களில்) போன்ற கிராமத் தெய்வ வழிபாட்டுச் சடங்குகள் நடைபெறும். பொதுவாக இவற்றில் பிராமணியத் தாக்கம் மிகக் குறைவு. இந்த வழிபாடுகள் கிராமத் தெய்வ மரபு, சக்தி வழிபாடு, மகாபாரத புராணம் ஆகியவற்றின் கலவையாக உள்ளன. அதனால் இது நாட்டார் இந்து மத மரபு (Folk Hinduism) எனக் கருதப்படுகிறது.

உடப்பு, 18 ஆம் நாள் தீமிதி விழாவால் புகழ்பெற்ற ஒரு தனித்துவமான பண்பாட்டு மையமாகும். உடப்பில் நடைபெறும் சடங்கின் போது பாரதக் கதை நிகழ்த்தப்படுகிறது; காட்சிகள் காட்டப்படுகின்றன. நாடகத்தன்மை பொருந்தியனவாக இவை அமைந்திருக்கும்; ஆனால் இது நாடகம் அன்று, ஒரு சமயச் சடங்காகும்.

மார்க்கண்டேயன் வடமோடி நாடகம், வாளபிமன் வடமோடி நாடகம், உடப்பில் நடக்கும் பாரதக் கதை படிக்கும் நாடக அம்சம் நிரம்பிய சடங்கு – இந்த மூன்று ஆற்றுகைகளும் மிக முக்கியமானவையாகப் படுகின்றன. கத்தோலிக்க மதம் வரும் முன்னர், சிறப்பாக சைவ சமயத்தையும், குறிப்பாக வைஷ்ணவ சமயத்தையும் இந்த நாடகங்கள் பிரசாரம் செய்தன. இந்தக் கூத்துகளைப் பழகுவதற்கு மாதக்கணக்கில் காலம் எடுத்ததாலும், ஊரே கூடி இந்தக் கூத்துகளை நிகழ்த்தியதால், கூத்துகள் மூலமாக மதக் கருத்துகள் மக்களைச் சென்றடைந்தன.

சிலாபத்திலும் முன்னேஸ்வரத்திலும் ஒரு விவசாயம் சார்ந்த சமூகத்தினை மையமாகக் கொண்ட ஒரு பண்பாடு இருந்தது போலத் தெரிகிறது. அந்த சமூகப் பண்பாடே மேலோங்கி இருந்தது போலவும் தெரிகிறது. விவசாயம் சார்ந்த சமூகம் நிலமானிய சமூகமாகும்.

அந்தச் சமூகம் பற்றி சைமன் காசிசெட்டி எழுதிய நூலான ‘The Castes, Customs, Manners and Literature of the Tamils’ எனும் நூலில் பல தகவல்களை அறிகிறோம். இங்கு வாழ்ந்த சாதிகள், துணைச் சாதிகள், தொழில்கள், மரபுகள், சடங்குகள், சமூக மரியாதை முறைகள், மத நம்பிக்கைகள் ஆகியவற்றைக் காசிசெட்டி கூறுகிறார்.

வெள்ளாளர் நிலத்தார்களாக,
பிராமணர்கள் சமயத் தலைவர்களாக,
கரையார் கடலோரம் வாழ்பவர்களாக,
கம்மாளர் கைவினைஞர்களாக,
செட்டியார் வணிகர்களாக,
நளவர் பனைத் தொழிலாளர்களாக,
வண்ணார் துணித் தொழிலாளர்களாக விவரிக்கப்படுகின்றனர்.

சைமன் காசிசெட்டி சாதியை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யவில்லை. அவர் சாதியை ஒரு தொழில் அடிப்படையிலான சமூக அமைப்பாகப் பதிவு செய்துள்ளார். இந்த நூல் அவர் எழுதிய நூல்களில் ஒரு முக்கியமான நூலாகும்.

அவர் சாதியை எப்படிப் பார்க்கிறார்? சாதி பற்றிய அவருடைய அணுகுமுறை யாதெனில்: சாதி மரபு ரீதியானது; அது செய்யும் தொழில் வாரியானது; அது ஒரு சமூக ஒழுங்கு என்பதே அவர் கருத்தாகும். ஒரு வகையில் அவர் சாதியை ஒரு சமூக ஒழுங்கு முறையாகப் பார்க்கிறார்.

