சமீர் அமின் (1931 – 2018)
2018ஆம் ஆண்டில் 86 வயதில் காலமான பொருளியலாளர் சமீர் அமின் எகிப்து நாட்டில் பிறந்தவர். 1947இல் கல்வி கற்பதற்காகப் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகருக்குச் சென்ற அவர், பரிஸ் நகரிலேயே இறுதிவரை வாழ்ந்து வந்தார். 1957ஆம் ஆண்டில் ‘The Structural Effects of the International Integration of Pre-Capitalist Economies’ என்னும் தலைப்பிலான ஆய்வேட்டைச் சமர்ப்பித்து Ph.D. பட்டத்தை இவர் பெற்றுக்கொண்டார். இந்த ஆய்வேடு பின்னர் ‘Accumulation on a World Scale’ என்னும் நூலாக 1974இல் பிரசுரிக்கப்பட்டது.

40க்கு மேற்பட்ட ஆய்வு நூல்களையும், ஏராளமான கட்டுரைகளையும் எழுதிய சமீர் அமினின் இன்னொரு நூலின் தலைப்பு ‘சமத்துவமற்ற விருத்தி’ (Unequal Development) என்பதாகும்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக முதலாளித்துவம் (World Capitalism), ஏகாதிபத்தியம் (Imperialism), காலனித்துவம் (Colonialism) குறித்த ஆய்வுகளில் சார்புக்கோட்பாடு (Dependency Theory) முக்கியம் வாய்ந்த கோட்பாடாக அமைந்தது. போல் பரன் (Paul Baran), அந்த்ரே குந்தர் பிராங்க் (Andre Gunder Frank), இம்மானுவேல் வலர்ஸ்டீன் (Immanuel Wallerstein), சமீர் அமின் ஆகியோர் முக்கியமான சார்புக் கோட்பாட்டாளர்களாவர்.
இக்கட்டுரை சமீர் அமின் அவர்களின் ‘சமத்துவமற்ற விருத்தி’ என்னும் எண்ணக்கருவை முதன்மைப்படுத்தி, அவரின் கோட்பாட்டை விளக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.

மையமும், சார்பு மண்டலமும்
மையம் (Centre), சார்பு மண்டலம் (Periphery) என்ற இரண்டு எண்ணக்கருக்களை சார்புக் கோட்பாடு அறிமுகம் செய்தது. இந்த இரண்டின் இணைப்பாக அமையும் உலக முறைமை (World System) ஒன்று உருவாகி இருப்பதாக இக்கோட்பாடு விளக்கம் தந்தது. ஆய்வுக்கான அலகாக தனித்தனி நாடுகளைக் கொள்வதை விடுத்து முழு உலகையும் ஓர் அலகாகக் கொண்டு நோக்கும் உலக முறைமை என்ற கருத்து சார்புக் கோட்பாட்டின் சிறப்பு அம்சமாகும். உலக முறைமைக்குள் இரண்டு மாதிரிகளை (Models) சமீர் அமின் காண்கிறார். அவை:
- சுயத்துவம் உடைய மையப் பொருளாதாரம் (Auto Centric Economy)
- சார்புப் பொருளாதாரம் (Peripheral Economy)
இந்த இருவேறு போக்குகளின் வெளிப்பாடே உலக மட்டத்தில் நிகழும் சுரண்டலும் மூலதனத் திரட்சியும் (Accumulation), அதன் விளைவான சமத்துவமற்ற விருத்தியும் என்பது சமீர் அமின் முடிவு.
சுயத்துவமுடைய மையப் பொருளாதாரமும் சார்புப் பொருளாதாரமும்
மையப் பொருளாதார நாடுகள் உற்பத்திச் சாதனங்களான மூலதனப் பொருட்கள், மக்களின் நுகர்வுக்கான நுகர்வுப் பொருட்கள் என்ற இரண்டையும் உற்பத்தி செய்வன. இந்நாடுகளில் இவ்விரு துறைகளும் ஒன்றோடொன்று பிணைப்புற்றும், ஒன்றுக்கு ஒன்று ஆதரவாகவும் செயற்படும். கைத்தொழில், விவசாயம் என்ற இரு துறைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயற்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி, மாற்றம், ஏற்ற இறக்கங்கள் என்பன சுயத்துவம் உடைய நாடுகளில் உள்ளிருந்தே எழுகின்றன. வெளிக்காரணிகள் இரண்டாம் நிலையானவை.
