
சென்னை பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 17 கி.மீ. தூரத்திலிருக்கும் குடியம் குகைகள் வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே முதலில் ஹோமோ இரக்டஸ் மனிதர்களுக்கும், பின்னர் ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களுக்கும் உறைவிடமாக விளங்கியவை. இத்தொடரில் 16 பாறைக் குகைகள் உள்ளன.
மனித வளர்ச்சியின் நீண்ட காலப்பகுதியில் மக்கள் வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்த பழைய கற்காலத்திற்கும், பின்னர் மந்தை வளர்த்து வேளாண்மை செய்ய ஆரம்பித்த புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதி இடைக்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
பழைய கற்காலம் முதலாகத் தொடர்ந்த பனியுகக்காலம் இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. பனியுகம் முடிவுக்கு வந்த காலத்தை ஹொலேஸீன் காலத்தின் ஆரம்பம் (Holocene Age) என அழைப்பார்கள். இக்காலத்தில் பனிப்பாளங்களின் பின்னடைவைத் தொடர்ந்து, தட்பவெப்ப நிலை குளிர்ந்த வறண்ட நிலையிலிருந்து ஈரமான வெப்ப நிலைக்கு மாற்றம் பெற்றது. இந்த மாற்றம் பனிக்கட்டிப் பாளங்கள் உருகி புதிய ஆறுகளின் உருவாக்கத்திற்கும், காடுகளினதும், தாவரங்களினதும் வளர்ச்சிக்கும், மனிதர்கள் மற்றும் மிருகங்களின் பெருக்கத்திற்கும் ஏதுவாயிற்று. தற்காலம் போன்ற தட்பவெப்ப நிலையோடு இன்று நிலவும் தாவர, மிருகங்களின் சூழலும் இக்காலத்திலேயே தோன்றிவிட்டதாகக் கருதப்படுகிறது.
இடைக்கற்காலத்தின் ஆரம்பமும் ஹொலேஸீன் கால ஆரம்பமும் மேற்கு நாடுகளில் ஒன்றாகத்தான் உள்ளது. தொல்லியலாளர்கள் கற்காலங்களின் வகையை கற்கருவிகளின் வயதைக்கொண்டு கணிப்பிடுவார்கள். சில சமயங்களில் கற்கால வயதை புவியியல் வயதுடன் (Geological Age) இணைத்துக் கணிப்பிடுவதும் உண்டு. இக்கால மக்களின் குடியிருப்புகள் தற்காலிகமானதும், பருவ காலங்களால் நிர்ணயிக்கப்பட்டதுமாகும்.
இடைக்கற்கால மக்கள் உபயோகித்த கற்கருவிகளில் முக்கியமானவை நுண்கற்கருவிகள். இதன் காரணமாக இக்காலத்தை ‘நுண்கற்காலம்’ என்றும் குறிப்பிடுவது உண்டு. இந்த நுண்கற்கள் ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் தனித்துவமான கற்கருவிகள் ஆகும். இவை சிறிய செதில் கற்களினாலான கல்லாயுதங்கள். இவர்களின் உணவு வேட்டையினாலும், காடுகளிலும், ஆற்றங்கரைத் தாவரங்களிலுமிருந்தும் தாவர உணவு சேகரிப்பதனாலும், மீன் பிடிப்பதனாலும் பெறப்பட்டது.
இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை இந்திய உபகண்டத்தின் இடைக்கற்காலம் பொ.யு.மு. 10,000ஆம் ஆண்டுக் காலத்திலிருந்து பொ.யு.மு. 4,000ஆம் ஆண்டுக் காலம் வரை நீடித்திருந்திருப்பதாக முதலில் கணிக்கப்பட்டது (Misra, V.N. 2001: 500). ஆனால் சமீபகால கதிரியக்கக் காலக்கணிப்புகள் இந்த நுண்கற்களின் காலத்தை வெகுவாக முன்னால் கொண்டு செல்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள டாபா (Daba), மெஹ்தகேரி (Mehtakheri) ஆகிய இடங்களிலும், தென் இலங்கையில் உள்ள பாகியன் குகையிலும் கண்டெடுக்கப்பட்ட நுண்கற்களின் திகதிக் கணிப்பிலிருந்து, இந்திய உபகண்டத்தில் நுண்கற்களின் தோற்றம் இற்றைக்கு 45,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிய முடிகிறது. இந்தத் திகதிக் கணிப்புகளின் அடிப்படையில் இந்திய உபகண்டத்தின் இடைக்கற்காலத்தின் ஆரம்பத்தை இற்றைக்கு 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது.
இந்த இடங்களில் கிடைத்த கருவிகள் இவை மட்டுமல்ல. இதைத் தொடர்ந்து வெவ்வேறு வயதான நுண்கற்கருவிகள் கிடைத்திருக்கின்றன. மத்தியப் பிரதேசத்தின் மெஹ்தகேரி (Mehtakheri), தென் இந்தியாவின் ஜுவாலபுரம் (Jwalapuram), வடகிழக்கு இந்தியாவின் கானா (Kana), மேற்கு வங்காளத்தின் மகாதிப்பேரா (Mahadebbera) ஆகிய தொல்லியல் மையங்களில் மேற்கொள்ளப்பட்ட திகதிக் கணிப்புகள் முறையே 45,000, 35,000, 42,000, 25,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்களைக் காட்டியிருக்கின்றன (Clarkson et al. 2018; Basak et al. 2014; Basak and Srivastava 2017). இவற்றைத் தவிர ராஜஸ்தான், தெற்கு உத்தரப் பிரதேசம், ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கு தெற்கிலுள்ள பிரதேசம் ஆகிய இடங்களிலும் பழமையான நுண்கற்கள் கிடைத்திருக்கின்றன.
இலங்கையில் பாகியன் குகையில் (Fa-hien Lena) கண்டெடுத்த நுண்கல் இ.மு. 45,000ஆம் ஆண்டையும், கித்துல்கல என்ற இடத்திலுள்ள பெலி-லென (Beli-Lene) குகையிலிருந்து பெற்ற நுண்கல் இ.மு. 45,000ஆம் ஆண்டையும், பாததொம்ப-லென (Batadomba-Lene) குகையிலிருந்து பெற்ற நுண்கல் இ.மு. 36,000ஆம் ஆண்டுக் காலத்தையும் காட்டுகின்றன (Wedage et al. 2019; Wedage et al. 2020).