உதாரணமாக:
வெள்ளாளர் – நிலம் சார்ந்தோர்
பிராமணர் – சமயம் சார்ந்தோர்
கரையார் – கடல் சார்ந்தோர்
கம்மாளர் – கைவினை சார்ந்தோர்
நளவர் – பனைத் தொழில் சார்ந்தவர்கள்

இப்படி ஒவ்வொரு சாதியும் ஒரு சமூகப் பணி செய்கிறது என்று அவர் காட்டுகிறார். முக்கியமாக, அவரின் நூலில் எங்கும் “இது தவறு”, “இது நீங்க வேண்டும்”, “சமத்துவம் வேண்டும்” என்று அவர் கூறுவதில்லை. அதே நேரத்தில் “இது நல்லது”, “இது பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் கூறுவதில்லை. அதாவது, அவர் சமூகத்தை அதன் நிலையில் அவதானிப்பவராகவும், அந்த அவதானிப்பைப் பதிவு செய்பவராகவும் மாத்திரமே காணப்படுகிறார். அதன் ஏற்றத்தாழ்வுகளை விமர்சிக்கின்ற சீர்திருத்தவாதியாக அவர் காணப்படவில்லை.

இவை யாவும் அன்றிருந்த நிலமானிய விழுமியங்களைக் காட்டுகின்றன. அந்த நிலமானிய விழுமியங்களை இந்தக் கூத்துகள் கட்டிக்காப்பனவாகவும் இருந்தன.

  1. பெண்கள் கூத்து ஆடவில்லை; அதற்கு அனுமதி இல்லை
  2. சாதி கலந்து கூத்து ஆடவில்லை
  3. மார்க்கண்டேய நாடகத்தில் கூறப்படும் வாழ்க்கை முறைகள்
  4. வாளபிமன் நாடகத்தில் வருகின்ற பறையன் பாத்திரத்தின் கூற்றுகள்

போன்றன இக்கூத்து மரபில் காணப்படும் நிலமானிய சமூக விழுமியங்களைக் காட்டுகின்றன.

பறையன் பாத்திரத்தின் வேலை பறை அடிப்பது என்ற சமூக ஒழுங்கைக் கலை மூலம் கூத்து எடுத்துக்காட்டியது. எனவே இந்தக் கூத்துகள் அந்தக் கரையோரப் பகுதியிலே தமிழ் மக்களிடையே அவர்களின் நிலமானியப் பண்பாட்டை நிலைநிறுத்தும் தன்மை உடையவையாக இருந்தன என நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தக் கூத்துகள் ஆடப்பட்ட விதமும் அருகிப்போன சோகமும்

இந்நாடகங்களைப் (மார்க்கண்டேயன், வாளபிமன்) பதிப்பித்த பேராசிரியர் சிவத்தம்பி கூறுவது இங்கு கவனத்திற்குரியது.

“இப்பதிப்பில் இடம்பெறுகின்ற இரண்டு நாடகங்களும் சிலாபம் முன்னேஸ்வரன் கோவிலில் நேர்த்திக் கடனுக்காகவும் ஆடப்படுபவை. இப்பதிப்பில் இடம்பெறும் இரு நாடகங்களும் வடமொழி மரபில் இடம்பெறும் தமிழ்க் கூத்துகள். இவை வடமோடி வகையுள் அடங்கும். இவ்வாறான நாடகங்கள் பொது மக்களால் மாத்திரம் பயிலப்பட்டு அவர்கள் நிலையினின்றும் மேலெழாது இருந்தமையால் அவர்கள் வாழ்வில் காணப்படும் அம்சங்களைப் பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.’’