சார்பு நாடுகளின் பொருளாதாரம் நேர் எதிரான தன்மை கொண்டது. அங்கு சுயத்துவத்திற்கு மாறாக சார்புநிலை காணப்படும். சார்பு நாடுகளின் பிரதான இயல்புகளில் ஒன்று மிகை விருத்தியுடைய ஏற்றுமதித் துறையாகும். கோப்பி, தேயிலை, கொக்கோ, வாழைப்பழம், கரும்பு ஆகிய ஏற்றுமதிப் பயிர் உற்பத்தியும் கனிமப் பொருட்களின் ஏற்றுமதியும் சார்பு நாடுகளில் விருத்தி பெற்றிருந்தது. இயந்திரங்கள், இடைத்தரப் பொருட்கள் போன்ற மூலதனப் பொருட்களின் உற்பத்தி சார்பு நாடுகளில் வளர்ச்சி பெறவில்லை. நுகர்வுப் பொருட் கைத்தொழில் என்னும் மென் கைத்தொழில் ஓரளவு விருத்தி பெற்ற போதும் கனரகக் கைத்தொழில்கள் வளரவில்லை. தொழில்துறைகளும், விவசாயமும் பிணைப்பு உடையனவாய் வளரவில்லை. மைய நாடுகளின் பொருளாதாரத்திற்கு மாறான போக்கில் சார்பு நாடுகளின் பொருளாதாரம் அமைந்தது. சமீர் அமின் முன்வைக்கும் இந்த மாதிரிகள் உலக முறைமையை விளக்குவதற்கான சிறப்பு மாதிரிகள் ஆகும்.
உற்பத்தி முறைமைகள் (Modes of Production)
இலத்தீன் அமெரிக்காவில் நிலமானியம் இருப்பதாகக் கூறுவது பொய்ப்புனைவு. இங்கு மூலை முடுக்கெல்லாம் காணப்படுவது முதலாளித்துவம்தான் என்று கூறினார் அந்த்ரே குந்தர் பிராங்க். சமீர் அமின் இந்தக் கருத்துடன் உடன்பாடு இல்லாதவர். சார்பு நாடுகளின் பொருளாதாரம் ஒரே சமயத்தில் பல உற்பத்தி முறைமைகளைக் கொண்டிருக்கும் ஒரு கலவை அமைப்பு என்ற கருத்தை சமீர் அமின் கூறுகிறார். பிராங்க் பரிவர்த்தனை உறவுகளின் (Exchange Relations) அடிப்படையில் முதலாளித்துவத்தை விளக்கினார். அமின் கோட்பாடும் பரிவர்த்தனை உறவுகளின்படி அமைந்த விளக்கமே ஆயினும், உற்பத்தி முறைமைகளுக்கும் இவர் முதன்மை அளிக்கிறார். மைய நாடுகளின் ஊடுருவலும் ஆதிக்கமும் சார்புப் பொருளாதாரங்களைத் திரிபுபடுத்தியுள்ளன. மிகை விருத்தியுடைய ஏற்றுமதித்துறை (Over Developed Export Sector) என்ற வடிவில் இந்தத் திரிபு வெளிப்படுகிறது. வர்த்தக உறவுகள் மூலம் உலக முறைமையில் சார்பு நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. சமத்துவமற்ற உறவுகள் உலக முறைமையின் அடிப்படை இயல்பாக உள்ளன.
சார்பு நாடுகளில் நிலவும் உற்பத்தி முறைகளின் பன்மைத்துவம் என்னும் கருத்து அந்நாடுகளின் சமூக உருவாக்கம் பற்றிய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் கருத்தாகும். அது குறைந்த கூலியை வழங்குவதற்காக முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறைகளை வைத்துக் கொள்கிறது. குறைந்த கூலிக்காக விளைதிறன் மட்டத்தையும் குறைநிலையில் வைத்திருக்கவும் முனைகிறது. மார்க்சிய ஆய்வாளரான S.B.D. de சில்வா இலங்கையின் தோட்ட முதலாளித்துவத்தின் இயல்பைப் பற்றி பின்வருமாறு எழுதினார்.