தென்னாசியாவின் சமீபகாலக் காலக்கணிப்பீடுகள் மத்தியப் பிரதேசத்திலிருந்து இலங்கை வரை சமவகையான காலங்களையே தருகின்றன. இலங்கையில் இடைக்கற்காலத்தின் ஆரம்பகாலம் பொ.யு.மு. 45,000ஆம் ஆண்டாகக் கணிக்கப்படுகிறது (Wedage et al. 2019: 2020). இலங்கையின் பாகியன், பாததொம்ப-லென, பெலி-லென குகைகளைத் தவிர, வட இலங்கையில் இரணைமடு தேரி மேடுகளினுள்ளே காணப்படும் நுண்கற்களின் (Microliths) காலம் இற்றைக்கு முன் 33,000 – 28,000ஆம் ஆண்டுகளுக்கு உரியதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது (Deraniyagala, S.U.1992). தென் இலங்கையில் பெலான்-பன்டி பலஸாவில் கிடைத்த காலத்தால் பிற்பட்ட நுண்கற்கள் இ.மு. 4,800ஆம் ஆண்டுகளுக்குரியவை என காலக்கணிப்புச் செய்யப்பட்டிருக்கிறது (Deraniyagala, S.U. 1992). இக்காலத் திகதிக்கணிப்புகளைக் கொண்டு இலங்கையின் இடைக்கற்காலம் இ.மு. 45,000ஆம் ஆண்டிலிருந்து இ.மு. 4,800ஆம் ஆண்டு வரையாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நீண்ட இடைக்கற்காலத் திகதிக்கணிப்பு தென் ஆசியா முழுவதற்கும் பொருந்தும்.
தமிழகத்தில் இடைக்கற்காலம் பற்றி அறிவதற்குப் போதிய இடங்களும் தடயங்களும் இருந்தும், இவை குறித்த விரிவான ஆய்வுகளும் திகதிக்கணிப்புகளும் குறைவாகவே உள்ளன. இதனால் தமிழகம் தவிர்ந்த தென்னக மாநிலங்களில் நிலவிய இடைக்கற்கால வாழ்க்கையைச் சிறப்பாகவும், இந்திய இடைக்கற்கால வாழ்க்கையை பொது மையமாகவும் கொண்டே, இக்காலத் தமிழகம் பற்றிய பல ஊகங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட நுண்கற்களுக்கும் முறையான கதிரியக்கத் திகதிக்கணிப்புகள் எதுவும் இன்றுவரை செய்யப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இப்பகுதியில் இடைக்கற்காலம் பொ.ஆ.மு. 30,000ஆம் ஆண்டளவில் தோன்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
‘நுண்கற்கள்’ என்ற பதம் கற்கருவிகள் தயாரிக்கப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்ட பதமே தவிர, ஒரு காலகட்டத்தைக் குறிப்பிடும் பதம் அல்ல. பெரும்பாலான இடங்களில் நுண்கற்கள் இடைக்கற்காலத்தில் தயாரிக்கப்பட்ட போதிலும், சில இடங்களில் பழைய கற்காலத்திலும், சில இடங்களில் புதிய கற்காலத்திலும், இன்னும் சில இடங்களில் வரலாற்றுக் காலத்திலும் இவை காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் ‘ஒரு குடியேற்றத்தில் காணப்படும் கல்லாயுதங்களினிடையே நுண்கற்கள் காணப்படுவதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு அக்காலத்தை இடைக்கற்காலம் என அழைப்பது தவறு’ என்பது தொல்லியலாளர் கிரிகரி பொஸலின் கருத்து (Possehl, Gregory L. 2002:31).
தென்னாசியாவின் பெரும்பான்மையான இடைக்கற்கால மக்களின் முன்னோர்கள், 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் பழைய கற்காலத்தில் இங்கே வந்த முதல் ஹோமோ சேப்பியன்ஸ்களான ஆஸ்திரலோயிட்டுகளின் வம்சாவளியினரும் (மரபணுக்குழு C-M130 வினர்), 45,000 – 35,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இங்கே வந்த திராவிட மக்களின் முன்னோடிகளுமாவார் (மரபணுக்குழு F-M89> H-M69> L-M20 ஆகியோர்). இவர்கள் பழைய கற்கால மக்களைப் போன்று சிறுசிறு கூட்டங்களாக அல்லது குலமரபுக் குழுக்களாக (Tribes) குகைகளிலும், கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் வாழ்ந்து வேட்டையாடியும், மீன் பிடித்தும், உணவு சேகரித்தும் வாழ்க்கை நடத்தினார்கள் என்பதை இவர்கள் இவ்விடங்களில் விட்டுச் சென்ற இடைக்கற்காலக் கல்லாயுதங்களும், கற்கருவிகளும் எடுத்துக்காட்டுகின்றன.
இக்காலத்தைய மக்களில் வேட்டையாடியும், உணவு சேகரித்தும் வாழ்ந்தோர் காடுகளுக்கு அருகிலுள்ள குகைகளிலும்; மீன் பிடிப்போர் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் வசித்து வந்தார்கள். பின்னாளில் வேளாண்மை அறிமுகமான பின்னரும் வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்ந்தோர் சிலர் வேளாண்மை செய்வோருடன் அருகருகே வாழ்ந்து வந்தார்கள்.
இந்திய உபகண்டத்தில் வாழ்ந்த மக்கள் தனியான பண்புகளைக்கொண்ட, புறத்தொடர்பில்லாது தனித்தியங்கும் வல்லமை கொண்ட, வெவ்வேறு மட்டத்தினாலான தொழில்நுட்ப ஆற்றல்களைக் கொண்டவர்களாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை வாழ்ந்துவந்திருக்கிறார்கள். இவர்களில் வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடியினர், நாடோடிகளாக மந்தை மேய்ப்போர், இடம்விட்டு இடம்பெயரும் பயிரிடுவோர், நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கியிருந்து வேளாண்மை செய்யும் பாரம்பரிய விவசாயிகள், நவீன இயந்திர வசதிகளைக் கொண்டு பெரிய அளவில் விவசாயம் செய்வோர், நகரமயமான தொழில்துறை சமூகத்தினர் அனைவரும் பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் பின்னிச்சார்ந்து கூட்டாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் (Allchin, B&R. 1982: 62).