இதற்கு முன்னுரை எழுதிய வித்தியானந்தன் பின்வருமாறு குறிப்பிடுவார்:

“கோயில் இராப்பூசை முடிந்த பின்னர் நாடக பூஜை நடைபெறும். கோயில் முன்றலில் கூடியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் விடியும் வரை கூத்துகள் ஆடுவர். இந்த நாட்டுக்கூத்துகள் அன்றிலிருந்து இன்று வரை நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. மருதங்குளத்தில் பாரதக் கதைப் படிப்பு, வசந்தன் அம்மனைப் படிப்பு, நாட்டுக்கூத்துகள் ஆகியன தொன்றுதொட்டு வழங்கி வருகின்றன.

பாரதக் கதைப் படிப்பு இப்பொழுது நின்றுவிட்டது. ஆனால் வசந்தன் அம்மானை ஆண்டுதோறும் புத்தாண்டுக் கொண்டாட்ட நாட்களில் எல்லா வீடுகளிலும் படிக்கப்படுகின்றது.

நாட்டுக் கூத்துகளில், முக்கியமாக மார்க்கண்டேயன் நாடகமும் வாளபிமன் நாடகமும் ஆண்டுதோறும் கோயில் முன்றலில் நடிக்கப்பெற்று வருகின்றன. கூத்துகளைப் பழக்கும் அண்ணாவிமார் பலர் இன்றும் ஈழத்து வடமேற்குப் பகுதியில் காணப்படுகின்றனர். வெளிப்புறங்களில் களரி அமைத்து ஆடுகின்றனர். பழைய முறையின்படி என்றும் ஆடவரே பெண் வேஷம் போடுகின்றனர்.

இப்பகுதிக் கூத்துகளின் ஆட்டம் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற பிற பகுதிகளின் ஆட்டத்திலிருந்து சிற்சில துறைகளில் வேறுபாடு உடையதாகக் காணப்பட்ட போதும், பெரும்பாலும் ஏனைய பகுதி ஆட்டத்தை ஒத்திருக்கின்றது.”

இந்த நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு 1963 ஆம் ஆண்டு; 60 வருடங்களுக்கு முன்னர். ஆகவே இற்றைக்கு 60 வருடங்களுக்கு முன்னர் இந்த மரபு அப்பகுதியில் வாழும் மரபாகவே இருந்துள்ளது போலத் தெரிகிறது.

  1. கோவில் முன்றலில் ஆடியிருக்கிறார்கள்.
  2. வெட்ட வெளியில் வட்டக்களரி அமைத்தும் ஆடியிருக்கிறார்கள்.
  3. கூத்தை எழுதும் புலவர்கள் இருந்திருக்கிறார்கள்.
  4. அதனைப் பழக்கும் அண்ணாவிமார் இருந்திருக்கிறார்கள்.
  5. கூத்துக்கு உடை தயாரிக்கும் உடையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்.
  6. கூத்து ஆட்டக்கூத்தாக இருந்தமைக்கான சான்றுகள் பாடல்களில் காணப்படுகின்றன.

இவ்வண்ணம் செழுமையுடன் வடமேற்கில் கரையோரப் பகுதியை ஒட்டி வாழ்ந்த ஒரு பெரும் கூத்து மரபு அழிந்துபோன இந்தக் கதை ஒரு பெரும் சோகக்கதை. அப்பகுதியில் தமிழரும் தமிழ் மொழியும் மெல்ல மெல்ல அருகிப்போனது போலவே இக்கூத்து மரபும் மெல்ல மெல்ல இல்லாது ஆகியது. அதற்கான அரசியல் வரலாற்றுக் காரணங்களும் உண்டு. சிலாபம், புத்தளம், முந்தல், உடப்பு, திருக்கேதீஸ்வரம், மன்னார், தலைமன்னார் ஆகிய கரையோரப் பகுதிகளில் தமிழ்க் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன. முத்து எடுத்தல், மீன் பிடித்தல், விவசாயம் என்பன இந்தப் பகுதி வாழ் மக்களின் பிரதான தொழில்கள் ஆயின.