“தோட்டத்துறையின் தொழில்நுட்பப் பின்னடைவு உற்பத்தி விளைதிறனையும் குறைமட்டத்தில் வைத்திருக்கிறது. குறைந்த கூலியைக் கொடுப்பதுதான் இதன் பின்னணியில் உள்ள விடயம். வெளித்தோற்றத்தில் தெரியும் முதலாளித்துவ வடிவங்களுக்குப் பின்னே தொழில் உறவுகளில் முதலாளித்துவத்திற்கு முந்திய முறைகள் தோட்டங்களில் நடைமுறையில் இருப்பது முக்கியமான பண்புகளில் ஒன்றாகும்” (‘The Political Economy Of Underdevelopment (1982)’).
மலையகம் பற்றி மட்டுமன்றி இலங்கையின் வடக்குக் கிழக்கின் உற்பத்தி முறைமைகள், அப்பகுதிகளின் சமூக உருவாக்கம் (Social Formation) பற்றிய ஆய்வுகளில் பிரயோகிக்கப்படக்கூடிய கருத்து இது என்பதை இவ்விடத்தில் குறிப்பிடுதல் பொருத்தமானது.
சுயத்துவமான விருத்தி சாத்தியமில்லை
சார்பு நாடுகளில் சுயத்துவமான விருத்தி சாத்தியமில்லை என்ற முடிவை சமீர் அமின் அழுத்திக் கூறுகிறார். அமின், பிராங்க் இருவரும் இக்கருத்தில் ஒற்றுமை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். ஏன் சுயத்துவமான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதற்கு சமீர் அமின் பின்வரும் காரணங்களை எடுத்துக் கூறுகிறார்.
- சார்பு நாடுகளின் உள்ளகக் கட்டமைப்பும் உற்பத்தி உறவுகளும் வளர்ச்சிக்குத் தடையானவை.
- சமனற்ற சிறப்புத் தேர்ச்சி (Unequal Specialisation) சார்புப் பொருளாதாரத்தைத் திரிபுபடுத்தியுள்ளது.
- மிதமிஞ்சிய சுரண்டல் (Super Exploitation) வளங்களை அபகரிக்கிறது.
- மிகை உற்பத்தி வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
எதிர்வாதங்கள்
ஹொங்கொங், தைவான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் துரித வளர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது என்ற பிரச்சினை 1980களிலும் 1990களிலும் மார்க்சியர்களிடையே சுவையான விவாதங்களுக்கு இடமளித்தது. பில் வாரன் (Bill Warren) என்பவர் எழுதிய “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் முன்னோடி (Imperialism: Pioneer of Capitalism)” என்ற நூல் 1980ல் பிரசுரிக்கப்பட்டது. இளமையிலேயே காலமான பில் வாரன் சர்ச்சைக்குரிய சுவையான நூலை விட்டுச் சென்றார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவம் பற்றி எழுதியபோது, மேற்கில் தோன்றிய முதலாளித்துவம் உலகம் முழுவதையும் தன்னுள் இணைத்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் கொண்டு வருகிறது என்று கூறினார். பில் வாரன் அந்தக் கருத்திற்குப் புத்துருவம் கொடுத்து, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் முன்னோடி என்றார். ஏகாதிபத்தியம்தான் குறைவிருத்திக்குக் காரணம் என்ற விளக்கத்தைத் தலைகீழாக்கும் சுவாரசியமான வாதம் இது. சமீர் அமின் போன்றோர் ஹொங்கொங் போன்ற நாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை தங்கியிருக்கும் விருத்தி அல்லது சார்பு விருத்தி (Dependent Development) என்றனர். சிலர் உலக மட்டத்தில் புதிய தொழில் பிரிப்பு நிகழ்கிறது (New International Division of Labour) என்றனர்.
பீட்டர் வூஸ்லி (Peter Worsley) என்னும் மார்க்சியர் ஹொங்கொங் நாட்டின் உதாரணத்தைக் காட்டி சில சந்தேகங்களை 1990ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை ஒன்றில் தெரிவித்தார். அவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடுவோம்.