இதற்கு முந்திய காலத்தில் இம்மக்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அதன் முன்னேற்றத்தையும் அளவிடுவதற்கு இது ஓர் அடிப்படை மாதிரியாக அமைகிறது. பின்னாட்களில் தென்னாசியாவில் மக்கள் ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்கி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டது ஒரு வெற்றிடத்தில் (Vacuum) ஏற்பட்டிருக்க முடியாது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வாழ்ந்து வந்த வேட்டையாடுவோர், உணவு சேகரிப்போர், மீன் பிடிப்போர் மத்தியில், தானிய தாவரங்களைப் பயிரிடுவதும் பறவைகளையும் மிருகங்களையும் பழக்கியெடுப்பதும் இடம்பெற்றிருந்தது. இவை மக்கள் நடமாட்டத்தின் மூலமோ, அது இல்லாமலோ நிகழ்ந்திருக்கலாம். அதாவது, இக்கருத்துக்கள் அண்டைச் சமூகங்களிலிருந்து பரவியிருக்கலாம்; அல்லது தனிமனித ஆற்றலால் உருவாகியிருக்கலாம். இதன் காரணமாக ஒவ்வொரு இடத்திலும் சூழலுக்கு ‘ஏற்றமாதிரியான மாற்றியமைத்தல்’ (Adaptation) காணப்படுகிறது. சில இடங்களில் விவசாயம் முக்கியமான பொருளாதார அம்சமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வேறு சில இடங்களில் மந்தை மேய்ப்பு முக்கிய பொருளாதார அம்சமாகக் கொள்ளப்படுகிறது. இன்னும் சில இடங்களில் இது இரண்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வகையான வாழ்வாதார நடவடிக்கைகளை மக்கள் மட்டுமல்லாது அவ்விடங்களின் தட்பவெப்பமும், சூழல் நிலங்களும் தீர்மானிப்பதும் உண்டு (Allchin, B&R. 1982: 62).
இடைக்கற்காலத்தின் முக்கியமான தொழில்நுட்ப வளர்ச்சி நுண்கற்கள் (குறுணிக் கற்கள்) தயாரிப்பதாகும். கீழைப் பழங்கற்காலத்தில் எவ்வாறு முழுக்கல்லில் செய்யப்பட்ட ஆயுதங்கள் பிரதான கற்கருவிகளாக விளங்கினவோ, மத்திய பழங்கற்காலத்தில் எவ்வாறு கற்செதில்களில் செய்யப்பட்ட கருவிகள் பிரதான ஆயுதங்களாக விளங்கினவோ, மேலைப் பழங்கற்காலத்தில் எவ்வாறு சிறுசிறு கற்றகடுகளில் செய்யப்பட்ட கருவிகள் பிரதான ஆயுதங்களாக விளங்கினவோ, அவ்வாறே இடைக்கற்காலச் சிறப்புக் கருவிகளாக நுண்கற்களிலமைந்த ஆயுதங்கள் விளங்கலாயின. இந்த நுண்கற்கள், கற்றகடுகளைப் பயன்படுத்திய மரபின் தொடர்ச்சியே என ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள்.

குஜராத்தில் மாஹி பள்ளத்தாக்கில் கண்டெடுத்த நுண்கற் கருவிகள். இந்த நுண்கற்கள் தயாரிப்பு ஒரு தொழில்துறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. நன்றி: B. Subbarao, 1958.
இந்த நுண்கற்களின் தயாரிப்பு நாடெங்கும் ஒரு தொழில்துறையாக (Industry) மேற்கொள்ளப்பட்டது. சிறிய வடிவுகளில் கடினமான குவாட்ஸ் அல்லது சேட் படிகக் கற்களிலிருந்து உடைத்து செதுக்கப்பட்ட 1-5 செ.மீ. நீளமும், ½ செ.மீ. அகலமும் கொண்ட கூர்கல், வெட்டி, பிறைக்கல், செதுக்குக் கல், முக்கோணக் கற்கள் என்பன அம்பு நுனிகளாகவும், ஈட்டி முனைகளாகவும், மரப்பாச்சியில் பொருத்திய பிராண்டிகளாகவும், கத்திகளாகவும், அரிவாட்களாகவும், தூண்டில்களாகவும் பாவிக்கப்பட்டன. இவை எலும்புகளிலும், மரச் சட்டங்களிலும், தண்டுகளிலும் ஏற்படுத்திய பிளவுகளினுள் இயற்கைப் பிசின்களைக் கொண்டு ஒட்டப்பட்டன (Sankalia, H.D. 1974; Misra, V.N. 1974). சமீபகால காலக் கணிப்புகள் இவற்றின் ஆரம்ப காலத்தை இ.மு. 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துச் செல்வது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
இடைக்கற்காலத்தின் முக்கிய கண்டுபிடிப்புகள் வில்லும் அம்பும், அம்பு நுனியில் பொருத்தப்படும் குறுக்கான கற்தலையும் (Transverse Arrowheads) ஆகும். இப்புதிய வகையான நுண்கற்கள் அம்பு நுனிகளில் பொருத்தப்பட்டன. ஈட்டிமுனைகளில் பிறைவடிவான நுண்கற்சீவல்கள் (Lunate Flakes) பொருத்தப்பட்டன. இதன் காரணமாக முன்பு கிடைக்காத பறவைகளையும், விலங்குகளையும் அவர்களால் வேட்டையாட முடிந்தது. மீன் பிடிப்பதற்கும், பறவைகளைக் கைப்பற்றுவதற்கும் பல வகையான பொறிகள், வலைகள், குழிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளப்பட்டன (Maloney, C. 1974: 74).
இந்த நுண்கற்களின் முக்கியமான கருவிகள் பெரிய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு, பெரிய பரப்பளவிலான இடங்களுக்கு வழங்கப்பட்டு, பல வகையான சமூகப் பிரிவினராலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தொழிற்சாலைகள் அமைந்த இடங்களில் இக்கருவிகள் தயாரிப்பதற்கான உயர் தரமான ‘குவாட்ஸ்’, ‘சேட்’ கற்கள் இருந்திருக்க வேண்டும். மேலும், இதன் பரவலுக்கு இந்த இடைக்கற்காலச் சமூகங்களினிடையே ஒரு வகையான பண்டமாற்று முறையும் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.