கண்ணகி வழக்குரை காவியம், முடியரசன் பற்றிய கதையை எங்களுக்குத் தருகின்றது. முடியரசன் தென்மேற்கு, வடமேற்குப் பிரதேசங்களை ஆட்சி செய்த ஓர் அரசன் போலத் தெரிகிறது. இந்த அரசு முக்குவகுல அரசு என்றும் அறியப்படுகிறது. வெடியரசன் கதை எனும் நூலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், ஈழத்தில் தமிழ் அரசுகளின் அகற்சியை வேண்டியிருக்கின்ற ஒரு நூல் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

ஈழத்தமிழர் வரலாற்றில் கவனிக்கப்படாத இருண்ட பகுதி 

வடபுலத்தை ஆண்ட மன்னர்களைப் போல வடமேற்குப் புலத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதி இலங்கை வரலாற்று ஆய்வில் இன்னும் இருண்ட பகுதியாகவே வரலாற்று ஆராய்வாளர்களுக்கு இருக்கின்றது. பொம்பரிப்பிலே கிடைத்த புராதன தொல்லியல் அம்சங்கள் பற்றி சில ஆய்வாளர்கள் பேசியுள்ளனர். முக்கியமாக பேராசிரியர் சிற்றம்பலம் அவரது ‘பண்டைய ஈழம்’ எனும் நூலில் இது பற்றிக் கூறுகிறார். ஆனால் அவ்வாய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை.

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள தமிழர் வாழும் புத்தளம் பெருநிலப்பரப்பிலே பல காளி கோயில்களும் பல மாரியம்மன் கோயில்களும் இருப்பதனை நாம் அவதானிக்கலாம். அவற்றில் சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.

உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளியம்மன், கற்பிட்டி பாலாவி பிரதான பாதையில் நரக்களி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாநாக காளியம்மன், வேப்பமடு பத்திரகாளி அம்மன், முந்தல் பிரதேசத்தில் அமைந்துள்ள வட்டமான் பத்திரகாளியம்மன், கருங்காலி சோலையில் அமைந்துள்ள வட பத்திரகாளியம்மன், முனீஸ்வரத்தின் கிழக்கே அமைந்துள்ள சுடலைக் காளியம்மன், சிலாபம் சங்கு தட்டான் வட்டாரத்தில் அமைந்துள்ள சங்கதத்தான் காளியம்மன் கோயில் ஆகியவை வடமேற்கே வாழ்ந்த தமிழர் மத்தியில் வேரூன்றி இருந்த காளியம்மன் வழிபாடுகளுக்கு உதாரணமாக அமைகின்றன.

இதைவிட மாரியம்மன் வழிபாடுகளும் இங்கே இருந்திருக்கின்றன. கற்பிட்டி ஆனவாசல் முத்துமாரியம்மன், வில்லங்கரை நாச்சியம்மன், ஏத்தாழை காமாட்சியம்மன், இலவங்குளம் நாகபூசணி அம்மன், ஆளவில்லு மகாமாரியம்மன், கரடிப்பூவல் மாரியம்மன், புத்தளம் முத்துமாரியம்மன், மணல் கொன்று கருமாரி (பொம்மக்கா அம்மன்), சேனைக் குடியிருப்பு பத்தினி அம்மன், புத்தளம் வெளிபட்ட விதி முத்துமாரியம்மன், புளிச்சா குளம் முத்துமாரியம்மன், குசலை முத்துமாரி, திமிலை கண்ணகி அம்மன், சிலாபம் முத்துமாரியம்மன், நாத்தாண்டி கருமாரியம்மன் போன்ற காளி, மாரி, கண்ணகி, கருமாரி போன்ற பெண் தெய்வ வழிபாடுகளும் இந்தப் பகுதியிலே இன்றும் உள்ளன.