- ஹொங்கொங்கில் முதலாளித்துவ வளர்ச்சி மேற்குநாட்டு முதலாளித்துவத்தால் எழுச்சி பெற்றதல்ல. சீனப் புரட்சியின் பின்னர் 1949இல் ஷாங்காய் துணிநெசவுத் தொழிலுக்கு முன்னணி பெற்ற இடமாக இருந்தது. ஹொங்கொங் முதலாளிகள் தங்கள் பிள்ளைகளை ஹார்வார்டிற்கும் ஒக்ஸ்போர்டிற்கும் மேற்படிப்புக்காக அனுப்பவில்லை. ஐக்கிய இராச்சியத்தின் லோவல் இன்ஸ்டிடியூட், அமெரிக்காவின் MIT ஆகியவற்றில் தொழில்நுட்பம் படிக்க அனுப்பினார்கள்.
- ஹொங்கொங் எல்லோருக்கும் இரண்டாம் நிலைக் கல்வி என்ற நிலையை விரைவில் எட்டியது. அந்த நாட்டின் தொழிலாளர்களை பயிற்சியற்ற உடலுழைப்பாளர் என்று கூற முடியாது.
- புரட்சியின் பின் சீனத் தொழிலாளர் வர்க்கம் எப்படி அடங்கிப்போகும் பண்பைப் பெற்றதோ, அதேபோன்றே ஹொங்கொங் தொழிலாளர் வர்க்கமும் தீவிர தொழிற்சங்க அரசியலைக் கைவிட்டது.
- இதற்குத் தகுந்த சமூகக் காரணங்களும் இருக்கவே செய்தன. ஹொங்கொங்கின் பிரித்தானிய காலனித்துவம் அங்கே சமூக நலத்திட்டங்களை முழுமையாக அமுல் செய்தது. இது ஒருவகையான சர்வாதிகார சமூகநலமுறை (Authoritarian Welfarism) ஆகும். இக்காலத்தில் தைவானும், தென்கொரியாவும் ராணுவமயப்படுத்தப்பட்ட சமூகங்களாக இருந்தன.
- ஹொங்கொங்கின் தொழிலாளர் குடும்பங்களின் 80%த்தினர் தரமான வீட்டு வசதிகளைப் பெற்றனர். உலகிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வீட்டமைப்புத் திட்டத்தை ஹொங்கொங் நிறைவேற்றியது. வீட்டுத்துறை வருமானத்தின் 50% மானியமாக வழங்கப்பட்டது.
- ரொட்ஸ்கியின் “அரச முதலாளித்துவம்” என்ற கருத்தை NICs தொடர்பில் கூறலாம் என்று நைகல் ஹாரிஸ் (Nigel Harris) வாதிடுகிறார். அரசின் நெறிப்படுத்தலில் முதலாளித்துவம் இந்நாடுகளில் வளர்கிறது.
பீட்டர் வூஸ்லியின் மேற்கூறிய கருத்துகள், சந்தேகங்கள் என்ற வகையில் மார்க்சிஸ்டுகள் பலரால் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கு உதாரணங்களாகும்.
சமத்துவமின்மையின் புதிய வடிவங்கள்
1970களில் தென்கிழக்கு ஆசியாவில் ஹொங்கொங், தைவான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகள் துரிதமான வளர்ச்சியை அடைந்தன. இவை “ஆசியாவின் புலிகள்” என்ற பெயரைப் பெற்றன. இலத்தீன் அமெரிக்காவில் பிரேசில், மெக்சிக்கோ என்ற இரு நாடுகளும் கைத்தொழில் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்திருந்தன. ‘புதிதாகக் கைத்தொழில் வளர்ச்சியடையும் நாடுகள் (Newly Industrializing Countries – NICs)’ என்னும் குழு உருவாக்கம் பெற்றுக் கொண்டிருந்தது. சார்பு மண்டலத்தில் விருத்தி என்பது சாத்தியமில்லை என்று கூறிய சார்புக் கோட்பாட்டாளர்கள் இந்த வளர்ச்சியை விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஹொங்கொங் போன்ற நாடுகளின் வளர்ச்சியை சமீர் அமின் சமத்துவமின்மையின் புதிய வடிவங்கள் என வர்ணித்தார். இதற்கு அவர் கூறிய காரணங்கள்:
- இந்த வளர்ச்சி சில விசேட சூழமைவுகளின் தற்செயல் சேர்க்கையின் விளைவு ஆகும்.
- இந்த வளர்ச்சி ஏனைய சார்பு நாடுகளால் பின்பற்றப்படக்கூடியதல்ல.