இடைக்கற்கால மனிதனின் பிரதான தொழில்களாக வேட்டையாடுதல், மீன் பிடித்தல், உணவு சேகரித்தல் ஆகிய தொழில்களே அமைந்திருந்த போதிலும், அண்மைக்கால ஆய்வுகள் பழைய கற்காலத்தில் நாடோடிகளாகத் திரிந்த மனிதன் இக்காலத்தில் ஓரளவு தொடர்ந்து ஓரிடத்தில் இருந்தது பற்றியும், தான் வாழ்ந்த சூழலை முன்னரைவிடக் கூர்மையாக அவதானித்து அதை மாற்ற முற்பட்டது பற்றியும் எடுத்துக்காட்டுகின்றன. இக்கால மனிதர்களால் காடுகள் அழிக்கப்பட்டதை தாவரங்கள் விட்டுச்சென்ற மகரந்தப் பொடிகளின் படிவங்கள், எச்சங்கள் ஆகியவை எடுத்துக்காட்டியுள்ளன. இக்காலத்தில் காட்டு மரங்கள் விட்டுச் சென்ற மகரந்தப் பொடியின் எச்சங்கள் எண்ணிக்கையில் குறைய, சிறு பற்றைகள், புல் பூண்டு ஆகியவை விட்டுச் சென்ற மகரந்தப் பொடியின் எச்சங்கள் மேலோங்கிக் காணப்படுவதை மையமாக வைத்தே இக்கால மனிதன் காட்டை அழித்து சூழலை வளப்படுத்த முற்பட்டான் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர் (சிற்றம்பலம், சி.க. 1999).
பழைய கற்காலத்தில் வாழ்ந்த பெரிய மிருகங்களின் இனங்கள் பெருமளவுக்கு அழிந்து போக, காடுகளில் காணப்பட்ட கலைமான் போன்ற சிறிய மிருகங்களை வேட்டையாட இக்கால மனிதன் கற்றுக்கொண்டான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கட்டுப்பாடின்றித் திரிந்த மிருகங்களின் மூர்க்கத்தன்மையைக் குறைத்து வீட்டு மிருகங்களாகப் பழக்கி வளர்த்ததோடு, மந்தை வளர்ப்பிலும் இக்கால மனிதன் ஈடுபட்டிருந்ததை இக்காலக் குடியிருப்புகளில் காணப்படும் எலும்புக்கூடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இம்மிருகங்களில் ஆடு, மாடு, பசு, செம்மறி ஆடு போன்றவை குறிப்பிடத்தக்கவை. நாய் ஏற்கனவே இக்கால மனிதனின் நண்பனாகிவிட்டது. இவ்வாறு மந்தை மேய்ப்பில் இக்கால மனிதன் அக்கறை காட்டியது இடைக்கற்கால மனித வாழ்வியலின் ஒரு முக்கியமான அம்சமாகும்.
இந்த வளர்ப்பு மிருகங்களை மனிதன் தனது அன்றாட வாழ்வில் உணவாகவும் பயன்படுத்தினான் என்பதை இவன் வாழ்ந்த இடங்களில் காணப்படும் இம்மிருகங்களின் வெட்டப்பட்ட எலும்புகள் எடுத்துக்காட்டுகின்றன. இக்கால மனிதன் தனக்குச் சமீபத்திலுள்ள விவசாயிகளோடு தொடர்பு வைத்திருந்ததோடு, தானும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான் (Allchin, B&R. 1983). இந்திய உபகண்டத்தில் வெவ்வேறு இடங்களில் பொ.யு.மு. 8,000 ஆண்டுக்காலம் முதல் இடைக்கற்கால மக்களும், வேளாண்மை விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்ட மக்களும் சமகாலத்தில் வாழ்ந்து வந்தார்கள்.
தென்னாசியாவில் இடைக்கற்காலம் ஐரோப்பாவிற்கு முன்னரே ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில், சிந்துப் பள்ளத்தில், இடைக்கற்காலப் பண்பாட்டாளர்களுக்கும் வேளாண்மைக் குடியேற்றங்களுக்குமிடையேயான காலக் கணிப்பில் மேற்கவிப்புகள் (Overlap) காணப்படுகின்றன. வேட்டையாடுவோர், மீன் பிடிப்போர், மந்தை மேய்ப்போர், விவசாயத்தில் ஈடுபட்டோர் அனைவரும் மேற்கொண்ட நுண்கற் தொழில்துறையை உபகண்டம் முழுவதும் காணக்கூடியதாக இருக்கிறது. இடைக்கற்காலத்தைச் சேர்ந்த வேட்டையாடுவோர், மீன் பிடிப்போர், உணவு சேகரிப்போர், மந்தை மேய்ப்போர் அனைவரும் நிரந்தரமாகக் குடியேறிய மக்களோடு இரும்புக் காலத்தின் ஆரம்பம் வரை (பொ.யு.மு. 2000), சில இடங்களில் இன்னும் பிற்காலம் வரை, கூடிவாழ்ந்ததை அறியமுடிகிறது (Allchin, B&R. 1983).
நுண்கற்கள் − இடைக்கற்காலத்தின் முக்கியமான கற்கருவிகள் − மேற்கு குஜராத்தின் கச்சியிலிருந்து மத்திய இந்தியா ஊடாக மேற்கு வங்காளம் வரை − தீபகற்ப இந்தியாவிலிருந்து இலங்கை வரை − பரந்திருக்கின்றன. சிந்துவெளியில் காணப்படும் நுண்கருவித் தொழில்துறை நிரந்தரமான குடியேற்றங்களுடனே காணப்படுகின்றன. இத்தொழில் சிந்துவெளியில் ஆரம்பகால விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்ட நகரக் குடியிருப்புகளையும், நகரமயமாக்கப்படாத கிராமக் குடியிருப்புகளையும் உள்ளடக்கியிருந்தது.
ஒரு முக்கியமான உண்மை யாதெனில் கங்கைச் சமவெளியில் முதன்முதலாக மக்கள் குடியேற்றம் ஏற்பட்டது இடைக்கற்காலப் பிற்பகுதியிலும், விவசாயம் அறிமுகமான புதிய கற்காலப் பகுதியிலும்தான். பழங்கற்காலத்தில் அங்கே மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. அலகபாத், பிரதாபகார், ஜோன்பூர், மிர்ஸாபூர், வரணாசி போன்ற இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களின் தொல்லியல் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன (Sharma et al. 1980). இது போன்றே மும்பை உள்ளிட்ட மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் இடைக்கற்காலத்தின் பிற்பகுதியிலேயே குடியேற்றங்கள் முதல் தடவையாக நிகழ்ந்திருக்கின்றன (Misra, V.N. 1997, 2001).