இவை அதிகம் பேசப்படாதவை. நமது இந்து மத ஆராய்வாளர்களின் ஆராய்ச்சிப் பகுதிக்குள் இன்னும் வராதவை. இந்த காளி, மாரி அம்மன் கோயில்களிலே பழமையான வழிபாடுகள் இருந்தபோதிலும், காலமாற்றம் காரணமாக இவை ஆரியமயமாக்கம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப் பார்க்கின்ற பொழுது, கத்தோலிக்க மதம் வரும் முன்னரே ஒரு வலுவான ஆகமம் சார்ந்த இந்துமரபும், ஆகமம் சாராத மக்கள் மையப்பட்ட ஒரு கிராமிய வழிபாட்டு மரபும் தமிழ் மக்கள் மத்தியில் வடமேற்கு இலங்கையில் ஆழமாக இருந்திருக்கின்றது என்பது புலப்படுகின்றது. இதில் மக்கள் மனதிலே அதிகமாக வேரூன்றி இருந்தது கிராமியத் தெய்வ வழிபாடு; அதிலும் சக்தி வழிபாடு, அம்மன் வழிபாடு என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையின் வடமேற்கில் கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் மத்தியில் கத்தோலிக்க மதம் இலகுவாகப் புகுந்ததன் பின்னணியையும் இதைக் கொண்டு நாங்கள் புரிந்து கொள்ளலாம். நான் இங்கு கூறவருவது யாதெனில், போர்த்துக்கேயர் வருகையுடன் தான் கத்தோலிக்க மதம் இந்தப் பகுதிகளில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பிக்கின்றது; கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த கத்தோலிக்கத் தேவாலயங்கள் அதிகம் உருவாகின்றன; கத்தோலிக்க மதம் சார்ந்த வழிபாடுகளும் பண்பாடுகளும் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றத் தொடங்குகின்றன. அதற்கு முன்னதாக இந்து மதம்சார் பண்பாடுதான் இந்தப் பகுதிகள் எங்கணும் இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன. அந்தப் பண்பாட்டில்,

  1. ஆகமம், பிராமணீயம் சார்ந்த சிவன் ஆலய வழிபாடுகள்
  2. ஆகமம் சாராத விஷ்ணுவை மையப்படுத்திய பார்த்தசாரதி ஆலய வழிபாடுகள்
  3. அவரோடு இணைத்து ஆகமம் சாரா திரௌபதி அம்மன் ஆலயம், அதற்கான தனித்துவமான வழிபாடுகள்
  4. அதற்கும் அப்பால் மக்கள் நிலை சார்ந்து மாரியம்மன், காளியம்மன், கண்ணகி அம்மன் கோவில் வழிபாடுகள்

என்பன இருந்துள்ளன. சில இடங்களில், முக்கியமாக முந்தல் போன்ற இடங்களில் இந்த மக்கள் மரபு, குறிப்பாக நாட்டார் மரபு, மிக வலிமையாக அன்று வேரூன்றியிருந்தது; இன்றும் அவ்வாறே உள்ளது. இந்தப் பண்பாட்டு மரபு இன்னும் வெளிச்சம் பாய்ச்சப்படாத பண்பாட்டு மரபாகவே இருக்கிறது.

அந்த வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவதற்கு எங்களுக்கு உதவுவன இன்றும் அங்கு நின்று நிலவுகின்ற இந்து மதம் சார்ந்த கோயில்களும், சடங்குகளும், வழிபாடுகளும், அதை ஒட்டி நடைபெறுகின்ற விழாக்களும், நாடகங்களும், கூத்துகளும் ஆகும். எனவே வடமேற்குத் தமிழர் கூத்து மரபு என்பது தனியாகப் பேசப்பட வேண்டிய ஒன்றாகும். இன்று அந்த வடமோடிக் கூத்து மரபு அந்தப் பகுதிகளிலே இல்லை.

சிலாபம் முனீஸ்வரன் கோயிலும் திருக்கேதீஸ்வரம் கோவிலும் பெருங்கோவில்களாகக் கருதப்படுகின்றன. பிராமணியச் சடங்கு முறைகள் அங்கு அதிகமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. பரதநாட்டியம் அங்கே மேடை இடப்படுகின்றது. ஆனால் அதற்கு முன்பதாக இந்த இரண்டு ஸ்தலங்களிலும், விழாவை ஒட்டிப் போடப்பட்ட கூத்து மரபு பற்றி ஆங்காங்கே தெரியும் நட்சத்திரங்கள் போல சில தகவல்கள் மாத்திரமே கிடைக்கின்றன.