- NICs நாடுகளின் வளர்ச்சியில் வெளிப்படும் குறைகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
மார்க்சியத் திரிபு
இந்த நாடுகளின் வளர்ச்சி பற்றி பாராட்டுரை வழங்கிய பொருளியலாளர்களை அமின் அனுபவவாதிகள் (Empiricists) என்றும், அவர்களது விளக்கங்களை மார்க்சியத் திரிபு (Un-Marxist) என்றும் கூறினார். இந்த ஆய்வுகளை “புள்ளிவிவர விளையாட்டு”, “மேலோட்டமானவை”, “வெறும் தோற்ற அளவிலான நிலையில் விடயங்களை அணுகும் முறை” என்ற அடைமொழிகளைக் கூறி நிராகரித்தார்.
சமீர் அமின் இவ்விதம் நிராகரிப்பது நியாயமற்றது என்றும் தோன்றுகிறது. இருந்தபோதும் அவரது முறையியலின் முக்கிய அம்சங்களோடு இணைத்து நோக்கும்போது அவருடைய வாதங்களில் அமைந்துள்ள தர்க்கம் வெளிப்படும்.
- ஆய்வுக்கான அலகு (Unit of Analysis)
ஹொங்கொங் அல்லது தைவான் என்று ஆய்வு அலகை தனித்த நாடு என்ற நிலைக்குச் சுருக்குவதை சமீர் அமின் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தவறான முறை என்கிறார். வெறும் தோற்றங்களைக் காட்டிச் சாரத்தை (Essence) மறைப்பதுதான் இந்த முறை. உலக முறைமையின் பாகமாக அமையும் ஹொங்கொங் அல்லது தைவான் பெறும் வகிபாகம் என்ன என்பதே கேள்வி.
- உள்ளக இயக்க ஆற்றல் (Internal Dynamism)
சார்பு நாடுகளில் உள்ளக இயக்க ஆற்றல் இல்லை என்பது அனுமானம். ஆதலால் அங்கு ஏற்படும் மாற்றங்கள் மையத்தின் செயற்பாடுகள் மூலம் விளக்கப்பட வேண்டியவை.
- அமைப்பியல் இயல்புகள் (Structural Features)
நபர் ஒருவருக்கான உற்பத்தி (Production Per Capita) போன்ற அளவுகோல்கள் விருத்தி ஏற்பட்டதை ஆதாரப்படுத்தலாம். ஆனால் இவை அமைப்பியல் இயல்புகளை மறைக்கும் அளவுகோல்கள் ஆகும். சார்பு நாடு ஒன்றின் வளர்ச்சியில் திடீர் உலுப்பல் (Sudden Jerk) நிகழலாம். அதனை அடுத்து திடீர் முட்டுக்கட்டைகளும், தேக்கங்களும் உருவாகலாம் இந்த அமைப்பியல் ரீதியான மாற்றங்களைப் பின்வரும் முறைகளில் பரிசீலிக்க வேண்டும்.
- ஏற்றுமதியை ஆதாரமாகக் கொண்ட உற்பத்தியை நோக்கிய திரிபு (Extraversion)
- பிறழ்வு முறையான பெருவளர்ச்சி (Hypertrophy)
- மென் கைத்தொழில் சார்ந்த திரிபு
ஆகிய அடிப்படையான கட்டமைப்பு இயல்புகள் நீடிக்கின்றனவா? அல்லது நிலைமாற்றத்திற்கு உதவுகின்றனவா? என்பதே பிரச்சினை.
உலக முறைமை
சார்புக் கோட்பாட்டின் விளக்கங்கள் உலக முறைமை, அதனுள் அமையும் மையம், சார்பு என்ற எதிர்நிலைகள் என்ற அணுகுமுறை சார்ந்தவை. கீழே தரப்பட்டுள்ள அட்டவணை இந்த எதிர்நிலை இயல்புகளை எடுத்துக்காட்டுகிறது.