தீபகற்ப இந்தியா
தீபகற்ப இந்தியாவில் மத்திய கற்கால இடங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன. மும்பைக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் வெட்டிகள், பிறைவடிவுகள், கற்கூர்கள் ஆகிய நுண்கற்கள் பெரிய கற்களான பிராண்டிகளுடனும், கூர்க்கற்களுடனும் (Scrapers and Points) காணப்படுகின்றன. இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் படகுகளை உபயோகித்திருக்கக் கூடும் எனவும், மீன் அவர்களது முக்கியமான உணவாக இருந்திருக்கும் எனவும் அறிய முடிகிறது. இவர்கள் பின்னாட்களில் புதிய கற்கால, வெண்கலக்கால மக்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்திருப்பார்கள் (Allchin B & R. 1982: 84).
ஆந்திரப் பிரதேசத்தில் கீழ் கோதாவரிப் பகுதியிலும், மற்றும் நாடெங்கிலும் பல நுண்கல் மையங்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. இன்றும் குகைகளிலும், கூடாரங்களிலும் தங்கி வேட்டையாடி உணவு சேகரிக்கும் ‘செஞ்சு’ எனப்படும் பழங்குடியினரின் வாழ்விடங்கள் மத்திய இந்தியாவின் இடைக்கற்கால வதிவிடங்களைப் போலிருக்கின்றன (Allchin, B. & Allchin, R. 1982: 85-86).
தென் இந்தியாவின் நுண்கல் தொழில்துறை முக்கியமாக வெண்மையான குவாட்ஸ் கற்களைக் கொண்டிருக்கும் அதேசமயம், வட இந்தியாவின் நுண்கற்கள் முக்கியமாக ஜஸ்பேர்ஸ், கல்சிடோனிக் கற்களால் ஆனவையாக உள்ளன. இந்த மூலப்பொருள் மாற்றம் கர்நாடகத்தில் ஏற்படுகிறது. கர்நாடகத்தில் றைச்சூரில் கிருஷ்ணா நதிக் கரையிலுள்ள நுண்கற் தொழிற்சாலையில் நதிக்கற்களிடையே காணப்படும் ஜஸ்பேர்ஸ் கற்களைக் கொண்டு நுண்கற்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் றைச்சூரின் தென் பகுதியான பெல்லாரியில் குவாட்ஸ் கற்களைக் கொண்டே நுண்கற்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
தென் இந்தியா முழுவதும் நிலத்தின் கீழே கருங்கற் பாறைகள் காணப்படுகின்றன. இவற்றினூடே குவாட்ஸ் கற்கள் பரவிக் கிடக்கின்றன. மத்திய பழங்கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் வரை மக்கள் இக்கற்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இடைக்கற்காலக் கருவிகளில் பல முன்னர் உபயோகித்த கருவிகளின் மறுபிரதியாக்கங்களாகவும், புதிய கற்காலக் கருவிகள் புதிய வடிவங்களைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன (Allchin, B. & Allchin, R. 1982: 86).

ஆந்திரப் பிரதேசத்தில் கூர்நூல் மாவட்டத்தில் உள்ள உறவகொண்டா பகுதியில் கண்டெடுத்த இடைக்கற்காலக் கருவிகள் – சென்னை அருங்காட்சியக புரூஸ் புற் சேகரிப்பு. நன்றி: B. Subbarao, 1958.
தமிழ் நாடு
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கணிசமான அளவு தொல்லியல் ஆய்வுகள் இந்திய தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டன. டாக்டர் K.D. பனர்ஜீயின் தலைமையில் 1962-63, 1963-64 ஆண்டுகளில் குடியம், அத்திரம்பாக்கம் பகுதிகளிலும், 1966-67ஆம் ஆண்டுகளில் வடமதுரை, பூண்டி, நெய்வேலி ஆகிய இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குடியத்தில் குகைக்குள் மட்டுமல்லாது அதற்குச் சுற்றுப்புறமுள்ள இடங்களிலும் கல்லாயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. மக்கள் வாழ்ந்த பகுதிகளில் அடிப்பகுதியிலிருந்து மேல் தளம் வரை தொடர்ச்சியாக கற்கருவிகள் காணப்பட்டன. கருவிகளின் தொழில்நுட்பத்தை ஆராயுமிடத்து ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கருவி வகைகளில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. அச்சூலியனைத் தொடர்ந்த கல்லாயுதத் தொழில்துறை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து மேல் மட்டங்களில் மத்தியகாலக் கற்கருவிகளின் ஆக்கத்திற்கு வழியமைத்திருக்கிறது. அச்சூலியனைத் தொடர்ந்த கல்லாயுதங்களின் தயாரிப்பு ஒரு நுட்பமான உருமாற்றம் பெற்று நுண்கற் தயாரிப்புத்துறையாக மாற்றமடைந்திருக்கிறது (Post-acheulian industry gradually underwent a metamorphosis into a microlithic industry). பழைய கற்காலத்தில் குடியேற்றங்கள் இடையிடையே இருந்த போதிலும் மத்திய கற்காலத்தில் இவ்விடங்களில் தொடர்ச்சியான குடியேற்றங்கள் காணப்பட்டன (Ramachandran, K.S. 1980: 21-22; Rasavelu, S. & Thirumurthy, K. 1995: 10-11).
திருச்சி, மதுரை, திருமங்கலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற அகழ்வுகளில் ஏராளமான மத்திய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன (Raman, K.V. 1969, 1970). மதுரை மாவட்டத்தில் போடிநாயக்கனூர், கொல்லம்பட்டாரி, தத்தனோடை மேடு, பெரியகுளம், கல்லுப்பட்டி, சிவரக்கோட்டை, கருவேலம்பட்டி, சென்னம்பட்டி ஆகிய இடங்களில் விசாலமான வகைகளான (Wide Range) நுண்கற்கள் கண்டெடுக்கப்பட்டன (Gurumoorthy, S. 1974: 71).