இஸ்லாமியர் மத்தியில் நாடகங்கள்

வடமேற்கு இலங்கையில் வாழ்ந்து வந்த இன்னொரு பகுதியினர் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இலங்கை இஸ்லாமியர்களாவர். வடக்கிலும் கிழக்கிலும் வடமேற்கிலும் இவர்கள் தமிழர்களோடு இணைந்து வாழ்ந்தனர். இரு சாராருக்குமிடையே பண்பாட்டு உறவுகள் ஏற்பட்டன. முக்கியமாக இந்த உறவுகள் இலங்கையின் கிழக்கிலும் வடமேற்கிலும் மிக நெருக்கமாக இருந்தன என அறிகிறோம்; இதற்கான வாய்மொழிச் சான்றுகளும் உண்டு. இந்த நெருக்கம் தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன என்பது மனதில் கொள்ள வேண்டிய ஒன்று. தமிழ் நாட்டில் பாரதம் போன்ற இதிகாசங்கள் இஸ்லாமியர் மத்தியில் பரவலாகப் படிக்கப்பட்டும் வந்துள்ளன என்ற செய்திகளும் உண்டு. கர்நாடக இசையில் பல இஸ்லாமியப் புலவர்கள் கீர்த்தனைகள் இசைத்தும் உள்ளனர்.

இலங்கையின் வடமேற்கில், முக்கியமாக இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழ்ந்த கரையோரப் பகுதியான கரைத்தீவிலே, இஸ்லாமியக் கதைகள் சார்ந்த தமிழ் மரபுவழி நாடகம் இருந்திருக்கிறது. இதனை எனக்குக் கூறியவர் பேராசிரியர் அனஸ் அவர்கள். அவர் எனக்கு அனுப்பிய செய்தி இது:

“காந்தரூபி (மன்னார்) நாடகம், நீண்ட கவிதை நடை வசனங்களும் சங்கீதமும் கலந்த சபா நாடகப் பாணியில் ஆடப்பட்டுள்ளது. கரைத்தீவு செய்கு அலாவுதீன் புலவர் இந்த நாடகக் குழுவின் தலைவர், நெறியாளர். புத்தளம் – மன்னார் பாதையில் இருக்கும் கரைத்தீவுக் கிராமத்தில் பல இசை நாடகங்களை நடத்தி உள்ளனர். அவற்றுள் காந்தரூபி நாடகம், அலிபாதுஷா நாடகம், அசன்பே நாடகம் மற்றும் இன்னும் சில நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. இது நடந்த காலம் 1930–40கள். கரைத்தீவு ஒரு முஸ்லிம் கிராமம். நாடகக் குழுவில் 15 பேர் இருந்துள்ளனர்.

1978–79 இல் அந்த நாடகக் குழுவின் 3 முக்கிய அங்கத்தவர்களைச் சந்தித்து தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். ஒருவர் ரெஜிஸ்ட்ரார் காசீம். பல தகவல்களைக் கூறினார்; காந்தரூபி, அலிபாதுஷா நாடகப் பாடல்களைப் பாடிக்காட்டினார். மற்றவர் டோல் மாஸ்டர் மதார்சா. நாடகத்திற்கு டோல் (டொலக்), தபேலா, மத்தளம் ஆகியவற்றை வாசித்து வந்தவர். எனது வாப்பாவின் நண்பர். எங்கள் வீட்டில் டோல் இருந்தது. கரைத்தீவிலிருந்து கற்பிட்டி வந்தால் (சுமார் 55 மைல்) எங்கள் வீட்டில் 2, 3 நாட்கள் தங்குவார். சிறப்பாகப் பாடுவார்; டோல் வாசித்தபடி பாடுவார். பல பாடல்கள் நாடகப் பாடல்கள். வாப்பாவுடன் சேர்ந்து பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் புலவரின் சீடர்; தமிழ்ப் புலமையும் உண்டு. மூன்றாமவர் மீரான் முகைதீன் அல்லது மீராசாகிப். அவரைக் கரைத்தீவில் சந்தித்தேன். அவர் நாடகக் குழுவில் இருந்த பிரதான நடிகர். அவரைச் சந்திக்கும் போது அவருக்கு 70 வயது இருக்கும். சில தகவல்களோடு நிறுத்திக் கொண்டார்.”