| இயல்புகள் | மையம் | சார்பு மண்டலம் |
| 1 | உள்நாட்டுச் சந்தையின் விரிவாக்கத்தின் மூலம் விருத்தி பெற்றது. | வெளியில் இருந்து வந்த தாக்கத்தினாலும் உலகச் சந்தையின் பாதிப்பினாலும் மாற்றம் பெற்றது. |
| 2 | முன்னைய உற்பத்திமுறைகளை பூரணமாக அழித்து முதலாளித்துவ முறை நாட்டின் சகல முறைகள், பிராந்தியங்கள் எங்கும் வியாபித்தல். | பல்வகை உற்பத்தி முறைகள். ஒருங்கே இருத்தல். ஆனால் முதலாளித்துவ முறை மேலாதிக்கம் பெற்று இருத்தல். |
| 3 | சமூக உறவுகளில் ஓரினத் தன்மை. | சமூக உறவுகளில் பன்மைத்துவம். |
| 4 | தொழிலாளி – முதலாளி வர்க்கப் போராட்டம் மேலோங்குதல், வர்க்க முரண் இருகூறாக சமூகத்தைப் பிரித்தல். | இரு கூறான சமூகப் பிளவு இல்லை. |
| 5 | தேசிய முதலாளித்துவ வளர்ச்சி. | அந்நிய முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திற்குப் பணிந்து போகும் உள்நாட்டு முதலாளித்துவம். |
| 6 | சுயத்துவமான பொருளாதாரம். | தங்கியிருக்கும் சார்புப் பொருளாதாரம். |
குறைகள்
சார்புப் பொருளியல் கோட்பாட்டின் பொதுவான குறைகள் பல சமீர் அமின் கோட்பாட்டிலும் வெளிப்படுகின்றன.
- ஆய்வுக்கான அலகாக தனி நாடுகளை எடுத்துக் கொள்வதை சமீர் அமின் தவிர்ப்பதனால், வர்க்கப் போராட்டம் பற்றி பேசும்போதும் உலகு தழுவிய மட்டத்திலான வர்க்கப் போராட்டம் பற்றியே பேச வேண்டி ஏற்படுகிறது. அப்படியானால் உள்நாட்டு மட்டத்தின் அரசியல் கொள்கையை வகுப்பது எவ்வாறு என்பது பிரதான கேள்வியாக உள்ளது. இதற்குப் பொருத்தமான விடை இல்லை.
- சார்பு நாடுகள் தப்பிக் கொள்ள முடியாத வலை ஒன்றினுள் அகப்பட்டுள்ளன. குறைவிருத்தி அவற்றின் தலைவிதி. இதற்கான மாற்றுவழி ஏகாதிபத்தியத்துடனான பிணைப்புகள் அனைத்தையும் முறித்துக் கொள்வதாகும் என்ற வகையில் சமீர் அமின் கருத்தை விளக்க முடியும். இவ்விளக்கத்தை, கம்போடியா வழியில் சென்று பேரழிவுக்கு உள்ளாவதுதான் பிணைப்புகளை அறுக்கும் இந்த வழியா எனச் சிலர் விமர்சித்தனர்.
மார்க்சியம் உற்பத்தி முறை பற்றிய பரிசீலனையில் ஆரம்பிக்கும் முறையியலைக் கொண்டது. சமீர் அமின் போன்றவர்கள் சந்தை உறவுகளான வர்த்தகம், பரிவர்த்தனை (Exchange Relation) என்ற உறவுகளின் மட்டத்திற்கு ஆய்வுகளை விஸ்தரித்து மார்க்சியத்தைத் திரிபுபடுத்தியுள்ளனர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
சார்புக் கோட்பாட்டாளர்களில் முக்கியமான ஒருவர் சமீர் அமின். இலத்தீன் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு தோன்றிய இக்கோட்பாட்டை எகிப்தியரான சமீர் அமின் ஆபிரிக்க நாடுகளின் அனுபவத்திற்கு உரியதாக விஸ்தரித்தார். மேற்கு ஆபிரிக்க நாடுகளின் காலனித்துவ காலப் பொருளாதார வரலாறு பற்றிய விரிவான ஆய்வுகளாக இவரது நூல்கள் அமைந்தன.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்சியப் பொருளியல், நவமார்க்சியம் ஆகிய விடயங்கள் பற்றிய விவாதம் ஒன்றை சமீர் அமின் பெயரைக் குறிப்பிடாமல் நடத்துவது சாத்தியமில்லை. அவரின் எழுத்துகள் கவனிப்புக்குரியனவாய் இருந்து வருகின்றன.