தேரி மணல் மேடுகள்
தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரையில் சென்னைக்குத் தெற்கே மிகப் பழமையான, செந்நிறமான மணல் மேடுகள் காணப்படுகின்றன. இம்மணல் மேடுகள் சென்னையிலிருந்து கடற்கரை ஓரமாக தெற்கு நோக்கி மதுரை ஊடாக, திருநெல்வேலி மாவட்டம் வரை பரந்திருக்கின்றன. இவை உள்ளூரில் ‘தேரி’ மேடுகள் என அழைக்கப்படுகின்றன. இம்மணல் மேடுகளினுள்ளே ஏராளமான கற்கருவிகள் காணப்படுகின்றன. இக்கருவிகளின் செய்முறை ‘தேரி தொழில் முறை’ என அழைக்கப்படுகிறது. இத்தேரி மேடுகள் புரூஸ் புற் (Foote, 1916), ஐயப்பன் (Aiyappan, 1944), ஸியூனர் மற்றும் ஆல்சின் (Zeuner and Allchin, 1956), கார்டினர் (Gardner, R.A.M. 1986, 1995) ஆகிய ஆய்வாளர்களால் கடந்த காலங்களில் மேலாய்வும், அகழாய்வும் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த மேடுகள் வேட்டையாடுவோர் அல்லது மீன்பிடிப்போர் இக்கடற்கரைகளில் கூடாரமடித்துத் தங்கியிருந்து தொழில் புரிந்த காலங்களில் ஆரம்பமாகியிருக்கின்றன. பின்னர் இவ்விடங்களில் வளர்ந்த தாவரங்கள் நிலத்தை உறுதியாக்கி நிலைப்படுத்தியிருக்கின்றன.
தேரி மேடுகளின் உருவாக்கம் புவியியலின் பிளிஸ்ரொஸின் சகாப்தத்தில் (Pleistocene epoch: 2.58 million to 11,700 years ago) ஆரம்பமாகியிருக்கிறது. கடற்கரைகளிலுள்ள சரளைக்கற்கள் (Gravel) இரும்புத்தாது கொண்டவை. ஹொலொஸீன் காலத்து பெருமழையிலும் வெப்பத்திலும் இக்கற்கள் சிதைவடைந்து தூள்களாகி, இரும்புத்தாது கொடுத்த செந்நிறம் கொண்ட மணல்களாக மாறி, தொடர்ச்சியான காற்றினால் செம்மண் கும்பிகளாக உருவெடுத்தன. இச்செம்மண் அடுக்கின் கீழே உள்ள சரளைக்கற் படுக்கைகளிடையே கற்கருவிகள் காணப்படுகின்றன.
இக்காலத்தில் இத்தேரி மேடுகள் கடற்கரையிலிருந்து சில மைல் தூரத்தில் காணப்படுகின்றன. இதற்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன. வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் கடல் மட்டம் இன்றிருப்பதை விட 20 முதல் 30 அடி வரை உயரமாக இருந்து காலப்போக்கில் பின்வாங்கியதைத் தொடர்ந்து இத்தேரி மேடுகள் இன்றைய கடற்கரைகளிலிருந்து தள்ளிப் போயின (Zeuner, F.E. & Allchin, B. 1956: 7). இடைவிடாத பெருங்காற்றினால் முந்தைய செம்மண் கும்பிகள் கரைகளிலிருந்து தொலைவில் தள்ளப்பட்டமை மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது (Aiyappan, A. 1945).
இத்தேரி மேடுகளில் காணப்படும் தொழில்துறை 50% குவாட்ஸ் கற்களையும், 50% மண்ணிறமான சேட் கற்களையும் கொண்டிருக்கிறது. கற்சீவல் பாரம்பரியம் (Flake Tradition) மைசூர் குவாட்ஸ் தொழில்துறையைக் காட்டிலும் இங்கே மிக அழுத்தமாகக் காணப்படுகிறது. குவாட்ஸ் கற்களிலிருந்து வெட்டப்பட்ட உட்புரித் தட்டுகள் (Discoidal Cores), கற்சீவல்கள், பிறைத்தட்டுகள், சப்பை அம்புநுனிகள் என்பன இவ்விடத்திற்குத் தனித்துவமானவை. இவை தவிர பிராண்டிகள், கூர்கள், இரட்டைமுகத் தட்டுகள் என்பனவும் காணப்படுகின்றன (Allchin, B. & Allchin, R. 1982: 87).
தமிழகத்தின் தேரி மேடுகளில் காணப்படும் இவ்வகையான தனித்துவமான கற்தொழில்துறை இந்திய உபகண்டத்தில் இலங்கை ஒன்றைத்தவிர வேறெங்கும் காணப்படவில்லை. இந்தக் கற்கருவிகளை ‘அழுத்த-கற்சீவல்’ எனப்படும் தனித்துறை வன்மையால் (Specialized Technique of Pressure-flaking) மட்டுமே உருவாக்கியிருக்க முடியும் (Allchin, B. & Allchin, R. 1982: 87).
இவ்வகையான நுண்கற் கருவிகள் காணப்படும் முக்கிய இடங்களாக தாமிரபரணி ஆற்றின் வடக்கேயுள்ள தூத்துக்குடியும், தெற்கிலுள்ள திருச்செந்தூரும் இனங்காணப்படுகின்றன. மேகனபுரம், குதிரைமொழி, குடம்புளி, கூத்தன்குழி, சாயர்புரம், குளத்தூர், கட்டாலங்குளம், புத்தன் தருவை ஆகிய இடங்களிலுள்ள தேரிகளில் இக்கருவிகள் அதிகமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன (Zeuner, F.E. & Allchin, B. 1956: 7).

செந்நிற தேரிமணல் பரப்பு

மீன்பிடிப்போர் இக்கடற்கரைகளில் கூடாரமடித்துத் தங்கியிருந்து தொழில்புரிந்ததைக் காட்டும் ஓர் ஓவியரின் படம்.

தேரி மணல்மேடுகளினுள் கண்டெடுத்த நுண்கற் கருவிகள்: 1-13 சாயர்புரத்திலிருந்து: 1. இரட்டைமுகக் கூர், 2. சமச்சீரற்ற கூர், 3,4,8,9. பிறைக் கற்கள், 5,6. குறுக்கு விரிந்த அம்பு நுனிகள், 7. வெட்டுத் தகடு,10,11. செதிள், 12. நுண் துளைக்கருவி, 13. தட்டு; 14-24 புத்தன் தருவையிலிருந்து: 14,15,16. எளிமையான கூர், 17. சீரான கூர், 18. இரட்டைமுகக் கூர், 19. பிறை, 20. சுரண்டு கருவி, 21. பெருவிரல் நக சுரண்டு கருவி, 22. குறுக்கு விரிந்த அம்புநுனி, 23. தட்டு, 24. வெட்டும் கருவி. நன்றி: Zeuner, F.E. 1956.