அலிபாதுஷா நாடகத்தின் அச்சுப்பிரதி என்னிடமுண்டு. அதன் பாடல்களை அவதானிக்கையிலும், அனஸ் அவர்கள் கூறிய ‘அவர்கள் பின்னணி இசைக்கருவியாக மத்தளமும் வாசித்தார்கள்’ என்ற செய்தியை இணைத்துப் பார்க்கையிலும், அவர்கள் மத்தியிலும் ஆட்டக் கூத்துகள் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. இது மேலும் ஆய்வுக்குரியது.

இதிலிருந்து நாம் பெறுவது யாதெனில், போர்த்துக்கேயர் இலங்கையின் வடமேற்கை ஆக்கிரமித்து தம் மதம் சார்ந்த கூத்துகள், நாடகங்களை மேடையிட முன், இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களிடம் பெரும்பான்மையாகவும், இஸ்லாமிய மக்களிடம் சிறுபான்மையாகவும் தத்தம் பண்பாடு சார்ந்த நாடக, கூத்து மரபுகள் இருந்துள்ளன என்பதே.

இதிலிருந்து நாம் பெறவேண்டிய விடயங்கள்

  1. கத்தோலிக்க நாடகங்கள் மன்னாரிலும் அதன் தொடர்ச்சியாக சிலாபம், புத்தளம் ஆகிய பகுதிகளிலும் தோன்றும் முன்னர், அங்கே இந்து மதம் சார்ந்த கூத்துகள் கோயில் விழாக்களை ஒட்டி விடிய விடிய ஆடப்பட்டு இருக்கின்றன.
  2. இந்தக் கூத்துகள் சடங்கு சார்ந்த நாடகங்களாகவும், சடங்கு சாரா நாடகங்களாகவும் இருந்துள்ளன. உதாரணமாக, உடப்பு திரௌபதி அம்மன் சடங்கு நாடக அம்சம் நிரம்பிய சடங்கு. முனீஸ்வரம் கோவில் முன்றிலில் ஆடப்பட்ட கூத்துகள் வளர்ச்சி அடைந்த வடமோடிக் கூத்துகள் ஆகும். இதற்கான ஆதாரங்கள், மார்க்கண்டேயன் நாடகமும் வாளபிமன் நாடகமும்.
  3. இந்தக் கூத்து மரபு புராண, இதிகாசக் கதைகளை அடியொட்டியதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றது.
  4. இந்தக் கூத்து மரபு நிலமானிய விழுமியங்களைப் பேணுகின்ற அல்லது கட்டிக்காக்கின்ற தன்மை கொண்டதாக இருந்திருக்கின்றது.
  5. கிடைக்கின்ற ஆதாரங்களைக் கொண்டு இந்தக் கூத்து மரபு வடமோடி சார்ந்ததாக இருப்பதைக் காணுகின்றோம்.
  6. இவை வட்டக்களரியில் ஆடப்பட்டு இருக்கின்றன. காலப்போக்கில் இந்த மரபு மாறிவிட்டது போல் தெரிகிறது அல்லது தேய்ந்து அழிந்துவிட்டது போல் தெரிகிறது.
  7. இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களிடமும் நாடக, கூத்து மரபுகள் இருந்துள்ளன. தமிழர் மத்தியில் இருந்துள்ள வடிவங்களே இஸ்லாமியப் பண்பாட்டிலும் இருந்துள்ளன.
  8. இந்த மரபு அருகிப்போனமைக்கு புதிதாக வந்து சேர்ந்த கத்தோலிக்கக் கூத்து மரபும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
  9. இந்தக் கூத்துகளும் நாடக அம்சம் நிரம்பிய சமயச் சடங்குகளும், இந்து–சைவ மதத்தை, அதன் அத்திவாரமாக அமைந்த புராண, இதிகாசக் கதைகளை, மக்கள் முன் எடுத்துச் செல்லும் முக்கிய வாகனங்களாக இருந்தன. மார்க்கண்டேயன் நாடகம் மார்க்கண்டேய புராணம் சொன்ன சைவமதக் கருத்துகளை மையமாகக் கொண்டிருந்தது. வாளபிமன் நாடகமும் பாரதப் படிப்பும் மகாபாரதத்தை மையமாகக் கொண்டிருந்தன.