தேரி மணல்மேடுகளினுள் கண்டெடுத்த நுண்கற் கருவிகள்: 1-21 குளத்தூர்: 1,2. எளிமையான கூர், 3,4,5. ஒருபக்கக் கூர், 6. வெட்டுத் தகடு, 7,8. சமச்சீரற்ற கூர், 9,10,11. பிறைக் கற்கள், 12. முக்கோணி, 13,14. குறுக்கு விரிந்த அம்புநுனி, 15. தமரூசி, 16,18. வட்ட வெட்டி, 17. வெட்டுத் தகடு, 19,20. தேய்ந்த செதிள்; 22-29 கட்டாலங்குளம்: 22. ஒற்றைக் கூர், 23. இரட்டைக் கூர், 24. எளிமையான கூர், 25,29. சமச்சீரற்ற கூர், 26,27. வட்ட வெட்டி, 28. பிறை. நன்றி: Zeuner, F.E. 1956.

தேரி மணல்மேடுகளினுள் கண்டெடுத்த நுண்கற் கருவிகள்: 1-16 கூத்தன்குழி: 1,5. கூர்க்கருவிகள், 6,7. இரட்டைமுகக் கூர்கள், 8,9,15. பிறைக் கற்கள், 10. குறுக்கு விரிந்த அம்பு நுனி, 11,12. பக்கம் தீட்டிய கற்கள், 13. குதிரைக்-குளம்பு சுரண்டி, 14. செதிள், 16. தட்டு; 19-26 குடம்புளி: 17,22. சமச்சீரற்ற கூர்கள், 18. ஒற்றைமுகக் கூர், 19,20. குறுக்கு விரிந்த அம்புநுனி, 21. பிறை, 23. சுரண்டி, 24. செதிள், 25. தட்டு, 26. வெட்டும் கருவி. நன்றி: Zeuner, F.E. 1956.
இத்தேரி மேடுகளில் கற்காலத்தின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுந்தான் மக்கள் தங்கியிருந்தார்கள் என்று கூறமுடியாது. கடலுக்குச் சமீபமாக இருந்த குளங்களுக்கும், ஓடைகளுக்கும், முகத்துவாரங்களுக்கும் அருகாமையில் அமைக்கப்பட்ட குடிசைகளிலும், கூடாரங்களிலும் இருந்து கொண்டு இவர்கள் மீன்பிடிப்பதிலும், கோழிகளைப் பிடிப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள். இந்தியாவின் மற்றைய பகுதிகளிலும் மீன்பிடித் தொழில் செய்த முந்தைய சமுதாயங்கள் கடற்கரை மணல் மேடுகளில் அமைக்கப்பட்ட குடிசைகளிலிருந்து கொண்டு இத்தொழில் செய்ததைக் காண முடிகிறது. இடைக்கற்கால மீன்பிடித் தொழில்துறை இவ்வாறே நடைபெற்றது (Allchin, B. & R. 1982: 88).
கடற்கரைத் தேரி மேடுகளைத் தவிர இடைக்கற்காலக் கற்கருவிகள் திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களில், குறிப்பாக மெஞ்ஞானபுரம், குட்டம், புலியூர், கூத்தன்குழி, சாயர்புரம், கட்டாலங்குளம், குளத்தூர், புத்தன்தருவை ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே காணப்படும் வெவ்வேறு வகையான பிராண்டிகள், நுண்கற் செதிள்கள், பிறைவடிவுகள், பாதிப் பிறைகள், நீள் சதுரங்கள், முக்கோணிகள், வளை கூர்கள், கூர்கள், அம்பு நுனிகள், கத்திகள், தமரூசிகள் (Awls) ஆகிய நுண்கற்கள் இலங்கையிலும், கேரளாவிலும் காணப்படும் நுண்கற் கருவிகளை ஒத்திருக்கின்றன (Rajendran, P. 1979). இதிலிருந்து தமிழ்நாடு, கேரளா, இலங்கை ஆகிய இடங்கள் ஒரே பண்பாட்டு வலயத்தில் இருந்ததையும், பின்னர் பெருங்கற் கலாசார, வரலாற்றுக் காலங்களிலும் இவ்விடங்கள் ஒரே வகையான பண்பாட்டுக் கூறுகளைப் பேணியதையும் நாம் காணலாம் (சிற்றம்பலம், சி.க. 1999: 56).
குந்தாற்று வடிநிலப்பகுதி ஆய்வுகள்
இந்தியாவின் ஆரம்பகாலத் தொல்லியல் கற்கருவிகள் 1863ஆம் ஆண்டில் முதன்முறையாகத் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆயினும், கடற்கரைத் தேரி மேடுகள் போன்ற சில முக்கியமான இடங்களைத் தவிர, தமிழ்நாட்டின் தென்பகுதி 1970களுக்கு முன்னர் விரிவான தொல்லியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்வாறு கவனிக்கப்படாது விட்ட இடங்களில் ஒன்று மதுரை மாவட்டத்தின் மேற்குத் திசையிலுள்ள குந்தாற்று வடிநிலப்பகுதியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியான ஆண்டிப்பட்டி, சதுரகிரி, குதிரைமலை ஆகிய மலைக் குன்றுகள் முறையே இந்த நிலப்பகுதியின் மேற்கிலும், தெற்கிலும், வடக்கிலும் காணப்படுகின்றன. இந்த வடிநிலம் 400 சதுர கி.மீ அளவைக் கொண்டது. சதுரகிரி மலையில் ஆரம்பமாகும் இந்த ஆறு மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களினூடாகச் சென்று மன்னார்க்குடாவில் கடலை அடைகிறது.
2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியலாளர் வீ. செல்வகுமார் குந்தாற்று வடிநிலப்பகுதியை ஆய்வு செய்ய முற்பட்டார். 1950ஆம் ஆண்டுகளில் இங்கே மேலாய்வுகளை மேற்கொண்ட இராமன் (Raman 1970) இந்தக் குந்தாற்று வடிநிலப்பகுதியின் பண்பாட்டு வரலாற்றைக் கூறும் முகமாக, இங்கே காணப்பட்ட இடைக்கற்கால, ஆரம்ப இரும்புக்காலப் பண்பாடுகளையும் எடுத்துக் கூறி, இங்கே புதிய கற்கால, வெண்கலக்காலக் கருவூலங்கள் ஏதும் காணப்படாததையும் எடுத்துரைத்திருந்தார்.
இந்த வடிநிலப்பகுதியில் விவசாய-மந்தை வளர்ப்புச் சமூகங்கள் குடியிருந்தன. இன்று அங்கே காடுகள் கிடையாது. முயல், நரி ஆகியவற்றைத் தவிர வேறு காட்டு மிருகங்கள் இல்லை. குன்றுகளில் புதர்களும், உதிரக்கூடிய இலைகளைக் கொண்ட குறுங்காட்டு மரங்களும் காணப்படுகின்றன. இவற்றினிடையே பளியர்கள் என அழைக்கப்படும் உணவு சேகரிக்கும் பழங்குடியினரின் ஒரு குடியேற்றம் இருந்ததை கார்டினர் என்ற ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார் (Gardner, P.M. 1972, 1988).
குந்தாற்று வடிநிலப்பகுதியில் ஆறு பருவகாலங்களுக்கு மேலாய்வுகளும், நான்கு மையங்களில் அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இத்தோடு அதன் சூழலில் தாவர, மிருக உணவுகள், நீர்த் தோற்றுவாய்கள், நீர்நிலைகள், குகைகள், பாறை ஒதுக்கிடங்கள், தொல்லியல் எச்சங்கள் என்பன இனங்காணப்பட்டன (Selvakumr, V. 2002).
இந்த ஆய்வில் தென் தமிழ்நாட்டில் மூன்று பண்பாட்டுக் காலங்களில் நுண்கற்கள் இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. நுண்கற்கள் இடைக்கற்காலக் கருவிகளுடனும், இரும்புக்காலத்திலும், வரலாற்றுக்கால எச்சங்களுடனும் காணப்பட்டன. இங்கே காணப்பட்ட கற்கருவிகள் 109 மையங்களிலிருந்து பெறப்பட்டன. இக்கருவிகள் அவற்றின் அளவைக் கொண்டும், அடர்த்தியைக் கொண்டும் (Size and Artifact Density) மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன. இக்கருவிகளின் இடப்பரவலைக் கொண்டு இவற்றை உபயோகித்த இடைக்கற்கால மக்கள் பருவமழைக் காலங்களில் வடிநிலத்தின் கிழக்குப் பகுதிகளுக்கும், வறண்ட காலங்களில் வடிநிலத்தின் உயரமான மேற்குப் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து வாழ்ந்தார்கள் என அறிய முடிகிறது. இது உணவு பெறக்கூடிய வசதிக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட மாற்றமைப்பாகும் (Adaptation to Food Availability).
இந்த நுண்கற்கள் கண்டெடுக்கப்பட்ட மையங்கள், கற்கருவிகளின் அளவைக் கொண்டும், அடர்த்தியைக் கொண்டும் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன.
முதலாம் வகை: தனிக் கற்கள் அல்லது சிதறலாகப் பரவிய கற்கள் காணப்பட்ட இடங்கள். இப்படி 34 தளங்கள் காணப்பட்டன.
இரண்டாம் வகை: நிலத்தின் மேற்பகுதியில் அடர்த்தியின்றி, ஐதாக, மேலே கனதியான படிவுகள் இல்லாத 66 தளங்கள்.
மூன்றாம் வகை: கனதியான மேற்படிமங்களோடு, அடர்த்தியாகக் கற்கருவிகள் காணப்பட்ட தளங்கள். இவை பல தடவைகள் குடியேற்றம் நடைபெற்ற காரணத்தால் வெவ்வேறு மட்டங்களில் காணப்பட்டன. இவ்வாறு காணப்பட்ட ஒன்பது மையங்களில் மூன்று பாறை ஒதுக்கிடங்களும், மற்றவை திறந்த வெளிகளுமாகும். இவற்றின் பரப்பளவு 8 சதுர மீட்டர் முதல் 7000 சதுர மீட்டர் வரையினதாகும் (Selvakumr, V. 2002).

தமிழ்நாட்டில் குந்தாறு வடிநிலப் பகுதியில் கண்டெடுத்த நுண்கற்கள்: A-E: செப்பனிட்டுக் கூராக்கப்பட்ட கற்தகடு, F-G: முக்கோணங்கள், L: பிறைத்தட்டு, J-K: செதுக்குக் கல், M: கூர்க் கருவி, N: துளைக் கருவி. நன்றி: V. Selvakumar, 2002.

தமிழ்நாட்டில் குந்தாறு வடிநிலப் பகுதியில் நுண்கற்களோடு கண்டெடுத்த மற்றைய கனமான கற்கள்: A,C: வெட்டும் கருவிகள், B: கத்தி, D: சுத்தியல், E: அரைக்கும் கல், F: துளைக்கல், G-H: முனை தீட்டப்படாத கற்தகடுகள். நன்றி: V. Selvakumar, 2002.
மேல்வடிநிலப் பகுதியின் வேட்டையாடி, உணவு சேகரிக்கும் மக்களின் நுண்கற்கள் நேர்த்தியான வடிவுகொண்ட வகையினதாகவும், வடிவமற்றும் காணப்பட்டன. இந்த நுண்கற்களோடு சிறு தொகையான கனமான வேலைகளைச் செய்யப் பயன்படும் கல்லாயுதங்களும் காணப்பட்டன. மொத்தத்தில் எல்லாமாக 13,260 கற்கருவிகள் அந்த வடிநிலப் பகுதியிலிருந்து பெறப்பட்டன (Selvakumar, V. 2002).
குந்தாற்று வடிநிலப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இடைக்கற்கால நுண்கற்களுக்கும், அதற்குப் பிற்பட்ட கால நுண்கற்களுக்கும் கதிரியக்கக் கரிம காலக்கணிப்புகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இந்தியாவின் மற்றைய மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, ஏற்கனவே காலம் கணிக்கப்பட்ட கற்கருவிகளுடன் இவற்றை ஒப்புநோக்கி இவற்றின் காலம் கணிக்கப்பட்டது (Cross-match Dating) (Kshirsagar 1993; Selvakumar, V. 1997: Table 60).
இந்தியாவின் மற்றைய மையங்களில் சமீப காலங்களில் கண்டெடுத்த நுண்கற்களின் கரிமக்கதிர் காலக்கணிப்புகள் இ.மு. 45,000 ஆண்டு முதல் இ.மு. 25,000 ஆண்டு வரையிலான திகதிகளைத் தருகின்றன (Clarkson et al. 2018; Basak et al. 2014; Basak and Srivastava 2017). கரிமக்கதிர் ஆய்வுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் இந்த நுண்கற்களும் இவற்றிற்குச் சமதையாகத் திகதிகளைத் தரும் என எதிர்பார்க்கலாம்.
தொடரும்.