மாரியம்மன், காளியம்மன், கண்ணகி அம்மன் கோவில் மற்றும் ஏனைய சிறுதெய்வக் கோவில்களில் நடைபெற்ற சடங்குகள் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த உள்ளூர்த் தெய்வக் கதைகளை மையம் கொண்டிருந்தன.

இங்கு வந்த போர்த்துக்கேய – கத்தோலிக்க மதத் தலைவர்கள், கூத்துகள் மூலமும் கோவில் சடங்குகள் மூலமும் சைவ இந்து மதக் கருத்துகள் இலகுவாக மக்கள் மனதில் விதைக்கப்படுவதைக் கண்முன்னே கண்டனர். கூத்தும் சடங்கும் மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருப்பதைக் கண்டனர். வெளியிலிருந்து வந்த கத்தோலிக்கப் பாதிரிமாரும், உள்ளூரில் உருவான கத்தோலிக்க மதத் தலைவர்களும் கோவிலில் மக்களைக் கூட்ட இந்த உள்ளூர் உத்திகளைக் கையாண்டனர். கூத்தையும் சடங்கையும் தமது மதத்தைப் பரப்பும் ஒரு கருவியாக ஆக்கினர். இதன் விளைவே கத்தோலிக்கக் கூத்துப் பாரம்பரியம். அது ஈழத்துக் கூத்துப் பெற்ற இன்னொரு மாற்றமாகும்.

தொகுப்பு

ஒன்று திரட்டிப் பார்க்கும் போது காலச் சுழற்சியில், வடமேற்குப் பிரதேசத்தில் இருந்த தமிழர் கூத்து மரபு ஒன்று காணாமல் போய்விட்டது எனலாம். அது காலத்தின் கட்டாயம் என்ற முடிவுக்கு வருத்தத்தோடு வரவேண்டி இருக்கிறது.

ஆனால் அது காணாமல் போகவில்லை; அது வேறு வடிவம் பெற்றது என்பது இன்னொரு கதை. அதாவது அக்கூத்தின் மரபு மாறியது எனலாம். அதன்பின் அந்தக் கூத்து இன்னொரு கிளைவிட்டு வளரலாயிற்று.



About the Author

சின்னையா மௌனகுரு

சின்னையா மௌனகுரு அவர்கள் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த பேராசிரியர்; அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குநர், நடிகர், கூத்துக் கலைஞர் என்று பல தளங்களில் இன்றும் இயங்கிவருபவர்.ஈழத்து அரங்கத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிலரில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய புகழ்பெற்ற கூத்து நாடகங்கள் மௌனகுருவுக்கு தனியான அடையாளத்தை வழங்கின.

இவர், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் – 1984, சடங்கில் இருந்து நாடகம் வரை – 1985, மௌனகுருவின் மூன்று நாடகங்கள் – 1985, தப்பி வந்த தாடி ஆடு – 1987, பழையதும் புதியதும் நாடகம் அரங்கியல் – 1992, சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் – 1992, சங்காரம் – ஆற்றுகையும் தாக்கமும் (நாடகம்) – 1993, ஈழத்து தமிழ் நாடக அரங்கு – 1993, கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் – நீலாவணன் – 1994, கலை இலக்கிய கட்டுரைகள் – 1997, சக்தி பிறக்குது – நாடகம் – 1997, பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும் – 1997, ஈழத்து நாடக அரங்கு – 2 ஆம் திருத்திய பதிப்பு – 2004, தமிழ்க் கூத்துக்கலை – வடமோடி ஆட்டப் பயிற்சிக்கான கைந்நூல் – 2010, கூத்து யாத்திரை – 2021, கூத்தே உன் பன்மை அழகு – 2021 போன்ற பலநூல்களை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்